Tuesday, August 25, 2009

'சூன்யப்புள்ளியில் பெண்’ நாவலில்


“எந்தவொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்க இயலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது அவசியம்!”

- ‘சூன்யப்புள்ளியில் பெண்’ நாவலில் இருந்து…

பெண்ணிய சொல்லாடல்களும் பெண்ணிய புரட்சியும் காலந்தோறும் நடந்தபடியே உள்ளன. அவை அந்தந்த காலகட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவே தவிர, தொடர்ந்து பேரியக்கமாக வளர்ந்து மாபெரும் சமூக மாற்றத்​தை ஏற்படுத்த தவறிவிடுகின்றன. சாதி ஒழிப்பு, பிராமணீய எதிர்ப்பு, பெண் விடுதலை உள்ளிட்ட புரட்சிக்கருத்தாக்கங்களை ஏற்படுத்தியவர் பெரியார். அவர் வழிவந்த திராவிட இயக்கம் அமைப்பு ரீதியாக வலுவாக வளர்ந்தும், திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால் பேரியக்கமாக வளரவேண்டிய பெரியாரின் கருத்துக்கள் நீர்த்துப்போய் வெறுமனே பிராமணீய எதிர்ப்பு என்பது மட்டுமாக எஞ்சி நிற்கிறது. சாதி ரீதியிலான ஒடுக்குதல்களும் பெண்கள் மீதான சமூக வன்முறைகளும் இன்று வடிவம் மாறி முன்பைவிட கொடூர முகத்துடன் வளைய வருகின்றன.

பெண்கள் கடல் தாண்டிப்போய் பணம் சம்பாதிக்கும் இக்காலக்கட்டத்திலும்கூட, ஒரு பெண்ணின் மறுமணம் என்பது கனவிலும் நினைத்துப்பார்க்கக்கூடாத விஷயம்தான்! எட்டு மாத கைக்குழந்தையானாலும் சரி, எண்பது வயது மூதாட்டியானாலும்சரி பெண்ணுடல் எப்போதும் இச்சைக்குரியதாகவே உள்ளது ஆண்களுக்கு. வீடு, பள்ளி,கல்லூரி, பணியிடம் என சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண் சுரண்டலுக்கு உள்ளாகிறாள். பெண் ஒடுக்குமுறை குறித்து நாம் நிறைய பேச வேண்டியுள்ளது. பெரியார் கருத்துக்களை கொண்டு செல்ல அவருடைய நிறுவன வழிதோன்றல்களால் இனி முடியாது என்னும் உண்மையோடு சூன்யப்புள்ளியல் பெண் நாவல் குறித்து எனது பகிர்தல்களை உங்கள் முன் வைக்கிறேன். சூன்யப்புள்ளியில் பெண் நாவலில் வரும் ஃபிர்தவுஸின் வாழ்க்கைச் சூழல், அவள் எதிர்க்கொள்ளும் வன்முறைகள் நம் சூழலுக்கும் பொருந்திப்போவதாலேயே நாவல் குறித்து பேச விரும்புகிறேன் .

எகிப்தின் நைல் நதியோரம் வாழும் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மூத்தவள் ஃபிர்தவுஸ். வறுமை சூழ்ந்த அந்த குடும்படும் அவளைச்சுற்றியுள்ள சமூகமும் சிறந்த அடிமையாக வாழ்வதற்கான அடிப்படையை குழந்தைப்பருவம் முதலே கற்றுக்கொடுக்கத் தொடங்குகின்றன. வீட்டு வேலைகளை செய்வதற்கும் உடன் பிறந்தவர்களை கவனிப்பதற்கும் தன் வீட்டிலேயே அடிமையாக பணிக்கப்படுகிறாள். எதிர்பாராத சூழ்நிலையில் அப்பாவும் தொடர்ந்து அம்மாவும் இறந்துவிட, உடன் பிறந்தவர்களும் வறுமை காரணமாக குழந்தைகளாகவே பலியாகிடும் போது மாமாவின் பராமரிப்பில் விடப்படுகிறாள் ஃபிர்தவுஸ். அவளின் குழந்தைமையை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட அதே மாமாவுடன் எகிப்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். மாமா தன்னை வேலைக்காரியாக, பாலியல் அடிமையாக நடத்தினாலும் பள்ளிக்கு அனுப்பி வைப்பவனாகவும் இருக்கிறான். நடுநிலைப்பள்ளி வகுப்புகளை முடிக்கும் ஃபிர்தவுஸை, அவசரஅவரசமாக 60 வயது கிழவனுக்கு கணிசாமான வரதட்சணைத் தொகைக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் மாமாவும் அவரது மனைவியும். குணத்திலும் உருவத்திலும் அருவருப்பை ஏற்படுத்தும் அந்தக்கிழவனின் அடிஉதைகளை தாங்கப்பொறுக்காமல் வீட்டை விட்டு ஓடிப்போகிறாள் ஃபிர்தவுஸ்.

மற்றவர்களை பசியில் விட்டு, தான் மட்டும் உண்டு ஏப்பம் விடும் அப்பா, அப்பாவுக்குரிய இடத்தில் இருந்துகொண்டு தன் உடலைச் சுரண்டிய மாமா, பேராசைப் பிடித்த கருமி கணவன் என அதுவரை எதிர்கொண்ட ஆண்களைவிட, வீட்டை விட்டு வெளிவந்த பிறகு ஃபிர்தவுஸ் எதிர்கொள்ளும் ஆண்கள் எந்த வகையிலும் வேறுபட்டவர்கள் அல்ல. வேலை வாங்கித்தருகிறேன் என்ற பெயரில் தானும் சுரண்டி, அவளை விற்பனை பொருளாக்குகிறான் ஒருவன். அவனிடமிருந்து தப்பித்துப்போனவள் முற்போக்கு பேசுபவனின் காதலில் விழுகிறாள். அவனுடைய முற்போக்குத்தனம் படுக்கை அறையை பகிர்ந்துகொண்டு, பணம் நிரம்பப் படைத்த இன்னொருத்தியுடன் செல்கிறது. சோர்ந்துபோகும் ஃபிர்தவுஸ், மேல்தட்டு வர்க்க பாலியல் தொழிலாளி ஒருத்தியின் மூலம் தன்னுடலுக்குரிய விலையை தானே நிர்ணயிப்பவளாக மாறுகிறாள். அன்பு, காதல் என்ற பெயரில் இலவசமாக தன்னைப் பயன்படுத்திக்கொள்ள இனி ஒருபோதும் எந்த ஆணையும் அனுமதிப்பதில்லை என முடிவெடுக்கிறாள். அரபு மன்னர்களையும் அரசு உயர்பதவியில் இருப்பவர்களையும் மகிழ்விக்கும் தேர்ந்த மேல்தட்டு பாலியல் ​தொழிலாளி ஆகிறாள் அவள். தனக்குரிய தானே நிர்ணயித்து வாழ்ந்து கொண்டிருப்பவளின் வாழ்க்கையில் அரசியல் செல்வாக்குமிக்க தரகனின் தலையீடு ஏற்படுகிறது. தனக்குரிய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க முடியாதவளாய் சந்தர்ப்ப வசத்தில் தரகனை கத்தியில் குத்திக் கொல்கிறாள். ஃபிர்தவுஸை கைது செய்து குற்றவாளியாக்கி தூக்கு தண்டனை விதிக்கிறது அரசு. நீதி வலுபடைத்தவர்களுக்கானது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.

எகிப்து உளவியல் மருத்துவரும் பெண்ணிய எழுத்தாளருமான நவ்வல் எல் ஸதாவி சிறையில் இருந்தபோது சந்தித்த தூக்கு தண்டனைக் கைதி ஃபிர்தவுஸ். ஓர் எளிய விவசாயப் பின்னணியில் ஆரம்பிக்கும் ஃபிர்தவுஸின் வாழ்க்கை திசை மாறி இறுதியில் அசாதாரணமாக முடிகிறது என்பதை அழுத்தமாக கூறுகிறது இந்நாவல். ஆரம்பத்திலும் நாவல் முடியும்போது மட்டும் ஆசிரியர் வந்துபோகிறார். மற்றபடி நாவல் முழுக்க ஃபிர்தவுஸின் பார்வையிலேயே செல்கிறது, சுயசரிதைக்குரிய நடையுடன். ஃபிர்தவுஸின் மனஉணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது நவ்வலின் எழுத்து.

ஃபிர்தவுஸின் வாழ்க்கையில் சற்றுநேர பூன்னகையைப் பூக்க வைத்தவர்கள் பால்ய வயது தோழனும் நடுநிலைப் பள்ளியில் வகுப்பு ஆசிரியை இக்பாலும்தான். தன் வாழ்க்கையை ஒவ்வொரு கட்டத்திலும் சூன்யமாக்கியது ஆண்களே என்பது ஃபிர்தவுஸின் நிலைப்பாட இறுதியில் நிற்கிறது. பெண்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆண்தான் பின்னணி என்பது அவள் முன்வைக்கும் முடிவு. “நீங்கள்(ஆண்கள்) எல்லோரும் பயங்கர குற்றவாளிகள். நீங்களெல்லோருமே அப்பாக்கள், மாமாக்கள், கணவர்கள், தரகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், எல்லாவகையான தொழில்களை செய்யும் எல்லா ஆண்களும்…”

ஆண்வயப்பட்ட சமூகத்தில் பெண்ணுடல் மீது திணிக்கப்படும் வன்முறைக்கு ஆவணமாக இருக்கிறது இந்நாவல். இதுபோன்ற ஆயிரம் ஆவணங்களை நம் சமூகத்திலிருந்தும் எடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டுவதே இந்நாவல் குறித்த எனது இந்தப்பதிவின் நோக்கம். மறுக்கிறவர்கள் தினத்தந்தி கட்டம்கட்டி எழுதும் “அழகி பிடிபட்டார்” கதைகளைப் படிக்காமல் அழகிகளின் மறுபக்கத்தைப் படித்துப் பாருங்கள்!

சூன்யப் புள்ளியில் பெண்

நவ்வல் எல் சதாவி

தமிழில் : லதா ராமகிருஷ்ணன்
வெளியீடு
உன்னதம்-638455
ஆலந்தூர் அஞ்சல்

கவுந்தப்பாடி

ஈரோடு மாவட்டம்

பேசி-9940786278

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...