Wednesday, March 30, 2016

பீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்



பீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் செல்வராகப் பிறந்து முந்நுாறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர் ஞானச்செல்வர் பீர் முகம்மது. அவர் பிறந்த ஆண்டு தெளிவாக தெரியவில்லை. பதினாறு அல்லது பதினேழாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. கீழக்கரையில் அடக்கமாகியுள்ள இறைநேசர் சதக்கத்துல்லா அப்பா, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆகியோரின் சம காலத்தவர் பீர் முகம்மது அப்பா.

திருநெறி நீதம் நூலை ஹிஜ்ரி 1022-ஆம் ஆண்டில் தாம் இயற்றியதாகக் கூறியுள்ளார் பீர் முகம்மது அப்பா, பிள்ளைப் பருவத்திலேயே பெற்றோரையும் பிறந்த ஊரான தென்காசியையும் விட்டுப் பிரிந்து ஏறத்தாழ 95 ஆண்டு காலம் காடுகளிலும் மலைகளிலும் தவயோகத்தில் அப்பா ஈடுபட்டார். அக்காலத்திய திருவிதாங்கூர் அரசின் மலைப் பகுதிகளிலும் ஆன்மிகப் பயிற்சிகளைப் பெற்றார் என்று கூறப்படுகிறது.
 
பல்லாண்டு காலம் தவவாழ்வு நடத்திய அவரது பெயரை நினைவூட்டும் வகையிலேயே கேரள மாநிலத்தில் யானைமலையிலுள்ள ஊர் இன்றும் பீர்மேடு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. கேரளத்தில் அரசர்களும், எளிய மக்களும் இவரைக் கண்டு பல துன்பங்களுக்கும் நிவாரணம் பெற்றுள்ளனர். யானைமலைக் காட்டில் பதினைந்து ஆண்டுகள் பரமானந்த நிலையில் அப்பா ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த புலி,சிங்கம், யானைகள் அவருடன் அன்புறவு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கொச்சியை அப்போது ஆண்டுவந்த அரசர் மாறுவேடத்தில் அந்தக் காட்டுப் பகுதிக்கு வந்து பீரப்பாவின் அறிவுரையைக் கேட்டுப் பின்னர் துறவியானதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. திருவிதாங்கூர் மன்னரும் பீரப்பாவின் அடிபணிந்து நின்று நல்லாசியைப் பெற்றுள்ளார்.

"நாலினை  யிரண்டொன்  'றாக்கி  நடுவினிலருளை  நோக்கி
நூலினை  படித்தோர்  தங்கள்  நொடியினைக்  கேட்பாயாகில்
மேல்வினை  வாரா  மீண்டு மெய்வினை  தொலைந்தேபோகுங்
காலனும்  வாரான்  வந்தாற்  கடிந்துயிர்  பிடிக்க மாட்டான் "
  

பீரப்பா  பாடல்கள்  அத்தனையும்  ஞான  அனுபவ  நிலையை  பகர்வதாகும் .
சாதாரணமாக  பொருள்  கொள்பவர்கள்  அறிய  முடியாது . மெய்ப்பொருள்
உபதேசம்  பெற்றவரே  அறிய  முடியும் . நாலினை  இரண்டொன்றாக்கி  -
சந்திர  கலையின் எஞ்சிய  4 கலைகளை  இரு  கண்மூலம் தவம் செய்யும்போது  ஒன்றாக்கி  உள்ளே  அக்னி  கலையில் சேர்க்கும்  தந்திரமே !

 
 நடுவினில்  அருளை நோக்கி  ​- நம்  சிரசு  நடுவில்  உள்ளே  நோக்கி
நூலினை  படித்தோர்  - ஞான நூற்களைப்  படித்து குருவை  யடைந்து
உபதேசம்  பெற்றவர்கள் . தங்கள்  நொடியினை  கேட்பாயாகில்  மேல்வினை
வாரா  - தவம்  செய்பவர்களுக்கு  துன்பம்  தருவதான  முன்  வினைகள்  -
பிராப்த  கர்மம்  வராது  தொலைந்து  போகும் . இப்  பிறப்பெடுத்த  பின்
வரும்  ஆகாமிய  கர்மம்  தவம்  செய்பவர்களுக்கு  வரவே  வராது .
தக்கலை பீர் முகம்மது அவர்களும் தந்தைக்கு முன் மகன் பிறந்தான் என்று பாடுகிறார்.   மேலும் அவர்களின் பாடல் திருமந்திர பாடலுடன் எவ்வாறு ஒத்து போகிறது என்று சொல்லும் பாடல். அப்பட்டமான ஞான பாடலும் கூட!
அந்த பாடலை ஞான சற்குரு அவர்களின்ஞான கடல் பீர் முகம்மதுஎன்ற புத்தகத்தில் இருந்து ஞானப் புகழ்ச்சி என்ற பகுதியில் உள்ள பாடல் – 10
கணங்காத தந்தைக்கு முன்பிறந்துந்திக்கமலத்தில்பாடல்  10
பீரப்பா பாடலில் இது ஒரு அற்புதமான பாடல்! ஞான ரகசியம் வெளிப்படும் படலுங் கூட! தந்தைக்கு முன் பிறந்தான்தந்தைக்கு முன்னாலயே பிறந்தவனல்?! தந்தை பிறப்பதற்கு முன் எப்படி மகன் பிறக்கமுடியும்?
தந்தையின் முன்னில்முன்பக்கத்தில் மகன் பிறந்தான் என்பதேயாகும்!?கந்த புராணத்தில், சிவனின் நெற்றி கண்ணிலிருந்து வந்த தீப் பொறியே முருகன் என்கிறதல்லவா? சிவனின் முன்பு முருகன் தோன்றினான். எப்படி? நெற்றிகண் மூலமாக! உந்தி கமலம்உந்திமுன் தள்ளி கமலம்தாமரை,இது பரி பாஷை நமது கண்களே தாமரைக்கு ஒப்பிடுவார்கள். கண் உந்தி கொண்டுதானே இருக்கிறதுகண்ணைத்தான் உந்திக்கமலம் என்றனர். சிவனின் உந்திக் கமலத்தின் நெருப்பிலிருந்து பிறந்தான் முன் பக்கத்தில்!முருகன்! பீரப்பா கந்த புராணத்தை சொல்லவில்லை!
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.
திருமந்திரம் – .869
சாத்திரத்தில் சிறந்த திருமந்திரத்தில் சொல்லப்பட்ட ஞானத்தையே பீரப்பாவும் சொல்லியிருக்கிறார்கள்.
நாம் கண்ணை விழித்திருந்து தியானம் செய்யும்போது நமது உந்திகமலமாகிய கண்களில் இருந்து, நம் கண்களின் வழி, உள்ளே இருக்கும் சிவமாகிய ஒளி பிரவாகமாக வெளிப்படும்! உள் ஒளி கண்வழி வெளிப்படும் போது ஆறுவட்டமான இரு கண்களின் காட்சி நமக்கு கிடைக்கும்.! அதாவது நம் கண்ணையே நாம் நமக்கு முன்னால் காணலாம்!?
ஆறு வட்டம்தான் கதையில் ஆறுமுகமானது, சிறுவர்களுக்கு கதைபுராணம். பெரியவர்களுக்கு ஞானம்அனுபவம்.
இஸ்லாமியருக்கும் இந்துவுக்கும் கிறிஸ்த்துவனுக்கும் ஒரே அனுபவம்தான்! ஞானம் ஒன்று தான்!

இறைவன் ஒருவன் தானே! சாதனை ஞான சாதனை அதாவது ஞான தவம் செய்யும் யாவருக்கும் கிட்டும் முதல் அனுபவம் இதுவே!
தமிழ்ப் புலமையும், அரபு மொழி ஆற்றலும், பிற மொழி அறிவும், தேர்ந்த பயிற்சியும் பெற்ற அவர், தொழுகையிலும் இறை வணக்கத்திலும் மக்களை ஈடுபடுத்தும் வண்ணம் எண்ணற்ற பாடல்களை இயற்றினார், பிஸ்மில் குறம் படைப்பில் இடம்பெறுள்ள ஒரு பாடல் அரிய உதாரணம்:
தெளிவான தீன்குலத்தில் உள்ளவரே கேளும் தெவிட்டாமல் தொழுதுகொண்டு வணக்கம் செய்ய வேணும்
தொழுகையின் உயர்வையும், அதை நிறைவேற்ற வேண்டிய முறையையும் அப்பா எடுத்துரைக்கும் சிறப்பு சிந்தைக்கு விருந்தாக அமைகிறது.
பீர் அப்பா 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட அருட்பாக்களை இயற்றியுள்ளார், ஞானப் பால், ஞானப் பூட்டு, ஞானப் புகழ்ச்சி, ஞான மணிமாலை, பிஸ்மில் குறம், ஞானக் குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு, ஞான நடனம், ஞான முச்சுடர்ப் பதிகங்கள், ஞானத் திறவுகோல், ஞான சித்தி, ஞானக் கண், ஞான விகடச் சமர்த்து, ஞான உலக உருளை, ஞான மலைவளம், மெய்ஞ்ஞானக் களஞ்சியம், திருமெய்ஞ்ஞானச் சரநுால்,மெய்ஞ்ஞான அமிர்தக் கலை, திருநெறி நீதம், மஃரிபத்து மாலை, ஈடேற்ற மாலை,ரோசு மீசாக்கு மாலை, மிகுராசு வளம் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
அவர் இயற்றிய ஞானரத்தினக் குறவஞ்சி, பதினெண் சித்தர்களின் தொகுப்பான பெரிய ஞானக்கோவையில் இடம்பெற்றுள்ளது, 66 கண்ணிகளைக் கொண்ட இக்குறவஞ்சியில் சிங்கன்- சிங்கி உரையாடல் மூலம் தத்துவங்கள் விளக்கப்படுகின்றன. பீரப்பாவின் ஞானப் புகழ்ச்சி தேனமுதக் களஞ்சியம் என்று போற்றப்படுகிறது, இறைவனின் அருங்குணங்களை எடுத்துரைத்து, அவனிடம் சரணடைந்து அடைக்கலம் நாடும் 685 பாடல்களைக் கொண்ட ஞான இலக்கியம் இது.

‘‘அவன்தான் பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான். தன்னை வணங்குவதற்காகவே வானவர்களையும் மனிதர்களையும் அவன் படைத்தான்..’’ என்று குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன, இவற்றைக் கருப் பொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட இனிய இலக்கியமே ஞானப்புகழ்ச்சி.
படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக மனுவைப் படைத்தான் தனை வணங்கஎன்பது அப்பாவின் ஆன்மிக முழக்கம்.
அப்பா அவர்களின் ஞானக் கோவையில் பிஸ்மில் குறம் பகுதிக்கு அடுத்தாற்     போன்று ஞானப்பால் எனும் பகுதி இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் 33 பாடல்கள் உள்ளன. இவை பல அரிய கருத்துகளை ஆழமான சிந்தனைக்கு வழி வகுக்கும் கருத்துகள் கொண்டதாக உள்ளன. இஞ்ஞானப் பாலின் சுவையைத் தெரிந்து கொள்ள சில அடிப்படையான உண்மைகளை அறிவது அவசியம்.
மனிதன்வெறும் மாமிசப் பிண்டமல்ல. மனிதனிடத்தில் இறைவனின் அகமியம் இடம் பெற்றுள்ளது . இந்த அகமியத்தை மனிதன் புரிந்து கொண்டால் தன்னை அறிந்து கொண்டவன் ஆகிறான் . யார் தன்னை அறிந்து கொள்கிறானோ அவன் அல்லாஹ்வை அறிந்து கொள்கிறான். யார் அல்லாஹ்வை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.   இறைவனை அண்மிப்பவர்கள் இருநிலை நீங்கி இன்ப நிலை அடைகிறார்கள்இப்பேரின்ப நிலை பெறுவதே பெறற்கரிய பேறாகும்.
நான் அல்லாஹ்வின் நூரில் ( ஒளியில் ) நின்றும் உள்ளவன்; அகிலத்தின் அனைத்துப் பொருட்களும் என் ஒளியில் நின்றும் உள்ளன என்பது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருளுரை. இறைவனின் அந்தரங்க அகமியத்தை அஹ்மது முஸ்தபா    ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் கொண்டு வந்தார்கள் . சிறப்புடைய சான்றோர் அதை நெஞ்சுக்கு நெஞ்சாகப்பெற்றுள்ளார்கள் என்பது பாரசீகக் கவிதை தரும் உண்மையாகும். மனிதன் நான்கு போர்வைகளால் போர்த்தப் பட்டிருக்கிறான் .ஜிஸ்மு எனும் உடல், கல்பு எனும் உள்ளம் , ரூஹ் எனும் ஆன்மா , ஸிர்ரு எனும் அந்தரங்கம் ஆகிய நான்கு போர்வைகள். உடல் எனும் போர்வைக்குரிய நிலை அவரது அலங்காரமாக அமைவது ரீஅத்தாகும். உள்ளமெனும் போர்வைக்குரிய அலங்காரம் தரீகத் ஆகும். ஆன்மாவிற்குரிய அலங்காரம் ஹகீகத் ஆகும். அந்தரங்கத்திற் குரிய நிலை மஉரிபத் ஆகும்.  இவற்றையே தமிழில் சரியை , கிரியை , யோகம் , ஞானம்  என்றும் , இதற்கு ஆதாரமாக அமையும் இடங்களை ஸ்தூலம் , சூட்சுமம் , ஆன்மம் , பிரம்மம் என்றும் வகைப்படுத்திக் காட்டுவர். மனித உடலும் உள்ளமும் எவ்வாறு பல அளப்பரிய சாதனைகளைப் புரியும் தன்மைகளைப் பெற்றுள்ளதோ அதே போன்று ஆன்மாவும் விழுமிய நிலைகளைப்பெற்றுக் கொள்வதற்கான சக்திகளைப் பெற்றுள்ளது .   ஆன்மிக நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொண்டவர்கள் அகமியத்தை உணர்ந்து கொள்கிறார்கள் . அகமியத்தை உணர்ந்தவர்கள் அழியாப் பேரின்பம் கொள்கிறார்கள். இந்நிலையில் ரிழா என்னும் பரிபூரண திருப்தி ஏற்படுகிறது.
 
ஹக்கனாகிய அல்லாஹ்வுடன் ஹக்கனாகிய அல்லாஹ்வுக்காகஹக்கனாகிய அல்லாஹ்வைக் கொண்டு பரிபூரண திருப்தி அடைவதே ரிழா என்னும் மேன்மை மிக்க பேரின்ப நிலையாகும். இந்நிலை பெறுவதையே பெரும் நோக்கமாகக் கொண்டவர்கள்    ஞானிகள் என்னும் மெய்யறிவாளர்கள். இறை நேசச் செல்வர்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் அருள் நோக்கில் ஞானப்பெருந்தகை பீரப்பா அவர்களும் ஞானப்பால் ஊற்றுகிறார்கள். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் ஊட்டச்சத்துக்கள் இப்பாலில் இருப்பதைப் பருகிடும் உள்ளம் நிச்சயம் அறியும் .
மனிதன் மண், தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் உருவாக்கப்பெற்றுள்ளான்.  இவற்றினூடே குரு உறைவிடம் கொண்டுள்ளது . இந்த குருதான் ரூஹ். இதன் ரகசியம் தான் ஸிர்ரு. இவற்றை உரைப்பதும் உணர்வதும் எளிதல்ல.
காரணபூதந்தானுங் களைந்து வேறாகா வண்ணம் 
பூரணகுருமெய் ஞானப் புதுமையை யறிய வேண்டும் .
( பாடல் 23) 

சிந்தையைச் சிதற விடாமல் திக்ரு ஜலி. திக்ரு கல்பி , திக்ரு ரூஹி . திக்ரு சிர்ரி . திக்ரு கபீ என்னும் ஐந்து நிலை களிலும் மனதைப் பயன்படுத்தி வந்தால்,

ஆரண ­ றகினாலு மடங்கிலா வாதி தன்னை 
நேரெனப்பணிவோர்க் கெல்லாம் நித்தங்கண் காணலாமே
என்பது தக்கலை வேந்தரின் வழி காட்டுதலாகும் . ஏக இறைவனை எஞ்ஞான்றும் நினைவில் நிறுத்துகின்ற அருளாளன் அல்லாஹ்வின் அன்பில் ஒன்றிக் கலந்திடும் இப்பேரின்பக் கலை பற்றிய ஞானமே மஉரிபத்தாகும். இதுவே காமிலான இர்பானாகும்.
ஆலமுல் அக்பர்; மிகப் பெரும் உலகம் எனக் கூறப்பெறுகின்ற இம்மானிட உடலில் ஒளிந்து நிற்கும் ஒப்பிலாப் பரம் பொருளைப் புரிந்து அதை நன்கு பயன்படுத்திப்பேரின்ப நிலை பெற ய்கு அல்லது முர்ஷித் அல்லது வழிகாட்டி அவசியம். காமிலான  செய்கு அவர்கள் தான் ஆலமுல் அக்பரான மனிதப் பேருலகிற்குரியதிறவு கோலாகும். இக்கருத்தை தவசீலர் அப்பா அவர்கள் ,
பிறப்புடனிறப்புமில்லை பிசகது தானுமில்லை
நிறப்புகழனைத்து மொன்றாய் நின்றது நிறைந்த சோதி 
சிறப்புளவமுதமூட்டித் திருப்பதஞ் சேர்க்கும் ஞானத் 
திறப்புகளறிந்த பேர்க்குத் திறவுகோல் குருவதாமே !
இப்பாடல் மூலம் எளிமையான விளக்கம் தந்துள்ளார்கள் . குருநாதர் அல்லது   ஷய்கு ஒருவரின் வழிகாட்டுதல் அவசியமென்பதையும் ஆன்மிக ஐயங்களை அவர்களிடமே சென்று நீக்கிக்கொள்ள வேண்டுமென்பதை அப்பா அவர்கள் தங்களின் ஞான மணிமாலையில் ,
அழுக்கறுத்துமெய்யை யறிந்தோர் முன் சென்று 
சுளுக்கறுத்துநீகேளு சொல்லுவா ருட்கருத்தில் 
வஞ்சகத்தைநீக்கி வான்பொருளை யென்றுமவர் 
தஞ்சமெனக்காட்டுவார்தாம் !
எனக்கோடிட்டுக் காட்டுகிறார்கள். சுளுக்கறுத்து நீகேளு என்று அப்பா கூறுவதன் கருத்து ; குற்றம் நீக்கி அகப்பெருமையகற்றி எனப்பொருள் கொள்ளலாம் . வஞ்சகம் என அப்பா கூறுவதன் கருத்து: அல்லாஹ்வின் கண்ணியத்தை உணராத தன்மையைக்குறிப்பதாகும் . அருள்மறையில் அல்லாஹ் -  வமாகதருல்லாஹ ஹக்க கத்ரிஹி - அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் அளவுக்கு ( அவர்கள் ) கண்ணியப் படுத்தவில்லை என்று குறிப்பிடுகிறான். ஞானமேதை அப்பா அவர்கள் பிஸ்மில்குறம் 86- வது பாடலில் இறைவனுக்கு மிகவும் விரோதமான செயல் நான் என்ற அகங்காரமும்அனா நிய்யத்தான நீ என்ற வேறுபடுத்தலும் ஆகும். நான் நீ வேறுபாடில்லாத நிலையில் உறுதியாக இருப்பதே ஈமானாகும். இதை நிலைபாடாக்கிக்கொள்வதே  இஸ்லாமாகும் எனவும் எடுத்துக் காட்டுகிறார்கள். 

இறை வணக்கத்தில் ஒன்றி இன்பம் துய்த்திட இறைஞானம் மிக அவசியமாகும் . இறை ஞானம் அறிந்து கொள்ள சூஃபியாக்கள் அல்லது ஆரிபீன்கள் என்னும்அருள் மாந்தர்களின் அரிய தொடர்பு இன்றியமையாததுசூஃபியாக்களுடன் கலந்து உறவாடாமல் இருக்கும் மார்க்கப் பண்டிதர்கள் தொடுசுவை ஆனம் இல்லாத ரொட்டியைப்போன்று இருக்கிறார்கள் என ஞானவான்கள் கூறுகிறார்கள். வழியான குருவில்லா வணக்க முழுதெல்லாம் வையகத்தில் புருடனில்லாள் வாழ்ந்த சுகமொக்கும் என ஒப்பிடுகிறார்கள் அப்பா அவர்கள்.

பீரப்பா அவர்களின் திருப்பாடல்களின் மொத்தசாரமே வஹ்தத்துல் உஜூது ஆகும்.அதை தெளிவாக தனது பாடல்களில் சொல்லியுள்ளார்.அல்லாஹ்தான்வுஜூத்ஆவான். உள்ளமை ஆவான். “வுஜூத்என்றால்உள்ளமைஎன்று பொருள் கொள்ள வேண்டும். உள்ளமை என்பது வேறு. உண்மை என்பது வேறு. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. உண்மை என்ற பொருளுக்குஸித்குன்அல்லதுஹக்குன்என்ற சொல்தான் பாவிக்கப்படும். “வுஜூத்என்ற சொல் பாவிக்கப்படுவதில்லை. உள்ளமை என்ற பொருளுக்குவுஜூத்என்ற சொல்தான் பாவிக்கப்படும்.

வுஜூத்என்ற சொல்லின் எதிர்ச் சொல் இல்லாமை என்ற பொருள் தருகின்றஅதம்என்ற சொல்லாகும். உண்மை என்ற பொருள் தருகின்றஸித்க்என்ற சொல் அல்ல.
வுஜூத்என்ற உள்ளமைக்கு உருவமோகட்டுப்பாடோஎதுவுமில்லை. இதுவேதன்ஸீஹ்என்று சொல்லப்படுகின்றது. இதைதன்ஸீஹ்உடைய நிலை என்றும், “மகாம்என்றும்ஸூபிமகான்கள் கூறுவார்கள். எனினும் குறித்தவுஜூத்உள்ளமை எப்பொருளாக, எந்த உருவத்தில், எந்தக் கட்டுப்பாட்டில் வெளியானாலும் வெளியாவதற்கு முன்னிருந்த நிலையில் இருந்து அது மாறுபடவில்லை. வெளியான பின்னும், வெளியாகு முன்னும், எப்போதும் அது இருந்தவாறே இருக்கிறது.

அல்லாஹ்வின்வுஜூத்உன்ற உள்ளமைக்குதன்ஸீஹ்அரூப, கட்டுப்பாடற்ற நிலை என்றும், “தஷ்பீஹ்ரூப, கட்டுப்பாடுள்ள நிலை என்றும் இரண்டு நிலைகள் உள்ளன. ஒருவன் உண்மை விசுவாசியாவதற்கு இவ்விரு நிலைகளையும் நம்ப வேண்டும். இன்று உலகில் வாழும் அனேக முஸ்லிம்கள் போல்தன்ஸீஹ்நிலையை மட்டும் நம்பினால்ஈமான்சரி வராது. இந்த விபரம் உலமாஉகளில் அதிகமானவர்களுக்குத் தெரியாமல் இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும். குறிப்பாகதரீகாவின் ஷெய்காககுருவாக இருப்பவருக்கும், “கலீபாஉகளாயிருக்கின்ற மௌலவீ மார்களும், “முகத்தம்ஆக இருப்பவர்களுக்கும் தெரியாமல் இருப்பது இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய ஒன்றாகும். அது தொடர்பாக ஞானத்தாரகை அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

தன்ஸீஹ்என்பதை மட்டும் நீ சொன்னால்நம்பினால்அதில் மட்டுமே அந்தவுஜூதைகட்டுப்படுத்தினவனாவாய். அதே போல்தஸ்பீஹ்என்பதை மட்டும் நீ சொன்னால்நம்பினால்அதில் மட்டுமே அந்தவுஜூதைகட்டுப்படுத்தினவனாவாய். நீ இரண்டு நிலைகளையும் சொன்னால்இரண்டு நிலைகளையும் நம்பினால்நீ நேர்மையானவனாகி விட்டாய். அதோடு இறையியலில் தலைவனாகவும் ஆகிவிட்டாய்.

அல்லாஹ்வின்தன்ஸீஹ்” “தஸ்பீஹ்என்ற இரு நிலைகளையும் நம்பினவன்தான் உண்மையானதவ்ஹீத்வாதியாவான். அதே நேரம் அல்லாஹ்வின் வுஜூத் என்ற உள்ளமையைதன்ஸீஹ்அரூப நிலையிலோ, “தஷ்பீஹ்என்ற ரூப நிலையிலோ கட்டுப்படுத்துவதும் கூடாது. இரண்டையும் ஏற்றுக் கொள்வதுடன் இரண்டுக்கும் அப்பால் உள்ளதன்ஸீஹ் மஹ்ழ்தெளிவானசுத்தமான தன்ஸீஹ் என்பதையும் நம்ப வேண்டும்.

மேற்கண்ட இந்த விபரம் முஹம்மத் இப்னு பள்லுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அவர்களின்அத்துஹ்பதுல் முர்ஸலாஎன்ற நூலில் இருந்து பெறப்பட்டதாகும். “துஹ்பதுல் முர்ஸலாஆசிரியர் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அவர்கள் இன்னும் சொல்கிறார்கள்.

மவ்ஜூதாத்என்ற சொல் சிருட்டிகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். இவையாவும்வுஜூத்உள்ளமையின் புறத்தால் அல்லாஹ் தானானவைகளேயாகும். (அவனுக்கு வேறானவை அல்ல) எனினும் தனித்தனியாகக் குறிப்பிடும் போது அல்லாஹ் அல்லாதது சிருட்டி எனப்படும். அவைகள் கூட அவனின் வெளிப்படையாகும். “ஙெய்ரிய்யத்வேறு என்பது கூட வெளிப்படையான கவனிப்பைக் கொண்டதேயாகும். எனினும் எதார்த்தத்தில் சிருட்டிகள் யாவும் அல்லாஹ்தானானவையாகும்.குமிழி, அலை, பனிக்கட்டி (ஐஸ்), என்பன போன்று. இவை மூன்றும் எதார்த்தத்தில் நீரையன்றி அதற்கு வேறானதல்ல. எனினும் தனித்தனி குறிப்பை கவனித்து நீருக்கு வேறானவைதான். “ஸறாப்கானல் நீர் போன்றுமாகும். கானல் நீர் எதார்த்தத்தில் ஆகாயம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. எனினும் வெளிப்படைக்குறிப்பு என்ற வகையில் அது ஆகாயத்திற்கு வேறானதே. கானல் நீர் என்பது எதார்த்தத்தில் ஆகாயத்தின் வெளிப்பாடுதான்.

இதன் சுருக்கம் என்னவெனில் படைப்புகளும்பிரபஞ்சம் யாவும் – “வுஜூத்உடைய புறத்தால் அதாவது உள்ளமை என்ற அடிப்படையில்அல்லாஹ்தான். ஆயினும்தஅய்யுன்குறிப்பு என்ற வகையில் அது வேறானதேயாகும். வேறு என்பது கூட கணிப்பின் படியேதான். எதார்த்தம் என்னவெனில் பிரபஞ்சம் எல்லாம் அல்லாஹ்தான். குமுழி, அலை, ஐஸ் என்பன போன்று. இவையாவும் நீரேயன்றி வேறல்ல. இவ்வாறுதான் கானல் என்பதுமாகும்.

மேற்கண்ட கருத்தின்படி சிருட்டி என்று சொல்லப்படுகின்ற எதுவாயினும் அது அல்லாஹ்வின்வுஜூத்உள்ளமைக்கு வேறானதே இல்லை. அலை என்பது நீர்தானேயன்றி அதற்கு வேறானதல்ல. குமிழி என்பதும் இவ்வாறுதான். அது நீருக்கு வேறானதல்ல. ஐஸ்கட்டி என்பதும் இவ்வாறுதான். அது நீருக்கு வேறானதல்ல. “ஸறாப்எனும் கானல் நீரும் இவ்வாறுதான். அது ஆகாயத்திற்கு வேறானதல்ல.

சகல படைப்புகளுக்கும் மூலம்கருஎன்பது அல்லாஹ்வின்வுஜூத்என்ற உள்ளமைதான். வேறொன்றல்ல. மோதிரதுக்கு தங்கம் மூலம் என்றால் மோதிரம் என்பது தங்கம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. அலைக்கு நீர் மூலம் என்றால் அலை என்பது நீர் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. நூலுக்கு பஞ்சு மூலம் என்றால் நூல் என்பது பஞ்சு தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல.

இந்தவஹ்தத்துல் வுஜூத்ஞானம் பற்றிக் கூறிய தற்கலைவாழ் அற்புத வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மது றஹ்மதுல்லாஹ் அவர்கள் பாடியுள்ளார்கள்.  

மண்ணால ஆனதெல்லாம் மண் எடுத்த கோலமது
மண்ணையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பொன்னால ஆனதெல்லாம் பொன் எடுத்த கோலமது
பொன்னையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பஞ்சால ஆனதெல்லாம் பஞ்செடுத்த கோலமது
பஞ்சையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!

 


No comments:

இருத்தலியத்தின் அபஸ்ரங்கள்

இருத்தலியத்தின் அபஸ்ரங்கள் ஜே.பிரோஸ்கான் (இலங்கை) கவிதைகளை முன்வைத்து 1 இது ஒரு மோசமான தேர்வு.  நிராகரிப்புகள் எனக்குள் நினைவிரு...