Sunday, March 01, 2009

‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ


இந்திய காலனிய எதிர்ப்பில் ஒரு சாரார் 'பாரத மாதா' என்ற உருவகத்தை உருவாக்கியது போலவே, அமெரிக்காவுக்கு 'அங்கிள் சாம்' என்ற உருவகமும், பிரிட்டிஷாருக்கு 'ஜான் புல்' என்ற உருவகமும் உருவாக்கப்பட்டது. இந்த உருவகங்கள் எந்தத் தனிநபரையும் குறிப்பதில்லை. உலகில் பல நாடுகளுக்கு இத்தகைய உருவகங்கள் உண்டு. இந்த உருவகங்கள் தோற்றம் கொண்ட கதைகளும், அதன் அரசியலும் மிக மிக சுவாரசியமானவை.

அங்கிள் சாமுக்கு மண்ட்டோ எழுதிய ஒன்பது கடிதங்கள் சிறு வெளியீடாக 2001ல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. முதல் கடிதம் 1951-ல் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது கடிதம் எந்த ஆண்டு என்று தெரியவில்லை. மூன்றாவது கடிதத்திலிருந்து 1954 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதங்களில் மண்ட்டோவின் கதைகள், கட்டுரைகளில் காண முடியாத வேறுபட்ட பல தன்மைகளை இதில் காண முடிகிறது. இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. இந்த விளையாட்டை மண்ட்டோ மிகத் திறம்பட விளையாடி உள்ளார். இந்தக் கடிதங்கள் அவர் உயிரோடு இருக்கும் போது பிரசுரம் செய்யப்பட்டதா என்று தீர்மானமாகத் தெரியவில்லை. இந்த இதழில் முதல் மூன்று கடிதங்கள் மட்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. - தமிழாக்கக் குறிப்பு)

31 லஷ்மி மேன்ஷன், 16, டிசம்பர் 1951
ஹால்ரோடு,
லாகூர்.

அன்புள்ள அங்கிள்,

வணக்கம்.

நீங்களோ அல்லது ஏழு சுதந்திரங்களும் பெற்று இருக்கும் உங்கள் நாட்டில் எவருமே அறிந்திராத உங்களுடைய பாகிஸ்தான் சகோதரனின் மகனிடமிருந்து உங்களுக்கு இந்தக் கடிதம் வருகிறது.

என்னுடைய நாடு, இந்தியாவிலிருந்து ஏன் துண்டிக்கப்பட்டது என்றும், ஏன் உயிர்பெற்றது என்றும், ஏன் சுதந்திரம் அடைந்தது என்றும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே உங்களுக்கு எழுதும் உரிமையை நான் எடுத்துக் கொள்கிறேன். என் நாட்டைப் போலவே நானும் சுதந்திரம் பெற்றுவிட்டேன் - மிகச் சரியாக அதே பாணியில், அங்கிள், இறகுகள் துண்டிக்கப்பட்ட பறவை எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை. எல்லாம் அறிந்த உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். உங்களுக்கு நான் இதை விளக்கத் தேவை இல்லை.

என் பெயர் சாதத் ஹசன் மண்ட்டோ. இப்போது இந்தியாவிலிருக்கும் ஓர் இடத்தில்தான் நான் பிறந்தேன். என் தாய் அங்குதான் புதைக்கப்பட்டு இருக்கிறாள். என் தந்தை அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறார். எனக்குப் பிறந்த முதல் குழந்தையும் அந்தத் துண்டு நிலத்தில்தான் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறான். இருந்தாலும் அந்த நிலம் இனியும் என்னுடைய நாடு அல்ல. இப்போது என்னுடைய நாடு பாகிஸ்தான். இதை நான் பிரிட்டிஷ் பிரஜையாக இருந்தபோது ஐந்தாறு தடவைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

நான் அகில இந்தியாவிற்கும் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருந்தேன். இப்போது பாகிஸ்தானின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருக்கிறேன். என்னுடைய கதைகள் பல தொகுப்புகளாக வெளியாகி உள்ளது. மக்கள் என்னை மதிக்கிறார்கள். ஒன்றுபட்ட இந்தியாவில் நான் மூன்றுமுறை விசாரிக்கப்பட்டேன். பாகிஸ்தானில் இதுவரை ஒரே ஒரு முறைதான். என்ன இருந்தாலும் பாகிஸ்தான் சிறு குழந்தைதானே!

பிரிட்டிஷ் அரசாங்கம் என்னுடைய எழுத்துகள் ஆபாசமானது என்று கருதியது. என் சொந்த அரசாங்கமும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை விட்டுவிட்டது. ஆனால் என்னுடைய அரசாங்கம் அப்படிச் செய்யுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கீழ் நீதிமன்றம் எனக்கு, மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. மேல் நீதிமன்றத்தில் நான் முறையிட்டதால் விடுவிக்கப்பட்டேன். ஆனாலும் என்னுடைய அரசாங்கம் நீதி நிலை நாட்டப்படவில்லை என்று நம்புவதால் என்னை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், நான் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் என்ன தீர்மானிக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

என்னுடைய நாடு உங்களுடைய நாடாக இல்லாததைக் கண்டு நான் வருந்துகிறேன். உயர்நீதிமன்றம் என்னைத் தண்டிக்குமானால், என் நாட்டில் எந்த செய்தித்தாளும் என் புகைப்படத்தையோ, வழக்கு பற்றிய குறிப்புகளையோ வெளியிடாது.

என் நாடு ஏழ்மையானது. இங்கு பளபளக்கும் காகிதங்களோ, சிறந்த அச்சு இயந்திரங்களோ கிடையாது. இந்த ஏழ்மைக்கு உயிருடன் இருக்கும் நானே சாட்சி. அங்கிள், நீங்கள் நம்ப மாட்டீர்கள். இருபத்திரண்டு புத்தகங்களுக்கு ஆசிரியனாக இருந்தும் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போகக்கூட என்னிடம் வசதிகள் ஏதும் கிடையாது என்று தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். என்னிடம் பேக்கார்ட்டே, டாஜோ கிடையாது. ஏன், ஏற்னெவே உபயோகப்படுத்தப்பட்ட கார்கூட என்னிடம் கிடையாது.

நான் எங்காவது போக வேண்டும் என்றால் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறேன். ஒரு பத்திக்கு ஏழு ரூபாய் வீதம் செய்தித்தாளில் என்னுடைய எழுத்து வெளிவந்து, இருபது முதல் இருபத்தைந்து ரூபாய் கிடைத்தால் டோங்காவை எடுத்துக் கொண்டு உள்ளூர் விஸ்கியை வாங்கக் கிளம்பி விடுவேன். இந்த விஸ்கி மட்டும் உங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்டு இருக்குமானால், அந்த சாராயத் தொழிற்சாலையை அணுகுண்டு போட்டு அழித்திருப்பீர்கள். அதனுடைய தரம் அப்படிப்பட்டது. அதைக் குடிப்பவன் ஓராண்டுக்குள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படும் உத்தரவாதம் கண்டிப்பாக உண்டு. நான் தடம் புரண்டு போகிறேன். நான் செய்ய விரும்புவது, என்னுடைய சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெலுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கத்தான். அவருடைய God’s Little acre' என்ற நாவலுக்காக வழக்குப் போட்டதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியும். அதாவது நான் இங்கு சந்தித்த அதே குற்றச்சாட்டு: ஆபாச இலக்கியம்.

அங்கிள், என்னை நம்புங்கள். ஏழு சுதந்திரங்களையும் உடைய உங்களுடைய நாட்டில் அவருடைய நாவல் ஆபாசமானது என்று வழக்கு தொடரப்பட்டதைக் கேள்விப்பட்ட போது, நான் அதிர்ச்சியுற்றுப் போனேன். உங்களுடைய நாட்டில் அனைத்துமே அதனுடைய மறைப்புகள் அகற்றப்பட்டு, காட்சிப் பொருளாக வைக்கப்படுவதுதானே சகஜமானது. அது பழமாகட்டும். பெண்ணாகட்டும், இயந்திரமாகட்டும், மிருகங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், நாட்குறிப்புகளாகட்டும், நிர்வாணப் பொருட்களின் பேரரசர் நீங்கள் என்பதால் ஏன் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல் மீது வழக்குப் போட்டீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் மட்டும் நீதிமன்றத் தீர்ப்பை ஒரு ஓட்டு ஓட்டவில்லை என்றால் கால்டுவெல் வழக்குப் பற்றி கேள்விப்பட்ட அந்த கணத்திலே நான் அடைந்த அதிர்ச்சியில் எங்களுடைய உள்நாட்டு மதுவை மிக அதிக அளவில் குடித்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். ஒரு வழியில், என் போன்றவர்களை ஒழித்துக்கட்டும் சந்தர்ப்பத்தை இந்த நாடு இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அங்கிள், நான் அடித்தொண்டையிலிருந்து கத்தியிருந்தால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்க முடியாது. இயற்கையாகவே நான் மிகவும் கடமை உணர்வு கொண்டவன். என்னுடைய நாட்டை நான் நேசிக்கிறேன். கடவுளின் அருளால் இன்னும் சில நாட்களில் நான் இறந்துவிடுவேன். நான் என்னையே கொலை செய்து கொள்ளாவிட்டாலும், இன்று கோதுமை மாவு விற்கும் விலையில் வெக்கங்கெட்டவன் மட்டுமே அவனுக்கு இந்தப் பூமியில் விதிக்கப்பட்ட நாட்களை முழுமையாக வாழ முடியும்.

ஆக நான் கால்டுவெல் தீர்ப்பைப் படித்துவிட்டு, பெருமளவு உள்ளூர் சாராயத்தைக் குடித்து என் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தேன். அங்கிள், உங்களுடைய நாட்டில் எல்லாவற்றிலும் ஒருவித செயற்கை அலங்காரத்தன்மை உண்டு. ஆனால் என்னுடைய சகோதரன் கால்டுவெல்லை விடுவித்த நீதிபதியிடம் நிச்சயமாக எவ்வித செயற்கை அலங்காரத்தையும் காண முடியவில்லை. ஒரு வேளை அந்த நீதிபதி - என்னை மன்னிக்கணும், எனக்கு அவருடைய பெயர் தெரியாது; உயிரோடு இருந்தால் என் மதிப்பிற்குரிய வணக்கங்களை அவருக்குத் தெரியப்படுத்தவும்.

தீர்ப்பில் அவருடைய கடைசி வரிகள், அவருடைய அறிவார்ந்த தளத்தின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. அவர் எழுதுகிறார்: "இது போன்ற புத்தகங்களை ஒடுக்குவதின் மூலம் அந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுவல்ல என்றாலும், அது மக்கள் மத்தியில் அவசியமில்லாமல் ஆவலை உருவாக்கி, தேவையில்லாமல் காம உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பதையே என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நினைக்கிறேன். அமெரிக்க சமூகத்தில் ஒரு சாரார் பற்றிய உண்மையையே அவர் வெளிப்படுத்துகிறார் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். உண்மை என்பது எப்போதும் இலக்கியங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து."

என்னை தண்டித்த நீதிமன்றத்திலும் நான் இதையேதான் சொன்னேன் என்றாலும் அது எனக்கு மூன்று மாத கால கடுங்காவல் சிறை தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. என்னுடைய நீதிபதி உண்மையும் இலக்கியமும் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார். பெரும்பாலானோரும் இதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். நான் மூன்று மாத கால கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தயாராக உள்ளேன். ஆனால், நான் முந்நூறு ரூபாய் அபராதத்தைக் கட்டக்கூடிய நிலையில் இல்லை. அங்கிள், உங்களுக்குத் தெரியாது. நான் வறுமையில் இருப்பவன். கடின உழைப்பிற்கு பழக்கப்பட்டவன். பணத்திற்குப் பழக்கப்பட்டவன் இல்லை. எனக்கு முப்பத்தொன்பது வயசுதான் ஆகிறது. என் வாழ்க்கை முழுக்க நான் கடினமாக உழைத்துள்ளேன். இதை மட்டும் நினைத்துப் பாருங்கள். பிரபலமான எழுத்தாளனாக இருந்தும் என்னிடம் பேக்கார்ட் கார் கிடையாது.

என் நாடு ஏழ்மையில் இருப்பதால் நான் ஏழையாக இருக்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்று எப்படியோ சமாளிக்க முடிகிறது. ஆனால் என்னுடைய பல சகோதரர்கள் இவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் கிடையாது.

என் நாடு ஏழ்மையான நாடாக இருக்கட்டும். ஆனால் அது ஏன் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறது? அங்கிள், நான் நிச்சயமாகச் சொல்கிறேன் இதற்குக் காரணம் நீங்களும் உங்களுடைய சகோதரன் ஜான்புல்-ம் தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. காரணம் அது உங்களுடைய காதுகளுக்கு இனிமையான இசையாக இருக்காது. நான் உங்களை மதிக்கும் இளையவனாக இருப்பதால் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அப்படி இருக்கவே விரும்புகிறேன். என் நாடு இத்தனை பேக்கார்ட், பைக் மற்றும் மாக்ஸ் ஃபேக்டர் ஒப்பனையைக் கொண்டிருந்தாலும் ஏன் ஏழ்மையில் உள்ளது என்று நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுக் கேட்கலாம். அங்கிள், இது உண்மைதான். ஆனால் ஏன் என்ற காரணத்தை நான் சொல்லப் போவதில்லை. நீங்கள் உங்களுடைய இதயத்தைத் திறந்து பார்த்தால் உங்களுக்கே தெரியும். (உங்களுடைய அதி புத்திசாலி மருத்துவர்களால் உங்களுடைய இதயம் வெளியே எடுக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்)

பேக்கார்ட் மற்றும் பைக்கில் பயணிக்கும் என்னுடைய நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் உண்மையில் என்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்களில்லை. எங்கு என்னைப் போன்ற ஏழைகளும், என்னை விட ஏழைகளும் வாழ்கிறார்களோ அதுவே என்னுடைய நாடு. இவையெல்லாம் கசப்பான விஷயங்கள். ஆனால் இங்கு சர்க்கரைத் தட்டுப்பாடு உள்ளது. இல்லையென்றால் என்னுடைய வார்த்தைகள் மீது தேவைப்படும் அளவிற்குப் பூசியிருப்பேன். அதனால் என்ன? சமீபத்தில் நான் ஈவ்லின் வாக்கின் புத்தகம் ‘த லவ்ட் ஒன்ஸ்’ படித்தேன். அவர் உங்கள் நண்பரின் நாட்டைச் சேர்ந்தவர்தான். என்னை நம்புங்கள், உடனடியாக இந்தக் கடிதத்தை எழுத உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அந்தப் புத்தகத்தால் பாதிக்கப்பட்டேன்.

உலகத்தில் உங்களுடைய பகுதியில் பல மேதாவிகளைக் காண முடியும் என்று எப்போதும் பூரண நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்த பின் வாழ்க்கை முழுதும் அவருடைய விசிறியாகவே மாறிவிட்டேன் என்று சொல்லலாம். எத்தகைய செயல்! நான் சொல்கிறேன் உண்மையிலேயே அங்கு மிகவும் துடிப்புள்ள மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.

உங்களுடைய கலிபோர்னியாவில் இறந்தவர்களை அழகுபடுத்த முடியும் என்றும், அந்தக் காரியத்தைச் செய்வதற்குப் பல பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன என்றும் ஈவ்லின் வாக் தெரியப்படுத்துகிறார். நமது அன்புக்குரியவர் உயிரோடு இருக்கும்போது எவ்வளவு கோரமாக இருந்தாலும் இறந்த பின் அவர் ஆசைப்பட்ட அழகை அவருக்குக் கொடுக்க முடியும். சில படிவங்களில் உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். முடிக்கப்பட்ட பொருளின் தரம், சிறப்பானதாக இருக்கும் என்பது மட்டும் உத்தரவாதம்; தேவைப்படும் பணத்தை நீங்கள் கொடுக்கத் தயாராக இருக்கும்வரை. இறந்து போனவரை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் அழகுபடுத்த முடியும். இந்த நளினமான காரியத்தைச் செய்வதற்குப் பல நிபுணர்கள் உண்டு.

நம் அன்புக்குரியவரின் மோவாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய முகத்தில் அழகான புன்னகையை நட்டு வைக்க முடியும். அவருடைய கண் இமைகளைத் திறந்து வைப்பதோடு, நெற்றியைப் பார்ப்பதற்குப் பளபளவென்றும் மாற்றி அமைக்க முடியும். அதாவது இறந்தவர் கல்லறைக்குள் வைக்கப்பட்ட பின், அவருடைய கணக்கைத் தீர்ப்பதற்கு வரும் இரண்டு தேவ தூதர்கள் குழம்பிப் போகும் அளவிற்கு இவையெல்லாம் அவ்வளவு அற்புதமாக செய்து முடிக்கப்படும்.

அங்கிள், கடவுள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களுடைய மக்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. உயிரோடு இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதும், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகு படுத்தப்படுவதையும் ஒருவர் கேள்விப்பட்டிருக்கலாம். இங்கு அது பற்றி நிறைய பேச்சுகள் உண்டு. ஆனால் அது போலவே இறந்தவரையும் அழகு படுத்த முடியும் என்பதை இங்கு ஒருத்தரும் கேள்விப்பட்டதே கிடையாது. சமீபத்தில் உங்கள் நாட்டுப் பிரஜை ஒருவர் இங்கு வந்தார். சில நண்பர்கள் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது நான் சகோதரன் ஈவ்லின் வாக்கின் புத்தகத்தைப் படித்திருந்தேன்.

உங்கள் நாட்டைச் சேர்ந்தவருக்கு, அவர் புரிந்து கொள்ள முடியாத இரு வரி உருதுக் கவிதையைப் படித்துக் காண்பித்தேன். எப்படி இருந்தாலும் உண்மை என்னவென்றால், அங்கிள் நம்முடைய முகம் நமக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு அதைச் சிதைத்து விட்டோம். ஆனால் உயிரோடு இருந்ததைக் காட்டிலும் இறந்தபின் அழகுபடுத்துவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால் இந்தப் பூமியில் வாழ்வதற்கு உங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. மற்ற நாங்கள் எல்லோரும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களுடைய ஆகப் பெரிய உருதுக் கவிஞன் காலிப் நூறு வருடங்களுக்கு முன் எழுதினான்:

மரணத்திற்குப் பின் அவமானப்படுவது என் விதியாக இருந்தால்
என் முடிவைத் தண்ணீரில் மூழ்கி எதிர்கொண்டிருப்பேன்
அது என் சவ அடக்கத்தைத் தவிர்த்திருப்பதோடு
என் இறுதி ஓய்விடத்தில் தலை மீது கல்லேதும் விழுந்திருக்காது.

உயிரோடு இருக்கும்போது அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு காலிப் அச்சம் கொண்டது கிடையாது. தொடக்கத்திலிருந்து இறுதிவரை எப்போதும் அவன் அப்படிதான் இருந்தான். ஆனால் மரணத்திற்குப் பின் அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு அச்சம் கொண்டான். அவன் மிகவும் பண்பட்டவன். தன்னுடைய மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்று மட்டும் அவன் அச்சம் கொண்டிருக்கவில்லை, அவன் சென்ற பிறகு என்ன நடக்கும் என்று மிகத் தெளிவாகவும் உணர்ந்திருந்தான். அதனாலேயே அவன் தன்னுடைய மரணம் தண்ணீரில் மூழ்கி ஏற்பட்டால் சவ அடக்கமோ கல்லறையோ அவசியமில்லாமல் போகும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.

அவன் உங்களுடைய நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று எவ்வளவு அவா கொள்கிறேன். அவனது கல்லறைக்கு அவனை மிகப் பிரமாண்டமான ஊர்வலத்தில் எடுத்துச் சென்று, அவன் ஓய்வெடுக்கும் இடத்தில் வான் உயர கட்டிடத்தைக் கட்டியிருப்பீர்கள் அல்லது அவன் விருப்பம் சாத்தியப்பட்டிருந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் அவனது உடல் வைக்கப்பட்டு மிருகக்காட்சி சாலைக்கு மக்கள் சென்று வருவது போல, அவனைப் பார்க்கப் போயிருப்பார்கள்.

உங்களுடைய நாட்டில் இறந்த மனிதர்களை அழகுபடுத்தும் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் இறந்த மிருகங்களுக்கும் அது சாத்தியமாகும் என்று சகோதரர் ஈவ்லின் வாக் எழுதுகிறார். ஒரு நாய் ஒரு விபத்தில் தன்னுடைய வாலை இழந்துவிட்டால் அதற்குப் புதியதாக ஒரு வாலைப் பொருத்திவிடலாம்.

உயிரோடு இருக்கும்போது அதுக்கு எத்தகைய உடல்ரீதியான குறை இருந்தாலும், மரணத்திற்குப் பின் அதையெல்லாம் சரி செய்து விடலாம். பிறகு அது சடங்குகளோடு புதைக்கப்பட்டு மலர்வளையங்கள் அதன் கல்லறை மீது வைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் நம் அன்பிற்குரியது இறந்த தினத்தன்று அதனுடைய எஜமானனுக்கு இதுபோல் பொறிக்கப்பட்ட அட்டை ஒன்று அனுப்பப்படும்: “சொர்க்கத்தில் உங்களுடைய டாமி (அல்லது ஜெஃபி) அதனுடைய வாலை (அல்லது காதை) ஆட்டிக்கொண்டே உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறது’’

இவையெல்லாம் எதை உணர்த்துகிறது என்றால் எங்களைக்காட்டிலும் உங்களுடைய நாட்டில் நாய்கள் எவ்வளவோ நல்ல நிலையில் உள்ளது. இங்கு இன்று நீங்கள் இறந்தால் நாளை மறக்கப்பட்டு விடுவீர்கள். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்து போனால், உயிரோடு இருப்பவர்களுக்கு அது ஏற்படுத்திய பேரிழப்பால் இப்படித்தான் கதறுவார்கள்: “இந்தப் பாவப்பட்டவன் ஏன் இறந்தான்? அவனுக்குப் பதிலாக நானல்லவா இறந்திருக்க வேண்டும்’’. அங்கிள் உண்மை என்னவென்றால், எங்களுக்கு வாழவும் தெரியாது. சாகவும் தெரியாது. நான் இதையும் கேள்விப்பட்டேன்.

உங்களுடைய நாட்டுப் பிரஜை ஒருவர் அவர் இறந்த பின் எத்தகைய சவஅடக்கம் அவருக்குக் கொடுக்கப்படும் என்று தீர்மானமாகத் தெரியாததால், அவர் உயிரோடு இருக்கும்போது அவருக்கு சவ அடக்கம் எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்று நிகழ்த்திக் கொண்டாடினாராம். அவர் விருப்பப்பட்டால் ஒழிய எதுவுமே நடக்காத, செல்வம் கொழித்த, பகட்டான அவருடைய வாழ்க்கைக்கு இது தகுதியுடையதுதான். அவருடைய சவ அடக்கத்தில், காரியங்கள் சரியாகச் செய்யப்படாமல் போகும் சாத்தியங்களை அவர் ஒழித்துக் கட்ட விரும்பினார். உயிரோடு இருக்கும்போதே தன்னுடைய இறுதிச் சடங்குகளை அவரே நேராக நின்று பார்த்தது அவரளவில் நியாயமானதுதான். ஏனெனில் மரணத்திற்குப் பின் நடப்பவை எல்லாம் இங்கும் இல்லாதது; அங்கும் இல்லாதது.

நான் சற்று முன்தான் ‘Life’ (நவம்பர்-5 1951 சர்வதேச வெளியீடு) இதழைப் பார்த்தேன். அமெரிக்க வாழ்க்கை பற்றிய மிக முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். இரண்டு பக்கங்கள் விரிந்திருந்த அந்த விவரணை உங்கள் நாட்டின் ஆகச்சிறந்த கொள்ளைக்காரனின் இறுதிச் சடங்கை விவரித்திருந்தது. நான் வில்லிமொரீட்டியின் (அவனின் ஆன்மா சாந்தி அடையட்டும்) படத்தைப் பார்த்தேன்.

சமீபத்தில் $55,000க்கு விற்கப்பட்ட அவருடைய மிகப் பிரம்மாண்டமான வீட்டையும் பார்த்தேன். இந்த உலகத்தின் கவனச் சிதறல்களிலிருந்து தப்பிக்க அவன் வைத்திருந்த ஐந்து ஏக்கர் நிலத்தையும் பார்த்தேன். கண்கள் மூடியிருக்க இறந்து போனதுபோல் அவன் படுக்கையில் கிடந்த படத்தையும் பார்த்தேன். $5000 விலை நகைப்பெட்டியும், அவருடைய சவ அடக்கத்திற்கு எழுபத்தைந்து கார்கள் ஊர்வலமாக வந்த படங்களும் அதில் இருந்தது. கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன், அது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. என் வாயில் மண் விழட்டும். ஒருவேளை நீங்கள் இறக்க நேர்ந்தால், வில்லி மோரீட்டியை விட பிரம்மாண்டமான இறுதி ஊர்வலம் உங்களுக்கும் நடத்தப்பட வேண்டும்.

பயணம் செய்வதற்கு ஒரு மிதி வண்டி கூட இல்லாத ஏழ்மையில் இருக்கும் பாகிஸ்தான் எழுத்தாளனின் உண்மையான வேண்டுதல் இதுதான். உங்களுடைய நாட்டில் உள்ள தொலைநோக்குப் பார்வை கொண்டுள்ளவர்கள் போல், நீங்களும் உயிரோடு இருக்கும்போதே உங்களுடைய இறுதிப் பயணத்தைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். இதை நீங்கள் மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. எதையுமே தவறாகவே செய்யும் பழக்கமுடையவர்கள் இதிலும் தவறு செய்யக்கூடும். நீங்கள் இறந்தபின் உங்களுடைய உடல் தகுதியான அளவிற்கு அழகுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படாமல் போகலாம்.

இந்தக் கடிதம் உங்களிடம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே கூட உங்களுடைய இறுதி ஊர்வலத்திற்கு நீங்களே சாட்சியாக இருந்திருக்கக் கூடும். நீங்கள் எல்லாம் தெரிந்தவர் என்பதால் மட்டுமல்ல, நீங்கள் என்னுடைய தந்தையின் சகோதரர் என்பதாலும் தான் நான் இதையெல்லாம் சொல்கிறேன்.

என் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல்லுக்கும், அவரை ஆபாச வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரியப்படுத்தவும். நான் என்னை அறியாமல் ஏதாவது தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களின் ஏழைச் சகோதரனின் மகன்
சாதத் ஹசன் மண்ட்டோ
பாகிஸ்தானில் குடியிருப்பவன்
(இந்தக் கடிதத்திற்குப் போதுமான அளவு தபால்தலை இல்லாததால் தபாலில் சேர்க்க முடியவில்லை.)

2

31 லஷ்மி மேன்ஷன்,
ஹால்ரோடு,
லாகூர்.

என் மதிப்பிற்குரிய அங்கிள்,

வணக்கம்.

நான் சமீபமாக உங்களுக்கு ஏதும் எழுதவில்லை. உங்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றாலும் உங்கள் தூதரகத்திலிருந்து ஒரு நாகரிகமான மனிதர் - அவருடைய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, சில நாட்களுக்கு முன் உள்ளூர்க்காரர் ஒருவரோடு என்னைப் பார்க்க வந்தார். அந்த நாகரிகமான மனிதரோடு நடந்த உரையாடலின் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன்.

நாங்கள் ஆங்கிலத்தில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் ஆங்கிலம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கை முழுக்க என்னால் புரிந்து கொள்ள முடியாத, அமெரிக்க மொழி அல்ல அது.

நாங்கள் முக்கால் மணிநேரம் பேசினோம். ஒவ்வொரு அமெரிக்கனும், ஒரு பாகிஸ்தானியையோ, ஒரு இந்தியனையோ சந்திக்கும்போது சந்தோஷப்படுவது போலவே என்னைச் சந்தித்ததிலும் சந்தோஷப்பட்டார். அவரைச் சந்தித்ததில், எனக்குப் பெரும் மகிழ்ச்சி என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தேன். உண்மை என்னவென்றால், வெள்ளைக்கார அமெரிக்கர்களைச் சந்திப்பதில் நான் எப்போதுமே மகிழ்ச்சி அடைந்தது கிடையாது.

தயவு தாட்சண்யம் அற்ற என்னுடைய வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். போன யுத்த சமயத்தில், நான் பம்பாயில் இருந்தபோது ரயில் நிலையமான பம்பாய் சென்ட்ரலில் நான் என்னையே கண்டேன். அந்த நாட்களில் நகரம் முழுக்க எங்கு பார்த்தாலும் அமெரிக்கர்கள்தான். பாவப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களை எவரும் சீண்டவில்லை. பம்பாயைச் சேர்ந்த ஆங்கில-இந்தியப் பெண்மணிகள், யூதப் பெண்கள், பார்ஸி பெண்கள் நாகரிகம் என்பதால் கண்ட இடத்தில் படுத்தவர்கள் இப்போது ஒரு அமெரிக்கனோடு கைகோர்த்து நடப்பதைப் பார்க்க முடிந்தது.

அங்கிள், நான் சொல்வதை நம்புங்கள். உங்களுடைய படைவீரர்களில் ஒருவர் ஒரு ஆங்கில-இந்தியப் பெண்ணுடனோ, யூதப் பெண்ணுடனோ, பார்ஸி பெண்ணுடனோ, கைகோர்த்து பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கடந்து செல்ல நேர்ந்தால், அவர்கள் பொறாமையால் வெந்து எரிவதைப் பார்க்க முடிந்தது.

இந்த உலகத்தில் உண்மையிலேயே நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான மனிதர்கள்தான். எங்களுடைய படை வீரர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவில் பாதி அளவைக்கூட பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய அலுவலக உதவியாளனுக்குக் கூட மூச்சு முட்டும்வரை ஒரு வயிற்றை அல்ல, இரண்டு வயிறுகளை நிரப்பிக் கொள்ள முடிகிறது.

அங்கிள், நான் தவறாகப் பேசுவதற்கு மன்னித்துவிடுங்கள். ஆனால் உண்மையிலேயே இது மாபெரும் ஏமாற்றும் வேலை இல்லையா? இதற்கெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது? இதையெல்லாம் சொல்வதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், உங்கள் நடத்தைகள் எல்லாம் வேறு எதற்காகவும் அல்லாமல் ஒரே ஒரு குறிக்கோளை மட்டுமே கொண்டது: பகட்டாய் வெளிப்படுத்துவது. ஒருவேளை நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் தவறு செய்வது மனித இயல்புதானே! நீங்களும் மனிதர்தான் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையென்றால் அதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது.

நான் தடம் புரண்டு போகிறேன். பம்பாய் சென்ட்ரலில் உங்களுடைய படை வீரர்கள் பலரைப் பார்த்தது பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் என்றாலும் சில கருப்பர்களையும் எதிர்கொண்டேன். உண்மையைச் சொல்லத்தான் வேண்டும் என்றால், அந்தக் கருப்புப் படை வீரர்கள் வெள்ளைக்காரர்களைக் காட்டிலும் திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.

உங்களுடைய மக்கள் பெரும்பாலானோர் ஏன் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வெள்ளையர்கள் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் நீக்ரோ என்றழைக்கப்படும் கருப்பர்கள் கூட அதை அணிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் கண்ணாடி ஏன் தேவைப்படுகிறது? எனக்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. இப்படியும் இருக்கலாம். இவையெல்லாம் உங்களுடைய பெரிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். நீங்கள் ஐந்து சுதந்திரங்களைப் பெற்றுள்ளதால் உங்களால் சுலபமான நிரந்தரமான தூக்கத்திற்கு ஆளாகப்படுகிறவர்கள் - நீங்கள் அப்படி செய்வது உண்டுதானே, உங்களை உங்களுடைய கண்ணாடிகள் மூலம் மட்டுமே பார்க்கப்படுவதை நீங்கள் விரும்பியிருக்கலாம்.

பம்பாய் சென்ட்ரலில் நான் ஒரு நீக்ரோ படை வீரரைப் பார்த்தேன். அவருடைய புஜங்களின் உறுதியைப் பார்த்த அந்த கணத்திலேயே என் உயரத்தில் பாதியாக நான் சுருங்கிப்போனேன். எப்படியோ என் தைரியத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவரை நோக்கி நடந்தேன். அவர் முதுகைச் சுவரில் சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மூட்டை முடிச்சுகள் அவருக்கு அருகில் இருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன.

என்னுடைய காலணிகளைத் தரையில் தேய்த்து நான் சத்தம் எழுப்ப, அவர் கண்களைத் திறந்து பார்த்தார். நான் அவரிடம் ஆங்கிலத்தில், ‘நான் இவ்வழியே போய்க் கொண்டிருக்க, உங்கள் ஆளுமையில் மெய் மறந்து நின்றுவிட்டேன்’ என்றேன். பிறகு அவரை நோக்கி நட்புக்கரம் நீட்டினேன்.

கண்ணாடி அணிந்து கொண்டிருந்த அந்தப் படை வீரர், தன்னுடைய திடகாத்திரமான கையால் என் கையைப் பிடிக்க, என் கை எலும்புகள் சுக்குநூறாவதற்கு முன்பே என் கையை விடுவிக்குமாறு கெஞ்சினேன். அவருடைய கருத்த உதடுகளில் பெரிய புன்னகை தோன்றியது, அவர் என்னிடம், ‘நீங்கள் யார்?’ என்று சுத்தமான அமெரிக்க உச்சரிப்பில் கேட்டார்.

என் கையைத் தடவிக் கொடுத்தபடியே, ‘நான் இங்குதான் வாழ்கிறேன்’ என்றேன். மேலும், ‘நான் உங்களை இந்த நிலையத்தில் பார்த்தவுடன் ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது’ என்றேன்.

‘இங்கு நிறைய படை வீரர்கள் இருக்கிறார்கள். ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்டார்.

இது சிக்கலான கேள்வி என்றாலும் நான் சிரமப்படாமல் அதற்கு பதில் தந்தேன். ‘நான் கருப்பு நீங்களும் அப்படியே. நான் கருப்பின மக்களை நேசிக்கிறேன்’ என்றேன். மிகப்பெரிய சிரிப்பை வெளிப்படச் செய்தார். அவருடைய கருத்த உதடுகள் அவ்வளவு அழகாக இருந்தது. அதில் முத்தமிடவேண்டும் என்று தோன்றியது. கதை முற்றும்.

அங்கிள், உங்களுடைய பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். ‘பாத்திங் பியூட்டி’ என்ற உங்களுடைய திரைப்படம் ஒன்றை முன்பு ஒரு முறை பார்த்தேன். ‘இத்தனை அழகான கால்களை எங்கிருந்து எப்படி அங்கிள் ஒன்று திரட்டினார்' என்று என் நண்பர்களிடம் பின்னர் கேட்டேன். ஏறக்குறைய இருநூற்றி ஐம்பது கால்கள் அதிலிருந்தது என்று நினைக்கிறேன். அங்கிள் உங்கள் நாட்டில் பெண்கள் கால்கள் அப்படித்தான் இருக்குமா? அப்படி இருந்தால் கடவுள் புண்ணியத்தில் (அதாவது உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருந்தால்) குறைந்தபட்சம் அதை பாகிஸ்தானில் கண்காட்சியாக்குவதைத் தடுத்து நிறுத்துங்கள்.

இங்கு பெண்களின் கால்கள் உங்கள் நாட்டுப் பெண்களின் கால்களைவிட அழகாக இருப்பதுகூட சாத்தியம். ஆனால் அதை இங்கு யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. இதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாங்கள் எங்களுடைய மனைவிமார்கள் கால்களை மட்டுமே பார்த்திருக்கிறோம். மற்ற கால்கள் எல்லாம் எங்கள் பார்வைக்குத் தடை செய்யப்பட்டதாகும். உங்களுக்குத் தெரியும்தானே, நாங்கள் மரபைப் போற்றுபவர்கள்.

நான் மீண்டும் தடம் புரண்டு போகிறேன் என்றாலும் இம்முறை மன்னிப்புக் கோரப்போவதில்லை. ஏனெனில் இத்தகைய எழுத்துகள்தான் உங்களுக்குப் பிடித்திருக்கும். என்னைப் பார்க்க வந்த அந்த நாகரிகமான மனிதர், உங்களுடைய தூதரகத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி விட வேண்டும் என்று தோன்றுகிறது. அவளுக்காக ஒரு கதை எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். எனக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாததால், எனக்கு அதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் நான் அவரிடம், ‘சார் நான் உருது எழுத்தாளன். ஆங்கிலத்தில் எப்படி எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியாது’ என்றேன்.

“நான் உருது மொழியில் ஒரு பத்திரிகை கொண்டு வருவதால், எனக்கு உருதுக் கதைதான் வேண்டும்” என்று பதில் தந்தார். இதற்கு மேலும் விசாரிக்க விரும்பாததால், ‘நான் சம்மதிக்கிறேன்’ என்றேன்.

கடவுள்தான் என்னுடைய சாட்சி. உங்கள் உத்தரவின் பேரில்தான் அவர் என்னைப் பார்க்க வந்துள்ளார் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை உங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தை, இவருக்கு நீங்கள் படிக்க கொடுத்திருக்கலாம்.

இதையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். எத்தனை காலத்திற்குப் பாகிஸ்தானுக்கு உங்களுடைய கோதுமை தேவைப்படுகிறதோ, அதுவரை நான் உங்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்ள முடியாது. ஒரு பாகிஸ்தானி என்ற முறையில் (என்னுடைய அரசாங்கம் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்ட குடிமகனாக என்னைப் பார்க்கவில்லை என்றாலும்) நான் கடவுளிடம் இதைத்தான் வேண்டிக் கொள்கிறேன்.

உங்களுக்கு உண்ணத் தகுந்த கீரை வகைகளும் வரகு தானியமும் தேவைப்படும் காலம் ஒன்று வரும். அன்று நான் உயிரோடு இருந்தால் நிச்சயமாக அதையெல்லாம் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.

என்னிடம் கதை கேட்ட அந்த நாகரிகமான மனிதர், அதற்கு நான் எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறேன் என்று தெரிந்து கொள்ள விரும்பினார்.

அங்கிள், பொய் சொல்வது உங்களுக்கு சாத்தியமானது - நிஜமாகவே அப்படிச் சொல்வதோடு, அதை ஒரு கலையாகவே அதை மாற்றிவிட்டீர்கள். ஆனால் எனக்கு அப்படி செய்யத் தெரியாது.

இருந்தாலும் அன்றைய தினம் நான் பொய் சொன்னேன்.

‘என் கதைக்கு ரூபாய் இருநூறு கேட்கிறேன்’ என்றேன்.

உண்மை என்னவென்றால் இங்கு பெரும்பாலான வெளியீட்டாளர்கள் ஒரு கதைக்கு நாற்பது முதல் ஐம்பது ரூபாய் வரை தான் கொடுப்பார்கள். அதனால் என் கதைக்கு 200 ரூபாய் வேண்டுமென்று சொன்னபோது மிகவும் அசிங்கமாகவும், அவமானமாகவும் உணர்ந்தேன். ஆனால் எல்லாம் கடந்துவிட்டது.

அங்கிள், நான் அதிர்ச்சியடைந்த அதே அளவிற்கு நீங்கள் அனுப்பி வைத்த அந்த நாகரிகமான மனிதரும் அதிர்ச்சியடைந்தார். (இது உண்மையா அல்லது நடிப்பா என்று எனக்குத் தெரியாது) ‘வெறும் இருநூறு ரூபாய் தானா... நீங்கள் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயாவது கேட்க வேண்டும்’ என்று சொன்னார்.

ஒரு கதைக்கு ஐநூறு ரூபாய் கேட்கலாம் என்று அதிகபட்ச கற்பனையில்கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்பதால், அவர் பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. இருந்தாலும் நான் சொன்னதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதால், ‘இங்க பாருங்க சார்., இருநூறு ரூபாய்தான் இது சம்பந்தமாக இதற்கு மேலும் எந்தப் பேச்சு வார்த்தைக்கும் நான் தயாரில்லை’ என்று பதில் தந்தேன்.

நான் குடித்திருப்பதாக நினைத்து அவர் திரும்பச் சென்று விட்டார். நான் குடிக்கிறவன் தான். எதைக் குடிக்கிறேன் என்று என்னுடைய முதல் கடிதத்தில் விவரித்துள்ளேன். அங்கிள், இங்கு தயாரிக்கப்படும் அந்த விஷத்தைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாகக் குடித்துக் கொண்டிருந்தும், நான் உயிரோடு இருக்கிறேன் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எப்போதாவது இங்கு வர நேர்ந்தால் இந்தக் கேடுகெட்டதை உங்களுக்கும் குடிக்கக் கொடுக்கிறேன். நீங்களும் அதைக் குடித்துவிட்டு உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு என்னைப்போல் உயிரோடு இருக்கலாம்.

எப்படியிருந்தாலும் அடுத்தநாள் காலை நான் வராண்டாவில் சவரம் செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய இந்த நாகரிகமான மனிதர் மீண்டும் தோன்றி, "இங்கே பாருங்கள். இருநூறு ரூபாய்தான் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். முந்நூறு ரூபாயாவது வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்.

நான் நல்லது என்று சொல்லி அவர் கொடுத்த முந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டேன். அந்தப் பணத்தை என் சட்டைப்பையில் வைத்தபின் அவரிடம், ‘நான் உங்களிடம் நூறு ரூபாய் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எழுதுவது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. அதில் மாற்றங்கள் செய்யும் உரிமையும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்' என்றேன்.

இதற்குப் பிறகு அவர் என்னைப் பார்க்க வந்ததே கிடையாது. நீங்கள் அவரைச் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது உங்களிடம் அவருடைய அறிக்கையை சமர்ப்பிக்கும்போதோ உங்கள் பாகிஸ்தான் சகோதரரின் மகனுக்கு அதைத் தெரியப்படுத்துங்கள்.

அந்த முந்நூறு ரூபாயை நான் ஏற்கனவே செலவு செய்துவிட்டேன். உங்களுக்கு அந்தப் பணம் திரும்ப வேண்டும் என்றால், மாதத்திற்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் திரும்பக் கொடுத்து விடுகிறேன்.

உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

உங்களுக்குக் கீழ்ப்படிந்த
உங்கள் சகோதரனின் மகன்.
சாதத் ஹசன் மண்ட்டோ

3

31, லஷ்மி மேன்ஷன், 15, மார்ச் 1954
ஹால் வீதி, லாகூர்.

அன்புள்ள அங்கிள்,

வணக்கம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இதை எழுதுகிறேன். விஷயம் என்னவென்றால் நான் நோயுற்று இருந்தேன். எங்களுடைய கவித்துவ மரபில் நோய்க்கான மருந்து என்பது நீண்ட கழுத்துள்ள குவளையிலிருந்து, உமர்கயாமின் கவிதைகளிலிருந்து நேரடியாகத் தோன்றும் ஒயிலான கவர்ச்சி மங்கைகள், அருமருந்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் உள்ளது. இருந்தாலும் நான் இதையெல்லாம் வெறும் கவிதை என்றே நினைக்கிறேன். குவளையை ஏந்தி வரும் அழகு மங்கைகள் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இங்கு தாடி முளைத்த கோரமான வேலையாட்கள் கூட குவளை ஏந்தி வருவது கிடையாது.

இந்த மண்ணிலிருந்து அழகெல்லாம் ஓடோடி விட்டது. பெண்கள் முகத்திரைக்கு வெளியே வந்துவிட்டார்கள் என்றாலும், அவர்களுடைய முகத்தை ஒரே ஒருமுறை பார்த்தால் போதும், முகத்திரைக்குப் பின்னாலேயே அந்த முகங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களுடைய மாக்ஸ் ஃபேக்டர் அவர்களுடைய முகங்களை மேலும் கோரமாக்கிவிட்டது. இலவச கோதுமை, இலவச இலக்கியம், இலவச ஆயுதங்கள் என்று நீங்கள் அனுப்பி வைக்கிறீர்கள். மிகத் தூய்மையான இருநூறு அமெரிக்கப் பெண்மணிகளை நீங்கள் ஏன் இங்கு அனுப்பி வைக்கக்கூடாது? குறைந்தபட்சம் குடிப்பதற்கு எப்படி ஊற்றிக் கொடுக்க வேண்டுமோ அப்படியாவது அவர்கள் ஊற்றிக் கொடுக்கட்டும்.

நான் நோயுற்றுப் போக, அசாத்திய வேகம் கொண்ட அந்த மதுதான் காரணம் நான் கடவுளைச் சபிக்கிறேன். கலப்படம் ஏதும் இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்வதென்றால் - அது விஷம். எனக்கு ஏனென்று தெரியாததும் இல்லை. புரிந்து கொள்ள முடியாததும் இல்லை. ஆனால் கவிஞன் மீர் எழுதிய வரிகள் என் நிலைப்பாட்டிற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.

எவ்வளவு சாதாரணமானவன் இந்த மீர். மருந்து விற்பவனின் மகன்தான் அவனை நோயுறச் செய்தான்மருந்து விற்பவனின் மகன்தான் அவனுக்கு மருந்துகளை வாங்கி வர ஓடினான். எந்த மருந்து விற்பவனின் மகனால் அவன் நோயுற்றிருக்கிறான் என்று மீர் அறிந்திருந்தும், ஏன் அதே மருந்து விற்பவனின் மகனிடம் மருந்தை எதிர்பார்க்கிறான் என்று யாருக்குத் தெரியும். நான் எவனிடமிருந்து என் விஷத்தை வாங்குகிறேனோ அவன் என்னைக் காட்டிலும் மோசமாக நோயுற்றுக் கிடக்கிறான். நான் உயிரோடு இருப்பதற்குக் காரணம் கடின உழைப்புக்குப் பழக்கப்பட்டுப் போனதுதான். அவன் நிலையில் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.

மூன்று மாதங்கள் மருத்துவமனையின் பொது வார்டில் இருந்தபோது அமெரிக்காவிலிருந்து எந்த உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் நோயுற்று இருந்ததையே நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால் நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று டெராமைசின் புட்டிகளை எனக்கு அனுப்பி வைத்து, அதற்காக இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் நற்பெயரைப் பெற்றிருப்பீர்கள்.

அயல்நாடுகளில், எங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் செய்ய நிறைய இருக்கிறது என்றாலும் எங்களுடைய அரசாங்கம் எந்த நிலையிலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஓவியர்கள் மீது கொஞ்சமும் ஈடுபாடு காட்டப் போவதில்லை.

என்னால் நினைவில் கொண்டு வர முடிகிறது. புலம்பிக் கொண்டிருந்த எங்களுடைய முந்தைய அரசாங்கம் ஃபிர்தௌஸி -இ- இஸ்லாம் ஜூலந்தரியை மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று பாடல்களைப் பிரபலப்படுத்தும் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு அவருக்குக் கொடுக்கப்பட்டது எல்லாம் ஒரு வீடும் ஒரு அச்சு இயந்திரமும்தான். இன்று நீங்கள் செய்தித்தாள்களை விரித்துப் பார்த்தால் என்ன பார்க்க முடிகிறது?

பாகிஸ்தானுக்கு தேசியகீதம் உருவாக்க அமைக்கப்பட்ட குழுவிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டதால், ஹஸிப் ஜூலந்தரி புலம்பிக் கொண்டிருக்கிறார். உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாட்டிற்குத் தேசியகீதம் எழுதுவதற்கும், ஏன் அதை இசை வடிவில் கொடுப்பதற்கும் உள்ள ஒரே கவிஞர் அவர்தான். பிரிட்டிஷார் போய் விட்டதால் அவர் தன்னுடைய பிரிட்டிஷ் மனைவியை விவகாரத்து செய்துவிட்டார். இப்போது அவர் ஒரு அமெரிக்க மனைவியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கிள், கடவுளுக்குப் புண்ணியமாகட்டும். அவருக்கு இந்த விஷயத்தில் ஏதாவது உதவி செய்து, மிக மோசமான முடிவிலிருந்து அவரைக் காப்பாற்றுங்கள்.

உங்களுடைய சகோதரன் மகன்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், இந்த சகோதரன் மகன் போன்ற உண்மையானவனை நீங்கள் அணுகுண்டு வெளிச்சத்தில் கூட காண முடியாது. அதனால் நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். நான் வேண்டுவது எல்லாம் இதுபோல் ஒரு அறிக்கையை நீங்கள் வெளியிட வேண்டும்: ‘அதாவது உங்கள் நாடு (காலம் முடியும் வரை கடவுள் அதைக் காப்பாற்ற வேண்டும்) ஆயுதங்கள் கொடுத்து எங்கள் நாட்டிற்கு (இந்த நாட்டில் உள்ள மதுபான தயாரிப்பாளர்களை அந்தக் கடவுள் ஒழித்துக் கட்டட்டும்) உதவ வேண்டுமானால் சாதத் ஹசன் மண்ட்டோவை உங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்’.


ஒரே இரவில் என்னுடைய மதிப்பு எங்கோ போய்விடும். இந்த அறிவிப்புக்குப் பிறகு, நான் ‘ஷாமா’ மற்றும் ‘டைரக்டரி’யில் வரும் குறுக்கெழுத்துப் போட்டியை விளையாடுவதை நிறுத்திவிடுவேன். மிக முக்கியமானவர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவார்கள். உங்களுடைய வழக்கமான பல்லிளிப்பை ‘ஏர் மெயிலி’ல் எனக்கு அனுப்பி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதை என் முகத்தில் ஒட்ட வைத்துக்கொண்டு வருகிறவர்களை ஒழுங்காக அப்போதுதான் வரவேற்க முடியும்.

இது போன்ற பல் இளிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. உதாரணத்திற்கு, ''நீ கழுதை', ' நீ வழக்கத்திற்கு மாறாக அதி புத்திசாலி', 'எனக்கு மன அமைதியைத் தவிர வேறு எதுவும் இந்தச் சந்திப்பில் கிடைக்கவில்லை', 'நீ அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டி-சர்ட்', 'நீ பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி', நீ உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்து', 'நீ கோக்கோ-கோலா' இத்யாதி.. இத்யாதி...

பாகிஸ்தானில் நான் வாழ விரும்ப காரணம், பூமியில் இந்தத் துண்டுப் பகுதியை நான் நேசிக்கிறேன். இதிலிருந்து புறப்படும் தூசியெல்லாம் நிரந்தரமாக என் இதயத்தில் படிந்து விட்டது. இருந்தாலும் என் ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்கு உங்கள் நாட்டிற்கு வருவேன். என் இதயத்தைத் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் உங்கள் நாட்டு நிபுணர்களிடம் கொடுத்து அதையெல்லாம் அமெரிக்காவாக மாற்றிக் கொள்வேன். எனக்கு அமெரிக்க வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது.

உங்கள் டி-சர்ட் வடிவமைப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது. அது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதோடு விளம்பரங்களுக்கும் ரொம்பவும் உபயோகமானது. ஒவ்வொரு நாளும் அன்றைய பிரச்சார வரிகளை அதில் அச்சடித்து ஷ¨ஸானிலிருந்து காபி ஹவுஸ் முதல் சீன உணவகம் வரை போனால் அதில் உள்ள வரிகளை எல்லோரும் படிக்கலாம். டீ-சர்ட் போட்டுக் கொண்டு, நீங்கள் அன்பளிப்பாகக் கொடுத்த பைப்பை என் பற்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு, மாலுக்குப் போக எனக்கு பேக்கார்ட்டு வண்டியும் தேவை. என்னைப் பார்த்தவுடன் எல்லா முற்போக்கு மற்றும் முற்போக்கு அல்லாத எழுத்தாளர்கள் அனைவரும் அவர்களுடைய நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

ஆனால் பாருங்கள் அங்கிள், காருக்கு பெட்ரோலை நீங்கள்தான் வாங்கித் தர வேண்டும். இருந்தாலும் எனக்கு பேக்கார்ட்டு கிடைத்த அந்த நொடியிலேயே 'ஈரானின் ஒன்பது மணங்கு எண்ணெயும் ராதையும்' என்று கதை எழுதுவதாக உறுதிமொழி தருகிறேன். என்னை நம்புங்கள். அந்தக் கதை பிரசுரமாகும் அந்தக் கணத்திலேயே ஈரான் எண்ணெயோடு உள்ள எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பிறகு உயிரோடு இருக்கிற மௌலானா ஜபார் அலிகான் 'லாய்ட் ஜார்ஜும் எண்ணெயும்' என்ற கவிதையை மாற்றி எழுத வேண்டி வரும்.

நான் உங்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு விஷயம் குட்டிக் குட்டியான அணுகுண்டுகளை நீங்கள் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக நீண்ட நாட்களாக ஒரு நற்காரியம் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளேன். அது என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படுவது இயற்கையானதுதான்.

நீங்கள் எத்தனையோ நற்காரியங்கள் செய்திருக்கிறீர்கள். தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். ஹிரோஷிமாவை நிர்முலமாக்கினீர்கள். நாகசாகியை தும்பும் தூசுமாக்கினீர்கள். ஒவ்வொன்றும் அதனதன் வடிவில் என்று பல ஆயிரம் குழந்தைகள் ஜப்பானில் பிறப்பதற்குக் காரணமானீர்கள். எனக்கு வேண்டியதெல்லாம், எனக்குச் சில சலவை இயந்திரங்களை அனுப்பி வையுங்கள். இது அப்படித்தான்: இங்கு பல முல்லா வகையறாக்கள் சிறுநீர் கழித்த பிறகு ஒரு கல்லை எடுத்து, ஒரு கையை நாடா அவிழ்க்கப்பட்ட சல்வாருக்குள் விட்டு சிறுநீர் கழித்த பிறகு சொட்டக்கூடிய துளிகளைக் கல்லில் பிடித்து, அவர்கள் நடையைத் தொடருகிறார்கள். இதைப் பொதுவில் எல்லோரும் பார்ப்பது போல் செய்கிறார்கள். நான் விருப்பப்படுவது எல்லாம் அப்படி ஒருவன் தோன்றும் அந்த சமயத்தில் நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த அணுகுண்டை எடுத்து அவன் மீது வீச அந்த முல்லாவும் அவன் பிடித்துக் கொண்டிருக்கும் கல்லும் புகையாக மாற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

எங்களோடு நீங்கள் போட்டுள்ள இராணுவ ஒப்பந்தம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதை நீங்கள் அப்படியே தொடர வேண்டும். இந்தியாவோடும் இதற்குச் சமமான ஒன்றை நீங்கள் கையெழுத்திட வேண்டும். போன யுத்தத்தில் நீங்கள் உபயோகித்து இப்போது பயனற்று இருக்கும் ஆயுதங்களை எல்லாம் எங்கள் இருவருக்கும் விற்பனை செய்யுங்கள். இந்தக் குப்பைகள் எல்லாம் உங்களிடமிருந்து அகற்றப்படுவதோடு, உங்களுடைய ஆயுதத் தொழிற்சாலைகளும் இனிமேல் வேலையற்று இருக்காது.

பண்டிட் ஜவகர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு சூரிய ஒளியில் வைத்தவுடன் வெடிக்கும் துப்பாக்கி ஒன்றை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். நானும் காஷ்மீரைச் சேர்ந்தவன்தான். ஆனால் முசல்மான். அதனால்தான் எனக்கென்று சிறிய அணுகுண்டுகளைக் கேட்கிறேன்.

இன்னும் ஒரு விஷயம். எங்களால் அரசியல் சாசனத்தை உருவாக்க முடியவில்லை. அதனால் தயவுபண்ணி சில நிபுணர்களை அனுப்பி வையுங்கள். ஒரு தேசம், தேசியகீதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனம் இல்லாமல் இருக்க முடியாது - உங்களுடைய விருப்பமும் அதுவாக இருந்தால் மட்டும்.

இன்னும் ஒரு விஷயம். இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடன் ஒரு கப்பல் முழுக்கத் தீப்பெட்டிகளை எனக்கு அனுப்பி வைக்கவும். இங்கு தயாரிக்கப்படும் தீக்குச்சிகள் ஈரானில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளோடு உரசினால்தான் பற்ற வைக்க முடிகிறது. பாதிபெட்டி வரை உபயோகித்த பின், மிச்சத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகள் உதவியில்லாமல் உபயோகிக்க முடியாமல் வீணாகிறது. ஆனால் அது தீக்குச்சி போல் அல்லாமல் பட்டாசுபோல் நடந்து கொள்கிறது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மேலங்கி அற்புதமானது. அவை இல்லாமல் எங்கள் லண்டா பஜார் வெறிச்சோடிக் கிடக்கும். அங்கிள், நீங்கள் ஏன் எங்களுக்கு டிரவுசர்களையும் அனுப்புவதில்லை. நீங்கள் உங்கள் டிரவுசர்களைக் கழற்றுவதே கிடையாதா? அப்படி ஒருவேளை செய்தால், அதை இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள். இதிலும் ஒரு செயல்திட்டம் இருக்க வேண்டும். எங்களுக்கு டிரவுசர் இல்லாமல் மேலங்கியை மட்டும் அனுப்பி வையுங்கள். டிரவுசரை எல்லாம் இந்தியாவுக்கு அனுப்பி வையுங்கள். யுத்தம் என்று வந்தால் உங்களுடைய டிரவுசரும் மேலங்கியும் நீங்கள் கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு போரிட்டுக் கொள்ளும்.

சார்லி சாப்ளின் தன்னுடைய அமெரிக்கப் பிரஜா உரிமையைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கேள்விப்பட்ட விஷயம் என்ன? அந்தக் கோமாளி என்ன செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறான்? நிச்சயமாக அவன் கம்யூனிஸத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுக்க உங்கள் நாட்டில் வாழ்ந்தவன், பேரும் புகழும் பெற்றவன், பணமும் சம்பாதித்தவன், அவன் செய்தது போல் செய்திருப்பானா? எவராலும் கவனிக்கப்படாமல் லண்டன் தெருக்களில் பிச்சை எடுத்துத் திரிந்ததை அவன் மறந்துவிட்டான் போலும்!

அவன் ஏன் ருஷ்யாவிற்குப் போகவில்லை? ஆனால் அங்குதான் கோமாளிகளுக்குப் பஞ்சமே இல்லையே. அவன் இங்கிலாந்துக்குத்தான் போக வேண்டும். அப்போதாவது அங்குள்ளவர்கள் அமெரிக்கர் போல் வாழ்க்கையில் வாய்விட்டுச் சிரிக்கக் கற்றுக் கொள்ளட்டும். தற்போதைய நிலையில் அவர்கள் எப்போதும் துயரம் நிறைந்தவர்களாகவும், தற்பெருமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய போலித்தன்மைகளில் சிலவற்றைக் கிழித்து எறிவதற்கு, இதுதான் சரியான சந்தர்ப்பம்.

ஹெட்டி லாமருக்கு காற்றில் ஒரு சுதந்திரமான முத்தம் கொடுத்து நான் இந்தக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.

உங்கள் சகோதரனின் மகன்
சாதத் ஹசன் மண்ட்டோ.

குறிப்புகள்:

1. ஹஸிப் ஜுலந்தரி - சுதந்திரத்திற்கு முன் மிக முக்கியமான உருதுக் கவிஞர். ஷாநாமா -இ-இஸ்லாம் என்ற இஸ்லாமிய வரலாறு பற்றிய காவியப் படைப்பின் மூலம் பிரபலமானவர். ஷாநாமா என்ற காவியத்தைப் படைத்த பாரசீகக் கவிஞன் ஃபிர்தௌசிக்கு சமமாக ஒப்பிடக்கூடியவர். ஹசீஃப் பிரபலமாக ஃபிர்தௌசி -இ- இஸ்லாம் என்று அழைக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் தேசியகீதம் எழுதும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட அவரும் அதைச் செய்து முடித்தார். இருப்பினும் தன்னுடைய திறமைக்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற மனவருத்தம் அவருக்கு இருந்தது. அவரை மனிதனாகவோ, கவிஞனாகவோ மண்ட்டோ ஏற்றுக் கொள்ளவில்லை.

2. டெல்லியிலிருந்து வெளிவந்த 'ஷாமா', லாகூரில் இருந்து வெளிவந்த 'டைரக்டர்' இரண்டும் பிரபலமான உருதுப் பத்திரிகைகள். அச்சமயத்தில் இப்பத்திரிகைகள் குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தி நிறைய பணத்தைப் பரிசாகக் கொடுத்தது.

3. ஸெலின் காப்பி ஹவுஸ், பாக் டீ ஹவுஸ், செனே உணவகம் எல்லாம் லாகூரில் உள்ள மாலில் உள்ள பிரபலமான உணவகங்கள். எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் அங்கு ஒன்று கூடுவது வழக்கம். பாக் டீ ஹவுஸ் மட்டுமே பெரும் நஷ்டத்தில் இருந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

4. மௌலானா ஜாஃபர் அலிகான்: கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். 'ஜமீன்தார்' என்ற செய்தித்தாளை நிறுவியவர். 1950களில் இறந்து போனார்.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...