Tuesday, January 26, 2010

அனாரின் கவிதை பிரதி அடையாளம்


கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முகம் (2007)" என்ற இரு கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. 2005ஆம் ஆண்டில் ஓவியம் வரையாத தூரிகைக்காக அரச சாஹித்திய விருதும், வட-கிழக்கு மாகாண அமைச்சின் இலக்கிய விருதும் பெற்றவர். கவிதைக்கான அரச சாஹித்திய விருது பெற்ற முதல் முஸ்லீம் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மூன்றாவது கவிதை நூல் மிக விரைவில் வெளிவரவிருக்கிறது

ஓவியம் வரையாத தூரிகை...

இனங்களின், மொழிகளின், தேசங்களின், மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய
பரிமாணங்களுடன் நோக்கப்டுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம்
பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன் விடுதலைப்போராட்டங்கள் வன்முறையாக
இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இலக்கியம் வாழ்வின் ஆதாரங்களைச் தேடிச்செல்லக் கூடிய
சூழ்நிலையாக உள்ளது. அந்த வகையில் ஓவியம் வரையாத தூரிகை பெண்ணின் ஆத்மார்த்தமான குரல்களைப்
பல்வேறு வடிவங்களில் கேட்கமுடிகிறது பெண்களின் கனவுத்தேசத்தின் விடுதலையிலும் அனைவரும்
சமமாக வாழக்கூடிய புதிய விடியலிலும் அனாரின் கவிதைகள் ஆழ்ந்து நிற்கின்றன. நிகழ்வுகளின்
மீதான கோபம், தாக்கங்கள், நிற, இன ஒடுக்குதலுக்கு அவதியுறுவோர் என பெண் ஒடுக்குமுறைக்கு
தனது அனுபவங்களை வேதனையை எதிர்ப்பு உணர்வை வெளியிடும் பெண் குரலாக இவரின் கவிதைகள்
வெளிப்பட்டுள்ளன. அனாரினால் எடுத்தாளப்படும் சொற்களும் படிமங்களும் வித்தியாசமானவை.
இன்று தமிழில் கவிதை எழுதும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. உணர்வுகளை பாதிக்கும்
வகையில் கவிதைகளை எழுதி வருபவர்களில் -எழுத்துலகில் குறுகிய காலத்தில் நன்கு அறியப்பட்ட
கவிஞரான- அனாருக்கு முக்கிய இடம் உண்டு. இவா�ன் ஓவியம் வரையாத துரிகை பெண்ணின்
மனஉணர்வுகளை பெண் நிலையில் நின்று பதிவு செய்கின்றன. இத் தொகுப்பில் பெண்களின் ஆத்மார்த்தமான
குரல்களைப் பல்வேறு வடிவங்களில் காணமுடிகின்றது. அத்துடன் கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஒரு
முஸ்லீம் பெண் என்ற வகையில் பிரதேச, மத, இன, மொழி ரீதியானதாக இவரின் கவிதைகள்அமைகின்றன.
பெண்களின் வெவ்வேறு வயதுப் பருவங்கள் இக் குரலினோடு தெரிவதோடு பலவகை உணர்வுகளின்
கலவை தழும்பிச் சிந்துகிறதையும் மிக அன்னியோன்யமாக உணரக் கூடியதாக உள்ளது என தனது
முகவுரையில் குறிப்பிட்டுள்ளார் ஆழியாள்.


ஆம் அடக்கத்தை எனக்கே போதித்தாய்
என்னிடமே எதிர்பார்த்தாய்
உயிருள்ள தோளில்
ஓர் மாலையாகக்
கிடக்க நினைத்தேன்
கடைசியில் என்னை
பிணத்தின் கால்களில்
மலர் வளையமாய்ச் சாத்திவிட்டாய்.

மரபுகளின் பெயரில் ஆண் மேலாதிக்கம் பெண்கள் மீது சுமத்துகின்ற சமுதாய நுகத்தடிகளை
தூக்கியெறிய முன் வரவேண்டும் எனவும் சமூகத்தின் ஒடுக்குமுறைக்குள் வாழநேர்ந்த தமது
சுயமுரண்பாடுகளையும் மிக அழகாக இக் கவிதை காட்டுகிறது

எம்மிடருந்த
எல்லாமே உமக்கு
இடைஞ்சலாய் தோன்றிற்று
எம் உயிரும் உணர்ச்சியும் உடைமையும் கூட

உமது பாதரட்சைத் தோலுக்கு
எம்
முதுகுத் தோல் தேவைப்பட்டது

உமது கொடியைப் பறக்க விட
எம் எலும்புகள்
முறிக்கப்பட்டன
கடைசியில்
நீர் இத்தேசத்தின்
சௌபாக்கிய மனிதராய் இருக்க நாம்
நாடற்று
நாதியற்று


1990 இல் ஈழத்து தமிழ் அரசியலில் ஏற்பட்ட தலைகுனிவு, சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட
ஒரு இனத்தின் அவலம், சொந்த மண்ணிலேயே பாதம் பதித்து நிற்க முடியாது பரதேசிகளாக நிறுத்தப்பட்டுள்ள
அவலம் கவிதையில் தெறிக்கிறது. யாழ் மண்ணையே சொந்த மண்ணாக இருப்பிலும் தமது உணர்விலும்
கொண்டிருந்த யாழ் முஸ்லிம் மக்கள் அந்த மண்ணிலிருந்து விடுதலைப்புலிகளினால் 24 மணி நேரத்திற்குள்
வெளியேற்றப்பட்டார்கள். உணர்வுகளை புதைந்த கவிதையின் வெளிப்பாடு அனைவரினதும் இதயங்களை
குத்தி காயப்படுத்தி விடுகின்றன. எமது சா�த்திரத்தில் நடைபெற்ற இந்த கேடுகெட்ட சம்பவமானது
அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளது. அதை உணர்வுபூர்வமாக இக் கவிதை எடுத்துக்காட்டுகின்றது.
அனாரின் வேதனையை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆழியாள் மிக அழகாக தனது
முகவுரையில் இக் கவிதைபற்றி கூறுகையில் மனிதாபிமானம் கொண்ட நம் ஒவ்வொருவருக்குள்ளும்
ஏற்படும் குற்றவுணர்ச்சியும் வெட்கமும் எம் தலைகளைக் குனியவைப்பது தவிர்க்க முடியாத நிகழ்வாகிறது
என்று. கூறுகின்றார்.
அதேபோல் இன்னுமொரு கவிதையில் அனார் இப்படி விளிக்கின்றார்.

நான் பேசாதிருப்பதனால்
ஊமையென்றோ
உணர்ச்சிகளற்றவள் என்றோ
எண்ணி விட வேண்டாம்

உங்களை திருப்தியிலாழ்த்தும்
பொய்களைப் பேச
நான் விரும்பவில்லை

நான் அமைதியாக இருப்பதனால்
உங்கள் வாக்குறுதிகளை
நம்பிவிட்டதாக
முடிவுகளுக்கு
தலை சாய்த்து விட்டதாக
கருதி விட வேண்டாம்

வாழ்வை
உரிமையை
எந்த விலைக்கும்
என்னால் விற்க முடியாது.

இந்தக் கல்லறை வாசகங்களின் அர்த்தங்களுடன் மௌனங்களை பேசவைக்கும் அனார் வாழ்வும்
வாழ்வின் துயரத்தையும் உறுதியோடு புனைந்துரைக்கின்றார். அனாரின் இக் கவிதை உணர்வுகளை
காயப்படுத்தி விடுகின்றன. கவிதைகளின் உயிர்ப்பை கவிஞர் தொட்டு நிற்கின்றார்.
அதேபோல் மௌனச் சிலுவைகள் என்ற கவிதையில்

நம் நிரந்தரமற்ற ஆசையின்
கடைசி வார்த்தைகளை
உயிர்ப் புல்லாங்குழலில்
நிரப்பிக் கொள்வோம்

நம் உணர்வுக்களுக்கின்று
ஓசைகள் இல்லை
கண்களுமில்லை

முடிவின் ஆழத்தில்
மௌனச் சிலுவைகளில்
எம் இதயத்தின் துடிப்புகளும்
அடங்கிப் போகட்டும்.

என எமது சமூகத்தில் பல பரிமாணங்களுடன் புரையோடிப் போயிருக்கும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும்
இக் கவிதை பொருந்துகின்றது அது மட்டுமல்லாமால் பேரினவாதத்திற்கு எதிரான குரலாகவும் ஒலிக்கின்றது.
இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளும் மூன்றாவது மனிதன், எக்சில், அமுது,
ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர், விபவி, , பெண், தினகரன், நிலம், யாத்ரா போன்ற பல
இலக்கிய இதழ்களில் வெளிவந்தவையாகும். பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத்
தொகுப்புக்கள் என பல வெளிவருகின்றன. அவைகள் பெரும்பாலும் ஆண் எழுத்தாளர்களின்
முகவுரையுடனேயே வெளிவருகின்றன. பெண்மொழிக்காகவும், அதற்காக குரல் கொடுக்கும் பெண் எழுத்தாளர்களின்
தொகுப்புக்கள் கூட பெண் எழுத்தாளர்களின் முகவுரையுடன் வெளpவருவது மிகக் குறைவு. அனாரின்
கவிதைத் தொகுப்புக்கு முகவுரை எழுதியிருப்பது இன்னுமொரு பெண் கவிஞரான ஆழியாள். அது இத் தொகுப்புக்கு
மேலும் வலுச்சேர்க்கின்றது


கவிதை நமக்கு சாதாரண நிகழ்வாகிவிட்டது. ஆனால் எப்போதும் அது அசாதாரணங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது|| அனாரின் கவிதைகளை வாசிக்கும்போது இப்படியாக ஏதாவதொரு மேற்கோளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது. சம காலத்தில் இலங்கையின் முக்கிய பெண் கவிஞர்களுள் ஒருவராக அனார் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது இம்மேற்கோளுக்கான கூடுதல் தகுதி என்று கருதிக் கொள்ளலாம்.

நமது வாழ்வியல் மாறிக்கொண்டு வருவதைப்போல கவிதைகளும் மாறிக்கொண்டு வருகின்றன. ஆனால் வாழ்வியலின் வேகத்திற்கு முன்னே இன்னும் பல மடங்கு குதிரை வேகம் கொண்டு கவிதைகள் ஓடிக் கொண்டிருக் கின்றன. கவிதைகளுக்காக வாழ்வதென்றால் நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வைத் தாண்டி மூச்சுப்பிடித்துக்கொண்டு இன்னும் பல வருடங்கள் வாழ்ந்தாக வேண்டும். அனாரி னுடைய கவிதைகள் ~எனக்கு கவிதை முகம்| முதலில் சொல்லும் சேதி இதுதான்.

இன்றைய வாழ்வு போர், அரசியல், ஆக்கிரமிப்பு, எதேச்சதிகாரம் போன்றவைகளினால் சூழப்பட்டிருக்கிறது. எனினும் இவற்றின் விடுதலையே கவிதைக்குரல் என்றவாக ஒலித்த காலம் சற்று அடங்கிப்போயிருக்கிறது. உரத்து ஒலித்த காலத்தில் மரணத்துள் வாழ்வோம் தொகுதி முதல் மீஸான் கட்டைகளில் மீள எழும்பும் பாடல் வரையான கவிதைக் குரல்கள் ஏராளம். இப்போது போரைத் தின்று வளரும் கவிதைகளுக்குப் பெரும் பஞ்சம் நிலவுகிறது. போர் பற்றிய, போரிடும் நிறுவனங்கள் பற்றிய பல்வேறு அபிப்பிராயங்கள் இக்கவிதைக் குரல்கள் உரத்தொலிக்கச் செய்வதை தடைசெய்திருக்கலாம். அல்லது அப்படி ஒலிக்கச் செய்பவர்களது இருப்பு கேள்விக்குட்படுத்தப் பட்டிருக்கலாம்.

இங்கு, போர்பற்றிப் பாடுகின்ற கவிஞர்களுக்கு அறச்சிக்கலை ஏற்படுத்தி வருகின்றது என அனாரின் கவிதை முகங்கள் முன்னுரையில் சேரன் கூறுகின்றமை முக்கியமானது. இதனூடாக அவர் சொல்ல வருகின்ற அல்லது சொல்ல விரும்பாத சேதி போரைப்பாடுவதினால் எழுகின்ற அறச்சிக்கலா? பாடாததினால் தோன்றுகின்ற அறச்சிக்கலா? என்பதுதான்.

விலைபோகின்ற சரக்காக இருந்தாலும் ‘போர்| அனாரின் கவிதைகளுக்குள் இல்லை. ஒரு காலத்தில் பெண் உணர்வையும் தாண்டி போர் பற்றிய வாழ்வியலே இலங்கைப் பெண் கவிஞர்களுக்குள் இருந்தது போல கிழக்கில் சாய்ந்தமருது எனும் முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் அனாருக்கு போரின் முகங்கள் தொலைவு. சங்கரி, ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை, ஆழியாள் கலா - இன்னும் பிறரும் போராட்டத்தில் இணைந்து கொண்டு ஒரு தொகைக் கவிதைகளை எழுதிய பெண் கவிஞர்;களையும் தாண்டிய அடுத்த கட்டத்தில் அனாரின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. சிலவேளை 90 காலப்பகுதிகளில் அனார் எழுத வெளிக்கிட்டிருப்பாரானால் அவரும் மேற் குறித்த பெண்கள் வரிசையில் சேர்ந்திருப்பார். சிங்கள பேரினவாதத்திற் கெதிராகவும், அது சார்ந்து தன்னுணர்ச்சியாகவும் எழுந்த பெண்களின் குரல்கள் போன்று கிழக்கில் தாண்டவமாடிய தமிழ் ஒடுக்குமுறைக்கான கவிதைகள் பல அவரிடம் இருந்தி ருக்கும். ஆக அனார் இந்த அறச்சிக் கலில் இருந்து தற்போதைக்கு தப்பித்துக் கொள்கிறார். (கவிஞர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கின்றதென்றால் மூதூர் வெளியேற்றம், படுகொலைகள், பள்ளிவாசல் குண்டுவெடிப்புகள், சிங்கள ஆக்கிரமிப்பு போன்றவை பற்றி அனார் கூறாத கருத்துக்க ளுக்கு அவர் தப்பித்துக் கொள்ள முடியாது என்று கொள்வோமாக)அனாரின் கவிதைகள் மொழியின் வசீகரத்தை தாங்கி நிற்பதைச் சொல்ல வேண்டும். அனாரை மறைத்து விட்டுப் பார்த்தால் அதற்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் பெண் மனம், நான் என்று சொல்வதிலுள்ள மென்மை, துணிவு - நீ என்று சொல்வதில் உள்ள கண்டிப்பு, மாயலோலக் காதல், சுட்டு விரல் நீட்டும் அதிகாரம் என்பனவெல்லாம் இங்கு உரத்தொலிக்கக் காணலாம். நான் பெண் என்கிற கவிதை - அனாரின் பெண்மொழி குறித்த பார்வைக்குச் சான்று. பெண் தன் இருப்பை நிறுவ வேண்டிய அவசியம் அனாரின் கவிதைகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வெகுவான ஆணாதிக்க சூழலில் இப்படியாக பெண் தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருப்பது தற்போதைய தமிழகக் கவிதை மரபின் தொடர்ச்சியாகும். தாய்வழிச் சமூக மரபையும், ஆதிபராசக்தியையும், கண்ணகியையும் இணைத்து பாடும் தன்மைக்குச் சமமான இது பெண் படைப்பின் ரகசியம் குறித்த மதங்களின் பார்வைக்கு எதிரானது. ஆனால் பெண்ணுக்குள் இருக்கும் தாய்மை, பொறுமை, இரக்க குணம் என்பவற்றிற்கு மதிப்பளிக்கப் படாத போது அவள் வெளிப்பட்டு நிற்பது,

ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக் கடல்
ஓர் அடை மழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்

எல்லைகளற்ற உலகத்தை சிருஷ்டிக்க விரும்பும் கவிமனம் பொதுவானது என்றால், அந்த உலகம் இன்று கேள்விக்குட் படுத்தப்பட்டிருக்கிறது. அடையாள அரசியலின் அடியாகத் தோன்றிய சிறுபான்மைக் கதையாடல் துண்டாடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் சார்பாக பேச விரும்பியபோது. பொதுமைப்படுத்தப்பட்ட இலக்கிய அடையாளங்கள் தகர்த்தெறியப்பட்டன. விளிம்படையாளமுள்ள சிற்றினங்கள், தலித்கள், பெண்கள் என்றவாறாக சிறு குழுமங்கள் தங்களின் விடுதலைக்காக இலக்கியங்களோடு மேற்கிளம்பினர்;. தமிழகச் சூழல் இக்கருத்தாக்கங்களை முதலில் சிறுவாரியாக ஒதுக்கியும் பின்னர் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளவும் செய்தது. இச்சூழலில் பேசப்பட்ட பெண்ணியம் மிக உக்கிரமான எதிர்ப்புக் கோஷங்களோடு வெளிவந்தது. பெண் அடையாளம், பெண் மொழி, பெண் உடல் குறித்த கருத்துக்கள் தழிலுலகம் காணாத சர்ச்சைகளாகின. மாலதி மைத்ரி, சுகிர்தராணி, குட்டிரேவதி போன்றோரின் கவிதைகள் அச்சர்ச்சைகளுக்குள் விரும்பிப் புகுந்தன. இதே நிலை இலங்கையில் உள்ள பெண் கவிஞர்கள் மத்தியிலும் புகுந்துவிட்டதாக, அவர்கள் தமிழக பெண்களை பாவனை செய்வதாக சுட்டுவிரல் நீட்டப்பட்டது. இப்படி நீட்டப்பட்டவர்களில் அனார் முக்கிய மானவர்.அடிப்படையில் இஸ்லாமியப் பெண்ணான இவரின் கவிதைகளை எப்படி வாசிப்புச் செய்வதென்ற கேள்வியின் பின்னனயில் இக்கருத்தை நோக்கலாம். அனாரின் கவிதைகளில் வெளிப்படும் பெண் உடல், பெண்மொழி சார் கூறுகள் அவரின் ‘காதலைச் சொல்லும் கவிதைகள்’ அல்லது ~விரக தாபக் கவிதைகள்| சார்ந்து எழுந்தது கவனிப்புக்குரியது. இவரின் சில கவிதைகள் சிற்றிதழ்களில், இணையத் தளங்களில் வெளிவந்தபோது அது குறித்து எழுந்த சலசலப்புகள் அதிகமானவை. பிச்சி, பெண்பலி, உரித்தில்லா காட்டின் அரசன், தணல் நதி, அறைக்கு வெளியே அலையும் உறக்கம், ஒளியில்லாத இடங்கள், மேலும் சில இரத்தக் குறிப்புக்கள் போன்ற கவிதைகள் இவ்வகையில் சொல்லக்கூடிய உதாரணங்கள்.

இஸ்லாமியப் பெண் எழுதுகின்ற காதல் கவிதைகள் குறித்த நேர்மையான மதப்பார்வையோ, சமூகப் பார்வையோ இங்கு சரியாக முறைப்படுத்தப்படவில்லை. மாறாக உணர்ச்சி வசப்பட்ட பல கருத்து நிலைகளே இங்குள்ளன. அனாரின் எனக்கு கவிதை முகம் வெளியீட்டு விழாவில் ஆய்வுரை நிகழ்த்திய எம்.ஐ.எம். ஜாபிர் (ஆத்மா) தனக்கு பிடித்த அனாரின் கவிதைகன் இரண்டினை வாசித்துக் காட்டினார். அறைக்கு வெளியே அலையும் உறக்கம், வரு(ந்)த்துதல் என்ற இவ்விரு கவிதைகளையும்; அவற்றின் இனிய ஓசைக்காகவே பிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இது பிரவாகம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாசிப்பு ஓசையுடைய கவிதைகளைத் தேர்ந்து அவர் வாசிப்பதன் பழக்கமாக இருக்கலாம் என்றுபட்டது. ஆனால் இவ்விரண்டும் சீரிய விவாதங்களைக் கோரி நிற்கின்ற கவிதைகள் என்பததையோ, அது எழுப்பும் அதிர்வுகளையோ சொல்ல ஆத்மா வசதியாக மறந்து விட்டார். இதற்குள் ~~இங்குள்ள முஸ்லிம் கவிஞர் களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். இனி எல்லோரும் முஸ்லிம் தேசக் கவிதைகளையே எழுத வேண்டும்|| என்று வேறு கட்டளையிட்டார், இக்கருத்தை முதல்முதலாக தானே சொல்வது போன்ற பாணியில். முஸ்லிம் தேசக் கவிதைச் செயற்பாட்டில் அனார் எங்கிருக்கிறார் என்பது பற்றி எக்கருத்தும் அவர் சொல்லவில்லை. அப்படிச் சொல்வது சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்ற என். ஆத்மாவை அவமதிப்பது போலாகும் என்று நினைத்திருந்தாரோ என்னவோ?அனாரின் காதல் சார் ஃ விரக தாபக் கவிதைகள் பெண்ணின் நூற்றாண்டுகால உள்ளடங்கிய நினைவுகளை மேற்கிளர்த்தும் தன்மையானவை. சங்கப் பெண்கவி தொடங்கி ஆண்டாளின் நிலைபெற்று கொள்ளும் புராணகாலத் தாகம் கொண்டவை. உடலை வெல்லும் போராட்டத்தில் போர்வாட்களையும், கள்ளச் சாவிகளையும் தயாரிப்பவை.

காதலையும் காமத்தையும் கடக்க அவற்றை கொல்லுகின்ற கொலைப்பழியிலிருந்து விடுபட்டு ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்ற நிலை இங்குள்ள பெண் கவிஞர்கள் சிலருக்கு மட்டுமே சொந்தமானவை. ஒரு ஆணின் துணைகொண்டுதான் அவற்றைக் கடக்க வேண்டும் என நினைக்கின்ற இப்பக்குவம் அனாரின் கவிதைகளுக்குப் பின்னால் இருப்பது முக்கியமானது. இது இன்றைய தமிழகப் பெண் கவிஞர்கள் உடலைக் கடப்பது பற்றிப் பேசுகின்ற முறைக்கு எதிரானது. விதி விலக்காக, அனாருடைய ~உரித்தில்லா காட்டின் அரசன்|, ~பிச்சி| போன்றவை இந்த அபாயத்தின் மலையுச்சியில் உடல் தற்கொலைக்காக காத்து நிற்கின்றவை. சுகிர்தராணியின் கவிதைகளில் வெளிப்படை யாகவே வரும் உடலின் விளையாட்டு, கலவி போன்றவை யெல்லாம் அனாரின் கவிதை முகத்திற்குள் தேடிச் சலிக்க வேண்டும். சுகிர்தராணியின் ~உடலெழுத்து| மிக வெளிப்படை யான லெஸ்பியனை நியாயப்படுத்தும் கவிதை. உடலின் மீட்சிக்காக இதுவே வழியென அக்கவிதை பரிந்துரை செய்கிறது. (நீண்ட யுகங்களுக்குப் பிறகு அன்றுதால் என்னுடல் என்னிடமிருந்தது) உடலைக் கடப்பதற்குரிய இந்த உபாயங்கள் எள்ளளவும் அனாரின் கவிதைகளுக்குள் இல்லை. வெறும் ஏக்கங்கள்தான் உண்டு.

கடக்க முடியாமல்
என்முன் தொங்குகின்றது
தணல் நதியாய் இரவு
(தணல் நதி)

விசமேறிய இரவின் பாணம்
என் தாகத்தின் முன் உள்ளது
ருசிகள் ஊறிய கனவுகளுடன்
(அறைக்கு வெளியே அலையும் உறக்கம்)

தனது உடலின் சுதந்திரம் மீறப்படும்போது அனார் சொல்லும் வலிகொண்ட இரவை தின்பதினூடாக பிரதி விடுதலையைக் கோருகின்றது.

வெளிச்சத்தை இருட்டை
தின்று வளர்கிறது கனவு
(வெறித்தபடி இருக்க முடியாது)

நீ இரவைத் தின்பவன்
நான் இரவு தின்னும் இரை
(வரு(ந்)த்துதல்)

நீ வரைந்து காட்டு
அடைய முடியா அந்த இரவை
(பூக்கவிரும்புகின்ற கவிதை)

இப்படியாக ‘இரவுகள்’ அனாரின் கவிதைகளெங்கும் கரியைப் பூசி அலைகின்றன. எல்லாக் கவிதைகளிலும் ஏதோ ஒரு வகையில் இருள் படர்கிறது. அநேக கவிதைகளில் இருளுக்குப் பக்கத்தில் வெளிச்சம் வந்து இருளைத் துரத்துகிறது. அல்லது வெளிச்சத்தின் பிரகாசத்தை உணர்ந்த இருள் பின்னணியாக பதுங்குகிறது.

இருள் அடந்து இறுகி பிசாசுகளின் தோற்றங்களுடன்
மல்லாந்து கிடக்கும் மலைகளை கடந்து செல்கிறேன்
எவ்வளவு பிரகாசம் நீ
(மண்புழு)

இரவு மின்விளக்குகளில்
வெளிச்சம் பூத்துக் கிடக்கிறது
(இல்லாத ஒன்று)

இதமும் புதிரும் பூசிடும்
இருள் பிரியா வைகறை மெல்லப் பதுங்குகிறது
(மனமந்திரம்)

இருள் துவாரங்களுக்குள் விரியும்
உன் வெளியில் வியாபித்தேன்
(நிழலின் அலறல்)

இருளை துக்கமான சகுனத்தின் குறியீடாகவும், துன்பத்தின் குறியீடாகவும் பார்க்கின்ற மரபு சார்ந்த வெளிப்பாட்டு முறையை அனாரின் கவிதைகள் கொண் டுள்ளன. இதனால் இருட்டை விரட்டுவதும், அதைக் கடந்து விடியலை அடைவதும் அவருக்கு பிடித்தமான செயல்களாக மாறிவிடுகிறது. இரவு அவருக்கு வலியைப் போல சுமையாகிறது.

குளிர்மை விரிகின்ற மார்கழி மாத இரவுகளை
அதன் செறிவை, வனப்பை
அதன் மாற்றமுடியா வலியை உனக்கு விட்டுச் செல்கிறேன்
(மாற்ற முடியா வலி)

காதலின் தாகம், அதன் எதிர்பார்ப்பு, கனவு எல்லாமே அந்த இரவுச் சிறைக்குள் அகப்பட்டுக் கிடப்பதாக அனார் உணர்வதும் அடைய முடியா நெடுங்கதவாய் இருள் தூரத்தில் வியாபித்துக் கொள்வதும் சாத்தியமாகிறது. இருளைக் கடப்பது சிறாதுல் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பது போன்றதொரு பணியாகிறது. (சிறாதுல் முஸ்தஹீம் - மறுமை நாளில் உலக மக்கள் அனைவரும் கடக்க வேண்டிய மிக அபாயகரமான பாலம்)
சமயலறையை சிறைக்கூடங்களாக பார்க்கின்ற மரபு இன்றுவரை தொடர்வதாகச் சொல்வதற்குரிய இன்னும் பல சான்றுகள் அனாருடைய கவிதைகளுக்குள்ளும் உண்டு. அரசி கவிதையில்,

ஆணையிடுகிறேன் சூரியனுக்கு
ஒரு இனத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும்
சமயலறையின் பிளந்தவாயைப் பொசுக்கிவிடுமாறு

எனச்சொல்வதில் உள்ள வன்மமும், காதலைக்
கொல்லும் தேவையில்,

அடுப்புச் சாம்பலுக்குள் ஒளித்தாயிற்று
உடைத்த நினைவுச் சின்னங்களை

எனச் சொல்வதில் உள்ள பாதுகாப்புணர்வும் நேரெதிரா னவை. பெண்கள் சமயலறையைக் கைவிட நினைக்கின்ற சூழலில் இன்றைய தொலைக்காட்சிகளில் சமயற்கலை நிகழ்ச்சிகளுக்கே அதிக மௌசு கூடியுள்ளன. வீட்டுப் பெண்கள் பாடக் கொப்பிகளுடன் தொலைக் காட்சி களுக்கு முன்னமர்ந்து எடுத்துக் கொண்டிருக்கும் குறிப்புக்களுக்கு அனார் போன்றவர்கள் நிறைய வகுப்பெடுக்க வேண்டும்.

ஒருமுறை சமையற்கட்டு கவிதைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பரொருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது ~~வீட்டில் தனது மனைவி சமைக்க வேண்டுமென்பதிற்கெதிராக ஹோட்டல்களில் சமையற் காரர்களாக வேலை பார்க்கும் ஒரு தொகைக் கணவன்மார்கள் பற்றிய கவிதைகளும் இங்கு எழுதப்படவேண்டும்||~மேலும் சில இரத்தக் குறிப்புகள்| அனாருடைய கவிதைளின் வெளிப்படைத் தன்மைக்காக பலராலும் ஏதோ ஒரு விதத்தில் பேசப்பட்டது. ஒரு பெண்ணின் எழுத்தில் காணப்படுகின்ற இத்தகைய தன்மை இங்கு எழுதுகின்ற ஆண்கள் பலரின் முகத்தில் விழுகின்ற அடி போன்றது. கொதித்தெழாக் குறையாக சிலர் இது பற்றி முறைப்பாடு செய்ததுமுண்டு. ஆனால் நாம் நினைக்கின்ற அளவுக்கு அக்கவிதை அதிகமான இரத்தத்தைப் பூசிக்கொள்ளவில்லை. இங்கு நடக்கின்ற யுத்தம், வன்முறைகள், கொலைகள் என்பனவற்றைத் தாண்டி மாதாந்தம் வெளிப்படும் இரத்தம் அபாயகரமானதில்லை என்கிறது கவிதை. இரத்தம் ஒரே நிறமென்று நம்பிக் கொண்டிருக்கின்ற பலரது கவனமும் இக்கவிதையின் மூலம் சிதைவடைக் கூடும். இரத்தத்தை உடலோடு சேர்த்துப் பார்ப்பதும், தவிர்த்துப் பார்ப்பதும் முக்கியமானது. யுத்தத்தில், வன்முறையில் வெளிப்பட்டு நிற்கும் இரத்தத்தை அதிர்;ச்சியுற்றுப் பார்ப்பதுபோல் நாம் யாரும் வைத்தியசாலையில் பைந்துக் கணக்கில் தொங்கிக் கொண்டிருக்கும் இரத்தத்தை பார்ப்பதில்லை.

~இரத்தம்| கருணையை, பரிதவிப்பினை
அவாவுகிறது
இயலாiமையை வெளிப்படுத்துகிறது

என்பது இதுதானா எனவும் இன்னொரு வாசிப்புண்டு. வாழ்கை முழுக்க பின்தொடர்ந்து கொண்டிருக்குமு; இரத்தம் சாவின் தடயமாய் அனாருக்குத் தெரிந்ததில் வியப்பில்லை. ஆனால்; ஓரிடத்தில்

வன்கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்

தோன்றுவது கவிதையின் ஓட்டத்தில் மறுவாசிப்பை வேண்டி நிற்கிறது. வன்கலவி புரியப்பட்டவளின் பக்கம் நின்று கவிஞர் ஏன் பேசவில்லை? என மனம் நினைக்கிறது. அப்பெண்ணின் இரத்தம் ஏன் கருணையின் இரத்தமாகத் தோன்றவில்லை? என கேட்கத் தோன்றுகிறது.

கலாச்சாரப் பாதிப்புக்களை இன்றை இலக்கியங்களில் தேடுவது கட்டாயம் போன்றதொன்றாகிவிட்டது. தலித் இலக்கியம், கறுப்பர் இலக்கியம், தென்னமெரிக்க இலக்கியங்கள் தங்களுடைய அடையாளங்களை மீட்டுக் கொண்டே மேலெழும்பின. இன்றைய முஸ்லிம்; தேச இலக்கியமும் இத்தகையதொரு பார்வையை முன் வைக்கத் தொடங்கி ஆழ்ந்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது. பிரதிகளில் ஊடறுக்கும் முஸ்லிம் தேச கலாசாரக் கூறுகள், இன்றைய இலக்கிய அடையாளத்தின் முக்கியமான அம்சமானதும் இதனால்தான். பெருவெளியின் வருகைக்குப் பின்னர் இதுசார்ந்து எழுதுகின்ற ஒரு அணி உண்டாகியிருப்பதைக் காணக்கூடியதாயிருக்கிறது. அனாரின் ~ மண்புழுவின் இரவு| கவிதையில் தூர அகன்ற வயல்களின் நடுவே ~ றபான்| இசைக்கின்ற முதியவரைத் தரிசிக்கிறோம். அல்குர்ஆனின் வசனம் ஒன்றை அடியொற்றி, ~நீளமான நூலாய் தெரிகின்றது இரவு........ தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும் வரை| போன்ற வரிகள் முஸ்லிம்தேச அடையாளத்தின் மீட்புக் குரல்களாக ஒலிக்கின்றன.சிலவேளை அனாரையும் சுகிர்தராணியையும் சேர்ந்து வாசிக்கும்போது கிளர்க்கின்ற உணர்வு ஒற்iயானதாகத் தெரிகிறது. ~~உன் குரலுக்கு இன்று நீ புரவிகளைப் பூட்டவில்லை?|| என்று அனார் கேட்பதற்குப் பின்னால் அக்குரல் ~~சமன் செய்யப்படாத களத்தில் புரவிகளேடு வந்திறங்குகிறாய்|| என ஒலிக்கிறது.

பாணனின் இசையில் அனார் மயங்க, வெட்சிப் பூக்கள் அணிந்தபடி வருகிறார் சுகிர்தராணி. ~~தளர்வான இரவா டையை அணிந்தேன்|| என்பது அனார் என்றால் ~~விரகத்தின் இழைகளால் நெய்யப்பட்ட இரவாடையை நான் அணிந்திருக்கிறேன்|| என சுகிர்தராணி சொல்வது போலிருக் கிறது. தவிர இருள், பனிப்பாறைகள், போர்வாட்கள், குரல்கள், இசை, பாம்புகள் எல்லாமே மிக நெருக்கமாக உலவுகின்றன. இருவரும் சேர்ந்து ஒரு கவிதையை எழுதி விட முனைவது போன்ற பாவனை நம்மை மயக்கத்திலாழ்த்துகிறது.கவிதையை மொழியின் அழகியலில் காணும் தரிசனம் அனாரின் பிரதிகளில் நிறையவே உண்டு. ~மழை ஒவ்வொரு சொல்லாகப் பெய்கிறது|, ~இரு விழிகளைக் கெளுத்தி உயிரூற்றி எழுதுகிறேன் உயிரைக் கொளுத்தி வைத்து விழிகளால் வாசி| போன்றவை இதற்கு நல்ல சான்று.

பெரும்பாலான கவிதைகள் காட்சிப் படிமங்களுடனே விரிகின்றன. அவை யதார்த்தங்களைத் தாண்டிய கனவுகளாக உருக்கொள்கின்றன. இரத்தம் சிந்தாத போர்க்களக் காட்சிகள், பனிப்பொழிவுகள், வர்ண ஜாலங்கள், அரச சாம்ராஜ்ஜியங்கள் எல்லாமே நாம் தரிசிக்க விரும்புகின்ற மாயலோகங்கள். இவையெல்லாம் பின்நவீனத்துவ சாயல் கொண்டது என்றால் இங்குள்ள பேராசிரியர்களும், தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும் கற்களால் எறிவார்களோ தெரியவில்லை.

நேர்காணல்
மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையமாட்டாது’
அனார் பேட்டி

உங்களுக்கு கவிதையின் மீதான ஆர்வம் ஏற்பட்டது எப்படி? அது எப்போது ?

தனிமை நிறைந்த பொழுதுகளிலிருந்து தப்பிக்கின்ற அல்லது தனிமையின் வெறுமையை எனக்குள்ளே வேறொன்றாக மாற்ற முனைந்ததில் இருந்துதான் கவிதை மீதான ஆர்வம் தோன்றி இருக்கலாம். வெளியே இழந்தவற்றை உள்ளே கண்டெடுக்க முயன்றதன் விளைவு என்றும் கூறமுடியும்.

1991இல் ‘தலாக்’ என்ற எனது முதல் கவிதை வானொலி முஸ்லீம் சேவையின் கவிதைச்சரத்தில் ஒலிபரப்பாகியது. அதை அல்-அஸாமத் அவர்கள் தொகுத்து பின்னர் நூலாகவும்; வெளிக்கொண்டுவந்தார். ஆரம்பத்தில் ‘இஸ்ஸத் ரீஹானா’ என்ற எனது இயற்பெயரிலேயே எழுதிக் கொண்டிருந்தேன்.

புதுக்கவிதை, நவீன கவிதை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி கூறமுடியுமா ?

எவை நவீன கவிதைகள் என்பது தொடர்பான சந்தேகங்கள் இன்னமும் இருப்பதையே இக்கேள்வி புலப்படுத்துகின்றது. 1960களின் பிறகு மரபிலிருந்து முற்றாக விலகி தமிழில் கவிதைகள் எழுதப்பட்டன. அதன்பிறகு 1971 - 1975 காலங்களில் அப்துல் றஃமான், மு. மேத்தா, இன்குலாப், வைரமுத்து போன்றவர்களது புதுக்கவிதைத் தொகுப்புக்களால் ஜனரஞ்சகப்பட்ட ஓர் அலை வீசியகாலம் உண்டு. இன்றும் வாரப்பத்திரிகைகளில் இவ்விதமான வசன குறிப்புகள் கவிதைகளாக புளக்கத்தில் இருக்கின்றமையை அவதானிக்கலாம். மரபுக் கவிதைகளுக்குரிய வரைவிலக்கணங்கள், புதுக் கவிதைகளுக்கு பொருந்தாததுபோன்றே, புதுக்கவிதைகளுக்குரிய தன்மைகள் நவீன கவிதைகளுக்கும் பொருந்தாது. நவீன கருத்தியல் நோக்கங்களுக்கு இட்டுச்செல்லும் முறைமைகளை கையாழ்வதன் தொடர்ச்சியில், மரபுரீதியாக வந்த கருத்துக்கள் வலுவிழந்துவிடுகின்றன. ஓர் கவிதையின் முக்கியத்துவம், அதன் வேறுபடும் அம்சம், வெளிப்பாட்டுமொழி, உள்ளார்ந்த பொருள் நுட்பம் போன்றவைகளே கவிதைகளில் நவீனத்தை தீர்மானிப்பவையாக இருக்கமுடியும் எனக்கருதுகிறேன்.

கவிதை என்கின்ற பொது அம்சத்தின் உருவ வித்தியாசங்கள் தொடர்பாக, நவீன கவிதைபற்றி என்னிடம் தனிப்பட்ட கணிப்பீடுகள் இல்லை. வடிவங்களை மீறிய அதன் கருத்துத்தளம், அதன் நுண்மையான கட்டமைப்பு போன்றவற்றிலேயே எனது ஆர்வம் உள்ளது. இந்தவகையில் நவீனத் தன்மையை உள்ளடக்கரீதிதியாகவே நான் அணுகுகின்றேன். எந்த ஒரு காலத்திலும் சரி ‘கவி’யிடமுள்ள நவீன மனம்தான், நவீன கவிதையை படைக்கும். மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையமாட்டாது. நீங்கள் கேட்ட வேறுபாடுகளை இந்தப் புரிதல்களிலிருந்துதான் கண்டுணர முடியும் என நான் நினைக்கின்றேன்.

உங்களது கவிதைகள் சர்வதேச பார்வையை ஈர்த்துள்ளமை முக்கியமானது. குறிப்பாக ‘எனக்குக் கவிதை முகம்’ என்ற உங்கள் தொகுப்புக்கு கிடைத்த வரவேற்பைப் பற்றிச்சொல்லுங்கள் ?

‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பிலுள்ள கவிதைகளின் தனித்தன்மையும் மொழியின் வசீகரமுமே அனைவரையும் ஈர்க்கக்கூடிய காரணம். சில முக்கிய கவிதைகள் அதில் உள்ளன. பெண்ணானவள் தோல்வியை பாடுகின்றவள், துயரமும் இழப்பும் பெண்ணியமும் மாத்திரமே பேசு பொருளாக இருக்க முடியும் என்ற கணிப்பீடுகளை என் கவிதைகள் மீறியிருக்கின்றன.

பேராசிரியர். எம். ஏ. நுஃமான், கவிஞர் சேரன், ‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணன் போன்றவர்களுடைய அக்கறைகளும், எனது தொகுப்பிலுள்ள கவிதைகள் விசாலமான ஓர் உலகை எட்ட காரணமாக அமைந்தன. புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் சிறந்த வரவேற்ப்பைப் பெறுகின்ற கவிதைகளாக அவை கண்டுணரப்பட்டிருக்கின்றன.

இம்மாதம் (ஜுன் 2009இல்) இருவேறு இலக்கிய அமைப்புகளால் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் இலக்கிய ஆய்வரங்குகளில், தமிழ்நாட்டின் முக்கிய படைப்பாளர்களின் படைப்புகளோடு (கவிதை, சிறுகதை, நாவல்) ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பும் ஆய்வுரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

எனக்குக் கவிதை முகம் தொகுப்பில் இருக்கும் முதல் கவிதை ‘மண்புழுவின் இரவு’ அக்கவிதையை எழுதிய அந்த அனுபவம் எப்படியிருந்தது?

இந்த தொகுப்பே எனக்கு முக்கியமான அனுபவமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் நான் வாழ்ந்திருக்கிறேன். சந்தோசமான அனுபவங்களை இத்தொகுப்பினூடாக பெற்று வருகின்றேன். இந்தத் தொகுப்பில் முதல் கவிதைக்கான அனுபவம் பற்றி கேட்டீர்கள்… ஒரு நெடுந்தூரப் பயணத்தின் போது இது வாய்த்தது. இரவு நேரப் பயணம்; எல்லோரும் நித்திரையாகி கொண்டிருந்தார்கள். நான் ஜன்னலைத் திறந்து இரவையும் வானத்தையும் ரசித்துக்கொண்டே வந்தேன். தூங்கவே இல்லை மிக நீண்ட பிரயாணம் அது. அந்தப் பிரயாணம்தான் அந்தக் கவிதையின் அடித்தளம். ‘இரவின் இருளுக்குள்ளே எவ்வளவு பிரகாசம்| என்று இறைவனை நோக்கி எழுதின வார்த்தையாகத்தான் அதை எழுதினேன். தவிரவும் அந்தக் கவிதையில் நமது மதம் சார்ந்த கூறுகளும் சில முஸ்லீம் கலாச்சாரத் தன்மைகளும் வெளிப்பட்டிருக்கும்.

எப்படி ஒரு கவிதையை எழுதுகிறீர்கள்?

இதற்கு ஒரு முடிந்த முடிவு எனக்கில்லை என்றே கூறுவேன். பல சமயங்களில் முதல் சொல்தான் அந்தக் கவிதையையே தீர்மானிக்கிறது. ஆனால் அந்தச் சொல்லை எழுதுவதற்கு முன்னால் நம்முடைய உள் மனத்தில் அதுக்கான விடயங்களெல்லாம் சேகரமாயிருக்கும். அது கனவாக அல்லது காட்சிகளாக அந்த விசயம் உள் மனத்தில் ஒவ்வொரு அடுக்குகளாக இருக்கும். ஒரு கட்டத்தில் கவிதையாக அதை எழுத வேண்டும் என்கிற கட்டம் வரும்போது, அவைகள் வார்த்தைகளாக வந்து விழும். அந்த வார்த்தைகள் வராத பட்சத்தில் அந்தக் கவிதையை நான் நிறைவு செய்ய மாட்டேன். ஒரு கவிதை நிறைவுபெற சில கணங்களோ, ஓரிரு மாதங்களோ எனக்குத் தேவைப்படுகின்றன.

கவிதையில் ஏதேனும் திருத்தங்கள் அல்லது சில வார்த்தை மாற்றங்களை மேற்கொள்பவரா நீங்கள்?

நிச்சயமாக. கவிதை எழுதுவதிலும் தொழில்நுட்ப ரீதியாகச் சரிசெய்யவதிலும் நிறைய ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் செய்யக் கூடியவள் நான். ஒரு பிரதியிலேயே அதை முழுதாகச் செய்ய முடியாது. எனக்கு நானே சில சமயங்களில் சவாலாக இருப்பேன். எனக்குத் திருப்தி ஏற்படும்வரை அந்தக் கவிதையை நான் சரிசெய்து கொண்டும் திருத்தி எழுதிக்கொண்டும்தான் இருப்பேன். பல தடவைகள் அவ்வுணர்வை இசைத்து விடுபடலாமா அபிநயங்கள் செய்யலாமா வரைய முடியுமா என்றும் யோசிப்பேன். சில நேரங்களில் மொழி வெறும் சூன்யமாகவும் இருக்கும்.

நீங்கள் சென்ற ஆண்டு மேற்கொண்ட இந்தியப் பயணம் பற்றி கூறுங்கள் ?

சார்க் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இளம் கவிஞர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஒரிசா சென்றிருந்தேன். அது முழுக்க முழுக்கக் கலையுணர்வு சார்ந்த இடம். திரும்புகிற பக்கமெல்லாம் ஒரு விதமான கலையைத் தேக்கி வைத்திருக்கிறது. புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் மற்றும் பசுமையான இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டோம். பெண் ஆளுமையான கவிஞர் மனோரமா பிஸ்வால் வசிக்கின்ற நிலத்தைப் பார்த்ததும் … அந்த நிகழ்வில் அவரை நேரில் பார்த்ததும் சிலிர்ப்பான அனுபவமே. ஓரிசாவின் பழம்பெரும் கவிஞராக மதிக்கப்படும் சீதாகாந் மஹாபோத்ராவுடன் உரையாடக்கிடைத்தமை அளப்பெரிய வாய்ப்பாகும்.

‘தமிழை’ உச்சரித்த ஒரே ஒரு நபராக நான் இருந்தேன். 3 நாள்கள் தொடராக அவ்விழா இடம்பெற்றது. பல்வேறு ருசிகளுடைய நவீன மற்றும் பாரம்பரியமான உணவு வகைகள் தரப்பட்டிருந்தன. 8 நாடுகளிலிருந்து வந்த கவிஞர்களுடன் கவிதைகள் வாசித்தேன். நமது படைப்புகளுக்கு வேறொரு நாட்டில் கிடைக்கின்ற வரவேற்பென்பது உற்சாகமூட்டக் கூடியதுதானே.

இவ்விதமான பெருமிதங்களுக்குள்ளே விசேடமாக நீங்கள் குறிப்பிட விரும்புவது யாரை ?

எனது வெற்றிகளுக்குப் பின்னால் நிச்சயமாக ஓர் ஆண்தான் இருக்கிறார். எனது கணவர் அஸீமைத்தான் முதலில் கூறமுடியும். அவர்தான் எனது முதல் தொகுப்பை தன்கரங்களாலேயே தொகுத்து டைப்செய்து அச்சிட்டு எனக்கு பரிசளித்தார். எனக்கு அச்சங்களில்லாத ஒரு எழுத்து உலகம் சாத்தியமாகியது. அஸீமின் உன்னதமான மானுடப் பண்புதான் எனது அனைத்துப் பெருமிதங்களுக்கும் காரணமாகின்றது. தவிர அக்கறையம் நட்பும்மிக்க தோழமைகளின் ஊக்கமும் இதனுள் அடங்கும்.

கவிதைகள் மூலம் சாதிக்க விரும்புவது என்ன ?

எனக்கென்று சில ஒழுங்குகளை தீர்மானங்களை கொண்டிருப்பவள் நான். சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எனது ஆரம்ப எழுத்து தொடங்கப்படவுமில்லை. முதலில் நான் எனக்கென்று தான் எழுதுகின்றேன். அவை சில வெற்றிகளை தந்திருக்கின்றன. இவற்றை சாதித்துவிட்டதாக நான் கருதுவதுமில்லை.

கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா? நாவல், சிறுகதை என்று வேறு இலக்கிய வடிவங்களில் உங்களுக்கு ஆர்வமில்லையா ?

ஓரிரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். நாவலோ சிறுகதையோ இனிமேல் எழுதுவேனா என்பது பற்றி திட்டமாக எனக்கு கூறமுடியாது. நாவல் வாசிப்பதும் சிறுகதை வாசிப்பதும் எனக்கு விருப்பமானதாகத்தான் இருக்கின்றன.


முஸ்லீம் பெண் என்ற வகையில் உங்களது கவிதை பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை பெருமை தரக்கூடிய விடயமல்லவா ?

ஆண்டு 11 தமிழ் இலக்கியப் புத்தகத்தில் ‘வன்மப்படுதல்’ என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கு நவீன கவிதைகளின் பரிச்சயத்தை ஏற்படுத்துவது மிகச் சிறப்பான நோக்கம்தான்.

உங்கள் பிரதேசத்தில் பெண்களது கல்வி வளர்ச்சி பற்றி குறிப்பிடுங்கள் ?

எனது ஊரான சாய்ந்தமருது, தற்போது பெண்கள் கல்வியில் மிக சிறப்பான உயர்வடைந்து வருகின்றது. எல்லாப்பெண்களும் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். எனது ஊரைப்பொறுத்தவரை நான் பெருமிதமாக மூன்று பெண்களை குறிப்பிட்டு கூறவிரும்புகிறேன். அதில் இலங்கையின் முதலாவது பயிற்ப்படட பெண் ஆசிரியை பாத்துமுத்து கலால்தீன், தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் முதலாவது முஸ்லீம் பெண் பல்கலைக்கழக வேந்தர், ஏ. எல். என். மைமுனா இலங்கையின் முதலாவது முஸ்லீம் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி. இவ்விதமாக பெண்களை ஊக்குவிக்கக்கூடிய ஊரினில் பிறக்கும் வாய்ப்புக்கிடைத்தமை எனக்கும் பெருமிதம்தானே.

உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?

ஒரு பெண் என்பவள் தன்னுடைய வாழ்க்கையில் தடைகளையே அதிகம் சந்திக்கின்றாள். இதில் வியப்படைய எதுவுமில்லை. தடைகளுக்குள்ளேயும் இடர்களுக்குள்ளேயும் அவள் தனது கனவை வாழ்வது அல்லது வென்றுவிடுவது என்பதுதான் முக்கியம். ஓர் ஆளுமையுள்ள பெண் இவ்விதமான சந்தர்ப்பங்களினால் அதிகம் வலுவூட்டப்படுகின்றாள் என்பதே என்னுடைய கருத்தும் அனுபவமுமாகும்

Monday, January 18, 2010

கேயாஸ் தியரி


கேயாஸ் தியரி (chaos theory ) புனைவாளர்களுக்கு அறிவியல்
துறை தந்த கொடை என்றே நினைக்கத்தோன்றுகிறது.

கேயாஸ் தியரி என்றால்? ஒரு மிகச்சிறிய நிகழ்வு, காரணம்-விளைவு (cause –
effect) சுழற்சியில் சிக்கி, காலப்போக்கில் மிகப் பெரிய மாற்றத்தை
உண்டாக்கும் சாத்தியக்கூறு உண்டு. இதை இப்படி விளக்குவார்கள் -

“அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் வண்னத்துப்பூச்சியின் சிறகசைப்பில்
உண்டாகும் காற்று, காலப்போக்கில் பெசபிக் பெருங்கடலில் புயலாய்
மாறலாம்.”.

இதை வண்ணத்துப்பூச்சி விளைவு (butterfly effect) என்பர்.

இதையொட்டி எடுக்கப்பட்ட இரு படங்களை சமீபத்தில் கண்டேன். ஒன்று ஆங்கிலப்
படம். Butterfly effect என்று பெயர்.

ஒர் இளைஞனின் சிறுவயதில் பல துயரமான சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. (குற்ற
உணர்வினால் ஒரு நண்பன் நடைபிணமாகிறான், கொடூரமான தந்தையின் வளர்ப்பினால்
ஒரு நண்பன் sadistஆக மாறிவிடுகிறான், தோழி தற்கொலை செய்துகொள்கிறாள்).
ஒரு நாள், அவனால் அவனது வாழ்வின் முக்கிய கணங்களுக்கு பயணம் செய்ய
முடியும் என தெரிய வருகிறது. சிறுவயதில் அந்த பயங்கரங்கள் நிகழ்ந்த
அக்கணங்களுக்கு சென்று அதை நிகழாமல் தடுத்து விட்டால், பிறகு
எல்லாவற்றையும் சரியாக்கிவிடலாம் என எண்ணுகிறான். இங்கு தான் butterfly
effect வேலை செய்கிறது. அவன் செய்யும் ஒரு சிறு மாற்றம் கூட,
அந்நால்வரின் வாழ்வையே முற்றிலும் மாற்றி வேறோர் பயங்கரத்திற்கு
வித்திட்டு விடுகிறது. ஒவ்வொரு முறையும் இதுவே நிகழ்கிறது. கடைசியில்
எப்படி இச்சுழற்சியில் இருந்து மீள்கிறான் என்பதனை காலத்தின் முன்னும்
பின்னும் ஊஞ்சல் ஆடுவதை போன்றதொரு யுத்தியை கொண்டு
சொல்லியிருக்கிறார்கள்.


இப்படத்தை விளக்குவது கொஞ்சம் கடினம். அதுவும் எனக்கு கோர்வையாய் (அல்லது
கோவையாய் – சரிதானே இரவா? ;) ) வேறு எழுத வராது. அதனால் நான் குழப்பியதை
எல்லாம் மறந்துவிட்டு படத்தை டிவிடியிலோ வேறு எப்படியோ
பார்த்துவிடுங்கள்.

இப்படத்தை பற்றிய மேலதிக விவரங்களுக்கு:

http://www.imdb.com/title/tt0289879/

இதை போன்ற இன்னொரு படம் “ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு” (The
Beating of a Butterfly’s Wings). இது ஒரு ப்ரென்ச் மொழி படம். ஆங்கில
உலகில் happenstance என்ற பெயரில் திரையிடப்பட்டது.

பல்பொருள் அங்காடி பணிப்பெண். சகாரா பாலைவனத்தின் மணல். மனைவிக்கும்
கள்ளக்காதலிக்கும் இடையே சிக்கித்தவிக்கும் ஒருவன். பொய்சொல்வதில்
வல்லவன் ஒருவன். அல்ஜீரிய எழுத்தாளன். பாரிஸ் நகரத்து வண்டு.
முதிர்கண்ணி. ஓர் கூழாங்கல். முதலுதவி நிபுணன். சாக்லேட்.

சம்பந்தமே இல்லாத இவர்களின்/இவற்றின் ஒரு நாள் நிகழ்வை பற்றிய படம் இது.
ஒருவரின் ஓர் சிறு செய்கை மற்றவரின் வாழ்வினை முற்றிலுமாக
மாற்றிவிடுகிறது. கொஞ்சம் அசந்தாலும் குழப்பிவிட்டு ஓடிவிடக்கூடிய
கருத்தாக்கம் இது. தேர்ந்த திரைக்கதையினை கொண்டு இதனை நன்றாகவே
வடித்துள்ளார் இயக்குனர்.


இப்படத்தை பற்றிய விவரங்கள் இங்கே :

http://www.imdb.com/title/tt0243135/

Butterfly effect, காலத்தின் மீதான கேயாஸ் தத்துவ விளைவுகளை பற்றி
பேசுகிறது. Happenstance சம்மந்தமில்லாத 12 மனிதர்களின் நிகழ்வுகளின்
விளைவை பற்றி பேசுகிறது.

பேசுதல் அதற்கின்பம்


தமிழேறு பதிப்பகம் மிகச்சிறப்பாக வெளியிட்டு வரும் இலக்கிய முன்னோடிகள் நூல் வரிசையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் நூல், மு. முத்தையன் எழுதிய “பேசுதல் அதற்கின்பம்”. இந்நூல், தமிழிலக்கிய வரலாற்று நோக்கில் மிக முக்கியமான நூலாகும். அரை நூற்றாண்டு காலம் உலக இலக்கிய சூழலில் மிக முக்கியமான வடிவமாக இருந்த கலவை இலக்கியம் என்ற இலக்கிய வடிவத்தின் விதையாக திகழ்ந்த நூல் இது.

இந்நூலின் இலக்கிய மதிப்பீடுகள் குறித்து நிறையவே எழுதப்பட்டுவிட்டன. இந்த நூல் தமிழக இலக்கிய பரப்பில் செலுத்திய தாக்கத்தினை குறித்து இந்த சிறு கட்டுரையில் ஆராய விரும்புகிறேன். முதலில் சுருக்கமாக இந்நூலினை குறித்து பேசுவோம். 2035ஆம் ஆண்டு பேசுதல் அதற்கின்பம் வெளியானது. சங்க இலக்கிய பாடல்களில் இருந்து துணுக்குகளை அடுக்கி அடுக்கி செய்யப்பட்ட ஆக்கம் இந்த நூல். குறுந்தொகை தலைவி ஒருத்தியின் கேள்விக்கு நெடுநல்வாடையின் தலைவன் பதிலளிப்பான். அவனது பதிலை புறநானூற்று ஔவை மறுப்பாள். இந்த வடிவத்தில் 40 அத்தியாயங்களில் (ஒவ்வொரு அத்தியாயமும் ஓர் உணர்வை முன்வைக்கிறது) எழுதப்பட்ட நூல் இது. நூலின் முன்னுரையில் முத்தையன் கூறுகிறார் -

“என் இளமை பிராயம் முதல், சங்க இலக்கிய பாடல்கள் என்னுடன் உரையாடுவதாகவே எனக்கு தோன்றும். ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் பாணனும் பாணினியும் தோழனும் தோழியும் செவிலித்தாயும் தலைவனும் தலைவியும் என்னை நோக்கி ஏதோ சொல்வதாய்ப் படும். மனதினுள் நானும் அவர்களுடன் உரையாடுவேன். திடீரென ஒரு நாள் தோன்றியது, இந்த பாடல்கள், அதன் மாந்தர்கள், அதன் பருவநிலைகள், விலங்குகள், விழாக்கள் என யாவும் தத்தமக்குள் உரையாடினால் என்ன ஆகும்? இந்த எண்ணம் உதித்ததும், பாடலின் வரிக்கட்டுக்களை மீறி வெளியேற துடிக்கும் சிறைகைதிகளாக மாறிவிட்டனர் பாடலில் குடிகொண்ட அனைவரும். அவர்களை விடுவிக்கும் முயற்சியே இது.”

இன்று, வடிவ ரீதியிலும் வாசகப்பங்கேற்பு விகிதத்திலும் (reader participation ratio) பின் தங்கிய படைப்பாக இந்நூல் பார்க்கப்படுகிறது. எனினும், இரண்டு விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒன்று, கலவை இலக்கியம் அதன் வடிவ நேர்த்தியை கண்டடையும் முன்பே வெளிவந்த படைப்பு இது. உதாரணமாக பிற்கால கலவைக்கட்டுரைகளின் உரைகல்லாய் திகழ்ந்த வாசக பங்கேற்பு விகிதம் போன்ற கருத்தாக்கங்கள் இந்நூல் உருவான காலத்தில் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இரண்டாவதாக, இன்று மரபணு வரலாற்றியல் என்னும் அறிவியல் துறையின் வளர்ச்சியினால், நாம் ஆயிரக்கணக்கான சங்ககால பாடல்களை மீட்டெடுத்துள்ளோம். ஆனால், இந்த நூல் எழுதப்பட்ட பொழுது சங்க இலக்கிய பாடல்கள் என்று வெறும் 2700 பாடல்களையே கூறிவந்தார்கள். இந்த 2700 பாடல்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படைப்பு இன்றைய எந்த கலவை இலக்கிய படைப்பினோடும் ஒப்பிடக்கூடியதே என்பது எனது துணிபு.

முதன்முதலில் வெளியிடப்பட்ட போது இதை எந்த வகைமைக்குள் அடைப்பது என்பது தான் பெரிய பிரச்சனையாக இருந்திருக்க வேண்டும். தமிழ் இலக்கிய சமூகம் இந்நூலினை மிக மௌனமாகவே முதலில் எதிர்கொண்டது என கணிக்க ஆதாரங்கள் இருக்கின்றன. 2035ல் வெளிவந்த நூலினை பற்றிய குறிப்பிடும்படியாக எழுதப்பட்ட முதல் கட்டுரை, மரவன்புலவு எழுதிய “பேசுதல் அதற்கின்பம் – வெட்டி ஒட்டுதல் கலை ஆகுமா?”. இது 2040ல் வெளியானது. ஐந்தாண்டு கால மௌனம். கட்டுரையில் நூலினை, அதன் அடிப்படையை மிக உக்கிரமாக நிராகரிக்கிறார் மரவன்புலவு. ஆனால் இந்நூலின் கலைமதிப்பு, அழகியல் ஆகியவை பெருவாரியான வாசகர்களை ஈர்த்தன என்பதை இக்கட்டுரைக்கு வந்த மறுப்புரைகள் காட்டுகின்றன. நோபல் பரிசு பெற்ற புனைவாளரான மிலோராட் பாவிச்சின் நாவல்களில் இருந்து உருவாக்கப்பட்ட “Tea with the Khazars” என்ற ஆங்கில கலவை நாவலை அமெரிக்க தமிழர் செந்தூரன் 2041ல் வெளியிட்டார். கலவை இலக்கியம் (Collage Literature) என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியது இவரே. இந்நூல் ஐரோப்பாவில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் கிட்டத்தட்ட 20 குறிப்பிடத்தக்க கலவை இலக்கிய நூல்கள் வெளியாயின. 2042ஆம் ஆண்டு பேசுதல் அதற்கின்பம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை Conversations across bariers (பெரும்பாலும், ஏ.கே. ராமானுஜனின் சங்கபாடல்களின் ஆங்கில மொழிப்பெயர்புகள் பயன்படுத்தப்பட்டன) என்ற பெயரில் வெளியிட்டார். இன்று உலக இலக்கிய சூழலில் தமிழ் மிக முக்கியமான இடத்தினை பெற்றிருப்பதற்கு இந்த மொழிபெயர்ப்பு ஒரு பெரும் காரணமாகும். இம்மொழிபெயர்ப்பை தொடர்ந்து பல தமிழ் நாவல்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. 2060ல் செந்தூரனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது நிகழ்த்திய உரையில் முத்தையனை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழ் சமூக வரலாற்றில் இந்நூலின் தாக்கத்தை குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். தமிழகம் தனி நாடாக உருவானது தமிழர் வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வு. கடந்த நூறு ஆண்டுகளில் இந்நிகழ்வின் சமூக தாக்கங்கள் குறித்த பல்வேறு முக்கியமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இந்நோக்கில், தனி நாடு பிரகடனத்திற்கும், பேசுதல் அதற்கின்பம் நூல் வெளியீட்டிற்கும் உள்ள தொடர்பும் ஆய்வுக்குரியதே.

இத்தனை வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நூல் கடந்த 40 ஆண்டு காலமாக புழக்கத்தில் இல்லை. நாம் எந்த அளவிற்கு வரலாற்றுப்பிரக்ஞையற்று இருக்கின்றோம் என்பதற்கான சான்று இது. இதை வெளியிட்டதன் மூலம் தமிழேறு பதிப்பகம் தமிழ் சமூகத்திற்கு ஓர் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, January 09, 2010

அவதார் -ன் அவதார்ரைரானிக் படம் வெளிவந்து சுமார் 12 வருடங்கள் கழித்து அதே இயக்குனரின் படம் வெளிவருகின்றது. இதற்கு முன்பு இவர் இயக்கிய குறிப்பிடத்தக்க படங்கள் True Lies. Terminator, Terminator 2: Judgment Day போன்றவை. ரைரானிக்குப் பின் சில விவரணத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். 12 வருடங்கள் என்பது நீண்ட காலமே. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் 1954ம் ஆண்டில் ஜேம்ஸ் கமரோன் பிறந்தார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் தொழில்நுட்பரீதியாக பிரசித்தி பெற்றவை.

அவற்றார் 2-D, 3-D- RealD 3D, Dolby 3D, IMAX 3D ஆகிய அமைப்பு முறைகளில் வெளியிடப்பட்டது. படத்தின் தயாரிப்புச் செலவான சுமார் 310 மில்லியனின் அரைவாசி அதாவது 150 மில்லியன் விளம்பரத்துக்காக செலவிடப்பட்டது. மொத்தச் செலவு 460 மில்லியனாகின்றது. இப் படத்துக்கான திட்டம் முதலில் 1996ல் உருவானது. இதில் பேசப்படும் நாவி மொழியை உருவாக்கியவர் பிரபல மொழியிலாளர் Dr. Paul Frommer. இவர் தென் கலிபோனியா பல்கலைக் கழக பேராசிரியர் ஆவார். சுமார் ஆயிரம் வார்த்தைகளை கொண்ட மொழியாக உருவாக்கப்பட்டது. இந்த மொழி உருவாக்கத்தில் எதியோப்பிய மொழியான Amharic ம் பாவிக்கப்பட்டது. இந்த Amharic, Semiticயு என்ற மொழிக் குடும்பத்தில் ஒன்று. இந்த மொழிக் குடும்பத்தில் அரபிக், Tigrinya, Hebrew ஆகிய மொழிகள் உள்ளன. கி.மு 2000 ஆண்டளவில் இந்த மொழிக் குடும்பம் மெசத்தோமியா பிரதேசத்தில் பிரசித்தி பெற்றது. அத்துடன் நியுசிலாந்தின் பூர்விகக் குடிகளின் மொழியான Māori பாவிக்கப்பட்டது. www.naviblue.com என்ற இணையத்தளத்தில் நாவி மொழியின் அகராதியை காணலாம்.

அவதாரம் – விஷ்ணு பல அவதாரங்களில் தோன்றினார். கிருஸ்ணன், கல்கி, பரசுராமன், ராமன், நரசிம்மன் போன்றன இவரின் அவதாரங்கள் என கூறப்படுவதுண்டு. இதன் அடிப்படையில் தான் நாவி என்ற இனம் உருவாக்கப்பட்டதாக இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இப் படத்தை இயக்குவதற்கு கமரோன் virtual camera system பயன்படுத்தினார். இது ஒரு திரையில் படமாக்கும் காட்சிகளை உடனுக்குடன் நெறியாக்க உதவும். இப் படம் படமாக்கும் பொழுது ஸ்பில்பேர்க், ஜோர்ஜ் லூக்காஸ் ஆகியோர் தளத்திற்கு சென்று இந்த தொழில் நுட்பத்தை பார்வையிட்டுள்ளனர். இதன் தொழில் நுட்பம் பற்றி தனி ஒரு கட்டுரையே எழுதலாம்.

படம் 144 வருடங்களின் பின்னர் அதாவது 2154ல் சூரியனில் இருந்து 4.37 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள Alpha Centauri நட்சத்திரக் குடும்பத்தில் உள்ள பன்டோராவில் கனிமங்களை ஆர்.டி.ஏ என்ற நிறுவனம் அகல்கின்றது. பன்டோராவில் unobtanium என்ற கனிமம் அதிகளவில் உள்ளது. இதன் விலை மிக, மிக உயர்வு. இங்கு வாழ்பவர்கள் நாவிகள். பத்தடி உயரம், நீல நிறம் கொண்டவர்கள். இவர்களின் கடவுள் சக்தி Eywa என்ற பெண் கடவுள். புன்டோராவில் வாழ்வதற்கு விசேட வாயுக் கருவிகள் தேவை. எனவே விஞ்ஞானிகள் டி.என்.ஏ என்ற நிறமூர்த்தத்தைக் கொண்டு நாவியை போன்ற உடலைக் கொண்ட உடலை தயாரிக்கின்றனர். கூடு விட்டு கூடு பாயும் முறையே இங்கு பாவிக்கப்படுகின்றது. விஞ்ஞானக் குழுத் தலைவி Dr. Grace Augustine (Sigourney Weaver). மற்றொரு விஞ்ஞானி Norm Spellman (Joel David Moore). இவர்களுடன் இணையவருகின்றார் Jake Sully (Sam Worthington) இவர் ஒரு கால் இல்லாதவர். இவரை முதலில் தலைமை விஞ்ஞானி ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார். பின்னர் ஒன்றுமே செய்ய முடியாமல் ஏற்றுக் கொள்கின்றார். இவர்கள் மூவரும் நாவிகள் வாழும் கிரகத்தினுள் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையில் நாவிகள் உருவம் பெற்று செல்கின்றனர்.. அங்கு இவர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதலில் ஜேரி தனித்து விடப்படுகின்றார். ஜேரிக்கு பெண் நாவியான Neytiri (Zoe Saldana) உதவி செய்கின்றார். நாவிகளின் தலைமைப் பீடம் ஜேரிக்கு தங்களது முறைகளை கற்பிக்குமாறு நேரிக்கு உத்தரவிடுகின்றது. RDA ன் பாதுகாப்பு பிரிவு தலைவன் ஜேரி நாவியின் முறைகளை வெளிக்கொணர்ந்தால், ஜேரிக்கு மீள கால் பெற உதவி செய்வதாக கூறுகின்றார்.

ஜேரிக்கும், நேரிக்கும் நெருக்கம் அதிகமாகின்றது. நாவியினர் ஜேரியை தங்களில் ஒருவராக கருதுகின்றனர். இதற்கிடையில் ஆர்.டி.ஏ குழுவினர் தாய் மரத்தையும் நாவியினரையும் அழித்து கனிமங்களை கைப்பற்ற தயாராகின்றனர். ஜேரியுடனான விஞ்ஞானக் குழு இதனை எதிர்க்கின்றது.இந்த ஜேரிக் குழு எவ்வாறு நாவியினரை ஆர்.டி.ஏ குழுவினரிடமிருந்து காப்பாற்றுகின்றனர் என்பதே படத்தின் மிகுதிப் பகுதி.

இயற்கைக்கும் நாவியினருக்குமான நெருக்கம் அதிகம். புத்தரின் போதனையான “எல்லாவற்றிக்கும் தொடர்புண்டு” என்ற கருத்துப் பட வாழ்கின்றனர். நாவியினர் ஆல மரம் போன்று தோற்றமளிக்கும் மரங்களை கடவுளுக்கு சமானமாக கருதுகின்றார்கள். இதலிருந்து பல பயன்களை பெறலாம் என நம்புகின்றனர். தங்களது சுயநலன்களுக்காக இயற்கையை அளிக்கும் மனிதனின் பயணம் இங்கிருந்து ஆரம்பமாகின்றது.

இப் படத்தின் கரு பல படங்களை நினைவூட்டுகின்றது. இதனை கமரோனும் ஒத்துக் கொள்கின்றார். At Play in the Fields of the Lord , The Emerald Forest, Dances With Wolves, Cry Freedom, The Last Samurai, District 9 ,Battle for Terra போன்ற படங்களை நினைவூட்டுகின்றது. ஓணாய்களுடன் நடனம்(Dances With Wolves) என்ற படத்தில் இப் படத்தில் வருவதைப் போல் பூர்விக இந்தியர்களை வெள்ளையர் ஒருவர் காப்பாற்றுகின்றார். அதே போல் Cry Freedom என்ற படத்திலும் ஸ்ரீவ் பைக்கோ (Steve Biko) என்ற கறுப்பு நிற சுதந்திர வீரரின் சிறை மரணத்தை வெளி உலகிற்கு, தனது உயிரை துச்சமாக மதித்து Donald Woods என்ற வெள்ளையர் வெளிக் கொணர்கின்றார்.

இப் படத்திலும் நாவியினரை வெள்ளையரே காப்பாற்றுகின்றனர். இது வெள்ளை மேலாதிக்க மனோபாவத்தை தான் வெளிப்படுத்துகின்றது. பூர்விக இந்தியரை பெருமளவில் கொன்று குவித்து அவர்களது கலாச்சாரத்தை அழித்த பெருமை இந்த வெள்ளையரைத்தான் சாரும்.

அங்கெல்லாம் பூர்விக இந்தியரை காப்பாற்றியதாக, வெள்ளை இன கதாநாயகர்கள் பற்றிய எந்த பதிவுமே இல்லை. வெள்ளையர் ஒருவர், வெள்ளையரல்லாதவரின் முறைகளை நன்கு தெரிந்திருந்தால். அவரால் அவ் இனக்குழுவுக்கு தலைமை தாங்க முடியும். அவ் இனக் குழுவினரை விட இவரால் அவர்களுக்கு தலைமை தாங்கி சிறப்பாக செயல் படமுடியும் என்ற மாயையை இப் படம் தோற்றுவிக்கின்றது. இது இலகுவாக காலனித்துவ மனோபாவத்தில் உள்ள மக்களிடம் சென்றடைகின்றது. அவர்களிடம் Middle Class Fear (பயம்), முதலாளித்துவ சிந்தனை, வெள்ளை அடிமைத்தனம் நிரம்பி காணப்படுகின்றன. வெள்ளையர்களால் தான் உலகை காப்பாற்ற முடியும் என்ற மனோபாவத்தை பிரச்சாரம் செய்யும் நோக்கமே இங்கு வெளிப்படுகின்றது.( காந்தி படத்தில் காந்தியாக ஒரு வெள்ளையர் நடித்துள்ளார். இதனைத் தான் இந்தியர்களும், வெளிநாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன)


படத்தில் உள்ள மனித இனத்தில் ஒரு விஞ்ஞானியையும், ஒரு கறுப்பின இராணுவத்தினரையும் தவிர மற்றவர்கள் அனைவரும் வெள்ளையரே.அந்த கறுப்பின இராணுவ வீரனும் ஒரு தலையாட்டி பொம்மையை போல் தான் உள்ளார். மறுபுறம் நாவி இனத்தவர்கள் மனித மிருகங்கள் போல் தோற்றமளிக்கின்றனர். படம் இரு உலகத்தை காட்டுகின்றது. ஒன்று இந்த வெள்ளை உலகம். மற்றையது நாவிகளின் உலகம். இங்கு தான் நாங்கள் உள்ளோம். கமரோனின் இந்த வேறுபாடுக்கு காரணம் என்ன? நாவிகளின் மொழித்தோற்றம் ஆபிரிக்க, ஆசிய பூர்விகக் குடிகளின் மொழிச் சொற்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது. நாவிகளின் நம்பிக்கைகள், வழக்கங்கள் அனைத்துக்கும் அடிப்படை இந்திய புராணங்கள். Neytiriன் தோற்றம் நீல நிறம், சீன முகவாடையுடன் கூடிய அனுமானின் உடல். அடிப்படையில் நாவியினர் ஆசிய, ஆபிரிக்க மக்கள். நாவியினர். கிருஸ்ணரின் நிறத்தை கொண்டவர்கள். படத்தின் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் அந்நியப்படுகின்றோம்.

மறுபுறம் கமரோனின் வெள்ளை நிற காலனித்துவ குற்ற உணர்வின் வெளிப்பாடே இப் படம் எனலாம். இப் படத்தை அமெரிக்காவின் கதை என சில விமர்சகர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா – ஈராக் கதையா? இ;ல்லை அமெரிக்கா உருவாகிய கதையா? கொலம்பஸ் என்ற கொலை-கொள்ளைக்காரனின் குழுவினர் முதலடியும், முதல் கொலையும் செய்ய, தொடர்ந்து பிரித்தானியர். பிரென்ச், போர்த்துக்கீசா , வட-லத்தீன் அமெரிக்காவை முழுமையாக கைப்பற்றி விட்டனர். இப் பிரதேசத்தில் எந்த ஒரு பூர்விக குடியினது, கலாச்சாரத்தையும், அவர்களையும் காணமுடியாதவளவிற்கு கொலை செய்து விட்டனர். எனக்கு இது இலங்கையின் கதை போல் தோன்றியது. எங்களை ஆண்டு, எங்களை சுரண்டிவிட்டு, எங்களுக்குள் தங்களை புகுத்தி விட்டு சென்று விட்டார்கள். இன்று வரை அவர்கள் புகுத்திய மேலாதிக்க மனோபாவத்தால் அவர்களது அடிமை போல் செயற்படுகின்றோம். மற்றொரு புறம் எங்களை ஆண்ட அரசுகளும், அவை அமைந்த விதத்தையும் பார்க்கும் பொழுது அவர்களும் இதனையே செய்துள்ளார்கள். ரோம, கிரேக்க, இந்து, மொகாலய, அக்பர் சாம்ராச்சியங்கள் இவ்வாறே அமைந்துள்ளன.

மேற் கூறிய விமர்சனங்களுக்கு அப்பால் கமரோன் சுரண்டலை சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளார். பயங்கரவாதம் என்ற பெயரிலும், உலகமயமாதல், தேசிய இனப்பிரச்சினையின் சமாதான தூதர் என்ற பெயரிலும் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுகின்றன.அப்படிக் கூறுவதை விட சூறையாடுகின்றன. இன்று உலகில் ஆங்கிலத்தை தலைமையாகக் கொண்ட ஸ்பானிஸ் உடபட்ட மொழிகளே ஆட்சி மொழியாக உள்ளன. ஆங்கிலம் தெரியாத நாடு உலகில் எதுவுமில்லை எனலாம். இவர்களது கலாச்சாரம் உலகெங்கும் உள்ளன. படத்தில் காட்டப்படும் கிரகம் ஓர் மூன்றாம் உலக நாடு. இவர்களிடம் சண்டை பிடிக்க பராம்பரிய ஆயுதங்களை தவிர வேறெதுவும் இல்லை.

சமூகத்துக்கும், கூட்டுத்தாபனத்துக்குமான வேறுபாடுகளை இப் படம் சிறப்பாக பதிவு செய்துள்ளது. தனியார் கூட்டுத்தாபனங்களின் சுய நல, லாப நோக்கின் அரக்கத்தனத்தை இங்கு காணலாம். இவர்களை பாதுகாக்க உள்ள முன்னால் படை வீரர்களும் இதனையே செய்கின்றார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் சுனுயு நிறுவனத்தின் கொலை வெறி சிறப்பாக வெளிப்படுகின்றது. இதனை அரசுடனும் ஒப்பிடலாம். பூமி வாழ் மக்கள் நிறுவனவயப்படுத்தப்பட்டுள்ளார்கள். கூட்டுத்தாபனங்கள் என்ன செய்கின்றதோ அதனைத் தான் பெரும்பாலான அரசுகள் செய்கின்றன. அரசுகளை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டுத்தாபனங்கள் உள்ளன.

விஞ்ஞானிகளும், வியாபாரிகளும் சமூகத்தை வௌ வேறு கோணங்களில் பார்க்கின்றார்கள். விஞ்ஞானியைப் பொறுத்தவரை புதிய கண்டுபிடிப்பு என்பது மனித இனத்தின் அடுத்தபடிக்கான மற்றொரு அத்தியாயம். வியாபாரிக்கு அடுத்த முதலீட்டிற்கான புதிய கதவு. விஞ்ஞானம் ஆக்க பூர்வமானது. புல புதிய கண்டு பிடிப்புக்கள். பல நன்மைகள் உண்டு. இதனை அழிவுக்கும் பயன் படுத்தலாம். கூடு விட்டு கூடு பாயும் விஞ்ஞான விந்தையால் நன்மைகள் உண்டு. அதனையே இந்த கூட்டுத்தாபனங்களும் . அரசுகளும் அழிவுக்கும், சுய நலத்துக்கும் பாவிக்கின்றன. அணு குண்டைப் போல். இயக்குனர் ஒரு பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் . (. technology in and of itself is not evil, but there is a great potential for evil in the human misapplication of technology)

படத்தின் சிறப்பம்சம் சமூகம், கூட்டுத்தாபனம், தொழில்நுட்பத்துக்குமான வேறுபாட்டை காட்டுவதே. இயக்குனரின் ஆரம்பத்தில் இருந்தே படத்தின் அரசியலை மறுத்துள்ளார். இவரது அனைத்து படங்களும் தொழில்நுட்பம் மிகுந்தவை. இவர் Digital Domain என்ற நிறுவனத்தின் முன்னால் தலைமை அதிகாரி.

யதார்த்தமற்ற சூழலுக்கு யதார்த்த வடிவம் கொடுக்க சினிமாவால் தான் முடியும். கவிதையில், கதையில் சம்பவங்களை கற்பனை செய்து பார்ப்பது போலல்லாது நேரில் எம் கண்முன்னே நடக்கின்றன. படம் இரு பாத்திரங்களிடையே பயணிக்கின்றது. ஒன்று தொழில் நுட்பம், இரண்டாவது கதை. காலனித்துவத்திற்கு எதிரான கதை புதிய தொழில் நுட்பம் மீது பயணிக்கின்றது. பார்வையாளனுக்கு தொழில் நுட்பத்தின் மீது ஏற்படுத்தும் ஈர்ப்பு, கதையின் மேல் ஏற்படாது. இயக்குனரின் நோக்கமும் இதுவே. இதனால் தான் வெற்கப்படவேண்டிய பார்வையாளன் புன்னகைத்தபடி வெளியேறுகின்றான். ( People need to be reminded from every direction. Maybe people want to go see a film for pure entertainment, and not want to think about it and not have to feel guilty ௲ I’m not trying to make people feel guilty) ) இது இயக்குனரின் ஒரு பேட்டிக் குறிப்பு.)

பர்தா என்ற நாவல் ஒரு பிரமாண்டமான ஆயுதம்

பர்தா என்ற நாவல் ஒரு பிரமாண்டமான ஆயுதம் ------------- நான் ஆரம்ப காலத்தில் ஒரு முஸ்லிம் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண...