திருகுரானும் சமகாலபொருள்கோடலும்
எச்.முஜீப் ரஹ்மான்
பின் நவீனத்துவம் தொடர்ந்து உரையாடல் நடத்தி வரும் வேளையில் மார்ஜினலிசம், மினிமலிசம் போன்ற சொல்லாடல்கள் கவனம் பெறத் தொடங்கியது.அடித்தட்டு மக்கள் ஆய்வுகள் (subaltern studies). வரலாற்றெழுத்தியல் (historiography) மையங்களை தாண்டி புவியியல்,பொருளாதார,பண்பாட்டு,கருத்தியல் மட்டங்களில் விலக்கி வைக்கப்பட்டிருந்த விளிம்புகளை (peripersy) கணக்கில் எடுத்துக் கொண்டது.அடித்தள மக்களின் செயல்பாடுகளை அரசியல் நீக்கம் (de-political) செய்து பார்ப்பது வளர்ந்தது. நாட்டார் சமூகங்களுக்கும் (folk society) பழங்குடி,தலித் சமூகங்களுக்கும் உள்ள வேறுபாடுகளையும் தலித் சமூகத்திற்கும் விளிம்புநிலை மக்களுக்குமான வேறுபாடுகளையும் துல்லியமாக அறிய முடிகிறது.எனினும் தலித்துக்கள்,பழங்குடியினரை அடித்தள மக்களாக இந்திய சூழலில் கணக்கிலெடுப்பது தவறாகாது.ரஞ்சித் குகா,பார்த்தா சாட்டர்ஜி,ஞானேந்திர பாண்டே,தீபேஷ் சக்கரவர்த்தி,காயத்திரி ஸ்பீவாக் போன்றோர்கள் அடித்தள ஆய்வுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.பின் நவீனத்துவம்,பின் மார்க்சியம்,பின் காலனியம்,ரெட் பெமனிசம் போன்றவை தொடர்ந்து அடித்தள பிரிவை தத்துவ நோக்கிலும் பண்பாட்டு,பொருளாதார நோக்கிலும் விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் விளிம்புநிலை இஸ்லாம் என்ற கருத்தாக்கம் குறித்து பேச வேண்டியுள்ளது.
கிராம்சி,பூக்கோ,தெரிதா,ஜர்ஹன் ஹெபர்மாஸ்,வால்டர் பெஞ்சமின் போன்றோர்கள் ஒடுக்கப்பட்ட உடல்கள் குறித்தும் மேலாண்மை குறித்தும் பேசிய விஷயங்களே விளிம்பு நிலை ஆய்வுகளில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இந்த தளமுடைய சபால்டன் ஆய்வுகளின் தொடர்ச்சியாகத் தான் விளிம்பு நிலை இஸ்லாம் குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.பின் கீழ்திசையியல் (post orientalism) முறையியலாக இது நீட்சியடைகிறது.அனைத்துவகை ஏகாதிபத்தியங்களையும் ,மயமாக்கல்களையும் எதிர்த்துக் கொண்டு நாட்டார் இஸ்லாத்தின் (folk islam) கூறுகளை தக்க வைத்துக் கொண்டு வைதீக இஸ்லாத்துக்கும் ( orthodox islam) நவீன இஸ்லாத்துக்குமான (modernist islam) உரையாடல்களை விளிம்பு நிலை இஸ்லாம் விரும்புகிறது.விளிம்பு நிலை இஸ்லாமும் அடித்தட்டினர் பண்பாடு,அடித்தட்டினர் உடல்,அடித்தட்டினருக்கு எதிராக கட்டமைக்கப்படும் உண்மை ஆகியவற்றையே பிரதானப்படுத்துகிறது.
நாடு,சமூகம்,நிறுவனங்கள்,மொழி போன்றவை ஆண் உடல்களாக இருப்பதாலும் பண்பாட்டு மேலாண்மை புவியியல்,மொழி,இனம்,மதம் சார்ந்து பல்வேறு பிரிவுகளில் தகவமைத்துக்கொண்டு இருப்பதாலும் அடித்தள மக்களை எல்லாவகை மேலாண்மைகளில் இருந்தும்,ஆண் உடல்களிலிருந்தும் தனியே பிரித்தெடுக்கும் முயற்சியை விளிம்பு நிலை இஸ்லாம் எடுத்துரைக்கிறது.மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சனைகளில் ஏகாதிபத்தியத்தின் பங்கெடுப்பை புரிந்து கொள்ளும் முயற்சிகளிலும் பொது உளவியலில் பாசிச தடங்கள் பதிந்திருப்பதை எடுத்துச் சொல்லுவதிலும் அது உறுதிபூணுகிறது.பண்பாட்டு இஸ்லாம்(cultural islam) தனக்கேயான தன்மையுடன் உரையாடல் செய்து கொண்டிருப்பதை போல தாராள இஸ்லாம் (libaral islam) ,மதநீக்க இஸ்லாம் (secular islam) போன்றவை வெளிப்படுத்தும் ஜனநாயக தன்மைகள் யாவற்றையும் விமர்சனத்துடன் விளிம்பு நிலை இஸ்லாம் தமது பார்வைகளை வெளிப்படுத்துகிறது.
கற்பிதங்களையும்,கட்டமைப்புகளையும்,நிறுவனங்களையும்,அரசியலையும் எதிர் நோக்கும் அதே வேளை மாற்று உரையாடல்களுக்கான கதையாடல்களை உருவாக்குகிறது.உடலே நிலமாகவும்,நிலமே உடலாகவும் மேலாண்மை( hegemony) இயற்கை வடிவமாக இருந்து பண்பாட்டு அமைப்பாக திகழ்வதை அடித்தள மக்களின் பார்வையில் கொண்டுச் செல்ல வேண்டியதும் முக்கியமாகயிருக்கிறது.அரபு மையவாதத்தையும் தேச,தேசீய,காலனீய, உலகமயமாக்கல் நடவடிக்கைகளையும் சர்ச்சைக்கு உட்படுத்தி ஆண் உடல் பற்றிய பிரக்ஞையை முன்னிலைபடுத்த வேண்டியிருக்கிறது. உடல் அரசியலையும் அடையாள அரசியலையும் மக்கள்திரளில் காட்ட முயலும் (collective agency) அரசியலாக்கும், நியாயப்படுத்தல்களையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே விளிம்பு நிலை இஸ்லாத்தின் கோட்பாட்டு தளம் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது.அடித்தள முஸ்லிம்களான கிராமப்பற,நகர்புற ஏழைகள்,விவசாய கூலிகள், நடைபாதை வியாபாரிகள்,தொழில் கூலிகள்,அரவாணிகள்,நோயுற்றோர், நாடோடிகள், பிச்சைக்காரர்கள் போன்ற பிரிவினர் பற்றிய சமூக,பொருளாதார,அரசியல் ஆய்வுகளுக்கான தேவையை விளிம்பு நிலை இஸ்லாம் பேசுகிறது.வைதீக மரபுகள் நாட்டார் கூறுகளை அங்கீகரித்துக்கொண்டு அடித்தள மக்களோடு நேசம் கொள்வது போன்று அவர்களை பயன்படுத்திக்கொள்ளும் அரசியலை கட்டுடைக்க வேண்டியிருக்கிறது.நாட்டார் இஸ்லாத்தின் தர்ஹா பண்பாடு வெகுஜன இஸ்லாத்தோடு தொடர்புடையதாக இருப்பதால் அடித்தள மக்களையும் ஈர்த்துக்கொள்கிறது.ஆனால் தர்ஹா பண்பாடு போற்றும் நிறுவன ஆதிக்கங்களை,அடித்தள மக்கள் மீது செலுத்தும் அதிகாரங்களை சர்ச்சைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.இஸ்லாத்துக்குள் நிலவும் பெருங்கதையாடல்களின் தகர்ப்பை விளிம்பு நிலை இஸ்லாம் விரும்புகிறது.
இஸ்லாமிய பெருமரபுகளுக்கு சற்றும் தொடர்பில்லாத அடித்தள முஸ்லிம்களின் மொழி,பண்பாடு,கலை,விழாக்கள்,நம்பிக்கைகள்,வாழ்வியல் முறைகள்,சடங்காச்சாரங்கள் போன்ற தனித்துவமிக்க செயல்பாடுகளை கைவிடாமல் தொடரும் அவர்களின் வாழ்க்கை ஒளிவட்டங்களுக்கு புறம்பாக புனிதமற்றதாக இருப்பதை மையபடுத்தி அதை விவாதிக்கிற சூழலை விளிம்பு நிலை இஸ்லாம் விரும்புகிறது.
நிறுவன இஸ்லாத்தின் எந்த ஒரு நிறுவனங்களிலும் இல்லாத அடித்தள முஸ்லிம்கள் மீது வைதீக,நவீன முஸ்லிகள் தொடரும் தத்துவ அறிவு கோட்பாட்டு ஆதாரங்களை (epistemological fountation) ,பொருள்கோளலியலை (hermeneutics), நியாபடுத்தல்களை (legitimacy) நிராகரித்து மாற்று அறிவுகோட்பாட்டாதாரங்களை,பொருள்கொளலியலை,நியாயபடுத்தல்களை தத்துவ நிலையிலும்,வாழ்வியல் முறைகளிலும் உருவாக்கிக் கொள்ளும் விரிவான தளம் விளிம்பு நிலை இஸ்லாத்துக்கு இருக்கிறது.அடித்தள மக்களல்லாத பிற முஸ்லிகள் இஸ்லாம் என்ற பேரில் முன்வைக்கும் உண்மைகளை சர்ச்சைக்கு உட்படுத்தவேண்டும்.சட்டபூர்வமான உண்மை எவ்வாறு அடித்தட்டினருக்கு எதிராக செயல்படுகிறது என்று விவாதிக்க வேண்டியிருக்கிறது.இஸ்லாமிய பெருமரபு நம்பிக்கைகளுக்கு புறம்பான இவர்களின் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று ஏளனம் செய்யும் நம்பிக்கையின் அரசியலை சொல்ல வேண்டியிருக்கிறது.அவர்களின் பண்பாடும்,மொழியும்,பழக்கவழக்கங்களும் அராஜகமாக,ஒழுக்கமற்றதாக,புனிதமற்றதாக இருக்கிறது எனும் பார்வையை மறுதலித்துக்கொண்டு அவர்களை ஜீவனுள்ளவர்களாக மாற்ற வேண்டிய பணியையும் இது ஆதரிக்கிறது.அடித்தட்டினரின் உணர்வு நிலை முக்கியபடுத்தவேண்டும்.அவர்களது உணர்வு நிலை ஆதிக்கங்களுக்கு,சுரண்டல்களுக்கு அடங்கி போதலுடன் தொடர்புடையதாக இருப்பதால் வாழ்வியல் ஆதாரங்களை பெறும் உரிமைகளையும்,விடுதலையையும் விளிம்பு நிலை இஸ்லாம் கோட்டாட்டுருவாக்கத்திலும் சரி,செயல்திட்டத்திலும் சரி முன்னெடுத்துச் செல்லுகிறது.
திருகுரானும் வரலாற்றியல் பொருள்கோடலும்(Historigraphic Hermeneutics)
திருகுரானை ஆராய்வதில் வரலாறு மிக முக்கியமான இடம் வகிக்கின்றது. திருகுரானின் பின்னணிகள், திருகுரான் கூறும் செய்திகள் முதலியவற்றை அறியப் பல வகைககளில் அது ஒளி பாய்ச்சியிருக்கின்றது; தொடர்ந்து பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. வரலாற்றியல் திறனாய்வு, சுய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ, அகவய மனப்பதிவுகளின் முறையிலோ அமைவது அல்ல. சரியான தகவல்களுடன், திட்டமான வரலாற்றுக் கொள்கைகளுடனும் முறையான கோட்பாட்டுப் பின்னணிகளுடனும் அது அமையும். அங்ஙனம் அமைதல் வேண்டும். அங்ஙனம் அமைதலே சிறப்பான வரலாற்றுத் திறனாய்வு அணுகுமுறையாகக் கருதப்படும்.
இஸ்லாம் என்பது வெற்றுவெளியில் தானாகத் தோன்றுவது கிடையாது. அப்படித் தோன்றவும் முடியாது. அது, குறிப்பிட்ட காலத்தின் பின்னணியில் குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த மக்களை முன்வைத்து படைக்கப்படுவதாகும். மேலும் கூறுவதானால் திருகுரான் என்பது குறிப்பிட்ட காலத்தின் வெளிப்பாடு என்பதனை மறுக்க முடியாது. இத்தகைய காரணங்களினால் அது, தான் தோன்றிய காலத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மற்றும் உடன்பாடாகவோ எதிர்நிலையாகவோ காட்டுகிறது.
வரலாற்றிற்கு அடிப்படையாக அமைவன காலம், இடம் எனும் மையங்களாகும். இவற்றிலே காலூன்றி நிற்பது திருகுரானும். நினைவுகளையும் நிகழ்வுகளையும் எடுத்துக் கொண்டு எந்த இடத்தில் சுழன்றாலும் அதனுடைய ஈர்ப்பு, காலம் என்னும் மையத்தை நோக்கியதாகத்தான் அமையும். வரலாற்றில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துக் கொள்ளவும். அந்த மாற்றங்களுக்குத் தானும் ஒரு காரணமாக அமையவும் கூடிய திறன் பெற்றது திருகுரான்.
மனிதகுலம், மிக இயல்பாகத் தன்னையே உற்பத்தி செய்து கொள்வது; மற்றும் பொருள்களை உற்பத்தி செய்வது எனும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. அதோடு காலம், இடம் என்னும் புற நிலைகளின் காரணமாகவும் அது வளர்ச்சி பெறக் கூடியது. இவை வரலாற்றிற்குரிய அடிப்படைக் கருதுகோள்களாகும். மேலும் காலம், இடம் என்ற அச்சுகளில் காரண-காரியங்களுடன் கூடிய முன்னோக்கிய மாற்றங்களைக் கொண்ட நிகழ்வுகளின இணைப்பை இது குறிப்பதாகும்.
மாற்றம் என்பது உயிருடைய பொருள்களின் தன்மை; மாற்றமில்லாதது என்பது சடப் பொருள்களின் தன்மை. மாறுதல் பெறுவதும், அதன் காரணமாக வளர்வதும் என்ற அடிப்படைப் பண்பைக் கொண்டு, குறிப்பிட்ட பொருள்களின் பண்பு மற்றும் உறவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியனவும், பொருளின் சாராம்சமாக விளங்கக் கூடியனவுமாகிய முன்னோக்கிய மாற்றங்களை, வரலாற்றியல், கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனடிப்படையில் திருகுரானைத்தை ஆராய்வதற்குத் துணை நிற்கிற அணுகுமுறை வரலாற்றியல் அணுகுமுறையாகும். வரலாற்றியல் அணுகுமுறையில் முக்கியமாக மூன்று நிலைகள் இருக்கின்றன. அவை:
(1) திருகுரானிலிருந்து வரலாறு காண்பது.
(2) திருகுரானுடைய வரலாற்றினைக் காண்பது
(3) திருகுரானை வரலாற்றின் பின்னணியில் பார்ப்பது
என்பனவாகும்.
திருகுரானின் வரலாறு காண்பது என்பது, திருகுரானை ஒரு தொடர்ச்சியாக அல்லது தொடர்ச்சியின் ஒரு பகுதியாகக் காண்பதாகும். ஆங்கில கோட்பாட்டாளராகிய ரெனிவெல்லாக் (Rene Wellek) திறனாய்வும், வரலாறும் இணை பிரிக்க முடியாதவை என்பார். அதாவது திறனாய்வாளனை அகவயமான சொந்த விருப்பு வெறுப்புக்களுக்குப் போகவிடாமலும், அவசர முடிவுகளுக்குச் சென்று விடாமலும், திருகுரான் வரலாறு பற்றிய அறிவு பாதுகாக்கிறது. திறனாய்வாளனுக்கு திருகுரான் வரலாறு தெரியவில்லையானால் அவனுடைய முடிவுகள் தவறாகப் போய் விடலாம். உதாரணமாகப் நபிமார்களின் வரலாறுகளை ஆராயும் போது பல்வேறுதளங்கள்,களங்கள் ஆகியவற்றின் காலத்தோடு சேர்த்து வைத்துக் கணக்கிடும்போது, அவ்வவ்காலச் சமுதாய, பண்பாட்டு வரலாற்றினை ஆராய்வதில் குழப்பங்களும் சிக்கல்களும் முடித்துவைக்கப்படுகிறது. எனவே, இவ்விரண்டின் காலங்களையும் கணக்கில் எடுத்துச் சொல்வது திறனாய்வாளனுக்குத் தேவையாகி விடுகிறது. மேலும், திருகுரானுக்குரிய வரலாற்றுத் தொடர்புகளும் காரணங்களும் அறியப்படவில்லையென்றால், திருகுரானைப் புரிந்து கொள்வதிலும், அதன் இடத்தைத் தீர்மானிப்பதிலும் தொடர்ந்து தவறுகள் ஏற்படும். இந்த உறவு அறுபடுமானால் சீரழிவு ஏற்படும். திருகுரானை வரலாறு காணவும் எழுதவும் முற்படுபவர்கள் இந்தத் தவறிலிருந்து தப்புதல் வேண்டும்.
திருகுரானிற்கு உள்ளே - சமூகம், அரசியல், பண்பாடு முதலியவற்றின் வரலாற்றினைக் காண முற்படுவது திருகுரானில் வரலாறு காணும் முறையாகும். வரலாற்றியல் அணுகுமுறையில் திருகுரானில் வரலாறு காண்பது திருகுரானை வரலாற்று மூலமாகக் (Historical Source) கொள்ளுதலாகும்.காலம் - இடம் எனும் தளத்திலிருந்து முகிழ்க்கும் திருகுரான், அவ்வக் காலத்தின் வாழ்வுகளையும், உணர்வுகளையும் பதிவு செய்யும் புனிதகலை வடிவமாகும். எனவே வரலாறு எழுதுவதில் திருகுரான் சான்று மூலமாக அமைகிற உரிமையும் தகுதியும் பெற்றுள்ளது எனலாம்.
திருகுரானை வரலாற்றுக்குரிய சான்று மூலங்களாகக் கொள்வதை, வரலாற்றுப் பேராசிரியர்கள் பலர் ஒத்துக் கொள்வதில்லை. எனினும் குறிப்பாக அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுகள், நாணயங்கள் முதலிய முதன்மைச் சான்றுகள் கிடைக்காத போதும் அல்லது சரிவரக் கிடைக்காத போதும் இவர்களுக்கு திருகுரானின் துணை தேவைப்படுகிறது. ஆனால் தனித்தனியே அறிவுத் துறைகள் விரிந்து, கிளைத்து வளராத காலத்தில் திருகுரானே அக்காலத்திய அறிவியலிலிருந்து மருத்துவம், சோதிடம் வரையிலான அறிவுத் துறைகள் பலவற்றிற்கும் சான்றுகள் தருகிற வரலாற்றுக் கொள்கலனாக இருந்திருக்கிறது.
இந்த அடிப்படையில்தான் “ஒரு நாட்டின் மத வரலாறு என்பது அந்நாட்டின் அரசியல், விஞ்ஞான சமய வரலாற்றின் சாராம்சமேயாகும்.” என்று கார்லைல் (Carlyle) அவர்களும், “திருகுரான் என்பது காலங்கள் தோறும் காட்சி விளக்கக் குரல்களாகக் கேட்கும் ஒரு கூட்டுக்குரல் ஒலியே” என்று ரெனிவெல்லாக்கும் குறிப்பிடுகின்றனர். இதே போல் பிரடெரிக் எங்கல்ஸ் (Frederik Engels) “சமய எழுத்துகள் தொழில்முறை வரலாற்றறிஞர்கள், பொருளாதாரவாதிகள், புள்ளிவிவரக்காரர்கள் ஆகியவர்களை விடவும் உண்மையாகவும் அற்புதமாகவும் வரலாற்றைத் தருகின்றன” என்று கூறுகிறார்.
திருகுரான், குறிப்பிட்ட வரலாற்றின் சூழமைவில் தோன்றுகிறது; வளர்கிறது; ஏற்றுக்கொள்ளப்படுகிறது; போற்றப்படுகிறது.
திருகுரானை வரலாற்றின் தளமாகவும், தாக்கமாகவும், எதிரொலியாகவும், வரலாற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் பார்க்க வேண்டும். உதாரணமாக, பனுஇஸ்ராயீல்,பல்வேறு அரபு குலக்குழுக்கள்,இனங்கள்,பரிவர்த்தனைகள்,அவர்கள் தம் நம்பிக்கைகள் ஆகியவற்றை அறிய என்ற காலப் பின்னணி மிகவும் அவசியமாகும்.
நடப்பியல் உண்மைகளை அல்லது வரலாற்றுச் செய்திகளை திருகுரான் அப்படியே தருவதில்லை; நேரடியாகத் தருவதில்லை. அது, கலைவடிவம் ஆகும் போது இறைவன், சூழல், நலன், நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மைகள் பிரதிபலிக்கப்படு்கின்றன. எனவே, கலையாக்க முறைகளைப் புரிந்து கொண்டு, கற்பனையின் பாங்கினை அறிந்து கொண்டு பின்புலத்தைக் காணுதல் வேண்டும்.
திருகுரானை வரலாறு எழுதுவதில், நடைமுறையில் ஐந்து கோணங்கள் அல்லது வகைகள் இருப்பதை அவதானிக்கலாம்.
(1) நூற்றாண்டுக் கால வரிசை
(2) அரச மரபு வரிசை
(3) திருகுரானை வகைகளின் வழி
(4) திருகுரானை இயக்கங்களின் வழி
(5) கருத்து நிலைகளின் வழி
இவற்றைப் பொதுவாகவும் தனித்தனிப் போக்குகளாகவும் எடுத்துக் கொண்டு வரலாற்று முறையியல்களை ஆராயலாம். இங்ஙனம் இவ்வரலாற்றியல் அணுகுமுறை திருகுரானை உலகினைச் சரியாகவும், தெளிவாகவும் புலப்படுத்தும் திறன் பெற்றுள்ளது. கடந்த காலம் சமைத்த பாதையில் மட்டுமல்லாமல் நிகழ்வின் வெளிப்பாடுகளிலும் எதிர்வின் தரிசனங்களிலும் இது ஒளி பாய்ச்சும் எனலாம்.
திருகுரானும் விளிம்புநிலை பொருள்கோடலும் (Marginalise Hermeneutics)
விளிம்பு நிலை என்ற சொல்லிற்கான உண்மையான அர்த்தத்தினை
கண்டடைய வேண்டிய தேவை இருக்கின்றது. இந்தச் சொற்பதம் என்பது பல மயக்கத்தை கொடுத்துள்ளதாகவே கருத வேண்டியிருக்கின்றது. இங்கு (marginalization) தரப்படுத்துதல் அல்லது ஒதுக்குதல், ஒடுக்கப்படுத்தல் (oppressed, exploited) என்று சுரண்டப்படும் மக்கள் தொகுதியை கூற பயன்படுத்தப்படும் பொது சொற்பதங்களாகும். ஆனால் ஒடுக்கப்படும், சுரண்டலுக்கு உள்ளாகும் விளிம்பு நிலை என மக்கள் கூட்டத்தினை விழிப்பதற்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் மயக்கத்தை ஏற்படுத்துகின்றது. இங்கு மேற்கு தேசங்களில் பயன்படுத்தப்படும் அரசியல் சொற்பதங்கள் தமிழ்படுத்துவது ஒன்றும் இலகுவானது அல்ல. உதாரணத்திற்கு லும்பன் (உதிரிப்பாட்டாளி) பூர்சுவா (முதலாளித்துவ) வர்க்கம் என்ற சொற்தொடர்கள் பயன்பாட்டில் உள்ள போதிலும் அதற்கு நிகரான சொற்கள் தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் இருக்கின்றது. மேற்கண்ட சொற்கள் அரசியல் அரங்கில் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. ஆனால் விளிம்பு நிலை என்ற சொற்பொருள் குறித்து அரசியல் உலகில் பரீட்சையம் உள்ளவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை. ஆனால் இணைய விவாதங்களை நோக்குகின்ற போது இந்தச் சொல்லாடல் பின்னவீனத்தில் பின்னரான அரசியல் உரையாடல்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என அறிய முடிகின்றது.
“அடித்தட்டு வர்க்கம் எனப்படுவது பொருளாதார சமூக அடுக்கமைவில் மிகவும் பின் தங்கிய மக்கள் குழுவாகும். இவர்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக வரையறை செய்வது கடினம். எவ்வளவு உழைத்தும் தொடர்ந்தும் பின் தங்கி நிற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள். எளிமையான வாழ்வு முறைகளைத் தேர்ந்த துறவிகள் போன்றோர், குடிபோதை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பின் தங்கியோர், நோய் சமூகக் கட்டமைப்பு போன்ற இதர காரணிகளால் பின் தங்கியோர் என பல தரப்பட்ட மக்கள் அடித்தட்டு வர்க்கம் என்ற வட்டத்துக்குள் வரக்கூடும். ஆங்கிலத்தில் working class, underclass என்றும் வேறுபடுத்திக் காட்டுவர். அதற்கு சற்று ஒத்து தமிழிலும் விளிம்பு நிலை மக்கள் என்ற சொல்லாடல்களும் உண்டு.”
"marginal என்பதை இங்கு விளிம்பு நிலை என்றே அழைத்து வருகிறார்கள், அதற்கு கீழறு நிலை என்றும் ஒரு சொல்லைப் பயன்படுத்தலாம். ஆனால் சில சொற்கள் பொது வழக்கிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் அதையே நாம் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.".,“விளிம்பு நிலை மனிதர்கள் என்பவை மிகவும் ஒடுக்கப்பட்ட, சமூகத்தின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு பொருளீய, பண்பாடு சமூக பிரிவினரைக் குறிக்கிறது. இது ஒரு பின் நவீனத்துவ அணுகுமுறை. வர்க்கமற்ற சமூக வகையினம் இருக்கிறது பார் என்று சொல்வதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது என் கணிப்பு. வர்க்கப் பார்வையைத் தவிர்ப்பதற்கான இந்த முயற்சி வரவேற்கத் தக்கதல்ல. அனைத்து சமூக, பண்பாட்டு, ஆதீதன மன ரீதியான ஒடுங்கிய நிலையையும் நீங்க வர்க்கப் போராட்டத்தின் மூலமே ஒழிக்க முடியும் என்பது என் கருத்து.”,
விளிம்பு நிலை என்ற சொல்லாடல் தனித்தே வெறும் சொல்லாக தமிழ் பரப்பில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்கள் கூட்டத்தினை எவ்வாறு விழிக்கின்றது என்பதை அறிய வேண்டும். விளிம்பு நிலை என்ற சொல்லாடல் மானிடவியல் பாடநெறிக்கு உட்பட்டதாகும். மானிடவியல் பாடநெறி எடுத்துச் சொல்லும் விளக்கத்தினை விளிம்பு (marginal -Victor Turner) என்று பார்க்கின்ற போது பின்வருமாறு வரையறுக்கின்றது. எமது முன்னோர்களுக்கு ஏன் சடங்குகளைச் செய்கின்றார்கள்? ஏன் மனித சமூகத்தின் அவ்வாறான பழக்கங்கள் இருக்கின்றது என்பதையும், மனித கூட்டம் இந்தக் கட்டங்களை தாண்டிச் எவ்வாறு செல்கின்றது என்பதை விளக்குகின்றனர்.
“சமூகத்தில் விளிம்பு நிலையினர் (marginals) என்றும் தனித்த பிரிவினரையும் டர்னர் இனங்காண்கிறார். இவர்கள் மேற்கூறிய புறவயத்தாரிடமிருந்து வேறுபட்டவர்கள். விளிம்பு மக்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவின் பேராளர்களாக இருப்பர். அதோடு அவர்கள் சமூகம், பண்பாட்டு நிலைகளில் தனித்தன்மையுடன் விளங்குவர். சில சமயங்களில் ஒரு குழுவினர் மற்றுறொரு குழுவினருக்கு எதிர் நிலையினராகக் கூட இருப்பர். தாங்கள் தாழ்ந்த பிரிவிலிருந்து தோன்றியவர்கள் என்ற நிலை, நடைமுறையில் அமைப்புக்கு எதிராக "மீமூகம்" கட்டமைக்கின்ற பண்பைக் கொண்டிருப்பதன் மூலம் தங்களை உயர்ந்த குழுவினராகக் கருதிக் கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் "அமைப்பு" குறித்து விமர்சனம செய்பவர்களாகவும், எதிர் - அமைப்பைக் கட்டமைத்து மீசமூகம் ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பர். எழுத்தாளர்கள், கலைஞர்கள், தத்துவவாதிகள், ஆகியோர் விளிம்பு நிலையினராக அமைகின்றனர் (225 பண்பாட்டு மானிவியல் மணிவாசகர் பதிப்பகம், 1999-ஜீலை பக்தவத்சலபாரதி)
இனக்குழுமங்களாக வாழ்ந்த சமுதாயத்தில் மனிதர்கள் செய்யும் சடங்குகளுக்கும், வழிபாடுகளுக்கும் விளக்கங்களை தேடிச் செல்லும் மானிடவியாளர்கள். அந்த இனக்குழுமத்தின் சின்னங்களின் குறியீடுட்டு அர்த்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இனக்குழுமம் என்ற நிலையில் இருந்து தேசிய இனங்களாக உருவான பின்னரும் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது.இஸ்லாமிய கோட்பாடு தனித்துவங்களில் ஒன்று அரேபியச் சமூகங்களில் நிலைபெற்றிருந்த அடிமை முறையினை தகர்க்க முயன்றும் ஒடுக்கப்பட்டிருந்த கறுப்பின மக்களின் விடுதலையை முன்நிறுத்தியும் இயங்கியது ஆகும். நன்மை வழி தீமை வழி இவ்விரண்டிலும் மலைப்பாதையைப்போல் கரடுமுரடும் மேடும் பள்ளமும் நிரம்பிய பாதை நன்மை வழி பாதையாக இருக்கிறது.இஸ்லாமியம் நடமுறைப்படுத்தப்பட்ட துவக்ககாலங்களில் வெவ்வேறு இனக்குழு மக்களிடையே நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற இனக்குழு போர்க் கைதிகளை அடிமைகளாகப் பிடித்து வருவதுண்டு. இதர போரில் வெற்றி பெற்ற பொருட்களை கால்நடைகளை பங்கிடுவது போல இந்த அடிமைகளை பங்கிட்டு கொள்வதும் உண்டு.இங்கு இத்தகைய அடிமைகளை விடுதலை செய்வதற்கு சில நிபந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன. யூத கிறிஸ்தவ குழுக்களிடையே இந்த அடிமைகளை விடுவிப்பதாக இருந்தாலும் சரி,ஒன்று அந்த எஜமானுக்கு, அடிமையை விடுதலை செய்ய விரும்புவர் அதற்கு பரிகாரமாக குறிப்பிட்ட அளவு திர்கம்களை கொடுத்து அவர்களிடமிருந்து விடுதலை வாங்கிக் கொடுக்கலாம். ஒரு எஜமான் தன் அடிமையிடம் நீ இவ்வளவு பணம் அளித்துவிட்டு விடுதலை பெற்றுக் கொள் என அனுமதியளித்துவிட்டால் விடுதலை பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமை என்று பொருள்படும் முகத்தாப் என்று அந்த அடிமை அழைக்கப்படுவான். பணம் முழுவதும் வழங்கப்பட்டப் பின்னரே முழு விடுதலை சாத்தியமாகும்.
சில சமயங்களில் போர்களில் பிடித்துவந்த கைதிகளான அடிமைகளை விடுவிப்பதற்கு அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத இஸ்லாமியர்களுக்கு கல்வி சொல்லி கொடுக்க வேண்டும். இப்படி பலவிதமாய் இதன் நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. அடிமைப் பெண்கள் மீதான வரம்பற்ற பாலாதிக்கமும் அக்காலத்தில் நிலைபெற்றிருந்தது. ”உம்முல்வலத்” எனப்படும் சொல்லாடல் குழந்தையின் தாய் என்பதன் பொருளாகும். ஒரு எஜமானன் தனது அடிமைப்பெண் ஒருத்தியோடு பாலுறவு வைத்துக் கொண்டு அதன் விளைவாக குழந்தை பெற்று விட்டால் அத்தகைய அடிமைப்பெண்ணை எந்த விதத்திலும் விடுதலை செய்ய வழியில்லை. எஜமானின் மரணத்திற்கு பிறகுதான் அந்த அடிமைப் பெண்ணுக்கு விடுதலை கிடைக்கும்.
இத்தகையதான அடிமைச் சமூக நிலைபாடுகளிலிருந்து ஒரு சமத்துவம் நோக்கிய சமூகத்தை உருவாக்க முற்பட்டதின் விளைவாகவே அபிசீனியாவின் கறுப்பு அடிமை பிலாலை விலைக்கு வாங்கி அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தும், தொழுகைக்கான அதானை ஒலிக்க பிலால் அவர்களுக்கு உரிமை கொடுத்து கறுப்பின விடுதலையை இஸ்லாத்தின் மூலமாக சாத்தியமாக்கிய நபி முகமதுவின் நடைமுறைகளை குறிப்பிடலாம்.
.இஸ்லாத்தின் கடமையாக்கப்பட்ட வழிபாட்டுச் செயல்களுக்குள் உட்பொதிந்து கிடந்த சமத்துவக் கூறுகள் நிற, இன, குல ஆதிக்கத்திற்கு எதிராக செயல்பட்டதின் விளைவாகவே ஒடுக்கு முறைக்கு ஆட்பட்டிருந்த மக்கள் பகுதிகள் இஸ்லாத்தின்பால் நகர்ந்து வரத் துவங்கின. தொழுகை வணக்க வழிபாடு பள்ளிவாசலுக்குள் உயர்ந்தவன் / தாழ்ந்தவன், வசதியுள்ளவன் / வறியவன், என்பதான பேதங்களை கடந்து செயல்பட்டது. ஹஜ் என்னும் இறுதிக் கடமையை நிறைவேற்றும் செயல் என்பதே மக்கா நகரின் க·பதுல்லாவில் நடைபெறும் உலக முஸ்லிம்களின் மாநாடாகவே அர்த்தம் பெறுகிறது. மொழி எல்லைகள், தேசம் என்பதான புவியியல் பரப்பு எல்லைகள் கறுப்பு, வெள்ளை, என்பதான நிற எல்லைகள் கடந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே குடும்பமாக திரளும் நடைமுறை சமத்துவத்தை பரிந்துரை செய்கிறது. ஹஜ் கிரியை நிறைவேற்ற இஹ்ராம் என்னும் இருதுண்டு வெள்ளாடைகளே அனைவரும் அணிவதற்கான ஆடை. இத்தகையதான பின்புலமும் பண்பாட்டு மதிப்பீடுகளையும் இஸ்லாம் தாராளமாக தன்னகத்தே கொண்டிருப்பதன் விளைவுதான் ஐரோப்பிய நாடுகளில் வெள்ளை இனம் மேலானது கறுப்பினம் கீழானது என வகுப்பட்ட ஆதிக்க மதிப்பீடுகளை சிதைத்தலை நோக்கியே இஸ்லாத்தின் பயணம் தொடர்கிறது.
கன்னிப்பெண்கள் இறந்தால், கற்பிணிப்பெண் இறந்தால் அதற்கான சடங்குகளை செய்கின்றனர். கற்பிணி, கன்னிப்பெண் இறந்தால் அவர்களின் ஆவிக்கு சடங்கு செய்ய வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது. இறந்தபின்னர் சமாதானமற்று, நிம்மதியற்று அலையும் ஆவி, (ஆன்மா) என்பது முதல்நிலை (புறவய மனிதர்கள் நிலை (outsiderhood) அந்த ஆவிக்கு (ஆன்மா) சடங்கிற்கான தயாரிப்புக்களும், சடங்குமுறைகளும், சாந்தப்படுத்த எடுக்கும் முயற்சிகளும் இரண்டாம் நிலை (விளிம்பு நிலை (marginality - Liminal stage) இறந்த மனிதனிர் இங்குமில்லை அங்குமில்லை என்ற நிலையைக் குறிக்கின்றது. இதனை தான் மானிடவியலில் விளிம்பு நிலை என்று வரையறுக்கப்படுகின்றது. அங்குமில்லை இங்குமில்லாத நிலையில் இருக்கின்ற இறந்தவரின் ஆன்மாவின் சாந்திக்காக செய்யப்படும் சடங்குகள் ஊடாக (அமைப்பு தாழ்வு நிலை structural inferiority) இறந்த ஆன்மாவுக்கு சாந்தியையும் சமாதானத்தை ஏற்படுத்துவதுதாகும்.
இதற்கு இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போமானால் யாத்திரைக்கு செல்லும் காலங்களில் சகல பழக்கவழக்கங்கள், குடும்ப உறவுகள் எல்லாவற்றை ஓடுக்கி வாழ்கின்றார். யாத்திரையை தரிசனம் செய்கின்றபோது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு யாத்திரையை மேற்கொள்கின்றார். (விளிம்பு நிலை) ஆனால் யாத்திரை முடிந்த பிற்பாடு வழமையான வாழ்க்கையில் ஈடுபடுகின்றார். இவரின் யாத்திரை பூரணம் அடைவதற்கு யாத்திரிரையினால் ஏற்படும் மனச்சாத்தியும், திருப்தியுமாகும். யாத்திரை சடங்கு ஒரு நிலையில் இருந்து இன்னொரு (transformation) நிலைமாற்றுவது இந்த இடைப்பட்ட காலத்தை விளிம்பு நிலையாகும். இங்குமில்லை அங்குமில்லை என்ற இரணடும் கெட்டான் நிலையில் இருப்பதைக் குறிக்கின்றது.
விளிம்பு நிலை என்கின்ற போது இவர்கள் மனிதர்களாக அல்ல மாறாக இவர்கள் ஒரு இடைநிலையில் இருக்கின்றார்கள் என்று தான் விளிம்புநிலை வரையறை விளக்கம் கொடுக்கின்றது. இவர்கள் மக்களாக இருக்கின்றார்கள். அது எவ்வாறு சாத்தியமாகும். இதுதான் இங்கு எழும் கேள்வி.ஒரு மனித கூட்டம் பொருளாதாரத்தில் வலிமை இழந்தவர்களாக இருக்க முடியும். இதனால் படிப்புவாசனை, உங்களைப் போல் வாழாது ஒலைக் குடிசையில் தெருவோரத்தில் உரிமை பறிப்பட்டு வாழலாம். உங்களைப் போல உடுபுடவை உடுத்தாமல் இருக்கலாம், உழைப்பையே நம்பிய மனிதராக இருக்கலாம், தனிபாத்திரங்களில் உணவு கொடுக்கலாம். இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் சமூகத்தில் தாழ்வுற்ற நிலைக்குச் செல்லும் சமூகத்தின் உறுப்பினர்களை தலித்தியத்தைப் போலவே வர்க்க அமைப்பிற்குள் அமையமுடியாது என்று கருதுகின்றது. இதில் இன்னுமொருவிடயம் என்னவெனில் பல்கலைக்கழகங்களில் கற்றவற்றை சமூகத்தளத்திற்கு கொண்டுவருவதாகும்.
உலகின் ஏறத்தாழ 55 நாடுகளில் எல்லா மார்க்கப் பள்ளிகளையும், தரீகாக்களையும் உள்ளடக்கிய முஸ்லிம்கள் 100 கோடிக்கு மேல் வாழ்கிறார்கள். ஸ்பெயினில் கடந்த 800 ஆண்டு காலமாக முஸ்லிம்களின் ஆட்சி நடைபெற்றிருந்தாலும் கூட ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த மட்டில் பிரான்சிஸ் 60 லட்சம் பேர் அதிகபட்சமாக வாழ்கிறார்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தினர் முஸ்லிம்களாக உள்ளனர்.
அமெரிக்காவில் இஸ்லாம் பரவிய முறைமையை பரிசீலித்துப் பார்த்தால் வெள்ளை நிறவெறிக்கும், அதற்கு சமய ரீதியாக ஏற்று கொள்கிற கிறிஸ்தவர்களின் நிலைபாட்டிற்கும் மாற்றுக் குரலாக ஒடுக்கப்பட்டு அடிமைப்பட்டு கிடக்கிற கறுப்பின மக்களின் மதமாக இஸ்லாம் உருவாகி வந்துள்ளது. கறுப்பின மக்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் இயக்கமாய் கிறிஸ்தவம் கூட தன்னை அடையாளம் காண முயற்சித்தது. ஐரோப்பிய வெள்ளை இனத்தவரின் நிறவெறி ஒடுக்குமுறைக்கும் காலனித்துவ ஆட்சிக்கும் எதிராக கறுப்பின மக்கள் சார்ந்த இன்னொரு வகை கிறிஸ்தவம் முன்வைக்கப்பட்டது. கறுப்பின கலை இலக்கியப் படைப்பாளிகளின் சமகால குரலாக லாங்ஸ்டன் ஹியூக்ஸ் 1920களை ஒட்டி எழுதிய கவிதைகளில் இது எதிரொலித்தது.
இயேசுவானவர் ஒரு கருப்பராக திரும்பி வருவாரானால் அது நல்லதல்ல.
அவர் சென்று பிரார்த்தனை செய்ய முடியாத தேவாலயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.
எவ்வளவு புனிதப்படுத்தப்பட்டாலும் நீக்ரோக்களுக்கு அங்கே வாயில்கள் மறுக்கப்படும்.
ஆனால் இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
இயேசுவே நீர் உயிர்ப்பித்து வந்தால் நிச்சயமாக மீண்டும் சிலுவையில் அறையப்படுவீர்.
அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆபிரிக்காவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டு இங்கு குடியேற்றப்பட்ட அடிமைகள். ஆபிரிக்கா அமெரிக்கர்களான இவர்களை ஐரோப்பிய வெள்ளை நிறவெறி சமூகம் நீக்ரோக்கள் என்று அழைக்கிறது. கறுப்பு இழிவானது வெள்ளை உயர்ந்தது என கட்டமைக்கப்பட்ட கருத்தியலின் விளைவுதான் வாழ்வின் எதிர்மறையான விரும்பதாகாக நிகழ்வுகளுக்கு கறுப்பு (Black) என்ற சொல்லாடலை பயன்படுத்துவதைப் பார்க்கலாம். ஒருவரை மிரட்டி ஏமாற்றுவதற்கு பிளேக் மெயில் தந்திர கலைகளுக்கு பிளேக் மேஜிக் என்பதாக இவை சொல்லப்பட்டு வந்துள்ளன.காஸியஸ்கிளே என்பது போலத்தான் கறுப்பின மக்கள் பெயரிட்டுக் கொள்ளவேண்டும். கிளே அழுக்கு மண்ணை குறிக்கும் சொல்லாடலாகும். இதனை தமிழ் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்கள் மண்ணாங்கட்டி என பெயரிடுவதற்கு ஒப்பாக இருப்பதைக் காணலாம். வெள்ளை நிறவெறி ஆதிக்க கலாச்சார இருப்பின் அறிகுறியாக இப்பெயரிடுதலைக்கூட கருதலாம். இதுபோன்றே ‘வெள்ளை மாளிகை’ என்ற பெயரிடுதல் கூட அமெரிக்க அரசாங்கமும் அதிபரும், கறுப்பர்களுக்காக இல்லை. வெள்ளையர்களுக்காக மட்டுமே என்பதான அர்த்தமாகவே வெளிப்படுகிறது. எனவேதான் உணவகங்கள் உள்ளிட்ட பொதுவிடங்களில் தொங்கும் அறிவிப்பு பலகைகளில் கறுப்பவர்களுக்கும், நாய்களுக்கும் அனுமதி இல்லை என்கிற வாசகம் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். 1781களில் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து பெயர்த்து கொண்டு வரப்பட்ட ஆண், பெண் அடிமைகளை வைத்தே அடிமைகளை உற்பத்தி செய்யும் பண்ணைகள் உருவாக்கப்பட்டதான வரலாறு அமெரிக்காவிற்கு சொந்தமானது. இத்தகையதான அடிமைமுறையை எதிர்த்துதான் மார்ட்டின் லூதர்கிங் போராடிய போதும் நவீன வாழ்வியல் காலத்திலும் இத்தகையதான நிறவெறிக் கொடுமைக்கு முற்றுப்புள்ளியிட முடியவில்லை.
1. அவன் உன்னை வலதுபுறத்தில் சவுக்கால் அடித்தால் இடதுபுறத்தையும் காட்டிக் கொடு. இவற்றை இங்கே தாங்கிக் கொள். உன் தேவன் உன்னைப் பரலோகத்தில் வைத்து பரிசளிப்பான் என்றெல்லாம் போதித்து நம்மை மயக்கத்தில் ஆழ்த்தியது.
2. அமெரிக்காவின் ஒரு சிறையில் நீ, அமெரிக்க நாடு என்ற அகண்ட சிறையில் ஆபிரிக்காவின் ஆயிரமாயிரம் கறுப்புக் கைதிகள் இதுதான் நீ சார்ந்த இனத்தின் நிலை.
1930களை ஒட்டி வெள்ளை நிறவெறிக்கும், அதற்குத் தத்துவ அங்கீகாரம் வழங்கியதை கிறிஸ்தவத்தை விட்டும் வெறியேறி இஸ்லாமியனாக மாறிய எலிஜாபூல் என்ற எலிஜா முகமதுவின் மேற்குறிப்பிட்ட வாசகங்கள் மிகமுக்கியமானவை. இவர் கறுப்பர்களின் விடுதலைக்காக தோற்றுவித்த இயக்கம் தான் இஸ்லாத்தின் தாயகம் (Nation of Islam) இவ்வியக்கத்தின் செயல்பாட்டாலும் செல்வாக்கினாலும் இஸ்லாத்தின்பால் கறுப்பின மக்களின் சிந்தனையாளர்களின் கவனம் ஈர்க்கப்பட்டது. எலிஜா முகமதுவின் காலம் 1897-1975க்கு இடைப்பட்டதாகும்.
ஆபிரிக்க இனமக்களின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய எலிஜாமுகமது, வியட்நாம் மீதான அமெரிக்காவின் ஆக்ரமிப்பு யுத்தத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ததால் சிறையிலும் அடைக்கப்பட்டார். இவர் தனது வழிகாட்டியாக ஷியாபிரிவைச் சேர்ந்த பர்துமுஹம்மதுவை ஏற்றுக்கொண்டார்.
இதுபோன்றே 1935ல் நியூயார்க்கில் பிறந்த டிவைட்யார்க் என்னும் கறுப்பினப் போராளி 1965களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஈசா அப்துல்லா என மாற்றிக் கொண்டார். அன்சாரு அல்லாஹ் கம்யூனிட்டி என்ற இஸ்லாமிய பிரிவை உருவாக்கினார். தனது பெயரை இமாம் ஈசா அப்துல்லா முஹம்மது அல்மஹதி என முழுமைப்படுத்திக் கொண்ட பிறகு இஸ்லாமிய கடமை மற்றும் நடைமுறைச் சார்ந்த பின்பற்றுதல்களில் ஒரு நெகிழ்ச்சித் தன்மையை உருவாக்கினார்.
கறுப்பின மக்கள் பகுதியில் இயக்கம் நடத்திய எலிஜா முகமதுவின் சிந்தனை, பேச்சு, பத்திரிகை செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டார். மால்கம் லிட்டில் என்ற மால்கம். அலெக்ஸ்ஹேலி படைப்பாளி மால்கம்எக்ஸின் வாழ்வை நவீன பிரதியாய் ரூட்ஸ் (‘Roots’) என்ற நூலாக எழுதியுள்ளார். அமெரிக்க கறுப்பர்களின் புராதான மார்க்கமாக இஸ்லாம் உருப்பெற்றுள்ளதை அந்த நூல் வெளிப்படுத்தியது. இதுவே பின் தொலைக்காட்சித் தொடராகவும், திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. ஆபிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட பூர்வீகம் பற்றி அறியாத கறுப்பர்கள் என்பதை குறிக்கவே இந்த எக்ஸ் என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டது. கறுப்பின மக்களின் கலாச்சார சூழல் போதைப்பொருள் உற்பத்தி, குடிப்பழக்கம், வரம்பற்ற பாலியல் உறவு என்பதான நிலைகளிலிருந்து விடுபட இஸ்லாம் ஒரு மாற்று கலாச்சார உருவாக்கத்திற்காக பிரச்சாரம் செய்யப்பட்டது. முகம்மது பேசுகின்றார் (Muhammed Speaks) பத்திரிகையின் தொடர்பால் மால்கம் எக்ஸ் கறுப்பின மக்களின் முக்கிய தலைவராக உருவாகத் துவங்கினார்.
இனவெறி நிறவெறியின் பிடியிலிருந்து விடுதலை பெற ஒரே வாசல் இஸ்லாம் தான் எனப் பிரச்சாரம் செய்த மால்கம் எக்ஸ், 1962களில் உலககுத்துச் சண்டை வீரர் காசியஸ் மார்சிலஸ்கிளேயுடன் தொடர்பு ஏற்படுகிறது. உலகக் கோப்பையை குத்துச் சண்டைப் போட்டியில் வென்ற போதிலும் கூட உணவு விடுதிகளிலும் தங்கும் விடுதிகளிலும் கறுப்பன் என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. குத்துச்சண்டை களத்தைவிட்டு வெளியே வந்துவிட்டால் நீ இன்னொரு கறுப்பன்தான் என அவமதிக்கப்பட்டார். இதன் விளைவாகவே கசியஸ்கிளே அஹமத் அலியாக இஸ்லாத்திற்குள் நுழைகிறார். மால்கம் எக்ஸின் சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்.இங்கும் வெள்ளையர்கள் உண்டு. ஆனால் இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து வந்த கறுப்பர்களிடமும் சூடானிலிருந்து வந்த கறுப்பர்களிடமும், ஹானாவிலிருந்த கறுப்பர்களிடமும் ஒரே விதமாக நடந்து கொண்டார்கள். நிறம் இங்கே எந்தவிதத்திலும் தலையிடுவதில்லை”.மக்காவில் க·பாவிற்கு சென்று ஹஜ் இறுதிக் கடமையை நிறைவேற்றி வந்தபோது மால்கம் எக்ஸ் – மாலிக் அல்ஷாபாஸ் என்ற பெயர் தாங்கி மேற்கண்ட கருத்துக்களை முன்வைக்கிறார். வெள்ளையர்கள் அனைவரும் எதிரிகள் என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு, நிறவெறிகொண்டு அலையும் வெள்ளையர்களையே தனது எதிரிகளாக பிரகடனம் செய்தார். அமெரிக்க வெள்ளையர் குறித்த அனுபவத்திலிருந்து, அரபிய சூழலில் கூடும் ஹஜ் கிரியைகளில் நிறபேதமற்று வெள்ளை நிற முஸ்லிம்களிடமிருந்து பெற்ற அனுபவ வேறுபாட்டால் தனது வெள்ளையர் குறித்த பார்வையில் கூட மறுசிந்தனையை உருவாக்கி கொள்கிறார். இப்படியாகத்தான் வரலாற்றின் தடங்களில் இஸ்லாம் கறுப்பின விடுதலையோடு ஒரு நிறவெறி ஆதிக்க எதிர்ப்பு மார்க்கமாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது.
திருக்குர்ஆனிய கருத்தாக்கங்களில் நின்று புது உண்மைகளை காலச் சூழலுக்கு ஏற்ப அர்த்தப்படுத்தும் முயற்சி ஒருபுறம் வரலாறெங்கும் நிகழ்ந்துள்ளது. இதுவே புதிதாக கல்வி கற்ற இஸ்லாமிய படிப்பாளி மக்கள் பகுதியை இக்கொள்¨யாக்கங்களின் பால் ஈர்ப்பதற்கு பயன்பட்டது. எனினும் இஸ்லாமியத்தின்பால் இன்றுள்ள மிக முக்கியப் பிரச்சனை இதனை தமிழகச் சூழலில் கூட நிறுவன சமயம் சார் ஒரு சடங்கியல் மார்க்கமாக மட்டுமே அணுகுவதாகும், தொழுகையை கடைபிடித்தல், புனித ஹஜ் பயணம் பூர்த்தி செய்தல் என்கிற வகையிலான நடைமுறைகளை மேலெழுந்தவாரியாக முதன்மைப்படுத்தி அதன் வரலாற்று துவக்கங்களுக்குச் சென்று கபருசியாரத் முதல் மல ஜலம் கழிப்பது வரை ஆதாரங்களை தேடியலைந்து எந்த முறையில் இக்கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்பதான பிரச்சனைகளை பத்திரிகைகளிலும் டி.வி.மீடியாக்களிலும் அறிவின் அராஜக எல்லைக்குப்போய் மண்டைபிளக்க சிலர் விவாதிப்பதை பார்க்கிறோம். இது திரும்பத் திரும்ப மத அடிப்படைவாதத்தை கட்டமைக்கும் தூய்மைவாதம் பெயரிலான பாசிச செயல்பாடாகும். இந்த சடங்கியல்களையும் தாண்டி இக்கடமைகள் ஒரு குறியீட்டு மொழியாக அதன் அடித்தளம் (Deep Structure) உணர்த்துகிற ஒற்றுமை, சகோதரத்துவம், விடுதலை உள்ளிட் சமூக அறவியல் (Social Ethics) மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
திருகுரானும் பன்மீய பொருள்கோடலும் (Pluralist Hermeneutics)
தனித்த இனமொன்று வாழும் நாட்டை விடவும், பல இனங்கள் வாழும் நாடு இரசனைக்குரியதாகும். ஒவ்வொரு சமூகத்தினதும் மாறுபட்ட இலக்கியம், கலை, கலாசாரம், விழுமியங்கள் மற்றும் மத நம்பிக்கை போன்றவற்றால், பன்மைச் சமூகங்கள் வாழும் நாடுகள், வர்ணப் புகைப்படங்களைப் போன்று அழகுகளால் நிறைந்துள்ளன.பல்லின மக்கள் வாழும் நாட்டின் பிரஜைகள், உளரீதியான சில அம்சங்களைத் தம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவைகளும் உள்ளன. அவற்றில் முக்கியமானது சமூக நல்லிணக்கமாகும். இந்தச் சொல் நமக்கு மிகவும் பழக்கமானதாகும். என்றாலும் கூட, ‘சமூக நல்லிணக்கம்’ என்பதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நம்மில் எத்தனை பேர், விளங்கி வைத்திருக்கின்றோம் எனத் தெரியவில்லை.
‘வேறுபாடுகளைக் கடந்து – ஒரு மனிதனை இன்னொரு மனிதன் புரிந்து கொள்வதும், ஒரு சமூகத்தின் செயற்பாடுகளை மற்றைய சமூகம் சகித்துக் கொள்வதும், ஓர் இனத்தை மற்றுமோர் இனம் அனுசரித்துச் செல்வதும்’ சமூக நல்லிணக்கமாகும்.‘ஏதேனும், பன்மைத்துவ சூழலில் நிலவும் வேறுபாடுகளைக் கடந்து ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை மதித்தல், ஒன்றாகக் கூடி வாழ்தல், தாம் விரும்பும் கருத்துகள் சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஏனையவர்களுடன் விட்டுக்கொடுப்பு மற்றும் சகிப்புத்தன்மையுடன் செயற்படுதல்’ என்பதையும் சமூக நல்லிணக்கம் என்கின்றனர்.ஒரு சமூகத்தின் செயற்பாடுகளை மற்றைய சமூகம் ‘சகித்துக் கொள்ளுதல்’ என்று, மேலே குறிப்பிட்டுள்ள விடயத்தை விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். இங்கு ‘சகித்துக் கொள்ளுதல்’ என்பதை, ‘வேண்டா வெறுப்புடன் ஜீரணித்துக் கொள்ளுதல்’ என விளங்குதல் கூடாது. ‘வேறுபாடுகளின் எல்லை கடந்த புரிந்துணர்வு’தான் இங்கு சகித்துக்கொள்ளுதல் எனப்படுகிறது.அவ்வாறாயின், சமூக நல்லிணக்கமானது சகிப்புத் தன்மையிலிருந்தே உருவாகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அல்லது சகிப்புத்தன்மைதான் சமூக நல்லிணக்கத்துக்கான அடித்தளமாக இருக்கின்றது எனவும் கூறலாம்.
பல மாறுபட்ட இனங்களையும் சமூகங்களையும் கொண்ட நமது நாட்டின், பன்மைத்துவத்துவ அழகை இரசித்து அனுபவிக்கும் பாக்கியத்தை நாம் மிக நீண்ட காலமாக இழந்து கொண்டிருக்கின்றோம். மிக அதிகமான காலங்களை மோதல்களிலும், முரண்பாடுகளிலுமே கழித்து விட்டோம். இன்னொருபுறம், நமது அரசியலும் இன ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால், ஓர் இனத்தை மற்றைய இனம் புரிந்து கொள்ளத் தவறி விட்டது.இந்த அடிப்படையில் அல்-குர்ஆனின் நிழலிலும் ஸீராவின் ஒளியிலும் சமாதான சகவாழ்வின் அடிப்படைகளை பின்வருமாறு சுருக்கி தருகின்றோம்.
01. மனித சமத்துவம்
'நிச்சயமாக நாம் உங்களை ஒரே பெண்ணிலிருந்தும் ஒரே ஆணிலிருந்தும் சிருஷ்டித்தோம். பின்னர் கோத்திரங்களாகவும் குழுக்களாகவும் ஆக்கினோம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.' (ஹுஜ்ராத்: 13)
இந்த வகையில் மனித சமத்துவம் குர்ஆனிய சிந்தனை அகிலத்துக்கு தந்த அருட்கொடை. அதுவே இஸ்லாம் வழங்கிய சமாதான சகவாழ்வுக்கான பிரதான அடிப்படையாகும்.
02. மனிதம் மதிக்கப்பட வேண்டும்
உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் கண்ணியமானவர்கள். இந்த மனிதம் பற்றிய சிந்தனையை இஸ்லாம் இன்ஸானிய்யா கோட்பாடு என்று தனியாக பேசுகிறது.
'நாம் ஆதமின் சந்ததியினரை கண்ணியப்படுத்திவிட்டோம். கடலிலும் கரையிலும் அவர்களைச் சுமந்தோம். மிகவும் நல்லவற்றில் இருந்து அவர்களுக்கு நாம் வாழ்வியல் சௌபாக்கியங்களை வழங்கினோம். நாம் படைத்த ஏனைய படைப்புகளில் அதிகமானவற்றை விட மனிதர்களுக்கு விசேட அம்சங்களைக் கொடுத்து சிறப்பித்தோம்.' (இஸ்ரா:70) இங்கு அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி சகவாழ்வு தொடர்வதற்கு மனிதம் மதிக்கப்பட வேண்டும் என்று அல்-குர்ஆன் அறை கூவல் விடுக்கிறது. அந்த சிந்தனைக்கான ஒரு நடைமுறை உதாரணமாக நபிகளார் யூதனொருவனின் பிரேதத்தை கண்டு எழுந்து நின்று மரியாதை செய்தார்கள்.
03. கொள்கைச் சுதந்திரம்
ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் விரும்பும் கொள்கையை அல்லது மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் உள்ளது. எனவே, மாறுபட்ட கொள்கையையோ மதத்தையோ பின்பற்றுகின்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் அல்லர். அதே போன்று ஒருவர் ஏற்றிருக்கின்ற மார்க்கத்தை அல்லது கொள்கையை பிறர் மீது திணிக்கும் உரிமையும் எவருக்குமில்லை. 'மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது' (ஸூறா பகரா: 256)
அவர்கள் விசுவாசம் கொள்ளவில்லை என்பதால் அவர்கள் மீது எத்தகைய ஆதிக்கமும் செலுத்த முடியாது. 'அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவராக நீர் இல்லை' (ஸுரா அல்-காஷியா:22) அல்-குர்ஆன் கூறுகிறது. இது போன்ற மத சகிப்புத்தன்மையையும் கொள்கை சுதந்ததிரத்தையும் வலியுறுத்துகின்ற இன்னும் பல வசனங்களை அல்-குர்ஆனில் அதிகமாவே காண முடியும்.
04. மனிதன் அடுத்த சகோதர மனிதனுக்கு பயனுள்ளவன்.
'மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் குடும்பம். அல்லாஹ்வின் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளவர்களே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்கள்.' (முஸ்லிம்)
சமூக உறவுகளின் உயிர் வாழ்வே மனிதனது உயர்ந்த இலக்கு. அதற்காக தன்னை அர்ப்பணிக்கும் தியாக சிந்தை கொண்ட மனிதனாகவே அவனைக் காண முடியும்.
5. மனிதர்கள் யாவரும் சகோதரர்கள்
இஸ்லாம் மனித சகோதரத்துவத்தை மிகக் கடுமையாக வலியுறுத்துகின்றது. எல்லா மனிதர்களதும் மூதாதையர் ஆதமும் ஹவ்வாவுமே. அதனால் அனைவரும் சகோதரர்கள்.
சகோதரத்துவம் பற்றிய இஸ்லாத்தின் கருத்து மிகவும் ஆழமானது, யதார்த்தமானது. இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டின் ஒரு பகுதியாகவும் அது அமைந்துள்ளது. 'இறைவா! மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என நான் சாட்சி பகர்கிறேன்' என இறைதூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு பர்ளான தொழுகையின் பின்னரும் பிரார்த்தனை செய்யும் வழக்கம் கொண்டிருந்தார்கள்; என ஸைத் பின் அர்கம் (ரழி) அறிவித்துள்ளார்கள். (அஹ்மத், அபூதாவூத்)
06. பண்மைத்துவத்துவம் பிரபஞ்ச நியதிகளில் ஒன்று
சமூகங்கள், மொழிகள், கலாசாரங்கள், மதங்களிலுள்ள பன்மைத்துவம் இறை நியதிகளில் ஒன்று. இப்பன்மைத்துவம் யதார்த்தமானது, அழகானது, இயல்பானது. இது பிரபஞ்ச விதிகளில் ஒன்று. 'உமது இரட்சகன் நாடியிருந்தால் அனைத்து மக்களையும் ஒரே சமூகமாக ஆக்கியிருக்கலாம். ஆனால் இறைவன் அப்படி நாடவில்லை. மக்கள் தொடர்ந்தும் கருத்து வேறுபாடு கொண்டவர்களாகவே உள்ளனர்.' (ஸுரா மாஇதா:48) மற்றொரு வசனத்தில் 'உமது இறைவன் நாடியிருந்தால் உலகிலுள்ள அனைவரும் முஸ்லிம்களாக விசுவாசம் கொண்டிருப்பர். அவ்வாறு உமது இறைவன் விரும்பவில்லை. எனவே மக்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாற வேண்டும் என விரும்பி நீர் அவர்களை நிர்ப்பந்திக்கிறீரா? (ஸுரா யூனுஸ்:99)
இவ்விரு வசனங்களும் சமூகங்கள் மற்றும் மதங்களில் உள்ள பன்மைத்துவம் இறை நியதிகளில் ஒன்று என்பதை தெளிவு படுத்துகிறது. எனவே இஸ்லாம் மட்டும்தான் உயிர் வாழ வேண்டும் என எண்ணுவது அல்-குர்ஆனிய சிந்தனைக்கு முரணானது.
பல மதங்களின் இருப்பை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாத்தின் நிலைப்பாடு, இஸ்லாம் மட்டும் தான் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட சத்திய மார்க்கம் என்ற சிந்தனைக்கு முரண்படமாட்டாது. 'நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மார்க்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இஸ்லாம் மாத்திரமே' (ஆலஇம்ரான்:19). ஆனால் ஏனைய மதங்கள், சமூகங்கள் உயிர் வாழ்வதற்கான உரிமை அவற்றுக்கு உண்டு என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவது முஸ்லிம்களது கடமையே தவிர அவர்களை முஸ்லிம்களாக மாற்றுவது பொறுப்பல்ல.
இந்த உண்மையை அங்கீகரிக்காமல் சகிப்புத்தன்மை வளராது. சகிப்புத்தன்மை இல்லாமல் சகவாழ்வு இல்லை.
7) பிற சமயத்தவர்களின் உரிமைகளுக்கான உத்தரவாதம்
மதீனா அரசில் ரஸுல் (ஸல்) அவர்கள் உருவாக்கிய அரசியல் சாசனம் மனித உரிமைகளை எல்லாப் பிரஜைகளுக்கும் உத்தரவாதம் செய்தது. அதில் சிறுபான்மை என்ற பெயரில் யாரும் இருக்கவில்லை. அந்த அரசியல் அமைப்பின் பிரதான அம்சங்கள் பின்வருமாறு அமைந்தன.
i) யூதார்களும் முஸ்லிம்களும் தத்தமது சமயத்தை முழுமையாக பின்பற்றலாம்
II) இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் உதவி செய்யப்படுவர். நீதியாக நடத்தப்படுவர்.
III) தாய் நாட்டை காப்பதற்கு சகல தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
ஐஏ. ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்பினரோடு யாராவது போர் புரிந்தால் அவர்களை காப்பதற்கு உதவி செய்ய வேண்டும் (பிற மதத்தவர்களுக்காக முஸ்லிம்கள் போராடுவர்)
8) சமூக நீதியும் சகவாழ்வும்.
'மார்க்க விடயத்தில் உங்களோடு போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் உங்களுடன் சமாதானமாக வாழும் அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீங்கள் நீதி செலுத்துவதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சமாக அல்லாஹ் நீதி செலுத்துபவர்களை நேசிக்கின்றான்.'
மேற்கூரிய வசனத்தில் 'அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்' என்ற அரபுப் பத்தின் வேர்ச் சொல் 'பிர்' என்பதாகும். மிகப் பெரும் சட்ட அறிஞர் இமாம் கராபி (றஹ்) தனது பிரபலமான ஷஅல் புரூக்| எனும் நூலில் ஷபிர்| எனும் இச்சொல்லை விரிவாக விளக்குகின்றார். முஸ்லிம் அல்லாதோரிடையே உள்ள பசித்தவர்களுக்கு உணவளித்தல், நோயாளிகளை தரிசித்தல், ஆடையற்றவர்களுக்கு ஆடை வழங்குதல், கடன் கேட்போருக்கு உதவுதல், அறிவு ரீதியாக வழிகாட்டல், உள ரீதியில் ஆலோசனை வழங்கல் என பல்வேறு உபகாரங்களை இச்சொல் குறிக்கும் என்று கராபி கருதுகின்றார்.
9) கரைந்து போகாமல் கலந்து வாழ்தல், திறந்த நிலையில் தனித்துவம் பேணல்
'மக்களுடன் கலந்து வாழும் முஃமின் கலந்து வாழாத முஃமினை விட சிறந்தவன்' என்பது நபி மொழி. இன்னொரு நபி மொழியில் கலந்து வாழும் முஃமின் உயர்ந்த கூலியை பெறுவான் என்றும் வந்துள்ளது. கலந்து வாழ்வதை இஸ்லாம் தூண்டுகிறது. மூடுண்ட சமூகமாக வாழ்வதை இஸ்லாம் வெறுக்கிறது.
அந்நிய நாகரிகங்கள், கலாசாராங்களினுடனான உரையாடல் தேக்கமடைவது சமூகத்தின் மரணத்திற்கு அறிகுறி. பிற சமூகங்களுடனான உறவை துண்டித்து வாழும் இறுக்கமன போக்கு எப்படி ஆபத்தோ அதேபோன்று வரையறைகளின்றி தனித்துவத்;தை இழந்து கலந்து பழகுவதும் பெரும் ஆபத்தானேதே. இரண்டு தீவிர போக்குகளையும் தவிர்த்து நடு நிலை வகிப்பது இங்கு முக்கியமானது. இஸ்லாம் அந்த சமநிலையை பேணுகிறது.
இன்று நாம் நவீன கால இஸ்லாமிய எழுச்சிப் போராட்டத்தின் முச்சந்தியில் வாழ்கின்றோம். இழந்த கிலாபத்தை மீட்டெடுப்பதற்காக உழகை;கும் முஸ்லிம் சமூகத்தின் நீண்ட போராட்ட பாதையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ நேரிடுவது பெரும் சவாலாகவே அமைந்துள்ளது. எனவேதான் இஸ்லாமிய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காத நிலையில், முஸ்லிம் அல்லாதவர்களோடு இணங்கியும் கலந்தும் வாழ்தல் என்ற இத்தொனிப்பொருள் கடந்த பல தசாப்தங்களாக இஸ்லாமிய சட்டத்துறையின் பேசு பொருளாக இருந்து வருகின்றது. தனித்துவத்தைப் பேணல், கலந்து வாழல் ஆகிய இவ்விரு நோக்கங்களையும் நிறைவேற்ற வேண்டுமாயின், உலகில் வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் 'கரைந்து போகாமல் கலந்து வாழ்தல், திறந்த நிலையில் தனித்துவம் பேணல்' என்ற வாழ்வியல் சமன்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
10) சட்டத்தின் முன் அனைவரும் சமம்
இனம், மொழி, பிராந்தியம், தேசம், ஆகிய எல்லைகளைத் தாண்டி மனிதர்கள், மதங்கள், கலாசாரங்கள், நாகரிகங்கள் இணைந்து சமாதானமாக வாழலாம் என்பதற்கு அல்குர்ஆன் முன்வைக்கும் இன்னொரு விழுமியம் அதன் நீதி பற்றிய கொள்கையாகும். சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனையும் நீதத்துடன் நடாத்துவது ஏனைய மனிதர்களதும் அதிகாரத்தின் சகல மட்டங்களில் உள்ள தலைவர்களதும் கடமையாகும். இந்தக் கடமை மிகவும் பாரியது. இறையச்சத்திற்கு நிகரானது என்று நீதியின் தாத்பரியத்தை அல்-குர்ஆன் விளக்குகிறது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தார் அல்லது குழுவினர் மீது ஒருவரோ ஒரு குழுவினரோ கொண்டுள்ள விருப்பு வெறுப்பு நீதி செலுத்துவதில் செல்வாக்கு செலுத்தக் கூடாது என்று கண்டிப்பான கட்டளையிடுகிறது அல்குர்ஆன். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் நீதி செலுத்தி அல்லாஹ்வுக்கு சாட்சியாளர்களாக இருங்கள். நீங்கள் செலுத்தும் நீதி உங்களுக்கோ உங்களது பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ எதிரானதாக இருந்தாலும் கூட' (ஸுரா நிஸா:35 )
11) மனிதாபிமான உதவிகள்
நபியவர்கள் மக்காவிலிருந்து விரட்டியடிக்கப்பட்;டு, மதீனாவில் வாழுகின்றபோது மக்காவாசிகள் பஞ்சம் காரணமாக பட்டினியால் வாடுகிறார்கள் என்ற செய்தி நபிகளாரின் செவிக்கு எட்டுகிறது. உடனே ஹாதிப் பின் அபீ பல்தஆ என்ற தோழரிடம் 500 திர்கம்களை கொடுத்து மக்கா வாழ் குறைசிக் காபிர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்குமாறு பணித்தார்கள். குறைசியர்களின் பகையுணர்வும் ஷிர்க்கும் சகவாழ்வின் அடிப்படையான மனிதாபிமான உதவிகளுக்கு தடையாக இருக்கவில்லை. மனிதாபிமான உதிவகள் சகவாழ்வின் தோற்றுவாய்.
இதுவரை அடித்தட்டினரின் விடுதலைக்காக பேசப்பட்ட,செயல்பட்ட விஷயங்கள் யாவும் கோட்பாட்டு புனைவாக இருப்பதால அவற்றை சர்ச்சைக்கு உட்படுத்துவதும் இதன் வேலை திட்டமே.
உலகமயமாதலின்(globalaisation) புதுவடிவமாக பொயெதார்த்த காலனியம்(virtual colonalism) தகவல்தொடர்புகளை முன்னிறுத்தி காலனீய செயல்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கும் சமயத்தில் நவ முதலாளியம்(pan capitalism) ஒரே உலகம் ஒரே பண்பாடு என்ற கோஷத்துடன் தமது மேலாண்மையை செய்து கொண்டிருக்கிறது.இவ்வகை ஆதிக்கங்களை எதிர்கொள்வது எப்படி செயற்திட்டத்தையும்,பிரக்ஞையையும் மாற்று எதிர்நடவடிக்கை முகாம்களிலிருந்து உருவாக்குவதில் முனைப்புடன் செயலாற்றுகிறது.மேனிலை சிந்தனை வரிசை(higher order of thoughts) எனும் கருத்தாக்கம் பொது உளவியலில் படிகளாக எவ்வாறு அடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவற்றுக்கு தன்னிலை படிந்து போகும் நிலையையு எடுத்துரைக்கிறது.அந்த சிந்தனையின் வெளிச்சத்தில் ஊடக அரசியலை எதிர்க்கொள்ளும் நடவடிக்கைப்பற்றி விளிம்புநிலை இஸ்லாம் தீவிரமாக விவாதிக்கிறது.வினைச்செய் உயிரிக்கும்,வினைபடு உயிரிக்குமான அரசியல் யுத்தம் நுண்தளத்திலிருந்தும் பெரும்தளத்திலிருந்தும் உருவாவதை தீவிரமாக அலச வேண்டிய சூழலும் தற்போது அமைந்துவிட்டிருக்கிறது.இன்று உண்மை பன்மீயம் (real pluralism)என்ற பெயரில் இஸ்லாமியர் பலர் தாராள இஸ்லாத்தில் விளிம்பை பேசவேண்டும் என்ற நிலையை எடுத்திருப்பது முக்கிய சமூக நிகழ்வாகும்.சாந்திரா முசாபர்(மலேசியா),முகமது தலாபி(துனிசியா),சூபி மக்சானி(லெபனான்),ஹ¤மாயூன் கபீர்(இந்தியா),அப்துரஹ்மான் வாஹித்(இந்தோனேஷியா),அப்துல் கரீம் சாரூஸ் (ஈரான்),பரீத் இஸ்ஹாஹ்(தென் ஆப்ப்ரிக்கா) போன்றோர்கள் உண்மை பன்மீயம் மூலம் இஸ்லாத்தின் வைதீக செயல்பாடை உடைத்து விடலாம் என்ற குரலெழுப்புகிறார்கள்.இஸ்லாமிய பன்மீயம் என்ற கருத்தாக்கம் கருப்பு இஸ்லாம் இறையியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.இவ்வாறு விளிம்பு நிலை பற்றிய கண்ணோட்டங்கள் உலகமுழுவதும் உருவாகியுள்ள சூழலில் கருத்துருவாக்கத்திலும்,கோட்பாடாகவும்,செயற்திட்டமாகவும் விரிவும் ஆழமும் கொண்டுள்ள விளிம்பு நிலை இஸ்லாம் ஒடுக்கப்பட்டமக்களின் குரல்களை பதிவுசெய்யும்.