Tuesday, March 02, 2010

பின்மார்க்சியம்,பின்மார்க்சியர்கள்


எமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக வடிவமைக்கவேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். மரபான மார்க்சியர்களைப் பின்பற்றுவதன் மூலம் நாம் சரியான இடத்தை நோக்கிப் பயணிக்க முடியாத அதே வேளை மார்க்சியர்களுடன் உரையாடாமலோ அல்லது மார்க்சியர்களது நிலைப்பாடுகளை முற்றாகப் புறந்தள்ளியோ ஒடுக்குமுறைக்கெதிரான நமது தலைமுறைக்காகப் புதிய சித்திரத்தைக் கண்டடைந்துவிட முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. மராபார்ந்த மார்க்சியர்களுடனான தீவிர உரையாடல்கள் நிகழ்த்தப்படும் போது மட்டுமே இவ்விடயத்தைச் சாத்தியப்படுத்த முடியும். மேற்கில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் பரவலாக அறியப்படும் பின்மார்க்சியம் என்னும் வகைமாதிரிக்குள் அடக்கப்படும் கருத்தியல்கள் எமது சூழலுக்குப் போதுமானவை அல்ல. அதை உள்வாங்கியவாறு நமது சமூகவியல் பரிமாணங்களை அறிந்து நமக்கான புதிய சித்திரத்தை உருவாக்க வேண்டியுள்ளதே எமக்கான சவாலாகும். ஏராளமான அறிவுத்துறைகளை உள்வாங்கியே நாம் ஒடுக்குமுறைக்கெதிரான சித்திரத்தையும் அதன் செயற்பாடு சார்ந்த நடைமுறையையும் கண்டுகொள்ள வேண்டியுள்ளது.

நவ தாராளவாதச் சமூக உருவாக்கத்தின் பின்னர் அதற்கான மாற்றீட்டைப் பேசுவோர் பின்மார்க்சியர்கள் என்று பரவலாக அழைக்கப்படும் போதிலும் இங்கே இனிமேல் நான் 'பின்மார்க்சியம்' என்னும் பெயரைப் பயன்படுத்த விரும்பவில்லை. அதை உள்வாங்கி இடதுசாரித்துவம் என்னும் சொல்லைப் பயன்படுத்துவதையே பெரிதும் விரும்புகின்றேன். இடதுசாரித்துவம் என்பது பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்கெதிரான கருத்தியல்களை உள்வாங்கியவாறு வளர்ச்சி பெற்றது. இடதுசாரித்துவத்தைத் தனியே ஒருவகைக் கருத்தியலுக்குள் வைத்து பார்க்க முடியாதது. ஒடுக்குமுறைக்கெதிரான சகல கருத்தியல்களை ஒருங்கிணைப்பதற்காக 'இடதுசாரித்துவம்' என்னும் சொல்லைப் பயன்படுத்த முடியும். பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து மார்க்ஸ் இல் தொடங்கி லெனின், மாவோ வரையான அதன் பாதையில் இன்றைய பிரசண்ட, சாவோஸ் வரை இடதுசாரித்துவத்தின் பங்கு அளப்பரியது. அச்சொல்லின் வீச்சு இன்னும் மனிதகுல வரலாறு நெடுகிலும் செல்லப்போவது மாத்திரமல்லாது, பிரஞ்சுப் புரட்சிக்கு முன்னரான காலப்பகுதிக்குக் கூட அதை நீட்டித்துப் பொருள்கொள்ள முடியும். இடதுசாரித்துவமானது மார்க்சியம், லெனினியம், மாவோயிசம் போன்ற ஒடுக்குமுறைக்கு எதிரான சகல கருத்தியல்களையும் உள்ளடக்கக்கூடிய நெகிழ்ச்சியான சொற்பிரயோகமாகும். இடதுசாரித்துவமே சமத்துவம் நோக்கிய மனிதகுல வரலாற்றுப் பயணத்தில் எப்போதும் உடனிருந்தது. இன்றைய இடதுசாரித்துவக் கருத்தியல் வளர்ச்சியில் மார்க்சியத்தின் பங்கு அதிகமுக்கியத்துவம் பெற்றாலும் இடதுசாரித்துவம் வேறுபட்ட ஒடுக்குமுறைக்கெதிரான கருத்தியல்களையும் உள்வாங்கியது என்பதையே வலியுறுத்தவேண்டியுள்ளது.

ஏர்னஸ்ட் லக்லாவ் என்ற பின்மார்க்சியர் கூறுவது போன்று உற்பத்தி உறவுகளூடு சமூகத்தை அணுகுவதும் அதன் சமத்துவத்தை வலியுறுத்துவதென்பதும் இன்றைய உலகில் மிகவும் சிக்கலாகிவிட்டது. சமத்துவத்தை பொருளாதார மையப்படுத்தி அணுகும் முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் மார்க்சியம் மனிதகுலத்திற்கு கிடைக்கச்செய்த சாதகமான விளைவுகளைப் பட்டியல்படுத்த வேண்டிய அவசியமில்லை. லக்லாவ் கூறுவது போன்று மார்க்சியம் என்னும் சம்பவம் நமக்குக் கொடுத்திருக்கும் ஜனநாயமாகும் செயற்பாட்டை அதன் பொருளாதார மைய அணுமுறையைத் தாண்டி அகலிக்க வேண்டியதே நமது தலைமுறைக்கான சவாலாகும். இதையே நான் இடதுசாரித்துவம் என்னும் நெகிழ்ச்சியான கருத்தியலுக்குள் உள்ளடக்கிப் பார்க்க முயற்சிக்கின்றேன். பல உரையாடல்களிலும் வலியுறுத்திய 'சிறுபான்மை அரசியல்' என்னும் கருத்தியலையும் வேறுசில ஒடுக்குமுறைக்கெதிரான கருத்தியல்களையும் 'இடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம்' என்னும் கருத்தியலுக்குள் உள்வாங்க முயற்சிக்கின்றேன். பல்வேறுபட்ட பின்மார்க்சியர்களது கருத்தியல் நிலைப்பாடுகள் எனது கருத்தியலில் தாக்கம் செலுத்துவதைத் தவிர்க்க முடியாத போதிலும் எமது தலைமுறை எதிர்கொள்ளும் உலகச்சூழலுக்குள் மாத்திரம் முடங்காமல் மூன்றாமுலக அரசியல் சூழல் மற்றும் நாம் வாழும் சமூகத்தின் கலாச்சாரச் செல்நெறிகள் உள்வாங்கியதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமானதாகும். இங்கே நாம் கிராம்சியையும் மாவோவையும் துணைக்கழைத்துக் கொள்ள முடியும்.

இடதுசாரித்துவத்தை பிரஞ்சு புரட்சிக் காலத்தின் முன் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்தியல்கள் சார்ந்து நீட்டிப்பதும், அதனை இன்றைய சூழல் வரை புதிய கருத்தமைவுகளுடன் உள்வாங்கிச் செழுமைப்படுத்துவதுமே எமக்குள்ள முக்கிய பணியாகும். இதுவே இடதுசாரித்துவத்தை எதிர்காலத்திலும் சகல ஒடுக்குமுறைக்கெதிரான கருத்தியலாக - மக்கள் சார்பான அரசியலாக வளர்த்தெடுக்க உதவும். மார்க்சியத்தின் முதல் மீறல் லெனினால் நிகழ்த்தப்பட்டதாக லக்லாவ் கூறுகின்றார். பொருளாதார மையமான மார்க்சியக்கட்டமைப்பை அதிகம் அரசியல் சார்ந்ததாக மாற்றியமைத்தவர் லெனினே. இத்தொடர்ச்சிக்கு மாவோவின் பங்களிப்பு புதிய பார்வையைக் கொடுத்தது. உதாரணமாகக் கருத்தியல் தளத்தில் ழீன் போல் சர்த்தரின் தன்னிலைக்கும் அமைப்பாக்கத்திற்கும் இடையிலான தெரிவுகளுடன் கூடிய கருத்தியல் மார்க்சியத்தின் மீது புதிய பார்வையைக் கொடுத்தது. இச்சமபவங்கள் நடைபெற்ற காலங்களில் அவை மீறல்களாக அடையாளப்படுத்தப்பட்டு மரபான மார்க்சியர்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் மார்க்கியத்தை அகலித்ததாகக் கொள்ளப்பட்டன. இவ்வகையான அகலிப்புகளுடன் கூடிய கூட்டுக்கருத்தியலின் வளர்ச்சியையும் போராட்ட வடிவங்களையும் இடதுசாரித்துவம் என்னும் பொதுக்கருத்தியலூடாக உள்வாங்கி அதன் மக்கள் சார்பையும் மக்களை அண்மித்த நிலைப்பாட்டையும் உறுதிசெய்யவதே எமது தலைமுறைக்கான முக்கியபணியாகும்.

ஏகாதிபத்தியம் முதலாளியத்தின் முரண்பாடுகளைச் சிக்கலாக்கி, அவற்றைக் கூர்மைப்படுத்துகிறது. அது ஏகபோகத்திற்கும் தடையற்ற போட்டிக்கும் முடிச்சுப் போடுகிறது. ஆனால் அதனால் பரிவர்த்தனை, சந்தை, போட்டி, நெருக்கடிகள் முதலானவற்றைத் தவிர்க்க முடியாது. ஏகாதிபத்தியம் என்பது தன்முடிவை அணுகிவரும் முதலாளியம்” Lenin Collected Works. Vol – 24 p464

நூற்றாண்டுகள் கடந்தும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட லெனினின் மேற்போந்த கூற்று, அதன் அடிப்படையில் இக்காலத்திற்கும் பொருந்துகின்ற போதிலும் நடைமுறையில் அதன் சாத்தியமின்மையைக் காண்கின்றோம். முதலாளியம் தன்னை மாறுபடும் வெவ்வேறு வடிவங்களில் கடந்த காலங்களில் நிறுவியிருக்கின்றது. முதலாளியம் சார்பான, முக்கியமாகத் தேசிய அரசுகளுடைய நிழலில் அது தன்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றது. தேசிய அரசுகள் உதிர்வதற்கு மாறாக மேலும் வலுப்பட்டிருக்கின்றன.

இங்கே நான் மூன்று பகுதிகளாக மார்க்சியக் கருத்தியல் போக்குகளை நோக்க முனைகின்றேன். முதலாவது மார்க்சின் கருத்தியலின் தோற்றுவாய்க்கு முன்னதான சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு. இரண்டாவதாக மார்க்சியக் கருத்தியலின் எழுச்சியும் சோவியத் யூனியனின் உடைவு வரையான அதன் அகலிப்புடன் கூடிய வளர்ச்சியும். மூன்றாவதாக சோவியத் யூனியனின் உடைவுக்குப் பிற்பாடான மார்க்சியம் தொடர்பான கருத்தியல் போக்குகள்.

முதலாளித்துவத்தின் முடிவை கார்ல்ஸ் மார்க்ஸ் எதிர்வுகூறியதில் நியாயமற்ற தன்மைகள் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பிற்கு முந்தைய பொருளாதாரக் கட்டமைப்புக்கள் பற்றிய ஆய்வுகளை விரிவாகவே செய்திருந்தார். 1858 ஆம் ஆண்டளவில் மார்க்ஸ் எழுதிய Pre-Capitalist Economic Formations என்னும் நூலில் முதலாளியம் என்பது நீண்டகால வரலாற்றைக் கொண்ட பொதுவுடமைச் சமுதாயத்தின் மீது திணிக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பு என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். இம்முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பு என்பது பாட்டாளி வர்க்கத்தால் நிராகரிக்கப்படுமிடத்து அத்திணிப்பு நீண்டகாலத்திற்கு தொடரப்பட முடியாதது என்பது அவரது கணிப்பாக இருந்தது. மனிதகுலத்தின் ஆரம்ப காலக் குலச்சமுதாயம் பொதுவுடமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அச்சமூகம் காலப்போக்கில் மக்கள் தொகைப்பெருக்கம் மற்றும் போர்கள் காரணமாக மாற்றம்பெற்றது. அதில் இருந்து கூம்புவடிவ அதிகாரச் சமூக அமைப்புத் தோற்றம் பெற்றது. இச்சமூக அமைப்புப் படிப்படியாக மாற்றம் பெற்று அரசுகள் தோன்றின. இங்கே அடிமைமுறைகள் கொண்டுவரப்பட்டன. பின்னர் நிலப்பிரபுத்துவ சமூகம் உருவாகியது. இது நில உரிமை தொடர்பான முரணைக் கொண்டிருந்தது. அதன் பின்னர் குடியாட்சி முறை உருவாகியது. குலச்சமுதாய அமைப்பில் இருந்து குடியாட்சி சமூகம் வரையான சமூகக் கட்டமைப்புக்கள் மார்க்சால் விரிவாக ஆய்வுசெய்யப்பட்டிருந்ததன் காரணமாகவே அதன் பின்பான முதலாளித்துவச் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புத் தொடர்பான தீர்க்கமான கருத்துக்களை அவரால் தெரிவிக்க முடிந்தது. நூறாண்டுகள் கழிந்த நிலையில் மார்க்சின் முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்புத் தொடர்பான – அதன் எதிர்காலம் தொடர்பான – அதன் உதிர்வு தொடர்பான ஊகங்கள் பொய்த்துப் போயினும் முதலாளித்துவப் பொருளாதார சமூகக் கட்டமைப்பின் ‘உயிரணு’ அதே வடிவத்தில் காணப்படுகின்றமை ஆச்சரியமானதே.

இரண்டாவதான விடயம் மார்க்சியக் கருத்தியல் எழுச்சியில் இருந்து சோவியத் யூனியன் உடைவு வரையானது. எர்னஸ்ட் லக்லாவ் கூறியது போன்று லெனினே மார்க்சியம் தொடர்பான முதல் மீறலை நிகழ்த்தியவர். இக்காலப்பகுதியில் மார்க்சியம் தொடர்பாக ஒடுக்கப்பட்டவர்கள் சார்ந்து மார்க்சியக்கருத்தியல் பல்வேறு வழிகளில் வளர்த்தெடுக்கப்பட்டது. மார்க்சியத்தை முன்வைத்து தேசியவாதம் தொடர்பான கருத்தியலை லெனினும் அதன் பின்னர் ஸ்டாலினும் வளர்த்துச் சென்றார்கள். இன்னும் சோசலிசப் பெண்ணியம் தொடர்பாக வளர்ச்சிபெற்ற கருத்தியல்களையும் இவ்வகைமாதிரியில் வைத்துக் கூற முடியும். அவ்வாறே கருத்தியல் ரீதியாகக் கிராம்சி முன்வைத்த சூழல் தொடர்பான மேலாதிக்க தன்மை. ஒடுகப்பட்டோருக்கான எழுச்சி என்பது குறித்த சமூகத்தின் சகல சமூகவியல் பரிமாணங்களையும் உள்ளடக்கிய போராட்ட வடிவமாக இருப்பதென்பது முக்கியமானது என்பது சாரப்பட்ட கருத்துக்கள். இவற்றை இரண்டாம் வகைமாதிரியில் உள்ளடக்குகின்றேன்.

மூன்றாவதாகப் ‘பின்மார்க்சியம்’ என்னும் கருதுகோள் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிற்பட்ட மார்க்சியத்தின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளூடும் உளப்பகுப்பாய்வு, சமூகவியல் மற்றும் மானுடவியல் துறைகளின் கருத்தியல் எழுச்சிக்குப் பின்னரான சமூகம் தொடர்பான கேள்விகளூடும் இக்கருத்தியல் எழுச்சி பெறுகின்றது. முதலாளித்துவம் தனது வடிவத்தை வெகுவாக மாற்றிக் கொண்டுவிட்ட நிலையில் நாம் மார்க்ஸ் சொன்னதை அப்படியே பின்பற்றுவதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது என்று கூறும் புதிய தரப்பினருக்கும் மரபார்ந்த மார்க்சியர்களுக்குமிடையிலான தீவிரமான உரையாடலின் விளைவாகக் கவனம் பெற்ற கருத்தியல் போக்கு இவ்வகைக்குள் வைத்து நோக்கப்படுகின்றது. வர்க்கம் மற்றும் பொருளாதார அடிப்படைகளை மையப்படுத்திய ஏற்கனவேயான போக்குகளின் போதாமையும் அவற்றை இதர அடையாளங்கள் அல்லது ஒடுக்குமுறைகள் சார்ந்து அகலிக்க வேண்டும் என்பது ‘பின்மார்க்சியர்கள்’ இனது வேண்டுகோளாக இருந்தது. பெண், இனம், தேசியம், பாலியல் சிறுபான்மை, அணு ஆயுத எதிர்ப்புக் கருத்தியல் மற்றும் சூழலியல் போன்ற புதிய அரசியல் வெளிப்பாடுகளை உள்வாங்க வேண்டும் என்பதும் ஏற்கனவேயான வர்க்க அடிப்படை என்பதை மாறுபட்ட முதலாளித்துவ வடிவத்திற்கு ஏற்றதாக மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்துக்களுமே முக்கியத்துவம் பெறுகின்றன.

மேற்கூறிய ‘மார்க்சியத்திற்கு முன்’, ‘மார்க்சியமும் அதன் தொடர்ச்சியும்’ மற்றும் ‘பின்மார்க்சியம்’ ஆகிய மூன்றுவகைமாதிரியின் போக்குகளில் இதன் ஒவ்வொரு கட்டத்தை நிராகரிப்பவர்களும் உள்ளனர். பின்மார்க்சியம் என்பது மார்க்சியமே இல்லை என்பது சிலரது கருத்தாக இருக்கின்றது. வேறுசிலர் சோசலிசப் பெண்ணியம் தொடர்பான நிராகரிப்புகளையும் இன்னும் சிலர் மாவோ தொடர்பான நிராகரிப்புக்களையும் மேற்கொள்கின்றனர். இப்பிளவுகளைக் கடந்தாக வேண்டிய கடப்பாடு இளைஞர்களுக்கு உண்டு. இம்முரண்பட்ட கருத்தியல்களின் பின்னால் அணிவகுக்காமல் மாறாக முரண்களைக் கடக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. அதனால் நாம் மார்க்சியத்தின் தொடர்ச்சிப் போக்கை ‘இடதுசாரித்துவம்’ என்னும் பொதுப்பெயரால் அழைக்க முடியும். இனிமேல் ‘இடதுசாரித்துவம்’ என்னும் பொதுப்பெயருடன் எமது கருத்தியலை வளர்த்தெடுக்க முயற்சிப்போம்.

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...