Friday, October 29, 2010

சூரியனோடு ஆடும் நாட்டியம்



பரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வளர்ந்து மலர்ந்துள்ளது எனத் திட்டவட்டமாக கூறலாம். குறிப்பாக சொல்லப்போனால் பரத முனவர் நாட்டிய சாஸ்திரம் இயற்றுவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் நாட்டியம் சிறந்த கலையாகப் பரிணமித்திருந்தது எனப் பரதரின் நாட்டிய சாஸ்திரத்திலிருந்தே அறிகிறோம். தென்னாட்டவர்கள் தமது நாட்டியத்தில் லலிதமாகவும், இனிமையாகவும், அங்க அபிநயங்களை பயன்படுத்துகிறார்கள். அவர்களது நாட்டியத்தில் நிருத்தமும் (அபிநயமில்லாது ஆடல் புரிவது), கீதமும் அதிகம் காணப்படும். இன்பச் சுவையும், சிருங்காரமும் அவர்களது ஆடலில் அதிகம் காணப்படுகிறது என்று
தக்ஷிணாத்யாஸ் தாவத்
பஹு நிருத்தகீத வாத்யா: கைசிகீ பிராயா:
சதுர மதுர லலித அங்காபி நயாஸ்ச

என்று பரதமுனிவர் கூறுகிறார். இன்று பரத நாட்டியத்தில் நிருத்தம் அதிகம் இடம் பெறுவதைக் காண்கிறோம். மேலும் தென்னாட்டினர் அரங்கில் ஆட நுழையும் போது வலப்புறத்திலிருந்து வருவதை மரபாகக் கொண்டுள்ளனர் என்கிறார் பரதர். அவர்களது சொற்களில் "ன" காரம் அதிகம் பயன்படுத்தப்படும் என்றும் கூறுகிறார். இதிலிருந்து பரதர் நாட்டிய சாஸ்திரம் இயற்றுவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் நாட்டியம் தனித்த மரபு கொண்டு வளர்ந்திருந்தது என்று விளங்குகிறது.
மார்க்கி - தேசி
பரதரின் நாட்டிய சாஸ்திரம் ஓர் ஈடிணையற்ற நாட்டிய இலக்கண நூலாக மலர்ந்தது. அது தோன்றிய பின்னர் அந்நூலில் உள்ள கருத்துக்களும் மரபுகளும் ஆடல் பாணிகளும் தமிழ் நாட்டியத்தைப் பெரிதும் வளம் படுத்தின. பரதர் மரபை மார்க்கி என்றும் அந்தந்தப் பகுதிகளிலே மலர்ந்த ஆடல்களைத் தேசி என்று அழைக்கும் மரபு வளர்ந்தது. ஆதலின் தமிழ் நாட்டியத்தை, தேசி நாட்டியம் என்றும் கூறுவர்.
தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரத்தில் நாட்டியத்தைப் பற்றிய அரிய செய்திகள் அரங்கேற்றக் காதையிலும் பிற இடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. அரசன் வீற்றிருந்த நாட்டிய அரங்கில் ஆடிய மாதவி முதலில் தேசி நாட்டியத்தை ஆடி பிறகு மார்க்கி நாட்டியத்தை ஆடினாள் என்று காண்கிறோம். எந்த மொழி பேசும் பகுதியில் நாட்டியம் ஆடுகிறார்களோ அப்பகுதி மக்கள் புரிந்து கொள்ளும் மொழியையும், நாட்டியத்தையும் முதலில் ஆடி பிறகு அனைத்திந்திய நாட்டியத்தை ஆடினர் என்பது இதனால் புலனாகிறது. நாட்டிய ஆசானுக்கும், ஆடுவோர்க்கும், இசை வாத்தியம் வாசிப்போருக்கும், தமிழ் மொழியும் மரபும் தெரிந்திருக்க வேண்டும் அத்துடன் சம்ஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம்.

தமிழில் நாட்டிய நூல்கள்
தமிழ்நாட்டில் எராளமான நாட்டிய நூல்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டன. தொல்காப்பியக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழில் நாட்டிய நூல்கள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உண்டு. நாட்டியத்தைக் குறிக்கும் சயந்த நூல், குணநூல், பரதசேனாபதியம், பஞ்சமரபு, செயிற்றியம், முதலிய நூல்கள் தமிழிலிருந்தன. சோழர் காலத்தில் எழுதப்பட்ட பல நூல்கள் மறைந்து போயின.
கி.பி. 13ம் நூற்றாண்டில் "சங்கீத ரத்னாகரம்" என்ற நூல் சம்ஸ்கிருத மொழியில் சாரங்க தேவரால் இயற்றப் பட்டது. நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட "அபிநய தர்ப்பணம்" என்ற நூலும் தமிழ்மொழியில் 300 ஆண்டுகளுக்கு முன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
அபிநய தர்பணம் என்னும் நூலை வீரராகவய்யன் என்பவர் தமிழ்ப்படுத்தியுள்ளார். சங்கீத ரத்னாகரத்தின் மொழிபெயர்ப்புகள் பல தமிழில் இருந்துள்ளன எனத் தெரிகிறது. இதில் ஒன்று டாக்டர் உ.வே. சாமிநாதைய்யரால் சேகரிக்கப்பட்டது. மஹாபரத சூளாமணி என்ற பெயரில் இந்த நூலும், அபிநய தர்பணமும் உ.வே.சா நூலகத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இவ்விரு நூல்களில் இருந்தும் தமிழும், சம்ஸ்கிருதமும் ஒன்றோடொன்று இணைந்தே நமது நாட்டியக் கலையை வளர்த்துள்ளன என்று தெரிய வருகிறது. இவ்விரு நூல்களையும் பின்பற்றிய பல நட்டுவனார்கள் தமிழ்நாட்டில் பரத நாட்டியத்தைப் போதித்து வந்துள்ளனர். இன்று பரத நாட்டியம் என்று வழங்கும் மரபு தமிழ் நாட்டியமும், பரதர் நாட்டியமும் தமது தனித்தண்மை இழக்காது ஆனால் ஒன்றால் ஒன்று வளம் பெற்று சாரங்கத் தேவர் மரபையும் பின்பற்றி வந்துள்ள கலையே என்பதில் ஐயமில்லை.

இந்திய நாட்டில் நாட்டியக் கலையின் இலக்கணங்களை வகுத்துக் கூறும் பண்டைய பெரும் நூல் பரதரது நாட்டிய சாஸ்திரமாகும். இந்நூல் எக்காலத்தில் இயற்றப்பட்டது என்பது குறித்து கருத்து வேறுபாடு உண்டு. கிறிஸ்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்துவுக்குப் பின்னர் 2ம் நூற்றாண்டு வரையில் பல்வேறு காலங்களை இந்நூலுக்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கி.பி. முதல் நூற்றாண்டில் இது இயற்றப்பட்டதெனில் அதே காலத்தில் தமிழில் மிகச் சிறந்த பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை சங்க இலக்கியம் என்று கூறுகிறோம்.
சுமார் 2300 பாடல்களைக் கொண்ட சங்க இலக்கியம் பத்துப்பாட்டு என்றும், எட்டுத் தொகை என்றும் இரண்டு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் அனைத்துமே பாடுவதற்கும் ஆடுவதற்கும் பயன்படுத்தப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் அரங்கநாத பெருமாள் கோயிலில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரப் பிரபந்தங்களை அரையர் என்போர் இன்றும் பாடி அபிநயித்து வருகிறார்கள். இது போல் தேவார, திருவாசக பதிகங்களும் நாட்டியமாக ஆடப்பட்டுள்ளன. இந்த மரபை பார்க்கும் போது பரதரது நாட்டிய சாஸ்திரம் இயற்றப்பட்ட அதே காலத்தில் சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்துமே நாட்டியமாக தமிழ் நாட்டில் ஆடப்பட்டன எனில் மிகையாகாது.
சங்க இலக்கியங்களில் பத்து பாட்டு போன்ற பாடல்கள் மிகவும் நீளமானவை. பாரிபாடல் போன்றவை நடுத்தரமானவை. அகநானூறு, ஐங்குறுநூறு போன்றவை மிகவும் சிறியவை. ஆயினும் இவைகள் அனைத்துமே நாட்டியத்திற்கு பயன்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் தெருக்கூத்து என்ற பண்டைய நாட்டிய முறை இன்றும் வழக்கில் உள்ளது.
தெருக்கூத்தில் ஒரே கதை பல இரவுகளில் நடிக்கப் படுதல் உண்டு. அது போல சங்க கால பத்து பாடல்களும் பல இரவுகளில் நடிக்கப்பட்டு இருத்தல் கூடும். மேலும் தெருக்கூத்து ஆட்டத்தில் வெறும் பாடலாக சில பகுதியும் உள்ளன. அது போல சங்க இலக்கியத்தில் காணப்படும் பாடல்களில் சில இசைப்பதற்கும், அபிநயிப்பதற்கும் சில வாசகங்களாக நடிப்பதற்கும் பயன்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களின் 2300 பாடல்களில் 80 சதவீதத்திற்கு மேல் (அதாவது 1800 பாடல்கள்) சிருங்காரச்சுவையை அடிப்படையாகக் கொண்டவை. சிருங்காரத்தை இன்பம் என்றும் "அகம்" என்றும் கூறுவர். ஆதலின் இவை நடிப்பதற்கு மிகவும் சிறந்தவையாக கருதப்பட்டன. ஒரு வாழ்கின்ற வரலாற்றுத் தலைவனுடைய சிருங்காரத்தை வெளிப்படுத்தி ஆடினால் அவனது வாழ்நாளில் மட்டும் அது சிறப்புடையதாக காணப்படும். அவன் மறைந்த பிறகு பிறர் பார்த்து ரசிக்கக் கூடியதாக அது அமையாது. ஆதலின் கற்பனைப் பாத்திரமாகவோ அல்லது தெய்வ நாயகர்களாகவோ இருந்தாலே அனைவரும் பார்த்து ரசிக்க இயலும்.
இந்த உண்மையை நன்கு அறிந்த சங்கச் சான்றோர்கள் தாம் இயற்றும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வருவோராலும் ஆடவும் சுவைக்கும் வகையிலும் இயற்றியுள்ளனர். ஆதலால் தான் அகத்துறை பாடல்களில் தலைவனது பெயரையோ தலைவியினது பெயரையோ குறிக்கக் கூடாது என்பது இலக்கணம். ஆதலால் 2000 ஆண்டுகளாக இப்பாடல்கள் அழகிய இலக்கியங்களாக வாழ்ந்து வந்துள்ளன.
சங்க இலக்கியங்களில் குறிப்பாக கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டு தொகுதிகளையும் குறித்தல் வேண்டும். கலித் தொகையில் 150 பாடல்கள் உள்ளன. இவை அனைத்துமே சிருங்காரச் சுவையை முக்கியமாகக் கொண்டவை. கலி என்பது ஆடலின் ஒரு வகையாகும். இது முக்கியமாக துள்ளல் ஓசையை சிறப்பாகக் கொண்டது. "துள்ளல் ஓசை கலி என மொழிப" என்பார் தொல்காப்பியர். ஆதலின் துள்ளல் என்பது நாட்டியத்தை குறிக்கும். இன்றும் கேரளத்தில் ஒட்டந்துள்ளல் என்று ஒரு வகை நாட்டியத்தை கூறுகிறார்கள். கலி என்பதும் நாட்டியக் கூறு ஆகும். ஆதலின் கலித்தொகை பாடல்கள் அனைத்தும் சங்க காலத்தில் நாட்டியத்திற்காக எழுதப்பட்டவை எனலாம்.

இன்று கர்நாடக இசையில் பாடல்களுக்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று ஒரு இலக்கணம் உள்ளது போல் சங்க காலத்தில் கலிப் பாடல்கள் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற 4 பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். பாடல்கள் விரிவாகும்போது கொச்சகம், அம்போதரங்கம் என்ற பகுதிகளும் சேர்த்துக் கொள்ளப் படும். அவ்வாறு அமைக்கப்பட்ட 150 பாடல்களையும் தொகுத்து கலித்தொகை என்று அமைத்துள்ளனர். இதற்கு கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் சிவபெருமானின் தாண்டவங்களை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. கொடுகொட்டி, பண்டரங்கம், காபாலம் என்ற மூன்று ரெளத்தர தாண்டவங்களும் இக்கடவுள் வாழ்த்தில் இடம் பெறுகின்றன. இவை ரெளத்ரச் சுவையை எடுத்து உரைத்த போதிலும் சிருங்காரச் சுவையே அடிப்படையாக இப்பாடலில் காண்கிறோம். உமை அருகில் அமர்ந்து பாணி, தூக்கு, சீர், என்று தாளம் இட்டு சிவபெருமானை அன்போடு பார்ப்பதாக இன்பச்சுவை மேலோங்க எழுதப்பட்டுள்ளது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பகுதிகளாக திணைகளாக கலித்தொகை பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம், அங்கு வாழும் மக்கள், விலங்குகள், பறவைகள், பூக்கள் முதலியன பாடலிலே இடம்பெற்று அவை சிருங்காரச் சுவையை போதிப்பவையாக இயற்றப்பட்டுள்ளன.
ஆதலின் குறவர்கள், வேடர்கள், உழவர்கள், மீனவர்கள் ஆகிய நாட்டுப்புற ஆடல்களையும் நாட்டியத்தில் கொண்டு வர இயலும். ஆதலின் கலித்தொகை பாடல்கள் புதிய புதிய கருத்துக்களில் அமைப்புக்களில் சிருங்காரச் சுவையை வெளிப்படுத்தி நாட்டியத்திற்கும் ஏற்ற மிக உயர்ந்த பாடல்களாக உள்ளன. புறநானூற்றுப் பாடல்கள் பெரும்பாலும் அரசர்களுடைய வெற்றி தோல்விகளையும், புற ஒழுக்கத்தையும் எடுத்துரைக்கும் பாடல்கள் ஆகும். இவற்றில் ஐந்து பாடல்கள் "குறுங்கலி" என்ற பெயரில் உள்ளன. வையாவிக்கோ பெரும்பேகன் என்ற வள்ளல் இளமையும் அழகும் நிறைந்த தன் மனைவியாம் கண்ணகியை துறந்து வேறு ஒருத்தியிடம் செல்கிறான். கண்ணகி பிரிவுக்கு வருந்துகிறாள். ஆதலின் புலவர்கள் பேகனை கண்ணகியின் துயரைப் போக்க கேட்கின்றனர். இப்பாடல்கள் சிருங்காரச் சுவையை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. பிரிவினால் ஏற்படும் சிருங்காரத்தை "விப்ரலம்ப சிருங்காரம்" என்பர். அந்த அடிப்படையில் இவ்வைந்து பாடல்களும் அமைந்துள்ளன. இவற்றை நான்கு பெரும் புலவர்களான கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர் பாடி உள்ளனர். இவையும் நாட்டியத்திற்காக மிக அழகாக பயன்பட்டிருக்க வேண்டும். புறநானூற்றில் வரும் பேகன் கண்ணகயின் கதை பின்னர் சிலப்பதிகாரமாக மலர்ந்தது என்பர் சிலர்.
பரிபாடல் என்ற பாடல் வகையும் சிருங்கார சுவைக்கு முதலிடம் கொடுக்கும் என உரைகளிலிருந்து அறிகிறோம். 25 பாடல்கள் இப்போது பரிபாடல் தொகுப்பில் உள்ளன. இவற்றில் 15க்கு மேற்பட்டவை சிருங்காரச் சுவையே மேலோங்கி நிற்பவை. வைகை என்ற ஆற்றை பாடுகின்ற பாடல்கள் அனைத்துமே ஆற்றைப் பின்னணியாகக் கொண்டு சிருங்காரத்தை பாடி ஆட இயற்றப்பட்டவை. அதே போல் செவ்வேள் ஆகிய முருகனைப் பற்றிய பாடல்களும் இன்பச் சுவை மேலோங்கியவையாக இயற்றப் பட்டுள்ளதைக் காணலாம். தற்காலத்தில் சிருங்காரத்தை வெளிப்படுத்த கண்ணன் ஆய்ச்சியர் ஆகியோரை மையமாகக் கொண்டே பெரும்பாலும் ஆடுகின்றனர். ஆனால் சங்க காலத்தில் முருகனே சிருங்காரத்தின் தலைவனாகச் சித்தரிக்கப்பட்டு அவனை மையமாகக் கொண்டே இன்பச் சுவையை பாடவும் ஆடவும் பெற்றதைக் காண்கிறோம். பரிபாடல்களில் உள்ள முருகனைப் பற்றிய பாடல்களும் சிலப்பதிகாரத்து குன்றக் குரவை பாடல்களும் இதைத் தெளிவாக்குகின்றன. திருமாலோ தெய்வமாகவே சிறப்பாக போற்றப்படுகிறார்.
நாட்டியத்தில் இன்பச் சுவையே எல்லா மக்களாலும் கண்டு ரசிக்கக்கூடிய சுவையாகும். இப்போது நாட்டியத்திற்கு பயன்படும் பாடல்கள் பெரும்பாலும் கடந்த ஒரு 150 ஆண்டுகளுக்குள்ளாக இயற்றப்பட்ட பாடல்களாகும். பெரும்பாலான நாட்டியக் கலைஞர்கள் இந்த பாடல்களையே மீண்டும் மீண்டும் ஆடி வருகின்றனர். ஆனால் 2000 ஆண்டுகளுக்கும் முன்னர் இயற்றப்பட்ட அருமையான சுவையான தமிழ் பாடல்கள் உள்ளன. இவை இசைப்பதற்கும் ஆடுவதற்கும் இயற்றப்பட்டவை.
நல்ல அழகிய இப்பாடல்கள் வாசனை மலர்கள் போல் நம்மிடத்தில் ஏராளமாக இருக்கின்றன. இப்பாடல்களைப் பயன்படுத்தி நமது மரபை கலையை வெளிப்படுத்த பெரும் வாய்ப்பு உள்ளது.

தற்காலத்தில் காணப்படும் சாஸ்திரீய நடனம், தமிழ் நாட்டில் பரத நாட்டியம் என்னும் பெயருடன் விளங்குகிறது. முற்காலத்தில் தமிழகத்தில் இக்கலையைக் கூத்து என்று அழைத்து வந்தனர். ஏறத்தாழ கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக இதற்கு சதிர் என்று பெயர் வழங்கலாயிற்று. பரத நாட்டியம் என்ற பெயர் சுமார் அறுபது ஆண்டுகளாகத் தான் பிரசித்தம் அடைந்துள்ளது.

இந்த பரத நிருத்யத்தின் முக்கியமான அம்சம் அரைமண்டி என்று கொச்சைத் தமிழில் வழங்கி வரும் பதமாகும். அந்த நிலையே இக்கலைக்கு மூலாதார வடிவமாக இருக்கிறது. பாதங்களை பக்கவாட்டில் திருப்பி முழங்கால்களை வளைத்து சீராக நிற்கும்நிலை ஆகும். பாதங்களுக்கு இடையே நான்கு விரல் அளவுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. முழங்கால்களும், பக்கவாட்டில் பரப்பப்பட வேண்டும். துடைகள் பூமியிலிருந்து அவரவர் கையினால் மூன்று அல்லது நான்கு சாண் தூரத்தில் இருக்க வேண்டும். அடவுகள் என்று கூறப்படும் பல அசைவுகள், இந்த மண்டல ஸ்தானத்தையே அடிப்படையாகக் கொண்டது. அடவுகளுக்கு பாதத்தைதான் அதிகமாக உபயோகிக்­கிறோம். இவை தட்டடவு, நாட்டடவு, குத்தடவு, மெட்டடவு தவிர அதன் சேர்க்கைகளே ஆகும். இந்த அடவுகள் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். லௌஷ்டம் என்று சொல்லப்படும் நிமிர்ந்த நிலை மார்பிற்கும், முதுகிற்கும் மிகவும் இன்றியமையாததாகும். மார்பினை நிமிர்த்தி வயிற்றினை உள்ளே தள்ளி நிற்கவேண்டும். முதுகானது பார்ப்பதற்கு ஒரு வில்போல இருக்க வேண்டும். தோள்களை ஏற்றவோ, இறக்கவோ, கூன்போடவோ கூடாது. தோள்களின் சீரான நிலையிலேயே முழங்கையை வைக்கவேண்டும். கைகளை மார்பின் முன் வைக்கும்போது ஒரு சாண் இடைவெளி விட்டுத்தான் வைக்க வேண்டும். இவைகளே அங்க சுத்தத்திற்கு தேவையான அடிப்படைகள்.
சதிர்நடனத்திற்கு இன்றியமையாதது வாய்ப்பாட்டு. இது கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டது. மிருதங்கம், இதற்கு ஒரு முக்கியமான பக்கவாத்தியமாகும். நட்டுவனார் ஆட்டுவிக்க உபயோகிக்கும் கைத்தாளம் நடனத்திற்கு இயக்குனர் பயன்படுத்தும் கருவியாகும். நட்டுவனார் என்பவர் குருவாகவும் மேடையில் சொற்கட்டுக்களை சொல்பவராகவும் இருக்கலாம். இந்த சொற்கட்டுகள் பாட்டுக்கு இடையேயும் கூட வரும். நட்டுவாங்கம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், முகவீணை, துத்தி ஆகியவை சேர்ந்து இதற்கு இசைக் குழுவாக விளங்கி வந்தது.

சதிரில் அணியும் ஆடைகள் பல வண்ணங்களில் இருக்கும். தங்க நிறத்தில் அல்லது தென்னிந்திய கலாச்சார வழக்கமான தங்கத்தில் கற்களை பதித்த நகைகளையே அணிவர். வெள்ளி நிறத்தில் உள்ள நகைகளை உபயோகிப்பதில்லை.

பரத நிருத்தியத்தில் முழுமையான தேர்ச்சி பெற்றால் எந்த வகையான ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கலாம். பாரதத்திலும் இன்னும் வெளி நாடுகளிலும் கூட இது புகழ் பெற்று விளங்குகிறதென்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்.

மேலே கூறப்பட்டுள்ள இந்த நடனத்தின் குணாதிசயங்கள் சென்ற இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்து வரும் மரபின் அடிப்படையில் குறிப்பிட்ட விவரங்களாகும்.
கவிதை, இலக்கியம், இசை, ஆகியவற்றிலும் ஒருவனுக்கு ஈடுபாடு ஏற்படச் செய்கிறது. தலை சிறந்த நடன ஆசிரியர்கள். ஆட்டக் கலைஞர்கள் இலக்கியத்திலும் சிறிதளவேனும் ஆர்வமும் புலமையும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக. டாக்டர் பத்தமா சுப்பிரமணியத்தை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல. சிறந்த இசையமைப்பாளரும் கூட. கூடவே இலக்கிய இரசனையும் கொண்டவராகத் திகழ்கிறார். இதனை அவர் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் கம்பன் புகழ் பாடித் தமிழன்னைக்குத் தொண்டாற்றி வரும் கம்பன் கழகத்தினர் நடத்திய கம்பன் விழாவில் நிகழ்த்திய நடனக் கச்சேரி மூலம் உணர்த்தியுள்ளார்.

கம்பநாட்டாள்வாரின் இராமாயணப் பாடல்களுக்குத் தனது பாணியிலேயே நாட்டியம் அமைத்து நடித்துக் காண்பித்தது இன்றும் பார்வையாளர்களின் மனங்களில் அழியா ஒவீயமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டியத்தில் லோக தர்மி, நாட்டிய தர்மி, என்னும் இரு வகை காணப்படுகின்றன. லோக தர்மி மூலம் பத்மா சுப்ரமணியம் கம்பநாட்டாள்வாரின் பாடல்களுக்கு அபிநயம் செய்வதை நாம் மறக்க முடியாது. லோக தர்மியானது நாட்டிய தர்மியைக் காட்டிலும் மக்களைச் சென்றடைகிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது.


டாக்டர் பத்மா சுப்ரமணியம் இருபது ஆண்டுகளுக்கு முன் கொழும்பில் வந்து பரத நாட்டியம் ஆடிய பின். "பத்மாவின் பரதம் நிலைக்குமா?" என இலங்கையிலுள்ள தமிழ் தினசரிப் பத்திரிகைகள் கேள்விகளைத் தொடுத்தன. ஆனால் இன்றுவரை பத்மாவின் பரதம் நிலைத்திருக்கிறது என்பதே உண்மை.
பரத நாட்டியக் கலையானது மற்றவரின் திறமைகளைப் போற்றவும் இரசிக்கவும் தூண்டுகோலாய் அமைகிறது. மற்றவர்களிடமுள்ள திறமைகளை ஆற்றல்களை இனங்கண்டு மதித்து வாழப் பழக்குகிறது. ஒவ்வொரு கலைஞனிடமும், ஆசிரியரிடமும் ஒரு தனித்துவம் காணப்படுகிறது. ஒருவர் நடனத்தை சுத்தமாக அதாவது அழுத்தந் திருத்தமாகக் கற்பிப்பதில் கவனஞ் செலுத்தி அதில் பாண்டித்தியம் உடையவராகக் காணப்படுவார் இன்னொருவர் ஆக்கத் திறனுள்ளவராக விளங்குவார். மற்றொருவர் குழு நடனங்களைச் சிறப்பாக அமைக்கும் திறமை உள்ளவராக இருப்பார் இன்னுஞ் சிலர் நாட்டிய நாடகங்களை வெகு நேர்த்தியாக வடிவமைப்பதில் தமது சாமர்த்தியத்தை வெளிக்காட்டுவர். வேறு சிலர், மரபு வழி வந்த பரத நாட்டியத்தைப் பயிற்றுவிப்பதிலும், கிராமிய நடனங்களை வடிவமைப்பதிலும் ஆற்றல் உடையவர்களாக விளங்குகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு நடன ஆசிரியரிடத்திலும் ஒரு தனித்துவம் காணப்படுகிறது. மற்றைய ஆசிரியர்களிடமும் கலைஞர்களிடமும் காணப்படுகின்ற திறமைகளைக் கண்டு அழுக்காறடையாது அவற்றைப் போற்றிப் பெருமைப்பவதற்கு பரத நாட்டியக் கலை வழி வகுக்கிறது.

தவிர மனித ஆளுமைப் பண்புகளில் ஒன்றெனக் கருதப்படும் சொல்வன்மையை விருத்தி செய்வதற்கும் பரத நாட்டியம் உதவுகிறது. திருவள்ளுவரும் தனது குறட்பாவில்

கேட்டார்ப் பிணிக்கும் தகைவாய்க் கேளாகும்
வேட்ப மொழிவதம் சொல்" (திருக்குறள்:643)

எனக் கூறியுள்ளார். அதாவது கேட்பவர்களைத் தன்னோடும் பிணைத்துக் கொள்கின்ற கவர்ச்சி உடையதாகவும் பகையுற்றவனும் தன்னை விரும்பச் செய்வதாகவும் பேசுவதே சொல்லாற்றல்.
மனித ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியம்

மனித ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியத்தின் பங்களிப்பினை நாம் ஆராயு முன். மனிதன் என்பவன் யார் என்பதையும் மனித ஆளுமைக்குரிய வரைவிலக்கணங்கள் யாவை என்பதையும் அறிந்து கொள்ளுதல் அவசியமானதாகும்

மனிதன் என்னும் சொல்லுக்கு "சிந்திக்கும் உயிரி" என்பதே கருத்து. மன் என்னும் சமஸ்க்ருத வினையடியிலிருந்து பிறந்த பதம் தான் மனிதன் என்னும் சொல். மன்- என்றால் சிந்தித்தல் என்று கருத்தாகும். ஆகவே மனிதன் என்பவன் சிந்திக்கும் வல்லமை உடையவன் என்பது தெளிவாகிறது. மனிதன் என்பவன் விலங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவன் என்பதனை டார்வினின் கூர்ப்புக் கொள்கை விளக்குகிறது.

ஆறறிவு உடையவன் மனிதன் எனவம். பகுத்தறியும் திறன் உடையவன் என்பதும் அறிஞர்கள் ஆராய்ந்தறிந்த முடிவாகும். ஒரு தனி மனிதனைப் பூரணமாக்குவதே கல்வியின் நோக்கம் எனின் அதற்கு நடகத்தின் பங்களிப்பு எத்தகையது என்பதை நாம் ஊகித்தறியலாம். இற்றைக்கு இரண்டாயிரத்து நானூநுறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானியான பிளேட்டோ என்பவர் "இசை நடனம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றவனே கல்விமான்" ஆவான் எனக் கூறியுள்ளார்.

"கல்வி என்பது குழந்தைகளிடமிருந்து முழூ மனிதனை வெளிக் கொணர்வது. முழூ மனிதனை உருவாக்குவது அவனுடைய ஆளுமை. எனவே மனிதனி உடல், உள்ளம், ஆன்மா, இருதயம் என்பவற்றை ஒருமித்த வகையில் விருத்தி செய்து ஆளுமையடையச் செய்வதே கல்வியின் பயனாகும்" என்பதே காந்தியடிகளின் கல்வித் தத்துவ விளக்கமாகும்.
பரத நாட்டியம் தனி மனிதனின் ஆளுமையை விருத்தி செய்வதற்கு எவ்வளவு; வழி முறைகளில் அனுசரணையாக அமைகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், ஆளுமைக்குரிய வரைவிலக்கணத்தையும், ஆளுமைப் பண்புகளையும். ஆளுமையை எவ்வாறு அளவிடலாம் என்பதையும் அறிந்து கொள்வது பொருத்தமாகும்.

ஆளுமை என்பது ஒருவருடைய தோற்றம். மனப்பாங்கு தலைமை தாங்கும் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது எனலாம். மேலும் ஒரு தனிநபரிடம் காணப்படும் எல்லா குணங்களும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்ததுதான் ஆளுமை எனவுங் கூறலாம். அதாவது ஒவ்வொரு தனி மனிதனும் திறமை. அடைவு ஆகியனவற்றில் மாத்திரமன்றி, மன எழுச்சி, கவர்ச்சிகள், மனப்பான்மைகள், பற்றுக்கள் ஆகியனவற்றிலும் வேறுபடுகின்றான். இவ் இயல்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான தன்மையே ஒருவனின் ஆளுமையாகும்.

ஆளுமை பற்றிக் கல்விமான்களும், உளவியலாளர்களும். அறிஞர்களும் கூறியுள்ள கருத்துக்களை நோக்குவோம்.

ஆளுமை பற்றிய வரைவிலக்கணங்களில் அதன் தனித்துவம். அமைப்பு, முழுமை ஆகிய இயல்புகள் வலியுறுத்தப்படுகின்றன. ஒரு சமூக நிலைமைக்கு ஒருவனுடைய அகம் கொண்ட உடல்-உள்ளத் தூண்டற் பேறுகளின் ஒருமையான அமைப்பே ஆளுமை என்று பேர்ட் என்னும் கல்வியியலாளர் கூறியுள்ளார்.
"ஒருவன் தனது சூழலுடன் கொண்ட தனியான பொருத்தப்பாடுகளை அவனுடைய அகத்தினுள் தீர்மானிக்கும் உளவியல் முறைகளின் அமைப்பே ஆளுமை என்று ஆல் போர்ட் என்னும் உளவியலறிஞர் கூறியுள்ளார். அதாவது சூழலுக்குத் தக்கவாறு இசைவாக்கம் அடைந்த உளத்தொகுதிகளின் ஒரு இயக்க நிலையே ஆளுமை ஆகும் என்பதே அவருடைய கருத்தாகும்.

ஒருவரிடம் காணப்படும் பற்றுணர்வும் சமூக மனப்பான்மையும் சேர்ந்த அடுக்கமைப்பும் ஆளுமையாகும் என செறில் என்னும் அறிஞர் கூறுகிறார்.

ஒருவனுடைய நடத்தைகள், மனப்பான்மைகள், திறமைகள், நாட்டங்கள் ஆகியவற்றின் தனியான ஒருங்கிணைப்பே ஆளுமை என்பதே மண் என்னும் அறிஞரின் கருத்தாகும். அதாவது ஒருவனுடைய அமைப்பு. பழக்க வழக்கங்கள். ஆர்வம், ஆற்றல், மனப்பாங்கு, உளச்சார்வு ஆகியவற்றின் மிக லயமான ஒரு ஒருமைப்பாடே ஆளுமையாகும் என்பதே இவரது கருத்து.

பொறுப்புணர்ச்சி, நேர்மை, நல்லொழுக்கம், பரந்த மனப்பான்மை, உறுதியான சிந்தனை, முகமலர்ச்சி, நல்ல சமூக இசைவுகள் ஆகியவற்றை எவன் ஒருவன் உடைத்தாய் இருப்பானோ அவனே முதிர்ந்த ஆளுமையை உடையவன் என மதிக்கப்படுவான்.

இக் கூற்றுகளின்படி ஆளுமையைப் பல காரணிகள் கட்டு;ப்படுத்துவதால் எந்த இருவரிடையேயும ஒரே விதமான ஆளுமை காணப்படு;வதில்லை. இரட்டைப் பிறவிகளாகப் பிறந்த குழந்தைகளில் கூடஇ சுறுசுறுப்பு வாயாடித்தன்மை. கோபம் இ கவலை முதலிய உணர்வுகள் விவேக ஈவு ஆகிய இயல்புகளில்; ஆளுமை வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இனி, ஒரு தனி மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியத்தின் பங்களிப்பு பற்றி நோக்குவோம்.

பரத நடனக் கலையானது ஒருவனின் உடைலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தாளத்திற்கேற்ப பாதங்கள் நர்த்தனம் செய்வதும் ஒரு கட்டுக் கோப்புக்குள் தான் நடைபெறுகிறது. இதனைத்தான் லயம் என்கிறோம். லயத்துடன் ஆட வேண்டும் என்றால் உள்ளமும் லயித்துப் போக வேண்டும். மனமானது உடலைக் கட்டுப்பா ட்டிற்குள் வைத்திருக்கும். ஆகவே, இவ்விரு அம்சங்களிலும் நடனம் ஒருவனின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவுகிறது எனில் மிகையாகாது.

தவிர, ஆற்றல்களை விருத்தி செய்து ஒருவனின் ஆளுமையை வளர்ப்பதற்கு பரத நாட்டியம் எவ் எவ் வகைகளில் உதவி புரிகின்றது என்பதை ஈண்டு நோக்குவோம். ஆற்றல்கள் பலவகைப்படும். அவற்றுள், அறிவு, திறன், முதலியவற்றிலும் கற்பனை, சிந்தனை, செயற்பாடு, தலைமைத்துவம், நினைவாற்றல், வீரம் நெறியாள்கை போன்றவற்றிலும் ஒருவனிடத்தே காணப்படும் ஆற்றல்களை பரதம் வளர்க்கிறது.

ஆற்றல்கள் பலவகைப்படும். அவற்றுள், அறிவு, திறன், முதலியவற்றிலும் கற்பனை, சிந்தனை, செயற்பாடு, தலைமைத்துவம், நினைவாற்றல், வீரம் நெறியாள்கை போன்றவற்றிலும் ஒருவனிடத்தே காணப்படும் ஆற்றல்களை பரதம் வளர்க்கிறது.

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...