சூஃபி மகான் முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் ஜீவிய சரிதை அற்புதங்களால் நிரம்பியது என்பது யாவரும் அறிந்த உண்மை. அவரின் பெயரால் சொல்லப்படும் அற்புதங்களின் பட்டியலில் எல்லாமே அவரால் நிஜமாகவே நிகழ்த்தப்பட்டவைதானா என்னும் கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், அத்தகு அற்புதங்கள் நிகழ்வதற்குரிய ஆன்மிகப் படித்தரத்தில் அவர்கள் இருந்தார்கள் என்பதே உண்மை. அன்னாரால் நிகழ்த்தப்பட்ட ஒரு (கராமத்) அற்புதத்தை இங்கு நினைவு கூர்வோம்.
“பாக்தாதில் ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் இருந்தார். அவருக்குப் பல்லாயிரம் தொண்டர்கள் இருந்தார்கள். அவருக்கு கலீஃபாவிடமும் செல்வாக்கு இருந்தது. அவர் இஸ்லாம் பற்றியும் திருக்குர்ஆன் பற்றியும் நன்றாக அறிந்திருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதும் அந்த பாதிரிக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. எனினும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு விஷயம் தடையாக இருந்தது. அதாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட மிஃராஜ் நிகழ்ச்சியை அவரின் மனம் புரிந்துகொள்ள முடியாமலும் ஏற்க முடியாமலும் தவித்தது. அக்காலத்தின் சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் பலரையும் கலீஃபா அந்தப் பாதிரிக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் ஒருவரும் அவரின் சந்தேகத்தைப் போக்கும்படியான விளக்கத்தை அளிக்க முடியவில்லை. பின்னர் கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அவர்களுக்குச் செய்தி அனுப்பி அந்தப் பாதிரியாரின் ஐயத்தை நீக்குமாறு கேட்டுக் கொண்டார்.
முஹ்யுத்தீன் ஆண்டகை அவர்கள் அரண்மனைக்கு வந்தபோது கலீஃபாவும், பாதிரியும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாதிரி தன் நகர்வுக்காக ஒரு காயைக் கையில் எடுத்தபோது அவரின் கண்கள் முஹ்யுத்தீன் ஆண்டகை அவர்களின் விழிகளைச் சந்தித்தன. பாதிரி தன் கண்களை இமைத்தார். இமைகள் திறந்த போது தான் ஒரு நதியில் மூழ்கிக் கொண்டிருக்கக் கண்டார். தன்னைக் காப்பாற்றும்படி அவர் அலறினார். கரையில் நின்று கொண்டிருந்த இடைச்சாதி இளைஞன் ஒருவன் ஆற்றுக்குள் பாய்ந்து சென்று மூழ்கிய பாதிரியைப் பிடித்துக் கரைக்கு இழுத்து வந்தான். பாதிரி நதியிலிருந்து எழுந்த போது தன் உடலமைப்பே மாறிவிட்டிருப்பதைக் கண்டார். தன் மறைவுறுப்பு காணாமல் ஆகி நெஞ்சில் ஸ்தனங்கள் முளைத்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டார். அவர் ஓர் இளம் பெண்ணாக மாறிவிட்டார்! ’நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்று அந்த இடையன் கேட்டான். பாக்தாதிலிருந்து என்று பாதிரி சொன்னா(ர்)/(ள்). அந்த ஊரிலிருந்து நான்கு மாதத் தொலைவில் இருந்தது பாக்தாத். எனவே அவளுக்கு அந்த இடையன் அடைக்கலம் கொடுத்தான். பின் அவளையே மணந்து கொண்டான். அவர்களுக்கு அடுத்தடுத்து மூன்று பிள்ளைகளும் பிறந்து விட்டன. இப்படியாக, பெண்ணாய் மாறிய பாதிரி அந்த இடையனின் மனைவியாக இல்லறம் நடத்திக் கொண்டிருந்தாள்.
ஒரு நாள் அவள் அந்த நதியில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது வழுக்கி நீருக்குள் விழுந்தாள். அவள் முங்கி எழுந்தபோதோ… தான் ஒரு பாதிரியாக பக்தாத் அரண்மனையில் கலீஃபாவின் முன் சதுரங்கக் காயைக் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதையும், முஹ்யுத்தீன் ஆண்டகை அவர்களின் கண்களுக்குள் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். ”பாதிரியாரே! இன்னும் நீர் நம்பவில்லையா?” என்று முஹ்யுத்தீன் ஆண்டகை அவர்கள் கேட்டார்கள். என்ன நடந்தது என்பது பற்றித் தெளிவில்லாத அந்தப் பாதிரி இது முஹ்யுத்தீன் ஆண்டகை தன்னை மனோவசியம் செய்து காண்பித்த ஒருவிதக் கனவுக் காட்சி என்று எண்ணியவராக ”என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு முஹ்யுத்தீன் ஆண்டகை அவர்கள், “அப்படியானால் நீங்கள் உங்கள் குடும்பத்தை அவசியம் பார்க்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே அரண்மனையின் கதவைத் திறந்தார்கள். அங்கே அந்த இடையனும் மூன்று பிள்ளைகளும் வந்து நின்றார்கள். நிஜத்தில்! இதைக் கண்டவுடன் அந்தப் பாதிரியார் ஓடி வந்து முஹ்யுத்தீன் ஆண்டகையின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். பின்னர் தன் ஐயாயிரம் தொண்டர்களுடன் இஸ்லாத்தை ஏற்றார்.”
இதுதான் அந்த அற்புத நிகழ்ச்சி. காலத்தின் ஒரு துளிக்குள் பல வருடங்கள் சுருண்டு கிடக்கும் நிகழ்ச்சி. இதில் சொல்லப்பட்டிருக்கும் ‘மிஃராஜ்’ என்னும் நிகழ்ச்சியும் காலத்தைப் பற்றிய நமது சாதாரண அனுமானங்களைத் தகர்த்துவிடுகின்ற ஒரு நிகழ்வுதான். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் விண்ணேற்றம் உடலால் நிகழ்ந்ததுதான்; அவர்கள் விழிப்பு நிலையில் இருக்கையிலேதான் நிகழ்ந்தது. எனினும் இவ்வுலகக் காலகதியில் ஒருசில கணங்கள் மட்டுமே நிகழ்ந்ததாக க் கூறப்படும் அந்த நிகழ்வில் முப்பத்தாறு வருடங்களின் அனுபவத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அடைந்தார்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment