கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Tuesday, August 25, 2009
உறுபசி- நாவல் (குறுநாவல்)
தனிமையின் கசப்பும் நிராகரிப்பும் நிறைந்த என் வாழ்வில் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. பெருத்த அச்சம் ஏற்படுத்தக் கூடிய தனிமை எனக்கு பலநாட்கள் வாய்த்திருந்த போதிலும் வாசிப்பைக் காட்டிலும் எழுதுவதில் அக்கறை எடுத்துக் கொண்டேன். திரு.எஸ்.ராமகிருஷ்ணனோடு உண்டான வாசிப்புத் தொடர்பிலிருந்து வாசிப்பின் அடர்த்தி பெருகிக் கொண்டு வருவதை இப்பொழுது என்னால் உணரமுடிகிறது. அது உறுபசி நாவலின் வழியே நீண்டு கொண்டிருக்கிறது.
பொன்னியின் செல்வனைத் தவிர நாவல் வாசிப்பு குறித்தான எந்த ஞாபகங்களும் என்னிடம் இருந்ததில்லை. நாவல் வாசிப்பு ஒரு வெறுப்பின் சின்னமெனவும், எனது கால அளவுகளை வெட்ட வந்த கருவிகளெனவும் ஒதுக்கியே வந்தேன். நண்பர்கள் சிலர் அது தவறு என்று குறுக்கிட்டாலும் நாவல் புத்தகங்களின் மீதுண்டான என் பார்வை கசப்பும் வெறுப்பும் மிக்கதாகவே தொடர்ந்தது.. பிந்தி ஒருநாள் இணையத்தில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி படித்துப் பாருங்கள் என்று யாரோ ஒருவர் குறித்திருந்தார். அவரது நோக்கம் நாவல் படிக்க வைப்பதற்காக மட்டுமல்ல. அது ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உறுபசி. நாவலை வாங்கிய பிறகு உறுபசி என்றால் என்ன என்று தேடத்துவங்கினேன். நண்பர்கள் கூட உறுபசி என்றால் என்ன என்று கேட்கத் துவங்கினார்கள். பசி உறுதல் என்று சொல்லி சமாளித்து வைத்தேன்.
உலர்ந்த சொற்களால் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்ற வரியே நாவலை வாங்கத் தூண்டியது என்றும் சொல்லலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் உலர்ந்த எழுத்துக்கள் நன்கு காய்ந்த பாறைகளில் படர்ந்திருப்பதாகவும் அதை என் எச்சிலற்ற நாவில் துடைத்து இழுப்பதாகவும் நாவல் படிக்கையில் உணர்ந்தேன். சம்பத் இன் இறப்பை ஒட்டிய நண்பர்களின் நினைவுகளும் சம்பத்தின் காய்ந்த வாழ்வுமே நாவலின் நரம்பாக இருக்கிறது. ஒவ்வொரு பக்கங்களைத் திருப்புகையிலும் ஒரு வெறுப்பின் அடையாளம் இருப்பதாகத் தோன்றி அது எழுத்துக்களின் வளைவுகளில் நின்று என்னையே உமிழ்வதைப் போன்றும் இருக்கிறது. . நாவல் குறித்தான கசப்பை மெல்ல மெல்ல மேகங்கள் விலகுவதைப் போல உறுபசி விலக்கி வந்ததை சில மணிநேரங்களில் உணரமுடிந்தது.
சம்பத்தின் கல்லூரி நண்பர்களான ராமதுரை, அழகர், மாரியப்பன் மற்றும் யாழினி ஆகியோரின் சம்பத் குறித்தான நினைவுகளில் நாவல் பயணிக்கிறது. கல்லூரியில் தமிழ் இலக்கியம் விரும்பிப் படிக்கும் சம்பத்தோடு ராமதுரை, மாரியப்பன், அழகர் மூவரும் நிர்பந்திக்கப்பட்டு படிக்கிறார்கள். சம்பத்தின் வித்தியாசமான வாழ்க்கையும் விசித்திர எண்ணங்களும் மூவரையும் நன்கு கவர்கிறது. சம்பத் யாழினியின் காதலனாக, கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஈடுபடுகிறான். கம்பராமாயணத்தைக் கிழித்து எரிக்கிறான். அரசியல் கூட்டங்களில் பேசுகிறான். நன்கு மது அருந்தி தன்னைத் தானே ஒதுக்கிக் கொள்ளும் நிலைக்கும் வந்துவிடுகிறான். அவனது கல்லூரி வாழ்க்கை நிராசைகளோடும் மிகுந்த களிப்புகளோடும் செல்லுவதாக இருக்கிறது.
பின்னர் அழகரோடு சொந்த வீட்டுக்குச் செல்லும் போது தன் தந்தையையே வெறிமிகுதியால் விறகுக்கட்டையில் சாத்துகிறான். லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமுள்ளவனாக இருக்கிறான். அவன் தங்கியிருக்கும் லாட்ஜுக்குக் கீழே உள்ள ஒரு டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஜெயந்தியுடன் உண்டான பழக்கம் சட்டென்று திருமணத்தில் முடிகிறது. அவர்களது திருமணம் தனித்து விடப்பட்ட இருவரின் மனநிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. திருமணத்துக்குப் பிந்திய சம்பத்தின் காமம் கடந்தகால நினைவுகளின் மோதலாக இருக்கிறது. யாழினியின் நிராகரிப்பு அவனது வெறிமிகுந்த காமத்தின் தீனியாக மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
சம்பத் ஒரு கிரைம் பத்திரிக்கையில் பிழை திருத்துபவனாக செல்கிறான். அங்கே குரூரமான உலகத்தில் தான் இயங்குவதாக எண்ணிக் கொள்கிறான். அவனது நிலைகொள்ளாத எண்ணங்கள் அக்கூர்மையான குரூரத்தின்பால் அலைகழிக்கப்பட்டு வேலையை உதறுகிறான். அதன் விளைவுகள் அவனை ஒரு மனச்சிதைவுக்கு உள்ளாக்கியிருந்தது. சம்பத் தன் வாழ்வு நெடுகவும் எந்த ஒரு தொழிலையும் விரும்பிச் செய்ததாக இல்லை. அது பூச்செடிகள் வளர்ப்பதாகிலும், ஏன், லாட்டரி வாங்குவதாகிலும் கூட.
சம்பத்தின் மனைவி ஜெயந்தியின் தாம்பத்திய வாழ்வு மிகக்குறுகியதாகவும், சந்தோஷங்களும் வருத்தங்களும் மிகுந்ததாகவும் இருக்கிறது. சம்பத் மருத்துவமனையில் சுருண்டு படுத்திருந்த பொழுது அவளது அலைக்கழிப்பும், தனிமையும் சம்பத்தின் வாழ்வுக்குப் பின்னர் ஏற்படும் மாற்றங்களும் மனதில் தாக்கம் ஏற்படுத்தாமல் இல்லை. ஒருவகையில் சம்பத்திற்கு ஏற்றவள் அவளாக மட்டுமே இருக்கமுடியுமென்று நினைக்கிறேன். யாழினி மிகக் கச்சிதமாக அவனைப் பற்றி தெரிந்து கொண்டு கழற்றிவிடுகிறாள். சம்பத், ஜெயந்தி தனக்குச் சரியானவளாக இருப்பாள் என்று கச்சிதமாக மணமுடிக்கிறான்.
இறப்புக்குப் பின்னர் ஏற்படும் சலனங்கள் குறித்து வெகுநாட்களாக சிந்தித்திருக்கிறேன். இந்த உலகம் ஒவ்வொருவருக்கும் தகுந்த வேலை கொடுத்திருப்பதாகவும் அந்த வேலையின் விளைவுகள் இறப்பிற்குப் பின்னர் ஒளிக்கவேண்டும் என்பதாகவுமே நினைத்துக் கொள்கிறேன். சம்பத்தின் நண்பர்கள் அப்படியானதொரு கலக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.
ஒருவகையில் சம்பத் ஐப் போன்றுதான் நாமெல்லாமே. மனச்சிதைவை நமக்குள்ளாகவோ, அல்லது நம் எழுத்துக்கள், கோபங்கள், ஏன் சந்தோஷங்களின் வழியேவோ கரைத்துவிடுகிறோம். நமக்குள் நாமே உருகி புதியவனாய் மாறிக் கொள்கிறோம். சம்பத்தின் இச்சைகளைப் போன்றே நமக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் சம்பத் எந்த தவறும் செய்யவில்லை என்றேதான் நினைக்கிறேன்.
நாவலின் வழிநெடுகவும் வன்மத்தின் வண்ணம் ஊறிக் கொண்டே செல்கிறது. அது அடர்த்தி மிகுந்து கழுத்தை இறுக்குவதாகவும்கூட தெரிந்தது ( சட்டென்று நாவலை மூடி வைத்துவிட்டேன். ) திண்ணையெங்கும் தழுவிக் கிடக்கும் வெப்பத்தின் ஊடாக நாவலின் இளஞ்சூடு வாசிக்க இயலாத வெறுப்பைத் தோற்றுவித்ததை உணரமுடிகிறது. எழுத்துக்களை இவ்வளவு சூடாக எழுதமுடியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். நாவல் படிக்கப் படிக்க என்னோடு ராமதுரையும், மாரியப்பனும், அழகரும் அவர்கள் சென்ற மலையிடுக்குகளில் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். சம்பத்தோடு உண்டான நினைவுகளும் நிகழ்வுகளுமாக எழுத்துக்கள் சுற்றிக்கொண்டே இருந்தன.
சம்பத் எனும் தனிமனித வாழ்வின் கசப்புகளும், வன்மங்களும், மனச்சிதைவும் நாவலின் பிளந்த பாதையில் காணக்கிடைக்கிறது. புத்தகத்தைப் படித்து முடித்தபிறகும் சம்பத்தின் மனைவி ஜெயந்தியைப் போன்று நாமிருந்தால் எப்படி இருந்திருக்கமுடியும் என்று கேட்டுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவளது ஒருபக்க வாழ்வு ஏன் முடிந்துவிட்டது என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நிகழ்காலத்தின் மீதுண்டான தாபமும் குரூரமும் அலைகளைப் போன்று முட்டி முட்டிச் செல்கிறது.
இன்னொரு வகையில் சம்பத் ஏன் இப்படித் திரிகிறான் என்றும் கேள்வி எழுகிறது. அவனது எண்ணங்கள், நடத்தைகள், எல்லாமே விசித்திரமாகவோ அல்லது கசப்பான மனிதர்களைக் கண்டிராத புதிய அனுபவத்தையோ தோற்றுவிக்கிறது. அவனது காமம் ஏன் அவ்வளவு உமிழ்கிறது? அல்லது எல்லோருடைய காமமும் அப்படியான ஒன்றா?
நாவலின் ஓரிரு இடங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் தடுமாறியிருக்கிறார். அழகர் கதை சொல்லுவதாக நாவல் செல்கிறது. ஓரிடத்தில் மாரியப்பன் என்று குறிப்பிட்டு, அழகர் மீண்டும் தொடர்வதாக செல்கிறது... நம்பமுடியவில்லை. ஒருவேளை அச்சகப்பிழையாக இருக்கலாம் என்று கருதுகிறேன். அல்லது எனது வாசிப்பனுபவத்தின் குறைபாடாகவும் இருக்கலாம். சொல்லுவதற்கில்லை. அதைப் போன்றே நாவலும் சிறியதாக இருக்கிறதோ என்ற உணர்வும் இருக்கிறது. ஆனாலும் உறுபசியை இன்னும் நீட்டிக் கொண்டிருக்க முடியாதுதான்..
உறுபசி, கடும் பசிக்கு முன்னர் வயிறு ஒலிக்கும் ஓசையைப் போன்று மனதிற்குள்ளிருந்து சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அது நிரப்பமுடியாத பசியை சுமந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. புத்தகத்தை மூடி நிதானிக்கையில் மனமூலையெங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் இறைந்து கிடப்பதை மட்டும் உணரமுடிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
பொங்கலும் முஸ்லிம்களும்
பொங்கலும் முஸ்லிம்களும் தமிழ் முஸ்லிம்கள் தமிழ் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள், ஏனெனில் அவை தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முக...
No comments:
Post a Comment