Friday, September 18, 2009

பிரான்சிஸ் கிருபா எழுதிய வலியோடு முறியும் மின்னல்


நீண்ட நாட்களுக்குப்பிறகு நிறைவோடு வாசித்த கவிதை தொகுப்பு பிரான்சிஸ் கிருபா எழுதிய வலியோடு முறியும் மின்னல். இதில் நூற்றிற்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. இத்தொகுப்பு எளிதில் கடக்க கூடியதாக இருக்கப்போவதில்லையென்று யூமா வாசுகி முன்னுரை வாசித்ததுமே புரிந்துவிட்டது. தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் நன்றாக இருந்தன எனினும் எப்போதும் போல் வலியை சொல்லு கவிதைகளே வெகுவாகப்பிடித்துப்போனது. அதில் சில சிறிய கவிதைகளை மட்டுமே இங்கு இடுகிறேன்.



எப்போதோ எதற்காகவோ செய்த தவறுகளெல்லாம் தீடிரென்று நினைவிற்கு வந்து வதைத்துக்கொண்டிருப்பதுண்டு. பல குற்ற உணர்வுகளில் சிக்கி தவித்து தன்னைத்தானே வதைத்துக்கொண்டிருக்கும் மனம். அப்படி தைத்துக்கொண்டிருக்கும் மனதை நீயேனும் ஏன் மன்னிக்கூடாது என கெஞ்சுகிறது இக்கவிதை.


கணங்கள்தோறும்
என்னை நானே
தண்டித்துக்கொண்டிருக்கும்
போது….ஏன்
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக்கூடாது



பற்றிக்கொள்ள ஒரு விரல் தரும் ஆசுவாசத்தை, அதன் பின் முழுமையாய் உடனிருக்கும் மனிதனனப் பற்றிய நம்பிக்கையை அற்புதமாக நடைபடும் வழிகளையும், வீதியையும், நிலத்தையும் அவள் இல்லாமல் தான் தனித்து நடக்கும் வேதனையின் துணைக்கு புகுத்தியிருக்கிறார் இக்கவிதையில்.



நடைபடும் வழிகள்
கடைகள் வரை நினைக்கின்றன
பிள்ளைகள் பற்றிக்கொள்ள
ஒருவிரல் போதுமென்று

ஒற்றை விரலக்குப் பின்னே
முழுசாய் ஒரு மனுஷி ஒரு மனிதன்
வீணாயிருப்பதை
விளக்க முயல்கிறது வீதி

முயன்றாலும்
நான் மட்டும் நீயின்றி நடந்தால்
ஏனென்றே தெரியாமல்
வலியில் துவள்கிறது நிலம்.



ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாத நிலையில் கைமீறிப்போகின்ற காலத்தை நிறுத்தமுடியாமல் தவிக்கும் மனங்களை பற்றிய கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் நீங்கிப்போகின்றவைகளை விதவிதமாக இப்படி எழுதி வாசித்துக்கொள்ள மட்டுமே முடியும் என்று சொல்லித் தேற்றிக்கொள்ள நன்றாகத்தானிருக்கிறது.



இரவின் ஜன்னல் வழியே
எட்டிப்பார்க்கின்றன கனவுகள்
நேரம் காலமறியாமல்
விடிந்துவிடுகிறது பொழுது.
முகத்தை சுளித்துத் திருப்பிக்கொள்கின்றன கனவுகள்.
காலையில் ஏந்தும்
முதல் காப்பிக் கோப்பையில்
கனவுப் பிணங்கள் இறந்து மிதக்கின்றன.
ஈயைப்போல் எடுத்துத் தூரப் போடவோ
அல்லது புகாரோடு
அந்த காப்பியை நிராகரிக்கவோ
முடியாமல் தவிக்கும்போது
ஆறிப்போகிறது அன்றைய சூரியன்



எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை அவர்களுக்கு தேவையான அல்லது ஆசைப்படும் வாழ்வெனினும் ஏங்கித்தவிக்க தவராமல் வாய்க்கிறது யாவருக்கும். மர நாற்காலியை மட்டுமல்லாத மனித மனதின் ரணங்களை, இயலாமைகளை, ஏமாற்றங்களை, வாய்க்கப்பெறாதவைகளை இன்னும் எத்தனையோ வலிகளை தன்னுள் கொண்டுள்ளது இக்கவிதை.

பார்வை


ஆளற்ற கூடம்
அங்கே அந்த மர நாற்காலி அமர்ந்திருந்தது.
அதன் மேல்
வயலினை சாய்த்து வைத்துவிட்டு
வெளியேறியிருக்கிறான் இசைத் தொழிலாளி.
‘என்னிலும் நாலு தந்திகள் முறுக்கி
செல்லமாக தோளில் ஏந்து வைத்து
ரம்பத்தால் வருடினால் என்ன’
என்பது போல் யாரையோ
பார்க்கிறது மர நாற்காலி.
எதிரே திறந்திருக்கிறது
இசைக் குறிப்பு புத்தகம்.



நிறைய கவிதைகள் இத்தொகுப்பில் பிடித்திருந்தாலும் இக்கவிதையே என்னை மிகவும் ஈர்த்தது. மனதை பக்குவப்படுத்திக்கொள்ள பயன்படும் உன்னத கவிதையாக தோன்றுகிறது இது. துயரம் மிகுகையில் வார்த்தைகள் இத்தனை கச்சிதமாக தங்களை கோர்த்துக்கொள்ளுமோவென வியக்கவைத்தது.



முத்தமிட்டு என்னை
சாம்பலாக்கித் தந்துவிட்டு
கவலைப்படும் பூக்களாக
உன் கண்களை மாற்றிக்கொள்ளும்போது….
இலக்கின்றி நடக்கத் தொடங்குகிறேன்,
கொலை வாள் நீட்டி
மன்னித்துக் காட்டிய வழியில்



அடிகோடிட்ட வரிகளையெல்லாம் மீண்டும் வாசிக்கையில் எங்குமே சந்தோஷமான வரிகள் காணக்கிடைக்கவில்லை. சந்தோஷங்கள் எளிதில் கடந்து விடுகின்றனவோ, துக்கங்களும் அவநம்பிக்கைகளும் மட்டுமே சற்று தங்கிச்செல்கின்றனவோ எனத் தோன்றியது. வியக்க வைக்கும் உவமைகளைகொண்டு துயரங்களை பதித்திருக்கிறார் நிறைய கவிதைகளில். அவற்றில் சில வரிகள்…..


கண்ணீர் நாறிய தலையணையுறைக்குள்
பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன
மின்னல் கொடியிழுந்து
மேக ரதம் செலுத்தும் கற்பனையை
மூட்டைப் பூச்சியைப் போல நசுக்கினேன்.


**


கோபத்தை என்மீது துப்பிவிட்டுப் போகிறாய்
எச்சில் துளிகள் துப்பல் தொகுப்பில் இயல்பாக உலரும்.
அதைத் துடைத்தொழிக்க அவசரப்படமாட்டேன்


**


பெருஞ்சிரத்தையோடு வடிகட்டிய வெளிச்சத்தில்
பிச்சைப் பாத்திரம் நிரம்பிய பின்னும்
குருடனாகக் கெஞ்சும் உன் அறையை விட்டு
வெளியேறவே முதலில் விரும்புகிறேன்


**


பொறுக்க ஏலாமல்
அகதியான நாளின் நுனியில்
கூடடைந்த மலைத் தேனீக்களாய்
இதயத்தை மொய்த்துக் குமையும்
ஆயிரமாயிரம் வார்த்தைகள்


**


“தேவைகள் எல்லாச் சமயங்களிலும் காலைப்பிடித்து தூக்கிவிடுகின்றன பலவீனமான தீர்மானங்களை”, “என்னைக்காணாமல் நகங்களைக் கடித்து இன்னும் கொஞ்சம் துப்பியிருக்கலாம் நீ “, “சூரியனை நம்பக்கூட தயக்கமாக இருக்கிறது சந்தேகம் எப்படிப் புலருமென்று தெரியாத பட்சத்தில் “, “மனதின் மிகப்பழைய வரைபடத்தின் வரம்புக்குள்ளேயே மலர்கின்றன பூக்கள்” என்று வெவ்வேறு கவிதைகளில் குறிப்பிடும்போது ஒரே மனம் தன் நிலைகளுக்கும் சூழலுக்கும் சம்பவங்களுக்கும் ஏற்ப எவ்வாறாக வேறுபடுகின்றதென்பதை அறியமுடிகின்றது.



இத்தொகுப்பில் தாங்கமுடியாத பரிசு, மரணத்தின் நிறம், கதிர் ரோமங்கள் கருகும் மெழுகுவர்த்தி, ஆளொழிந்த வீட்டில், தீயின் இறகு, புகைச்சித்திரம், கிளிகளின் தொலைபேசியில், முத்தமிட, வானத்தைத் தோற்றவன், எதிர்மிச்சம், கடலுக்குப் பெயர் வைக்கவேண்டும் போன்ற கவிதைகளும் மேலும் பல தலைப்பில்லா கவிதைளும் மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கின்றன.



‘அதிகரித்து வருகிறது முன்னறிமுகமில்லா ஒரு புன்னகைக்கான நிச்சயம்’ என்னும் பிரான்சிஸ் கிருபாவின் வரிகளுக்கேற்பவே இத்தொகுப்பை வாசிக்கும் போது நிறைவுப்புன்னகைகான நிச்சயம் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது பக்கங்கள் நகர்ந்துக்கொண்டிருக்க.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...