கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Saturday, January 09, 2010
அவதார் -ன் அவதார்
ரைரானிக் படம் வெளிவந்து சுமார் 12 வருடங்கள் கழித்து அதே இயக்குனரின் படம் வெளிவருகின்றது. இதற்கு முன்பு இவர் இயக்கிய குறிப்பிடத்தக்க படங்கள் True Lies. Terminator, Terminator 2: Judgment Day போன்றவை. ரைரானிக்குப் பின் சில விவரணத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். 12 வருடங்கள் என்பது நீண்ட காலமே. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் 1954ம் ஆண்டில் ஜேம்ஸ் கமரோன் பிறந்தார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் தொழில்நுட்பரீதியாக பிரசித்தி பெற்றவை.
அவற்றார் 2-D, 3-D- RealD 3D, Dolby 3D, IMAX 3D ஆகிய அமைப்பு முறைகளில் வெளியிடப்பட்டது. படத்தின் தயாரிப்புச் செலவான சுமார் 310 மில்லியனின் அரைவாசி அதாவது 150 மில்லியன் விளம்பரத்துக்காக செலவிடப்பட்டது. மொத்தச் செலவு 460 மில்லியனாகின்றது. இப் படத்துக்கான திட்டம் முதலில் 1996ல் உருவானது. இதில் பேசப்படும் நாவி மொழியை உருவாக்கியவர் பிரபல மொழியிலாளர் Dr. Paul Frommer. இவர் தென் கலிபோனியா பல்கலைக் கழக பேராசிரியர் ஆவார். சுமார் ஆயிரம் வார்த்தைகளை கொண்ட மொழியாக உருவாக்கப்பட்டது. இந்த மொழி உருவாக்கத்தில் எதியோப்பிய மொழியான Amharic ம் பாவிக்கப்பட்டது. இந்த Amharic, Semiticயு என்ற மொழிக் குடும்பத்தில் ஒன்று. இந்த மொழிக் குடும்பத்தில் அரபிக், Tigrinya, Hebrew ஆகிய மொழிகள் உள்ளன. கி.மு 2000 ஆண்டளவில் இந்த மொழிக் குடும்பம் மெசத்தோமியா பிரதேசத்தில் பிரசித்தி பெற்றது. அத்துடன் நியுசிலாந்தின் பூர்விகக் குடிகளின் மொழியான Māori பாவிக்கப்பட்டது. www.naviblue.com என்ற இணையத்தளத்தில் நாவி மொழியின் அகராதியை காணலாம்.
அவதாரம் – விஷ்ணு பல அவதாரங்களில் தோன்றினார். கிருஸ்ணன், கல்கி, பரசுராமன், ராமன், நரசிம்மன் போன்றன இவரின் அவதாரங்கள் என கூறப்படுவதுண்டு. இதன் அடிப்படையில் தான் நாவி என்ற இனம் உருவாக்கப்பட்டதாக இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இப் படத்தை இயக்குவதற்கு கமரோன் virtual camera system பயன்படுத்தினார். இது ஒரு திரையில் படமாக்கும் காட்சிகளை உடனுக்குடன் நெறியாக்க உதவும். இப் படம் படமாக்கும் பொழுது ஸ்பில்பேர்க், ஜோர்ஜ் லூக்காஸ் ஆகியோர் தளத்திற்கு சென்று இந்த தொழில் நுட்பத்தை பார்வையிட்டுள்ளனர். இதன் தொழில் நுட்பம் பற்றி தனி ஒரு கட்டுரையே எழுதலாம்.
படம் 144 வருடங்களின் பின்னர் அதாவது 2154ல் சூரியனில் இருந்து 4.37 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள Alpha Centauri நட்சத்திரக் குடும்பத்தில் உள்ள பன்டோராவில் கனிமங்களை ஆர்.டி.ஏ என்ற நிறுவனம் அகல்கின்றது. பன்டோராவில் unobtanium என்ற கனிமம் அதிகளவில் உள்ளது. இதன் விலை மிக, மிக உயர்வு. இங்கு வாழ்பவர்கள் நாவிகள். பத்தடி உயரம், நீல நிறம் கொண்டவர்கள். இவர்களின் கடவுள் சக்தி Eywa என்ற பெண் கடவுள். புன்டோராவில் வாழ்வதற்கு விசேட வாயுக் கருவிகள் தேவை. எனவே விஞ்ஞானிகள் டி.என்.ஏ என்ற நிறமூர்த்தத்தைக் கொண்டு நாவியை போன்ற உடலைக் கொண்ட உடலை தயாரிக்கின்றனர். கூடு விட்டு கூடு பாயும் முறையே இங்கு பாவிக்கப்படுகின்றது. விஞ்ஞானக் குழுத் தலைவி Dr. Grace Augustine (Sigourney Weaver). மற்றொரு விஞ்ஞானி Norm Spellman (Joel David Moore). இவர்களுடன் இணையவருகின்றார் Jake Sully (Sam Worthington) இவர் ஒரு கால் இல்லாதவர். இவரை முதலில் தலைமை விஞ்ஞானி ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார். பின்னர் ஒன்றுமே செய்ய முடியாமல் ஏற்றுக் கொள்கின்றார். இவர்கள் மூவரும் நாவிகள் வாழும் கிரகத்தினுள் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையில் நாவிகள் உருவம் பெற்று செல்கின்றனர்.. அங்கு இவர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதலில் ஜேரி தனித்து விடப்படுகின்றார். ஜேரிக்கு பெண் நாவியான Neytiri (Zoe Saldana) உதவி செய்கின்றார். நாவிகளின் தலைமைப் பீடம் ஜேரிக்கு தங்களது முறைகளை கற்பிக்குமாறு நேரிக்கு உத்தரவிடுகின்றது. RDA ன் பாதுகாப்பு பிரிவு தலைவன் ஜேரி நாவியின் முறைகளை வெளிக்கொணர்ந்தால், ஜேரிக்கு மீள கால் பெற உதவி செய்வதாக கூறுகின்றார்.
ஜேரிக்கும், நேரிக்கும் நெருக்கம் அதிகமாகின்றது. நாவியினர் ஜேரியை தங்களில் ஒருவராக கருதுகின்றனர். இதற்கிடையில் ஆர்.டி.ஏ குழுவினர் தாய் மரத்தையும் நாவியினரையும் அழித்து கனிமங்களை கைப்பற்ற தயாராகின்றனர். ஜேரியுடனான விஞ்ஞானக் குழு இதனை எதிர்க்கின்றது.இந்த ஜேரிக் குழு எவ்வாறு நாவியினரை ஆர்.டி.ஏ குழுவினரிடமிருந்து காப்பாற்றுகின்றனர் என்பதே படத்தின் மிகுதிப் பகுதி.
இயற்கைக்கும் நாவியினருக்குமான நெருக்கம் அதிகம். புத்தரின் போதனையான “எல்லாவற்றிக்கும் தொடர்புண்டு” என்ற கருத்துப் பட வாழ்கின்றனர். நாவியினர் ஆல மரம் போன்று தோற்றமளிக்கும் மரங்களை கடவுளுக்கு சமானமாக கருதுகின்றார்கள். இதலிருந்து பல பயன்களை பெறலாம் என நம்புகின்றனர். தங்களது சுயநலன்களுக்காக இயற்கையை அளிக்கும் மனிதனின் பயணம் இங்கிருந்து ஆரம்பமாகின்றது.
இப் படத்தின் கரு பல படங்களை நினைவூட்டுகின்றது. இதனை கமரோனும் ஒத்துக் கொள்கின்றார். At Play in the Fields of the Lord , The Emerald Forest, Dances With Wolves, Cry Freedom, The Last Samurai, District 9 ,Battle for Terra போன்ற படங்களை நினைவூட்டுகின்றது. ஓணாய்களுடன் நடனம்(Dances With Wolves) என்ற படத்தில் இப் படத்தில் வருவதைப் போல் பூர்விக இந்தியர்களை வெள்ளையர் ஒருவர் காப்பாற்றுகின்றார். அதே போல் Cry Freedom என்ற படத்திலும் ஸ்ரீவ் பைக்கோ (Steve Biko) என்ற கறுப்பு நிற சுதந்திர வீரரின் சிறை மரணத்தை வெளி உலகிற்கு, தனது உயிரை துச்சமாக மதித்து Donald Woods என்ற வெள்ளையர் வெளிக் கொணர்கின்றார்.
இப் படத்திலும் நாவியினரை வெள்ளையரே காப்பாற்றுகின்றனர். இது வெள்ளை மேலாதிக்க மனோபாவத்தை தான் வெளிப்படுத்துகின்றது. பூர்விக இந்தியரை பெருமளவில் கொன்று குவித்து அவர்களது கலாச்சாரத்தை அழித்த பெருமை இந்த வெள்ளையரைத்தான் சாரும்.
அங்கெல்லாம் பூர்விக இந்தியரை காப்பாற்றியதாக, வெள்ளை இன கதாநாயகர்கள் பற்றிய எந்த பதிவுமே இல்லை. வெள்ளையர் ஒருவர், வெள்ளையரல்லாதவரின் முறைகளை நன்கு தெரிந்திருந்தால். அவரால் அவ் இனக்குழுவுக்கு தலைமை தாங்க முடியும். அவ் இனக் குழுவினரை விட இவரால் அவர்களுக்கு தலைமை தாங்கி சிறப்பாக செயல் படமுடியும் என்ற மாயையை இப் படம் தோற்றுவிக்கின்றது. இது இலகுவாக காலனித்துவ மனோபாவத்தில் உள்ள மக்களிடம் சென்றடைகின்றது. அவர்களிடம் Middle Class Fear (பயம்), முதலாளித்துவ சிந்தனை, வெள்ளை அடிமைத்தனம் நிரம்பி காணப்படுகின்றன. வெள்ளையர்களால் தான் உலகை காப்பாற்ற முடியும் என்ற மனோபாவத்தை பிரச்சாரம் செய்யும் நோக்கமே இங்கு வெளிப்படுகின்றது.( காந்தி படத்தில் காந்தியாக ஒரு வெள்ளையர் நடித்துள்ளார். இதனைத் தான் இந்தியர்களும், வெளிநாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன)
படத்தில் உள்ள மனித இனத்தில் ஒரு விஞ்ஞானியையும், ஒரு கறுப்பின இராணுவத்தினரையும் தவிர மற்றவர்கள் அனைவரும் வெள்ளையரே.அந்த கறுப்பின இராணுவ வீரனும் ஒரு தலையாட்டி பொம்மையை போல் தான் உள்ளார். மறுபுறம் நாவி இனத்தவர்கள் மனித மிருகங்கள் போல் தோற்றமளிக்கின்றனர். படம் இரு உலகத்தை காட்டுகின்றது. ஒன்று இந்த வெள்ளை உலகம். மற்றையது நாவிகளின் உலகம். இங்கு தான் நாங்கள் உள்ளோம். கமரோனின் இந்த வேறுபாடுக்கு காரணம் என்ன? நாவிகளின் மொழித்தோற்றம் ஆபிரிக்க, ஆசிய பூர்விகக் குடிகளின் மொழிச் சொற்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது. நாவிகளின் நம்பிக்கைகள், வழக்கங்கள் அனைத்துக்கும் அடிப்படை இந்திய புராணங்கள். Neytiriன் தோற்றம் நீல நிறம், சீன முகவாடையுடன் கூடிய அனுமானின் உடல். அடிப்படையில் நாவியினர் ஆசிய, ஆபிரிக்க மக்கள். நாவியினர். கிருஸ்ணரின் நிறத்தை கொண்டவர்கள். படத்தின் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் அந்நியப்படுகின்றோம்.
மறுபுறம் கமரோனின் வெள்ளை நிற காலனித்துவ குற்ற உணர்வின் வெளிப்பாடே இப் படம் எனலாம். இப் படத்தை அமெரிக்காவின் கதை என சில விமர்சகர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா – ஈராக் கதையா? இ;ல்லை அமெரிக்கா உருவாகிய கதையா? கொலம்பஸ் என்ற கொலை-கொள்ளைக்காரனின் குழுவினர் முதலடியும், முதல் கொலையும் செய்ய, தொடர்ந்து பிரித்தானியர். பிரென்ச், போர்த்துக்கீசா , வட-லத்தீன் அமெரிக்காவை முழுமையாக கைப்பற்றி விட்டனர். இப் பிரதேசத்தில் எந்த ஒரு பூர்விக குடியினது, கலாச்சாரத்தையும், அவர்களையும் காணமுடியாதவளவிற்கு கொலை செய்து விட்டனர். எனக்கு இது இலங்கையின் கதை போல் தோன்றியது. எங்களை ஆண்டு, எங்களை சுரண்டிவிட்டு, எங்களுக்குள் தங்களை புகுத்தி விட்டு சென்று விட்டார்கள். இன்று வரை அவர்கள் புகுத்திய மேலாதிக்க மனோபாவத்தால் அவர்களது அடிமை போல் செயற்படுகின்றோம். மற்றொரு புறம் எங்களை ஆண்ட அரசுகளும், அவை அமைந்த விதத்தையும் பார்க்கும் பொழுது அவர்களும் இதனையே செய்துள்ளார்கள். ரோம, கிரேக்க, இந்து, மொகாலய, அக்பர் சாம்ராச்சியங்கள் இவ்வாறே அமைந்துள்ளன.
மேற் கூறிய விமர்சனங்களுக்கு அப்பால் கமரோன் சுரண்டலை சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளார். பயங்கரவாதம் என்ற பெயரிலும், உலகமயமாதல், தேசிய இனப்பிரச்சினையின் சமாதான தூதர் என்ற பெயரிலும் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுகின்றன.அப்படிக் கூறுவதை விட சூறையாடுகின்றன. இன்று உலகில் ஆங்கிலத்தை தலைமையாகக் கொண்ட ஸ்பானிஸ் உடபட்ட மொழிகளே ஆட்சி மொழியாக உள்ளன. ஆங்கிலம் தெரியாத நாடு உலகில் எதுவுமில்லை எனலாம். இவர்களது கலாச்சாரம் உலகெங்கும் உள்ளன. படத்தில் காட்டப்படும் கிரகம் ஓர் மூன்றாம் உலக நாடு. இவர்களிடம் சண்டை பிடிக்க பராம்பரிய ஆயுதங்களை தவிர வேறெதுவும் இல்லை.
சமூகத்துக்கும், கூட்டுத்தாபனத்துக்குமான வேறுபாடுகளை இப் படம் சிறப்பாக பதிவு செய்துள்ளது. தனியார் கூட்டுத்தாபனங்களின் சுய நல, லாப நோக்கின் அரக்கத்தனத்தை இங்கு காணலாம். இவர்களை பாதுகாக்க உள்ள முன்னால் படை வீரர்களும் இதனையே செய்கின்றார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் சுனுயு நிறுவனத்தின் கொலை வெறி சிறப்பாக வெளிப்படுகின்றது. இதனை அரசுடனும் ஒப்பிடலாம். பூமி வாழ் மக்கள் நிறுவனவயப்படுத்தப்பட்டுள்ளார்கள். கூட்டுத்தாபனங்கள் என்ன செய்கின்றதோ அதனைத் தான் பெரும்பாலான அரசுகள் செய்கின்றன. அரசுகளை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டுத்தாபனங்கள் உள்ளன.
விஞ்ஞானிகளும், வியாபாரிகளும் சமூகத்தை வௌ வேறு கோணங்களில் பார்க்கின்றார்கள். விஞ்ஞானியைப் பொறுத்தவரை புதிய கண்டுபிடிப்பு என்பது மனித இனத்தின் அடுத்தபடிக்கான மற்றொரு அத்தியாயம். வியாபாரிக்கு அடுத்த முதலீட்டிற்கான புதிய கதவு. விஞ்ஞானம் ஆக்க பூர்வமானது. புல புதிய கண்டு பிடிப்புக்கள். பல நன்மைகள் உண்டு. இதனை அழிவுக்கும் பயன் படுத்தலாம். கூடு விட்டு கூடு பாயும் விஞ்ஞான விந்தையால் நன்மைகள் உண்டு. அதனையே இந்த கூட்டுத்தாபனங்களும் . அரசுகளும் அழிவுக்கும், சுய நலத்துக்கும் பாவிக்கின்றன. அணு குண்டைப் போல். இயக்குனர் ஒரு பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் . (. technology in and of itself is not evil, but there is a great potential for evil in the human misapplication of technology)
படத்தின் சிறப்பம்சம் சமூகம், கூட்டுத்தாபனம், தொழில்நுட்பத்துக்குமான வேறுபாட்டை காட்டுவதே. இயக்குனரின் ஆரம்பத்தில் இருந்தே படத்தின் அரசியலை மறுத்துள்ளார். இவரது அனைத்து படங்களும் தொழில்நுட்பம் மிகுந்தவை. இவர் Digital Domain என்ற நிறுவனத்தின் முன்னால் தலைமை அதிகாரி.
யதார்த்தமற்ற சூழலுக்கு யதார்த்த வடிவம் கொடுக்க சினிமாவால் தான் முடியும். கவிதையில், கதையில் சம்பவங்களை கற்பனை செய்து பார்ப்பது போலல்லாது நேரில் எம் கண்முன்னே நடக்கின்றன. படம் இரு பாத்திரங்களிடையே பயணிக்கின்றது. ஒன்று தொழில் நுட்பம், இரண்டாவது கதை. காலனித்துவத்திற்கு எதிரான கதை புதிய தொழில் நுட்பம் மீது பயணிக்கின்றது. பார்வையாளனுக்கு தொழில் நுட்பத்தின் மீது ஏற்படுத்தும் ஈர்ப்பு, கதையின் மேல் ஏற்படாது. இயக்குனரின் நோக்கமும் இதுவே. இதனால் தான் வெற்கப்படவேண்டிய பார்வையாளன் புன்னகைத்தபடி வெளியேறுகின்றான். ( People need to be reminded from every direction. Maybe people want to go see a film for pure entertainment, and not want to think about it and not have to feel guilty ௲ I’m not trying to make people feel guilty) ) இது இயக்குனரின் ஒரு பேட்டிக் குறிப்பு.)
Subscribe to:
Post Comments (Atom)
பொங்கலும் முஸ்லிம்களும்
பொங்கலும் முஸ்லிம்களும் தமிழ் முஸ்லிம்கள் தமிழ் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள், ஏனெனில் அவை தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முக...
No comments:
Post a Comment