Thursday, February 12, 2009

விளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை


விளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை


பின் நவீனத்துவம் தொடர்ந்து உரையாடல் நடத்தி வரும் வேளையில் மார்ஜினலிசம், மினிமலிசம் போன்ற சொல்லாடல்கள் கவனம் பெறத் தொடங்கியது.அடித்தட்டு மக்கள் ஆய்வுகள் (subaltern studies). வரலாற்றெழுத்தியல் (historiography) மையங்களை தாண்டி புவியியல்,பொருளாதார,பண்பாட்டு,கருத்தியல் மட்டங்களில் விலக்கி வைக்கப்பட்டிருந்த விளிம்புகளை (peripersy) கணக்கில் எடுத்துக் கொண்டது.அடித்தள மக்களின் செயல்பாடுகளை அரசியல் நீக்கம் (de-political) செய்து பார்ப்பது வளர்ந்தது. நாட்டார் சமூகங்களுக்கும் (folk society) பழங்குடி,தலித் சமூகங்களுக்கும் உள்ள வேறுபாடுகளையும் தலித் சமூகத்திற்கும் விளிம்புநிலை மக்களுக்குமான வேறுபாடுகளையும் துல்லியமாக அறிய முடிகிறது.எனினும் தலித்துக்கள்,பழங்குடியினரை அடித்தள மக்களாக இந்திய சூழலில் கணக்கிலெடுப்பது தவறாகாது.ரஞ்சித் குகா,பார்த்தா சாட்டர்ஜி,ஞானேந்திர பாண்டே,தீபேஷ் சக்கரவர்த்தி,காயத்திரி ஸ்பீவாக் போன்றோர்கள் அடித்தள ஆய்வுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.பின் நவீனத்துவம்,பின் மார்க்சியம்,பின் காலனியம்,ரெட் பெமனிசம் போன்றவை தொடர்ந்து அடித்தள பிரிவை தத்துவ நோக்கிலும் பண்பாட்டு,பொருளாதார நோக்கிலும் விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் விளிம்புநிலை இஸ்லாம் என்ற கருத்தாக்கம் குறித்து பேச வேண்டியுள்ளது.

கிராம்சி,பூக்கோ,தெரிதா,ஜர்ஹன் ஹெபர்மாஸ்,வால்டர் பெஞ்சமின் போன்றோர்கள் ஒடுக்கப்பட்ட உடல்கள் குறித்தும் மேலாண்மை குறித்தும் பேசிய விஷயங்களே விளிம்பு நிலை ஆய்வுகளில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இந்த தளமுடைய சபால்டன் ஆய்வுகளின் தொடர்ச்சியாகத் தான் விளிம்பு நிலை இஸ்லாம் குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.பின் கீழ்திசையியல் (post orientalism) முறையியலாக இது நீட்சியடைகிறது.அனைத்துவகை ஏகாதிபத்தியங்களையும் ,மயமாக்கல்களையும் எதிர்த்துக் கொண்டு நாட்டார் இஸ்லாத்தின் (folk islam) கூறுகளை தக்க வைத்துக் கொண்டு வைதீக இஸ்லாத்துக்கும் ( orthodox islam) நவீன இஸ்லாத்துக்குமான (modernist islam) உரையாடல்களை விளிம்பு நிலை இஸ்லாம் விரும்புகிறது.விளிம்பு நிலை இஸ்லாமும் அடித்தட்டினர் பண்பாடு,அடித்தட்டினர் உடல்,அடித்தட்டினருக்கு எதிராக கட்டமைக்கப்படும் உண்மை ஆகியவற்றையே பிரதானப்படுத்துகிறது.

நாடு,சமூகம்,நிறுவனங்கள்,மொழி போன்றவை ஆண் உடல்களாக இருப்பதாலும் பண்பாட்டு மேலாண்மை புவியியல்,மொழி,இனம்,மதம் சார்ந்து பல்வேறு பிரிவுகளில் தகவமைத்துக்கொண்டு இருப்பதாலும் அடித்தள மக்களை எல்லாவகை மேலாண்மைகளில் இருந்தும்,ஆண் உடல்களிலிருந்தும் தனியே பிரித்தெடுக்கும் முயற்சியை விளிம்பு நிலை இஸ்லாம் எடுத்துரைக்கிறது.மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சனைகளில் ஏகாதிபத்தியத்தின் பங்கெடுப்பை புரிந்து கொள்ளும் முயற்சிகளிலும் பொது உளவியலில் பாசிச தடங்கள் பதிந்திருப்பதை எடுத்துச் சொல்லுவதிலும் அது உறுதிபூணுகிறது.பண்பாட்டு இஸ்லாம்(cultural islam) தனக்கேயான தன்மையுடன் உரையாடல் செய்து கொண்டிருப்பதை போல தாராள இஸ்லாம் (libaral islam) ,மதநீக்க இஸ்லாம் (secular islam) போன்றவை வெளிப்படுத்தும் ஜனநாயக தன்மைகள் யாவற்றையும் விமர்சனத்துடன் விளிம்பு நிலை இஸ்லாம் தமது பார்வைகளை வெளிப்படுத்துகிறது. கற்பிதங்களையும்,கட்டமைப்புகளையும்,நிறுவனங்களையும்,அரசியலையும் எதிர் நோக்கும் அதே வேளை மாற்று உரையாடல்களுக்கான கதையாடல்களை உருவாக்குகிறது.

உடலே நிலமாகவும்,நிலமே உடலாகவும் மேலாண்மை( hegemony) இயற்கை வடிவமாக இருந்து பண்பாட்டு அமைப்பாக திகழ்வதை அடித்தள மக்களின் பார்வையில் கொண்டுச் செல்ல வேண்டியதும் முக்கியமாகயிருக்கிறது.அரபு மையவாதத்தையும் தேச,தேசீய,காலனீய, உலகமயமாக்கல் நடவடிக்கைகளையும் சர்ச்சைக்கு உட்படுத்தி ஆண் உடல் பற்றிய பிரக்ஞையை முன்னிலைபடுத்த வேண்டியிருக்கிறது. உடல் அரசியலையும் அடையாள அரசியலையும் மக்கள்திரளில் காட்ட முயலும் (collective agency) அரசியலாக்கும், நியாயப்படுத்தல்களையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே விளிம்பு நிலை இஸ்லாத்தின் கோட்பாட்டு தளம் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது.

அடித்தள முஸ்லிம்களான கிராமப்பற,நகர்புற ஏழைகள்,விவசாய கூலிகள், நடைபாதை வியாபாரிகள்,தொழில் கூலிகள்,அரவாணிகள்,நோயுற்றோர், நாடோடிகள், பிச்சைக்காரர்கள் போன்ற பிரிவினர் பற்றிய சமூக,பொருளாதார,அரசியல் ஆய்வுகளுக்கான தேவையை விளிம்பு நிலை இஸ்லாம் பேசுகிறது.வைதீக மரபுகள் நாட்டார் கூறுகளை அங்கீகரித்துக்கொண்டு அடித்தள மக்களோடு நேசம் கொள்வது போன்று அவர்களை பயன்படுத்திக்கொள்ளும் அரசியலை கட்டுடைக்க வேண்டியிருக்கிறது.நாட்டார் இஸ்லாத்தின் தர்ஹா பண்பாடு வெகுஜன இஸ்லாத்தோடு தொடர்புடையதாக இருப்பதால் அடித்தள மக்களையும் ஈர்த்துக்கொள்கிறது.ஆனால் தர்ஹா பண்பாடு போற்றும் நிறுவன ஆதிக்கங்களை,அடித்தள மக்கள் மீது செலுத்தும் அதிகாரங்களை சர்ச்சைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.இஸ்லாத்துக்குள் நிலவும் பெருங்கதையாடல்களின் தகர்ப்பை விளிம்பு நிலை இஸ்லாம் விரும்புகிறது.இஸ்லாமிய பெருமரபுகளுக்கு சற்றும் தொடர்பில்லாத அடித்தள முஸ்லிம்களின் மொழி,பண்பாடு,கலை,விழாக்கள்,நம்பிக்கைகள்,வாழ்வியல் முறைகள்,சடங்காச்சாரங்கள் போன்ற தனித்துவமிக்க செயல்பாடுகளை கைவிடாமல் தொடரும் அவர்களின் வாழ்க்கை ஒளிவட்டங்களுக்கு புறம்பாக புனிதமற்றதாக இருப்பதை மையபடுத்தி அதை விவாதிக்கிற சூழலை விளிம்பு நிலை இஸ்லாம் விரும்புகிறது.

நிறுவன இஸ்லாத்தின் எந்த ஒரு நிறுவனங்களிலும் இல்லாத அடித்தள முஸ்லிம்கள் மீது வைதீக,நவீன முஸ்லிகள் தொடரும் தத்துவ அறிவு கோட்பாட்டு ஆதாரங்களை (epistemological fountation) ,பொருள்கோளலியலை (hermeneutics), நியாபடுத்தல்களை (legitimacy) நிராகரித்து மாற்று அறிவுகோட்பாட்டாதாரங்களை,பொருள்கொளலியலை,நியாயபடுத்தல்களை தத்துவ நிலையிலும்,வாழ்வியல் முறைகளிலும் உருவாக்கிக் கொள்ளும் விரிவான தளம் விளிம்பு நிலை இஸ்லாத்துக்கு இருக்கிறது.அடித்தள மக்களல்லாத பிற முஸ்லிகள் இஸ்லாம் என்ற பேரில் முன்வைக்கும் உண்மைகளை சர்ச்சைக்கு உட்படுத்தவேண்டும்.சட்டபூர்வமான உண்மை எவ்வாறு அடித்தட்டினருக்கு எதிராக செயல்படுகிறது என்று விவாதிக்க வேண்டியிருக்கிறது.இஸ்லாமிய பெருமரபு நம்பிக்கைகளுக்கு புறம்பான இவர்களின் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று ஏளனம் செய்யும் நம்பிக்கையின் அரசியலை சொல்ல வேண்டியிருக்கிறது.அவர்களின் பண்பாடும்,மொழியும்,பழக்கவழக்கங்களும் அராஜகமாக,ஒழுக்கமற்றதாக,புனிதமற்றதாக இருக்கிறது எனும் பார்வையை மறுதலித்துக்கொண்டு அவர்களை ஜீவனுள்ளவர்களாக மாற்ற வேண்டிய பணியையும் இது ஆதரிக்கிறது.அடித்தட்டினரின் உணர்வு நிலை முக்கியபடுத்தவேண்டும்.அவர்களது உணர்வு நிலை ஆதிக்கங்களுக்கு,சுரண்டல்களுக்கு அடங்கி போதலுடன் தொடர்புடையதாக இருப்பதால் வாழ்வியல் ஆதாரங்களை பெறும் உரிமைகளையும்,விடுதலையையும் விளிம்பு நிலை இஸ்லாம் கோட்டாட்டுருவாக்கத்திலும் சரி,செயல்திட்டத்திலும் சரி முன்னெடுத்துச் செல்லுகிறது.இதுவரை அடித்தட்டினரின் விடுதலைக்காக பேசப்பட்ட,செயல்பட்ட விஷயங்கள் யாவும் கோட்பாட்டு புனைவாக இருப்பதால அவற்றை சர்ச்சைக்கு உட்படுத்துவதும் இதன் வேலை திட்டமே.

உலகமயமாதலின்(globalaisation) புதுவடிவமாக பொயெதார்த்த காலனியம்(virtual colonalism) தகவல்தொடர்புகளை முன்னிறுத்தி காலனீய செயல்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கும் சமயத்தில் நவ முதலாளியம்(pan capitalism) ஒரே உலகம் ஒரே பண்பாடு என்ற கோஷத்துடன் தமது மேலாண்மையை செய்து கொண்டிருக்கிறது.இவ்வகை ஆதிக்கங்களை எதிர்கொள்வது எப்படி செயற்திட்டத்தையும்,பிரக்ஞையையும் மாற்று எதிர்நடவடிக்கை முகாம்களிலிருந்து உருவாக்குவதில் முனைப்புடன் செயலாற்றுகிறது.மேனிலை சிந்தனை வரிசை(higher order of thoughts) எனும் கருத்தாக்கம் பொது உளவியலில் படிகளாக எவ்வாறு அடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவற்றுக்கு தன்னிலை படிந்து போகும் நிலையையு எடுத்துரைக்கிறது.அந்த சிந்தனையின் வெளிச்சத்தில் ஊடக அரசியலை எதிர்க்கொள்ளும் நடவடிக்கைப்பற்றி விளிம்புநிலை இஸ்லாம் தீவிரமாக விவாதிக்கிறது.வினைச்செய் உயிரிக்கும்,வினைபடு உயிரிக்குமான அரசியல் யுத்தம் நுண்தளத்திலிருந்தும் பெரும்தளத்திலிருந்தும் உருவாவதை தீவிரமாக அலச வேண்டிய சூழலும் தற்போது அமைந்துவிட்டிருக்கிறது.இன்று உண்மை பன்மீயம் (real pluralism)என்ற பெயரில் இஸ்லாமியர் பலர் தாராள இஸ்லாத்தில் விளிம்பை பேசவேண்டும் என்ற நிலையை எடுத்திருப்பது முக்கிய சமூக நிகழ்வாகும்.சாந்திரா முசாபர்(மலேசியா),முகமது தலாபி(துனிசியா),சூபி மக்சானி(லெபனான்),ஹ¤மாயூன் கபீர்(இந்தியா),அப்துரஹ்மான் வாஹித்(இந்தோனேஷியா),அப்துல் கரீம் சாரூஸ் (ஈரான்),பரீத் இஸ்ஹாஹ்(தென் ஆப்ப்ரிக்கா) போன்றோர்கள் உண்மை பன்மீயம் மூலம் இஸ்லாத்தின் வைதீக செயல்பாடை உடைத்து விடலாம் என்ற குரலெழுப்புகிறார்கள்.இஸ்லாமிய பன்மீயம் என்ற கருத்தாக்கம் கருப்பு இஸ்லாம் இறையியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.இவ்வாறு விளிம்பு நிலை பற்றிய கண்ணோட்டங்கள் உலகமுழுவதும் உருவாகியுள்ள சூழலில் கருத்துருவாக்கத்திலும்,கோட்பாடாகவும்,செயற்திட்டமாகவும் விரிவும் ஆழமும் கொண்டுள்ள விளிம்பு நிலை இஸ்லாம் ஒடுக்கப்பட்டமக்களின் குரல்களை மிகவிரைவில் பதிவுசெய்யும்.


-------------------------------------

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...