Saturday, September 15, 2018

என்னை எழுத்தாளராக்கிய கல்லூரி


என்னை எழுத்தாளராக்கிய கல்லூரி
பேரா.எச்.முஜீப் ரஹ்மான்

Image result for art

நான் 1989 ல் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இளநிலையில் சேர்ந்த போது இஸ்லாமிய சமூகத்தில் இருந்து நானும் நண்பன் பரீதுதீனும் மட்டுமே இருந்தோம்.எங்கள் வகுப்பு முழுவதும் ஆண்களே.பெண்கள் இல்லை.பின்னர் முதுநிலையும் அங்கே தான் படித்தேன்.1993ல் முதுநிலை முடித்து வெளியே வரும்போது ஐந்துவருட கல்லூரிநினைவுகள் மட்டுமே என்னை ஆக்ரமித்திருந்தது.கல்லூரில் வந்த போது என்னை கவர்ந்த கல்லூரி நூலகமே என்வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.நான் பத்மனாபபுரத்தில் பிறந்து அங்கேயே வசித்தமையால் என்னை எல்லோரும் மலையாளி என்றே நினைத்தார்கள்.ஆனால் பத்மனாபபுரத்தில் கோட்டைக்கம் இருந்த முதலும் கடைசியுமான முஸ்லிம் குடும்பம் எங்களுடையது.இதனால் மதசார்பற்ற சிந்தனையோடு தான் வளர்ந்தேன்.விரையில் மார்க்சியத்தோடு எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.பின்னர் பெரியாரியம்,அம்பேத்காரியம்,பெண்ணியம் என்று என் சிந்தனை வளர்ச்சிப்பெற்றுக்கொண்டிருந்தது.இதற்கு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் நூலகமே அடித்தளம் இட்டுகொடுத்தது.
எனது நண்பர் அரவிந்தன் வீட்டில் அவனது அப்பா கோலப்பாபிள்ளை அவர்கள் வைத்திருந்த நூலகம் வாயிலாக தமிழ் இலக்கியம் எனக்கு பள்ளிப்பருவத்திலேயே பரிசயமானது.காலச்சுவடு,கணையாழி, இலக்கியவட்டம்’ ‘சூறாவளி’ ‘கசடதபற’ ‘சதங்கை’ ‘வண்ணமயில்’ ‘படிகள்’ ‘வைகை’ ‘பிரக்ஞை’ ‘புதியதலைமுறை’ ‘நிகழ்’ ‘அ·’ ‘ழ’ போன்ற ஏராளமான சிற்றிதழ்கள்  கல்லூரி நூலகத்தின் எனக்கு வாசிக்கக்கிடைத்தன.
ஆய்வாளர் ராஜமார்த்தாண்டம் (2005) சிறுபத்திரிகை சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து'(1959) இதழிலிருந்து தொடங்குவதாகவே கூறுகிறார். சிற்றிதழ்களின் ஆய்வாளராகக் கருதப்படும் வல்லிக்கண்ணன் அவர்களும் தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற நூலில்(1991) இதே கூற்றை முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.
‘புதுமை இலக்கிய மாத ஏடு’ என்ற அறிமுகத்துடன் பிரசுரம் கண்ட முதல் ‘எழுத்து’ சிற்றிதழின் நான்கு பக்க முன்னுரையில் ‘முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஓர் இலக்கியப் பத்திரிகையை இந்தப் பாமரப் பிரியமான பத்திரிகைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு சோதிக்கின்ற முயற்சிதான்’ (ஜனவரி 1959) எனக் குறிப்படப்பட்டுள்ளது. இந்த வரியின் மூலம் ஒரு சில விடயங்களை பகுத்துப்புரிந்துகொள்ள முடியும்.
‘எழுத்து’ பாமரர்களுக்கான இதழ் இல்லை.
‘எழுத்து’ இதழ் கருத்து ஆழத்தையும் கனத்தையும் அறியும் கல்வி கற்ற சமூகத்துக்கு உரியது.
கல்வியும் அறிவும் பெற்ற சமூகம் ஆதிக்க சமூகமாக அக்காலக்கட்டத்தில் இருந்திருக்க வேண்டும். எனவே அது ஆதிக்க சமூகத்தின் வாசிப்புக்கு உரியது.
இவ்விதழ் ஒடுக்கப்பட்டவர்களின் தேவைக்காக, அவர்கள் குரலுக்காக உருவாகவில்லை.
‘எழுத்து’ ஆரம்பித்த சில வருடங்களில் கா.நா.சுவிற்கும் செல்லப்பாவிற்கும் இடையில் விமர்சனக் கலை குறித்தான பார்வையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவ, க.நா.சு இலக்கிய வட்டம் (நவம்பர் 1963) என்ற சிற்றிதழைத் தொடங்கினார் என்பது வரலாறு. இவ்விதழ் இலக்கியத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கியது என்பதை ‘இலக்கியவட்டம்’ இதழ் தொகுப்பின் (2004) முன்னுரையின் வழி அறியமுடிகிறது.
வல்லிக்கண்ணன் முதல் ஜெயமோகன் வரை எழுத்துக்கு முன்பே வெளிவந்த இலக்கிய இதழ்களான மணிக்கொடி போன்றவை சிற்றிதழ்கள் இல்லை என்று குறிப்பிடுகின்றனர். எழுத்தாளர் சா. கந்தசாமி (2014), ‘மணிக்கொடி’, ‘கலைமகள்’ எல்லாம் வெகுஜன பத்திரிகையாகவும் இல்லாமல் சிற்றிதழாகவும் இல்லாமல் இடைத்தரமான பத்திரிகைகளாகவும் அவற்றில் வெகுஜன ரசிப்புக்கு ஏற்ற கதைகள், கவிதைகள் வெளிவருவதுடன் முதல் தரமான, மற்றும் சோதனை முயற்சிக்கான கதைகளும் வெளிவரும் என்கிறார். அவை இன்றைய இடைநிலை ஏடுகளைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, தமிழ் இதழியல் சூழலில் ஆராய்ந்தால் சிற்றிதழ் - வெகுசன இதழ்கள் என்பது முற்றிலும் இலக்கியத்திறனாய்வுகள், இலக்கிய விமர்சனங்கள், இலக்கியத்தின் புதிய முயற்சிகள், என இலக்கியத்தை மட்டுமே மையப்படுத்தி பகுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.
1989 ல் லா.ச.ராவின் சிந்தாநதி சாஹித்திய விருது பெற்றபோது நான் நூலகரிடத்தில் இந்த நூலை வாங்கி நூலகத்தில் வையுங்கள் என்று சொல்லவே உடனடியாக அந்த நூல் தருவிக்கப்பட்டது.நான் கொடுத்த இலக்கிய இதழ் பட்டியலும் இலக்கிய நூல் பட்டியலும் பரிசீலனை செய்யப்பட்டு கல்லூரி நிர்வாகம் உடனடியாக வாங்கியதை என்னால் மறக்க முடியாது.இரண்டு தடவை சிறந்த நூலக வாசகர் என்ற விருதை கல்லூரி எனக்கு அளித்திருக்கிறது.1992ல் கோவி மணிசேகரனின் குற்றாலக்குறவஞ்சி சரித்திரநாவலை சாஹித்திய விருது பெறுவதற்கு முன்னே அந்த நூலை கல்லூரி நூலகத்தில் என்னால் படிக்கமுடிந்தது.நவீன இலக்கியம்,விமர்சனம்,கோட்பாடுகள்,சிந்தனைகள் எல்லாவற்ரையும் பர்ந்துப்பட்ட அளவில் வாசித்தறிய அந்த நூலகம் எனக்கு துணைநின்றிருக்கிறது.1993ல் எம்.வி.வெங்கட்ராமின் காதுகள் நாவல் சாஹித்த விருது பெறும்போது அதைகுறித்த விவாதத்தில் நானும் பங்கெடுத்துக்கொண்டிருந்தேன்.
நான் கல்லூரியில் பயின்றிருந்த காலகட்டத்தில் தான் சுந்தர ராமசாமியின் வீட்டுக்கு சென்று அவரோடு இலக்கிய உரையாடலை நிகழ்த்துவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.1991ல் காலச்சுவடு ஆண்டுமலர் வெளியாகியிருந்தது.அதில் தலித்தியம் குறித்த சர்ச்சைகள் இருந்தன.இது சம்பந்தமாக நான் சு.ராவுடன் பேசியிருக்கிறேன். இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் சூழலில், சமூகத்தின் பல மட்டங்களிலிருந்து எழுச்சியின் அசைவுகளும் அறிகுறிகளும் தோன்றின.     அவற்றில்     முக்கியமானது, ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியாகும். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர், தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி. ராஜா முதலியோர் தலித்து எழுச்சிக்கு வித்திட்டவர்கள்; அதுபற்றிய சிந்தனையையும் முன்வரைவுத் திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தவர்கள். கோயில் நுழைவுப் போராட்டங்கள் உள்ளிட்ட “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே     ஏற்பட்டுவிட்டது என்றாலும், தொடர்ந்து விடுதலைப்     போராட்டக் காலத்தில் அவ்வப்போது தலைகாட்டியது என்றாலும், 1990 - களில்தான் தலித் எழுச்சி, குறிப்பிடத்தக்க உணர்வு நிலையாகவும் போராட்டப் பண்பாகவும் ஆகியது. 1991, 1992 ஆகிய இரண்டு ஆண்டுகள் அம்பேத்கர் நூற்றாண்டு     விழா நடந்தது. இதனுடைய தூண்டுதல், தலித்தியத்திற்கு உந்து சக்தியாக இருந்தது. முக்கியமாக, ஜனநாயகம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையான விடுதலையைத்     தரவில்லை; இந்திய அரசியல் கட்சிகள் தங்களைப் பகடைக் காய்களாகவும், வாக்கு வங்கிகளாகவுமே (vote bank) பயன்படுத்துகின்றன என்ற உணர்வு தலித் மக்களை வெகுவாகப் பாதித்த சூழல், அது. எனவே தலித்தியம், ஒரு     வேகத்தோடு     எழுந்தது.     முக்கியமாகச் சிந்தனையாளர்களையும்     இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் ஈடுபட்டோரையும் இது அதிகமாகப் பாதித்தது. இதற்குமுன் பிரபலமடைந்திருந்த பெண்ணியத்தைவிடத் தலித்தியமே பரவலாகவும் கூர்மையாகவும் படைப்பிலக்கியத்திலும் மற்றும் பண்பாட்டுத் தளங்களிலும் தடம் பதித்திருக்கிறது.
எழுத்தாளர் சுஜாதா கணையாழியில் எழுதிய கடைசிப்பக்கங்கள் ஓரளவுக்கு நல்ல பத்தியாக இருந்தது.அப்போது ஜெயமோகனின் ரப்பர் நாவல் 1990ல் வெளிவந்து குமரியில் வாசகர்களுக்கு நல்ல அனுபவத்தை உருவாக்கியது.பின்னர் சிறுகதை தொகுப்பாக அவரின் திசைகளின் நடுவே,மண் ஆகியவை குறித்து நான் தக்கலையில் கலை இலக்கிய பெருமன்றத்தில் விவாதித்து இருக்கிறேன்.எழுத்தாளர் குமார செல்வா,எட்வர்ட் போன்றோர்களின் அறிமுகம் அந்த சமயத்தில் எனக்கு கிடைத்தது.
நான் கல்லூரியில் சேர்ந்த சமயம் தான் நண்பர் ஐ.கென்னடி எனக்கு தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலை குறித்து சொல்ல அந்த நாவலை வாங்கி வாசித்தேன்.மிகச்சிறந்த ஒரு நாவலாசிரியர் என்று நான் அவரை அடையாளம் கண்டேன்.அதன் பின் துறைமுகம் 1991லும் கூனன் தோப்பு 1993லும் வெளியானபோது எனக்கு கல்லூரி நூலகத்திலே வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.ஒரு நாள் நூலகத்தில் ஏதோ ஒரு இதழில் இந்த கவிதையை  கண்டேன்
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
கல்யாண்ஜி இப்படித்தான் எனக்கு அறிமுகமாகிறார்.பின்னர் வண்ணதாசன் என்ற பெயரில் அவர் எழுதிய கதைகளை படித்து புளாகிதப்பட்டேன்.மனதுக்கு ரொம்பவும் நெருக்கமான எழுத்தாளர் அவர்.சாகித்த அகாதெமி விருதை பொறுத்தவரை., சாகித்ய அகாடமி விருதுகளை தென்மாவட்டங்களில் பிறந்த எழுத்தாளர்களே அதிக அளவில் பெற்றுள்ளார்கள். குறிப்பாக திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அதிக அளவில் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். சாகித்ய அகாடமி விருது பெற்ற தென்மாவட்ட எழுத்தாளர்கள்; சு.வெங்கடேசன் (மதுரை), அ.மாதவன் (செங்கோட்டை), ஜோ.டி.குரூஸ் (உவரி), மேலாண்மை பொன்னுச்சாமி (விருதுநகர்), நீல பத்மநாபன் (இரணியல்), தி.க.சிவசங்கரன் (திருநெல்வேலி), தோப்பில் முகமது மீரான் (தேங்காய்ப்பட்டினம்), பொன்னீலன் (நாகர்கோவில்), வல்லிக்கண்ணன் (திருநெல்வேலி), மீ.ப.சோமு (மீனாட்சிபுரம்), பி.ஸ்ரீ. ஆச்சார்யா (தென் திருப்பேரை), அழகிரிசாமி (இடைச்செவல்), நா.பார்த்தசாரதி (சிவகாசி), தொ.மு.சி.ரகுநாதன் (திருநெல்வேலி), ஆதவன் (கல்லிடைக்குறிச்சி), சு.சமுத்திரம் (திருநெல்வேலி), கி.ராஜநாராயணன் (கோவில்பட்டி), சி.சு.செல்லப்பா (சின்னமனூர்), கவிஞர் வைரமுத்து (தேனி), மு.மேத்தா (பெரியகுளம்), நாஞ்சில்நாடன் (வீர நாராணமங்கலம்), பூமணி (தூத்துக்குடி), டி.செல்வராஜ் (தென்கலம்) வண்ணதாசன் (திருநெல்வேலி) என்று பட்டியல் நீளுகிறது.
வண்ணதாசன் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இயற்பெயர் கல்யாணசுந்தரம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து இயங்கி வருபவர். எல்லா ஆளுமைகளாலும் பெரிதும் மதிக்கப்படுபவர்.கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, ஒளியிலே தெரிவது  ஆகியவை வண்ணதாசன் எழுதிய முக்கிய சிறுகதை நூல்கள். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதை இலக்கியத்திலும் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார் வண்ணதாசன். புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்கள். இவை தவிர, அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. எல்லோர்க்கும் அன்புடன் என்ற பெயரில் வண்ணதாசன் எழுதிய  கடிதங்கள் தொகுக்கப்பட்டு அழகான நூலாக வெளியிடப்பட்டுள்ளன. மீண்டும் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு, ‘சில இறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளியானது. 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை நூலுக்காக வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. இந்த நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருந்தது.
அடுத்தபடியாக குமரிமாவட்டத்தை சார்ந்த நாஞ்சில்நாடனை கல்லூரியின் நூலகம் வழியே சந்திக்கிறேன். தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும்,மாமிசப்படைப்பு,மிதவை, சதுரங்கக் குதிரை   என்ற நாவல்களும்   தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்,வாக்குப் பொறுக்கிகள், உப்பு  என்ற சிறுகதை தொகுப்புகளாக குமரிமாவட்டத்தை எழுத்துகளாக வடித்திருந்தார்.அதுபோல் பொன்னீலன் அவர்களுடைய எழுத்துக்களை நூலகத்தின் ஊடாக வாசித்தறிந்தேன்.1992 ல் புதிய தரிசனங்கள் நாவல் வெளிவந்த போது குமாரசெல்வா அந்த நாவலை எனக்கு அறிமுகப்படுத்தினார்.முன்னரே அவரின் கரிசல் நாவலும் ஊற்றில் மலர்ந்தது தொகுப்பும் என்னை பெரிய அளவில் பாதித்திருந்தது.1991ல் தமிழ்நாடுகலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய நெட்டா முகாம் தான் எனக்கு பல எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியது.தக்கலையை சார்ந்த பென்னி,ஐ,கென்னடி,பிரேம்தாஸ்,நட.சிவகுமார்,ஹாமீம் முஸ்தபா,தக்கலை ஹலிமா,ஹெச்.ஜி.ரசூல் என்று நாங்கள் தக்கலை த.க.இ.பெயில் இயங்கினோம்.அண்ணன் சி.சொக்கலிங்கம்,பிரேம்குமார்,நாகராஜன்,அனந்து என்று எனது நட்பின் வட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்தது.
இரண்டாயிரம் ஆண்டுக் கவிதையின் போக்கில் பல மாறுதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. உலகமயமாதல், நகர்மயமாதல், தொழில்மயமாதல், சமூக அரசியல் நிகழ்வுகள், தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சி ஆகியன பிற இலக்கியத் துறைகளைப் பாதித்ததைப் போலவே கவிதைத் துறையையும் பாதித்தது.
     புதிய இலக்கியக் கோட்பாடுகளான பின்நவீனத்துவம், இருத்தலியம் போன்றவற்றின் தாக்கமும் தமிழில் கலந்தன. இவற்றையெல்லாம் உள்வாங்கிய தொண்ணூறுகளில் கவிதை மரபு முற்றிலும் வேறுபட்டது.     தொண்ணூறுகளுக்குப்     பின் வந்த கவிதைகளின் போக்குகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
திராவிட இயக்கத் தாக்கம், இனக்குழு அடையாளம், தொன்மம், மண்சார்ந்த படைப்பு என வெளிப்படும் கவிதைகள்.
தலித் கவிதைகள்
பெண்ணியக் கவிதைகள்
பின்நவீனத்துவக் கவிதைகள்
பிரேம் - ரமேஷ், யுவன், சூத்ரதாரி, யூமா வாசுகி, பாலை நிலவன், தபசி, யவனிகா ஸ்ரீராம், சங்கரராம சுப்பிரமணியன் எனப் பலர் பின்நவீனத்துவ காலக் கவிதைகள் படைத்து வருகின்றனர். நவீனப் பெண் கவிஞர்கள் இன்று ஏராளமாக எழுதி வருகின்றனர். அவர்களில் அணங்கு இதழின் ஆசிரியை மாலதி மைத்ரி. சுகிர்தராணி, சல்மா, சுகந்தி சுப்பிரமணியம், பனிக்குடம் இதழின் ஆசிரியர் குட்டி ரேவதி, வெண்ணிலா, உமா மகேஸ்வரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். என்.டி.ராஜ்குமார், அன்பாதவன், மதிவண்ணன், ராஜமுருகு பாண்டியன், விழி.பா.இதயவேந்தன், எனப் பலர் தலித் கவிதைகளை ஆழத்துடன் எழுதினர். கவிஞர் பழமலையின்     தொடர்ச்சியாகவும், தனித்த அடையாளங்களைக் கொண்டவர்களாகவும்     அறிவுமதி, வித்யாசாகர், இலக்குமி குமாரன், ஞான திரவியம்,      மகுடேஸ்வரன்     ஆகியோரைச் சொல்லலாம்.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை,கே.என்.சிவராஜ பிள்ளை,எஸ்.வையாபுரி பிள்ளை,ஜீவானந்தம்,ஹெப்சிபா ஜேசுதாசன்,கிருஷ்ணன் நம்பி,சு.ரா,கிருத்திகா,எம்.எஸ்,மா.அரங்க நாதன்,பொன்னீலன்,அ.கா.பெருமாள்,நீல.பத்மனாபன்,செந்தி.நடராஜன்,ஷண்முக சுப்பையா,தோப்பில்.,ஆ.மாதவன்,ராஜமார்த்தாண்டன்,தமிழவன்,நாஞ்சில் நாடன்,வேதசகாயகுமார்,எம்.டி.முத்துகுமாரசாமி,குமார செல்வா,ரசூல்,வறீதையா,கண்ணன்,குளச்சல் யூசுப்,மீரான் மைதீன்,குறுமபனை பெர்லின்,லட்சுமி மணிவண்ணன்,போகன்,என்.டி.ராஜ்குமார்,அபிலாஷ்,மலர்வதி,பீர்முகமது,கிறிஸ்டோபர் ஆண்டனி, முஜிபுர் ரஹ்மான்,கே.கே.பிள்ளை,நட சிவக்குமார்,வித்வான் லட்சுமணபிள்ளை,ஆறுமுகப்பெருமாள் நாடார்,பேரா ஜேசுதாசன்,ஐசக் அருமைராசன்,அனீஷ்கிருஷ்ணன் நாயர் என்றொரு எழுத்தாளர் பட்டாளமே இருக்கிறது என்றால் அதுவே நம் மாவட்டத்துக்கான பெருமையாகும்.இதுவரை நான் இருபத்தைந்து நூல்களை எழுதியுள்ளேன் என்று சொன்னால் என்னை எழுத்தாளராக்கிய பெருமை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் நூலகம் என்று சொன்னால் மிகையில்லை.
                               

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...