கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Wednesday, November 18, 2009
நான் (சரவணன்) வித்யா.
சரவணன் வித்யாவாகிய நிகழ்வு பெரிய கதை போலச் சொல்லப்பட்டிருக்கிறது.
தனது சுயம் எது எனத் தெரிய வரும்போது அதை அடைய ஒரு மனிதன் கையில் எடுக்கும் போராட்டம் எப்போதுமே சிறிய ஒன்றாக இருக்காது. அதுவே, நடைமுறையில் ஒரு ஆண், பெண்ணாக மாறுதல் என்றால் எவ்வளவு பெரிய வலிதரும் விஷயமாக அமையும்?. உடல் வலியை விட்டு விடலாம், அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலில் உடல்வலி என்பது ஒரு பகுதிகூட இருக்காது. இந்த உடல்வலி என்பதையும் மனவலி என்பதையும் வித்யாவின் அனுபவமாக இப்புத்தகத்தில் உணரலாம்.
என்னதான் சொன்னாலும், ஒருவனைத் திடீரெனப் பெண்ணாகப் பார்க்க நண்பர்களாகிய நமக்கே மனத்தடைகள் இருக்கும். அதிர்ச்சியும் சந்தேகமுமாக நாம் விலகிச்செல்லும்போது, அந்தப் பையன்மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களின் வலியையும், அவர்கள் மனம் கொள்ளும் போராட்டங்களையும், சமூகத்தில் அவர்கள் பட்டிருக்கும் அவமானங்களையும் நம்மால் உணர முடிகிறது. பையன் பெரிய ஆளா வருவான் என நம்பும் தகப்பனிடம் “என்ன சார்… உங்க பையன் ஒம்போதாமே” என்று யாராவது கேட்டால் அவரது மனநிலை எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட நிலையில் பெற்றோர்களை வைக்க வேண்டிய நிலையில்தான் திருநங்கைகள் இருக்கிறார்கள். அதாவது நாம் வைத்திருக்கிறோம்.
ஆனால் அப்படிச் சொல்லாதீர்கள்… நாங்களும் மனிதர்கள்தான்… நாங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டதில்லை இந்த நிலை… நாங்கள் விரும்பாமலேயே இயற்கை எங்களிடம் செய்த கோளாறு இது என்கிறார்கள் திருநங்கைகள். திருநங்கை - பெயரே நாகரீகமாக இல்லை? இப்படி ஒரு பெயரை அறிமுகம் செய்தவருக்கு திருநங்கைகள் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். இதுபோக அரவாணிகள், மூன்றாம் பாலினம் என்னும் வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. எது வல்லமை உள்ளதோ அது நிற்கும். ஆனால் இவற்றில் எந்த வார்த்தை வந்தாலும், அது நிச்சயம் நல்ல மாற்றமே.
மனதில் எத்தனை திட்டங்கள் இருந்திருக்கும் வாழ்க்கை மற்றும் கல்விகுறித்து. அவை அனைத்தும் இந்த ஒரு காரணத்தினால் அர்த்தமிழந்து வெற்றுக் காகிதமாகுதல் என்பது எவ்வளவு பெரிய கொடுமை…
மனசுல பொம்பள மாதிரி இருந்தாக்கூடப் பரவாயில்லைடா.. ஆம்பளைமாதிரி நடந்துக்கோ எனச் சொல்லும் பெற்றோர்கள், நண்பர்களின் அறிவுரைகளைக் கேட்க இயலாத அளவு மன அழுத்தம்…
எப்பாடு பட்டாவது திருநங்கை ஆகிவிடத் துடிக்கும் மனம் ஒருபுறம்…
திருநங்கை ஆன பின்பு சமூகத்தில் கிடைக்கப்போகும் அவமரியாதைகள். புறக்கணிப்புகள்…
யாருக்கும் சொந்தமில்லாமல், வேறுவகையில் சொல்வதானால் எல்லோரும் இருந்தும் அநாதையாய் வாழவேண்டிய நிர்ப்பந்தம்…
இத்தனை சிக்கல்கள் இருந்தும் ஏன் ஒருவர் திருநங்கை ஆகிறார் என்பதை உளவியல் ரீதியாகவும், தனது வாழ்க்கைக் கதையையே சொல்லி இருப்பதாலும் எளிதில் ஒன்றிப் படிக்க முடிகிறது.
நிச்சயம் சாதாரன புத்தகங்களைப் படிப்பதைப் போல் இந்தப்புத்தகத்தை படித்துவிட முடியாது. நம்மில் எத்தனை பேருக்கு இப்படி ஒரு உலகம் இருப்பதே தெரியும்? அதை அறிமுகம் செய்கிறது இப்புத்தகம்.
வித்யாவாக ஆகிவிட சரவணன் நடத்திய போராட்டங்களும், பெற்ற அவமானங்களும், அவ்வப்போது கிடைத்த ஊக்கங்களைக் கொண்டே கடந்திருக்கிறார் என்பதை நினைக்கையில் ஏற்படும் பிரமிப்புக்கு அளவே இல்லை. ஒரு விதத்தில் திருநங்கைகளின் மனோதிடம் மற்ற எந்த ஆண், பெண்ணைவிட மிக அதிக அளவு இருக்க வேண்டும். இல்லையெனில் தற்கொலை தவிர இந்தப் பிரச்சினைக்கு தீர்வு இருக்க முடியாது, இத்தனை அவமானங்களையும், நிராதரவான நிலையில் வாழவும் வேண்டிய இந்த வாழ்க்கையில்…
நிர்வாணம் அடைதல் - ஏதோ புத்தர் அடைந்தது போலத் தோன்றினாலும் அதை திருநங்கை வித்யாவின் விவரிப்பில் திருநங்கைகளுக்கு நடைபெறும் நிர்வாணத்தைப் படிக்கப் படிக்க மனம் பதைக்கிறது. கடப்பா ஆஸ்பத்திரியைப் பற்றிய விவரணைகளும் அவருக்கு நடந்த அறுவைச் சிகிச்சையைப் பற்றியும் சொல்லும்போது இதர முறைகளில் (தாயம்மா முறை) நிர்வாணம் அடையும் இதர திருநங்கைகள் மீது பரிதாபமே ஏற்படுகிறது. இந்தியாவில் திருநங்கைகளின் நிலைமை பற்றியும் அங்கங்கு எழுதியுள்ளார். வடஇந்தியாவில் அவர்களுக்கு இருக்கும் மதிப்பும் அல்லது குறைந்தபட்சம் அவமரியாதை நடக்காமல் இருக்கும் என்பதாலும் திருநங்கைகள் வடக்கே செல்லுதல் இயல்பாகவே ஆகிவிட்டிருக்கிறது.
திருநங்கைகளின் புதிய வாழ்க்கையில் புதிய உறவுமுறைகள், அவர்களுக்குள்ளான சீனியர், ஜூனியர் விஷயங்கள், கூட்டங்களாக வாழும்போது அவர்களுக்குள் இருக்கும் கட்டுப்பாடுகள் என எல்லாவற்றையும் சக நண்பனிடம் பகிர்ந்துகொள்வதுபோல எழுதி இருக்கிறார். இதுதவிர பேண்ட், சட்டை அணிந்துகொண்டு ”கோத்தி”யாக இருக்கும் நிலை. நிர்வாணம் அடைந்து முழுப்பெண்ணாக ஆனவர்கள் என அவர்களைப்பற்றிய உலகின் முழு பிம்பத்தையும் தந்திருக்கிறார் இப்புத்தகத்தில்.
தான் பெண்தான் என்பதை பிறருக்கும், தனக்கும் நிரூபிப்பதற்காக, தன்னைப் பெண்ணாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள எற்படும் செலவுகளுக்காக பிச்சை எடுப்பதுதான் ஒரு வழி என்ற நிலை கிட்டத்தட்ட அனைத்து திருநங்கைகளுக்கும் விதிக்கப்பட்டதுபோலத் தெரிகிறது. இப்போது அரசு பொது மருத்துவமனைகளில் இதுபோன்ற பாலின மாற்றுச் சிகிச்சைகள் செய்யப்படுகிறதா எனத்தெரியவில்லை. இல்லையெனில் அவர்களது சிகிச்சை வசதிகள் செய்யப்படுதல் அவசியம்.
திருநங்கைகளை நாம் நடத்தும் விதத்திற்காக நாம் வெட்கவேண்டும். ஒரு சக மனிதனாகக் கூட மதிக்காத நமது இயல்பினால் வாழ வழியின்றி இருக்கும் அந்த மனித உயிர்கள் வாழ்க்கையின் கடைநிலையில் இருந்துகொண்டு வாழவிடுங்கள் என கேட்பது நம் அனைவருக்கும் கேட்க வேண்டும். இல்லையெனில் நாம் மனிதர்கள் எனச் சொல்லிக்கொள்ளவே அருகதை அற்றவர்கள். நாம் நம் பூனைக்கும், நாய்க்கும் கொடுக்கும் குறைந்தபட்ச ஆதரவைக் கூட இந்த திருநங்கைகளுக்குக் கொடுப்பதில்லை என்பது நாம் அவர்களை மதிக்கும் விதத்திற்கு எடுத்துக்காட்டு.
இப்புத்தகத்தின் ஆசிரியர் லிவிங்ஸ்மைல் வித்யா ஒரு வலைப்பதிவும் நடத்துகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
பிற்சேர்க்கை:-
நீண்ட நாள்களுக்கு முன்பு, இந்தப் புத்தகம் படிப்பதற்கு முன்பாக என் நண்பர் ஒருவர் கிழே உள்ள கமெண்ட்டுகளை அனுப்பியிருந்தார். எனக்கும் சரியெனப் பட்டதால் கீழே…
01. வித்யாவின் கடும் சீற்றமும் கோபமும் கலந்த மொழி மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது இப்புத்தகத்தின் பெரிய குறைபாடு.
02. உண்மையில் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மாந்தர்களின் மொழி வீரியமடைவதே, அவர்கள் சமூகத்தின் மேல் கொள்ளும் வெறுப்பிலும் கோபத்திலும் அது வெளிப்படும் எழுத்திலும்தான். அந்த மொழி தொலைந்துபோய், கிழக்கு பதிப்பகத்தின் பொது மொழியில் இது வெளியாகும் என்பது நான் எதிர்பார்க்காதது. சுவாரஸ்யத்தின் சக்கரங்களில் வீரியம் அடிபட்டுப் போய்விட்டது.
03. வித்யாவின் சில பதிவுகள் மிகக்கடுமையான, நாகரிகமற்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தன. அதை நீக்கும் ஒரு எடிட்டரின் (எடிட்டர் யாரென்று தெரியவில்லை) பணி கொஞ்சம் அதைக் கடந்து வித்யாவின் எழுத்துநடையையே மாற்றிவிட்டது சோகமே.
04. தோழமை வெளியீடாக வந்திருக்கும் அரவாணிகள் பற்றிய புத்தகத்தில், வித்யா எழுதியிருக்கும் ஒரு கட்டுரை (ஏற்கனவே அவரது பதிவில் உள்ளது) கடும் சீற்றத்துடனும் உச்சகட்ட கோபத்துடன் வெளியாகியுள்ளது. அதே அலையில் இந்தப் புத்தகமும் அமைந்திருக்குமானால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
05. புத்தக ஆரம்ப சுவாரஸ்யத்தைக் கணக்கில் வைத்து - கிழக்கு பதிப்பகத்தின் மு.க. புத்தகத்திலும் இது போன்ற உத்தி உள்ளது என நினைக்கிறேன் - முதல் அத்தியாத்திலேயே உறுப்பு அறுவை சிகிச்சை நடப்பதைச் சொல்லியிருப்பதையும் தவிர்த்திருக்க வேண்டும். அப்போதுதான் வித்யாவின் சோகம், சமூக நிந்தனை ஆகியவற்றின் தொடர்ச்சியாக, அவற்றின் உச்சமாக இந்த அத்தியாயம் அமையும்போது, அது கடும் மன உளைச்சலை வாசகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். இப்போது இருக்கும் புத்தகத்தில் முதல் அத்தியாத்தில் ஏற்படும் பதற்றம், புத்தகத்தின் தொடர் மொழிகளில் தணிந்து, மீண்டும் அதைவிட அதிக பதற்றத்தைத் தராமல் முடிந்துவிடுகிறது. ஒரு பதற்றம் தேவையானது என்று நான் சொல்லவில்லை. முழுக்க முழுக்க வாசக கவனம் என்ற வகையிலேயே இது சொல்லப்படுகிறது.
06. வித்யாவின் தந்தையைப் பற்றிய கலந்து பட்ட சித்திரம் தெளிவாக வருகிறது. அது யதார்த்தமானதும் கூட. வித்யாவின் குமுறல்கள் பல்வேறு நிலைகளில் சமூகத்தில் பல்வேறு விளிம்புகளால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் என் கவனம் வித்யாவின் தந்தையின் சித்திரம் மீதே குவிந்திருந்தது. உண்மையில் அவரது நிலை இன்னும் அதிகமாக கவனிக்கப்படவேண்டியதும் விவாதிக்கப்படவேண்டியதும் என்பது என் எண்ணம்.
07. வலையுலகில் முற்போக்காளர்கள் பலர் வித்யாவை ஆதரித்தார்கள். அமைதியாக கிழக்கு பதிப்பகம் வித்யாவின் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறது. முந்தையை ஆதரவின் வீச்சைவிட அதிகமான ஒரு பெரிய பரப்பு கொண்ட காரியத்தை கிழக்கு அமைதியாகச் செய்திருக்கிறது.
08. வித்யாவின் முதல் புத்தகம் இது. வாழ்த்துகள். தொடர்ந்து பல்வேறு புத்தகங்களின் மூலம், கட்டுரைகள் மூலம் அவர் தொடர்ந்து வினையாற்றவேண்டும்.
நான் (சரவணன்) வித்யா:
எழுதியவர்: லிவிங்ஸ்மைல் வித்யா.
கிழக்குப் பதிப்பகம்,
New Horizon Media Private Limited,
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018.
ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8368-578-8.html
Subscribe to:
Post Comments (Atom)
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
பீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...
No comments:
Post a Comment