கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Wednesday, June 29, 2011
தமிழின் முதல் திரைப்படம்
நான் பொதுவாக சினிமாக்களுக்கு மதிப்புரையோ,விமர்சனங்களோ எழுதுவது குறைவு தான்.ஆனால் ஆரண்ய காண்டம் திரைப்படத்தை பார்த்த போது அதைப்பற்றி எழுதாமலிருப்பது அவ்வளவு நல்லதல்ல என்பதை உணர்ந்தேன்.இது தமிழ் சினிமாவின் பொற்காலம்.உலகதரம் வாய்ந்த சினிமாக்கள் தமிழில் வந்து கொண்டிருக்கிறது.மிகவும் யதார்த்தமாய் நிழல் உலகத்தை படமாக்கியது செல்வராகவனின் புதுப்பேட்டை படம்தான். அது யதார்த்தமான படம். ஆனால் இன்னும் பற்பல விதமாய் நிழல் உலகை திரையில் காட்ட உலகமெங்குமிருக்கும் இயக்குனர்களுக்கு ஆவல் உண்டு. Martin Scorsese, Quentin Tarantino, Guy Ritchie, Takeshi Kitano, என நிறைய இயக்குனர்களை உதாரணமாய் சொல்லலாம்.
இயக்குனர் Guy Ritchie பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரின் படங்களை பார்த்திருப்பீர்கள். நிழல் உலக கதையை வித்தியாசமாய் தருபவர். A comical approach of portraying gangsters, gangster worlds; with some comedy/cruel comedy; அதான் அவரின் ஸ்டைல். ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக நாலைந்து குழுக்கள் மோதிக்கொள்ளும். அப்பொருள் நழுவியபடியே இருக்கும். அதேப்போல் ஒரு கதை, அதே மாதிரியான ஸ்டைலில் இப்போது தமிழில் வந்திருக்கிறது.
இயக்குனர் Guy Ritchie தமிழிற்கு வந்து படமெடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இத்திரைப்படம். (Guy Ritchie படங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் அதில் ஒரு ஐம்பது சதவீதம் அளவுக்கு தியாகராஜா குமாரராஜா படமெடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்). நிழல் உலக குழுக்கள், மெல்லிய நகைச்சுவை, குரூரமான நகைச்சுவை, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மை என பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குனர். அவரின் கதைக்கும் திரைக்கதைக்கும் ஒளிப்பதிவும், யுவனின் பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கின்றன. அதிலும் ஒளிப்பதிவு அட்டகாசம். பின்னணி இசையில் கூட பகடி இருக்கிறது.
நாம் எத்தனையோ கேங்க்ஸ்டர் படங்களைப் பார்த்திருக்கிறோம். தமிழிலும் பிற மொழிகளிலும். ஆனால், இந்த மாதிரியான ஒன்றை நான் பார்த்ததில்லை. தமிழ் சினிமா உருப்பட்டுவிடுமோ என்கிற கவலை பல பேருக்கு வரும் சாத்தியம் இருக்கிறது. ஒரு பாட்டு இல்லை, இரட்டை அர்த்த வசனம் இல்லை, ஹீரோயின் தொப்புள் காட்டவில்லை, தனி டிராக் காமெடியன் இல்லை. சத்தியமாக இது ஒரு தமிழ் சினிமாதான் என்று அடித்துச் சொன்னால்தான் நம்மவர்கள் நம்புவார்கள். உலக சினிமா உலக சினிமா என்று சொல்கிறார்களே, அது நிச்சயம் இப்படித்தானிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. New York நகரத்தில் நடந்த South Asian Internation Film Festivalலில் ஜூரி அவார்ட் வாங்கும் போதே தெரிந்திருக்கவேண்டும் படம் எப்படியென்று. நிதானமாக செல்லும் காட்சிகள், ஸ்லோ மோஷன் ஆக்ஷன், சேஸிங் கோரியோகிராபி, கதையின் மாந்தர்கள் நியாயமாக பேசவேண்டிய, பேசக்கூடிய இயல்பான வசனங்கள் வார்த்தைகள், பிரம்மிப்பூட்டும் கேமரா கோணங்கள், அருமையான அதேசமயம் கதையை விட்டு நகரவிடாமல் பிடித்துவைக்கும் பாடல்கள் இல்லாத பின்னனி இசை, சின்ன சின்ன டுவிஸ்ட்கள், அற்புதமான நடிப்பு... இவ்வளவு இருக்கிறது உலக சினிமா லிஸ்டில் ஈஸியாக இடம்பெற, வேறு என்ன வேண்டும்?
அமைதியாக ஆரம்பிக்கிறது படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்..ஆரம்பக்காட்சியே கிழவன் ஜாக்கி செராப் இளம் மனைவியுடன் வலுக்கட்டாயமாக கிளுகிளுப்பில் ஈடுபடுகிறார்..உடலுறவில் தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் இளம்மனைவியை அடித்து ஆக்ரோசம் காட்டுகிறார்..அடுத்து வெளியே வந்து அங்கு பேசிக்கொண்டிருக்கும் கும்பலிடம் சத்தம் போட்டு உள்ளே செல்லும் போது அந்த கிழவனின் பின்புலம் நமக்கு புரிய வருகிறது.அவர் குழுத் தலைவன்,தாதா என்பது.இன்னொரு தாதா கஜேந்திரன் குழுவுக்கு வந்த போதை பொருளை, ஜாக்கி செராப் குழு ,இடை தரகரிடம் இடைமறித்து வாங்க முயற்சிக்கும் போது,ஜாக்கியின் அடியாள் சம்பத்துக்கு வருகிறது கண்டம்,சம்பத் செய்த காரியத்தால் சம்பத் மனைவிக்கு வருகிறது கண்டம்,போதை பொருள் பறிபோகிறது.அது ஒரு அப்பா, மகனிடம் சிக்கி ,அந்த அப்பா தாதா கும்பலிடம் சிக்க,அங்கே அவனுக்கு வருகிறது கண்டம்,ரவிக்ரிஷ்ணாவை தாதா கிழவனின் இளம் மனைவி காதலிக்க அதனால் அவனுக்கு வருகிது கண்டம் ,இப்படி பல்வேறு நிழலுலக மனிதர்களின் கண்டங்களை சுமந்து அடுத்தடுத்த பரிணாமத்தில் பயணிக்கிறது இந்த காண்டம்.
எல்லா கேரக்டர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள்.கேமராவே கதாநாயகன்,காட்சி கலரிலிருந்து ,கேமரா கோணம் வரை ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு..ரசித்து என்பதை விட ருசித்து அனுபவித்து வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.இசை படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.இயக்குனரின் புதிய பாணியிலான முயற்சி பாராட்டுக்குரியது.போஸ்டர் முதல் படம் வரை அனைத்துலும் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்.என்றைக்கோ பார்த்த ட்ரைலரும்,அந்த போஸ்டருமே என்னை படம் பார்க்க தூண்டிய முதல் காரணி.பாடல் இல்லாத இன்னொரு சினிமா.சில இடங்களில் வசனங்கள் நச்..எந்த ஆம்பளையும் சப்ப கிடையாது..எல்லா ஆம்பளையுமே சப்பதான் என்று எதிர்பாராத நேரத்தில் கதாநாயகி பேசுவது..படத்தில் வரும் சிறுவன் பல இடங்களில் பேசும் வசனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன..ஆரண்ய காண்டம் என்ற இந்தப் படம் தமிழ் சினிமா என்ற விசித்திர உலகத்துக்கு முற்றிலும் புதியது. ஆம்; இப்படி ஒரு படம் தமிழ் சினிமா சரித்திரத்திலேயே வந்ததில்லை.
சிங்கப் பெருமாள் (ஜாக்கி ஷ்ராஃப்), பசுபதி (சம்பத் ராஜ்), சுப்பு (யாசின் பொன்னப்பா), சப்பை (ரவி கிருஷ்ணா), காளையன் (சோமசுந்தரம்), சிறுவன் கொடுக்காப்புளி (வசந்த்) ஆகிய ஆறு கதாபாத்திரங்களின் வாழ்வில் ஒரே நாளில் நடக்கும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த சம்பவங்களே ஆரண்ய காண்டம். சிங்கப் பெருமாளைப் போல் இன்னொரு தாதாவான கஜேந்திரனுக்கு சேர வேண்டிய சரக்கை நாம் மடக்கினால் என்ன என்று சிங்கப் பெருமாளை கேட்கிறான் பசுபதி. அது ஆபத்தானது என்று சொல்லும் சிங்கப் பெருமாளை “என்ன, டொக்கு ஆயிட்டீங்களா?” என்று பசுபதி கேட்பதிலிருந்து துவங்குகிறது கதை. அப்படிக் கேட்டு விட்டதால் பசுபதியைப் போட்டுத் தள்ளச் சொல்கிறான் சிங்கப் பெருமாள். அவனுடைய ஆட்களிடமிருந்து தப்பி ஓடும் பசுபதியைக் கொல்ல கஜேந்திரனின் ஆட்களும் துரத்துகிறார்கள். பசுபதியின் மனைவியைக் கடத்திக் கொண்டு போய் வைக்கிறான் சிங்கப் பெருமாள். இப்படி எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கப்படும் பசுபதி இதை எப்படி எதிர்கொள்கிறான் என்பது படத்தின் ஒரு பகுதி. சிங்கப் பெருமாளின் வைப்பாட்டியான சுப்புவுக்கும் பெண்களைப் போல் நளின பாவம் கொண்டிருக்கும் சப்பைக்கும் இடையில் ஏற்படும் காதலும் அதன் முடிவும் ஒரு கதை. இந்த தாதாக்களின் மோதலில் சந்தர்ப்பவசமாக மாட்டிக் கொள்ளும் முன்னாள் ஜமீந்தார் காளையனும் அவன் மகனும் இன்னொரு கதை.இயக்குனர் இந்தப் படத்தை எப்படிக் கொண்டு சென்றிருக்கிறாரோ அதை விடப் பல மடங்கு இந்தப் படத்துக்கு கூடுதல் பரிமாணங்களைச் சேர்ப்பதாக இருக்கிறது ஒளிப்பதிவும், இசையும். வணிக நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே செயற்கையாக சேர்க்கப்படும் பாடல்கள் இல்லாதது மட்டும் அல்ல; உண்மையில் ஏழெட்டு பாடல்களை சேர்க்கும் அளவுக்குத் தோதான இடங்கள் படத்தில் உண்டு. ஆனாலும் பாடல்கள் சேர்க்கப்படவில்லை என்பது மட்டும் அல்ல; படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பின்னணி இசை மட்டுமே நமக்குத் தனியாக ஒரு உள்கதையைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
வசனங்களில் யதார்த்தம் தவிர, ஒரு குறிப்பிட்ட வகையான உரத்த குரலில் அல்லாத பிரத்யேக நையாண்டி படம் பூராவும் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது
"நீ மாத்திரம் உயிரோட இருந்திருந்தா கொன்னு போட்டிருப்பண்டா" .
"சாமி கூட உக்கார்ந்து சரக்கடிச்சேன்னு சொன்னால ஊருல ஒரு பய நம்பமாட்டானே"
"தோத்தாங்கோளிகளா, என் பீயத் தின்னுங்கடா.. கிழட்டுக் கோளி...
"என்னா நீங்க டொக்காயிட்டீங்களா?"
"ரெண்டு கோடி சரக்கை அம்பது லட்சத்துக்கு தரேன்றான் குருவி." - " ஏன் அவங்க அக்கா என்ன லவ் பண்றாளா?"
"ஆண்டிங்கள உஷார் பண்ணணும்னா ஒரு டெக்னிக் இருக்கு. ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா -ன்னு கேட்கணும். கமல் பிடிக்கும்னு சொன்னா ஈசியா கவுத்தில்லாம்".
"பயம் போகலை.. ஆனா தைரியம் வந்துடுச்சு"
"பசுபதிய என்ன பண்றது -ன்னு யோசிக்கறேன்" - ம்.. முத்தம் கொடுத்து மேட்டர் பண்ணு".
"சார்.. இத வெளில சொல்ல மாட்டீங்கள்ள... - ம்.... தெரியலே....
குறிப்பாக சிங்கப்பெருமாளின் அடியாள் ஒருவன் ஆண்ட்டிகளை மடக்குவதற்கான டெக்னிக்குகளை விவரிப்பது, மற்றவர்கள் சப்பையை கலாய்ப்பது, கஜேந்திரனின் குரூரத்தைப் பற்றி பசுபதி டீக்கடையில் விவரிப்பது போன்ற காட்சிகளின் தொனியும் நீளமும், சாவகாசமும்... quentin tarantino -வின் படக்காட்சிகளை நினைவுப்படுத்துகின்றன. அந்த வகையறா இயக்குநர்களின் பாதிப்பு ஆ.கா.வில் தெரிந்தாலும் ஈயடிச்சான் காப்பியாக அல்லாமல் inspiration-ல் தமிழ்ச் சூழலுக்கு பொருத்தமாக வசனங்களையும் திரைக்கதையையும் அமைத்திருப்பதுதான் தியாகராஜன் குமாரராஜாவை சிலாகிக்க வைக்கிறது.
தமிழ்சினிமாவை டெக்னிக்கலாக நிறைய ஜாம்பவான்கள் தூக்கி நிறுத்திஇருந்தாலும்..
சமீபத்தில் மிஷ்கினின் அஞ்சாதே, நந்தலாலா,யுத்தம் செய் போன்ற படங்கள் உலகதிரைப்படங்களின் சாயலை, உலகதிரைப்படங்களின், எதார்தத்தை அந்த வாசனையை தமிழ் சினிமா ரசிகர்கள் நுகர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துக்கொண்டு இருந்த வேளையில், தடாலடியாக உலக திரைபடத்தின் தரத்துக்கு இணையாக ஒரு தமிழ்படம் வந்து இருக்கின்றது என்றால்.... அது ஆராண்ய காண்டம்தான்.
இந்த படம் தமிழ்சினிமாவின் பிரேக் த ரூல் மூவி என்று தாராளமாக சொல்லலாம்...
ஒரு பெரிய டான் தள்ளிக்கொண்டு தன் வீட்டிலேயே வைத்து இருக்கும் சின்ன பெண்ணிடம் உடலுறவு கொள்ளும் போது, சீக்கிரமாக ஊத்திக்கொள்ள, அந்த கோவத்தை, அந்த இயலாமையை அந்த பெண்ணின் மீது காட்ட, அவள் வலி தாங்காமல் ஒத்த வார்த்தையை சொல்லி விடுகின்றாள்.. என்ன சொல்லறா???
உங்களால முடியலைன்னா ஏன் என்னை அடிக்கறிங்க???
அந்த கோவம், கொடுமையன கோவம் எந்த ஆணாலும் தாங்கி கொள்ள முடியாத ஈகோ கோவம், அந்த கோபம் தனது கூட்டாளி மற்றும் அன்றைய சேவல் சண்டையில் சேவல் தலையை சீவுவது வரை வியாபிக்கின்றது..... மிக அழகான காட்சிக்கோர்வை. இப்படி ஒரு காட்சியோடு தமிழ்சினிமா தொடங்குவது இதுவே முதல் முறை....
இந்த படம் இயக்குனருக்கு முதல் படம்.. அப்படி நம்ப முடியவில்லை.....ஒரு 15 நிமிடத்துக்கு சிங்கம்பெருமாள் விட்டினுள் அலையும் கேமரா, எல்லா கேரக்டர்களையும் அறிமுகபடுத்துவதும் அதன் பிறகு ஆப்போசிட் டான் கஜேந்திரன் பற்றி வார்த்தையால் பயமுறுத்துவது சான்சே இல்லை... ஒன்ஸ் அப்பான்ய மெக்சிக்கோ படத்தில் ஆன்டனியோ பேன்டரசை, பாரில் அவன் எபபடி இருப்பான் என்று அறிமுகபடுத்தும் காட்சியை அது நினைவுபடுத்துகின்றன....
முதல் காட்சியில் சிங்கபெருமாள் கோஷ்ட்டிகள் சப்பையை வைத்து பேசி சிரிக்கும் காட்சிகள்.. தமிழ்சினிமாவுக்கு புதுசு..
இதுவரையிலான தமிழ் சினிமா இசையில் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தில் செய்திருப்பது ஒரு புரட்சி என்றே சொல்லலாம். இந்த quantum jump-ஐ நிகழ்த்துவதற்கு வெறும் இசையறிவு மட்டும் போதாது. சினிமாவின் மொழி தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் பல இடங்களில் எந்த இசையுமே இல்லாமல் மௌனமாகவே நகர்கிறது படம். எந்த இடத்தில் இசை கூடாது என்று தெரிந்து வைத்திருப்பவனே இசையை வசப்படுத்துபவனாக இருக்க முடியும். யுவன் அதை அனாயாசமாகச் செய்திருக்கிறார். மௌனத்தைப் போலவே படத்தின் பல இடங்களில் ஒரே ஒரு வயலின் அல்லது ஒரே ஒரு கிதாரின் மெல்லிய அதிர்வு மட்டுமே கேட்கிறது. சத்தமும் கூச்சலும் மட்டுமே இசை என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இதெல்லாம் மிகப் பெரிய ஆச்சரியம். அதேபோல் பசுபதி சிங்கப்பெருமாளின் அடியாட்களிடமிருந்து தப்பி ஓடும் காட்சி, சிறுவன் கொடுக்காப்புளி சரக்கை ஒளித்து வைப்பதற்காக ஓடும் காட்சி… இந்த இடங்களில் எல்லாம் பயன்படுத்தப்படும் இசை உலகத்தரம். நான் மட்டும் அல்ல; படத்தைப் பார்த்த அத்தனை பேருமே யுவனின் இசையை விமரிசையாகக் கொண்டாடுவதிலிருந்தே யுவன் எத்தகைய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதே யுவன் யோகி, பானா காத்தாடி போன்ற படங்களுக்கு எப்படி இசையமைத்திருக்கிறார் என்பதையும் இங்கே நினைவு கூர வேண்டும். ஒரு இயக்குனர் ஒரு இசையமைப்பாளரை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதே அந்தப் படத்தின் இசையின் தரத்துக்குக் காரணமாக அமைகிறது
ஆரண்ய காண்டத்தின் ஒளிப்பதிவைச் செய்திருப்பவர் P.S. வினோத். தேவ்.டிக்குப் பிறகு என்னைக் கவர்ந்த ஒளிப்பதிவு இதுதான். இவர் தமிழின் சினிமா மொழியையே மாற்றி அமைத்திருக்கிறார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். பல காட்சிகள் மேற்கத்திய ரெனேஸான்ஸ் ஓவியங்களை எனக்கு ஞாபகப் படுத்தின. தமிழில் ஒளி ஓவியர் என்று போட்டுக் கொண்டு ஜிம்கா வேலை செய்வது போல் இல்லை; வினோதின் ஒளிப்பதிவு நிஜமாகவே ஓவியத்தைப் போல் இருந்தது. குறிப்பாக சிங்கப்பெருமாள் வரும் காட்சிகள் அனைத்தும் Caravaggio-வின் (1571 – 1610) ஓவியங்களைப் போலவே இருந்தன. அதிலும் குறிப்பாக சிங்கப்பெருமாள் சப்பையைத் தாக்கும் காட்சி அச்சு அசலாக கரவாஜியோவின் டேவிட்டும் கோலியாத்தும் என்ற ஓவியம்தான். பிறகு, குமாரராஜாவின் பேட்டியைக் கேட்ட போது அவருக்கு ரெனேஸான்ஸ் ஓவியத்தில் மிகுந்த நாட்டம் உண்டு என்றும், அதே பாணியிலேயே எடுக்கலாம் என்று வினோதிடம் சொன்னதாகவும் குறிப்பிடுகிறார். சினிமா என்பது இசை, நடனம், ஓவியம், இலக்கியம், கட்டிடக் கலை, தத்துவம் என்று பல்வேறு கலை வடிவங்களையும், அறிவுத் துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு ஆரண்ய காண்டம் ஒரு உதாரணம்.ஆரண்யகாண்டம் வன்முறையின் அழகியலை சொன்ன முதல் தமிழ்ப் படம். தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரித்த சரணுக்கும் நமது வாழ்த்துக்கள்.இத்திரைப்படம் சர்வதேச,இந்திய விருதுகளை மொத்தமாக அள்ள போகிறது.ஜாக்கி செரபிற்கு நிச்சயம் அவார்டு உண்டு.தமிழ் சினிமாவில் இதுவரை வந்த சினிமாக்கள் பல உலகதரமானது என்று சொல்லப்பட்டபோதிலும் இந்த சினிமா உலகதரத்துக்கு ரசனைக்கு புது மெருகூட்டலை அளித்திருக்கிறது என்று நிச்சயம் சொல்ல முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
இருத்தலியத்தின் அபஸ்ரங்கள்
இருத்தலியத்தின் அபஸ்ரங்கள் ஜே.பிரோஸ்கான் (இலங்கை) கவிதைகளை முன்வைத்து 1 இது ஒரு மோசமான தேர்வு. நிராகரிப்புகள் எனக்குள் நினைவிரு...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
பீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...
No comments:
Post a Comment