Sunday, January 17, 2016

உரூஸ்கள்,கந்தூரிகள்,ஈத்கள்,மிலாத்கள் முதலானவை குறித்து

உரூஸ்கள்,கந்தூரிகள்,ஈத்கள்,மிலாத்கள் முதலானவை குறித்து

எச்.முஜீப் ரஹ்மான்

இஸ்லாம் என்பது ஒரு வாழ்வியல் மட்டுமல்ல எளிமையான மார்க்கம்.உயிருக்கு ஆபத்தான சூழலில் ஹராமான எந்த காரியத்தையும் கூட செய்யலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இஸ்லாம் மிகவும் இலகுவான மார்க்கம்.தர்ஹா என்ற அரபி வார்த்தைக்கு புனித இடம் என்று ஒரு அர்த்தம் இருக்கிறது.அது போல இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.தர் என்றால் உடல்.ஹாக் என்றால் இடம் ஈத்ஹாக் என்றால் பண்டிகைஇடம் என்பது போல உடல் வைக்கப்பட்டிருக்கும் இடம்.கபுர் என்றால் சவகுழி என்று அர்த்தமாகும்.ஆக கபுர் என்பதற்கும் தர்ஹா என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.பள்ளிவாசல் என்றால் மஸ்ஜித் எனப்படும்.ஆக பள்ளிவாசல் என்பது வணங்குமிடமாகும்.நபிகள் நாயகத்தின் காலகட்டத்தின் போது யூதர்களும்,கிறிஸ்தவர்களும் இறைதூதர்களின் அடக்கதலங்களை பள்ளிவாசல் போன்று பயன்படுத்தினார்கள்.தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளை அவர்கள் செய்தனர்.அதனால் நாயகம் முஸ்லிம்களை பார்த்து மஸ்ஜித் போன்று ஆக்காதீர்கள் என்று எச்சரித்தார்கள்.அது போல கபுறின் மீது எந்த கட்டடத்தை கட்டுவதை தடை செய்துள்ளார்கள்.ஆனால் இவற்றை விளக்கும் வகாபிகள் தர்ஹாவையும் மஸ்ஜித்தையும் ஒன்று போல ஒப்பீடு செய்தார்கள்.ஆனால் அது தவறாகும்.ஏனென்றால் ஒவ்வொரு தர்ஹா வளாகத்திலும் பள்ளிவாசல் இருக்கிறது.அங்கு மட்டுமே முஸ்லிம்கள் தொழுதுவருகிறார்கள்.மேலும் நாயகம் சொல்வது போல கபுறுவுக்கு மேல் கட்டிடம் கட்டுவது தவறு.அதாவது சமாதி மீது கட்டிடம் கட்டகூடாது.உண்மையை சொன்னால் எந்த ஒரு தர்ஹாவை எடுத்து பார்த்தாலும் சமாதியின் மீது யாரும் கட்டிடம் கட்டியிருக்கமாட்டார்கள்.மாறாக சமாதியை சுற்றிதான் கட்டிடம் எழுப்பி உள்ளார்கள்.ஆக வகாபிகள் சொல்வது தவறாகும்.மேலும் கலிமா சொல்லிய எவ்வொரு முஸ்லிமும் இறைவனை புகழ்வதும்,இறைத்தூதரை புகழ்வதும்,அம்பியாக்கள்,அவுலியாக்களை புகழ்வதும் ஆகுமானதாகும்.இறைவன் தன்னையே வணங்குமாறு சொல்லுவதும் இறைவனை வணங்குகள் என்று நல்லடியார்கள் சொல்லுவதும் மார்க்கமுறையே ஆகிறது.இறைவனுக்காக தம்மை அர்பணித்துக்கொண்டவர்களை புகழ்வதும் அவர்களுக்காக விழாக்கள் எடுப்பதும் ஆகுமானதே.

மௌலிது என்னும் வார்த்தைக்கு அரபி மொழியில் பிறப்பு என்று பொருளாகும்இஸ்லாமியர்களின்வழக்கத்தில் நபிகள் நாயகம் முஹம்மத் மற்றும் இறைநேசர்கள் ஆகியோர்களின் பிறப்புவாழ்க்கை,வரலாறுஅற்புதங்கள்மாண்புகள் ஆகியவற்றைக் குறித்து பாடப்பட்ட கவிதைகளுக்கு மௌலிது என்றுபெயர்.இதை இஸ்லாமியர்கள் மிகவும் கண்ணியத்துடனும்மரியாதையுடனும்புண்ணியம் கருதியும்ஓதி வருகின்றனர்.மேலும் நல்லடியார்களின் நினைவை கொண்டாடும் விதமாக இஸ்லாத்தை நினைவூட்டும் விதமாக கந்தூரிகளும்,உரூஸ்களும்,சந்தனகூடுகளும்,தேர்பவனிகளும்,இஸ்லாமிய இன்னிசை கச்சேரிகளும்,இஸ்லாமிய கலை,கலாச்சார போட்டிகளும் அனைத்தும் அமைந்துள்ளது.இவை சமூகவியலில் முக்கிய இடம் பிடிக்கும் கலாச்சார நிகழ்வாகும்.மாற்று மதத்தவற்கு ஒப்பாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் இவை இஸ்லாமிய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூக நிகழ்வாக இருக்கிறது.இஸ்லாமிய மார்க்கத்தை வெறும் சடங்கு,சம்பிரதாயமாக பார்க்கும் இறுக்கமான தளத்திலிருந்து குழந்தைகள்,பெண்கள்,அடித்தளமக்கள் சார்ந்த திருவிழாவாக மாறுவதற்கு சுதந்தர தன்மை நிச்சயப்படுத்தும் ஜனநாயக பூர்வமான ஆனால் எளிமையான கொண்டாடும் மனோநிலையாக மார்க்கத்தை தாரளவாதம் செய்யும் முறை கவனிப்புக்குரியது.இம்மாதிரியான நிகழ்வுகளை ஆய்வு செய்த மார்க்க அறிஞர்களும்,பண்பாட்டு அறிஞர்களும் மதத்தை நிறுவனமயமாக்கலிருந்து வெகுஜனமாக்கலுக்கு உருவாக்கும் நிகழ்வே விழாக்களின் தன்மையாக கணக்கிடுகின்றனர்.

உத்தம நபி அவர்களின் உன்னத நினைவை உயிர்பிப்பது என்பதுமவ்லிது ஓதுவதால் ஏற்படும்பயன்களில் ஒன்றாகும்அதேபோல் இறைநேசர்களின் மௌலிதும் பயனள்ளதாகும்இறைநேசர்களைப்பற்றி நினைவு கூறுமிடங்களில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது என்று ஜுனைதுல் பகுதாதிநாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.மவ்லிதின் இறுதியான இலக்கு உரூஸ்களே.
நாயகம் கண்மணி அவர்களை குர்ஆனில் இறைவன் பல்வேறு இடங்களில் புகழ்ந்து பேசுகிறான்.
 நபியே) நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள். (68:4)
(நபியே) உங்கள் கீர்த்தியை நாம் உயர்த்தியுள்ளோம். (94:4)
 (நபியே) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம். (21:107)
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலி அவர்கள்
1.    எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள்வைகறைப் பொழுது புலரும் நேரத்தில்அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்.
2.    குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள்அவர்கள் கூறியது நிச்சயம்நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.
3.    இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும்போது நபியவர்கள்படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலி
நூல்: புகாரி 1087.
ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலி அவர்கள்,
1.    (இறை மறுப்பாளர்களே) முஹம்மது நபி அவர்களைக் குறைவுபடுத்தி நீங்கள் கவி பாடுகிறீர்கள். அதற்குப் பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு.
2.
    நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற நபி முஹம்மது அவர்களை குறைவுபடுத்திப் பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.
3.    அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான், சத்தியத்தைக் கூறுகிற ஓர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன். அதில் ஒளிவு மறைவு இல்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா ரலி
நூல்: முஸ்லிம் 4545
கஃப் இப்னு ஜுஹைர் ரலி அவர்கள்,
1.    நபிகள் நாதர் ஸல் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத் தூதர் அவர்களிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
2.    மன்னிப்புத் தேடியவனாக நபி ஸல் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது.
3.    நிச்சயமாக முஹம்மத் நபி அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் இருக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: ஆஸிம் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6558
நிச்சயமாக இறைவனும் அவனுடைய மலக்குகளும் நபி மீது ஸலவாத் சொல்கிறார்கள். ஈமான் கொண்டவர்களே! அந்த நபி மீது நீங்களும் ஸலவாத் சொல்லுங்கள் சலாமும் கூறுங்கள். (அல்குர்ஆன் 33:56)
   இதற்கு விரிவுரை சொல்லும் போது இமாம் அபுல் முஆலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 'அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் திருநபியை அமரர்களிடம் போற்றிப் புகழ்கிறான் என்பதே பொருள் என்று கூறுகிறார்கள். -ஸஹீஹுல் புகாரி 2:77
இமாம் இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அல்லாஹ் இப்பூவுலகவாசிகளோடு திருநபி மீது ஸலவாத் உரைக்க கட்டளையிட்டதன் நோக்கம், அவ்விண்ணிலும் இம்மண்ணிலும் திருநபியின் புகழ் முழங்கப்பட வேண்டும் என்பதற்கே என்கிறார்கள். -இப்னு கதீர் 3:533
மவ்லிதுகளில் கூறப்படும் ஸலவாத்துகள் இந்த இறைக் கட்டளையை நிறைவேற்றிய பலனைத் தருகிறது.ஸலவாத்துகளின் ஜனரஞ்சகாமான நிகழ்வுகளாக உரூஸ்கள் திகழ்கின்றன.
அதேபோல் இங்கு கூறப்படும் சலாமும், புகழ்ச்சிகளும் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உடனே எத்திவைக்கப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்விற்கு மண்ணுலகில் சுற்றிவரும் மலக்குகள் இருக்கிறார்கள். என் உம்மத்தினர் கூறும் சலாமை அவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்
நூல்: நசாயீ 1265
ஹஸ்ஸான் இப்னு தாபித் அவர்களின் அறிவிப்புப்படி நபிகள் நாயகம் அவர்களைப் புகழ்ந்து பாடினால் அதற்கு அல்லாஹ்விடம் கூலியும் கிடைக்கிறது.
அருள்மறையாம் திருக்குர்ஆனும் அண்ணல் நபி அவர்களின் பொன்மொழிகளும் இறைநேசர்கள் பெயரில் மௌலிது ஓதுவதற்கு சான்றாக அமைந்துள்ளன.
அல்குர்ஆன்:
இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறு, மாண்புகள் மற்றும் அற்புதங்களைக் கூறுபவைகளாகவே மௌலிதுகள் அமைந்துள்ளன. இதற்கு குர்ஆனில் காணப்படும் ஆதாரங்கள்:
1.    மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 3:35-47, 1:16-29)
2.     இஸ்கந்தர் துல்கர்ணைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல் குர்ஆன் 18:83-98)
3.    ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 18:65-82)
4.    அஸ்ஹாபுல் கஃப் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 1:9-25)
கவனமாகக் கேளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எப்பயமும் இல்லை. அவர்கள் கவலை சொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:62)
திண்ணமாக, எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பிறகு (அதிலே) நிலைத்திருந்தவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள்.
அத்தகையவர்களே சுவர்க்கவாதிகள். அவர்கள் செய்தவற்றிற்கு நற்கூலியாக அதிலே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 46:13,14)
பருவமில்லாத காலத்திலும் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கிடைத்த கனிவர்க்கங்கள் பற்றியும், (அல்குர்ஆன் 3:37)
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அவையிலிருந்த ஞானம் பெற்ற ஓர் இறைநேசர் பன்னூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த பல்கீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 27:38-40)
முன்னூறு வருடங்களுக்கு மேலாக உறங்கிய குகைத் தோழர்களுக்கு நிகழ்ந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 18:9-25)
அல்குர்ஆன் இனிதாக எடுத்தியம்புகிறது. இதேபோல்தான் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறுகள், அற்புதங்கள் மௌலிதுகளில் கூறப்பட்டுள்ளன.
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள், உங்களில் முன் சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக் கூறுங்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர், நூல்கள்: திர்மிதி 940, அபூதாவூத் எண் 4254.
ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள்) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் அவர்கள், கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் அவர்கள் வினவியபோது இறைத்தூதர் அவர்கள் பதிலுரைத்தார்கள், இறந்து போன இம்மனிதரை நீங்கள் புகழ்ந்துரைத்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது.
அறிவிப்பாளர்: அனஸ் நூல்கள்: புகாரி 1278, முஸ்லிம் 1578.
எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் யுத்தத்தில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தஃப் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பாளர்: ருபய்யிஃ பின்த் முஅவ்வித்
நூல்: புகாரி 3700, திர்மிதி 1010, 4276.

இறைத் தூதர் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிரார்த்தனை செய்து கவி படித்தார்கள்.
திண்ணமாக வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக!
நிச்சயமாக மறுமை நலனைத் தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக!
உறுதியாக மறுமை வாழ்வைத் தவிர வேறு எந்த வாழ்வும் இல்லை. இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களை கண்ணியப்படுத்துவாயாக!
திண்ணமாக நற்கூலி என்றாலே மறுமையின் நற்கூலிதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2622, 2623, 2741, 3616.
நாங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது ஹஸ்ஸான் இப்னு தாபித் ரளியல்லாஹு அன்ஹு தனது கவிகளின் மூலம் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். (அவற்றில் ஒன்று)
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நல்லொழுக்கமும், நுண்ணறிவும் மிக்கவர்கள், ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எந்தவொரு பெண்ணைப் பற்றியும் தவறாகப் பேச மாட்டார்கள்.
அறிவிப்பாளர்: மஸ்ரூக் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 3831, முஸ்லிம் 4543
மவ்லிது ஓதக் கூடியவர்களுக்கு மலக்குமார்களைக் கொண்டு பாதுகாப்பு அரண் இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்.
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்,
நீங்கள் இறைவனுக்காகவும் இறைத்தூதருக்காவும் கவிபாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மா(வான ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம்) உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: முஸ்லிம் 4545.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் ஒரு பகுதிக்குச் சென்றார்கள். அங்கே சில சிறுமிகள் தஃப் அடித்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். (அவற்றில் ஒன்று) நாங்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த சிறுமிகள். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த அண்டை வீட்டுக்காரர் ஆவார்கள்.இந்த ஹதீது மிலாதுகள்,கந்தூரிகள் போன்ற விழாக்களுக்கு அனுமதியளிப்பதாக இருக்கிறது.
(இதைக் கேட்ட) நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், திண்ணமாக நான் உங்களை நேசிக்கிறேன்.(இதை) அல்லாஹ் அறிகிறான்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு மாஜா 1889.
கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து படித்தார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6555.
பள்ளிவாசலில் ஹஸ்ஸான் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கவி பாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைக்கண் பார்வையால் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்,
உங்களை விட சிறந்தவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தபோதே இப்பள்ளிவாசலில் கவி பாடியுள்ளேன்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2973, முஸ்லிம் 4539.
இதை நல்லடியார்களின் தர்ஹாக்களில் பாராயணங்களாக பாடிவரும் முறைக்கும் அவை உரூஸ்சின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது என்பதற்க்கும் ஆதாரமாக எடுத்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பள்ளிவாசலில் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள்.
அதிலே அவர்கள் ஏறி நின்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையேப் புகழ்வார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: திர்மிதி 2773.

மௌலிது ஓதும் அமலை பெரும் விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்தியவர், தலைசிறந்த வள்ளல் தன்மை மிக்க அரசர்களில் ஒருவரான 'அல்மலிக்குல் முழஃப்பர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலியிப்னு புக்தகீன்' என்பவர் ஆவார்.
இந்த மன்னர் இனிய பல பொது சேவைகள் செய்தவர் என்று இமாம் சுயூத்தி அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த மன்னர் ரபியுல் அவ்வலில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிதிற்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க, மாபெரும் கூட்டத்தை திரட்டி வந்தார் என்றும், இந்த மன்னர் வீரமும், வியத்தகு ஞானமும், கொடைத்தன்மையும் கொண்டவர் என்றும் இப்னு கதீர் அவர்கள் எழுதிய வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஏற்பாடு செய்த மௌலிதின் விருந்தில் ஞானிகள் மற்றும் ஸூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அன்பளிப்புகளும் வழங்கினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்பர் இந்த மௌலிதிற்காக செலவிட்டார்.
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களில் அல்ஹாபிழ் இப்னு ஜவ்ஸி, இப்னுல் இமாதுல் ஹன்பலிய்யீ, இமாம் ஸர்கானீ, இப்னு கல்கான், அல்ஹாபிழ் இப்னு கதீர் போன்றோர் இந்த மன்னரின் வரலாற்றையும், அவர் மவ்லிது மஜ்லிஸ் நடத்திய தனிச்சிறப்பையும் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
வஹ்ஹாபிகளின் கருத்துக்களுக்கு முன்வடிவம் கொடுத்த இப்னு தைமிய்யா கூட தமது 'இக்திளா' நூல் 2:136 ல் கூறுகிறார், 'திருநபியின் மௌலிது நடத்துவதால் மகத்தான நற்கூலி கிடைக்கும்' என்று.
எனக்கு உஹது மலை அளவு தங்கம் இருந்தால் அவையனைத்தையும் அருமை நபிகள் நாயகம் அவர்களது மவுலிது ஷரீபை நடத்துவதற்காக செலவு செய்வதையே நான் பெரிதும் விரும்புவேன் என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஸெய்யிதுத் தாயிபா -ஸூபியாக்களின் சக்கரவர்த்தி ஹஜ்ரத் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'எவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மவ்லிது ஷரீபுக்கு ஆஜராகி அதை மகிமைப் படுத்தி சிறப்புறச் செய்தாரோ நிச்சயமாக அவர் காமிலியத்தான –சம்பூரணமான-ஈமானைப் பெற்றுக் கொண்டவராவார்' என்று.
ஆதார நூற்கள்: தர்ஜுமத்து இக்தில் ஜவ்ஹர் பீ மவுலிதிந் நபிய்யில் அஸ்ஹர், பர்ஸன்ஜீயின் ஷரஹு.
பர்ஸன்ஜீ மவுலிதை அரபுத் தமிழில் மொழி பெயர்த்துள்ள மர்ஹும் அல்ஹாஜ் அபூபக்கர் மிஸ்கீன் சாகிபு ஆலிம் பாஸி (காயல்பட்டணம் ஜாவியா கலீபா வ முதர்ரிஸ்) அவர்களும் அந்நூலில் மேற் சொன்ன ஆதாரங்களை எடுத்துக் கூறியுள்ளார்கள்.
எந்த இடத்தில் பெருமானார் அவர்களின் மௌலிது ஓதப்படுகிறதோ, அந்த இடத்தை ஒருவர் நாடினால், நிச்சயமாக அவர், சுவனப் பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். ஏனெனில், ஏந்தல் நபி நாயகம் அவர்கள் மீது கொண்ட அன்பினாலேயே தவிர அவ்விடத்தை அவர் நாடியிருக்கவில்லை. என்னையொருவர் நேசித்தால் அவர், என்னுடனேயே சுவர்க்கத்தில் இருப்பார் என்பது நபி மொழியாகும் என்று மாமேதை அஷ்ஷெய்கு ஸரியுஸ் ஸிக்திய்யி அவர்கள் கூறியுள்ளார்கள்.
மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும், நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியாக நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மௌலிதின் தனித்தன்மையைச் சார்ந்தது என்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருப்பதாக இமாம் கஸ்தலானி அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாயகம் அவர்கள் பிறந்த புனித இடத்தை மக்காவாசிகள் அன்றும் இன்றும் தரிசிக்கும் அமல், ரபியுல் அவ்வல் 12 ம் நாள் நடைபெற்று வந்ததாக மவாஹிபுல் லதுன்னியா என்ற நூல் கூறுகிறது.இந்த அடிப்படையிலேயே உரூஸ்கள் எடுக்க மார்க்கம் அனுமதிக்கிறது என்கிறோம்.
முந்தைய பிந்தைய மார்;க்க மேதைகள் நபி அவர்களின் பிறந்த நாள் இரவிலும் பகலிலும் மவ்லிது எனும் அமலில் ஈடுபடுவதில் ஒத்திருந்தார்கள் என்று அஷ்ஷெய்க் யூசுபுன்னபஹானி அவர்கள் கூறியுள்ளார்கள்.இந்த அடிப்படையிலேயே மிலாது விழா எடுக்க மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது என்கிறோம்.
எந்த ஒரு வீட்டிலோ, பள்ளிவாசலிலோ மஹல்லாவிலோ மாநபி அவர்களின் மௌலிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களை கருணையினால் அல்லாஹ் சூழ வைத்து விடுகிறான் என்று இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி அவர்கள் தமது அல்வஸாயில் ஃபீ ஷறஹிஷ் ஷமாயில் என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்.
இஸ்லாமிய கலாச்சார நிகழ்வுகளாக போன உரூஸ்கள்,கந்தூரிகள்,சந்தன கூடுகள்,தேர்பவனிகள் சர்வநிச்சயமாக இஸ்லாமிய மார்க்கத்தை விளம்பர படுத்தவும்.இஸ்லாமிய மார்க்கம் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கிறது என்பதையும் இஸ்லாமிய அழைப்பை மாற்று மதத்தவரிடம் கொண்டாட்டமனநிலையை அமைந்து ஒரு உறவு மேற்கொண்டு அதன் மூலம் அழைப்பை எளிதாக்கும் முறையும் இவற்றில் பொதுவாக அமைந்திருக்கிறது.ஜனநாயக பூர்வமான சமூக நல்லிணக்க அம்சங்களை பேணுவது இஸ்லாத்தை காயப்படுத்துவது ஆகாது.அதே சமயம் இறுக்கமான மனநிலையை உருவாக்கும் தூய இஸ்லாமிய கருத்தியல் ஜிஹாத்தை முக்கியத்துவம் கொடுத்து நல்லிணக்கத்துக்கு மாறான ஒரு வன்முறை அல்லது தீவிரவாதத்தை வளர்க்கிறது.இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை மையப்படுத்தும் நோக்கமானது தீவிரவாதத்தை ஊக்கு விப்பது போல இருக்கிறது.ஆனால் இஸ்லாம் வணக்க வழிபாடுகளை விட ஒரு மனிதனின் வாழ்வியல் முறையாக இருப்பதால் சமூகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பண்பட்டவனாக நல்லிணக்கம் உடையவனாக இருக்கவேண்டும் என்ற பொதுநலனை அடிப்படையாக கொண்டே இவ்வித உரூஸ்கள்,விழாக்கள் தகவமைக்கப்பட்டிருக்கின்றன.நாயகம் பெருமானாரின் நினைவு தினத்தை நினைவுகூரும் மிலாதுநபி பண்டிகைகளும்,சூபிகள்,நல்லடியார்களை நினைவுகூரும் விழாக்களும்,ஆசுரா பண்டிகைகளும்,பெருநாட்களும் மனிதசமூகத்தின் இருப்புக்கான மகிழ்வுக்கான தருணங்கள் ஆகும்.இவைகளை மறுதலித்து கொண்டு மனிதனால் இருக்கமுடியாது.பிறந்த நாள்களும்,தினம் தினம் புதிய விழாக்களும்,மகிழ்வு தினங்களும் கடைபிடிக்கப்படுவதற்கான காரணம் அவை மனிதனை மையப்படுத்துகின்றன.மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை அதிகப்படுத்துகின்றன.இவைகளை அனாச்சாரம் என்பது வன்முறை மனம் படைத்தவரின் காட்டுமிராண்டி மொழியாகும்.மூடநம்பிக்கைகள்,அனாச்சாரங்கள் என்று தீண்டாமை கற்பிப்பது நாகரீகமற்ற மனதின் மொழியாகும்.இஸ்லாம் என்ற மார்க்கம் வணக்கத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதில்லை.அது பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒவ்வொரு விசயங்களுக்கும் மார்க்கத்தை சொல்வதால் விழாக்கள்,பண்டிகைகள்,கொண்டாட்டங்கள் ஆகியவை ஈமானுக்கு களங்கம் வராத வகையில் அமைந்து இருப்பதை வரவேற்கிறது.இஸ்லாத்தில் இவையனைத்துக்கும் வேர்கள் குரான்,ஹதீதுகளில் இருக்கிறது.இவையாவும் சுன்னாவாக இருக்கிறது என்பதை ஆழ்ந்து வாசிக்கும் போதே கண்டுகொள்ளமுடியும்.

No comments:

இருத்தலியத்தின் அபஸ்ரங்கள்

இருத்தலியத்தின் அபஸ்ரங்கள் ஜே.பிரோஸ்கான் (இலங்கை) கவிதைகளை முன்வைத்து 1 இது ஒரு மோசமான தேர்வு.  நிராகரிப்புகள் எனக்குள் நினைவிரு...