Tuesday, August 31, 2010

மத அடிப்படைவாதம்,ஜனநாயகம்,பயங்கரவாதம்:அடிமைவாதத்தின் கோரமுகங்கள்



றியாத் மாநகரில் வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் குடியிருப்பு அது. சகல வசதிகளையும் கொண்ட அடுக்கு மாடிக் கட்டடங்களைச் சுற்றி நாற்புறமும் ஆளுயர மதில்கள். அங்கே வசிப்பர்கள் அனைவரும் அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிக சம்பளம் வாங்கும் பெரிய பதவிகளில் இருப்பவர்கள். சாதாரண மனிதர்கள் எவரும் அந்தக் குடியிருப்புப் பக்கம் செல்லமுடியாது. நேரம் இரவு 11.20 மணி. வரப்போகும் ஆபத்தை உணராத குடியிருப்பைப் பாதுகாக்கும் வாயிற்காவலர்கள், தம்மை நெருங்கிய அமெரிக்கத் தயாரிப்புக் காரைக் கண்டு அசட்டையாக இருந்தார்கள். திடீரெனக் காருக்குள் இருந்தவர்கள் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டனர். ஒரு நிமிடத்திற்குள் காவலரண் தாக்குதல் செய்பவர்களின் வசமானது. தொடர்ந்து நுளைவாயில் கதவு திறக்கப்பட்டது. இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்த ட்ரக் வண்டியொன்று விசையுடன் ஓடிச்சென்று அடுக்குமாடிக் கட்டடமொன்றுடன் மோதியது. காதைச் செவிடாக்கும் பயங்கர வெடிச்சத்தம் மாநகரின் உறக்கத்தைக் கலைத்தது. இவ்வளவும் 15 நிமிடத்திற்குள் நடந்தேறின.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இந்தத் தாக்குதல் மேற்குலக நாட்டு பிரசைகளை நோக்கிக் குறிவைத்ததாகத் தோன்றும். இருப்பினும் இம்முறையும் சர்வதேசச் செய்தி ஊடகங்களால் ஒரு முக்கிய உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அமெரிக்கக் கம்பனிக்குக் குறிவைக்கப்பட்ட விடயம் பலருக்குத் தெரியாது. "வினெல் கோப்ரேஷன்" என்ற சவூதி அரேபிய இராணுவத்தைப் பலப்படுத்த வந்துள்ள தனியார் வர்த்தகப் பாதுகாப்பு நிறுவனம்தான் தாக்குதல்காரரின் இலக்கு.

"வினெல் கோப்ரேஷன்" தொடக்கத்தில் அமெரிக்க லொஸ் ஏஞ்ஜலஸ் பகுதியில் அணைகட்டும் பணிகளில் ஈடுபட்டது. பின்னர் தனது வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கோடு இராணுவ வர்த்தகத்தில் இறங்கிவிட்டது. சீனாவின் உள்நாட்டுப்போரில் சியாங்கை சேக்கின் பாஸிச இராணுவத்திற்கு ஆயுதத் தளபாட உதவி வழங்கியது. வியட்னாம் போரின்போது இராணுவ நோக்கத்திற்கான அமெரிக்க இராணுவத்திற்கு விமான நிலையங்களைக் கட்டிக்கொடுத்தது. கிரெனெடாவில் சி.ஐ.ஏ உடன் சேர்ந்து கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட இடதுசாரிப் பிரதமரின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தது. தொண்ணூறுகளில் மிகப்பெரிய பாதுகாப்பு வர்த்தக நிறுவனமான "கார்லைல் குறூப்", "வினெல் கோப்ரேஷன்" ஐ வாங்கியது. தாய் நிறுவனமான கார்லைல் குறூப்பின் தலைவர் பிராங் கார்லூச்சி அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் ரீகனின் செயலாளராகப் பதவி வகித்தவர். இன்றைய ஜனாதிபதி புஷ் ன் குடும்பத்திற்கும் இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

"வினெல் கோப்ரேஷன்" சவூதி அரேபியாவில் என்ன செய்கிறது ? இந்த நிறுவனம் சவூதி அரேபிய அரசுடன் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. வேலை ? எண்ணைக் கிணறுகளபை; பாதுகாப்பது, சவூதி அரேபிய இராணுவத்திற்குப் பயிற்சி ஆலோசளை வழங்குவது, மன்னர் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்குவது... நேரடியாகச் சொன்னால், இக் கம்பெனி ஒரு கூலிப்படையாக சவூதி அரேபியாவில் தொழிற்படுகிறது. தனது சொந்தப் பிரஜைகளை நம்பாத சவூதி மன்னர் கடந்த இருபத்தைந்து வருடங்களாக வினெலை தனது நம்பிக்கைக்குரிய பாதுகாப்புப் படையாக வைத்துக்கொண்டுள்ளார். 1979 ம் ஆண்டு (ஈரானால் தூண்டப்பட்ட) கிளர்ச்சியாளர்கள், மெக்காவில் வருடாந்தம் இடம்பெறும் புனித யாத்திரையைப் பயன்படுத்தி, மெக்கா பெரிய பள்ளிவாசலை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மன்னரின் உத்தரவின்பேரில் கலகத்தை அடக்க வினெல் கூலிப்படை மெக்கா சென்றது. ஆயிரக்கணக்கான கலகக்காரரை கொன்று குவித்தது. இந்தச் சம்பவம் அன்று உலக நாடுகளின் கண்களை, காதுகளை எட்டாவண்ணம் மறைக்கப்பட்டது. ";இன்னொரு ஈரான்" உருவாவதைத் தடுப்பது முக்கியம் என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரீகன் படுகொலைகளை நியாயப்படுத்தினார்.

ஈரான் என்னதான் மத அடிப்படைவாத அரசாக இருந்தபோதும், சவூதி அரேபியாவின் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத ஆட்சியின் தீவிரத் தன்மையளவிற்கு இல்லை. விமான நிலையச் சுங்கப்பரிசோதனையின் போது, சாதாரண சினிமாச் சஞ்சிகையின், கவர்ச்சி நடிகைகளின் படங்கள் மீது கறுப்பு வண்ணம் பூசப்படும், பிற மதத்தவர்கள் தமது வீட்டில் கூட தெய்வ உருவப்படங்களை வைத்திருப்பதற்குத் தடை, பெண்கள் வாகனம் ஓடத்தடை, பேரூந்து வண்டிகளில் பெண்களுக்கெனப் பின்புறத்தில் ஒதுக்கப்பட்ட தனியான இடங்கள், பூங்காக்களில் ஆண்களுக்கு மட்டும் அல்லது குடும்பங்களுக்கு மட்டும் என வேறுபாடுகள் கொண்ட இட ஒதுக்கீடு, பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட உயர்கல்வியும் , வேலைவாய்ப்பும், நாடுமுழுவதிலும் எந்த இடத்திலும் சினிமா இல்லை, மதுபானத் தடை, சட்டவிரோதமாக மதுதயாரிப்போரின் சிறையடைப்பு, களவுக்குக் கைவெட்டுதல், கள்ள உறவு வைத்த பெண்களைச் சந்தியில் வைத்துக் கல்லால் எறிந்து கொல்லுதல் போன்றவையெல்லாம் சவூதி அரேபியாவின் சாதாரண விடயங்கள். இந்நாடு எத்தனை தூரம் மத அடிப்படைவாதத்தில் ஊறியுள்ளதென்பதற்கான சில சான்றுகள் இவை.

சவூதி அரேபியாவில் "ஜனநாயகம்" , "சுதந்திரம்" போன்ற சொற்களைப் பாவிப்பதே குற்றம் என்று சொல்லுமளவிற்குச் சர்வாதிகார ஆட்சி நிலவுகிறது. மன்னர் குடும்பம்தான் ஜனாதிபதி, மந்திரிகள், பாராளுமன்றம், அரசாங்க அதிகாரிகள் எல்லாம். (மன்னரின் நூற்றுக்கணக்கான மனைவிமாருக்குப் பிறந்த ஆயிரக்கணக்கான பிள்ளைகள் போதும் முழு நாட்டையும் நிர்வகிக்க). சாதாரண குடிமக்கள் உழைத்துச் சாப்பிடும் வேளை, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சும்மாவிருக்க அரசாங்கம் பணம் கொடுக்கிறது. ஈராக்கில் சதாம் கட்டிய ஒரு டசின் மாளிகைகளைப்பற்றி உலக நாட்டுப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளின. ஆனால், சவூதி மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமான இருபதிற்கும் குறையாத ஆடம்பர மாளிகைகள் பற்றி யாரும் கதைப்பதில்லை. முன்னாள் மன்னர் பஹ்த் கடைசியாக ஸ்பெயினுக்கு உல்லாசப் பிரயாணம் போனபோது தன்னோடு 50 பென்ஸ் கார்களையும் 350 சேவகர்களையும் எடுத்துச்சென்றார்.

இவ்வளவிருந்தும் சவூதி அரேபியாவை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவரை ஏன் எந்தவொரு செய்தி ஊடகமும் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத, சர்வாதிகார ஆட்சியாளர்களைப்பற்றி அறிவிப்பதில்லை? எல்லாம் சவூதி அரேபியா மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியென்ற காரணத்தால்தான். பெரும்பாலான சவூதி அரேபியாவின் இறக்குமதிப் பொருட்கள் அமெரிக்காவில் இருந்து வருகின்றன. அதேபோல பெருமளவு எண்ணை ஏற்றுமதியாகுவதும் அமெரிக்காவிற்குத்தான். (சவூதி அரேபியா உலகிலேயே முதலாவது எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடு). மத்திய கிழக்கில் பெருமளவு அமெரிக்க ஆயுதங்களை, யுத்த விமானங்களை சவூதி அரேபியா வாங்கிக் குவித்து வருகின்றது. மலிவு விலையில் எண்ணை வாங்கும் அமெரிக்கா, பின்னர் ஆயுத விற்பனை மூலம் "பெற்றோலிய டொலர்களை" திரும்பப் பெற்றுக்கொள்கிறது.

1991 ம் ஆண்டு வளைகுடாப் போர் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. யுத்தத்திற்கான செலவில் கணிசமான பகுதியை சவூதி அரேபியா பொறுப்பெடுக்கவேண்டுமெனக் கூறியது அமெரிக்கா. மில்லியன் டொலர்களை விழுங்கிய போர்ச் செலவுகள் சவூதிப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. ஏற்கெனவே எழுபதுகளின் மத்தியில் உருவான உலக பொருளாதாரப் பின்னடைவு வேறு சேர்ந்துகொண்டது. இதுவும் போதாதென்று (மேற்குலக நாடுகளால் வற்புறுத்தப்பட்ட) எண்ணை விலையிறக்கம் ஏற்றுமதி வருமானத்தைக் குறைத்தது. விளைவு ? வேலைவாய்ப்புகள் குறைந்தன, மாதாந்த வருமானம் குறைந்தது, சலுகைகள் நிறுத்தப்பட்டன. 1980 ல் ஒரு தனிநபரின் சராசரி வருட வருமானம் 28000 டொலர்களாக இருந்தது. இது அன்றைய அமெரிக்கரின் வருமானத்திற்குச் சமமானது. இன்று சவூதி அரேபிய தனிநபர் வருமானம் 7230 டொலர்களாகக் குறைந்துவிட்டது. இதேநேரம் அமெரிக்காவில் இவ்வருமானம் 34100 டொலர்களாக உயர்ந்துவிட்டது. விரைவான சனத்தொகைப் பெருக்கமும் பெருநகரங்களை நோக்கிய இடப்பெயர்வும் நிலைமையை மோசமடைய வைத்தது. இன்று சவூதி அரேபிய அரசாங்கம் 55 பில்லியன் டொலர்களுக்குக் கடனாளி என்றால் நம்புவது கடினமாகத்தானிருக்கும்.

சவூதி அரேபியாவில் வறுமை என்பது சில வருடங்களுக்கு முன்பு கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கமுடியாத விடயம். அங்கே வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் தொகை 20 வீதமாக இருக்கலாம் எனப் புகலிடத்தில் அரசியல் நடாத்தும் எதிர்க்கட்சி ஒன்று தெரிவித்தது. தலைநகரம் றியாத்திலும், ஜித்தாவிலும் சில பகுதிகள் ஏழைகள் வாழும் சேரிகளாகக் காட்சியளிக்கின்றன. திருட்டு, போதைப்பொருட்பாவனை என இன்னபிற குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. தெருவோரங்களில் பிச்சையெடுக்கும் பெண்களைக் காண்பது சாதாரணமாகிவிட்டது. இருப்பினும் குறிப்பிட்ட சேரிப்பகுதிகளினுள் வெளியிடத்து ஆட்கள் போவது இலகுவானதல்ல. நிலைமையைப் பார்க்கப்போன பத்திரிளையாளர்களைத் தடுத்து பொலிஸ் திருப்பியனுப்பியுள்ளது. உதவி நிறுவனத்தின் சார்பிலும் யாரும் அங்கு செல்லமுடியாது.

பல வருடங்களுக்கு முன்பு பிற அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியதால் பிரஜா உரிமை பெற்றவர்களின் பிள்ளைகள், விவாகரத்துப் பெற்ற அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தொழிற்தேர்ச்சி பெறாத சவூதிப் பிரஜைகள் ஆகியோரே அதிகமாக வறுமையில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சனைக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேலையில்லாதோர் தொகை 8 வீதம். ஆனால், உண்மைத் தொகை 25 வீதமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. வருடந்தோறும் உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு, இரண்டு மடங்கு பேர் விண்ணப்பிக்கின்றர். இப்படியான நிலையிலும் தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டவரைத் தொடர்ந்தும் வேலைக்கு வைத்திருக்க விரும்புகின்றன. ஒரு சவூதிப் பட்டதாரி 800 டொலர்களை மாதச் சம்பளமாகக் கேட்டால் அதே வேலையை அனுபவமிக்க இந்தியப் பட்டதாரி 400 டொலருக்குச் செய்யத் தயாராகவிருப்பதுதான் இதற்குக் காரணம். ஒரு சவூதிப்பிரஜை தன்னுடைய குடும்பத்தையும் பராமரிக்கவேண்டிய நிலையிலிருக்கிறான். மேலும் வேலையில்லாப் பிரச்சினை காரணமாக ஆண்களுக்குத் திருமணமாவதும் தள்ளிப்போடப்படுகின்றது. அங்கே மணம் முடிக்கவேண்டிய ஆண், சீதனம் கொடுக்கவேண்டுமென்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். இன்னொரு பக்கத்தில் துப்பரவுத் தொழில் போன்றவற்றைச் செய்யும் அடிமட்டத் தொழிலாளர்கள் இப்போதும் வெளிநாட்டவர்கள் தான். அவர்கள் மாதாந்த வருமானம் 80 டொலர்களாகும். அத்தோடு எந்தவிதத் தொழிலாளர் நல உரிமையுமற்று அவர்கள் சுரண்டப்படுகின்றனர். சவூதி அரேபிய அரசு தனது உழைப்பாளர் வர்க்கத்தை இவ்வாறு தந்திரமாகப் பிரித்து வைத்துள்ளது.

இதுவரை கூறப்பட்ட பின்னணியின் அடிப்படையிலேயே சவூதி அரேபியாவில் அல்-கைதாவின் வளர்ச்சியைப் பார்க்கவேண்டும். எண்பதுகளில் "சர்வதேசக் கம்யூனிசத்தை" எதிர்த்த அணியில் சவூதி அரேபியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது. உள்நாட்டுப் பிரச்சனைகளை மறைக்க தனது நாட்டு இளைஞர்களை ஆப்கானிஸ்தானுக்கு சோவியத் இராணுவத்தை எதிர்த்துப் போராட அனுப்பி வைத்தது. கடைசியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் (பனிப்) போர் முடிந்து நாடு திரும்பியவர்களுக்கு, அமெரிக்க அடிவருடி மன்னரின் ஊழலாட்சி கண்ணுக்குப் புலப்பட்டது. அப்போது ஆரம்பித்ததுதான் அல்-கைதாவின் சவூதி அரேபிய விடுதலைப் போராட்டம். ஆடம்பரமாக வாழ்ந்து, ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் மன்னர் "முஸ்லீம் அல்ல, மக்களின் எதிரி" என அல்-கைதா அறிவித்தது. வறுமையில் வாடிய வேலையற்ற இளைஞர்கள் அல்-கைதாவினால் கவரப்பட்டனர். இன்று சவூதி அரேபியாவில் சுதந்திரமான தேர்தல் நடாத்தப்பட்டால் பின்லாடன் ஜனாதிபதியாகும் வாய்ப்புள்ளதை எதிரிகளும் ஒப்புக்கொள்கின்றனர்.

2001 செப்டம்பர் 11 ல் நிகழ்ந்த நியூ யோர்க் தாக்குதலுடன் உடனடியாக ஆப்கானிஸ்தான் தொடர்புபடுத்தப்பட்டது. விமானக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் சவூதி அரேபியப் பிரஜைகள் என்ற விடயத்திற்கு அன்று யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்தத் தாக்குதலில் அல்-கைதா தான் பொறுப்பு என்பது, இதுவரையும் உறுதியாகத் தெரியாவிட்டாலும், செப்டம்பர் 11 க்கும் பிற்பாடு, சவூதி அரேபியாவில் அல்-கைதாவிற்கு ஆதரவு பெருகியுள்ளது, மறுக்கவியலாத உண்மை. இதற்கு அமெரிக்க அரசின் சர்வதேச அளவிலான பிரச்சாரமும் காரணமாக இருக்கலாம். சவூதி ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தபோதும் அவர்களைக் குறிவைக்கும் தாக்குதல்களை பின்லாடன் ஆதரிக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. இருப்பினும், சவூதி அரசாங்கம் அல்-கைதாவை அடக்குவதில் தீவிரம் காட்டுகிறது. (பார்க்க: அறிக்கை 17- ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம்).

"சவூதி அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்குவதில் தீவிரம் காட்டவில்லை. றியாத் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவில்லை" என்று அமெரிக்க அரசு அறிவித்தது. இந்தக்கூற்று நகைப்பிற்கிடமானது. ஏனெனில் உலகில் சவூதி அரேபியாவிற்கு நிகரான சர்வாதிகார ஆட்சியை காண்பதரிது. அங்கே அரசியல் நிர்ணயச்சட்டம் எதுவும் கிடையாது. மன்னர் சொல்வதுதான் சட்டம். அப்படியான நிலையில் அரசுக்கு எதிராகக் கதைப்பதற்குக் கூட யாரும் துணியமாட்டார்கள். மேலும் றியாத் தாக்குதலுக்கு இலக்கான வினெல் நிறுவனம் சவூதி அரசின் முழுப்பாதுகாப்பையும் பொறுப்பெடுத்திருந்தது. இப்போது யார் யாரைப் பாதுகாக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஆப்கானிஸ்தான் போரின் பின்னர் அல்-கைதாவை அடக்கிவிட்டோம் என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்த பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்திருப்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அண்மையில் முடிந்த ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போர் அந்தப் பிராந்தியத்தில் எதிர்விளைவுகளை உண்டாக்குமென்பது, மத்தியகிழக்கு அரசியலை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்கப் பத்திரிகைகளில் கூட இது பற்றி விமர்சனக் கட்டுரைகள் வந்திருந்த போதும், சாதாரண அமெரிக்கர்கள் தம் நாட்டுப் பத்திரிகைகள் கூடவா வாசிப்பதில்லை எனப் பலர் வினவுமளவிற்கு நிலைமை இருக்கிறது. உண்மையில் தன்நாட்டு மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அமெரிக்க அரசின் வெளிநாட்டு அரசியல் போக்கு இன்னமும் மாறவில்லை. சாதாரண அரபுமக்கள் அமெரிக்க முதலாளித்துவத்தை அல்ல அதன் வெளிவிவகாரக் கொள்கைகளையே எதிர்க்கின்றனர்.

இருப்பினும் அமெரிக்க அரசின் வெளிவிவகாரக் கொள்கையும் முதலாளித்துவப் பொருளாதாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவை என்பது மத்திய கிழக்கு அரபுக்களுக்கு புரிய இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். ஆனால், சித்தாந்த ரீதியாகச் சீரமைக்கப்படாத தன்னெழுச்சியான எதிர்ப்பியக்கங்கள் வளர்ந்து வருகின்றன. அவைகள் "பேசும் மொழி" இஸ்லாமாக இருப்பதனால் பிறருக்கு இதைப்புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் அரபு நாடுகளின் அரசாங்கங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எல்லாவகையான எதிர்ப்பையும் முறியடித்த பின்னர், மக்களுக்குத் தனது எதிர்ப்பை காட்ட இருக்கும் ஒரே வழி மதம் மட்டும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளூர் சந்தைகளில் வந்து குவியும் மேலைத்தேச நுகர்பொருட்களின் தாக்கம் உருவாக்கும் எதிர்விளைவுகள் அளவிடமுடியாதவை. உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் வீழ்ச்சி அதனைச் சார்ந்திருக்கும் மக்களின் வருமானத்தைப் பாதித்து வறுமைக்குத் தள்ளிவிடுகின்றது. மேலும் உள்நாடு உற்பத்திகள் அந்தப்பிரதேச மக்களின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. இதற்கு மாறாக மேற்கத்தைய பாவனைப் பொருட்கள் கலாச்சாரச் சீரழிவை உருவாக்குகின்றன. குறிப்பாக, அமெரிக்கா தனது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக பிறநாட்டுக் கலாச்சாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டித்தான், ஈரானிய மத அடிப்படைவாதத் தலைவர் கொமெய்னி "அமெரிக்கா பெரிய சாத்தான்" என்று கூறினார். அதாவது சாத்தான் மக்களின் மனதை மயக்கி மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது.

இஸ்லாமிய ஆயுதபாணி இயக்கங்கள் மோசமடையும் சமூகப் பிரச்சினைகளை தமது கண்ணோட்டத்தில் பார்க்கின்றன. வறுமையை ஒழிக்க, அந்நியக் கலாச்சார ஆதிக்கத்தைத் தடுக்க முழு முஸ்லீம்களினதும் தேசியவிடுதலைப் போராட்டமே சரியான பாதை என்று போதிக்கின்றன. இதனால் இஸ்லாம் மூலம் தமக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்பும் குறிப்பாக வேலையற்ற, வறிய இளைஞர்கள் தீவிரவாத அரசியலால் கவரப்படுவதில் வியப்பில்லை. மொரோக்கோவிலுள்ள கஸாபிளாங்கோவில் நடந்த தாக்குதலைச் செய்தவர்கள் அனைவரும் மாநகர சேரிப்பகுதிகளிலிருந்து வந்த வறிய இளைஞர்கள் என்பதை அரசே தெரிவித்தது.

அடிப்படை வசதிகள் இன்மை, வேலைவாய்ப்பு இன்மை, வறுமை என்பனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் விளைநிலங்கள். அதனால் பயங்கரவாதத்திற்கெதிராக போர் புரிபவர்கள் முதலில் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என இதுவரை பலர் கருத்துக் கூறியுள்ளனர். பிரான்ஸில் நடந்த உலகப் பணக்கார நாடுகளின் G 8 மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்த சமூக ஆய்வு நிறுவனமொன்று உலகில் பல உள்நாட்டு யுத்தங்களுக்குக் காரணம் இனங்களுக்கு அல்லது மதங்களுக்கு இடையிலான மோதலல்ல, மாறாக வறுமைதான் அடிப்படையென்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை பல மேலைத்தேய (ஆளும் வர்க்க சார்பு) அறிஞர்களின் கருத்துகளை நிராகரிக்கின்றது. பல்வேறு இனங்கள், மதங்கள் தமது கலாச்சார ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒன்றோடொன்று மோதுகின்றன. " கலாச்சாரங்களின் மோதல்" (?) அல்லது ஜனநாயகமின்மை என்பவையே இன்றைய யுத்தஙகளுக்குக் காரணமென்பது மேற்கத்தைய புத்திஜீவிகள் எம்மீது திணிக்க விரும்பும் கருத்து.

"சவூதி அரேபியா ஜனநாயக நாடானால், அவர்கள் எம்முடன் ஒத்துழைக்கமாட்டார்கள்." என்று வெளிப்படையாகவே கூறினார் அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர். பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு ஆயுத உதவி செய்வது எந்த வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை. ஈரானில் இவ்வாறான போக்கு கடைசியில் இஸ்லாமியப் புரட்சிக்கு வித்திட்டது. சவூதி அரேபியாவில் அப்படியொரு நிலைவந்தால் அந்நாட்டு அரசியற் தலைமையை எதிரியாகக் காட்டிவிட்டு, அமெரிக்க இராணுவம் நேரடியாகத் தலையிடும். பனாமா, ஈராக் எனத் தொடரும் வரிசையில், நாளை சவூதியும் இணையலாம்.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...