Monday, May 02, 2016

தற்கலை ஞானமாமேதை பீர் முகமது வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி

1


இஸ்லாம் அகிலமெல்லாம் பரவியபிறகு அந்தந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் வாழ்வியலிலும் வழிபாட்டிலும் மார்க்கச் சட்டங்களைப் பின்பற்றி வந்தாலும் கலாச்சாரப் பண்பாட்டு முறையில் தங்கள் பகுதியின் சமூக நாகரீகத்திற்குட்பட்டே வாழ்ந்து வருகிறார்கள். உணவு, உடை, மொழி, சடங்கு, சம்பிரதாயங்களில் இவற்றை காணமுடிகிறது. இவை மேலோங்கி இஸ்லாம் முற்றிலும் மாறுபட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிடாமலிருக்க "ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் 
புதுப்பிக்கக்கூடியவர்கள் (முஜத்திதுகள்) தோன்றுவார்கள்" என பெருமானார் அவர்கள் நவின்றுள்ளார்கள். 

சூஃபியாக்கள் அல்லது ஞானிகள் என்றழைக்கப்படும் வலிமார்கள் இறைவணக்கத்தோடு நின்றுவிடாமல் அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி வளர்ச்சியிக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். மக்களின் அறிவுத்தாகத்திற்கேற்ப இறைவிளக்கங்களை அள்ளித்தந்திருக்கிறார்கள். அரபியில் மட்டுமல்லாது வட்டார மொழியிலும் புலமை பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தமிழைப் பொருத்தவரை அவர்களின் பங்கு மகத்தானது; வரையறைக்கு அப்பாற்பட்டது. ஆனால் தூரதிருஷ்டவசமாக அவைகள் மறைக்கப்பட்டன; இன்று மறுக்கப்படுகின்றன.

தமிழ் புலவர்கள் விட்டுச் சென்ற மரபைத் தொடர்ந்து இறைநேசர்களான சூஃபிப் பெரியார்களும் மஸ்தான்களும் பக்திச்சுவை சொட்டச்சொட்ட இறையுணர்வில் தன்னை மறந்து இன்பலயத்தில் எண்ணிறந்த மெஞ்ஞானப் பாக்களைப் பாடியுள்ளனர். 

ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பற்ற இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே தலைசாய்க்கவேண்டும்; தான் என்ற அகந்தையை மாய்த்து ஏகனின் அடைக்கலம் அடையவேண்டும்; அண்டசராசரங்களுக்கும் அதிபதியான அவனின் அடிமை என்ற எண்ணம் 
எப்போதும் இருக்கவேண்டும்; தன்னிடம் ஒன்றுமே இல்லை, தான் ஆட்டுவிக்கப்படுபவன், எல்லாம் அவனே என்ற மாறாத உணர்வு எந்தகாலமும் இருந்துக்கொண்டே இருக்கவேண்டும். அவனே உள்ளத்தில் குடி இருக்கிறான், உலகத்தின்மேல் அருள் மழை பொழிகிறான்; உயிர்பிக்கிறவனும் அவனே, மரிக்கச் செய்பவனும் அவனே; சுருங்கச் சொன்னால் 'தௌஹீது' என்பது அல்லாஹ்தான் என்ற உண்மையில் ஊறித் திளைத்த ஞானிகளில் ஒருவரான பீர் முஹம்மது அப்பா அவர்கள் தாம் பெற்ற நம்பிக்கையை நம் நெஞ்சிலும் பதிக்கின்றார்கள் இங்கே..

"தந்தையிலி தாரமிலி தானவனு நீயே
தன்மைகொ டெவர்க்குமொரு தாபரமு நீயே
மைந்தரிலி யன்னையிலி மன்னவனு நீயே
மண்ணிலடி யார்க்கிரணம் வழங்குவது நீயே
சிந்தைதனி லிடறுதனைத் தீர்த்தருள்வை நீயே
தேட்ட மறிந்தெனக்குதவி செய்பனு நீயே
அந்தமிலி நீயெனக்கோ ரிழிவு வராமல் 
ஆதியே நானுன் னடைக்கலம தானேன்" (1)

இஸ்லாமியப் புலவர்கள் இறைவனையும் அவனின் தூதர் பெருமானார் ரசூல்(சல்) அவர்களையும் புகழ்ந்து பாடுவதோடு நிறுத்திவிடாமல் சித்தர்களாகவும் இறை பித்தர்களாகவும் இருந்து அகமியத்தை, அகமியத்தின் ரகசியத்தை அள்ளித் தந்திருக்கிறார்கள். அத்தகைய சித்தர்கள் குணங்குடி மஸ்தான் சாஹிபு(ரஹ்) அவர்களும் தக்கலை பீர் முஹம்மது அப்பா(ரஹ்)அவர்களும் இன்னும் சிலருமாவார்கள்.

சித்தர்கள் என்றாலே இரும்பைப் பொன்னாக்கும் வித்தையைக் கற்றவர்கள் என்ற நம்பிக்கை பாமரர்களுக்குமட்டுமல்ல படித்தவர்களுக்கிடையேயும் இருந்து வந்தது; இன்னமும் இருந்து வருகிறது. ஆனால் இரும்பு போன்ற இதயத்தைப் பொன் போன்று மாற்றவைப்பவர்கள் என்ற எண்ணம் மட்டும் இல்லை. இவர்கள் பஞ்சை மனிதர்களுக்கு எப்பாலை ஊட்டத்தவறினாலும் 
ஞானப் பாலை மட்டும் ஊட்டத் தவறியதே இல்லை. ஆனால் ஒரு சங்கடம்! எதனையும் நேரிடையாகச் சொல்லாமல் யாவற்றையும் மறைமுகமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி பரிபாஷை சொற்களால் அலங்கரிக்கப்பட்டு படிப்பவர்கள் மயக்கமேற்படும் வகையில் அமைந்திருக்கும். இத்தகைய சொற்களிலிருந்து வரும் கருத்துக்கள் புடம்போட்ட பத்திரைமாற்று தங்கம்போல் துலங்கும். ஆனால் அவற்றின் உட்கருத்தைப் புரிந்துக்கொள்வது எளிதான காரியமன்று. இரும்பை தங்கமாக்கும் இரசவாதாம் எத்துனைக் கடினமானதோ அதைவிடக் கடினமானது அதன் உண்மைப் பொருளை அறிவது. இந்த இரசவாதம் அகமியத்தை மட்டுமே உணர்த்துகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

புறச்சடங்குள் இல்லாது அகமியத்தை அடையமுடியாது என்பதால் புறச்சடங்குகளைப் பற்றியும் அவற்றின் செயல்முறைகள் பற்றியும் அங்காங்கே விளக்கியுமிருக்கின்றார்கள். அண்டகோடிகள் படைக்குமுன்பாக 'கன்ஜு மஃக்ஃபி' என்றழைக்கப்படும் மறைவான பொக்கிஷமாக இருந்த இறைவனை, அவன் நிலைகளை, அவன் பண்புகளை அப்பா அவர்கள் விளக்குகிறார்கள் 'பிஸ்மில்க்குறம்' என்ற ஞானப்பாவில்.

"ஆதிபெரியோனே றப்பில் ஆலமீனேயாதி
அஹதுநிலைசமதாக ஆலநிரைந்தோனே
அஹதியத்திலுஹதியத்தும் வாகிதத்துமாகி
அரூபவுரூபத்துள்ளே தானல்லவோதாத்து
தாத்தல்லவோ பாத்தினது லாகிறுசிபாத்து
லாகிறுக்குள் பாத்தினானான் ரகசியத்தின் பொருளே...."

உலகிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் அருவமாக இருந்து நடத்தப்படுகிறதுதான் தாத்து என்றும் தாத்தை பாத்தின் - மறைவானது என்றும் சிபத்தை லாஹிர் - வெளிப்பாடானது என்றும் வெளிப்பட்ட பொருட்களில் மறைவாக இருப்பது மகா ரகசியமாக இருக்கிறது என்றும் நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் பொருள்படுத்துகிறார்கள்.

அவர்களின் வரலாறு அவர்களின் பாடல்கள்மூலமாகவே அறியமுடிகிறதே தவிர வேறு வகையில் அறியமுடியவில்லை. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அல்லது மாதிஹர் ரசூல் சதக்கத்துல்லா அப்பா (1632 - 1703)காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை கீழ் வரும் பாடல்மூலம் அறியமுடிகிறது.

"நினைவுடன் பொருளு நிறைந்திடும்வகைநீதீயும் பிசுமிலினோடே
அனந்தமுந்தெரிய அஹுமதருரைக்க ஆதிதன் கிருபையினாலே
கனசயமாரும்மவுலானாறூமி கழறினார் அகதியத்ததிலே
மனதுமகிழ அறிவையுமறிந்து வழுத்தினார்சதக்கத்துல்லாவே"

நினைவில் கலந்திருக்கின்ற எல்லா ஞானப் பொருள்களையும் கூட்டித் திரட்டி, பிஸ்மில்லா என்கிற திருநாமத்துடன் நமது நபிகள் நாயகம்(சல்) அவர்கள் அருளிச்செய்தார்கள். அதை ஒன்றாகத் திரட்டி ஹலரத் மௌலான ரூமி(ரஹ்) அவர்கள் தமது மஸ்னவி ஷரீஃபில் சொன்னார்கள். அதனை ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் மொழி பெயர்த்துச் சொல்ல அதை எனது ஞானமணிமாலை, மஃரிபத்துமாலை முதலிய நூல்களுக்குச் சரிபார்த்து உலகத்தார்கள் விளங்கிக் கொள்ளும்படியாக குறமாகப் பாடினேன். (2) 

"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான் - வெங்காயம் 
சுக்கோ சிவனிருப்பன் சுரோணிதமோ வல்லவிஞ்சி
ஹக்கோவென் றுள்ளறிந்தக் கால்"

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் சிறுமலுக்கர் என்பாரின் செல்வப்புதல்வராகப் பிறந்து இறைவனின் தன்மைகள் யாவையும் தன்னிடத்து வருவித்துக்கொண்டவர்கள். அவனில் தன்னை நுழைத்துக்கொள்ளும் நுட்பமான ஞானத்தைப் பெற்றிருந்த ஹுசைன் மன்சூர் ஹல்லாஜ்(ரஹ்) அவர்களின் வழிமுறையில் வந்துவிட்டவர் என்று பறைச்சாற்றுகிறார்கள். 
இஞ்சி, நீரும் ஈரமும் பெற்றுள்ளது, அது உலர்ந்துவிட்டால் சுக்காக மாறிவிடுகிறது, அதற்கு என்றும் அழிவில்லை. ஐம்புலன்களையும் அடக்கியாண்டு தூங்காமல் தூங்கி, சாகாமல் செத்து சமாதி நிலை எய்துவிடுகிறவர்களை அந்த சுக்குக்கும் மற்றவர்கள் அனைவரையும் வெறும் இஞ்சியாகவும் பரிபாஷை மூலம் காட்டுகிறார்கள் அப்பா அவர்கள்.


2


எல்லாம் வல்ல அல்லாஹ் தனது படைப்புகளுக்கு வழங்கியுள்ள பெரும் பேறு இஸ்லாம் எனும் உயரிய நெறியாகும்இஸ்லாம் என்னும் அறபுச் சொல்லுக்கு சரணடைதல்,அடிபணிதல்சாந்தி அல்லது அமைதியுறல் எனப் பொருள்கொள்வர்இஸ்லாம் மனிதனின் ஆன்மிக ஆற்றலை மிக உன்னதநிலையில் எடுத்துக்காட்டும் எழிலார்ந்த நெறிமனிதனை படைப்பினங்களில் சிறந்த படைப்பு என்றும்இவ்வுலகில் இறைவனின் பிரதிநிதி என்றும் கூறுவது சிந்தனைக்குரியதுதெய்வீகமான தன் அமரத்துவ ஆத்மாவை எவன் தன் ஊடுருவிப் பார்க்கும் மெய்யறிவால் ஊடுருவிப் பார்த்து தனக்குள் தானே தன் தலைவனைக் கண்டுகொள்கிறானோ அவனே சம்பூரண இலட்சிய மனிதனாவான் என்ற அல்லாமா இக்பாலின் கருத்து அருள்நெறி இஸ்லாத்தின் அழகிய நோக்கத்தைப் புலப்படுத்துகிறது .சம்பூரணமான மனிதனை சமைத்துக் காட்டும் பெரும் நெறியே இஸ்லாம் ஆகும்மார்க்க விஷயத்தில் முதன்மையானது அல்லாஹ்வை அறிவதாகும்.என்பது செம்மல்  நபி ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம் அவர்களின் சீருரையாகும்அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் அறிவுக்கே ஞானம் என்று கூறுவர் ஆன்றோர்அருள்மறை குர்ஆன் அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கே ஞானத்தைக்கொடுக்கிறான்ஆதலால் எவர் கல்வி ஞானம் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாகஅநேக நன்மைகளைப் பெற்று விடுவார்.  ஆயினும் இந்த ஞானக்கல்வியைக் கொண்டு அறிவாளிகளைத்தவிர மற்ற எவரும் உணர்ச்சி பெற மாட்டார்கள்” என அல்குர்ஆன் (2:269) தெளிவுபடுத்துகிறதுஞானம் எளிதாகக்  கிடைக்கும் கடைச் சரக்கல்ல. அசைவுறா  உள்ளமும், அயர்விலா முயற்சியும் , தளர்விலாப் பயிற்சியும் ஞானம் பெற இன்றியமையாதன. ஞான மாமேதைதக்கலை தந்த தவசீலர் ஞானம் பற்றி கவிதைகளில் நயமுடன் நவின்றுள்ளார்கள்அது ஞானம் பெற விழைவோர்க்கு விருந்தாக அமைகின்றது. அப்பா அவர்களின் ஞானக் கோவையில் பிஸ்மில் குறம் பகுதிக்கு அடுத்தாற்     போன்று ஞானப்பால் எனும் பகுதி இடம் பெற்றுள்ளதுஇப்பிரிவில் 33 பாடல்கள் உள்ளனஇவை பல அரிய கருத்துகளை ஆழமான சிந்தனைக்கு வழி வகுக்கும் கருத்துகள் கொண்டதாக உள்ளனஇஞ்ஞானப் பாலின் சுவையைத் தெரிந்து கொள்ள சில அடிப்படையான உண்மைகளை அறிவது அவசியம்மனிதன்வெறும் மாமிசப் பிண்டமல்லமனிதனிடத்தில் இறைவனின் அகமியம் இடம் பெற்றுள்ளது . இந்த அகமியத்தை மனிதன் புரிந்து கொண்டால் தன்னை அறிந்து கொண்டவன் ஆகிறான் யார் தன்னை அறிந்து கொள்கிறானோ அவன் அல்லாஹ்வை அறிந்து கொள்கிறான். யார் அல்லாஹ்வை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.   இறைவனை அண்மிப்பவர்கள் இருநிலை நீங்கி இன்ப நிலை அடைகிறார்கள்இப்பேரின்ப நிலை பெறுவதே பெறற்கரிய பேறாகும்.நான் அல்லாஹ்வின் நூரில் ஒளியில் நின்றும் உள்ளவன்அகிலத்தின் அனைத்துப் பொருட்களும் என் ஒளியில் நின்றும் உள்ளன என்பது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருளுரைஇறைவனின் அந்தரங்க அகமியத்தை அஹ்மது முஸ்தபா    ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் கொண்டு வந்தார்கள் .சிறப்புடைய சான்றோர் அதை நெஞ்சுக்கு நெஞ்சாகப்பெற்றுள்ளார்கள் என்பது பாரசீகக் கவிதை தரும் உண்மையாகும்மனிதன் நான்கு போர்வைகளால் போர்த்தப் பட்டிருக்கிறான்.ஜிஸ்மு எனும் உடல்கல்பு எனும் உள்ளம் ரூஹ் எனும் ஆன்மா ஸிர்ரு எனும் அந்தரங்கம் ஆகிய நான்கு போர்வைகள்உடல் எனும் போர்வைக்குரிய நிலை அவரது அலங்காரமாக அமைவது ஷரீஅத்தாகும்உள்ளமெனும் போர்வைக்குரிய அலங்காரம் தரீகத் ஆகும்ஆன்மாவிற்குரிய அலங்காரம் ஹகீகத் ஆகும். அந்தரங்கத்திற் குரிய நிலை மஉரிபத் ஆகும்.  இவற்றையே தமிழில் சரியை கிரியை யோகம் ஞானம்  என்றும் ,இதற்கு ஆதாரமாக அமையும் இடங்களை ஸ்தூலம் சூட்சுமம் ஆன்மம் பிரம்மம் என்றும் வகைப்படுத்திக் காட்டுவர்மனித உடலும் உள்ளமும் எவ்வாறு பல அளப்பரிய சாதனைகளைப் புரியும் தன்மைகளைப் பெற்றுள்ளதோ அதே போன்று ஆன்மாவும் விழுமிய நிலைகளைப்பெற்றுக் கொள்வதற்கான சக்திகளைப் பெற்றுள்ளது .   ஆன்மிக நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொண்டவர்கள் அகமியத்தை உணர்ந்து கொள்கிறார்கள் அகமியத்தை உணர்ந்தவர்கள் அழியாப் பேரின்பம் கொள்கிறார்கள்இந்நிலையில் “ ரிழா ” என்னும் பரிபூரண திருப்தி ஏற்படுகிறது.ஹக்கனாகிய அல்லாஹ்வுடன் ஹக்கனாகிய அல்லாஹ்வுக்காகஹக்கனாகிய அல்லாஹ்வைக் கொண்டு பரிபூரண திருப்தி அடைவதே “ ரிழா ” என்னும் மேன்மை மிக்க பேரின்ப நிலையாகும். இந்நிலை பெறுவதையே பெரும் நோக்கமாகக் கொண்டவர்கள்   ஞானிகள் என்னும் மெய்யறிவாளர்கள்இறை நேசச் செல்வர்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் அருள் நோக்கில் ஞானப்பெருந்தகை பீரப்பா அவர்களும் ஞானப்பால் ஊற்றுகிறார்கள். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் ஊட்டச்சத்துக்கள் இப்பாலில் இருப்பதைப் பருகிடும் உள்ளம் நிச்சயம் அறியும் . மனிதன் மண்தண்ணீர்நெருப்புகாற்றுஆகாயம் என்ற ஐம்பூதங்களால் உருவாக்கப்பெற்றுள்ளான்.  இவற்றினூடே குரு உறைவிடம் கொண்டுள்ளது . இந்த குருதான் ரூஹ்இதன் ரகசியம் தான் ஸிர்ருஇவற்றை உரைப்பதும் உணர்வதும் எளிதல்ல.


காரணபூதந்தானுங் களைந்து வேறாகா வண்ணம் 
பூரணகுருமெய் ஞானப் புதுமையை யறிய வேண்டும் .
பாடல் 23) 

சிந்தையைச் சிதற விடாமல் திக்ரு ஜலிதிக்ரு கல்பி திக்ரு ரூஹி திக்ரு சிர்ரி திக்ரு கபீ என்னும் ஐந்து நிலை களிலும் மனதைப் பயன்படுத்தி வந்தால்,

ஆரண ­ றகினாலு மடங்கிலா வாதி தன்னை 
நேரெனப்பணிவோர்க் கெல்லாம் நித்தங்கண் காணலாமே

என்பது தக்கலை வேந்தரின் வழி காட்டுதலாகும் . ஏக இறைவனை எஞ்ஞான்றும் நினைவில் நிறுத்துகின்ற அருளாளன் அல்லாஹ்வின் அன்பில் ஒன்றிக் கலந்திடும் இப்பேரின்பக் கலை பற்றிய ஞானமே மஉரிபத்தாகும்இதுவே காமிலான இர்பானாகும்.ஆலமுல் அக்பர்மிகப் பெரும் உலகம் எனக் கூறப்பெறுகின்ற இம்மானிட உடலில் ஒளிந்து நிற்கும் ஒப்பிலாப் பரம் பொருளைப் புரிந்து அதை நன்கு பயன்படுத்திப்பேரின்ப நிலை பெற ஷய்கு அல்லது முர்ஷித் அல்லது வழிகாட்டி அவசியம்காமிலான  செய்கு அவர்கள் தான் ஆலமுல் அக்பரான மனிதப் பேருலகிற்குரியதிறவு கோலாகும்இக்கருத்தை தவசீலர் அப்பா அவர்கள் ,

பிறப்புடனிறப்புமில்லை பிசகது தானுமில்லை 
நிறப்புகழனைத்து மொன்றாய் நின்றது நிறைந்த சோதி 
சிறப்புளவமுதமூட்டித் திருப்பதஞ் சேர்க்கும் ஞானத் 
திறப்புகளறிந்த பேர்க்குத் திறவுகோல் குருவதாமே !


இப்பாடல் மூலம் எளிமையான விளக்கம் தந்துள்ளார்கள் குருநாதர் அல்லது   ஷய்கு ஒருவரின் வழிகாட்டுதல் அவசியமென்பதையும் ஆன்மிக ஐயங்களை அவர்களிடமே சென்று நீக்கிக்கொள்ள வேண்டுமென்பதை அப்பா அவர்கள் தங்களின் ஞான மணிமாலையில் ,

அழுக்கறுத்துமெய்யை யறிந்தோர் முன் சென்று 
சுளுக்கறுத்துநீகேளு சொல்லுவா ருட்கருத்தில் 
வஞ்சகத்தைநீக்கி வான்பொருளை யென்றுமவர் 
தஞ்சமெனக்காட்டுவார்தாம் !


எனக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்சுளுக்கறுத்து நீகேளு என்று அப்பா கூறுவதன் கருத்து ;குற்றம் நீக்கி அகப்பெருமையகற்றி எனப்பொருள் கொள்ளலாம் வஞ்சகம் என அப்பா கூறுவதன் கருத்து: அல்லாஹ்வின் கண்ணியத்தை உணராத தன்மையைக்குறிப்பதாகும் .அருள்மறையில் அல்லாஹ் -  வமாகதருல்லாஹ ஹக்க கத்ரிஹி அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் அளவுக்கு அவர்கள் கண்ணியப் படுத்தவில்லை என்று குறிப்பிடுகிறான்ஞானமேதை அப்பா அவர்கள் பிஸ்மில்குறம் 86- வது பாடலில் இறைவனுக்கு மிகவும் விரோதமான செயல் நான் என்ற அகங்காரமும்அனா நிய்யத்தான நீ என்ற வேறுபடுத்தலும் ஆகும்நான் நீ வேறுபாடில்லாத நிலையில் உறுதியாக இருப்பதே ஈமானாகும்இதை நிலைபாடாக்கிக்கொள்வதே  இஸ்லாமாகும் எனவும் எடுத்துக் காட்டுகிறார்கள்.
 


இறை வணக்கத்தில் ஒன்றி இன்பம் துய்த்திட இறைஞானம் மிக அவசியமாகும் இறை ஞானம் அறிந்து கொள்ள சூஃபியாக்கள் அல்லது ஆரிபீன்கள் என்னும்அருள் மாந்தர்களின் அரிய தொடர்பு இன்றியமையாததுசூஃபியாக்களுடன் கலந்து உறவாடாமல் இருக்கும் மார்க்கப் பண்டிதர்கள் தொடுசுவை ஆனம் இல்லாத ரொட்டியைப்போன்று இருக்கிறார்கள் என ஞானவான்கள் கூறுகிறார்கள்வழியான குருவில்லா வணக்க முழுதெல்லாம் வையகத்தில் புருடனில்லாள் வாழ்ந்த சுகமொக்கும் என ஒப்பிடுகிறார்கள் அப்பா அவர்கள்.அகிலத்தின் அருட்கொடை முத்திரை நபியாம்முஹம்மது நபி இத்தரை மீதினில் ஞானம் நல்கிய மாபெரும் தூதர் இவ்வுலகில் இறைவனைக் கண்டவர் 
  


சிறந்தஉயர்ந்த நோக்கத்தில் இறைப் பணிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஒருவர் உண்டு எனில்நிச்சயமாக அவர் அறபகத்தில் தோன்றிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம்என்ற கருத்தை ஆங்கிலேய அறிஞர்கள் கூறுகிறார்கள் .நாயகக் கோமான் அவர்களின் சொல் ­ ஷரீஅத் அவர்களின் செயல் தரீகத் . அவர்களின் உண்மை நிலை ஹகீகத். அவர்கள் கண்ட மெய்ஞ்ஞானம் மஃரிபத் . நம்முடைய வணக்க வழிபாடுகளில் சிந்தனையில் செயலில் பிரதிபலிக்க ஞானம் மிகமிகத் தேவை .உயிரோட்டமான வாழ்விற்கு பெருவிருந்தாக அருமருந்தாக அமைவதுதான் அப்பா அவர்களின்ஞானப் பாடல்கள்அருள்நெறி கண்ட அப்பா அவர்களின் ஞானப்பால் அருந்துவோம் ! என்றும் அகமதில் சிறந்து விளங்குவோம் ! 
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இறைவனின் உள்ளமையை உணர்ந்து அவனில் ஒன்றிக் கலந்திருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக ! ஆமீன் 
No comments:

உக்ரைன் போர் குறித்து நோம் சாம்ஸ்கியின் நேர்காணல்

நோம் சாம்ஸ்கி: ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ விரிவாக்கம் வெற்றியாளர்களைக் கொண்டிருக்காது ஜெர்மனியின் கிராஃபென்வோஹரில் உள்ள 7வது ராணுவப்...