Thursday, September 29, 2016

ஒரு சூபியின் சுயசரிதை சிறுகதை தொகுப்பு பற்றி



ஒரு சூபியின் சுயசரிதை சிறுகதை தொகுப்பு பற்றி
முனைவர் பி.முருகன்
 

சிறுகதையை வாசிக்கும்போது வாசகன் வெறுமே கதைபடிப்பவனாக இல்லாமல் கதையை பலவாறாக ஊகித்து புனைந்தபடியே செல்கிறான். ‘இப்படி இருக்குமோ? இப்படி முடிப்பாரோ! ‘ என்றெல்லாம் அவன் எண்ணிக் கொண்டே படிக்கிறான். இப்போது கதையில் வாசகன்பங்கேற்கஆரம்பித்துவிடுகிறான். அவனும் அக்கதையை தனக்குள் எழுதுகிறான். ஆகவே இங்கே வாசகன் வெறுமெ வாசகனாக இல்லாமல்இணை ஆசிரியனாகசெயல்படுகிறான்.
நவீன ஆக்கங்களில் வாசகன் அப்படைப்பாளிக்கு இணையாகவே கற்பனையை செயல்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இது இன்றைய இலக்கிய திறனாய்வில் பலவாறாக விரிவாகப் பேசப்படுகிறது. சிறுகதையில் உள்ள திருப்பம் வாசக பங்கேற்பை அதிகரிக்கும்பொருட்டு உருவானதே.
சிறுகதை என்பது புத்திலக்கியத்தின் ஒரு முக்கியமான வடிவம். மரபிலக்கியம் ஏற்கனவே சமூகத்தில் உள்ள கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் வலியுறுத்தும் போக்கு கொண்டது. புத்திலக்கியம் அவற்றை மறுத்து அல்லது பரிசீலனைசெய்து பேசும் நோக்கம் கொண்டது. சிறுகதையில் உள்ள திருப்பம் இதற்கு மிக வசதியானதாக அமைந்தது. ஒரு பிரச்சினையை பேசியபடியே வந்து சட்டென்று ஒருபுதிய கோணத்தை திறப்பதற்கு சிறுகதையே மிகச்சிறந்த வடிவம்.
சிறுகதையின் இயல்பு
(1) ஏதேனும் ஒரு பொருண்மையை மையமிட்டிருத்தல்
(2) ஒரு சில பாத்திரங்களைக் கொண்டிருத்தல்.
(3) ஓரிரு நிகழ்ச்சிகளில் அமைதல்.
(4) ஒரு முறை அமர்ந்து அரை மணி முதல் இரண்டு மணி நேரத்திற்குள் படிக்கத் தக்கதாய் விளங்குதல்.
(5) தொடக்கமும் முடிவும் சுவையுடன் விறுவிறுப்பாகக் குதிரைப் பந்தயம்போல் அமைதல்.
(6) வெற்றெனத் தொடுக்கும் சொல்லோ நிகழ்ச்சியோ அமையாதிருத்தல்.
(7) சுருங்கச் சொல்லலும் சுருக்கெனச் சொல்லலும் பெற்றிருத்தல்.
(8) உரையாடல் அளவோடிருத்தல்.
(9) கண்முன்னே நேரே நடப்பது போன்ற உணர்வுத் தூண்டலை ஏற்படுத்துதல்.
இவை சிறுகதையின் இயல்புகளாகும்.
சிறுகதை அரைமணியிலிருந்து ஒருமணி அல்லது இரண்டு மணி அவகாசத்திற்குள், ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் ; தன்னளவில் முழுமை பெற்றிருக்க வேண்டும். அது தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாக இருக்க வேண்டும். கதையைப் படித்து முடிப்பதற்குள் புறத்தேயிருந்து எவ்விதக் குறுக்கீடுகளும் பாதிக்காமல், வாசகனின் புலன் முழுவதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று எட்கர் ஆலன்போ சிறுகதையைப் பற்றிய தமது மதிப்பீட்டைத் தந்துள்ளார்.
சிறுகதை என்பது எடுத்த எடுப்பிலேயே படிப்போரின் கவனத்தை ஈர்த்துப் பிடித்தல் வேண்டும். நெகிழ்ச்சியின்றி இயங்கி உச்சநிலை முடியும் வரை வாசகரின் முழுக்கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, இடையீடோ, சோர்வோ நேரும் முன்பாகவே சிறுகதை முற்றுப் பெறுதல் வேண்டும் என்று ஹெச்.ஜி. வெல்ஸ் கூறியுள்ளார். பின் நவீனச் சிறுகதை என்பது என்ன?
நவீனச் சிறுகதைக்கு ஆரம்பம், நடு, முடிவு ஆகிய அம்சங்கள் உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு இது கிடையாது. நவீனச் சிறுகதைக்கு மையம் உண்டு. அதாவது கதைக் கரு என்ற ஒன்று உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு மையம் என்று எதுவும் இல்லை. கதை, கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு என்பது போன்ற வகைமைகளும் இல்லை. இவற்றுள் ஏதாவது ஒன்றை வைத்தோ அல்லது எல்லாவற்றையும் சேர்த்தோ ஒரு பின் நவீன கதை அமையலாம். இது ஒரு பிரதியை அதன் ஒற்றைத்தன்மையிலிருந்து விடுவிக்கிறது. கலையை அதன் சட்டகத்திலிருந்து வெளியேறி சுதந்திரமாக அலைது திரிய அனுமதிக்கிறது. எழுத்தின் பல்வேறு சாத்தியங்களை விரித்துப் போடுகிறது. சொற்களால் ஆனது மொழி என்றால் மௌனங்களால் ஆனது உபமொழி என்று சொல்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக எர்னஸ்ட் ஹெமிங்வேயின், ‘வெள்ளை யானையைப் போன்ற மலைகள்என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம்.
எம்.ஜி. சுரேஷ்,கௌதம சித்தார்த்தன், பா. வெங்கடேசன், ஜீ.முருகன், எச்.முஜீப் ரஹ்மான் போன்ற பலரும் பின் நவீன சிறுகதைகளை எழுதி வருபவர்களாகக் கருதலாம். பின் நவீனத்துவத்துக்காகவேபன்முகம்என்ற பெயரில் ஒரு காலாண்டிதழ் ஆகஸ்ட் 2001 லிருந்து ஐந்தாண்டுக் காலம் வெளிவந்தது. அதில் பல பின் நவீனச் சிறுகதைகள் பிரசுரமாயின. பல புதிய எழுத்தாளர்கள் அதில் எழுதினார்கள். அதில் தமிழவன், ரமேஷ்-பிரேம், எம்.ஜி.சுரேஷ், பா.வெங்கடேசன், ராகவன், நஞ்சுண்டோர்க்கினியன் போன்ற பலர் எழுதிய பின் நவீன சிறுகதைகள் வெளி வந்தன. அவை பின் நவீனக் கூறுகளான வடிவப் பரிசோதனை, சிதைவாக்கம், நேரற்ற வாசிப்பு, ஊடிழைப்பிரதி, கதை மீறும் கதை, போன்ற பல அம்சங்களுடன் இருந்தன. .தமிழ்ச்செல்வனின், ‘வாளின் தனிமைதமிழில் எழுதப்பட்ட முக்கியமான பின் நவீனச்சிறுகதைளில் ஒன்று. தமிழவனின் சிறுகதையில், லிஸ்பனிலிருந்து இந்தியாவுக்கு வந்த வாஸ்கோ சரமாகோ என்பவன் எழுதிய பிரதியையும், ஐந்திணைப்பாகுபாடு கொண்ட பழந்தமிழ் இலக்கியத்தையும், கதை மாந்தரின் இரட்டைத் தன்மை பற்றியும் விவரிக்கிறார். எம்.ஜி.சுரேஷின்செய்திகள்என்ற சிறுகதை இன்றைய பின் நவீன உலகில் பிற பொருட்களைப் போல செய்தியும் ஒரு வர்த்தகப் பண்டமாகிவிட்டது. செய்தியை வாசிக்கும் வாசகர்கள் எப்படி நுகர்வோராக மாறி இருக்கிறார்கள் என்ற அபத்தத்தைச் சுட்டிக் காட்டுகிறது. பா,வெங்கடேசனின்தேவகுமாரர்களுக்கு சாத்தான் தீர்ப்பு சொல்லியதுஎன்ற கதை பைபிள் நடையில் எழுதப்பட்டது. தேவகுமாரன் X சாத்தான் என்ற எதிர் நிலையை சாத்தான் X தேவகுமாரன் என்று மாற்றிப் போடுகிறது. தேவன் இறுதி நாள் தீர்ப்பு சொல்லுவான் என்பது பைபிளின் ஐதீகம். இதில் தேவகுமாரருக்கு எதிராக சாத்தான் தீர்ப்பு சொல்வது சிறப்பு. இதில் விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இந்தக் கேள்விக்குள்ளாக்கும் தன்மை பின் நவீனத்துவக் கூறு ஆகும். நஞ்சுண்டோர்க்கினியனின் இரண்டு சிறுகதைகளும் தமிழ்ப் பின் நவீனத்துவச் சிறுகதையின் ஒரு புதிய பரிமாணத்தை முன் நிறுத்துகின்றன. சிற்றிதழ்களில் மட்டுமே புழங்கிக்கொண்டிருந்த பின் நவீனச்சிறுகதையின் கூறுகள் இடை நிலை மற்றும் வெகுஜனப்பத்திரிகைகளில் எழுதப்படும் கதைகளிலும் நீட்சியடைந்தன. 2005 ல் வெளியான தேவதைகளின் சொந்த குழந்தை என்ற எச்.முஜீப் ரக்மானின் சிறுகதை  தொகுப்பு தான் தமிழில் பின்நவீனசிறுகதைகள் என்ற அடைமொழியுடன் வெளியான தொகுப்பு ஆகும். அந்த வகையில் அமானுஷ்ய கதைகளை அடிப்படையாக கொண்டு ஒரு சூபியின் சுயசரிதை என்ற நூலை தான் மானுடம் அற்ற அமனித கதைகள் என்று சொல்லலாம்.தமிழில் இம்மாதிரியான தொகுப்புக்கு முன்மாதிரி இல்லை.அனைத்தும் பேய்கதைகள் போன்ற திகில் கதைகள்.சற்றுவித்தியாசமான உள்ளடக்கம் ஆகும்.

கதை என்பதையும் புனைகதை என்பதையும் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையின்றித் தமிழில் புனைகதை வரலாறு எழுதப்படுவதைக் காண்கிறோம். இதனால் தான் தமிழில் 19ஆம் நூற்றாண்டிலேயே நவீன சிறுகதை உருவாகிவிட்டதாக எழுதுவதைச் சிலர் பழக்கமாகக் கொண்டுள்ளனர். தவறாக, புரிதல் சார்ந்த நிகழும் அபத்தமாக இதனைக் கருதலாம். வீரமா முனிவர், பாரதியார், .மாதவையா, .வெ.சு. அய்யர் ஆகிய பிறர் நவீன சிறுகதைகளை உரு வாக்கியுள்ளனர் என்னும் கூற்றை மேற்குறித்த பின் புலத்தில் அணுக வேண்டும். இவர்கள் வெறும் கதை களை, புராணக் கதை, நிகழ்வுகளை வெறுமனே பதிவு செய்துள்ளனர். அவை நவீன கதைகளாக அல்லது சிறுகதைகளாக அமைய வாய்ப்பில்லை.
நவீனத்துவத்தின் எல்லைகள் மற்றும் போதாமை காரணமாக அதனிலிருந்து முளைத்த மற்றொரு கூறே பின் நவீனத்துவம். உதாரணமாக, நவீனத்துவத்தின் முக்கிய அம்சமானமையப்படுத்துதல்என்பது அதிகாரத்தின் முகமாக ஒரு கட்டத்தில் மாறத் துவங்குகிறது. அதிகாரத்தின் கூர்மையான நகங்களுக்குள் சிக்கிக் கொண்ட விளிம்பு நிலை மக்களின் கதை அங்கே கவனிக்கப்படாமல் ஆகிறது. பின் நவீனத்துவம் இந்த மக்களைத் தத்தெடுத்துக் கொள்கிறது. இவர்களின் குரலைத் தங்கள் படைப்புகளாக ஆக்குகிறது.

நவீனத்துவத்தின் மற்றொரு அம்சமானதொழில் வளர்ச்சிமற்றும்தொழிற் புரட்சிஎன்பது ஒரு கட்டத்தில் ஒரு தேசம் இன்னொரு தேசத்தை விழுங்குவதற்கான முகாந்திரமாக மாறி முடிவில் இரண்டு உலகப்போர்களை உருவாக்கியது (தொழிற் வளர்ச்சியை இதற்கு முழுமுதற் காரணமாக சொல்வது விவாதத்திற்குரியது என்றாலும் போருக்கான மூல காரணிகளில் இது முக்கியமானது) .இந்த இடத்தில் தொழில் வளர்ச்சி என்பதன் பின்விளைவுகள் அதன் சாதகத்தோடு பாதகங்களையும் கொண்டு வந்திருப்பதின் அபத்தங்களை பின் நவீனத்துவம் குறித்துக் கொள்கிறது.

அதேபோலமருத்துவம்என்ற நவீனத்துவ அம்சம், பணம் வைத்திருப்பவர்களுக்காக மட்டுமே என்று மாறிப்போன ஒரு அபத்தநிலையையும் பின் நவீனத்துவம் ஒரு சங்கடமான புன்னகையுடன் குறித்துக் கொள்கிறது.

நவீனத்துவம் பெரிதும் சிலாகித்த ஜனநாயகம், சுதந்திரம், சோஷலிசம் போன்ற கருதுகோள்கள் தற்காலத்தில் எவ்வாறு பொருளிழந்து போய்விட்டன என்பதையும் பின் நவீனத்துவம் தன் படைப்புகளின் மையமாக ஆக்குகிறது. உடைந்த ரஷ்யாவுடன் தானும் கிட்டத்தட்ட காலாவதியாகி விட்ட சோஷலிசத்தின் மீதான ஆழ்ந்த அவநம்பிக்கையும், ஜனநாயகம் என்பது சுதந்திர தினத்தில் மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கப்படும் ஒரு தேய்வழக்காக (Cliche) மாறிப் போனதின் நிதர்சனமும் (உதாரணம்: ராஜீவ் காந்தியுடன் செத்துப் போன எத்தனையோ பொதுமக்களும், போலீஸ்காரர்களும் இன்றும் ஏன் அஞ்சலிக்குரியவர்களாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லைசுதந்திர போராட்டத் தியாகிகள் எல்லாம் செல்லாக் காசுகளாக கருதபடுவதன் காரணம் என்ன? ..சியின் வாரிசுகள் இன்றும் ஏன் வறுமையின் உச்சத்தில் இருக்கிறார்கள்? மாறி மாறி வந்த சுதந்திர அரசுகள் ஏன் அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. மாறாக ..சியின் சிலைக்கு மட்டும் ஆடம்பரமான மாலைகளும், மேடைப் பேச்சுகளும் இத்யாதி இத்யாதிகளும்.. ராணுவ வீரர்களின் புல்லட் ப்ரூஃப்களின் உள்ள ஓட்டைகள் உண்மையில் ஜனநாயகத்தின் ஓட்டைகளா? அம்பானிகள் தங்கள் வீடுகளுக்கான மின்கட்டண நிலுவையாக லட்சக்கணக்கான ரூபாய்களைத் தள்ளுபடி செய்து அறிவிக்கும் அரசுகள் சாதாரண குடியானவனின் வீட்டுக்குள் புகுந்து மின்கட்டையைப் பிடுங்கிக் கொள்வது ஏன்? தீவிரவாதிகளின் வெடிகுண்டுகளுக்கு சாதாரண பொதுமக்கள் பஸ்நிலையங்களிலும் ரயிலடிகளிலும் சாகும்போது அறிக்கை விடும் அரசுகள், ஐந்து நட்சத்திர தாஜ் ஹோட்டலில் பணக்காரர்கள் சாகும்போது மட்டும் துள்ளிக் குதித்து அதிரடி நடவடிக்கை எடுப்பது ஏன்? ஒரு நடிகன் கொலை செய்தால் மட்டும் ஏன் அனைத்து தரப்பிலும் இருந்து அவனுக்கு ஆதரவு குவிகிறது. ஒரு நாள் கூட சிறைக்குச் செல்லாமல் கூலிங் க்ளாஸ் அணிந்து கொண்டு படு டீசன்ட்டாக வெளியே வருகிறான். நடைமுறையில் ஒரு படைப்பாளி இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஜனநாயகம், சுதந்திரம். மேன்மை போன்ற நவீன வார்த்தைகளின் உண்மையான பெறுமதி என்ன என்று தன் படைப்புகளில் தேடும்போது ஆழ்ந்த அவநம்பிக்கையுடன் அவனை அறியாமல் அவன் பின் நவீனத்துவ சட்டங்களுக்குள் வந்து சேர்கிறான்.     
வழக்கமாக கதைசொல்லும் முறையிலிருந்து பலவகையிலும் விலகிச்செல்பவை ஆதலால் அதிகமாக கவனிக்கபப்டாதவை முஜீபின் கதைகள். நாம் விரும்பும் கதைகள் நம்மை அவற்றுக்குள் இழுக்க

முயலும்போது நம்மை வெளியே வலுக்கட்டாயமாக நிறுத்தி பேச முயல்பவை இவை. கதையில் நாம் அடைய முயலும் உணர்ச்சிகளை முன்னரே கட்டுப்படுத்திக் கொண்டு கதைவிளையாட்டுக்கு அழைப்பவை. கதாபாத்திர உருவகங்களை அளிக்காமல் வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் மட்டுமே உள்ளன, ஆளுமைகள் இல்லை என்று காட்ட முயல்பவை. இக்காரணத்தால் பல கதைகள் நம் நினைவிலேயே நிற்பதில்லை. கதைகள் ஒன்றோடொன்று கலந்து ஒற்றைக் கதைவெளியாகவே முஜீபின் கதைகளை நாம் நினைவுகூர முடிகிறது.

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள்

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள் பேரா.எச்.முஜீப் ரஹ்மான் ரஹ்மத் ராஜகுமாரன், இவரின் இயற்பெயர் ஏ.பி.எம். அப்த...