Monday, January 11, 2016

“வஹ்ததுல் வுஜூத்”

“வஹ்ததுல் வுஜூத்”
எச்.முஜீப் ரஹ்மான்


“வஹ்ததுல் வுஜூத்” என்பது உள்ளமை ஒன்று படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும் என்பதை வலியுறுத்துகின்றது.
அதாவது அல்லாஹ் ஒருவன் அவன்தான் உள்ளமை (வாஜிபுல் வுஜூத்).
படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் (மும்கினுல் வுஜூத்) ஆகும். படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவையாகும். படைப்புகள் அனைத்தும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமை தானானவையாகும். அன்றி அந்த உள்ளமைக்கு வேறானவை அல்ல.
அந்த அல்லாஹ் என்ற உள்ளமை படைப்புகள் என்ற பல்வேறு தோற்றங்களில் தோன்றியுள்ளது. படைப்புகள் பல்வேறு தோற்றங்களில் தோன்றினாலும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமையே அவ்வாறு தோன்றுகின்றது. படைப்புகள் மாயதோற்றத்தில் தென்படுகின்றனவே தவிர யதார்த்தத்தில் படைப்புகள் என்பது இல்லை அல்லாஹ் மாத்திரமே இருக்கின்றான். அந்த அல்லாஹ் என்ற உள்ளமை சர்வ படைப்புகளாகவும் தோற்றுகின்றது. சர்வ படைப்புகளும் “ஹக்” ஆகிய அல்லாஹ் தானானவைகள் தான். அவனுக்கு வேறானவைகள் அல்ல. இதுவே “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமா கூறுகின்ற “வஹ்ததுல் வுஜூத்” இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையாகும்.
“வஹ்ததுல்வுஜூத்” கோட்பாட்டில் “ஹுலூல்” என்பதற்கும் “இத்திஹாத்” என்பதற்கும் இடமில்லை.
ஹுலூல் – இறங்குதல்
ஹுலூல் என்றால் ஒருபொருள் இன்னொருபொருளில் வந்து இறங்குதல். இதற்கு இரண்டு பொருட்கள் தேவைப்படும். உதாரணம் பூவில் வண்டு வந்து இறங்குவதுபோல.
இவ்வாறு அல்லாஹ்தஆலா படைப்புகளில் வந்து இறங்கவில்லை. இதற்கு அல்லாஹ் என்று ஒரு உள்ளமையும் படைப்பு என்று இன்னொரு உள்ளமையும் தேவைப்படும் இது ஷிர்க்- இணை ஆகும்.
இத்திஹாத் - இரண்டறக்கலத்தல்.
இத்திஹாத் என்றால் இரண்டு பொருட்கள் ஒன்று மற்றொன்றுடன் கலந்து ஒரேபொருளாக மாறுதல். இதற்கு இரண்டுபொருட்கள் தேவைப்படும். உதாரணம் சீனி நீருடன் கலத்தல்.
இவ்வாறு அல்லாஹ் தஆலா படைப்புகளில் வந்து கலக்கவில்லை. இதற்கு அல்லாஹ் என்று ஒரு உள்ளமையும் படைப்பு என்று இன்னொரு உள்ளமையும் தேவைப்படும் இதுவும் ஷிர்க்- - இணை ஆகும்.
“வஹ்ததுல் வுஜூத்” கோட்பாட்டின் படி ஒரே உள்மையான அல்லாஹ் தான் ஹுலூல், இத்திஹாத் இன்றி பஞ்சு - பிடவையாக, சேட்டாக, சாரனாக, தொப்பியாக தோற்றுவது போலவும், தங்கம் - காப்பாக, மாலையாக, மோதிரமாக தோற்றுவது போலவும் கடல் - அலையாக, நுரையாக தோற்றுவது போலவும் இரும்பு - திறப்பாக, பூட்டாக தோற்றுவது போலவும் படைப்புகளாக தோற்றமளிக்கின்றான். இங்கு இரண்டு உள்ளமைகளுக்கு, இரண்டு பொருட்களுக்கு இடமில்லை. எனவே ஷிர்க் எனும் இணைக்கு இடமில்லை. உள்ளமை அல்லாஹ் மாத்திரம்தான். அந்த உள்ளமைதான் சர்வ படைப்புகளாக தோற்றுகின்றது.
இஸ்லாமியகொள்கை எது…..?
• அல்லாஹ் என்பவன் சிருஷ்டிகளுக்கு வேறானவன் என்பதும், அவனுக்கு சுயமான வுஜூத் இருப்பதுபோல் (வேறாக கருதுவதால்) எல்லாச் சிருஷ்டிகளுக்கும் தனித்தனியான வுஜூத் அல்லது தாத் உண்டென்று நம்புவதும்,
• கிளாஸில் நீர் இருப்பதைப் போன்று ஒவ்வொறு பொருளிலும் இறைவன் இருக்கின்றான் என்பதும், நீரும் சீனியும் கலந்து வியாபித்திருப்பதுபோல் அல்லாஹ் ஒவ்வொறு பொருளிலும் கலந்து எங்கும் நிறைந்து வியாபித்திருக்கின்றான் என்பதும்
இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டதும் நேர் முரணானதும் இஸ்லாமிய தத்துவத்தை மாசுபடுத்தக் கூடியதுமாகும்.
மேற்கூறப்பட்ட கொள்கை விளக்கங்கள் இஸ்லாத்திற்கு நேர்மாறானால் இஸ்லாமிய அகீதா- கொள்கை என்னவென்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழலாம்.
அதற்கான விடைகளை குர்ஆன், கதீஸிலிருந்து, கலீமாவுக்கு எல்லாம் அவனே என்ற பொருள்பட ஆழமான, ஆதாரபூர்வமான கருத்துக்களை அவ்லியாக்களான ஞானவான்கள் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில் வழங்கியுள்ள விளக்கங்களை இப்பக்கம் மூலம் நாம் வெளிக்கொண்டுவந்துகொண்டிருக்கின்றோம்.
இறைவனின் இரு நிலைகள்.
சிருஷ்டிகள் எனப்படும் ஒவ்வொறு பொருளுக்கும் இரு நிலைகள் உண்டு.
1. வெளியரங்க நிலை
2. உள்ளரங்க நிலை
இதேபோன்று இறைவனுடைய தாத்திற்கும் இரு நிலைகள் உண்டு,
1. அரூப நிலை
2. ரூப நிலை
அரூப நிலை என்றால்- எந்தச் சிருஷ்டிகளையும் படைப்பதற்கு முன்னிருந்த நிலை. முதற்படைப்பு நாயகம் (ஸல்) அவர்களின் பேரோளியேயாகும். அவர்களது ஒளியை அல்லாஹ் தன்னொளியிலிருந்து முதலாவதாக படைத்தான். என்பது குர்ஆன், ஹதீஸிலிருந்து நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
அரூப நிலை என்று சொல்லும் போது றசூலுல்லாஹ்வுடைய ஒளியையும் படைப்பதற்கு முன்னிருந்த நிலையாகும். சுருக்கமாகச் சொல்லப்போனால் இறைவன் எந்தப் படைப்பையும் சிருஷ்டிப்பதற்கு முன்னிருந்த நிலை. இந் நிலைக்கு தாத்துல் மஹ்ழ் என்றும், கன்ஸுல் மஹ்பிய்யஹ் என்றும், மஸ்ஹூத், கதீம், அமா, அஹதிய்யத்து, தாத்து, வுஜூது என்றும் பல பெயர்கள் உள்ளன.
இறைவனின் இந்நிலையை எந்தச் சிருஷ்டியாலும் புரிய முடியாது. காரணம் அந்நிலையில் சிருஷ்டியே சிருஷ்டிக்கப்படவிலையே! அத்தகைய நிலை அது. சிருஷ்டி என்ற பெயருக் கே இடம் இல்லாத நிலை. எவ்விதக் கட்டுப்பாடும் அற்ற நிலை. சிந்திப்பதற்கும், ஆராய்வதற்கும் நாயகம் (ஸல்) அவர்களால் தடுக்கப்ட்ட நிலை.
எவ்வளவுதான் சிந்தித்தும், ஆராய்ந்தும் முடிவுகாண முடியாத நிலை. இப்படித்தான் என்று வர்ணிக்க முடியாத நிலை. வர்ணிப்பதற்கு வார்தையே இல்லாத நிலை. சுருக்கமாகச் சொல்லப்போனால் தன்ஸீகான பரிசுத்த நிலை.
மேற்கூறப்பட்ட நிலையில் அவன் மாத்திரமே இருந்தான். அவன் யாராலும் படைக்ப்படாதவன். தன்னைகொண்டே உண்டாகியிருந்தான். அறிவும், அறியப்படும் பொருளும், அறிஞனும் அவனாகவே இருந்தான். உதாரணமாகச் சொல்லப் போனால் தங்க்க் கட்டி ஒன்று மாலையாகவும், மின்னியாகவும், சங்கிளியாகவும், கரணையாகவும், பட்டி, மூக்குத்தி, வலையலாகவும் வருவதற்கு முன் தன்னிலே இவை அனைத்தையும் உள்ளடக்கியிருக்கும் நிலை.
இந்நிலையைத்தான் ஹதீஸ் குத்ஸியில் “குன்து கன்ஸன் மஹ்பிய்யன் பஅஹ்பப்து அன் உஃறப, பஹலக்துல் ஹல்க, பபீ அறபூனீ” நான் யாராலும் அறியப்படாத, புரியப்படாத பொக்கிஷமாக இருந்தேன். இப்படி இருந்த நான் என்னுள்ளிருந்த அற்புத மிகுந்த எல்லா ஆற்றல்களையும் வெளிப்படுத்த விரும்பி சிருஷ்டிகளைச் சிருஷ்டித்தேன். என்னைக் கொண்டே என்னைத் தெரிந்து கொண்டனர். என்று கூறுகின்றான்.
இக்கருத்துரையை நாம் சிந்தனைக்கு எடுத்து நோக்கும்போது, எப்போது இறைவன் சிருஷ்டியைப் படைத்தானோ அப்போது அவனுக்கு ரூப நிலையும் உண்டாகி விடுகிறது.
ரூப நிலைக்கு தஸ்பீஹுடைய மக்காம் என்றும் சொல்லப்படும். ஒரு மனிதன் முஃமினாக வேண்டுமானால் இறைவனுக்குரிய இரு நிலைகளையும் (அரூபி, ரூபி) கொண்டு நம்ப வேண்டும். ஒரு மனிதன் இறைவன் அரூபி என்று மாத்திரம் நம்பினாலும், மாறாக அவன் ரூபி என்று மாத்திரம் நம்பினாலும் ஈமான் கொண்ட விசுவாசியாக முடியாது.
அவனது அரூப – ரூப இரு நிலைகளைக் கொண்டும் நம்பும் போதுதான் அவன் உண்மை முஃமீனாக முடியும். இது குர்ஆன், கதீஸ் கூறும் உண்மை விளக்கமாகும்.
படைத்தல் என்பதன் பொருள்.
அல்லாஹ் படைத்தான் என்றால் அதிகமனோரின் அபிப்பிராயப்படி அல்லாஹ் என்று ஒருவன் எங்கோ இருந்து கொண்டு ஒவ்வொறு சிருஷ்டியையும் (தட்சன் மேசையைப் படைப்பதுபோல்) படைக்கின்றான் என்று கருதுகின்றனர்.
2:117அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” – நீ ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
அல்லாஹ் ஜல்லஜலாலுஹு எவ்வாறு ஷிருஷ்டிகளை படைத்தான் என இவ்வசனம் மிக அழகாக விவரிக்கிறது.
ஆதியில் அல்லாஹ் ம‌ட்டும் இருக்கும் போது அவ‌ன் எத‌னிட‌ம் "குன்" “நீ ஆகுக‌” என்று சொல்கின்றான்????
**** படைப்பை நோக்கியா…..? அதுதான் இருக்கவில்லையே.
**** தன் ஞானத்தை(அறிவை) நோக்கியா….? அல்லது தன் சக்தியை நோக்கியா……? இல்லவேஇல்லை.பண்புகளில் (ஸிபத்துகளில்) இருந்து எவ்வாறு ஷிருஷ்டி உண்டாகும்……? ஏனெனில் அவனைவிட்டும் பிரியாத பண்பான ஞானம்,சக்தி(போன்ற ஸிபத்துக்கள்) எவ்வாறு இன்னொன்றாக உருவாகும்….?
உதாரணமாக கற்கண்டில் இருக்கும் இனிப்பு எனும் பண்பு எவ்வாறு கற்கண்டை விட்டும்பிரிந்து இன்னொரு வடிவமெடுக்கும்…..?
**** சிலர் இப்படியும் சொல்கின்றனர்.அல்லாஹ் தன் ஞானத்தை நோக்கி “குன்” என்றான்.
உதாரணமாக மனிதன் ஒரு மரத்தை நினைக்கிறான்.அவன் மனதில் அது மரமாக உருவாகிவிட்டது.
இது போலவே படைப்புக்கள் அல்லாஹ்வில் உண்டாகின என்று.
அதாவது மனிதனின் நினைவில் அவன் நினைத்த மரம் உள்ளது போல அல்லாஹ்வினால் படைப்புக்கள் உருவாகியுள்ளன என்று.
இந்தக்கருத்து முற்றிலும் பிழையானதாகும்.எவ்வாறெனில்,
• அல்லாஹ் ஒரு படைப்பை படைக்கநாடி “குன்” “நீ ஆகு” என்ற சொல் கொண்டு அல்லாஹ் உத்தரவிட வேண்டிய அவசியமில்லையே……!
• திருக்குர்ஆனில் “நீங்கள் எங்கு நோக்கிடினும் அவன் முகமே உண்டு(2:115)” என்ற திருமறை வசனத்துடன் மேற்படி கருத்து முரண்படுகிறதே…
இந்தவசனத்துக்கு விரிவுரை பண்ணிய றயீஸுல் முபஸ்ஸிரீன் இப்னு அப்பாஸ்(றழி) அவர்களும் ஷெய்ஹுல் அக்பர் இப்னு அறபி (ரஹ்) அவர்களும்; “வஜ்ஹு-முகம்” என்பது அல்லாஹ்வின் வுஜூத்-உள்ளமையைக்குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆதலால்,எங்கு நோக்கிடினும் அவனின் வுஜூத் இருக்கிறது என்ற திருமறை வசனத்தின்படி மேற்படி கருத்து முறண்படுகிறது.
• 41:54. அறிந்துகொள்ளுங்கள் ! நிச்சயமாக அவர்கள் தமது (றப்பு) இரட்சகனைக் காண்பதில் சந்தேகமுள்ளவர்களாக உள்ளனர். (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான்.
(41:54)
மேற்படி வசனம் அல்லாஹ் சகல வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான்.ஆதலால் அவனைக்காணமுடியும் என்று தெளிவாகத்தெரிவிக்கின்றது.
எனவே இவ்வசனத்தின்படி ஷிருஷ்டிகள் அல்லாஹ்வின் ஞானத்திலேயே உள்ளன என்றால், அல்லாஹ் அவற்றை சூழ்ந்துள்ளான்,அல்லாஹ்வை அவற்றில் காணாமல் உள்ளீர்கள் என்றெல்லாம் சொல்லவேண்டியதில்லையே…..!
• ஒரு கயிற்றின் தொங்கலைப்பிடித்துக்கொண்டு மறுதொங்கலை கிணற்றுக்குள் விட்டால் அது அல்லாஹ்வில் போய்விழும் என்று நபிகளார் சொல்லவேண்டியதில்லையே….அவர்களுக்குத்தெரியாததா…………அல்லாஹ்வில் விழும் என்று சொன்னால் என்ன கருத்து என்று….!
இவ்வாறு அதிகமதிகமான திருவசனங்களுடன் மேற்படி கருத்து முரண்படும்.
எனவே அல்லாஹ் தனது வுஜூத்-உள்ளமை ஐ நோக்கியே “நீ ஆகு” என்று கூறினான்.அடுத்த கணம் அவனுடைய வுஜூதே சகல பிரபஞ்சமுமாக ஆகிவிட்டது.
பெரும் சமுத்திரத்தில் கோடிக்கணக்காண நுரைகளும்,அலைகளும்,குமிழிகளும்,பனிக்கட்டிகளும் ஒருகணம் உருவாகலாம்,மறுகணம் அழியலாம்.ஆனால் எவ்வித விகாரமுமில்லாமல் முன்னர் இருந்தபடியே பின்னரும் நீர் மட்டும் இருந்துகொண்டிருக்கும்.
அவ்வாறே அல்லாஹ்வின் வுஜூதும் அவனில்நின்றும் உருவாகும் படைப்புக்களுமாகும்.
நண்பர்களே...அவ‌ன் எவ்வாறு உருவாகினான் என்ப‌து ப‌ற்றித்தான் சிந்திக்க‌ முடியாது.சிந்திக்க‌வும் கூடாது.
அனால் அவ‌னுடைய ப‌டைப்பு எவ்வாறு வ‌ந்த‌து?
எதில் இருந்து வ‌ந்த‌து?
எத‌ற்காக‌ வ‌ந்த‌து?
என்று க‌ட்டாய‌ம் அறிய‌ வேண்டும்.
இல்லாவிடில் அல்லாஹ்வை அறிய‌ முடியாது.
தந்தையை பற்றி அறியாத மகன் போல் ஆகிவிடுவோம்.
"ம‌ண் அற‌ப‌ ந‌ப்ஸஹூ ப‌க‌த் அற‌ப‌ ற‌ப்ப‌ஹ்" த‌ன்னை அறிந்தவ‌ன் த‌ன் இறைவ‌னை அறிந்து விட்டான் என்று க‌ண்ம‌னி நாய‌க‌ம் அவ‌ர்க‌ள் கூறியுள்ளார்க‌ள்.
மேற்படி ஹதீதின்படி சகோதரர்களே! நீங்க‌ள் உங்க‌ளைப் ப‌ற்றி சிந்திக்க வேண்டாமா…..!
உங்களைப்ப‌ற்றி நீங்கள் சிந்தித்தால் எப்ப‌டி இறைவ‌னை பற்றி அறியமுடியும்…..?
அனால் முடியும் என்ற‌ல்லவா ஹ‌தீத் சொல்கிற‌து

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...