Wednesday, March 30, 2016

குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்

 Image result for குணங்குடி
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்கையைத் துறந்து ஆன்மிகத் தேடலில் தன்னை இணைத்துக் கொண்டவர். இஸ்லாம் சமயத்துக்குப் பல பாடல்களை விட்டுச் சென்றவர் குணங்குடி மஸ்தான் சாகிப்.ராமநாதபுரம் மாவட்டம் குணங்குடி என்ற சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் இவர். பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். குணங்குடி மஸ்தான் சாகிப்பின் காலம் கிபி 1788 – 1835க்கு இடைப்பட்டது. அவருடைய தாய்மாமன் புதல்வி மைமூனை மணமுடிக்கக் குடும்பத்தார் கோரிக்கை வைத்த போது, அதை நிராகரித்து விட்டு 17ஆம் வயதில் குடும்பத்தைத் துறந்தார்.

இஸ்லாமிய மார்க்கப் பிரிவுகளில் ஒன்றான காதிரிய்யா தரீகாவின் செயக்ப்துல் காதிரிலெப்பை ஆலிமிடம் மார்க்கக் கல்வி பெற்றார். திரிசிரபுரத்து ஆலிம் மௌலவி ஷாம் சாகிபுவிடம் தீட்சைபெற்றார். தொண்டி மரைக்காயர் தோப்பில் யோக நிஷ்டையிலும் ஆழ்ந்தார். சிக்கந்தர் மலைக்குகையில் சிராசனம் இருந்தார். பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இறைக்காதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகத்தில் நாட்டம் கொண்டவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கிப் பித்தநடை கொண்டார்.குப்பை மேடுகள்கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்த நடையையும் அற்புதச் சித்துகளையும் கண்ட மக்கள் அவரை ‘மஸ்தான்' என அழைத்தனர். அப்பெயரே பின்னர் அவருக்கு நிலைத்தது. இவர் சென்னையில் வாழ்ந்த தொண்டியார் பேட்டை என்ற இடம்தான் பிற்காலத்தில் தண்டையார்பேட்டையானது. ராயபுரத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது.

குணங்குடியார் இஸ்லாமியச் சூபி ஞானியாக அறியப்பட்டாலும்கூட அவரது சீடர்களாக இருந்த பலரும் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களே என்பதில் இருந்து இந்து - இஸ்லாமிய பாரம்பரிய உறவை அறிய முடிகிறது. குணங்குடி மஸ்தான் சாகிப் எழுதிய 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களும் முக்கியமானவை. முகியத்தீன்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. இஸ்லாமியச் சமயத்தை நடைமுறைப்படுத்திய முகமது நபி பற்றிய பாடல்கள் முக்கியமானவை. 

இதேபோல அகத்தீசன் சதகமும் 100 பாடல்களைக் கொண்டது. குருவருள் நிலை தவ நிலை, துறவு நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை வேண்டி உருவான மனத்தின் பதிவுகளாக இப்பாடல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முகமது நபியாண்டவரை சுகானுபவமுற துதித்தல், தவமே பெறவேண்டுமெனல், குறையிரங்கி உரைத்தல் வானருள் பெற்றோர் மனநிலை உரைத்தல், ஆனந்தக் களிப்பு பாடல் பகுதிகளும் இவரது பாடல்களில் அடக்கம். 

குணங்குடியார், அவருக்கென்றே வளர்ந்த தாய்மாமன் மகளை மணம் செய்ய மறுத்துப் போனார். அப்துல் ரகுமான் ’அமுதத்துக்கு ஆசை கொண்ட மனம் அற்ப மதுவை அருவருத்தது’ என்கிறார்.
தனது 17-ஆவது வயதில் ஞானபூமியான கீழக்கரையில், தைக்கா சாகிபு என்றழைக்கப்பட்ட சய்கப்துல் காதிர் லெப்பை ஆலிம் என்னும் ஞானியிடம் மாணாக்கராக இருந்து 1813-இல் முற்றும் துறந்தவராகிறார்.
திரிசிரபுரம் மெளலவி ஷாம் சாகிபிடம் தீட்சை. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையில் 40 நாட்கள் யோக சிஷ்டை. அறந்தாங்கி அருகே கலகம் எனும் ஊரில் மோதம், தொண்டியில் தாய்மாமன் அடங்கிய வாழைத்தோப்பில் 4 மாதம் நிஷ்டை. சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை, நதிக்கரைகள் எனத் தவம். உணவு, சருகு, கிழங்கு, காய், கனி. குப்பை மேடுகளில் குடியிருப்பு. பித்த நடையும் அற்புத சித்துகளும்.

பாரசீக மொழியில் மஸ்த் எனும் சொல்லுக்கு போதை, வெறி எனும் பொருள். கொண்ட கொள்கையில் வெறியாகப் பற்றுதியுடன் இருந்தார். மக்கள் அவரை மஸ்தான் என்றழைத்தனர். ஏழு ஆண்டுகள் வடநாடு பயணம் செய்து ஞானோபதேசம் செய்திருக்கிறார். சென்னை திரும்பியவருக்கு ராயபுரத்தில் பாவா லெப்பை ‘தைக்கா’ (ஆசிரமம்) அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஒன்றர ஆண்டுகள் அங்கே அவர் யோக நிட்டை புரிந்திருக்கிறார்கள்.
சின்னாட்கள் வெளிப்பட்டும் சின்னாட்கள் மறைந்து அடங்கி யோகம் புரிந்தும் வாழ்ந்தபோது நச்சரவங்கள் தீங்கு செய்யாமல் திருந்தன. அவர் சீடர்களாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் இருந்தனர். மஸ்தானிடம் தீட்சை பெற்றவர்களில் ஒருவர் ஆற்காடு நவாப் என்றும் ‘அட்டமா சித்து வல்ல குணங்குடியார் புரிந்த ஒன்பதாவது சித்து இது’ என்றும் கூறுகிறார் அப்துல் ரகுமான். மேலும் அவர் கூறுவது “தாம் சார்ந்திருந்த ‘காதிரிய்யா’ நெறி மரபுப்படி, அந்நெறித்தலைவர், அவருடைய ஞானகுரு முகியித்தீன் ஆண்டவர் பேரில் ‘பாத்திஹா’ (நேர்ச்சைப் படையல்) செய்து வந்தார்.”

பன்னிரண்டு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்த குணங்குடியாரை, இஸ்லாமியர் ஆரிபுபில்லா (இறை ஞானி), ஒலியுல்லா (இறையன்பர்) எனவும், இந்துக்கள் ‘சுவாமி’ என்றும் அழைத்திருக்கிறார்கள்.
1838-ஆம் ஆண்டு தனது 47-வது வயதில் பரிபூரணம் பெற்றவரை தங்கிய இடத்திலேயே நல்லடக்கம் (தறுகா) செய்திருக்கிறார்கள். தொண்டியைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைத் தொண்டியார் என்று அழைத்தத்தால் அவர் வாழ்ந்த இடம் தொண்டியார் பேட்டை – தொண்டையார் பேட்டை ஆயிற்று என்பர்.

பேராசிரியர் அப்துல் ரகுமான் மேலும் தரும் குறிப்புகள் சுவாரசியமானவை. சுஃப் எனும் அரபுச்சொல்லுக்கு கம்பளி என்று பொருள், சூஃபித் துறவிகள் முரட்டுக் கம்பளி ஆடைகள் அணிந்தனர் என்கிறார். சித்தர் மரபு, இறைவனை வாலை, மனோன்மணி என்றனர். சூஃபிகள் இறைவனை நாயகியாகப் பாவித்தனர்.
‘சமய மெல்லாம் சக்தியுண்டு சிவமும் உண்டு
சண்டாளர் பிரித்தல்லோ தள்ளினார்கள்’
என்ற கைலாயக் கம்பளிச்சட்டை முனிவர் பாடலை மேற்கோள் காட்டும் அப்துல் ரகுமான் சிவம் – சக்தி எனும் (Matter – Energy) சொற்களை புராணச் சொற்களாக அன்றி யோக பரிபாஷைச் சொற்களாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்,
குணங்குடியார் பயன்படுத்தும் துவள மணிமார்பன், அளகேசன், காலன், சனீஸ்வரன், இந்திரன் சொற்களையும் அவ்விதமே புரிந்து கொள்ள வேண்டும்.
‘மேலூரு வீதியில் வையாளி போட்டங்கு
விளையாட அருள் புரியவும்’

என குணங்குடியார் பாடிய மேலூர் மதுரைக்கு அருகிலிருக்கும் மேலும் எனப்புரிந்து கொள்வது அபத்தமானது என்கிறார் அப்துல் ரகுமான்.
பல் மதத்தவரும் குணங்குடியார் மீது பக்தி கொண்டு ஒழுகி இருக்கிறார்கள். சித்தர் மரபின் சூஃபி ஞானியான மஸ்தான் சாகிபுவை, மகாவித்வான் திருத்தணிகை சரவணவப் பெருமாள் ஐயர் பாடிய நான்மணி மாலையில்,
‘குருவாய் அடுத்தோர்க்கு அருள் சுரக்கும்
கோதில் குணஞ்சேர் குணங்குடியா’
என்கிறார்.
வேங்கடராயப் பிள்ளைக் கவிராயர் பாடிய அறுசீர்க்கழிநெடியடி ஆசிரிய விருத்தத் தோத்திரப்பா –
‘சொந்த மிலையோ பன்னாளும்
தொழுத திலையோ அடிமையெனும்
பந்த மிலையோ பிள்ளைகளைப்
படைத்த திலையோ வருந்துமவர்
சிந்தை யறியும் செயலிலையோ’
என இரங்குகிறார்.

குணங்குடியாரின் ‘முகியித்தீன் சதகம்’, ‘அகத்தீசன் சதகம்’, ‘பராபரக் கண்ணி’, ‘எக்காலக் கண்ணி’, ‘மனோன்மணிக் கண்ணி’ பிற கீர்த்தனைகள் யாவும் புகழ் பெற்றவை.
முகியித்தீன் சதகத்தில்,
‘நீக்கமற எங்கெங்கும் நின்றுநிறை கின்றபொருள்
நேரில் என் முன்னிற்கவே……
போக்குவரவு அற்ற பரிபூரண ஆனந்தமெப்
போதும் என் முன்னிற்கவே’
என்று இரங்குகிற குணங்குடியார்.
அகத்தீசன் சதகத்தில்,
‘கொள்ளிவைத்து உடலைக் கொளுத்துமுன் முச்சுடர்க்
கொள்ளிவைத் தருள் புரியவும்’
என்று வேண்டுகிறார். முச்சுடர்க் கொள்ளி என்பது யோகக்கனல்.
பராபரக்கண்ணி மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டது. இரண்டு இரண்டடிகள் கொண்டது.

சமயங்களைக் கடந்த மதங்களைக் கடந்த பாடல்களைக் கொண்டது குணங்குடி மஸ்தான் பாடல்கள். தாயுமானவர் பாடல்கள் போல் பெரும் சிறப்புக்குறியன. ஏறத்தாழ ஒத்தக் கருத்தினை கொண்டவை. சரவணப் பெருமாள் ஐயர், ஐயா சுவாமி முதலியார், வேங்கடராயப்பிள்ளைக் கவிராயர் சபாபதி முதலியார், மற்றும் செய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர் போன்றவர்களால் புகழ் மாலைப் பாடப்பெற்ற சிறப்பு திரு குணங்குடி மஸ்தான் பாடல்களுக்கு உண்டு.
இவர்களின் சில பாடல்கள்:
அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.
எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்… அந்த பேரின்பைதை தந்திடுவாய்.
ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.
ஆதியானவனே… ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே..அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே
வேத மறைப்பொருளை வேதாந்தத் துஉட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே
வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள்யாருள்ளார் பராபரமே
அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே
அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும்மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே.
நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே
நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே,நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே.
 

குணங்குடியாரின் தத்துவம் இது தான்.
வஹ்த்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று  அல்லாஹ் மாத்திமே இருக்கின்றான். படைப்புகள் என்பது சுயமான உள்மை அற்றது என்பதை​ மறுப்பவர்கள் இதை சிந்தித்துப்பாருங்கள்.

அல்லாஹ் தஆலாவின் தன்மைகள்திருநாமங்கள் அனைத்தும் பூர்வீகமானவை. புதிதாக உருவானவை அல்ல. அவனது தன்மைகளும் திருநாமங்களும் மாற்றமடைவதில்லை.. அவன் படைப்புகளை படைப்பதற்கு முன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே படைப்புகளை படைத்த பின்னரும் எந்த மாற்றமுமின்றி இருக்கின்றான். என்பதுதான் சரியான நம்பிக்கை.
அவ்வாறாயின் அல்குர்ஆனில் அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

{وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ [الحديد: 4

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (57-04)

என்று கூறுகின்றான்.

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளுடன் “உடன் இருத்தல்” எனும் தன்மை அல்லாஹ்வுக்கு புதிதாக ஏற்பட்ட ஒரு தன்மையாக இருக்க முடியாது. அது அல்லாஹ்வின் பூர்வீகமான தன்மையாகவே இருக்கவேண்டும். படைப்புகளை படைத்தபின் அவைகளுடன் அல்லாஹ் இருப்பது பற்றி பிரச்சினை இல்லை. படைப்புகளை படைக்க முன், படைப்புகளே இல்லாதபோது அவைகளுடன் அல்லாஹ் இருப்பது எவ்வாறு? என்பதை சிந்திய்யுங்கள்.

படைப்புகளை படைக்க முன் அவை அல்லாஹ்வின் தாத் எனும் உள்ளமையிலேயே இருந்தன. அப்போது அவற்றுக்கு தனியான தோற்றம் இருக்கவில்லை அந்தநேரத்தில் அவை அல்லாஹ்வுடனேயே இருந்தன. படைப்புகளைப் படைத்தபின் அவற்றுக்கு தனியான தோற்றம் உருவானது. ஆயினும் அவை அல்லாஹ்வை விட்டு பிரியவுமில்லை. அல்லாஹ் அவற்றை விட்டு  பிரியவுமில்லை. எப்போதும் “நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்”அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச் சமீபமாக இருக்கின்றான். அவன் அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச் சமீபமாக இருக்கின்றான்.

No comments:

சாமான்யரின் வெறி - பணி மலையாளபடம்

ஜோஜு ஜார்ஜ், பணி(வேலை) திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமாகிறார், சரியான வேகத்தில் நிகழ்வுகள் வெளிப்படும் ...