Wednesday, March 30, 2016

சூபிஞானிகளின் மெஞ்ஞான போதம்




ஞானம் பற்றிக் கூறிய தற்கலைவாழ் அற்புத வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மது றஹ்மதுல்லாஹ் அவர்கள் பாடியுள்ளார்கள்.  

மண்ணால ஆனதெல்லாம் மண் எடுத்த கோலமது
மண்ணையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பொன்னால ஆனதெல்லாம் பொன் எடுத்த கோலமது
பொன்னையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பஞ்சால ஆனதெல்லாம் பஞ்செடுத்த கோலமது
பஞ்சையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!

வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று என்று பொருள் கொள்ளலாம். ஆயினும் மெஞ்ஞானிகள் என்ற ஸுபியாக்கள்வஹ்ததுல் வுஜூத்என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். “வஹ்தத்என்றால் ஒன்று என்றும், வுஜூத் என்றால் உள்ளமை அல்லது மெய்ப்பொருள் என்றும் பொருள் வரும்.

ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்ற இந்த ஞானத்தை போதிக்கவே இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்கள் உருவாகின. இஸ்லாம் (ஷரீஅத்), ஈமான் (அகீதா), இஹ்ஸான் (தரீக்கத்) இவை மூன்றும் சேர்ந்ததுதான் மார்க்கம். இதுதான் தீன்.இஹ்ஸான் என்று சொல்லக்ககூடிய தரீக்கத்தை இறைவன் நமக்கு வழங்கிய காரணம் தன்னை அறிந்து தன் ரப்பை (இறைவனை) அறிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்.

தரீக்கத்துடைய ஞானவான்களான ஸுபியாக்கள் இந்த தரீக்காக்களின் (ஆன்மீக கல்லூரிகள்) மூலம் ஒவ்வொரு முஸ்லிம்களுடைய உள்ளங்களை திக்ர் பயிற்சிகளின் மூலம் தூய்மைப்படுத்தி மனிதன் தன்னை அறிந்து தன் ரப்பை அறிந்து, இறைவன் ஒருவன் என்ற தௌஹீதை உள்ளத்தின் மூலம் உணர வைப்பதற்காகவே தரீக்காக்களை (ஆன்மீக கல்லூரிகளை) உருவாக்கினார்கள்.

ஏனெனில் இஹ்ஸான் என்பது கற்கும் அறிவல்ல உணரும் அறிவு. இதனால்தான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களிடம் இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்ட போது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், தான் இறைவனை பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற உணர்வில் வணங்குவது அல்லது இறைவன் தன்னை பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்ற உணர்வில் வணங்குவது. (ஸஹிஹுல் புகாரி)
இதன் மூலம் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம் இஹ்ஸான் என்பது உணரும் அறிவு என்று.இப்போது விடயத்திற்கு வருவோம், வஹ்ததுல் வுஜுத் என்றால் உள்ளமை ஒன்று அதாவது இறைவன் ஒருவன் என்பதை அறிந்து உணரும் கல்விக்கே வஹ்ததுல் வுஜுத் என்று கூறப்படும்.

வஹ்ததுல் வுஜுத் பற்றி அல் குர்ஆனிலும், ஹதீஸிலும் ஏராளமாக இருக்கிறது. அதன் விளக்கங்களை முழுமையாக வாசித்து அறிந்துக்கொள்ள முடியாது. அவைகளை ஆன்மீக ஆசிரியர் ஒருவர் மூலமாகவே அறிந்துக்கொள்ளலாம்.
மெய்ஞ்ஞானம் (மஃரிபா) என்பது உள்ளமையே அறிவது.  யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. தக்வா எனும் பயபக்தியும், ஆத்மஞானயோகமும், நம்மனத்தைச் சுத்தப்படுத்தும்.  ஐரோப்பிய எழுத்தாளர்கள், சூஃபியா எனும் சொல்லைச் சோபோஸ் எனும் கிரேக்கவேர்ச்சொல்லோடு தொடர்புபடுத்தி அறிவாளி என்ற விளக்கம் தந்துள்ளனர்.  மென்மையான ஆடைகள் அணிந்த செல்வந்தரிடமிருந்து வேறுபட்டு, சூஃப் எனும் கரடுமுரடான ஆடை அணிந்த எளிமையான ஞானிகளைச் சூஃபிக்கள் என அழைத்தனர்.  எனினும் தூய்மை என்ற பொருள் வரும் ஸஃபாஎனும் சொல்லிலிருந்தே சூஃபிஎனும் சொல் வந்ததாக அறிய முடிகிறது.
1.    தெய்வக்காதலும், தெய்வபக்தியுமே சூஃபியத் தத்துவத்தின் அடிப்படைக் கருத்தாக அமைகிறது.
2.    அறிவும் அன்பும், உலகியல் ஆசை துறத்தலுமே சூஃபிய மார்க்கத்தின் வழிமுறைகளாய் அமைகின்றன.
3.    எல்லாச் சமயங்களும் தொடங்குமிடமும், முடியக் கூடிய இடமும் ஒன்றுதான் என நம்புவது.  அதாவது எல்லாவற்றுக்கும் காரணம் ஏக இறைவனின் அருட்கொடையே எனக் கருதுவது.
4.    புறக்கண்ணை மூடிவிட்டு, அகக்கண்ணால் யாவற்றையும் பார்க்கப் பழகுவது.
5.    மாசடைந்த ஆத்மாவை, இறைப்பற்றால் புதிதாக்குவது.
6.    ஒழுக்கம் நிறைந்த வாழ்வு, தூய்மையான வாழ்வு, இறைவனைப் பற்றிச் செல்லும் வாழ்வு, இவை சூஃபியர்களின் நோக்கமாய் அமைந்தன.
7.    குரு சீடர் அமைப்பு முறை இச்சித்தாந்தத்தில் நிலையானது.  எல்லாம் வல்ல இறைவன் கற்பிப்பவனாக, நாம் கற்பவர்களாக உள்ளோம் எனக் கருதுவது.
    உலக அளவில் ஹல்லாஜ் ஈப்னுல் அரபி, ஜலாலுத்தீன் ரூமி, சஅதி, ஹாபிஸ், ஜாமி போன்ற சூஃபியாக்கள் புகழ் மிக்கவர்களாய் திகழ்ந்தனர்.
    தமிழ்நாட்டில் சித்தர்களையும், சூஃபியா ஞானிகளையும் பிரித்துப் பார்க்க இயலா அளவிற்குப் பாடுபொருள், பாவகை வடிவம், உணர்ச்சி போன்றவற்றில் ஒற்றுமை தெரிகிறது.  பதினெட்டு சித்தர்களின் ஞானக்கோவையில் பீர் முகம்மதப்பா என்ற (முஸ்லீம்) சூஃபி மகானின் ஞானரத்தினக் குறவஞ்சியும் இடம் பெற்றுள்ளதுஎனத் தக்கலை பஷீர் (ஞான இலக்கியங்கள்) குறிப்பிடுவது ஒற்றுமைக்குச் சான்று பகருகிறது.

    இறைவனோடு இரண்டறக் கலக்கும்போது ஏற்படும் பேரானந்தக் களிப்பினைத் தாயுமானவர், கடுவெளிச் சித்தர் போன்றோரை அடியொற்றி இஸ்லாமியச் சூஃபி புலவர்களும் பாடியுள்ளனர்.  கீழக்கரை அல் ஆரிஃபா, செய்யிது ஆசியா உம்மா, தக்கலை பீர் முகம்மது சாகிப் (ஒலி), குணங்குடி மஸ்தான் சாகிபு, கோட்டாறு சேகு தம்பி ஞானியார், முத்துப்பேட்டை பீர் முகம்மது மஸ்தான், அய்யம் பேட்டை அப்துல் கனி, மேலப்பாளையம் மெய்ஞ்ஞானி முஹைய்யத்தீன் ஷெய்கு பஷீர் (ஒலி), கல்லிடைக் குறிச்சி கலிபத்து செய்கு சாகுல் அமீது, புதூர் முகம்மது மஸ்தான், தொண்டி மோனகுரு செய்கு மஸ்தான் சாகிபு, செய்கு முகம்மது மௌலானா போன்ற சூஃபியக் கவிஞர்களைச் சித்தர்களோடு பலகோணங்களில் ஒப்பு நோக்க முடிகிறது.

சித்தர்களைப் போன்றே குணங்குடியார், பீரப்பா போன்றோர் எழுதினாலும், இஸ்லாத்தின் நெறிக்குட்பட்டே எழுதினார்கள்.  அரேபிய நாட்டில் நடந்த நபிகள் பெருமானாரின் (ஸல்) வாழ்வைத் தமிழில் தந்த போது உமறுப்புலவர் எப்படித் தமிழ்ச் சூழலுக்கு ஏற்பத் தந்தாரோ அதே போல், சூஃபிப் புலவர்கள் இஸ்லாத்தின் வேரை அடித்தளமாகக் கொண்டே கிளை பரப்பினார்கள்.
    தம் குருநாதர் தாயுமானவர் பராபரக் கண்ணியைப் (389 கண்ணிகள்) பாடியதை மனதிற் கொண்டு குணங்குடியார் நிராமயக் கண்ணி (281 கண்ணிகள்), ரகுமான் கண்ணி (100) பராபரக் கண்ணி (100) புலம்பற் கண்ணி (17) கண்மணி மாலைக் கண்ணி (100) மனோன்மணிக் கண்ணி (100), நந்தீஸ்வரக் கண்ணி (51) ஆகியவற்றை இயற்றினார்.
    குணங்குடியாரைக் குருநாதராகக் கொண்டு ஐயா சாமி முதலியாரும், மகாவித்வான் திருத்தணிகைச் சரவணப் பெருமாள் ஐயரும், வெங்கட் ராய பிள்ளை கவிராயரும், கோவளம் சபாபதி முதலியாரும் பல பாடல்களைப் பாடினர்.  ஆக சூஃபிப் புலவர்கள் சமய நல்லிணக்கம் உடையவர்களாய் திகழ்ந்தனர்.
    1980 ஆம் ஆண்டு குணங்குடியாரின் பாடல்களைத் தொகுத்த கவிக்கோ அப்துல் ரகுமான் குணங்குடியார் சூஃபி மரபுப்படி திரிசிரபுரம் மௌலவி ஷாம் சாஹிபிடம் முரீதுஎனும் தீட்சை பெற்றிருக்கிறார்.  கல்வத்எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்திருக்கிறார்.  வலிமார்களின் கோமான் முகியத்தீன் ஆண்டவர் அப்துல் காதர் ஜீலானி அவர்களை ஞான குருவாகக் கொண்டு காதிரிய்யாநெறிப்படி ஒழுகி வந்துள்ளார்எனக் குறிப்பிடுகிறார்.
அழுகணிச் சித்தரும் சூஃபியப் புலவர்களும்
    உடலை இகழ்தல் என்பதும், ஆத்மாவுக்கு மரியாதை தருவதும் சித்தர் நெறி.  அழுகணிச்சித்தரின் தாக்கம், சூஃபியப் புலவர்களிடம் இருப்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
உற்றைச் சடலமடி உப்பிருந்த பண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா
உன் பாதம் சேரேனோ“         (அழுகணிச் சித்தர் பாடல்)
   
    இதே பொருளில் பீரப்பா ஊத்தைச் சடலம் படைத்து உலையாமலே உப்புக் கடலைப் புகட்டி“ (பீரப்பா ஆனந்தக்களிப்பு 8) என்கிறார்.  மெய்ஞ்ஞானி பஸீர் (ஒலி) ஊற்றைக் குணங் கொண்ட காயம் இதற்கொன்பது வாசலு மொழுங்காக உண்டும், நாற்றம் பொதிந்ததிக் காயம் இதை நம்பாதே மனமே” (12) எனக் குறிப்பிடுகிறார்
    மனித உடல் அழியக் கூடியது, ஊத்தைக்குழி என்று குணங்குடியார் நிராமயக் கண்ணியில் பாடுகிறார் இவ்வாறு...
    “ஊத்தைப் பிணமாம் உடலை இடிசுவரை
    ஏற்றபடி விடுதல் ஈனம் நிராமயமே“ – நிராமயக் கண்ணி – 23

மூலாதாரமான பாம்பினை யோகப் பயிற்சியினால் எழுப்பி மேல் ஏற்றும் திறம்பற்றிப் பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் எனப்பட்டார்.  இறைவனைக் கண்டவர் விண்டிலர், விண்டவர் ஒருக்காலும் கண்டதில்லை என்பதை
    “கண்டவர்களொரு காலம் விண்டிடர்கள்
    விண்டவர்களொரு காலும் கண்டிடார்கள்
    கொண்டே கோலமுள்ளவர்கள் கோறிலை காணார் எனக்
    கூத்தாடிக் கூத்தாடி ஆடு பாம்பே“         (பாம்பாட்டிச் சித்தர்)
இதே பொருளில் முத்துப்பேட்டை பீர்முஹம்மது மஸ்தான்
   
கண்டவர் சொன்னதில்லைக் கருவுருவான சோதி
    கண்டவர் விண்டதெல்லாம் கருத்துடன் ஒருமித்துக்காண
    கண்ட சூட்சமத்தை அங்குகண்ட தாய்ச் சொன்னாராகிற்
    கண்டதைச் சொல்லவில்லைக் காணி சூட்சந்தானே
                            (அத்வைத உண்மை போதம்-8)
போகர் கீழக்கரை அல் ஆரிஃபா செய்யிது ஆசியா உம்மா
    இராமநாதபுரம் மாவட்டத்தின் இயற்கைத் துறைமுகப்பட்டினமாகத் திகழ்வது கீழக்கரை பௌத்திர மாணிக்கப்பட்டிணம் எனப் பழந்தமிழ்க் கல்வெட்டுகள் வழங்கும் இப்பகுதியில் பிறந்தவர் கீழக்கரை ஆசியாம்மாள். தன்னை மிக எளிமையுடையவராகச் சிறியாள், பேதம் அறியாதவள், கல்லாள், சின்னவள் எனக் குறிப்பிடுவதைக் காணலாம்.  அப்பர் தேவாரத்தில் நாவுக்கரசர் தம்மை நாயேன் அடியேன்எனக் குறிப்பதைப் போன்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு இறைவனிடம் இறைஞ்சுகிறார் இப்படி
    “என் பற்று உன்னில் அமைந்த விட்ட உயர்
    ஏக ஏகாந்தமும் நீயாவாய்
    துன்பத்தை நீக்கிச் சுகந்தருக எந்தன்
ஜோதியே இரத்தின ஞானப்பெண்ணே!
என்று வேண்டுவதைப் போன்று, போகரும் இறைவனை இப்படிப் போற்றுகின்றார்.
    “அகண்ட பரிபூரணமா மையர் பாதம் போற்றி
    எடுத்து நின்றவுமை யவடாய் பாதம் போற்றி
இறைவனைப் போற்றும் நெறியில் ஒன்றுபடுகிறார்கள்.

No comments:

இருத்தலியத்தின் அபஸ்ரங்கள்

இருத்தலியத்தின் அபஸ்ரங்கள் ஜே.பிரோஸ்கான் (இலங்கை) கவிதைகளை முன்வைத்து 1 இது ஒரு மோசமான தேர்வு.  நிராகரிப்புகள் எனக்குள் நினைவிரு...