கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Friday, October 30, 2009
மறுசிந்தனை,மறுவிளக்கம்,கோட்பாடுகள்
அகயதார்த்தவாதம்
கட்டுப்பாடுகளை நீக்குங்கள் தருக்க ஒழுங்கமைப்பு முயற்சியினால் ஆழ்மனத்தின் மழலைகளைத் தடுக்காதீகள் - பாரம்பரியமான மொழிவெளிப்பாடுகளுக்குத் தலைகுனிந்து ஆழ்மனத்தை இடக்கி ஒடுக்காதீர்கள் - என்றவாறு முன்மொழியப் பெற்ற குரல்கள் அகயதார்த்த வாதத்தின் வெளிப்பாடுகளாயின.
அகயதார்த்தவாதம் என்பது “சர்றியலிசம்” எனவும் அழைக்கப்படும். மருத்துவ உளவியல் மாணவராகிய அன்றே பேற்றன் (1896 - 1966) இவ் வாதத்தின் குரலை உரத்துக் கூறினார்.
உள்ளத்தைத் தன்னியக்கமாக வெளிக்காட்டுதல், அழகியல் நோக்குடன் வெளிக்காட்டுதல் என்பவை இவ்வாதத்தின் இலக்குகளாயுள்ளன. காரணங் காணுதல் என்ற செயற்பாடு மேலோங்கும் பொழுது, ஆழ்மனத்தின் கோலங்கள் கட்டற்ற முறையிலே வெளிவராதிருத்தலை அகயதார்த்தவாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கனவுகளுக்கு விளக்கமும் வியாக்கியானமும் கண்டறியப்படாது, கனவுலகிற் சஞ்சரிக்கும் சுதந்திரத்தையும் குதூகலத்தையும் அகயகார்த்தம் வலியுறுத்துகின்றது. கலைகளும் இலக்கியங்களும் இந்த அனுபவத்திற் சஞ்சரித்தலை இவ்வாதம் முன் மொழிகின்றது.
ஆராய வேண்டாம்: ஆலோசித்து ஒழுங்கமைக்க வேண்டாம்: அப்படியே ஆழ்மனத்தை தூரிகையோடும் பேனாவோடும் இணைத்துவிடுங்கள்: அங்கேதான் கலையழகும் கவினுலகும் காணப்படுமென்பது அகயதார்த்த வாதத்தின் ஆதங்கம்.
சமூக இருப்பை மறந்து அகத்தைத் தனிப் பொருளாகவும், புறதாக்கு விசைகளுக்கு உள்ளாகாத பொருளாகவும் கருதுதல் இக்கோட்பாட்டின் பலவீனப் புள்ளிகளாகும்.
அகவயமான திறனாய்வு
இது வாசகர் துலங்கள் விமர்சனம் என்று கூறப்படும். டேவிட் பெலிஸ் (1978) ஸ்ரான்லிஃபிஸ் (1971) நோர்மன் கொலன்ட் (1980) முதலியோர் இந்த விமர்சன முறையை விளக்கினர். கலைப்படைப்பு என்பதல்ல அதனைச் சுவைக்கும் சுவைஞனது அழுத்தங்களே இந்த விமர்சனமுறையில் வலிதாக முன்வைக்கப்படும். சுவைஞர் தமது மனவெழுச்சிகளுக்கேற்பவும், அனுபவத்தளம்பல்களுக்கேற்பவும் வேறுவேறுபட்ட பொருள் கொடலைத் தரமுடியும். கலைப்படைப்பு என்பது அனுபவங்களின் சலனமாகவே கொள்ளப்படும்.
சுவைஞரின் அனுபவமே விமர்சனத்தின் பொருளாகின்றது. அதுவே படைப்பின் வடிவத்துக்குச் சமனாகின்றது. சுவைஞர்கள் பெறுகின்ற கல்வி, பட்டறிவு, பயிற்சி முதலியவை, கலைப்படைப்புக்கு வௌ;வேறுபட்ட விளக்கங்களைத் தரும். இந்த அணுகுமுறையில் படைப்புக்குப் புறம்பாக நின்று அல்லது வெளியே நின்று விமர்சிப்பதற்கு இடம் தரப்படுவதில்லை. கலைப்படைப்பினுள் இயங்கும் பாத்திரங்களாக விமர்சகர் மாறிவிடுவர். பாத்திரங்களுடன் ஒன்றித்தலும், நிகழ்ச்சிகளுடன் இரண்டறக்கலத்தலும் இந்த அணுகு முறையில் வற்புறுத்தப்படுகின்றது.
கலை இலக்கியப் படைப்புகளை அகவயமாக மதிப்பீடு செய்தல், புறவயமாக மதிப்பீடு செய்தல் என்ற இரண்டு அணுகுமுறையிலும் எது வலிமை கூடியது என்ற கேள்வி கலை இலக்கிய ஆய்விற் பொருத்தமற்றதாகிவிடும். ஏனெனில் கலை இலக்கியங்களின் பலமும் பலவீனமும், இந்த இடர்ப்பாடுகளில் இருந்துதான் தோன்றுகின்றன. அகவயமான ஈடுபாட்டை மேலும் பலபடிகள் நகர்த்த, ஆன்மீக ஈடுபாடும் ஆன்மீக வெளிப்பாடும் என்று கூறுதல் கீழைத்தேயக் கலை இலக்கிய அணுகுமுறைகளிலே காணப்படுகின்றன.
அபத்த இலக்கியம்
“அபத்தப் புனைகதைகள்”, “அபத்த அரங்கு” என்பவை கலை இலக்கியங்களிலே எடுத்தாளப்படும் தொடர்களாயுள்ளன. அபத்தம் என்பது “அனர்த்தம்” என்றும் “அப்சேர்ட்” என்றும் குறிப்பிடப்படும்.
சஞ்சலமும், விரக்தியும், முரணிசைவுகளும் கொண்ட மனித வாழ்வின் ஏனோ தானோ என்ற உணர்வுகளை அபத்த இலக்கியம் வெளிப்படுத்துகின்றது.
நோக்கமற்ற வாழ்க்கை, குறிக்கோளில்லாத செயற்பாடுகள் இலக்கற்ற நடவடிக்கைகள் முதலியவற்றை அபத்தம் புலப்படுத்தும். எதிர்ப்பண்புஇலக்கியம், எதிர்நிலையான பாத்திரவார்ப்பு, எதிர்பாராததும், எதிர் நிலையானதுமான சம்பவங்கள் முதலியவை அபத்த இலக்கியங்களிலே காணப்படும். வெகுவாகத் தனிமைப்பட்டு நிற்கும் மனிதவடிவங்கள் பாத்திரங்களாகக் காட்டப்படும்.
இயற்கையின் பொருண்மை கொண்ட தொடர்புகள் இவ்வகை இலக்கியங்களிலே புறக்கணிக்கப்படுகின்றன. பிரபஞ்சக் கட்டமைப்பை உடைத்தெறியும் புனைவுகள் இடம்பெறும்.
ஐறிஸ் நாவலாசிரியராகிய சாமுவேல் பெக்ற் என்பவர் அபத்தப் பண்பை இலாவகமாக சித்தரித்த எழுத்தாளராவர்.
அபத்த எழுத்தாக்கங்களில் உரையாடல் திரும்பத் திரும்ப ஒப்புவிக்கப்படும். கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமையும். மொழி நடையும் அபத்தமுடையதாகக் காட்டப்படும். பிரெஞ்சு நாவலாசிரியராகிய அல்பேட் கமெஸ் (1913 - 1960) நாசி யுத்தக் கொடுமைகளை நேரிலே கண்டு அனுபவித்தவர். பகுத்தறிவற்ற வாழ்க்கையின் ஏமாளித்தனங்களை அவர் தமது ஆக்கங்களிலே கச்சிதமாகப் புனைந்தார்.
சமூக முரண்பாடுகள் பற்றிய ஆய்வு அபத்தத்தை வெளிப்படுத்துமாயினும், அபத்தவாதிகள் முரணியலை ஆழ்ந்து நோக்கியதாகத் தெரியவில்லை.
அமைப்புவாதம்
இது “கட்டமைப்புவாதம்” என்றும் “ஸ்ரக்சுரலிசம்” என்றும் அழைக்கப்படுகின்றது. இந்நூற்றாண்டில் வளர்ச்சி பெற்ற கலை இலக்கிய வாதங்களுள் இது சிறப்பிடம் பெறுகின்றது.
வெறும் உருவ வாதத்திலிருந்து அமைப்புவாதம் வேறுபடுகின்றது. அமைப்பு என்பது ஓர் ஒழுங்கு முறையின் இயக்கத்தையும், முழுமையையும் குறிப்பிடுகின்றது. ஒரு முழுமையின் உள்ளுறுப்புக்கள் பல தளங்களிலே தம்முன் உறவு கொண்டிருப்பதை விளக்குவதே அமைப்பு வாதம் என லுயி அல்துஸர் விளக்கம் தந்தார்.
கலைகள், இலக்கியம், உளவியல், மானுடவியயல், மொழியியல், மெய்யியல், அரசியல் போன்ற பல்வேறு துறைகளிலும் புதியதோர் அணுகுமுறையில் ஆய்வுகளை மேற்கொள்ள வைக்கும் உபாயமாக அமைப்பியல்வாதம் விளங்குகின்றது. பண்பாட்டு நிலைப்பட்ட கருத்துருவ அரசுச் சாதனத்திற் பல்வேறுபட்ட கலை இலக்கியச்செயல் ஒழுங்கமைப்புகள் காணப்படுமென இவ்வாதம் விளக்கும்.
குறித்தவொரு வரலாற்றுக் காலகட்டத்தில் அபிவிருத்தியடைந்த ஓர் அமைப்பு என்ற வரலாற்றுத் தொடர்ச்சியையும் தேவையையும் அமைப்பியல்வாதம் அணுகத் தவறிவிடுகின்றது. இதற்கு மாறாக ஓர் அமைப்புக்குரிய மூலக்கூறுகளின் உள்ளாந்த தொடர்புகளை அமைப்பியல்வாதம் நோக்குகின்றது.
மார்க்ஸியத்தின் சமூக அணுகுமுறையை, கலை இலக்கியங்களுக்கும் பயன்படுத்த வேண்டுமென அமைப்புவாதம் வாதாடவில்லை. பொருளாதார சமூக அணுகுமுறைகளிலிருந்து இலக்கிய அணுகுமுறை வேறுபட்டதென்றும், தனிச்சிறப்பான விதிகளுக்கு உட்பட்டதென்றும் அமைப்புவாதிகள் விளக்க முனைகின்றனர். மறுபுறம் மார்க்ஷியம் மட்டுமே உலகை அமைப்புக்களாய் ஆராய்கின்றது என மார்க்ஸின் ஆய்வைக் குறுக்கிவிடவும் அமைப்புவாதம் முயல்கின்றது என்ற விமர்சனமும் முன்மொழியப்படுகின்றது.
அமைப்பியல்
விமர்சனம்
இது ஸ்ரக்சரலிற் கிறிற்றிசிசம் என்றும் கட்டமைப்புத் திறனாய்வு என்றும் கூறப்படும். றோமன் ஜக்கோபசன் (1972) றொபற் ஸ்கொலஸ் (1974) ஜொனாதன் கல்லர் (1975) முதலியோர் அமைப்பியல் விமர்சனம் தொடர்பான ஆக்கங்களை வெளியிட்டனர்.
இலக்கியப் பிரதியை வியாக்கியானம் செயவதற்கு அடிப்படையானதும் நுட்பமானதும் என்று கொள்ளப்படுகின்ற மொழி விதிகளை ஒருவர் அறிந்திருத்தல் அவசியம் என்று கொள்ளப்படுகின்றது. மொழியின்றி இலக்கியம் இல்லையாதலால் இலக்கிய விமர்சனம் செய்வோர் மொழியின் அமைப்பியலை அறிந்து கொள்ளவேண்டும். “என்னை நன்றாக இறைவன் படைத்தனம் - தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்ற தொடரும் மொழியின் தொடர்பை வெகு நுண்ணியதாகச் சுட்டிக் காட்டுகின்றது.
அருவமான விதிகளை உள்ளீடாகக் கொண்ட இலக்கணக் கட்டமைப்பை ஒவ்வோர் இலக்கியப் பிரதியும் கொண்டுள்ளது. ஆகவே இலக்கிய விமர்சனத்தில் குறித்த படைப்பினது பின்புலமாக அமைந்த மொழிச் செயலமைப்பை விளங்கிக் கொள்வதும், வியாக்கியானம் செய்வதும் முதன்மை பெறுதல் வேண்டும். “இலக்கணங் கண்டு இலக்கியம் விளக்கல்” என்று கூற வந்த கருத்தை மேலும் ஒருபடி முன்னேற்ற முயல்வது அமைப்பியல் விமர்சனமாகும். மொழியின் முழுமையான இயல்பை விளங்கிக் கொள்ளவோ, விமர்சனம் செய்யவோ இயலாது என அமைப்பியல் விமர்சனம் வலியுறுத்துகின்றது. “உளமொழி இயல்”, “சமூக மொழி இயல்” போன்ற துறைகளில் ஆய்வுகளும் இதனால் விரிவு பெறுகின்றது.
அழகியல் நயப்பு
கலைப் பொருளோடு இணைந்த கருத்துடன் இது தொடர்புடையது. கலைப்பொருளும் கருத்தும் நயப்பவரின் மனவெழுச்சிகளைத் தூண்டுகின்றன. இந்த உளநிலை குறித்த கலைப்பொருளைத் தந்த கலைஞனது தனித்துவத்தையும், ஆக்கத்திறனையும் உணர்த்துகின்றன. இவையனைத்தினதும் ஒன்றிணைந்த முழுமையில் ஈடுபடல் அழகியல் நயப்பு என்று கொள்ளப்படும்.
பல்வேறு தளங்களில் அழகியல் நயப்பு இடம்பெறுகின்றது. இவற்றுள் முதலாவதாக இடம்பெறுவது இணைப்பு வகையான நயப்பு என்று கூறப்படும். மனவெழுச்சிகளை தூண்டக்கூடிய அனுபவ இணைப்பைக் கலைப்பொருள் கொண்டிருக்குமாயின் அவை நயத்தை ஏற்படுத்த முடியும். அழகுப் பொருளை தமக்குரிய தனித்துவங்களுடன் தொடர்பு படுத்துவதால் ஏற்படும் மன நிறைவு சார்ந்த நயப்பு இன்னொரு தளமாகும்.
கலைப்பொருளின் பண்புகளை அறிவின் அடிப்படையிலே புறநிலையாக ஆராய்வதனால் ஏற்படும் நயப்பு பிறிதொரு தளமாகும். ஒழுக்கப் பண்பு வகையில் அழகுப் பொருளைச் சுவைத்தல் மற்றொரு தளமாகும். தாம் உயர்நிலையாகக் கருதும் விழுமியங்களும், ஒழுக்கங்களும் அழகுப் பொருளிலே பிரதிபலிப்பதால் அவற்றை நயப்போரும் உளர்.
அழகியல் நயப்பு “அழகுணர்திறன்” என்றார் குறிப்பிடப்படும். இதனைக் கல்வியாலும் பயிற்சியாலும், மேலும் மேலும் வளர்த்தெடுக்க முடியும். வெகுசனப் பண்பாடும், வெகுசன எழுத்தாக்கங்களும் மலினமடைந்த அழகியல் நயப்பை வளர்க்க முனைவதுடன், தாம் உருவாக்கிய மட்டரகமான சுவையைப் பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்றும் அத்தகைய தளத்திலேயே ஆக்கங்களைத் தரவேண்டுமென்றும் நியாயப்படுத்த முனைகின்றன.
அன்னியமாதல்
உற்பத்தி உறவுகளின் புறக்கணிப்புக் காரணமாகத் தனிமனிதரிடத்து எழும் அவலம் நிரம்பிய உளவியல் உணர்வே அன்னியமாதல் ஆகும். சுரண்டற் கோலங்கள் தனிமனித உணர்வுகளை சிதறடித்துவிடுகின்றன. ஒன்றுபட முடியாத தொழிற்பிரிவும், செல்வப் பகிர்விலே சமத்துவமின்மையும் தனிமனித உணர்வுகளைத் துளையிட்டு விடுகின்றன.
திட்டமில்லாத நகர வளர்ச்சியும், எதிர்காலம் பற்றிய உறுதியின்மையும், சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாத அவலங்களும் அன்னியமாகும் உணர்வுகளுக்குத் தூபமிடுகின்றன.
இன்றைய உற்பத்தி முறையும், அதனோடு இணைந்த நவீனத்துவமும் குடும்பச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தி வருவதால் அன்னியமாதல் முளைத்தெழுகின்றதென்ற கருத்தும் உண்டு. அன்னியமாதலை குழுநிலைப்பட்ட செயற்பாடாகவும் சில ஆய்வாளர் கருதுகின்றனர்.
மனிதன் தனது தொழிற்பாடுகளிலிருந்து பிரிந்து நிற்கின்றான்: தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்திலிருந்து விலகி நிற்கின்றான். தனது உறவு நிலைப்பாட்டோருடன் கூட ஒன்றிணையாது தொலைவில் நிற்கின்றான்: இவை அன்னியமாதலின் வெளிப்பாடுகள்.
தனி மனிதனிடத்து ஏற்படும் இந்த உள நோய் அன்னியமாக்கப்பட்ட உழைப்பிலிருந்து பிறக்கின்றது. இலக்கி;யங்களும், அன்னியமாதலும் தொடர்பான கருத்துக்களை விளக்கும் பொழுது, அன்னியமாகிய எழுத்தாள் அன்னியமாகிய உணர்வுகளை, அன்னியமாகிய கதாபாத்திரங்களினூடாக, அன்னியமாகிய வாசகர்களுக்கு வழங்குகின்றான் என்று கூறப்படுதலுண்டு.
உளநோயைக் காட்டுவர் மட்டும் இலக்கியமன்று: அதனை மாற்றியமைப்பதற்குரிய செயற்பாடுகளோடும் இலக்கியம் இணைந்து கொள்ளவேண்டும் என்ற கருத்து அன்னியமாதல் தொடர்பான சமூக உளவியல் அணுகுமுறைகளிலே வற்புறுத்தப்படுகின்றது.
அறச்சார்புவாதம்
இவ்வாதம் ஈஸ்ரன் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை “மோறல்றிலேற்றிவிசம்” எனவும் அழைப்பர்.
குறித்த ஒரு வரலாற்றுச் சூழலில் முகிழ்த்தெழுந்த விழுமியங்கள் பிறிதொரு வரலாற்றுச் சூழலுக்கு பொருந்தும் என்று கொள்ளமுடியாதென ஈஸ்ரன் வற்புறுத்தினார். முன்னைய சமூகத்தின் விழுமியங்களை பின்னைய சமூகத்துக்குப் பொருந்துமென்று கொள்ள முடியாது.
கலை, இலக்கியங்கள் விழுமியங்களைப் புனைந்து காட்டுகின்றன. தனி மனிதனது அல்லது குழுவினது அனுபவங்களின் அடிப்படையாக விழுமியங்கள் அல்லது பெறுமானங்கள் அமைகின்றன. விழுமியங்கள் அரசியல் பொருளாதார சமூக நிபந்தனைகளுக்குரியவை.
இவ்வாதத்தின் அடிப்படையாகப் பார்க்கும்பொழுது திருக்குறள், சிலம்பு போன்ற குறித்த வரலாற்றுச் சூழலில் விளக்கப்பெற்ற இலக்கிய விழுமியங்கள் இன்றைய சூழலுக்குப் பொருந்தும் என்று திடப்படுத்த முடியாது. விழுமியங்கள் அமரத்துவம் கொண்டவையன்று. அவை ஒப்புநோக்கக்கூடியவை: சார்புடையவை: அமரத்துவம் அற்றவை.
இலக்கிய ஆய்வாளர்கள் விழுமியங்களைப் பகுத்தாராய்வோராக மாத்திரமன்றி, அவற்றைக் கட்டியெழுப்புவோராயும் இருத்தல்வேண்டும். தேவைக்கேற்றவாஞம், உடனடிப் பிரச்சினைகளுக்கேற்றவாறும், இலக்கியங்கள் விழுமியங்களை மீள ஒழுங்குபடுத்துதல் வேண்டும்.
புதிய புதிய நிலைமைகளுக்கேற்றவாறு புத்தூக்கம் தரும் விழுமிய ஒழுங்கமைப்புகளைத் தருதல் வேண்டுமென அறசார்புவாதம் வலியுறுத்துகின்றது.
ஆக்கம் சார் அறவியல்
ஆக்கம் என்பதையும் நன்மை என்பதையும் ஒன்றாகக் காணல் ஆக்கம் சார் அறவியலாகக் கொள்ளப்படும். இந்த நெறியை “கிறியேற்றிவ் மோறாலிற்றி” என்றும் அழைப்பர். படைப்பு நிலைப்பட்ட அறவியல் என்றும் இதற்கு விளக்கம் தரலாம்.
கலைப்பொருள் ஒன்றிணைப் படைக்கும் பொழுது அதில் உட்பொதிந்துள்ள ஆக்க உணர்வு ஒரு நல்ல செயலைப் புரியும் பொழுதும் காணப்படும் என இக்கொள்கையாளர் குறிப்பிடுவர். கலைப்பொருளின் முழுமையில் அதன் நலனும் சிறப்பும் ஒன்றிநை;திருககும். அவ்வாறே ஒரு நல்ல செயலின் கூட்டுமொத்தமான வடிவில் அதன் நற்பேறு அடங்கியிருக்கும்.
வெறும் வாய்ப்பாடுகளுக்கும் சூத்திர விதிகளுக்கும் உட்பட்டு ஒரு சிறந்த இலக்கியத்தைப் படைத்து விட முடியாது. இதுவரை கூறப்படாத ஓர் ஒப்பற்ற படைப்புத்திறனை வெளிப்படுத்துவதன் வாயிலாகவே சிறந்த இலக்கியத்தைச் சிருஷ்டிக்க முடியும். அதுபோன்று அறச்செயலும் வெறும் பொது விதிகளுக்குக் கட்டுப்படுவதால் மட்டும் சிறப்புப் பெற்றுவிட முடியாது. தெளிவும், விளக்கமும் கொண்ட நிலையில் மேன்மைமிக்க உயர்நிலையான ஒரு செயலைச் செய்வதே அறவியலிற் பாராட்டப்படுவதாக அமைகின்றது.
நல்ல நடத்தைகளைக் கருத்திற்கொள்ளும்பொழுது அதன் அறப்பண்புகளைக் காட்டிலும் அதில் அமைந்துள்ள அழகே மனங்கொள்ளப்படவேண்டுமென பேர்டேவ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அறக்கொள்கைகளின் வளர்ச்சியில் அழகு பற்றிய அணுகுமுறைகள் சிறப்பிடம் பெறத்தொடங்கியுள்ளன. மேலும், படிமலர்ச்சிக் கோட்பாட்டில் அழகுசார் ஆக்கப் பண்பு உள்ளமைந்தமையை இன்றைய ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர். நுண்கலைகளுக்கும், நல்லறத்துக்கும் ஒப்புமை காணப்பட்;டாலும் வேறுபட்ட பண்புகள் காணப்படுவiயும் மனங்கொள்ளல் வேண்டும்.
ஆசிய முறைமை
சாதி முறையை, குடும்ப உறவுகளின் வைராக்கியம் முதலியவை எமது எழுத்தாக்கங்களில் மேலோங்கிய தொனிப்பொருள்களாகும். இவை பற்றிய சமூகவியல் நிலைப்பட்ட விளக்கத்தைப் பெற “ஆசிய முறைமை” பற்றி அறிந்துகொள்ளவேண்டியுள்ளர். “ஆசிய முறைமை” என்பது “ஏஸியாற்றிக்மோட்” என்றும் குறிப்பிடப்படும்.
சாதி முறைமை பல்வேறு தளங்களிலே தொழிற்படுதல், குடும்ப உறவுகள் தனிநபர் நடத்தைகளிலே அதீத தாக்கங்களை விளைவித்தல், கல்வி வளர்கின்ற பொழுதும் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் நீறுபூத்த நெருப்பாகச் சுடர்விடல் முதலிய யதார்த்தங்களை இன்றும் எமது சூழலிலே காணமுடியும்.
புராதன அடிமை முறைச் சமூக அமைப்பிலிருந்து நிலமானிய சமூக அமைப்பு, முதலாளித்துவ சமூக அமைப்பு என்றவாறு பூரணத்துவமான மாற்றங்களையும் வளர்ச்சியையும் காணமுடியாது. முன்னையதின் எச்சங்களைக் கொண்டிருக்கும் உற்பத்தி முறைமையை இது காட்டுகின்றது. அதாவது ஒரு சமூகவமைப்பு முற்றாக நிர்மூலமாகி, அடுத்த சமூகக் கட்டமைப்பு மலர்ச்சி கொள்ளும் நிலைமையை ஆசிய முறைமையிற் காணமுடியாதுள்ளது.
உற்பத்தி நிலை சார்ந்த அதிகாரத்தையும், குடும்பநிலை சார்ந்த அதிகாரத்தையும் ஒரே நபரே பிரயோகிக்கின்ற நிலையை இங்கே காணலாம். நிலத்தோடும், குடும்ப உறவினரோடும் பின்னிப் பிணைந்துள்ள உற்பத்தி உறவுகள் முற்றாக பிய்த்தெறியப்படவில்லை. சொந்தபந்தமும், சாதியும் வர்க்க உணர்வுகளுக்குக் குறுக்கே நிற்கின்றன. சுரண்டல் என்பது ஒருவர் மற்றவர் மீது செலுத்தும் ஆக்கிரமிப்பாக இன்னமும் அமையாத பாங்கைக் காணலாம். பிரமாண்டமான உற்பத்தி அமைப்புகளைத் தனிநபர் மேற்கொள்ளாத பண்பும் நிலவுகின்றது.
இந்நிலையில் எமது தனித்துவங்களை அடியொற்றிய விமர்சனங்களைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
ஆடுகுதிரைவாதம்
இது “டாடா” என்றும் அழைக்கப்படும். ஆடுகுதிரையினைச் சிறுவர்கள் “டாடா” என்று அழைப்பர். அகராதியிலிருந்து எழுந்தமானமாக இச்சொல் தெரிவு செய்யப்பட்டு, குறித்த கலை இலக்கிய வடிவங்களுக்கு சூட்டப்பட்டது.
முதலாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆன்மரீதியான ஒழுங்கு குலைவை எடுத்துக்கூறும் கலை இலக்கிய முயற்சியாக டாடா அமைந்தது.
சாவிக் கோவைகளைப் பெட்டிகள் மீது தட்டி ஒலியையெழுப்பினர். தவழும் கரடி போன்று நடனமாடினர். அவற்றின் வாயிலாக ஒழுக்க நிலைப்பட்ட வறுமையையும், சமூக நிலைப்பட்ட வற்கடத்தையும் டாடாவாதிகள் புலப்படுத்தினர்.
கலைஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனங்களை இவ்வாதம் எழுப்பியது. இதய சுத்தியுடன் அவர்கள் தொழிற்படுகின்றார்களா என்ற வினா முன்வைக்கப்பட்டது.
கலைஞர்களும், எழுத்தாளர்களும் ஆட்சி செலுத்;தும் குழுவினருடைய சேவகர்களாயிருந்தமையை டாடாவாதிகள் வேதனையுடன் சுட்டிக் காட்டினர். நியமமான இசைக்கருவிகளை விட்டு பெட்டிகளிலும் சுட்டிகளிலும் தட்டி ஓசைகளை எழுப்பியமை இசை மரபில் இணக்கம் உபகரணங்களின் வளர்ச்சிக்கு ஒருபுறம் கை கொடுத்தது. தமிழ் இசை மரபில் இணக்கல் உபகரணங்களைப் பயன்படுத்திய முன்னோடிகளுள் ஒருவராக கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் விளக்கினார்.
இந்த மரபு பிறிதோர் எதிர்த்தாக்கத்தையும் தந்தது. “பொப் இசை” என்ற அவல சங்கீதத்தின் வளர்ச்சிக்கும் பிறிதொரு விதத்திலே தூண்டுதல் அளித்தது.
ஓவியங்களைப் பொறுத்தவரை எண்ணக்கரு ஓவியம் என்ற துறை வளர்ச்சிபெறுவதற்கு இவ்வாதம் துணை செய்தது. இவ்வாதம் “சாரியலிசம்” அல்லது அகயதார்த்தத்துடன் உளவியல் அடிப்படையில் இணைந்துள்ளது. தனிமனிதப் பாங்கான உளவியற் பலவீனம் இந்த வாதத்திலே காணப்படுகின்றது.
இயற்பண்புவாதம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த கலை இலக்கியக் கோட்பாடுகளுள் இதுவும் ஒன்றாகும். இதனை “இயற் கை நெறிவாதம்” எனவும் “நாச்சுறலிசம்” எனவும் அழைப்பர். இது ஒரு சிந்தனைப் பள்ளியாகவும், முறையியலாகவும் விளங்குகின்றது. கலை, இலக்கியங்களிலே காணப்பட்ட அதீத ஆச்சரியங்களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், மீகையான புனைவுகளுக்கும் எதிரான ஓர் இயக்கமாக இயற்பண்புவாதம் கிளர்ந்தெழுந்தது.
கலை இலக்கியங்களைப் புறவயமாக அணுகும் முறைமைக்கு இந்த அணுகுமுறை அழுத்தங் கொடுத்தது. உற்றுநோக்குதல், மிக அண்மையில் நின்று பார்த்தல், கருப்பொருள்களைத் தெரிவு செய்வதில் வேறுபாடு காட்டாமை முதலியவை இயற்பண்புவாதத்திலே காணப்படுகின்றன.
ஆசாரமான கதை மாந்தர்களை விடுத்து, சந்துகளிலும்; சேரிகளிலும் வாழ்வோரையும், காலடிப் புழுக்களாக நெளிவோரையும் இலக்கியமாககும் விசையை இந்த அணுகுமுறை கொடுத்தது.
அனைத்தையும் சொல்லுதல், அகல்விரி, பண்புடன் சொல்லுதல், நிஜ வாழ்க்கையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு துண்டு போன்று காட்டுதல், எவற்றையும் மூடி மறைக்காது உள்ளதை உள்ளவாறு கூறும் நிழற்படம் போன்று காட்டுதல் முதலியவை இங்கு இடம்பெறுகின்றன.
சூழலைச் சித்தரிக்கும்பொழுது பொதுமையைக் காட்டுவதிலும் பார்க்க தனித்துவமான இயல்புகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. உள்ளதை உள்ளவாறு காட்டுதல் இவ்வாதத்தின் சிறப்பியல்பு. உள்ளதை உணர்ந்தவாறு மிகையுணர்ச்சிப்படுத்திக் காட்டுதல் இங்கு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால் இவ்வாதம் புனைவுநிலை வாதத்துக்கு எதிரானதாகவும் செயற்படுகின்றது.
இருப்புவாதம்
கலை இலக்கியங்களிலும் சிந்தனைகளிலும் யுத்தங்கள் புதிய புதிய கோலங்களைப் பிறப்பித்து வந்துள்ளன. இரண்டாம் உலகயுத்தம் சோகம் ததும்பிய மனித உணர்வுகளை வெளிப்படுத்தியது. அவற்றின் தொடர்ச்சியாக பிரான்ஸ் நாட்டில் எழுந்த கலை இலக்கியப் பரிசோதனை முறைகள் “இருப்புவாதம்” என்ற இயலைப் பிரதிபலித்தன.
இருப்புவாம் “எக்சிஸ்டென்டலிசம்” என்று கூறப்படும். இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே இவ்வாதம் கிர்கேகார்ட், நித்சே போன்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரால் வடிவமைக்கப்பட்டது.
ஆனால் உலக யுத்தங்களைத் தொடர்ந்து கலை இலக்கியங்களில் இவ்வாதம் ஜீன் போல சார்த்தரினால் முனைப்புடன் பரவலாக்கப்பட்டது. இவ்வாதத்தின் இலக்கியக் கருப்பொருளாக நம்பிக்கையின்மையும், நம்பிக்கை வரட்சியும் விளங்குகின்றது. இவை அனைத்து மனிதருக்கும் பொதுவானவை என சார்த்தர் சித்தரித்தார்.
நம்பிக்கையின்மை காரணமாக எழும் சோகம் நிரம்பிய பதகளிப்பைச் சிலர் வெளிப்படுத்தாதிருக்கின்றனர். அவற்றை அவர்கள் மறைத்துள்ளனர். அவ்வாறு மறைத்தாலும் அவற்றிலிருந்து மனிதர் விடுபடுவதில்லை என்பதே சார்த்தரின் புனைவு.
நல்லவை எவை என்ற கேள்வியும் இருப்புவாதக் கலை இலக்கியங்களிலே எழுப்பப்படுகின்றது. நல்லது ஒன்றை தெரிவு செய்யும்பொழுது, தெரிபவருக்கு அது நன்மைபயக்க வேண்டுமாயின் ஏனோயோருக்கும் நன்மை தருவதாக அமைந்திருத்தல் வேண்டும்.
இருப்புவாதக் கலை இலக்கியங்கள் மனிதவிடுதலை - விடுதலை என்பதன் பொருள் - அந்நியமாதலும், உண்மைநிலையும் - என்ற முப்பொருள்களைச் சுற்றி எழுகின்றன. மனிதனின் உண்மையான இருப்பைப் பற்றிய தேடலுக்கு இவ்வாதம் இட்டுச் செல்லுகின்றது. ஆனால் எவ்வளவு தூரம் இலக்கை அடைந்துள்ளதென்பது ஆய்வுக்குரியது.
இலக்கிய உற்பத்தி முறை
பொருள் உற்பத்தி முறைமையை ஆராய்தல் போன்று இலக்கிய உற்பத்தி முறைமையினையும் ஆராயலாம். பொருள் உற்பத்தி முறைமையின் அடிப்படையாக நிகழும் சமூக உருவாக்கம் இலக்கிய உற்பத்தி முறைமைக்குரிய வலுவைக் கொடுக்கின்றது.
பொருள் உற்பத்தி முறைமையின் எதிரெதிர் வலுக்களுடன் இலக்கிய உற்பத்தி முறைமை இணைந்து செயற்படும். உற்பத்திச் சாதனங்களை உடையோருக்காய இலக்கியம், உழைப்பை வளங்குவோருக்குரிய இலக்கியம் என்று பாகுபடுத்தல் எதிரெதிர் வலுக்களின் இலக்கியத் தொடர்பைக் காட்டுகின்றது. வலுக்களின் விசையைப் பொறுத்து நலிவடைந்த சமூகங்களிலும் நல்ல இலக்கியங்கள் தோன்றலாம். நலிவடைந்த சமூகம் என்பது தீவிர சுரண்டலுக்குள்ளாகி ஏழ்மையும், அல்லலும் நிரம்பிய சமூகம். அத்தகைய ஒரு சமூகத்திற் சமூக முரண்பாடுகளை ஆழமாகவும், கூர்மையாகவும், உற்றுநோக்கும் ஒரு சிருஷ்டியாளன் அமர இலக்கியம் ஒன்றைப் படைக்க முடியும்.
பாரிய அச்சு வசதிகள், தொடர்பு சாதனங்களின் அமைப்புகள் என்பவை தனிநபர்களின் செல்வக்குவிப்போடு இணைந்து செல்லும் நிலையில் அவை இலக்கிய உற்பத்தி முறைமையைப் பண்புவழியகத் தாக்குகின்றன. அவற்றால இலக்கியம் ஒரு “நுகர்ச்சிப் பொருளாக” மாற்றப்படுகின்றது. இலாபநோக்கம் கருதிய “வெகுசன இலக்கியம்” என்ற உற்பத்தி தொடர்ந்து ஏற்பட்டது. திகலூட்டல், காமவெறியூட்டல், விகார உணர்வுகளைத் தூண்டுதல், மலினப்படுத்தல் போன்றவை வெகுசன இலக்கியத்தின் சில பண்புகளாகும்.
வர்க்க முரண்பாடுகள் ஒழிக்கப்படும் நிலையில் ஏற்படும் இலக்கிய உற்பத்தி பாரதீனப்படாத முழுமை கொண்ட மனித ஆளுமையைக் கட்டியெழுப்பும் அழகியல் உணர்வுகளைத் தூண்டும்.
உணர்ச்சியியல்
உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுதலும் வெளியிடுதலும் தொடர்பான ஆய்வு உணர்ச்சியியல் எனப்படும். கலை இலக்கியங்கள் உணர்ச்சிகளுக்கு மிகையான அழுத்தங்களைக் கொடுப்பதாகக் கூறுவர்.
உணர்ச்சியியல் தொடர்பான சில அடிப்படைகள் முதற்கண் கூறப்படுகின்றன. உணர்ச்சிநிலை என்பது ஒரு வழி முறைமை எனப்படும். அதாவது ஒரு நேரத்தில் ஒருவர் ஓர் உணர்ச்சியை மாத்திரம் வெளியிட முடியுமென்பது. ஒரு குறித்த உணர்ச்சியைப் பல்வேறு வெளியீட்டுக் கோலங்களாலே தெரியப்படுத்த முடியும். குரல், அபிநயம், மொழி, நடத்தை எனப்பலவாறு அது விரிவடைந்து செல்லும்.
உணர்ச்சிகளை வெளியிடல் பரிணாமம் அடைந்துவரும் மனித மூளையின் வெளியீட்டு நிரலமைப்புடன் இணைந்துள்ளது.
மனிதனுடைய பரிணாம வளர்ச்சி போன்று உணர்ச்சிகளின் வளர்ச்சியும் வரலாற்று விதிகளுக்கு உட்பட்டது. முரண்பாடுகளினதும் போராட்டங்களினதும் வளர்ச்சியோடு உணர்ச்சிகளின் கோலங்களும் வளர்ச்சியுற்று வந்துள்ளன. உதாரணமாக நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலே காணப்பட்ட சாதி முறைமை சார்ந்த வீர உணர்ச்சிகளும், பெருமிதமும், கைத்தொழிற் சமூகவமைப்பிலே சத்தற்றதாகிவிடுகின்றன.
கலை இலக்கியங்கள் உணர்ச்சிச் செயல் முறைகளின் இருமுனைகளைத் தொட்டு நிற்கின்றன. ஒரு புறம் கலைஞரது உணர்ச்சிக்கோலங்கள் காட்டப்படுகின்றன. மறுபுறம் சுவைஞர்களது உணர்ச்சிகள் தூண்டப்பட்டும், புடமிடப்பட்டும் அமைக்கப்படுகின்றன.
அறிவூட்டலும் கற்பனையும் நட்பியலுமற்ற வெறும் உணர்ச்சிகள் கலை இலக்கியங்களில் ஆழ்ந்த சுவடுகளைப் பதித்துவிடுவதில்லை.
உயர்குழுவாதம்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐ. அமெரிக்காவில் வளர்ச்சி பெற்ற சிந்தனைகளுள் ஒன்றாக உயர்குழுவாதம் விளங்குகின்றது. உயர்குழுவினர் “எலீற்” எனவும் அழைக்கப்படுவர். எந்த ஒரு சமூகத்திலும் இரண்டு பெரும் பிரிவினர் காணப்படுவர் எனவும், ஒரு சிலர் தலைமைத்துவத்தை ஏற்கும் குழுவில் இடம் பெறுவர் எனவும், பெரும்பகுதியினர் ஆளப்படுவோராயிருக்கும் குழுவில் இடம்பெறுவர் எனவும் இந்தக் கோட்பாடு விளக்குகின்றது. செல்வாக்கு மிக்க குழுவே ஆட்சி செலுத்தும் குழுவாக விளங்கும். அரசியலிலும் சமூகத்திலுமுள்ள செல்வாக்குமிக்க குழுக்கள் உயர் குழுக்கள் என அழைக்கப்படும். இக்குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டிகளில் ஈடுபடுகின்றன. ஆளும், உயர்குழுவுக்கு எதிராகச் செயற்படும் பிறிதோர் உயர் குழுவை ஆட்சிப்பொறுப்பை ஏற்கக்கூடியவாறு பொதுமக்கள் உயர்த்த முடியுமென்பது இவ்வாதத்தின் துணிபு.
உயர்குழுக்களுக்கிடையே நிகழும் அதிகாரப் போட்டிகள், அவற்றுக்கிடையே நிகழும் ஊடாட்டங்கள், போட்டிகளின் சமநிலை முதலியவற்றை எழுத்தாக்கங்கள் புனைந்துரைக்க வேண்டுமென்று குறிப்பிடப்படுகின்றது.
ஆட்சியிலுள்ள ஓர் உயர்குழு, செல்வாக்கையிழந்து பிறிதோர் உயர்குழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றல் “உயர்குழுவின் சுற்றோட்டம்” என்று கூறப்படும்.
சோசலிச முறைமையை விமர்சனம் செய்வதற்குரிய ஒரு கருவியாகவும் உயர் குழுவாதம் பயன்படுத்தப்படுகின்றது. வர்க்க வேறுபாடுகளற்ற சமுதாயத்திற்கூட ஒரு சிறு குழுவினரே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளனர் என்றும் அவர்களின் அடிப்படையாக புதியதோர் உயர்குழு வளர்ச்சி பெறுகின்றதென்றும் வாதிடப்படுகின்றது.
உயர்குழுவாதம் பல்வேறு கண்டனங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. உயர்குழுவின் வரலாற்று வளர்ச்சி தொடர்பான விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகளை அந்த வாதத்தை உருவாக்கியோர் தந்திலர். மேலும் உயர்குழு பற்றிய வரையறை, அதன் அடர்த்தி, இயக்கம் பற்றிய தெளிவின்மை நிலவுகின்றது.
உளவழி இன்வாதம்
இன்பந்தேடுவதற்காகவே கலை இலக்கியங்களையும் பிற செயற்பாடுகளையும் மனிதர் விரும்புகின்றனர் என்பதை இக்கொள்கை விளக்குகின்றது. உளவியல் நிலைப்பட்ட மகிழ்ச்சிக்கொள்கை என்றும் “சைக்கோலஜிகல் ஹெடோனிசம்” என்றும் இந்தக் கொட்பாடு அழைக்கப்படும். கலை இலக்கியங்களை ஆக்குதல், விரும்புதல, அவற்றுக்காகத் தொழிற்படுதல் ஆகிய அனைத்தும் உளவழியாக இன்பம் பெறுவதைக் குறியிலக்காகக் கொண்டுள்ளன என்பது இக் கொள்கையின் உள்ளடக்கம்.
உளவழி இன்பக் கொள்கையாளர் “இன்பம்” என்பதற்கு மிகவும் பரந்த விளக்கத்தைத் தருகின்றனர். இன்பம் என்பது தன்னலத்தை மட்டும் குறியிலக்காகக் கொள்ளவில்லையென்றும், பிறருக்குரிய நலனும் விருப்பும் அவர்களுடைய மகிழ்ச்சியுமே தனியொருவனுக்கு மிகையான இன்பத்தைக் கொடுக்கின்றதென்றும் குறிப்பிடுகின்றனர்.
உளவழி இன்பக் கொள்கையிற் கலை இலக்கியங்களைப் பொறுத்தவரை ஒரு முரணுரை காணப்படுவதையும் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. கலை இலக்கியங்களைப் படைக்கும் ஒருவன் அவற்றிலிருந்து கிடைக்கும் இன்பத்தை மட்டுமே எண்ணிக்கொண்டிருத்தல், கலைப்படைப்பில் ஆழ்ந்த கவனத்தைச் செலுத்த முடியாமற் போய்விடும். இந்நிலையில் இன்பத்தை அடைவதற்குரிய வழி அதனை மறந்து விடுதல் என்பது முரணுரையாகின்றது.
இயைபுபடுத்தலாலும், நிபந்தனைப்படுத்தலாலும், கலை இலக்கியங்களில் இன்ப உணர்வு தொடர்ந்து மீள வலியுறுத்தப்படவேண்டுமென்பதை இந்தக் கொள்கை வலியுறுத்துகின்றது. துன்பியல், சோக நிகழ்வுகள் போன்றவற்றின் இறுதிநிலையில் இன்பம் மீட்கப்படுமென்ற கருத்தும் இக்கொள்கையிலே விரித்துரைக்கப்படும்.
இன்பம் என்பதை அனுபவிப்பதற்கு முன்னோடியாக நிறைவேற்றப்படவேண்டிய அடிப்படைத் தேவைகள் தொடர்பன பிரச்சினைகள் இக்கொள்கை அணுகவில்லை.
உளவெளிப்பாட்டுவாதம்
பிரான்ஸ், ஜேர்மனி முதலியவை கலை இலக்கியப் பரிசோதனைகளின் தொட்டில்களாக விளங்குகின்றன. பரிசோதனைகளின் விளைவாகப் பல்வேறு வாதங்கள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நூற்றாண்டின் முதற்காற் பகுதியில் ஜேர்மனியில் இவ்வாறாக உருவாக்கப்பட்ட வாதங்களுள் ஒன்றாக உளவெளிப்பாட்டுவாதம் அல்லது “எக்ஸ்பிறெசனிசம்” விளங்குகின்றது. வெளித்தோற்றங்களை விடுத்து அடிப்படை உண்மைகளை வெளிப்படுத்துவதே உளவெளிப்பாட்டுவாதத்தின் பிரதான குறிக்கோளாகும்.
சமகாலப் பண்பாடென்பது வெளித்தோற்றத்திற் கவர்ச்சியுடையதாயிருப்பினும் அதன் உட்சாரம் அழுகி, நைந்து, உட்சுரம் விட்டதென உளவெளிப்பாட்டுவாதிகள் கருதினர். “மௌனத்தை உடைப்போம்”, அகத்தை வெளிக்கொண்டு வருவோம்” என்பதை உளவெளிப்பாட்டு வாதத்திலே முன்வைக்கப்பட்டன.
இலக்கிய முயற்சிகளில் இக்கோட்பாட்டினை ஸ்ரின்ட் பேர்க், டெஸ்ரோ வோஸ்கி போன்றோர் வீரியத்துடன் முன்னெடுத்துச் சென்றனர். மெய்யியலில் இவ்வாதத்தை மொழிந்தவர்களுள் பேர்க்சன் சிறப்பிடம் பெறுகின்றார். உளவியலில் உளவெளிப்பாட்டுவாதம் சிக்மன்ட் பிராய்ட்டினால் வளர்த்தெடுக்கப்பட்டது.
ஆழ்மனத்தில் ஒடுங்கிய உணர்வுகளை வெளிக்கொண்டு வந்துவிட்டால் ஒருவரது உளப்பிணி இலகுவிலே தீர்ந்துவிடுமென இவ்வாதம் விளக்கும். துன்பத்தை அடக்கி வைக்கக்கூடாது. அழுதுகொட்டித் தீர்த்துவிடவேண்டும் என்பது இதன் செயல்முறை விளக்கம்.
அழுதாலும், ஆடினாலும் மனத்திலுளள சுமை தொடர்ந்தும் சுமையாக இருக்கின்றதென இவ்வாதத்தை எதிர்ப்போர் உரத்துக் கூறுகின்றனர்.
எதிர்பாலப்புனைவுவாதம்
வியத்தகு விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் இந்நூற்றாண்டில் எழுந்த கலை இலக்கிய வாதங்களுள் ஒன்றாக இது தோன்றியது. இதனைப் “ஃபிய+ச்சறிசம்” எனவும் அழைப்பர். 1909ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் இருபதாம் நாள் இவ்வாதத்தை விளக்கும் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
கொள்கைப் பிரகடக ஆவணம் ஓர் இளைஞனின் துதிப்பாடலாக அமைந்தது. இயந்திரங்களின் சங்கமத்தில் நிகழும் அசைவும். ஒலியும், வியப்பும், நயப்பும், தீவிர எதிர்ப்பும் கலந்து வேட்கையினைத் துதிப்பாடல் வெளியிட்டது.
தொழிற்சாலைகளின் புகைப்பாம்பும் விசைவண்டிகள் என்ற இரும்புக் குதிரைகளும் உடற்பயிற்சி வித்தை போன்று தொங்கிக்கொண்டிருக்கும் பாலங்களும், வியத்தகு தொழிற்நுட்பவியல் வளர்ச்சியைப் புலப்படுத்தும் காட்சி வடிவங்களாகவுள்ளன. எதிர்காலத்தை அண்ணாந்து பார்த்தபடி நிற்கும் நகரங்கள் பற்றிய கற்பனைகள் இவ்வாதத்தில் மேலோங்கி நிற்கின்றன.
புதிய கண்டுபிடிப்புக்களை வடிவங்களை எதிர்நோக்கி நிற்கும் இவ்வாதிகள் தொல்பொருட்சாலைகளையும் பழமையின் சுவடுகளையும் அழிக்கவேண்டுமென்ற தீவிர இலட்சியமுடையோராகவும் காணப்பட்டனர்.
இயக்கவியல் வடிவங்களைப் பயன்படுத்தி நுண்புலன் உணர்வுகளைத் தூண்டுதல் எதிர்கால புனைவுவாதிகளிடம் காணப்பட்டது. முதலாம் உலக யுத்தத்தின் கோரவிளைவுகள் இவர்களிடத்துப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின.
கட்டிடக்கலையில் இவ்வாதத்தை சான்றி எலியாஸ் முன்மொழிந்தார். மிகவும் பிரமாண்டமான கற்பனைகளை உட்படுத்தி மாடங்களையும், தொடர்பு வரிகளையும், விமான ஓடுபாதைகளையும் நிலவறைகளையும் உள்ளடக்கிய விசித்திர கட்டிடவாக்கத்தத் தந்தார்.
விஞ்ஞான தொழில்நுட்பவியல் வளர்ச்சியின் வர்க்கநிலைப்பட்ட பொல்லாமைகளை இவ்வாதம் அணுகத்தவறிவிட்டது.
ஒரு மனதாகியவாதம்
பிரான்ஸ் நாட்டின் கலை இலக்கியப் புலத்தில் இவ்வாதத்தை உருவாக்கியவர் யூலியஸ் றொமெயின்ஸ் (1885 - 1972) ஆவர். “யுனனிமிஸம்” எனப்படும். இவ்வாதம் மனித வாழ்வின் புதிய நம்பிக்கைகளை வியந்து நிற்கின்றது. மனிதனிடத்துக் காணப்படும் அவநம்பிக்கையின் குற்றவுணர்ச்சியை இவ்வாதம் சாடுகின்றது.
உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் பொறுப்புணர்ச்சியுள்ள ஒரு குழுவாகக் கருதுதல் இந்த வாதத்தின் சிறப்பியல்பு. புதிய தொடர்பியல் முறைகள் உலகம் என்ற குழுவை மிக நெருக்கமாக்கிவிடுகின்றன. கூட்டான சிந்தனை கூட்டான மனவெழுச்சி என்பவை கிராமங்களிலிருந்து தோனறிப் படிப்படியாக உலகம் முழுவதையும் தழுவி வளரவேண்டும் என்பதை விளக்குவதே ஒரு மனதாகியவாதம்.
உலகம் முழுவiயும் ஒன்றிணைத்து வைக்கும் தரிசனங்களைச் சமயங்கள் வற்புறுத்தியுள்ளன. ஆனால் ஒருமனதாகியவாதத்தை ஆக் இலக்கிய வடிவில் முழுமையாக்கியவர் யூலியஸ் றொமயின்ஸ் ஆவர். பள்ளி மாணவனாயிருக்கும் பொழுது அவர் கண்ட காட்சி வியப்பானது தெருக்கள, வண்டிகள், போக்குவரத்துச் செய்யும் மாந்தர் என்ற அனைத்தையும் ஒரு முழுப் பொருளின் உள்ளே அமைந்த மூலகங்களாகத் தரிசித்தார். மனிதர் யாவரும் ஒன்றிணைக்கத் தக்கவர்கள் என்ற உள்ளாந்த கிளர்ச்சி அவரது ஆக்கங்களின் உள்ளடக்கமாயிற்று.
யூலியஸ் றொமயின்ஸ் விளக்கிய ஒருமனதாகியவாதத்தாற் கவரப்பெற்ற பல்வேறு கலைஞர்கள் அவ்வாதத்தைத் தமது ஆக்கங்களின் உட்பொருளாக்கினர்.
கருமை இலக்கியம்
நிறவேறுபாட்டினால் வஞ்சிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் அவலநிலைக்குள்ளாகும் நீக்கிரோ மக்களின் உணர்வுகளைப் பல வழிகளிலும் வெளிப்படுத்தும் எழுத்தாக்கங்கள் “கருமை இலக்கியம்” அல்லது “பிளாக்லிற்றேஜர்” என்று குறிப்பிடப்படும். உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்குரிய குறியீடாகவும் கருமை இலக்கியத்தைக் குறிப்பிடுவர்.
நிறவேறுபாடு காரணமாக ஒதுக்கப்படுதல், வெள்ளை நிறத்தவரோடு சரிநிகர் சமானமாக வாழமுடியாத ஏக்கம், சமூக அடிப்படையில் நிகழும் புறக்கணிப்புகளின் உளவியல் நிலைப்பட்ட பாதிப்புகள் முதலியவற்றை கருமை இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இவ்வகைக் கலை இலக்கியங்கள் “கருமை அழகியல்” என்ற தொடராலும் அழைக்கப்படுகின்றன.
அடிமையும் ஏழ்மையும் அடக்கு முறைமையும் பல்வேறு குறியீடுகளினாலும் படிமங்களாலும் இசைவடிவங்களினாலும் கருமை அழகியலிலே காட்டப்படுகின்றன.
கருமை இலக்கியம் படைத்தோர் தீவிரவாதப் போக்குடையோர், மிதவாதப் போக்குடையோர் என இருவகையாகப் பாகுபடுத்தப்பட்டனர். மிதவாதப் போக்குடையோர் இணங்கி வாழும் கொள்கையை முன்வைத்தனர். கல்வி நிலையை உயர்த்தி உயர்வாண்மை நிலையை எய்துவதன் வாயிலாக கருமை நிற மக்கள் நிலைக்குத்து உயர்வை எய்தமுடியுமென மிதவாதிகள் கருதுகின்றனர். தீவிரவாதப் போக்குடையோர் வர்க்கநிலைப்பட்ட புரட்சிகர அணுகு முறைகளை முன்வைக்கின்றனர். குடியேற்றவாதம், நவகுடியேற்றவாதம் என்பவற்றோடு நிறவேறுபாடு பின்னிப்பிணைந்துள்ளமையை தீவிரவாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ்மொழியிற் கருமை இலக்கியங்களை அறிமுகம் செய்யும் முன்னோடி நடவடிக்கையை “அக்னீ” என்ற புதுக்கவிதை இதழ் மேற்கொண்டது.
சனரஞ்சகக்கலை
இக்கலை “பொப் ஆர்ட்” எனப்படும். 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்திலும் ஐ. அமெரிக்காவிலும் சனரஞ்சகக் கலை இயக்கம் வளர்ச்சி பெறத்தொடங்கியது. லோறன்ஸ் அலோவே என்ற ஆங்கில விமர்சகர் புதிய வடிவில் வளர்ச்சி கொண்ட பண்பாட்டையும் கலைப் பரிமாணத்தையும் விளக்குவதற்கு “பொப் ஆர்ட்” என்ற தொடரைப் பயன்படுத்தினார்.
சனரஞ்சகக் கலையை நயப்போர் அதனைப் “புதிய புறவயப்பாங்கு” என்றும் “புதிய மீயதார்த்தம்” என்றும் விளக்கினர். கலை இலக்கியங்கள் தொடர்பான பாரம்பரிய அணுகு முறைகள் மீது சனரஞ்சகக் கலைவாதிகள் வினாக்களைத் தொடுத்தனர்.
புதிய வாழ்க்கை முறை, புதிய நுகர்ச்சிக் கோலங்கள், புதிய புதிய தொடர்பு முறைகள் என்பவற்றுக்குப் பொருந்தக் கூடிய வர்த்தகப் பாங்கான கலையாக்கமாக “பொப் ஆர்ட்” மலர்ச்சி கொண்டது. இந்த வாதத்தை விமர்சிக்க வந்தோர் இது மலினமானது. பரும்படியாக்க உற்பத்தி வயப்பட்டது. பாலியலிலே தோய்;ந்தது; இளமை சூடியது; கிளுகிளுப்பைத் தருவது; குறைந்த பிரயத்தனத்துடன் உருவாக்கப்படக்கூடியது என்று குறிப்பிடுகின்றனர்.
மனிதனையும் அவனது சூழலையும்பற்றிய ஆழமற்ற மேலோட்டமான கருத்துச் சொல்லுதல் சனரஞ்சக எழுத்தாக்கங்களுடன் இணைந்தது. கனகாத்திரமான கருத்துக்கள் சின்னப் பின்னப்படுத்தப்பட்டும், எளிமையாக்கல் என்ற போர்வையில் மலினப்படுத்தப்பட்டும் வழங்குதல் இக்கலையின் பண்பாகும். வெகுசனப் பண்பாடும், சனரஞ்சகக் கலையாக்கமும் ஒன்றிணைந்தவை.
தமிழியல்
தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம், அவர்தம் அழகுக் கலைகள், மெய்யியற் சிந்தனைகள், கல்விக்கருவூலங்கள் முதலியவற்றை உள்ளடக்கிய ஆய்வு தமிழியலின்பாற்படும்.
“முத்தமிழ்” என வழங்கப்படுதல் தமிழ் மொழிக்குரிய தனித்துவமாகும். இயல், இசை, நாடகம் என முத்தமிழ் விரிந்த பொருள்தரும்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மொழிமரபைத் தமிழ்மொழி கொண்டது. உலகின் தொன்மையான இலக்கண நூல்களுள் ஒன்றாகத் தொல்காப்பியம் விளங்குகின்றது. முச்சங்க மரபு, ஐந்திணைமரபு, பக்திமரபு முதலிய சிறப்பியல்புகளும் தமிழர் பண்பாட்டிலே காணப்படுகின்றன. தமிழ் ஏனைய திராவிட மொழிகளுக்குத் தாயாகவும் விளங்குகின்றது.
இந்நூற்றாண்டில் மேலை உலகிற் புதிய புpதய கலை இலக்கியக் கோட்பாடுகள் தோன்றிய வேளை வரலாற்றுக் காரணங்களால், தேசிய மறுமலர்ச்சி தனித்தமிழ் இயக்கம், பகுத்தறிவு இயக்கம் போன்றவை தமிழ்ப் பண்பாட்டிலே தோன்றின.
தமிழியல் வளாச்சிக்கு விசை கொடுத்த ஓர் அமைப்பாக அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு விளங்கியது. தமிழ்மொழி பல்கலைக்கழகங்களிலே கற்பித்தல் மொழியாகவும், ஆய்வுமொழியாகவும் ஆக்கப்பெற்றமை தமிழியல் வளர்ச்சியை மேம்படுத்தியது.
தமிழியல் மேலோங்க வேண்டுமாயின் புறவயமான நவீன ஆய்வுகளைப் பயன்படுத்துதல், புதிய கலைச் சொல்லாக்கம், தமிழில் வெளியீடுகளின் அளவையும் தரத்தையும் உயர்த்துதல் முதலியவை வளர்க்கப்படவேண்டியுளளன. தமிழர் தம் அரசியலிலே தமிழ்மொழி பிரதான இடத்;தைப் பெற்றுவருதல் தமிழியலின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவுள்ளது.
தொடர்பியல்
எதைக்கூறுதல், யாருக்குக் கூறுதல் எந்தச் சாதனத்தின் வழியாகக் கூறுதல், எத்தகைய தாக்க விளைவுகளுடன் கூறுதல, எவ்வாறு பின்னூட்டல் செய்தல் என்பவற்றை விளக்கும் இயல் தொடர்பியல், தொடர்பியலில் முதன்மை பெறுவது மொழி. கலை இலக்கியங்கள் அழகியல் சார் தொடர்பியலை வளர்க்கின்றன.
தொடர்பியல் அல்லது “கொமினிகேஷன்” என்பது கலை இலக்கியங்களுடன் மாத்திரமன்றி பொறியியலுடனும் இணைந்து புலமாகும்.
வலுப்பொறியலுக்கும் தொடர்புப் பொறியலுக்குமிடையே அடிப்படையான வேறுபாடு காணப்படுகின்றது. உள்வழங்கப்பட்ட வலுவுக்கும் அதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றங்களுக்குமிடையே விகிதசமமான தொடர்பு காணப்படுதலை வலுப்பொறியியல் விளக்கும். தொடர்புப் பொறியியலில் இப்பண்பு வேறுவகையாகக் காணப்படுகின்றது.
தொடர்புப் பொறியியலில் உள் வழங்கப்பட் வலுவுக்கு விகிதசமத்தொடர்பற்றவகையிலும், சிக்கலான அளவிலும், சில சமயங்களில் மிகையான அளவிலும் வெளியீடுகள் மனிதர்களிடத்து மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. வெளியீடுகள் மனிதர்களிடத்து ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் பற்றிய ஆய்வே தொடர்புப் பொறியியலில் வலுவிலும் கூடிய கவனத்தைப் பெறுகின்றது.
குறிக்கப்பட்ட வலுவைப் பயன்படுத்திப் பல்வேறு செய்திகளைத் தொடர்பு ஊடகத்தின் வழியாகச் செலுத்த முடியும். ஒரே வலுவைப் பயன்படுத்தி பல்வேறு செய்திகளை வெளியிடும் பொழுது, செய்திகளின் பண்புக்கேற்றவாறு தாக்க விளைவுகள் வேறுபடுவதைத் தொடர்பியல் காட்டுகின்றது. தொடர்பு அமைப்புகள் பற்றி கவனம் இங்கு முதற்கண் சிறப்புப் பெறுகின்றது. தகவல்களைப் பெறுதல் சரியாகப் பெறுதல், தெரிந்தெடுத்தல், ஒழுங்கமைத்தல் முதலியவை தொடர்பு அமைப்பில் இடம்பெறுகின்றன. தகவல்களின் சுமை, அவை அனுப்பப்படும் வாய்க்கால்கள், செலுத்தப்பட வேண்டிய பரப்பளவு செல்வேகம் முதலியனவும் தொடர்பியலில் அணுகப்படுகின்றன.
தொல்சீர்வாதம்
இவ்வாதம் “கிளாஸிஸம்” என்றும் அழைக்கப்படும். கிரேக்க, றோம் தொல்சீர் இலக்கிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாதம் கட்டியெழுப்பப்பட்டது. இலக்கியம், இசை, ஓவியம், நடனம், சிற்பம், கட்டிடக்கலை ஆகிய துறைகளில் இது விதந்து பேசப்படுகின்றது.
தொல்சீர் வாதம் சமூகப் பண்பு வாய்ந்தது; நியாயமானது; பாரம்பரியங்களை வழுவாது பின்பற்ற முயல்வது: அறிவாற்றல்மிக்கது; தருக்க முறையில் ஒழுங்கமைக்கப்பட்டது; நிலையியல் கொண்து: என்றவாறு அதன் பண்புகள் விளக்கப்படுகின்றன.
மானுட ஒற்றுமைகளும், மனித தனித்துவங்களை விஞ்சிய பொதுத்தன்மைகளும், இங்கு முதன்மை பெறுகின்றன. சமூகத்தின் பொது விழுமியங்களுக்குக் கட்டுப்படலும், பொதுத்தன்மையினைக் காட்டும் கதாபாத்திரப்புனைவுகளும், முன்னோர் கூறியவற்றைப் பொன்னேபோற் போற்றுதலும் இந்த வாதத்தின் அடிச்சுவடுகளாயுள்ளன.
எமது கோபுரக் கட்டிடக்கலை, கர்நாடக இசை, பரதநாட்டியம் போன்றவை தொல்சீர்வாதத்தை நேரடியாகப் புலப்படுத்துகின்றன. தொல்சீர்வாதமும் புனைவுநிலைவாதமும் எதிரெதிர் முரண்பாடு கொண்டவை. ஆனால் மேற்கூறிய இரு வாதங்களும் அவற்றின் தூய வடிவங்களிலே பின்பற்றப்படவில்லை. ஒன்றின் நிழல் மற்றையதன் மீது பரவிப் படிந்து வருவதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
நடத்தைவாதம்
உளவியலும் இலக்கியமும் ஒன்றிணைந்தவை. உளவியற் கோட்பாடாகிய நடத்தைவாதம் இலக்கிய அணுகுமுறைகளிலும் பின்பற்றப்படுகின்றது.
மனிதரதும், விலங்குகளதும், நடத்தைகளை ஆராய்வது நடத்தைவாத்தின் பாற்படும். இதனை “பிகேவியறிசம்” எனவும் கூறுவர். நடத்தைகளை ஆராய்வதன் வாயிலாக நிகழ்வுகளுக்கு விளக்கமளிக்க முடியுமென இவ்வாதம் கருதுகின்றது.
ஒருவரது மனக்கோலங்களும் ஆழ்ம உணர்வுகளும் நடத்தைகளால் வெளிப்பட்டு நிற்கும் என நடத்தைவாதிகள் கருதுகின்றனர். மறுபுறம் ஒருவரது நடத்தையிலிருந்து அவரது உளக்கோலத்தை விளக்கும் முயற்சியிலும் இவ்வாதம் ஈடுபடுகின்றது.
நடத்தைவாத உளவியலைக் கட்டியெழுப்பியவர்களுள் வாட்சன், தோண்டைக், பவ்லோ, ஸ்கின்னர், ஸ்பென்ஸ் முதலியோர் சிறப்பிடம் பெறுகின்றனர். ஆரம்பத்தில் தூண்டல் துலங்கள் என்பவற்றின் அடிப்படையாக நடத்தைவாதம் கட்டியெழுப்பப்பட்டது. பின்னர் “மீளவலியுறுத்தல்” என்ற கருத்தையும் அவற்றோடிணைந்து வலியுறுத்தினர். மீளவலியுறுத்தலை உகந்த முறையிலே கையாளுதல் வாயிலாக விரும்பத்தக்க நடத்தைகளை ஒருவரிடத்தே வளர்த்தெடுக்க முடியும். நடத்தைகளிலே பல்வேறு செயல்மாறிகள் பங்குகொள்வதைப் பின்வந்த ஆய்வாளர் விளக்கினர். ஒருவரின் விருப்பு, வெறுப்பு, தேவை, எதிர்பார்ப்பு முதலியவை குறுக்கிடும் மாறிகளாகத் துலங்கலிலே பங்கு கொள்ளமுடியும்.
முன்னைய நிகழ்ச்சிகளை மீட்டெடுத்தலும், நல்லவற்றைத் தொடர்புபடுத்தலும், தீயவற்றை மீளவலியுறுத்தாது விடுதலும், பின்னூட்டல்கள் வாயிலாக ந்ல நடத்தைகளை உருவாக்குதலும் நடத்தைவாதக் கலை இலக்கியங்களிலே கையாளப்படுகின்றன. சூழலை மாற்றியமைக்காது தனிமனித நடத்தையை மாற்றமுயலும் பொழுது அது வெறும் இலட்சியமாகிவிடுகின்றது.
நவபிராட்டிசம்
சிகமன்ட் புறெயிட் என்பவரால் உருவாக்கப்பட்ட உளவியற் கோட்பாட்டுக்குப் புதிய விளக்கங்களைக் கொடுக்கும் வாதம் “நவபிராய்ட்டி சம்” எனப்படும். மேலைப் புலச்சிந்தனைகளின் இரு துருவங்கள் என்று மார்க்ஸிசமும் பிராய்ட்டி சமும் குறிப்பிடப்படுகின்றன.
மார்க்ஸிசக் கல்வியின் செல்வாக்குக்கு உட்பட்ட எரிக்புறோம் போன்றோர், பிராய்ட்டி சத்தின் போதாமையைக் கண்டனர். பிராய்ட்டிசம் தனிமனிதனை விளக்கியதேயன்றி, சமூக மனிதனை விளக்கவில்லை. சமூகத் தோற்றப்பாடுகளையும் விளக்கவிலலை. தனித்த அணுபோன்ற மனிதனைச் சுற்றியே பிராய்ட்டிசம் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.
மேற்கூறிய போதாமையை நீக்குவதற்கு “சமூகமயமாக்கப்பட்ட உளப்பகுப்பு” என்ற கோட்பாட்டை நவபிராய்ட்டி சம்மொழிந்தது. நவபிராய்ட்டிசவாதம் பிராய்ட் குறிப்பிட்ட “இட்” என்ற மிருக உணர்ச்சியிருந்து விடுபட்டு அகம், மீயகம் என்பவற்றை உருவாக்கும் சமூக விசைகளுக்கு முதன்மையளிக்கின்றது.
நனவிலி மனத்தை ஒவ்வொரு மனிதருக்குமுரிய சமூகச் சார்பற்ற உளவியற் பொருளாக பிராய்ட்டி சம் கருதுகின்றது. நவபிராய்ட்டிசம் இந்த நிலைப்பாட்டிலிருந்தும் வேறுபடுகின்றது. நனவிலிமனமும் ஒரு சமூகத்தோற்றமென்றும், சமூக நெருக்குவாரங்களின் வடிகட்டலால் நனவிலி மனம் உருவாக்கப்படுகின்றது என்றும் எரிக் புறோம் விளக்கினார்.
கலை இலக்கியங்களில் நவப்பிராய்ட்டி சத்தைப் பின்பற்றுவோர் சமூகவியலையும் உளவியலையும் ஒன்றிணைக்கின்றனர். நனவிலி ஊக்கலைச் சமூகநோக்கிலே விளக்கிப் பிராய்டிசத்துக்குப் புது வாழ்வு வழங்கமுயல்கின்றார். ஆயினும் உளம் படிமலர்ச்சி கொள்வதற்குரிய வரலாற்றுத்; தொடர்ச்சியே அணுகத் தவறிவிடுகின்றனர்.
நனவு அருவி
புனைகதைகளிற் கையாளப்படும் ஓர் உபாயமாக நனவு அருவி விளங்குகின்றது. இதனை “நனவு ஓடை” என்றும், “ஸறீம் ஒவ் கொன்ஸஸ்னெஸ்” என்றும் அழைப்பர். சிந்தனை தருக்க ஒழுங்குமுறை என்பவற்றுக்கு முதன்மையளிக்காது. மனத்திலெழும் உணர்ச்சிகளினதும், படிமங்களதும் தங்குதடையற்ற பாய்ச்சலுக்கு இடமளித்தல் நனவு அருவி உபாயமாகக் கொள்ளப்படும்.
உணர்ச்சிகளிடையே குறுக்கிடாது அவற்றைத் தொடர்புபடுத்திச் செல்வதும், கோவைப்படுத்தி இணைப்பதும் இங்கே சிறப்பிடம் பெறுகின்றன.
“மழைபெய்கின்றது - பெண்கள் தொடர்ச்சியாக வருகின்றனர் - அவர் வியர்த்து நிற்கின்றான் - பூவொன் ஓடையிலே படுத்திருக்கின்றது - கடை வாயிலில் மரம் நித்திரை செய்கின்றது” - இவ்வாறாக மனத்திலே தோன்றுபவற்றைத் தருக்க முறையிலே ஒழுங்கமைக்காது மாலைப்போன்று தொடுத்துக் கூறுதல், தங்கு தடையற்ற தொடர்ச்சியாகக் கூறுதல் நனவு அருவியின் பாற்படும்.
வில்லியம் ஜேம்ஸ் என்பவர் தாம் எழுதிய “உளவியற் கோட்பாடுகள்” என்ற நூலில் இந்தத் தொடரை முதலில் அறிமுகம் செய்தார். புனைக்கதைகளில் இந்த உபாயத்தை எழுத்தாளர்கள் தத்தமது விளக்கங்களுக்கும் அறிகைக்கும் ஏற்றவாறு பலவாறு பயன்படுத்தி வருகின்றனர்.
நாவல்களில் இந்த உபாயம் எழுத்தாளரின் “உள்மன ஒலி” என்று கூறப்படும். அங்கு நிகழ்கால உரையாடலே இடம்பெறும். உணர்ச்சி வடிவங்கள் முறிவின்றித் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும் என்பதை விளக்க “அருவி” என்ற எண்ணக்கரு இணைக்கப்பட்டது.
இந்த அணுகுமுறை பலவாறு விமர்சிக்கப்பட்டு வருகின்றது. எழுதுபவரின் மனக்கோலத் தொடர்ச்சியாக அமையும் ஒரு புனைவு. வாசகரைப் பொறுத்தவரை தொடர்ச்சியற்ற படிமங்களாயும் அமையலாம்
நிகழ்விழுமியம்
நிகழ்விழுமியம் என்பது நிகழ்காவியம் என்றும் குறிப்பிடப்படும். அரங்கியலில் இது சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. நிகழ்விழுமிய அரங்கு நிகழ்காவிய அரங்கு ஆகியவை “எப்பிக்தியேற்றர்” என்பதைக் குறிக்கும் தொடர்களாகும்.
நிகழ்விழுமியத்துக்குரிய உள்ளடக்கம் அரிஸ்ரோட்டலிடமிருந்து பெறப்பட்டதாகக் கொள்வர். அரங்கியலில் இப்பண்பை 1920ஆம் ஆண்டில் பிறெச்ற் அறிமுகம் செய்தார். அரங்கியலின் பல்வேறு உபாயங்களும் பார்வையாளரை அன்னியமாக்கிவிட்டமையைப் பிறெச்ற் உணர்ந்தார். நாடகம் உருவாக்கும் நுண்ணுணர்ச்சி மாயைகளை உடைத்தெறிந்து பார்வையாளரிடத்துக் காரணங்காணும் திறன்களை வளர்த்தெடுக்கும் உபாயம் நிகழ்விழுமிய அரங்கின் சிறப்பார்ந்த செயலாகும்.
பன்முக மட்டங்களிலான உரையாடல்களைக் கொண்ட இந்த அரங்கு சமூகம் சார்ந்ததும் அரசியல் சார்ந்ததுமான பகைப்புலன்களுக்கெ முதன்மையளிக்கின்றது.
அரங்கில் நிகழும் திரிபுக்காட்சிகளும், கண்மாயைத் தோற்றங்களும், உடைத்தெறிப்படுகின்றன. கண்முன்னே தோன்றுவது மேடையன்ற உணர்வு அவ்வப்போது ஊட்டப்படுகின்றது. முன்னர் காணாத ஓர் உணர்ச்சிப் பிரவாகத்தையூட்டும் காட்சிகள் குறுக்கேயும் இடையேயும் நாளாந்தம் பார்க்கும் மெய்மைசார் காட்சிகள் புகுத்தப்படும். நாடகத்தினிடையே அதன் செயல் ஓட்டத்தைத் தடுக்கும் உணர்ச்சி சார்பற்ற ஆவணப் படங்களைக் காட்டுதல், பாடல்களை உட்புகுத்துதல், சுலோகங்களைக் காட்டுதல் முதலியவை நிகழ்விழுமிய அரங்குகளிலே இணைக்கப்படுகின்றன.
நடிகர்களும் பாத்திரப் புனைவுகளில் முற்றாக ஊறிவிடாது. தம்மை மீட்டெடுத்துக் கொள்ளும் நுட்பவியலும் அவ்வப்போது கையாளப்படும். நிகழ்விழுமிய அரங்கின் தாக்கம் பிறகலையாக்கங்களிலும் இடம்பெற்றுவிடுகின்றது.
நுண்எழுத்துவாதம்
நுண்எழுத்துக்கள், அழகு நங்கையின் எழுத்துக்கள் என்றும், “ஃபயின் லெற்றேஸ்” என்றும் அழைக்கப்படும். “கலை கலைக்காக” என்பதை வலியுறுத்தும் வாதமாக இது விளங்குகின்றது.
இலக்கியம் எந்தவித சமூகப் பணியையும் மேற்கொள்ளாத தூயவடிவமாக இருக்கவேண்டுமென்றும், எவ்வித செயற்பாங்குப் பணிகளும் அதற்கு இருத்தலாகாது என்றும் இவ்வாதம் விதந்துரைக்கின்றது.
உள்ளடக்கம் நலிவுற்ற அலங்கார எழுத்துக்கள் நுண்எழுத்துக்கள் எனப்படும். சொற்சிலம்பமும், சொல் அலங்காரமும், எதுகை மோனையும் ஒலி நயப்புக் கோலங்களும் இவ்வகை இலக்கியங்களிலே ஆட்சி செய்யும். தமிழிர் இவ்வகை எழுத்தாக்க முயற்சியின் முன்னோடிகளுள் ஒருவராக ரா.பி. சேதுப்பிள்ளை விளங்கினார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையும், பிரச்சினைகளும், நெருக்கடிகளும் கூறப்படும்பொழுது உள்ளடக்கத்துக்குரிய உருவம் கட்டியெழுப்பப்படாது. உருவத்துக்கேற்றவாறு உள்ளடக்கம் சீர்குலைக்கப்பட்டாலும் நுண்எழுத்துவாதிகள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை.
தூய நுண்எழுத்துவாதம் உண்டா என்ற கேள்வியும் இலக்கிய விமர்சனங்களில் எழுப்பப்படுதலுண்டு. உள்ளடக்கமற்ற வெறும் உருவம் என்பது இல்லை என்ற அணுகுமுறையினூடாகவே இந்த வினா எழுப்பப்படுகின்றது.
தத்துவ அடிப்படையில் நுண்எழுத்துவாதம் உழைக்கும் மக்களுக்கு எதிரானதென்றும், போலி உணர்வுகளை அவர்களிடததே வளர்த்தெடுத்து, வரலாற்றுச் சக்கரங்களை எதிர்த்திசையிலே பின்னோக்கிச் செலுத்துவதற்கான உபாயம் என்றும் கொள்ளப்படும்.
மார்க்சியம்
சமுதாயத்தின் படிமலர்ச்சி பற்றி ஆராய்தல், சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தைப் புரட்சியால் மாற்றிமைத்தல், கமியூனிசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவை பற்றிய அடிப்படை விதிகளை விளக்கும் மெய்யிலாக மார்க்சியம் விளக்குகின்றது.
மார்க்சியம் மூன்று அடிப்படைகளைக் கொண்டது. அவையாவன.
அ) அதன் மெய்யியல்
ஆ) அதன் அரசியற் பொருளியல்
இ) அதன் விஞ்ஞான கம்யூனிய விளக்கம். மார்க்சிய மெய்யியலுக்குரிய தருக்க வடிவமாக இயங்கியற் பொருள்முதல்வாதம் விளங்குகின்றது. இந்த அணுகுமுறையை மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்றோர் சமுதாய வாழ்க்கைக்கு விரிவுபடுத்தி வரலாற்றியற் பொருள் முதல்வாதத்தை உருவாக்கினர். இயற்கை, சமூகம், சிந்தனை, மனச்சான்று, உணர்வு போன்றவற்றை அறிந்து விளங்குவதற்கு இவை விதிகளைத் தருகின்றன.
மார்க்சிய அரசியற் பொருளாதார கூலி, இலாபம், உபரிமதிப்பு, சொத்து, அரசு முதலியவற்றை பகுத்தாராய்கின்றது. இந்த ஆய்வுகளின் அடிப்படையாக முதலாளித்துவ சுரண்டல் வெளிப்படுத்தப்படுகின்றது. உற்பத்தியின் சமூக இயல்புக்கும், அதன் பெறுபேறுகளை அபகரிக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடு மார்க்சிய அரசியற் பொருளாதாரத்திலே சுட்டிக்காட்டப்படுகின்றது. இதன் காரணமாக முதலாளித்துவத்தின் அழிவு தவிர்க்க முடியாதிருத்தல் புலப்படுகின்றது.
விஞ்ஞான கம்யூனிசம் சமுதாயத்தை மீளமைத்துக் கட்டியெழுப்பும் வழிகளை விளக்குகின்றது. அதிகாரத்தைத் தொழிலாளி வர்க்கத்தினர் பொறுப்பேற்றல் பொதுச்சொத்துடமை, அன்னியமாகாத மனித வாழ்க்கை மனித, ஆளுமையை முழுநிறைவாகக் கட்டியெழுப்பல், அனைத்து மனிதரையும் மேலோங்கச் செய்யும் கல்விமுறை, கலை இலக்கிய ஆக்கங்கள் முதலியவற்றின் விளக்கங்கள் இதில் இடம்பெறுகின்றன. மக்கள் நுணமாண் நுழைபுலம் உடையோராயும், சீரிய படைப்புத்திறன் கொண்டவர்களாயும் மலர்விக்கப்படுவர். ஒவ்வொருவருடைய பன்முகப்பட்ட திறன்களும் மக்களின் மிக உன்னத நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.
மிதத்தல்வாதம்
நவீன விமர்சன முறைகளும் கண்டுபிடிப்புகளும் ஏற்கனவே தமது புராதன எழுத்தாக்கங்களில் இருந்ததென வாதாடுதல் இவ்வாதத்தின் பண்பு. ஒவ்வொரு கருத்துருவங்களும், கண்டுபிடிப்புகளும் தோன்றிய வரலாற்று வளர்ச்சியையும் சூழலையும் மிதத்தில் வாதம் நிராகரிக்கின்றது.
உதாரணமாக மார்க்ஸியக் கோட்பாடும் கிறீஸ்துவுக்கு முற்பட்ட காலத்து இலக்கியங்களிலும் எழுத்தாக்கங்களிலும் இருந்ததென்றும், படிமலர்ச்சிக்கோட்பாடு தொல்சீர் கவிதைகளிலே காணப்படுகின்றது என்றும் தொடர்பு காணல் மிதத்தல்வாதத்திற் காணப்படும்.
ஆசிய உற்பத்தி முறைமை, ஆசிய சமூகவமைப்பு என்பவற்றுக்கும் மிதத்தல்வாதத்துக்குமிடையே தொடர்பு உண்டு. தொன்மையான பண்பாட்டுத் தொடர்ச்சி இருந்து வருதலும், புராதன உற்பத்தி முறைமைகளின் எச்சங்கள் தீவிர சமூகப்புரட்சிகளால் முறியடிக்கப்படாமையும் மிதத்தல் வாதத்துக்குரிய சமூகக் கவிநிலைகளாயுள்ளன.
குடியேற்றவாதப் பின்னணியும், மேலைத்தேயப் பண்பாட்டு ஆதிக்கமும் மிதத்தல்வாதத்தைத் தூண்டுகின்றது. மேலைப்புல ஆதிக்கத்துக்கெதிரான ஒருவித உளவியற்கேடயமாகவும் இவ்வாதம் பயன்படுகின்றது.
இவ்வாறாகப் பல்வேறு தளங்களில் மிதத்தல்வாதத்தை விளக்க முடியுமாயினும், இவ்வாதம் கல்வி தொடர்பான கூர்மையான முன்னேற்றத்தைப் பின்னடையச் செய்துவிடுகின்றது.
படிமவாதம்
இவ்வாதம் கவிதைகளுக்கு அழகு தரும் ஓர் உபாயமாகவும் விளங்கியது. ஒருபுறம் அழகியற் பண்புகளுக்கு இவ்வாதம் பயன்பட்டாலும், மறுபுறம் அதிக விமர்சனங்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. “இமேயிசம்” எனப்படும் இவ்வாதம் 1909ஆம் ஆண்டுக்கும் 1917ஆம் ஆண்டுக்குமிடையே இங்கிலாந்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் எழுச்சி பெற்றது.
தாம் கூறவந்த கருத்துக்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் காட்சி வடிவம் கொடுக்கப் படிமவாதிகள் முயன்றனர். அகவுருவங்களைக் கட்டியெழுப்புதல் அவர்களின் தலையாய முயற்சியாயிற்று. அவற்றின் காரணமாகக் கவிதைகளுக்குச்; செறிவும் இறுக்கமும் தர முயன்றனர்.
புதிய ஓசைக்கோலங்களை வருவிப்பதற்குப் பேச்சு மொழியின் முக்கியத்துவத்தைப் படிமவாதிகள் கண்டறிந்தனர். படிமனங்களால் உருவாக்கப்படும் செறிவே கவிதையின் சாரம் என்பது அவர்களின் கருத்து.
கவிதைக்குரிய கருப்பொருளைத் தெரிவு செய்வதிற் படிமவாதிகள் தாராண்மைப் போக்குடையோராயிருந்தனர். பாரம்பரிய வரையறைகளைக் கைவிட்டுப் பரந்த புலத்தை ஏற்படுத்தினர். புதிய தொடுவானங்களை நோக்கிச் சென்றனர்.
படிமவாதம் கட்டற்ற கவிதையாக்கத்துக்குத் தூண்டுகோலாய் விளங்கியது. பாரம்பரிய யாப்புக் கட்டளைகளில் மீறலும் கீறலும் பதிவாகின. இசை தழுவிய தனித்தனித்தொடர்கள் கவிதைகளில் இடம்பெற்றன. பாடி இன்புறப்பட்ட கவிதை, மௌன வாசிப்பின் வழியாக தூண்டல் தரும் சாதனமாக மாறுவதற்கும் படிமவாதம் துணைசெய்தது.
படைப்பாளியின் சால்பு
இதனைப் படைப்பாளியில் ஒழுக்கம் என்றும் கூறலாம். படைப்பு வேறு, வாழ்க்கை ஒழுக்கம் வேறு என்று கருதுதல், சுரண்டலின் பிறிதொரு வடிவம்.
உறுதிகுன்றாத சமூகநோக:கு, எவ்வகைச் சுரண்டல் வடிவங்களையும் வேரோடு சாய்த்து வீழ்த்தப்பாடுபடுதல், சமதர்ம நம்பிக்கை, சமூகநலத்துக்கான நேர்மைமிக்க உழைப்பு, தாயகப் பற்றின் அடிப்படையிலிருந்து அகில நோக்கு விரிவாக்கப்படல், தேடல், தொடர்ந்து தேடல், ஆய்தல், மெய்ப்பொருள் காணல் முதலியவை ஒரு படைப்பாளியின் ஒழுக்கத்தில் இடம்பெற வேண்டியுள்ளன.
சமூக நலன்களுக்குக் கேடு விளைவிக்கும் ஆக்கங்களை வெறுக்க முடியாமை. மலின இலக்கியங்களுக்கும், கலைகளுக்கும் எதிரான போராட்டம் முதலியவற்றைப் படைப்பாளி முன்னெடுத்தல் வேண்டும். தான் என்ற செருக்கு அழிந்து கூட்டு வாழ்க்கையும் கூட்டுத் தோழமையும் காணப்படல் வேண்டும்.
சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் தூய்மை, எளிமை, அடக்கம் அநீதி கண்டு பொங்குதல், சமத்துவம் ஆகியவை காணப்படல்வேண்டும்.
நேர்மையின்மை, பதவி வேட்கை, தோழமைத் துரோகம், பொருள் அவா, சோம்பேறித்தனம், கல்வியை இழ்தல், ஆய்வுகளைப் புறக்கணித்தல், கற்க முயலாமை, விளங்க முயலாமை முதலியவற்றோடு இணக்கமற்ற போக்கைப் படைப்பாளி கடைப்பிடித்தல் வேண்டும்.
ஒரு படைப்பாளி தனது ஆற்றலை வைத்துக்கொண்டு அதற்காகப் பிரத்தியேக சலுகைகளைப் பெறமுயற்சிக்கக்கூடாது. தனது கலையாக்கங்களை மலினப்படுத்த முயற்சிக்கக் கூடாது. ஒவ்வொரு மனிதனிடத்தும், மகத்தான படைப்பாற்றல் உறங்கிக் கிடக்கின்றது என்பதைப் படைப்பாளி உணரல் வேண்டும். சுரண்டலற்ற சமூகத் தளத்தின் மீதுதான் முழுநிறைவான மனித ஆளுமையை ஒவ்வொரு மனிதரும் ஈட்டமுடியும் என்பதை அங்கீகரித்தல் வேண்டும்.
பயன்முதல்வாதம்
8ம் நூற்றாண்டில் முகிழ்த்தெழுந்து 19ம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இவ்வாதம் பலம்பெறத் தொடங்கியது. “யூட்டி லிற்றேறியனியம்” என அழைக்கப்படும் இவ்வாதத்தை தமது எழுத்தாக்கங்களாற் கட்டியெழுப்பியவர்களுள் பெந்தம், ஜேம்ஸ்மில், ஜே.எஸ்,மில் போன்றோர் சிறப்பிடம் பெற்றனர். “அதிகமானோருக்கு அதிகளவான மகிழ்ச்சி” என்ற வாசகம் பயன்முதல்வாதத்தில் இதய ஒலியாக அமைந்தது.
மக்கள் எதனை ஆழ்ந்து விரும்புகின்றார்களோ அதுவே நல்லது என்றும் மக்கள் எப்போதும் இன்பத்தையே ஆழ்ந்து விரும்புகின்றார்கள் என்றும், இன்பங்கள் பண்பளவிலே தம்முள் வேறுபடுகின்றன என்றும், இன்பங்களை ஒன்றோடொன்று சேர்க்முடியுமென்றும், இன்பம் ஒன்றே ஆழ்ந்த விருப்பத்துக்குரியது: அதுவே நல்லது என்றும் இவ்வாதம் விரித்துரைக்கின்றது.
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் விருத்திகொண்ட தனியார் முயற்சிப் பொருளாதார நடவடிக்கைகளும், கட்டற்ற பொருளாதாரத்தொழிற்பாடுகளும், அவற்றின் பின்னணியிலே படிமலர்ச்சிகொண்ட மேலைத்தேய அரசு முறைகளும் இவ்வாதத்தின் பின்னணிகளாக அமைந்தன.
எழுத்தாக்கங்களில் இவ்வாதம் பிறர் நலம் பேணல், தாராண்மையாக நடத்தல், மனித மேம்பாட்டுக்கு உழைத்தல், சமுதாய சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், தொழிற்பாடுகளின் பயனை வலியுறுத்தல் முதலியவற்றை உள்ளடக்கியது.
இவ்வாத்தில் விமர்சனத்துக்குரிய பல்வேறுபண்புகள் காணப்படுகின்றன. இன்பம் என்பது ஒருசிலரிடமே குவித்திருக்கின்றது என்ற நடப்பியலை மாற்றியமைப்பதற்குரிய உபாயங்களைக் கொண்டிருக்காத நிலையில் அதிகமானோருக்கு அதிகபட்சமான மகிழ்ச்சி என்பது வெறும் கற்பனை வாதமாகி விடுகின்றது.
பிரதேசவாதம்
உலகப்பெரும் போர்களைத் தொடர்ந்து எழுச்சி பெறத் தொடங்கிய இலக்கிய அணுகுமுறைகளுள் இதுவும் ஒன்றாக விளங்குகினற்து. பிரதேசவாதம் என்பது “றீஜினலிசம்” என்று அழைக்கப்படும். புவியியற் புலவாதம் என்றும் இதனைக் குறிப்பிடலாம். பிரதேசமென்பது மிகவும் பரந்த நிலைப்பொருள் கொண்டது. மிகப்பெரிய நிலப்பரப்பிலிருந்து மிகக் குறுகிய நிலப்பரப்பு வரை பிரதேச அலகு வேறுபடும்.
புவியியல், மொழி, பண்பாடு, தொழிற்பாடு என்பவற்றின் அடிப்படையாகப் பிரதேசம் வரையறை செய்யப்படலாம். பிரதேசக் காட்சிகளை சித்தரித்தல், புவியியற் புலம்சார் நயப்பு, பிரதேச மொழிவழக்கைப் பயன்படுத்துதல், பண்பாட்டுக் கோலங்களைத் தருதல் பிரதேச விழுமியங்கை முன்வைத்தல் முதலியவை இங்கு சிறப்பிடம் பெறுகின்றன. மக்களாட்சி முறைமையின் வளர்ச்சியும் பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறைமையும் பிரதேச இலக்கியங்கள் எழுச்சிக்குத் தூண்டு விசைகளாய் விளங்கின.
ஒவ்வொரு பிரதேசங்களுக்குமுரிய தனித்துவமான பண்புகளையும், பிரச்சினைகளையும் கலை இலக்கியங்கள் வாயிலாகக் காட்டுதல் பிரதேசவாதத்தின் தலையாய பணியாகக் கொள்ளப்படுகின்றது. இவற்றின் நோககம் புரிந்துணர்வை வளர்ப்பதேயன்றி குறுகிய சிற்றுணர்வுகளை வளர்த்தல் அன்று என்பதை மனங்கொள்ளல்வேண்டும்.
பிறப்புரிமை நெறியாள்கை
பிறப்புரிமை வாயிலாக ஒருவர் பெற்றுக்கொண்ட பண்புகளை மாற்றியமைப்பதற்கான முயற்சி இதுவாகும். இதனைப் பிறப்புரிமை இயந்திரவியல் அல்லது “ஜெனரிக் எஞ்ஜினியரிங்” என்று கூறுவர்.
கல்வியாலும், கலை இலக்கியங்களாலும், சத்திரசிகிச்சை வாயிலாகவும் ஒருவரது பிறப்புரிமைப் பண்புகளை மாற்றியமைக்கலாம். இவை “வெளிக்கட்டுப்பாடு” என்ற பிரிவில் அடங்கும்
பிறப்புரிமை அலகுகளின் தனித்துவமான தொகுதி டி.என்.ஏ என்று அழைக்கப்படும். ஒருவருக்குரிய உடல் உள்ளத்திறன்கள், நோய்கள், ஆளுமை முதலியவற்றை டி.என்.ஏ. தொகுதியை மாற்றியமைப்பதன் வாயிலாக விருத்தி செய்து மேம்படுத்தமுடியுமென பிறப்புரிமை நெறியாள்கை வலியுறுத்துகின்றது.
பிறப்புரிமை நெறியாள்கையிற் கலை இலக்கியங்கள் பற்றிய தொடர்புகளும் ஆராயப்படுகின்றன. நல்ல இலக்கியங்களை வாசித்தல், நல்ல இசையைக் கேட்டல், ஆக்கபூர்வமான திரைப்படங்களைப் பார்த்தல் என்பவை பிறப்புரிமை அலகுகளிலே நன் மாற்றங்களை வருவிக்கும் என்று கொள்ளப்படுகின்றது.
மலினமடைந்த இலக்கியங்கள் ஆபாசத் திரைப்படங்கள், அபசுரம் தட்டும் பொப்பிசை முதலியவற்றை அனுபவித்தல் பிறப்புரிமை அலகுகளில் எதிர்நிலையான மாற்றங்களை வருவிக்கும்.
பிறப்புரிமை நெறியாளர் அண்மைக் காலமாக தமது கருத்துக்களை மேலும் விரிவுபடுத்தி வருகின்றனர். தனித்தனி மனிதர்களிலே சத்திரசிகிச்சை செய்து விரும்பத்தக்க நன் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும்பார்க்க, சூழலை மாற்றியமைத்து, சூழற் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, அவற்றின் வாயிலாக மனிதரின் பாரம்பரியத்தில் வியத்தகு மாற்றங்களை வருவிக்க முடியுமென்று கருதுகின்றனர்.
புதியகட்டமைப்புவாதம்
கட்டமைப்புக் குலைப்புக் கோட்பாடு, நவ கட்டமைப்பு, “டிகொன் ஸ்ரக்சன்”, “போஸ்ற்ஸ்ரக்சரலிஸம்” போன்ற பல்வேறு பெயர்கள் இதற்குச் சூடடப்பட்டுள்ளன. ஜோநதன் ஹல்லர் (1982), ஜெ. ஹில்ஸ் மில்லர் (1985) மைக்கல் பௌக்கல்ற் (1988) முதலியோரது எழுத்தாக்கங்கள் இந்தக் கோட்பாட்டை வளர்ப்பதற்கு பெரிதும் துணை புரிந்துள்ளன.
மொழிக்கும் நடப்பியலுக்கும் இடையேயுள்ள தொடர்பு எழுந்தமானமாக அமைகின்றது. இலக்கியமும் அதற்குரிய விளக்கங்களும் மொழியை மூலப்பொருளாகக் கொள்வதாகையால் அவை மொழியியல் அமைதியையும், இணக்கத்தையும் பெறவேண்டியுள்ளன. இலக்கிய ஆக்கமும் மொழியும் இயல்பாகவே படைப்புத் திறன்களைக் கொண்டிருப்பதால் அவை பல்வேறு கருத்துக்களையும், பொருளையும் தந்த வண்ணம் இருக்கும். இந்நிலையில் சரியான விளக்கம் என்று எதையும் நிலைநிறுத்த முடியாதிருக்கும்.
கருத்து விளக்கம் என்பது கட்டற்ற விளையாட்டாக செயற்படக்கூடியது. ஒரே இலக்கியம் பல்வேறு வகையான பொருள்கோடலுக்கு இடம்தர வல்லது. எமது உரையாடல்களிலே நைந்துபோன அல்லது வீச்சுக் குன்றிய தொடர்கள் பல காணப்படுகின்றன. இலக்கிய சிருஷ்டியின் பொழுது நாம் வரையறுக்கப்பட்ட தொடர்களுக்குள் நின்று ஆக்கம் புரிகின்றோம். புதிய புதிய அனுபவங்களை வெளியிடுவதற்கு ஏற்கனவே பாவனையிலுள்ள சொற்களும், தொடர்களும் பயன்குன்றிவிடுகின்றன. அவ்வகையான சொற்கள் நடப்பியலைக் காட்டாது ஏமாற்றியும் விடுகின்றன. இலக்கியத்தைப் படைப்பவர் சொற்களுக்குள்ளே சிக்குண்டு சிறைப்பிடிக்கப்பட்டுவிடுகின்றார். இவ்வாறான கட்டமைப்பானது குலைத்துவிடப்பட வேண்டியுள்ளது.
புதிய விமர்சனம்
புறவயமான திறனாய்வு என்றும் இது அழைக்கப்படும். “நியூகிறீற் றிசிசம்} எனப்படும் இந்த ஆய்வின் முன்னோடிகளாக ஐ.எ.றிச்சர்ட்ஸ் (1929) ச. புறூக்ஸ் (1947) டபிள்யூ. கே. விம்சாற் (1954) ஆகியோர் விளங்குகின்றனர். இந்த அணுகுமுறைக்கு முற்றிலும் முரணானது வாசகர்துலங்கல் அணுகுமுறையிற் கவனம் என்பது இலக்கியப் பிரதியைவிடுத்து வாசகரை நோக்கி நகர்ந்து செல்லும். ஆனால் புதிய விமர்சனத்தில் வாசகனிலும் பார்க்க இலக்கியப் பிரதியே முதன்மைப்படுத்தப்படும். இலக்கிய ஆக்கத்திலே மூழ்கிவிடாது வாசகர் தம்மை வேறுபடுத்தி, சுயாதீனப்படுத்தி, அதிலிருந்து விடுபட்டு, விமர்சனம் செய்யவேண்டுமென இங்கு வலியுறுத்தப்படுகின்றது. பல்வேறு நிலைகளில் பல்வேறு வியாக்கியானங்களுடன் கலைப்படைப்பு வாசிக்கவும் விளங்கவும் படத்தக்கதாக அமைதல் இந்த விமர்சன முறையிலே சுட்டிக்காட்டப்படுகின்றது.
கலைப்படைப்பு உருவம், உள்ளடக்கம், அனுபவம், கருத்து, அனைத்தும் ஒன்றுதிரண்ட ஒரு முழுப்பொருள் என்பதும், சாதாரண மொழியிலிருந்து கலைப்படைப்புக்குரிய மொழிநடை வேறுபட்டு நிற்பதுடன் பல்வேறு முரணான வலுக்களை அது தம்முள்ளே கொண்டிருக்கும் என்பதும் இந்த விமர்சன முறையிலே முன்வைக்கப்படுகின்றது. கலைப்படைப்புக்குரிய மொழியானமு வினோதம் விளைவிக்கும் மொழியாக இருப்பதும் சுட்டிக் காட்டப்படும். இதன் காரணமாக ஒரே கலைப் படைப்பைப் பலரும் பல்வேறு விதமாக விளங்கிக் கொள்ளுகின்றார்கள். இந்தத் திரிபு நிலைக்குக் கலைப் படைப்பின் உட்பொதிந்துள்ள விநோத மொழித் தொடர்பே காரணமாக அமைகின்றது. படைப்பு “சொல்” வடிவ விக்கிரமகம்” என அழைக்கப்படும்.
புதுமோடிவாதம்
மேலைக்கலைப்புலத்தில் இது “அவன்ற்கார்ட்” என்று அழைக்கப்படும். இன்று திறனாய்வுகளில் “அவன்ற்கார்ட்” என்ற தொடர் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தத் தொடர் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தத் தொடர் இராணுவ அகராதியிலிருந்து பெறப்பட்டது. “முன்னேறிய அணி” என்பது இதன் கருத்தாகும். கலை இலக்கியக் களத்தில் மேற்கொள்ளப்படும். நவீனத்துவமான பரிசோதனைகள், புதிய வடிவங்களை ஆக்குவதற்கான தேடல், பாரம்பரியமான கலை இலக்கிய தளங்களை மாற்றுவதற்கான சிந்தனைகள் முதலியவை புதுமோடிவாதிகளால் முன்வைக்கப்படுகின்றன.
பாரம்பரியமான கதை சொல்லும் உபாயங்களும், கவிதை படைக்கும் நெறி முறைகளும் புதுமோடிவாதிகளால் உடைக்கப்படுகின்றன. நாவல்களிலே பிரதான கதாபாத்திரமென்பது இல்லாதிருக்கும். பாரத்பரியமான ஆற்றலுள்ள ஒரு கதாபாத்திரத்துக்குப் பதிலாக, மெலிந்து நலிந்து ஆற்றல் குன்றிய தலைமைப் பாத்திரங்கள் புனையப்படும். இவை எதிர்நாவற் பண்புகள் என்றும் எதிர்த்தலைமைப் பாத்திரப் புனைவுகள் என்றும் கூறப்படும்.
புதுமோடிவாதிகள் மொழிப்பிரயோகத்திலும் பரிசோதனை செய்ய முயல்வார்கள். பாரம்பரியமான மரபுத் தொடர்களுக்குப் பதிலாக புதிய புதிய தொடர்களைக் கட்டவிழ்த்து விடுவார்கள். தாமே புதிய புதிய சொற்களை ஆக்க முயல்வார்கள்.
1920ஆம் ஆண்டளவில் பிரான்ஸ் நாட்டின் அரங்கியலுக்கு புதிய வலுவைக் கொடுக்கும் நோக்குடன் அவன்ற்கார்ட் இயக்கம் உள்நுழைந்தது. சினிமாவின் தாக்கங்களிலிருந்து அரங்கியலின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் இந்த இயக்கம் துணை செய்தது.
பரிசோதனைகள் மட்டுமன்றி விரைந்து செல்லும் தீவிரவாத இலக்கியங்களும் இன்று புதுமோடிவாதத்தில் அடக்கப்படுகின்றன.
புனைநினைவுவாதம்
இதனை “நொமன்டிஸ்ஸம்” எனவும் கூறுவர். பல்வேறு பண்புகளில் இது தொல்சீர்வாதத்துடன் முரண்பாடு கொள்கின்றது. தொல் சீர்வாதம் புதுத்தன்மைகளை விளக்க புனைவுநிலைவாதம் தனித்தன்மைகளை நயப்புடன் தருகின்றது.
இவ்வாதம் தனிமனிதப் பண்புக்கு முதன்மை அளிக்கின்றது: பொதுநியமங்களைக் கடந்தது: மனவெழுச்சிவயப்பட்டது: இயக்கவியல் கொண்டது என்று விளக்கப்படுகின்றது.
தனிமனிதர்களுடைய தனித்துவமான மனவெழுச்சிகளைக் காட்டுதல் இங்கு சிறப்பிடம் பெறுகின்றது. வௌ;வேறு மனக்கோலங்கள் காண்பிக்கப்படும். பொதுவான சமூக விழுமியங்களுடன் கட்டுப்பட்டுச் செல்லாத தனிமனித உணர்வுகளும், மனவெழுச்சிகளும், வேட்கைகளும், உளஉடை பாடுகளும் புனைவுநிலையாக்கங்களிலே மேலோங்கி நிற்கும்.
சமூகத்தில் பொது நியமங்களிலிருந்து தனிமனிதனது தவிப்பை வேறுபிரித்துக் காட்டும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்படும். நிகழ்ச்சியை மிகைபடக் கூறுதலும் அதி நுண்ணுணர்வுகள் கலந்து புனைந்துரைத்தலும் இடம்பெறும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இந்த இலக்கிய இயக்கம் தொல்சீர் வாதத்துக்கு எதிராக மேலை இலக்கிய உலகிலே எழுச்சி கொண்டது. நியமமான இலக்கிய உரைநடை கைவிட்டு வழக்குமொழியைப் பயன்படுத்துச் சென்றன. நாட்டார் இலக்கிய வழக்குகளையும் அவை உள்வாங்கின. தனிமனித சுதந்திரம் தனிச் சொத்துரிமை என்பவற்றுக்கும், இனவாதத்திக்கும் இடையே இடையுறுவுகள் காணப்படுகின்றன.
கலை இலக்கியங்களில் எழுந்த புதிய வாதங்கள் புனைவுநிலை வாதத்தின் வீழ்ச்சிக்கு வழியமைத்தன. புதிய அறைகூவல்களுக்கேற்றவாறு புனைவுநிலைவாதிகள் தமது முகத்தோற்றங்களை மாற்றியமைக்க முயன்றனர்.
பூர்வீகக்கலை
இதனை “பிறிமிற்றிவ் ஆர்ட்” எனவும் வழங்குவர். இது இருபொருள் உணர்த்தும் பண்புடையது. புராதன மக்கள் தமது வாழ்வியல் தழுவிய உணர்ச்சிகளை ஓவியங்களாக கற்பாறைகளிலே தீட்டியும் மரங்களிலே குடைந்தும் மண்ணிலே வனைந்தும் செய்த ஆக்கங்கள் பூர்வீகக் கலையில் இடம்பெறும் ஒழுங்கமைந்த கல்வி இடம்பெறாத சமூகக் கவிநிலையின் வெளிப்பாடாக பூர்வீகக்கலை விளங்குகின்றது. தொழிற்பிரிவும் சிறக்கும் இயல்பும் வளராத நிலையில், வேட்டையாடுபவரே பாடகராகவும், இசைக்கருவி மீட்டுபவராயும், ஓவியப் புலவனாயும் செயற்படல் பூர்வீகக்கலையின் பிறிதொரு பண்பை விளக்கும்.
பூர்வீகக் கலைக்கும் பிறிதொரு விளக்கம் உண்டு. குறித்த ஒரு கலைத் துறைக்குரிய பயிற்சியின்றிஅ அத்துறையில் ஈடுபடலும் பூர்வீகக் கலை என்றே கொள்ளப்படும். கேள்வி ஞானத்திலே பாடுவோர். போதிய முற்பயிற்சி இன்றி நடிப்போர், ஓவியப் பயிற்சி இன்றி ஓவியம் வரைவோர், இலக்கியக் கல்வி இன்றி இலக்கியம் படைப்போர் ஆகியோரது ஆக்கங்கள் பூர்வீகக் கலையின் பாற்படும். நவீன கல்வி வளர்ச்சி எத்தகைய கலைத்துறைக்கும் உரிய கல்வி ஒழுங்கமைப்பையும், ஆராய்ச்சியையும் உள்ளடக்கிச் செயற்படுகின்றது. குறித்த கலைத் துறைக்குரிய கல்வியைப் பெறாது அருட்டுணர்வுகளின் காரணமாகவும் பாதிப்புக்களின் காரணமாகவும், கலை ஆக்கங்களிலே ஈடுபடுவோரது ஆக்கங்கள் பொதுவாகச் செம்மையுறா ஆக்கங்களாக இன்றைய நிலையிலே விளங்குவதால், அவை பூர்வீகக் கலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பௌதிக அதீதம்
பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிதையாக்கங்களிலே செல்வாக்குச் செலுத்திய இவ்வாதம் இந்நூற்றாண்டில் மீளவும் புதுப்பிக்கப்பட்டது. பௌதீக அதீதம் என்பது “மெற்றாஃபிஸிக்ஸ்” என்றும் குறிப்பிடப்படும். ஜோன் டோனி (1573 - 1631) என்பவரே பௌதிகவதீத கவிதையாக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.
சிக்கலான கருத்துத் தொகுப்புக்களையும் உணர்ச்சிக் கோலங்களையும் ஒன்று திரட்டி ஒரு கலவையாகத் தருதல் பௌதிகவதீதக் கவிதைகளின் தலையாய் பண்பாகும் பல்வேறுபட்ட மனவெழுச்சிகள் வேண்டுமென்றே ஒன்றிணைக்கப்படுகின்றன. வேறுபாடு கொண்ட மனவெழுச்சிகளையும், உணர்ச்சிகளையும், மனப்பாங்குகளையும் ஒன்றுகலந்து கோவையாக்குதலைப் புனைவுநிலைவாதம் நழுவ விட்டு வந்துள்ளது. ஆனால் பௌதீகவதீதம் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கத் தொடங்கியது. ஒரு வகையில் இராக மாலிகைக்கும் இவ்வாதத்துக்கும் தொடர்பு உண்டு.
“தூய உணர்ச்சி” என்று கூறப்படத்தக்க வடிவம் ஒன்றில்லை என்பது பௌதீகவதீதவாதிகளின் கருத்து உணர்ச்சிகளள் சூழலாற் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன என்பதை அவர்கள் வலியுறுத்துவர். இந்த அணுகுமுறையிலும் பௌதீகவதீதம் புனைவு நிலைவாதத்திலிருந்து வேறுபடுகின்றது.
வாழ்க்கையிலே தலைவனும் தலைவியும் சேர்தல் என்பது ஒரு கேத்திர கணிதத் தொகுப்பைப் போன்றது. இரண்டு பொருள்கள் ஓர் இணைப்பால் ஒரு பொருளாக்கப்படுவதற்கு ஒப்பானதே காதல் வாழ்க்கை இணைப்பை இலகுவாகப் பிரித்து விடலாம். ஒன்று நிலைத்திருக்க மற்றயதை நகர்த்தலாம். இருகோடுகளை நகர்த்துவது போன்ற ஒரு விளையாட்டு.
பௌதிகவதீதக் கவிதைகளிற் கருத்து வடிவங்களே ஓசை வடிவங்களிலும் மேலோங்கி நிற்கும். படிமங்கள் மேலோட்டமான அலங்காரங்கள் அல்லவை என்றும் கவிதையமைப்பில் ஒன்றிணைந்த முழுமை கொண்டவை என்றும் வற்புறுத்தப்படும்.
ஓவியத்தில் இவ்வாதம் 1911ஆம் ஆண்டுக்குப் பின்னர் வளர்ச்சி பெற்றது. ஓவியத்தின் பொருண்மைக்கும் ஆழ்ந்த கருத்துக்களுக்கும் முதன்மை வழங்கப்படுகின்றது.
மறுமலர்ச்சி
15,16,17ஆம் நூற்றாண்டுகளின் காலப் பகுதிகளை உள்ளடக்கிய கலை இலக்கிய எழுச்சிகளை இத்தொடர் புலப்படுத்தும். இதன் வரை விலக்கணம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டும் காணப்படும். மறுமலர்ச்சி என்பது “மீள்பிறப்பு” என்றும் “றினைசோன்ஸ்” என்றும் குறிப்பிடப்படும்.
இரண்டு பிரதான வரலாற்று நிகழ்ச்சிகள் மறுமலர்ச்சியின் பிறப்புக்குத் துணை நின்றதாகக் குறிப்பிடுவார்கள். 1453ஆம் ஆண்டில் கொன்ஸ்தாந்தினோபிள் நகரம் துருக்கியர் வசம் வீழ்ச்சியடைந்தமை அறிவாக்கங்கள் தொடர்பான பெயர்ச்சியை ஏற்படுத்தியது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் முதலியோர் தமது கலைப பொதிகளுடன் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினார்கள்.
இரண்டாவது வரலாற்று நிகழ்ச்சியாக அமைவது அச்சுவாகனத்தின் கண்டுபிடிப்பாகும். நூல்களை விரைந்து படியெடுத்துப் பரப்பக்கூடிய விசை தோன்றியது. கல்வி, கலைகள் என்பவற்றைப் பாதுகாக்கவும் பரப்பவும் வல்ல செயங்பாடுகளுக்கு அச்சுவாகனம் வழியமைத்தது. தனிமனிதவாதமும், உலகியலும் மறுமலர்ச்சிக் கால கலை இலக்கியங்களின் உள்ளுரையாக விளங்கின. இவை புராதன கிரேக்க இலக்கியங்களில் உட்பொதிந்து இருந்தமையால் அவற்றை மீளாய்வு செய்தலும், விளக்கங்கள் பெறுதலும் பயனுடமையை ஏற்படுத்தின.
மேலாண்மைகளைப் புறக்கணித்தல், முழுமையான தனிமனிதப் பண்புகளை வளர்த்தல் முதலியவை மறுமலர்ச்சிக் கோட்பாடுகளாய் விளங்கின.
மறுமலர்ச்சி என்பது உரைநடை எழுச்சியோடும் இணைந்திருந்தது. பண்டைய இலக்கியங்களை ஆய்வு செய்தலும், விளக்குதலும் உரைநடை வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. கல்வியியலைப் பொறுத்தவரை தொல்சீர் இலக்கியங்களையும், காவியங்களையும் மீளக் கற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய கலைத்திட்ட - முறைமைக்கியைந்த பாடநூலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதிதீவிர கற்பனைப் புனைவுகளை உள்ளடக்கிய புனைகதைகள் வளர்ச்சியுற்றன. ஓவயம், கட்டிடக்கலை என்பவற்றிலும் மறுமலர்ச்சியின் தனித்துவங்களைக் காணலாம்.
மனப்பதிவுவாதம்
இலக்கியம், இசை, ஓவியம், அரங்கு என்ற அனைத்துத் துறைகளிலும் விதந்துரைக்கப்பெறும் வாதங்களுள் ஒன்றாக இது விளங்குகின்றது. கலை இலக்கியங்களின் வடிவங்களிலும் பார்க்க அவை வருவிக்கும் உளத்தாக்கங்களுக்கு முதன்மை தருவது மனப்பதிவு வாதம் ஆகும்.
மனப்பதிவுவாதத்தை “இம்பிறெசனிசம்” என்றும் பதிவுநவில்வாதம் என்றும் குறிப்பிடுவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் நாட்டில் இவ்வாதம் எழுச்சி பெறத் தொடங்கியது. புகழ் பூத்த ஓவியர்களாகிய சிசான், பிசாரோ, றினொயிர் போன்றோர் தமது ஓவியங்களில் மனப்பதிவு வெளியீட்டுக்கு முதன்மை தந்தனர். வண்ணங்களாலும் கையசைவுக் கோடுகளாலும் இந்த ஓவியர்கள் உணர்ச்சிப் பதிவுகளை வரவழைத்தனர்.
இசையில் இந்த வாரம் இசை வடிவங்களுக்கும், தருக்க ஒழுங்கமைப்புக்கும் முதன்மை கொடுக்காது இசையால் வருவிக்கப்படும் நுண்உணர்வுகளின் தூண்டற்பதிவுகளுக்கு முதன்மை கொடுக்கின்றது.
இலக்கியங்களில் “நனவு அருவி”யினை உருவாக்குதலோடு இந்த வாதம் இணைந்துள்ளது. விஷயத்தை பகுத்தொ தொகுத்தோ ஆராயாமல் உடனடியாகக் கொடுக்கப்படும். தூண்டல்களைப் பற்றி சிந்திப்பதே இவ்வாதத்தின் தலையாய பணி, பொருளிலும் பார்க்க பொருள் பற்றி விமர்சனத்தைத் தூண்டிவிடல் மனப்பதிவுவாதம் தொடர்பான விமர்சன அணுகு முறையாகும்.
கவிதையில் இவ்வாதத்தைக் கையாளுவோர் குறியீடுகளையும் படிமங்களையும் பயன்படுத்தி வாசகர் மனதிலே அருட்டல்களையும் நெருடல்களையும் தூண்டற்பேறுகளையும் ஏற்படுத்துகின்றன.
மனிதநேயவாதம்
இதனை மனுடவாதம் அல்லது “ஹியுமனிசம்” என்றும் அழைப்பர் பதின்னாலாம் நூற்றாண்டில் மேலைப்புல இலக்கிய உலகில் வளர்ச்சிபெறத் தொடங்கிய இவ்வாதம் பதினைந்தாம் பதினாறாம் நூற்றண்டுகளில் மேலும் விருத்தியடைந்தது. இவ்வாதத்தின் புகழ்பெற்ற தாயகமாக இத்தாலி விளங்கியது.
மானுடவாதிகள் தொல்சீர் இலக்கியங்களை மீள்கண்டுபிடித்தல் செய்தனர் புராதன இலக்கியங்களுக்குப் புதுவாழ்வு தந்தனர். பண்டைய இலக்கியங்களின் பல்வேறு பிரதிபேதங்களை ஆராய்ந்து இயன்றவரை சரியான வடிவங்களக் கண்டறிய முயன்றனர்.
மனிதனின் சிறப்பும், மானுட மேன்மையும், ஆற்றலும், முழுமையும் இவ்வாதத்திலே வற்புறுத்தப்பட்டது. இடையறா அன்பும், மகிழ்ச்சியும, சாந்தியும் உலக மாந்தர் மத்தியில வளர்க்கப்படல் வேண்டும். ஆண், பெண் இருபாலாரும் கல்வியில் மேலோங்க வேண்டும். மனிதரின் ஆற்றல்களும் ஆளுமையும், பூரணமாக வளர்க்கப்பட்டுச் சமநிலை கொண்ட மனித வாக்கம் நிறைவேற்றப்பட வேண்டுமென இவ்வாதம் வேண்டுகின்றது.
புராதன கிரேக்க, றோம சிந்தனைகளில் மானுடவாதிகள் பெரிதும் ஈடுபாடு கொண்டனர். உயர்ந்த விழுமியங்களைக் கட்டியெழுப்பும் செம்மை சான்ற வடிவங்களாக அவர்கள் புராதன இலக்கியங்களைக் கருதினர். சமகால இலக்கியங்களைக் காட்டிலும் பண்டைய இலக்கியங்கள் சிறந்தவை என்பதும், மேன்மையானவை என்பதும் மானுடவாதிகளின் கருத்தாகும்.
இவ்வாதம் மறுமலர்ச்சிக் கல்வியுடன் இணைந்திருந்தது. மாணவரின் உடற்பண்புகளுடன் உளப்பண்புகளும் ஒருங்கிணைந்த முறையில் வளர்க்கப்பட வேண்டுமென்று கருதப்பட்டது.
மாதிரிகையாக்கம்
மாதிரிகை என்பது காட்டுரு என்றும் “மொடெல்” என்றும் அழைக்கப்படும். மாதிரிகை யாக்கம என்பது ஒரு புதிய மொழியமைப்பு முயற்சி என்றும் கூறப்படும். குறித்த கருத்தை ஒழுங்குற வலியுறுத்துவதற்குத் திறம்பட அமைக்க முயன்ற மொழி வடிவமாக மாதிரிகையைக் கொள்வர். ஒருபுறம் சிந்தனைப் போக்கு, கலைப்போக்கு ஆகியவற்றை விளங்கிக் கொள்வதற்கும், மறுபுறம் சிந்திப்பதற்கும் கற்பனை செய்வதற்கும் மாதிரிகை துணை செய்யும்.
கருத்து வடிவங்களைக் காட்சி வடிவ மாதிரிகையாக்கலாம். அவ்வாறே காட்சி வடிவங்களைக் கருத்து வடிவமாதிரிகைகளாக்கலாம். சிக்கலான நிலைமைகளைத் தெளிவுபடுத்துவதற்கு மாதிரிகை பயன்படுகின்றது.
குறியீட்டுவாதத்திலிருந்து மாதிரிகைவாதம் வேறுபடுகின்றது. குறியீடுகள் வரையறுக்கப்பட்டதாயும், யாதாயினும் ஒரு பண்பினை மட்டுமே சுட்டிக்காட்டுவதாயும் பெரும்பாலும் அமைகின்றன. மாதிரிககள் முழுச்செயற்பாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முயற்சிகளாயுள்ளன.
வடிவமைப்புச் சார்ந்த விஞ்ஞானமாக மாதிரிகை விளங்குகின்றது கலை, இலக்கியம், விமர்சனம் ஆகியவறறில் மாதிரிகைகளை உருவாக்கிச் சிந்தனைத் தெளிவினை ஏற்படுத்த முடியும்.
மாதிரிகையாக்கத்தின் பிரதான பண்பு எத்தகைய சந்தர்ப்பத்தில் அது இயலாமை கொள்ளுகின்றது என்பதை வெளிப்படுத்தி நிற்றலாகும். கலை இலக்கியங்களை;ப பொறுத்தவரை மாதிரிகையாக்கம் பிறிதொரு வரையறையையும் கொண்டுள்ளது.
பொதுமைகாணலின் அடிப்படையாக மாதிரிகைகள் உருவாக்கப்படும்பொழுது, பொதுமைகளிலிருந்து விலகி நிற்கும் கலை இலக்கியத் தொகுதிகளின் தனிப்பண்புகள், கணிப்பிலடங்காது விடப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
முரணியற் சடவாதம்
இந்த வாதம் இலக்கிய ஆய்வுகளுக்கு மட்டுமன்றி அனைத்துப் புலங்களுக்கு முரியதாக விளங்குகின்றது. பொருள்கள், சம்பவங்கள், காட்சிகள், காரியங்கள் அனைத்திலும் முரண்பாடு எங்கும் நிறைந்துள்ளமையை முரணியற் சடவாதம் குறிப்பிடுகின்றது.
எதிர்மறைகளிடையே போராட்டமும் ஒற்றுமையும் ஒன்றிணைந்துள்ளன. இவ்வாறான போராட்டமும் ஒற்றுமையும் ஏககாலத்திற் காணப்படுவதால் இயக்கம் நிகழ்கின்றது.
சமூகம் என்ற முழுப்பொருளிலும் முரண்பாடு காணப்படுகின்றது. அந்த முரண்பாடும் சமூக இயக்கத்துக்குக் காரணமாகின்றது. சமூக முரண்பாடுகள் பலதரப்பட்டவை: பன்முகமானவை, சிறிய முரண்பாடுகளிலிருந்து பாரிய முரண்பாடுவரை சமூகத்திலே காணப்படுகின்றன. மிகப் பெரிய சமூக முரண்பாடு சமூக பொருளாதாரக் கட்டமைப்பின் வழியாகப் பிறக்கின்றது. இந்த அடிப்படையிற் பார்க்கப்போனால் வர்க்க முரண்பாடே சமூக முரண்பாடுகளுள் வலிதாகவும் பெரிதாகவும் காணப்படுகின்றது.
சமூக முரண்பாடுகளைக் கலை இலக்கியங்கள் எவ்வகையில் அணுகி நிற்கின்றன: எவ்வகையிற் புடமிட்டுக்காட்டுகின்றன. முரண்பாடுகளின் அடிப்படையாகப் புரட்சிகர உணர்வுள்ள எவ்வாறு கட்டியெழுப்பப்படுகின்றன. என்பவை ஆராயப்படுகின்றன.
முரணியற் சடவாதம் அளவு மாற்றம் பண்பு மாற்றங்களை வருவிப்பதைக் குறிப்பிடுகின்றது. இதன் அடிப்படையாகவே சமூகப் புரட்சி பற்றி விளக்கலாம். அளவு படிப்படியாக அதிகரித்துச் செல்லப்பட, குறித்த பொருளின் பண்பும் மாற்றமடையும். பண்பு மாறும்பொழுது அந்த மாற்றம் திடீரென உதைத்தெழும் மாற்றமாக நிகழும் சமூகத்தில் நிகழும் அவ்வாறான பண்பு மாற்றம் “புரட்சி” என்ற எண்ணக் கருவாற் புலப்படுத்தப்படும்.
யதார்த்தவாதம்
இது நடப்பியல் என்றும் “றியலிசம்” என்றும் குறிப்பிடப்படும். வாழ்க்கையைப் புறவயமான நேர்மையுடன் கலை இலக்கியங்களிற் காட்டுவதே யதார்த்த வாதமாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வளர்ச்சி பெறத்தொடங்கிய இவ்வாதம், பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேலும் பரவிப் படந்தது. மனவெழுச்சிகளுக்கு அடிமையாவதற்கு எதிரான போராட்டமாகவும், புனைவுநிலைவாதத்திற்கெதிரான கிளர்ச்சியாகவும் யதார்த்தவாதம் எழுந்தது.
யதார்த்தவாதத்திற்கும் இயற்பண்புவாதத்திற்குமிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. இயற்பண்புவாதத்திற் கற்பனைகளுக்கு இடமில்லை. யதார்த்தவாதத்தில் வாழ்வோடு இணைந்து கற்பனைகளுக்கு இடமுண்டு.
“கலை கலைக்காக” என்ற கோட்பாட்டை யதார்த்தவாதம் நிராகரிக்கின்றது. கலைக்குத் தலையாய சமூகக் கடமை உண்டென்பதை யதார்த்த எழுத்தாளர் வற்புறுத்துவர். இத்தாலியின் புகழ் பூத்த யதார்த்த எழுத்தாளராக விளங்கிய வேர்கா (1840 - 1922) என்பவர் மீனவரின் வாழ்க்கை முறையில காணப்படும் சமூக ஏறுநிலை அமைப்பையும் அதன் அடிப்படையான முரண்பாடுகளையும், நெருக்கடிகளையும் புனைந்த மேற்குலகின் முன்னோடி யதார்த்த எழுத்தாளராக விளங்குகிறார்.
சோசலிசக் கருத்தின் வளர்ச்சியோடிணைந்ததாக சோசலிச யதார்த்தவாதம் என்ற கலை இலக்கியக்கோட்பாடு படிமலர்ச்சி கொண்டது. யதார்த்த வாதத்துக்கும் சோசலிச யதார்த்த வாதத்துக்குமிடையேயுள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல் கலை இலக்கியங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.
சமூக முரண்பாடுகளை உள்ளவாறு புனைந்துரைத்தலுடன் மட்டும் யதார்த்தவாதம் நின்றுவிடுவதில்லை. முரண்பாடுகளின் எதிரெதிர் வலுக்களை புரட்சி நோக்கிலே கற்பனையழகுடன் கட்டியெழுப்பும் செயற்பாடுகளைச் சோசலிச யதார்த்தவாதம் புனைகிறது. சோசலிச எழுத்தாளர் கோர்க்கியின் (1868 - 1936) எழுத்தாக்கங்கள் சோசலிச யதார்த்தவாதத்துக்குரிய பொருத்தமான எடுத்துக்காட்டுக்களாகும். அன்னியமாகாத, உடைவுபடாத முழுமனித ஆக்கத்தையும் அழகியலையும் சோசலிச யதார்த்தவாதம் தனது உன்னத இலக்காகக் கொள்ளுகின்றது.
யூடோபியா
“இல்லை என்பதாகிய இடம்”, “காண முடியாத கற்பனை” என்பவற்றை இந்த எண்ணக்கரு வெளிப்படுத்தும். அதாவது நிஜத்திலே காணமுடியாத நிகழ்வினைச் சுட்டிக்காட்டுதல் யூடோபியா எனப்படும். கற்பனையாக அமையும் ஓர் இலட்சிய பொதுநலவாயம் என்றும் இதனை அழைப்பர்.
கலை இலக்கியங்களிலே கற்பனையான இலட்சிய சமுதாயங்கள் அவ்வப்போது புனைந்துரைக்கப்படுதலுண்டு. பிளேட்டோ கண்ட குடியரசு, வால்மீகியும் கம்பனும் கண்ட இராமராஜ்யம், மநுநீதிச்சோழன் அரசு, காந்திகண்ட சார்வோதயம் முதலியவை கற்பனை அரசுகளாகவே காணப்படுகின்றன. இடைக்கால மேலைப்புல இலக்கியங்களில் விளக்கப்பெற்ற அனைவர்க்கும் தொழில் வாய்ப்பு, அடிமைகள் தவிர்ந்த ஏனையோர் செல்வத்தைத் தேவைக்கேற்றவாறு பகிர்ந்து கொள்ளுதல் முதலியவை நடப்பியல் தழுவாத கற்பனைகளாக விளங்கின.
இந்திய இலக்கியங்களிலே பரவலாக விதந்துரைக்கப்பெறும் ஒரு கருத்து தனிமனிதனைத் திருத்துவதன் வாயிலாக உலகத்தைத் திருத்திவிடலாம் என்பதாகும். தனிமனிதன் குற்றமிழைக்கா விடில் உலகமே குற்றமிழைக்கமாட்டாது. செல்வர்கள் தமது செல்வத்தை வறியவர்க்கும் பங்கிட்டுக் கொடுத்தல் வேண்டும். கிராமத்தைக் கட்டியெழுப்பினால் உலகத்தைக் கட்டியெழுப்பலாம் என்றவாறு பல்வேறு கருத்துக்களைப் பரக்கக் காணலாம். இவற்றை முன்மொழிந்தோர் கருத்துக்களின் நடைமுறைபற்றிய தெளிவான ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை.
விஞ்ஞான கமியூனிசம் என்பது யுடோபியாவிலிருந்து வேறுபடுகின்றது. ஏனெனில் அது நியதிகளை மாற்றியமைத்தல் பற்றிய நடைமுறை விஞ்ஞானத்தை விளக்குகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
பொங்கலும் முஸ்லிம்களும்
பொங்கலும் முஸ்லிம்களும் தமிழ் முஸ்லிம்கள் தமிழ் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள், ஏனெனில் அவை தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முக...
No comments:
Post a Comment