Tuesday, October 07, 2008

பண்பாடும் நிலமும்:வெட்டிமுறிப்புகளம் வாயிலாக

Wallpaper Pictures, Images and Photos


வெட்டிமுறிப்பு  களம் வாயிலாக நட.சிவகுமார்  மீண்டும் விஸ்பரூபம் எடுத்திருக்கிறார்  போதிய இடைவெளி விட்டு.உவர் மண் ஏற்படுத்திய அதிர்வுகளில் அறுவடை செய்யாமல் நின்று நிதானித்து மாந்திரீக கவிதைகள்
எப்படி தமிழ்  சூழலில் வினைபடும் என்ற வெகுயோசனைக்கு பின் இந்த தொகுப்பின் மூலம் புதிய  தமிழை சொல்லியிருக்கிறார்.தலித்  இலக்கியம் வெறுமனே எதிர்ப்பிலக்கியமாக மாறினாலும் எதிர் கவிதை  அழகியலை அதிகம் விவாதிக்க  தவறியிருக்கிறது.சுருக்கமாக சொன்னால் என்.டி.ராஜ்குமார் எதிர்கவிதை அழகியலை பரிசித்து  வெற்றிக் கண்டவர்.அதன் பின்னர்  யாருமே இப்பாதையில் செல்லவில்லை.லத்தின்  அமெரிக்க சூழலை தமிழுக்கு  இறக்குமதி செய்த கதைகளும்,நாவல்களும் மேஜிகல் ரியலிசத்தை லத்தின்  அமெரிக்க பாணியிலேயே தமிழில்  பரீசித்து பார்க்கப்பட்டது.ஆனால்  நமது மண்ணில் ஜாலஎதார்த்தம்  அதிகமாக வாழ்க்கையின் ஒவ்வொரு  தருணங்களிலும் வினைபடுவதை இலக்கியமாக்காமல் வேறுமாதிரியாக  பயணித்தமையால் இன்னும்  அதற்க்கான வாய்ப்புகள்  அதிகம் இருக்கிறது என்பதை சொல்லமுடியும்.மேஜிகல் ரியலிசத்தை இங்கு குறிப்பிடுவதற்க்கான  காரணம் அதன் எதிர் இலக்கிய  கூறுகளும்,எதிர் அழகியல்  கூறுகளும் தான்.
தமிழ் சூழலில்  சித்தர் பாடல்கள் எதிர்  இலக்கியத்துக்கு முன்னோடி என்று சொன்னால் மிகையில்லை.எதிர்  அழகியல் எதிர்ப்பு இலக்கியத்து  நிறைய மாதிரிகளை அளித்துள்ளது.எதிர்ப்பிலக்கியம்  என்பதும் எதிர் இலக்கியம்  என்பதும் வேறு வேறானவை.சில  இணக்கங்களும் ஒத்திசைவுகளை வைத்து இரண்டும் ஒன்றாக கருதபட வாய்ப்பிருக்கிறது.பாரதி  கூட எதிர்ப்பிலக்கியத்தை  வளர்த்தவர் தான்.மார்க்சிய  இலக்கியம் ஒருவகையில் எதிர்ப்பிலக்கியமாக கருதப்பட வாய்ப்பிருக்கிறது.ஆனால்  எதிர் இலக்கியம் என்பது கறுப்பிலக்கியம்,லத்தின்  அமெரிக்க இலக்கியம் பிரதான இடம் வகிக்கிறது.ஈழ தமிழிலக்கியத்தில்  கூட செல்வாக்கு செலுத்தி வருகிறது.வரையறை இல்லாமல் இருந்தாலும் தமிழில் அவ்வப்போது எதிர்ப்பிலக்கியத்தின்  கூறுகள் ஆங்காங்கே பதிவாகியிருக்கிறது.நட.சிவகுமார்  இந்த தொகுப்பினூடே விவாதிக்கும் முக்கிய விஷயமே எதிர்ப்பிலக்கியத்தை  தமிழுக்கு கொண்டுசெல்வது  பற்றியது.
இது நடசிவகுமாரின்  உச்சபட்ச குரல்.நட.சிவகுமார்  இந்த தொகுப்பில் அடையாளத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்.அடையாளம் என்றால் என்ன?ஏற்கனவே இருக்கும் அடையாளங்களைச் சொல்லாடல் சித்தரிக்கிறதா அல்லது அவற்றை உருவாக்குகிறதா? இது ஒரு பிரதான கோட்பாட்டு பிரச்சினையாக இருந்து வருகிறது என்கிறார் ஜொனதனன் கல்லர்.சுயம் பற்றிய அடையாளம் சில அடிப்படையான கேள்விகளை முன்வைக்கிறது.முதலாவதாக சுயம் என்பது வழங்கப்பட்ட ஒன்றா அல்லது உருவாக்கப் பட்ட ஒன்றா?இரண்டாவது அதை தனிமனித கலைச்சொற்களில் எண்ணிப்பார்க்கவேண்டுமா அல்லது சமூக சொற்களிலா இவ்விரண்டு இருமை எதிர்வுகள் நவீன சிந்தனையின் நான்கு இழைகளை தோற்றுவிக்கின்றன.ஒன்று வழங்கப்பட்டதையும் தனிமனிதனையும் தேர்ந்தெடுக்கும் முதல் பார்வை நான் என்ற சுயத்தை அகசார்பான,தனிச்சிறப்பான ஒன்றாக,சுயம் நிகழ்த்தும் செயல்களுக்கு முந்தைய ஒன்றாக,சொல்லிலும்,செயலிலும் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தபடும் ஓர் உள்மைய பகுதியாக பாவிக்கிறது,இரண்டு வழங்கபட்டதையும் சமூக ரீதியானதையும் ஒன்றிணைக்கும் இரண்டாவது பார்வை சுயம் என்பது அதனுடைய தோற்றுவாய்களாலும் சமூக குண்ங்களாலும் தீர்மானிக்கப் படுகிறது என்பதை வலியுறுத்தி சொல்கிறது.மூன்று தனிமனிதனையும்,வழங்கப்பட்டதையும் இணைக்கும் மூன்றாவது பார்வை அது என்னவாக இருக்கிறதோ அதனுடைய குறிபிட்ட செயற்பாடுகளின் மூலம் சுயத்தின் மாறும் தன்மையை வலியுறுத்திச்செல்கிறது.நான்கு,இறுதியாக சமூக ரீதியானது மற்றும் உருவாக்கப்பட்டது ஆகியவற்றின் கூட்டு.நான் என்னவாக இருக்கிறேனோ அப்படி நான் ஆகிறேன் என்பதை வலியுறுத்துகிறது.
சுடுகாட்டு  சுடலையை கையில் வைத்தும்
பாட்டன்மார்கள்  செய்த யுத்தத்தால் தான்
என் கோவணமாவுது மிஞ்சி இருக்கிறது..
‘’அந்தபிரதோசத்தன்று
சரியாக மாலை 4.32 மணிக்கு
கவிசாகர்  பிறந்தான்
அப்பா தாத்தாவானார்
ரமணி அம்மாவானாள்
மகன் வண்ணான்  ஆனான்"
அடையாளம்  எப்படி வினையாற்றுகிறது  என்பதை இந்த கவிதை சொல்லிவிடுகிறது.இன்னொரு  கவிதையில்,
‘’’என் கவிதையை  எழுத நான் நினைக்கும் போது
வண்ணான்குறி வலிய வந்து என் யோசனையில்
அமர்கிறது.வண்ணான்  குறி மையிலானது எனவே
அந்த மையை ஈக்கில் தொட்டு துணிகளில்
குறியிடும்  போது கவிதை உருக்கொள்கிறது
வண்ணான் குறியிடும் சோரங்கொட்டை
கல்லுபாலம்  பாட்டியின் வீட்டிலிருந்து
வருகிறது  கவிதையைச் சொல்ல 
ஆனால் எழுத முடியாமலே என் கவிதைகள்
குறிகாளாகின்றன.வண்ணான்  குறி வராத
பொழுதொன்று  வேண்டும் என் கவிதையைச்
சொல்ல என்ற கணம் இப்போது.""
கவிதையிலும் அடையாளம் எப்படி அடையாளமாக  மாறி அடையாளதின் கனத்தை பிரமிக்கவைக்கிறது  இந்த கவிதை.இன்னொரு கவிதையில்
‘’வெளுக்க வெளுவெளு
வெளுக்க வெளுவெளு
தூளி தூளி மாந்தூளி யமதூளி
தூமபதி
என் கீழ்படிந்து  என்கீழ்படிந்து
கீரிகண்ட  நாகம் போல
கீரிகண்ட  நாகம் போல
ஓடி ஒளிந்து  போக
நசிமசி’’’
நான் யாராக  இருக்கிறேனோ அதனாலேயே நான் எதை செய்தேன்,மேலும் நான் என்ன செய்தேன் அல்லது என்ன சொன்னேன் என்பதை விளக்க என்னுடைய வார்த்தைகளும் செயல்களும் வெளிபடுத்தும் நான் நீங்கள் பின்னால் திரும்பி பார்க்கவேண்டும்.மொழியின் வடிவங்கள்,அதன் செயலின் விதிமுறைகள் ஆகியவற்றோடு அல்லது அதன் தொன்மையான மற்றும் கற்பனையான சொல்லாடலின் போக்கோடு அதற்குள்ள தொடர்பை வைத்து மையமிழக்கவைத்திருக்கின்றன என்கிறார் மிஷல் பூக்கோ. 
எதிப்பிலக்கியம், எதிர் அழகியல் என்ற வகையில் நட.சிவகுமாரின் கவிதைகளை எவ்வாறு அணுகுவது என்பதை பார்க்கவேண்டியிருக்கிறது.
நார்த்ராப்  பிரை தன்னுணர்ச்சிக் கவிதை  மற்றும் பிற இலக்கிய  வகைமைகளை குறித்த செறிவுமிக்க  நூலான திறனாய்வின் உள்  அமைப்பியல் என்ற நூலில் அழகியலுக்கும்  எதிர் அழகியலுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்று  சொல்லும் அவர் எதிர் அழகியலை  மாற்று அழகியல் என்கிறார்.அதாவது தற்சுட்டான வகையில் இலக்கியம்  இலக்கியத்தை பேசும் போது அதை பகடி செய்தலும் தற்சுட்டாக கருதப்பட வாய்ப்பிருக்கிறது.அழகாய் சொல்லுவதை எதிர்த்து இதென்ன அழகு நான் சொல்லுகிறேன் இன்னொரு  அழகை என்ற விதமே எதிர்பிலக்கியமாகவும்,எதிர் அழகியலாகவும் ஆகிறது.
‘’பனையோலையில்
பண்பாட்டுடைத்தவன் என்பாட்டன்
நீபேசும்
பூடகமும்  கவித்துவமும் எனக்கவசியமில்லை
சங்க இலக்கியம்
காவிய காப்பிய  இலக்கியம்
திராவிட இலக்கியம்
இவை எல்லாவற்றிலும்
தேடவேண்டியிருக்கிறது  தொலைந்த வாழ்க்கையை
கடந்த கால
நிகழ்கால  நிசத்தையெல்லாம்
நிமிர்ந்து  நின்று பேசும் நெஞ்சு எனக்கிருக்கிறது
இதனை தடுத்தால்
கேலி செய்தால்
தாழ்வு மனப்பானமையென கூறினால்
மயிரடா உன்  விமர்சனம்.’’
தமிழ் கவிதை  நெடும் பரப்பில் சர்வ தீச்சண்யமாய் வந்த அகமும்,புறமும் சமூக மனங்களின் கட்டமைப்பை காலகாலமாக  வலியுறுத்தி வருகின்றது என்ற போதும் மரபின் ஆணிவேர்  அற்ற முறையில் முன்னெடுப்பாய் சென்றதில்லை.இதனாலேயே பொது புத்திக்குள் எதிர்கவிதை மரபு தாக்கத்தை நிறுவாமல்  போயிற்று.எதிர் கவிதையை  பொறுத்தவரையில் சில முக்கிய  குணாம்சம்ங்களை தன்னளவில்  கொண்டிருக்கிறது.முதலாவதாக  மொழியை பயன்படுத்தலில் உள்ள செயல்ப்பட்டு முறையியல்  புராதன குல,குறி சின்னங்களுக்கு நிகரானதாக அரூப சொல்லிலக்கணத்தை  நவில்வதாக இருப்பது முக்கியமானதாகும்.பேச்சு வழக்கேயாயினும் சமூக பொதுவுக்கு வராத வார்த்தை பிரயோகத்தை செப்பி அதிர்ச்சியளித்து கொண்டு அது மரபாக மாறிவிட  எத்தனிக்க வேண்டும்.அப்படியாகும் போது சொல்லுக்கும் பொருளுக்குமான  இடுகுறிதன்மை புதிய சொல்லாடல்களுக்கு வழிகொலுவதாக அமைந்து மொழியில் புது மாற்றத்தை அவதானிக்கும்.அப்போது சமூக பொதுபுத்தியில் ஏற்கனவே நிலைகொண்டுள்ள மொழி அமைப்புகள் புதிய உத்வேகத்தை அளித்து கொள்ள முயலும்.இரண்டாவதாக உண்மை,அழகு,இன்பம் என்ற மரபார்ந்த கலை இலக்கிய திறன் என்ற ரசனை பன்மைதன்மை பற்றிய புதிய புரிதலில் அதிக அர்த்தங்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் திறனாய்வை வரையறை செய்ய முயலும்.மேட்டிமைதனம் கொண்ட உண்மை,அழகு,இன்பம் புற உலகில் எண்ணற்ற வழிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அதிசய பொருண்மைகளை நின்று நிதானித்து அணுகும் தன்மை உருவாகிட மாற்று முறைகளிலான ஆக்கங்கள்,பார்வைகள் முக்கியமானவையாகும்.பெரும்பான்மையானவர்களின் அறவிழுமியங்களுக்கு மாற்றாக அவர்களில் நடைமுறை உண்மைகளுக்கு எதிரான தொனியில் பயணப்படும் ரசனையை வளர்தெடுக்க வேண்டியது எதிர்பிலக்கியத்தில் முக்கியமான செயலாக இருக்கிறது.மூன்றாவதாக சமூக் அதிர்ச்சி என்ற வகையில் அல்லாமல் எதிர்ப்பு நடவடிக்கைகளை பொது உளவியலாக்க முயல்வது முக்கியமாகும்.மாந்தர்கள் அனைவரிடமும் உள்ளுறைந்து போயிருக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் துல்லியபடுகின்ற போது அதிகாரம் உட்பட்ட அனைத்து ஆதிக்க மனோபான்மை மறையதுவங்கும்.அந்த வகையில் மீறல் குறித்த புதிய வரைவிலக்கணத்தை முன்னெடுத்து செல்வது இன்றியமையாததாகும்.பாப்லோ நெருதா ஒரு முறை கூறினார்
நீங்கள் கேட்பீர்கள்
ஏன் அவனுடைய  கவிதை
கனவுகளையும் இலைகளையும் பாடவில்லையென
வந்து பாருங்கள்  குருதி படிந்த வீதிகளை
வந்து பாருங்கள்  குருதி படிந்த வீதிகளை
                                                        -பாப்லோ நெருதா ஒடுக்கப்பட்டவர்களின்  பேனாவில் எதிர்ப்பு இருக்கிறது.கலகம்  இருக்கிறது.அதை தான் எதிர்  அழகியல் என்கிறோம்.அதை  தான் நட.சிவகுமார் கவிதையாக்கியிருக்கிறார்.
இரண்டு
"அஃப்ஸூர்தகி--ஜோக்தா ஜானா ஹை கஹர்,மீர்-
தாமன் கோ டுக் ஹிலா கி புஜீ ஹை திலோம் கீ ஆக்’’
தோல்வியால்  மனம் தளர்ந்து சோர்ந்து கிடக்கிறோம்.மீர் மேலங்கின் முந்தானையை அசைத்து  வீசு.அதனால் மனதில் அணைந்து  கிடக்கும் நெருப்பு  கனன்று எழுகிறதா என்று பார்ப்போம்.
ரஷ்ய உருவவாதத்தின்  முதல் கட்டத்தில் ஷக்லோவஸ்கியின் இலக்கிய முறைமைக் கருது  கோள் முதல்,தானியானோவின் செயல்முறை  ஒழுங்கமைவு வரையிலும், ஏற்ப்பட்ட  வளர்ச்சிக்கு பின் யாகப்சன் தானியானோவ் தீஸிஸ் முக்கியத்துவம் பெற்றன.இவர்களின் ஆய்வு  முடிவுகள் இலக்கியத்தின்  இயந்திரபாங்கான கருது கோளை மறுத்துவிட்டு இலக்கியத்தை  குறுகிய உருவவாத சந்தர்ப்பங்களில் இருந்து வெளியே கொணர்ந்து  இலக்கியத்தின் இலக்கிய  செயல்கள் மற்றும் வரலாற்று செயல்களில் பொருத்தப்பாட்டை  தேட முயலுகின்றன.வரலாற்றின் இருசிலிருந்து இலக்கிய  ஒழுங்கமைவு உதயமாகும் பாங்கில் இந்த ஆய்வுகள் முடிவை சொல்லுகின்றன.வரிசையான இந்த வளர்ச்சியை புரிந்து கொள்வதற்க்கு மற்ற இயல்கள்  இலக்கிய ஒழுங்கமைவில் எவ்வாறு  தலையிடுகின்றன என்பதையும் தெரிந்து கொள்ள வெண்டும்,மானுட  இயல்களை புரிந்து கொள்ள  இலக்கியத்துக்கு மற்ற இயல்களுடன் அதனுடைய உறவுகளை ஒழுங்குபடுத்தும் சில உள்ளார்ந்த விதிகள்  உண்டு என்பதை தெரிந்து கொள்வது  அவசியம்.இந்த கருத்துகள் அருவமானவை.இவை  பற்றி ஆழ்ந்து சிந்தனை  செய்வது அவசியமானது.இலக்கிய  சிந்தனைகள் இவ்வாறான சிந்தனைகளை எதிர்ப்பார்த்து நிற்கிறது.
பிராஹா மொழியியல்  வட்டத்தைச் சார்ந்த முகாரோவஸ்கி  இலக்கிய பகுப்பாய்வில்  இலக்கியமற்ற தத்துவங்களை  முழுமையாக அலட்சியம் செய்யப்படுவதை  எதிர்த்தார்.தானியானோவ் முன்வைத்த  அழகியல் அமைப்புகளின் இயங்கியல்  மிக்க கருதுகோளை முன்னே  எடுத்து செல்கையில் முகாரோவஸ்கி,இலக்கியத்துக்கும்,சமூகத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தின் வெளிப்பாடே இலக்கியம் என்றார்.அழகியல் செயல்பாடு அசைவற்று உறைந்து போன ஏதோ ஒரு தனித்தன்மை அல்ல.அதன் எல்லைகள் மாறிக்கொண்டிருக்கின்றன.இதுவே முகாரோவஸ்கியின் சாதனை.
அழகியல் குறித்து நாம் பேசிக்கொண்டிருப்பதால்  தான் இப்படி ஒரு முகாந்திரத்தை  சொல்லவேண்டியிருந்தது.ஆக நட.சிவகுமாரின் கவிதைகளுக்கான  அழகியல் என்பது எதிர் அழகியல்  மாத்திரமல்ல வேறு வகையில்  சொல்லப்போனால் அதாவது முகாரோவஸ்கியின்  வார்த்தைகளில் சொல்வதென்றால்  இலக்கியத்துக்கும்,சமூகத்துக்கும் இடையே நடக்கும் போரட்டமே இலக்கியம் என்பதாகும்.அந்த வகையில் வெளிப்பாட்டு முறைகளில் அழகியல் தன்மைகளில் வெட்டிமுறிப்புகளம் அசாதாரணமானது என்பது தான் உண்மை.
சில மனிதர்கள்  எந்த புது முயற்சிக்கும்  எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.ஒருவிதத்தில் பார்க்கும் போது இவர்கள்  செய்து வருவதும் நற்பணியாகவே  படுகிற்தது.ஏனெனில் இன்னும்  சிலரோ இதெல்லாம் நமக்கு புரியாதைய்யா என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.இதன் மூலம் அவர்கள் கருத்து  தெரிவிக்கும் உரிமையை இழக்கிறார்கள்.விஷயத்தை புரிந்து கொண்டால் தானே மறுப்பு  தெரிவிக்க இயலும்.இவர்களை  பற்றி அதர்னோ கூறுகிறார்.
They offer the shamelessly modest assertion that they do not understand-This eliminates even opposition,their last negative relationship with Truth.
                                                                                 Adorno(minima moralia)
மூன்று
இந்த சந்தர்ப்பத்தில்  கடைசியாக ஒரு விஷயம்.சமூக இயல்புகள் உணர்வுகளாலன்றி நனவிலியால் தான் உருவாகின்றன.பழைமை-புதுமைகளின்  இருமை எதிர்வுகளில் எதை  ஏற்பது எதை தள்ளுவது என்ற விஷயத்தில் செயலும்,மன உறுதியும் பங்கு ஏற்றாலும் கூட அதற்கு சமூக நனவிலி என்னும் நிலைகளன் அவசியமாகிறது.இங்கு சசூரின் லாங்கில் காணப்படுவது போன்ற சுயகட்டுப்பட்டு செயற்பாடு தொடர்ந்து நிகழ்கிறது.இன்னொரு விதமாக கூறினால் தனிமனித சித்தம் போலவே சமூகங்களுக்கும் சித்தம் உண்டு.இதை தான் நட.சிவகுமார் இப்படி கூறுகிறார்.
பெயர்
ஊரில் என்பெயர் வண்ணான்
அம்மா அப்பா  இட்ட பெயர் சிவகுமார்
குடும்ப தொழில் வைத்தியம்,மாந்திரீகம்,துணிவெளுப்பு
மூலிகை சேகரிக்க உதவும்
பறையர்குல வள்ளிப்பாட்டி என் சொந்தக்காரி
காட,தேவாங்கு,கருங்குரங்கு
பச்சோந்தி உடும்பு வேம்பின் தேன்
மருந்துக்கும் மாந்திரீகத்திற்கும்
காணிக்காரன் என் சொந்தக்காரன்
இரும்பை உருக்கி
பஞ்சலோக தகடுசெய்ய
தகடுக்கு  சாஸ்திரம் எழுதவெல்லாம்
ஆசாரி என்  சொந்த காரன்
எந்த மருந்தையும்
சுத்திபண்ண
கள்ளு சாராயம்  அக்கானி கருப்பட்டியெல்லாம் தரும்
சாணான் என்  சொந்த காரன்
விரால் நெத்திலி மீனெல்லாம்
பத்தியத்திற்கு  அவசியம்
முக்குவனும் என் சொந்த காரன்
மருந்துசட்டி  பானைக்கு
மண்குயவன்
எந்த மருந்தையும்  சுத்தி செய்ய
சுண்ணாம்பு  பரவன்
மோர் வெண்ணெய் மருந்துக்கு
கோனான்
என் சொந்தகார்ர்கள்
அம்மா அப்பா  இட்ட பெயர் சிவகுமார்
ஊரில் என்பெயர் வண்ணான்

No comments:

பை சைக்கிள் தீவ்ஸ் ஒரு ஆய்வு

பைசைக்கிள் தீவ்ஸ் (1948) சைக்கிள் திருடர்கள்   இயக்குனர்: விட்டோரியோ டி சிகா |  நாடு: இத்தாலி |  மொழி: இத்தாலியன் |  இயக்க நேரம்...