Monday, May 02, 2016

தஸவ்வுப் என்றால் என்ன?

தஸவ்வுப் என்றால் என்ன?
தஸவ்வுப் என்பது இரண்டு செயல்களுக்குரிய பெயராகும்.
01.   ஷரீஅத்தின் கடமைகளை தளர்ச்சியின்றி உறுதியாகப் பின்பற்றுவது.   
02.    மக்களுடன் இணங்கி சகவாழ்வு வாழுதல்.
ஷரீஅத்தில் உறுதியாக நின்று கொண்டு மனிதப் பண்புகளை வெற்றி கொள்பவர்தான் ஸூபி ஆவார்.அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் ”இஸ்திகாமத்” இருக்க வேண்டும்.இஸ்திகாமத் என்பது தனது விருப்பங்கள்சந்தேகங்களை அல்லாஹ்வுக்காகத் தியாகம் செய்வதாகும்.மக்களுடன் சகவாழ்வு வாழுதல் என்பதுமக்களுடன் சுயநலத்துடன் பழகாமல் பொது நலத்துடன் பழகுவதாகும்பொது நலனுக்காக தனது விருப்பங்களையும்நலனையும் ஷரீஅத்தின் எல்லையில் நின்று கொண்டு அர்ப்பணிப்பதாகும்.

இஸ்லாத்தில் உலமாக்கள், சூபியாக்கள் என்ற இரு சிறந்த வகுப்பினர் இருக்கிறார்கள். இவ்விரு வகுப்பினர்களும் எப்போது தோன்றினார்கள்? எப்படி உண்டானார்கள்? எதற்காகத் தோன்றினார்கள்? என்பதே கேள்வியாகும். (மௌலவியும் சூபியும்) கண்ணியமிக்க ஸஹாபாக்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் (ரிஸாலத்) என்னும் சூரியனில் இருந்து வெளியாகும் எல்லா ஞானக் கதிர்களையும், எந்த இடைத் தொடர்புமின்றி ஒவ்வொரு முஸ்லீமும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருப் போதனையின் மூலம் ஒவ்வொரு மனிதனும் அங்கு வெளிரங்கமான கல்வியிலும் ஷரீஅத்தின் (அமல்கள்) கோட்பாடுகளாலும் சிறந்து விளங்கினர். அங்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் (சுஹ்பத்) என்ற் உறவு கூட்டு இவைகளின் மூலம் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி சுத்தகரித்து(இல்மே பாதின்) அந்தரங்க அகமிய கல்விகளாலும் நிரம்பி இருந்தனர்.

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இக் கடமைகளைச் செய்வதோடு திக்ரு(தபக்குர்) இறைச் சிந்தனை (முராகபா) என்னும் நிஷ்டையிலும் சிறந்து காணப்பட்டனர். வெளிரங்க, அந்தரங்க இரு கல்விகளிலும் சேர்ந்திருந்ததின் காரணத்தால் அவர்களுக்கு மத்தியில் அமல் அடிப்படையில் மௌலவி என்றும், சூபி என்றும் எந்தப் பிரிவினர்களும் இருந்ததில்லை. மாறாக, அஸ்ஹாப் அல்லது ஸஹாபா என்ற பெயரைத் தவிர்த்து வேறு எந்த பெயரும் நிலவவில்லை.

சில சஹாபாக்கள் சில குறிப்பான அமல்களின் காரணத்தினால் மற்ற ஸஹாபாக்களைவிட சிறந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். உதாரணமாக அஸ்ஹாபே ஸுப்பா என்ற திண்ணை சஹாபாக்கள் தங்கள் வீடு,வாசல்கள் உலக அலுவல்களையெல்லாம் ஒதுக்கி துறவறத்தில் சிறந்து விளங்குவது இதற்கு தெளிவான ஆதாரமாகும். அவ்வாறு இருப்பினும் கூட ஸஹாபாக்களுக்கு மத்தியில் எந்த பாகுபாடோ, வித்தியாசமோ இருக்கவில்லை.

அதன்பின் சங்கைக்குரிய தாபியீன்கள் காலம் வந்தபோது இந்த ஆலிம்-சூபி வெளிரங்க, அந்தரங்க கல்விகளின் தனித்தன்மைகள் வெளியாக ஆரம்பித்தன. அதற்கு பி;ன்பு தபவுத்தாபியீன்களின் காலத்தில் இவ்விரு கல்விகளின் வேறுபாடுகள் இந்த அளவு உண்டாயின. உண்மையில் இதுவே வெளிக்கல்வி என்ற பெயர் உருவான் காலம். இது நபித்துவத்தின் இரண்டாம் நூற்றாண்டாகும்.

அதற்குப்பின் ஷரீஅத் சட்டங்களை தொகுத்து நூல் வடிவில் எழுதும் காலம் வந்தது. மேலம் புனிதமான ஷரீஅத்தைப் பரப்பும் பணி அதிகமானபோது, அமலின் அடிப்படையில் இரு வகுப்பினர்களில் வேறுபாடுகள் கொஞ்சம் அதிகமாயின. ஆகவே எந்த வகுப்பினர்; பிக்ஹு மற்றும் ஷரீஅத் சட்டங்களை தொகுக்கவும், பரப்பவும் பாடுபட்டார்களோ அவர்கள் உலமாக்கள்(இமாம்கள்) என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். பின்பு அவர்களாலும் சில தனித்தனி கலைகளைக் கவனித்து(முஹத்திதீன்கள்) நபிமொழி விற்பன்னர்கள் என்றும் (புகஹா) சட்டமேதைகள் என்றும், திருமறை விரிவுரையாளர்கள் என்றும், இதுபோன்ற பெயர்களால் புகழப்பட்டார்கள். எனினும் அப்புனிதர்கள் வெளிரங்க கல்விக்குப்பின் தங்களது முழு மூச்சுடன்- அந்தரங்க சுத்தி- உளத்தூய்மைக்குரிய காரியங்களில் ஈடுபட்டார்கள். அவர்களே மஷாயிக் -ஞான வழிகாட்டி என்றும் சூபிய்யா அகத்தொளி பெற்றவர்கள் என்றும் போற்றப்பட்டனர். ஆக தன் அகத்தை சுத்திகரித்து தெளிவுபடுத்தும் வழிக்குத்தான் -தஸவ்வுப்- என்று பெயர் வந்துள்ளது.
அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களத நூலில் மிகத் தெளிவுபட பல விஷயங்களை கூறிவிட்டு, எவர் தன் உள்ளத்தை அல்லாஹ்வின் ஞாபகத்திலேNயு வைத்து இறைவனை மறக்கச் செய்யும் எந்தப் பொருளும் உள்ளத்தில் நுழைந்து விடாமல் பாதுகாத்து கொண்டிருப்பவர்கள்தான் அஹ்லெ சுன்னத்தில் உள்ள ஞானவான்கள். இவர்கள் தங்களுக்கு தஸவ்வுபை உடையவர்கள் என்று நாமம் சூட்டினர். மேலும் இந்த தஸவ்வுப் என்னும் பெயர் அப்புனிதர்களுக்கு ஹிஜ்ரி 200-ல் இருந்தே பிரபலமாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மௌலவி, முல்லா என்னும் பெயர்கள் ஸஹாபாக்கள் காலத்தில் இல்லாதது போன்று சூபி, தஸவ்வுப் என்னும் பெயர்களும் ஸஹாபாக்கள் காலத்தில் இருக்கவில்லை. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே பிரபலமாயின!

சூபி என்ற பெயரை காமிலீன்களான மஷாயிகுமார்களுக்கு அதிகமாகச் சொல்லப்பட்டது. ஞானப்பாட்டையில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு சூபி என்றும பலருக்கு சூபிய்யா என்றும் அம்மேதைகள் சென்றடைந்த வழியில் நடைபோட ஆரம்பித்த ஒருவருக்கு முதஸவ்விப் என்றும் பலருக்கு முதஸவ்விபா என்றும் சொல்லப்பட்டுள்ளது என் அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

சூபி எனும் வார்த்தை சூப்(கம்பளி) என்னும் வார்த்தையில் இருந்து பிரிந்தது. காரணம் அம்மேதைகளில் அதிகமானோர் வெளி அலங்காரமான அழகிய உடைகளை அணியாமல் திக்கான ஆடைகளையும், கம்பளி ஆடைகளையும் அணிந்திருக்கிறார்கள் என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மற்றும் சிலர்கள் சூபி என்னும் வார்த்தை சவ்ப் என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது. காரணம் அம்மகான்கள் உலக ஆசாபாசங்கள் சுருங்கக் கூறின் அல்லாஹ் அல்லாத அனைத்தையும் விட்டு அல்லாஹ் அளவிலே தன்னை திருப்பி அவனியிலேயே அர்ப்பணித்து கொண்டார்கள் என்று கூறுகின்றார்கள்.
முடிவாக் இவர்கள் அனைவர்களும் இறைவன் கட்டளைக்கு முற்றிலும் வழிபட்டு அல்லாஹ்விற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். மௌலவி, முல்லா, ஆலிம் இவர்கள்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் போதனைகளைச் செய்கிறார்கள். சூபியாக்கள் இஸ்லாத்திற்கும், குர்ஆன் ஹதீதுக்கும் மாறுபட்டவர்கள் என்று கூறித்திரியும் சில குதர்க்கவாதிகள் அம்மஹான்களின் வரலாறே தெரியாதவர்கள் எனக் சுறலாம். உலமாக்கள், சூபியாக்கள் என்ற இரு குழுவினர்களும் நுபுவ்வத் என்னும் மரத்தில் பிரிந்து வந்த இரு கிளையாகும் என்பதே உண்மையாகும்.

உலமாக்கள்(இல்மே லாஹிர்) வெளிரங்க கல்வியையும், ஷரீஅத் சட்டத்தையும் போதிப்பவர்களாக இருக்கின்றனர். அதைப் போன்று சூபியாக்கள் (இல்மே பாதின்) அந்தரங்க அகமியக் கல்விகளையும், தரீகத்தின் சீரிய முறைகளையும் போதிக்கின்றனர். ஷரீஅத்தின் உலமாக்கள் குர்ஆன் ஹதீதுகளிலிருந்து மார்க்க சட்டங்களை போதிக்கின்றனர்.

சூபியாக்கள் அந்தரங்க(பைஜ்) அருளின் மூலமாக உள தெளிவு பெற்று ஷரீஅத்தின் பிம்பங்களாக காட்சி அளிக்கின்றனர். இரு வகுப்பினர்கள் போதனைகளும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஞான ஊற்றிலிருந்து பொங்கி வரும் அமுதங்களாகும்.

தற்காலத்தில் அறிஞர்கள் என்ற பேர்வையில் திரியும்ஒரு சில புல்லுருவிகள் இறைவனின் அருள் பெற்ற நாதாக்களின் நடைமுறைகள் எல்லாம் இஸ்லாமிய வீரர்கள் இந்தியாவை வெற்றி கொண்ட பின்னர் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்தபின் இங்குள்ள இந்து யோகிகளுடன் பழகியபின் அவர்களின் நடைமுறைகளை எடுத்துக் கொண்டார்கள். இந்த சூபியாக்களின் நடைமுறைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மிக தைரியமாக கூறுகின்றனர்.
அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:- இந்த தஸவ்வுப் என்னும் மெய்ஞ்ஞான கல்வியுடைய நாதாக்கள் இல்லாத ஒரு காலம் கூட இஸ்லாத்தில் இருந்திருக்கவில்லை என குறிப்பிடுகின்றனர்.
அல்லாமா அபூ தாலிபுல் மக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது கூதுல்குலூப் என்னும் பெரும் நூலில் வரைந்துள்ளார்கள். அதாவது ஷரீஅத்தின் சட்டமேதைகளான புகஹாக்களுக்கு ஏதாவதொரு மஸஅலாவில் சந்தேகங்களோ, சிக்கல்களோ ஏற்பட்டு திகைப்பு உண்டானால் உடனே அக்காலத்தில் உள்ள ஞான மேதைகளான சூபியாக்களிடம் சென்று அச்சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவேதான் சட்டமேதை ஷாபிஈ வலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏதாவதொரு சட்டங்களில்,மஸ்அலாவில் சிக்கல் ஏற்பட்டால் ஞானமேதைகள் இருக்கும் இல்லங்களுக்குச் சென்று கேட்டு, அம் மஸ்அலாக்களின் தெளிவைப் பெற்றுக் கொள்வார்கள். குறிப்பாக இறைஞானத்தை எவர் உதவியுமின்றி இறைவனின் மூலம் பெற்ற உம்மீயான மாமேதை ஷைபானுர் ராபீ லரியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அதிகம்,அதிகம் சென்று படினமான சட்டங்களின் சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள்; என குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆக, இத்தகைய மேதைகள் ஒவ்வொரு காலத்திலும், இரக்கவே செய்கின்றனர். எனவே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் என் உம்மத்தினர் ஒரு சிறிய கூட்டத்தினர் சத்தியத்தின் மீது நிலைத்து இருப்பார்கள். அவர்களின் விரோதிகள் எவரும் எந்த தீங்கும் செய்ய முடியாது என சிலாகித்துக் கூறியுள்ளார்கள். இத்தகைய மேதைகளின் வரிசையில்தான் மாபெரும் மெய்ஞானி சுல்தானுல் ஆரிபீன் கௌதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், சுல்தானுல் ஆரிபீன் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் , அபுல்ஹசன் ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்வலியுல் காமில் அப்துல் கரீம் ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களின் ஞானகுரு குத்புஸ்ஸமான் பதருத்தீன் படேஷா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களால் இக்காலத்தில் நேர்வழி காட்டும் குத்பும், முஹ்யித்தீன் இப்னு அரபியுமாக இருக்கிறார்கள் என்று புகழப்பட்ட மாமேதையுமான குத்புஸ்ஸமான், இமாமுல் ஆரிபீன்சுல்தானுல் வாயிழீன், ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் சூபி ஹஜ்ரத் ஹைதராபாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களின் பிரதான கலீபாவும், காயல்பட்டணத்தில் பிறந்து சிலோனில் துயில் கொண்டிருக்கும் எனது ஆன்ம குருவும், இன்னும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் குரு பிரானும் ஞானக் கருவூலங்களை மக்களுக்கு அள்ளித்தந்த மகானுமாகிய வலிய்யுல் காமில் மௌலானா மௌலவி அல்ஹாஜ் C.A.K. ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி சித்தீகி பாஜிலே நூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இன்னும் இது போல நாதாக்களுகம் இடம் பெறுகின்றனர்.அல்லாஹ் நம் யாவர்களின் இதயங்களையும், இம் மான்களின் பரக்கத்தாலும், பைஜின் மூலமாகவும் ஒளி பெறச் செய்து அம்மான்களின் அடிச்சுவடுககளை பின்பற்றி நடந்து முக்தி பெற்ற நல்லோர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!

தற்கலை ஞானமாமேதை பீர் முகமது வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி

1


இஸ்லாம் அகிலமெல்லாம் பரவியபிறகு அந்தந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் வாழ்வியலிலும் வழிபாட்டிலும் மார்க்கச் சட்டங்களைப் பின்பற்றி வந்தாலும் கலாச்சாரப் பண்பாட்டு முறையில் தங்கள் பகுதியின் சமூக நாகரீகத்திற்குட்பட்டே வாழ்ந்து வருகிறார்கள். உணவு, உடை, மொழி, சடங்கு, சம்பிரதாயங்களில் இவற்றை காணமுடிகிறது. இவை மேலோங்கி இஸ்லாம் முற்றிலும் மாறுபட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிடாமலிருக்க "ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் 
புதுப்பிக்கக்கூடியவர்கள் (முஜத்திதுகள்) தோன்றுவார்கள்" என பெருமானார் அவர்கள் நவின்றுள்ளார்கள். 

சூஃபியாக்கள் அல்லது ஞானிகள் என்றழைக்கப்படும் வலிமார்கள் இறைவணக்கத்தோடு நின்றுவிடாமல் அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி வளர்ச்சியிக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். மக்களின் அறிவுத்தாகத்திற்கேற்ப இறைவிளக்கங்களை அள்ளித்தந்திருக்கிறார்கள். அரபியில் மட்டுமல்லாது வட்டார மொழியிலும் புலமை பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தமிழைப் பொருத்தவரை அவர்களின் பங்கு மகத்தானது; வரையறைக்கு அப்பாற்பட்டது. ஆனால் தூரதிருஷ்டவசமாக அவைகள் மறைக்கப்பட்டன; இன்று மறுக்கப்படுகின்றன.

தமிழ் புலவர்கள் விட்டுச் சென்ற மரபைத் தொடர்ந்து இறைநேசர்களான சூஃபிப் பெரியார்களும் மஸ்தான்களும் பக்திச்சுவை சொட்டச்சொட்ட இறையுணர்வில் தன்னை மறந்து இன்பலயத்தில் எண்ணிறந்த மெஞ்ஞானப் பாக்களைப் பாடியுள்ளனர். 

ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பற்ற இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே தலைசாய்க்கவேண்டும்; தான் என்ற அகந்தையை மாய்த்து ஏகனின் அடைக்கலம் அடையவேண்டும்; அண்டசராசரங்களுக்கும் அதிபதியான அவனின் அடிமை என்ற எண்ணம் 
எப்போதும் இருக்கவேண்டும்; தன்னிடம் ஒன்றுமே இல்லை, தான் ஆட்டுவிக்கப்படுபவன், எல்லாம் அவனே என்ற மாறாத உணர்வு எந்தகாலமும் இருந்துக்கொண்டே இருக்கவேண்டும். அவனே உள்ளத்தில் குடி இருக்கிறான், உலகத்தின்மேல் அருள் மழை பொழிகிறான்; உயிர்பிக்கிறவனும் அவனே, மரிக்கச் செய்பவனும் அவனே; சுருங்கச் சொன்னால் 'தௌஹீது' என்பது அல்லாஹ்தான் என்ற உண்மையில் ஊறித் திளைத்த ஞானிகளில் ஒருவரான பீர் முஹம்மது அப்பா அவர்கள் தாம் பெற்ற நம்பிக்கையை நம் நெஞ்சிலும் பதிக்கின்றார்கள் இங்கே..

"தந்தையிலி தாரமிலி தானவனு நீயே
தன்மைகொ டெவர்க்குமொரு தாபரமு நீயே
மைந்தரிலி யன்னையிலி மன்னவனு நீயே
மண்ணிலடி யார்க்கிரணம் வழங்குவது நீயே
சிந்தைதனி லிடறுதனைத் தீர்த்தருள்வை நீயே
தேட்ட மறிந்தெனக்குதவி செய்பனு நீயே
அந்தமிலி நீயெனக்கோ ரிழிவு வராமல் 
ஆதியே நானுன் னடைக்கலம தானேன்" (1)

இஸ்லாமியப் புலவர்கள் இறைவனையும் அவனின் தூதர் பெருமானார் ரசூல்(சல்) அவர்களையும் புகழ்ந்து பாடுவதோடு நிறுத்திவிடாமல் சித்தர்களாகவும் இறை பித்தர்களாகவும் இருந்து அகமியத்தை, அகமியத்தின் ரகசியத்தை அள்ளித் தந்திருக்கிறார்கள். அத்தகைய சித்தர்கள் குணங்குடி மஸ்தான் சாஹிபு(ரஹ்) அவர்களும் தக்கலை பீர் முஹம்மது அப்பா(ரஹ்)அவர்களும் இன்னும் சிலருமாவார்கள்.

சித்தர்கள் என்றாலே இரும்பைப் பொன்னாக்கும் வித்தையைக் கற்றவர்கள் என்ற நம்பிக்கை பாமரர்களுக்குமட்டுமல்ல படித்தவர்களுக்கிடையேயும் இருந்து வந்தது; இன்னமும் இருந்து வருகிறது. ஆனால் இரும்பு போன்ற இதயத்தைப் பொன் போன்று மாற்றவைப்பவர்கள் என்ற எண்ணம் மட்டும் இல்லை. இவர்கள் பஞ்சை மனிதர்களுக்கு எப்பாலை ஊட்டத்தவறினாலும் 
ஞானப் பாலை மட்டும் ஊட்டத் தவறியதே இல்லை. ஆனால் ஒரு சங்கடம்! எதனையும் நேரிடையாகச் சொல்லாமல் யாவற்றையும் மறைமுகமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி பரிபாஷை சொற்களால் அலங்கரிக்கப்பட்டு படிப்பவர்கள் மயக்கமேற்படும் வகையில் அமைந்திருக்கும். இத்தகைய சொற்களிலிருந்து வரும் கருத்துக்கள் புடம்போட்ட பத்திரைமாற்று தங்கம்போல் துலங்கும். ஆனால் அவற்றின் உட்கருத்தைப் புரிந்துக்கொள்வது எளிதான காரியமன்று. இரும்பை தங்கமாக்கும் இரசவாதாம் எத்துனைக் கடினமானதோ அதைவிடக் கடினமானது அதன் உண்மைப் பொருளை அறிவது. இந்த இரசவாதம் அகமியத்தை மட்டுமே உணர்த்துகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

புறச்சடங்குள் இல்லாது அகமியத்தை அடையமுடியாது என்பதால் புறச்சடங்குகளைப் பற்றியும் அவற்றின் செயல்முறைகள் பற்றியும் அங்காங்கே விளக்கியுமிருக்கின்றார்கள். அண்டகோடிகள் படைக்குமுன்பாக 'கன்ஜு மஃக்ஃபி' என்றழைக்கப்படும் மறைவான பொக்கிஷமாக இருந்த இறைவனை, அவன் நிலைகளை, அவன் பண்புகளை அப்பா அவர்கள் விளக்குகிறார்கள் 'பிஸ்மில்க்குறம்' என்ற ஞானப்பாவில்.

"ஆதிபெரியோனே றப்பில் ஆலமீனேயாதி
அஹதுநிலைசமதாக ஆலநிரைந்தோனே
அஹதியத்திலுஹதியத்தும் வாகிதத்துமாகி
அரூபவுரூபத்துள்ளே தானல்லவோதாத்து
தாத்தல்லவோ பாத்தினது லாகிறுசிபாத்து
லாகிறுக்குள் பாத்தினானான் ரகசியத்தின் பொருளே...."

உலகிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் அருவமாக இருந்து நடத்தப்படுகிறதுதான் தாத்து என்றும் தாத்தை பாத்தின் - மறைவானது என்றும் சிபத்தை லாஹிர் - வெளிப்பாடானது என்றும் வெளிப்பட்ட பொருட்களில் மறைவாக இருப்பது மகா ரகசியமாக இருக்கிறது என்றும் நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் பொருள்படுத்துகிறார்கள்.

அவர்களின் வரலாறு அவர்களின் பாடல்கள்மூலமாகவே அறியமுடிகிறதே தவிர வேறு வகையில் அறியமுடியவில்லை. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அல்லது மாதிஹர் ரசூல் சதக்கத்துல்லா அப்பா (1632 - 1703)காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை கீழ் வரும் பாடல்மூலம் அறியமுடிகிறது.

"நினைவுடன் பொருளு நிறைந்திடும்வகைநீதீயும் பிசுமிலினோடே
அனந்தமுந்தெரிய அஹுமதருரைக்க ஆதிதன் கிருபையினாலே
கனசயமாரும்மவுலானாறூமி கழறினார் அகதியத்ததிலே
மனதுமகிழ அறிவையுமறிந்து வழுத்தினார்சதக்கத்துல்லாவே"

நினைவில் கலந்திருக்கின்ற எல்லா ஞானப் பொருள்களையும் கூட்டித் திரட்டி, பிஸ்மில்லா என்கிற திருநாமத்துடன் நமது நபிகள் நாயகம்(சல்) அவர்கள் அருளிச்செய்தார்கள். அதை ஒன்றாகத் திரட்டி ஹலரத் மௌலான ரூமி(ரஹ்) அவர்கள் தமது மஸ்னவி ஷரீஃபில் சொன்னார்கள். அதனை ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் மொழி பெயர்த்துச் சொல்ல அதை எனது ஞானமணிமாலை, மஃரிபத்துமாலை முதலிய நூல்களுக்குச் சரிபார்த்து உலகத்தார்கள் விளங்கிக் கொள்ளும்படியாக குறமாகப் பாடினேன். (2) 

"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான் - வெங்காயம் 
சுக்கோ சிவனிருப்பன் சுரோணிதமோ வல்லவிஞ்சி
ஹக்கோவென் றுள்ளறிந்தக் கால்"

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் சிறுமலுக்கர் என்பாரின் செல்வப்புதல்வராகப் பிறந்து இறைவனின் தன்மைகள் யாவையும் தன்னிடத்து வருவித்துக்கொண்டவர்கள். அவனில் தன்னை நுழைத்துக்கொள்ளும் நுட்பமான ஞானத்தைப் பெற்றிருந்த ஹுசைன் மன்சூர் ஹல்லாஜ்(ரஹ்) அவர்களின் வழிமுறையில் வந்துவிட்டவர் என்று பறைச்சாற்றுகிறார்கள். 
இஞ்சி, நீரும் ஈரமும் பெற்றுள்ளது, அது உலர்ந்துவிட்டால் சுக்காக மாறிவிடுகிறது, அதற்கு என்றும் அழிவில்லை. ஐம்புலன்களையும் அடக்கியாண்டு தூங்காமல் தூங்கி, சாகாமல் செத்து சமாதி நிலை எய்துவிடுகிறவர்களை அந்த சுக்குக்கும் மற்றவர்கள் அனைவரையும் வெறும் இஞ்சியாகவும் பரிபாஷை மூலம் காட்டுகிறார்கள் அப்பா அவர்கள்.


2


எல்லாம் வல்ல அல்லாஹ் தனது படைப்புகளுக்கு வழங்கியுள்ள பெரும் பேறு இஸ்லாம் எனும் உயரிய நெறியாகும்இஸ்லாம் என்னும் அறபுச் சொல்லுக்கு சரணடைதல்,அடிபணிதல்சாந்தி அல்லது அமைதியுறல் எனப் பொருள்கொள்வர்இஸ்லாம் மனிதனின் ஆன்மிக ஆற்றலை மிக உன்னதநிலையில் எடுத்துக்காட்டும் எழிலார்ந்த நெறிமனிதனை படைப்பினங்களில் சிறந்த படைப்பு என்றும்இவ்வுலகில் இறைவனின் பிரதிநிதி என்றும் கூறுவது சிந்தனைக்குரியதுதெய்வீகமான தன் அமரத்துவ ஆத்மாவை எவன் தன் ஊடுருவிப் பார்க்கும் மெய்யறிவால் ஊடுருவிப் பார்த்து தனக்குள் தானே தன் தலைவனைக் கண்டுகொள்கிறானோ அவனே சம்பூரண இலட்சிய மனிதனாவான் என்ற அல்லாமா இக்பாலின் கருத்து அருள்நெறி இஸ்லாத்தின் அழகிய நோக்கத்தைப் புலப்படுத்துகிறது .சம்பூரணமான மனிதனை சமைத்துக் காட்டும் பெரும் நெறியே இஸ்லாம் ஆகும்மார்க்க விஷயத்தில் முதன்மையானது அல்லாஹ்வை அறிவதாகும்.என்பது செம்மல்  நபி ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம் அவர்களின் சீருரையாகும்அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் அறிவுக்கே ஞானம் என்று கூறுவர் ஆன்றோர்அருள்மறை குர்ஆன் அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கே ஞானத்தைக்கொடுக்கிறான்ஆதலால் எவர் கல்வி ஞானம் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாகஅநேக நன்மைகளைப் பெற்று விடுவார்.  ஆயினும் இந்த ஞானக்கல்வியைக் கொண்டு அறிவாளிகளைத்தவிர மற்ற எவரும் உணர்ச்சி பெற மாட்டார்கள்” என அல்குர்ஆன் (2:269) தெளிவுபடுத்துகிறதுஞானம் எளிதாகக்  கிடைக்கும் கடைச் சரக்கல்ல. அசைவுறா  உள்ளமும், அயர்விலா முயற்சியும் , தளர்விலாப் பயிற்சியும் ஞானம் பெற இன்றியமையாதன. ஞான மாமேதைதக்கலை தந்த தவசீலர் ஞானம் பற்றி கவிதைகளில் நயமுடன் நவின்றுள்ளார்கள்அது ஞானம் பெற விழைவோர்க்கு விருந்தாக அமைகின்றது. அப்பா அவர்களின் ஞானக் கோவையில் பிஸ்மில் குறம் பகுதிக்கு அடுத்தாற்     போன்று ஞானப்பால் எனும் பகுதி இடம் பெற்றுள்ளதுஇப்பிரிவில் 33 பாடல்கள் உள்ளனஇவை பல அரிய கருத்துகளை ஆழமான சிந்தனைக்கு வழி வகுக்கும் கருத்துகள் கொண்டதாக உள்ளனஇஞ்ஞானப் பாலின் சுவையைத் தெரிந்து கொள்ள சில அடிப்படையான உண்மைகளை அறிவது அவசியம்மனிதன்வெறும் மாமிசப் பிண்டமல்லமனிதனிடத்தில் இறைவனின் அகமியம் இடம் பெற்றுள்ளது . இந்த அகமியத்தை மனிதன் புரிந்து கொண்டால் தன்னை அறிந்து கொண்டவன் ஆகிறான் யார் தன்னை அறிந்து கொள்கிறானோ அவன் அல்லாஹ்வை அறிந்து கொள்கிறான். யார் அல்லாஹ்வை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.   இறைவனை அண்மிப்பவர்கள் இருநிலை நீங்கி இன்ப நிலை அடைகிறார்கள்இப்பேரின்ப நிலை பெறுவதே பெறற்கரிய பேறாகும்.நான் அல்லாஹ்வின் நூரில் ஒளியில் நின்றும் உள்ளவன்அகிலத்தின் அனைத்துப் பொருட்களும் என் ஒளியில் நின்றும் உள்ளன என்பது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருளுரைஇறைவனின் அந்தரங்க அகமியத்தை அஹ்மது முஸ்தபா    ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் கொண்டு வந்தார்கள் .சிறப்புடைய சான்றோர் அதை நெஞ்சுக்கு நெஞ்சாகப்பெற்றுள்ளார்கள் என்பது பாரசீகக் கவிதை தரும் உண்மையாகும்மனிதன் நான்கு போர்வைகளால் போர்த்தப் பட்டிருக்கிறான்.ஜிஸ்மு எனும் உடல்கல்பு எனும் உள்ளம் ரூஹ் எனும் ஆன்மா ஸிர்ரு எனும் அந்தரங்கம் ஆகிய நான்கு போர்வைகள்உடல் எனும் போர்வைக்குரிய நிலை அவரது அலங்காரமாக அமைவது ஷரீஅத்தாகும்உள்ளமெனும் போர்வைக்குரிய அலங்காரம் தரீகத் ஆகும்ஆன்மாவிற்குரிய அலங்காரம் ஹகீகத் ஆகும். அந்தரங்கத்திற் குரிய நிலை மஉரிபத் ஆகும்.  இவற்றையே தமிழில் சரியை கிரியை யோகம் ஞானம்  என்றும் ,இதற்கு ஆதாரமாக அமையும் இடங்களை ஸ்தூலம் சூட்சுமம் ஆன்மம் பிரம்மம் என்றும் வகைப்படுத்திக் காட்டுவர்மனித உடலும் உள்ளமும் எவ்வாறு பல அளப்பரிய சாதனைகளைப் புரியும் தன்மைகளைப் பெற்றுள்ளதோ அதே போன்று ஆன்மாவும் விழுமிய நிலைகளைப்பெற்றுக் கொள்வதற்கான சக்திகளைப் பெற்றுள்ளது .   ஆன்மிக நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொண்டவர்கள் அகமியத்தை உணர்ந்து கொள்கிறார்கள் அகமியத்தை உணர்ந்தவர்கள் அழியாப் பேரின்பம் கொள்கிறார்கள்இந்நிலையில் “ ரிழா ” என்னும் பரிபூரண திருப்தி ஏற்படுகிறது.ஹக்கனாகிய அல்லாஹ்வுடன் ஹக்கனாகிய அல்லாஹ்வுக்காகஹக்கனாகிய அல்லாஹ்வைக் கொண்டு பரிபூரண திருப்தி அடைவதே “ ரிழா ” என்னும் மேன்மை மிக்க பேரின்ப நிலையாகும். இந்நிலை பெறுவதையே பெரும் நோக்கமாகக் கொண்டவர்கள்   ஞானிகள் என்னும் மெய்யறிவாளர்கள்இறை நேசச் செல்வர்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் அருள் நோக்கில் ஞானப்பெருந்தகை பீரப்பா அவர்களும் ஞானப்பால் ஊற்றுகிறார்கள். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் ஊட்டச்சத்துக்கள் இப்பாலில் இருப்பதைப் பருகிடும் உள்ளம் நிச்சயம் அறியும் . மனிதன் மண்தண்ணீர்நெருப்புகாற்றுஆகாயம் என்ற ஐம்பூதங்களால் உருவாக்கப்பெற்றுள்ளான்.  இவற்றினூடே குரு உறைவிடம் கொண்டுள்ளது . இந்த குருதான் ரூஹ்இதன் ரகசியம் தான் ஸிர்ருஇவற்றை உரைப்பதும் உணர்வதும் எளிதல்ல.


காரணபூதந்தானுங் களைந்து வேறாகா வண்ணம் 
பூரணகுருமெய் ஞானப் புதுமையை யறிய வேண்டும் .
பாடல் 23) 

சிந்தையைச் சிதற விடாமல் திக்ரு ஜலிதிக்ரு கல்பி திக்ரு ரூஹி திக்ரு சிர்ரி திக்ரு கபீ என்னும் ஐந்து நிலை களிலும் மனதைப் பயன்படுத்தி வந்தால்,

ஆரண ­ றகினாலு மடங்கிலா வாதி தன்னை 
நேரெனப்பணிவோர்க் கெல்லாம் நித்தங்கண் காணலாமே

என்பது தக்கலை வேந்தரின் வழி காட்டுதலாகும் . ஏக இறைவனை எஞ்ஞான்றும் நினைவில் நிறுத்துகின்ற அருளாளன் அல்லாஹ்வின் அன்பில் ஒன்றிக் கலந்திடும் இப்பேரின்பக் கலை பற்றிய ஞானமே மஉரிபத்தாகும்இதுவே காமிலான இர்பானாகும்.ஆலமுல் அக்பர்மிகப் பெரும் உலகம் எனக் கூறப்பெறுகின்ற இம்மானிட உடலில் ஒளிந்து நிற்கும் ஒப்பிலாப் பரம் பொருளைப் புரிந்து அதை நன்கு பயன்படுத்திப்பேரின்ப நிலை பெற ஷய்கு அல்லது முர்ஷித் அல்லது வழிகாட்டி அவசியம்காமிலான  செய்கு அவர்கள் தான் ஆலமுல் அக்பரான மனிதப் பேருலகிற்குரியதிறவு கோலாகும்இக்கருத்தை தவசீலர் அப்பா அவர்கள் ,

பிறப்புடனிறப்புமில்லை பிசகது தானுமில்லை 
நிறப்புகழனைத்து மொன்றாய் நின்றது நிறைந்த சோதி 
சிறப்புளவமுதமூட்டித் திருப்பதஞ் சேர்க்கும் ஞானத் 
திறப்புகளறிந்த பேர்க்குத் திறவுகோல் குருவதாமே !


இப்பாடல் மூலம் எளிமையான விளக்கம் தந்துள்ளார்கள் குருநாதர் அல்லது   ஷய்கு ஒருவரின் வழிகாட்டுதல் அவசியமென்பதையும் ஆன்மிக ஐயங்களை அவர்களிடமே சென்று நீக்கிக்கொள்ள வேண்டுமென்பதை அப்பா அவர்கள் தங்களின் ஞான மணிமாலையில் ,

அழுக்கறுத்துமெய்யை யறிந்தோர் முன் சென்று 
சுளுக்கறுத்துநீகேளு சொல்லுவா ருட்கருத்தில் 
வஞ்சகத்தைநீக்கி வான்பொருளை யென்றுமவர் 
தஞ்சமெனக்காட்டுவார்தாம் !


எனக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்சுளுக்கறுத்து நீகேளு என்று அப்பா கூறுவதன் கருத்து ;குற்றம் நீக்கி அகப்பெருமையகற்றி எனப்பொருள் கொள்ளலாம் வஞ்சகம் என அப்பா கூறுவதன் கருத்து: அல்லாஹ்வின் கண்ணியத்தை உணராத தன்மையைக்குறிப்பதாகும் .அருள்மறையில் அல்லாஹ் -  வமாகதருல்லாஹ ஹக்க கத்ரிஹி அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் அளவுக்கு அவர்கள் கண்ணியப் படுத்தவில்லை என்று குறிப்பிடுகிறான்ஞானமேதை அப்பா அவர்கள் பிஸ்மில்குறம் 86- வது பாடலில் இறைவனுக்கு மிகவும் விரோதமான செயல் நான் என்ற அகங்காரமும்அனா நிய்யத்தான நீ என்ற வேறுபடுத்தலும் ஆகும்நான் நீ வேறுபாடில்லாத நிலையில் உறுதியாக இருப்பதே ஈமானாகும்இதை நிலைபாடாக்கிக்கொள்வதே  இஸ்லாமாகும் எனவும் எடுத்துக் காட்டுகிறார்கள்.
 


இறை வணக்கத்தில் ஒன்றி இன்பம் துய்த்திட இறைஞானம் மிக அவசியமாகும் இறை ஞானம் அறிந்து கொள்ள சூஃபியாக்கள் அல்லது ஆரிபீன்கள் என்னும்அருள் மாந்தர்களின் அரிய தொடர்பு இன்றியமையாததுசூஃபியாக்களுடன் கலந்து உறவாடாமல் இருக்கும் மார்க்கப் பண்டிதர்கள் தொடுசுவை ஆனம் இல்லாத ரொட்டியைப்போன்று இருக்கிறார்கள் என ஞானவான்கள் கூறுகிறார்கள்வழியான குருவில்லா வணக்க முழுதெல்லாம் வையகத்தில் புருடனில்லாள் வாழ்ந்த சுகமொக்கும் என ஒப்பிடுகிறார்கள் அப்பா அவர்கள்.அகிலத்தின் அருட்கொடை முத்திரை நபியாம்முஹம்மது நபி இத்தரை மீதினில் ஞானம் நல்கிய மாபெரும் தூதர் இவ்வுலகில் இறைவனைக் கண்டவர் 
  


சிறந்தஉயர்ந்த நோக்கத்தில் இறைப் பணிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஒருவர் உண்டு எனில்நிச்சயமாக அவர் அறபகத்தில் தோன்றிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம்என்ற கருத்தை ஆங்கிலேய அறிஞர்கள் கூறுகிறார்கள் .நாயகக் கோமான் அவர்களின் சொல் ­ ஷரீஅத் அவர்களின் செயல் தரீகத் . அவர்களின் உண்மை நிலை ஹகீகத். அவர்கள் கண்ட மெய்ஞ்ஞானம் மஃரிபத் . நம்முடைய வணக்க வழிபாடுகளில் சிந்தனையில் செயலில் பிரதிபலிக்க ஞானம் மிகமிகத் தேவை .உயிரோட்டமான வாழ்விற்கு பெருவிருந்தாக அருமருந்தாக அமைவதுதான் அப்பா அவர்களின்ஞானப் பாடல்கள்அருள்நெறி கண்ட அப்பா அவர்களின் ஞானப்பால் அருந்துவோம் ! என்றும் அகமதில் சிறந்து விளங்குவோம் ! 
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இறைவனின் உள்ளமையை உணர்ந்து அவனில் ஒன்றிக் கலந்திருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக ! ஆமீன் 
ஒரு சூபியின் அகமிய விளக்கங்கள்1

தொழுகையின் ஹகீகத்

பற்பல நாமரூபங்களான தோற்றங்கள் என்ற நஜீசை தௌஹீது எனும் தண்ணீரால் கழுவி (ஒழூ செய்வது)மாவுல் முத்லக்காய் நிற்க வேண்டும் இன்சான்(நிற்கும் நிலை) அப்து வேறு றப்பு வேறு(வலது,இடது கைகளை மேலே உயர்த்துவது) என்ற கைரியத்தை விலக்கி இரண்டல்ல ஒன்று என்ற ஐனியத்தை கல்பில் தரிபடுத்தி(தக்பீர் கட்டும் நிலை) நப்சின் மயக்கங்களை விட்டு நான் என்ற அனானியத்தை களைந்து (ருஹ்உ)ஹக்கில் நாஸ்தியாகி பனா ஆவது(சுஹூது) அன்று பிறந்த பாலகன் போல் ஆகிவிடுவதை,ஹக்குல் எக்கினாக மாறி (அத்தஹியாத் இருப்பு) அல்லாஹ் தவிர உள்ள வஸ்துகளை எரித்துவிட்டேன் என்று விடைபெறுவதே (சலாம் கொடுத்தல்) சலாஹ் என்ற தொழுகையின் அகமியம் ஆகும்.

2

 
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதன் பொருள் என்ன?


1) லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு, அது தரும் தெளிவான நேரடி அர்த்தத்தை எடுக்கவேண்டுமா!

அல்லது அதற்கு வலிந்துரைகள் வைத்து வேறு சொற்களைப்புகுத்தி அர்த்தம் எடுக்கவேண்டுமா! அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் என்பது முஹ்கமான வசனமா! முதஷாபிஹ் ஆன வசனமா?

இஸ்லாத்தின் மூலமந்திரம் நிச்சயமாக முஹ்கமான வசனமாக - தெளிவான வாக்கியமாகத்தான் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

2) "I went to shop" - இவ்வாங்கில வசனத்தின் அர்த்தம்,'நான் கடைக்குப்போனேன் என்பதாகும். ஆனால் மேற்படிவசனத்துக்கு "நான் வாழைப்பழம் வாங்க கடைக்குப்போனேன்" என்று மொழிபெயர்ப்பது சரியான மொழிபெயர்ப்பாகுமா!!! அதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்களா!

அதுபோன்றுதான் இருக்கிறது லா இலாஹ இல்லல்லாஹ்வுக்கு நீங்கள் தந்திருக்கும் மொழிபெயர்ப்பு!

லா இலாஹ இல்லல்லாஹ்வுக்கு அதன் அர்த்தம் அல்லாத வேறு ஒன்றை அர்த்தமாக நம்பிக்கொண்டிருப்பதால் முஸ்லிம் என்ற வட்டத்துக்குள்ளேயே வரமுடியாதல்லவா?

3) லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வசனத்தில்,

"லா" - இல்லை,
"இலாஹ" – தெய்வம் / சாமி / கடவுள்
"இல்லா" – தவிர / அல்லாத / வேறான
அல்லாஹ்" - அல்லாஹ்.

இதுதான் இச்சொற்களின் நேரடி அர்த்தம். இச்சொற்களுக்கிடையே "வணக்கத்துக்குரிய" என்ற சொல் எங்கே இருக்கிறது ?

(لا) லா – (ஹர்புன் நபிஃ) (deny - மறுதலிக்கும் உருபு),
(إله) இலாஹ - (இஸ்ம்-முப்ததா) (எழுவாய்,)
(إلا) இல்லா – (இஸ்தித்னா) பயனிலை (ஹபர்),
(الله) அல்லாஹ் – நீக்கம் செய்யப்பட்ட செயப்படு பொருள் (முஸ்தித்னா),

இச்சொற்களுக்கிடையே "வணக்கத்துக்குரிய" (முஸ்தஹிக்குன் லில் இபாதத்தி) என்ற பெயர் உரிச்சொல் (adjective) எங்கே இருக்கிறது ?

இல்லாத சொல்லை என்ன ஆதாரத்தின் அடிப்படையில் இடைப் புகுத்திச் சொல்கின்றீர்கள்.!

4) திருக்கலிமாவானது அல்லாஹ்வுக்கு "எந்தவிதத்திலும்" கூட்டு இல்லவே இல்லை Absolute negation என்று பறை சாற்ற வந்ததா?

அல்லது ஒரு சில விடயங்களில் மட்டும் தான் கூட்டு இல்லை அதாவது "வணக்கத்துக்குரியவன்" என்பதில் மட்டும் தான் கூட்டு இல்லை என்று மட்டும் பறை சாற்றவந்ததா?

5) உங்களுக்கும் தெரியும் "லா ஷரீக்க லஹூ" எனும் வசனம்

"அவனுக்கு எந்தவொரு கூட்டும் இல்லவே இல்லை" என்பதைக் குறிக்கிறது.
"வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை" என்பது இஸ்லாமிய தத்துவங்களில் ஒன்று. அது லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் அர்த்தமல்ல.

நீங்கள் சொல்லும் கலிமாவின் அர்த்தப்படி "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை" என்று வைத்துக் கொண்டால், வணக்கத்துக்குரியவன் என்ற விடயத்தில்தான் அல்லாஹுவுடன் கூட்டு இல்லை. வேறு விடயங்களில் கூட்டு இருக்கலாம் என்ற இணைகற்பிக்கும் கருத்து உங்கள் கலிமாவின் அர்த்தத்தில் இருப்பதை காணலாம். இதை பூரண தவ்ஹீத் (ஒருமைப்படுத்தல்) என்று எவ்வாறு சொல்ல முடியும்!!

"வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை" என்பதுதான் கலிமாவின் அர்த்தம் என்று பார்த்தால்,

உணவளிப்பதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு!!! பாதுகாவல் வழங்குவதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு! ஆக்குவதற்குரியவன், அழிப்பதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு!! போன்ற அர்த்தங்கள் நீங்கள் கலிமாவுக்குக் கூறும் கருத்தில் தொக்கி நிற்கும் விபரீதத்தை உணரவில்லையா?.....

ஆனால் கலிமா வந்ததன் நோக்கம் என்ன! அல்லாஹ்வுடன் எந்த விதமான கூட்டும் அறவே இல்லை, அல்லாஹ்வுக்கு வேறாக ஒன்றுமே இல்லை, அவன் என்றென்றும் தனித்தவன் என்பதுதானே.!!!!

6) வணக்கத்துக்குத் தகுதியான நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை என்றால் வணக்கத்துக்கு தகுதியில்லாத நாயன் அல்லாஹ்வைத் தவிர இருக்கின்றது என்ற கருத்து அதற்குள் இருப்பதை அவதானித்தீரா! இப்படி சொல்வது எங்கணம் பூரண தவ்ஹீத் ஆகும்? இரண்டு உண்டு என்னும் "கூட்டு / இணை" எங்கணம் தவ்ஹீத் ஆகும்!

7) இதனை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள "லா ரஜுல பித்தாரி" வீட்டிலே எந்த மனிதனும் இல்லை என்ற வசனத்தை எடுத்து நோக்குங்கள்.

'லா ரஜுல பித்தாரி" என்றால் எந்த ஒரு மனிதனுமே வீட்டில் இல்லை என்ற கலிமாவின் Format இல்தான் இவ்வசனம் உள்ளது.
இவ்வசனத்திற்கு,

கை உடைந்த மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?

குள்ளமான மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?

கறுப்பான மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?

ஆனால் நீங்கள் சொல்லும் கலிமாவின் கருத்து அப்படித்தானே இருக்கிறது. இது எவ்வளவு பிழையான அர்த்தம்!!!

8) கலிமாவில் "இலாஹ்" என்ற சொல் "இலாஹ" என்று (மன்ஸூப் ஆக) வந்துள்ளதை அவதானித்திருப்பீர். இலாஹ என்பது "நகிரா"வா "மஃரிபா"வா?
"மஃரிபா" என்றால் குறிப்பான ஒன்று (eg : The God,The Man (muzammil) ,The furniture (table), வணக்கத்துக்குரியவன் .

"நகிரா" என்றால் பொதுப்படையாக அனைத்தையும் குறிக்கும் ஒன்று (eg: God, Man, Creature, Furniture,எது எதுவெல்லாம் வணங்கப்படுமோ அவையாவும்)

ஆகவே கலிமாவில் இலாஹுன் (அந்த ஒரு தெய்வம் The deity) என்று குறிப்பிட்டு பிரயோகிக்கப்படாமல், "இலாஹ" என்று ( எது எதுவெல்லாம் வணங்க, வழிபடப்படுகின்றதோ) அந்த இனம் யாவற்றையுமே ஒட்டுமொத்தமாக குறிப்பிடும் பாணியில் வந்திருக்கிறது.

அப்படியிருக்க "இலாஹ" என்பதை மஃரிபாவாக - குறிப்பிட்ட ஒன்றாக கட்டுப்படுத்தும் வகையில், வணக்கத்துக்குரிய தெய்வம் என்று எப்படி அர்த்தம் வைப்பீர்? இது குர்ஆனிய மொழியியலில் இல்லாத விடயமாயிற்றே.!

9) "லா" வுக்குப்பின்னால் ஒரு "இஸ்ம்" வந்தால் அந்த இஸ்ம் Common noun- பொது இனப் பெயர்ச்சொல் - பொதுப்படையாக அனைத்தையும் உள்ளடக்கிக் குறிக்கும் ஒருசொல் என்பது அறபு இலக்கணவிதி,

அத்தோடு அந்த "லா" "தப்ரிய்யாவுடைய லா"- absolute negation -அந்த இனத்தையே முற்றாக மறுதலிக்கும் "லா" (லல்லதீ லினப்யில் ஜின்ஸி) என்பது குர்ஆனிய மொழியின் விதி. இந்த விதிகளை புறக்கணித்து "வணக்கத்துக்குரியவன் மட்டும்தான் இல்லை அல்லாஹ்வைத்தவிர "என்று மொழிபெயர்ப்புச்செய்யலாமா? செய்தால் அது சரியான மொழிபெயர்ப்பு ஆகுமா?

நான் மேலே கூறிய கருத்துக்களின் அடிப்படையில் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் அல்லாஹ்வுக்கு வேறான கடவுள் / தெய்வம் இல்லை என்பதாகும்.

கடவுள் எனும் சிருஷ்டி அல்லாஹ்வுக்கு வேறானதாக இல்லாமல் இருக்கும் போது மற்றைய சிருஷ்டிகளும் அல்லாஹ்வுக்கு வேறானதாக இல்லாமலே இருக்க வேண்டும்.

அதாவது, கடவுள் எனும் சிருஷ்டி அல்லாஹ் தானானதாக இருக்கும் போது மற்றைய சிருஷ்டிகளும் அல்லாஹ் தானானதாகவே இருக்க வேண்டும்.

எனவே, அல்லாஹ்வுக்கு வேறான எந்த சிருஷ்டியும் இல்லை. சிருஷ்டிகள் அனைத்தும் அவன் தானானதாகவே இருக்கின்றன. அவனைத் தவிர எதுவும் இல்லை அவன் மாத்திரமே இருக்கின்றான் என்ற தௌஹீதை லா இலாஹ இல்லல்லாஹ் என்கின்ற திருக்கலிமாவில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

3

 
ஒப்புக்கொள்ளப்பட்ட நல்ல முரீது !

முரீதாகிய ஒருவர் , தஜ்லா நதியில் மூழ்கி விடும் நிலையில் சிக்கிக் கொண்டிருந்தார் , அப்போது தெய்வீகமாக முதலில் ஒரு கை தோன்றியது .அசரீரியாக " நீ இந்தக் கையை பிடித்துக்கொள் " நீ தப்பித்துக்கொல்வாய் ! என்ற சத்தம் வந்தது . அன்னவர் , " இது யாருடைய கை " என்று
ஒரு கேள்வி கேட்டார் . " இது உன்னுடைய ஆசான்களில் இன்னவருடைய கை " என்று விடை வந்தது .
இவருக்கு இஷ்டமில்லாததால் ,அந்தக் கையைப் பிடிக்கவில்லை . எனவே அந்தக் கை போய் வேறொரு கை தோன்றியது , " இது யாருடைய கை " என்று மீண்டும் கேட்டார் . " இது ஒரு மஹானுடைய திருக்கை " என்று பதில் சத்தம் வந்தது . இதையும் அவர் பிடித்துக் கொள்ளவில்லை .மூன்றாவதாக மீண்டும் ஒரு கை தோன்றியது . " இது யாருடைய கை " என்று முரீது கேட்டார் . " இது உன்னுடைய குருவின் கை " என்று பதில் சத்தம் வந்தது , உடனே அந்த முரீத் கையை நீட்டி அந்தக் கையை பற்றிப்பிடித்துக்கொண்டார் . இதனால் தண்ணீரில் மூழ்காமல் தப்பித்துக்கொண்டார் .
பிறகு அவர் , தம்முடைய குருவின் சமூகத்தில் போய் நிகழ்ந்த சம்பவத்தை எடுத்துரைத்தார் , இதைக்கேட்ட பீர் அவர்கள் நீ உன்னுடைய
கையை வேருகைகளிடம் கொடுத்திருப்பாயானால் நீ மர்தூதாக [ தள்ளப்பட்டவனாக ] ப் போயிருப்பாய் . அந்தக் கை எனக்கு வழிகாட்டிய பெரியோர்களின் கைகளாய் இருந்தும் ,நீ என் கையை பற்றியதால் ,நீ செய்தது தான் மரியாதையான நற் செயல் " என்று விளக்கம் கூறினார்கள் !
ஹஜ்ரத் துன்னுன் மிஸ்ரி [ ரஹ்மதுல்லாஹி அலைஹி ] அவர்கள் சொல்கிறார்கள் " முரீதானவர் தன்னுடைய செய்குக் குரிய மரியாதை
ஒழுக்கத்தை விட்டுவிட்டால் ,அவன் முன்னிருந்த இடத்துக்கே [ ஆரம்ப நிலைக்கே ] போய் சேர்ந்துவிடுவான் . ஏனனில் அவன் உயர் பதவிக்கு வரத்தக்க காரியம் இந்த ஒழுக்கமேயாகும் .ஏனனில் ஷைகுக்கு குரிய உரிமைகள் நபிமார்களுக்குரிய உரிமைகளைப் போன்றவைகளாகும் என்று
மஷைகு மார்கள் கூறி இருக்கிறார்கள் .அல்ஹம்துலில்லாஹ்

4

 
“லம் யெலித் வலம் யூலத்”

“அவன் பெறவுமில்லை, அவன் பெறப்படவுமில்லை”
இறைவன் இவ்வசனத்தில் “விலாதத்” என்ற சொல்லைக் கையாண்டுள்ளான்.
“விலாதத்” என்பது, ஒரு பெண் தனது வயிற்றிலுள்ள சிசுவைப்பிரசவிப்பதை (பிரிப்பதை)க் குறிக்கும்.
“பிரசவித்தல்” என்பது பெண்பாலுக்கு மட்டும் உரித்தான தொழில்.பெண்ணைக்குறித்தே அச்சொல் பயன்படுத்தப்படும்.ஆயினும், ஆணுமல்லாத-பெண்ணுமல்லாத -தன் “தாத்” (பிரம்மத்)தைப் பற்றி “அது பெறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளான்.
“தாத்” (பிரம்மம்) ஆணுமில்லை பெண்ணுமில்லை, ஆகவே அது பெறுகிறதா என்று சொல்லிக்காட்டவேண்டியதில்லையே?
ஆணுமல்லாத –பெண்ணுமல்லாத “அலி” எனப்படும் அது கூடப்பிரசவிப்பதில்லை என்பது யாவரும் நன்கறிந்ததேயாகும்.
இம்மூன்று வர்க்கமுமில்லாத அப்பிரம்மம் பெறுகிறதா இல்லையா என்பதைப்பற்றி இறைவன் ஏன் வீணே பிரஸ்தாபிக்கவேண்டும்? நாம் சற்று சிந்திக்கவேண்டும்.!
ஆணும் அலியும் பிரசவிப்பதில்லை.பெண்மட்டும்தான் பிரசவிப்பாள். இறைவனின் “தாத்”(பிரம்மம்) இம்மூன்றும் இல்லை என்றால் “பிரசவித்தல்” என்பதற்கு வேறு விளக்கம் உண்டு.அது பின்னால் குறிப்பிடுகிறேன்.
அவ்வசனத்துக்கு ஒரு பெண் பிரசவிப்பது போல் இறைவன் பிரசவிக்கவில்லை என அர்த்தம் கொண்டால், அது(பிரம்மம்) பெண்தான் என்றும், ஆயினும் அது பிரசவிக்கவில்லை என்றும் தானாகவே ஒரு கருத்து ஏற்பட்டுவிடும்.
ஒரு பெண், பேறில்லாத காரணத்தாலோ, அன்றி திருமணமாகாத காரணத்தாலோ பிரசவிக்காமல் இருப்பாள் என்பது கண்கூடு.
“பிரசவித்தல்” என்பது பெண்ணைக்குறித்தே உபயோகப்படுத்தப்படும் ஒரு சொல்.ஆகையால்,அப்பிரம்மம் பெண் என்றும்,மேற்கூறிய இருகாரணங்களால் அது பிரசவிக்கவில்லை என்றும் கருத்து வந்துவிடும்.
சிலர் பிரம்மம் பெண்தான் என்றும், அது பெண்ணொருத்தி பிரசவிப்பதுபோல் பிரசவிக்கிறது என்றும் கருதினார்கள்.அத்தகைய கருத்தை மறுப்பதற்காகவே அவ்வாறு இறைவன் கூறியதாக விளக்கம் சொல்கிறார்கள்.
இவர்களின் இத்தகைய விளக்கம்தான் அதற்குக்காரணம் என்று நாம் வைத்துக்கொண்டால் அதில் பல்வேறு ஆட்சேபனைகள் எழுகின்றன. மேலும், இது “அவன் பெறவில்லை” என்ற கருத்தை மட்டும் காட்டி நிற்கின்றதேயன்றி, அவ்வாறு பெறாததற்குக் காரணம் என்ன? என்பதை விளக்குவதாக இல்லை.
இறைவன் ஏன் பெறுவதில்லை?
“இறைவன் ஏன் திருமணம் செய்யவில்லை? ஏன் அதன் மூலம் குழந்தைகளைப்பெறவில்லை?”
இவை போன்ற வினாக்களுக்கு அத்வைத ஞான வட்டத்திலேதான் தர்க்க ரீதியான பதில்கள் உள்ளன.
///சிருஷ்டிகள் திருமணம் செய்துகொள்கின்றனர்,குழந்தைகளைப்பெறுகின்றனர்.இவ்விரு தன்மைகளும் சிருஷ்டிகளின் தன்மைகள். இவை அல்லாஹ்வில் ஏற்படுவதால் அவன் சிருஷ்டிகளுக்கு ஒப்பாகிவிடுகிறான். சிருஷ்டிகளுக்கு ஒப்பாகவேண்டும் என்பதனால் அவன் திருமணம் செய்யாமலும், சந்தானங்களைப்பெறவில்லை/// என்றும் சிலர் கூறுவர்.
இது பகுத்தறிவால் ஏற்கப்படும் தர்க்கரீதியான காரணமல்ல.
அவன் திருமணம் செய்வதாலும்,பிள்ளைகளைப்பெறுவதனாலும் சிருஷ்டிகளுக்கு ஒப்பாகிவிடுகிறான் என்ற வாதம் பிழையானதே! ஏனெனில், ஒப்பு –நிகர் என்பது அவனுக்கு அறவே இல்லாமலிருக்கும்போது, அவன் அதற்கு ஒப்பாகிவிடுகிறான்,இதற்கு ஒப்பாகிவிடுகிறான் என்பது காரணமில்லை.
அதுவே அதற்குக்காரணம் என்பது முற்றிலும் பிழையான வாதமாகும்.
அவனல்லாத ஒன்றும் இல்லாதிருக்கும்போது அவன் எதற்கு ஒப்பாவது?
மேலும், அவ்வாறு சிருஷ்டிகளுக்கு ஒப்பாகவேண்டும் என்பதைக்காரணமாகக்கொண்டால், “அவனுக்குத்திருமணம் செய்யவும்,சந்தானங்களைப்பெறவும் முடியும்.ஆனால்,சிருஷ்டிகளுக்கு ஒப்பாகவேண்டும் என்பதனாலேயே பிரசவிக்காமல் இருக்கிறான்” என்ற அர்த்தம் தானாகவே தோன்றிவிடும்.
எனவே, அவன் பெறவில்லை,திருமணம் செய்யவில்லை என்ற கூற்றுகளுக்கு மேலே குறிப்பிட்ட “ஒப்பாகுதல்’ என்பது காரணமில்லை. அதற்குக்காரணம்; (ஆணாக-பெண்ணாக-கணவனாக-மனைவியாக-பிள்ளைகளாக இவ்வாறெல்லாம்) அனைத்துமாக வெளியாகியுள்ள பிரம்மத்தை (அல்லாஹ்வை)ப்பொறுத்து அவ்விரண்டும் அசாத்தியமானவைகளாக இருப்பதினாலேயாகும்.
பெறுதல் தரும் பிரிதல்
********************************
“பெறுதல்” என்பது
தாயின் வயிற்றிலிருந்து சிசு வெளியாகுவது போல்,
ஒன்றிலிருந்து இன்னொன்று வெளியாகுவதை (பிரிவதை) க்குறிக்கும்.
எனவே அவன் பெறவில்லை என்பதன் அர்த்தம், அவனில் (அப்பிரம்மத்தில்) இருந்து எதுவும் பிறந்து (பிரிந்து) வரவில்லை என்பதேயாகும்.
சர்வ சிருஷ்டிகளும் அவனில் இருந்து வந்தவைகள்தான். ஆயினும் தாயின் வயிற்றில் இருந்து சிசு பிரிந்து வந்தது போல்- கோழியில் இருந்து முட்டை வேறாகி வந்ததுபோல் அவை அவனுடைய பிரம்மத்திலிருந்து பிரிந்து வேறாக வந்தவையல்ல.
பிரபஞ்சம் பிரம்மத்தின் குழந்தைகள்தான். ஆயினும் சிசு தாயின் வயிற்றிலிருந்து பிரிந்து வந்து அது வேறாகவும் தாய் வேறாகவும் இருப்பது போல், பிரபஞ்சம் என்பது, பிரம்மத்திலிருந்து பிரிந்துவந்து அது வேறாகவும், பிரம்மம் வேறாகவும் இருக்கின்றது என்பது அர்த்தமில்லை.
“அவன் பெறவில்லை” என்பதின் சரியான அர்த்தமும் தர்க்க ரீதியான காரணமும் நான் மேலே வலியுறுத்தியவாறு ‘பிரியவில்லை” என்பதுதான். இதற்கு, இவ்வத்தியாயம் (ஸூறத்துல் இஹ்க்லாஸ்) இறங்கிய வரலாற்றை சற்று நோக்கினால் “பெறவில்லை” என்பதன் கருத்து “பிரியவில்லை” என்பதுதான் என்பது தெளிவாகும்

5

 
தொடுவதும் தொடர்வதும்


முறையாகஷெய்கிடம் பைஅத் வாங்கி அந்த வழியில் செயல்படுபவராக இருக்கலாம். இன்னும்சிலர் இந்த வழியில் நாமும் பயணிக்க வேண்டும் என்று என்ணிக்கொண்டு இந்த வழியை மிகவும் ஆசிப்பவராகவும் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருப்பார்கள்.

. இன்னும் சிலர் காமிலான ஷெய்கைத் தேடிக்கொண்டு காலத்தை வீன் விரயம் செய்வார்கள். காமிலான ஷெய்கை தொட்டுவிட்டால் ஞானம் அனைத்தும் நமக்கு கிட்டிவிடும் என்பது இவர்களின் நிணைப்பு இதுவும் தவரான நினைப்பு. தான் உழைத்து சம்பாதித்த ஒன்றில்தான் அதன் அருமையும் அதை பாதுகாக்கும் என்னமும் இருக்கும்.

குருடன் மற்றவர்கு வழிகாட்ட முடியாது தன் ரப்பை தரிசித்த ஒரு ஷெய்கே மற்ற வர்கு வழிகாட்டலாம் இதில் ஷெய்கின் வழிகாட்டல் 25 % என்றால் உங்களின் உழைப்பும் உறுதியும் விடாமுயற்சியும் 75 % ஆகும். இந்தப்பாதையில் பயணிக்க யாருக்கு ஆசை இருக்கிறதோ அவருக்கு அல்லாஹ் நாடிவிட்டான் என்று பொரு ளாகும் நாம் இதற்காகவே இப்பிறவி எடுத்துள்ளோம் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த காலங்களில் ஆன்மீக என்பது இலையில் மறைந்த கனியதுபோல் பகிரங்கமற்ற நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது ஷெய்கிடம் ஞானதீட்சை பெறுவதும் அதைப்பற்றி பேசுவதும் மிக இரகசியமான ஒன்று.

ஆனால் இன்று முகநூலில் ஞானத்தைப் பற்றி அதிகமான அளவு
தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு
இந்தப்பாதையில் இருப்பவர்களை
தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் உண்டு
இதில் யாரிடமேனும் தொடர்பை
ஏற்படுத்தி உங்களுக்கும் இந்தப்பாதை
யில் ஈடுபடும் வாய்பை தேடிக்கொள்-
ளுங்கள்

முகநூலில் அதிகமான பதிப்புகள்
கடந்த காலத்தின் நிகழ்வுகளைப்பற்றி
ஹதீஸ் நபிமார்களின் வரலாறு வலி
மார்களின் நிகழ்வுகள் போன்றவை
களை படிப்பதும் Like போடுவதும்
விமர்சனங்கள் செய்வதும் அதை வைத்து விவாதம் செய்து பட்டிமன்ற
மாக்குவதும் வஹாபிகளை விமர்சிப்
பதும் இவைகளெல்லாம் பொழுது
போக்காக செய்துகொண்டிருக்கிறாம்.

ஆனால் நம்மைப்பற்றி நாம் சிந்திப்பதில்லை நாம் எதற்காக இங்கு
வந்தோம் ? அதற்காக என்ன செய்தோம ? என்று ஒரு நிமிடம்
நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம்
இந்த உடலில் உயிர் இருக்கும்போதே
நம்மை நாம் அறிய வேண்டும் இந்த
உடலை இழந்தால் நஷ்டவாளி ஆகி
விடுவோம் . என்னை அறியாமல்
எனக்குள்ளே நீ இருக்க உன்னை
அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே என்றார் பட்டிணத்தார்.

இனிமேலாவது ஒரு ஷெய்கை
தொட்டுக்கொண்டு ஞானப்பாதையில்
பயணத்தை தொடர்ந்து விடுவோம்.

மெஞ்ஞானக் குறிப்புகள்

மெஞ்ஞானக்  குறிப்புகள்

1
வணக்கத்துக்குரியவன் கடவுள் என்பதில் எல்லா மதத்தவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.இந்த விசயத்தை சொல்லவா கலிமா வந்தது?மக்கத்து காபிரீன்கள் முதல் யூத,கிறிஸ்தவ,ஹனீபிய,சாபியீன் மதத்தினர் கூட ஓரிறை வழிபாட்டுடையவர் தாம்.ஓரிறையை அறிந்தவர்களுக்கா கலிமா வந்தது? சிந்திக்க வேண்டும்.கலிமா தரப்பட்ட அத்துனை நபிமார்களும் ஓரிறை வாதிகள் தான் இதற்கு தானா இவ்வளவு நபிமார்கள் வரவேண்டும்.ஆலிஹாத்துகள் அல்லாவிடத்தில் சிபாரிசு செய்யும் என்று காபிர்கள் நம்பினார்கள்.இது தான் இணை வைத்தல் என்று வஹாபிகள் சொல்கின்றனர்.ஆனால் இந்த இடத்தில் தான் வஹாபிகள் பிழை செய்து விட்டனர்.ஏகத்துவத்தின் அடிப்படையில் அல்லா வேறு ஆலிஹாத்துகள் வேறு என்ற கைரியத்தை விட்டு எல்லா இலாஹுகளும் அல்லாவே என்ற கலிமா தையிபாவின் பிரகடனம் தான் சரியானது.ஷிர்க் என்பதே அல்லாஹ் வேறு சிருஷ்டி வேறு என்று நம்புவது தான். இங்கே சிபாரிசு ஒரு பொருட்டே அல்ல.ஆக ஓரிறை என்பதற்கும் எல்லாம் அவனே என்பதற்கும் வேறுபாடு உள்ளது.எல்லா இலாஹுகளும் அல்லா தான் அதனால் இலாஹுகளை விட்டு அல்லாவை வணங்குகள் என்று தான் பெருமானார் நபி அலைஹிவஸ்ஸல்லம் அருளினார்கள்.எனவே ஏகத்துவம் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்.

2

இருப்பது எல்லாம் அவன் என்றால் காணும் சிருஷ்டிகள் எல்லாம் பொய்யா என்று சந்தேகம் வரும்.ஆனால் காண்பவை யாவும் பொய்யில்லை தான்.அதாவது மாயை அல்ல.இறைவனின் பரம்பொருள் தான் சிருஷ்டியாக காட்சியளிக்கிறது.ஆனால் சிருஷ்டியில் நாம் அவனை காண்பது இல்லை.இதற்கு காரணம் நாம் ஆடையை பார்க்கிறோம் பஞ்சு தெரிவதில்லை.நாற்காலி,மேசையை பார்க்கிறோம் மரம் தெரிவதில்லை.பனிக்கட்டியை பார்க்கும் போது தண்ணீர் தெரிவதில்லை.இந்த மருட்சியை தான் மாயை என்கிறோம்.காணும் பொருள்கள் உண்மையுடன் தான் இருக்கிறது.அந்த உண்மை நம் கண்ணுக்கு தெரிவதில்லை.ஞாநம் பெற்றவர்களுக்கு இது விளங்கும்.மாறாக இவ்வுலகம் மாயை,மித்யை என்று இந்து சங்கர அத்வைதம் தான் குழப்புகிறதேயன்றி இஸ்லாமிய ஏகத்துவ அத்வைதம் சொல்லுவது இவ்வுலகம் பொய்யல்ல.உண்மைதாந்.அந்த மருட்சியை அறிந்தால் எல்லாம் அவனே.

3திருகுரானின் முதல் வசனமே எல்லாம் அவனே என்ற தவ்ஹீதை பிரகடனப்படுத்துவதாக இருக்கிறது.அல் பத்திஹா சூராவில் முதல் வசனம் அல்ஹம்துலில்லாஹி ரப்புல் ஆலமீன்.அதாவது எல்லா புகழும் அகிலத்தாரின் இறைவனுக்கே சொந்தம்.எல்லா புகழும் என்றால் என்ன? புகழ் எத்தனை வகைப்படும் இறைவன் இறைவனை புகழ்வது,இறைவன் சிருஷ்டிகளை புகழ்வது,மனிதன் இறைவனை புகழ்வது,மனிதன் சிருஷ்டிகளை புகழ்வது என்று நான்கு வகையாகும்.இதில் இறைவனை புகழ்வதை மட்டும் எல்லாம் என்று சொல்ல முடியாது.எல்லாம் என்றால் இந்த நான்கை குறிப்பிடுகிறது.இந்த எல்லாமே எல்லாம் அவனே என்பதை சுட்டிக்காட்டுகிறது.ஆக எல்லாம் அவனே என்ற தவ்ஹீதை தான் குரான் எடுத்தோதுகிறது என்பதை இந்த வசனம் மூலம் அறியலாம்

4

மனிதன் என்று சொன்னால் எல்லா மனிதர்களை குறிப்பது போல் விலங்கு என்று சொன்னால் எல்லா விலங்குகளை குறிப்பது போல் மரம் என்று சொன்னால் எல்லா மரங்களை குறிப்பது போல் அல்லாஹ் என்று சொன்னால் எல்லாவற்றை குறிப்பிடும் பொதுப்பெயர் ஆகும்.இன்னும் அல்லாஹ் என்று சொன்னால் எல்லா கடவுளையும் சேர்த்த ஒன்றை குறிக்கிறது.அதாவது அல்லாஹ் என்பது ஒரு சொல்லாடல்.அந்த சொல்லாடல் ரூபமாய் இருக்கின்ற எல்லாவற்றையும் குறிக்கின்ற அரூப மூலப்பொருள் என்பதை குறிக்கிறது.அல்லாஹ்வை பார்க்க முடியுமா என்றால் ஆம் முடியும் என்பதோடு எல்லாமாக இருக்க படைப்புகளே அல்லாஹ் என்பது ஆகும்.இறைவனை ரூபமாக பார்த்து அறிவதை மட்டுமல்லாமல் அரூபமாக இருப்பதை அறிவதே ஞானம் என்பதாகும்.ஆனால் தியாநம் இருப்பதன் வாயிலாக,தவம் இருப்பதன் வாயிலாக அரூப அம்சமான அல்லாஹ்வில் இருந்து சக்திகள் வெளிப்பட்டு அற்புதங்களை காட்டுகிற சக்தியும் நாட்டங்களை நிறைவேற்றும் சக்தியும் வெளியாகிறது.அதன் மூலம் அல்லாஹ் தெய்வீகத்தை மனிதன் மூலம் நிறைவேற்றுகிறான்.அந்த மனிதன் அவ்லியா அல்லாஹ்வாக இறைநேசராக மாறி மக்களின் துவாக்களை,பிரார்த்தனைகளை நிறைவேற்றி அல்லாஹ்வின் எதார்த்தத்தை காட்டிதருகிறார்கள்.

5
உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி கேட்கிறோம் என்பதன் அர்த்தம்
ஸூறத்துல் பாத்திஹாவிலுள்ள இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன் 1:5 எனும் திருவசனத்தை சற்று சிந்தனை செய்துபார்.

இதன் பொருள் பின்வருமாறு:-

இறைவா உன்னையே வணங்குகின்றோம்.
இன்னும் உன்னிடமே உதவிதேடுகின்றோம்.

இதுதான் இதன் பொருள்.

மேலே கூறிய திருவசனத்தின் படி,

நீ வணங்குவதாயின், அல்லாஹ்வை வணங்கவேண்டும். வேறு யாரையும் வணங்கக்கூடாது.

அதேபோல், நீ உதவிகேட்பதாயின் அல்லாஹ்விடம்தான் உதவி கேட்கவேண்டும். வேறுயாரிடமும் உதவிகேட்கக் கூடாது.

நீ “இய்யாக நஃபுது” உன்னையே வணங்குகின்றோம் என்று சொல்வது போல் அல்லாஹ்வைத்தான் வணங்கிக் கொண்டிருக்கின்றாய். நீ கல்லை வணங்கவுமில்லை. புல்லை வணங்கவுமில்லை. இங்கு நீ சொல்வது போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாய். இதில் நீ சரியானவன்தான். உன்னை ஆட்சேபிக்க ஒன்றுமே இல்லை.

எனினும் “வஇய்யாக நஸ்தயீன்” உன்னிடமே உதவிதேடுகின்றோமென்று நீ சொல்கிறாயல்லவா? இதில்தான் ஆட்சேபனையும், ஆச்சரியமும் இருக்கின்றது. ஏனெனில் நீ சொல்வதுபோல் செயல்படுகின்றாயா இல்லையா?நீ சொல்வது போல் அல்லாஹ்விடம் தானா உனது தேவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றாய்? அல்லது மனிதர்களிடமும் கேட்டுக் கொண்டிருகின்றாயா?

நீ இதுவரை அல்லாஹ்விடம் மட்டும்தானா உதவி கேட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? நீ உனது வாழ்க்கையில் மனிதர்கள் யாரிடமும்உ தவிகேட்கவில்லையா?

இதற்கு நீ என்ன விடை சொல்லப்போகிறாய்! அல்லாஹ்விடம் மட்டும்தான் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறேனென்று சொல்லப் போகின்றாயாஅல்லது அல்லாஹ்விடமும், அதே போல் மனிதர்களிடமும் உதவிகேட்டுக் கொண்டிருக்கிறேனென்று சொல்லப்போகின்றாயா?

மனிதர்கள் யாரிடமுமின்றி அல்லாஹ்விடம் மட்டும் உதவிகேட்டுக் கொண்டிருப்பதாக நீ சொன்னால் யார் உன்னை ஏற்றுக்கொள்வார்? யார்தான் உனது பேச்சைநம்புவார்?

நீ உனது வாழ்க்கையில் உனது மனைவியிடம் உதவி கேட்கவில்லையா? உனது நண்பர்களிடம் உதவி கேட்கவில்லையா? உனது மக்களிடம் உதவி கேட்கவில்லையா?

இல்லையென்று உன்னால் மறுக்கமுடியுமா?முடியாது. இப்பொழுது நீ சொல். நீ யாரிடம் உதவி கேட்டு வாழ்ந்திருக்கின்றாய்? அல்லாஹ்விடமா…மனிதர்களிடமா? அல்லது இருவரிடமுமா?

அல்லாஹ்விடம் என்று நீ சொன்னால், மனிதர்களிடம் நீ உதவி கேட்டிருக்கக்கூடாது. மனிதர்களிடம் உதவிகேட்டிருந்தால் அவர்களையும் அல்லாஹ் என்று நீ நம்பவேண்டும். அவ்வாறு நீ நம்பவில்லையானால் உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்ற திருமறை வசனத்துக்கு நீ மாறுசெய்த பாவியாயிருப்பாய்.

மனிதர்களை அல்லாஹ் என்று நம்புகிறாயா? அல்லது அல்லது தினமும் 17 தரம் உன்னிடமே உதவி தேடுகிறோமென்று சொல்லிக்கொண்டு மனிதர்களிடம் உதவி கேட்பதன் மூலம் திருக்குர்னுக்குமாறு செய்து வாழ்ந்துவருகின்றயா?

அல்லாஹ் மனிதர்களாகவும் வெளியாகியுள்ளானென்பதை நீ ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் குர்ஆனுக்கு மாற்றமில்லாமல் உன்னால் வாழமுடியும். உன்னிடமே உதவிதேடுகிறோம் என்று கூறிக்கொண்டு மனைதர்களிடம் உதவிதேடவும் முடியும்.

மனிதர்களிடம்உதவிகேட்காமல்அல்லாஹ்விடம்மட்டும்உதவிதேடியவனாகஉன்னால்வாழமுடியுமா? எவ்வாறுவாழமுடியும்?அதற்குவழிஇருந்தால்சொல்.அவ்வழிக்குநானும்வந்துவிடுகின்றேன்.

நீ ஒரு கணவனாயிருந்தால் உனது மனைவியிடம் உடலுறவுக்கு உதவிகேட்பதும், நீ ஒரு ஆசிரியனாயிருந்தால் கீழே விழுந்த தடியை மாணவனிடம் எடுத்துக் கேட்பதும் உதவி கேட்பதன்றிவேறென்ன? இவையெல்லாம் உதவிகேட்பதாகாதா??

மனிதனின் வாழ்க்கையில் அவன் இன்னொருவனிடம் உதவிகேட்காமல் அல்லாஹ்விடம் மட்டும் உதவிகேட்டுக் கொண்டு வாழ்வது முடியாத ஒன்றாகும். இதற்கு என்னாலும் முடியாது. உன்னாலும் முடியாது.

படுக்கையில் அமர்ந்து கொண்டிருக்கும் உனக்குத் தேனீர் தேவைப்பட்டால் உனது மனைவியை அழைத்து அவளிடம்தான் நீ கேட்கவேண்டும்.

படுக்கையில் இருந்தவாறே இறைவா! எனக்குத் தேநீர் தருவாயாக என்று இராப்பகலாக இறைவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாலும் உனக்குத் தேநீர் கிடைக்குமா?

உனது கையிலிருந்து கீழே விழுந்த பழத்தை நீ பெறுவதாயின், நீ கீழேகுனிந்து எடுக்கவேண்டும் அல்லது இன்னொருவரிடம் எடுத்துத்தருமாறு கேட்கவேண்டும். இவ்வாறு நீ செய்யாமல் நின்றவாறே இறைவா! கீழே விழுந்த எனது பணத்தை எனக்கு எடுத்துத்தா என இராப்பகலாக கேட்டாலும் உனக்கு அது கிடைக்குமா?

நீ படுக்கையில் இருக்கையில் இறைவா எனக்கு தேநீர்தா எனக்கேட்டுக் கொண்டிருந்தாய்என வைத்துக்கொள். நீ இவ்வாறு புலம்பிக்கொண்டிருந்த்தை செவியேற்ற உனது மனைவி, உன்மீது இரங்கி தேனீர் தயார் செய்து உனக்குத்தந்தால் அல்லாஹ் தந்தானென்று சொல்வாயா? மனைவி தந்தாளென்ரு சொல்வாயா? உன் எண்ணப்படி உனக்குத் தேநீர்தந்த்து யார்??

கீழே விழுந்த பணத்தை நீ எடுக்காமலும் இன்னொருவரிடம் எடுத்துக்கேட்காமலும் இறைவா எனது பணத்தை எடுத்துத்தா என்று கேட்டுக்கொண்டிருந்தாய் என வைத்துக்கொள்! நீ இவ்வாறு புலம்பிக்கொண்டிருந்த்தை செவியேற்ற ஒருவனுன்மீது இரங்கி கீழே கிடந்த பணத்தை எடுத்து உன்னிடம் தந்தால் அல்லாஹ் தந்தானென்று சொல்வாயா?வழியால் சென்ற மனிதன்தந்தானென்று சொல்வாயா?உன் எண்ணப்படி உனக்கு உதவியது யார்.?

நீ அல்லாஹ்விடம் மட்டும்தான் உதவிகேட்கலாமேயன்றி மனிதர்களிடம் கேட்கக்கூடாதென்ற நம்பிக்கையுள்ளவனென்று வைத்துக்கொள். அந்த நம்பிக்கைப்படி உனது வீட்டினுள் இருந்துகொண்டு இறைவனிடம் ஒன்றை நீ கேட்டு அது உனக்குக் கிடைப்பதாயினும் யாரோ ஒருவரின் மூலம்தான் உனக்கு கிடைக்குமேயல்லாமல் அல்லாஹ் என்றொருவன் உன்னிடம் நேரில்வந்து ஒன்றும் தருவதில்லை. இதை நீ திட்டமாகப்புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

“வஇய்யாக நஸ்தயீன்” உன்னிடமே உதவிதேடுகின்றோம் எனும் இத்திருவசனத்தை நான் கூறிவருகின்ற “எல்லாமவனே” எனும் ஏகத்துவ ஞானக்கருத்தை நிரூபித்துக் காட்டுவதற்கு ஆதாரமாகத்தான் நான் எடுத்தேன்.

இது வரைநான் கூறிய விவரங்களிலிருந்து,

நீ யாரிடம் உதவிகேட்டாலும் அல்லாஹ்விடம்தான் உதவிகேட்கிறாய் என்ற கருத்தையும்,

அல்லாஹ்தான் “இன்ஸான்” மனிதனாக தோற்றுகிறானென்ற கருத்தையும்,

நீ மனிதனிடம் உதவி கேட்பது திருக்குர்ஆன் வசனத்துக்கு முரணாகாதென்ற கருத்தையும் விளங்கியிருப்பாயென்று நம்புகின்றேன்.

1

எழுத்தாளர் எச்.முஜீப் ரஹ்மானுடன் ஒரு நேர்காணல் தொடர்ச்சி

எழுத்தாளர் எச்.முஜீப் ரஹ்மானுடன் ஒரு நேர்காணல் 5 நேர்காணல் செய்பவர்: திரு. ரஹ்மான், நீங்கள் சூஃபிசம் மற்றும் குறிப்பிடத்தக்க சூஃ...