Monday, November 05, 2007

மச்சம் -- ஷோலகோவ்

Best horror Movie....Halloween Pictures, Images and Photos
ஜாரின் கொடுங்கோலாட்சி நடந்த ரஷ்ய தேசத்தில், உலகினுக்கோர் புதுமையாய் எழுந்த பாட்டாளி வர்க்கத்தின் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜெர்மன், அமெரிக்கா, பிரிட்டிஷ், ஜப்பான் நாடுகள் இளம் சோவியத் புரட்சி அரசினை முளையிலே கிள்ளி எறிந்திட நாலா பக்கமும் சுற்றி வளைத்து ஆக்கிரமிப்புப் போர் நடத்தின. சோவியத் அரசாங்கத்தை வீழ்த்திட, ரஷ்ய நிலப்பிரபுக்களும், ஆலை முதலாளிகளும் பெரும் படையொன்று திரட்டினர். எதிர்வினையாக சோவியத் அரசாங்கமும், உழைக்கும் மக்களைக் கொண்ட செஞ்சேனைப் படையினை நாடெங்கும் உருவாக்கியது. இறுதியில் பல தியாகங்களுக்குப் பிறகு செஞ்சேனை வென்றது என்பது வீரவரலாறு. இந்த உள்நாட்டுப் போரின் ஒரு சம்பவத்தைச் சித்தரித்து, சோவியத் இலக்கிய மேதை ஷோலகோவ் படைத்த சிறுகதைதான் இந்த “மச்சம்.”

மேஜை மீது எரிந்துபோன கருமருந்து நெடி வீசும் காலியான தோட்டாக் குப்பிகள், ஓர் ஆட்டுக் குட்டி எலும்பு, ஓர் போர்க்கள வரைபடம், குதிரையின் வியர்வை நாற்றம் இன்னும் அடிக்கும் ஒரு கடிவாளம், ஒரு ரொட்டித் துண்டு ஆகியவை சிதறிக் கிடந்தன. அதற்குப் பக்கத்தில் ஈரமான சுவரில் படர்ந்த பாசிக் கறைகள் படிந்த ஒரு கரடுமுரடான பெஞ்சு கிடந்தது. ஸ்குவாட்ரன் கமாண்டரான நிக்கோல்கா கோஷிவாய் தமது முதுகை ஜன்னல் கதவின் மீது அழுத்திச் சாய்ந்தவாறு பெஞ்சின் மீது அமர்ந்திருந்தார். அவரது மரத்துப்போன அசைவற்ற கைவிரல்களில் ஒரு பென்சில் அசையாது இருந்தது: மேஜை மீது சில பழைய சுவரொட்டிகளுக்குப் பக்கத்தில் அரைகுறை யாகப் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு கேள்விப் பட்டியல் தென்பட்டது அந்தப் பட்டியலில் பின்வரும் பதில் மட்டும்தான் எழுதப்பட்டிருந்தது. கோஷிவாய் நிக்கொலாய், ஸ்குவாட்ரன் கமாண்டர், ஒரு விவசாயி. தொழிலாளர், விவசாயி இளைஞர் கழகத்து உறுப்பினர்.

“வயது” என்று குறிக்கப்பட்டிருந்த காலி யிடத்தில், அவரது கையிலிருந்த பென்சில் வேண்டா வெறுப்போடு 18 என்று எழுதியது.

நிக்கோல்கா தமது வயதுக்கு மீறிய தோற்றத் தோடு காட்சியளிக்கும் கட்டுமஸ்தான இளைஞராகவே இருந்தார்.

அவரது ஸ்குவாட்ரனைச் சேர்ந்த நபர்கள் இவ்வாறு வேடிக்கையாகப் பேசிக் கொண்டனர்:

“இவர் இன்னும் ஒரு பையன்தான். பால்மணம் மாறாத பையன்! ஆயினும் எந்த முதிய கமாண்டரைக் காட்டிலும் திறமையோடு, இவரைப்போல் யார் அநேகமாக எந்த உயிரிழப்புக்களும் இல்லாமல் இரண்டு எதிர்ப்புரட்சிக் கும்பல்களை ஒழித்துக் கட்டவும், ஆறுமாத காலத்தில் இந்த ஸ்குவாட்ரனைப் பல சண்டைகளில் வழிநடத்திச் செல்லவும் முடிந்தது?”

ஆயினும் தமக்குப் பதினெட்டு வயதுதான் ஆகியுள்ளதைக் கண்டு நிக்கோல்கா வெட்கப்பட்டார். ‘வயது’ என்று குறிக்கப்பட்ட அந்த வெறுக்கத்தக்க இடத்தில் பதிலை எழுத நேரும்போது, அவரது பென்சில் எப்போதும் தடுமாறியது; நகரவே மறுத்தது. அதே சமயம் அவரது கன்னமும் எரிச்சலால் சிவந்தது. நிக்கோல்காவின் தந்தை ஒரு கோஸாக். இதுவே அவரையும் அவரது தந்தையைப் போல ஒரு கோஸாக் ஆக்கிவிட்டது எனலாம். தமக்கு ஐந்து அல்லது ஆறு வயதான காலத்தில் தமது தந்தை தம்மை ஒரு குதிரை மீது ஏற்றி உட்காரச் செய்ததை, அவர் ஒரு கனவைப் போல இப்போதும் நினைவு கூர முடிந்தது.

இதெல்லாம் நெடுங்காலத்துக்கு முந்தி நிகழ்ந்த விஷயம். ஜெர்மானியர்களுக்கு எதிராக நடந்த போரில் நிக்கோல்காவின் தந்தை காணாமல் போய்விட்டார். அதன்பின் அவரைப் பற்றி எந்தத் தகவலும் தெரிய வரவில்லை. நிக்கோல்காவின் தாயும் இறந்து விட்டாள். நிக்கோல்கா தமது தந்தையிடமிருந்து குதிரைகளின் மீது பிரியத்தையும், எல்லையற்ற துணிவையும், அத்துடன் தமது இடது கணுக்காலுக்கு மேல், புறா முட்டை அளவுக்கிருந்த மச்சத்தையும் சுவீகரித்துக் கொண்டார். தமக்குப் பதினைந்து வயதாகும் வரையிலும் அவர் பலவிதமான வேலைகளையும் செய்து வந்தார். இறுதியில் ஒரு செஞ்சேனை, கிராமத்தின் வழியாக சென்ற போது அவரும் அந்தச் செஞ்சேனையோடு சென்றுவிட்டார். அந்தக்கோடைப் பருவத்தில் அவர் கமாண்டரோடு டான் நதியில் நீந்தச் சென்றார். குண்டடி பட்ட அதிர்ச்சியால் ஆடிக் கொண்டேயிருக்கும் தலையும், திக்குவாயும் கொண்ட அந்தக் கமாண்டர், சூரிய ஒளியால் பதப்பட்டிருந்த நிக்கோல்காவின் முதுகைத் தட்டிக் கொடுத்தவாறே இவ்வாறு திக்கித் திக்கிக் கூறினார்: “அதிர்ஷ்டக்காரப் பயலடா நீ! உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரன்! உன் காலில் உள்ள மச்சம் உனக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்”.

“நீங்கள் பொய் சொல்கிறீர்கள். நான் நெடுங் காலமாக அனாதையாகவே இருந்து வந்திருக்கிறேன். என் வாழ்க்கை முழுவதிலும் முதுகு ஒடியக் கடுமை யாகப் பாடுபட்டே வந்திருக்கிறேன். எனவே, என்னிடம் அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கூறாதீர்கள்!”

2

நிக்கோல்கா இப்போது வசித்து வந்த குடிசை டான் நதிக் கரையிலிருந்த ஒரு குன்றின் மீதுஇருந்தது. அதன் ஜன்னலிலிருந்து ஆற்றின் இருகரைகளிலும் அசைந்தாடும் பசுமையான மரம் செடிகளையும், இருண்டு பளபளக்கும் ஆற்றின் நீர்ப்பரப்பையும் அவர் காண முடிந்தது.

முற்றத்திலிருந்த வேலிக் கதவு கிரீச்சிட்டது; இதனைக் கேட்டதும் நாய் குரைத்தது.

“கமாண்டர் வீட்டில் இருக்கிறாரா?” இது பிளாட்டூன் கமாண்டர் ஒருவரின் குரல்.

“இதோ இங்கிருக்கிறேன். ஏன், என்ன விஷயம்?”

“கிராமத்திலிருந்து ஒரு தூதர் வந்திருக்கிறார். சால்ஸ்க் பிரதேசத்திலிருந்து ஒரு கும்பல் வந்திருக்கிறதாம். அந்தக் கும்பல் குருஷின்ஸ்கி அரசுப் பண்ணையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதாம்.”

“அந்தத் தூதரை இங்கு வரச் சொல்லுங்கள்!”

அந்தத் தூதர் வியர்வை நனைந்து போயிருந்த குதிரையை லாயத்துக்கு கொண்டு வந்தார். ஆனால், முற்றத்தின் மத்திக்கு வந்ததுமே அந்தக் குதிரை முழங்காலை மடித்து விழுந்தது; பின்னர் பக்கவாட்டில் சாய்ந்து விழுந்தது. ஓர் உரத்தக் குரலை எழுப்பிக் கத்தியவாறு அது உயிரை விட்டது; அதன் கண்ணாடி போன்ற கண்கள், சங்கிலியில் கட்டிப் போடப்பட்டிருந்த, கோபத்தோடு நிலை கொள்ளாது தவித்த நாயின் மீது பதிந்திருந்தன.

ஓரிடத்திலும் நிற்காமல் நாற்பது வெர்ஸ்ட் தூரத்துக்ககு ஓடி வந்த காரணத்தாலேயே அந்தக் குதிரை மாண்டுவிட்டது.

நிக்கோல்கா செய்தியைப் படித்துப்பார்த்தார். அந்த அரசுப் பண்ணையின் தலைவர் தமக்கு உதவிக்கு வருமாறு அந்த ஸ்குவாட்ரனிடம் கெஞ்சி முறையிட்டுக் கொண்டிருந்தார். மீண்டும் வீட்டுக்குள் வந்த நிக்கோல்கா தமது இடைவாரையும், உடைவாளையும் எட்டி எடுத்தார். அதே சமயம் அவர் இவ்வாறும் நினைத்துக் கொண்டார்:

“நான் எங்காவது சென்று கல்வி கற்றாக வேண்டும். மாறாக, நான் இந்தக் கும்பல்களை எதிர்த்துச் சண்டை போட வேண்டியுள்ளது... எனக்கு ஒரு வார்த்தையை கூடச் சரியாக எழுதத் தெரியாது என்றும், ஆனால், நான் ஒரு ஸ்குவாட்ரனுக்குத் தலைவனாக இருக்கிறேன் என்றும் கமாண்டர் என்னை எப்போதும் கேலி செய்கிறார்... நான் பள்ளிப் படிப்பைப் படித்து முடிக்காது போனது எனது தவறா என்ன? அவர் விஷயம் தெரியாத முட்டாள்... இப்போது மற்றொரு கும்பல் வந்து விட்டது.... மீண்டும் ரத்தம் சிந்தப் போகிறது. இதையெல்லாம் நான் எவ்வளவு வெறுக்கிறேன்....”

அவர் வராந்தாவுக்கு வந்ததும்; தமது துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பிக் கொண்டார். சேற்றில் சிக்கிக் கொண்டு போராடும் குதிரையைப் போல் அவரது சிந்தனை ஒரே தடத்திலேயே இன்னும் சிக்கிக் கொண்டிருந்தது; “நான் நகரத்துக்குச் சென்றாக வேண்டும்... அங்கு சென்று படிக்க வேண்டும்....”

3

வாழைமரங்கள் தமது இலைகளைச் சுருட்டிக் கொண்டிருந்தன. மேடும் பள்ளமுமான புல்வெளி களிலும் காற்றினால் சுத்தமாக்கப்பட்டிருந்த ரோட்டின் குண்டுகுழிகளிலும் அக்காரக் கிழங்குச் செடிகள் அடர்த்தியாகச் செறிந்திருந்தன. ஸ்டெப்பி வெளியில் அம்பர் துளிகளைப் போல் ஆங்காங்கே இடம் பெற்றுள்ள சூடடிக்கும் களங்களை, நோக்கி இந்தப் புல் வெளிகளின் வழியே ஒரு காலத்தில் அறுத்த கதிர்கள் வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டதுண்டு. தந்திக் கம்பங்களின் வரிசையை ஒட்டி, ஒரு நொடி பாய்ந்த வண்டித்தடம் ஏற்ற இறக்கங்களோடு சென்றது. அந்தப் பளபளக்கும் பாதை வழியாக, சோவியத் ஆட்சியைக் கண்டு அதிருப்தியுற்ற ஓர் ஆட்டமனும், ஐம்பது டான் மற்றும் கூபான் கோசாக்குகளும் ஒவ்வொரு தந்திக் கம்பமாகத் தாண்டி வேகமாக குதிரைகளில் சென்றனர். அந்தக் கும்பல ஆட்டு மந்தையின் மீது பாய்ந்த ஓநாய்களைப் போல் மூன்று நாள் இரவும் பகலுமாக ஊர்களைக் கொள்ளையடித்துக் கொண்டே ஓடியது; இந்தக் கும்பலை நிழல்போல் தொடர்ந்து நிக்கோல்கா கோஷிவாயின் படையும் சென்று கொண்டிருந்தது.

தப்பியோடிக் கொண்டிருந்த அந்த ஐம்பது பேரும் எதற்கும் துணிந்தவர்களாக, முரடர்களாக இருந்தனர். என்றாலும் அந்த ஆட்டமன் தமது குதிரையின் அங்கவடிகளில் கால்களையூன்றி அடிக் கடி எழுந்து நின்று, ஸ்டெப்பி வெளிகளில் கண்களைப் பாய்ச்சி. டான் நதிக்கு அப்பாலுள்ள காட்டின் நீலநிறமான எல்லையோரத்துக்கு இன்னும் எத்தனை வெர்ஸ்ட் தூரம் இருக்கும் எனக் கணக்கிட்டுக் கொண்டேயிருந்தான்.

கதகதப்பான கோடை நாள்களில் கோதுமைக் கதிர்த்தாள்கள் டான் நதிக்கரையிலுள்ள ஸ்டெப்பி வெளிகளில் இனிமையாகச் சரசரத்து ஒலித்தன. கார்னோவ்வா கோதுமையின் கதிர்த்தாள்கள், இளம் வாலிபனின் முகத்தில் அரும்பும் முதல் தாடியைப் போல் மெல்லக் கறுக்கத் தொடங்கும். அறுவடைக்கு முந்திய பருவத்தில் இந்த ஒலிகளை எப்போதும் கேட்க முடியும். ரை தானியக் கதிர்கள் தம்மை அறுவடை செய்வோரைக் காட்டிலும் உயரமாக வளர்வதற்கு உறுதி கொண்டது போல தொடர்ந்து வளரப் போராடி வரும் காலத்தில் இவ்வாறு நிகழ்வதுண்டு.

தாடிவைத்திருந்த கோஸாக்குகள் இடை யிடையே களைகள் வளர்ந்திருக்கும் களி மண்ணும், மணலும்கலந்த குறுகிய சால்களில் ரை தானியத்தை விதைப்பர். அறுவடை எப்போதும் மோசமாகவே இருந்து வந்தது. என்றாலும் கோஸாக்குகள் அதனை விதைக்கவே செய்வர். ஏனெனில் அந்தத் தானியத்தில் இருந்துதான் இளம் கன்னிப் பெண்ணின் கண்ணீரைக் காட்டிலும் தெளிவான வோட்காவை வடித்தெடுக்க முடியும்; மேலும் இவ்வாறு வடித்தெடுப்பதே தொன் னெடுங்காலம் தொட்டு வழக்கமாகவும் இருந்து வந்துள்ளது. அவர்களது பாட்டன்களும், முப்பாட்டன் களும் அந்த வோட்காவை அருந்தினர். இலையுதிர் காலத்தில் பண்ணை வீடுகளிலும் குடியிருப்புகளிலும் வோட்காவைக் காய்ச்சும் தலையை கிறுகிறுக்க வைக்கும் மணமே நிரம்பியிருந்தது. மேலும் புதர்வேலி களுக்குப் பின்னால் உச்சியில் சிவப்பு வர்ணம் கொண்ட கோஸாக்குத் தொப்பிகள் குடிவெறியில் தள்ளாடிச் செல்வதையும் காண முடிந்தது.எனவேதான் அந்த ஆட்டமன் அத்தகைய பருவத்தில் முடிவேயில்லாமல் நாட்கணக்கில் குடி போதையில் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டான்.

அந்த ஆட்டமன் தனது சொந்தக் கிராமத்தைப் பார்த்து ஏழு ஆண்டுகளாகிவிட்டன. முதலில் அவன் ஒரு ஜெர்மன் கைதி முகாமில் இருந்தான்; பின் ராங்கலிலும், பின்னர் காண்ஸ்டாண்டி நோபிலிலும், அதன்பின் மீண்டும் கைதி முகாமிலும், பின்னர் ஒரு துருக்கி நாட்டுப் பாய்மரக் கப்பலிலும், அதன்பின் கூபான் காட்டிலும் இருந்தான்: இறுதியாக இந்தக் கும்பலோடு வந்து சேர்ந்து விட்டான்.

அவனது இதயம் கோடை வெயிலில் காய்ந்து கெட்டித்துப் போன எருதுகளின் குளம்புகள் பதிந்த களிமண்ணைப் போல தடித்துப்போய்விட்டது. அவ னது இதயத்துக்குள் ஏதோ ஒரு விசித்திரமான வேதனை உறுத்தி வருத்திக் கொண்டிருந்தது; அது அவனது தசைகளை வெறிக் கொள்ளச் செய்தது. அவன் எவ் வளவுதான் வீட்டில் வடித்த வோட்காவைக் குடித்துப் போதையில் மூழ்கினாலும், அவனால் இந்த வேதனை யை ஒழிக்க முடியவில்லை. அவன் புத்தித் தெளிவோடு இருந்ததே அரிது.

4

உதய காலத்தில் முதல் உறைபனி படிந்திருந்தது. நீரல்லிச் செடிகளின் விரியும் இலைகளில் வெள்ளிய ஒளி படிந்தது. லுக்கிச் ஒரு மாவு அரைவைக் கல்லிலும் கூட, மைக்காவின் நிறத்தோடு பனிக்கட்டியின் மெல்லிய படிவம் படிந்திருப்பதைக் கண்டார்.

லுக்கிச்சுக்கு அன்று காலையிலிருந்தே உடம் புக்குச் சரியில்லை. அவரது முதுகின் அடியில் ஒரு வலியிருந்தது; கால்களிலும் கூட இரும்பு முளைகளால் தரையோடு தரையாய் மரையிட்டு அறைந்தவிட்டாற் போல் மரத்துப் போயிருந்தன. அவர் கால்களைத் தேய்த்து நடந்து அந்த அரைவைக் கல் பக்கம் போக முயன்றார்; ஆனால் எலும்புகளோடு ஒத்துப் போகாத அவரது மோசமான உடம்பினால் நகரவே முடிய வில்லை. மாவுக் குதிர் ஒன்றிலிருந்து ஒரு சுண்டெலிக் கூட்டம் ஓடி வந்த போது அவர் நீர் ததும்பும் கண்களால் அதனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கத் தான் முடிந்தது. ஒரு புறா விர்ரென்று பறந்து வந்து உத்திரக் கட்டையின் மீது அமர்ந்தது. களி மண்ணாலும், மணலாலும் செய்தது போல தோன்றிய தமது நாசித் துவாரங்களின் மூலம் அந்தக் கிழவர் நசுங்கிப் போன வசந்த பருவ ரை தானியம் மற்றும் தேங்கிக் கிடக்கும் நீர் ஆகியவற்றின் வாடையைச் சுவாசித்தார். அரை வைக் கல் எந்திரத்தின் அஸ்திவாரத்தைச் சுற்றிலும் தண்ணீர் களகளத்துத் தரைக்குள் உறிஞ்சப்படுவதை அவர் சிறிது நேரம் காது கொடுத்துக் கேட்டார். இது மோசமானது என்று எண்ணியவாறே அந்தக் கிழவர் தமது அடர்த்தியான தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டார்.

அவர் தமது தேனிக் கூடுகளுக்கருகில் ஓய் வெடுப்பதற்காக கீழே படுத்தார். அவர் தம் மீது போர்த்தியிருந்த ஆட்டுத்தோல் பக்கவாட்டில் சரிந்து விழுந்துவிட்டது.அவரது வாய் திறந்திருந்தது; எச்சில் அவரது தாடிக்குள் சொட்டுச் சொட்டாக ஒழுகியிருந்தது. மாலை மயக்கம் அந்தக் கிழவரின் குடிசையில் இருள் சூழச் செய்தது. அந்த அரைவைக் கல் எந்திரம் பனி மூட்டத்தில் சிக்கிச் கொண்டிருந்தது.

அவர் விழித்தெழுந்த போது குதிரை மீது வரும் இரண்டு பேர் காட்டுக்குள்ளிலிருந்து வருவதைக் கண்டார்.

தேனீக் கூடுகளுக்குப் பக்கமாகச் சென்ற அந்தக் கிழவரை நோக்கி அவர்களில் ஒருவன், “ஏ கிழவா! வா இங்கே!” என்று கத்தினான்.

லுக்கிச் சந்தேகத்தோடு ஏறிட்டுப் பார்த்தார். தொல்லைகள் மிகுந்த இந்த ஆண்டுகளின் போது அவர் இவ்வாறு ஆயுதம் தாங்கிய மனிதர்கள் பலர் வருவதைக் கட்டிருந்தார். அவர்கள் அவரது சம்மதம் இல்லாமலே அவரது உணவையும், மாவையும் எடுத்துக் கொண் டனர். அவர் பேதா பேதமின்றி அவர்கள் அனைவரை யுமே வெறுத்தார்.

“ஏ கிழட்டு வேசி மகனே! இங்க வா!”

லுக்கிச் மரத்தால் செய்யப்பட்டிருந்த தனது தேனீக் கூடுகளின் வரிசைகளுக்கிடையே மெதுவாக நடந்து வந்தார்.

“கிழவரே, நாங்கள் செம்படையினர்தான்! எங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்!” என்று அந்த ஆட்டமன் அமைதியாகச் சொன்னான்: “நாங்கள் ஒரு கும்பலைத் தவறிவிட்டோம். இந்த வழியாக நேற்று ஏதாவது ஒரு படை சென்றதைப் பார்த்தீரா?”

“ஆம் பார்த்தேன்.”

“தாத்தா, அவர்கள் எந்தப் பக்கம் போனார்கள்?”

“யாருக்குத் தெரியும்?”

“அரைவை ஆலையில் அவர்களில் யாரேனும் இருக்கிறார்களா?”

“இல்லை” என்று சட்டென்று பதிலளித்து விட்டு கிழவர் திரும்பி செல்ல முயன்றார்.

“கிழவரே ஒரு நிமிடம்....” என்று ஆட்டமன் அவரைத் தடுத்து நிறுத்தினான்.

அவன் தன் குதிரையிலிருந்து இறங்கி, குடிபோதையினால் கால்கள், தள்ளவாடியவாறே நின்றான். “தாத்தா, நாங்கள் கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்டி வருகிறோம்!” என்று மதுவாடை வீச அவன் கூறினான்: “மேலும் நாங்கள் யார் என்று தெரிந்து கொள்வது உன் வேலையல்ல!” அவன் தடுமாறிய வனாக, தன் குதிரையின் கடிவாளத்தை நழுவவிட்டான். “நீ செய்ய வேண்டியதெல்லாம் எழுபது குதிரை களுக்கான தானியத்தை எங்களிடம் ஒப்படைத்து விட்டு, வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்பதுதான். இதனை நீ உடனே விரைவில் செய்தாக வேண்டும். புரிந்ததா? சரி. தானியம் எங்கே இருக்கிறது?”

“என்னிடம் தானியம் எதுவும் இல்லையே!” என்று லுக்கிச் ஒரு பக்கமாகப் பார்வையைத் திருப்பியவாறே கூறினார்.

“பின்னே அந்தக் குதிரில் என்ன இருக்கிறது?”

“பழைய ஓட்டை உடைசல்கள்தான். அதில் தானியம் எதுவும் இல்லை.”

“சரி வா, பார்க்கலாம்.”

அவன் அந்தக் கிழவரின் கழுத்தைப் பிடித்து அங்கு தரையில் பாதியளவுக்குப் புதையுண்டு மோசமான நிலையிலிருந்த குதிரையை நோக்கி உதைத்து தள்ளிக் கொண்டு சென்றான். அங்கிருந்த குதிர்களில் சாமை மற்றும் பார்லி தானியங்கள் இருந்தன.

“ஏ, கிழட்டு வேசை மகனே! இது தானிய மில்லையா?”

“ஆமாம், தானியம்தான்” என்று அவர் ஒப்புக் கொண்டார். “என்றாலும் இது ஏற்கெனவே அரைக்கப் பட்டதானியம். இதனை ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மணி தானியமாக நான் சேகரித்தேன். ஆனால், நீங்கள் இதனை உங்கள் குதிரைகளுக்குக் கொடுக்க விரும்புகிறீர்கள்.”

“அப்படியென்றால எங்கள் குதிரைகள் பசியால் சாக வேண்டும் என்பதுதான் உன் விருப்பமா? வேறு விதமாகச் சொன்னால் நீ செம்படையின் ஆதரவாளனா? உனக்கு வாழ்க்கை அலுத்துப் போய்விட்டதா?”

“இரக்கம் காட்டுங்கள் எஜமான்! நான் என்ன குற்றம் செய்தேன்?” லுக்கிச் தன் தொப்பியை அகற்றினார்: “என்னைக் கொன்று விடாதீர்கள்!” என்று அவர் அந்த ஆட்டமனின் பூட்ஸ் கால்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு மன்றாடினார்.

“நீ செம்படையின் ஆதரவாளன் அல்ல என்று சத்தியம் செய். ஊஹும், சிலுவைக் குறி போட்டால் போதாது. இந்த மண்ணைத் தின்று சத்தியம் செய்!”

அந்தக் கிழவர் ஒரு குத்து மண்ணை அள்ளித் தமது பல்லில்லாத வாய்க்குள் திணித்தார்: அந்த மண் அவரது கண்ணீரால் நனைந்திருந்தது.

“நல்லது, இப்போது உன்னை நான் நம்புகிறேன். எழுந்திரு!”

அந்தக் கிழவர் தமது மரத்துப்போன கால்களை ஊன்றி மீண்டும் எழுந்து நிற்கச் சங்கடப்படும் சிரமத்தைக் கண்டு அந்த ஆட்டமன் வாய்விட்டுச் சிரித்தான். இதற்கிடையில் அவனது ஆட்கள் குதிர்களிலிருந்து சாமை மற்றும் பார்லி அனைத்தையும் காலி செய்து தரையில் கொட்டி அந்தப் பொன்னிறமான தானியங்களைத் தமது குதிரைகளுக்காக விருந்தாக படைத்தனர்.

5

மூடுபனியிலும் ஈரமான பனி மூட்டத்திலும் உதய காலத்தின் ரேகை தென்பட்டது.

லுக்கிச் காவலுக்கு நின்றவனின் கண்ணில் படாது நழுவிவிட்டார். அவர் ரோட்டுப் பாதையில் செல்லவில்லை. மாறாக, தமக்கு மட்டுமே தெரிந்த காட்டுப் பாதையிலேயே நொண்டி நொண்டி நடந்து சென்றார்.

அவர் காற்றாடி எந்திரத்திற்கு அருகில் வந்து சேர்ந்தார். அங்கிருந்து மற்றொரு சந்து வழியாகத் திரும்ப முற்படும்போது அவர் தம் முன்னே பல குதிரை வீரர்கள் வருவதைக் கண்டார்.

“யாரங்கே?” என்று நாக்குழறிவாறே சொன்னார் லுக்கிச். அவரது உடம்பு சில்லிட்டு நடுங்கியது.

“யார் நீ? உன் பாஸ் எங்கே? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“நான் தண்ணீர் மில்லில் வேலை பார்ப்பவன். கிராமத்துக்கு ஒருவேலை நிமித்தமாகச் சென்று கொண்டிருக்கிறேன்.”

“என்ன வேலை? நீ என்னோடுவா, கமாண்ட ரிடம் செல்ல வேண்டும், புறப்படு!” என்று அவர்களில் ஒருவன் கத்திக் கொண்டே தனது குதிரையை அந்தக் கிழவனுக்கு நேராக ஓட்டிக் கொணடு வந்தான். இதனால் லுக்கிச் அந்தக் குதிரையின் வெப்பமான நீராவி கிளம்பி வரும் உதடுகள் தமது கழுத்தில் படுவதையே உணர முடிந்தது; அவர் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கெந்திக் கெந்தி நடத்தார்.

அவர் சதுக்கத்திலிருந்த ஒரு வேய்ந்த குடி சைக்கு வந்ததும், அந்தக் குதிரை வீரன் முணு முணுத்தவாறே குதிரையிலிருந்து இறங்கி, அதனை வேலியில் கட்டிவிட்டு, கடகடத்து ஒலிக்கும் உடைவாளோடு வராந்தாவில் ஏறினான்.

“என் பின்னால் வா!”ஜன்னல்களில் வெளிச்சம் தெரிந்தது. அவர்கள் உள்ளே சென்றபோது, உள்ளே மண்டி நின்ற நெடிமிக்க புகையிலைப் புகையின் காரணமாக லுக்கிச் தும்மினார்; பின்னர் தம் தொப்பியை அகற்றிவிட்டு, தெய்வப் படிமம் இருக்க வேண்டிய அந்தக் குடிசையின் வலது மூலைக்கு முன்னால் சிலுவைக் குறி போட்டுக் கொண்டார்.

“இந்தக் கிழவரை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். இவர் கிராமத்துக்குப் போவதாகச் சொன்னார்.”

நிக்கோல்கா மண்ணும் தூவலும் படிந்து சிலிர்த்துக் கொண்டிருந்த தமது காடுபோன்ற தலையை உயர்த்தினார்.

“நீங்கள் எங்கே; போகிறீர்கள்?” என்று தூக்கக் கலக்கத்தோடு எனினும் கண்டிப்போடு கேட்டார்.

லுக்கிச் முன்னால் ஓரடி வந்தார்; பின்னர் மகிழ்ச்சியால் வாய் பிளந்தார்:

“நீயா? என் அருமைப் பையா! நீங்கள் நமது ஆட்கள்! நல்ல வேளை! அந்தப் பிசாசுகள்தான் என்னைத் திரும்பவும் பிடித்துக் கொண்டு விட்டனவோ என்று முதலில் நினைத்தேன். என்றாலும் எனக்குக் கேட்கப் பயம். நான் அரைவை ஆலையில் வேலை பார்ப்பவன். நீ மெத்ரோகின் காட்டிலிருந்து வந்து எங்கள் ஊரில் தங்கியிருந்த போது உனக்கு நான் பால் கொடுத்தேனே, நினைவில்லையா?”

“நல்லது நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“என் அருமைப் பையா! நேற்று மாலை வாக்கில் சில பேர் கும்பலாக என் வீட்டுக்கு வந்து, எனது தானியம் அனைத்தையும் எடுத்து தமது குதிரைகளுக்கு உணவாகக் கொடுத்து விட்டார்கள். வெறும் நீசப் பிறவிகள் அவர்கள்! அவர்களது தலைவன், நான் அவர்களைச் சேர்ந்தவன்தான் என்று சத்தியம் செய்யச் சென்னான்; அதனை நிரூபிக்க என்னை மண்ணைக் கூடத் தின்னச் சொன்னான். ”

“சரி, இப்போது அவர்கள் எங்கே இருக் கிறார்கள்?”

“இன்னும் அங்குதான் இருக்கிறார்கள். அவர் களிடம் வோட்கா ஏராளமாக இருக்கிறது. அவர்கள் அதனை என் அறையில் குடித்துத் தீர்த்துக் கொண் டிருக்கிறார்கள். எனவேதான் அவர்களை நீங்கள் ஓரளவுக்கு ஒடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் நான் விஷயத்தை உங்களிடம் தெரிவிக்க இங்கு வந்திருக்கிறேன்.”

“சரி, குதிரைகளுக்குச் சேணங்களைப் பூட்டச் சொல்லுங்கள்” என்று நிக்கோல்கா அந்தக் கிழவரை நோக்கிப் புன்னகையோடு கூறியவாறே தமது கம்பளிக் கோட்டைக் களைப்போடு எட்டி எடுத்தார்.

6

இப்போது பொழுது நன்கு விடிந்துவிட்டது.

தூக்கமற்ற பல இரவுகளால் களைத்துச் சோர்ந்து போயிருந்த நிக்கோல்கா எந்திரத் துப்பாக்கி வண்டியை நோக்கிச் சிரமப்பட்டுத் தான் குதிரை மீதேறிச் சென்றார்.

“நாம் தாக்குதலைத் தொடுத்தவுடனே அவர்களை வலது பாரிசத்திலிருந்து தாக்குங்கள். நாம் அந்தப் பக்கமாகத்தான் அவர்களைத் தகர்த்தெறிய வேண்டும்.”

அவர் தமது குதிரையைத் திருப்பி தமது ஸ்குவாட்ரனின் பக்கமாகச் சென்றார்.

“குதிரைகளை விரைவாகச் செலுத்துங்கள்!” என்று உத்தரவிட்டார் நிக்கோல்கா. அவர் தமது குதிரையைச் சவுக்கினால் அடித்தார்; பேரொலி யெழுப்பும் அதன் கால் குளம்புகளின் ஓசை அவருக்குப் பின்னால் கேட்டது.

காட்டின் ஓரத்தில் எந்திரத் துப்பாக்கி படபட வென்று வெறித்தனமாக ஒலிக்கத் தொடங்கியபோது, ‘குதிரையில் சென்றவர்கள் ஏதோ அணிவகுப்பில் செல்வது போல் பரந்து விரிந்து சென்றனர்.

உடம்பெல்லாம் விதைகள் ஓட்டிக் கொண் டிருந்த ஓர் ஒநாய் புதருக்குள்ளிருந்து தாவி வெளியே ஓடிவந்து, தனது தடித்த கழுத்தை முன்னால் நீட்டி என்ன நடக்கிறது என்று ஒரு கணம் காது கொடுத்துக் கேட்டது. சடசடவென்று துப்பாக்கி வேட்டுக்கள் வானில் சிதறி வெடித்தன; மனிதர்களின் கூக்குரல்கள் அதனை நோக்கி வந்தன.

“படார்!” என்று பூச்சமரத் தோப்பிலிருந்து ஒரு துப்பாக்கி வெடித்தது. மற்றொரு துப்பாக்கி ஒரு குன்றுக்குப் பின்னால் எங்கோ இருந்து வெடித்தது. பட்! பட்! பட் மேலும் மூன்று வேட்டுக்கள் வெடித்தன.

குன்றுப் புறத்திலிருந்தும் பதிலுக்கு மூன்று வேட்டுக்கள் வெடித்தன. அந்த ஓநாய் மேலும் ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு, பள்ளத் தாக்கை நோக்கி ஓடி, இன்னும் அறுக்கப்படாது பழுத்து மஞ்சளாய்ப் போன புல்வெளிக்குள் மறைந்துவிட்டது.

“உறுதியாக நில்லுங்கள்! எந்திரத் துப்பாக்கி வண்டிகளை விட்டுப் போகாதீர்கள்! வெட்ட வெளியை நோக்கி முன்னேறுங்கள்!” என்று அந்த ஆட்டமன் தன் குதிரையின் அங்கவடிகளில் எழுந்துநின்றவாறே கத்தினான்.

ஆட்டமன் தனது குதிரையை ஒரு சுற்றுச் சுற்றித் திருப்பினான். அப்போது ஒரு வாளைக் கழற்றிக் கொண்டு, தனது ஆட்டுத் தோல் சட்டை காற்றில் அகலமாகப் பறக்க, ஒருவன் தன்னைத் தாக்குவதற்கு வருவதைக் கண்டான். குதிரை மீது வந்த வீரனின் மார்பில் கிடந்த பைனாகுலரும், அவனது ஆட்டுத் தோல் சட்டையும் அவன் ஒன்றும் சாதாரண செஞ்சேனை வீரனல்ல என்பதை ஆட்டமனுக்கு உடனே எடுத்துக் கூறின. அவன் உடனே தன் குதிரையின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். முகத்தில் மயிர் வளராத அந்த இளைஞனின் கண்கள் காற்றின் வேகத்தினால், சுருங்கிப் போயிருந்தாலும், அவனது முகம் பகைமை உணர்ச்சியால் வக்கரித் திருந்தது.

ஆட்டமன் தோலுறையிலிருந்து தனது மாஸர் துப்பாக்கியை உருவி எடுத்த போது, அவனது குதிரை ஒரு துள்ளுத் துள்ளிப் பின் வாங்கியது.

“பொறுக்கிப் பயலே! வாளையா சுழற்றுகிறாய்?”

அவன் அருகில் நெருங்கி வந்து கொண்டிருந்த கறுப்பு ஆட்டுத் தோல் சட்டையை நோக்கிச் சுட்டான். குதிரையில் வந்த வீரன் எட்டுகஜ தூரத்தில் போய் விழுந்தான். விழுந்தது நிக்கோல்காதான். அவர் தமது சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு, ஆட்டமனை நோக்கிச் சுட்டுக் கொண்டே ஓடினார்.

வெட்டவெளிக்கு அப்பால் எங்கோ ஒரு கூக்குரல் கேட்டு ஒடுங்கியது. சூரியனுக்குக் கீழே வேகமாகச் சென்று கொண்டிருந்த மேகங்கள் ஸ்டெப்பி வெளியின் மீதும், ரோட்டின் மீதும், இலையுதிர் காலக் காற்றினால் இலைகளை உதிர்த்து மூளியாக நின்ற மரங்களின் மீதும் நிழல்களைப் பரப்பின.

“தலைக்கனம் பிடித்த சின்னப் பயலே! இதற்காக நீ நிச்சயம் சாகப் போகிறாய்!” என்று ஆட்டமன் நினைத்துக் கொண்டான். அவன் தனது எதிரி தனது துப்பாக்கியில் சகல தோட்டாக்களையும் காலி செய்யும் வரை காத்திருந்தான். இதன்பின் அவன் தனது துப்பாக்கியால் குதிரையைத் தளரவிட்டுவிட்டு, அந்த இளம்வீரனின் மீது பாய்ந்தான்.

அவன் தனது சேணத்தில் சாய்ந்தவாறே தனது வாளால் ஓங்கி வெட்டினான். தனது எதிரி செயலிழந்து கீழே சாய்வதை அவன் கண்டான்.

குதிரையை விட்டிறங்கிய ஆட்டமன் நிக்கோல் காவின் மார்பில் தொங்கிய பைனாகுலரைப் பறித் தெடுத்தான்; வெட்டுப் பட்டுக் கீழே விழுந்த வீரரின் கால்கள் இன்னும் நடுங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். பின்னர் அந்தக் கால்களிலிருந்து மெருகேற் றப்பட்ட பூட்சுகளை இழுத்துப் பறிப்பதற்காகக் குனிந்தான். இறந்து போன நபரின் முழங்காலின் மீது தன் பாதத்தை ஊன்றிக் கொண்டு, அவன் அந்த பூட்சுகளில்ஒன்றைத் திறமையோடு இழுத்துக் கழற்றினான். அடுத்த பூட்ஸ் அத்தனை எளிதாக கையோடு வரவில்லை. ஒருவேளை கால் உறை உள்ளே திரைந்து சிக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

அவன் வாய்க்கு வந்தபடி வைது கொண்டு அந்த பூட்சை மீண்டும் இழுத்தான்; இதன்பின் அது காலுறையோடு சேர்ந்து கழன்று வந்துவிட்டது. அப்போது அந்தக் காலில் கணுக்காலுக்கு மேல் புறா முட்டை அளவுக்குப் பெரிதாகக் காட்சியளித்த அந்த மச்சத்தை ஆட்டமன் கண்டான். பின்னர் அவன் அந்த இளம் வீரரை விழிப்புறச் செய்துவிடக் கூடாது என்று அஞ்சியவன் போல், அவன் அந்த வீரரின் வாயிலிருந்து ஒழுகிய ரத்தம் அவனது கைவிரல்களை நனைத்தது; பின்னர் அவன் அந்த வீரரின் முக அடையாளங்களை நோக்கினான். அந்த வீரரின் கட்டு மஸ்தான அகன்ற தோள்களை முரட்டுத்தனமாகத் தழுவினான்.

“மகனே! நிக்கோல்கா! என் கண்ணே!” என்று அவன் முணுமுணுத்தான்.

அவனது முகம் இருண்டது.

“நீ ஏன் பதில் கூற மாட்டேன் என்கிறாய்? என்ன விஷயம்?” என்று அவன் கத்தினான்.

அவன் இறந்து போன அந்தக் கண்களை வெறித்துப் பார்த்தவாறும், ரத்தக் கறை படிந்த கண்ணிமைகளைத் தனது கைவிரல்களால் திறந்து வைத்தவாறும் கீழே சாய்ந்தான். அவன் அந்த உடம்புக்கு உயிரூட்டும் முயற்சியில், தன் பலத்தை யெல்லாம் கொண்டு அந்த அசைவற்ற உடம்பை உலுக்கினான்.

ஆயினும் நிக்கோல்கா தாம் சொல்லக் கூடாத ஒன்றை மிகவும் முக்கியமான பெரிய விஷயம் ஒன்றைச் சொல்லி விடுவோமோ என்று பயந்தது போல் தமது நாக்கின் நீலம் பாரித்த முனையைக் கடித்தவாறே கிடந்தார். ஆட்டமன் தன் மகனின் குளிர்ந்து போன கரங்களை முத்தமிட்டான்; அவற்றைத் தன் இருதயத் தோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். பின்னர் அவன் வியர்வை படிந்த தனது மாஸர் துப்பாக்கியின் வாயைத் தன் பற்களால் பற்றிக் கடித்துக் கொண்டு துப்பாக்கிக் குதிரையை இழுத்தான்.

மாலை நேரத்தில் சில குதிரை வீரர்கள் பனி மூட்டம் கவிந்த அந்த வெட்டவெளிப் பரப்பின் பக்கம் வந்த போது, ஒரு பருந்து அந்த ஆட்டமனின் கலைந்த தலையை விடுத்து வேண்டா வெறுப்பாகப் பறந்து சென்றது.

விளக்கவுரை ஆய்வியல்(ஹெர்மெனிட்டிக்ஸ்) குறித்து

ஹெர்மெனிட்டிக்ஸ் ஆரம்பம் பற்றி | Michel Foucault "சினிகா மற்றும் செக்ஸ்டியஸ், எபிக்டெட்டஸ், மார்கஸ் ஆரேலியஸ் போன்ற ஸ்டோயிக்குகள், அவர்க...