Monday, August 12, 2024

கதைப்போமா?


பொதுவாக கொங்கு மண்டலங்களில் குடும்பம் குடும்பமாக இலக்கிய கூட்டங்களில் பங்கெடுத்து கொள்கிறார்கள் என்ற செய்தியை அம்சபிரியா சொன்னபோது நான் வியப்படையவில்லை. காரணம் இலக்கிய கூட்டங்கள் பொதுவான முறையில் கொண்டாட்டங்களுக்கு உரிய ஒன்றாக இருப்பதாக நான் கருதவில்லை. அவை காத்திரமான விஷயங்களை அணுகவும் விவாதிக்கவும் கலந்துரையாடவும் மட்டுமே ஆனது என்று நம்பக் கூடியவன் நான். எனவே தான் இலக்கியவாதிகள் அல்லது காத்திரமான வாசகர்களை மட்டுமே அழைத்து நாங்கள் நிகழ்வுகளை நடத்துகிறோம். முன்பெல்லாம் கல்லூரி மாணவர்களை அழைத்து வைத்து கூட்டங்களை சேர்ப்பது வழக்கம். ஆனால் கல்லூரி மாணவர்கள் ஜோடி ஜோடிகளாக வந்து அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு  பேசி கொண்டிருக்கிறார்களே ஒழிய எந்த பிரயோஜனமும் இல்லாமல் இருந்ததை கண்டு அதன் பிறகு இந்த கூட்டம் சேர்க்கக்கூடிய நிலையை தவிர்த்து விட்டோம். அப்படியொரு சூழலில் தான் தக்கலை இலக்கிய வட்டமும் என் சி பி ஹெச் வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக கதைப்போமா என்கின்ற நிகழ்வை நடத்தினோம். சுமார் 40 பேர் வரை இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். முழுக்க முழுக்க படைப்பாளிகள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்று என்னால் சொல்ல முடியும். அனைத்து அமைப்புகளிலும் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டது மிகவும் பெருமையான ஒரு விஷயம். கிட்டத்தட்ட 25 கதைகள் வரை வாசிக்கப்பட்டது சற்று நெருக்கடியான ஒன்றாக கவனம் இல்லாமல் ஒருங்கிணைத்த நிகழ்வாக மாறிப்போனாலிம் அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும் என்கின்ற உந்துதலில் அதை செய்தோம். சரியாக சொன்னால் இரண்டு நாட்கள் இந்த நிகழ்வு நடத்தியிருந்தால் இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருக்காது. ஆனாலும் நிகழ்வு சிறப்பாக நிகழ்ந்தது. அனைத்து தரப்பு இலக்கிய ஆர்வலர்களும் நிகழ்வை விமர்சியாக பாராட்டினார்கள். 

 நிகழ்வில் துவக்கத்தில் திராவிட பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஷ்ணுகுமாரன் கதையாளர்கள் சாமானிய மனிதர்கள் அல்ல என்றும் அவர்கள் கலைஞர்கள் பிரம்மாக்கள் அவர்கள் இந்த சமூகத்தால் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற தொனியில் பேசி அவர்களால் தான் இந்த சமூகம் உயிர்த்து இருக்கிறது என்ற அளவில் நல்லதொரு முன்னுரையை வழங்கினார். அதேபோல சிறப்புரை ஆற்றிய அம்சப்ரியா (பொள்ளாச்சி இலக்கிய வட்டம்) கதைகளுக்கும் கவிதைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளையும் கதை என்ன செய்யும் என்ற ஒரு உரையாடலையும் கதையின் உடைய தன்மைகள் அதனுடைய தாக்கங்கள் சமூக விளைவுகள் இவை அனைத்தையும் குறித்து விரிவான ஒரு உரையை முன் வைத்தார். அந்த உரை அனைவருக்கும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அதன் பிறகு நேரடியாக கதைப்போமா நிகழ்வுக்கு சென்று விட்டோம். 

முதலில் உஷா தேவி அவர்களால் வாசிக்கப்பட்ட கதை சற்று எதார்த்தமான கதையாக இருந்தாலும் கதை நேரடியாக வாசகர்களை ஈர்ப்பதாக இருந்தது. அவருடைய மொழி இலாவகம் சற்று கலவையாக இருந்ததால் அனைவரும் ரசிக்கும்படியாக இருந்தது. கதையின் உடைய கருப்பொருளான முதுமை குறித்த விஷயம் மிகத் தெளிவான ஒரு பார்வையை முன் வைத்தது. அதன் பிறகு குமரி உத்ரா என்கின்ற சிறுகதை ஆசிரியர் ஒரு பைத்தியக்காரியை குறித்த ஒரு வார்த்தை சித்திரத்தை முன் வைத்தார். கதையின் உடைய உரையாடல்களும் கதையின் உடைய கதை சொல்லல் முறையும் சற்று நேரடித் தன்மை உடையதாக இருந்தாலும் கதை சொல்லும் முறையால் வாசகர்களை ஈர்க்க முடிந்தது. அதனைத் தொடர்ந்து விஜயபூர்ண சிங் அப்பச்சி என்ற  கதையை வாசித்தார்.ஒரு நிலக்கிழாரின் வாழ்வின் வீழ்ச்சி அருமையாக சித்தரிக்கப்பட்டது.அது போல் சப்திகா ஒரு சிவப்பு சேலைக்காரி என்ற கதையை வாசித்தார். அந்த கதை திருநங்கை குறித்த ஒன்றாக இருந்தது.ஒரு பஸ் பிராயணத்தில் திருநங்கையை சந்தித்த அந்த கதை மிக எளிமையாகவும் யதார்த்தமாகவும் வாசகர்களை கவரும் விதமாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து லாசர் ஜோசப் ஒரு கதையை முன் வைத்தார். அந்த கதையும் மிக இலகுவாக அதிக அலங்காரங்கள் ஒன்றும் இல்லாமல் எளிமையாக கதை சொல்லும் முறையில் அமைந்தது. அதனைத் தொடர்ந்து மிகையிலான்  என்பவர் வாசித்த ஒத்த மோன் என்ற கதை மிக அற்புதமான ஒன்றாக பார்வையாளருக்கு விளங்கியது. கதையின் உடைய பேசுபொருள் கதையின் உடைய சமகாலத் தன்மை ஆகியவை மூலம் அந்த கதை முக்கிய கவனம் பெற்றது. ஒரு வயதான தம்பதியினரை முன்வைத்து  இஸ்லாமிய சூழலை அவருடைய ஒரு மகன் காணாமல் போனதை இந்த கதை அதற்கே உரிய பாணியில் மிக அருமையாக சொல்லி சென்றது. 

அதனை தொடர்ந்து அமுதா ஆர்த்தியின் நேசமிகு சுவர்கள் என்ற சிறுகதை மிகுந்த கவனத்தை ஈர்த்த கதையாக சிறுபிராயத்தில் தன்னுடைய தந்தையினுடைய மன ஓட்டங்களை செயல்பாடுகளை அவதானிக்கின்ற ஒரு சிறுமியின் கதையாக அழகியல் முறையில் மிகுந்த கவனத்தை செலுத்தி எழுதப்பட்ட ஒரு கதையாக அது இருந்ததால் அனைவரையும் வெகு இலகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து குமரி ஆதவனின் பக்கிளி என்ற கதை வாசிக்கப்பட்டது. நாகாலாந்தை மையமாகக் கொண்ட தளத்தை வைத்து ஒரு பைத்தியத்தினுடைய கதையை சொல்லுகின்ற இந்த கதை சில தார்மீக பொறுப்புகளையும் விவாதங்களையும் சர்ச்சைக்கு உருவாக்கிய அடிப்படையில் அந்த கதை முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. மிக எளிமையான கதை சொல்லின் மூலம் வாசகர்களை கவர்ந்த இந்த கதை அதன் உரையாடலால் கவனம் பெற்றது. அதனைத் தொடர்ந்து குறும்பனை பெர்லின் என்ற நெய்தல் நிலத்து கலைஞரின் கதை அற்புதமான ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து மொழி எதார்த்தத்தை நெய்தல் நில வாழ்வியலை மிகச் சிறப்பாக படம் பிடித்து சென்றது. அதனுடைய உரையாடலும் மொழி அனுபவம் வாசல்களை கவர்கின்ற ஒன்றாக இருந்தது எனவே இந்த கதை அருமையான ஒரு வாசக அனுபவத்தை தந்தது. அதனைத் தொடர்ந்து சகா ஜோசப் இன் கதை கொரோனாவை மையமிட்டு இருந்தது. கதை சொல்லலில் மாறுபட்ட கோணத்தின் வழியாக கதையை அவர் நடத்திய விதம் நவீன கதையாக அது மாறி இருந்தது. கதை சொல்லல் முறையும்  எழுத்து அழகியலும் கதையை கவனம் பெற வைத்தன. அந்தக் கதையும் வாசகரால் பாராட்டப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து முட்டம் வால்டர் என்பவரால் முன்வைக்கப்பட்ட ஒரு கதை கிட்டத்தட்ட 30 பக்கங்களை உடைய அந்த கதை நெய்தல் நிலத்து மக்களின் வாழ்வு அனுபவத்தை போராட்டங்களை நெருக்கடிகளை பேசுகின்ற ஒரு கதையாக அமைந்தது நெய்தல் நிலத்து மக்களுக்கான தனித்த பிரச்சனையை ஒன்றை முன்னெடுத்துக்கொண்டு இந்த கதை நகர்ந்ததன் காரணமாக அது வாசகர்களை கவருகின்ற ஒன்றாக அமைந்தது. அந்த வகையில் அந்த கதையும் மிக முக்கிய கதையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து சப்திகா என்பவரால் முன்வைக்கப்பட்ட ஒரு கதை  வார்த்தை சித்திரமாக வளர்ந்தது. கதையின் உடைய எளிமையும் நேரடித் தன்மையும் வாசகர்களை நேரடியாக ஈர்த்தது. அவருடைய கதை வாசிப்பு முறை மிகச் சிறந்த ஒரு உதாரணமாக அமைந்தது இதன் காரணமாக ஒரு கதை எப்படி வாசகர்களை வாசிப்பதன் மூலமாக ஈர்த்துவிட முடியும் என்பதையும் அவருடைய கதை காண்பித்து தந்தது. அந்த வகையில் ஒரு நல்ல கதையாக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து சுதே. கண்ணனின் கதை கல்லூரி அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கவிதை கதையாக இருந்தது. அந்த கதை இளைஞர்களை ஈர்கின்ற ஒரு கதையாக இருந்ததால்ல் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அதைத்தொடர்ந்து முபிதா நாசரின் உடைய கதை இஸ்லாமிய வாழ்வியலை அதுவும் மரணத்தின் விளிம்பு என்கிற ஒரு சூழலை மிக அற்புதமான கதையாக மாற்றியிருந்தார். இந்த கதையும் அனைவரையும் கவர்வதாக இருந்தது. இந்த கதையினுடைய கதை சொல்லும் முறையும் எதார்த்தமும் நேரடித்தனமும் கதையின் உடைய பல்வேறு உரையாடல்களும் அனைவரையும் ஈர்ப்பதாக இருப்பதாக இருந்தது. அதனை தொடர்ந்து சினி ராஜா சிங்கின் கதை குமரி மாவட்ட மேற்கு வட்டத்தின் உடைய வாழ்க்கையை சொல்லுகின்ற ஒரு கதையாக அமைந்தது. மிக எளிமையான கதையாக அது அமைந்திருந்தது. இதனால் அது அனைவரையும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. அதைத் தொடர்ந்து ஆகிறா அவர்களுடைய கதை மிக எளிமையாக தன்னுடைய கதை சொல்லும் முறையால்  மிக நுட்பமாக சொன்ன கருத்தால் கதை அனைவரையும் சென்றடைந்தது.கிருஷ்ண கோபால்,இரையுமன் சாகர்,தமிழ்வானம் சுரேஷ் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதைகளால் நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த கதை வாசிப்பு நிகழ்வு நான்கு அமர்வுகளாக திட்டமிடப்பட்டிருந்தாலும் அவை நேரம் இன்மையின் காரணமாக அமர்வாக இல்லாமல் தொடர்ச்சியாக கதை வாசிக்கப்பட்டது. ஆரம்பத்தில் எழுத்தாளர் சிவசங்கர் கதை குறித்த நுணுக்கமான செய்திகளையும் விமர்சனங்களையும் உரையாடல்களையும் முன்வைத்து கதை ஆசிரியர்களுக்கு ஒரு உத்வேகத்தை உருவாக்கி கொடுத்தார். அந்த அடிப்படையில் கதையினுடைய புரிதல் குறித்த பன்முக வாசிப்பு முறை கதையை புரிகின்ற விதம் இவை அனைத்தும் கதை வாசித்தல் நிகழ்வுக்கு மிகுந்த உறுதுணையாக அமைந்தது. இந்த நிகழ்வை சௌமியா சுதாகரன் அறிமுக உரை நிகழ்த்த முஜீப் ரஹ்மான் வரவேற்பு வழங்க ஜான் கிறிஸ்டோபர் அவர்களின் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வுக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைத்த ஜவகர் ஜி அவர்களுக்கு அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நட சிவகுமார் நேர நெருக்கடியை மிக லாவகமாக கையாண்டு நேர்த்தியாக நிகழ்வை நடத்தி முடித்தார். சமீபத்தில் குமரி மாவட்டத்தில் நடந்த அனைத்து இலக்கிய நிகழ்வுகளை விட மிக முக்கிய இடத்தை இந்த கதைப்போமா நிகழ்வு பெற்றது என்று சொன்னால் அது மிகையொன்றும் இல்லை.

No comments:

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள்

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள் பேரா.எச்.முஜீப் ரஹ்மான் ரஹ்மத் ராஜகுமாரன், இவரின் இயற்பெயர் ஏ.பி.எம். அப்த...