Friday, July 30, 2010

பிறகொரு இரவு (சிறுகதை)


உலகின் மகத்தான மனிதனாக கருதப்படும் காந்தியை அவர் தன் குருவாகக் கருதி வந்த தல்ஸ்தோயோடு ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளார் - கே.என். செந்தில்

நேற்றைய தத்துவங்களால் கட்டப்பட்ட கற்சுவர்க் கோட்டைகள் இன்றைய கேள்விகளுக்கும் தர்க்கத்திற்கும் ஈடுகொடுக்க அல்லது எதிர்கொள்ளத் திராணியற்றுச் சரிந்துகொண்டிருக்கின்றன. வரலாற்றின் நிலைகூட ஏறக்குறைய அதுதான். ஆனால் உருவாகி வந்த காலந்தொட்டே தன் மீது அழிவின் சிறு நிழலைக்கூட அனுமதிக்காத ஆற்றல் இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு. தொலைந்து போன பலநூறு ஏடுகளுக்குப் பிறகும் எரிந்துபோன, எரிக்கப்பட்ட எண்ணற்ற பிரதிகளுக்கு அப்பாலும், மாறாத ஒளியோடு மேலெழுந்து வருவது அகத்தை ஆதார சுருதியாக அது கொண்டிருப்பதாலேயே. ஓயாமல் அழைக்கும் மர்மக் குரலொன்றுக்கு (ஒரு குரல்தானா?) தன்னைப் பணயம்வைத்துப் படைப்பெனும் பெருங்கடல் மீது உள்ளுணர்வைத் திசையெனக் கொண்டு படைப்பாளி பயணமாகிறான். கரையில் நிற்பவர்கள் பாக்கியசாலிகள் அவர்களுக்குப் புயலில்லை, அச்சமில்லை, தத்தளிப்புமில்லை எழுத்தின் சுதந்திரம் ஏறக்குறைய பறத்தலின் சுதந்திரம் போன்றதுதான். பல சமயங்களில் இரை பொறுக்க மண்ணிற்கு வர வேண்டுமென்ற எளிய உண்மைகூட இந்தப் பறவைகளுக்கு மறந்து போகின்றன. தன்னை அழிக்கும் என நன்கு உணர்ந்தும் அது புதிய உலகைக் காணும் வேட்கையில் தன் பறத்தலை மேலும் முடுக்குகிறது. இவ்வாறான கலைஞர்கள்தான் பேரிலக்கியங்கள் என்றும் கிளாசிக்குகள் என்றும் கொண்டாடுகிற ஆக்கங்களை உலகிற்குத் தந்திருக்கிறார்கள்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நான்கு கதைகளிலும் பெரும்பான்மையான நவீன புனைகதைகளைப் போலவே தனிமனிதனை முன்னிறுத்தி அவனது அகநெருக்கடிகளில் வேர் கொண்டுள்ளது. சிறுகதையின் வடிவம் மற்றும் வரையறை சார்ந்த தொழில்நுட்ப நியதிகள் இந்த நெடுங்கதைகளுக்குப் பொருந்த மாட்டா. மன அழுத்தத்திற்கும் மனப்பிறழ்வுக்கும் இடையில் அலைவுறும் ஒரு மனிதன்மீது எழுதப்பட்ட கதை "சிகரெட் துண்டுகளும் உள்ளாடைகளும்". இக்கதையில் பயின்று வரும் நவீன மொழி கூர்மையானது. பிளவுபட்ட நிலைகொண்ட இம்மனத்தின் மீது முன்னோடியின் நிழல் கண நேரத்தில் விழுந்து மறைகிறது எனினும் அதன் எதிர்த் திசையில் இக்கதை இயங்குகிறது. நகுலனின் எழுத்துக்களில் இது நிகழும்போது அது போதத்திற்கும் அபோதத்திற்கும் (துரைசாமியா? நவீனனா?) இடையில் ஊசலாடும் மனமாக இருக்கிறது. எப்போதும் அது உணர்ச்சியின் தளத்திலிருந்து உருவாகக் கூடியது. ஆனால் தேவிபாரதியின் இக் கதையின் இறுதி வாக்கியம்வரை அவன் விழிப்பு நிலையிலேயே இருக்கிறான். சந்தேகத்தின் நஞ்சும் அதன் வீரியமும் இக்கதையில் மூர்க்கமாக சொல்லப்படுகிறது. அறிவு நித்ய சகாவாக அவனுடன் எப்போதும் இருக்கிறது. எனினும் அதைத் தேவைக்கதிகமாகப் பிரயோகப்படுத்தி விட்டாரோ எனும் ஐயமும் எழுகிறது. கவிஞனை, தத்துவவாதியைப் பற்றி அவர் கூறியிருக்கும் ஏராளமான வரிகள் இக் கதைக்கு வெளியிலேயே நிற்கின்றன. உதாரணமாக தல்ஸ்தோய் காந்தி பற்றிய கதையில் (பிறகொரு இரவு) தவிர்க்க முடியாதவராக இருக்கிறாரென்றால் இக்கதைக்கு அன்னியராகவே உள்ளார்.

தமிழில் குப்பை போல் குவிந்து கிடக்கும் த்ரில்லர் கதைகளைத் தீவிரமான மொழியால் மறுதலிக்கிறது "ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்". இக்கதையின் பிரதானக் கருப்பொருளும்கூடக் கொலைதான். இந்த இரண்டு கதைகளிலும் களன் எந்த மனிதனாலும் தப்பிச் செல்ல இயலாத காமமே. ஒன்றை ஆணின் மனமும் மூளையும் ஒன்றிணைந்து நடத்திச் செல்ல, பிறிதொன்றில் பெண்ணின் கண்களின் வழி ஒரு கொலையை முன்வைத்து அவளது அக ஓட்டம் பதற்றமான சொற்களால் தீட்டிக் காட்டப்பட்டுள்ளது. "ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்" கதையின் பலமெனக் காலம் கலைக்கப்பட்டு நிகழ்வுகளின் மீது அது ஆதிக்கம் செலுத்துவதைக் கூறலாம். இதைப் பிரக்ஞைப்பூர்வமாக தேவிபாரதி கையாண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. கணவன் பரிசளித்த கைக்கடிகாரத்தை அவன் முன்னேயே வீசி உடைக்கும் பெண்ணே, அக்கணவனைக் கொன்ற பிறகு- இரகசிய உறவின் பொருட்டு- மேற்கொள்ளும் காரியங்கள் திகைப்பூட்டுபவையாக உள்ளன. விஸ்வமும் அருணும் இக்கதைக்கு கருவிகளாக மட்டுமே உள்ளனர். அருணுடனான அவளது இரசிய உறவின் தொடக்கப் புள்ளிகள் கூறப்படாமலேயே விடப்பட்டுள்ளன. கணவனைக் கொல்லும் அளவு பிணைப்புக் கொண்ட ஓர் உறவைப் பற்றிய ஆரம்பச் சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கலாமோ? என்ற வினாவைத் தவிர்க்க முடியவில்லை.

தொகுப்பின் சிறந்த புனைகதையென "பிறகொரு இரவு" கதையைச் சுட்டுவேன். உலகின் மகத்தான மனிதனாக - எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாலும் - கருதப்படும் காந்தியை அவர் தன் குருவாகக் கருதி வந்த தல்ஸ்தோயோடு ஒப்புமைப்படுத்திக் கூறப்பட்டுள்ள இக் கதையிலேயே தேவிபாரதியின் ஆளுமை வெளிப்பட்டுள்ளது. பகவதிச் சரண்களால் நிரம்பிக் கிடக்கும் சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்றாம் வகுப்பு இரயில் பெட்டியில் அவமானப்படுத்தப்படும்போதும், காவலர்களால் நடுநிசியில் மறித்து வினவப்படும்போதும் அவர்கள் எவருக்கும் காந்தியின் இருப்பு ஒரு கேலிக்குரியதாக, தேவையற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அது ஒரு குறியீடு மாறிக்கொண்டேயிருக்கும் நவீன உலகம் காந்தியின் சத்தியத்தைத் தன் புறங்கையால் ஒதுக்கித் தள்ளும். மேலும் அது பகவதி சரண்களின் பாசாங்குகளால் தன் நீதி சார்ந்த விவாதங்களை விட்டொழிக்கக் கற்றுக் கொள்ளும். அசோகமித்திரனின் "காந்தி" கதைக்குப் பிறகு அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ள சிறந்த புனைகதை இதுவெனத் தயக்கமின்றிக் கூறலாம். இக்கதை ஆக்கத்தின்போது உருவான படைப்பு மனநிலையைப் பின்தொடர்ந்து செல்வதன் மூலமே தேவிபாரதி தன் படைப்பாக்கத்தின் அடுத்த கட்ட நகர்வையும் வளர்ச்சியையும் கண்டடைவார் எனத் தோன்றுகிறது. காப்பியத்தின் சிறுபகுதியொன்றைக் கையாண்டிருக்கும் "ஊழி" பிற மூன்று கதைகளைக் காட்டிலும் சற்றுக் கீழேயே உள்ளது. இதிலும் அவர் சில இடங்களில் மனிதனின் கீழ்மையைத் தொட்டுணர்த்தத் தவறவில்லை.

கவிஞர் சுகுமாரனின் முன்னுரை இந்த நெடுங்கதைகளின் தொகுப்புக்கு மிக நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. அதில் அவர் பல்வேறு புள்ளிகளை குறிப்புணர்த்திச் சென்றாலும் "அறச்சிக்கல் மீதான படைப்பியல் விவாதம்" என்னும் வரியிலிருந்து இத்தொகுப்பை மீள்வாசிப்பு செய்கையில் அது இப்பிரதிக்குக் கூடுதல் வெளிச்சத்தைத் தருகிறது.

(பிறகொரு இரவு (சிறுகதை), ஆசிரியர்: தேவிபாரதி, பக்: 144, விலை: ரூ. 95, முதற்பதிப்பு: ஜூலை 2009, வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001)

No comments:

பை சைக்கிள் தீவ்ஸ் ஒரு ஆய்வு

பைசைக்கிள் தீவ்ஸ் (1948) சைக்கிள் திருடர்கள்   இயக்குனர்: விட்டோரியோ டி சிகா |  நாடு: இத்தாலி |  மொழி: இத்தாலியன் |  இயக்க நேரம்...