Sunday, October 12, 2008

மலம் அள்ளுதல் அருந்ததியரின் குலத்தொழிலா?

ODST Wallpaper Pictures, Images and Photos

இந்தியாவில், சமூக அறிவியல் ஆய்வுப் புலத்தில் இந்தியர் மற்றும் இந்தியரல்லாத ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகளில் சாதிகளின் வரலாற்றினை எழுதுகிற பொழுது அது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திலிருந்து தொடங்கப்படுகிறது; அதுவே அச்சாதியின் தோற்ற வரலாறாகவும் முன்னிறுத்தப்படுகிறது. அந்த குறிப்பிட்ட காலக்கட்டம் இரண்டுவித தன்மையை குறிக்கிறது: முதலாவது, மரியாதை, ஆதிக்கம், புனிதம் போன்ற சொற்களாலும் இரண்டாவது இழிவு, தோல்வி, அவமரியாதை, தீண்டாமை போன்ற சொற்களாலும் சுட்டுவதாக இருக்கிறது.

தீண்டாமை-ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சாதிகளின் சமூக வரலாறு அவர்கள் ஒடுக்கப்பட்ட காலத்திலிருந்துதான் தொடங்கப்படுகிறது. காலனிய ஆட்சியாளர்கள் தங்களின் தேவை கருதி பதிவு செய்த ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு அவ்வரலாறு எழுதப்படுகிறது. எட்கர் தர்ட்ஸனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் பலருக்கும் ஆயத்த வரலாறு போல் பயன்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, பறையடிப்போர் பறையர் என்று கால்டுவெல் கூறியதைக் குறிப்பிடலாம்.

இதன் விளைவு, பறையர் என்றழைக்கப்படும் சாதியினர் முழுவதும் பறையை மட்டுமே அடித்துக் கொண்டிருந்தனரா? பறையரில் சுண்ணாம்பு பறையர், உழவுப் பறையர், ஈழுவப் பறையர் போன்ற பல்வேறு பிரிவுகள் பலவகையான தொழிற் பிரிவுகளோடு தொடர்புப் படுத்தப்பட்டு அழைக்கப்படுவதன் காரணம் என்ன? பண்டையத் தமிழ் மொழி இன்றும் புழக்கத்திலிருந்து வரும் கேரளத்தில் (சேர நாடு) பறை என்பதை “கூறு, சொல்” என்ற பொருளில் ஏன் பயன்படுத்தப்பட்டு வருகிறது? இதற்கும் பறையர் எனப்படும் சாதியினருக்கும் உள்ள உறவு என்ன? போன்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.

பறையடிப்போர் பறையர் என்று மேலோட்டமாகக் கூறுவது அச்சாதியினரின் தோற்றத்தினை மட்டுமல்லாமல் வரலாற்றினை மேலோட்டமாக அணுகும் ஆய்வாளர்களின் மனப்பாங்கினையே வெளிப்படுத்துகிறது. இந்த ஆயத்த வரலாற்றினை மறுதலித்து ஒவ்வொரு சாதியினரும் தங்களது சாதியின் வரலாற்றினை எழுதி வருகின்றனர். இதில் இருக்கின்ற வேடிக்கை என்னவென்றால் இவர்களும் எட்கர் தர்ட்ஸனையே நாடுகின்றனர். அவருடைய நூலில் சாதிகளின் தோற்றம் இவ்வாறு பதிவு செய்யப் பட்டிருக்கும்: பார்ப்பனருக்கும் சூத்திரருக்கும் பிறந்தவர்கள், வெள்ளாளர்களுக்கு அல்லது பார்ப்பனர்களுக்கு விவசாய உற்பத்தி செய்து கொடுப்பதற்கான கடவுளின் படைப்பு, புனிதமாகப் கருதப்பட வேண்டிய பசுவின் உணவினை தின்றுவிட்டதனால் தாழ்ந்து விட்டார்கள். இந்த தோற்ற வரலாற்றில் பார்ப்பனீயமயமாக்கம்/இந்துமயமாக்கம் அடிநாதமாக இருப்பதனைக் காணமுடியும்.

எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற பார்ப்பனர்கள் இந்தியாவில் குடியேறியவர்கள் என்ற வரலாறு இருக்கிற பொழுது பார்ப்பனர்களுக்கும் சூத்திரர்களுக்கும் பிறந்தவர் அல்லது பார்ப்பனர்களுக்கு சேவகம் செய்வதற்குப் படைக்கப்பட்டவர்கள் என்ற கூற்றினை ஏற்றுக் கொள்வதில் அடிப்படை யிலேயே சிக்கல் இருக்கிறது. பார்ப்பனர்கள் வருகைக்கு முன்னர் குறிப்பிட்ட சாதிகளின் வரலாறு என்ன? இக்கேள்வி எட்கர் தர்ட்டஸனாலேயே எழுப்பப்பட்டிருக்கவில்லை, இதானல் நாம் அவர் மீதோ அல்லது அவரின் பதிவு மீதோ சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிநாட்டவரான அவர் ஒவ்வொரு சாதி குறித்த சித்திரங்களை யாரிடமிருந்து பெற்றுக்கொண்டார்?

ஒவ்வொரு சாதி குறித்தும் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் சித்திரம் என்றென்றைக்கும் அச்சாதிக்கு நிரந்தரமானதாக இருந்து வருகிறது; இனி வருங்காத்திலும் அவ்வாறு இருக்கும் என்ற எண்ணப் போக்கினை உருவாக்கி இருக்கிறது. (சித்திரம் என்று இங்கு குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட சாதியின் குலத்தொழில், சமூகத்தில் அவர்களுக்கான மதிப்பு போன்றவற்றைக் குறிக்கும்.) இது படிக்காத பாமரர்களிடம் மட்டுமின்றி படித்த வர்க்கத் தினரிடமும் இருந்து வருகிறது. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தான் சார்ந்திருக்கும் சாதி உறுப்பினர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றத்தினை ஏற்றுக் கொள்கிற அல்லது மாற்றத்தை வலியுறுத்துகிற ஒருவருக்கு தன்னைப்போல்/தன்னுடைய சாதியைப் போல் பிற சாதியினரிடத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணும் மனப்பாங்கு இல்லை. தன்னுடைய சாதிக்கு வழங்கப்பட்டிருக்கும் சித்திரத்தைக் கட்டுடைத்துவிட்டு தங்களின் கடந்த காலத்தை போற்றிப் புகழ்வதற்கு முற்படும் சாதியினர் பிற சாதியினருக்கு வழங்கப்பட்டிருக்கும் சித்திரத்தை மறுப்பதற்குப் பதிலாக ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் சித்திரம் இயற்கையானதே என்று நம்புவது சாதிகளுக்கு உரிய ஒரு பொதுப்புத்தியாகும்.

தன்னுடைய சித்திரத்தை மறுக்கும் சாதியினர் பிறரின் சித்திரத்தை இயற்கையானது என்று நம்புவதற்கான உதராணமாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சாதி இந்துக்கள் மற்றும் பார்ப்பனர்களிடத்தில் தலித்துகள் குறித்த இருந்துவரும் சித்திரத்தைக் கூறலாம். தன்னுடைய சித்திரத்தை மறுத்தலும் பிறரின் சித்திரத்தை ஏற்பதும் என்ற முரணான பண்புகள் தலித்துகளிடத்திலும் இருந்து வருகிறது. ஆதலால் சாதிகள் குறித்த சித்திரத்தை கேள்விக்குள்ளாக்குவதும், ஒரு சாதிக்கென ஒரு சித்திரத்தை ஏற்படுத்தாமல் அதற்கு மாறாக, ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கிற சித்திரைத்தினை கட்டுடைப்பதும் ஒரு சாதியின் வரலாற்றினை எழுதுவதற்கு திறவுகோலாக அமையும். இங்கு அருந்ததியர் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சாதியினர் குறித்து இருந்து வரும் சித்திரம் கேள்விக் குள்ளாக்கப்படுகிறது.

அட்டவணை பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சக்கிலியர், மாதாரி, பகடை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் சாதியினர் தங்களை அருந்ததியர் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்; இம்முயற்சி காலனிய ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் குறித்து பொதுவாக இருந்து வரும்/வழங்கப்பட்டிருக் கும் சித்திரம்: செத்த மாடு தூக்குவது, இழவுச் செய்தி சொல்வது, பிணம் எரிப்பது, குலவையிடுவது, இறப்பு விசேஷம், தீச்சட்டி தூக்குவது, செருப்புத் தைப்பது, களம் புடைப்பது, வெட்டியான், துப்புரவுப் பணி ஆகியவற்றை அவர்களின் குலத்தொழில்களாக குறிப்பிடுகிறார் மாற்கு (2001;270-280).

செருப்பு தைத்தல் மற்றும் துப்புரவு பணி தவிர இதர தொழில்கள் பல்வேறு இடங்களில் பறையர், பள்ளர், நாவிதர், அம்பட்டர் போன்ற சாதிகள் அதனைச் செய்திருக்கின்றனர்; செய்துவருகின்றனர். செருப்பு தைத்தல், துப்புரவு பணி, மலம் அள்ளுதல் போன்றவையே அருந்ததியர்களின் குலத்தொழில் என்ற சித்திரம் பிற சாதியினரிடம் மட்டுமல்லாது அருந்ததியர்களிடமும் இருந்து வருகிறது. இந்த சித்திரத்தை மறுக்கின்ற போக்கும் தங்களின் வரலாற்றை தாங்களே எழுதும் முயற்சியும் அருந்ததியர்களிடம் 1990களில் தொடங்கியிருக்கிறது.

எழில். இளங்கோவன் அருந்ததியர்கள் அரச மரபில் வந்து நாட்டை ஆண்ட பரம்பரையினர், என்கிறார். (1995;10). சொல் ஆய்வு மூலமாக அருந்ததியர்களை ஆண்ட பரம்பரையினர் என்ற வரலாற்றினை எழுத முற்படுகிறார் அவர். அருந்ததியர் என்று அழைத்துக் கொள்பவர்களில் மாதியர்களும் அடக்கம். எழில். இளங்கோவன் மாதியர் என்ற பெயரை தமிழ் இலக்கணப்படி மா+அதியர் என்று பிரிக்கிறார். மா என்றால் பெரிய என்றும், அதியர் என்றால் தலைவர், அருமை+ அதியர்=அருந்ததியர் என்றும் பொருள் என்கிறார் அவர். இவரின் இலக்கணம் நீண்டு சங்க காலத்திற்குள் நுழைந்து இறுதியாக அருந்ததியர்களை ஆண்ட பரம்பரையோடு இணைத்து விடுகிறார். சொல் ஆராய்ச்சி மூலம் தங்கள் சாதியை ஆண்ட பரம்பரையோடு இணைத்துக் கொள்வதற்கு பிற சாதியினர் பின்பற்றி வரும் பழைய முறையையே எழில். இளங்கோவனும் பின்பற்றுகிறார்.

ஆண்ட பரம்பரை வரலாற்றை கட்டமைப்பவர்கள் ஒவ்வொரு ஆட்சியும், சமூக மாற்றமும் ஒரு சாதியை எவ்வாறு தோற்றுவித்தது? அல்லது இருக்கிற ஒரு சாதி பிற சாதியோடு எவ்வாறு கரைந்தது? என்பது குறித்த ஆய்வுக்குள் செல்வதில்லை. இக்கட்டுரை பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி தங்களை அருந்ததியர் என்று அழைத்துக் கொள்கின்ற சாதியினர் எவ்வாறு மலம் அள்ளும் தொழிலுக்குள் புகுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதை எடுத்துரைப்பதற்கு முயற்சிக்கிறது.

அருந்ததியர்: தோல் பொருட்கள் உற்பத்தியாளர்

அருந்ததியர் குறித்து தமிழகத்தின் பண்டைய கல்வெட்டுக்களிலோ அல்லது இலக்கியங்களிலோ பதிவு செய்யப்பட்டிராத காரணத்தினால் கட்டுரை மேற்கொள்கின்ற ஆய்வுக்கு காலனிய ஆட்சியாளர்கள் பதிப்பித்திருக்கும் மாவட்டக் கையேடு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்றவையே முக்கியமான ஆதாரமாகும்.

ஆர்தர் எப். கோக்ஸ், முகமதியர்களும் லப்பைகளும் தோல்தொழிலில் ஈடுபடும் வரை அத்தொழிலில் மாதிகா, சக்கிலியர்கள் ஏகபோகம் செய்துவந்தனர் (1881;303) என்றும், லீ ஃபனு, சக்கிலியர்கள் முக்கியமாக தோல் தயாரிப்பிலும் செருப்பு உற்பத்தி செய்வதிலும் சில சமயம் விவசாயத்திலும் ஈடுபடுகின்றனர் (1883; 133) என்று குறிப்பிட்டுள்ளனர்.

தொழில்வாரியாக ஒவ்வொரு சாதியையும் வகைப்படுத்தியிருக்கும் ஹரால்டு ஏ ஸ்றுயர்ற், தோல் வேலை செய்பவர்களாகவே சக்கிலியர்களையும் மாதிகாக்களையும் வகைப்படுத்தியிருக்கிறார் (1898; 23). எட்கர் தர்ட்ஸன், நீர் இறைப்பதற்கான கமலை, எண்ணெய் வைத்துக் கொள்வதற்கான பை, சாட்டை, சிறிய தோல் பை போன்றவற்றை தயாரிப்பது சக்கிலியர்களின் தொழிலாக குறிப்பிட்டுள்ளார் (1904;2-7).

மேலும், மாதிகா குறித்து தனியே பதிவு செய்திருக்கும் இடத்திலும் இவர்கள் தோல் தொழில் செய்பவர்கள் என்றே குறிப்பிட்டுள்ளார் (1904; 292-325). கன்னல் செடர்லாப் தனது நூலில் அருந்ததியர்களை தோல் பொருட்கள் உற்பத்தியாளர் என்று கூறியுள்ள அவர் நூலின் முன்னுரையிலேயே தோல் வேலைசெய்கின்ற அருந்ததியர்களின் முக்கியத்துவத்தை பின்வருமாறு விவரித்துள்ளார்: ஒவ்வொரு கிராமத்திலும் திறமையான தோல் வேலை செய்பவர்கள் வசித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வறட்சியான பகுதிகளில் விவசாயிகள் தோல் தொழிலாளர்களை சார்ந்திராமல் லாபம் பெறமுடியாது. ஒரு விவசாயி தோல் தொழிலாளர்களை விவசாய தொழிலாளர்களாக நியமித்திருப்பதற்கான காரணம் என்னவென்றால் நீர் இறைப்பதற்கே(1997;1). மேலே எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அருந்ததியர்கள் தோல் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் என்று கூறுவதிலிருந்து அவர்களின் தொழில் மலம் அள்ளுவதோ அல்லது துப்பரவு பணி செய்வதோ அல்ல என்பது திண்ணம்.

இருப்பினும், இதனை மேலும் வலுப்படுத்துவதற்கு சில அடிப்படையான கேள்விக்கு பதில் காணவேண்டியது அவசியம். அக்கேள்வி இதுதான்:

1. இந்தியர்கள் மலம் கழிப்பதற்கு காடுகளைப் பயன்படுத்தினரா? அல்லது கழிப்பறையை பயன்படுத்தினரா?

2. தெருக்களை சுத்தம் செய்வதற்கு அருந்ததியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனரா?

கிராமங்களில் கழிப்பறை என்ற முறை பெரும்பாலும் இருந்திருக்கவில்லை; காடுகளில் மலம் கழிக்கும் வழக்கம்தான் இருந்திருக்கிறது, இன்றும் இருந்து வருகிறது. இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள சாத்தர்பூர் என்ற கிராமத்தில் பார்ப்பனர்கள் திறந்த வெளியையே கழிப்பிடத்திற்கு பயன்படுத்தியதாக ஃபிரிடம் அற் மிட் நைற் என்ற நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் (1976; 263-4).

1947ம் ஆண்டு இதுதான் கிராமங்களின் நிலைமை என்றால் எழுகின்ற மற்றொரு கேள்வி: கழிப்பறை முறையோ அதனை சுத்தம் செய்கின்ற தொழிலாளர்களோ இருந்திருக்கவில்லையா? கழிப்பறை முறை நகரத்தில்தான் தோன்றியிருக்கிறது என்பதைக் காணமுடிகிறது. இதனைக் காண்பதற்கு முன்னர் அவர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனரா என்ற கேள்விக்கான விடையினைக் காண்போம்.

பொதுவாகவே, கிராமங்களில் தலித்துகள் ஆதிக்கச் சாதியினரின் தெருவிற்குள் செல்வதற்கு தீண்டாமையின் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நகராட்சிகள் உருவான பின்னர் அதன் மூலம் தெருக்கள் சுத்தம் செய்கின்ற பணி தொடங்கிய பின்னரும் கூட தலித்துகள் அப்பணியினை ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் தெருக்களில் செய்வதற்கு மறுக்கப்பட்டிருந்ததனைக் காணமுடிகிறது.

திருநெல்வேலி நகராட்சி மன்றக் கூட்டத்தில் சந்நியாசி அக்ரஹாரத்தினை மேல்சாதி வேலையாட்கள் மூலமே பராமரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்வும் (எம்.எல்.சி.டி, 18 ஆகஸ்ட் 1924; 41, 76-78), ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணவரம் அக்ரஹாரத்தினை சுத்தம் செய்வதற்கு தலித்துகளை அமர்த்துவது எதிர்க்கப் பட்டதும் (எம்.எல்.சி.டி. 19 ஆகஸ்ட் 1925; 179-180) இதற்கான உதாரணங்கள்.

மேலும், பிற்படுத்தப்பட்ட மக்களும்கூட அவர்களின் தெருக்களை பராமரிப்பதற்கு தலித்துகள் செல்வதை எதிர்த்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது (எம்.எல்.சி.டி, 18 ஆகஸ்ட் 1924; 78). பார்ப்பனர்கள் முதல் பார்ப்பனர் அல்லாதோர் (தலித்துகள் தவிர்த்து) வரை தலித்துகள் தங்கள் தெருவினை சுத்தம் செய்யவதற்கு மறுத்திருக்கின்றனர் என்பது லிருந்து அருந்ததி யர்கள் கிராமங்களில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கவில்லை என்று உறுதிபடக் கூறலாம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை மலம் அள்ளுதல் மற்றும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிராத அருந்ததியர்கள் எப்பொழுது அப்பணியைச் செய்யத் தொடங்கினர்? இதற்குப் பின்புலமாய் அமைந்த சமூகப் பொருளாதார காரணிகள் என்ன?

சமூக ஒடுக்குமுறை, தொழில் இழப்பு

தமிழக சாதிய அமைப்பில் அட்டவணை சாதிப் பிரிவினரில் அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகிய மூன்று பிரிவினர்களுக்கிடையே யார் சமூக மதிப்பில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற போட்டி இருந்து கொண்டே வருகிறது. சோனார்ட் என்பவர் பசுவின் தோலிலிருந்து காலணி தயாரிக்கும் காரணத்தினால் அவர்கள் பறையர்களிலும் கீழானவர்கள் என்கிறார். அபெ துபே, இந்தியாவின் தென்பகுதி முழுவதும் செருப்பு தைப்பவர்கள் பறையர்களைவிடவும் கீழானவர்கள், பறையர்களும் மாதிகர்ளும் ஒருவர் மற்றொருவரிடமிருந்து உணவோ அல்லது தண்ணீரோ பரிமாறுவதில்லை என்கிறார்.

இது யார் யாரை தீண்டத்தகாதோராக நடத்தினர் என்ற கேள்வியை எழுப்புகிறது; இது ஒரு புறம் இருக்கட்டும். அவர்களுக்குள் இருக்கும் அப்பாகுபாட்டினை அறிந்த மன்னர் ஒருவர் குதிரையை பராமரிக்கும் பணியைச் செய்கின்ற பறையர் தானியத்தை திருடுவதை தடுப்பதற்கு மாதிகரைக் கொண்டு பறையர் முன்பே தானியத்தில் தண்ணீர் தெளிக்கச் செய்திருக்கிறார் (ஆர்தர் எப். கோக்ஸ், 1881; 303).

அருந்ததியர் மீதான தீண்டாமைக்குக் காரணம் அவர்கள் தோல் பதப்படுத்துதல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி செய்வதே. தோலினாலான பொருட்களுக்குப் பதில் இதர பொருட்கள் பயன்படுத்தும் முறை காலனிய ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட காரணத்தினால் தோல் பொருட்கள் தயாரிக்கும் அருந்ததியர்களின் தொழில் பாதிப்புக்குள்ளாகத் தொடங்கியிருப்பதனை அறியமுடிகிறது. இக்காலத்தில் உருவாகிக் கொண்டிருந்த நகரங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றில் ஏற்படும் கழிவுகளை அகற்றுவதற்கு ஆட்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். ஹரிஜன் இதழ், எவ்வித சந்தேகத் திற்கும் இடமின்றி துப்பரவுத் தொழிலாளர்கள் நகரங்களுக்குத் தேவை என்று வலியுறுத்தியிருப்பதிலிருந்து துப்புரவுத் தொழிலாளர்கள் தேவையிருந்திருப்பதனை புரிந்து கொள்ள முடிகிறது. (ஏப்ரல் 10, 1949; 44).

மலம் அள்ளுதல் அல்லது துப்புரவு பணியைச் செய்வதற்கு யார் முன்வருவர்? சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் சாதியினர் முன்வருவார்களா? அல்லது அரசாங்கத்தால் அவர்களை அக்காலத்தில் அப்பணியில் ஈடுபடுத்தியிருக்கத்தான் முடியுமா? சமூக அமைப்பில் யார் அடித்தட்டில் இருக்கிறார்களோ அவர்களையே இழிவு வேலைக்கு அமர்த்த முடியும்.

சென்னை மாகாண அவையில் நடைபெற்றிருக்கிற விவாதங்களை வாசிக்கிற பொழுது அரசாங்கம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையே மலம் அப்புறப்படுத்தும் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறது என்பதைக் காணமுடிகிறது. 21 ஆகஸ்ட் 1925ல் ஆர். வீரையன், ‘’துப்புரவு பணியாளர் அல்லது தோட்டி வகுப்பினைச் சாராத ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் சேலம் மத்திய சிறைச்சாலையில் துப்புரவு பணி செய்வது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? என்று எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்: ஆம். சேலம் மத்திய சிறைச் சாலையில் பறையர் மற்றும் குறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இச்சாதியின் உறுப்பினர்கள் நகராட்சி, உள்ளாட்சி போன்றவற்றின் மூலம் துப்புரவு பணியில் அமர்த்தப்படுவதால் இங்கும் அப்பணியை செய்வதற்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என சிறைச் சாலை ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார் என்று பதிலளிக்கப்பட்டது (21 ஆகஸ்ட் 1925; 477).

மேலும் சிறைச் சாலைகளில் பல்வேறு குற்றவாளிகள் இருப்பினும் தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த தண்டனைக் குற்றவாளிகளே துப்புரவுப் பணியில் அமர்த்தப் பட்டிருக்கின்றனர் என்பதும் தெரியவருகிறது (22 செப்டம்பர் 1937; 503). இந்த விவாதம், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் தலித் மக்களே மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதனை தெரிவிக்கிறது. இதிலிருந்து, தலித் மக்களிலேயே அடிமட்ட நிலையிலிருந்த அருந்ததியர்கள் பெருமளவில் மெல்ல மெல்ல துப்புரவுப் பணியில் ஈடுபடத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கையிலும் துப்புரவு மற்றும் மலம் அள்ளும் பணியைச் செய்வதற்கு தலித்துகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். நிதல் சிங் 1929ம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையிலுள்ள நகரங்களை சுத்தம் செய்வதற்கும் தனியார் தங்கும் மற்றும் உணவு விடுதிகளிலுள்ள மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கும் தென்னிந்தியா விலிருந்து ஆட்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிகழ்வினை விவரித்துள்ளார் (தி மாடர்ன் ரிவ்யூ, 1929; 549-552). எனவே, காலனிய ஆட்சிக் காலத்தில் விவசாயத்தில் நீர் பாய்ச்சுவதற்கு கமலை என்ற தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தோலினாலான பையின் உபயோகத்தின் குறைவு, இதர தோல் பொருட்களின் பயன்பாட்டு வீழ்ச்சி அதனைத் தொடர்ந்து அருந்ததியர்களின் தொழில் இழப்பும் வறுமைக்குள் தள்ளப்படுதலும் அதே காலக்கட்டத்தில் நகரங்களில் மலம் அள்ளுதல் மற்றும் துப்புரவுப் பணிக்கான ஆட்களின் தேவை அருந்ததியர்களை அப்பணிக்குள் ஈடுபடுத்தியது எனலாம்.

முடிவாக, ஒரு சாதியின் தொழில் அதன் அடையாளம் சமூகத்தில் குறிப்பாக உற்பத்தி முறையில் ஏற்படுகின்ற மாற்றத்தினால் மாறக்கூடும்; ஒரு சாதியின் பாரம்பரியத் தொழில் என்று நிரந்தரமாக ஒன்று இல்லை, இருக்கவும் முடியாது. காரணம், தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு முன்னர் செம்மான் (இவர்கள் பறையர்களில் ஒரு பிரிவு என்று கூறப்படுகிறது) என்ற சாதியினர் தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்திருப்பதனை அறியமுடிகிறது. இவர்கள் எப்பொழுது எதனால் அத்தொழிலினை இழக்க நேர்ந்தது என்பது ஆய்வுக்குரியது. காலனிய ஆட்சியின் இயந்திரமயமாக்கல் மற்றும் நகர்மயமாக்கல் சுயமான அறிவின் மூலம் தோல் பொருட்கள் உற்பத்தியாளராயிருந்த அருந்ததியர்களை மலம் அள்ளும் தொழிலாளர்களாக மாற்றியது என்றால் அது மிகையான மதிப்பீடு அல்ல. மலம் அள்ளும் பணியும் எதிர்காலத்தில் மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை, அருந்ததியர்களின் வாழ்க்கைத் தரமும் அடையாளமும் மாற்றமடையும்.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...