Monday, May 02, 2016

ஒரு சூபியின் சுயசரிதை (சிறுகதை நூல்)

ஒரு சூபியின் சுயசரிதை

எச்.முஜீப் ரஹ்மான்
புதுப்புனல்,சென்னை

“வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத்தான் ராகம் பிடிபடுகிறது…
நேசிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் என் நெஞ்சம் புரிகிறது…
உனக்கெங்கே புரியப்போகிறது”
மு. மேத்தாவின் கவிதை இது. காதல் கவிதை என்று சொல்ல வேண்டியதில்லை. ராகம் பிடிபட வேண்டுமென்றால் வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது இசைக்கலையின் பாலபாடம். நேசிப்பவர்களுடைய நெஞ்சம் புரிய வேண்டுமென்றால் அவர்களுடைய நெஞ்சத்தை நாம் வாசித்தறிவதற்கான வாய்ப்புக் கிடைக்க வேண்டும். இதை ஓர் அடிப்படையான சூத்திரமாக நாம் வைத்துக் கொண்டால், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திற்கும் இதைப் பொருத்திப் பார்க்க முடியும்.
“ஞானத்தைப் பெறுவதை எந்தக் காலத்திலும் யாராலும் தடுக்க முடியாது. சமதர்மம் ஒன்றால்தான் உலகம் உய்யும், நீங்கள் கற்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். தைரியத்துடன் புத்தகங்களை வாசியுங்கள்”என்றார் நமது சிங்காரவேலர். வாசிப்பு என்ற மனித அறிவுசார் செயற்பாட்டின் மூன்று முக்கிய அம்சங்களை இம்மூன்று வாக்கியங்களும் நமக்குச் சொல்லுகின்றன.
ஒன்று -– மனிதன் மெய்யறிவை, அதாவது ஞானத்தைப் பெறுவதை எந்தக் காலத்திலும், யாராலும் தடுத்துவிட முடியாது.
இரண்டு – சமதர்மம் ஒன்றால்தான் இந்த உலகம் மேன்மைடையும்.
மூன்று  -– தைரியத்துடன் புத்தகங்களை வாசியுங்கள்.
மூன்றாவது வாக்கியத்தைப் படித்ததும், நம்முன் ஒரு கேள்வி எழும். Òபுத்தகங்களைப் படிப்பதற்குத் “தைரியம்” வேண்டுமா? என்ன?
ஆம், சில புத்தகங்களை வாசிக்க வேண்டுமெனில் நீங்கள் மனதில் துணிவுடன்தான் அதைச் செய்ய முடியும். புத்தகங்களை விடுங்கள். ஒரே ஒரு கடிதத்தில் சில வரிகளை மட்டுமே வாசிப்பதற்குக் கூட எல்லையற்ற மனத்துணிவும், தெளிவும், பற்றுறுதியும் தேவைப்படுகின்றன. மிக சமீபத்திய எடுத்துக்காட்டு ஒன்றை இங்கு மேற்கோள் காட்ட முற்படுகிறேன். கீழே தரப்படும் வரிகளை முதலில் வாசித்து விடுங்கள்.
“ஒரு மனிதனின் மதிப்பு அவனது பிறப்பின் அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. சில நேரங்களில் ஒரு வாக்களானாக, சில நேரங்களில் வெறும் எண்ணிக்கையாக, சில நேரங்களில் ஒரு பொருளாகக் கூட குறைந்து போகிறான். என் ஆன்மாவுக்கும், உடலுக்குமிடையே பெருகிவரும் இடைவெளியை நான் உணர்கிறேன். அதனால் உருக்குலைந்தவனாய் மாறி விட்டேன். எழுத்தாளராக வேண்டுமென்றே எப்பொழுதும் விரும்பியிருக்கிறேன். கார்ல் ஸாகன் போல அறிவியலை எழுத வேண்டுமென்பதே என் விழைவு. ஆனால் இறுதியில் இக்கடிதம் மட்டுமே எனக்கு எழுதக் கிடைத்திருக்கிறது.
ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலா, தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதிய கடிதம் ஒன்றின் சில வரிகள் இவை. பாழாய்ப் போன இந்த சாதிய சமூக அமைப்பின் கொடூரக் கரங்களால் கழுத்து நெறிபட்டுப் போவதற்குன முன்,  தானே இதைச் செய்வதாகச் சொல்லியிருக்கிறார் ரோஹித். தன் பிறப்பே மரணத்தையொத்ததொரு விபத்துதான். தன் பால்ய கால தனிமையிலிருந்து ஒரு போதும் தன்னால் மீள இயலவில்லை என்று கையறு நிலையில் இதய அடுப்பிலிருந்து நெருப்புத் துண்டங்ளை வாரி இறைத்திருக்கிறார் அவர்.
இந்தக் கடிதம் இந்தியாவெங்கும், ஏன் உலகெங்கும் உள்ள வாசகர்களால் படிக்கப்படுகிறது. சிந்தனையாளர்களை அரசியல் விற்பன்னர்களை, எழுத்தாளர்ககளை, கலைஞர்களை இதன் வரிகள் உலுக்கி எடுக்கின்றன.வாசிப்பது என்பதே அடிப்படையில் ஓர் அரசியல் செயல்பாடுதான் என்று அறுதியிட்டுச் சொல்லுகிற பிரேஸில் கல்வியாளர் பாவ்லோஃப்ரையிரே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்விமுறை நூலில் இக்கருத்தின் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து தன் களப்பணி அனுபவங்களையும் குழைத்துத் தருகிறார்.
இன்றையச் சூழலில், உலக ஒழுங்கமைவு மாறி விட்டது. சோஷலிஸ உலகு என்ற ஒன்று, பூமிப்பரப்பின் மூன்றிலொரு பங்கு வகித்த நாடுகளில் ஆட்சி செலுத்தியது என்பதெல்லாம் பழங்கதையாகி விட்ட காலம் இது. வாசிப்பு என்பது பலருக்குப் பொழுது போக்கு. மனது நோகாமல், மூளைக்குக் கொஞ்சமும் வேலை கொடுக்காமல், ஒரு போதை மருந்தைப் போல் “சுகானுபவம்” தருவதுதான் அவர்களுக்கான வாசிப்பு. ஆனால், அப்படி “சுகானுபவத்தை” வழங்கும் வாசிப்பின் பின்னால், முக மூடியணிந்து வருவது எந்த அரசியல், அதன் விளைவுகள் பெரும்பான்மை மக்களுக்கு எத்தகைய துயரங்களை வாரி வழங்கப் போகின்றன என்று ஒரு புரிதல் தேவைப்படுகிறது.பாவ்லோ ஃப்ரையிரே தனது களப்பணிகளின் அனுபவச் செழுமையுடன் ஓர் அனுபவத்தைப் பேசுகிறார். “நீங்கள் சட்டப் பூர்வமான அம்சத்திலிருந்து தொடங்க வேண்டும். எடுத்துக் காட்டாக, தண்ணீரைப் பெறுவதற்கான கேள்வி. அது சாத்தியம் தான் என்று சட்டம் நிறுவியிருக்கிறது. நடைமுறையில் தண்ணீரைப் பெறுவதற்கு மக்கள் அனுமதிக்கப்படாமல் தான் இருக்கிறார்கள். இங்கு முன்னெழுகிற கேள்வி, நிலத்தின் உரிமையாளருக்கு எதிராக (தண்ணீரை எடுக்க வேண்டுமென்கிற) கோரிக்கையை எழுப்புவதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்தே. ஒடுக்கப்படுகிற மக்கள், ஒடுக்கவோரும் (ஒரு வகையில்) பலவீனமானவர்களே என்பதைப் பார்க்காவிட்டால், தெரிந்து கொள்ளாவிட்டால், அவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைப்பதென்பதே கடினமாகி விடும். அவர்கள் ஏதேனும் கொஞ்சம் பெற்றுத் தீர வேண்டும். அவர்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைத் தந்திரம் என்னவெனில் தொடக்கத்திலேயே மிகக்கடினமான ஒரு கோரிக்கையை அவர்கள் எழுப்பக்கூடாது என்பதே…”
கலை – இலக்கியம் – அறிவியல் – குழந்தைகளின் உலகம் – தொழிற் சங்க இயக்கம் – தகவல் தொடர்பு சாதனங்கள் – கல்வி – பணிக் கலாச்சாரம் – பண்பாட்டு அம்சங்கள் – சாதியம் – மூட நம்பிக்கை எதிர்ப்பு –தலித்தியம் – பெண்ணியம் – இப்படி இன்றைய நவீன சமூகத்தின் முன் குவிந்து கிடக்கிற கருப் பொருட்கள் பல்லாயிரம்… இவற்றையெல்லாம் வாசிப்பதால் மட்டுமே புரிந்து கொள்ள முடியாது. வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், சக மனிதர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பதன் மூலம் வாழ்ந்து பார்த்து அனுபவங்களைப் பெறுவதன் மூலமும் தான் புரிந்து கொள்ள முடியும்.
எதை, ஏன், எப்படி வாசிப்பது? வாசிப்பதற்கு எங்கே நேரம்? படிக்கத்தானே செய்கிறோம், புரியவில்லை? எங்கிருந்து தொடங்குவது? கேள்விகள் அலைமோதுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதில் மட்டுமே வாசிக்கத் தொடங்குவோம். எளிய, இனிய கதைகளில், கவிதைகளிலிருந்து தொடங்கலாம். புகைப்படம் ஒன்று, ஓர் ஆயிரம் பக்கமாக விரியும் நாவல் ஒன்றின் உள்ளடக்கத்தைக் கொண்டதாக அமைந்து நம்மை உலுக்கலாம்.
“ஒரு நொடிப் பொழுதே வாழ்ந்தாலும் மின்னல் போல்..” என்று கவித்துவமிக்க அறைகூவலின் மூலம் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை நம்மை அழைக்கிறது. அடர்த்தியாய்க் கவிந்து அச்சுறுத்துகிற இன்றைய உலகமயமாக்கல் இருட்டில், நம் கைகளில் ஒரு சின்னச்சிறு மெழுகுவர்த்தி மட்டுமே இருக்கக்கூடும்.ஆனால் உலகின் எவ்வளவு அடர்ந்த மாபெரும் இருட்டினாலும் ஒரு சின்னஞ்சிறு மெழுகுவர்த்தியின் ஒளிக்கீற்றை அணைத்துவிட முடிந்ததில்லை என்பதே மனித குல வரலாற்றின் செய்தி. வாருங்கள். இருள் சூழ்ந்திருக்கும் இடங்களில் எல்லாம் வாசிப்பு மெழுகுவர்த்திகளை ஏற்றிக்கொண்டு நடப்போம்!
2
இவ்வளவு சீரியல் இல்லாத பேய் கதைகளை குறித்து என்ன நினைப்பீர்கள்?

அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே தனியாக ஊருக்கு சென்று வந்து விடுவேன். தேர்வு சமயத்தில் என் தாத்தா இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. அம்மாவும் அப்பாவும் உடனே ஊருக்கு கிளம்பி விட்டார்கள். நானும் என் தம்பியும் தேர்வு எழுத வேண்டுமென்பதால் மதியத்திற்கு மேல் ஆள் விட்டு அழைத்து கொள்வதாக முடிவு. ஆனால் நாங்கள் முன்னரே தேர்வு எழுதி முடித்து விட்டு ஊருக்கு தனியாக கிளம்பி சென்று விட்டோம்.

அன்று முதல் நான் தனியாக ஊருக்கு செல்ல அனுமதி கிடைத்தது. அப்படி தான் ஒரு நாள் நான் ஊருக்கு புறப்பட்டேன். பேருந்திலிருந்து இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும் எங்கள் கிராமத்திற்கு. அப்படியொரு கிராமம். (இன்றைய அளவிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை). பேருந்தை விட்டு இறங்கி பயணம் செய்தேன். கையில் ஒரு பை. அதில் அம்மா கொடுத்தனுப்பிய மாமா வீட்டிற்கான பொருட்கள் கூடவே திண்பண்டங்களும் அதில் அடக்கம். சரியாக பகல் ஒரு மணி இருக்கும்.

பேருந்து நிறுத்தத்தில் இரு மருங்கிலும் பெரிய ஆலமரங்கள் இரண்டு. அடர்ந்த விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும். அம்மரத்தின் உடம்பெல்லாம் ஆணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். கூடவே மிளகாய், எலுமிச்சை பழம், முடி எல்லாம் சேர்த்து அடிக்கப்பட்டிருக்கும். அப்போது இவையெல்லாம் எதற்காக அடித்திருக்கிறார்கள் என்று கூட சிந்திக்க தெரியாத வயது எனக்கு.

பேருந்தை விட்டு இறங்கினேன். வடக்கு தெற்காக அமைந்த அந்த தார்சாலையில் நடக்கத் தொடங்கினேன். இரு மருங்கிலும் கள்ளிச்செடிகள் அந்த சாலைக்கு வேலிகளாக அமைந்திருந்தது. சற்று தூரம் கடந்திருப்பேன். எனது இடது கை பக்க முள்வேலியில் எருமை மாடு சப்தம். மிக அருகில் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஏனேனில் சப்தம் மிக தெளிவாக அருகாமையிலிருந்து ஒலிக்கிறது.

நமது ஊர்க்காரர்கள் யாராவது மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள் என்று சற்றும் முற்றும் பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு யாருமில்லை. எருமை மாடும் இல்லை. ஆனாலும் எருமை மாடு சப்தம் மட்டும் காதைத் துளைக்கிறது. அச்சமயம் பயம் தொற்றிக் கொண்டது. விரைவாக நடந்தேன் என்று சொல்வதை விட ஓடினேன் என்று சொல்வது தான் மிக பொருத்தமாக இருக்கும். எனக்கு நினைவுக்கு வந்த சாமி பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டே ஓட்டம் பிடித்தேன். சப்தமும் தொடந்தே பயணித்தது. இப்படியே நானும் சப்தமும் ஒரு கிலோ மீட்டர் தொலைவான தார்சாலையைக் கடந்து விட்டோம்.

இனி கிழக்கு மேற்காக அமைந்த மண்சாலைக்கு மாற வேண்டும். நான் பயணித்த தார்சாலையில் சென்றால் வேறொரு ஊருக்கு சென்று விடும். இப்போது பாதை மாற வேண்டும். நானும் மாறினேன். சப்தம்?? சப்தமும் எனது இடது பக்கம் மாறியது. பயத்தின் உச்சிக்கே சென்று விட்டேன். இப்பொழுது எனக்கு தெரிந்த கடவுள் பெயர்களை உச்சரிக்க முடியவில்லை நாநடுக்கம் தான் அதற்கு காரணம்.

ஓடினேன் ஓடினேன் ஊர் வரும் வரை ஓடினேன். இதற்கிடையில் எனது வலதுபக்கம் ஒரு கிணறு பார்த்துக் கொண்டே கடந்தேன். சில அடிகள் எடுத்த வைத்தவுடன் அந்த கிணற்றில் டமார் என்ற சப்தம் அத்துடன் எருமை மாடு சப்தம் அடங்கியது. மாமா வீட்டை வந்தடைந்தேன். (மாமாக்கு பொண்ணு எல்லாம் இல்லைங்க) அத்தையும் மாமாவும் வரவேற்றார்கள். நடந்ததைக் கூறினேன். அமைதியாக கேட்ட மாமா அது எல்லாம் ஒன்றுமில்லை நீ போய் சாப்பிடு என்று சொல்லி அனுப்பினார். நானும் சாப்பிட தொடங்கினேன். எனது உறவினர் வீட்டு தாத்தா ஒருவர் பேசத் தொடங்கினார்.

அந்த ஆலமரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகள் எல்லாம் பேய் விரட்டிகள் பேயை விரட்டி வந்து அடித்த ஆணிகள். அங்கு எப்போதும் பேய்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். நமது ஊரில் யாரேனும் மருத்துவமனையிலேயே இறந்து ஊருக்குள் கொண்டு வந்தால் அந்த பேய்கள் எல்லாம் அவர்கள் கூடவே வந்து விடும். பின்னர் அவைகளை அந்த ஆலமரத்தில் அடக்கி விடுவோம் என்று கூறினார். கூடவே வழியில் ஒரு மின்மாற்றி பொருத்திய மின்கம்பத்தில் விட்டுத்தகராறு காரணமாக இளைஞன் ஒருவன் ஏறி மின்கம்பிகளைப் பிடித்து இறந்து விட்டதாகவும் அவனுடைய ஆவியும் அங்கு தான் சுற்றித் திரிவதாக சொல்லி முடித்தார்.

எல்லாம் கேட்டு விட்டு தூங்கச் சென்றேன். பின் கடுமையான காய்ச்சலோடு எழுந்தேன். மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றதோடு மந்திரக்கவும் அழைத்து சென்று திருநீறு அணிவித்தார்கள். இரண்டில் ஏதோ ஒன்றின் காரணமாக அடுத்த நாள் காய்ச்சல் சரியானது.


இரண்டு ஆலமரங்கள் இருந்ததாக நான் சொல்லிய இடத்தில் இன்று ஒரு அமைச்சரின் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இரவு பொழுதைக் கூட பகல் பொழுதாக மாற்றி விடும் வண்ணம் மின் விளக்கு ஒளிகளால் அவ்விடவே நிரம்பி வழிகிறது. அந்த ஆலமரங்கள் இருந்ததற்கான சுவடுகள் கூட இன்றில்லை நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை அகலப்படுத்தும் போது அம்மரங்களை அகழ்ந்து விட்டார்கள்.

இன்று நான் அவ்விடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது.  அன்று எனக்கு கேட்ட அந்த எருமை மாடு சப்தம் என்னவாக இருக்கும்? நான் சாலை மாறிய போது அந்த சப்தமும் மாறிய மர்மம் என்ன? அந்த முதியவர் சொன்ன பேய்களெல்லாம் அமைச்சரின் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து மேற்படிப்பிற்காக வெளியூருக்கு சென்று விட்டதா? இதற்கான பதிலை நான் தேடும் போதெல்லாம் ஏதுமறியாத அந்த அரைக்கால் சட்டை சிறுவனின் மனநிலைக்கே மாறிப் போகிறேன்.
கிடைக்குமிடம்:http://m.dailyhunt.in/Ebooks/tamil/oru-suffiyin-suyasarithai-book-121849



No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...