Saturday, March 20, 2010

ஆசிரியன் சாகத்தான் வேண்டுமா?




நாம் ஏன் எழுதுகிறோம் ? நாம் ஏன் படிக்கிறோம் ? 'கலை ' மனிதர்களுக்கு ஏன் முக்கியம் ?

ஒரு கலைப் படைப்பின் உள்ளே ஒரு ரகசிய உயிர் இருக்கிறது. அது கலைஞனின் விருப்பத்தின் வெளிப்பாடு. புராணக் கதைகளிலும் , மாயாஜாலக் கதைகளிலும் இந்த 'விருப்பம் ' வெளிப் படையானதாக இருக்கிறது.

வாழ்க்கையில் காணக்கிடைக்காதவைகள் கலைகளில் கிடைக்கின்றன. 'தவறுகளுக்குத் தண்டனை ', 'நல்லதுக்குப் பரிசு ' என்று ஒரு நியாயம், பெரும் இடர்களுக்கிடையே அரும்பும் நேச நெகிழ்வு , சுகமான முடிவு இவைகளைக் கலைப்படைப்புக்களில் காண்கிறோம். மிகச்சிறந்த கலைப்படைப்புக்களில் இந்த 'விருப்பம் ' கலைஞனால் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமல் மறைந்திருக்கலாம். சில சமயம் இந்த 'விருப்பத்தை ' கலைஞன் மறுக்கவும் மறுக்கலாம்.

டி. எச். லாரன்ஸ், தன்னுடைய 'தேர்ந்த அமெரிக்க இலக்கிய வாசிப்புகள் ' என்ற (1923 வருடத்திய) என்றநூலை எழுதினார். பல முன்முடிவுகளைத் தகர்த்தது அந்தக் கட்டுரைத் தொகுப்பு. அதில் அவர் ' கலைஞனை நம்பவே நம்பாதே. கதையை நம்பு. ' என்று சொல்கிறார். 'விமர்சகனின் முக்கியமான பணி, படைப்பாளியிடமிருந்து படைப்பை காப்பாற்றுவது தான் ' என்றும் அவர் சொல்கிறார்.

பல சமயம், கலைஞர்கள், தம் படைப்பினை முடிக்கும் வரை தாம் எழுதுவது என்னவென்று தெரியாமலே இருக்கக் காணலாம். நம்மில் சிலருக்கு , கதையையும், ( வேறு வார்த்தை கிடைக்காததால் இதை 'கதை ' என்று சொல்லலாம்), அது அமையும் அமைப்பையும் தொடர்பு படுத்துகிற ஒரு ரகசியச் சரடு இந்த விருப்பம்தான். இது இல்லையென்றால், இறுக்கமான, கட்டுமானமான ஒரு படைப்பு சாத்தியமில்லை.

ஒரு கதையின் வெளித் தெரிவதான கட்டமைப்பானவை 'எங்கே தொடங்குகிறது ', 'எங்கே முடிகிறது ', 'தூக்கலாய்த் தெரியும் படிமங்கள் ', 'தொனிகள் ' போன்றவை. எழுத ஆரம்பிக்கும்போது, எரிமலையாய்க் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் இருப்பினும், பிற்பாடு அதைச் சீர் திருத்தி செப்பம் செய்வது மிகச் சாவதானமான செயல் தான்.

'சாவதானத்திலேயே, விரல்களில் சூடேறுகின்றன. அவனைத் தொடும் விரல்களெல்லாம் அதிர்வடைகின்றன. அதனால் தான் பலரும் அவன் தகிப்பதாய் உணர்கிறார்கள். ' நீட்ஷேயின் இந்தச் சொற்றொடரில் கலைஉருவத்தில் அக்கறையுள்ளவனின் உள் பார்வையைக் காணலாம். உணர்வுபூர்வமாய் இயங்கும் ஒருவன் தன் படைப்பை அளிப்பது, அவன் தீவிரமாய் உணர்ந்த கணங்களின் பதிவு. அந்த உணர்வுகள் இப்போது இல்லையெனினும் கூட.

கலைஞன் இயல்பாகவே கும்பலின், அரசாங்கத்தின், சமகால நெறிகளின் நிரந்தர எதிரியா ?

நெறிமுறை சார்ந்த / குழு சார்ந்த / குடும்பம் சார்ந்த உலகம் ஒரு புறம். ஒரு தனியாளின் ஆன்ம உலகம் இன்னொரு புறம். எண்ணிக்கையில் அதிகமான, 'விதிகளின் ' உலகம் ஒரு புறம். விதிகளைப் புறம் தள்ளும் தனிமனித வேட்கை இன்னொரு புறம். இந்த இரு முரண்பட்ட உலகங்களிடையேயான போராட்டம் தான் விரட்டிக் கொண்டேயிருக்கிறது: வாழ்க்கையிலும் சரி, எழுத்திலும் சரி. கனவே போல, 'தான் ' கரைந்து , தூக்கம் கலைந்த அரை விழிப்பில், ஒரு தற்சார்பு அற்ற ஆளுமை எழுந்து , (கும்பல் நியதி சார்ந்த உலகு மீது) விசாரணைகளைத் தொடங்குகிறது. (என்னைப் பொறுத்த வரையில் இந்தத் துரத்தல் இளமைப் பருவம் தாண்டிய உடனேயே தொடங்கி விட்டது)

நான் யார் ? என்று கேடுகும் போதே , இந்தக் கேள்வியைக் கேட்கிற 'நான் ' தான் யார் ? மனித வரலாறு முழுதும், விடை கிடைக்காமலே கேட்கப் பட்டு வரும் கேள்வியோ இது ? இந்த நான் தனித் தன்மை வாய்ந்ததா ? சாராம்சத்தில் மற்ற 'நான் 'களில் உள்ள பெளதீக, ரசாயனக் கலவையைக் கொண்டது தானே ? அழிவையே மாறா உண்மையாய்க் கொண்ட, பல லட்சக் கணக்கான வருடங்களுக்கு முன் உருவான நட்சத்திரத் துகள் தானே ? எமிலி டிக்கின்சன் (1868 ?) சொற்களில் : ரத்தப் போக்கில் தொடங்கி , எழுச்சியற்ற வாழ்க்கையா ?

இதுவும் கூட ஒரு புனைகதை தானா ? கலாரீதியாக எழுப்பப்பட்ட ஒரு விருப்பமே தானா ? தனிமனிதத்தில் தோய்ந்த அனுபவங்களும், தாமரையிலைத் தண்ணீரே போல் தோய்ந்திராமல் ஆன அனுபவங்களும் , மொழியிலும் மெளனத்திலும் மோதி, கலை பிழம்பாய்ச் சாத்தியமாகிறது.

1969-இல் மைக்கேல் ஃபூக்கோ சிந்தனாமுறையில், 'படைப்பாளி என்பது என்ன ? ' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அவரால் தாக்கங்கள் பெரிதும் நிகழ்ந்திருப்பினும், அவர் தவறாகவே புரிந்து கொள்ளப் படுகிறார். சிந்தனைப் போக்கில் ஒரு சோதனை முயற்சியாகவும், அழகியல் விசாரணையைக் காட்டிலும் அரசியல் சார்பின் மிகுதியால், இந்தக் கட்டுரை புகழ் பெற்றது.

எழுத்தாளனின் படைப்புலக அடையாளத்தை விசாரித்தது - இல்லை அடையாளத்தை அழித்தது. (இருப்பினும் இது வெறும் கோட்பாட்டளவில் தான் - ஃபூக்கோவிற்குப் பின், ஃபூக்கோவுடன் உடன்படுபவர்கள் உட்பட, புத்தக அட்டைகளில் அவரவர் பெயர்களைத் துறக்கவும் இல்லை. புத்தக சம்பாத்தியத்தையும் கூடத் துறக்கவில்லை. பேர் தெரியாத எழுத்தாளர்கள் கூடத் தம்பட்டமடிப்பதை நிறுத்த வில்லை). இருப்பினும் 'படைப்பாளியின் இருப்பு ' பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. இதில் தீர்வுகள் சாத்தியமில்லை. ஏனென்றால், இதில் விவாதத்துக்குள்ளாக்கப் படுவது மொழியும் , விமர்சனச் சொல்லாக்கங்களும் தானே தவிர, பருண்மையானதோர் நிஜம் அல்ல. ரோலண் பார்த், ழாக் தெரிதா கூட இது போன்றே -- ஆனால் பெருமளவு தீவிரமாக அல்ல -- 'படைப்பாளியின் மரணம் ' என்று வாதிக்கிறார்கள் -- 'பிரதிக்கு அப்பால் ஒன்றுமில்லை ' என்கிற கோட்பாட்டைக் கூறி ' ஒரு இலக்கியப் படைப்பு இந்த மையம் அல்லது இணைந்த ஒரு தோற்றுவாய்ப் புள்ளியிலிருந்து என்று சொல்லத்தக்கதல்ல ' என்கிறர்கள். ( மோஸார்ட்டின் இசை என்று எதையும் சொல்ல முடியாது. மோஸார்ட்தனமான ஓர் இசைப் பிரதி, மற்ற மோஸார்ட் தனமான பிரதிகளுடன் சில குணாம்சங்களைப் பங்கிட்டுக் கொள்ளாலாம். அவ்வளவு தான். இவை ஒரு விதத்தில் சில ஒலி அடையாளங்களே தவிர வேறில்லை. சாராம்சமான அடையாளம் என்று சொல்லத்தக்கதாய் ஒன்றுமில்லை.) 1

இந்தக் கோட்பாட்டைத் தலை கீழாக்கிப் பார்க்கலாம். 'வரலாற்றில் தற்செயலாக நேர்ந்த ஒரு தனி ஆள்( பெயர், தனிமனித மூலக்கூறு(DNA), கையொப்பம் எல்லாம் சேர்ந்தவர்) ' எழுதிய எல்லாமே ஒரு படைப்புலகம்; எனில் முடிவான படைப்பு என்று உலகம் அறிய, செப்பமிட்டு அந்த ஆள் உழைத்து, அந்த நபர் அளித்த, புத்தக உருவில் கனத்த அட்டை கொண்ட புத்தகம் மட்டுமல்ல. எழுத்தாளன் விரும்பாமலே, அவன்(ள்) கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிக்கிறவர்கள், இந்த ஊகத்தில் தான் செயல் படுகின்றனர்: பெரும் தொகையை கொடுத்து, சாதாரண படைப்புகளையும் , இளம் பருவத்துக் கிறுக்கல்களையும், கவனமில்லாமல் அவசரமாய் எழுதப்பட்ட கடிதங்களையும் , வாங்கத் தயாராய் இருக்கின்றனர் -- தப்பிப் போன சுயத்தை ஸ்தாபிக்க இவை தாம் உண்மையான, இயல்பான முறையில் வெளிப்பட்டவை என்றும் சொல்லலாம். புகழ் பெற்ற எழுத்தாளரெனில், டி.எஸ்.எலியட் சொன்னது போலச் சொல்லலாம்: 'கலை என்பதே ஆளுமையின் அழிவு தான். ' இருப்பினும், கைப்பட எழுதிய எல்லாமே, அசடு வழிகிற தொனியில் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் , நாட்குறிப்புகள், -- எலியட்டின் யூத எதிர்ப்பு வரிகள், பெண்களைத் தாக்கும் வரிகளும், போர்னாகிராபிக் கனவுகளூம் -- எல்லாமே, அச்சிட்ட படைப்பினைக் காட்டிலும் மதிப்பு மிக்கதாய் இருக்கும். தனி மனிதர்கள் என்பதே இல்லை என்று வாதிக்கும் தத்துவக் கோட்பாடு ஒரு புறம் இருப்பினும், தனி மனிதனை அவனளவில் மதிக்கத் தான் மக்கள் விரும்புகிறார்கள். அடையாளப் படுத்துதல் என்னும் சிறையைலிருந்து தப்பிக்க எழுத்தாளர்கள் புனைப் பெயரைத் தேடி ஓடியபடி, பிரதி வெறும் பிரதியாய், படைப்பின் கீழ் உள்ள , ஊர் பேர் தெரியாத ஒரு நபரின் பெயருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் , எந்த முன்முடிவுகளும் இல்லாமல் , பிரதியாய் மட்டுமே இருக்கும் என்று நம்புகிறார்கள். மீண்டும் புதிதாய்ப் பிறந்தல் - மீண்டும் ஒரு தொடக்கம் -- படைப்பாளியாக அல்ல -- படைப்பாய் மட்டுமே. !

இருப்பினும், ஃபிரெஞ்சுக் கோட்பாடுகள் , 'புதிய ' வரலாற்றுப் பார்வை இவற்றுக்கு முரண்பட்டு, எழுத்தாளனின் 'வரலாற்று இடத்தி 'னை நிர்ணயம் செய்வதற்காக, அவனைப் பற்றிய எல்லா விபரங்களும் சேகரிக்கப் படுவது, நம் 'சார்பற்ற ' காலகட்டத்தின் அடையாளம் என்று சொல்ல வேண்டும்; எழுத்தாளனின் நோக்கத்தைக் கண்டறிய எதுவுமே சிறு விஷயமாகவோ, தரம் தாழ்ந்ததாகவோ, முக்கியமற்றதாகவோ கருதப் படாமல் எல்லா வாழ்க்கைத் துணுக்குகளும் சேகரிக்கப்படுகிறது. (உதாரணமாக ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கியப் பத்திரிகை சில்வியா ப்ளாத்-தின் கடைசி காலக் கவிதைகளை, மாதவிலக்காகும் முன்னர் படும் இறுக்கமான அவஸ்தையின் வெளிப்பாடாகப் புரிவிப்புச் செய்தது.) சமகால ஆட்களைப் பற்றி பெரிய வாழ்க்கை வரலாறுகளூம், பெரும் விவரணக் குவியல்களும் குவிக்கப்பட்டு , எழுத்தாளனின் இறைஞ்சுதலான ' என் படைப்பே என் வாழ்க்கை, என் படைப்பே என்னை அறிய வழி ' என்ற வேண்டுகோள் புறந்தள்ளப் படுகிறது. இருப்பினும், பல எழுத்தாளர்கள், எழுதி முடித்த படைப்புகளில் தாம் 'வசிப்பதில்லை ' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். எழுதி முடித்த பிறகு அதனுடனான உறவு முடிந்து போகிறது. இந்த உறவு காலத்துடன் பின்னிப் பிணைந்தது. காலம் போகும் திசை ஒன்றே தான். பிரதியைக் கலைப் படைப்பு என்று ஒப்புக் கொண்டால், அதற்கு வெளியில் ஒன்றுமில்லை என்று ஒப்புக் கொண்டாக வேண்டும். படைப்பாளியின் நோக்கம் , விமர்சனப் பார்வைகளில் இடம் பெறுவதே இல்லை. விமர்சன உலகுக்கு வெளியே, ஷேக்ஸ்பியர் ஒரு ஆளா, இல்லை, வேறு வேறா போன்றவை விவாதிக்கப் படலாம். மைக்கேல் ஃபூக்கோ கேட்டது போல் : ' யார் பேசுகிறார்கள் என்பது முக்கியமா என்ன ? '

மார்ஸெல் ப்ரூஸ்ட் தன்பாலுறவுக்காரன் என்று தெரிந்து கொள்வதால் என்ன பயன் ? ப்ரூஸ்டின் நாவலின் பெருமையை இது பாதிக்கிறதா ? படைப்பை விரிவு செய்கிறதா ? -- படைப்பிலிருந்து கவனத்தைத் திசை திருப்புகிறதா ? அதன் பெருமையைக் குறைக்கிறதா, அல்லது பெருக்குகிறதா ? ஆஸ்கார் ஒய்ல்டின் 'டோரியன் கிரேயின் சித்திரம் ' ஒய்ல்ட் தன் பாலுறவுக்காரனாய் இருந்ததால் நுணுக்கங்கள் ஏதும் பெற்றுள்ளதா ? அப்படி அவன் இல்லையென்றால் அதன் தன்மை மாறியிருக்குமா ? 'யார் பேசுகிறார்கள் என்பது முக்கியமா என்ன ? ' என்று கேள்வி இருப்பினும், பல வாசகர்களுக்கு இது முக்கியமாகப் படுகிறது.

ஒரு பெண் நிலைவாதிக்கு, ஒரு பிரதி பெண் எழுதியதா என்ற கேள்வி மிக முக்கியமானதாக ஆகிறது . ' ஒரு பெண்ணின் சொல்லாடல், ஓர் ஆணின் சொல்லாடலிலிருந்து - பிரதி ஒன்றே போல் தோன்றினாலும் -- கணிசமாய் மாறுபட்டிருக்கும். பெண் எழுதினால், 'பெண்ணின் கோபம் ' அதில் வெளிப் பட்டிருக்கலாம். அவள் கலைப் படைப்பு அவள் உடம்புடன் வெகுவாகத் தொடர்பு கொண்டிருக்கலாம். இந்தக் குறுகிய பார்வையின் நோக்கை மறுப்பவர்கள், பெண்பால் அடையாளத்தை மறுப்பவர்களாய் இருக்கலாம். ஆண் மொழியிலிருந்து வேறுபட்டு, பெண்மொழி என்று ஒன்று உள்ளதா ? இது பெண்குலத்துக்கே உரித்தான மொழியா அல்லது, ஒரு குறிப்பிட்ட பெண்ணின் உடைமையா ? 'இருபாலினத்தவரில் (ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் இருப்பவர்கள்) ' கலைஞர் இல்லையா ? ஒரு பெண்ணாகவும் அதே சமயம் எழுத்தாளியாகவும், ஒரு எழுத்தாளியாகவும் அதே சமயம் பெண்ணாகவும் இருக்கிற நான், பெண் உடம்பிலிருந்து குதித்தோடி வருவதாய் ஒரு மொழியை அறியவில்லை. -- அப்படிப் பட்ட கோட்பாட்டின் மாயக் கவித்துவ வேட்கையை நான் பரிவுடன் பார்க்க நேரினும் கூட. வரலாறு முழுதும் விளிம்புக்குத் தள்ளப்பட்டு. மீண்டும் மீண்டும், முழுமையான மனிதப் பிறவியல்லவென்று ஒதுக்கப் பட்டு, ஆன்மா அற்றவர்கள் என்று சொல்லப்பட்டு, எழுத முடியாது, வரைய முடியாது, இசையமைக்க முடியாது, தத்துவம்,கணிதம், அரசியல், அதிகாரபீடங்கள் எதற்கும் தகுதியில்லை என்று தள்ளப்பட்டு -- கருவறையும், தாய்ப்பாலுமே ஒரு ஆறுதல் தரத் தக்க அளிப்புகள் என்று ஓதப் பட்டு வந்துள்ளனர் பெண்கள் . பெண்படைப்பாளிக்கு, பெண்நிலை/ பெண்பால் அடையாளம் சார்ந்த விமர்சனம் மிகச் சிறப்பாக அவர்களைப் போஷிக்கக்கூடும். பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் கவனமாய்ப் படிக்கப் படுகின்றன. முன்னே ஒதுக்கப்பட்டவர்களும் , இன்று கவனத்துக்கு வருகிறார்கள்.

இருப்பினும் இந்த விமர்சனப் பார்வை -- நல்ல நோக்கங்களுடன் செய்யப் படினும் -- உருவ அக்கறை கொண்ட, பெண்பால் பிரசினைகள் மட்டுமே தலையாய பிரசினையாய் எல்லாப் படைப்புகளிலும் துருத்திக்கொண்டிராத ஒரு படைப்பாளிக்கு , மிகக் கட்டுப்படுத்துவதாய்க் காணக் கூடும். (ஒரு எழுத்தாளி என்ற முறையில், பெண்களைப் பற்றி எழுதுகிறேன்; பெண்களின் கோணத்திலிருந்தும் எழுதுகிறேன்; ஆனால் ஆண்களையும் பற்றி எழுதுகிறேன். ஆண்களின் கோணத்திலிருந்தும் எழுதுகிறேன். ஆணோ பெண்ணோ என் கதாபாத்திரத்தில் என்னைக் கரைத்துக் கொள்வதின் மூலம், என்னுடையதாக இல்லாத ஒரு பிரக்ஞையின் பரிமாணத்துக்குள் நுழைகிறேன் - பெண் நிலையாகவும் சரி ஆண் நிலையாகவும் சரி, கதாபாத்திரத்திற்கு மிக நியாயம் செய்வதாகவே உணர்கிறேன். ) ஒரு தனி மனித சாராம்சத்தை, பிறப்புறுப்பு சம்பந்தப் பட்ட ஒன்றாக மட்டும் குறுக்கி விட முடியாது. எழுத்தாளியான பெண்ணை 'பெண் எழுத்தாளர் ' என்று அடையாளம் காண்பிப்பது, சங்கடம் தருகிற ஒன்று -- அதிலும் 'ஆண் எழுத்தாளர் ' என்று யாரும் அறியப் படாத போது.

'எங்கே படைப்பாளி ? ' என்ற கேள்விக்குத் திரும்பினால், ஹென்றி ஜேம்ஸ் சொன்னது போல, கலைஞனின் வாழ்க்கையே அவன் கலைப் படைப்பு என்று சொல்லலாம். கலைஞனின் படைப்பே அவன் வாழ்க்கை என்று சொல்ல முடியாது. கலைஞனின் வாழ்வில் ஒரு பகுதி தான் படைப்பு. பல சமயங்களில் கலைஞனின் -- மிகச் சிறப்பான கலைஞர்களுக்குக் கூட -- படைப்பு வாழ்வின் மிக முக்கியமான பகுதி கூட அல்ல. பிரதிகளைப் படைக்கிற எழுத்தாளிக்கும், வாழும் நபருக்கும் இருத்தலியல் ரீதியான ஒரு வேறுபாடு இருக்க வேண்டும் என்றும் வாதிடலாம். ஆக படைப்பே கலைஞன். அழகியல் படைப்பின்., பிரதியின், அச்சுப் பிரதியின், செப்பம் செய்யப்பட்டதின் 'செயற்கையான ஒரு ஆக்கத்தின்: ' ஒரு பகுதியே படைப்பாளி என்று வாதிடலாம். மனிதன் இயற்கையான நிகழ்வாய்ப் பிறக்கிறான் எனில்,. கலைஞன் அந்தத் தனிமனிதனிலிருந்து பிறக்கிறான். இந்த 'இயற்கை 'யின் போதாமையைப் பூர்த்தி செய்வதாகவும், முழுமையற்ற 'இயற்கை 'யை முழுமை செய்வதாகவும், வெறுமே இயற்கையென அறிவதைக் கடந்து செல்வதும் தான் படைப்புக்கான உந்துதல். எல்லாப் புனைகதைகளும் , கவிதைகளும் , புத்தகங்களும் அந்தப் 'புனைப்பெயர்களால் ' தான் இந்த உந்துதலின் பலனாகப் படைக்கப் பட்டன. அதை எழுதியவனும், அந்தப் பெயருக்குச் சொந்தமானவனும் ஒரே நபர் அல்ல தான்.

எங்கே படைப்பாளி ? படைப்பில் தான்.

படைப்பாளியின் 'படைப்பாளி ' அந்தப் பெயருக்குச் சொந்தமான நபர் இல்லையென்பது இதன் பொருள் அல்ல - தற்காலிகமாகவேனும்.

ஒரு கலைஞனின் வாழ்க்கைதான் அவனது படைப்பு. இதுவே அவனை அறிய சரியான இடம்.

-- ஹென்றி ஜேம்ஸ்

காகிதத்தில் கை வைத்த உடனேயே எல்லாமே உருவாயிற்று

-- சாமுவல் பெக்கெட் ( 'கோடோவுக்காகக் காத்திருத்தல் ' நாடகம் எழுதியது பற்றி)
****

குறிப்பு:

1. வொல்ஃப்காங்க் அமாடியஸ் மோஸார்ட் - மேதைகளின் உதாரண புருஷர். இந்தக் கீழே தரப் பட்ட கடிதம், மேதையும் கூட - ஒரு விதத்தில் செயலற்று, நினைவிலி மனத்தின் கைப்பாவையாய் இயங்கினார் என்று சொல்கிறது :

' தனியாக, நான் நானாகவே இருக்கும் போது, மகிழ்வில் ஆழ்ந்திருக்கும் போது.. என் கருத்துகள் பிரவகிக்கின்றன. எங்கிருந்து வருகின்றன, எப்படி வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அவற்றைப் பலாத்காரமாய்த் தருவிக்கவும் என்னால் இயலாது.. . .

நான் எழுத முனையும் போது காகிதத்தில் மிகத் துரிதமாகவே பதிவு கொள்கிறது -- ஏனெனில் ஏற்கனவே எல்லாமும் முடிந்தது தான். என்னுடைய கையில் எழுதப்பட்டவை ஏன் மொஸார்ட் தனம் கொண்டவை என்றால் -- மற்ற இசைப் படைப்பாளிகளிடமிருந்து வேறு பட்டிருக்கிறது என்றால், என்ன காரணம் ? என் மூக்கு வளைந்திருக்க என்ன காரணமோ அதே தான். நான் அசலானதாய் இருக்க வேண்டும் என்று முயல்வதே இல்லை. '

என்றாலும் கூட மொஸார்டின் ஒப்பற்ற படைப்புகள் அவர் வாழ்ந்த யுகத்தின் முத்திரையைத் தாங்கித் தான் வந்துள்ளன. மேதையும் கூட அவன் வாழும் சூழ்நிலையின் குழந்தை தான்.

No comments:

இருத்தலியத்தின் அபஸ்ரங்கள்

இருத்தலியத்தின் அபஸ்ரங்கள் ஜே.பிரோஸ்கான் (இலங்கை) கவிதைகளை முன்வைத்து 1 இது ஒரு மோசமான தேர்வு.  நிராகரிப்புகள் எனக்குள் நினைவிரு...