Wednesday, March 30, 2016

கலிமாவின் அர்த்தம் என்ன?

 Image result for la elah ela allah
 
1) லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு, அது தரும் தெளிவான நேரடி அர்த்தத்தை எடுக்கவேண்டுமா!
அல்லது அதற்கு வலிந்துரைகள் வைத்து வேறு சொற்களைப்புகுத்தி அர்த்தம் எடுக்கவேண்டுமா! அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் என்பது முஹ்கமான வசனமா! முதஷாபிஹ் ஆன வசனமா?
இஸ்லாத்தின் மூலமந்திரம் நிச்சயமாக முஹ்கமான வசனமாக - தெளிவான வாக்கியமாகத்தான் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
2) "I went to shop" - இவ்வாங்கில வசனத்தின் அர்த்தம்,'நான் கடைக்குப்போனேன் என்பதாகும். ஆனால் மேற்படிவசனத்துக்கு "நான் வாழைப்பழம் வாங்க கடைக்குப்போனேன்" என்று மொழிபெயர்ப்பது சரியான மொழிபெயர்ப்பாகுமா!!! அதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்களா!
அதுபோன்றுதான் இருக்கிறது லா இலாஹ இல்லல்லாஹ்வுக்கு நீங்கள் தந்திருக்கும் மொழிபெயர்ப்பு!

லா இலாஹ இல்லல்லாஹ்வுக்கு அதன் அர்த்தம் அல்லாத வேறு ஒன்றை அர்த்தமாக நம்பிக்கொண்டிருப்பதால் முஸ்லிம் என்ற வட்டத்துக்குள்ளேயே வரமுடியாதல்லவா?
3) லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வசனத்தில்,
"லா" - இல்லை, 
"இலாஹ" – தெய்வம் / சாமி / கடவுள்
"இல்லா" – தவிர / அல்லாத / வேறான
அல்லாஹ்" - அல்லாஹ்.

இதுதான் இச்சொற்களின் நேரடி அர்த்தம். இச்சொற்களுக்கிடையே "வணக்கத்துக்குரிய" என்ற சொல் எங்கே இருக்கிறது ?

(لا) லா – (ஹர்புன் நபிஃ) (deny - மறுதலிக்கும் உருபு),
(إله) இலாஹ - (இஸ்ம்-முப்ததா) (எழுவாய்,)
(إلا) இல்லா – (இஸ்தித்னா) பயனிலை (ஹபர்),
(الله) அல்லாஹ் – நீக்கம் செய்யப்பட்ட செயப்படு பொருள் (முஸ்தித்னா),
இச்சொற்களுக்கிடையே "வணக்கத்துக்குரிய" (முஸ்தஹிக்குன் லில் இபாதத்தி) என்ற பெயர் உரிச்சொல் (adjective) எங்கே இருக்கிறது ?
இல்லாத சொல்லை என்ன ஆதாரத்தின் அடிப்படையில் இடைப் புகுத்திச் சொல்கின்றீர்கள்.!
4) திருக்கலிமாவானது அல்லாஹ்வுக்கு "எந்தவிதத்திலும்" கூட்டு இல்லவே இல்லை Absolute negation என்று பறை சாற்ற வந்ததா?
அல்லது ஒரு சில விடயங்களில் மட்டும் தான் கூட்டு இல்லை அதாவது "வணக்கத்துக்குரியவன்" என்பதில் மட்டும் தான் கூட்டு இல்லை என்று மட்டும் பறை சாற்றவந்ததா?
5) உங்களுக்கும் தெரியும் "லா ஷரீக்க லஹூ" எனும் வசனம்
"அவனுக்கு எந்தவொரு கூட்டும் இல்லவே இல்லை" என்பதைக் குறிக்கிறது.
"வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை" என்பது இஸ்லாமிய தத்துவங்களில் ஒன்று. அது லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் அர்த்தமல்ல.
நீங்கள் சொல்லும் கலிமாவின் அர்த்தப்படி "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை" என்று வைத்துக் கொண்டால், வணக்கத்துக்குரியவன் என்ற விடயத்தில்தான் அல்லாஹுவுடன் கூட்டு இல்லை. வேறு விடயங்களில் கூட்டு இருக்கலாம் என்ற இணைகற்பிக்கும் கருத்து உங்கள் கலிமாவின் அர்த்தத்தில் இருப்பதை காணலாம். இதை பூரண தவ்ஹீத் (ஒருமைப்படுத்தல்) என்று எவ்வாறு சொல்ல முடியும்!!
"வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை" என்பதுதான் கலிமாவின் அர்த்தம் என்று பார்த்தால்,
உணவளிப்பதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு!!! பாதுகாவல் வழங்குவதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு! ஆக்குவதற்குரியவன், அழிப்பதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு!! போன்ற அர்த்தங்கள் நீங்கள் கலிமாவுக்குக் கூறும் கருத்தில் தொக்கி நிற்கும் விபரீதத்தை உணரவில்லையா?.....
ஆனால் கலிமா வந்ததன் நோக்கம் என்ன! அல்லாஹ்வுடன் எந்த விதமான கூட்டும் அறவே இல்லை, அல்லாஹ்வுக்கு வேறாக ஒன்றுமே இல்லை, அவன் என்றென்றும் தனித்தவன் என்பதுதானே.!!!!
6) வணக்கத்துக்குத் தகுதியான நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை என்றால் வணக்கத்துக்கு தகுதியில்லாத நாயன் அல்லாஹ்வைத் தவிர இருக்கின்றது என்ற கருத்து அதற்குள் இருப்பதை அவதானித்தீரா! இப்படி சொல்வது எங்கணம் பூரண தவ்ஹீத் ஆகும்? இரண்டு உண்டு என்னும் "கூட்டு / இணை" எங்கணம் தவ்ஹீத் ஆகும்!
7) இதனை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள "லா ரஜுல பித்தாரி" வீட்டிலே எந்த மனிதனும் இல்லை என்ற வசனத்தை எடுத்து நோக்குங்கள்.
'லா ரஜுல பித்தாரி" என்றால் எந்த ஒரு மனிதனுமே வீட்டில் இல்லை என்ற கலிமாவின் Format இல்தான் இவ்வசனம் உள்ளது.
இவ்வசனத்திற்கு,
கை உடைந்த மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?
குள்ளமான மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?
கறுப்பான மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?
ஆனால் நீங்கள் சொல்லும் கலிமாவின் கருத்து அப்படித்தானே இருக்கிறது. இது எவ்வளவு பிழையான அர்த்தம்!!!
8) கலிமாவில் "இலாஹ்" என்ற சொல் "இலாஹ" என்று (மன்ஸூப் ஆக) வந்துள்ளதை அவதானித்திருப்பீர்.  இலாஹ என்பது "நகிரா"வா "மஃரிபா"வா?
"மஃரிபா" என்றால் குறிப்பான ஒன்று (eg : The God,The Man (muzammil) ,The furniture (table), வணக்கத்துக்குரியவன் .
"நகிரா" என்றால் பொதுப்படையாக அனைத்தையும் குறிக்கும் ஒன்று (eg: God, Man, Creature, Furniture,எது எதுவெல்லாம் வணங்கப்படுமோ அவையாவும்)
ஆகவே கலிமாவில் இலாஹுன் (அந்த ஒரு தெய்வம் The deity) என்று குறிப்பிட்டு பிரயோகிக்கப்படாமல், "இலாஹ" என்று ( எது எதுவெல்லாம் வணங்க, வழிபடப்படுகின்றதோ) அந்த இனம் யாவற்றையுமே ஒட்டுமொத்தமாக குறிப்பிடும் பாணியில் வந்திருக்கிறது.
அப்படியிருக்க "இலாஹ" என்பதை மஃரிபாவாக - குறிப்பிட்ட ஒன்றாக கட்டுப்படுத்தும் வகையில், வணக்கத்துக்குரிய தெய்வம் என்று எப்படி அர்த்தம் வைப்பீர்? இது குர்ஆனிய மொழியியலில் இல்லாத விடயமாயிற்றே.!
9) "லா" வுக்குப்பின்னால் ஒரு "இஸ்ம்" வந்தால் அந்த இஸ்ம் Common noun- பொது இனப் பெயர்ச்சொல் - பொதுப்படையாக அனைத்தையும் உள்ளடக்கிக் குறிக்கும் ஒருசொல் என்பது அறபு இலக்கணவிதி,
அத்தோடு அந்த "லா" "தப்ரிய்யாவுடைய லா"- absolute negation -அந்த இனத்தையே முற்றாக மறுதலிக்கும் "லா" (லல்லதீ லினப்யில் ஜின்ஸி) என்பது குர்ஆனிய மொழியின் விதி. இந்த விதிகளை புறக்கணித்து "வணக்கத்துக்குரியவன் மட்டும்தான் இல்லை அல்லாஹ்வைத்தவிர "என்று மொழிபெயர்ப்புச்செய்யலாமா? செய்தால் அது சரியான மொழிபெயர்ப்பு ஆகுமா?
நான் மேலே கூறிய கருத்துக்களின் அடிப்படையில் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் அல்லாஹ்வுக்கு வேறான கடவுள் / தெய்வம் இல்லை என்பதாகும்.
கடவுள் எனும் சிருஷ்டி அல்லாஹ்வுக்கு வேறானதாக இல்லாமல் இருக்கும் போது மற்றைய சிருஷ்டிகளும் அல்லாஹ்வுக்கு வேறானதாக இல்லாமலே இருக்க வேண்டும்.
அதாவது, கடவுள் எனும் சிருஷ்டி அல்லாஹ் தானானதாக இருக்கும் போது மற்றைய சிருஷ்டிகளும் அல்லாஹ் தானானதாகவே இருக்க வேண்டும்.
எனவே, அல்லாஹ்வுக்கு வேறான எந்த சிருஷ்டியும் இல்லை. சிருஷ்டிகள் அனைத்தும் அவன் தானானதாகவே இருக்கின்றன. அவனைத் தவிர எதுவும் இல்லை அவன் மாத்திரமே இருக்கின்றான் என்ற  தௌஹீதை லா இலாஹ இல்லல்லாஹ் என்கின்ற திருக்கலிமாவில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...