Saturday, July 24, 2010

நாட்டுப்புறவியல்-வீச்சும்,பரிணாமங்களும்



நாட்டுப்புறவியல் பல்கலைகழக பாடத்திட்டமாக வைக்கப்பட்டதிலிருந்து மைய முக்கியத்துவம் பெற்று வரும் வேளையில் நாட்டுபுறவியல் குறித்த நம்மவர்களின் ஆய்வும் நோக்கும் சரியானதாக இருந்திருக்கிறதா என்பதை இத்தருணத்தில் ஆய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.'நாட்டுப்புறவியல்' என்னும் நூலில், தமிழில் உள்ள இணையப்பக்கங்கள் எவ்வாறு தமிழ் நாட்டாரின் வாழ்வியலையும் நாநவில் படைப்பாக்கங்களையும் அயல்மொழிகளில் உள்ளவைபோல உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

"இணையம் வழியாக இன்று உலக அறிஞர்களின் அறிவுத்தொகுப்புகளை உற்று நோக்கிக் கற்கும்பொழுது மேல்நாட்டினரின் வளர்ந்த நிலையும் நாம் இன்னும் வளர்ச்சி நோக்கி நெடுந்தூரம் செல்ல வேண்டி உள்ளதும் புலப்படுகிறது. நாட்டுப்புறவியல் என்று சொல்லப்படும் 'FOLKLORE' எனும் துறை சார்ந்த படிப்பின் தேவை இந்திய அளவில் இன்னும் முழுமையாக உணரப்பட்டதாகத் தெரியவில்லை. 'FRRC,' 'IFSC,' 'FOSSILS' போன்று அங்கொன்றும், இங்கொன்றும் ஆய்வு நிறுவனங்கள் உள்ளனவே தவிர மேல்நாட்டை நோக்க, செய்யத்தகுந்த ஆய்வுக்களங்களைக் கொண்டிருக்கும் நம் நாட்டில் இத்துறை மிகுந்த வளர்ச்சி பெற வேண்டி உள்ளது. பழுத்த தாள்களில் அச்சடித்து அகம் மகிழும் நம் மனப்போக்கினை மாற்றிக் கொண்டு இணையம் வழியாகச் செய்திகளை வெளி உலகிற்கு மின்மொழிகளில் தெரிவிக்க வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம். அதுபோல் தொன்மரபு பின்பற்றும் மக்கள் வாழும் காலத்திலேயே நம் பழைய அடையாளங்களைத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும்.

தமிழில் உள்ள இணையப் பக்கங்களை நோக்கும் பொழுது உள்ளூர்ச் செய்திகளின் தரத்தில் நம் இணையப் பக்கங்கள் உள்ளனவே தவிர, உலகத் தரத்தில் நம் பக்கங்களை வடிவமைக்க வேண்டி உள்ளது. உலகின் எந்த முனையில் உள்ளவரும் நம் பழமரபுச் செல்வங்கள் பற்றிய விரிவான பரந்த செய்திகளை அறியும் வண்ணம் நம் நாடு முழுவதும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். நம் நாட்டின் செய்தியைச் சொல்லும் எந்த இணையப் பக்க முகப்பிலும் பழமரபுச் செல்வங்கள் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் தொடர்புகள் (Links) இணைக்கப்பட வேண்டும். அரசு இணையப் பக்கங்களில் சுற்றுலா, கோயில், பார்க்கும் இடங்கள், மருத்துவம், திரைச்செய்தி, தங்கும் இடம் பற்றிய குறிப்புகள் இருப்பது போலவே மரபுச் செல்வங்கள் (Heritage) அல்லது 'Folklore' என்னும் செய்திப் பகுதி இணைக்கப் பெறல் வேண்டும். அமெரிக்க நாட்டுப்புறவியல் கழக இணையப் பக்கத்திற்குச் சென்றால் அமெரிக்காவில் உள்ள நாட்டுப்புறவியல் கல்விக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், படிப்பு முறைகள், படிக்கும் நேரம், கட்டணம், ஆசிரியர்கள், கட்டட அமைப்பு, முன்னோடி ஆய்வுகள், நூலகம் பற்றிய குறிப்புகள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. அதுபோல் நம் இணைய அமைப்புகள் அனைத்திலும் அறியத்தகுந்த இணையத் தொகுப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக நாட்டுப்புறவியல் துறை சார்ந்த ஆய்வாளர்களை அடையாளப் படுத்தும் கட்டுரைகள், படங்கள், மின்முகவரிகள், தொலைபேசி எண்கள், இணைய முகவரிகள் யாவும் நம் ஆய்வு முயற்சிகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்" என்று தன் நாட்டத்தை வெளிப்படுத்தும் இளங்கோவன், நாட்டுப்புறவியல் துறையில் அரும்பாடுபட்டு உழைத்து மிகச் சிறந்த முடிபுகளைத் தம் ஆய்விதழான 'ஆராய்ச்சி''யில் கொண்டுவந்த அறிஞர் நா. வானமாமலை முதலான அறிஞர் பெருமக்களையும் அவர்களின் அறிவுப் புலத்தையும் உலகளாவிய நிலையில் அறியச் செய்வது நம் கடமை என்று உணர்த்துகிறார். அதே சமயம், "அதற்குரிய ஆக்கப் பணிகளில் வாய்ப்பு அமையப்பெறின் ஈடுபட்டு உழைப்போம்...." என்று எழுதுவதுதான் மனத்தை உறுத்துகிறது. வாய்ப்பு அமையப்பெறின் எவரும் எதையும் செய்யலாம். வாய்ப்பை உருவாக்கி அமைத்துக் கொண்டு அத்துறையில் ஈடுபட்டு உழைப்பதுதான் உண்மையான பணி. பின்னடைவுகளே வலிமைமிக்க முன்னெடுப்புகளுக்கு வழிவகுப்பன என்று 'போரின் கலை'(The Art Of War) என்னும் சீனப் பழம்நூல் சொல்லுகிறது.

'நாட்டுப்புறவியல்' என்ற இந்த நூல், அடிப்படைக(basics)ளிருந்து தொடங்குகிறது.

நாட்டுப்புறவியலை 'Folklore' என்ற சொல்லால் வில்லியம் ஜான் தாமஸ் 1846ஆம் ஆண்டில் குறிப்பிட்ட பின்பே இத்துறை தனியாக வளரலாயிற்று என்ற செய்தி முதல் இயலில் இடம்பெற்றுள்ளது. உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் நாட்டுப்புறவியல் தொடர்பாக ஆய்விலும் தொகுப்பிலும் மேற்கொள்ளப்பெற்ற முயற்சிகளும் பணிகளும் விரிவாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.

பின்னர் சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய திரைப்படப் பாவலர் பாடல்கள் வரைக்கும் கொண்டுள்ள நாநவில் இலக்கியத்தின் தாக்கத்தை அலசுகிறது.

நாட்டுப்புறப் பாடலுக்குரிய தனித்தன்மைகளுள் ஒன்று சொல்லோ தொடரோ திரும்ப வருதல்; அந்தத் தனித்தன்மையுடன், சமூக மாற்றத்துக்கான கருத்து வீச்சுகளும் - மொழி அடிப்படையில் வழக்குச் சொற்களும் பழமொழிகளும் சித்தர் பாடல்களில் அமைந்துள்ளமையால் சித்தர் இலக்கியத்தை மக்கள் இலக்கியம் என்று அறிஞர்கள் உரைப்பது பொருத்தமே என்று குறிப்பிடுகிறார் இளங்கோவன்.(பக். 40-42)

நாட்டுப்புறவியல் கோட்பாடுகளின் விளக்கம் விரிவாக மூன்றாம் இயலில் சொல்லப்படுகிறது. அத்துறையின் முன்னோடி ஆய்வறிஞர் சி.எம். பெளராவின் அறுவகைப்பாட்டையும் மரியாலீச்சின் ஐவகைப்பாட்டையும் தவறாமல் குறிப்பிடுகிறார். தாலாட்டுப் பாடல்கள் தொடங்கி ஒப்பாரிப் பாடல்கள் வரையிலான நாநவில் இலக்கிய வடிவங்களை விளக்கி உரிய சான்றுகளையும் வயணமாகத் தந்துள்ளார்.

அடுத்த நான்காம் இயலான 'கதைப்பாடல்கள், 'நாட்டுப்புறவியல்' என்னும் இந்நூலின் அச்சாகத்(axle) தெரிகிறது. பண்பாடு வளர்ந்துள்ள நிலப்பகுதிகளைவிட வறண்ட பகுதிகளிலும் பின் தங்கிய பகுதிகளிலும் மட்டுமே கதைப்பாடல்களின்(Ballads) பெருக்கம் சாத்தியம் என்ற உலகநூல் கலைக் களஞ்சியத்தின்(The World Book Encyclopaedia) கருத்து உரியவாறு பயன்படுத்தப் பட்டுள்ளது(ப.98). வாய்மொழியாகப் பரவுவதே கதைப்பாடல்களின் முதன்மையான செயல்பாடு என்ற டேவிட் புக்கான் கருத்தும் இவ்வாறே.

தமிழ் - தமிழர் பண்பாடு தொடர்பான ஆய்வுகளில் ஏன் ஆங்கிலக் கலைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? அப்படிப் பயன்படுத்தினால் அந்தக் கலைச் சொல்லின் வழி குறித்து, மேற்கோளை மட்டுமே நம்பாமல், சொல்லாய்வுக்குச் சென்று அறிய வேண்டும். இலத்தீன் சொல்லிலிருந்து 'ballad' தோன்றியதாக(ப.97) இளங்கோவன் கூறுகிறார். "A narrative poem or song of popular origin in short stanzas, often with a refrain; originally handed down orally, often with changes and additions[

ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிகளுக்குள்ளோ மேற்கோள் குறிகளுக்குள்ளோ தராமல் நேரடியாகப் பயன்படுத்துவதையும் பிழையுடன் தருவதையும் ஆசிரியர் இனிவரும் பதிப்புகளில் தவிர்க்க வேண்டும். பக்கம் 19இல் "Finish Literature Society என்னும் பெயர்கொண்ட பின்லாந்து இலக்கியக்கழகம் 1831இல் தோற்றம் பெற்றது" என்று உள்ளது. 'Finish Literature Society' என்றால் "இலக்கியக் கழகத்தை ஒழித்துக் கட்டு!" என்று பொருள். இன்னொன்று, பின்லாந்திலுள்ள இலக்கியக் கழக்த்தின் பெயரை அப்படியே சுட்ட வேண்டுமென்றால் 'ஃபின்னிஷ்' மொழியில் தானே தர வேண்டும். இந்தச் சிக்கல்களை மிக எளிதாகத் தீர்க்க, பின்னிய இலக்கியக் கழகம்('Finnish Literature Society') என்று எழுதினாலே போதும். சொல்லுக்கு முன் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தாத ஆசிரியர், 'லோன்ராட்' என்று மொழிமுதல் வாராத எழுத்தைப் பயன்படுத்தாமல் 'உலோனிராடு' என்றல்லவா எழுத வேண்டும்? 'லோகநாதன்' என்ற பெயரை உலகநாதன் என்றெழுதுவதுதானே மரபு! சொல்லில் வடவெழுத்தை நீக்கியபின் தமிழ்மரபெழுத்துச் சொல்லமைப்பை அமர வைக்காமல் ஆங்கில எழுத்துகளில் அப்படியே சொல்லை எழுதுவது ஏற்புடையதா? திரைப்படப் பாடல்களுக்கு வடிவம் நல்கிய நாட்டுப்புறத்துக்குள் பகரமாக இன்று திரைப்பாவடிவம் வந்து நுழைந்துள்ளதுபோலத்தானே இதுவும்?

தோழர் உலகநாதன் பாடும் கானாப் பாடல்கள் சிலவற்றுக்கும் இதே கதைபொதி தன்மை (balade naturelle) இருப்பதை உணரலாம். தொல்பிரஞ்சுச் சொல் 'பலாத்'துக்கு உள்ள நடனப் பாட்டுத் தன்மையை "வாளைமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" என்ற உலகநாதனின் திரைப்பாட்டுக் காட்சியிலும் காணமுடிவது, "நாடுகளின் எல்லைகள் கடந்ததும் மொழியினப் பண்பாடுகள் கடந்ததுமான ஒருமையைக் கதை பொதி பாடல்களில் மட்டுமே காணமுடியும்" என்ற கருத்தியலை மெய்ம்மையுறுத்துவதாகும்.

நாட்டுப்புறவியல் அறிஞர் நா.வானமாமலை, தெய்வீகம், புராணம்,சமூகம், வரலாறு என்ற நான்கு அடிப்படைகளில் கதைப்பாடல்களை வகைமை செய்தது இந்நூலில் விளக்கம் பெற்றுள்ளது. சான்றுகளான இராமப்பையன் அம்மானை முதலான கதைப்பாடல் நூல்களைப் பற்றியும் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஐந்தாவதும் இறுதியானதுமான 'நாட்டுப்புறவியலும் மானிடவியலும்' என்ற இயலில் கொடும்பாவி கட்டி இழுக்கும் வழக்கம், ஆவி வணக்கம், மந்திரம், மைபோடுதல், வசியம் செய்தல் முதலான பல நாட்டுப்புற நம்பிக்கைகள் விளக்கப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் வெளியான தமிழவனின் 'நாட்டுப்புற நம்பிக்கைகள்' என்ற நூல் இது தொடர்பான முன்னோடித் தொகுப்பு ஆகும்.

இவ்வியலில் 'வசியம் செய்தல்' பற்றிய பகுதியில் வரும்,

"மஞ்சள் அரைக்கையிலே

மதிலேறிப் பார்த்த மச்சான்

' என்னபொடி தூவி இங்கே

இழுத்தரைக்க கூடுதில்ல"

என்ற சான்றின் மூலவடிவம்-

"காரை வீட்டுத் திண்ணையிலே

கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே

என்ன நினைச்சுப் பார்த்தானோ

இழைச்சு அரைக்க முடியல்லியே"

என்ற தூய நாட்டுப்புறக் காதல் பாடல் ஆகும். நாற்பதாண்டுகளுக்கு முன் இந்த மூல வடிவம்தான் தொகுப்புகளில் இடம் பெற்றது.

நூலின் இறுதியில் 'உதவிய நூல்கள்' என்ற பட்டியலுக்குப் பின் 'உதவிய இணைய தளங்கள்' என்ற பட்டியலும் இடம் பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது. ஏனெனில் மிகவும் சிறந்த தமிழறிஞர்களும் ஏனோ "அச்சைத்தான் பார்ப்போம்! இணையம் பார்த்திட ஏதிங்கே நேரம்?" என்று இன்னும் அடம் பிடித்துக் கொண்டிருக்கையில் இத்தகைய நலமனப்பான்மையை இளங்கோவன் கொண்டிருப்பது தென்பளிக்கிறது.

பின்னிணைப்பாக, தான் பல ஆண்டுகளுக்குமுன் பெரம்பலூர் மாவட்டத்தில் களப்பணியாகத் தொகுத்த சில பாடல்களைக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். உரை சொல்லி மாரடிக்கும் ஒப்பாரிப் பாடல் ஒன்று, கிட்டத்தட்ட பத்துப் பக்கம் தரப்பட்டுள்ளது. அதை வாசிக்கையில், நாட்டுப்புறக் குடும்ப வாழ்க்கையில் நிழலாடும் தனிமனிதச் சோகங்கள் பல நெஞ்சை நெருடுகின்றன. அதே சமயம் அதில் வரும் மருத்துவர் மற்றும் மருத்துவம் பற்றிய குறிப்புகள், ஓருவரின் இறப்புக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று தவிர்க்கும் தனிமனித மனநிலை(evasion)யைச் சுட்டுகின்றன.[இந்த மனநிலையை அடிப்படையாக வைத்தே சாந்திரார் என்ற சுவிட்சர்லாந்து நாவலாசிரியரை ஆராய்ச்சி செய்துள்ளார் பிரஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ.வே.நாயகர்.] நடவுப் பாடல் ஒன்றில்,

"காச செலவுபண்ணி

காலேஜிக்குப் போகச் சொன்னேன்

காலேஜிக்குப் போகாமலே எம்மா - அவன்

கடத்தெருவ சுத்தினாராம் எம்ம்மா - எம்மா"

என்று இடம் பெற்றிருப்பது சிரிப்பை உண்டாக்கினாலும், பின்னர் வரும் -

"ஆத்தங்கர ஓரத்தில்

ஏத்தம் எறக்கையிலே

வரப்போரம் வேலிகட்டி எம்மா - நான்

வறுமையிலே வளர்ந்தேனடி எம்ம்மா - எம்மா

பூமுடிச்சுப் பொட்டுவச்சுப்

பொன்னகையும் போட்டுவச்சு

கல்யாணம் முடிச்சீங்களே எம்மா - நான்

கண்கலங்கித் திரும்புவேனே எம்ம்மா - எம்மா

...........................................................................

ஸ்டவ்அடுப்பு முதல்கொண்டு

நீஎனக்கு எடுத்துவச்ச

இங்குஒரு ஸ்டவ்அடுப்பு எம்மா - என்

மாமிவாங்கி வச்சிருக்கா எம்ம்மா - எம்மா

ஒருசாதி ஒருரத்தம்

சொந்தமிடக் கூடாதுன்னு

என்னெ கொடுத்தாயே அம்மா - என்

இரத்தத்தையும் பார்த்தாயோ எம்ம்மா - எம்மா

தங்க அருகாபடி

தங்கதாண்டும் வாசப்படி

தங்களுக்குச் சீருசெய்ய எம்மா - அங்கத்

தகராறு ஆவுதடி எம்ம்மா - எம்மா"

போன்ற பாடல்கள் மனவெளியை ஈரமாக்குகின்றன. நாட்டுப்புறங்களில் பெண்கள் படும் கொடுமைகள் அவர்கள் வாய்விட்டுப்பாடும் நடவுப்பாடல்கள் முதலானவற்றில் பதிவானதிலிருந்தே நாட்டார் நாநவில் இலக்கியம் எவ்வளவு ஆற்றல் மிக்கதென உணரலாம். நாட்டுப் புறங்களில் வாழும் பெண்கள் குறித்த சித்தரிப்பு இப்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் வேறு ஒரு மாற்றுப் பரிமாணமும் கொள்ளத் தொடங்கியுள்ளது.நாட்டுப்புறவியலின் வகைமாதிரிகள் இந்திய குணத்துக்கேற்றவாறு,தமிழ் குணத்துக்கேற்றவாறு பரிணாமம் கொண்டிருக்கிறது என்பதை அறுதியிட்டு சொல்லமுடியும்.

No comments:

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள்

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள் பேரா.எச்.முஜீப் ரஹ்மான் ரஹ்மத் ராஜகுமாரன், இவரின் இயற்பெயர் ஏ.பி.எம். அப்த...