Wednesday, September 05, 2018

வலிகளை எழுதும் கவிதை நூலை முன்வைத்து

வலிகளை எழுதும் ஈழத்து கவிதை நூலை முன்வைத்து

எச்.முஜீப் ரஹ்மான்

இலங்கையை சார்ந்த கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இப்படி சொல்கிறார்.
போர் முடிந்த பின்னர் ஈழத்துச் சூழல் மாறிவிட்டது. எழுத்தாளர்கள் உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் எழுதுகிறார்கள். போர் அனுபவங்கள், சிறை அனுபவங்கள், புலம் பெயர்ந்த அனுபவங்கள் எனத் தமிழ் இலக்கியத்துக்கு மிகப் பெரிய வரவு. ஈழத்து இலக்கியம் தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்துகிறது. ஈழத்துப் படைப்பாளிகள் தங்கள் எழுத்தைப் பதிப்பிக்க முடியாத சூழல் முன்பு இருந்தது. இப்போது அது மாறி அநேக நூல்கள் வெளிவருகின்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் கல்விமுறை மாறிவிட்டது. ஆங்கில மோகம் உச்சத்துக்குப் போயிருக்கிறது. அடுத்த தலைமுறை தொடர்ந்து முனைப்புடன் தமிழ் இலக்கியம் படைக்குமா என்பது சந்தேகம்தான்.

இலக்கியமானது சமூக உருவாக்கத்தின் ஒரு கருவியாகும். காலங்காலமாக இலக்கியங்களினை எழுத முன்னின்றவர்களில் பலர் அரசியல் உள்ளீர்ப்பினால் உந்தப்பட்டவர்களாக, வரலாற்றுடன் தொடர்பு படுத்தியே இலக்கியங்களினை உழுதியுள்ளனர். ஓர் இலக்கியம் காலத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் தோற்றம் பெறுகின்றது என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது. எந்தவொரு இலக்கியத்தினையும் ஊன்றிக் கற்கும் வாசகன் ஒருவன் அவ்விலக்கியத்தினூடாக அது தோன்றிய காலகட்டத்தையும் இனங்கண்டு கொள்ள முடிகிறதெனில், எந்தவொரு இலக்கியமும் வரலாறாகி விடுகின்றமை தவிர்க்கமுடியாததாகின்றது.

இலக்கிய வரலாற்றுக்கு காலத்துக்கு காலம் தரப்பட்ட பல்வேறு பகுப்புக்களையும் கூர்ந்து கவனிக்கின்ற போது இலக்கிய வளர்ச்சி பற்றிய அறிவெல்லை விரிந்து செல்வது தவிர்க்க முடியாது போகின்றது. பொதுவாக தமிழ் இலக்கியப் பரப்பினை பகுக்க முற்பட்டோர் அரசியலடிப்படையிலான இலக்கிய வரலாற்றுக்காலப் பகுப்பினையே முன்வைத்துள்ளனர். எனவே ஈழத்து இலக்கிய வரலாற்றினையும் இத்கைய அரசியல்சார் அடிப்படையில் அமைத்துக் கொள்வதே சிறப்பான தெரிவாக அமையும்.

புகழ்மிக்க ஆய்வாளர் கா.சிவதம்பி சொல்லும் போது
இலக்கியம் ஆற்றல் மிக்க தொடர்பு முறைமை என்னும் உணர்வு, அறிவு ரீதியாக ஏற்பட்டுத் தொழிற்படுகின்றபொழுதுதான், இலக்கியத்தின் தன்மை, அதன் நோக்கம், அதுஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியன பற்றிய அறிவுநிலைநின்ற தேடுதல் ஆரம்பமாகின்றது. இத்தேடுதல் முயற்சியே இலக்கிய விமர்சனமாகும். இது ஒரு மூளையில் இலக்கியக் கோட்பாட்டு ஆய்வாகவும்  மறுமுனையில் அக்கோட்பாடுகளைப் பிரயோகித்துத் தனிப்பட்ட அன்றேல் ஒரு தொகுதியான ஆக்கங்களை ஆராயும் ஆய்வாகவும் அமையும். இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இருபுறங்கள் போன்றனவே. இலக்கியத்தின் தொடர்பு முக்கியத்துவம் விளங்கிக்கொள்ளப்படும் பொழுது, அதாவது எழுதவேண்டியன பற்றிய எண்ணத்துணிவும் உணர்ச்சித் தெளிவும் ஏற்படுகின்ற பொழுது, அதற்கு முன்னர் தோன்றிய ஆக்கங்கள் பற்றியும், சமகால சிந்தனைகள் பற்றியும், `பாரம்பரியம்’, `மரபு’ பற்றியும் ஆய்வுகள் தோன்றும்.

இலக்கிய விமர்சனம் கோட்பாட்டு நிலையிலும் பிரயோக ஆய்வு நிலையிலும் பாரம்பரியத்துக்கும் சமகால இலக்கிய நிகழ்வுகளுக்கும்  எதிர்கால இலக்கியத் தேவைகளுக்கும் இணைப்பினையும் இயைபினையும் ஏற்படுத்துகின்றது. அன்றேல் ஏற்படுத்த முனைகின்றது எனலாம். மூன்று காலங்களையும் உள்ளடக்காத இலக்கிய விமர்சனணர்வு உண்மையான இலக்கிய விமர்சன ஆக்கங்களுக்கு இடமளிக்க முடியாது. இலக்கியக் கோட்பாடுகள் விமர்சன நிலைப்பட்ட ஆய்வுகளிடையே தோன்றுபவை. பிரயோக விமர்சனங்கள் இலக்கியக் கோட்பாடுகள் வழிநின்று செய்யப்படும் நுண்ணிய தான ஆய்வுகளேயாகும்.இலக்கிய விமர்சன ஆய்வுநோக்கு வளர்வதற்கு, 1942 முதல் தனிப்பட்ட பல்கலைக்கழகமாக இயங்கிவந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, நடைமுறைப்படுத்தி வந்த பாடவிதான அமைப்பு முக்கிய பங்காற்றுகின்றது. இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறையின் இப்பணி 1950, 60களிலே அதிமுக்கியத்துவம் பெறுகின்றது.இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர் சுவாமி விபுலானந்தர் ஆவார்.

இவர் தமது முக்கிய ஆராய்ச்சி நூலான `யாழ் நூல்’ இல் பௌதிக விஞ்ஞானத்தையும் தமிழறிவையும் இணைந்த ஆய்வுமுறை பின்பற்றப்படுவதைக் காண்கிறோம்.விபுலானந்தரின் தனிப்பட்ட ஆய்வு நெறியிலும் பார்க்க முக்கிய இடம் வகிப்பது `தமிழ் இலக்கிய வரலாறு’என்னும் பாடநிர்ணயமே. இலக்கியத்தை முழுமையாகப் பார்க்கும் பண்புவிமர்சனத்துக்கு அச்சாணியாகும். தமிழ் இலக்கியத்தினை முழுமையாக எடுத்துக்காட்டி அம்முழுமையின் செல்நெறிகளையும் பாங்குகளையும் உணர்த்துவது இலக்கிய வரலாறு என்னும் பாடமேயாகும்.

தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முறையாக வரன்முறையான பாடமாகப் போதித்தது இலங்கைப் பல்கலைக் கழகமே ஆகும். இது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் தீட்சண்ய நோக்கினால் ஏற்படுத்தப்பெற்ற புரட்சிகர மாற்றமாகும்.அடுத்து, இலக்கிய விமர்சனத்தையும் முதன் முதலில் ஒரு பாடமாக சிறப்புத் தமிழ் மாணவர்களுக்கு மாத்திரமல்லாது, தமிழை ஒரு பாடமாகப்பயின்ற பொதுக்கலை மாணவர்களுக்கும் பயிற்றிய பெருமையும் இலங்கைப் பல்கலைக் கழகத்துக்குண்டு.

தமிழக அறிஞர்கள் விமரிசன நூல்களென கண்ணோட்டத் தெளிவற்றஆங்கில மேற்கோட் கலவைகளை வெளியிட்டு வந்த காலத்தில் ஐ.ஏ.றிச்சர்ட்டின் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளுக்கு இயையத் தமது விரிவுரைகளை அமைத்து மாணவரின் இலக்கியக் கண்ணோட்டத்தினை செம்மைப்படுத்தியவர் பேராசிரியர் வி.செல்வநாயகம் ஆவார். இவரே முதன்முதலில் வரலாற்று நோக்கில் எழுதப்பெற்றதும், பின்னர் பலராலும் கடப்பாட்டுத் தெரிவிப்புடனும் அல்லாமலும் பின்பற்றப்பட்டதுமான தமிழ் இலக்கிய வரலாற்று நூலை எழுதியவர். மேலும் இலக்கிய வெளிப்பாடு என்பது உயர் இலக்கிய வகைகள் பற்றிய வரையறைப்பட்ட ஆய்வாக மாத்திரம் இருத்தல் முடியாது. அது நாட்டுப்பாடல், நாட்டுக் கூத்து முதலியவற்றையும் உள்ளடக்குமென்பதைத் தனது ஆய்வுகளின் மூலம் தெளிவாக்கியவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஆவார்.  யாவற்றுக்கும் மேலாக முதன் முதலில் நவீன தமிழ் இலக்கியங்களைச் சிறப்புத் தமிழ்த் தேர்வுக்குப் பாட நூல்களாக்கிய பெருமையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தையே சாரும். இலங்கைப்பல்கலைக்கழகத்தின் இம்முன்னோடிச் சாதனை பற்றிமறைமலையடிகள் தமது `சிந்தனைக் கட்டுரைகள்’ நூல் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். 1950களிலேயே `புதுமைப் பித்தன்’ கதைகள் பாடபுத்தகமாக விதிக்கப்பெற்றிருந்தது. இதனால் தற்காலத் தமிழ் இலக்கிய ஆக்க எழுத்தாளர்கள் பரீட்சைத் தேவைகளுக்காக வரன் முறையாக ஆராயப்படும் ஒரு நிலைமை ஏற்பட்டது. இத்தகைய பாடவிதான அமைப்புக்களின் முன்னணி வழியாக வந்த மாணவர்கள் விமர்சனத்துறையில் முன்னணி இடத்தினைப் பெறத் தொடங்கினர்.

பெரும்பாலான பட்டதாரிகள் ஆசிரியர்களாகத் தொழில் மேற்கொண்டமையால் இவ்வணுகுமுறைகள் தேசப் பொதுவாக்கப்பட்டன.இவற்றுடன் நவீன இலக்கியமும் விமர்சனமும் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை நிலையிலும் பாடசாலைகளில் உயர் வகுப்புக்களிலும் மிக முக்கியமான துறைகளாக அமைக்கப்பெற்றன. இவை காரணமாக ஆசிரியர்கள்மட்டத்திலும் வாசகர்கள் மட்டத்திலும் நவீன இலக்கியக் கோட்பாடுகள், விமர்சன மரபுகள் பற்றிய அறிவு பரப்பப்பெற்றது.இலங்கையிற் கல்வியும் இலக்கியமும் ஜனநாயகப்படுத்தப்பட்ட முறைமையும் வேகமும் தமிழகத்திலிருந்து  வேறுபட்டதென்பதையும் இலங்கைத் தமிழ் மக்களின்எழுத்தறிவு விகிதமும் தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதமும்  வேறுபட்டனவென்பதையும் மனத்திருத்தி நோக்கும் பொழுது மேற்கூறிய பண்புகளின் பொது நிலைப்பட்ட தாக்கத்தினை நன்கு விளங்கிக்கொள்ளலாம். இவற்றால் இலக்கிய விமர்சனம் முனைப்படைவதற்கான கல்விப் பின்னணியொன்று இலங்கையில் நிலவிற்று என்பதும் தெளிவாகின்றது.
இதன் அடிப்படையில் பார்க்கும் போது சு.செல்வகுமாரனின் வலிகளை எழுதும் ஈழத்துக் கவிதை நூல் பரந்து பட்ட விமர்சன விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

பேரா.செ.யோகராஜா சொல்லும் போது  ஈழத்து நவீன கவிதை வளர்ச்சிபற்றி எடுத்துரைப்போர் நாவல், சிறுகதைத் துறைகளை விட கவிதைத்துறை சிறப்புற்றிருப்பதாகக் கூறுவர், இது ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான். எனினும், நவீன கவிதைபற்றி இத்தகைய அவதானிப்பு குறிப்பிட்ட கவிதைத் தொகுப்புகள் சிலவற்றை வைத்தே கூறப்பட்டுவருகின்றது, பரந்துபட்ட நிலையில் முழுத்தொகுப்புகளும் கவனத்துக்குட்படுவதில்லை. இன்னொருவிதமாகக் கூறின், ஈழத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் வெளிவருகின்ற அனைத்துத் தொகுப்புகளும் அவர்களது பார்வைக்குட்படுவதில்லை. எண்பதுகளின் பிற்பகுதி தொடக்கம் தொகுப்புகளின் வரவு அதிகரித்துக் காணப்படும் அதேவேளையில், அவற்றை எளிதாகப் பெறமுடியாத நிலைமை காணப்படுவதையும் மறுப்பதற்கில்லை. இத்தகைய தொகுப்புகள் பலவற்றையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது, ஈழத்து நவீன கவிதை 'வளர்ச்சி'யின் ஆரோக்கியமற்ற பக்கங்கள் சில வெளிப்படுகின்றன!.எழுத்தாளர் தியா ஈழத்து கவிதைகள் குறித்து சொல்கிறபோது இப்படி சொல்கிறார்.

ஈழத்துக் கவிதைகள் 1980கள் வரை சாதி, சமயம் என்ற வரன்முறைக்குள் நின்றுகொண்டே பெரும்பாலும் வளர்ச்சி கண்டன. இன்னொரு வகையில் சொன்னால் தம்முடைய காலப்பகுதியில் தாம் எதனால் பாதிக்கப் படுகிறார்களோ அல்லது ஈர்க்கப்படுகிறார்களோ அந்த ஈர்ப்புணர்வின் வெளிப்பாடாகவே காலத்துக்குக் காலம் தமிழ் இலக்கியங்கள் தோன்றியிருப்பதை வரலாறு எமக்கு உணர்த்துகின்றது. 

இன்றைய இலங்கைத் தமிழர் வாழ்வு பல்வேறுபட்ட ஆதிக்கக் கூறுகளினால் கட்டுண்டு கிடக்கிறது. இதில் பிரதானம் இனத்துவ ஆதிக்கநிலை, பின்வர்க்க முரண்பாடுகள், சாதிப் பிரச்சினை, மதமேலாதிக்கம், பெண்ணிய அடிமைத்தனம், பிரதேச வேறுபாடுகள் போன்றனவாகும். இத்தகைய கருத்தியல் நிலைகளை உள்வாங்கிக் கொண்டனவாகவே ஈழத்தில் தற்காலக் கவிதைகளும் பிறக்கின்றன.

1980 களின் பின்னைய இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் அரசியல், பெண்ணியம் போன்றன முனைப்புப் பெறுவதைக் காணலாம். இக்காலப் பகுதியில் வந்த புதிய பரம்பரையில் பெண்களின் பங்கு கணிசமானதாக இருந்தது. அரசியல் ஒடுக்குமுறை மிகுந்திருந்த இக்காலத்தில் இலக்கியங்களும் அதையே பேசின. கவிதை விமர்சகரான எம்.பௌசர் குறிப்பிடுவது போல “ஈழத்துத் தமிழ்க் கவிதையில் -இலக்கியத்தில் பெரும் அரசியல்வாடை அடிக்கிறதென மூக்கைப் பொத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்” என்ற கருத்து இவ்விடத்தில் வலுவுடையதாக உள்ளது. 

இனவன்முறைகள் முன்னைய காலங்களைவிட 1980களின் பின்னர் அதிகரித்தமையினால் அதற்கெதிரான எதிர்ப்புக் குரலாகவே கவிதைகளும் படைக்கப்பட்டன. போரினை உள்ளிருந்து எதிர்ப்போர் வெளியிருந்து பார்ப்போர் என இரு வேறுபட்ட இயங்கியல் தளத்தினூடே இக்காலக் கவிதைகள் எழுதப்பட்டன. தமிழ்த்தேசிய உணர்வின் காரணமாயும் மனிதாபிமான நோக்கிலும் என எதிர்ப்புக் குரல்கள் போருக்கெதிராக மேற்;கிளம்பின.
“…………………………….
கருணையுள்ளோரே கேட்டீரோ
காகங்கள் கரைகின்றன
சேவல் கூவுகின்றது
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன…….”

எனப் போரின் கொடுமையினையும் அதனால் ஏற்படும் இழப்புக்களையும் எந்தவிதமான பூச்சுப் புனைவுமின்றிக் கூறும் கவிஞர் அஸ்வகோஸின் வரிகள் இத்தகைய இயல்புடன் விளங்கக் காணலாம். 

1983இல் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடுமையான இன வன்முறையின் பின்னரான காலப்பகுதியில் வந்த கவிதைகள் போரினால் ஏற்பட்ட இழப்புக்களையும், கொடூரங்களையும், தமிழின எழுச்சியையும் பாடுவனவாக அமைந்தன. யாழ் நூலக எரிப்பு, நெடுந்தீவு குமுதினிப் படுகொலைகள், தமிழ் ஆராய்ச்சிப் படுகொலைகள் என்பன ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் பெருந் தாக்கத்தினை உண்டுபண்ண, அதன் விளைவாக புதுவை இரத்தினதுரை, நிலாந்தன், அஸ்வகோஸ், நட்சத்திரன் செவ்விந்தியன், கலா, சேரன் என நீண்டு செல்லும் பட்டியலையுடைய கவிஞர் குழாமொன்று தோன்ற வழிபிறந்தது.

கவிஞர் சு.வில்வரத்தினம் நீண்ட கவிதைப் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதை அவருடைய கவிதைகளில் இருந்து அறிய முடிகின்றது. 
“பறம்புமலை
பாரி மறைந்து
பரிதியும் மறைந்த இருளில்
அகதிகளாயினர்
அங்கவையும் சங்கவையும்

வென்றெரி முழவம் வீழ்ந்த கையோடு
குன்றில்
தோய்ந்த முகநிலவின் சோகம்
படர்கின்ற ஒற்றையடிப் பாதையினூடே 
பாரி மகளிர் நடந்தனர்
மலையின் இறங்கிப் பெயர்ந்து
………………………..
………………………
அந்தப்புரத்து அடிமைகளாகிவிட்ட 
அங்கவையும் சங்கவையும்
இரங்கி அழுதவையெல்லாம்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவிலும்
எதிரொலிக்கின்றனவே.”

தனது தொலைநோக்குப் பார்வையினூடே சங்கப் புலவர் ஒளவையாரின் பாடல் ஒன்றை நினைவுபடுத்தி இடப்பெயர்வின் அவலத்தினை எடுத்துக் கூறியமை சிறப்பாக உள்ளது.

1980களின் பின்னர் உலகின் பல நாடுகளுக்கும் சென்ற புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சொல்லமுடியாத பல சிக்கல்களை அனுபவித்தார்கள். பிரயாண அவலம், வீசாச் சிக்கல், தங்குமிடம் இன்மை, நிறவெறி, புதிய பண்பாட்டுச் சூழல், அந்நியஇடம், தாயகம் பற்றிய ஏக்கம் என்பன அவர்களை வாட்டிவதைக்க தமது இலக்கியங்களிலும் அவற்றை வெளிக்கொண்டு வந்தனர்.

சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், பிரதீபா, விந்தியன், அருந்ததி, மைத்திரேயி, ஊர்வசி, அவ்வை, தமயந்தி, சுகன், பாலமோகன் போன்ற சுட்டிக்காட்டத்தக்க இன்னும் பலர் தமது ஆதங்கங்களைக் கவிதைகளினூடாகக் கொண்டுவந்தனர். “சொல்லாத சேதிகள், மறையாத மறுபாதி, மரணத்துள் வாழ்வோம்” போன்ற கவிதைத் தொகுதிகள் புலம்பெயர் கவிஞர்களின் கவித்துவத்துக்கு ஆதாரமாக இன்றும் உள்ளன. 

வ.ஐ.ச.ஜெயபாலன் தனது ‘உயிர்த்தெழுந்த நாட்கள்’ என்ற நீண்ட கவிதையிலே தமிழர்களின் சோக வரலாற்றினை ஓரளவுக்கு எடுத்துக்கூற சேரனின் ‘கோபுரக் கலசமும் பனைமர உச்சியும்’ என்ற கவிதை அதனை மேலும் வலுவுடையதாக்கியது.
“ எனக்கு ‘விசா’ தந்த அதிகாரி 
மனைவிக்கு 
‘விசா’ தர மறுக்கிறான்
யாழ்ப்பாண வடலிகளின் நிழலில்
அம்மம்மா
‘போய்ச் சேர்ந்து விட்டாலும்’
சென்று திரும்பல்
இயலுமோ சொல்…?”

என நீண்டு செல்லும் இளவாலை விஜயேந்திரனின் கவிதைமூலம் சொந்த நாட்டுக்கே சென்று திரும்ப முடியாத அவலநிலை உணரப்பட்டது. வ.ஐ.ச.ஜெயபாலன் தன்னுடைய கவிதைகளில் புலம்பெயர் மக்களின் பல்வேறுபட்ட உணர்ச்சிகளைச் சித்திரிக்க முற்பட்டுள்ளமை அவரது கவிதைகளினூடே புலப்படுகின்றது.

“நான் மந்தையைப் பிரிந்த தனிஆடு
போர் என்ற ஓநாயின்
பிடி உதறித் தப்பியநான்
அதிட்டத்தால்
வாட்டும் குளிரில்…”

தாய்நாட்டின் பிரிவும் புகுந்த நாட்டின் தனிமையும் கொடிதிலும் கொடிது என்பதை உணர்த்த அவர் கையாண்ட வரிகள் அற்புதமானவை. 

மேலைநாட்டு ஆண்-பெண் சமத்துவ நிலையின் தாக்கத்தினை பெண்ணியம் சார்புடைய கவிதைகளின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. புலம்பெயர் சூழல், போராட்டக்களம், என்பன சமூக அமைப்பில் இருந்த பெண்களுக்கான மரபுவழித் தளைகளை உடைத்தெறிந்து புதுமை படைக்கும் சூழலை அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இதன் விளைவே பெண் கவிஞர்களின் பல்கிப் பெருகிய தோற்றமாகும். 

நிருபாவின் ‘மாப்பிள்ளைக்கு வந்தனங்கள்’ என்ற தனிக் கவிதையில் வரும் 
“…பூமியை விட்டு நான் 
செவ்வாயில் வாழச் சென்றால்
சூரியனையும் சந்திரனையும்
சீதனமாக் கேட்பீரோ?”

என்ற வரிகளும், பாமினியின்

“மாப்பிள்ளை வாங்கலியோ
மாப்பிள்ளை வாங்கலியோ
மாத வருமானமுள்ள 
உள்நாட்டு மாப்பிள்ளைக்கு
கைரொக்கத்துடன் 
கணிசமான தொகையும்……”

எனத் தொடரும் கவிதையும் சீதனத்துக்கு எதிராகத் திரண்ட பெண்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்றது. 

“எங்களைப் பாருங்கள்-எங்கள்
சேலைகளையும் ரவிக்கைகளையும் அல்ல 
எமது உணர்ச்சிகளை……”

“எனக்கு முகமில்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை………”

“… அகதியாதலால்
ஆடையில் இருந்து
உறுப்புக்கள் வரைக்கும்
பார்வைகளால் 
விசாரிக்கப்பட்டு
வயோதிபரில் இருந்து
இளைஞர் வரைக்கும்
காமப் பார்வையை 
என்மேல் பதிப்பர்
பெண்ணாதலால்”

அடுப்பங்கரையில் சாம்பல் பூச்சிகளாய் ஒதுங்கிக் கிடந்த பெண்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பிய இத்தகைய கவிதைகள் ஆவேசத்தின் குரலாகவும், அடக்குமுறையின் வெளிப்பாடாகவும் உள்ளமை விசேடமானது. போராளிக் கவிஞர்களான கஸ்தூரி, வானதி, பாரதி போன்றோரும் பெண்ணியம் சார்புடைய கவிதைகளை எழுதித் தம்மையும் அடயாளப்படுத்தினர். 

பாலுறவில் பேசாப்பொருளாக இருந்த உணர்வுகளும் கவிதைகளில் இடம்பெறத் தொடங்கின. ஆண்-பெண் உறவில் திருப்தி காணாத நிலையில் தமது ஏக்கத்தை வெளிப்படுத்தவும் கவிதைகளைத் தெரிவு செய்தனர். இத்தகைய புரிதலின் வெளிப்பாடாக ரஞ்சினியின் ‘புரிதலின் அவலம்’ என்ற கவிதை விளங்கக் காணலாம்

எண்பதுகளின் பின்னர் ‘சோலைக்கிளி’யின் வரவானது இனஉணர்வு வழிவந்த மாற்றங்களுக்கு இடமளிப்பதாக அமைந்திருந்தது. படிமக் கவிஞராகத் தன்னை இனங்காட்டிய இவருடைய கவிதைகளில் படிமங்களே மொழியாக அமைந்து விடுவதனால் கவிதைகளின் வனப்பும் சிறப்புடன் பேணப்படுகின்றது.

தொன்னூறுகளில் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தனது இருப்பை மேலும் இழக்கத் தொடங்கியது. விடுதலைக்கான இருப்பும் இருப்புக்கான விடுதலையும் இக்காலத்தில் அதிகம் சிலாகிக்கப் பட்டது. படிமம், குறியீடு, உருவகம் போன்ற வனப்புக்கள் அதிகம் நிறைந்திருந்த போதிலும் அவை கவிதைக்கு ஒருவகையான அழகு சேர்ப்பனவாகவே அமைந்திருந்தமை சிறப்பானது.

அஸ்வகோஸ், கருணாகரன், நட்சத்திரன் செவ்விந்தியன், ஓட்டமாவடி கருணாகரன், அறபாத், ஆத்மா, றஸ்மி, போன்ற இளம் கவிஞர்கள் 1990களின் பின்னர் கவிதை முயற்சியில் தம்மையும் ஈடுபடுத்திக் கொண்டு, முற்காலக் கவிஞர்களின் ஆளுமையில் இருந்து முற்றிலும் விடுபட்டு சூழலுக்கேற்ற விதத்தில் அசாதாரண எளிமையும் படிமப் பிரயோகச் செறிவும் உடையனவாகத் தமது கவிதைகளைப் படைத்தனர். 

ஈழத்துக் கவிதை இலக்கியத்தின் மற்றொரு கூறாக அமைவது முஸ்லீம் தேசியவாதம் ஆகும்.வடபகுதி முஸலீம்கள் வெளியேறியதன் பின்னர்தான் கவிதைகளில் முஸ்லீம்களின் பங்கு தக்கமுறையில் பிரதிபலிக்கத் தொடங்கியது. எம்.பௌசர், றஸ்மி, ஆத்மா, சிராஸ்டீன், ஸஹ{ப், ஹனிபா போன்ற பல முஸலீம் எழுத்தாளர்களின் கவிதைகளில் முஸ்லீம் தேசியவாதம் முனைப்புப் பெற்றுள்ளதைக் காணலாம்.

அமரராகிவிட்ட குறிஞ்சித் தென்னவனின் பணி கவிதை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான கவிதைகளினை எழுதி மலையகக் கவிதைக்கான தன்னாலான பணியினைச் சிறப்புடன் செய்த இவருடைய கவிதைகள் அடங்கிய சிறு தொகுதி நூலொன்று நீண்ட நாளின்பின் நிறைவேறிய போது, “எனது நெடுநாட்க் கனவு நிறைவுறுகிறது”என அகமகிழ்ந்தார். 

குறிஞ்சித் தென்னவனைத் தொடர்ந்து முரளிதரன், எலியாசன், மல்லிகை.சி.குமார் எனப்பலர் மலையகக் கவிதைக் களத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் எஸ்.முரளிதரன் மாத்திரம் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய ஈழத்துக் கவிஞர்கள் யப்பானில் புகழடைந்த ‘ஹைக்கூ’ கவிதையாக்க முயற்சியில் ஈடுபட்டிருப்பினும் அனுபவ முதிர்ச்சியின்மை காரணமாக அம்முயற்சி இன்னும் இம்மண்ணோடு சுவறவில்லைப்போல் தெரிகிறது.

ஈழத்துக் கவிதைப் பரப்பானது நீண்டு விரிந்த ஒரு வரண்முறையான நெடுவழியில் பயணித்து இன்றைய நிலையினை அடைந்துள்ள தற்காலச் சூழலில், முது கவிஞர்களின் சுவடுகளிடையே பயணிக்க இளங் கவிஞர்கள் பலர் முயன்று கொண்டிருப்பினும் அவர்களுக்கான காத்திரமான களமும், படைப்புச் சூழலும், வசதிவாய்ப்புக்களும் அதிகரிக்குமிடத்து உயிரோட்டமான இன்னும் பல கவிதைகளைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டும் என்பது மட்டும் உறுதி.

ஏழு அத்தியாயங்கள் 178 பக்கங்களில் செல்வகுமாரனின் உழைப்பு பளிச்சிடுகிறது.இது போல் அனேக நூல்களை அவர் தமிழுக்கு பங்களிப்பு செய்வார்.

எச்.முஜீப் ரஹ்மான்


No comments:

எழுத்தாளர் எச்.முஜீப் ரஹ்மானுடன் ஒரு நேர்காணல் தொடர்ச்சி

எழுத்தாளர் எச்.முஜீப் ரஹ்மானுடன் ஒரு நேர்காணல் 5 நேர்காணல் செய்பவர்: திரு. ரஹ்மான், நீங்கள் சூஃபிசம் மற்றும் குறிப்பிடத்தக்க சூஃ...