Tuesday, November 06, 2018

நான்

நாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து கையை துண்டித்து விடுங்கள்.கண் இருப்பது வரை உங்கள் அநியாயத்தை சாட்சி சொல்வேன்.தயவு செய்து கண்களை பிடுங்கி விடுங்கள்.காது இருப்பது வரை நீங்கள் செய்யும் அநியாயம் எனக்கு கேட்டு கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து காதுகளை வெட்டி விடுங்கள்.முடியுமென்றால் தலையை கொய்து விடுங்கள்.கருத்துரிமை என் பிறப்புரிமை.நான் இருக்கும் வரை தடுக்க முடியாது.இன்னும் கேளுங்கள் என் ரத்தத்தை பூமியில் சிந்த விடாதீர்கள்.அப்படி செய்தால் அது ஆபத்தாகிவிடும் உங்களுக்கு.மேலும் நான் பேசிய கருத்துக்களும்,எழுத்துக்களும் என்றாவது ஒரு நாள் உங்களின் குரல்வளையை நெறிக்கும்.நீங்கள் சாவது வரை எனக்கு மரணமில்லை

after-10-12-art-design-college

Saturday, September 15, 2018

என்னை எழுத்தாளராக்கிய கல்லூரி


என்னை எழுத்தாளராக்கிய கல்லூரி
பேரா.எச்.முஜீப் ரஹ்மான்

Image result for art

நான் 1989 ல் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இளநிலையில் சேர்ந்த போது இஸ்லாமிய சமூகத்தில் இருந்து நானும் நண்பன் பரீதுதீனும் மட்டுமே இருந்தோம்.எங்கள் வகுப்பு முழுவதும் ஆண்களே.பெண்கள் இல்லை.பின்னர் முதுநிலையும் அங்கே தான் படித்தேன்.1993ல் முதுநிலை முடித்து வெளியே வரும்போது ஐந்துவருட கல்லூரிநினைவுகள் மட்டுமே என்னை ஆக்ரமித்திருந்தது.கல்லூரில் வந்த போது என்னை கவர்ந்த கல்லூரி நூலகமே என்வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.நான் பத்மனாபபுரத்தில் பிறந்து அங்கேயே வசித்தமையால் என்னை எல்லோரும் மலையாளி என்றே நினைத்தார்கள்.ஆனால் பத்மனாபபுரத்தில் கோட்டைக்கம் இருந்த முதலும் கடைசியுமான முஸ்லிம் குடும்பம் எங்களுடையது.இதனால் மதசார்பற்ற சிந்தனையோடு தான் வளர்ந்தேன்.விரையில் மார்க்சியத்தோடு எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.பின்னர் பெரியாரியம்,அம்பேத்காரியம்,பெண்ணியம் என்று என் சிந்தனை வளர்ச்சிப்பெற்றுக்கொண்டிருந்தது.இதற்கு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் நூலகமே அடித்தளம் இட்டுகொடுத்தது.
எனது நண்பர் அரவிந்தன் வீட்டில் அவனது அப்பா கோலப்பாபிள்ளை அவர்கள் வைத்திருந்த நூலகம் வாயிலாக தமிழ் இலக்கியம் எனக்கு பள்ளிப்பருவத்திலேயே பரிசயமானது.காலச்சுவடு,கணையாழி, இலக்கியவட்டம்’ ‘சூறாவளி’ ‘கசடதபற’ ‘சதங்கை’ ‘வண்ணமயில்’ ‘படிகள்’ ‘வைகை’ ‘பிரக்ஞை’ ‘புதியதலைமுறை’ ‘நிகழ்’ ‘அ·’ ‘ழ’ போன்ற ஏராளமான சிற்றிதழ்கள்  கல்லூரி நூலகத்தின் எனக்கு வாசிக்கக்கிடைத்தன.
ஆய்வாளர் ராஜமார்த்தாண்டம் (2005) சிறுபத்திரிகை சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து'(1959) இதழிலிருந்து தொடங்குவதாகவே கூறுகிறார். சிற்றிதழ்களின் ஆய்வாளராகக் கருதப்படும் வல்லிக்கண்ணன் அவர்களும் தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற நூலில்(1991) இதே கூற்றை முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.
‘புதுமை இலக்கிய மாத ஏடு’ என்ற அறிமுகத்துடன் பிரசுரம் கண்ட முதல் ‘எழுத்து’ சிற்றிதழின் நான்கு பக்க முன்னுரையில் ‘முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஓர் இலக்கியப் பத்திரிகையை இந்தப் பாமரப் பிரியமான பத்திரிகைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு சோதிக்கின்ற முயற்சிதான்’ (ஜனவரி 1959) எனக் குறிப்படப்பட்டுள்ளது. இந்த வரியின் மூலம் ஒரு சில விடயங்களை பகுத்துப்புரிந்துகொள்ள முடியும்.
‘எழுத்து’ பாமரர்களுக்கான இதழ் இல்லை.
‘எழுத்து’ இதழ் கருத்து ஆழத்தையும் கனத்தையும் அறியும் கல்வி கற்ற சமூகத்துக்கு உரியது.
கல்வியும் அறிவும் பெற்ற சமூகம் ஆதிக்க சமூகமாக அக்காலக்கட்டத்தில் இருந்திருக்க வேண்டும். எனவே அது ஆதிக்க சமூகத்தின் வாசிப்புக்கு உரியது.
இவ்விதழ் ஒடுக்கப்பட்டவர்களின் தேவைக்காக, அவர்கள் குரலுக்காக உருவாகவில்லை.
‘எழுத்து’ ஆரம்பித்த சில வருடங்களில் கா.நா.சுவிற்கும் செல்லப்பாவிற்கும் இடையில் விமர்சனக் கலை குறித்தான பார்வையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவ, க.நா.சு இலக்கிய வட்டம் (நவம்பர் 1963) என்ற சிற்றிதழைத் தொடங்கினார் என்பது வரலாறு. இவ்விதழ் இலக்கியத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கியது என்பதை ‘இலக்கியவட்டம்’ இதழ் தொகுப்பின் (2004) முன்னுரையின் வழி அறியமுடிகிறது.
வல்லிக்கண்ணன் முதல் ஜெயமோகன் வரை எழுத்துக்கு முன்பே வெளிவந்த இலக்கிய இதழ்களான மணிக்கொடி போன்றவை சிற்றிதழ்கள் இல்லை என்று குறிப்பிடுகின்றனர். எழுத்தாளர் சா. கந்தசாமி (2014), ‘மணிக்கொடி’, ‘கலைமகள்’ எல்லாம் வெகுஜன பத்திரிகையாகவும் இல்லாமல் சிற்றிதழாகவும் இல்லாமல் இடைத்தரமான பத்திரிகைகளாகவும் அவற்றில் வெகுஜன ரசிப்புக்கு ஏற்ற கதைகள், கவிதைகள் வெளிவருவதுடன் முதல் தரமான, மற்றும் சோதனை முயற்சிக்கான கதைகளும் வெளிவரும் என்கிறார். அவை இன்றைய இடைநிலை ஏடுகளைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, தமிழ் இதழியல் சூழலில் ஆராய்ந்தால் சிற்றிதழ் - வெகுசன இதழ்கள் என்பது முற்றிலும் இலக்கியத்திறனாய்வுகள், இலக்கிய விமர்சனங்கள், இலக்கியத்தின் புதிய முயற்சிகள், என இலக்கியத்தை மட்டுமே மையப்படுத்தி பகுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.
1989 ல் லா.ச.ராவின் சிந்தாநதி சாஹித்திய விருது பெற்றபோது நான் நூலகரிடத்தில் இந்த நூலை வாங்கி நூலகத்தில் வையுங்கள் என்று சொல்லவே உடனடியாக அந்த நூல் தருவிக்கப்பட்டது.நான் கொடுத்த இலக்கிய இதழ் பட்டியலும் இலக்கிய நூல் பட்டியலும் பரிசீலனை செய்யப்பட்டு கல்லூரி நிர்வாகம் உடனடியாக வாங்கியதை என்னால் மறக்க முடியாது.இரண்டு தடவை சிறந்த நூலக வாசகர் என்ற விருதை கல்லூரி எனக்கு அளித்திருக்கிறது.1992ல் கோவி மணிசேகரனின் குற்றாலக்குறவஞ்சி சரித்திரநாவலை சாஹித்திய விருது பெறுவதற்கு முன்னே அந்த நூலை கல்லூரி நூலகத்தில் என்னால் படிக்கமுடிந்தது.நவீன இலக்கியம்,விமர்சனம்,கோட்பாடுகள்,சிந்தனைகள் எல்லாவற்ரையும் பர்ந்துப்பட்ட அளவில் வாசித்தறிய அந்த நூலகம் எனக்கு துணைநின்றிருக்கிறது.1993ல் எம்.வி.வெங்கட்ராமின் காதுகள் நாவல் சாஹித்த விருது பெறும்போது அதைகுறித்த விவாதத்தில் நானும் பங்கெடுத்துக்கொண்டிருந்தேன்.
நான் கல்லூரியில் பயின்றிருந்த காலகட்டத்தில் தான் சுந்தர ராமசாமியின் வீட்டுக்கு சென்று அவரோடு இலக்கிய உரையாடலை நிகழ்த்துவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.1991ல் காலச்சுவடு ஆண்டுமலர் வெளியாகியிருந்தது.அதில் தலித்தியம் குறித்த சர்ச்சைகள் இருந்தன.இது சம்பந்தமாக நான் சு.ராவுடன் பேசியிருக்கிறேன். இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் சூழலில், சமூகத்தின் பல மட்டங்களிலிருந்து எழுச்சியின் அசைவுகளும் அறிகுறிகளும் தோன்றின.     அவற்றில்     முக்கியமானது, ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியாகும். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர், தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி. ராஜா முதலியோர் தலித்து எழுச்சிக்கு வித்திட்டவர்கள்; அதுபற்றிய சிந்தனையையும் முன்வரைவுத் திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தவர்கள். கோயில் நுழைவுப் போராட்டங்கள் உள்ளிட்ட “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே     ஏற்பட்டுவிட்டது என்றாலும், தொடர்ந்து விடுதலைப்     போராட்டக் காலத்தில் அவ்வப்போது தலைகாட்டியது என்றாலும், 1990 - களில்தான் தலித் எழுச்சி, குறிப்பிடத்தக்க உணர்வு நிலையாகவும் போராட்டப் பண்பாகவும் ஆகியது. 1991, 1992 ஆகிய இரண்டு ஆண்டுகள் அம்பேத்கர் நூற்றாண்டு     விழா நடந்தது. இதனுடைய தூண்டுதல், தலித்தியத்திற்கு உந்து சக்தியாக இருந்தது. முக்கியமாக, ஜனநாயகம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையான விடுதலையைத்     தரவில்லை; இந்திய அரசியல் கட்சிகள் தங்களைப் பகடைக் காய்களாகவும், வாக்கு வங்கிகளாகவுமே (vote bank) பயன்படுத்துகின்றன என்ற உணர்வு தலித் மக்களை வெகுவாகப் பாதித்த சூழல், அது. எனவே தலித்தியம், ஒரு     வேகத்தோடு     எழுந்தது.     முக்கியமாகச் சிந்தனையாளர்களையும்     இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் ஈடுபட்டோரையும் இது அதிகமாகப் பாதித்தது. இதற்குமுன் பிரபலமடைந்திருந்த பெண்ணியத்தைவிடத் தலித்தியமே பரவலாகவும் கூர்மையாகவும் படைப்பிலக்கியத்திலும் மற்றும் பண்பாட்டுத் தளங்களிலும் தடம் பதித்திருக்கிறது.
எழுத்தாளர் சுஜாதா கணையாழியில் எழுதிய கடைசிப்பக்கங்கள் ஓரளவுக்கு நல்ல பத்தியாக இருந்தது.அப்போது ஜெயமோகனின் ரப்பர் நாவல் 1990ல் வெளிவந்து குமரியில் வாசகர்களுக்கு நல்ல அனுபவத்தை உருவாக்கியது.பின்னர் சிறுகதை தொகுப்பாக அவரின் திசைகளின் நடுவே,மண் ஆகியவை குறித்து நான் தக்கலையில் கலை இலக்கிய பெருமன்றத்தில் விவாதித்து இருக்கிறேன்.எழுத்தாளர் குமார செல்வா,எட்வர்ட் போன்றோர்களின் அறிமுகம் அந்த சமயத்தில் எனக்கு கிடைத்தது.
நான் கல்லூரியில் சேர்ந்த சமயம் தான் நண்பர் ஐ.கென்னடி எனக்கு தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலை குறித்து சொல்ல அந்த நாவலை வாங்கி வாசித்தேன்.மிகச்சிறந்த ஒரு நாவலாசிரியர் என்று நான் அவரை அடையாளம் கண்டேன்.அதன் பின் துறைமுகம் 1991லும் கூனன் தோப்பு 1993லும் வெளியானபோது எனக்கு கல்லூரி நூலகத்திலே வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.ஒரு நாள் நூலகத்தில் ஏதோ ஒரு இதழில் இந்த கவிதையை  கண்டேன்
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
கல்யாண்ஜி இப்படித்தான் எனக்கு அறிமுகமாகிறார்.பின்னர் வண்ணதாசன் என்ற பெயரில் அவர் எழுதிய கதைகளை படித்து புளாகிதப்பட்டேன்.மனதுக்கு ரொம்பவும் நெருக்கமான எழுத்தாளர் அவர்.சாகித்த அகாதெமி விருதை பொறுத்தவரை., சாகித்ய அகாடமி விருதுகளை தென்மாவட்டங்களில் பிறந்த எழுத்தாளர்களே அதிக அளவில் பெற்றுள்ளார்கள். குறிப்பாக திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அதிக அளவில் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். சாகித்ய அகாடமி விருது பெற்ற தென்மாவட்ட எழுத்தாளர்கள்; சு.வெங்கடேசன் (மதுரை), அ.மாதவன் (செங்கோட்டை), ஜோ.டி.குரூஸ் (உவரி), மேலாண்மை பொன்னுச்சாமி (விருதுநகர்), நீல பத்மநாபன் (இரணியல்), தி.க.சிவசங்கரன் (திருநெல்வேலி), தோப்பில் முகமது மீரான் (தேங்காய்ப்பட்டினம்), பொன்னீலன் (நாகர்கோவில்), வல்லிக்கண்ணன் (திருநெல்வேலி), மீ.ப.சோமு (மீனாட்சிபுரம்), பி.ஸ்ரீ. ஆச்சார்யா (தென் திருப்பேரை), அழகிரிசாமி (இடைச்செவல்), நா.பார்த்தசாரதி (சிவகாசி), தொ.மு.சி.ரகுநாதன் (திருநெல்வேலி), ஆதவன் (கல்லிடைக்குறிச்சி), சு.சமுத்திரம் (திருநெல்வேலி), கி.ராஜநாராயணன் (கோவில்பட்டி), சி.சு.செல்லப்பா (சின்னமனூர்), கவிஞர் வைரமுத்து (தேனி), மு.மேத்தா (பெரியகுளம்), நாஞ்சில்நாடன் (வீர நாராணமங்கலம்), பூமணி (தூத்துக்குடி), டி.செல்வராஜ் (தென்கலம்) வண்ணதாசன் (திருநெல்வேலி) என்று பட்டியல் நீளுகிறது.
வண்ணதாசன் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இயற்பெயர் கல்யாணசுந்தரம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து இயங்கி வருபவர். எல்லா ஆளுமைகளாலும் பெரிதும் மதிக்கப்படுபவர்.கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, ஒளியிலே தெரிவது  ஆகியவை வண்ணதாசன் எழுதிய முக்கிய சிறுகதை நூல்கள். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதை இலக்கியத்திலும் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார் வண்ணதாசன். புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்கள். இவை தவிர, அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. எல்லோர்க்கும் அன்புடன் என்ற பெயரில் வண்ணதாசன் எழுதிய  கடிதங்கள் தொகுக்கப்பட்டு அழகான நூலாக வெளியிடப்பட்டுள்ளன. மீண்டும் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு, ‘சில இறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளியானது. 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை நூலுக்காக வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. இந்த நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருந்தது.
அடுத்தபடியாக குமரிமாவட்டத்தை சார்ந்த நாஞ்சில்நாடனை கல்லூரியின் நூலகம் வழியே சந்திக்கிறேன். தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும்,மாமிசப்படைப்பு,மிதவை, சதுரங்கக் குதிரை   என்ற நாவல்களும்   தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்,வாக்குப் பொறுக்கிகள், உப்பு  என்ற சிறுகதை தொகுப்புகளாக குமரிமாவட்டத்தை எழுத்துகளாக வடித்திருந்தார்.அதுபோல் பொன்னீலன் அவர்களுடைய எழுத்துக்களை நூலகத்தின் ஊடாக வாசித்தறிந்தேன்.1992 ல் புதிய தரிசனங்கள் நாவல் வெளிவந்த போது குமாரசெல்வா அந்த நாவலை எனக்கு அறிமுகப்படுத்தினார்.முன்னரே அவரின் கரிசல் நாவலும் ஊற்றில் மலர்ந்தது தொகுப்பும் என்னை பெரிய அளவில் பாதித்திருந்தது.1991ல் தமிழ்நாடுகலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய நெட்டா முகாம் தான் எனக்கு பல எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியது.தக்கலையை சார்ந்த பென்னி,ஐ,கென்னடி,பிரேம்தாஸ்,நட.சிவகுமார்,ஹாமீம் முஸ்தபா,தக்கலை ஹலிமா,ஹெச்.ஜி.ரசூல் என்று நாங்கள் தக்கலை த.க.இ.பெயில் இயங்கினோம்.அண்ணன் சி.சொக்கலிங்கம்,பிரேம்குமார்,நாகராஜன்,அனந்து என்று எனது நட்பின் வட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்தது.
இரண்டாயிரம் ஆண்டுக் கவிதையின் போக்கில் பல மாறுதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. உலகமயமாதல், நகர்மயமாதல், தொழில்மயமாதல், சமூக அரசியல் நிகழ்வுகள், தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சி ஆகியன பிற இலக்கியத் துறைகளைப் பாதித்ததைப் போலவே கவிதைத் துறையையும் பாதித்தது.
     புதிய இலக்கியக் கோட்பாடுகளான பின்நவீனத்துவம், இருத்தலியம் போன்றவற்றின் தாக்கமும் தமிழில் கலந்தன. இவற்றையெல்லாம் உள்வாங்கிய தொண்ணூறுகளில் கவிதை மரபு முற்றிலும் வேறுபட்டது.     தொண்ணூறுகளுக்குப்     பின் வந்த கவிதைகளின் போக்குகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
திராவிட இயக்கத் தாக்கம், இனக்குழு அடையாளம், தொன்மம், மண்சார்ந்த படைப்பு என வெளிப்படும் கவிதைகள்.
தலித் கவிதைகள்
பெண்ணியக் கவிதைகள்
பின்நவீனத்துவக் கவிதைகள்
பிரேம் - ரமேஷ், யுவன், சூத்ரதாரி, யூமா வாசுகி, பாலை நிலவன், தபசி, யவனிகா ஸ்ரீராம், சங்கரராம சுப்பிரமணியன் எனப் பலர் பின்நவீனத்துவ காலக் கவிதைகள் படைத்து வருகின்றனர். நவீனப் பெண் கவிஞர்கள் இன்று ஏராளமாக எழுதி வருகின்றனர். அவர்களில் அணங்கு இதழின் ஆசிரியை மாலதி மைத்ரி. சுகிர்தராணி, சல்மா, சுகந்தி சுப்பிரமணியம், பனிக்குடம் இதழின் ஆசிரியர் குட்டி ரேவதி, வெண்ணிலா, உமா மகேஸ்வரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். என்.டி.ராஜ்குமார், அன்பாதவன், மதிவண்ணன், ராஜமுருகு பாண்டியன், விழி.பா.இதயவேந்தன், எனப் பலர் தலித் கவிதைகளை ஆழத்துடன் எழுதினர். கவிஞர் பழமலையின்     தொடர்ச்சியாகவும், தனித்த அடையாளங்களைக் கொண்டவர்களாகவும்     அறிவுமதி, வித்யாசாகர், இலக்குமி குமாரன், ஞான திரவியம்,      மகுடேஸ்வரன்     ஆகியோரைச் சொல்லலாம்.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை,கே.என்.சிவராஜ பிள்ளை,எஸ்.வையாபுரி பிள்ளை,ஜீவானந்தம்,ஹெப்சிபா ஜேசுதாசன்,கிருஷ்ணன் நம்பி,சு.ரா,கிருத்திகா,எம்.எஸ்,மா.அரங்க நாதன்,பொன்னீலன்,அ.கா.பெருமாள்,நீல.பத்மனாபன்,செந்தி.நடராஜன்,ஷண்முக சுப்பையா,தோப்பில்.,ஆ.மாதவன்,ராஜமார்த்தாண்டன்,தமிழவன்,நாஞ்சில் நாடன்,வேதசகாயகுமார்,எம்.டி.முத்துகுமாரசாமி,குமார செல்வா,ரசூல்,வறீதையா,கண்ணன்,குளச்சல் யூசுப்,மீரான் மைதீன்,குறுமபனை பெர்லின்,லட்சுமி மணிவண்ணன்,போகன்,என்.டி.ராஜ்குமார்,அபிலாஷ்,மலர்வதி,பீர்முகமது,கிறிஸ்டோபர் ஆண்டனி, முஜிபுர் ரஹ்மான்,கே.கே.பிள்ளை,நட சிவக்குமார்,வித்வான் லட்சுமணபிள்ளை,ஆறுமுகப்பெருமாள் நாடார்,பேரா ஜேசுதாசன்,ஐசக் அருமைராசன்,அனீஷ்கிருஷ்ணன் நாயர் என்றொரு எழுத்தாளர் பட்டாளமே இருக்கிறது என்றால் அதுவே நம் மாவட்டத்துக்கான பெருமையாகும்.இதுவரை நான் இருபத்தைந்து நூல்களை எழுதியுள்ளேன் என்று சொன்னால் என்னை எழுத்தாளராக்கிய பெருமை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் நூலகம் என்று சொன்னால் மிகையில்லை.
                               

Wednesday, September 05, 2018

வலிகளை எழுதும் கவிதை நூலை முன்வைத்து

வலிகளை எழுதும் ஈழத்து கவிதை நூலை முன்வைத்து

எச்.முஜீப் ரஹ்மான்

இலங்கையை சார்ந்த கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இப்படி சொல்கிறார்.
போர் முடிந்த பின்னர் ஈழத்துச் சூழல் மாறிவிட்டது. எழுத்தாளர்கள் உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் எழுதுகிறார்கள். போர் அனுபவங்கள், சிறை அனுபவங்கள், புலம் பெயர்ந்த அனுபவங்கள் எனத் தமிழ் இலக்கியத்துக்கு மிகப் பெரிய வரவு. ஈழத்து இலக்கியம் தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்துகிறது. ஈழத்துப் படைப்பாளிகள் தங்கள் எழுத்தைப் பதிப்பிக்க முடியாத சூழல் முன்பு இருந்தது. இப்போது அது மாறி அநேக நூல்கள் வெளிவருகின்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் கல்விமுறை மாறிவிட்டது. ஆங்கில மோகம் உச்சத்துக்குப் போயிருக்கிறது. அடுத்த தலைமுறை தொடர்ந்து முனைப்புடன் தமிழ் இலக்கியம் படைக்குமா என்பது சந்தேகம்தான்.

இலக்கியமானது சமூக உருவாக்கத்தின் ஒரு கருவியாகும். காலங்காலமாக இலக்கியங்களினை எழுத முன்னின்றவர்களில் பலர் அரசியல் உள்ளீர்ப்பினால் உந்தப்பட்டவர்களாக, வரலாற்றுடன் தொடர்பு படுத்தியே இலக்கியங்களினை உழுதியுள்ளனர். ஓர் இலக்கியம் காலத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் தோற்றம் பெறுகின்றது என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது. எந்தவொரு இலக்கியத்தினையும் ஊன்றிக் கற்கும் வாசகன் ஒருவன் அவ்விலக்கியத்தினூடாக அது தோன்றிய காலகட்டத்தையும் இனங்கண்டு கொள்ள முடிகிறதெனில், எந்தவொரு இலக்கியமும் வரலாறாகி விடுகின்றமை தவிர்க்கமுடியாததாகின்றது.

இலக்கிய வரலாற்றுக்கு காலத்துக்கு காலம் தரப்பட்ட பல்வேறு பகுப்புக்களையும் கூர்ந்து கவனிக்கின்ற போது இலக்கிய வளர்ச்சி பற்றிய அறிவெல்லை விரிந்து செல்வது தவிர்க்க முடியாது போகின்றது. பொதுவாக தமிழ் இலக்கியப் பரப்பினை பகுக்க முற்பட்டோர் அரசியலடிப்படையிலான இலக்கிய வரலாற்றுக்காலப் பகுப்பினையே முன்வைத்துள்ளனர். எனவே ஈழத்து இலக்கிய வரலாற்றினையும் இத்கைய அரசியல்சார் அடிப்படையில் அமைத்துக் கொள்வதே சிறப்பான தெரிவாக அமையும்.

புகழ்மிக்க ஆய்வாளர் கா.சிவதம்பி சொல்லும் போது
இலக்கியம் ஆற்றல் மிக்க தொடர்பு முறைமை என்னும் உணர்வு, அறிவு ரீதியாக ஏற்பட்டுத் தொழிற்படுகின்றபொழுதுதான், இலக்கியத்தின் தன்மை, அதன் நோக்கம், அதுஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியன பற்றிய அறிவுநிலைநின்ற தேடுதல் ஆரம்பமாகின்றது. இத்தேடுதல் முயற்சியே இலக்கிய விமர்சனமாகும். இது ஒரு மூளையில் இலக்கியக் கோட்பாட்டு ஆய்வாகவும்  மறுமுனையில் அக்கோட்பாடுகளைப் பிரயோகித்துத் தனிப்பட்ட அன்றேல் ஒரு தொகுதியான ஆக்கங்களை ஆராயும் ஆய்வாகவும் அமையும். இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இருபுறங்கள் போன்றனவே. இலக்கியத்தின் தொடர்பு முக்கியத்துவம் விளங்கிக்கொள்ளப்படும் பொழுது, அதாவது எழுதவேண்டியன பற்றிய எண்ணத்துணிவும் உணர்ச்சித் தெளிவும் ஏற்படுகின்ற பொழுது, அதற்கு முன்னர் தோன்றிய ஆக்கங்கள் பற்றியும், சமகால சிந்தனைகள் பற்றியும், `பாரம்பரியம்’, `மரபு’ பற்றியும் ஆய்வுகள் தோன்றும்.

இலக்கிய விமர்சனம் கோட்பாட்டு நிலையிலும் பிரயோக ஆய்வு நிலையிலும் பாரம்பரியத்துக்கும் சமகால இலக்கிய நிகழ்வுகளுக்கும்  எதிர்கால இலக்கியத் தேவைகளுக்கும் இணைப்பினையும் இயைபினையும் ஏற்படுத்துகின்றது. அன்றேல் ஏற்படுத்த முனைகின்றது எனலாம். மூன்று காலங்களையும் உள்ளடக்காத இலக்கிய விமர்சனணர்வு உண்மையான இலக்கிய விமர்சன ஆக்கங்களுக்கு இடமளிக்க முடியாது. இலக்கியக் கோட்பாடுகள் விமர்சன நிலைப்பட்ட ஆய்வுகளிடையே தோன்றுபவை. பிரயோக விமர்சனங்கள் இலக்கியக் கோட்பாடுகள் வழிநின்று செய்யப்படும் நுண்ணிய தான ஆய்வுகளேயாகும்.இலக்கிய விமர்சன ஆய்வுநோக்கு வளர்வதற்கு, 1942 முதல் தனிப்பட்ட பல்கலைக்கழகமாக இயங்கிவந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, நடைமுறைப்படுத்தி வந்த பாடவிதான அமைப்பு முக்கிய பங்காற்றுகின்றது. இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறையின் இப்பணி 1950, 60களிலே அதிமுக்கியத்துவம் பெறுகின்றது.இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர் சுவாமி விபுலானந்தர் ஆவார்.

இவர் தமது முக்கிய ஆராய்ச்சி நூலான `யாழ் நூல்’ இல் பௌதிக விஞ்ஞானத்தையும் தமிழறிவையும் இணைந்த ஆய்வுமுறை பின்பற்றப்படுவதைக் காண்கிறோம்.விபுலானந்தரின் தனிப்பட்ட ஆய்வு நெறியிலும் பார்க்க முக்கிய இடம் வகிப்பது `தமிழ் இலக்கிய வரலாறு’என்னும் பாடநிர்ணயமே. இலக்கியத்தை முழுமையாகப் பார்க்கும் பண்புவிமர்சனத்துக்கு அச்சாணியாகும். தமிழ் இலக்கியத்தினை முழுமையாக எடுத்துக்காட்டி அம்முழுமையின் செல்நெறிகளையும் பாங்குகளையும் உணர்த்துவது இலக்கிய வரலாறு என்னும் பாடமேயாகும்.

தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முறையாக வரன்முறையான பாடமாகப் போதித்தது இலங்கைப் பல்கலைக் கழகமே ஆகும். இது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் தீட்சண்ய நோக்கினால் ஏற்படுத்தப்பெற்ற புரட்சிகர மாற்றமாகும்.அடுத்து, இலக்கிய விமர்சனத்தையும் முதன் முதலில் ஒரு பாடமாக சிறப்புத் தமிழ் மாணவர்களுக்கு மாத்திரமல்லாது, தமிழை ஒரு பாடமாகப்பயின்ற பொதுக்கலை மாணவர்களுக்கும் பயிற்றிய பெருமையும் இலங்கைப் பல்கலைக் கழகத்துக்குண்டு.

தமிழக அறிஞர்கள் விமரிசன நூல்களென கண்ணோட்டத் தெளிவற்றஆங்கில மேற்கோட் கலவைகளை வெளியிட்டு வந்த காலத்தில் ஐ.ஏ.றிச்சர்ட்டின் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளுக்கு இயையத் தமது விரிவுரைகளை அமைத்து மாணவரின் இலக்கியக் கண்ணோட்டத்தினை செம்மைப்படுத்தியவர் பேராசிரியர் வி.செல்வநாயகம் ஆவார். இவரே முதன்முதலில் வரலாற்று நோக்கில் எழுதப்பெற்றதும், பின்னர் பலராலும் கடப்பாட்டுத் தெரிவிப்புடனும் அல்லாமலும் பின்பற்றப்பட்டதுமான தமிழ் இலக்கிய வரலாற்று நூலை எழுதியவர். மேலும் இலக்கிய வெளிப்பாடு என்பது உயர் இலக்கிய வகைகள் பற்றிய வரையறைப்பட்ட ஆய்வாக மாத்திரம் இருத்தல் முடியாது. அது நாட்டுப்பாடல், நாட்டுக் கூத்து முதலியவற்றையும் உள்ளடக்குமென்பதைத் தனது ஆய்வுகளின் மூலம் தெளிவாக்கியவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஆவார்.  யாவற்றுக்கும் மேலாக முதன் முதலில் நவீன தமிழ் இலக்கியங்களைச் சிறப்புத் தமிழ்த் தேர்வுக்குப் பாட நூல்களாக்கிய பெருமையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தையே சாரும். இலங்கைப்பல்கலைக்கழகத்தின் இம்முன்னோடிச் சாதனை பற்றிமறைமலையடிகள் தமது `சிந்தனைக் கட்டுரைகள்’ நூல் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். 1950களிலேயே `புதுமைப் பித்தன்’ கதைகள் பாடபுத்தகமாக விதிக்கப்பெற்றிருந்தது. இதனால் தற்காலத் தமிழ் இலக்கிய ஆக்க எழுத்தாளர்கள் பரீட்சைத் தேவைகளுக்காக வரன் முறையாக ஆராயப்படும் ஒரு நிலைமை ஏற்பட்டது. இத்தகைய பாடவிதான அமைப்புக்களின் முன்னணி வழியாக வந்த மாணவர்கள் விமர்சனத்துறையில் முன்னணி இடத்தினைப் பெறத் தொடங்கினர்.

பெரும்பாலான பட்டதாரிகள் ஆசிரியர்களாகத் தொழில் மேற்கொண்டமையால் இவ்வணுகுமுறைகள் தேசப் பொதுவாக்கப்பட்டன.இவற்றுடன் நவீன இலக்கியமும் விமர்சனமும் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை நிலையிலும் பாடசாலைகளில் உயர் வகுப்புக்களிலும் மிக முக்கியமான துறைகளாக அமைக்கப்பெற்றன. இவை காரணமாக ஆசிரியர்கள்மட்டத்திலும் வாசகர்கள் மட்டத்திலும் நவீன இலக்கியக் கோட்பாடுகள், விமர்சன மரபுகள் பற்றிய அறிவு பரப்பப்பெற்றது.இலங்கையிற் கல்வியும் இலக்கியமும் ஜனநாயகப்படுத்தப்பட்ட முறைமையும் வேகமும் தமிழகத்திலிருந்து  வேறுபட்டதென்பதையும் இலங்கைத் தமிழ் மக்களின்எழுத்தறிவு விகிதமும் தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதமும்  வேறுபட்டனவென்பதையும் மனத்திருத்தி நோக்கும் பொழுது மேற்கூறிய பண்புகளின் பொது நிலைப்பட்ட தாக்கத்தினை நன்கு விளங்கிக்கொள்ளலாம். இவற்றால் இலக்கிய விமர்சனம் முனைப்படைவதற்கான கல்விப் பின்னணியொன்று இலங்கையில் நிலவிற்று என்பதும் தெளிவாகின்றது.
இதன் அடிப்படையில் பார்க்கும் போது சு.செல்வகுமாரனின் வலிகளை எழுதும் ஈழத்துக் கவிதை நூல் பரந்து பட்ட விமர்சன விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

பேரா.செ.யோகராஜா சொல்லும் போது  ஈழத்து நவீன கவிதை வளர்ச்சிபற்றி எடுத்துரைப்போர் நாவல், சிறுகதைத் துறைகளை விட கவிதைத்துறை சிறப்புற்றிருப்பதாகக் கூறுவர், இது ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான். எனினும், நவீன கவிதைபற்றி இத்தகைய அவதானிப்பு குறிப்பிட்ட கவிதைத் தொகுப்புகள் சிலவற்றை வைத்தே கூறப்பட்டுவருகின்றது, பரந்துபட்ட நிலையில் முழுத்தொகுப்புகளும் கவனத்துக்குட்படுவதில்லை. இன்னொருவிதமாகக் கூறின், ஈழத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் வெளிவருகின்ற அனைத்துத் தொகுப்புகளும் அவர்களது பார்வைக்குட்படுவதில்லை. எண்பதுகளின் பிற்பகுதி தொடக்கம் தொகுப்புகளின் வரவு அதிகரித்துக் காணப்படும் அதேவேளையில், அவற்றை எளிதாகப் பெறமுடியாத நிலைமை காணப்படுவதையும் மறுப்பதற்கில்லை. இத்தகைய தொகுப்புகள் பலவற்றையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது, ஈழத்து நவீன கவிதை 'வளர்ச்சி'யின் ஆரோக்கியமற்ற பக்கங்கள் சில வெளிப்படுகின்றன!.எழுத்தாளர் தியா ஈழத்து கவிதைகள் குறித்து சொல்கிறபோது இப்படி சொல்கிறார்.

ஈழத்துக் கவிதைகள் 1980கள் வரை சாதி, சமயம் என்ற வரன்முறைக்குள் நின்றுகொண்டே பெரும்பாலும் வளர்ச்சி கண்டன. இன்னொரு வகையில் சொன்னால் தம்முடைய காலப்பகுதியில் தாம் எதனால் பாதிக்கப் படுகிறார்களோ அல்லது ஈர்க்கப்படுகிறார்களோ அந்த ஈர்ப்புணர்வின் வெளிப்பாடாகவே காலத்துக்குக் காலம் தமிழ் இலக்கியங்கள் தோன்றியிருப்பதை வரலாறு எமக்கு உணர்த்துகின்றது. 

இன்றைய இலங்கைத் தமிழர் வாழ்வு பல்வேறுபட்ட ஆதிக்கக் கூறுகளினால் கட்டுண்டு கிடக்கிறது. இதில் பிரதானம் இனத்துவ ஆதிக்கநிலை, பின்வர்க்க முரண்பாடுகள், சாதிப் பிரச்சினை, மதமேலாதிக்கம், பெண்ணிய அடிமைத்தனம், பிரதேச வேறுபாடுகள் போன்றனவாகும். இத்தகைய கருத்தியல் நிலைகளை உள்வாங்கிக் கொண்டனவாகவே ஈழத்தில் தற்காலக் கவிதைகளும் பிறக்கின்றன.

1980 களின் பின்னைய இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் அரசியல், பெண்ணியம் போன்றன முனைப்புப் பெறுவதைக் காணலாம். இக்காலப் பகுதியில் வந்த புதிய பரம்பரையில் பெண்களின் பங்கு கணிசமானதாக இருந்தது. அரசியல் ஒடுக்குமுறை மிகுந்திருந்த இக்காலத்தில் இலக்கியங்களும் அதையே பேசின. கவிதை விமர்சகரான எம்.பௌசர் குறிப்பிடுவது போல “ஈழத்துத் தமிழ்க் கவிதையில் -இலக்கியத்தில் பெரும் அரசியல்வாடை அடிக்கிறதென மூக்கைப் பொத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்” என்ற கருத்து இவ்விடத்தில் வலுவுடையதாக உள்ளது. 

இனவன்முறைகள் முன்னைய காலங்களைவிட 1980களின் பின்னர் அதிகரித்தமையினால் அதற்கெதிரான எதிர்ப்புக் குரலாகவே கவிதைகளும் படைக்கப்பட்டன. போரினை உள்ளிருந்து எதிர்ப்போர் வெளியிருந்து பார்ப்போர் என இரு வேறுபட்ட இயங்கியல் தளத்தினூடே இக்காலக் கவிதைகள் எழுதப்பட்டன. தமிழ்த்தேசிய உணர்வின் காரணமாயும் மனிதாபிமான நோக்கிலும் என எதிர்ப்புக் குரல்கள் போருக்கெதிராக மேற்;கிளம்பின.
“…………………………….
கருணையுள்ளோரே கேட்டீரோ
காகங்கள் கரைகின்றன
சேவல் கூவுகின்றது
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன…….”

எனப் போரின் கொடுமையினையும் அதனால் ஏற்படும் இழப்புக்களையும் எந்தவிதமான பூச்சுப் புனைவுமின்றிக் கூறும் கவிஞர் அஸ்வகோஸின் வரிகள் இத்தகைய இயல்புடன் விளங்கக் காணலாம். 

1983இல் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடுமையான இன வன்முறையின் பின்னரான காலப்பகுதியில் வந்த கவிதைகள் போரினால் ஏற்பட்ட இழப்புக்களையும், கொடூரங்களையும், தமிழின எழுச்சியையும் பாடுவனவாக அமைந்தன. யாழ் நூலக எரிப்பு, நெடுந்தீவு குமுதினிப் படுகொலைகள், தமிழ் ஆராய்ச்சிப் படுகொலைகள் என்பன ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் பெருந் தாக்கத்தினை உண்டுபண்ண, அதன் விளைவாக புதுவை இரத்தினதுரை, நிலாந்தன், அஸ்வகோஸ், நட்சத்திரன் செவ்விந்தியன், கலா, சேரன் என நீண்டு செல்லும் பட்டியலையுடைய கவிஞர் குழாமொன்று தோன்ற வழிபிறந்தது.

கவிஞர் சு.வில்வரத்தினம் நீண்ட கவிதைப் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதை அவருடைய கவிதைகளில் இருந்து அறிய முடிகின்றது. 
“பறம்புமலை
பாரி மறைந்து
பரிதியும் மறைந்த இருளில்
அகதிகளாயினர்
அங்கவையும் சங்கவையும்

வென்றெரி முழவம் வீழ்ந்த கையோடு
குன்றில்
தோய்ந்த முகநிலவின் சோகம்
படர்கின்ற ஒற்றையடிப் பாதையினூடே 
பாரி மகளிர் நடந்தனர்
மலையின் இறங்கிப் பெயர்ந்து
………………………..
………………………
அந்தப்புரத்து அடிமைகளாகிவிட்ட 
அங்கவையும் சங்கவையும்
இரங்கி அழுதவையெல்லாம்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவிலும்
எதிரொலிக்கின்றனவே.”

தனது தொலைநோக்குப் பார்வையினூடே சங்கப் புலவர் ஒளவையாரின் பாடல் ஒன்றை நினைவுபடுத்தி இடப்பெயர்வின் அவலத்தினை எடுத்துக் கூறியமை சிறப்பாக உள்ளது.

1980களின் பின்னர் உலகின் பல நாடுகளுக்கும் சென்ற புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சொல்லமுடியாத பல சிக்கல்களை அனுபவித்தார்கள். பிரயாண அவலம், வீசாச் சிக்கல், தங்குமிடம் இன்மை, நிறவெறி, புதிய பண்பாட்டுச் சூழல், அந்நியஇடம், தாயகம் பற்றிய ஏக்கம் என்பன அவர்களை வாட்டிவதைக்க தமது இலக்கியங்களிலும் அவற்றை வெளிக்கொண்டு வந்தனர்.

சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், பிரதீபா, விந்தியன், அருந்ததி, மைத்திரேயி, ஊர்வசி, அவ்வை, தமயந்தி, சுகன், பாலமோகன் போன்ற சுட்டிக்காட்டத்தக்க இன்னும் பலர் தமது ஆதங்கங்களைக் கவிதைகளினூடாகக் கொண்டுவந்தனர். “சொல்லாத சேதிகள், மறையாத மறுபாதி, மரணத்துள் வாழ்வோம்” போன்ற கவிதைத் தொகுதிகள் புலம்பெயர் கவிஞர்களின் கவித்துவத்துக்கு ஆதாரமாக இன்றும் உள்ளன. 

வ.ஐ.ச.ஜெயபாலன் தனது ‘உயிர்த்தெழுந்த நாட்கள்’ என்ற நீண்ட கவிதையிலே தமிழர்களின் சோக வரலாற்றினை ஓரளவுக்கு எடுத்துக்கூற சேரனின் ‘கோபுரக் கலசமும் பனைமர உச்சியும்’ என்ற கவிதை அதனை மேலும் வலுவுடையதாக்கியது.
“ எனக்கு ‘விசா’ தந்த அதிகாரி 
மனைவிக்கு 
‘விசா’ தர மறுக்கிறான்
யாழ்ப்பாண வடலிகளின் நிழலில்
அம்மம்மா
‘போய்ச் சேர்ந்து விட்டாலும்’
சென்று திரும்பல்
இயலுமோ சொல்…?”

என நீண்டு செல்லும் இளவாலை விஜயேந்திரனின் கவிதைமூலம் சொந்த நாட்டுக்கே சென்று திரும்ப முடியாத அவலநிலை உணரப்பட்டது. வ.ஐ.ச.ஜெயபாலன் தன்னுடைய கவிதைகளில் புலம்பெயர் மக்களின் பல்வேறுபட்ட உணர்ச்சிகளைச் சித்திரிக்க முற்பட்டுள்ளமை அவரது கவிதைகளினூடே புலப்படுகின்றது.

“நான் மந்தையைப் பிரிந்த தனிஆடு
போர் என்ற ஓநாயின்
பிடி உதறித் தப்பியநான்
அதிட்டத்தால்
வாட்டும் குளிரில்…”

தாய்நாட்டின் பிரிவும் புகுந்த நாட்டின் தனிமையும் கொடிதிலும் கொடிது என்பதை உணர்த்த அவர் கையாண்ட வரிகள் அற்புதமானவை. 

மேலைநாட்டு ஆண்-பெண் சமத்துவ நிலையின் தாக்கத்தினை பெண்ணியம் சார்புடைய கவிதைகளின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. புலம்பெயர் சூழல், போராட்டக்களம், என்பன சமூக அமைப்பில் இருந்த பெண்களுக்கான மரபுவழித் தளைகளை உடைத்தெறிந்து புதுமை படைக்கும் சூழலை அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இதன் விளைவே பெண் கவிஞர்களின் பல்கிப் பெருகிய தோற்றமாகும். 

நிருபாவின் ‘மாப்பிள்ளைக்கு வந்தனங்கள்’ என்ற தனிக் கவிதையில் வரும் 
“…பூமியை விட்டு நான் 
செவ்வாயில் வாழச் சென்றால்
சூரியனையும் சந்திரனையும்
சீதனமாக் கேட்பீரோ?”

என்ற வரிகளும், பாமினியின்

“மாப்பிள்ளை வாங்கலியோ
மாப்பிள்ளை வாங்கலியோ
மாத வருமானமுள்ள 
உள்நாட்டு மாப்பிள்ளைக்கு
கைரொக்கத்துடன் 
கணிசமான தொகையும்……”

எனத் தொடரும் கவிதையும் சீதனத்துக்கு எதிராகத் திரண்ட பெண்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்றது. 

“எங்களைப் பாருங்கள்-எங்கள்
சேலைகளையும் ரவிக்கைகளையும் அல்ல 
எமது உணர்ச்சிகளை……”

“எனக்கு முகமில்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை………”

“… அகதியாதலால்
ஆடையில் இருந்து
உறுப்புக்கள் வரைக்கும்
பார்வைகளால் 
விசாரிக்கப்பட்டு
வயோதிபரில் இருந்து
இளைஞர் வரைக்கும்
காமப் பார்வையை 
என்மேல் பதிப்பர்
பெண்ணாதலால்”

அடுப்பங்கரையில் சாம்பல் பூச்சிகளாய் ஒதுங்கிக் கிடந்த பெண்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பிய இத்தகைய கவிதைகள் ஆவேசத்தின் குரலாகவும், அடக்குமுறையின் வெளிப்பாடாகவும் உள்ளமை விசேடமானது. போராளிக் கவிஞர்களான கஸ்தூரி, வானதி, பாரதி போன்றோரும் பெண்ணியம் சார்புடைய கவிதைகளை எழுதித் தம்மையும் அடயாளப்படுத்தினர். 

பாலுறவில் பேசாப்பொருளாக இருந்த உணர்வுகளும் கவிதைகளில் இடம்பெறத் தொடங்கின. ஆண்-பெண் உறவில் திருப்தி காணாத நிலையில் தமது ஏக்கத்தை வெளிப்படுத்தவும் கவிதைகளைத் தெரிவு செய்தனர். இத்தகைய புரிதலின் வெளிப்பாடாக ரஞ்சினியின் ‘புரிதலின் அவலம்’ என்ற கவிதை விளங்கக் காணலாம்

எண்பதுகளின் பின்னர் ‘சோலைக்கிளி’யின் வரவானது இனஉணர்வு வழிவந்த மாற்றங்களுக்கு இடமளிப்பதாக அமைந்திருந்தது. படிமக் கவிஞராகத் தன்னை இனங்காட்டிய இவருடைய கவிதைகளில் படிமங்களே மொழியாக அமைந்து விடுவதனால் கவிதைகளின் வனப்பும் சிறப்புடன் பேணப்படுகின்றது.

தொன்னூறுகளில் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தனது இருப்பை மேலும் இழக்கத் தொடங்கியது. விடுதலைக்கான இருப்பும் இருப்புக்கான விடுதலையும் இக்காலத்தில் அதிகம் சிலாகிக்கப் பட்டது. படிமம், குறியீடு, உருவகம் போன்ற வனப்புக்கள் அதிகம் நிறைந்திருந்த போதிலும் அவை கவிதைக்கு ஒருவகையான அழகு சேர்ப்பனவாகவே அமைந்திருந்தமை சிறப்பானது.

அஸ்வகோஸ், கருணாகரன், நட்சத்திரன் செவ்விந்தியன், ஓட்டமாவடி கருணாகரன், அறபாத், ஆத்மா, றஸ்மி, போன்ற இளம் கவிஞர்கள் 1990களின் பின்னர் கவிதை முயற்சியில் தம்மையும் ஈடுபடுத்திக் கொண்டு, முற்காலக் கவிஞர்களின் ஆளுமையில் இருந்து முற்றிலும் விடுபட்டு சூழலுக்கேற்ற விதத்தில் அசாதாரண எளிமையும் படிமப் பிரயோகச் செறிவும் உடையனவாகத் தமது கவிதைகளைப் படைத்தனர். 

ஈழத்துக் கவிதை இலக்கியத்தின் மற்றொரு கூறாக அமைவது முஸ்லீம் தேசியவாதம் ஆகும்.வடபகுதி முஸலீம்கள் வெளியேறியதன் பின்னர்தான் கவிதைகளில் முஸ்லீம்களின் பங்கு தக்கமுறையில் பிரதிபலிக்கத் தொடங்கியது. எம்.பௌசர், றஸ்மி, ஆத்மா, சிராஸ்டீன், ஸஹ{ப், ஹனிபா போன்ற பல முஸலீம் எழுத்தாளர்களின் கவிதைகளில் முஸ்லீம் தேசியவாதம் முனைப்புப் பெற்றுள்ளதைக் காணலாம்.

அமரராகிவிட்ட குறிஞ்சித் தென்னவனின் பணி கவிதை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான கவிதைகளினை எழுதி மலையகக் கவிதைக்கான தன்னாலான பணியினைச் சிறப்புடன் செய்த இவருடைய கவிதைகள் அடங்கிய சிறு தொகுதி நூலொன்று நீண்ட நாளின்பின் நிறைவேறிய போது, “எனது நெடுநாட்க் கனவு நிறைவுறுகிறது”என அகமகிழ்ந்தார். 

குறிஞ்சித் தென்னவனைத் தொடர்ந்து முரளிதரன், எலியாசன், மல்லிகை.சி.குமார் எனப்பலர் மலையகக் கவிதைக் களத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் எஸ்.முரளிதரன் மாத்திரம் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய ஈழத்துக் கவிஞர்கள் யப்பானில் புகழடைந்த ‘ஹைக்கூ’ கவிதையாக்க முயற்சியில் ஈடுபட்டிருப்பினும் அனுபவ முதிர்ச்சியின்மை காரணமாக அம்முயற்சி இன்னும் இம்மண்ணோடு சுவறவில்லைப்போல் தெரிகிறது.

ஈழத்துக் கவிதைப் பரப்பானது நீண்டு விரிந்த ஒரு வரண்முறையான நெடுவழியில் பயணித்து இன்றைய நிலையினை அடைந்துள்ள தற்காலச் சூழலில், முது கவிஞர்களின் சுவடுகளிடையே பயணிக்க இளங் கவிஞர்கள் பலர் முயன்று கொண்டிருப்பினும் அவர்களுக்கான காத்திரமான களமும், படைப்புச் சூழலும், வசதிவாய்ப்புக்களும் அதிகரிக்குமிடத்து உயிரோட்டமான இன்னும் பல கவிதைகளைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டும் என்பது மட்டும் உறுதி.

ஏழு அத்தியாயங்கள் 178 பக்கங்களில் செல்வகுமாரனின் உழைப்பு பளிச்சிடுகிறது.இது போல் அனேக நூல்களை அவர் தமிழுக்கு பங்களிப்பு செய்வார்.

எச்.முஜீப் ரஹ்மான்


Tuesday, January 30, 2018

முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி

சூஃபி மகான் முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் ஜீவிய சரிதை அற்புதங்களால் நிரம்பியது என்பது யாவரும் அறிந்த உண்மை. அவரின் பெயரால் சொல்லப்படும் அற்புதங்களின் பட்டியலில் எல்லாமே அவரால் நிஜமாகவே நிகழ்த்தப்பட்டவைதானா என்னும் கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், அத்தகு அற்புதங்கள் நிகழ்வதற்குரிய ஆன்மிகப் படித்தரத்தில் அவர்கள் இருந்தார்கள் என்பதே உண்மை. அன்னாரால் நிகழ்த்தப்பட்ட ஒரு (கராமத்) அற்புதத்தை இங்கு நினைவு கூர்வோம்.

“பாக்தாதில் ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் இருந்தார். அவருக்குப் பல்லாயிரம் தொண்டர்கள் இருந்தார்கள். அவருக்கு கலீஃபாவிடமும் செல்வாக்கு இருந்தது. அவர் இஸ்லாம் பற்றியும் திருக்குர்ஆன் பற்றியும் நன்றாக அறிந்திருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதும் அந்த பாதிரிக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. எனினும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு விஷயம் தடையாக இருந்தது. அதாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட மிஃராஜ் நிகழ்ச்சியை அவரின் மனம் புரிந்துகொள்ள முடியாமலும் ஏற்க முடியாமலும் தவித்தது. அக்காலத்தின் சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் பலரையும் கலீஃபா அந்தப் பாதிரிக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் ஒருவரும் அவரின் சந்தேகத்தைப் போக்கும்படியான விளக்கத்தை அளிக்க முடியவில்லை. பின்னர் கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அவர்களுக்குச் செய்தி அனுப்பி அந்தப் பாதிரியாரின் ஐயத்தை நீக்குமாறு கேட்டுக் கொண்டார்.
முஹ்யுத்தீன் ஆண்டகை அவர்கள் அரண்மனைக்கு வந்தபோது கலீஃபாவும், பாதிரியும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாதிரி தன் நகர்வுக்காக ஒரு காயைக் கையில் எடுத்தபோது அவரின் கண்கள் முஹ்யுத்தீன் ஆண்டகை அவர்களின் விழிகளைச் சந்தித்தன. பாதிரி தன் கண்களை இமைத்தார். இமைகள் திறந்த போது தான் ஒரு நதியில் மூழ்கிக் கொண்டிருக்கக் கண்டார். தன்னைக் காப்பாற்றும்படி அவர் அலறினார். கரையில் நின்று கொண்டிருந்த இடைச்சாதி இளைஞன் ஒருவன் ஆற்றுக்குள் பாய்ந்து சென்று மூழ்கிய பாதிரியைப் பிடித்துக் கரைக்கு இழுத்து வந்தான். பாதிரி நதியிலிருந்து எழுந்த போது தன் உடலமைப்பே மாறிவிட்டிருப்பதைக் கண்டார். தன் மறைவுறுப்பு காணாமல் ஆகி நெஞ்சில் ஸ்தனங்கள் முளைத்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டார். அவர் ஓர் இளம் பெண்ணாக மாறிவிட்டார்! ’நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்று அந்த இடையன் கேட்டான். பாக்தாதிலிருந்து என்று பாதிரி சொன்னா(ர்)/(ள்). அந்த ஊரிலிருந்து நான்கு மாதத் தொலைவில் இருந்தது பாக்தாத். எனவே அவளுக்கு அந்த இடையன் அடைக்கலம் கொடுத்தான். பின் அவளையே மணந்து கொண்டான். அவர்களுக்கு அடுத்தடுத்து மூன்று பிள்ளைகளும் பிறந்து விட்டன. இப்படியாக, பெண்ணாய் மாறிய பாதிரி அந்த இடையனின் மனைவியாக இல்லறம் நடத்திக் கொண்டிருந்தாள்.
ஒரு நாள் அவள் அந்த நதியில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது வழுக்கி நீருக்குள் விழுந்தாள். அவள் முங்கி எழுந்தபோதோ… தான் ஒரு பாதிரியாக பக்தாத் அரண்மனையில் கலீஃபாவின் முன் சதுரங்கக் காயைக் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதையும், முஹ்யுத்தீன் ஆண்டகை அவர்களின் கண்களுக்குள் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். ”பாதிரியாரே! இன்னும் நீர் நம்பவில்லையா?” என்று முஹ்யுத்தீன் ஆண்டகை அவர்கள் கேட்டார்கள். என்ன நடந்தது என்பது பற்றித் தெளிவில்லாத அந்தப் பாதிரி இது முஹ்யுத்தீன் ஆண்டகை தன்னை மனோவசியம் செய்து காண்பித்த ஒருவிதக் கனவுக் காட்சி என்று எண்ணியவராக ”என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு முஹ்யுத்தீன் ஆண்டகை அவர்கள், “அப்படியானால் நீங்கள் உங்கள் குடும்பத்தை அவசியம் பார்க்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே அரண்மனையின் கதவைத் திறந்தார்கள். அங்கே அந்த இடையனும் மூன்று பிள்ளைகளும் வந்து நின்றார்கள். நிஜத்தில்! இதைக் கண்டவுடன் அந்தப் பாதிரியார் ஓடி வந்து முஹ்யுத்தீன் ஆண்டகையின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். பின்னர் தன் ஐயாயிரம் தொண்டர்களுடன் இஸ்லாத்தை ஏற்றார்.”
இதுதான் அந்த அற்புத நிகழ்ச்சி. காலத்தின் ஒரு துளிக்குள் பல வருடங்கள் சுருண்டு கிடக்கும் நிகழ்ச்சி. இதில் சொல்லப்பட்டிருக்கும் ‘மிஃராஜ்’ என்னும் நிகழ்ச்சியும் காலத்தைப் பற்றிய நமது சாதாரண அனுமானங்களைத் தகர்த்துவிடுகின்ற ஒரு நிகழ்வுதான். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் விண்ணேற்றம் உடலால் நிகழ்ந்ததுதான்; அவர்கள் விழிப்பு நிலையில் இருக்கையிலேதான் நிகழ்ந்தது. எனினும் இவ்வுலகக் காலகதியில் ஒருசில கணங்கள் மட்டுமே நிகழ்ந்ததாக க் கூறப்படும் அந்த நிகழ்வில் முப்பத்தாறு வருடங்களின் அனுபவத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அடைந்தார்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

Friday, January 12, 2018

சமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்

சமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்

முனைவர்.பி.முருகன்

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அளவு பங்கெடுத்து வந்திருக்கிறார்கள். இஸ்லாமிய சமுதாயம் காலத்திற்குக் காலம் எத்தனையோ தமிழ்க் கவிமணிகளை, செந்தமிழ்க் குரிசில்களைத் தோற்றுவித்திருக்கிறாது. இப்புலவர் பெருமக்கள் இஸ்லாத்தின் பண்பு நலன்களை- திருமறை நெறிகளை- நபிகள் நாயகத்தின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எல்லாம் தமிழ்த் தேனில் குழைத்தெடுத்து இலக்கிய மாளிகைகள் கட்டி எழுப்பியிருக்கிறார்கள்.

இவர்களின் வழித்தோன்றல்களான இற்றைநாள் முஸ்லிம் எழுத்தாளர்களிடையே என்றுமில்லாதவாறு ஒரு மலர்ச்சி- விழிப்புணர்ச்சி பொங்கி வழிகிறது. இதன் பயனாக ‘இன்றைய இலக்கிய’மாகக் கணிக்கப்படும் சிறுகதைத் துறையிலும் முஸ்லிம் எழுத்தாளர்கள் பெருமைப்படத்தக்களவு கவனஞ் செலுத்துகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே முஸ்லிம்கள் சிறுகதைத் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பெருமையோடு குறிப்பிடலாம். கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த ஐதுருஸ் லெவ்வை மரைக்கார் என்பவர் 1898ம் ஆண்டில் ‘ஹைதர்ஷா சரித்திரம்’ என்ற பெயரில் ஆறு கதைகளைக் கொண்ட நூலொன்றை வெளியிட்டிருக்கிறார்.

இன்றையச் சிறுகதை உலகில் முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்ககூடிய சிறுகதைகள் போதியளவில் வெளிவரவில்லை என்பதை எழுத்தாளர் உலகு ஒப்புக்கொள்ளும் என்று நினைக்கிறேன். இந்நாட்டில் வாழ்கின்ற முக்கிய சமூகங்களுள் இஸ்லாமிய சமுதாயமும் ஒன்று. ஈழம் வாழ் ஏனைய சமுதாய மக்களின் வாழ்வு முறைமைகளைப் பின்னணியாக வைத்து ஏராளமான சிருஷ்டிகள் சமைக்கப்பட்டு விட்டன. அவைகளோடு ஒப்பிடும்போது முஸ்லிம் கதாபாத்திரங்களை உலவவிட்டு – முஸ்லிம்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கருவாக வைத்துப் புனையப்பட்ட சிறுகதைகள் மிக மிகக் குறைவாகவே வெளிவந்துள்ளன.

முஸ்லிமல்லாத பிறமத எழுத்தாளர்கள் இத்துறையில் நுழையவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. எனினும் பிறமத எழுத்தாளர் இரண்டொருவர் முஸ்லிம்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் தரமான கதைகள் சிலவற்றைப் படைத்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. பிற சமயத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முஸ்லிம்களின் வாழ்வுக் காட்சிகளைக் கருவாகக் கொண்டு சிறுகதைகள் சிருஷ்டிக்க முயலாமைக்குப் பல காரணங்களுன. அவர்கள் இஸ்லாதைப் பற்றியும், முஸ்லிம்களின் மதவுணர்வுகள்- கலாசார நிகழ்ச்சிகள் பற்றியும் போதியளவு அறியவில்லை. இந்தத் துறையில் காலடி எடுத்து வைப்பவர்கள் தங்கள் கற்பனையிலே தோன்றும் கருத்துக் குவியல்கள் அனைத்தையும் இலக்கியமாக வடித்தெடுத்துவிடவும் இயலாது. அது சிறு கதையாக- கவிதையாக-நாடகமாக- இருப்பினும் சரியே.

மனிதவாழ்வின் சகல துறைகளுக்கும் அடிப்படைக் கோட்பாடுகளை வகுத்திருக்கும் இஸ்லாம் கலைகளுக்கும் வரம்பு கட்டி வைத்திருக்கிறது. இதனால் முஸ்லிம்களை மையமாக வைத்துக் கலைகள் படைப்பவர்கள் ஒரு கட்டுக்கோப்புக்குள் அடங்கி நின்றே எழுத வேண்டியுள்ளது. இஸ்லாத்தின் கருத்துக்களை நன்கு புரிந்து கொள்ளாமல் தவறான முறையில் இஸ்லாத்தைச் சம்பந்தப்படுத்திக் கதைகளை எழுதிவிடின் அது முஸ்லிம்களின் உள்ளத்தைப் புண்படுத்திய முயற்சியாக முடியும். தமிழகத்திலுள்ள முஸ்லிமல்லாத எழுத்தாளர்கள் சிலர் இவ்வாறு எழுதித் ‘தோல்வி’ கண்டதோடு முஸ்லிம்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டி ஏற்பட்டது. பிறசமய எழுத்தாளர்கள் முஸ்லிம்களின் வாழ்வைச் சித்தரித்துச் சிறுகதைகள் எழுத முன்வராமைக்கு ‘அகிலன்’ கூறும் காரணம் :

‘தமிழ் எழுத்தாளர்கள் முஸ்லிம்களைப்பற்றி அறிந்து கொள்ளாததுதான். அறிந்து கொள்வதும் எளிதல்ல. முஸ்லிம்களின் சமய உணர்வும் நுண்ணியது. வாழ்க்கைக்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் எளிதிற் புரிந்து கொள்ள முடியாது.’

இன்று முஸ்லிம்களிடையே சிறுகதை படிக்கும் வாசகர் கூட்டம் பெருகி வருகிறது. தமிழ்ச் சஞ்சிகைகள் கணிசமானளவு முஸ்லிகளிடையே விற்பனையாகிறது. இந்நிலையில், முஸ்லிம்களின் வாழ்க்கை நிலை, சமுதாயப் பிரச்சனைகள், பொதுவாழ்க்கை, திருமணம், இஸ்லாமிய தனித்துவ மரபின் இன்றைய நிலை, சமூகச் சீர்திருத்தம், முஸ்லிம்களிடையே பெருக்கெடுத்தோடும் இஸ்லாத்திற்கு முரணான பழக்கவழக்கங்கள் முதலியவற்றைப் பின்னணியாக வைத்துச் சிறுகதைகள் எழுதப்பட வேண்டும். இத்தகைய சிறுகதைகள் முஸ்லிம்களிடையே காணப்படும் இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறைக்கு விரோதமான செயல்களை அம்மணமாகச் சந்திக்கிழுப்ப்தாக மட்டும் அமையாது அவற்றைக் களைவதற்கு வீதி காட்டுவனவாகவும் இருக்க வேண்டும். இன்றையக் காலகட்டத்தில் இத்தகைய சிறுகதைகள் அதிகம், அதிகம் தேவைப்படுகின்றன.

முஸ்லிம்களின் வாழ்க்கைமுறை கூடச் சிறுகதை இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதாக அமைந்துவிடவில்லை. முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளை உற்று நோக்கின், அவ்வாழ்வைக் கருவாகக் கொண்டு சிறந்த சிறுகதைகள் எழுத என்பதை உணரலாம். சிறுகதையின் கருப்பொருள், உருவமைப்பு முதலியவைகளுக்கு முஸ்லிம்களிடமிருந்து பொருத்தமான நிகழ்ச்சிகளை எடுக்க முடியும்.

மலேஷியாவில் ‘முஸ்லிம் சிறுகதை இலக்கியம்’ பெருமை தருமளவு வளர்கிறது. முஸ்லிம் எழுத்தாளர்கள் இந்தத் துறையில் வேகமாக முன்னேறி வருகிறார்கள். முழுக்க முழுக்க முஸ்லிம் கதாபாத்திரங்களை உலவவிட்டு இஸ்லாம் கூறும் வாழ்வைப் பிரதிபலிக்கும் சிறுகதைகளை நிறைய, நிறையப் படைத்து வருகிறார்கள்.

‘முஸ்லிம் எழுத்தாளர்கள்’ -‘ முஸ்லிம் சிறுகதைகள்’ என்றெல்லாம் நாம் குறிப்பிடுவதன் மூலம் ‘ஏதோ இலக்கிய உலகில் இனத்துவேஷக் கூப்பாடு எழுப்புகிறோம்’ என்று யாரும் மருளத் தேவையில்லை. முஸ்லிம்கள் தமிழைப் பேசினாலும் அவர்களுக்குத் தனித்துவம் பெற்ற கலாசாரம்-வாழ்க்கை முறை உண்டு. இஸ்லாமிய பாரம்பரிய உணர்வுகளும்- வாழ்க்கை நெறிகளும் ஏனைய சமுதாய மக்களிடமிருந்து முஸ்லிம்களை வேறுபடுத்துகின்றன. இற்றைநாளில் சிறுகதை இலக்கியத்தில் இஸ்லாமியப் பகைப்புலத்தையும் தூக்கிப் பிடிக்கிறோம்.அதே நேரத்தில் முஸ்லிம் எழுத்தாளர்கள் முழுக்க முழுக்க ‘முஸ்லிம் கதை’களையே படைக்க வேண்டுமென்றும் நாம் கூறவில்லை. அத்தகைய கதைகளும் வேண்டுமென்பதே எமது குரல்.

இன்று முஸ்லிம் எழுத்தாளர்களிடையே இஸ்லாமிய சூழலிற் சிறுகதைகள் புனைய வேண்டுமென்ற ஆர்வம் துளிர்த்து நிற்கிறது. அவ்வப்போது இஸ்லாமிய பகைப்புலத்திற் கதைகளும் அறுவடைசெய்யப்பட்டு வருகின்றன. என்னிடம் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர், அருமைச் சகோதரர் பேராசிரியர் பெருந்தகை மு.சாயபு மரைக்காயர் அவர்களது “இலக்கிய உலகம்” என்ற 1997 ஆம் ஆண்டுத் தொகுப்பு உள்ளது. இதில் 321 ஆண் – பெண் முஸ்லிம் எழுத்தாளர் நாமாவளி தொகுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழக முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் எத்தனை பேர் எனக் கணக்கிட்டால் வெறும் 13 பேர் மட்டுமே!.இவ்வாண்டு நூற்றாண்டு காணும் மூத்த எழுத்தாளர் சித்தி ஜூனைதா பேகம் முதற் கொண்டு கடந்து சென்ற நாகூர் – சென்னை நாவலாசிரியை ஜெய்புன்னிஷா, ஹைதராபாத் ஃபாத்தி முத்து சித்தீக், காரைக்கால் பேராசிரியர்கள் சா.நசீமா பானு, அ. சவ்தா உம்மாள், மதுரை கமருன்னிசா, முதலியோர் இப்படியலில் உள்ளனர். இதற்குப் பிறகு சல்மா, ரஹீமா, பாபநாசம் எ.ஜாஹிதா பானு, காரைக்கால் என்.நூர் ஃபாத்திமா, முனைவர் மை.ஃபரீதா பீவி ஆகியோர் தங்களை அடையாளமிட்டுள்ளனர். விஷேடமாக இன்னொரு சிறுமி இப்பொழுது இளங்குமரி! எவ்வாறாயினும் அவர் நமது பேராசிரியர் பெருந்தகை சாயபு மரைக்காயர் தம்பதியினரின் ஆளுமைகளைக் கொண்டு செல்ல பிறந்திருக்கும் ஃபாத்திமா யாஸ்மீன் தான் பதிமூன்றாம் வயதிலேயே கவிதை நூல் வழங்கியவர்!.இந்த அளவில் 21 ஆம் நூற்றாண்டு பிறந்து 17 ஆம் ஆண்டுகள் ஆகிப் போன 2017 இல் தமிழக முஸ்லிம் பெண் எழுத்தாளர் நிலைமை என்ன எனப் பார்த்தால் எண்ணிக்கை ஒன்றும் பெரிய அளவில் கூடிவிடவில்லை. அதே வேகத்தில் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பெருந்தொகையானவர்களைப் பார்க்க முடிகிறது. சிகரம் தொட்டு விட்டார்கள் எனப் புகழ வேண்டியிருக்கிறது. இதில் அஞ்சலட்டை கவிஞர்களும் பல்கிப் பெருகியுள்ளனர். 

இலங்கை கவிதை வெளி மிக நீண்டது. பலர் கவிதை சார்ந்து தொடர்ச்சியாகவும், வலிமையோடும் இயங்கிவருகின்றனர். அவர்களின் மஜீத், சோலைக்கிளி, ரியாஸ் குரானா, ரிஷான் ஷெரிப், றஷ்மி போன்றவர்கள் முக்கியமானவர்கள். பெண்களில் அனார், ஷர்மிளா செய்யித் போன்றோர் நவீன இலக்கியத்தோடும் அதன் தரத்தோடும் அதிகமும் இயைந்தவர்கள். ஷர்மிளா செய்யிதின் உம்மத் சிறந்த நாவல்களில் ஒன்று. இலங்கை தேசிய அரசியலில் முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அடையாளச் சிக்கல்கள், தமிழர்களுடனான அவர்களின் உறவாடல்கள், அது தமிழ் அடையாளமாக ஒன்றிணைய முடியாத தனித்த இருப்பு போன்றவற்றைக் குறித்த கதையாடல். கவிதை வெளியில் அனாரின் ஓவியம் வரையாத தூரிகை, பச்சை வானம், பெருங்கடல் போடுகிறேன் போன்றவை முக்கியத் தொகுப்புகள். இவை குறியீட்டியல் ரீதியான நுட்பமான மொழியுடன், இலங்கை நிலப்பரப்பை பிரதிபலிப்பு செய்பவை.

ஃபஹீமா ஜஹான் காலச் சுவடு தமிழியல் பதிப்பகம் மூலம் அண்மையில் சென்னையில் “இக்சா” மையத்தில் நூல் வெளியீட்டு விழாவை நடத்தி விட்டார். இன்றைய பொழுதில் அனைவருக்கும் மூத்தவராக – முதியவராக இருப்பவர் பேராதனை ஷர்புன்னிசா அவர்களை! (1934 இல் பிறந்தார் வயதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்) தமிழக முஸ்லிம் சஞ்சிகைகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.குறிப்பாக திருச்சி ரசூல், மதனியும் அன்று நடத்திய ‘ஷாஜஹான்’ இதழ். இப்பொழுது அவரை நினைக்கும் நேரத்தினுங் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய வரலாற்றுக் கதைகளை சிங்களத்தில் நூலாகக் கொண்டு வரும் முயற்சியில் உள்ளார்.


மேலும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளப் பெண்மணிகளில் சிலர் ஆய்வெழுத்தாளர்களாகவும் பரிணமித்திருப்பது விஷேசமாகும். மலையகத்தைச் சேர்ந்த ஒரு லரீனா அப்துல் ஹக் இரு ஆய்வு நூல்களையும், அதே மலையகம் மரீனா இல்யாஸ் ஒன்றையும், பஷீரா வாஸிம் இன்னொன்றையும் வழங்கியுள்ளனர்.இச்சுருக்கமான ஆய்வை முடிக்கும் முன் உங்களுக்கு ஒரு நல்ல தகவல் ஆங்கிலப் புலமை மிக்க ஸுலைஹா என்ற சகோதரி “பட்டுப் பூச்சியின் பன்னுகைப் போலும்” என்ற தலைப்பில் ஆங்கில வழியாக தமிழுக்கு கவிதைகளின் தொகுப்பொன்றை வழங்கியுள்ளார்.இதிலே முதல் பகுதி இலங்கை கவிஞர்களின் ஆங்கில கவிதைகள் பெரும்பாலும் சமீபத்திய போர் ஏற்படுத்திய அவலங்கள் நிமல் சோமரத்ன, பெஸில் பெர்ணண்டோ, கமலா விஜயரத்ன சிங்களக் கவிஞர்களின் தமிழ் சமூக அனுதாபங்களை அவதானிக்கலாம். மற்றும் பலஸ்தீனக் கவிதைகள், ஆஃப்ரிக்க, ரஷ்ய, இந்திய, அமெரிக்கக் கவிஞர்களின் கவிதைகள் திருமதி ஸூலைஹாவின் மொழியாக்க முயற்சியைப் பாராட்டி வரவேற்க வேண்டும்.

Image result for ஹெச்.ஜி.ரசூல்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் மொழி அடையாளத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை என்ன என்று காண்பதற்கு முன் அவர்கள் தமிழ் அடையாளமாக எவற்றையெல்லாம் முன்வைக்கின்றனர் என்பதைக் காணவேண்டும். தமிழ் என்பது மொழியையும் மொழி சார் பண்பாட்டையும் உள்ளடக்கிய ஒன்று என்கிற அடிப்படையில் அவர்கள் முன்னிறுத்தும் அடையாளங்களாவன,

- மொழியைத் தன்னுடைய அடையாளமாகக் கொள்ளுதல்

- தமிழ்மண் சார்ந்த சடங்குகளைப் பின்பற்றுதல்

- தமிழ்ப்பண்பாட்டிற்குரிய கதையாடல்களைப் பேணிக்காத்தல்

- தமிழ்மொழிக் கல்வி, தமிழ் இலக்கிய ஈடுபாடு

- சமய நடவடிக்கைகளில் தமிழ்க்கூறுகளை உள்ளடக்கிக் கொள்ளுதல்

மேற்கூறப்பட்ட பண்புகள் தமிழ் முஸ்லிம் களிடையே மிக இயல்பாகவே உள்ளன. இஸ்லாமிய அடிப்படைகளில் இல்லாத பலவற்றை அவர்கள் தன் அன்றாட வாழ்வில் பின்பற்றக்கூடியவர்களாக உள்ளனர். இஸ்லாமியர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள் பல தமிழ்ப் பண்பாட்டிற்குரியவை. திருமண நிகழ்வில் கருகமணி அணிதல், வளைகாப்பு, பிள்ளைக்கு காது குத்துதல் சடங்கு, மயிர் நீக்குதல், பெண்பூப்புச் சடங்கு முதலிய பலவும் இங்குள்ள பண்பாட்டின் தாக்கமாகவே உள்ளது. திருமணம் முதல் இறப்பு வரை பின்பற்றக் கூடிய சடங்குகளில் தமிழ்ப்பண்பாட்டுத்தாக்கம் உள்ளது.

குமரி மாவட்டத்தில் கடலோர கிராமமான தேங்காப்பட்டணத்தில் பிறந்த

மீரான் தன் எழுத்துவெளி முழுவதையும் சொந்த மண் பற்றிய

சித்திரமாக மாற்றினார். கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், 

கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சுவண்ணம் தெரு போன்ற அவரது 

நாவல்கள் முக்கியமானவை. தேங்கிப் போன சமூக மரபுகளைக் 

கேள்விக்குட்படுத்தியவை. அவரது மொழி யதார்த்தமானது; கலையின் 

அம்சங்களை உள்ளடக்கியது. சமூகத்தின் தேக்கத்தை அது 

கேள்விக்குட்படுத்தியது. பழமையான வாழ்வியல் தேக்கத்திலிருந்து 

விடுபடக் கோரியது. அப்படியான வாழ்க்கை முறையை 

விமர்சனத்துக்குட்படுத்தியது. தோப்பில் மீரானின் படைப்புகள் 

இடைக்காலத் தமிழ் இஸ்லாமிய உலகின் வாழ்வியல் யதார்த்தங்கள் 

மீதான விமர்சனங்களாக இருந்தன.





புனைவிலக்கிய வெளியில் களந்தை பீர்முஹம்மது, நாகூர் ஆபிதீன், 

கீரனூர் ஜாகிர் ராஜா, எஸ்.அர்ஷியா, மீரான் மைதீன் போன்றவர்கள் 

ம்க்குயமானவர்கள். கீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன்காரத் தெரு, 

மீன்குகைவாசிகள், துருக்கித்தொப்பி, வடக்கே முறி அலிமா போன்றவை 

சிறந்த நாவல்கள். இஸ்லாமிய சமூக அமைப்பு சார்ந்த முரண்களைப் 

பிரதிபலிப்பவை. மீன்குகைவாசிகள் நாவல் ஜாகிர் ராஜாவின் புனைவு 

மொழிக்கு உதாரணம். மனித வாழ்க்கைப் புதிர்கள் குறித்த சித்திரங்கள் 

பல்வேறு கதாபாத்திரங்களாக இந்நாவலில் விரிகின்றன. ஜாகீர் ராஜாவின் 

மொழியும் புனைவாக்கத்தன்மையும் இதில் யதார்த்தத்தைத் தாண்டி 

நிற்கின்றன.



தோப்பில் முகம்மது மீரான் கதைகளில் இத்தகைய கூறுகள் மிகுந்து காணப்படுகின்றன. ஜாகிர் ராஜாவின் துருக்கித் தொப்பி என்னும் நாவலில் அத்தாவுல்லாவின் மகனுக்கு நாகூர் ஆண்டகையின் சன்னதியில் மயிர்மழிப்பு என்னும் சடங்கு நிகழ்த்தப் படுகிறது. இது போன்ற பல சடங்குகளும் பின்பற்றப் படுகின்றன. இதனை இளைஞர்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றனர் என்பது முக்கியம். இந்தப் பண்பாட்டைப் பின்பற்றுபவர்களும் எதிர்ப்பவர்களும் உள்ளனர். எதிர்க்கும் இளைஞர்கள் என்ன அரசியல் நிலைப் பாட்டைக் கொண்டவர்கள் என்பதைப் பின்னர் காணலாம்.

இஸ்லாமியர்களின் அதியக்கதையாடல்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகளிலிருந்து சொல்லப்படுபவை. வாய்மொழி வழக்காற்றுத் தன்மையோடு இவை காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. தமிழக இஸ்லாமிய மக்களிடையேயும் இது போன்ற கதையாடல்கள் உள்ளன. இவை இங்கு வாழ்ந்த சூபிகள் எனப்படும் இறைநேசர்கள் குறித்தவை. அவற்றில் தக்கலை பீர்முகம்மது, நாகூர் சாகுல் ஹமீது, காயல்பட்டணம் சதக்கத்துல்லா அப்பா முதலிய பலரைப்பற்றிய அதியக் கதையாடல்கள் உள்ளன. இவை தமிழ் மண்ணிற்குரிய கதையாடல்களாகவே உள்ளன.

Image result for தோப்பில் முகமது மீரான்

நெசவுத்தொழில் புரிந்து வந்த பீர்முகம்மது அப்பாவைப் பற்றிய கதையாடல்களை தோப்பில் முகம்மது மீரானின் ‘அஞ்சுவண்ணம் தெரு’ நாவல் மிக விரிவாகச் சித்திரிக் கின்றது. தங்களை அடிமைப்படுத்தும் ஆதிக்கச் சமூகத்திற்கு எதிரான போராட்ட வரலாறாகவே இவை உள்ளன. இவை தமிழ் மண்ணிற்குரிய அண்ணன்மார் சாமி கதை, மதுரை வீரன் கதை முதலியவற்றை நினைவு கூர்வனவாக உள்ளன. இது போன்ற கதையாடல்களைக் கேட்டுப் பழகிய மக்களுக்கு இஸ்லாமியப் பின்புலத் தோடு கூடிய அதியக்கதையாடல்களையும் தன்னுடைய மண்சார்ந்த பண்பாட்டோடு ஏற்றுக்கொள்ள முடிந்தது.

களந்தை பீர்முஹம்மது ஆரம்ப கால எழுத்தாளர்களில் ஒருவர். அவரின் பிறைக்கூத்து, சுலைமான் ஹாஜியாரும் சில்க் சுமிதாவும் சிறந்த கதைத் தொகுப்புகள். அடிப்படைவாத சமூக யதார்த்தத்தை, அதன் இயங்கியலைக் கேள்விக்குட்படுத்தும் கதைகள் இவை. இதன் தொடர்ச்சியில் எஸ். அர்ஷியாவின் ஏழரை பங்காளி வகையறா, அதிகாரம் ஆகியவை முக்கிய நாவல்கள். அதிகாரம் நாவல், நான்கு வழிச் சாலையின் இயக்க ஓட்டம் குறித்த சித்திரம். அதில் தினசரி நகர்ந்து செல்லும் வாகனங்கள், மனிதர்கள் குறித்த கதையாடல் சாலை போன்றே நீண்டு செல்கிறது.

எச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் என்ற பின்னை நாவல் தமிழ் எழுத்துலகில் புதுமையானது.இஸ்லாமிய சூழலை அடிப்படையாக கொண்ட இந்த நாவல் மினிமலிசம் என்ற உத்தியை சொல்வதாக இருக்கிறது.அது போல் அவரது மகாகிரந்தம் நாவல் சரித்திர நாவலாகும்.இது சாண்டில்யன் நாவலை போன்ற கதையமைப்பை உடையதாகும்.மேலும் அவர் தேவதைகளின் சொந்தக்குழந்தை,ஒரு சூபியின் சுயசரிதை என்ற இரண்டு சிறுகதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.பின்நவீன சிறுகதைகளாகவே இவரது தொகுப்புகள் அமைந்துள்ளன.

Image result for எச்.முஜீப் ரஹ்மான்



எச்.முஜீப் ரஹ்மான் எழுதிய ‘உப்பாவைச் சொல்லும் கதை’ எனும் கதையில் தன்னுடைய மூதாதையரைப் பற்றிப் பெருமிதம் அடையும் இளைஞனாகக் கதை மாந்தன் கதை முழுதும் உரையாடுகின்றான். காலங் கடந்து நினைக்கப்படும் தன் உப்பாவைப் பற்றிய பெருமைகளைச் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதுகளி லெல்லாம் பேசுபவனாகவும் வாய்ப்பு கிடைக்காத போது கண்ணாடி முன்பு நின்று உப்பாவைப்பற்றிச் சொல்லுபவனாகவும் கதைமாந்தன் உள்ளான். முந்தைய சமூகத்தை நினைவுகூறும் இளைஞனாகக் காட்டும் இக்கதை பின்நவீனத்துவ அமைப்பில் அமைந்துள்ளது.இவரது சூரியன் உதிக்கும் திசை மேற்கு,எல்லாம் ஒலிமயம்,என் பெயர் போஸ்மே போன்ற கதைகள் வித்தியாசமான எழுத்துநடையை கொண்டது.தமிழ் சூழலில் எச்.முஜீப் ரஹ்மானும்,இடலாகுடி ஹசனும் மட்டுமே வித்தியாசமான எழுத்துநடையில் கதைகள் வடித்துள்ளார்கள்.

ஆங்கிலேயக் கல்வி முறை அறிமுகமாவதற்கு முன்பு இஸ்லாமியர்களிடையே மார்க்கக் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலக் கல்வி முறை காலனியச் சூழலில் வேலைவாய்ப்புகளுக்கான அடிப்படையாக அமைந்தது. மற்ற சமூகங்களிடையே இக்கல்வி முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிற்கு இஸ்லாம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது இஸ்லாத்திற்கு எதிரான கல்வி என்கிற கருத்துநிலை இஸ்லாமியர்களிடையே நிலவிவந்தது.

ஆங்கிலக் கல்வியை கிறித்தவப்பண்பாட்டுக் கற்பித்தல் முறையாகவே அவர்கள் பார்த்தனர். இதைக் கற்பதன் மூலம் தன்னுடைய சமயப் பண்பாடு சீரழிந்துவிடும் என்கிற மனநிலை கொண்டவர்களாக இருந்தனர். இதனை தோப்பில் முகம்மது மீரானின் துறைமுகம் எனும் நாவல் சித்திரிக்கின்றது. இத்தகைய கல்விமுறை எதிர்க்கப்படுவதன் மூலம் ஏற்படும் முதல் விளைவு இளைஞர்களுக்கான வேலையின்மை. இதனை இஸ்லாமிய சமூகத்து இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதன்மூலம் நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

வெளிநாட்டு வேலைகளுக்குக் கல்வி அடிப்படைத் தகுதியாகக் கொள்ளப்படவில்லை. அதே சமயம் இவர்கள் உடலுழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்பவர்களாகவே இருந்தனர். இது குறித்து மீரான் மைதீனின் ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ என்னும் நாவல் விளக்குகின்றது. சுதந்திரத்திற்குப் பின்பு கல்வியில் ஓரளவு முன்னேறியவர்களாக விளங்கினர். தாங்கள் பெற்ற கல்விக்குரிய வேலை வாய்ப்புடையவர் களாக இளைஞர்கள் விளங்கினர். இருப்பினும் இன்று வரை வெளிநாட்டிற்குச் சென்று இளைஞர்கள் வேலை பார்த்தல் என்பது குறைந்தபாடில்லை.

ஆங்கிலேயக் கல்வி அடிப்படையில் வழங்கப்பட்ட மொழிக் கல்வியை சமய அடையாளம் சாராமல் எதிர் கொண்டனரா என்பது கேள்விக்குறி. தமிழ் நூல்களைக் கற்பது குறித்து எத்தகைய மனநிலை உடையவர்களாக இஸ்லாமியர்கள் இருந்தனர் என்பதை ஜாகிர் ராஜாவின் ‘சக்கிலி மந்தை’ எனும் சிறுகதை சித்திரிக்கின்றது. இதில் கதை மாந்தன் நூலகம் செல்பவனாகவும் தமிழ் நூல்களைப் படிப்பவனாகவும் காட்டப்படுகின்றான். “நீ என்ன இஸ்லாமான புள்ளயாவா இருக்கே. உன் வயசுல முப்பது ஜூசும் ஓதி மனப்பாடமாக்கிட்டேன். நீ ரவ்வெல்லாங் கண்ணு முழிச்சு கண்ட பெலாய்ங்கள படிக்கிற” (2007: 27) என்று அந்த இளைஞனைக் குறிப்பிடும் போது அவன் ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பைக் கையில் வைத்துள்ளான். எனவே இளைஞர்கள் தமிழ் இலக்கியங்களை விரும்பிப் படிப்பவர்களாகவும் அதற்கான அரசியல் பின்புலத் தோடு இயங்குபவர்களாகவும் புனைகதைகளில் காட்டப்படுகின்றனர்.

முந்தைய தலைமுறையினர் காங்கிரஸ் கட்சி ஈடுபாட்டாளர்களாகவும் திராவிடக் கொள்கைகளை ஏற்காதவர்களாகவும் காட்டப்படு கின்றனர். இத்தகைய மனநிலைக்கு சமயம் ஒரு காரணம். திராவிடக்கட்சி நாத்திகத்தை முன்னிறுத்தக் கூடியது என்று அவர்கள் கருதினர். ஆனால் இளந் தலைமுறையினர் பலர் திராவிடக்கட்சியில் ஈடுபட்ட வர்களாக உள்ளனர். சமயம் தாண்டிய மொழி அடையாளத்தை இத்தகைய நிலைப்பாடு விளக்குகின்றது.

இஸ்லாத்திற்காக வாழ்ந்து உயிர் நீத்த இறை நேசர்களின் அடக்கத் தலங்கள் தர்காவாக மாற்றப் படுகின்றன. இந்த தர்கா கலாச்சாரம் குறித்த பல்வேறு மாற்றுச் சிந்தனைகள் தோன்றிவிட்ட சூழலிலும் இன்றும் இப்பண்பாடு பின்பற்றப்பட்டு வருகின்றது. தர்கா பண்பாடு தமிழ்மண்ணின் வீர வழிபாட்டோடு ஒப்புநோக்கத்தக்கது. இஸ்லாம் சமயத்திற்காகவும் இஸ்லாமிய மக்களுக்காகவும் போராடி மாண்டு போனவர்களின் நினைவாக எழுப்பப்படுவது. இஸ்லாமியர் களும் இஸ்லாமியர் அல்லாதவர்களும் செல்லும் இடமாக இது உள்ளது. இங்கு விழாக்கள் எடுக்கப் படுகின்றன, இறைநேசர்களின் பாடல்கள் பாடப்படு கின்றன, உணவு பகிர்ந்தளிக்கப்படுகின்றன, மேல்கீழ் என்னும் ஏற்றத்தாழ்வு இன்றி சமமாகப் பாவிக்கப்படு கின்றனர்.

தோப்பில் முகம்மது மீரானின் ‘அஞ்சுவண்ணம் தெரு’ நாவல் இந்த தர்கா பண்பாட்டை விரிவாக விளக்குகின்றது. ஜாகிர் ராஜா ‘மீன்காரத்தெரு’ எனும் நாவலில் ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்ணுக்காக எழுப்பப்படும் அடக்கத்தலம் எவ்வாறு தர்காவாக மாற்றப்படுகிறது என்பது குறித்துப் பேசியுள்ளார். அஞ்சுவண்ணம் தெரு நாவலில் மஹ்மூதப்பா தர்காவை இளைஞர்கள் சிலர் பாதுகாக்க நினைப்பதாகக் காட்டியுள்ளார். இதனால் உருவாகும் கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களாகவும் இளைஞர்களே உள்ளனர். இவ்வாறு தன்னுடைய பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் இளைஞர்கள் அக்கறை காட்டுவதாக நாவல் அமைந்துள்ளது.

கிராமப் பகுதிகளில் இளைஞர் நற்பணி மன்றங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு அரசியல் நடவடிக்கைளிலும் முன்னேற்றத் திட்ட நடவடிக்கைகளிலும் இளைஞர்கள் ஈடுபடுவதாகப் பல கதைகள் உள்ளன. ‘சக்கிலி மந்தை’ எனும் கதையில் “ஒழுங்கான மனுஷன் ஒருத்தனும் இதை எதுக்க மாட்டான்ல. சமூக சேவ வெங்காய சேவைன்னு மன்றம் வச்சு அலையிற பொடிப்பசங்க தான் சாவடியில கத்திக்கிட்டிருப்பானுங்க. வேற சம்சாரி எவனும் எதுக்க மாட்டான்ல” (2007: 28) என்று சமூக அவலங்களுக்கு இளைஞர்களே குரல் கொடுப்பார்கள் என்பதைக் குறிப்பிடுகின்றார்.

இயற்கைப் பொருட்களைத் தன்வாழ்வின் அங்க மாகக் கருதுவதும் அவற்றை வழிபடுவதும் தமிழ்ப் பண்பாட்டில் மிகுந்து காணப்படுகின்றது. இஸ்லாமியர் களின் கதைகளில் இத்தகைய பண்பு காணப்படுகின்றது. குளத்தையும் கடலையும் தாயாகப் பார்ப்பதும் மரம் செடிகளில் இறந்தவர்களின் பண்பைப் புகுத்திச் சொல்வதுமான கதைகள் உள்ளன. இயற்கையோடு வாழும் வாழ்வை நகரமயமாக்கம் சிதைப்பதை தோப்பிலின் சிறுகதைகள் பேசுகின்றன.

வேலை காரணமாக நகரங்களுக்குச் செல்லும் இளைஞர்கள் தன்னுடைய மண்சார்ந்த வாழ்வை இழந்துவிடுவ தாகவும் அவற்றைத் தேடி மீண்டும் சொந்த ஊருக்கு வரும்போது அந்த கிராமங்கள் நகரமயமாக்கத்திற்குள் சிக்கிசீரழிந்து கிடப்பதையும் பார்க்கின்றனர். தன்னுடைய பண்பாட்டு எல்லைக்குள் மிக சந்தோஷமாக வாழும் இளைஞர்கள் வேலை காரணமாக எல்லைக்கு வெளியில் தள்ளப்படும் போது எதையோ இழந்துவிடுவதாக உணர்கின்றனர். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் இதுவும் ஒன்று. இதனை ஜாகிர் ராஜாவின் ‘வெம்மை’ எனும் சிறுகதை விளக்குகின்றது.

Image result for ஜாகிர்ராஜா

தமிழையும் தமிழ்சார்ந்த பண்பாட்டையும் முன்னிறுத்தும் இஸ்லாமியர்கள் குறித்த பதிவுகள் படைப்புகளில் காணப்படுவதைப் போல சமய அடையாளத்தை முன்னிறுத்தும் மக்கள் குறித்த பதிவு களும் உள்ளன. இவர்கள் மொழி அடையாளத்திற்கு எதிராக சமய அடையாளத்தை முன்னெடுக்கின்றனர். இவர்களுக்கும் மொழி அடயாளத்தை முன்னெடுப்பவர் களுக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளன. இது இவர்தம் சமய நிலைப்பாட்டைச் சுட்டுவதோடு அரசியல் நிலைப்பாட்டையும் விளக்கவல்லது.

இஸ்லாமியர்களிடையே பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளதாகவும் இந்துக்கலாச்சார உள்வாங்கல்கள் உள்ளதாகவும் கூறி அவற்றை எதிர்த்துத் தூய்மைவாதம் பேசியவர்கள் சமய அடையாளத்தை முன்னெடுத்த வர்கள். இவர்கள் வகாபியக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டில் அரபு நாட்டில் நஜ்து என்னும் பகுதியில் பிறந்தவர் முகம்மது இப்னு அப்துல் வகாப். இவர் அப்பகுதியில் நிலவிய உள்ளூர்க்கலாச்சாரங்களால் இஸ்லாம் தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறினார்.

அடக்கத்தலங்களை வழிபடுவது இறைவனுக்கு இணைவைத்தல் என்று கூறி நபிமார்களின், இறைநேசர்களின் அடக்கத் தலங்களை இடிக்கக் கூறியவர். இவருடைய தலைமையில் வகாபியக் கொள்கை உலகமெங்கும் பரவியது. உலகின் எல்லாப் பகுதியிலும் உள்நாட்டுக் கலாச்சாரத் தாக்கம் அற்ற தூய்மையான இஸ்லாமித்தை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களின் கொள்கை. இதனால் அந்தந்த மண்ணுக்குரிய பண்பாட்டு எச்சங்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்னும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இக்கொள்கை இளைஞர்களிடமே மிகவேகமாகப் பரவியது.

அரபு நாடுகளுக்குச் சென்று வேலை செய்து திரும்பும் இளைஞர்கள் அங்குள்ள கலாச்சாரங்களைப் பார்த்துப் பழகி இங்கு வரும்போது அதையே எதிர்பார்க்கின்றனர். அஞ்சுவண்ணம் தெரு என்னும் நாவலில் அரபு நாட்டிற்கு வேலைக்குச் சென்று திரும்பும் இளைஞன் வகாபியம் என்னும் தூய்மைவாதக் கொள்கையினை ஊருக்குள் பரப்பத் தொடங்குகின்றான். இதனால் பாரம்பரியமாகப் பேணப்பட்டு வரும் மஹ்மூதப்பா தர்கா அழிக்கப்படுகின்றது. ஊருக்குள் பல கலவரங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இக்கொள்கை பற்றி அறியாத பல இளைஞர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.

பழந்தர்காக்களை இடிப்பதும் இறைநேசர்களின் பாடல்களைக் கொளுத்துவதும் பழைய அமைப்பிலான பள்ளிவாசல்களை இடிப்பதும் இக்கொள்கை பரப்பும் இளைஞர்களின் செயல்பாடுகளாகக் காட்டப்பட்டுள்ளன. இதில் புதியதாகக் கட்டப்படும் பள்ளிவாசல்கள் அரபுநாட்டு பாணியிலானவை என்னும் செய்தி உள்ளது. நமக்கிருந்த கட்டிடக்கலைத் திறனை அழித்து அரபு நாட்டு கட்டிடக்கலையினை இங்கு நிறுவ முயலுவதை நம்முடைய அடையாள அழிப்பு நடவடிக்கையாகவே உணரமுடிகின்றது.

பரங்கியர்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுக்காகப் போராடிய மரைக்காயர் தர்காவை இடித்தது குறித்துப் பேசும்போது, “அந்த பசங்கள் மதத்துக்கப் பேரால் இடித்து அடையாளம் தெரியாமலாக்கினது கற்களால் கட்டப்பட்ட கபர்களையல்ல, அந்நிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நாம் செய்த போராட்ட வரலாற்றுப் பக்கங்களை. இந்த மண்ணிற்காக உயிர் தந்த சுஹதாக்களின் வீர காப்பியங்களை அடுத்த தலைமுறைக்குக் கைமாறாமல் கிழித்துவிட்டனர். வேரற்ற ஒரு சமுதாயம் தான் இனி வளர்ந்து வரும். சயனிஸ்டுகள் போட்டுக்கொடுத்த முடிச்சுகள்” (2008: 130). இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அரபுநாட்டிலிருந்து ஏராளமான பணம் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தூய்மைவாதம் பேசுபவர்கள் தமிழ்ப் பண்பாட்டை இந்துப்பண்பாடாகவே மதிப்பிடுகின்றனர். தன்னுடைய சமயத்திற்கு எதிரான இந்துச் சமயக் கூறுகளாகவே தர்கா பண்பாட்டைக் கருதுகின்றனர். இப்பண்பாட்டைப் பேணுவதை இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரான ஒன்றாகச் சித்திரிக்கின்றனர். மேலும் மதத்தின் பேரால் புரோகிதர்கள் சம்பாதிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு கடைபிடிக்கப்படும் சடங்குகளால் புரோகிதர் களுக்கு மட்டுமே நன்மை அடைவர் என்றும் இவர்கள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப குர்ஆன் வாசகங்களை மாற்றிப் பொருள் கொள்கின்றனர் என்றும் குறிப்பிடுகின்றனர். இதனை பிர்தவ்ஸ் ராஜகுமாரனின் படைப்புகள் மையப்படுத்துகின்றன.

தர்கா கலாச்சாரம் என்பது இறைநேசர்களின் வழித்தோன்றல்கள் பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கிய இடம் என்று ‘நேர்ச்சை’ என்னும் சிறுகதையில் குறிப்பிடுகின்றார். ஆங்கிலக் கல்வி என்பது பாரமாக உள்ளது என்பதை ‘பாரம்’ என்னும் சிறுகதையில் பேசியுள்ளார். ஆங்கிலக் கல்வி மீது மக்கள் மோகம் கொண்டுள்ளனர் என்றும் இது மாணவர்களுக்கு பெருஞ்சுமையாக உள்ளது என்றும் கூறவிழைவதின் நோக்கம் மார்க்கக் கல்விக்கு எதிரான கல்வியாக அதனைக் கருவது என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

தூய்மைவாதம் பேசுபவர்களுக்கும் மண்சார்ந்த அடையாளங்களைப் பேணுபவர்களுக்கும் உள்ள முரண் சமயத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதா என்று காண்பது அவசியம். இஸ்லாத்திற்குள் காணப்படும் பிற பண்பாட்டுத் தாக்கத்திற்கு யார் காரணம் என்று தூய்மைவாதம் பேசுபவர்கள் கூறும்போது, “தெளிவான இஸ்லாமிய அறிவில்லா முஸ்லிம்களால், சாதி மற்றும் சமூகக் கொடுமைக்கு பயந்து பிறந்த மதத்தை கைவிட்டு இஸ்லாத்தில் அடைக்கலம் புகுந்த பிறகும் தங்களின் மூதாதையரின் வணக்க வழிபாடுகளை முழுவதும் விட்டொழிக்க முடியாதவர்களால்” (பிறைநதிபுரத்தான், 2004) என்று குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் முன்வைக்கும் பிரச்சினை சமயச்சிக்கல் சார்ந்தது என்பதைவிட சாதியச் சிக்கல் சார்ந்ததாகவே உள்ளது. எனவே அடித்தட்டு சமூக மக்களே இத்தகைய பண்பாட்டைப் பேணுபவர்களாக உள்ளனர் என்று குறிப்பிடுகின்றனர். இதனை தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு நாவல் விளக்குகின்றது. மஹ்மூதப்பா தர்காவை வழிபடுவோர் அஞ்சுவண்ணத் தெரு மக்களே. இம்மக்கள் யார்? எவ்வாறு இங்கு குடியமர்த்தப்படுகின்றனர் என்பது குறித்த விரிவான வரலாறு கதைக்குள் பேசப்படுகின்றது.

மொழிசார்ந்த பண்பாட்டைப் புறந்தள்ளச் சொல்லும் தூய்மைவாதிகளின் நோக்கம் என்ன என்று காண்பது அவசியம். தூய்மைவாதம் என்பது சமய நிறுவனப்படுத்த முயற்சியாகும். இது மேல்தட்டு வர்க்கத்தினரின் சமய நடவடிக்கைகளை மட்டுமே அங்கீகரிக்கும். உள்ளூர் கலாச்சாரங்களைப் புறந்தள்ளி விட்டு பொதுமையான அடையாளத்திற்குள் தன்னை இணக்கப்படுத்திக் கொள்ளும். இதனைக் குறித்து ஹெச்.ஜி.ரசூல் குறிப்பிடும்போது, “தர்கா கலாச் சாரத்தைப் பின்பற்றும் அடித்தட்டு முஸ்லிம்களை இழிந்தவர்களாக, காபிர்களாக, பித்அத்துகளை மேற்கொள்பவர்களாகக் கருதுவது தௌகீது பிராமணியத்தைக் கட்டமைக்கும் வகாபிகளின் நவீனத் தீண்டாமைப் பார்வையாகவும் உள்ளது” (2010: 10).

வகாபியக் கொள்கைகளை முன்னிறுத்துபவர்கள் மேல்தட்டுவர்க்கத்தினராக உள்ளனர் என்பது இதன்வழி அறிய முடிகின்றது. இக்கொள்கையை நிலைநாட்டும் படைப்புக்களை எழுதும் பிர்தவ்ஸ் ராஜகுமாரன் படைப்புக்களில் மேல்தட்டு மக்களே உலவி வருகின்றனர்.

சமய அடையாளத்தை முன்னெடுப்பவர்கள் மொழி அடையாளத்தைப் புறந்தள்ளக் கூடிய மேட்டிமைச் சமூகத்தினராக உள்ளனர் என்பதை விளங்கிக் கொள்ளமுடிகிறது. இது சாதிய மேலாண்மையை மட்டும் நோக்கமாகக் கொண்டதா என்று காணும்போது அதன்ஊடாக வரும் அரசியல் மேலாண்மையையும் இது இலக்காகக் கொண்டிருப்பது விளங்குகின்றது. தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு நாவலில் பழைய பள்ளிவாசலை இடித்துவிட்டு புதிய பள்ளிகளைக் கட்டும் இளைஞர்கள் பள்ளி நிர்வாகத்தில் பழைய ஆட்களை வெளியேற்றி தாங்களே அதிகாரத்தில் மேலேறுகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தை வகிப்பதன் மூலம் அச்சமூகத்தை தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும். இது உள்ளூர் அளவிலான அதிகாரம். இதனை அரபுச் சூழலுக்கும் பொருத்திக்காணலாம். அரபுச் சமூகத்தில் ஆட்சி அதிகாரத்திற்குரியவர்களாக குரைஷிகள் எனப்படும் மேல்தட்டு மக்களே உள்ளனர். கடைசி இரு குரைஷிகள் இருக்கும் வரை அவர்களே ஆட்சி அதிகாரத்திற்குரியவர்கள் என்பது நபி முகம்மது வாய்மொழி வரலாற்றுச் செய்தியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களைச் சமயத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலக்குவதன் மூலம் அவர்களை அடையாள இழப்பிற்குள்ளாக்கி அதிகார எல்லையிலிருந்தும் புறந்தள்ளி விடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த அடிப்படையி லேயே தமிழக இஸ்லாமியர்களின் மொழி அடையாள முன்னெடுப்பு புறந்தள்ளப்படுவதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

தர்கா பண்பாட்டை புரோகிதர்கள் தங்களுடைய தொழிலுக்காக செய்கின்றனர் என்று அடையாளப் படுத்தும் இவர்கள் தூய்மைவாதம் பேசுவதன் வாயிலாகப் பெறும் பலன் என்ன என்று காணவேண்டும். அரபு நாட்டின் பொருளாதாரம் வணிகத்தை மையமாகக் கொண்டது. அரசியல், வணிகம் என்று எந்த ஒரு செயலும் சமயச் சார்பற்று அங்கு நிகழ்த்தப் பெறுவ தில்லை. ஹமீது அல்கர் எழுதிய “Wahhabism : A Critical Essay” என்னும் நூலுக்கான விமர்சனத்தில் “வஹா பிசத்தின் உச்சகட்ட சாதனை சவூதி அரேபியாவில் ராஜ்ஜியத்தை நிறுவியதே என்பதாக கீழைத்தேய வாதிகள் மற்றும் - வஹாபி மற்றும் வஹாபியரல்லாத - அரபு முஸ்லிம்களின் ஆக்கங்களைப் பயன்படுத்தி அல்கர் வாதிடுகிறார்” என்று அப்தர் ரஹ்மான் கோயா குறிப்பிடுகின்றார்.எச்.முஜீப் ரஹ்மானின் நான் ஏன் வகாபி அல்ல? 800 பக்கங்கள் கொண்ட பெருநூல் ஒன்று வகாபிசத்தை அதன் அத்தனை கோணங்களிலும் ஆராய்ந்துள்ளது.

மேலும், சவூதிகள் எஞ்சிய முஸ்லிம் உலகில் மேற்கூறிய அமைப்புகள் ஊடாக வஹாபி கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யும் பொருட்டு தங்களின் எண்ணை வளத்தைப் பயன்படுத்திச் செய்துவரும் நடவடிக்கைகளையும் நூலாசிரியர் விளக்குகிறார். இக்கருத்துக்களைக் காணும்போது அரபுச் சூழலில் அதிகாரத்தையும் மற்ற இஸ்லாமிய நாடுகளில் வணிகத்தையும் நோக்கமாகக் கொண்டு இவை செயல்படுகின்றன என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. 1924இல் வகாபிய இணைவின் காரணமாக மக்கா, மதினா நகரங்களும் ஹஜ் பயணிகளின் நடவடிக்கைகளும் இவர்களின் அதிகாரத்தின் கீழ் வந்தது என்றும் 1938இல் அரேபியாவில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு வகாபியக் கொள்கை பரப்பலுக்கு சவூதி அரசாங்கம் அதிக பணம் செலவழிக் கின்றது (2009: 32) என்று கூறும் ஹெச்.ஜி.ரசூல் கூற்றும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

தமிழ் கவிதைப்பரப்பில் அப்துல் ரஹ்மான், மேத்தா, இன்குலாப் போன்றவர்கள் வானம்பாடி காலகட்டத்தின் முக்கியக் கவிஞர்கள். அப்துல் ரஹ்மானின் பால்வீதி, ஆலாபனை, பித்தன் போன்றவை முக்கியக் கவிதைத் தொகுதிகள். மேலும் கவிதைகளில் குறியீடுகள், படிமம், உவமை சார்ந்தும் பல சோதனைகளை நிகழ்த்தியவர். இதன் மூலம் மரபுக்கு மாற்றான கவிதை முறையியலைக் கொண்டவர் அப்துல் ரஹ்மான். இன்குலாபின் கவிதைகள் அதிகமும் புரட்சிகர தன்மை கொண்டவை; நேரடியான வெளிப்பாடு கொண்டவை. இவரின் மொத்தத் தொகுப்பானது ஒவ்வொரு புல்லையும் என்ற பெயரில் வெளிவந்தது. அடுத்த நிலையில் அபி, ஹெச்.ஜி.ரசூல் போன்றவர்களின் கவிதைகள் நவீனம் சார்ந்தவை. குறிப்பாக ஹெச்.ஜி.ரசூலின் ஜனகன மன, பூட்டிய அறை, மைலாஞ்சி, உம்மா கருவண்டாகப் பறந்து செல்கிறாள் போன்றவை முக்கியத் தொகுப்புகள். இதில் ஆரம்பகால தொகுப்பான ஜனகன மன முக்கியமானது. அக்காலப் புரட்சியின் நுட்பமும் அதற்கான குறியீட்டுப் படிமங்களும் கொண்டது. பூட்டிய அறை பெண்கள் பற்றியும் அவர்களின் அந்நியப்பாடு, சமூக விலக்கல்கள் குறித்த சித்திரம். முக்கியமானதாகும்.

தூய்மைவாதக் கொள்கைகள் இளைஞர்கள் வாயிலாகவே பரப்பப்படுகின்றன. வெளிநாட்டிற்குச் செல்லும் இளைஞர்கள் முதலில் இக்கொள்கையினால் கவரப்படுகின்றனர். பின்பு தன்னுடைய நாட்டிற்குத் திரும்பும் போது அக்கொள்கைகளை முதலில் இளைஞர் களிடமே பகிர்ந்து கொள்கின்றனர். இக்கொள்கை பகுத்தறிவுவாதம் என்கிற அடிப்படையில் பரப்பப் படுகின்றது. இதனை அஞ்சுவண்ணம் தெரு நாவல் விரிவாக விளக்குகிறது. சமய அடையாளங்களை முன்னிறுத்துவதன் மூலம் இஸ்லாம் சமூகத்தவர்கள் இதனை அடிப்படையில் எதிர்க்கமுடியாதவர்களாகவும் காலங்காலமாகப் பின்பற்றிவரும் சம்பிரதாயங்களைக் கேள்விக்குள்ளாக்குவதால் இக்கொள்கையினை ஏற்க முடியாதவர்களாகவும் இருந்தனர். இக்கொள்கைகளைப் பரப்புகின்றவர்களாக இளைஞர்களே உள்ளனர் என்பதை ஜாகிர் ராஜா கதைகளும், தோப்பில் கதைகளும் நிறுவுகின்றன. இவர்கள் தங்கள் சமய அடையாளத்தை புறத்தோற்றத்தின் வழி வெளிப்படுத்துகின்றனர்.

Image result for நான் ஏன் வகாபி அல்ல

தூய்மைவாதம் பேசும் இஸ்லாமிய இளைஞர்கள் நீண்ட தாடி வளர்த்தவர்களாகவும் உடையில் இஸ்லாமியத் தோரணையும் மொழியில் அரபுச் சொற்களின் ஊடாட்டமும் ஒவ்வொரு நடைமுறையிலும் இஸ்லாமிய அடிப்படைகளை வலியுறுத்துபவர்களாகவும் கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளனர். இந்த அடையாளம் தமிழ் மக்களிடமிருந்து அவர்களைத் தனியே வேறுபடுத்திக் காட்டுவதாக இருந்தது. இதன் விளைவு இவர்களைத் தீவிரவாதிகள் என்னும் சித்திரத்திற்குள் அடையாளப் படுத்தியது. இதற்கு ஊடகம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் இப்புறத்தோற்றம் அவர்களைத் தனியாக அடையாளப்படுத்தியதும் ஒரு காரணமாக உள்ளது. எனில் சமய அடையாளத்தை ஆடைகளில் காட்டுவது தவறா என்கிற கேள்வி எழக்கூடும். அது தவறு என்று கூறுவதற்கு எந்த நியாயப்பாடும் இல்லை என்றாலும் இஸ்லாமியர்களின் தோற்றம் மற்ற சமூகத்தினரிடையே தீவிரவாதத் தன்மையோடு இணைத்துச் சிந்திக்க வைக்கின்றது. இதற்கு ஊடகமே முக்கிய காரணம்.

இந்தியாவில் நிகழ்ந்த கலவரங்களுக்கும் குண்டு வெடிப்பு போன்ற வன்முறைகளுக்கும் இஸ்லாமியர்களே காரணம் என்று மையப்படுத்தி வரும் செய்திகள் அந்த தோரணையுடன் வாழும் எந்த இஸ்லாமியனையும் அதே கோணத்தில் தீவிரவாதியாக அடையாளப்படுத்துகின்றது. எங்கு கலவரங்கள் நிகழ்ந்தாலும் இந்த அடிப்படையில் இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை தோப்பிலின் நாவல் சித்தரிக்கின்றது. மேலப்பாளையம் முஸ்லீம்கள் குறித்து இனவரைவியல் ஆய்வு செய்துள்ள பே.சாந்தியின் நூல் அறிக்கைகள் இந்த கருத்திற்குப் பக்கபலமாக உள்ளது. கோவை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞர்கள் எதிர்கொண்ட அவலங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தமிழ் முஸ்லிம்களின் அடையாளச் சிக்கல்கள் கீழ்க்கண்ட சூழலுக்குட்பட்டவையாக உள்ளன.

-   தமிழக இஸ்லாமியர்களிடையே ராவுத்தர், மரைக்காயர், லெப்பைகள், ஒசாக்கள் (நாவிதர்), வண்ணார், மீன்பிடி தொழிலாளர், துப்புரவுத் தொழிலாளர்கள், கசாப்புக்கடை வியாபாரிகள், நிலையான இருப்பிடம் இல்லாத முஸாபர்கள் என்று பல்வேறு சமூக அடுக்குகள் சாதிய அடையாளத்தோடு இயங்கி வருகின்றன. இத்தகைய முரண்களுக்குள் எந்த அடை யாளத்தை முன்னிறுத்துகின்றனர்?

-  தமிழ் பேசும் முஸ்லிம்கள், உருது பேசும் முஸ்லிம்கள் என்கிற பாகுபாட்டிற்குள் எந்த அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர்?

-  தமிழக எல்லைக்கு உள்/வெளியில் என்கிற நிலம் சார்ந்த எல்லைகளில் எந்த அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர்?

என்கிற கேள்வி இவர்களின் அடையாள அரசியல் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றது என்பதற் கான விடையாக உள்ளது.

அடையாளம் என்பது பொதுமைக்குள் கரைந்து விடாமல் தனக்கான உரிமைகோரலுக்கான அளவு கோலாக சில நேரம் மாறிவிடுகின்றது. அந்த அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கிடையிலான சாதி சார்ந்த பாகுபாட்டிற்குள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய மண்சார்ந்த அடையாளங் களையே முன்னெடுக்கின்றனர். இது இவர்களை மதிப்பீடு செய்யும் அளவுகோலாக இருந்தாலும் இவர்கள் எந்தச் சூழலிலும் தன்னுடைய மொழிசார்ந்த பண்பாட்டு அடையாளங்களை இழக்கத் தயாராக இல்லை. ஆனால் மேல்தட்டு வர்க்கத்தினர் எப்போதும் தன்னை சமயத்தோடு அடையாளம் காணவே விழைகின்றனர். தூய்மைவாதமும் அதற்கான அரசியற் பின்புலமும் இதற்குரிய காரணங்களாக விளங்குகின்றன.

தமிழ் உருது என்னும் மொழிசார் பாகுபாடு பூர்விக இஸ்லாமியன் என்கிற மதிப்பீட்டு அடிப்படை யிலான பாகுபாடே. எனவே பூர்விக இஸ்லாமியர் களாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் உருது பேசும் இஸ்லாமியர்கள் மொழியையும் மொழிசார் பண்பாட் டையும் முன்னெடுக்கும் போது மதிப்பிற்குரியவர் களாகவும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் மொழி அடையாளத்தை முன்னெடுக்கும் போது மதிப்பு குறைந்தவர்களாக, பூர்விகத் தன்மையற்று இஸ்லாத்திற் குள்ளாக இரண்டாம் தரத்தினராக மதிக்கப்படுகின்றனர். எனவே இத்தகைய சூழலில் சமய அடையாளத்திற் குள்ளாக தங்களை இணைத்துக் கொள்வதையே சிறந்ததாகக் கொள்கின்றனர். ஜாகிர் ராஜாவின் மீன்குகைவாசிகள் நாவல் இதற்கு நேர்முரணாக உள்ளது. உருது பேசுபவர்களை பட்டாணிகள் என்று கிண்டல் தொனியில் கூறுவதாகச் சித்திரிக்கப்படுகின்றது. எதார்த்தத்தில் அவர்கள் தங்களுக்குள் அரபு ரத்தம் ஓடுவதாகச் சொல்லி உயர்வாகச் சொல்லும் வழக்கம் உண்டு.

தமிழக எல்லைக்கு உள்ளும் புறமும் எத்தகைய அடையாளத்தை முன்னெடுக்கின்றனர் என்று காணும் போது தமிழக எல்லைக்குள் அடையாள நெருக்கடிச் சூழலில் சமய அடையாளத்தையும் இயல்பாக மொழி அடையாளத்தையும் முன்னெடுப்பவர்களாக உள்ளனர். வெளிநாடுகளில் பெரும்பாலும் சமய அடையாளமே முன்னெடுக்கப்படுகின்றது. அரபு நாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் இளைஞர்கள் தங்களைத் தமிழர் களாகக் காட்டிக் கொள்வதை விட இஸ்லாமியர் களாகவே காட்டிக்கொள்கின்றனர். அந்தப் பழக்கம் சொந்த மண்ணிற்கு வரும்போதும் தொடர்வதாக உள்ளது.

தமிழ் முஸ்லிம் இளைஞர்களிடையே மொழி அடையாள முன்னெடுப்பு என்பது சூழல் சார்ந்த ஒன்றாகவே உள்ளது. இஸ்லாமியப் புனைவுகளில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் இளைஞர்கள் தங்கள் மண்சார்ந்த அடையாளங்களை இழக்க விரும்பாதவர் களாகவும் அவற்றைப் பாதுகாக்க எத்தனிப்பவர் களாகவும் உள்ளனர். கல்வியின் மூலமும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளின் மூலமும் சமய நடவடிக்கை களினூடே தன்னுடைய மண்சார்ந்த அடையாளங் களைப் பாதுகாக்கின்றனர்.

படைப்புகளுக்கு வெளியில் நின்று காணும் போது இஸ்லாமியப் படைப்பாளர்கள் பெரும்பாலும் தமிழ் சார்ந்த அடையாளங்களையே முன்னிறுத்துகின்றனர். தங்கள் படைப்புகளின் மூலம் தங்கள் அடையாளங்களைப் பேணிப்பாதுகாக்கின்றனர். இளைஞர்கள் மாற்றுச் சிந்தனையாளர்கள் என்கிற அடிப்படையில் பல கருத்துக்களைப் படைப்பிற்குள் முன்வைத்தாலும் மொழி அடையாளச் சிதைவிற்கு என்றும் அவர்கள் துணைபோகாதவர்களாகவே உள்ளனர். எனினும் அரசியல் காரணிகள், இளைஞர் களின் மாற்றுச் சிந்தனைப் போக்கைத் தம்முடைய ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் சூழல் எதார்த்தத்திலும் படைப்புக்களிலும் மேலோங்கியுள்ளது.


எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள்

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள் பேரா.எச்.முஜீப் ரஹ்மான் ரஹ்மத் ராஜகுமாரன், இவரின் இயற்பெயர் ஏ.பி.எம். அப்த...