Saturday, February 13, 2010

தோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு



கடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் தவிர்த்து தறி நெசவுத் தொழிலில் ஈடுபடும் மனிதர்கள் இருந்தாலும் இந்தப் புதினத்தின் மையம் அவர்களைப் பற்றியல்ல. தொன்மங்களும் நம்பிக்கைகளும் நவீன காலத்தின் பரிணாமத்தில் மெல்ல சிதறுண்டுப் போவதை இந்தப் புதினம் விவரிக்கிறது. தான் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார் மீரான். இந்தச் சமூகப் புதினத்தை துப்பறியும் நாவல் போல் மிகுந்த சுவாரசியத்துடன் வாசித்து முடித்தேன்.
நாஞ்சில் நாட்டின் பிரத்யேக வட்டார மொழியும் இசுலாமியச் சமூகப் பின்னணியில் இயங்குகிற காரணத்தால் ஆங்காங்கே இரைந்திருக்கிறஅரபிச் சொற்களும் வாசகனை ஒரு வேளை ஆரம்பத்தில் திணறடிக்கலாம். ஆனால் அது அதிகாலை குளிர் குளத்தில் நீராடுவதைப் போலத்தான். மனதைத் திடப்படுத்தி முதல் முங்கை போட்டுவிட்டால் பிறகு எழுந்திருக்க மனதே வராத ஆனந்தத்தை மீரானின் புதினத்தின் மூலமாக அனுபவிக்க முடிகிறது

தோப்பிலின் முந்தைய நாவல்களில் குடும்பம், சமூகம், பொருளாதாரம், மதம் ஆகியன பிரதான அம்சங்கள். ஆனால் அஞ்சுவண்ணம் தெரு முற்றிலும் ஆன்மீகத் தளம் சார்ந்து இயங்குகின்றது. இஸ்லாத்தின் ஆன்மீக உளவியலைத் தன் ஆழமான எழுத்துக்களால் ஊடுருவுகிறது. ஆன்மீகப் பிரிவுகளின் மோதல்களைக் கூறுகளாக வைத்து இப்படி ஒரு நாவல் இதுவரை தமிழில் வந்ததில்லை. ‘சமநிலைச் சமுதாயம்’ மாத இதழில் ஒரு தொடர்கதையாக ‘தைக்காப் பள்ளியிலே மினாராக்கள்’ என்று வெளிவந்துகொண்டிருந்தது ‘அஞ்சுவண்ணம் தெரு’ என்று மாற்றம் பெற்றுள்ளது. தை.ப.மி. என்பதே பொருத்தமான தலைப்பு. வியாபார உத்திக்காக ‘அஞ்சுவண்ணம் தெரு’ என மாறியிருக்கலாம். இஸ்லாமியத் தமிழ் மரபுக்கு மாற்றான ஓர் அரேபிய இஸ்லாமியக் கலாச்சாரத்தை வெறும் பாறையாக உருட்டிக்கொண்டு வந்து நடுவீதியில் போட்டு அழிச்சாட்டியம் புரிகிற குழுவினரின் ஆதிக்க மனம் சார்ந்த மத வன்முறையை இந்நாவல் பேசுகின்றது. ஆனால் அதற்காக ஒரு பக்கச் சார்பை இதன் படைப்பாளி கொண்டிருக்கவில்லை. இந்நாவலை உலகின் வேறெந்த மூலையிலுமுள்ள முஸ்லிம் பகுதிக்குள் கொண்டுபோனாலும் அங்கும் இந்நாவல் பொருந்தி நிற்கும். உலகமயமாதலைக் காரணமாக்கி மேலை நாடுகள் தங்கள் கலாச்சாரத்தை முன்வைத்து, நுகர்வுவெறியைப் பின்னாலிருந்து திணிக்கின்றன. அதேபோலச் சவூதி மண்ணுக்கு இஸ்லாமே ஒரு கலாச்சார ஆளுமையைக் கொடுக்கிறது. அதற்கான கருத்தியல் வடிவமே தவ்ஹீத் கொள்கைகள். இதை மனத்தில் ஏற்றியபின், இஸ்லாமியக் குணாம்சங்களின் மீது முரட்டுத்தனங்களும் ஒற்றைப் பார்வையும் படிந்துவிடுகின்றன; மார்க்க உரையாடல்களுக்கான வெளி உடைக்கப்படுகிறது; கேள்விகள் அனுமதிக்கப்படுவதில்லை. பூமியானது மனிதன் ‘வாழ்வதற்கான’ இடமும்தான் என்கிற எண்ணம் அப்படியே அழிக்கப்படுகின்றது. அப்புறம் கலையும் இலக்கியமும் எதற்கு? எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் சில கதைகளைப் பிரமாதமாக எழுத முடியும். ஆனால் இக்கரு அப்படிப்பட்டதல்ல; இது ஒரு எமர் ஜென்ஸி கேஸ். வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம், ஒரு புனைவு, ஒரு சொற்றொடர்கூட இல்லாமல் அபாரமான செய் நேர்த்தியை இந் நாவல் கொண்டுள்ளது.




மலையாளத்து மகாராஜா சோள (?) பாண்டிய நாட்டிலிருந்து ஐந்து நெசவுக் குடும்பங்களை தருவித்து அவர்களுக்கான நிலத்தையும் ஒதுக்கி குடியமர்த்துகிறார். எனவேதான் அந்தத் தெருவின் பெயர் இயல்பாக 'அஞ்சு வண்ணம் தெரு'வாகிறது. 'அடக்கம் செய்யப்பட்ட தாய்'தான் அந்தத் தெரு மனிதர்களுக்கு தெய்வமாக இருக்கிறது. நாட்டார் மரபில் சிறு தெய்வங்கள் தோன்றும் அதே பின்னணிதான். மகாராஜா உலாவரும் போது அவரை மறைந்திருந்து பார்த்த தஞ்சாவூர் தாயும்மாவின் (ஹாஜரா) அழகில் மயங்கி மணம் முடிக்க தூது அனுப்புகிறார். ஒரு காபிருக்கு இசுலாமிய பெண்ணை மணம் முடிப்பதாவது? தந்தை கேட்கிறார் " மன்னன் உன்னை மனைவியாக்கி விடுவான். நீ காபிராக இறக்கப் போகிறாயா? ஈமானுள்ள முஸ்லிமாக இறக்க விரும்பிறியா?" மகள் சொல்கிறாள் "ஈமானுள்ள முஸ்லிமாக". "அப்படியானால் இந்த குழியில் இறங்கம்மா". மதத்திற்காக உயிருடன் புதைக்கப்படுவதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் அவள் 'அடக்கம் செய்யப்பட்ட தாய்' ஸ்தானத்தை அடைந்த புராதன நிகழ்வு அஞ்சுவண்ணம் தெருவின் ஆதி வரலாறு தெரிந்தவரான பக்கீர் பாவா சாகிப் மூலமாக வாப்பாவிற்கும் தெரிவிக்கப்படுகிறது.

அஞ்சுவண்ணம் தெருவில் ஜரிகை தாவணியும் அங்கவஸ்திரமும் பட்டு வேட்டியும் நெய்யக்கூடிய ஒரே தறிக்காரனான அப்பாஸ் முதலியின் மண்வீட்டை இடித்து ஷேக் மதார் சாகிப் 'நபீசா மன்ஸிலை' கட்டுகிறார். அந்தத் தெருவிலுள்ள தைக்கப்பள்ளியை விட அந்தக் கட்டிடம் உயரமாக இருப்பது ஆபத்து என்று பள்ளிவாசலை பராமரிக்கும் மைதீன் பிச்சை மோதீன் முதற்கொண்டு தெருவாசிகள் அனைவரும் சொல்கின்றனர். ஆனால் இதற்கொரு பரிகாரமுண்டு. தைக்காப்பள்ளியின் மேலே ரெண்டு மினாராக்கள் கட்டிக்கொடுப்பதுதான் அது. ஆனால் தொழில் சுணங்கியிருப்பதாலும் ஷேக் மதாப் சாகிப்பிற்கு விருப்பமில்லாததாலும் அதை நிறைவேற்ற முடிவதில்லை. தொழில் நொடித்து வீட்டில் அமீனா புகும் நிலை ஏற்படுகிறது. தெய்வத்தின் சாபம் என்றே தெருவாசிகள் இதைக் கருதுகின்றனர்.

பிறகு பாழடைந்த அந்த வீட்டினுள் பெண் தற்கொலையொன்று நிகழ்வதாலும் பேய்கள் இருப்பதாலும் யாரும் அதனருகே செல்வதில்லை. மகளுக்காக வீடொன்றை வாங்க முயலும் 'வாப்பா' எதிர்ப்பையும் மீறி அதை வாங்கி வீட்டின் பெயரை 'தாருல் சாஹினா' வாக மாற்றினாலும் அவருடைய மகளும் மருமகனும் அதிருப்தியோடும் தெருக்காரர்கள் கிளப்பிவிடும் பீதியுடனும் அங்கு வாழ்கிறார்கள். இந்த இடத்திலிருந்து புதினம் நிகழ்காலத்தில் இயங்கத் துவங்குகிறது. அதன் பின்னர் அஞ்சுவண்ணம் தெருவில் ஏதேதோ சம்பவங்கள் நடக்கின்றன. மதத்தின் புராதனத்தன்மையும் நவீனத்தன்மையும் மோதிக் கொள்கின்றன. தைக்காப்பள்ளி கவனிப்பாரின்றி பாழாகிறது. 'அடக்கம் செய்யப்பட்ட தாய்க்கு' விளக்கேற்றவோ சந்தனத்திரி கொளுத்துவதற்கோ ஆளில்லை. மைதீன் பிச்சை மோதீன் மர்மப்பாம்பு கடித்து பள்ளிவாசலிலேயே இறக்கிறார்.


அஞ்சுவண்ணம் தெருவில் ஷேக் மதார் சாகிபிடமிருந்து விலைக்கு வாங்கிய பழைய வீட்டில் தாருல் ஸாஹினா என்று பெயர் சூட்டப்பட்ட வீட்டில் புதிதாக தன் மகளை குடிவைத்த வாப்பா அந்தத்தெருவின் கதையை எதிர்வீட்டு பக்கீர் பாவாவிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொள்ளும் விதமாக நாவல் ஆரம்பிக்கிறது.

அஞ்சுவண்ணம் தெருவின் ஓரத்தில் தாயாரின் சமாதி இருக்கிறது.பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் மலையாளத்து மன்னர் சோழபாண்டிய நாடுகளில் இருந்து கைதேர்ந்த நெசவாளிகளான ஐந்து முஸ்லீம் நெசவாளர்களை அந்த தெருவில் குடிவைத்தார். அவ்வாறு உருவானதுதான் அஞ்சுவண்ணம் தெரு என்ற பெயர். அந்த நெசவாளர்களின் பரம்பரைதான் அங்குள்ளவர்கள். அவர்களின் பெண்கள் பேரழகிகள். அவர்களில் பெரிய அழகி ஹாஜறா. அவளை தற்செயலாகக் கண்ட மன்ன அவளை அடைய ஆள் சொல்லி அனுப்புகிறாள். மானத்தை இழக்க விரும்பாத ஹாஜறா தானே தன் குழியில் படுத்துக்கொண்டு உயிருடன் சமாதிசெய்யப்படுகிறாள். அவள் அந்தத்தெருவின் காவல்தெய்வமாக ஆகிறாள்.

அஞ்சுவண்ணம் தெருவின் ஆழ்மனத்தில் தயாரின் சமாதி ஒரு பெரிய இடம் வகிக்கிறது. அந்த சமாதியைச் சுற்றி ஏராளமான தொன்மங்கள் உருவானபடியே இருக்கின்றன. அவை அம்மக்கள் இறந்தகாலத்தை நிகழ்காலத்துடன் பொருத்திக்கொள்ளும் ஒரு முறை என்று சொல்லலாம். தாயாரம்மாவின் குடும்பம் ஊரைவிட்டு போய் பலநூற்றாண்டுகளுக்குப் பின் அவர்கள் மரபில் வந்த மகமூதப்பா மக்காவிலிருந்து வந்து தன்னுடைய ஜின்னுகளைக்கொண்டு கட்டியதுதான் அந்த தைக்கா பள்ளி. அவர்தான் தொழுவதெப்படி என்று அம்மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார் என்பது ஐதீகம்.

அவரிடமிருந்து தீன் கற்றுக்கொண்டு முதலில் பாங்கு சொன்ன மம்மேலி மோதீனின் பரம்பரையில் வந்த மைதீன் பிச்சை மோதினார் அந்த தைக்கா பள்ளியில் பாங்கு சொல்கிறார்.ஆனால் தைக்கா பள்ளியில் எவரும் தொழுவதற்கு வருவதில்லை. இடிந்து சரிந்து கிடக்கிறது அது. மோதினார் அங்கே தவறாமல் விளக்கு பொருத்தி பாங்கு சொல்கிறார். அதற்கு மேலுலகில் கிடைக்கும் கூலியேபோதும் அவருக்கு. ஊரில் அவருக்கு ஒருவேளைச் சோறு கூப்பிட்டுக்கொடுப்பதற்குக்கூட ஆளில்லை.

இந்நாவலின் மையக்கதாபாத்திரமே மோதினார்தான் என்று சொல்லலாம். சென்றகாலத்தின் மையமான சில விழுமியங்களின் பிரதிநிதி அவர். அழுத்தமான மதநம்பிக்கை. பலனே எதிர்பாராத அர்ப்பணிப்புள்ள வாழ்க்கை. தனக்குள் கண்டுகொண்ட நிறைவு. சென்ற காலம் முழுக்க தொன்மங்களாக அவரது மனதில் படிந்திருக்கிறது. அவருக்கு தாயாரம்மாவும் ஆலிம்புலவரும் மஹமூதப்பாவும் எல்லாம் வாழும் உண்மைகள்.

சென்றகாலத்தின் இன்னொரு பிரதிநிதி குவாஜா அப்துல் லத்தீ·ப் ஹஜ்ரத். மொகராஜ் மாலை எழுதிய ஆலிம்புலவரின் வாரிசு அவர். அஞ்சுவண்னம் தெருவின் இலக்கியச் சொத்துக்குப் பாதுகாவலர். பீரப்பா பாடல்களும் ஆலிம்புலவரின் பாடல்களும் அவருக்கு பாடம். அவருடைய குரலாலேயே தெரு அந்த இலக்கியமரபை அறிந்திருக்கிறது.

தெருவின் பிரதிநிதியாக இருப்பவள் மகமூதும்மா. பரிபூரணமான அனாதை. தெருவிலேயே வளர்ந்து தெருவிலேயே மணம் முடித்து வீட்டுத்திண்ணைகளில் அந்தியுறங்கி வாழ விதிக்கபப்ட்டவள். மீரானின் உள்ளே உள்ள கலைஞனின் வல்லமை முழுக்க படிந்த முக்கியமான கதாபாத்திரம் இதுதான். நல்ல கலைபப்டைப்பில் ஆசிரியரை மீறியே சில கதாபாத்திரங்கள் இவ்வாறு முழுமையாக வெளிப்பாடுகொண்டுவிடும். சற்றும் தளராத வீரியம் கொண்டவள். எதற்கும் அஞ்சாதவள். அவளுடைய நாக்குதான் அவளுடைய ஆயுதம். தெருவின் குழாயை வல்லடியாகச் சொந்தமாக்கிக்கொண்டு அதையே தன் வாழ்வுக்கு ஆதாரமாக்கிக் கொள்கிறாள்.

அஞ்சுவண்ணம் தெரு நாவல் முழுக்க வளர்ந்து முதிர்ந்து வரும் மம்முதும்மா பல முகங்கள் கொண்டவள். அனல் போன்ற நெறிகொண்டவளாயினும், ஊரிலுள்ள அனைவருடைய மீறல்களையும் தெரிந்து கொண்டு வசைபாடி அவர்களை அடக்கும் வல்லடிக்காரியாயினும், அவளுக்குள் குவாஜா அப்துல் லத்தீ·ப் ஹஜ்ரத் அவர்களுடனான உறவின் ஒரு ரகசியம் இருக்கிறது. அது அவளுக்கு ஒரு தெய்வீக அனுபவம். மெல்ல மெல்ல தெருவின் கடந்தகாலமாக மாறி மறையும் மம்முதும்மாவின் சித்திரம் ஒரு காலகட்டத்தையே கண்ணில் கண்டுவிட்ட அனுபவத்தை அளிக்கிறது.


வெள்ளிக்கிழமை மதச்சொற்பொழிவு ஒலிக்கத்தொடங்கும்போது புள்ளிச்சேலையை முகத்தின்மீது போட்டு அசையாமல் சிலை போல் இருந்து அதை முழுக்கக் கேட்கும் மம்முதும்மாவின் காட்சி தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான ஒரு தருணம். எளிய மக்களின் குணச்சித்திரத்தை அளிப்பதில் மீரானுக்கு எப்போதுமே ஒரு தேர்ச்சி உண்டு. கிட்டத்தட்ட வைக்கம் முகமது பஷீரை தொட்டுவிடும் எளிமையான நகைச்சுவையுடன் அவர்களின் மன ஓட்டங்களை அவரால் சொல்ல முடியும். விசித்திரமான ஐதீகக் கனவுகளும் நடைமுறை அச்சங்களும் கலந்து மம்முதும்மா உருவாக்கும் அஞ்சுவண்ணம் தெருவின் மாந்த்ரீகப்பிம்பங்களில் அந்த திறன் உச்சம் கொள்கிறது.

நாவலில் நவீன வஹாபியத்தின் சிறந்த முகமாக வருகிறார் வாப்பா. மூடநம்பிக்கைகள் சடங்குகள் கண்டு சலித்து வெறுத்து குர் ஆனின் தூய ஞானம் நோக்கி திரும்பியவர். அல்லாஹ் அன்றி அஞ்சவேண்டியதொன்றுமில்லை என்பதை குர் ஆனிலிருந்து கற்றுக்கொண்டவர். தன் நம்பிக்கைகளைச் சார்ந்தே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். குவாஜா அப்துல் லத்தீ·ப் ஹஜ்ரத் அவர்கள் மரியாதையுடன் ‘பாவா’ என்று அழைத்து ஆலிம்புலவரின் பாடலை ஓத அழைத்த போது ‘அதை நீரே வைத்துக்கொள்ளும்’ என்று தூக்கிவீசிச் சொல்லி அவரை திக்பிரமை கொள்ளச்செய்தவர் அவர். ஆனால் கைவிடப்பட்ட தைக்கா பள்ளிக்குள் சென்று தன்னந்தனியரான மோதினாருடன் சேர்ந்து அவரால் தொழமுடிகிறது.

நவீனகாலத்தின் அரசியல் நோக்கங்கள் முதன்மைப்பட்ட தௌஹீத் கட்சியினரின் அடையாளமாக வருகிறான் அபு ஜலீல். வெளிநாட்டுக்குச் சென்று வேலைசெய்து அங்கிருந்து வஹாபியக் கருத்துக்களைச் சுமந்து கொண்டு வந்து சேரும் அபு ஜலீல் இந்நாவலின் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம். அவனுக்கு மதம் என்பது திட்டவட்டமான சில கட்டளைகள் மட்டுமே. அம்மக்களின் வரலாற்று மரபும் மனமும் ஒன்றும் அவனுக்குப் பொருட்டல்ல. சாகுல் ஹமீது [சாவல்] என்று பெயருடன் பாத்திஹா ஓதியபின் விமானமேறியவன் சூ·பி பெயரே பாவம் என்று பெயரை மாற்றிக்கொண்டு திரும்பி வருகிறான். தொப்பி போட்டு தொழவேண்டுமென எந்த நூலில் சொல்லியிருக்கிறது என்று சொல்லி மசூதியில் விவாதம்செய்கிறான். தன் சுற்றத்தவர் அனைவருமே பாவிகள் என்கிறான்.

அரேபியப்பணத்தில் தௌஹீத்வாதிகளின் தரப்பு செயற்கையாக உப்பவைக்கபப்டுவதை தோப்பில் முகமது மீரான் சித்தரிக்கிறார். ‘கண்ணாடித் திரையில் எழுதி அனுப்ப அதை அங்கே கண்னாடித்திரையில் வாசித்து’ அனுப்பப்பட்ட பணத்தை இவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். வேம்படி பள்ளியின் நிர்வாகத்தை பணபலத்தால் கைப்பற்றியபின் அங்கே தௌஹீத் கொடியை ஏற்றி அந்த வெற்றியைக் கொண்டாடிவிட்டு அதைக் கைவிட்டு அடுத்த பள்ளிநோக்கி செல்கிறார்கள். அஞ்சுவண்ணம் தெருவில் அடிதடிகள் சாதாரணமாக நடக்கின்றன. போலீஸ் அதைப்பயன்படுத்தி உள்ளே நுழைந்து இளைஞர்களை வேட்டையாடுகிறது. தெரு அதன் அனைத்துத் தனித்தன்மைகளையும் இழந்து மெல்லமெல்ல அழிகிறது.

அஞ்சுவண்ணம் தெருவின் ஆதர்ச கதாபாத்திரங்கள் மெல்ல காலத்திரைக்குள் மறையும் காட்சியை விரிவாக விளக்கி முடிகிறது நாவல். மோதினார், ஹஜ்ரத் ஆகியோரின் இறப்பை அழுத்தமாகச் சித்தரித்திருக்கிறார் மீரான். மம்மதும்மாவில் கூடும் மௌனம் மரணத்தை விட அழுத்தமானது

விசித்திரமான ஒரு கனவுக்காட்சியுடன், அல்லது உருவெளிக்காட்சியுடன் , நிறைவுபெறுகிறது இந்நாவல். உறுதியான வஹாபிய நோக்கு கொண்டவரான வாப்பா தன் ஆத்மாவுக்குள் மோதினாரை காண்கிறார். அவருடன் இணைந்துகொள்கிறார். மரபின் சாரமும் புதுமையின் சாரமும் முரண்பாடில்லாமல் இணையும் ஆன்மீகமான புள்ளி ஒன்று உண்டு என்று கண்டுகொண்டு நிறைவுபெறுகிறது ‘அஞ்சுவண்ணம் தெரு’.

‘சாய்வுநாற்காலி’க்குப் பின்னர் சற்று இடைவேளை விட்டு மீண்டும் ஒரு முக்கியமான நாவலுடன் தமிழிலக்கிய உலகுக்கு வந்திருக்கிறார் மீரான்.



அந்நாவலை வாசித்து முடித்தவுடன் ‘இதுசமகால வாழ்வை விசாரிக்கும் நாவல்’ என்று வகைப்படுத்திப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்ததை விட ‘அஞ்சு வண்ணம் தெரு சமகால அரசியலை - அதன் நுட்பமான இயங்குநிலைகளை ஆழ்ந்த கரிசனத்தோடு விவரிக்கும் நாவல்’ எனச் சொல்வதே சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஒவ்வொரு நாவலையும் சாதாரணமாக வாசித்து விட்டுப் போய்விடலாம். ஆனால் அது எழுப்பும் தொனியோடும், விவாதிக்க விரும்பும் அரசியல் சமூகப் பின்புலத்தோடும் வாசிக்கிற போதுதான் படைப்பாளியின் அக்கறைகள் மீது விமரிசனத்தை முன் வைக்க முடியும் என்பது எனது கருத்து.

அஞ்சு வண்ணம் தெருவில் வந்து போகும் பாத்திரங்கள் இரண்டு விதமானவர்களாக இருக்கின்றனர். தங்களின் முன்னால் நடக்கும் மாற்றங்கள் சரியில்லை; மோதல்களையும் முரண்பாடுகளையும் வலியத் தேடிச் செல்லும் நோக்கத்தோடு அடுத்த தலைமுறை வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது; அதனால் இதுவரை பிடிமானத்துடன் இருந்த பழைய வாழ்க்கை முறை ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது என்பதை இயலாமையுடன் பார்த்துக் காலம் கடத்திக் கொண்டிருப்பவர்கள் முதல் வகையினராக உள்ளனர். இரண்டாவது வகையினர் உருவாக்கப் படும் அச்ச உணர்வுக்குள் தங்களை இணைத்துக் கொண்டு, முன் வந்து நிற்கும் வழிகாட்டுதல்களால் ஈர்க்கப்பட்டு அதனை நோக்கிப் பயணம் செய்யும் நிலையினர். இவ்விரு வகையினரும் சந்திக்கும் பரப்பாக அஞ்சுவண்ணம் தெரு நகர்கிறது. அது நகர்கிறது என்பதை விடக் காலம் அப்படி நகர்த்துகிறது; மாற்றுகிறது என்பதை மீரான் தனது எளிய கதை சொல்லல் மூலம் எழுதிக் காட்டியுள்ளார்.

பழைமை வாதத்திலிருந்து இயல்பாக மாறிக் கொண்டிருந்த இந்தியப் பன்முக சமுதாயத்தின் சகல தளங்களிலும் இந்த முரண்பாடு தீவிரமாகி ஓரளவு ஏற்கத்தக்க அந்த மாற்றத்தைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக உருவாக்கப்படும் மத அடிப்படை வாதம் இந்திய இசுலாமியர்களின் பிரச்சினை மட்டும் அல்ல. பெரும்பான்மையினர் எனத் தங்களைக் கருதிக் கொள்ளும் இந்துக்களின் பிரச்சினைகளும் தான். இந்து, இசுலாம், கிறித்தவம் என ஒவ்வொரு சமயங்களிலும் செயல்படும் சாமியார்களும் , போதகர்களும், ‘ஒவ்வொருவரும் தங்கள் அடையாளத்தைப் பேணுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்’ எனச் சொல்லி அடிப்படைவாதத்தை நோக்கி அடுத்த தலைமுறையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை மறுப்பவர்கள் போலத் தோற்றம் தரும் அரசியல்வாதிகள் மத அடிப்படை வாதத்தை விடவும் ஆபத்தான சாதீய அடிப்படை வாதத்திற்குள் சமூகங்களை பிரித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மீரான் இயல்பான வட்டார மொழியில் காலத்தை முன்னும் பின்னுமாக கடக்கின்ற உத்தியோடு இந்தப் புதினத்தை நகர்த்திச் செல்கிறார். மத நம்பிக்கைச் சார்ந்த ஆனால் பகுத்தறிவிற்கு ஒட்டாத விஷயங்களை தன்னுடைய மேதமையை நுழைக்காமல் அதனின் இயல்பிலேயே விவரித்திருப்பது நன்றாக இருக்கின்றது. பள்ளி வாசலை பராமரிக்கிற பாவப்பட்ட பாத்திரமொன்று மீரானின் படைப்புகளில் தொடர்ந்து சித்தரிக்கப்படும். இதிலும் அது 'மைதீன் பிச்சை மோதீனாக' வருகிறது. தைக்காப்பள்ளியில் தொடர்ந்து விளக்கு எரிவதற்கு தெருவாசிகளிடம் இரந்து கொண்டேயிருக்கிறார். "அடக்கம் செய்யப்பட்ட தாய் இன்னு இருட்டிலையாக்கும்" மம்முதம்மா என்றொரு பாத்திரம் இதில் முக்கியமானதும் சுவாரசியமாக சித்தரிக்கப்பட்டதுமாகும். அஞ்சுவண்ண தெருவின் பெரும் சண்டைக்காரியாக குழாயடியை கைப்பற்றியிருக்கும் அவள் தெருவாசிகளின் அந்தரங்கங்களை சண்டையில் போட்டு உடைக்கிறாள். 'எப்படி இவளுக்குத் தெரிந்தது' என்று தெருவாசிகள் திகைப்படைகிறார்கள்; ஆச்சரியப்படுகிறார்கள்; ஜின்னுவின் துணையுடன்தான் இது சாத்தியமாகும். அவளுடைய வரலாறு மைதீன் பிச்சை மோதீன் மூலமாக வாப்பாவிற்கு தெரியப்படுத்தப்படும் போது நமக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்திற்காவும் தன்னுடைய மதத்திற்காகவும் உயிரை முன்வந்து இழந்த ஒரு தியாகியின் மகள். வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களில் இவ்வாறு ஆயிரக்கணக்கான சித்திரங்கள் உள்ளன.

பொதுவாக எல்லாப் படைப்புகளிலும் பிரதியை உருவாக்குகிற ஆசிரியனும் ஒரு பாத்திரமாக உள்நுழைந்திருப்பான். அப்படியாக இதில் 'வாப்பா'வரும் பாத்திரம் நூலாசிரியர் மீரானாக இருக்கக்கூடும் என யூகிக்கிறேன். இசுலாமிய மதத்தின் சில கூறுகளை அறியாமையில் ஏற்பட்டிருக்கிற மூடத்தனம் என்ற புரிதல் இவருக்கு இருக்கிறது. தைக்காப்பள்ளிக்கு மினாராக்கள் கட்டிக் கொடுக்காததால்தான் வீட்டில் துன்பங்கள் நிகழ்கின்றன என்று தீவிரமாக நம்பும் மகளையும் மருமகனையும் இவர் தெளிவுப்படுத்த முயன்று கொண்டேயிருக்கிறார். அவர்கள் தரும் எரிச்சலையும் சலிப்பையும் அறிவின் துணையுடன் கடக்கிறார். அதன்படியே அந்தக்குடும்பம் முதலில் சில பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டாலும் பின்னர் நல்ல நிலைமைக்கு ஆளாகிறது.


நாவலின் பிற்பகுதி கசப்பான வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது. மதத்தை நவீனப்படுத்துவதாகச் சொல்லும் ஒரு கூட்டத்திற்கும் மரபின் மீதான நம்பிக்கைவாதிகளும் மோதல் நிகழ்கின்றன. இரு குழுக்களின் மோதலில் வேம்படி பள்ளி நீதிமன்றத்தின் கைக்குப் போகிறது. நீதிமன்றத்தின் சார்பாக ரீசிவராக நியமிக்கப்படுபவர் ஓர் இந்து. எல்லா வரவு செலவுகளையும் அவரிடம் ஒப்படைக்கவும் எந்தவொரு அனுமதிக்கும் அவரை நம்பியிருக்கவும் வேண்டியிருக்கிறது. இதிலுள்ள முரண்நகையை பூடகமாகச் சொல்லியிருக்கிறார் மீரான். எந்தவொரு வன்முறைச்சம்பவத்திற்கும் அப்பாவி இசுலாமியர்கள் பலிகடாக்களாக முன்நிறுத்தப்படுவதையும் சில நிகழ்வுகள் சொல்லிச் செல்கின்றன.
இஸ்லாத்தின் பரிபக்குவத்தை எப்படி உணர்வது, எவ்விதம் கடைப் பிடிப்பது என்பதற்குத் தோப்பில் நம்முன் நகர்த்தி வரும் உதாரணம் அந்த ‘வாப்பா’ பாத்திரம்தான். ஆனால் இந்த அம்சத்தை நாம் எளிதில் கண்டுவிடலாம் என்றாலும், மம்மதும்மாவின் பாத்திரம் நம்முன் ஒரு சவாலாகவே இருக்கும். அவள் பேச வாயெடுத்தாலே அவ்வளவுதான், எல்லாம் தகர்ந்துபோய்விடும். ஊருக்கு ஊர் மம்மதும்மாக்கள் இருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால் இவளுக்கு ஒரு ‘ஜின்’ துணையாக வாய்த்ததைப் போல வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. முறைகேடான பாலியல் உறவுகள் அனைத்தையும் அவள் அறிந்த வகையில் அந்த ‘ஜின்’னின் உதவி அமைந்திருக்கின்றது. அதனாலேயே, பெண்கள் மம்மதும்மாவைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவளும் வாப்பாவை ஒரு வஹாபி என்றுதான் கருதுகிறாள். வஹாபிகளின் நடமாட்டம் தைக்காவைப் பாழடைய வைப்பதும் தைக்கா பற்றிய நம்பிக்கைகளைத் தகர்ப்பதும் மட்டுமா? அதிகாரங்களைக் குறிவைத்து அரசியல் இலாபங்களையும் சுயநலத்தையும் பேணுவதாகவும் அமைகின்றது. இதுவரையிலும் கடைப்பிடித்து வந்த இலக்குகளை, ஹராமான பாதைக்குள் செலுத்தி, சமூகத்தின் மனநிலையை வக்கரிக்கச் செய்கின்றது. வாப்பாவைவிட, மம்மதும்மாவைத்தான் இவை உலுப்புகின்றன. கையறுநிலையில் நின்று புலம்புகிற மம்மதும்மா இஸ்லாமியக் கலாச் சாரத்தின் குறியீடு. இவற்றை யெல்லாம் இந்நாவல் அற்புதமாகப் பதிவுசெய்கின்றது.

நம்முடைய மூதாதையர்களின் காலத்திற்குள் நாம் திரும்பத் திரும்பச் சென்றுவரும் எண்ணிலாத தொன்மங்கள் அடங்கியுள்ளன. ஜின்கள் உலாவும் அந்த அதிசய உலகத்தில் நாம் எப்போது எந்தப் பாதையின் வழியாக உள்ளே போனோம், எவ்விதம் பூமிக்குள் திரும்பவும் வந்து சேர்ந்தோம் என்பதைக் கண்டறிய முடியாத அளவிற்குக் காலமும் வெளியும் மாய உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன. மெஹ்ராஜ் மாலை அரங்கேற்றம், வேம்படிப் பள்ளி எழுவது, வெட்டு வத்தி மம்மேலி பாங்கு சொல்வது, திடசித்தம் வாய்ந்த வாப்பா மைதீன் பிச்சை மோதீனுடன் விண்ணுலகப் பயணம் செய்வது, தகர்க்கப்பட்ட பாபர் மசூதியைக் காண்பது, நபிகள் நாயகமும் ஜிப்ரீலும் அறிந்த அந்த மகத்தான உண்மையை ஆலிப் புலவர் தன் கவிதைகளின் உச்சத்தில் கண்டறிந்துகொள்வது... இப்படிப் பக்கம் பக்கமாய் விரியும் இந்த அற்புதங்கள், நாமும் அவற்றை அப்போது அனுபவித்துக்கொண்டிருப்பதான பரவசத்தைத் தருகின்றன. இவை எல்லாமும் நாவலின் மையத்தை நோக்கியே நம்மை அழைத்துச் செல்கின்றன. நாம் நம் கால்களால் அலைந்து திரிய வேண்டிய வேதனைகளில்லாத இடப்பெயர்ச்சிகள்.




தறியின் நெசவு போலவே புரானத்தோடும் மத ஆன்மீகத்தோடும் இயைந்து இயைந்து கதை சொல்லியிருக்கும் மீரானின் படைப்புத் திறமைக்காகவும் வட்டார மொழிச் சுவைக்காகவும் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய புதினம் - அஞ்சுவண்ணம் தெரு.

தொ.பரசிவனின் ஆய்வும்,ஆய்வு முறையியலும்

தொ.பரசிவனின் ஆய்வும்,ஆய்வு முறையியலும் தொ.பரமசிவன், பன்முகத் தலைப்புகளில் ஆழமும் அழுத்தமுமாக தமிழில் எழுதியும் பேசியும் வந்த பேர...