Monday, May 02, 2016

தஸவ்வுப் என்றால் என்ன?

தஸவ்வுப் என்றால் என்ன?
தஸவ்வுப் என்பது இரண்டு செயல்களுக்குரிய பெயராகும்.
01.   ஷரீஅத்தின் கடமைகளை தளர்ச்சியின்றி உறுதியாகப் பின்பற்றுவது.   
02.    மக்களுடன் இணங்கி சகவாழ்வு வாழுதல்.
ஷரீஅத்தில் உறுதியாக நின்று கொண்டு மனிதப் பண்புகளை வெற்றி கொள்பவர்தான் ஸூபி ஆவார்.அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் ”இஸ்திகாமத்” இருக்க வேண்டும்.இஸ்திகாமத் என்பது தனது விருப்பங்கள்சந்தேகங்களை அல்லாஹ்வுக்காகத் தியாகம் செய்வதாகும்.மக்களுடன் சகவாழ்வு வாழுதல் என்பதுமக்களுடன் சுயநலத்துடன் பழகாமல் பொது நலத்துடன் பழகுவதாகும்பொது நலனுக்காக தனது விருப்பங்களையும்நலனையும் ஷரீஅத்தின் எல்லையில் நின்று கொண்டு அர்ப்பணிப்பதாகும்.

இஸ்லாத்தில் உலமாக்கள், சூபியாக்கள் என்ற இரு சிறந்த வகுப்பினர் இருக்கிறார்கள். இவ்விரு வகுப்பினர்களும் எப்போது தோன்றினார்கள்? எப்படி உண்டானார்கள்? எதற்காகத் தோன்றினார்கள்? என்பதே கேள்வியாகும். (மௌலவியும் சூபியும்) கண்ணியமிக்க ஸஹாபாக்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் (ரிஸாலத்) என்னும் சூரியனில் இருந்து வெளியாகும் எல்லா ஞானக் கதிர்களையும், எந்த இடைத் தொடர்புமின்றி ஒவ்வொரு முஸ்லீமும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருப் போதனையின் மூலம் ஒவ்வொரு மனிதனும் அங்கு வெளிரங்கமான கல்வியிலும் ஷரீஅத்தின் (அமல்கள்) கோட்பாடுகளாலும் சிறந்து விளங்கினர். அங்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் (சுஹ்பத்) என்ற் உறவு கூட்டு இவைகளின் மூலம் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி சுத்தகரித்து(இல்மே பாதின்) அந்தரங்க அகமிய கல்விகளாலும் நிரம்பி இருந்தனர்.

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இக் கடமைகளைச் செய்வதோடு திக்ரு(தபக்குர்) இறைச் சிந்தனை (முராகபா) என்னும் நிஷ்டையிலும் சிறந்து காணப்பட்டனர். வெளிரங்க, அந்தரங்க இரு கல்விகளிலும் சேர்ந்திருந்ததின் காரணத்தால் அவர்களுக்கு மத்தியில் அமல் அடிப்படையில் மௌலவி என்றும், சூபி என்றும் எந்தப் பிரிவினர்களும் இருந்ததில்லை. மாறாக, அஸ்ஹாப் அல்லது ஸஹாபா என்ற பெயரைத் தவிர்த்து வேறு எந்த பெயரும் நிலவவில்லை.

சில சஹாபாக்கள் சில குறிப்பான அமல்களின் காரணத்தினால் மற்ற ஸஹாபாக்களைவிட சிறந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். உதாரணமாக அஸ்ஹாபே ஸுப்பா என்ற திண்ணை சஹாபாக்கள் தங்கள் வீடு,வாசல்கள் உலக அலுவல்களையெல்லாம் ஒதுக்கி துறவறத்தில் சிறந்து விளங்குவது இதற்கு தெளிவான ஆதாரமாகும். அவ்வாறு இருப்பினும் கூட ஸஹாபாக்களுக்கு மத்தியில் எந்த பாகுபாடோ, வித்தியாசமோ இருக்கவில்லை.

அதன்பின் சங்கைக்குரிய தாபியீன்கள் காலம் வந்தபோது இந்த ஆலிம்-சூபி வெளிரங்க, அந்தரங்க கல்விகளின் தனித்தன்மைகள் வெளியாக ஆரம்பித்தன. அதற்கு பி;ன்பு தபவுத்தாபியீன்களின் காலத்தில் இவ்விரு கல்விகளின் வேறுபாடுகள் இந்த அளவு உண்டாயின. உண்மையில் இதுவே வெளிக்கல்வி என்ற பெயர் உருவான் காலம். இது நபித்துவத்தின் இரண்டாம் நூற்றாண்டாகும்.

அதற்குப்பின் ஷரீஅத் சட்டங்களை தொகுத்து நூல் வடிவில் எழுதும் காலம் வந்தது. மேலம் புனிதமான ஷரீஅத்தைப் பரப்பும் பணி அதிகமானபோது, அமலின் அடிப்படையில் இரு வகுப்பினர்களில் வேறுபாடுகள் கொஞ்சம் அதிகமாயின. ஆகவே எந்த வகுப்பினர்; பிக்ஹு மற்றும் ஷரீஅத் சட்டங்களை தொகுக்கவும், பரப்பவும் பாடுபட்டார்களோ அவர்கள் உலமாக்கள்(இமாம்கள்) என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். பின்பு அவர்களாலும் சில தனித்தனி கலைகளைக் கவனித்து(முஹத்திதீன்கள்) நபிமொழி விற்பன்னர்கள் என்றும் (புகஹா) சட்டமேதைகள் என்றும், திருமறை விரிவுரையாளர்கள் என்றும், இதுபோன்ற பெயர்களால் புகழப்பட்டார்கள். எனினும் அப்புனிதர்கள் வெளிரங்க கல்விக்குப்பின் தங்களது முழு மூச்சுடன்- அந்தரங்க சுத்தி- உளத்தூய்மைக்குரிய காரியங்களில் ஈடுபட்டார்கள். அவர்களே மஷாயிக் -ஞான வழிகாட்டி என்றும் சூபிய்யா அகத்தொளி பெற்றவர்கள் என்றும் போற்றப்பட்டனர். ஆக தன் அகத்தை சுத்திகரித்து தெளிவுபடுத்தும் வழிக்குத்தான் -தஸவ்வுப்- என்று பெயர் வந்துள்ளது.
அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களத நூலில் மிகத் தெளிவுபட பல விஷயங்களை கூறிவிட்டு, எவர் தன் உள்ளத்தை அல்லாஹ்வின் ஞாபகத்திலேNயு வைத்து இறைவனை மறக்கச் செய்யும் எந்தப் பொருளும் உள்ளத்தில் நுழைந்து விடாமல் பாதுகாத்து கொண்டிருப்பவர்கள்தான் அஹ்லெ சுன்னத்தில் உள்ள ஞானவான்கள். இவர்கள் தங்களுக்கு தஸவ்வுபை உடையவர்கள் என்று நாமம் சூட்டினர். மேலும் இந்த தஸவ்வுப் என்னும் பெயர் அப்புனிதர்களுக்கு ஹிஜ்ரி 200-ல் இருந்தே பிரபலமாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மௌலவி, முல்லா என்னும் பெயர்கள் ஸஹாபாக்கள் காலத்தில் இல்லாதது போன்று சூபி, தஸவ்வுப் என்னும் பெயர்களும் ஸஹாபாக்கள் காலத்தில் இருக்கவில்லை. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே பிரபலமாயின!

சூபி என்ற பெயரை காமிலீன்களான மஷாயிகுமார்களுக்கு அதிகமாகச் சொல்லப்பட்டது. ஞானப்பாட்டையில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு சூபி என்றும பலருக்கு சூபிய்யா என்றும் அம்மேதைகள் சென்றடைந்த வழியில் நடைபோட ஆரம்பித்த ஒருவருக்கு முதஸவ்விப் என்றும் பலருக்கு முதஸவ்விபா என்றும் சொல்லப்பட்டுள்ளது என் அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

சூபி எனும் வார்த்தை சூப்(கம்பளி) என்னும் வார்த்தையில் இருந்து பிரிந்தது. காரணம் அம்மேதைகளில் அதிகமானோர் வெளி அலங்காரமான அழகிய உடைகளை அணியாமல் திக்கான ஆடைகளையும், கம்பளி ஆடைகளையும் அணிந்திருக்கிறார்கள் என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மற்றும் சிலர்கள் சூபி என்னும் வார்த்தை சவ்ப் என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது. காரணம் அம்மகான்கள் உலக ஆசாபாசங்கள் சுருங்கக் கூறின் அல்லாஹ் அல்லாத அனைத்தையும் விட்டு அல்லாஹ் அளவிலே தன்னை திருப்பி அவனியிலேயே அர்ப்பணித்து கொண்டார்கள் என்று கூறுகின்றார்கள்.
முடிவாக் இவர்கள் அனைவர்களும் இறைவன் கட்டளைக்கு முற்றிலும் வழிபட்டு அல்லாஹ்விற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். மௌலவி, முல்லா, ஆலிம் இவர்கள்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் போதனைகளைச் செய்கிறார்கள். சூபியாக்கள் இஸ்லாத்திற்கும், குர்ஆன் ஹதீதுக்கும் மாறுபட்டவர்கள் என்று கூறித்திரியும் சில குதர்க்கவாதிகள் அம்மஹான்களின் வரலாறே தெரியாதவர்கள் எனக் சுறலாம். உலமாக்கள், சூபியாக்கள் என்ற இரு குழுவினர்களும் நுபுவ்வத் என்னும் மரத்தில் பிரிந்து வந்த இரு கிளையாகும் என்பதே உண்மையாகும்.

உலமாக்கள்(இல்மே லாஹிர்) வெளிரங்க கல்வியையும், ஷரீஅத் சட்டத்தையும் போதிப்பவர்களாக இருக்கின்றனர். அதைப் போன்று சூபியாக்கள் (இல்மே பாதின்) அந்தரங்க அகமியக் கல்விகளையும், தரீகத்தின் சீரிய முறைகளையும் போதிக்கின்றனர். ஷரீஅத்தின் உலமாக்கள் குர்ஆன் ஹதீதுகளிலிருந்து மார்க்க சட்டங்களை போதிக்கின்றனர்.

சூபியாக்கள் அந்தரங்க(பைஜ்) அருளின் மூலமாக உள தெளிவு பெற்று ஷரீஅத்தின் பிம்பங்களாக காட்சி அளிக்கின்றனர். இரு வகுப்பினர்கள் போதனைகளும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஞான ஊற்றிலிருந்து பொங்கி வரும் அமுதங்களாகும்.

தற்காலத்தில் அறிஞர்கள் என்ற பேர்வையில் திரியும்ஒரு சில புல்லுருவிகள் இறைவனின் அருள் பெற்ற நாதாக்களின் நடைமுறைகள் எல்லாம் இஸ்லாமிய வீரர்கள் இந்தியாவை வெற்றி கொண்ட பின்னர் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்தபின் இங்குள்ள இந்து யோகிகளுடன் பழகியபின் அவர்களின் நடைமுறைகளை எடுத்துக் கொண்டார்கள். இந்த சூபியாக்களின் நடைமுறைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மிக தைரியமாக கூறுகின்றனர்.
அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:- இந்த தஸவ்வுப் என்னும் மெய்ஞ்ஞான கல்வியுடைய நாதாக்கள் இல்லாத ஒரு காலம் கூட இஸ்லாத்தில் இருந்திருக்கவில்லை என குறிப்பிடுகின்றனர்.
அல்லாமா அபூ தாலிபுல் மக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது கூதுல்குலூப் என்னும் பெரும் நூலில் வரைந்துள்ளார்கள். அதாவது ஷரீஅத்தின் சட்டமேதைகளான புகஹாக்களுக்கு ஏதாவதொரு மஸஅலாவில் சந்தேகங்களோ, சிக்கல்களோ ஏற்பட்டு திகைப்பு உண்டானால் உடனே அக்காலத்தில் உள்ள ஞான மேதைகளான சூபியாக்களிடம் சென்று அச்சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவேதான் சட்டமேதை ஷாபிஈ வலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏதாவதொரு சட்டங்களில்,மஸ்அலாவில் சிக்கல் ஏற்பட்டால் ஞானமேதைகள் இருக்கும் இல்லங்களுக்குச் சென்று கேட்டு, அம் மஸ்அலாக்களின் தெளிவைப் பெற்றுக் கொள்வார்கள். குறிப்பாக இறைஞானத்தை எவர் உதவியுமின்றி இறைவனின் மூலம் பெற்ற உம்மீயான மாமேதை ஷைபானுர் ராபீ லரியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அதிகம்,அதிகம் சென்று படினமான சட்டங்களின் சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள்; என குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆக, இத்தகைய மேதைகள் ஒவ்வொரு காலத்திலும், இரக்கவே செய்கின்றனர். எனவே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் என் உம்மத்தினர் ஒரு சிறிய கூட்டத்தினர் சத்தியத்தின் மீது நிலைத்து இருப்பார்கள். அவர்களின் விரோதிகள் எவரும் எந்த தீங்கும் செய்ய முடியாது என சிலாகித்துக் கூறியுள்ளார்கள். இத்தகைய மேதைகளின் வரிசையில்தான் மாபெரும் மெய்ஞானி சுல்தானுல் ஆரிபீன் கௌதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், சுல்தானுல் ஆரிபீன் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் , அபுல்ஹசன் ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்வலியுல் காமில் அப்துல் கரீம் ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களின் ஞானகுரு குத்புஸ்ஸமான் பதருத்தீன் படேஷா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களால் இக்காலத்தில் நேர்வழி காட்டும் குத்பும், முஹ்யித்தீன் இப்னு அரபியுமாக இருக்கிறார்கள் என்று புகழப்பட்ட மாமேதையுமான குத்புஸ்ஸமான், இமாமுல் ஆரிபீன்சுல்தானுல் வாயிழீன், ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் சூபி ஹஜ்ரத் ஹைதராபாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களின் பிரதான கலீபாவும், காயல்பட்டணத்தில் பிறந்து சிலோனில் துயில் கொண்டிருக்கும் எனது ஆன்ம குருவும், இன்னும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் குரு பிரானும் ஞானக் கருவூலங்களை மக்களுக்கு அள்ளித்தந்த மகானுமாகிய வலிய்யுல் காமில் மௌலானா மௌலவி அல்ஹாஜ் C.A.K. ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி சித்தீகி பாஜிலே நூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இன்னும் இது போல நாதாக்களுகம் இடம் பெறுகின்றனர்.அல்லாஹ் நம் யாவர்களின் இதயங்களையும், இம் மான்களின் பரக்கத்தாலும், பைஜின் மூலமாகவும் ஒளி பெறச் செய்து அம்மான்களின் அடிச்சுவடுககளை பின்பற்றி நடந்து முக்தி பெற்ற நல்லோர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...