Friday, July 30, 2010

சிலுவையில் தொங்கும் சாத்தான்


வெளியீடு: தாமரைச்செல்வி பதிப்பகம், சென்னை 600 078
பக்கம் : 424
விலை ரூ. 125.00

தலைமறைவு இலக்கியங்கள் காலத்தை கருத்தில் கொள்பவையல்ல. பிரதி வாசகனுக்கு வழங்க வேண்டிய கருத்தியலை மட்டுமே கணக்கில் கொள்ளும் ரஷ்ய, இலத்தீன், அமெரிக்க, ஆப்பிரிக்க நாட்டினது இலக்கிய வரலாறுகள் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்களின் கதையாடல்கள் மையம் என்கிற நிறுவனத்துக்கு எதிரான நிறுவனமாக மாறுகிறபொழுது அதனுடன் சமரசம் செய்து கொள்ளாத எதிர்நிலை கதையாடல்களாக மாறுகிற பொழுது இந்நிலையினை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதே தளத்திலேயே கூகி வா தியாங்கோவும் இயங்குகின்றார்.

"Pearls of Blood" என்ற நாவலுக்காக நாடு கடத்தப்பட்டவரும், தன் வாழ்வை சிறையில் கழித்த பொழுது அங்கே தரப்பட்ட மலம் துடைக்கும் தாளில் எழுதி மறைத்து வைத்து பின்னாளில் பெறப்பட்டு நாவலாக வெளிவந்த நீண்ட வரலாறுக்குரியவர்.

மொழி என்பது அதிகாரம் சார்ந்து கட்டமைக்கப்படுகின்ற பொழுது அதனைத் தகர்தெறிகின்ற பண்பாட்டுடன் கூடிய மாற்று மொழி வடிவம் எந்தவொரு விளிம்புநிலை படைப்பாளிக்கும் அவன் உணர்ந்து கொண்ட காலத்தின் நிகழ்வின் அசைவினைப் பொறுத்து எதிர் தன்மையில் அமையும். அம்மொழி விடுதலை நோக்கி மையம் நோக்கி பயணிக்கும் பொழுது மையம் எதிர் நிலையில் இயங்குவதையும் மொழியைச் சார்ந்தியங்கும் தேவையும் மையத்திற்கு ஏற்படுகிறது. தமிழக வரலாற்றைப் பின்னோக்கினால் சமண, பௌத்த மொழி அமைப்புடன் தொடங்கும் போராட்டம் இன்றைய காலகட்டம் வரைத் தொடர்கிறது. ஒட்டுமொத்தமாக மையம் என்கிற நிறுவனத்தை நோக்கி பயனிக்கின்ற அந்த கால இடைவெளியில் எடுத்துச் செல்லுகின்ற மொழியாளனின் நிலையும் அந்த நிகழ்வும் வரலாற்றில் என்றும் மறுக்கவியலாத பக்கங்களாகும். அதை இவருடைய படைப்பில் காட்டியிருப்பது எளிமையான எதார்த்தம்.

மொழி சார்ந்த குறியீட்டு வடிவம் வாசகனுக்கும் படைப்பாளிக்குமான புரிதலை மேலும் வலுப்பெற வைப்பதற்கும், படைப்பாளி சார்ந்த கருத்துருவாக்கத்தை மேலும் வலுப்பெறச் செய்வதற்கும் உதவுகின்றன. "சிலுவையில் தொங்கும் சாத்தான்" என்கிற முரணான எதிர்நிலை கருத்துருவாக்கமே நாவலை அர்த்தப்படுத்துகின்றன என்கிறபொழுதும் இவருடைய இடதுசாரி சிந்தனைகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் நிலைப்பாடுடையதாக ஆக்கியுள்ளது.

தலையில் துவங்கிய முரண்குறியீட்டை நாவலின் இறுதிவரையிலும் நகர்த்திச் செல்லுகின்றார். "தற்கொலை என்கிற கோழைத்தனமான முடிவிலிருந்து மீண்ட நிலையுடன் நாவல் தனது பயணத்தைத் தொடங்குகிறது. ஏகாத்திபத்தியமும், முதலாளித்துவம் தனது கோர கரங்களுக்குள் சமூகத்திலுள்ள அனைத்துவித மக்களையும் ஆட்கொண்டுள்ளது என்கிற நிலைபாட்டை ஒரே வண்டியில் பயணிக்கும் சாதாரண பெண் (வரீயங்கா), மாணவன் (கத்தூய்ரியா), போராளி (வங்காரி மாத்தாய்), தச்சுத் தொழிலாளி (முதூரி) வியாபாரி (விரேரி), தொழிலாளி (மூகிராய்) இவர்கள் அனைவரது வாழ்வும் முதலாளிய வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையினைக் கூறுவதோடு அவர்கள் பயணிக்கும் வண்டியின் உரிமையாளன் தனது மனசாட்சியை அடகுவைத்து விட்டு வரும் (முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாக சாத்தான்) குறியீடு செய்து இவர்கள் அனைவருமே அவனைத் தவிர்க்கவியலாது கட்டாயம் பயணிக்க வேண்டிய நிலைப்பாடு உடையவர்கள் என்கிற நிலையும் அந்நிலைக்கெதிரான கலகக்குரலை எழுப்பாதத் தன்மையினையும் சுட்டிச் செல்கின்றார்.

"சாத்தானின் விருந்து" நிகழ்வுக்கு அவர்கள் அனைவரும் செல்ல அங்கு, நடைபெறும் நிகழ்வுகளும், காட்சிகளும், அரசியல், பொருளாதாரம் அதனைச் சார்ந்தியங்கும் சமூகப் பண்பாட்டில் உயரிய நிலையில் இருக்கின்ற ஆளும் வர்க்கத்தினரால் ஆளப்படும் வர்க்கம், அடிமைப்படுத்தப்படும் சுரண்டப்படும் தன்மையினை கூறப்படுவதுடன், அதனை தங்கள் சமூகத்தகுதியாகவும் ஆளும் வர்க்கத்தினர் கருதும் நிலையினையும் உணர்கின்றனர்.

காலனிய ஆட்சிக்கு மறைமுகமாக தாங்கள் பிரதிநிதி எனவும் பண வெறியினால் தங்கள் நாட்டினரையே அடிமைப்படுத்துவதையும் முட்டாளாக்குவதையும் பெருமையாகக் கருதுகின்றனர். சமூக வெளியில் மதிப்பீடு என்பது இவர்களுக்கு பலவிதமான கார்கள், பங்களாக்கள், பல மனைவிகள் மற்றும் பல பெண் நண்பிகளின் மூலம் அளவிடப் படுவதாக உள்ளனர்.

கடைநிலைத் திருடர்களை பெரிதுபடுத்தும் அதிகாரம் சார்ந்த அரசு இவர்களுடன் இயல்பாக பழகும் முரண்பட்ட நிலையினையும் காண முடிகிறது. இந்நிலைப்பாட்டை கண்ட சமூகக் கூட்டம் என்கிற எல்லா நிலையிலும் உள்ள வண்டியில் பயணித்தக் கூட்டம் அதிர்வினை உள்வாங்கி செரித்துக்கொள்ளவியலாத ஒவ்வொரு சமூகப் பாத்திரமும் அதன்தன் நிலைபாட்டில் தனது எதிர்ப்பினை தெரிவிக்கின்றது.

நீதியின் பக்கம் சார்ந்து உண்மையின் தளத்தில் நின்றாலும் அது ஆளும்வர்க்கத்தின் சார்பாகவே பேசும். மாறாக சார்ந்தவனையே பாதிக்கும் என்கிற தளத்தில் போராளி பாத்திரமும், சிலுவையில் தொங்கும் சாத்தானின் கருத்துக்குட்பட்டு மனசாட்சியை அதனிடம் விற்றால் முதலாளி வர்க்கமாக மாறலாம் என்கிற தளத்தில் உள்ள சாதாரண குடிமக்கள் உழைக்கும் மக்களின் கூட்டத்தோடு சேர்ந்து உரிய கல்வியறிவுடன் போராடினால் "சாத்தானின் விருந்து" சிதைபடும் என்கிறக் கருத்தாக்கத்தையும் ஒவ்வொரு பாத்திரமும் அதுதன் கையில் எடுத்துக் கொள்கிற போராட்டத்தின் நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது.

போராட்ட களத்தில் அதனை முன்னெடுத்துச் செல்கின்ற தலைமைக்கும் அதனுடனான குடும்பம் என்கிற நிறுவனத்திற்கும் இனை முரணான நிகழ்வு அமைவது இயல்பு. அகப் போராட்டமான இந்நிகழ்வினை தலைமை கையிலெடுக்கின்ற நிலைப்பாட்டினைப் பொருத்து முன்னேறிச் செல்கின்ற தோல்வியடைகின்ற தன்மை அமையும். அதை எந்த நிலையிலும் நழுவ விடாது கதை நகர்ந்து செல்வதும் இறுதியில் "பெண்" மற்றொரு போராட்டத்திற்கு தயாராகுவதுமாக உள்ளது.

நாவலின் தமிழாக்கம் நாவலை எந்தவொரு இடத்திலும் வாசகனை அன்னியப்படுத்திவிடாமல் அதே தளத்தில் அழைத்துச் செல்வது மொழி பெயர்ப்பாளனின் வெற்றியே எனலாம். பாத்திரங்களின் நிலைபாட்டில் குறியீட்டை உணர்த்திய ஆசிரியர் பாத்திரங்களின் இடுதலிலும் அதனைச் செய்திருப்பாரோ எனத் தெரிகின்றது. அதன் விளக்கத்தினை தந்திருந்தால் இன்னும் மொழிபெயர்ப்பு சிறப்பாகவே அமைந்திருக்கும்.

இலங்கை போராளிகளின் களத்தில் உருவானது நாவல்களின் சாயல் இந்நாவலில் தென்பட்டாலும், காலனித்துவம், பின்னையக் காலனியத்துவம் என்கிற மேலைநாட்டு இலக்கியக் கொள்கைகள் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள சூழலில் காலனியத்துவ எதிர்ப்புடைய இந்நாவல் அனைவரும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது சிலுவையில் தொங்கும் சாத்தான் அல்ல நம்மனதில் தொங்கும் சாத்தான்.

சந்தியாவின் முத்தம் (கவிதைகள்)


நேரடியாகப் பார்க்க முடியாததைக் கண்ணாடியில் பிரதிபலித்துக்காட்டும் ஜாலத்தை நிகழ்த்துகிறது கவிதை - ஆனந்த்

காதல், வேதனை, உறவு, தனிமை, பிரிவு, பிரிவாற்றாமை, மௌனம், துயரம், நிராசை, ஸ்பரிசம், கனவுகள், கண்ணீர்த்துளிகள், வண்ணங்கள், இருள், ஒளி, இசை, இரவு, பகல், கடல், நிலவு, மழை, ரகசியங்கள், முத்தங்கள், சாவு, பறவை, பூனை, சொல், பேரன்பு, நித்யகல்யாணிப்பூ, இவையெல்லாம் கவிதாவின் கவிதையுலகில் உலவும், அதைக் கட்டமைக்கும் விஷயங்கள். கருத்துகள் மிகக் குறைவாகவும் உணர்ச்சிகளும் உள்ளுணர்வுகளும் பெருமளவுக்கும் தொடர்ந்து ஊடாடுவது கவிதாவின் கவிதைகளின் பலம்.
இயல்பாகவே பெண்மையின் பார்வைக் கோணமும் அவ்வாறான பார்வை சார்ந்த உணர்ச்சிகளும் உணர்வுகளும் பெருமளவுக்கு இருந்தாலும் இவரது கவிதைகள் பெண் கவிதை - ஆண்கவிதை என்ற பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டவை.
சுகத்துக்கும் சோகத்துக்கும் இடையிலான இடைவெளியைக் காதலின் வேதனை போக்கிவிடும் அதிசயத்தை இவரது கவிதைகள் கொண்டாடுகின்றன. மென்னுணர்வுகள் மனத்தில் புரியும் ஜாலத்தை எளிமையாகவும் நேரடியாகவும் அதேசமயம் அவற்றின் வீரியம் குன்றாமலும் சொல்லும் லாகவம் கவிதாவுக்குக் கைவந்திருக்கிறது. வேதனை மிகுந்த கணங்களில் எங்கிருந்தோ வந்து கசியும் அன்பு, அல்லது அவ்வாறான அன்பின் நினைவு, அந்த வேதனையை ஆற்றிவிடும் அற்புதம் "சந்தியாவின் முத்தம்" கவிதையில் மண்விலக்கி வெளிவரும் துளிர்போல் வெளிப்பட்டிருக்கிறது.

"ஆனால் சந்தியா தந்த முத்தம் அவள் வாழ்க்கையின் மீது மூழ்க வியலாத ஒரு கப்பலைப்போல மிதந்துகொண்டேயிருக்கிறது"
என்னும் வரிகள் மிக முக்கியமானவை. அது மூழ்கிவிடும் கப்பலாக இருந்தால் என்ன ஆகியிருக்கும்? வேறொரு சமயம் வேதனையில் ஆழ்ந்துபோகும் தருணத்தில் அது கிடைக்காமல் மனத்தின் ஆழத்தில் மூழ்கிப்போயிருக்கும். ஆனால் அந்த ஒரு முத்தம் அவளுக்கு எந்நேரமும் கிடைத்துக்கொண்டிருக்கும் ஒரு ஆறுதலாக இருந்துகொண்டே இருக்கிறது. "மிதந்துகொண்டே இருக்கும் கப்பல்" என்னும் பிம்பம் மறதி மறுத்த நினைவாக, மனத்தின் ஆழ் நிலைகளுக்குள் காணாமல்போய் விடாத ஒரு வாக்காக, எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஆறுதலின் சின்னமாக நிலைத்துவிட்டிருக்கிறது.

"அபூர்வமான ஒரு தனிமையில் உட்கார்ந்துகொண்டிருந்தோம்"
என்று தொடங்கும் கவிதை, "நான் அவனுக்கு சாவைப் பரிசளிக்க விரும்புகிறேன் கத்தியின் மீது தலையணை குவளைத் தேநீரில் ஒரு துளி விஷம் மலைமுகட்டின் மீதொரு காதல் தருணம் அல்லது ஒரு முத்தத்தின் மூலமாவது" என்று முடிகிறது.
சந்தியாவின் முத்தம் என்றென்றும் கிட்டும் ஒரு ஆறுதலாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த முத்தம் சாவுக்கு ஒரு சாதனமாக இருக்கிறது. முத்தம் என்பதன் பல பரிமாணங்கள், அதன் முழுப் பிரிகையும் இவரது கவிதைகளில் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன.

கவிதாவின் கவிதைகளில் கனவுகள் இன்னொரு முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன. பச்சைக் கனவுகள், வெள்ளைக் கனவுகள், கறுப்புக் கனவுகள், இளஞ் சிவப்புக் கனவுகள், பாதி உடைந்த கனவுகள், விபரீதக் கனவுகள்.

ஒரு பை நிறையக் கனவுகளை வைத்துக்கொண்டு எதிர்ப்படும் எல்லோருக்கும் பரிசளித்துக்கொண்டிருந்தாள் அவள் என்று தொடங்கி, அபூர்வமாய்த் தோன்றும் கறுப்புக் கனவொன்றை தவறுதலாய் ஒரு குழந்தையிடம் அவள் கொடுத்த போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது கனவுகள் நிறைந்த அவளது பை களவு போனது அவள் காணாமல் போனாள் ஊர் இருண்டது என்று முடிகிறது.

குழந்தையிடம் கறுப்புக் கனவைத் தவறுதலாகக் கொடுத்தால் கனவுகளின் பை ஏன் களவுபோக வேண்டும்? அவள் ஏன் காணாமல்போக வேண்டும்? அதுமட்டுமின்றி ஊர் ஏன் இருண்டுபோக வேண்டும்? கறுப்புக் கனவு குழந்தையை என்ன செய்தது? கனவுகளின் பை இல்லாவிட்டால் அவள் இருக்க முடியாதா? கனவுகளின் வெளிப்பாடா அவள்? ஊரும் கனவுகளின் வெளித்தோற்றம்தானே?? அப்படியானால் ஊரும் அவளும் குழந்தைக்குள்தான் அடக்கமா?

கவிதாவின் கவிதைகளின் உறவும் அது தொடர்பான உசாவலும் அடிநாதமாகத் தொடர்ந்து இழைந்துகொண்டே வருகின்றன. உறவின் மறுபக்கம் இருப்பது யார் என்னும் கேள்வி எழுகிறது. குறிப்பிட்ட ஒரு நபரா அல்லது நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு "நீ"யா? குறிப்பிட்ட ஒரு நபரென்றால் அந்த நபரின் குணாதிசயங்களுக்கேற்ப உறவின் வாசனையும் இயல்பும் மாற்றம் கொள்ளாதா? ஆனால் இந்தக் கவிதைகளில் எந்த ஒரு நானும் எந்த ஒரு நீயும் கொள்ளும் உறவின் அடிப்படை இலக்கணங்களும் உள்ளியக்கங்களும் ஆழமாகப் பரிசீலிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நானுக்கும் மற்ற ஒவ்வொருவரும் ஒரு நீதான். இங்கே பரிசீலிக்கப்படுவது காதல் என்ற பெயரில் பொதுவாக நடந்துவரும் விளையாட்டுகள் அல்ல. அனைத்து மனித உறவுகளும் காதல் என்னும் பின்னணியில் பரிசீலிக்கப்படுவதாகத் தோன்றுகிறது.

இவரது கவிதைகளில் உறவு எவ்வாறு வண்ணம் மாறுகிறது என்று பார்ப்போம். கூடவே இரவின் நிறமும் பகலின் நிறமும்.
"நீ வரும் வரை என் உறவுகளின் நிறம் கறுப்பாய்த்தான் இருந்தது எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை தனிமையின் அரண்களை மீறிய தேவதூதனையொத்த உனது வருகை
எனது இரவுகளுக்கு வெளிர்நீல நிறத்தைத் தந்தது உனது வருகை
எனது இரவுகளுக்கு நீ தந்தாய் இரண்டு வெண்ணிறச் சிறகுகளை
நான் பறக்க யத்தனித்தபோது நீ விலகிச் சென்றாய்
ஒரு பைத்தியக்காரனின் கனவைப்போல எல்லாம் முடிந்தது
எனது முந்தைய இரவுகளைப் போலவே இப்போது
என் பகல்களும் கறுப்பாய்த் தானிருக்கின்றன"
தனியொரு உயிரின் வாழ்வனுபவத்தில் ஏற்படும் நிகழ்வுகள், உயிரனுபவத்தின் ஆழங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய சாத்தியத்தைத் தம்முள் கொண்டிருக்கின்றன. கவிதை மற்றும் பிற கலைகள் சார்ந்த முறைபாடுகள் இந்தச் சாத்தியத்தை உண்மையான அனுபவமாக ஆக்கக்கூடிய திறன் கொண்டவை. இந்த அனுபவம் இங்கே பல கவிதைகளில் வெளியாகியிருக்கிறது. தனிமை என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போம். கவிதாவின் கவிதை உசாவலில் தனிமை முக்கியமானதொரு விஷயம். இந்த வரிகளைப் பாருங்கள்.

ஏதோ ஒன்று எதற்காகவோ என்னை அடையும்போது நான் அதை தனிமை என்னும் சொல்லால் குறிப்பிட்டுச் சொல்லலாம்தான் ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது அது தனிமை அல்ல அது நான்தான்.

பொதுவாகத் தனிமை என்பதைத் தன்னை ஆட்கொள்ளும் ஒரு உணர்வனுபவமாகத்தான் கருதுகிறோம். ஆனால் பிறர் யாருமற்ற நிலையில் தான் மட்டும் இருக்கும்போது தன்னையேதான் தனிமை என்று பெயரிட்டு அழைத்துக்கொள்கிறோம் என்பது உண்மைதானோ "நான்" என்னும் உள்ளுணர்வுதானே புறவயப்பட்டு விரிந்து நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. பெருநகரத்தின் ஆயிரங்கால் மண்டபத்தின்...எனத் தொடங்கும் கவிதை மிகப் பெரியதொரு காலத் திரையின் பின்னணியில் வரையப்பட்டிருக்கும் ஒரு சித்திரமாக விரிகிறது. மனிதப் பிரக்ஞையின் ஆழ்தளப் பிம்பங்கள் தனிமனத்தின் வழியாக வெளிப்பட நேர்ந்தாலும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவை. அங்கே காலம் காலமாக உறைந்து நிற்கும் அந்த பிம்பங்கள் ஒரு பொருளில் உயிருள்ளவை. காலத்துக்கு அப்பாற்பட்டவை. எந்த ஒரு நேரத்திலும் ஒரு பிம்பம் உயிரோட்டம் கொண்டு மேல் மனத்தை - மனிதனை - தீண்ட முடியும். தீண்டிவிட்டுப் போய் மறுபடி உறைந்து நிற்கக்கூடும். அவ்வாறான தீண்டுதல் நிகழும்போது மேல்மனம் மிகவும் வலிமையான பாதிப்புக்கு உள்ளாக முடியும். நிரந்தரமான மாற்றங்களோ அல்லது நீண்ட கால பாதிப்புகளோ நேர முடியும். இவ்வாறான ஒரு முறைபாடு பற்றி இந்தக் கவிதை பேசுகிறது.

இந்தத் தொகுப்பில் சில நீண்ட கவிதைகள் இருக்கின்றன. அவை கவிதாவின் அகவுலகம் எந்த அளவுக்குச் செறிவு நிறைந்ததாக இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன.
கவிதாவின் உலகம் எத்தன்மையது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டும் கவிதை இதோ:
எல்லாத் திசைகளிலும் பறந்து பார்க்கிறது இந்த சிறு பறவை வானத்தின் விரிவு பார்த்து வதைபடும் அதன் சிறகுகள்
ஜன்னல் வழி துண்டு வானம் கொடுத்து அதனிடம் கேட்கிறாய் போதுமா என்று
கடல் கொள்ளும் பெருந்தாகம் தவிர சில மழைத்துளிகள் எப்படிப் போதும்?

நேரடியாகப் பார்க்க முடியாததைக் கண்ணாடியில் பிரதிபலித்துக்காட்டும் ஜாலத்தை நிகழ்த்துகிறது கவிதை. இவர் கவிதைகள் இம்மாதிரியான கண்ணாடியாகத் திகழ்கின்றன. உயிரோட்டமுள்ள பல சித்திரங்களைக் காட்டுகின்றன. இந்தக் கவிதைகளின் பின்னால் தெரியும் அகன்றதொரு சித்திரத்தைப் பார்க்கும்போது, கவிதாவிடமிருந்து மேலும் நல்ல கவிதைகள் தொடர்ந்து வருவது நிச்சயமான ஒன்றாகத் தோன்றுகிறது.

(சந்தியாவின் முத்தம் (கவிதைகள்), ஆசிரியர்: கவிதா, பக்: 64, விலை: ரூ. 45, முதற்பதிப்பு: ஏப்ரல் 2008. வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001)

பிறகொரு இரவு (சிறுகதை)


உலகின் மகத்தான மனிதனாக கருதப்படும் காந்தியை அவர் தன் குருவாகக் கருதி வந்த தல்ஸ்தோயோடு ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளார் - கே.என். செந்தில்

நேற்றைய தத்துவங்களால் கட்டப்பட்ட கற்சுவர்க் கோட்டைகள் இன்றைய கேள்விகளுக்கும் தர்க்கத்திற்கும் ஈடுகொடுக்க அல்லது எதிர்கொள்ளத் திராணியற்றுச் சரிந்துகொண்டிருக்கின்றன. வரலாற்றின் நிலைகூட ஏறக்குறைய அதுதான். ஆனால் உருவாகி வந்த காலந்தொட்டே தன் மீது அழிவின் சிறு நிழலைக்கூட அனுமதிக்காத ஆற்றல் இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு. தொலைந்து போன பலநூறு ஏடுகளுக்குப் பிறகும் எரிந்துபோன, எரிக்கப்பட்ட எண்ணற்ற பிரதிகளுக்கு அப்பாலும், மாறாத ஒளியோடு மேலெழுந்து வருவது அகத்தை ஆதார சுருதியாக அது கொண்டிருப்பதாலேயே. ஓயாமல் அழைக்கும் மர்மக் குரலொன்றுக்கு (ஒரு குரல்தானா?) தன்னைப் பணயம்வைத்துப் படைப்பெனும் பெருங்கடல் மீது உள்ளுணர்வைத் திசையெனக் கொண்டு படைப்பாளி பயணமாகிறான். கரையில் நிற்பவர்கள் பாக்கியசாலிகள் அவர்களுக்குப் புயலில்லை, அச்சமில்லை, தத்தளிப்புமில்லை எழுத்தின் சுதந்திரம் ஏறக்குறைய பறத்தலின் சுதந்திரம் போன்றதுதான். பல சமயங்களில் இரை பொறுக்க மண்ணிற்கு வர வேண்டுமென்ற எளிய உண்மைகூட இந்தப் பறவைகளுக்கு மறந்து போகின்றன. தன்னை அழிக்கும் என நன்கு உணர்ந்தும் அது புதிய உலகைக் காணும் வேட்கையில் தன் பறத்தலை மேலும் முடுக்குகிறது. இவ்வாறான கலைஞர்கள்தான் பேரிலக்கியங்கள் என்றும் கிளாசிக்குகள் என்றும் கொண்டாடுகிற ஆக்கங்களை உலகிற்குத் தந்திருக்கிறார்கள்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நான்கு கதைகளிலும் பெரும்பான்மையான நவீன புனைகதைகளைப் போலவே தனிமனிதனை முன்னிறுத்தி அவனது அகநெருக்கடிகளில் வேர் கொண்டுள்ளது. சிறுகதையின் வடிவம் மற்றும் வரையறை சார்ந்த தொழில்நுட்ப நியதிகள் இந்த நெடுங்கதைகளுக்குப் பொருந்த மாட்டா. மன அழுத்தத்திற்கும் மனப்பிறழ்வுக்கும் இடையில் அலைவுறும் ஒரு மனிதன்மீது எழுதப்பட்ட கதை "சிகரெட் துண்டுகளும் உள்ளாடைகளும்". இக்கதையில் பயின்று வரும் நவீன மொழி கூர்மையானது. பிளவுபட்ட நிலைகொண்ட இம்மனத்தின் மீது முன்னோடியின் நிழல் கண நேரத்தில் விழுந்து மறைகிறது எனினும் அதன் எதிர்த் திசையில் இக்கதை இயங்குகிறது. நகுலனின் எழுத்துக்களில் இது நிகழும்போது அது போதத்திற்கும் அபோதத்திற்கும் (துரைசாமியா? நவீனனா?) இடையில் ஊசலாடும் மனமாக இருக்கிறது. எப்போதும் அது உணர்ச்சியின் தளத்திலிருந்து உருவாகக் கூடியது. ஆனால் தேவிபாரதியின் இக் கதையின் இறுதி வாக்கியம்வரை அவன் விழிப்பு நிலையிலேயே இருக்கிறான். சந்தேகத்தின் நஞ்சும் அதன் வீரியமும் இக்கதையில் மூர்க்கமாக சொல்லப்படுகிறது. அறிவு நித்ய சகாவாக அவனுடன் எப்போதும் இருக்கிறது. எனினும் அதைத் தேவைக்கதிகமாகப் பிரயோகப்படுத்தி விட்டாரோ எனும் ஐயமும் எழுகிறது. கவிஞனை, தத்துவவாதியைப் பற்றி அவர் கூறியிருக்கும் ஏராளமான வரிகள் இக் கதைக்கு வெளியிலேயே நிற்கின்றன. உதாரணமாக தல்ஸ்தோய் காந்தி பற்றிய கதையில் (பிறகொரு இரவு) தவிர்க்க முடியாதவராக இருக்கிறாரென்றால் இக்கதைக்கு அன்னியராகவே உள்ளார்.

தமிழில் குப்பை போல் குவிந்து கிடக்கும் த்ரில்லர் கதைகளைத் தீவிரமான மொழியால் மறுதலிக்கிறது "ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்". இக்கதையின் பிரதானக் கருப்பொருளும்கூடக் கொலைதான். இந்த இரண்டு கதைகளிலும் களன் எந்த மனிதனாலும் தப்பிச் செல்ல இயலாத காமமே. ஒன்றை ஆணின் மனமும் மூளையும் ஒன்றிணைந்து நடத்திச் செல்ல, பிறிதொன்றில் பெண்ணின் கண்களின் வழி ஒரு கொலையை முன்வைத்து அவளது அக ஓட்டம் பதற்றமான சொற்களால் தீட்டிக் காட்டப்பட்டுள்ளது. "ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்" கதையின் பலமெனக் காலம் கலைக்கப்பட்டு நிகழ்வுகளின் மீது அது ஆதிக்கம் செலுத்துவதைக் கூறலாம். இதைப் பிரக்ஞைப்பூர்வமாக தேவிபாரதி கையாண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. கணவன் பரிசளித்த கைக்கடிகாரத்தை அவன் முன்னேயே வீசி உடைக்கும் பெண்ணே, அக்கணவனைக் கொன்ற பிறகு- இரகசிய உறவின் பொருட்டு- மேற்கொள்ளும் காரியங்கள் திகைப்பூட்டுபவையாக உள்ளன. விஸ்வமும் அருணும் இக்கதைக்கு கருவிகளாக மட்டுமே உள்ளனர். அருணுடனான அவளது இரசிய உறவின் தொடக்கப் புள்ளிகள் கூறப்படாமலேயே விடப்பட்டுள்ளன. கணவனைக் கொல்லும் அளவு பிணைப்புக் கொண்ட ஓர் உறவைப் பற்றிய ஆரம்பச் சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கலாமோ? என்ற வினாவைத் தவிர்க்க முடியவில்லை.

தொகுப்பின் சிறந்த புனைகதையென "பிறகொரு இரவு" கதையைச் சுட்டுவேன். உலகின் மகத்தான மனிதனாக - எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாலும் - கருதப்படும் காந்தியை அவர் தன் குருவாகக் கருதி வந்த தல்ஸ்தோயோடு ஒப்புமைப்படுத்திக் கூறப்பட்டுள்ள இக் கதையிலேயே தேவிபாரதியின் ஆளுமை வெளிப்பட்டுள்ளது. பகவதிச் சரண்களால் நிரம்பிக் கிடக்கும் சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்றாம் வகுப்பு இரயில் பெட்டியில் அவமானப்படுத்தப்படும்போதும், காவலர்களால் நடுநிசியில் மறித்து வினவப்படும்போதும் அவர்கள் எவருக்கும் காந்தியின் இருப்பு ஒரு கேலிக்குரியதாக, தேவையற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அது ஒரு குறியீடு மாறிக்கொண்டேயிருக்கும் நவீன உலகம் காந்தியின் சத்தியத்தைத் தன் புறங்கையால் ஒதுக்கித் தள்ளும். மேலும் அது பகவதி சரண்களின் பாசாங்குகளால் தன் நீதி சார்ந்த விவாதங்களை விட்டொழிக்கக் கற்றுக் கொள்ளும். அசோகமித்திரனின் "காந்தி" கதைக்குப் பிறகு அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ள சிறந்த புனைகதை இதுவெனத் தயக்கமின்றிக் கூறலாம். இக்கதை ஆக்கத்தின்போது உருவான படைப்பு மனநிலையைப் பின்தொடர்ந்து செல்வதன் மூலமே தேவிபாரதி தன் படைப்பாக்கத்தின் அடுத்த கட்ட நகர்வையும் வளர்ச்சியையும் கண்டடைவார் எனத் தோன்றுகிறது. காப்பியத்தின் சிறுபகுதியொன்றைக் கையாண்டிருக்கும் "ஊழி" பிற மூன்று கதைகளைக் காட்டிலும் சற்றுக் கீழேயே உள்ளது. இதிலும் அவர் சில இடங்களில் மனிதனின் கீழ்மையைத் தொட்டுணர்த்தத் தவறவில்லை.

கவிஞர் சுகுமாரனின் முன்னுரை இந்த நெடுங்கதைகளின் தொகுப்புக்கு மிக நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. அதில் அவர் பல்வேறு புள்ளிகளை குறிப்புணர்த்திச் சென்றாலும் "அறச்சிக்கல் மீதான படைப்பியல் விவாதம்" என்னும் வரியிலிருந்து இத்தொகுப்பை மீள்வாசிப்பு செய்கையில் அது இப்பிரதிக்குக் கூடுதல் வெளிச்சத்தைத் தருகிறது.

(பிறகொரு இரவு (சிறுகதை), ஆசிரியர்: தேவிபாரதி, பக்: 144, விலை: ரூ. 95, முதற்பதிப்பு: ஜூலை 2009, வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001)

யுத்தங்களுக்கிடையில்... (நாவல்)



வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை 600 017 பக்கங்கள்: 160 விலை: ரூ. 60

கதைகளில் காலம், இடம் ஆகியன அழுத்தமாகப் பதிக்கப்பட்டாலும் அவற்றைக் கடந்த மனித வாழ்க்கைதான் முன்னுக்கு நிற்கிறது - அம்சன் குமார்

நாவல் என்பது வெறும் கதையல்ல. அது கதையையும் சொல்கிற அனேக ஊடகங்களில் ஒன்று. அவ்வூடகத்தின் சிறப்பு நாவலைப் படித்துவிட்டு நாவலைப் போன்றே ஒருவர் கதையைச் சொல்லிவிட முடியாது என்பதில் உள்ளது. அசோகமித்திரனின் நாவல்கள் இத்தகைய சிறப்பியல்பை நமக்கு உடனே ஞாபகப்படுத்துகிற வகையில் அமைந்துள்ளன.

அவரது சமீபத்தியதும் எட்டாம் நாவலுமான யுத்தங்களுக்கிடையில் பின்னிப்பிணைந்த உறவுக்காரர்களின் பார்வைகள், அனுபவங்கள் ஆகியனவற்றை முன்வைத்து நகர்கிறது. உள்ளடக்கம் உருவத்தைத் தீர்மானிக்கிறபடியால் நாவல் ஊடுபாவுகள் மிகுந்த ஹைபர்லிங் உத்தியைக் கொண்டுள்ளது. ஹைபர்லிங் என்பது உண்மையில் உத்தி அல்ல. அதுவும் ஒரு புனைகதை வகை, கதையாடல். ஹைபர்லிங் என்கிற சொல்லாக்கம் கடந்த ஐந்து வருடங்களாகத்தான் எல்லோரது கவனத்தையும் பெற்றுள்ளது. அது ஒரு இணைகோட்டில் சந்தித்து மீண்டும் தன்வழியே பயணித்துச் செல்கிற கதாபாத்திரங்கள், கதைப் போக்குகள் ஆகியவற்றின் கோவையைக் குறிக்கின்றது. சமீபத்திய லத்தின் அமெரிக்கப் படங்கள் பல இக்கதையாடலைக் கொண்டுள்ளன. அமரோஸ் பெர்ரொஸ் (தமிழில் ஆயுத எழுத்து) ஒரு உதாரணம். திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் இக்கதையாடல் புனைகதைகளுக்கு ஒன்றும் புதிதல்ல. ஜுலியா கொர்தசாரின் ஹாப்ஸ்காட்ச், ஜீன் பால் சார்த்தின் ரிப்ரீவ் ஆகியன இத்தகைய கதையாடலைக் கொண்டுள்ள நாவல்கள். 1967இல் தீபம் இதழில் தொடராக வெளிவந்த அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் இதைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. கரைந்த நிழல்களைவிடவும் முழுமையாகவும் வெற்றிகரமாகவும் யுத்தங்களுக்கிடையில் நாவல் ஹைபர்லிங்கை பயன்படுத்தியுள்ளது. இதன் சில பகுதிகள் வார்த்தை இதழில் வெளிவந்தன.

பாரம்பரியமான கதைசொல்லல் இல்லாது போவதால் இவ்வகை நாவல்கள் வாசகனின் முயற்சியைக் கூடுதலாக வேண்டுகிறது. இவ்வகை நாவல் எழுதுபவர்கள் இந்தச் சிக்கலிலிருந்து வாசகன் வெளிவரவும் சில துப்புகள் தருவார்கள். அசோகமித்திரன் சில வர்ணனைகளைத் திரும்பத் திரும்பத் தருகிறார். ஆனால் கூறியது கூறல் என்றதாக இல்லாத வண்ணம் அவை ஒவ்வொரு முறையும் கதையின் வேறிடத்திற்கு வாசகனை அழைத்துச் செல்கின்றது. ஒரே மூச்சில் நாவலைப் படித்துவிடலாம். 155 பக்கங்கள். அசோகமித்திரனின் படைப்புகளை இருமுறை படிப்பதன் அவசியம் பற்றி ஏற்கனவே பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இது கட்டாயம் இருமுறை படித்தாக வேண்டிய நாவல். எனவே மறுமூச்சு எடுத்து இரண்டாம் முறையாக நாவலை உடனே படித்தால் புரிதல் எளிதாவதோடு மட்டுமின்றிப் படிப்பதன் சுவாரஸ்யமும் கூடும்.

நாவலின் கதை நிகழ்வுகளை ஒரு நேர்க்கோட்டில் வரிசைப்படுத்தினால் அது இவ்வாறு இருக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தொடங்கி இரண்டாம் உலகப் போர் வரையிலான காலத்தில் நாவல் நிகழ்கிறது. மாயவரம் பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு நடத்தும் வாத்தியார் தனது நாற்பதாம் வயதில் இறந்துபோகிறார். அவருக்கு மொத்தம் பதினாறு குழந்தைகள். அவர்களில் உயிரோடு இருப்பவர்கள் எட்டு பேர். ஐந்து ஆண்கள். ரங்கமணி, சாம்பசிவன், ராமேசன், பாலு, சங்கரன். மூன்று பெண்கள். முதல் இரண்டு பெண்களின் பெயர்கள் தரப்படவில்லை. கடைசிப் பெண் சீதா. மூத்தவளைத் தவிர மற்ற இருவரும் விதவைகள்.
முதல் உலகப் போர் முடிந்திருக்கிறது. வாத்தியாரின் முதல் மகன் ரங்கமணி சர்க்கரை நோய் வந்து ஒரு காலை இழந்த பிறகு இறந்து போகிறான். பி.ஏ. படித்த அவனது தம்பி சாம்பசிவன் தவிர அக்குடும்பத்தில் யாருமே சரியாகப் படிக்கவில்லை. சாம்பசிவத்திற்குப் போலீஸ் உத்தியோகம். அவன் மீது உத்தியோகத்தில் அவப்பெயர் ஏற்படவே கவரிமான் போல் உயிரைவிட்டு விடுகிறான். ராமேசனுக்கு நிஜாம் சமஸ்தானத்தில் ரயில்வேயில் வேலை கிடைக்கிறது. அவன் தனது தம்பிகளான பாலு, சங்கரன் ஆகியோரை அங்கு அழைத்துவந்து வேலை வாங்கித் தருகிறான். அவர்களது வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம். ராமேசனின் முதல் மகன் ஸ்ரீவத்ஸன் அகால மரணமடைகிறான். ராமேசனுக்கு மேலும் மூன்று பெண்கள். ஒரு பையன் சீனு.
பாலுவுக்கு ட்ராலியில் சென்று கைகாட்டிகளைப் பராமரிக்கும் அலைச்சல் மிகுந்த வேலை. அவனுக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகள். ஆறு ஆண்டுகள் கழித்து அவனுக்குப் பதவி உயர்வு கிடைத்து செகந்திராபாத்திலேயே பணி மாற்றலாகிறது. சங்கரனது குடும்ப வாழ்வில் சறுக்கல்கள். முதல் மனைவி பவானி இறந்துவிட அவன் அவளது அக்கா மகளான சுந்தரியை இரண்டாம் தாரமாக மணந்துகொள்கிறான். ஆனால் மூன்று சகோதரர்களும் கெட்டிக்காரர்கள். வந்த சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்தி அதில் தங்களுக்கேயான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். சகோதரர்கள் விட்டுப்போன தந்தையின் சிராத்தத்தை ஒன்றுகூடி புது இடத்தில் செய்கிறார்கள். அவர்களுடைய மனைவிமார்களும் மொழி தெரியாவிட்டாலும் சமயோசிதத்துடன் நடந்துகொள்கிறார்கள். ராமேசனின் மனைவி லட்சுமிக்குத் தையல் மிஷனை ஓட்டவும் தெரியும்.

ஆண்கள் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்வதைப் போல் பெண்கள் இரண்டாம் தாரமாகவும் வாழ்க்கைப்படுகிறார்கள். சீதா, சீதாவின் அக்கா இருவரும் ஐம்பது வயதுக்காரர்களுக்கு இரண்டாம் தாரங்கள். சீதாவின் கணவன் ஒரு பணக்கார வக்கீல். முதல் தாரத்துப் பையன் சீதாவை அவன் அப்பா மணந்தது பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறியவன்தான். கடைசிவரை அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

நாவலில் சீதாவிற்குத்தான் அதிக இடம். அவள் தனது கணவனின் சொத்துகளைத் திறமையாக நிர்வகிக்கிறாள். பணக்கார விதவையான அவள் வீட்டுக்குச் சகோதரர்களும் வந்து தங்கிப் போகிறார்கள். தனக்குத் துணையாக இருக்கட்டும் என்று கருதி, தன் அண்ணன் ரங்கமணியின் மகன் ராமசுப்புவை அழைக்கிறாள். அவனுக்குப் போதிய சாமர்த்தியம் இல்லாவிட்டாலும் அவனை அரவணைத்து ஆளாக்குகிறாள். விசாலாட்சி என்கிற பெண்ணை மணமுடித்து வைக்கிறாள். பண்டாபீசில் வேலையும் வாங்கித் தருகிறாள். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் ராம சுப்புவிற்குச் சீதாவின் சித்தப்பா மகன் வைதுவின் கூடா சகவாசம் ஏற்படுகிறது. அவனைப் பெரிதாக நம்பியிருந்த சீதா மனம் துவண்டு இறந்துபோகிறாள். சீதாவின் பணத்தை எடுத்துக்கொண்டு போய் வைதுவுடன் மெட்ராஸில் சுருட்டு வியாபாரம் செய்கிறேன் என்று எல்லாவற்றையும் இழந்துவிட்டு மீண்டும் பண்டாபீசில் ப்யூனாக வேலை பார்க்கத் தொடங்குகிறான் ராமசுப்பு.

சாம்பசிவனின் மூத்த மகன் ராகவன் தன் தாய் தந்தையரைப் போல் நல்ல சிவப்பு. அவனது தாய்மாமன் கல்யாணச் சந்தையில் விலை போகாத கறுப்பான தன் மகள் பார்வதியை மணமுடித்து வைத்துவிடுகிறார். ராகவன், தன்னுடைய அம்மா, தம்பி, பார்வதி எல்லோரையும் பம்பாய் அழைத்துச் சென்று வாழ்கிறான். மோட்டார் மெக்கானிக்கான அவன் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்குப் பம்பாய் அண்ணாவாகத் தெரியவருகிறான். ரங்கமணி மற்றும் அவனது உடன்பிறப்புகளின் தாய் எவரிடமும் நல்ல பெயர் வாங்கவில்லை. மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டே வாழ்ந்து உடம்புக்கு முடியாமல் ஆனால் கடைசிவரை தன் சொந்த வீட்டிலேயே வாழ்ந்து இறக்கிறாள்.

எஞ்சியுள்ள சகோதர சகோதரிகள் அவர்களுடைய குடும்பங்களுடன் ஒன்றுகூடும் மகிழ்வான வைபவமும் நடக்கிறது. போலகத்தில் வாழ்க்கைப்பட்ட மூத்த சகோதரியின் கணவர் ராஜப்பையரின் சஷ்டியப்த பூர்த்திக்கு எல்லோரும் கூடுகிறார்கள். இதை முன்னின்று நடத்துவது ராமசுப்பு என்று அறியும்போது அவர்களுக்கு வியப்பு கூடுகிறது. எவ்வளவோ இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் நடுவே அனைவரின் ஒன்றுகூடல் நிகழ்கிறது. அதன் பின் இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் தமிழ்நாட்டையும் நிஜாமின் சமஸ்தானத்தையும் உலுக்குகின்றன.

அசோகமித்திரன் முன்னுரையில் கூறுவதைப் போல் இது பிழைத்திருத்தல் பற்றிய நாவல். பிழைப்பும் ஒரு யுத்தம். அதற்கிடையே மனிதர்கள் எத்தன்மை வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பதை நாவல் பரிசீலிக்கிறது. கல்வியை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு கீழ் மத்திய தர பிராமணக் குடும்பம். சிலரால் கல்வியைப் பெற முடியவில்லை. சிலரால் கற்க இயலவில்லை. நூறு ரூபாய்கூட இயலாத நிலையில் ராகவனால் பட்டப்படிப்பு படிக்க முடியாது மெக்கானிக்காக ஆகிவிடுகிறான். சாம்பசிவன் பி.ஏ. படித்து முடிப்பதற்குள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வீட்டில் அவர்கள் இலைபோடும்வரை காத்திருந்து உண்ண வேண்டியிருந்தது. மற்றவர்களை எப்படியாவது கரையேற்றிவிட வேண்டும் என்கிற ஒரு பொறுப்புணர்வு பிழைப்பு தேடுகிறபோதே கூட வருகிறது. ராமேசன் தன் தம்பிகளையெல்லாம் செகந்திராபாத்துக்கு அழைத்து ரயில்வேயில் வேலை வாங்கிக் கொடுத்துவிடுகிறான். மோழை என்று சொல்லப்பட்ட ரங்கமணி தனது தம்பிக்கு வேலையும் கல்யாணமும் நேர்வதற்குக் காரணமாகிறான். ராகவன் தன் தம்பியைப் பம்பாய்க்கு அழைத்துச் செல்லும்போதே அவனை எப்படி உற்சாகத்துடன் வைத்திருப்பது என்றும் யோசிக்கத் தொடங்குகிறான். சீதா ராமசுப்புவுக்கு வேலை ஏற்பாடு செய்து கல்யாணமும் செய்விக்கிறாள். தான் நினைத்தது சரியாக அமையவில்லை என்னும்போது ஜன்னியை வரவழைத்துத் தற்கொலை செய்துகொள்கிறாள். சங்கரன் தனது முதல் தாரத்து குழந்தைகளைத் தன்னோடு வைத்துப் பராமரிக்க முடியாதது கண்டு துயரத்தில் ஆழ்கிறான்.
வாத்தியாரின் மனைவிதான் அனைவராலும் விரும்பப்படாதவள். ஆனாலும் அவள் என்னதான் செய்வாள் என்று அவளுடைய நிலையில் தங்களை வைத்துப் பார்க்க அவளது குழந்தைகள் தவறுவது இல்லை. செகந்திராபாத் பால்காரனின் மனைவி ஜானகிபாயிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் சிற்றுண்டி நிலைய மானேஜர்வரை பல்வேறு மனிதர்கள் மற்றவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவிக்கொண்டே இருக்கிறார்கள். விதவையான சீதா தனது கணவனின் சொத்தை அவனது முதல் மனைவியின் மகனுக்கே திருப்பித் தந்துவிட வேண்டும் என்று நினைத்து வாழ்கிறாள். பிழைப்பைத் தேடும் அனைவரிடமும் ஒரு லட்சிய வேகமும் குடிகொண்டிருக்கிறது. வாடகை வீட்டிலிருக்கும் தேவதாசிகள் வீட்டுக்காரர்களிடம் எத்தனை கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள்! ராமேசனைப் போல் தனது குழந்தையையும் இழந்துவிட்ட வெள்ளைக்கார மேலதிகாரி அவனைக் கட்டிக்கொண்டு அழுவது பொதுவான மனிதப் பண்பின் அடையாளம்.

அசோகமித்திரனின் கதைகளில் காலம், இடம் ஆகியன அழுத்தமாகப் பதிக்கப்பட்டாலும் அவற்றைக் கடந்த மனித வாழ்க்கைதான் முன்னுக்கு நிற்கும். இதனாலேயே அவரது கதைகள் மூப்படைய மறுக்கின்றன. அவரது நகைச்சுவை தனித்தன்மை பெற்றது.

"ரயில் நிலையம் அருகே ஒரு தர்மச் சத்திரம். பாஷையே புரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது. அந்தச் சத்திரத்தில் ஆறு நாட்களுக்குமேல் தங்க விடமாட்டார்கள்".
"ராமசுப்பு பெண்ணைப் பார்த்தவன் வாய் மூடாதபடி இருந்தான். யாருக்கும் அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. ஆனால் அவளை மணம் செய்விக்கவில்லை என்றால் பட்டினி கிடந்து சாவேன் என்று சொல்லி ஒருவேளை சாப்பிடாமலும் இருந்தான். இன்னொரு வேளைக்குக் காத்திருக்கலாம். அதற்குள் சம்மதம் என்று சொல்லியனுப்பிவிட்டார்கள்".

இருண்மையான நகைச்சுவைக்கு அவர் தன்னிகரில்லாதவர்.
"சிவனே வந்து கைலாசத்திற்குக் கூப்பிட்டாலும் அவருக்கு நடக்கக் கால் இல்லை".
சிக்கனம் மிகுந்த அவரது சொல்நடை எவ்விதத் தயாரிப்புமின்றி வாசகனுக்கு உடனேயே பதைபதைப்பினையும் தர வல்லது.
"ஆறு வயதுப் பையன் நெருப்புச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சவ ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினான்".
"பதினேழு வயதில் தலை மொட்டை அடிக்கப்பட்டு உடுத்த நார்மடி. அவள் தலையை மழித்தவருக்குக்கூட அழுகை வந்திருக்கும்".
அவரது சற்றும் குறையாத வண்ணங்களுடன் வெளிவந்துள்ள நாவல் யுத்தங்களுக்கிடையில்.

(யுத்தங்களுக்கிடையில்... (நாவல்), ஆசிரியர்: அசோகமித்திரன், பக்: 160, விலை: ரூ. 60, முதல் பதிப்பு: பிப்ரவரி 2010, வெளியீடு: நர்மதா பதிப்பகம் 10, நானா தெரு, தி.நகர், சென்னை 600 017)

Saturday, July 24, 2010

நாட்டுப்புறவியல்-வீச்சும்,பரிணாமங்களும்



நாட்டுப்புறவியல் பல்கலைகழக பாடத்திட்டமாக வைக்கப்பட்டதிலிருந்து மைய முக்கியத்துவம் பெற்று வரும் வேளையில் நாட்டுபுறவியல் குறித்த நம்மவர்களின் ஆய்வும் நோக்கும் சரியானதாக இருந்திருக்கிறதா என்பதை இத்தருணத்தில் ஆய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.'நாட்டுப்புறவியல்' என்னும் நூலில், தமிழில் உள்ள இணையப்பக்கங்கள் எவ்வாறு தமிழ் நாட்டாரின் வாழ்வியலையும் நாநவில் படைப்பாக்கங்களையும் அயல்மொழிகளில் உள்ளவைபோல உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

"இணையம் வழியாக இன்று உலக அறிஞர்களின் அறிவுத்தொகுப்புகளை உற்று நோக்கிக் கற்கும்பொழுது மேல்நாட்டினரின் வளர்ந்த நிலையும் நாம் இன்னும் வளர்ச்சி நோக்கி நெடுந்தூரம் செல்ல வேண்டி உள்ளதும் புலப்படுகிறது. நாட்டுப்புறவியல் என்று சொல்லப்படும் 'FOLKLORE' எனும் துறை சார்ந்த படிப்பின் தேவை இந்திய அளவில் இன்னும் முழுமையாக உணரப்பட்டதாகத் தெரியவில்லை. 'FRRC,' 'IFSC,' 'FOSSILS' போன்று அங்கொன்றும், இங்கொன்றும் ஆய்வு நிறுவனங்கள் உள்ளனவே தவிர மேல்நாட்டை நோக்க, செய்யத்தகுந்த ஆய்வுக்களங்களைக் கொண்டிருக்கும் நம் நாட்டில் இத்துறை மிகுந்த வளர்ச்சி பெற வேண்டி உள்ளது. பழுத்த தாள்களில் அச்சடித்து அகம் மகிழும் நம் மனப்போக்கினை மாற்றிக் கொண்டு இணையம் வழியாகச் செய்திகளை வெளி உலகிற்கு மின்மொழிகளில் தெரிவிக்க வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம். அதுபோல் தொன்மரபு பின்பற்றும் மக்கள் வாழும் காலத்திலேயே நம் பழைய அடையாளங்களைத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும்.

தமிழில் உள்ள இணையப் பக்கங்களை நோக்கும் பொழுது உள்ளூர்ச் செய்திகளின் தரத்தில் நம் இணையப் பக்கங்கள் உள்ளனவே தவிர, உலகத் தரத்தில் நம் பக்கங்களை வடிவமைக்க வேண்டி உள்ளது. உலகின் எந்த முனையில் உள்ளவரும் நம் பழமரபுச் செல்வங்கள் பற்றிய விரிவான பரந்த செய்திகளை அறியும் வண்ணம் நம் நாடு முழுவதும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். நம் நாட்டின் செய்தியைச் சொல்லும் எந்த இணையப் பக்க முகப்பிலும் பழமரபுச் செல்வங்கள் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் தொடர்புகள் (Links) இணைக்கப்பட வேண்டும். அரசு இணையப் பக்கங்களில் சுற்றுலா, கோயில், பார்க்கும் இடங்கள், மருத்துவம், திரைச்செய்தி, தங்கும் இடம் பற்றிய குறிப்புகள் இருப்பது போலவே மரபுச் செல்வங்கள் (Heritage) அல்லது 'Folklore' என்னும் செய்திப் பகுதி இணைக்கப் பெறல் வேண்டும். அமெரிக்க நாட்டுப்புறவியல் கழக இணையப் பக்கத்திற்குச் சென்றால் அமெரிக்காவில் உள்ள நாட்டுப்புறவியல் கல்விக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், படிப்பு முறைகள், படிக்கும் நேரம், கட்டணம், ஆசிரியர்கள், கட்டட அமைப்பு, முன்னோடி ஆய்வுகள், நூலகம் பற்றிய குறிப்புகள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. அதுபோல் நம் இணைய அமைப்புகள் அனைத்திலும் அறியத்தகுந்த இணையத் தொகுப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக நாட்டுப்புறவியல் துறை சார்ந்த ஆய்வாளர்களை அடையாளப் படுத்தும் கட்டுரைகள், படங்கள், மின்முகவரிகள், தொலைபேசி எண்கள், இணைய முகவரிகள் யாவும் நம் ஆய்வு முயற்சிகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்" என்று தன் நாட்டத்தை வெளிப்படுத்தும் இளங்கோவன், நாட்டுப்புறவியல் துறையில் அரும்பாடுபட்டு உழைத்து மிகச் சிறந்த முடிபுகளைத் தம் ஆய்விதழான 'ஆராய்ச்சி''யில் கொண்டுவந்த அறிஞர் நா. வானமாமலை முதலான அறிஞர் பெருமக்களையும் அவர்களின் அறிவுப் புலத்தையும் உலகளாவிய நிலையில் அறியச் செய்வது நம் கடமை என்று உணர்த்துகிறார். அதே சமயம், "அதற்குரிய ஆக்கப் பணிகளில் வாய்ப்பு அமையப்பெறின் ஈடுபட்டு உழைப்போம்...." என்று எழுதுவதுதான் மனத்தை உறுத்துகிறது. வாய்ப்பு அமையப்பெறின் எவரும் எதையும் செய்யலாம். வாய்ப்பை உருவாக்கி அமைத்துக் கொண்டு அத்துறையில் ஈடுபட்டு உழைப்பதுதான் உண்மையான பணி. பின்னடைவுகளே வலிமைமிக்க முன்னெடுப்புகளுக்கு வழிவகுப்பன என்று 'போரின் கலை'(The Art Of War) என்னும் சீனப் பழம்நூல் சொல்லுகிறது.

'நாட்டுப்புறவியல்' என்ற இந்த நூல், அடிப்படைக(basics)ளிருந்து தொடங்குகிறது.

நாட்டுப்புறவியலை 'Folklore' என்ற சொல்லால் வில்லியம் ஜான் தாமஸ் 1846ஆம் ஆண்டில் குறிப்பிட்ட பின்பே இத்துறை தனியாக வளரலாயிற்று என்ற செய்தி முதல் இயலில் இடம்பெற்றுள்ளது. உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் நாட்டுப்புறவியல் தொடர்பாக ஆய்விலும் தொகுப்பிலும் மேற்கொள்ளப்பெற்ற முயற்சிகளும் பணிகளும் விரிவாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.

பின்னர் சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய திரைப்படப் பாவலர் பாடல்கள் வரைக்கும் கொண்டுள்ள நாநவில் இலக்கியத்தின் தாக்கத்தை அலசுகிறது.

நாட்டுப்புறப் பாடலுக்குரிய தனித்தன்மைகளுள் ஒன்று சொல்லோ தொடரோ திரும்ப வருதல்; அந்தத் தனித்தன்மையுடன், சமூக மாற்றத்துக்கான கருத்து வீச்சுகளும் - மொழி அடிப்படையில் வழக்குச் சொற்களும் பழமொழிகளும் சித்தர் பாடல்களில் அமைந்துள்ளமையால் சித்தர் இலக்கியத்தை மக்கள் இலக்கியம் என்று அறிஞர்கள் உரைப்பது பொருத்தமே என்று குறிப்பிடுகிறார் இளங்கோவன்.(பக். 40-42)

நாட்டுப்புறவியல் கோட்பாடுகளின் விளக்கம் விரிவாக மூன்றாம் இயலில் சொல்லப்படுகிறது. அத்துறையின் முன்னோடி ஆய்வறிஞர் சி.எம். பெளராவின் அறுவகைப்பாட்டையும் மரியாலீச்சின் ஐவகைப்பாட்டையும் தவறாமல் குறிப்பிடுகிறார். தாலாட்டுப் பாடல்கள் தொடங்கி ஒப்பாரிப் பாடல்கள் வரையிலான நாநவில் இலக்கிய வடிவங்களை விளக்கி உரிய சான்றுகளையும் வயணமாகத் தந்துள்ளார்.

அடுத்த நான்காம் இயலான 'கதைப்பாடல்கள், 'நாட்டுப்புறவியல்' என்னும் இந்நூலின் அச்சாகத்(axle) தெரிகிறது. பண்பாடு வளர்ந்துள்ள நிலப்பகுதிகளைவிட வறண்ட பகுதிகளிலும் பின் தங்கிய பகுதிகளிலும் மட்டுமே கதைப்பாடல்களின்(Ballads) பெருக்கம் சாத்தியம் என்ற உலகநூல் கலைக் களஞ்சியத்தின்(The World Book Encyclopaedia) கருத்து உரியவாறு பயன்படுத்தப் பட்டுள்ளது(ப.98). வாய்மொழியாகப் பரவுவதே கதைப்பாடல்களின் முதன்மையான செயல்பாடு என்ற டேவிட் புக்கான் கருத்தும் இவ்வாறே.

தமிழ் - தமிழர் பண்பாடு தொடர்பான ஆய்வுகளில் ஏன் ஆங்கிலக் கலைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? அப்படிப் பயன்படுத்தினால் அந்தக் கலைச் சொல்லின் வழி குறித்து, மேற்கோளை மட்டுமே நம்பாமல், சொல்லாய்வுக்குச் சென்று அறிய வேண்டும். இலத்தீன் சொல்லிலிருந்து 'ballad' தோன்றியதாக(ப.97) இளங்கோவன் கூறுகிறார். "A narrative poem or song of popular origin in short stanzas, often with a refrain; originally handed down orally, often with changes and additions[

ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிகளுக்குள்ளோ மேற்கோள் குறிகளுக்குள்ளோ தராமல் நேரடியாகப் பயன்படுத்துவதையும் பிழையுடன் தருவதையும் ஆசிரியர் இனிவரும் பதிப்புகளில் தவிர்க்க வேண்டும். பக்கம் 19இல் "Finish Literature Society என்னும் பெயர்கொண்ட பின்லாந்து இலக்கியக்கழகம் 1831இல் தோற்றம் பெற்றது" என்று உள்ளது. 'Finish Literature Society' என்றால் "இலக்கியக் கழகத்தை ஒழித்துக் கட்டு!" என்று பொருள். இன்னொன்று, பின்லாந்திலுள்ள இலக்கியக் கழக்த்தின் பெயரை அப்படியே சுட்ட வேண்டுமென்றால் 'ஃபின்னிஷ்' மொழியில் தானே தர வேண்டும். இந்தச் சிக்கல்களை மிக எளிதாகத் தீர்க்க, பின்னிய இலக்கியக் கழகம்('Finnish Literature Society') என்று எழுதினாலே போதும். சொல்லுக்கு முன் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தாத ஆசிரியர், 'லோன்ராட்' என்று மொழிமுதல் வாராத எழுத்தைப் பயன்படுத்தாமல் 'உலோனிராடு' என்றல்லவா எழுத வேண்டும்? 'லோகநாதன்' என்ற பெயரை உலகநாதன் என்றெழுதுவதுதானே மரபு! சொல்லில் வடவெழுத்தை நீக்கியபின் தமிழ்மரபெழுத்துச் சொல்லமைப்பை அமர வைக்காமல் ஆங்கில எழுத்துகளில் அப்படியே சொல்லை எழுதுவது ஏற்புடையதா? திரைப்படப் பாடல்களுக்கு வடிவம் நல்கிய நாட்டுப்புறத்துக்குள் பகரமாக இன்று திரைப்பாவடிவம் வந்து நுழைந்துள்ளதுபோலத்தானே இதுவும்?

தோழர் உலகநாதன் பாடும் கானாப் பாடல்கள் சிலவற்றுக்கும் இதே கதைபொதி தன்மை (balade naturelle) இருப்பதை உணரலாம். தொல்பிரஞ்சுச் சொல் 'பலாத்'துக்கு உள்ள நடனப் பாட்டுத் தன்மையை "வாளைமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" என்ற உலகநாதனின் திரைப்பாட்டுக் காட்சியிலும் காணமுடிவது, "நாடுகளின் எல்லைகள் கடந்ததும் மொழியினப் பண்பாடுகள் கடந்ததுமான ஒருமையைக் கதை பொதி பாடல்களில் மட்டுமே காணமுடியும்" என்ற கருத்தியலை மெய்ம்மையுறுத்துவதாகும்.

நாட்டுப்புறவியல் அறிஞர் நா.வானமாமலை, தெய்வீகம், புராணம்,சமூகம், வரலாறு என்ற நான்கு அடிப்படைகளில் கதைப்பாடல்களை வகைமை செய்தது இந்நூலில் விளக்கம் பெற்றுள்ளது. சான்றுகளான இராமப்பையன் அம்மானை முதலான கதைப்பாடல் நூல்களைப் பற்றியும் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஐந்தாவதும் இறுதியானதுமான 'நாட்டுப்புறவியலும் மானிடவியலும்' என்ற இயலில் கொடும்பாவி கட்டி இழுக்கும் வழக்கம், ஆவி வணக்கம், மந்திரம், மைபோடுதல், வசியம் செய்தல் முதலான பல நாட்டுப்புற நம்பிக்கைகள் விளக்கப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் வெளியான தமிழவனின் 'நாட்டுப்புற நம்பிக்கைகள்' என்ற நூல் இது தொடர்பான முன்னோடித் தொகுப்பு ஆகும்.

இவ்வியலில் 'வசியம் செய்தல்' பற்றிய பகுதியில் வரும்,

"மஞ்சள் அரைக்கையிலே

மதிலேறிப் பார்த்த மச்சான்

' என்னபொடி தூவி இங்கே

இழுத்தரைக்க கூடுதில்ல"

என்ற சான்றின் மூலவடிவம்-

"காரை வீட்டுத் திண்ணையிலே

கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே

என்ன நினைச்சுப் பார்த்தானோ

இழைச்சு அரைக்க முடியல்லியே"

என்ற தூய நாட்டுப்புறக் காதல் பாடல் ஆகும். நாற்பதாண்டுகளுக்கு முன் இந்த மூல வடிவம்தான் தொகுப்புகளில் இடம் பெற்றது.

நூலின் இறுதியில் 'உதவிய நூல்கள்' என்ற பட்டியலுக்குப் பின் 'உதவிய இணைய தளங்கள்' என்ற பட்டியலும் இடம் பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது. ஏனெனில் மிகவும் சிறந்த தமிழறிஞர்களும் ஏனோ "அச்சைத்தான் பார்ப்போம்! இணையம் பார்த்திட ஏதிங்கே நேரம்?" என்று இன்னும் அடம் பிடித்துக் கொண்டிருக்கையில் இத்தகைய நலமனப்பான்மையை இளங்கோவன் கொண்டிருப்பது தென்பளிக்கிறது.

பின்னிணைப்பாக, தான் பல ஆண்டுகளுக்குமுன் பெரம்பலூர் மாவட்டத்தில் களப்பணியாகத் தொகுத்த சில பாடல்களைக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். உரை சொல்லி மாரடிக்கும் ஒப்பாரிப் பாடல் ஒன்று, கிட்டத்தட்ட பத்துப் பக்கம் தரப்பட்டுள்ளது. அதை வாசிக்கையில், நாட்டுப்புறக் குடும்ப வாழ்க்கையில் நிழலாடும் தனிமனிதச் சோகங்கள் பல நெஞ்சை நெருடுகின்றன. அதே சமயம் அதில் வரும் மருத்துவர் மற்றும் மருத்துவம் பற்றிய குறிப்புகள், ஓருவரின் இறப்புக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று தவிர்க்கும் தனிமனித மனநிலை(evasion)யைச் சுட்டுகின்றன.[இந்த மனநிலையை அடிப்படையாக வைத்தே சாந்திரார் என்ற சுவிட்சர்லாந்து நாவலாசிரியரை ஆராய்ச்சி செய்துள்ளார் பிரஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ.வே.நாயகர்.] நடவுப் பாடல் ஒன்றில்,

"காச செலவுபண்ணி

காலேஜிக்குப் போகச் சொன்னேன்

காலேஜிக்குப் போகாமலே எம்மா - அவன்

கடத்தெருவ சுத்தினாராம் எம்ம்மா - எம்மா"

என்று இடம் பெற்றிருப்பது சிரிப்பை உண்டாக்கினாலும், பின்னர் வரும் -

"ஆத்தங்கர ஓரத்தில்

ஏத்தம் எறக்கையிலே

வரப்போரம் வேலிகட்டி எம்மா - நான்

வறுமையிலே வளர்ந்தேனடி எம்ம்மா - எம்மா

பூமுடிச்சுப் பொட்டுவச்சுப்

பொன்னகையும் போட்டுவச்சு

கல்யாணம் முடிச்சீங்களே எம்மா - நான்

கண்கலங்கித் திரும்புவேனே எம்ம்மா - எம்மா

...........................................................................

ஸ்டவ்அடுப்பு முதல்கொண்டு

நீஎனக்கு எடுத்துவச்ச

இங்குஒரு ஸ்டவ்அடுப்பு எம்மா - என்

மாமிவாங்கி வச்சிருக்கா எம்ம்மா - எம்மா

ஒருசாதி ஒருரத்தம்

சொந்தமிடக் கூடாதுன்னு

என்னெ கொடுத்தாயே அம்மா - என்

இரத்தத்தையும் பார்த்தாயோ எம்ம்மா - எம்மா

தங்க அருகாபடி

தங்கதாண்டும் வாசப்படி

தங்களுக்குச் சீருசெய்ய எம்மா - அங்கத்

தகராறு ஆவுதடி எம்ம்மா - எம்மா"

போன்ற பாடல்கள் மனவெளியை ஈரமாக்குகின்றன. நாட்டுப்புறங்களில் பெண்கள் படும் கொடுமைகள் அவர்கள் வாய்விட்டுப்பாடும் நடவுப்பாடல்கள் முதலானவற்றில் பதிவானதிலிருந்தே நாட்டார் நாநவில் இலக்கியம் எவ்வளவு ஆற்றல் மிக்கதென உணரலாம். நாட்டுப் புறங்களில் வாழும் பெண்கள் குறித்த சித்தரிப்பு இப்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் வேறு ஒரு மாற்றுப் பரிமாணமும் கொள்ளத் தொடங்கியுள்ளது.நாட்டுப்புறவியலின் வகைமாதிரிகள் இந்திய குணத்துக்கேற்றவாறு,தமிழ் குணத்துக்கேற்றவாறு பரிணாமம் கொண்டிருக்கிறது என்பதை அறுதியிட்டு சொல்லமுடியும்.

Wednesday, June 02, 2010

தொ.பரமசிவம் என்ற மாமனிதன்



இந்தக் கட்டுரை இரண்டு வருடங்களுக்கு முன்னரே எழுதி இருக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்து தொ.பரமசிவம் அவர்கள் எழுதியுள்ள “தெய்வம் என்பதோர் “ என்ற நூலை எடுத்து ஒவ்வொரு பக்கம் பக்கமாக புரட்டும் போதுதான் ..ஒவ்வொரு வரிகளுக்கும் ஒரு கட்டுரை எழுத வேண்டி இருப்பதாகப்படும்..ஆகவே அவசரப்பட வேண்டாம் என்று நானே முடிவெடுத்துக் கொள்வேன்..இப்படியே இரண்டு ஆண்டுகள் போய்விட்டன..தொ.ப தமிழகத்தில் அல்லாமல் மேற்கில் பிறந்திருப்பாரேயானால் கிளஸ் லெவிஸ்ட்ரஸ்,எமிலி டர்கைம்,மாஎசல் மாஸ் போன்றோருக்கு இணையாக நிச்சயம் பேசப்பட்டிருப்பார்.ஆனாலும் அவரின் தளம் அசாதரணமானது.


அதே மாதிரிதான்..தொ.பரமசிவம் அவர்களை பேராசிரியர் என்பதா ஆய்வாளர் என்று எழுதுவதா? என்ற குழப்பத்திலே நாட்கள் ஓடியதும் உண்டு..பேராசிரியர் அவர் பணி. ஆகவே அவரை பேராசிரியர் என்று அழைக்கலாம்தான். ஆனால் நான் நேரில் பார்த்துள்ள பேராசிரியர்கள் என் கண் முன்னர் வந்து போவார்கள்.அவ்வளவுதான் பேராசிரியர் என்று அவரை அழைத்து இழிவு படுத்த வேண்டாம் என்று முடிவெடுப்பேன்..அப்புறம் முனைவர் என்று எழுதலாம் என்றாலோ ஆய்வாளர் என்று எழுதலாம் என்றாலோ இந்த அடைமொழிகளுடன் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலோரை நினைத்து தொ.பரமசிவம் அவர்களை கீழ்மைப்படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொள்வேன்., எந்த அடைமொழிகளுடன் அவரை அழைத்தாலும், யானையைப் பார்த்து கண் பார்வை இல்லாதவர்கள் சொன்ன கதையாகிப் போகும்.. அவருடைய ஆளுமையின் ஒரு பகுதிக்குத்தான் எந்த அடைமொழியும் பொருந்தும்.முழு ஆளுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரு சொல் தேவை..


ஏன் இவ்வளவு முன்னுரை? ஒரு சங்கை அளவாக வைத்துக்கொண்டு கடல் நீரை அளக்க முடியுமா?அந்தப் பயம் தான் எனக்குள்ளும்.. என் அறிவு சங்கு என்றால் அய்யாவின் அறிவு கடல்..

தேவநேயப்பாவாணர் அவர்களைப் பற்றிச் சொல்வார்கள்.தனி மனிதனாக இருந்து கொண்டு ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பணிகளை செய்தவர் என்று. அது மாதிரிதான்.. தொ.ப அவர்கள் ஒரு பல்கலைக் கழகத்திற்கு இணையானவர். அவருடைய பண்பாட்டு அசைவுகள் என்ற நூலுக்கு ஆ.இரா.வேங்கடசலபதி எழுதியுள்ளது போல் தொ.ப., அவர்களிடம் இருந்து தெறிக்கும் கருத்துகளும் மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது நூற்றுக்கு நூறு உண்மை..


2007 டிசம்பர் மாத்த்தில் ஒரு நாள் பாளயங்கோட்டையில் அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் இருந்தேன்..அந்த மணித்துளிகள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. இரண்டு மணி நேரத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் , ஒரு புதிய புத்தகம் போடும் அளவு இருந்த்து..மறுபடியும் சலபதி வார்த்தைகளையே கடன் வாங்கிக் கொள்கிறேன்..”நாம் நனகு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில், புதிய ஒளி பாய்ச்சுவதும், பயனற்ற ஒரு சொல் அல்லது ஒரு பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சொல்வதும் தொ.பவின் கருத்துப் புலப்பாட்டு முறை”


”தெய்வம் என்பதோர்” என்ற இந்தப் புத்தகத்தை புத்தகம் என்பதா? ஆய்வுக்கட்டுரை என்பதா? என்றே தெரியவில்லை..


அடிப்படையில் தொ.ப,.,அவர்கள் ஒரு பெரியாரியச் சிந்தனையாளர்.அவர் சிறு தெய்வஙகள் பற்றியும் தாய்த் தெய்வ வழிபாடு பற்றியும் எழுதுவதும் அதனை பெரியாரிய மார்க்சிய சிந்தனைகளோடு இணைக்கும் அவர் கண்ணோட்டம் தமிழக ஆய்வுலகில் மிகவும் புதியது மட்டுமின்றி மிக முக்கியமானது. தாய்த் தெய்வ வழிபாடு பற்றி மிக அருமையான மூன்று கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன..


”நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாடல் , ஒரளவு வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களிடம் ‘சாமியாடி,குறுதிப்பலி,பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே விரிகிறது.இந்தக் கணிப்புகள் அனைத்துமே தவறானவையே..நாட்டார் தெய்வங்கள் தத்துவ விசாரங்களில் நொறுங்கிப்போகும் அளவுக்கு மெலிதானவையல்ல.. அவற்றின் வேர்கள் வலிமையானவை அவை வட்டாரத்தன்மையும் உயிர்ப்பும் பன்முகத்தன்மை கொண்டவை. இந்தப் பன்முகத்தன்மை எனபது சைவம், வைணவம்,ஸ்மார்த்தம், இஸ்லாம்,கிறித்துவம் ஆகிய எந்த நிறுவனச் சமயத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட இயலாததாகும்”-பக்கம் .84

அய்யா தொ.ப., அவர்கள் முன்வைக்கும் கருத்து மிகவும் புதியது மட்டுமின்றி மேலும் விவாதத்தை வேண்டி நிற்பவை.சைவம், வைணவம்,இஸ்லாம், கிறிஸ்துவம் ., அனைத்தும் நிறுவனம் சார்ந்த மதஙகள் என்றும் ‘நிறுவனம் “ என்று வந்துவிட்டாலே ‘மேல்-கீழ்’என்ற வரிசை முறையுடன் தான் தமது அதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுகின்றன..ஆனால் நாட்டார் தெய்வ வழிபாடுகள் இந்த இலக்கணத்தில் இருந்து மாறுபட்டு நிற்கின்றன..


இந்தக்காரணத்தினால் தான் அதிகார மையமாகத் திகழந்த கோயில்களையும் அதனை மையப்படுத்திய ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்து வந்த தந்தை பெரியார்,, ஆண்டு முழுவதும் மண்மேடாக் கிடந்து ஆண்டில் ஒரு முறை தெய்வமாக உருப்பெரும் நாட்டார் தெய்வங்களை பெரியார் எதிர் கொள்ளவில்லை..

இந்த முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும் வழியில் தான தொ.ப., நமது சிந்தனையின் அனைத்து கதவுகளையும் சாளரங்களையும் திறந்து கொண்டே செல்கிறார்..


நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு பல்வேறு நூல்களில் இருந்து ஆதாரம் திரட்டி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதும் ஆய்வாளர் அல்ல..தொ.ப.., கிணற்றடிகளில், கோயில் பிரவாகத்தில், தெருக்களில்,சாவு வீட்டு முற்றத்தில் , அங்கு கிடைக்கும் ஒப்பாரிகளில், கிராம சொலவடைகளில் கிடைக்கும் ஆதாரங்கள் என பல்வேறு களங்களில் இருந்து கிடைத்த ஆதாரங்களோடு தனது ஆய்வுகளை முன் வைப்பது தான் தொ.ப., வின் அரிய பணியாகும்.


இன்னுமொரு முக்கியமான கட்டுரை..


”இந்து” என்ற சொல் சமய ஆதிக்கச் சொல்லாக மட்டுமின்றி அரசியல் ஆதிக்கச் சொல்லாக வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்ட்த்தில் இந்து என்பவன் யார்? இந்தியச் அரசியல் சட்டப்பிரிவுகள் “இந்து” என்ற சொல்லாடலுக்கு நேரிடையான வரவிலக்கணத்தை தரவில்லை..என்பது தான் இந்து என்ற சொல்லாடலை வைத்துப் பிழைக்கும் இந்துத்வவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.ஆகவே இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும்..அந்தச் சொல் பல்வேறு சமயஙகளையும்,நம்பிக்கைகளையும்,வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை நெறிப்படுத்தி சட்டமாக்க வேண்டும்.அதுவரை சமய நல்லிணக்கம் என்பது சமயச் சிந்தனையாளர்களின் கனவாவே இருக்க முடியும்...”


சமய நல்லிணக்கத்தின் ஆணிவேர் எது என்பது பெரியாரியவாதியான அய்யா தொ.ப., அவர்களுக்கு நன்கு தெரிகிறது என்பதால் தான் .. இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும் என்கிறார்..கோயிலுக்கு நுழைய முடியாத ஒரு கூட்டம், கருவறைக்குள் நுழைய முடியாத் ஒரு கூட்டம்..கருவறைக்குள் மட்டுமே இருக்கும் ஒரு கூட்டம் ..இதெல்லாம் சேர்ந்தது தான் ” இந்து” என்பது ஒரு பித்தலாட்டமாகவே தான் தெரிகிறது.


தமிழ் சமூகத்தின் மீது காதல் கொண்ட அனைவரும் அய்யாவின் எழுத்துக்களை தேடிப் படியுங்கள். கண்டிப்பாக ஒரு புதிய உலகம் புது தரிசனம் கிடைக்கும்..வாய்ப்பு கிடைத்தால் அய்யாவை நேரில் சந்தித்துப் பேசி ஒவ்வொரு மணித்துளிகளையும் அனுபவியுங்கள்..அவர் நிறைய எழுதவில்லை..ஆகவே அவரைப் பார்க்கச் செல்பவர்கள் ஒலிப்பதிவு கருவியடன் சென்று , பேச்சுப்போக்கில் தெறிக்கும் அனைத்து சங்கதிகளையும் சேமிக்கவும். மிக முக்கியமான சுவையான செய்திகள் உங்கள் தெருவிலே இருந்திருக்கும் ஆனால் உங்களுக்கு தெரிந்திருக்காது..அப்படி உள்ள செய்திகளாகச் சொல்லி புது வெளிச்சம் பாய்ச்சுவது தான் தொ.ப.,வின் உலகம்..
பழைய பெளரானிக மரபில் சொன்னால் ஒரு சபிக்கப்பட்ட நகரம் போல ஞாயிற்றுக் கிழமை மாலைகளில் மதுரை இருக்கிறது” ஒரு கூட்டத்தில் தன்னுடைய உரையை இப்படித் துவங்கினார் தொ.ப..,80 களின் நடுப்பகுதியில் பொதிகை தொலைக்காட்சி தென் தமிழகத்தில் தன் ஒளிபரப்பை தொடங்கிய காலத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலையை பற்றிய தொ.பவின் பதிவு அது.
அழகில் பிரமித்திருப்பீர்கள். அறிவில் பிரமித்திருக்கிறீர்களா? நான் எனது சம காலத்தில் அறிவில் பிரமித்தது அய்யா தொ.பாவிடமே.


டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வரும். ஒரு பெண் அமெரிக்கப் பெரு நகரமொன்றில் போக்குவரத்து நிறைந்த சாலையில் நிற்க நாலாப்பக்கமும் வாகனம் செல்ல அந்தப் பெண் பேசத் தொடங்குவாள் அதைப்போலவே தொ.பாவை மதுரை வீதிகளில் நிறுத்தீர்களேயானால் காலம் பின்னோக்கிப் போய் மன்னர்களும்,வரலாறுகளும்,மரபுகளும், தொன்மங்களும், நம்பிக்கைகளும் எட்டுத்திக்கும் எழுத்து வரும். தொ.பா அந்த வரலாற்று வீதிகளில் நடக்கத் தொடங்குவார் மன்னன் .செண்பக பாண்டியன் எழுந்து அய்யாவைப் பார்த்து தன் சிரம் தாழ்த்துவார்.
அவருடைய நூல்கள் அவருடைய சாதனைகள் எனில் நான் அவருடைய நேர் பேச்சுக்கு அடிமை. அவர் பேசத் தொடங்கினால் என் ஐம்புலன்களையும் செவியில் கொண்டு வந்து நிறுத்துவேன். ஒரு பெரிய சாக்குப் பையோடுதான் ஐய்யாவைப் பார்க்க போக வேண்டும்.
நீங்களும் நானும் அன்றாடம் செய்து கொண்டிருக்கும் சம்பிராதயங்களை, சடங்குகளை, மரபுகளை, மதிப்பீடுகளை அவரால் மிகக் கூர்மையாக புதிய அர்த்தங்களோடு சொல்ல முடியும். நீங்களும் நானும் கவனிக்கத் தவறியவற்றை, பொருட்படுத்தாதவைகளை, ஒன்றும் இல்லையென்று நினைப்பவற்றை தொ. ப. தன் அறிவால் துலக்கி வைக்கும் பொழுது ஏற்படும் பிரமிப்பு சொல்லி மாளாதது.
அவர் மதுரையில் மாடல் லாட்ஜ் விடுதியில் தங்கியிருந்த காலத்திலும் , பின்பு அண்ணாநகர் வீட்டிலும் அவரது ஞாயிற்றுக் கிழமை மாலை சந்திப்புகள் பிரசித்தி பெற்றவை. வட்டமாக ஆட்கள் உட்கார்ந்திருக்க, தேனீர் வந்து கொண்டேயிருக்க கேள்வி எங்கெங்கிருந்தோ வரும். அவர் பதில் சொல்லிக் கொண்டே போவார்.
அப்படியான ஒரு ஞாயிற்றுக் கிழமை சந்திப்பில் அதிகாரம் இல்லாமல் ஒரு அரசு வெற்றாக ஒரு நிமிடம் கூட இருக்காது என்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.நம் ஊரில் ஜமீந்தார்கள் இறந்தால் அவருக்கு அடுத்தபடியாக வாரிசாக வேண்டியவர் முடிசூட்டிக் கொள்ளாமல் ஜமீன் தாரின் பிணத்தை அவரைப் பார்க்க விடமாட்டார்களாம். உடனடியாக அந்த அதிகார பீடத்தில் அதன் வாரிசு அமர்த்தப்பட்டு, பக்கத்து அறையில் மரித்துப் போன ஜமீந்தார் இருக்க அடுத்த அறையில் அவசரமாக முடிசூட்டுதல் நடக்கும். அதன் பின்பே அவரைப் பார்க்க அனுமதி. இப்படி விளக்கிக் கொண்டிருந்தவர் சடாரென இதற்கு ஒரு சர்வதேச உதாரணம் சொன்னார். ஜான்.எப்.கென்னடி சுடப்பட்டு இறந்த பொழுது அவர் உடலைப் பார்க்க உதவி ஜனாதிபதி விமானத்தில் போக அந்த விமானத்திலேயே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள். அதன் பிறகே அவர் ஜான்.எப்.கென்னடியின் உடலைப் பார்க்கின்றார். ஏறும் பொழுது உதவி ஜனாதிபதி இறங்கும் பொழுது ஜனாதிபதி இப்படி சொல்லிக் கொண்டே போனார்.
மற்றொரு சந்திப்பில் சொன்னார் “இப்பொழுது கிராமத்தில் யாருக்கும் அக்கானி காய்ச்சத் தெரியாது (பதனீர் காய்ச்சுவது) போன தலைமுறையோடு அந்த அக்கானி காய்ச்சும் நுட்பம் போய் விட்டது. நம் வீட்டு ஊறுகாய் ஜாடிகளை ஒரு மாயக்கரம் உடைக்கிறது.ruchi mango pickles என வாழப் பழகி விட்டோம். இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு ஊறுகாய் போடத் தெரியும்.”
ஒருமுறை கமல்ஹாசன் இவரிடம் பேசும் பொழுது Tuesday of moorris என்ற படத்தைப் பற்றிப் பேசினாராம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு விரைவில் இறக்கவிருக்கும் பேராசிரியரின் கருத்துக்களை அவருடைய மாணவர்கள் முறை வைத்து பதிவு செய்கிறார்கள். இது பற்றி வியந்த கமலிடம் சொன்னாராம் தொ.ப “இது ஏற்கனவே நம் மரபில் உள்ளதுதான் வைஷ்ணவப் பெரியவர்கள் தங்கள் மரணம் நெருங்கும் தருவாயில் தங்களுக்குத் தோன்றுகின்ற கருத்துகளை குறித்து வைப்பது வழக்கம்.”






ஒரு முறை வரப்பு பயிர் பற்றி பேச்சு வந்தது. நிலங்களில் வரப்புகளில் விளைபவை. ரஷ்யாவில் பின்னாட்களில் இந்தியாவிலிருந்து வரும் வாழைபழங்களுக்காக நிண்ட வரிசையில் காத்திருப்பார்களாம். அதை இப்படி விளக்கினார். அங்கு கூட்டுபண்ணைகள் எற்படுத்தும் பொழுது வரப்புகள் அற்று போகின்றது.. வரப்புகளில் விளையும் வாழைபழத்தின் சுவையை ஒத்த சில பழங்கள் இல்லாது போகின்றது. அதனால் தான் வாழை பழத்திற்கு அத்தனை பெரிய வரிசை. சமூக மாற்றம் வந்து ஆறுபது ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் ஒர்மையிலும், கலச்சாரத்திலும் தங்கி போன சுவையை சுவையை ரஷ்யர்களால் மறக்க முடியவில்லை என்றார்.
நான் எனது வழக்கமான கேள்வியை முன் கேள்வியை முன் வைத்தேன். ஏன் மலையாளிகள் நம்மிடம் இருந்து தனியே போனார்கள்? ”இந்திய கண்டத்தில் அன்மைகாலம் வரை தாய் வழிசமுகம் நீடித்தது கேரளத்தில் மாத்திரமே. அதற்கான சான்றுகள் அவர்களின் மொழி, சொத்துரிமை, பெயரிடுதல், பாலியல் சுதந்திரம் போன்றவற்றில் சுலபமாக கானலாம்.அவர்கள் தமிழகத்தின் தென் மேற்க்கில் இருந்தார்கள், இருக்கிறார்கள்.
மற்றொரு புறத்தில் தமிழ் சமுக அமைப்பு எறக்குறைய பத்தாம் நூற்றாண்டிலேயே தந்தைவழி சமுகமாக, நிலபிரப்புத்துவ சமூகமாக உருவாகுகிறது. இதில் இனைய முடியாமல் ஒதுங்கி போனவர்களாக மலையாளிகள் இருக்கலாம்.
சில வருடங்களுக்கு முன்னால் இதய நோயால் பாதிக்கப்பட்டு அய்யா தொ ப மதுரை மினாட்சி மிஷின் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அதிகாலை பார்கக போனேன். ஜ சி யு வில் இருந்தார். வெகுநேரம் காத்திருந்தோம். அவர் உறவினர் யாரிடம் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார்.”நிறைய பேர் பார்க்க வருகிறார்கள்.. அந்த தொல்லையிலிருந்து தப்பவே ஜ சி யு விற்கு மாறினோம் என்றார். நான் அய்யாவை பார்க்காமலே திரும்பினேன். நிச்சயம் கண்ணாடி கதவுகளுக்கு அப்பால் இருக்கும் அவர் அகம் அறிந்திருக்கும் என் போன்றவர்களின் வருகையை. மாட்டுதாவணி தூசி மிகுந்த சாலையின் திரும்பும் பொழுது நானும் அப்படி உனர்ந்தேன்.
நமது பெரியப்பாக்களை நினைவுபடுத்தும் முகம். வார்த்தைகளை லேசாக உறிஞ்சியபடி பேசுவார். சன்னமான குரல்.கறுப்பு வெள்ளை சினிமாவில் பார்த்த எவரையோ நினைவுபடுத்தும் சட்டென்று அவர் தோற்றம்.
உள்ளுர் திருவிழா, பெரு திருவிழா பற்றி பேச்சு வந்தது. அய்யா சொன்னார். ஒரு மனிதன் பெரு திருவிழாக்களை விட ஊர் திருவிழாக்களிலேயே தன்னை முழுமையாக அடையாளம் காண்கிறான் என்றார். பாளையங்கோட்டை ஒரு கிறிஸ்தவ ஊராக இருந்தாலும் நூற்றுக்கனக்கான அம்மன் கோவில்கள் உண்டு. வருடம் முழுக்க திருவிழாக்கள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள அம்மன் அனைத்தும் வடக்கு நோக்கியே அமர்ந்திருக்கிறார்கள். காரனம் மிக எளிது. நமக்கு எதிரிகள் வடக்கிலிருந்து மட்டும் தான்.
நுட்பமான அவதானிப்புகள், வரலாறு, சமூகம், சொல்லாடல்கள், பழம் நம்பிக்கைகள், தொன்மங்கள் இவற்றின் தொகுப்பு அய்யா தொ. ப.
பாளையங்கோட்டை யாதவர் தெருவிலிருந்து நீங்கள் அவரை சந்தித்து விட்டு வெளியே வரும்போது வேறு ஒரு மனிதராக ஆகியிருப்பீர்கள்.
திருநெல்வேலி சார்ந்த என் அழகியல் சித்திரங்கள் வண்ணதாசனாலும், வண்ணநிலவனாலும் தீட்டப்பட்டது. தென் தமிழகத்தின் வரலாறு சார்ந்த சித்திரம் அய்யா தொ. பவாலேயே தீட்டப்பட்டது.
மிக நுட்பமான ஒரு அறிஞனை தமிழ்சமூகம் அப்படியெல்லாம் கொண்டாடவில்லை.அவர் மதுரையிலிருக்கும் பொழுது திடீரென நேதாஜி சாலையில் எதிர்படுவார். அப்படியே சாலையோரத்தில் நின்று பேசத் தொடங்குவோம். சாலையின் இருமருங்கிலும் போகும் மந்தைகள் அறியாது இந்த அறிஞனை……
அவதார் படத்தில் 3D கண்ணாடி வழியே புதிது புதிதாக பொருட்கள் புலப்படுகிறதே அதுபோல அவரை வாசிக்கத் தொடங்குவீர்களேயானால் வாழ்க்கை புதிதாய்த் தோன்றக் கிடைக்கும். அதன்பின் உங்களால் ஒரு வசவுச் சொல்லைக் கூட யோசிக்காமல் சொல்லிவிட முடியாது.
இதுபற்றி அய்யா பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார் “இந்த கெட்ட வார்த்தை என்பவற்றைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா எவையெல்லம் விலக்கப்பட்ட உறவுகளோ அல்லது சமூகம் மறுக்கும் உறவுகளோ அவையே கெட்ட வார்த்தைகளாக சமூகத்தில் உருவாக்கப்படுகிறது. தமிழ் சமூகத்தில் அதிகம் புழங்கும் வசவுச் சொல் அம்மாவோடு உறவு கொள்ளுவதைப் பற்றிதான். அடுத்து அக்காவோடு, பின்பு தேவிடியா, தேவிடியா மகன். இப்படி சமூகம் எதை விலக்க நினைக்கிறதோ அதை மறுபடி மறுபடி இந்த கெட்ட வார்த்தைகளின் வழி வலியுறுத்துகிறது. நாம் ஒரு தாய்வழிச் சமூகமாக இருந்தோம் என்பதற்கான சாட்சி இந்த கெட்ட வார்த்தைகள். உடனடி உதாரணம் ஆங்கிலத்தில் mother fucker. ஒரு வேளை ஒரு தொன்மையான சமூகத்தின் மொழியில் இப்படியான கெட்ட வார்த்தைகள் இல்லையெனில் அந்த சமூகம் இந்த நிகழ் உற்பத்தி முறைக்குள் வராததே காரணம் என்றார்.(நான் அறிந்தவரை மலையாளத்தில் இது போன்ற கெட்ட வார்த்தைகள் கிடையாது. அதிகபட்சம் ’தேவிடிச்சி’ மட்டுமே. அதுவொரு தாய்வழிச் சமூகத்தின் தொடர்ச்சி என்பதற்கான முக்கிய சான்று இது.)

பாளையங்கோட்டை யாதவர் கிழக்குத் தெருவில் நான் நுழைவதும், அவர் வீட்டில் அந்த ஆட்டுக்குட்டிகளைத் தாண்டி அவரோடு அமர்ந்திருப்பதும், உரையாடும் கணங்களும் வாழ்வின் நான் வாழ்ந்த கணங்கள். அவர் காலைத் தொட்டு வணங்க முடிந்தது என் வாழ்வின் பேறு. எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருநெல்வேலி போய் அய்யாவிடம் மாணவராகி விட வேண்டுமென்ற நிறைவேறாத ஆசையெல்லாம் எனக்கு உண்டு. நிறைவேறாத ஆசைகளின் பட்டியல் கன்னித்தீவை விட நீளம். அதற்காக நிறைவேறாத ஆசைகளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியுமா என்ன?
இன்னும் இந்த வாழ்க்கையை நுட்பமாக பார்ப்பதற்கும், வாழ்வதற்கும் யாதவர் கிழக்குத் தெருவும் அய்யா தொ. ப வும் எனக்காக இருக்கின்றார்கள்..
முனைவர் தொ.பரமசிவத்தின் நூல்கள்
1. நான் இந்துவல்ல நீங்கள் - யாதுமாகி பதிப்பகம் திருநெல்வேலி
2. இதுதான் பார்ப்பனீயம்
3. பூனா ஒப்பந்தம் ஒரு சோக வரலாறு

4. சங்கர மடம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்
5. தெய்வமென்பதோர்
6. வழித்தடங்கள்
7. இந்து தேசியம்

8. அறியப்படாத தமிழகம் - நியு செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை
9. தெய்வங்களும் சமூக மரபுகளும்
10. நாள் மலர்கள்

11. பண்பாட்டு அசைவுகள் – காலச்சுவடு நாகர்கோவில்

12. சமயங்களின் அரசியல்- பரிசல் பதிப்பகம் சென்னை

13. சமயம் பற்றிய உரையாடல் – தென்திசை பதிப்பகம் சென்னை.
14. அழகர் கோவில் ஆய்வு

உணர்வும் உப்பும்

தொ பரமசிவம்

'உப்புப் பெறாத வேலை ' என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடு வார்கள். (உணர்ச்சியற்றவனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடு கிறாயா ? என்றும் கேட்பார்கள்.) ஆனால் மனிதகுல வரலாற்றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவமுடையதுதான். அப்போதுதான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் 'சுவை ' என்பதே முதற்பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்குப் பயன் படுத்தப்படும் உப்பிற்கு 'வெளிளுப்பு ' என்று பெயர். பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியா மல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது 'வெளிளுப்பு '.

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் 'சம்பளம் ' என்ற சொல் பிறந்தது என்பர். ஆங்கிலத்திலும் சூஹஙீஹசுட் என்ற சொல் சூஹஙீஞ் என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர்.

இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியாரிடத்தில் புது மணமகள் தன் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக்கொண்டே நுழைகிறாள். அது போலவே புதுமனை புகுவிழாக்களில் உறவினர்கள் அரிசியினையும் உப்பினையும் அன்பளிப்பாகக் கொண்டு வருவர். மதுரை மாவட்டக் கள்ளர்களில் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய்யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும் உப்பும் கொண்டு செல்கின்றனர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந் தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. 'தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது ' என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்குமொழி.

நன்றி கெட்ட விதுரா _ சிறிதும்

நாணமற்ற விதுரா

தின்ற உப்பினுக்கே _ நாசம்

தேடுகின்ற விதுரா

என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி இந்த நம்பிக்கையைப் பதிவு செய்கிறான்.

பழந்தமிழ்நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொரு ளாக உப்பு விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் 'உமணர் ' என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறித்து வுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழ்க் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளையும் களத்திற்கு 'அளம் ' என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர் களின் பட்டப்பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவளம் (கோ + அளம்) என்று வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார்கள். 'ஜடாவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி சுந்தர பாண்டியன் காலத்தில் (கி. பி. 1268) அதும்பூர் என்னும் ஜனனாதப் பேரளம், செல்லூர் என்னும் அநபாய சோழப் பேரளம், இடையன் குழி என்னும் இராஜேந்திர சோழப் பேரளம், கூடலூர் என்னும் ராஜநாராயணப் பேரளம், திருநல்லூர் என்னும் கிடாரம் கொண்ட சோழப் பேரளம், வெண்ணாரிகன் சுழி என்னும் ஏழிசை மோகன் பேரளம், சூரைக் காமு என்னும் ஆளப்பிறந்தான் பேரளம் ஆகியவற்றிலிருந்து உப்பு விற்கையில் ஒரு உறை உப்புக்கு ஒரு உழக்கு உப்பு என்னும் விகிதத்தில் சேகரித்துத் திருவதிகை திரு வீரட்டானேஸ்வரர் கோயில் திருவமுதுபடிக்கும் கோயில் சீரமைப் பிற்கும் நிவந்தமாக அளிக்கப்பட்டிருக்கின்றன ' என்று தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் எடுத்துக்காட்டுகிறார்.

போக்குவரத்து வசதிகள் பெருகாத காலத்தில் உப்பின் விலையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. 'நெல்லின் நேரே வெண்கல் உப்பு ' என்று பெண் ஒருத்தி விலை கூறி உப்பு விற்பதனைச் சங்க இலக் கியத்தில் பார்க்கிறோம். சோழர் காலத்திலும் நெல்லின் விலையும் உப்பின் விலையும் அருகருகு இருந்தன என்று கல்வெட்டுக்களில் இருந்து தெரிகிறது. இன்றைய பொருளாதாரக் கணக்கில் உப்பின் விலை இப்போது உள்ளதைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருந்த தாகக் கொள்ளலாம். உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்ட தனால் 'மரவை ' எனப்படும் மரச்சட்டியிலும் 'கல்மரவை ' எனப்படும் மாக்கல் சட்டியிலும் வீடுகளில் உப்பு இட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாக விளங்குகின்றன.

தமிழ்நாட்டின் சமூகப் படிநிலைகளை அடையாளம் காட்டும் பொருள்களில் ஒன்றாகவும் உப்பு விளங்கியுள்ளது. ஆக்கிய சோற் றோடு உப்பைச் சேர்த்து உண்பது ஒரு வழக்கமாகும். சாதிய ஒடுக்கு முறை கடுமையாக இருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியார், சோறு உலையில் இருக்கும்போதே அதில் உப்பையிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாகக் கருதப்பட்டது போலும்.

உப்பு வரிக்கு எதிராகக் காந்தியடிகள் சட்டமறுப்பைத் தொடங்கிய காரணம், உப்பு அனைத்து மக்களையும் (சாதி, சமயம், வர்க்கம் தாண்டி) பாதிக்கக்கூடியது என்பதுதான். உப்பிற்கு இருக்கும் பண் பாட்டு முக்கியத்துவத்தையும் குறியீட்டுச் சிறப்பினையும் சுட்டி, 'உப்புக்கு வரிபோடும் அரசும் ஓர் அரசா ' என்று கேள்வி எழுப்பி ஆங்கிலேய அரசு ஆளத்தகுதியற்றது என அதன் தகுதிப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது தேசிய இயக்கம்.

காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகமும், தண்டி யாத்திரையும் இந்திய அரசியல் வரலாற்றின் அழுத்தமான பக்கங்களாகும். தண்டி யாத்திரை நடந்த குசராத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு நிறுவனமான 'கார்கில் ' கம்பெனிக்கு மைய அரசு உப்புத் தயாரிக்க அனுமதி வழங்கியது. குசராத் மக்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் இந்த அனுமதியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ததும், இறுதியில் 'கார்கில் ' நிறுவனம் பின்வாங்கியதும் இந்திய வரலாற்றின் வெப்பம் மிகுந்த பக்கங்களாகும்.

Friday, May 28, 2010

மாவீரன் திப்புசுல்தான்


1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: 'இன்று முதல் இந்தியா நம்முடையது' என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் "ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்" எனக் குறிப்பிடுகிறார்.(. 'Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company' என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், '30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது'. என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், 'இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்' என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். "அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்" என்று பதறுகிறான் அவருடைய பணியாள். "முட்டாள்... வாயை மூடு" என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! "ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.

திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது 'அக்னி சிறகுகள்' என்ற நூலில் தான் அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation - DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, 'இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 'ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன' என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை
திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.

இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்
அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: "மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?" என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு
'எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது' என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்."

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது 'திப்புவின் சமயக் கொள்கை' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் 'திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டனர்' என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.

திப்புவின் விவசாயக்கொள்கை
"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.

திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


போர்களத்தில் நேர்மை
"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை."

மக்கள் சக்தியை திரட்டியவர்
ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. "அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்".என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

திப்புவை மாவீரனாக மாற்றியது எது?
இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.
உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.

திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது.ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது. கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. சஞ்சய்கான் 'the sword of tippu' என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை 'கற்பனைக்கதை' என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை 'கற்பனை கதை' எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன. அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும்,வறுமை,லஞ்சம்,ஊழல்,நிர்வாக சீர்கேடுகள்,தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும்.அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

Friday, May 21, 2010

மகத்தான இயலாமையின் மோனமொழி


கர்ணமோட்சம் குறும்படத்தை முன்வைத்து

குறும் படம் எனும் அற்புதமான கலைவடிவத்தை கையாளுகின்ற கலை ஆளுநர்கள் அதன் சிறப்பில்புகளை ஒரு சிலரை தவிர மற்றுள்ளவர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை.ஆயினும் தமிழில் தொடர்ச்சியாக பல குறும்படங்கள் உயரங்களை தாண்டும் வல்லமை மிக்கதாக இருக்கிறது.எனது புலம் பெயர் வாழ்தலில் தமிழகத்தை போல பலவசதிகளை அடையமுடியாமல் போனாலும் தகவல் புரட்சியின் விளைவாக பல விஸயங்களை பயன்படுத்த முடிகிறது.அந்த வகையில் யூடூப் இணைய விடியோ மூலமாக பலவிதமான பாராட்டுதல்களை பெற்ற கர்ணமோட்சம் குறும்படத்தை கண்டேன்.பொதுவாக நான் விமர்சனம் எழுதினாலும் சிலாகித்து எழுதுவதில்லை.ஆனால் இந்த படத்தை குறித்து சிலாகித்து எழுதுவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் புரிந்து கொண்டேன்.எந்த ஒரு கலை வடிவமும் கால நீட்சியில் நிகழும் மாற்றத்தின் புழுதியில் தன் சாரத்தை இழந்து தனிமைப்படும்பொழுது அதை சார்ந்து இயங்கும் கலைஞனின் வாழ்வு அவன் அளவிலும் மற்றவர் பார்வையிலும் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஒவ்வோரு காலகட்டமும் வாழ்வைப்பற்றிய பொதுவான ஒரு பார்வையை அதன் சமூகத்திடமிருந்து உருவாக்கிக்கொள்கிறது. பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் உய்வும் , எந்த வித நோக்குமற்ற கேளிக்கையும் நம்முடைய “ஊடக காலத்து” வாழ்வியல் பார்வையாக இருக்கும் பிண்ணனியில் ஒரு தெருகூத்து கலைஞனின் வாழ்வை முன் வைக்கிறது முரளி மனோகர் இயக்கிய “ கர்ணமோட்சம்” என்ற குறும்படம். [இந்த வருடம் கலை மற்றும் கலாச்சார பிரிவில் தேசிய விருதை பெற்றகுறும்படம்]



ஒரு பள்ளியில் தன் கர்ணமோட்சம் கூத்தை நிகழ்த்திக்காட்ட இருங்கூர் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு தன் மகனுடன் – அவனுக்கு கிரிக்கெட் மட்டையும்,பந்தும்,வெள்ளை தொப்பியும் கூத்து முடிந்ததும் வரும் பணத்தில் வாங்கிதருவதாக வாக்கு - வருகிறான் கோவிந்தன் என்ற கூத்து கலைஞன். வரும் வழியிலேயே தன்னை கர்ணனாக வேசம்கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் கோவிந்தன் ,பள்ளி தாளளர் இறந்து விட்டதால் பள்ளி விடுமுறை என அறிந்து என்ன செய்வது என்றறியாது நிற்கிறான். பள்ளியின் தலைமை ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஊருக்கு திரும்பி செல்லக்கூட பணமில்லாத நிலையை கூற தலைமையாசிரியர் தான் வெளியே இருப்பதாகவும் சாயங்காலம் வீட்டிற்கு வந்தால் உதவுவதாகவும் கூறுகிறார். கோவிந்தனுக்கு வேறு வழியில்லை. காத்திருப்பதை தவிர. பசியோடிருக்கும் தன் மகனுக்கு ஒரு வடை வாங்கிகொடுத்துவிட்டு தண்னீர் குடித்து பசியாறுகிறார் “கர்ணன்”. அந்த தேநீர் கடையில் வேலை செய்யும் ஊமை சிறுமிக்கு கர்ணனின் பசி தெரிந்திருக்கவேண்டும். தெரு பைப்பில் தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்திருக்கும் “கர்ணனு”க்கு சாப்பிட கொடுக்கிறாள் அவள். கையேந்தி பெற்றுக்கொள்கிறார் “ கர்ணன்”

அவரைப்பற்றி அவள் கேட்க கோவிந்தனுக்கு உற்சாகமாகிவிடுகிறது –அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு ஜீவனாவது இருக்கிறதே! – தான் அவள் வயதில் செஞ்சி துரைசாமி தஞ்சிரானிடம் கூத்து கற்றுக்கொண்டதையும். தான் கூத்தில் கர்ணன் வேசம் கட்டுவதையும் தான் பாட ஆரம்பித்தால் விடிய விடிய ஊரு சனம் மொத்தமும் கேட்கும் என் கூறிக்கொண்டே வ்ருபவர்“இப்பொழுதெல்லாம் யார் இருக்கா இதல்லாம் பார்க்க எல்லாத்தையும் டி.வி பொட்டி இழுத்துக்குச்சே” என்கிறார் ஏக்கத்துடன். ஒரு உற்சாகத்துடன் அந்த ஊமை பெண்ணிற்கு கூத்தை கற்றுக்கொடுக்க தொடங்குகிறார்.தன் குருவிற்கு வணக்கம் தெரிவித்து. அந்த சமயம் அங்கு வரும் தேநீர் கடைகாரன் அவள் முகத்தில் தண்ணீரை விசிறியடித்து அவளை இழுத்துச்செல்லும் பொழுது .“நாலு இட்லி வாங்க காசில்லாமல் தெரு தெருவாக சுத்துகினு இருக்கிற இதுல இவளுக்கு கூத்து கத்து குடுக்க போரியா போய்யா ஒ வேலய பாத்துக்கிட்டு” என கூறி “கர்ணனை” கிட்டதட்ட ஒரு பிச்சைகாரனாகவே ஆக்கிவிட்டுப்போகிறான்.

மிகவும் வேதனையுடன் அங்கிருந்து நடந்து செல்லும் கோவிந்தனை ஓடி வந்து வழி மறைக்கிறாள் அந்த ஊமை சிறுமி. கர்ணன் அவளையே பாக்கிறார். அவள் தன் கைகளை நீட்டி அவருக்கு ஏதோ கொடுக்கிறாள். கர்ணன் அதை கை நீட்டி வாங்குகிறார் கோவிந்தன். ஒரு ரூபாய் நாணயம். குரு தட்சணை. அவள் தன் குருவிற்கு குரு வந்தனம் செய்து ஓடுகிறாள். கோவிந்தன் அவளைப்பார்த்த வண்ணம் நிற்கிறார். இருக்கலாம் அந்த நிமிடம் கோவிந்தன் -கர்ணன்- மனம் மோட்சம் அடைந்திருக்கலாம். மெல்ல நடந்து போகும் கோவிந்தன் எதிர்படும் பள்ளி சிறுவர்களிடம் “ நான் கர்ண மஹாராஜா” என கூறி தன் கிரீடத்தை கழட்டி குடுத்துவிட்டு போகிறார். கிரீடம் தன் தன்மையை இழந்து அந்த சிறுவர்கள் கையில் விளையாட்டு பொருளாகிபோகிறது. அது அவருக்கும் இந்த சூழலுக்கு பொருந்தா விசயமாக பட்டிருக்கவேண்டும்.

அடுத்த தலைமுறையின் ரசனையும் அவர்களது உலகமும் கோவிந்தனுக்கு புரிவதில்லை. அடுத்த தலைமுறை தன் வாழ்வோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் விசயங்களிலிருந்து உருவாகப்போகும் மலினமான வாழ்வியல் பார்வை நம் கண்முன்னே நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிதர்சனம். கோவிந்தன் மகன் கையில் ஒரு பொம்மை செல்போன் கிடைக்கிறது. அதை “அதிஷ்டம்” என சந்தோஷப்படும் அவன், முதலாய் தொடர்புகொள்வது சச்சின் டெண்டுல்கரை. பின் அவன் “பெப்ஸி” உமாவை தொடர்புகொண்டு பேசுகிறான் “ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.......விஜய் படத்திலேந்து பாட்டுப்போடுங்க” கிரிகெட்,சினிமா இவற்றை ஆதர்சனமாகக்கொண்டு கேளிக்கையும் அந்த நேர சந்தோஷத்தை மட்டும் பிரதானமாய் கொள்ளும் தட்டையான தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் உழன்று கிடக்கும் அடுத்த தலைமுறைக்கும் கோவிந்தனின் கலைக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிறப்பமுடியாத பெருவெளி. (மற்றோரு இடத்தில் தலைமையாசிரியரை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் கோவிந்தன்Ring Ring Tone ஆக எதிர்கொள்ளும் பாட்டு : “ வாள மீனுக்கும் , விலங்கு மீனுக்கும் கல்யாணம்....” இந்த பாடல் மூலமாக அந்த தலைமையாசிரியரைப்பற்றி இயக்குனர் நம் மனத்தில் எழுப்பும் பிம்பம் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு)


இரண்டாவது கிளாஸ் தண்ணீர் கேட்ட கோவிந்தனை விரட்டுகிறான் தேநீர் கடைக்காரன். அவனுக்கு வாழ்க்கை பணம் சார்ந்தது உறவுகள்,நிகழ்வுகள் எதையுமே பண வடிவாய் புரிந்துக்கொள்பவன். அவனைப்பொருத்தவரை அந்த கூத்துக்காரன் “இடத்தை அடைத்துக்கொண்டு “ வியாபாரத்தை கெடுக்கும் இடையூறு. கோவிந்தனால் நூறு ரூபாய்க்கு வியாபாரம் நடந்தால் அவனால் கோவிந்தனையும், அவன் கூத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியும்.அப்படி இல்லாத பட்சத்தில் எந்த கலைவடிவமும், கலைஞனும் அவன் வாழ்க்கைக்கு தேவையில்லாத வஸ்துக்கள். நம் காலத்து மனசாட்சியாக இருக்கிறான் அவன்.

தானும் தன் கலையும் கால மாற்றத்தில் தனிமைப்பட்டு போவதும், உறவுகளின் எதிர்பார்புகளை நிறைவேற்றமுடியாதசரிவும், தன்கென்றிருந்த வெளி இல்லாமல் போகும்பொழுது ஏற்படும் சூன்யமும் “ கர்ணமோட்சம்” முழுவதும் நிறைகிறது. பொருளாதாரம்,அர்த்தமற்ற வெற்று கேளிக்கை சார்ந்து இயங்கும் நம் கால சூழலில் பொருத்திக்கொள்ளமுடியாமல் திணரும் எந்த கலைக்கும்,கலைஞனுக்கும் பொருந்தும் “ கர்ணமோட்சம்”

கர்ணமோட்சம் குறும்படத்தை இயக்கிய முரளி மனோகர். பிறந்தது கும்பகோணம். படித்த்து ,வளர்ந்தது திண்டிவனம்.தமிழ்நாடு திரைப்படகல்லுரியில் இயக்குனர் பட்டய படிப்பு. இவரது மற்ற குறும்படம்” அக்காலம்” ஜெமினி ஸ்டியோ கேண்டீனில் வேலைப்பார்த்த ஏ.என்.எஸ்.மனியனைப்பற்றிய,அவர் நினைவுகள்பற்றிய ஆவணப்படம். கர்ணமோட்சம் தமிழ்நாடு அரசின் விருதையும் இந்த வருடம் மத்திய அரசின் விருதையும் பெற்றது. தற்சமயம் திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணிபுரியும் முரளி மனோகருக்கு வாழ்த்துக்கள்.




கர்ண மோட்சம்:

தயாரிப்பு : எம்.ஜீ.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.

இயக்கம் : முரளி மனோகர்

கதை,உரையாடல் : எஸ்.ராமகிருஷ்ணன்.

இசை : இரா,பிரபாகர்

நடிப்பு : ஜார்ஜ்,யுவராஜ்,கலியமூர்த்தி,பூர்ணிமா,சண்முகம்.

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள்

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள் தத்துவத்தின் முடிவிலாப் பெருவெளியில் தடம் பதிக்கும் ஒரு சிந்தனையாளனின் பயணம் எப்ப...