கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Wednesday, November 07, 2001
பாடகி-ஆண்டன் செகோவ்
அந்தப் பாடகியின் பெயர் ஆஷா. அவள் இன்று காட்சியளிப்பதை விட இளமை நிறைந்தவளாகவும், அழகு மிகுந்தவளாகவும் இருந்த காலத்தில் ஒருநாள் அவளது அன்புப் பிணைப்பில் அடைபட்டுக்கிடந்த ‘நிக்கோலா’ எனும் ஆண் அழகனுடன் அந்த அழகுப் பைங்கொடி வேனல்கால மாளிகையில் இளைப்பாறிக் கொண்டிருந்தாள். சூரியனின் வெப்பவெறி இன்னும் அடங்காத வேளை, மதுக்கிண்ணத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்த நிக்கோலாவின் மனம் நிலைதடுமாறிப் புரண்டு கொண்டிருந்தது. மாலை நேரத் தென்றலை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். மனம் பொறுமையெனும் கடலைத் தாண்டிக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது....
அப்போது தான் வெளிக்கதவின் மேல் பொருத்தப்பட்டிருந்த ‘அழைப்பு மணி’ ஒலித்தது. மதுவின் மாய அணைப்பில் மயங்கியிருந்த ‘நிக்கோலா’ மணியோசை கேட்டதும் ஏதோ தோன்றியவனாய்த் துள்ள எழுந்து ஆஷாவின் நேராக கூர்ந்து பார்த்தான். அந்தப் பார்வையிலே கேள்விக் குறியின் அர்த்த புஷ்டியான காவியம் ஒளிந்திருந்தது.
“தபால்காரனாகவோ அல்லது சகபாடகியான ஏதாவது பெண்களாகவோ இருக்கக் கூடும்” என ஆஷா தன்செம்பவள அதரங்களில் புன்னகை இழையோட பதில் கூறினாள்.
‘தான் அங்கிருப்பதை தபால்க்காரனோ சக பாடகி பெண்களோ தெரிந்து கொள்வதில் நிக்கோலாவிற்கு அவ்வளவு சங்கோஜமேற் படவில்லையெனினும், ஏனோ ஒரு முன் எச்சரிக்கைக்காக அவன் உள் அறைக்குச் சென்றான். ஆஷா அவசர அவசரமாகச் சென்று கதவைத் திறந்தாள்.
எதிர்பார்த்தபடி தபால்காரனோ.... சக பாடகிகளோ அல்ல எதிரே காட்சியளித்தது.. பின் யார்? ஒரு பெண். சாதாரணப் பெண் அல்ல. இளமை கிண்ணத்தையும், அழகு வர்ணத்தையும் தன்னகத்தே ஏந்தி வந்துள்ள அழகுப் பைங்கொடி. அவள் சாதாரணமான ஆடைகள்தான் அணிந்திருந்தாள். இருந்த போதிலும் அதுவும் அழகாகவே காணப்பட்டது.
ஆஷா.. அந்த அழகு பெண்ணைக் கண்டு ஆச்சரியமடைந்தாள். அப்பைங்கிளியின் வதனத்திலே எத்தனையெத்தனையோ சோகக் கதைகள் மறைந்து கிடந்தன. செங்குத்தான மாடிப்படிவழியாக வந்தவள் போல் அவள் மார்பகம் விம்மி விம்மித் தாழ்ந்து கொண்டிருந்தது.
“என்ன வேண்டும். யார் நீ” ஆஷா கேள்விக் கணையைத் தொடுத்தாள்.
பதில் இல்லை.
அந்த அழகுத் தேவதை ஓரடி முன் காலெடுத்து வைத்தாள். அந்த அறையைச் சுற்றித் தன் கண்களை ஒரு முறை விரட்டினாள். அவளது கால்கள் ஏனோ நடுநடுங்கிக் கொண்டிருந்தன. சொல்லொண்ணா மனப் பளுவைத் தாங்கிக் கொண்டிருந்தமையாலோ என்னமோ அறையில் காணப்பட்ட சோபாவில் அமர்ந்தாள். அவள் அதரங்கள் எத்தனை நேரம் துடித்துக் கொண்டிருந்தனவோ.. எத்தனையெத்தனை எண்ண அலைகள் வெளிப்பட தவித்துக் கொண்டிருந்தனவோ.. ? ஆனால் குரல் வெளிவரவில்லை...
இறுதியில் இந்த அழகுத் தேவதையின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது... செவ்வானம் போல் சிவந்து கிடந்த அக்கண்களை இமைகள் ஒன்றிரண்டு தடவை வருடிச் சென்றன.
“எனது கணவர் இங்கு இருக்கின்றரா?” இதுதான் அந்தப் பெண் கேட்ட முதல் கேள்வி.
“கணவரா...?” ஆஷாவின் அதரங்கள் பேசின. திடீரென ஏற்பட்ட பயத்தால் அவளது கைகால்கள் குளிர்ந்து மரத்துப் போய் விட்டன.
“என்ன..? யார்?” மீண்டும் அவள் கேட்டாள்.
“எனது கணவர் நிக்கோலா” ஒரு நிமிட அமைதி புரண்டோடியது. அந்த அழகி தனது கைக் குட்டையால் அடிக்கடி தனது அதரங்களைத் துடைத்து இதயத்தின் அடித்தளத்திலே உறைந்து கிடக்கும் வேதனையை மறைக்க முயன்று கொண்டிருந்தாள். ஆஷா உணர்வற்ற மரம்போல் நின்று கொண்டிருந்தாள். அவள் கண்கள் ஒருவிதமான பயத்தினையும் ஆச்சரியத்தையும் உணர்த்தின.
“அப்படியென்றால் அவர் இங்கு இல்லையென்றா நீ கூறுகிறாய்.... பொய்” அந்தப் பெண் சற்றுகனத்த குரலில் தன் இதழ்களினூடே அசாதாரணமான புன்னகை மலரக் கேட்டாள்.
“நீ யாரை நினைத்து கேட்கிறாய் என்று கூட எனக்குப் புரியவில்லை”
“இல்லை.. நீ வேண்டுமென்றே நீசத்தனமாகப் பதில் கூறுகிறாய். நீ மிகவும் கேவலமானவள்”. முன்பின் அறியாத அப்பெண் குற்றம் சாட்டிப் பேசினாள்.
வெட்கமும் ஒருவகை வெறுப்பும் கலந்த பார்வையில் ஆஷாவை உற்று நோக்கினாள். ஆம்.. நீ.. மனித உருவத்திலே நடமாடும் மிருகம். நேரிடையாக அதுவும் வெளிப்படையாக உன்னைக் குறித்துக் கூற முடிந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்....” மீண்டும் அவள் பேசினாள்.
அப்பெண்ணின் பார்வையில், தான் ஒரு பயங்கரமானவளாகவும், மனித மிருகமாகவும் காட்சியளிக்கிறோம் என்பது ஆஷாவிற்கு புரிந்தது. தனது ரோஜா நிறக் கண்ணாடிக் கன்னங்களையும், ஒதுக்கி விட்டால், ஒதுங்காத நெற்றியில் தவழ்ந்து தாண்டவமாடும் கூந்தலையும் குறித்து அவளுக்கு ஒருவிதமான வெட்கம் மேலிட்டது. திடீரென தான் மெலிந்து அழகிழந்த அவலட்சணமாகி விட்டதாகவும் தோன்றியது. சற்று நேரம் புரண்டது. தான் மதிக்க முடியாதவள் என்ற உண்மையைத் தன்னால் மறைத்து வைக்க முடியுமென்றும், பழக்கமில்லாத அந்த விசித்திரமான பெண்ணின் முன்னால் தான் இத்தனை தூரம் வெட்கப்படத் தேவையில்லை என்றும் அவள் மன வண்டு வீராப்புடன் ரீங்கரித்தது.
“எனது கணவர் எங்கே?” அந்த நங்கை மீண்டும் கேட்டாள். “அவர் இங்கு இருக்கின்றாரா? இல்லையா? என்பதைக் குறித்து நான் அவ்வளவு கவலைப்படவில்லையென்றாலும் அவர் பணிபுரியும் அலுவலகத்தில் கொஞ்சம் பணம் மோசடி போயிருப்பது குறித்து போலீசார் கணவரைத் தேடி வருகிறார்கள் என்பதை மட்டும் உன்னிடம் கூற வேண்டியவளாயிருக்கிறேன். பின் விளைவுகளுக்கு பொறுப்பாளி நீயேதான்” சற்று கடுமையாக கூறிவிட்டாள். திடீரென எழுந்து மனக் கொந்தளிப்புடன் அங்குமிங்கும் நடந்தாள் அவள்.
அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்டதும் ஆஷாவிற்கு கூற முடியாத ஒரு பயம் மேலிட்டது என்னவென்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“போலீசார் கணவரைக் கண்டுபிடித்து இன்றுதானே கைது செய்வார்கள்” என்று கூறியபடி அப்பெண் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அந்த பெருமுச்சிலே ஒரு வகை வெறுப்பும், வருத்தமும் நிழலாடிக் கொண்டிருந்தது.
“என் கணவரை இந்நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. யாரென எனக்குத் தெரியும்! கேவலமான ஒரு பிராணி! வியாபாரப் பொருளான ஒரு பெண்” கூறி முடிக்கும் முன் அவளது பவளச் செவ்விதழ் படபடத்தது. முகம் விகாரமடைந்தது.
“ஏ.... நீலி. நான் ஆதரவற்றவள் என்பது உனக்குத் தெரியுமா? நான் சக்தியற்றவள். நீ என்னை விட சக்தி மிக்கவள். பருவப் பூரிப்பில் கொந்தளிப்பவள். சக்தியற்ற என்னையும், என் சந்ததிகளையும் காக்க அவர் எங்களுக்கு இன்றியமையாதவர் என்பது உனக்குத் தெரிகிறதா? ஆண்டவன் இதனையெல்லாம் பார்க்கிறார். அவர் ஒரு நீதிபதி. நான் விடும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும், நித்திரையின்றி தவித்த எண்ணற்ற இரவிற்கும் கடவுள் உன்னைத் தண்டிக்காமலா விடுவார். என்னைக் குறித்து சிந்திக்க வேண்டிய வேளை நெருங்கிக் கொண்டு தானிருக்கிறது.”
“போதும் உன் அறிவுரை எனக்கு அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாது கூறி முடிக்கும் முன் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக புரண்டொழுகியது. ... அந்தப் பெண்ணிற்கு அது. நீலி வடிக்கும் போலிக் கண்ணீராகவே பட்டது. மீண்டும் ஆஷாவை முறைத்துப் பார்த்தாள். “எனக்கு விஷயங்களெல்லாம் நன்கு தெரியும். நீ யார்? எப்படிப்பட்டவள் என்பது தெரியாததல்ல. கடந்த இரண்டு மாத காலமாக எல்லா நாட்களையும் இங்கே உன்னொடுதான் கழித்து வருகிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.”
“உண்மைதான் அதற்கென்ன வேண்டும்? அப்படியே இருந்தாலும் என்னவாம். எத்தனையோ அன்பர்கள் என்னை நாடி வருகின்றனர். எவரையும் என்னைத் தேடி வரும்படி கட்டாயப்படுத்தவில்லை. வருவதும் வராமலிருப்பதும் அவர்கள் விருப்பமல்லவா” தைரியத்தை வரவழைத்தவளாய் ஆஷா கூறி விட்டாள்.
“பணம் களவுபோனதைப் போலீசார் கண்டுபிடித்து விட்டனர். அலுவலகத்துப் பணத்தைக் கையாடி உன்னைப் போன்ற மிருகத்திற்கே செலவிட்டிருக்கிறார்.” குரல் உயர்ந்து தொடர்ந்தது. உனக்கு ஒருவிதமான வாழ்க்கை லட்சியமும் இல்லை. அடுத்தவர்களை கெடுத்தே வாழ்கின்றாய். ஆனால், மனிதாபிமானம்கூட உன்னிடம் இல்லாமல் போய்விடுமென யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அவருக்கு ஒரு மனைவி இருக்கிறாள்... குழந்தைகள் இருக்கின்றன. அவரைச் சட்டம் தண்டித்து சிறைக்கு அனுப்பிவிட்டால் எங்கள் கதி என்ன? சிந்தித்துப் பார். அவரையும், என்னையும் குழந்தைகளையும் துன்பக் கடலிலிருந்து மீட்க இன்னும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இன்று தொள்ளாயிரம் ரூபிள்ஸ் கொடுப்பதாயிருந்தால் தப்பித்துக் கொள்ளலாம். கேவலம் தொள்ளாயிரம் ரூபிள்ஸ் ஆனால், அது இன்றே வேண்டும்.”
“தொள்ளாயிரம் ரூபிள்ஸா? ஆஷா குரல் தாழ்ந்தது. அவரிடமிருந்து தொள்ளாயிரம் ரூபிள்ஸ் நான் வாங்கியதே இல்லை. என்னிடம் பணமுமில்லை.”
“அதனை நான் எதிர்பார்க்கவும் இல்லை. நான் வேறொன்றைத் தான் எதிர்பார்க்கிறேன். உன்னைப் போன்ற பெண்களுக்கு ஆண்கள் விலை மதிப்பான பரிசுகள் கொடுப்பார்களல்லவா? அப்படி என் கணவர் உன்னிடம் தந்திருக்கும் பரிசுகளை திரும்பத் தந்துவிட்டால் போதும்”.
“அப்படி நிக்கோலா எனக்கு எந்தவிதமான பரிசுகளையும் தந்ததில்லை. தந்தாலல்லவா திரும்ப...”
“என்னால் நம்ப முடியவில்லை. அப்படியானால் அந்தப் பணமெல்லாம் எங்கே போகும். எங்கள் பொருள் செலவழிக்கப்பட்டது குறித்து நான் கவலைப்படவில்லை. இதைக் கவனமாக கேள். நான் உணர்ச்சி மேலீட்டால் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்துவிடு. ஒருவேளை என்னை நீ வெறுக்கக் கூடும். ஆனால், கொஞ்சமாவது கருணை இருக்குமானால் எனது நிலைமையிலிருந்து ஆலோசித்துப் பார். தயவு செய்து மறைக்காமல் அவர் தந்த பரிசுகளை திரும்ப தந்துவிடு”
வெறுப்பு மேலீட்டால் தோள்கள் சிலிர்த்தன ஆஷாவிற்கு. “நான் சொன்னால் நம்ப மாட்டாய். நான் மகிழ்ச்சியோடு பரிசுகளை தருகிறேன். ஆனால், கடவுள் சாட்சியாக சொல்கிறேன். அவர் எந்தவிதமான பெரிய அன்பளிப்பும் எனக்குக் கொடுக்கவில்லை. ஆனால், ஏதோ சின்ன பொருள் தந்துள்ளார். அதனை தந்து விடுகிறேன்.”
ஆஷா மேஜை டிராயரைத் திறந்தாள். எடை குறைந்த தங்க வளையலையும் மோதிரத்தையும் எடுத்து நீட்டி அவளை எடுத்துக் கொள்ளும்படி வேண்டினாள்.
இதைக் கண்டதும் அழகு பைங்கொடியின் முகம் சிவந்தது. “நான் பிச்சைக் கேட்கவில்லை. உன்பொருள்களை நான் கேட்கவில்லை. கண்வீச்சுக்களாலும், நயமான பேச்சுக்களாலும் நீ என் கணவரிடமிருந்து பெற்றிருக்கும் அந்தப் பொருள்களைத் தான் திரும்பக் கேட்கிறேன். நிக்கோலா பாவம் ஒரு கோழை. கடந்த வியாழக்கிழமை என் கணவரோடு உல்லாசமாகக் கடற்கரையில் உலாவும் போது நகைகள் அணிந்திருந்தாயே எனக்குத் தெரியாததல்ல! என்னை ஏமாற்ற நினைக்காதே. கடைசியாக கேட்கிறேன். அந்தப் பொருள்களைத் திரும்ப தருகிறாயா என்ன?”
“இதைத் தவிர உங்கள் கணவரது எந்தப் பொருளையும் நான் பார்த்ததில்லை. வேறென்ன.. இனிப்புப் பண்டங்கள்.
‘இனிப்பு பண்டங்கள்’ அப் பெண் குலுங்க குலுங்க சிரித்துக் கொண்டாள். வீட்டில் குழந்தைகளின் பசியை போக்க ரொட்டி கூட இல்லை. இங்கு இனிப்பு பண்டங்கள்.. சரி... அந்தப் பொருள்களை திருப்பித் தர சம்மதமில்லை அல்லவா!”
பதில் இல்லை.....
அப்பெண் தொடர்ந்தாள். இன்று தொள்ளாயிரம் ரூபிள்ஸ் திருப்பிக் கொடுக்கவில்லையென்றால், ‘நிக்கோலா’ கைது செய்யப்படுவார். குடும்பம் பரிதவித்துப் போகும். இந்தக் கேவலமான பெண்ணை கொலை செய்வதா அல்லது அவளது கால்களில் விழுந்து பிச்சை கேட்பதா? சிந்தனை சிறகடித்தது. கைகுட்டையால் முகத்தை மறைத்தாள். கண்ணீர் அதனை நனைத்தது.
நான் மண்டியிட்டுக் கேட்கிறேன். என் கணவரை கொள்ளையிட்டு நாசம் செய்துவிட்டாய். இனி அவரை காப்பாற்ற வேண்டும். எனது குழந்தையை நினைத்தாவது இரக்கம் காட்டு குழந்தைகள் தவறு எதுவும் செய்யவில்லையே...!!
குழந்தைகள் வழியினின்று கதறித் துடிப்பதாக ஆஷாவின் கற்பனையில் தோன்றியது. அவளும் மனம்விட்டு அழுதாள்.
“நான் என்ன செய்வேன். நான் ஒரு மோசக்காரியாகவும், கேவலமானவளுமாக உன் கற்பனையில் பட்டுவிட்டேன். ஆனால் கடவுள் பேரில் ஆணையிட்டுக் கூறுகிறேன். நீ நினைக்கிறபடி அவர் எனக்கொன்றும் தந்ததில்லை. எல்லோரையும் போல் என்னை எண்ண வேண்டாம். எங்கள் இனத்தில் ஒரு பாடகியான எனக்கு மட்டும் ஒரு காதலன் ஒருவர் உண்டென்று எல்லோருக்கும் தெரியும். ‘நிக்கோலா’ நல்ல அறிவாளி. பழகுவதற்கு ஏற்றவர். என் உள்ளத்தைக் கவர்ந்தவர். ஆகவே அவரை நான் ஏற்றுக் கொண்டதில் தவறு ஒன்றுமில்லே... இதுவே உண்மை”
“கதையொன்றும் தேவையில்லை நான் தேடுவதும், நாடுவதும் அவரை விடுதலை செய்வதற்கான பணம். அதை தயவு செய்து தந்துவிடு உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன். உன் காலடியிலே மண்டியிட்டு கேட்கிறேன்.
ஆஷாவின் கைகால்கள் நடுங்கின. தன் முன்னிலையில் திறமையாக நடித்து தன் காரியத்தை சமாளிக்கவே அவ்வாறு மண்டியிடுவதாகவும், தன்னை இழிவுபடுத்தி தற்பெருமையை நிலைநாட்ட முயற்சிப்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.
“சரி - நான் பொருள்களை தருகிறேன் எல்லாவற்றையும் எடுத்துக் கொள். ஆனால் அவைகள் நிக்கோலாவிடமிருந்து கிடைத்ததல்ல... வேறு சில அபிமானிகள் எனக்கு அளித்த பரிசுகள்.. மனம் போல எடுத்துக்கொள்”
அவள் ஒரு அல்மாராவைத் திறந்தாள். அதனுள் இருந்து வைரங்கள் பதித்த நகைகள். பவள மாலைகள். தங்க மோதிரங்கள் ஆகியவைகளை எடுத்து அந்த அழகு பைங்கொடியிடம் கொடுத்தாள்.
“இவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் விடுங்கள். இன்னும் ஒன்று சொல்கிறேன். நிக்கோலாவை உங்கள் உடமையாகக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் அவரை இங்கு வரும்படி அழைக்கவில்லை”
கண்களில் கண்ணீர் நிறைந்திட நகைகளை ஒரு முறை பார்த்தாள். “இவையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் ஐநூறு ரூபிள்ஸ்தானே வரும்”
ஆஷா ஆவேசமடைந்தாள். அல்மாராவின் மற்றொரு அறையிலிருந்து மேலும் சில நகைகளை எடுத்துப் போட்டாள். பின்னர் கைகளை விரித்தபடி அவள் கூறினாள். “இனி எந்த விதமான பொருளும் என்னிடமில்லை. வேண்டுமானால் சோதித்து பார்!
அந்த அழகி நடுங்கும் கரங்களால் அப்பொருள்களையெல்லாம் வாரியெடுத்து கைக் குட்டைக்குள் வைத்து பொதிந்து பின் மௌனமாக வெளியேறினாள். அறைக்கதவை வேகமாக திறந்து கொண்டு நிக்கோலா வெளிவந்தார். கண்களிலே நீர் முத்துக்கள் ததும்பின.
“நீங்கள் எனக்கு அன்பளிப்பு தந்திருக்கிறீர்கள்... இல்லை நான் என்ன கேட்டிருக்கிறேன்... சொல்லுங்கள்” ஆத்திரத்துடன் ஆஷா அவரிடம் கேட்டாள்.
“அதிருக்கட்டும்... அவள் உன் காலை பிடித்து எனக்காக கெஞ்சினாளல்லவா?”
“நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள்” ஆஷா... மீண்டும் உரக்க கேட்டாள்.
“ஆஷா” அவளைத் தன் குரலால் அடக்கினார். அவள் மௌனமாகிவிடடாள்.
“களங்கமற்ற என் மனைவி.. என் விடுதலைக்காக கேவலம் உன் முன்னால் மண்டியிட்டாள்... அவளையும் குழந்தைகளையும் காப்பாற்ற மறந்த கயவனான என்னை காப்பாற்ற அவள் வந்து விட்டாள் - என் தவறு மன்னிக்க கூடியதல்ல. ஒரு காலமும் மன்னிக்க முடியாதது.”
ஆஷா அவர் பக்கம் நெருங்கினாள். “நெருங்காதே என் அருகாமையிலிருந்து போய் விடு... தன்னையே வெறுத்த நிக்கோலா அவளைத் தள்ளி விட்டு வெளியேறினார்.
ஆஷா... கீழே விழுந்தவள் அலறினாள். நகைகளை அப்பெண்ணுக்கு கொடுத்து விட்டதையெண்ணிக் கதறி அழுதாள். சில வருடங்களுக்கு முன் ஒரு வர்த்தக பிரமுகர் இவ்வாறு வெறுத்து ஒதுக்கிய காட்சி அவள் நினைவுக்கு வந்தது. அப்பாடகியின் சிந்தனை சோக கீத மெழுப்பியது. ஆஷா அப்பெண்ணிடம் கொடுத்த நகைகள் அவள் நிக்கோலா மீது கொண்டுள்ள அன்பின் காணிக்கையென்பது யாருக்குத் தெரியும்.
Subscribe to:
Post Comments (Atom)
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
பீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...
No comments:
Post a Comment