Sunday, January 17, 2016

மற்றமைகளுடன் பேசுவது

மற்றமைகளுடன் பேசுவது
எச்.முஜீப் ரஹ்மான்
பேசுவது என்பது எல்லாவற்றுக்கும் மேலாக மற்றவர்களுடன் பேசுவது என்பார் லக்கான்.இன்றைய சூழலில் காட்டாக எயிட்ஸ் நோயாளிகளை எடுத்துக்கொள்வோம்.எயிட்ஸ் பாதித்த அந்த நோயளிகளிடம் நாம் பேசாமல் அவர்களை தனிமைபடுத்தி விடவேண்டும் என்ற எண்ணம் நமக்கு எப்படி வருகிறது.நமக்கு தெரிந்தவரோ அல்லது நண்பரோ அல்லது உறவினராக இருக்கும் அந்த நோயாளியை நாம் பேசமறுப்பதன் மூலம் என்ன சொல்லவிழைகிறோம்?நீ புரிந்து வைத்த அந்த நபர் உனது சமூக அறத்துக்கு எதிராக செயல்பட்டார் என்பதால் தானே நீ பேச மறுக்கிறாய்?அப்போது உன்னிடம் அதிகாரம் தானே செயல் படுகிறது.அப்படியானால் நீ பேச்சை எப்படி புரிந்து வைத்திருக்கிறது.நமது மனம் யாரிடம் பேசவேண்டும் யாரிடம் பேசக்கூடாது என்று பட்டியல் இட்டுவைத்திருக்கிறதல்லவா?நீ பேசும் நபர் எப்படிப்பட்ட ஒழுக்கங்களை கொண்டிருக்கவேண்டும் என்று தீர்மானித்து வைத்துள்ளாய் என்று தானே அர்த்தம்.சமூக விதிகளை நீ பின்பற்றுவதாக கூறிக்கொண்டு ஒரு அதிகாரத்தை கையில் எடுத்ததை நீ கவனித்தாயா?நம்மிடம் அடிக்கடி இப்படி சொல்லப்படுவதுண்டு.அதிகாரத்தை கையில் எடுக்காதே.அதாவது நீ எதிர்வினை செய்து சட்டத்துக்கு புறம்பாக நின்றுகொள்ளாதே என்பதாகும்.ஆனால் நீ ஏன் இப்படி எதிர்வினையாற்றுகிறாய் என்பதை யாரும் சிந்திப்பதில்லை.சிலர் நமக்கேன் வம்பு என்று இருந்துவிடுவார்கள்.இவர்கள் சட்டத்தை மதிப்பதற்க்காக அப்படி இருக்கவில்லை என்பது தெரியும்.நீ எதிர்வினையாற்றிய போது சட்டத்தைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லைதான்.ஆக எதிர்வினையாற்றினாலும் ஆற்றாமல் இருந்தாலும் சட்டத்தை பற்றி நினைப்பது இல்லை.ஆனால் ஆற்றுபவர் அதிகாரத்தை பயன்படுத்துபவராகவும் ஆற்றாதவர் அதிகாரத்துக்கு அடிபணிந்தவராகவும் இருக்கிறார்.இதை லக்கான் ஆண்டான் அடிமை உளவியல் என்கிறார்.நீ சமூக விதிகளை பின்பற்றுவதால் தான் பேச்சு நடவடிக்கையில் விலகி இருக்க அல்லது பேசமறுக்க துணிந்துவிட்டாய்.அதிகாரம் இன்னொருபுறம் அரசு இயந்திரங்களான காவல்,சட்டம்,நீதிமன்றம்,தண்டனைகள்,ஜெயில் போன்றவற்றைக்கொண்டு எல்லோரையும் அடிபணியவைக்கிறது.நீ பேசமறுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக பொது அல்லது சமூக அதிகாரம் நினைக்கவில்லை என்றாலும் நீ அதிகாரத்தை கையில் எடுக்க சமூக அதிகாரம் காரணமாக இருக்கிறது என்பதையும் சமூக அதிகாரம் அறிந்திருக்கவில்லை.சட்ட,ஒழுங்கு பிரச்சனையை தான் அது மையப்படுத்துகிறது.இதை ஒரு முறை கூட படி சட்ட,ஒழுங்கு பிரச்சனை.நீ பேசமறுப்பதற்க்கும் உன்னிடம் செயலாற்றும் சட்ட அல்லது விதியொழுக்க மனநிலையே காரணம்.ஆக சமூக அதிகாரமும் நீயும் ஒரே திசையில் இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் சமூக அதிகாரத்தின் தனிநபர் அதிகாரம் ஆவீர்கள்.அதிகாரம் என்பது எப்போதும் உள்ளேயும் வெளியேயும் செயல்படுகிறது.அகம்/புறம் என்றும் சொல்லலாம்.இன்னும் சொல்லபோனால் நாம் சமூகத்தின் அதிகாரத்தின் ஒரு பாகமாக இருக்கிறோம்.இனி நாம் யார் யாரிடமெல்லாம் பேசுகிறோம் யாரிடமெல்லாம் பேச தயங்குகிறொம் அல்லது யாரிடமெல்லாம் பேசமறுக்கிறோம் என்று பார்த்தால் அதிகாரத்துக்கு முன்பாக நாம் பேச தயங்குகிறோம்.நம் அதிகாரத்துக்கு கீழ் உள்ளவர்களிடம் பேச மறுக்கிறோம்.நம் அதிகாரத்திற்கு கீழ் வருவது என்பது நேரடியாக அல்ல.கீழ்பணிய அதிகாரத்தை பயன்படுத்துகிறோம்.அங்கு மற்றவர்களின் பேச்சு மறுக்கப்படுகிறது.அதிகாரத்தை அதிகம் கேள்விக்குள்ளாக்கியவர் பூக்கோ.அதிகாரம் இல்லாமலே நாம் சமூகத்தின் அதிகாரிகளாக உள்ளோம் என்பது கவனிக்கப்படவேண்டிய விசயமாகும்.மற்றவர்களுடன் பேசுவது என்றால் என்ன? அரசு தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவதில்லை.ஜெயில் அதிகாரி ஒரு கைதியிடம் பேச்சு நடத்துவதில்லை.ஒரு குடும்பஸ்தன் விபச்சாரிகளிடம் பேச்சு நடத்துவதில்லை.ஒரு எஜமானன் தனது வேலையாளுடன் பேச்சு நடத்துவதில்லை.ஒரு டாக்டர் பையித்தியத்துடன் பேச்சு நடத்துவதில்லை.ஆக சமூகத்தில் ஒருசிலர் ஒருசிலருடன் பேசுவது இல்லை.ஆர்பாட்டக்காரர்கள் ஆர்பாட்டம் நடத்தினாலும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறார்கள்.பேச்சு ஒரு அதிகாரமாக அல்லது புனிதமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.பேச்சு மொழியின் ஒரு செயல்பாடாக இருந்தாலும் அது ஒரு ஆயுதமாக,கருவியாக செயல்படுகிறது.அதனால் பேச்சு விதிகளாலும்,ஒழுக்கங்களாலும் ஆனது எனப்படும்.இது மொழியின் இலக்கணவிதியையோ,ஒழுங்கையோ சார்ந்ததல்ல.அவை வேறு.பேச்சு இன்னும் ஜனநாயகப்படுத்தப்படவில்லை என்பதே இங்கு முக்கியமானது.பாலியல் என்பதே ஒரு சமூக கட்டமைப்பாக இருந்தாலும் பாலியல் பேச்சின் பொருளாகாது.பொதுவில் பாலியல் பேசுவது தவறானது.ஒரு பெண் அதுவும் பாலியலை பேசுவது பெருந்தவறு.சிறுவர்கள் பாலியல் பேசக்கூடாது.ஆசிரியர்கள் பாலியல் பேசக்கூடாது.அரசியல்வாதிகள் பாலியல் பேசக்கூடாது.மதவாதிகள் பாலியல் பேசக்கூடாது.ஆக பாலியல் பேச்சு மறுக்கப்படுகிறது அல்லது தடுக்கப்படுகிறது.அதனால் தான் எம் டிவியையும் மிட்நைட் மசாலாவையும் பார்க்க நமக்கு ஆசை.பேச்சு விதிகளாலும்,ஒழுங்குகளாலும் ஆனது என்று சொல்ல இதுவே காரணம்.பாலியல் மட்டுமல்ல இன்னும் விதிகளாலும் ஒழுங்குகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த ஒரு விசயத்தையும் பேச பேச்சு அனுமதிப்பதில்லை.நமது சமூகத்தில் வளவள என்று பேசுபவரை யாரும் விரும்புவது இல்லை.ஏனெனில் அடிப்படையில் நாம் பேச்சுக்கு எதிரானவர்களாக கட்டமைக்கப்படுகிறோம்.பெண்கள்,விதி மீறியவர்கள்,விளிம்புநிலை மக்கள் போன்ற எண்ணற்ற மக்கள் திரளினரிடம் நாம் பேச தயங்குகிறோம்.அவர்களது பிரச்சனையை பேச நாம் மறுக்கிறோம்.
பேச்சு என்ற இந்த நடவடிக்கைக்கு காரணமான மொழியை கொஞ்சம் அலசவேண்டியிருக்கிறது.மொழி நம்மை அந்நியமாக்குகிறது.நம் அனைவரிடமும் மொழியால் ஆன அகம் இருக்கிறது.இந்த அகம் குறிப்பானால் உணர்த்தப்படுகிறது.மொழியால் இணைப்பு நடந்தாலும் மொழியால் நாம் அன்னியப்பட்ட அகநிலையாக ஆகிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் லக்கான்.மொழி நம்மை அன்னியபடுத்த வேண்டியது ஏன் என்றால் நாம் பேசும் மொழியானது மற்றவர்களின் மொழியை போல இல்லை.உயர் மொழியும்,இழிமொழியும் இருக்கிற போது நாம் அன்னிய படுவது இயல்பாகிவிடும்.அகநிலை என்பது வரலாறு,பண்பாடு,அரசியல் என்று எண்ணற்ற விஷயங்களால் உருவாவது.நாம் சொல்லும் குறிப்பான்கள் அகநிலையை சரியாக விளக்க முடியாததாக இருக்கிறது.இதனால் அகநிலை நம்மை அன்னியபடுத்துகிறது.நமது அகத்தை மற்றவர்களால் புரிய முடியாமல் போனால் அல்லது நிராகரிக்க கூடுவதாய் அமைந்தால் நம்மை அந்நியமயமாக்கிவிடும்.நாம் பாலியலை அகமாக வைத்திருந்தாலும் மற்றவர்களிடம் நேரடியாக பேசமுடியாமல் குறிப்பான்கள் வழியாக பேசுகிறோம்.ஆனால் மற்றவர்கள் குறிப்பான்களை புரிந்து கொள்ளமுடியாதாகையால் மொழியால் அந்நியபடுத்தப்படும் நிலைக்கு ஆளாகிறோம்.உனக்கு அவளை பிடிக்கிறது அவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறாய்.உனது மொழியால் அதை அவளிடம் சொல்லிவிட முடியுமா என்று யோசித்துப்பார்.எனவே நீ அவளை விரும்புவதாக கூறுகிறாய்.அவளோ உன்னை விரும்பலாம் அல்லது நிராகரிக்கலாம்.ஆனால் நீ உத்தேசித்த உடலுறவுக்கு அழைப்பதை அவளால் புரியவே முடியாது.இது மொழி உன்னை அன்னியப்படுத்திய இடமாகும்.அதே சமயம் உன்னால் ஒரு விபச்சாரியிடம் நேரடியாக கேட்க முடியும்.ஆனால் சமூகம் அதை அனுமதிக்காது.நீ இங்கு விதிகளாலும்,ஒழுங்குகளாலும் ஆன அமைப்பை மீற முடியாமல் தவிப்பதை காணலாம்.நமது மொழியும்,சமூக அமைப்பும் திருமணத்துக்கு பிறகு தான் உடலுறவு என்ற கருத்தியலை கொண்டிருப்பதால் உன்னால் காதல் நாடகம் தான் முடிகிறது.இங்கு இன்னொரு விசயத்தை கவனிக்கவேண்டும்.உனக்கு அடிமையானவர்களிடம் காட்டாக உனது வீட்டு வேலைக்காரியை பேச்சு மறுக்கப்பட்ட அடிமையை உனது மொழியின் துணையில்லாமலே பாலியல் அத்துமீறல் செய்து கொள்ளமுடியும்.இங்கே மொழி அந்த பெண்ணுக்கு தீங்கீழைக்கப்பட்டதை சொல்ல முடியாதவகையில் அந்நியப்படுவதை காணலாம்.நீ உடலுறவுக்கு அழைக்க முடியாத அந்த ஏமாற்றம் உன்னை வக்கிரத்துக்கு கொண்டு செல்கிறது.உன்னை பாலியல் அத்துமீறலை செய்யும் படியாக உனது மொழி அகநிலை அப்படி செய்கிறது.மொழி இங்கே அதிகாரமாக உன்னை செயல்படவைக்கிறது.பல சமயங்களிலும் சமூக அதிகாரம் தன்னிலைகளை இணைத்துக்கொண்டு ஒரு பெண்ணை பலர் பாலியல் வல்லுறவுக்கு கொண்டு செல்லுவதை ஊக்கப்படுத்துகிறது.இங்கே பேச்சு முற்றிலுமாக மறுக்கப்படுகிறது.மொழி அந்நியமாக்குகிறது.ஆக பாலியல் இச்சை மொழியால் பேசமுடியாத அல்லது மொழியை பேச மறுக்குகிற அகநிலைகளை உருவாக்குகிறது.இதனால் தான் அதிகாரம் மொழியை விட சக்திமிக்கதாக உடலை ஆட்படுத்தவும்,ஆட்கொள்ளவும் மிக்கதாக இருக்கிறது.நாம் மற்றவர்களிடம் சுதந்திரமாக பாலியல் அல்லது உந்துதலைகளை பேசமுடியுமென்றால் அங்கே அதிகாரமோ,அத்துமீறல்களோ நிகழவாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.மற்றவர்களிடம் பேச மொழி ஒரு தடையாக இருப்பது போல அதிகாரமும் ஒரு தடையாக இருக்கிறது.அதிகாரம் மிக்கவர்கள் மொழியால் பேச மறுக்கப்படுபவர்களை ஆட்கொள்ள மொழியோ,பேச்சோ தேவையில்லாமலே அதிகாரத்தால் ஆட்கொள்ளமுடியும்.காவல்துறையினர் பல இடங்களிலும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்த அதிகாரம் ஒரு முக்கிய காரணமாகிறது.ஒரே மொழியால் ஆட்கொள்ளவும் அனுமதிக்கவும் ஆவதால் மொழி ஏக காலத்தில் அதிகாரமிக்கதாகவும்,ஒடுங்கிபோகவும் தயாராக இருக்கிறது.மொழி அதிகாரமாக மாறும் போது உடல் அங்கே அதிகாரம் செலுத்துமிடமாக மாறுகிறது.உடல் அதிகாரத்தை அனுமதிக்கிறபோது மொழி மறுக்கப்படுகிறது.இன்னும் சொல்லப்போனால் பெண்ணில் உடல் மொழியை மொழி இல்லாமலே வாசிக்கவும்,ஆட்கொள்ளவும் மொழியால் ஆன சமூகமும் மொழியால் ஆன அதிகாரமும் அனுமதிக்கிறது.பெண்ணின் உடல் மொழியால் தீர்மானிக்கப்படுவது போல பாலியல் அத்துமீறலை மொழி அகமாக இருந்து செய்கிறது.மொழியும்,பேச்சும் இல்லாதபோதும் மொழி செயல் படும் தருணம் இதுவாகும்.ஏனெனில் பெண்ணைகுறித்த அத்துணை விசயங்களையும் மொழி நமக்கு ஏற்கனவே சொல்லித் தந்திருக்கிறது.மொழியால் நேரடியாக மற்றவர்களிடம் பேச முடியவில்லை என்றாலும் அதிகாரம் மூலமாக செயல்படமுடியும்.பேச்சு அங்கே முக்கியமில்லை.ஆக மொழியால் பேசமுடியாது என்பதே உண்மையாகும்.

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...