Friday, July 08, 2005

என்னுள் பிறரும் பிறருள் நானும்

Abstract wp Pictures, Images and Photos

அறிமுகம்

எனக்கு எப்போதும் இவ்விரு ஒப்புமைகளில் குழப்பம் ஏற்படுவதுண்டு. என்னுள் பிறரும் பிறருள் நானும் இருப்பதாகத் தோன்றும் தருணங்களில் ஏற்படும் குழப்பம் அது. புனைவியலாளர்கள் சிலர் இந்தப் பூவுலகிற்கு வேறெங்கிருந்தோ உயிர் வந்ததாகவும் அதைக் கொண்டுவந்தவர்கள் வேற்றுலகவாசிகள் என்றும் நம்புகின்றனர். இதிலும் எனக்குக் குழப்பம்தான். உயிரோடு இவ்வுலகிற்கு வந்துவிட்ட பின்னும் அவர்கள் வேற்றுலக வாசிகள்தாமா என்னும் குழப்பம். நம்மிலிருந்து வேறுபடுத்திச் சொல்லும்படி அவர்களுக்கு நெற்றியில் கண் இருந்திருக்கலாம். அதன்மூலம் நாம் காணாததையெல்லாம் அவர்கள் கண்டிருக்கலாம். அவற்றை நமக்குச் சொல்லியிருப்பார்கள். முதலில் மொழியின் குறுக்கீட்டால் புரியாமை நிலவியிருந்தாலும் புரிதலின் பல்வேறு பரிமாணங்கள் பின்னர் நமக்குக் கை கொடுத்திருக்கும். குழந்தைகளுக்குப் படம் காட்டிப் புரிய வைப்பதைப்போல் நமக்குப் புகட்டியிருப்பார்கள். மேலதிகப் புரிதலுக்காக கதைகளை, கவிதைகளை, சித்திரங்களை, இசைக் கோலங்களை அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். சில கருத்துருக்கள் சொல்லில் முழுமை பெறாதபோது உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்கியிருக்கக் கூடும். (இதிலுள்ள ஆபத்து என்னவெனில் நெற்றிக்கண் ஒரு கற்பிதத்தின் ஊற்றுக்கண் என்பதை வசதியாக மறந்துவிட்டு, அதை ஞானத்தின் குறியீடாக அரசியல்படுத்தி, வேற்றுலகவாசிகளின் சூத்திரக் கயிற்றில் பூவுலகவாசிகள் வெறும் பாவைகள் என்பதாக அணி பிரித்து சண்டையிட்டு, அறிவியல் சாத்தியப்பாடுகளின் கற்பித வழிகளை அடைத்து விடுவதுதான்.)

இயற்பியலின் முதல் படிகள்

பொருள்கள் சிறியதிலிருந்து பெரியதாகின்றன. முட்டையிலிருந்து குஞ்சு பொரிகிறது. குஞ்சு பெரிதாகி முட்டையிடலாம். ஆனால் குஞ்சு முட்டையாவதில்லை. காலக் கணக்கறியப்படாத காலத்தில் பூவுலகம் முழுதும் நீராய் விரிந்திருந்தது. பின்னொரு காலத்தில் அந்நீரில் நுண்ணுயிரிகள் மிதந்து கொண்டிருந்தன. பிறகு அவை வளர்ந்து பெரிதாகின. அவற்றுள் சில நாளாவட்டத்தில் ஒளியுணர் உறுப்புகளும் நீந்துவதற்கான செதில்களும் பெற்று மீன்களாயின. கால்கள் முளைத்துத் தவளைகளாயின. இப்படியே வளர்ந்து நீர்வாழ் உயிரினங்களும் நிலம்வாழ் உயிரினங்களும் மெல்லமெல்ல உருவாயின. ஊர்வன, டினோசார்கள், குட்டி போடுபவை (எக, அணில், கங்காரு), பாலூட்டிகள் (மான், பூனை, புக, சிங்கம், குரங்கு, மனிதன்) என உயிர்வடிவாக்கங்கள் பெருகி வளர்ந்தன. யோசித்தால் இதுதான் வைணவர்கள் சொல்லும் தசாவதாரம் போலும். அதில் கடைசியாக வருவது கல்கி அவதாரம்- அது ஜார்ஜ் புஷ் மாதிரி அமைந்துவிடாமலிருந்தால் சரி.

பழங்குடி மக்கள் தங்கள் எண்ணங்களையெல்லாம் கானுயிர் வடிவங்களாகவே வரித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் பொம்மைகளை உயிருள்ளவையாய்ப் பாவிப்பதைப் போன்ற வாழ்முறை அது. காலம் செல்லச்செல்ல கானுயிர்கள் தங்களைப்போல் இல்லை என்னும் பட்டறிவைப் பெற்றார்கள். ஆகவே அவர்கள் தங்கள் பாவனைப் பொருள்களுக்குப் பல்திறச் செழுமைகளையும் உயிரூட்டங்களையும் வழங்கினார்கள். இப்படியாகத்தான் மனித மூளை இயக்கம் பெறுகிறது. நம்மைச் சுற்றியுள்ள வெளித்தாக்கங்கள் நம்மைக் கட்டமைக்கும் உள்ளாக்கங்களாகின்றன. குழந்தையாய் நாம் பெறும் பண்பாட்டுப் பயிற்சிகள் நமது இயல்பிகந்த உள்ளுணர் கட்டுமானத்தின் ஆழ்நிலைப் படிமானங்களாகின்றன. இந்த உள்ளாக்கக் கருத்தமைதிகள் பழங்குடிச் சாமியாடிகளாலும் சூனியக்காரர்களாலும் ஓவியர்கள்- ஞானிகளாலும் நுண்ணுணர் தகைமைகளாய்த் தொடர்ந்து பேணப்பட்டு வந்துள்ளன. உழைப்பை நல்கும் உயிரற்ற எந்திரங்களையும் உயிருள்ள ஊழியர்களையும் களப்பொருள்களாக்கிய தொழில் யுகமானது பொருள்களை அர்த்தப் படுத்துவதற்கான புதிய பார்வையை நமக்கு வழங்கியுள்ளது.

அறிவியல் விழிப்புணர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை நம்புவதே கடுங்குற்றமாய் இருந்தது. என்னைத் தினமும் தாங்கி நிற்கும் அன்னைபூமி இன்னொரு பொருளைச் சுற்றி வருவதா! (இது ஏதோ தி.ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” போலல்லவா இருக்கிறது.) பூமி நகர்கிறது- சுற்றுகிறது என்றால் அது நான் அறியாமலா?

ஆம். வான்வெளியிலுள்ள பிற பொருள்களை நாம் உற்று நோக்கி உள்வாங்கிக் கொள்ளாத வரை அது நமக்குத் தெரியப் போவதில்லை. பூமியைப் போன்ற மற்ற கோள்களையும் பாருங்கள். அவை யாவும் பூமியைச் சுற்றவில்லை. மாறாக, பூமியும் சேர்ந்து சூரியனையே சுற்றுகின்றன. உண்மையில் நாம் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறோம் என்பதை அறியும்போது மிகவும் அச்சமாகவே உள்ளது.

வானம் முழுதும் ஒரு கணினித் திரைபோல இருந்து, அதில் நாம் சித்திரம்போல அசைவற்றிருந்தால் நன்றாயிருக்கும் இல்லையா?

நிச்சயமாக இல்லை. நிஜத்தில் அது ஒரு சகிக்க முடியாத சகப்பூட்டும் அனுபவமாகவே இருக்கும்.

மரணத்துக்குப் பின் நட்சத்திரங்களாகிப்போன எனது முன்னோர்கள் கதி என்ன?

அவர்களைப்பற்றி நீ ஒன்றும் கலைப்பட வேண்டாம். அவர்கள் மேலேதான் இருக்கிறார்கள். ஆனால் சும்மா இல்லை. நம்மைப் போலவே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நிலவு, வானம், நட்சத்திரங்கள், அண்ட சராசரங்கள் பற்றி என் அன்பான பாட்டி சொன்ன அருமையான கதைகளெல்லாம் என்னாவது?

நல்லது, அவை நம்மை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்காற்றியவை என்பது மறுக்க முடியாத உண்மை.

சரி, கலிலியோவும் நியூட்டனும் என்னானார்கள்? அரசியல் உள்நோக்கமுள்ள மண்டை கனத்தவர்களா அவர்கள்?

பாவம், அப்படியில்லை. கண்ணாடியைத் தேய்த்து, தொலைதூரக் கோள்களைத் துல்லியமாகப் பார்க்கப் பயன்படும் குவி வில்லைகள் செய்யத் தெரிந்த ஆகச்சாமானியர்கள்தாம் அவர்கள். வானத்தை ஊடுருவும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டவர்கள் அவர்கள்.

எனில், போப் எதற்காக கலிலியோ மேல் கோபம் கொள்ளவேண்டும்?

அது ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சினை. போப்பின் தேவாலயங்கள் பண்ணையடிமைச் சமூக மதிப்பீடுகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அதிகார பீடங்கள். அறிவியலற்ற குருட்டு நம்பிக்கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கோலோச்சிய மையங்கள். அவர்கள் நம்பிக்கைப்படி பூமியைச் சூரியன்தான் சுற்றி வருகிறது. சூரியனை பூமி சுற்றுவது உண்மைதான் என்றாலும் அதை ஒத்துக்கொள்வதென்பது அந்நாட்டுப் படிப்பாளிகளையும் இறையியலாளர்களையும் ஏன், போப்பையும் சேர்த்தே அடிமுட்டாள்களாக்கிவிடும். அது போப்பின் அதிகாரத்துக்கு விடும் அறைகூவல் என்பதோடு ஒருவகையில் கடவுளையே மறுப்பதாகிவிடும். போப் கடவுளுக்குச் சமம் அல்லவா. தமிழில் கடவுளுக்கு ஆண்டவன் என்றொரு அழகான பெயர் உண்டு- ஆள்கிறவன் என்னும் அர்த்தத்தில்.

ஐரோப்பா நெடுகிலும் மூண்ட விவசாயிகளின் கலகமும், ஹாலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் சீர்திருத்த லுத்ரன் பிரிவை ஆதரித்து நின்ற வணிக சமூகங்களும் கொடுத்த நெருக்கடியில் திணறிக் கொண்டிருந்த இத்தாலிய கிறித்துவப் பேரவை கலிலியோவின் முன்வைப்புகளை ஏற்றுக் கொள்வதென்பது தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக்கொள்வதற்கு ஒப்பானது. ஏசுநாதர் உயர்த்திப் பிடித்த “பிறருக்காகப் பாரஞ் சுமக்கும் அன்பாகிய கடவுள்” துன்புறும் விவசாயிகள் பின்பற்றுவதற்கு மட்டும்தான். இந்தக் கடவுளைக் கலகக்காரர்களைத் தண்டிக்கும் அச்சத்தின் உருவகமாக வெளிப்படுத்துவதே இத்தாலியப் பழமைவாத சமயப் பேரரசின் தேவையாயிருந்தது. அரசியல் அறிவில்லாத கலிலியோ என்னும் மூடருக்கு அவர்களது கோபம் புரியவே இல்லை.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு போப் ஜான் பால், கலிலியோவுக்குச் செய்த அநீதிக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அதுகூட தன்னை மீறி வளர்ந்துவிட்ட முதலாளித்துவ அதிகாரத்துடன் அவர் செய்துகொண்ட சமரசத்தின் வெளிப்பாடுதான். பழைய பண்ணையடிமைச் சமூகக் கடவுள்கள் அதிகாரமற்றுச் சுருங்கிப் போனதை இவ்வளவு காலதாமதத்திற்கு அப்பால்தான் அவர்கள் ஒத்துக்கொள்ள நேர்ந்திருக்கிறது.

நாம் ஒரு கல்லை வானத்தை நோக்கி விட்டெறிந்தால் அது மேலே மேலே வளைந்தேறிச் சென்று பின்னர் அதுபோலவே வளைந்திறங்கி பூமியில் வந்து விழுகிறது. பூமியானது உருண்டையாய் இருப்பதால், பூமியை வந்தடைய முடியாத அதிமனித சக்தியுடன் அந்தக் கல்லை மேல்நோக்கி எறிந்தால் என்னாகும்? அது வளைந்து வளைந்து மேலேறி, பூமியிலிருந்து வெகுதூரம் சென்று பூமியை எட்ட முடியாமல் வளைந்து வளைந்து விழுந்து கொண்டே இருக்கும்- அதாவது நாம் செலுத்தும் செயற்கைக் கோள்களைப்போல அந்தக் கல்லும் பூமியை வட்டமடிக்கும். அதன்மூலம், பொருள்கள் கீழே விழுவதும் எகிறிச் சென்று சுற்றி வருவதும் ஒரே இயற்பியல் விதிப்படிதான் என்பதை அறிகிறோம்.

நீரில் கல்லை விட்டெறிந்தால் அது வட்டங்களாக விரிந்து செல்லும் சிற்றலைகளை உண்டாக்குகிறது. ஒரே சீராக அருகருகே நிற்க வைக்கப்பட்டுள்ள மிதிவண்டிகளில் ஒன்றைத் தட்டிவிட்டால் மளமளவென எல்லா வண்டிகளும் சாய்ந்து விழுந்து ஒரு அலையடிப்பை உருவாக்கும். கடலில் காற்றின் சலனத்தால் அலைகள் தோன்றுகின்றன. நீருக்கும் நிலத்துக்கும் இடையிலான வெப்ப மாறுதல் காற்றில் சலனத்தை ஏற்படுத்துகிறது. இவையெல்லாம் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான எளிய சான்றுகள்.

பழமை பேசும் கத்தோலிக்க சமூகத்தில் உட்கார்ந்துகொண்டு கலிலியோவால் இவ்வெளிய கருத்துகளையெல்லாம் விளக்கிச் சொல்லி நிறுவ முடியவில்லை. அதற்கு இங்கிலாந்திலிருந்து நியூட்டன் பிறந்து வரவேண்டியிருந்தது. இங்கிலாந்து, தன் மன்னனையே கொன்றுவிட்டு, ஓரளவு மதச்சார்பிலிருந்து விடுபட்டு, புதிய விழுமியங்களை உருவாக்கிக் கொண்டிருந்த நேரம் அது. அந்தச் சமயத்தில் கத்தோலிக்க அதிகார மையத்துக்கெதிராக கிளர்ச்சிகளும் விவசாயப் பெருங்குடிகளின் கலகமும் பரவிக் கொண்டிருந்ததால், புதிய ஆட்சியாளர்கள் புதுப்புது சட்டங்களையும் நவீன வழிமுறைகளையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். அத்தகையதொரு புதிய சகாப்தத்தில்தான் நியூட்டனால் தன் இயற்பியல் கோட்பாடுகளை- அதாவது, சூரியன், பூமி அல்லது மற்றெந்த கோளுக்கும் தனித்த சிறப்புத் தகுதிகள் என்று ஒன்றுமில்லை. ஒவ்வொரு கோளுக்கும் அதன் கனபரிமாணங்கள் என்னவாயிருந்தாலும் அதற்கென உள்ளார்ந்த மதிப்பு ஒன்று இருந்தது. அதுதான் அதன் பொருண்மை (Mass)- பொருள்திணிவு. அந்த மதிப்புதான் அதன் சுழற்சியைத் தீர்மானிக்கிறது. அதுவே அதன் இயற்பியல் தத்துவம்- என்னும் கோட்பாடுகளை முன்வைப்பது எளிதாயிருந்தது.

முதலாளித்தவத்துக்குப் பெரிதும் ஒத்துப்போவதான இவ்விதிகள் ஒரு பொருளுக்கு அதன் உள்ளார்ந்த மதிப்பீட்டைத் தவிர வரலாற்று ரீதியான வேறெந்த முக்கியத்துவத்தையும் இல்லாமலாக்குகின்றன. ஆனால் அவையும் ஒரு வரையறைக் குட்பட்டவையாகவே இருந்தன. உதாரணமாக, நியூட்டனின் விதியானது சூரியக் கோள்கள் அனைத்தும் ஏன் ஒரே திசையில் சுழல்கின்றன என்பதற்கு விடையளிப்பதில்லை. அதை உய்த்தறிய நாம் காலத்தால் பின்னோக்கிச் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் ஒட்டுமொத்த சூரியக் குடும்பமும் நீர்ம ஊடகமாகப் பரந்து விரிந்து சுற்றிக் கொண்டிருந்தது. பின்னர் அந்த நீர்மம் உறைந்து, விரிசலுற்று, தனித்தனியே சுருங்கித் திரண்டு, இப்போது நாம் பார்க்கும் தன்மையிலான கெட்டிக் கோள்களாக மாறின. இப்படிப்பட்டதோர் அனுமானத்துக்குள்தான் நாம் அதற்கு விடை தேட வேண்டும். எனினும் நியுட்டனின் விதி ஈதர் போன்ற ஊடகச் சுழற்சியின் சாத்தியக்கூற்றை மறுத்து ஒதுக்கிவிடுகிறது. நியூட்டனின் விதியை பெரும் பரப்புக்கு (சமூகத்துக்கு) எதிராக, துகள்களை (தனிமனிதர்களை) முன்னிறுத்தும் கோட்பாட்டின் தொடக்கம் என்று சொல்லலாம். அதாவது, சமூகமானது அதில் பங்கேற்கும் தனிமனிதனுடைய ஒருங்கிணைப்பின் மூலமாகவே விளக்கம் பெறுகிறது.

நியூட்டன் உந்துசக்தி (Force) என்னும் கருத்துருவத்தை முன்மொழிந்தவர். உயிரற்ற பொருள்கள் ஒன்றையொன்று ஈர்க்கவும் விலக்கவுமான உயிர்ப்பு விசையாக இதை நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, இது ஒரு செயலூக்கி போலப் பொருள் தருகிறது. ஆனால் புவிஈர்ப்பில் அதன் அர்த்தத்தை இனிமேல்தான் வரையறுக்க வேண்டும். நாம் ஒருவரைப் பற்றிக்கொள்ள அல்லது விலக்கிவிட நம் கைகளைப் பயன்படுத்துகிறோம். இங்கு கை ஒரு முகவரின் பணியைச் செய்கிறது. புவிஈர்ப்பில் அப்படியொரு முகவாண்மையை இனிமேல்தான் கண்டறிய வேண்டும்.

ஒரு அனுமானத்தை விளக்க நாம் ஒரு புதிய கருதுகோளை உருவாக்குகிறோம். அது கொஞ்ச காலத்திற்கு வெற்றிகரமாகக் கைகொடுக்கும். ஆனால் அடுத்த கட்ட வளர்ச்சியின் போது அதுவே தடைக் கல்லாகிவிடுவதுண்டு.

சார்புக் கொள்கை (Relativity)

நியூட்டனும் ஐன்ஸ்டீனும் மண்டை கனத்தவர்களோ கெட்டிக்காரர்களோ அல்லர் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் அவர்கள் ஆகச்சாமானியர்கள். ஆனால் எந்தக் கருத்தையும் ஆழ்ந்து பரிசீலிக்கும் கூர்த்த மதிபடைத்தவர்களாய் இருந்தார்கள். அவ்வாறு செயல்படுவதற்குத் தேவையான அறிவியல்சார் அனுமானங்களும் ஏராளமான கால அவகாசமும் அவர்களுக்கிருந்தன. தொழிற்புரட்சி உருவாக்கிய தேவைகளால் அவர்களது ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல வழிகளும் வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் அவர்களுடைய பல ஆய்வுவிதிகள் கடைசிப் புள்ளி வரை தீர்வு காணப்படாமல் தொங்கலாகவே விடப்பட்டிருந்தன. அவற்றைத் தீர்ப்பதும் அக்காலகட்டத்தில் இயல்வதாயில்லை. ஒரு கட்டத்தில், ஈதர் போன்ற வாயுஊடகம் ‘வெளி’யெங்கும் விரவிப் படர்ந்திருந்ததாகவும், அதில் மின்காந்த அலைகள், ஒளிஅலைகள் போன்ற பல்வகைப்பட்ட அலைகளும் மிதந்து சென்றதாகவும் உறுதியாக நம்பப்பட்டது.

மேம்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகள் அதுபற்றி ஆழமாகச் சோதித்தறிய உதவியாயிருந்தன. அச்சோதனைகளின்படி, இந்த அகிலம் ‘அணுக்கள்’ என்னும் பொருள்களாலேயே அடுக்கப்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டது. இதன் துணைவிதியாக, “வெளி”யில் அணுக்கள் இல்லையெனில் அங்கு வேறெதுவும் இல்லை’ என்னும் முடிவு எட்டப்பட்டது. இந்தச் சிந்தனைக் கீற்றுதான் “பொருள்களுக்கிடையே வெற்றிடம் என்பதுதான் அவற்றின் சரியான நிலைப்பாடாக இருக்க முடியும் என்னும் முடிவை எட்ட ஐன்ஸ்டீனுக்கு வழியமைத்துக் கொடுத்தது. எனில், ஒளி எப்படி வெற்றிடத்தினூடே பயணம் செய்யும்?... கோளங்கள், உடுக்கள் யாவும் வெறுமையில் பயணிக்கும்போது ஒளி ஏன் பயணிக்க முடியாது? ஆனால் ஒளி என்பது அலையா, அல்லது துகளா? இது ஊடகத்தின் மாயையா, அல்லது ஊடகம் கசியவிடும் திவலையா?
உலகத்தில் மாயைகள் என்று ஒன்றுமில்லை. இருப்பவை சிக்கல்களும் குழப்பங்களுமே. அவற்றைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வையும் காணறிவையும் வழங்கக்கூடிய மதிநுட்பமே இப்போதைய தேவை.
நியூட்டன் உந்துசக்தி என்னும் கருத்துருவை அறிமுகப்படுத்தித் தொங்கலில் விட்ட ஈரொட்டான புள்ளிகளை ஹாமில்டன் தன் கணித அறிவினைக்கொண்டு நிறைவு செய்தார். ஐன்ஸ்டீன் முன்மொழிந்த தானியங்கிச் சமனி( Principles of Equalance of Inertial Frame) விதியானது “உந்துசக்தி”யின் சில புதிர்களை வெளிச்சப்படுத்த உதவியது.

இயற்பியலானது பொருண்மைக்கும் ஒளிக்கும்(Mass and Light) இடையிலான உறவில் மேலும் சில துலக்கங்களை வேண்டுகிறது. பொருண்மை-ஆற்றல் (Mass - Energy), “வெளி”-காலம்(Space - Time) போன்ற சமனி விதிகளை ஐன்ஸ்டீன் முன்வைத்தார். அதாவது, யூக்ளிட் முன்வைத்த பழசாகிப்போன நேர்கோட்டுச் சிந்தனையை ஊடுருவி, இடஅளவீடானது பொருளின் ஈர்ப்பால் வளையும் என்பதை விளக்கினார். இதை இன்னும் கொஞ்சம் விளக்கிச் சொல்லலாம். கோள வடிவிலான பூமியில் இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள தூரம் என்பது ஒரு நேர்க்கோடல்ல; துல்லியமாகச் சொல்வதெனில் அது ஒரு வளைவுக்கோடே. இவ்வாறான ஐன்ஸ்டீனின் முன்வைப்புகளையடுத்து, யூக்ளிடின் நேர்கோட்டுச் சிந்தனையில் ஊறிக் கெட்டிதட்டிப்போன அவநம்பிக்கைவாதிகளில் சிலர் “இது ஒருவகை யூத சூழ்ச்சி” என்றே எண்ணினர். உண்மையைச் சொல்வதெனில் இவையொன்றும் புதிய செய்தியல்ல. இச்சிந்தனைப் போக்குகள் பலகாலமாகப் பலராலும் வளர்க்கப்பட்டு வந்தவைதாம். ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள ஐன்ஸ்டீனே கூறியதைப்போல அவை ஒன்றும் கேலிக்குரியவை அல்ல; மாறாக, உண்மையின் சாயல்களைத் தாங்கி நிற்பவையாகும். எப்படி ஜார்ஜ் புஷ் ஹிட்லரின் சரியான வாரிசோ, அதைப்போல ஐன்ஸ்டீனை நியூட்டனின் நேரடி வாரிசாகக் காட்டும் சிந்தனைகள் அவை. ஐன்ஸ்டீன் இட அளவீடுகளையும் நேர அளவீடுகளையும் ஒருங்கிணைத்து மிக எளிதாக விளக்கங்கள் தந்தார். உதாரணமாக, கடிகாரத்தில் முள் எதைக் காட்டுகிறது? ஒரு இடத்தைத்தானே? ஆனால் அதை நேரமாகக் காண்கிறோம் அல்லவா? இச்சிந்தனையின் விளைவாகப் பொருண்மையும் ஆற்றலும் ஒருங்கிணைகின்றன. மேரி கியூரி அணுப்பிளவைப் பற்றி ஆராய்ந்தபோது பொருளை ஆற்றலாக மாற்றலாம் என்பது தெளிவாகியது. இதைத்தான் அணுசக்தி என்கிறோம்.

தத்துவார்த்தமாக முற்றுவெளி- காலம் (absolute space time) வகைப்பட்ட கருத்துநிலை துல்லியமான அளவீடுகளில் பொருந்தி விடுவதில்லை. கொஞ்சம் இளைப்பாறலாக இப்படி யோசிக்கலாம். இந்தியாவில் கிராமங்களும் பழங்குடிச் சமூகங்களும் இன்னும் தீவுகளாகவே தனிமைப்பட்டுக் கிடக்கின்றன. இங்கு அம்மக்களை நோக்கி காலத்தினூடாகப் பயணிப்பது என்பது “வெளி”யிலிருந்து நகரத்திற்கும், நகரத்திலிருந்து கிராமத்திற்கும், கிராமத்திலிருந்து வனப் பகுதிகளுக்குமான- அதாவது நாகரிகச் சமூத்திலிருந்து பழங்குடிச் சமூகத்துக்குச் செல்லும் ஒரு பின்னோக்கிய பயணமாகவே அமைகிறது. இதை இன்னொன்றின் ஒப்புமையாகப் பார்க்கலாம். தொலைதூர உடுக்களிலிருந்து வரும் ஒளிக்கற்றை நம்மை வந்தடைவதற்கு பன்னூறாயிரம் ஆண்டுகளாகின்றன. எனவே, நாம் தொலைநோக்கியில் பார்க்கும் ஒளிக்கீற்றுகள் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவைதாம். இப்படியாகத்தான் நாம் அண்டத்தின் ஆதிமூலத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறோம்.

சார்புக் கொள்கையானது, நாம் தனித்துவமானவை என்று கருதிக்கொண்டிருக்கும் “வெளி”, காலம் போன்றவை ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் பற்றிப் பேசுகிறது. இதிலிருந்து “தனித்தஃ அளவீடு என்று ஒன்றுமில்லை. “மற்றதன்” அளவீட்டைச் சார்ந்துதான் எதுவும் அர்த்தம் பெறுகிறது. காலம், “வெளி”க்கிடையிலான எந்த அளவீடும் அவை ஒன்றுக்குள் ஒன்று கொண்டுள்ள சார்புநிலைக் குறியீடுதான். இவ்வகைக் கருத்தனுமானக் குறியீடுகளைக் கொண்டுதான் பொருள்களால் நிறைந்த இவ்வுலகத்தைப் புரிந்துகொள்ள நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.

மேலும் சிக்கலான கணக்கீடுகள்:

வான்அறிவியல் எளிதில் புரியக்கூடிய பகுதியாகும். சமூகப் பிரச்சினைகளோவெனில் ஆகச் சிக்கலானவை. காரணம், அவை மனிதர்களால் நூற்கப்படுபவை. சிடுக்குகளால் ஆளப்படுபவை. சினிமாவில் பார்த்திருப்பீர்கள்: வர்க்கம், மதம், சாதி, மொழியால் வேறுபடும் இரு குடும்பங்களிலிருந்து வந்த இளைஞனும் யுவதியும் ஒருவரையொருவர் விரும்புவார்கள். ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் அதை மூர்க்கமாக எதிர்ப்பர். பார்வையாளர்கள் காதலர்களுக்காக உருகுவார்கள். அவர்கள் காதல் வெற்றி பெற வேண்டுவார்கள். தோல்வியடைந்தால் கதறியழுவார்கள். ஆனால் இதே பார்வையாளர்கள் தங்கள் குடும்பங்களில் அப்படியொரு காதல் மலர்ந்துவிட்டால் சினிமா பெற்றோர்களைவிடக் குரூரமானவர்களாக மாறி அதை நசுக்குவார்கள். அப்படியொரு இரட்டைநிலை அவர்களிடம் செயல்படும். நீங்கள் திகைத்துப் போவீர்கள், சினிமாக் காதலர்களுக்காகக் கதறியழுதவர்களா இவர்கள் என்று. நான் பேசும் “நான்Xஅவர்கள்” பற்றிய உறவுநிலைக் கருத்தாக்கம் இதற்கொப்பானதுதான். இயற்பியலிலும் இதே பிரச்சினையை- அலைXதுகள் இருமை நிலையை நாம் பார்க்கலாம். அணுவில் உள்ள எலக்ட்ரான் சில சமயம் அலை போலும் சில சமயம் துகள் போலும் நடந்துகொள்கிறது. அணுவுக்குள் அமரும்போது ஒருவிதமாகவும், தனித்திருக்கும்போது வேறு விதமாகவும் நடந்துகொள்கிறது. இதை ஐன்ஸ்டீன் உள்பட விஞ்ஞானிகள் பலரும் ஒரு புதிராகவே நினைக்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறுவார்: “மனிதனின் சாரம் மனிதனுள் இல்லை. அது அவன் சமுதாயத்துடன் கொள்ளும் உறவின் சாரமாயிருக்கிறது,” என்று. அணுவின் கண்டுபிடிப்பிகருந்து, பொருளின் சாரம் என்பது தனிமனிதனுக்குப் போலவே தனித்துவமானதல்ல. அது அணுமூலக் கூறுகளின் சாரங்களால் ஆனது என்பது புரிந்து கொள்ளப்பட்டது. அதனைக் கொண்டுதான் அணுவின் இயற்பியல், வேதியியல் குணங்களை விளங்கிக்கொள்ள முடிகிறது.

என்னுடைய நண்பன் ஒருவன் ஒருமுறை இப்படி விளக்கினான்: நீ கடைக்குப் போய் “டீ” கேட்டால் அது நீ அணுகிய கடைக்குத் தக்கவாறு வேறுபடுகிறது. உணவகமாயிருந்தால் டீத்தூளை வெந்நீரில் முக்கி, சாறெடுத்து, பாலும் சர்க்கரையும் கலந்து, ஒரு குவளையில் பருகுவதற்காகக் கொடுக்கப்படுகிறது. ஒரு மளிகைக் கடையாயிருந்தால் பொட்டலமாக அடைக்கப்பட்ட டீத்தூள் தரப்படுகிறது. நட்சத்திர விடுதிகளில் அல்லது ஐரோப்பிய - அமெரிக்க நாடுகளில் என்றால் ஒரு வெந்நீர்க் குடுவையோடு டீத்தூள், சர்க்கரைக் கட்டி அல்லது சாக்ரின், பால்பொடி ஆகியவை தனித்தனியாகத் தரப்படுகின்றன. அவற்றை நாம்தான் தகுந்த விகிதத்தில் கலந்து பருக வேண்டும். ஆக, ஒரு சொல் சமுதாயத்தில் வெவ்வேறு பொருள்களில் அடையாளப்படுகிறது. இதிலுள்ள பொது அம்சம் டீத்தூள் மட்டும்தான். அது கணினியின் வன்பொருள் போல. நமக்கான அர்த்தங்கள் மென்பொருள்களின் உள்ளீடுகள் உருவாக்குபவையே. ஆராய்ச்சியாளர்கள் பொருள்களைப் பற்றிய புரிதலைத் துல்லியப்படுத்தவே ஆய்வு மேற்கொள்கிறார்கள். சிலர் இத்தகைய ஆய்வுகள் வழியே பொருளின் எல்லாக் கூறுகளையும் ஒற்றைச் சூத்திரத்தில் கண்டு பிடித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்- அதாவது, ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்லிவிடும் ஒரு முழுமையான தனித்துவமுள்ள வகைமையாக. பெரும்பாலான கருதுகோள் வல்லுநர்களின் நம்பிக்கை என்னவென்றால், அண்ட நிகழ்வுகளையே விளக்கிவிடக்கூடியதும் எல்லா வகைமைகளையும் உள்ளடக்கியதுமான ஒரு கோட்பாட்டைக் கண்டறிந்துவிடலாம் என்பதுதான். அது எவ்வளவு சிக்கலானது என்பதை அதற்கான நீண்ட முயற்சியே சுட்டிக்காட்டுவதாயுள்ளது.

பொருளும் உயிர்ப்பும்:

பொருள்களோடு நமக்குள்ள உறவும் பயன்களுமே நம்முடைய எல்லா கோட்பாட்டுச் சிந்தனைகளையும் உருவாக்குகின்றன. மார்க்ஸ் இதை மிகத் தெளிவாக நமக்கு அறிவுறுத்தியுள்ளார். அறிவியல் வளர்ச்சி ஒரு மாபெரும் பொற்கனவை உருவாக்கியது. சமூகத்திலுள்ள எல்லா முரண்களும் களையப்பட்டு விடும்; அதிநியாயங்கள் நிலைநாட்டப்பட்டுவிடும் என்பதான கனவு அது. மார்க்சே கூறியதுபோல, உழைப்பும் மூலதனமும் பற்றிய அவரது கோட்பாடும், சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடுமே நவீன உலகுக்குப் பொருத்தமுள்ள அடிப்படை அம்சங்கள் என்பது அவருடைய நம்பிக்கை. இதில் டார்வினுடைய “தகுதியுள்ளவை பிழைக்கும்” என்னும் தத்துவத்தை சந்தைப் பொருளாதாரச் சூதாடிகள் தங்களுக்கேற்றாற்போல மாற்றியமைத்துக் கொண்டார்கள்- அதாவது, “சந்தையில் தோற்றவர்கள் மரபணு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் வாழத் தகுதியற்றவர்கள்; ஆகவே கழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள்” என்பதாக. ஆனால் மார்க்சினுடைய தத்துவத்தை அவ்வாறு தங்களுக்கேற்றாற்போல் புனைந்துகொள்ள அவர்களால் முடியவில்லை. ஏனெனில், அது முதலாளித்துவ முறைமையின் மூல வேரையே கீழறுப்புச் செய்துவிடுகிறது. “இலாபம் என்பது அபகரிக்கப்பட்ட உழைப்பன்றி வேறில்லை” என்று அடித்துச் சொல்லிவிடுகிறது. அதனால்தான்

மார்க்ஸ்-ஏங்கல் இருவரின் நூல்களும் அச்சம் தரத் தக்கவையாயும், அமுக்கப்பட வேண்டியவையாயும், தோற்றவர்களின் அறநெறிப் புலம்பல் என்று ஏளனம் செய்யப்படுபவையாகவும் முதலாளித்துவவாதிகளால் தள்ளிவைக்கப்படுகின்றன.

கம்யூனிஸ்ட் நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவுவதால் மேலைச் சமூகம் தன் முடைநாற்றமெடுத்த முதலாளித்துவ மாய்மாலங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, உலகமயமாக்கல் மூலம் தங்கள் நவகாலனியத்துவத்தைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அவர்களது போக்கிரித்தனங்களுக்கு இப்போதைக்கு எவ்விதத் தடுப்பரணும் இல்லாமல் போய்விட்டதுதான் ஆகப்பெரும் சோகம்.
ஆனாலும் மார்க்சை வென்றெடுத்து, ஒரு புதிய வளர்நிலைத் தத்துவத்தை அவர்களது சமூகம் கட்டமைத்துவிடும் என்பது இன்னும் அடைதற்கரிய அறைகூவலாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது.
கூடவே நாம் இதைச் சொல்லித்தானாக வேண்டும். மார்க்சின் தத்துவம் ஏனைய மேற்கத்திய கருத்தோட்டத்துடன் ஒருவகையில் ஒத்துப்போகவே செய்கிறது. “எல்லாப் பொருள்களும் மனித குலத்தின் பயன்பாட்டுக்கும் சுரண்டலுக்குமே” என்னும் நவீன ஐரோப்பிய நம்பிக்கையையே அதுவும் எதிரொகக்கிறது. இதில் அடியோட்டமாகச் செயல்படுவது- பொருள்கள் உயிரற்றவைதாம் என்பதான ஒரு அடிமைப்படுத்தும் பார்வைதான். மனிதர்கள் தாங்களாகவே தொடர்பு படுத்திப் புனைந்துகொள்வதன்றி, பொருளிய உலகுக்கு ஆன்மிகப்போதம் என்று ஒன்றும் கிடையாது என்னும் நம்பிக்கையின் மேலேயே அவர்கள் தங்கள் செயல்வலிமையை நிறுவிக்கொண்டுள்ளனர். எனினும் மார்க்ஸ் ஒன்றைப் புரிந்துகொண்டிருந்தார். முதலாளித்துவம் தன்னுடைய கலாச்சாரம்தான் உண்மையானதும் உயர்வானதும் என்று சொல்லித் தன் படை வலிமையைக்கொண்டு பிறர்மேல் அதை வலிந்து திணிப்பதைத் தன் மாற்றிக்கொள்ள முடியாத வெறிக்குணமாகக் கொண்டுள்ளது என்பதை மார்க்ஸ் அறிந்திருந்தார்.

இந்தியாவின் சில தத்துவ விசாரங்கள் “மற்றதை”விட முற்பட்டவை என்பதும், மனிதப் புனைவின் உயிர்ப்பிக்கப்பட்ட ஒளிக்கீற்றுகள் என்பதும், நடைமுறை குப்பைகளுக்கப்பாலும் நிலைப்பட்டிருக்கும் அம்சங்கள். இந்தியத் தத்துவத் தளத்தில் மனிதர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டு அந்த அனுபவத்தின் மூலம் மானுட மேன்மைகள் யாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளும் பக்குவ நிலையை அடைய முயன்றனர். ஒருவன் அனுபவித்துணரும் வேதனையின் ஆழத்திற்கேற்பவே அவனது புரிதலின் ஆழமும் கூடிவரும் என்பது அவர்களது கவனமாயிருந்தது. ஜகதீஷ் சந்திரபோசின் கண்டுபிடிப்புகளான- செடிகளுக்கு உயிருண்டு; கம்பிகள் போன்ற மின்சாதனங்கள் இல்லாமலேயே குறியீட்டுச் செய்திகளைக் கடத்த முடியும்- என்பவை ஒன்றும் தனிமனிதப் புத்திசாகத்தனத்தின் வெளிப்பாடல்ல. இந்தியாவில் அப்போதிருந்த “மற்ற”தன் கலாச்சாரத்தை உள்வாங்கிக்கொண்ட வெளிநிலைச் சிந்தனையின் நீட்சியாகவும், அதே நேரத்தில் அதற்கு எதிரானதுமான வெளிப்பாடாகவே அதைப் பார்க்க வேண்டும்.

ஸóபீல்பெர்க்கின் “E.T. சினிமா, சத்யஜித் ரேயின் திரை வடிவை அடிப்படையாகக் கொண்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அதன் மூலக்கருத்து இந்தியத் தொன்மவியலை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியத் தொன்மத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்து வாழ்ந்திருந்த புனிதர்கள் பலருண்டு. E.T. அவர்களோடு ஒப்பிடும்போது மிகவும் இளைய புனிதர். E.T.யின் வெற்றி மேற்கத்திய பொருளியகன் மேல் பெறப்பட்ட இந்திய உயிர்த்துவத்தின் வெற்றியாகும். விவேகானந்தர் போன்ற இந்து சமய மீட்புவாதிகளால் தொடர்ந்து பேசப்பட்டு வந்த கருத்து இது. எனினும், வாழ்வின் பல தத்துவங்களைப்போலவே இவை இந்தியாவுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சங்கள் என்று சொல்வதற்கில்லை. தொன்மையான “துரியட்”களும் ஐரோப்பிய சூனியவாதிகளும் இதுபோன்ற சூட்சுமங்களைக் கொண்டிருந்தவர்கள்தாம். ஆனால் அவை பின்னர் தலையெடுத்த யூத- கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களால் உறிஞ்சப்பட்டுவிட்டன. டான் ப்ரவுன் எழுதிய “ டாவின்சி கோட்” நாவல் இதில் சிலவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறது. அந்நூகல் கூறப்பட்டுள்ள சுக்கிரனின் சூலக் குறியீடு இந்தியக் கலாச்சாரத்தில், குறிப்பாக தமிழ் முருகனின் கையில் காணப்படும் சூலத்தை ஒத்ததே. கிறிஸ்தவர்கள் இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்று இழித்துக் கூறுவதை இவ்வெளிப்பாடுகளோடு நாம் ஒப்பு நோக்க வேண்டும். சூலமானது பெண்ணுறுப்பைக் குறிக்கும் சின்னம். இந்தச் சூலம்தான் குஜராத்தில் இந்துக் கயவர்களால் முஸ்லிம் பெண்களின் உறுப்புகளைச் சேதம் செய்யப் பயன்பட்டது என்பது ஆகக் குரூரமான கயமை.

பருப்பொருளையும் உயிர்த்தன்மையையும் இரண்டாக வகைப்படுத்துவது ஒரு வசதிக்காகத்தான். எல்லாப் பிரிவினைகளைப்போல இதையும் நாம் நம்புவதற்கில்லை. உருவாகும் ஒவ்வொரு பொருளிலும் அதை உருவாக்கியவனின் உழைப்பும் உயிர்ப்பாய் பொருந்தியிருக்கிறது. ஒரு சித்திரம் வெறும் வண்ணங்களின் கலவைதானா? அல்ல. சித்திரக்காரனின் உழைப்புதான் அதனை உயிர்ப்பிக்கிறது. சார்பு விதியின் மூலத் திவலை இங்கிருந்துதான் அர்த்தத்தைச் சேகரம் பண்ணுகிறது. ஒரு செடியைப் பார்க்கிறோம். ஆனால் அதுவல்ல அதன் முழுமை. அதை வளர்த்தவனையும் சேர்த்துப் பார்க்கும்போது அச்செடியின் வரலாறு, பயன்பாடு, தேவை என அனைத்தும் தொகுக்கப்பட்ட முழுமை கிடைக்கிறது.

எனக்கொரு விஞ்ஞானி நண்பன் இருந்தான். பகுத்தறிவுக்குப் புறம்பான எதையும் கடுமையாகச் சாடுகிறவன். ஆனால் அறிவார்ந்த அணுகுமுறைக்குப் பதிலாக எதிராளியை முட்டாளாக்குவதில் குறியாய் தர்க்கம் செய்வதிலும் உணர்ச்சி வசப்படுவதிலும் பெருவிருப்பம் கொண்டவன். எனக்கு இந்த ஒருவழிப் பேச்சில் ஈர்ப்பில்லை என்பதால் விட்டுக் கொடுத்து விடுவேன். அதேசமயம் அடுத்தவனுடைய தர்க்கம் சரியாகத் தோன்றினால் உடனே அவன் கட்சிக்கு மாறிவிடுவேன். அந்த நண்பன் ஒருநாள் ஒரு விசித்திரமான கதை சொன்னான். அவனுடைய தந்தை கிராமத்துப் பூசாரி. ஊர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். ஆனால் மகனோ தன் தந்தை வெறும் சடங்குப் பேர்வழி என்ற எண்ணம் கொண்டவன். ஒருநாள் மகன் தன் தந்தையின் இருப்பிடத்துக்குப் படுக்கச் சென்றான். அந்தப் பெரிய கூடத்தில் தன் படுக்கையை விரித்துக்கொள்ள ஆயத்தமானான். அவனுடைய தந்தை அவனிடம் வந்து, “நீ எங்கு வேண்டுமானாலும் படுத்துக்கொள். ஆனால் அந்த மோட்டுவளை உத்திரத்துக்குக் கீழாக மட்டும் படுக்காதே,” என்று சொல்க வைத்தார். போதாதா? நம் புரட்சியாளன் வேண்டுமென்றே அதற்கு நேர் கீழாகப் படுத்துக்கொண்டான். நள்ளிரவில் திடுக்கிட்டு விழித்தபோது ஓர் அந்நியனின் நடமாட்டம் தென்பட்டது. உடனே, “திருடன் திருடன்,” என்று கூவிக்கொண்டு அவனைப் பிடிக்க முயன்றான். ஆனால் அவனோ காற்றில் கரைந்தாற்போல் மறைந்து போனான். இதற்குள் அவனுடைய தந்தையும் ஓடிவந்து தடி எடுத்துக்கொண்டு திருடனைத் தேடினார். நல்ல காலம், திருடன் அகப்படவில்லை. அப்பனும் பிள்ளையும் நல்ல வாட்டசாட்டமானவர்கள். திருடனை அடித்தே கொன்றிருப்பார்கள். தந்தை அவனிடம், “கெட்ட கனவாக இருக்கும். தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்துக்கொள்,” என்று சொல்லிவிட்டுப் போனார். நண்பன் நடந்தவற்றைக் கோர்வையாக நினைவு படுத்திப் பார்த்தபோது, அந்த மனிதன் கொசு வலைக்குச் சேதாரமில்லாமல் அதனூடாகக் கடந்துசென்றது நினைவுக்கு வந்தது. மயிர்க்கால்கள் குத்திட்டுக் கொண்டன. வேறு வழி தோன்றாமல் தந்தை கூறியபடியே தன் படுக்கையை தள்ளிப் போட்டுக்கொண்டான். இதில் ஒரு ஈர்ப்பான செய்தி உண்டு. நவீன ஐரோப்பியப் பகுத்தறிவாளர்கள் அந்த உத்திரம் ஒரு உயிரற்ற, உலர்ந்த கட்டை என்று ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் அதில் ஒரு மனிதனுடைய வரலாறு பொதிந்து வைக்கப்பட்டிருக்கலாம். மரத்தில் எவனாவது தூக்கு போட்டுக்கொண்டு செத்திருக்கலாம். உத்திரம் அந்த மரத்தில் இழைத்ததாக இருக்கலாம். எல்லாம் ஒருவகை “லாம்”தான். வெளிப்படையான ஒரு அர்த்தமின்மையிலும் உள்ளுணர்வான ஓர் அர்த்தம் பொதிந்திருக்கலாம் என்னும் அனுமானத்தின் கூடுதல் தேடல் இப்படியாகவே நீள்கிறது.

கணினி நமக்கு ஏராளமான பயன்களை வழங்கி வருகின்றது. அண்மையில் மேற்குலக ஊடகத்தில் ஆடுகளைப் படியாக்கம் (Cloning) செய்வது பற்றி ஆரவாரமாகக் கதைக்கப்பட்டது. கணினிகள்கூட படியாக்கம் செய்யப்பட்டவைதாம். கணினிகள் பார்ப்பதற்கு ஒன்றுபோலத் தோன்றினாலும் அவற்றுள் நாம் இடும் மென்பொருளுக்கேற்றபடி அவை வெவ்வேறு விதமாகவே நடந்துகொள்கின்றன. கணினியின் இயங்குமுறைகள் வேறுபட்டதாக, Linux,MS Windows, Mac OS, Unix எனப் பலவிதமான கோப்பு அடைவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புரிதலோடு பார்க்கும்போது ஒவ்வொரு கணினியும் வேறுபட்டது; அதன் செயல்பாடும் வேறுவேறு என்பது புரிகிறது. MS Windows இல் அடிக்கடி நோய்த்தொற்று (Virus) ஏற்படும். Linux இல் அந்தச் சிக்கல் இருக்காது. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மனித உருவாக்கத்தில் மரபுத் தொடர்ச்சி, வன்பொருள் பயன்பாடு என்பனவெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவனுள் பொதியப்படும் மென்பொருளே, அதாவது தனி மனிதனின் சமூகப் பங்கேற்பே தலையாய அம்சமாகிறது.

இயற்பியலிலும் பொருள்களின் படியாக்கக் கருத்துநிலை பற்றிய அலைக்கழிப்பு நிலவுகிறது. செய்திகள் ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும் என தாங்கள் தீர்மானித்ததை எடுத்துக்காட்டுவதற்காக ஐன்ஸ்டீன், போடெலோவ்ஸ்கி, ரோசன் ஆகியோர் ஒன்றித்த படியாக்கங்களை முன்மொழிந்தனர். குவாண்டம் தியரி (Quanum theory)க்கு எதிர்வாதமாக அவர்கள் அதைப் பயன்படுத்தினர். அந்த வாதம் இப்போது அவர்களையே திருப்பித் தாக்குவதாயுள்ளது. ஆனால் செய்திகள் ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும் என்பது விதியளவில் உறுதிப்பட்டு விட்டது. ஒளியைவிட வேகமாக எந்தப் பொருளும் பயணிக்காது என்னும் ஐன்ஸ்டீனின் பொருள்சார் கோட்பாட்டிற்கு இது ஒன்றும் முரண்பட்டதல்ல. ஏனெனில், செய்தியானது பொருளல்லதானே.

இக்கருத்துகளும்கூட ஒன்றும் புதுமையானவையல்ல. சொல்லப்போனால் உலகில் ஏதொன்றும் புதுமையானதல்ல. புதிதுபுதிதாகப் பெயரிடலைத்தான் நாம் ஆராய்ச்சிகளாக நிறுவிக்கொண்டிருக்கிறோம். ஆய்வின் ஒரு சாதக அம்சம் நாம் அதைப் புரிந்துகொண்டு பயனடைவதுதான்.

ஒன்றாய்ப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய வினோதக் கதைகள் பலவற்றை நாம் அறிவோம். இக்கதைகளில் ஒருவனை அடித்தால் மற்றவன் வகயால் துடிப்பான். இதையே மாற்றி, ஒருவன் வருந்தினால் மற்றவன் மகிழ்வதான எதிர்மறை இரட்டைகளும் சாத்தியமே. மானுட வரலாற்றில் வன்பொருள் படியாக்கம் என்பது சமூக ரீதியாகப் பொருளற்றதும் சுவை இல்லாததுமாகும். மென்பொருள் படியாக்கமே பலவண்ணக் கோலமானது. இதை விடவும் வண்ணமான விஷயம், ஒரு மூளையிலிருந்து மற்றொரு மூளைக்கு நேரடியாகச் செய்திகளை இடமாற்றம் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் பற்றியதாகும். உடம்பில் ஆவி புகுந்துகொள்வதாகச் சொல்லப்படுகிறதே, அது பேர்னறதொரு செயல்பாடு இது.

முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, “மற்ற”தற்கும் உயிர்ப்புண்டு என்பதோடு அது நம்மோடு சண்டையிடவும் செய்யும் என்பதாகும். (காத்ரினா சூறாவளி, புவி வெப்ப உயர்வு, ஈராக் எதிர்ப்பு, நேபாளக் கலகம் போன்றவை அத்தன்மையன.) எனினும், “நாம்Xஅவர்கள்” என்னும் இந்த இருண்ட ஈரொட்டான சாலை வழியாகத்தான் புஷ்ஷுக்குப் பிறந்தவனின் வழித்தோன்றல்கள் பயணம் செய்ய விரும்புகிறார்கள்.

Wednesday, October 06, 2004

பேரா. நா.வானமாமலை எழுதிய மூன்று நூல்கள்

பண்டைய வேத தத்துவங்களும், வேத மறுப்பு பவுத்தமும்
- ஒரு மார்க்சிய அறிமுகம்

writer Pictures, Images and Photos

பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் இந்நூல் மார்க்சிய கண்ணோட்டத்தோடு வேதங்களை ஆய்வு செய்வோருக்கு மிகவும் பயன்படக்கூடிய சிறிய நூல். இந்தியாவின் புராதன இந்து தத்துவங்கள், அதன் உப பிரிவுகள், வகுப்புமுறைகள், மந்திரம் - வழிபாடு, பிற்கால வேத பாடல்கள், புதிய அறிவு, சாங்கியம், ஜடபரிணாம வாதம், இந்திய லோகாயதவாதம், அதனுடைய நிறைகுறை, பவுத்த மதத்தின் வரலாறு, ஆதிசங்கரரின் தத்துவ விசாரம் என ஏராளமான விஷயங்களை மிகச் சுருக்கமான முறையில் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். நல்ல பல உதாரணங்களோடு ஒரு கடினமான விஷயத்தை எளிதான முறையில் படித்துப் புரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும்.

மார்க்சியம் நோக்கில் இந்து தத்துவங்களையும் அதன் உப பிரிவுகளையும் பற்றி புரிந்து கொள்வதோடு அவற்றிற்கு மாற்றான லோகாயதத்தை எவ்வாறு படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். மார்க்சியத்தை அடிப்படையாக வைத்து வேதகால தத்துவத்தைப் படிப்போருக்கும், எடுத்துக்கூறுவோருக்கும் மிகவும் பயன்படக்கூடிய நூல்.
விலை ரூ. 35

இந்திய நாத்திகமும்மார்க்சிய தத்துவமும்

பண்டைய வேதங்களும், மதங்களும் எடுத்து வைக்கக் கூடிய கருத்து முதல்வாதக் கருத்துக்களை விஞ்ஞானப்பூர்வமாக மறுத்துச் சொல்லும் ஏராளமான விபரங்களை இந்நூலில் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். நாத்திகம் பற்றி மார்க்சியவாதிகளின் விமர்சனம் என்ற தலைப்பில் இந்நூலில் பேராசிரியர் வானமாமலை எழுதியிருக்கக்கூடிய விஷயங்கள் பொருள் பதிந்தவை. ஹெகல், ஃபயர்பாக் போன்ற பொருள்முதல்வாத, ஆன்மீகவாதிகளின் கருத்துக்களை மார்க்ஸ் ஆராய்ந்து விமர்சிப்பதும், மனிதன்தான் மதத்தைப் படைத்தான் என்பதுடன், இயற்கை மீது தனது செயலைத் துவக்கி இயற்கையை கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை நெறிப்படுத்துகிறான் என்ற மாமேதை ஏங்கெல்சின் கருத்துக்களையும் மிக அழகாகப் படம்பிடித்திருக்கிறார்.
விலை ரூ. 25

தமிழகத்தில் சாதி - சமத்துவ - போராட்டக் கருத்துக்கள்

தாமரை, ஆராய்ச்சி என இரண்டு இதழ்களில் பேராசிரியர் நா.வானமாமலை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழகத்தில் உள்ள சாதிகளையும், அவை தம்மை உயர்வானதாகக் காட்டிக் கொள்ள செய்த முயற்சிகளையும் மிக அருமையாக இந்நூலில் சித்தரித்துள்ளார். இதற்குரிய ஏராளமான ஆதாரங்களையும் அவர் இதில் கொடுத்துள்ளார்.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் இக்காலத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருகின்றன. இதன் பொருள், இன்னும் தீண்டாமைக் கொடுமைகள் ஆங்காங்கு தமிழகம் முழுவதும் தலைதூக்கி வருகின்றன என்பதே ஆகும். இப்படிப்பட்ட சூழலில் தொழில்முறையில் இருந்த தொழிலாளர்களும், விவசாயிகளும் எப்படியெல்லாம் சாதிய கூட்டிற்குள் அடைக்கப்பட்டார்கள் என்பதும், அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் தங்களை உயர்வானவர்களாகக் காட்டிக் கொள்ள எவ்வாறெல்லாம் முயற்சி செய்தார்கள் என்பதையும் மிக அருமையாக ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.

குறிப்பாக, 1818ல் சித்தூர் ஜில்லா அதல்லாத்துக் கோர்ட் தீர்ப்பை பற்றிய விபரங்களை அவர் குறிப்பிட்டிருப்பது சுவையானதாகும். இதேபோன்று, இரும்பு, மரம், செம்பு முதலியவற்றைப் பயன்படுத்தி ஆயுதங்களும், உபயோகப் பொருட்களும் செய்யக் கூடிய ஆசாரிகளுக்கும், பிராமணர்களுக்கும் இடையே எழும் மோதலையும் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்.

இதே போன்று வேளார்கள், செட்டியார்கள் போன்றவர்கள் தங்களை மேல்சாதிக்காரர்களாக காட்டிக் கொள்ளவும், நாடார்கள் தாங்கள் மன்னர் பரம்பரை என்பதை எடுத்துக் கூறச் செய்துள்ள ஆதார ஏற்பாடுகளையும் அழகாகச் சொல்லியுள்ளார். பெரியாரின் நாத்திகக் கொள்கையுடன் மார்க்சிய நாத்திகத்தை இந்நூலில் அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்று பதிப்பாளர் குறிப்பில் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானது. அவசியம் படித்து உணர வேண்டிய உரிய காலத்தில் வெளிவந்துள்ள நூலாகும்.

விலை ரூ. 30, அலைகள் வெளியீட்டகம், 4/9-4வது முதன்மைச் சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 600 024


கு.சின்னப்ப பாரதி எழுதிய தெய்வமாய் நின்றான் (ஒரு காவியம்)

இன்று இளம் வாசகர்கள் கு.சின்னப்ப பாரதியை ஒரு நாவலாசிரியர் என்று மட்டுமே அறிந்துள்ளனர். அவர் நாவலாசிரியர் மட்டுமல்ல; ஒரு சிறந்த கவிஞரும்கூட. மேலும், பல சிறுகதைகளும் எழுதியிருப்பதால் அவர் ஒரு சிறுகதையாசிரியரும்தான் என்றுகூடச் சொல்ல லாம். இவ்வாறு, நாவல் - சிறுகதை - கவிதை என முப்பரிமாண இலக்கியகர்த்தா அவர்.

சின்னப்ப பாரதியின் “தெய்வமாய் நின்றான்” காவியம் முதல் பதிப்பாக 1965ம் ஆண்டு வெளிவந்தது. 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தக் காவியம் தற்போது இரண்டாம் பதிப்பாக வந்துள்ளது. “மக்களின் உணர்வைப் புரிந்து கொள்வதில் அவர்களிடம் ஒரு மாணவனைப் போல் குந்தி பணிவுடன் வாழ்க்கைச் சிக்கலைப் படித்துக் கொள்வதில் நான் தணியாத வேட்கை கொண்டுள்ளவன்” என்று இந்நூலின் “என்னுரை”யில் உள்ள கு.சி.பா.வின் கூற்றின் மெய்ம்மையை அவரது அனைத்துப் படைப்புகளிலும் காண முடியும். அண்மையில் வெளிவந்த அவரது “சுரங்கம்” நாவல் சுரங்கத் தொழிலாளரின் வாழ்க்கையைப் பற்றியதாகும். அவர்களது வாழ்க்கைச் சிக்கலை ஒரு மாணவனைப் போல் படித்துக் கொண்டு நாவல் படைக்க மேற்கு வங்கத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்கும், சுரங்கத் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கும் நேரில் சென்று, அவர்களின் வாழ்க்கை, உழைப்பு, கலாச்சாரம், குடும்பம் முதலானவற்றைக் கண்டறிந்து வந்தார் கு.சி.பா.
இப்போது அவரது “தெய்வமாய் நின்றான்”.

“மாட்டினை மேய்ப்பான்; வீட்டை
மகிழ்வோடு காப்பான்; கொட்டம்
கூட்டுவான்; வாசற் சேர்ந்த
குப்பையைச் சுத்தம் செய்வான்
காட்டிய திசையில் ஓடிக்
கவனமாய் வேலை செய்வான்”
- பண்ணையடிமை வேலைக்குச் சிறுவன் கருப் பனை அழைத்துச் சென்று, பண்ணையாரிடம் அறி முகத்தோடு வாக்குறுதியும் சொல்லி அவனை ஒப்படைக்கிறாள் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தாய். கால ஓட்டத்தில் இந்தக் கருப்பன் சந்திக்கிற சோதனை களும், வேதனைகளும், அதனுடன் கூடவே அவன் அடைகிற வளர்ச்சியும் பரிணாமமுமே இந்தக் காவியம். பண்ணையடிமை வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிய கருப்பன் புரட்சிகர அரசியல் போதம் பெற்று, விவசாயத் தொழிலாளர்க்குத் தலைவனாகி, அந்தப் பண்ணையாரையே வந்து சந்திக்கிறான் ஒரு தலைவனாக - தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வுக்காக!
“நாலைந்து பேர்களோடு
நடந்துமே கவுண்டர் தம்மை
காலையில் பார்க்க ஓர்நாள்
கருப்பனும் சென்று சேர்ந்தான்
வேலைக்குக் கருப்பன் அங்கு
வேண்டியே இருந்து சென்று
சாலவே பல்லாண் டுகள்
தாண்டிய பின்னர் இன்றே
கண்டிடச் செல்கின் றான்
காலத்தின் மாற்றம் என்னே!”
- என்று அடிமை கருப்பன் அடைந்த மாற்றத்தை வியந்து கூறுகிறார், காவிய ஆசிரியர் கு.சி.பா.

இந்தக் காவியக் கதைச் சம்பவங்களை இந்திய சுதந்திரப் போராட்டக் காலப் பின்புலத்துடன் சொல்லிச் செல்கிறார். காவியப் படைப்புக்காக அவர் கையாண்டுள்ள கவிதை வடிவம் ஆசிரிய விருத்தம். அறுசீர், எண்சீர் விருத்தங்களோடு, வெளிவிருத்தம் எனும் பாவகையும் கலந்து தெய்வமாய் நின்றானைப் படைத்துள்ளார். மரபு மிரட்டவில்லை. சுகமான வாசிப்புக்கேற்ற எளிய சொற்கள், எளிய சந்திகள். காவிய காலத்திலும், பக்தி இலக்கியக் காலத்திலும் முக்கியமாய் இந்தப் பாவடிவத்தையே நமது பெரும் புலவர்கள் கையாண்டனர். அந்த வடிவத்தை தமது காவியத்திற்கும் பயன் படுத்தியுள்ளார் கு.சி.பா.

தற்காலத்தில் வெளிவந்துள்ள ஒரு சிறந்த காவியம் “தெய்மாய் நின்றான்”. இந்தப்புதுக் கவிதைக் காலத்தில் கருத்தில் புதுமை வைத்து தற்காலச் சொற்களில் சுவையும் உணர்ச்சியும் சேர்த்து மரபிலும், சாதிக்க முடியும் என்பதற்கு இக்காவியமும் ஓர் எடுத்துக்காட்டு.

வெளியீடு : பாவை. பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014 விலை ரூ. 90

Monday, February 03, 2003

விடுதலைப் போராட்டங்களில் தமிழரின் பங்களிப்பு

War of the worlds Pictures, Images and Photos

மலாய்த் தீவுக்கூட்டத்தைப் பொறுத்தமட்டில் ஒட்டு மொத்தமாக அரசாள்வோர் மற்றும் அதிகாரம் கொண்ட அனைவரும் பல்வேறு காலகட்டங்களில் வந்து குடியேறியவர்கள்தாம் என்பதே வரலாறு. துவக்க காலத்தில் குடியேறியவர்கள் பழங்குடிகளாகவும், பின்னர் குடிவந்தவர்கள் மண்ணின் மைந்தர்கள் எனும் பொருளில் பூமிபுத்திரர்களாகவும், மிகப்பிற்காலத்தில் கொண்டுவரப்பட்டவர்கள் நிர்வாகம், வாணிபம் எனப்பல்துறைகளிலும் காலூன்றிய விந்தை இங்கே நிகழ்ந்தது.

தங்களுக்கு மிகவும் வேண்டியிருந்த கச்சாப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், ஈயம் போன்ற நிலவளங்களைத் தோண்டியெடுப்பதற்கும் தேவையாயிருந்த உடலுழைப்பாளர்கள் கிழக்கு மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளிலிருந்து ஏகாதிபத்தியர்களால் கொண்டு வரப்பட்டனர். இவ்வாறு கொணரப்பட்டவர்களுக்கும், முன்னரே வந்து குடியேறியவர் களுக்கும் தொடர்ச்சியான வரலாறு உண்டு. அடிமைகளாய், பஞ்சைப் பராரிகளாய் உழன்றது தொடங்கி, வெகுண்டெழுந்து கருவி ஏந்தி அரசியல் அதிகாரம் பெற்றது வரையிலான வரலாறுகள் பதிப்பிக்கப்பட்டுப் பரவலாகக் கிடைக்கின்றன.

இந்நிலையில், பல்வேறு கால நிலைகளில் மூன்று கட்டங்களாக வந்தும் வருவித்தும் சேர்ந்த: அதாவது படையெடுத்தும், திரவியம் தேடியும், சஞ்சிக் கூலிகளாயும் தமிழ் மற்றும் ஈழ நாடுகளிலிருந்து வந்து சேர்ந்த தமிழினத்தின் முறைப்படுத்தப்பட்ட வரலாறு ஆவணமயமாக்கப்பட்டுள்ளதா? தொகுக்கப்பட்டுப் பதிப்பிக் கப்பட்டுள்ளதா? என்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே எனத்தான் அறுதியிட வேண்டும். பிறரோடு ஒப்பிடுகையில் இது வெகு அற்பம். உலகின் அதிகத் தீவுகளைக் கொண்ட இரண்டாவது நாடான பிலிப்பைன்சின் விடுதலைப் போரில், சீன வமிசாவளியினரின் பங்கெடுப்புகள் குறித்த நூல்கள் பரவலாகக் கிடைக்கின்றன என்பதே பல தமிழர்க்கு வியப்பளிக்கும் தேவலோக கதைகள் போன்று இருக்கிறது. உணர்வூட்ட வேண்டி செலவழித்துக் கற்று, இவர்களுக்குக் கற்பித்த மணித்தியாலங்கள், ஈட்டிய வேதனைகள், வாங்கிக் கட்டிக்கொண்ட பேச்சுகள், சம்பாதித்த இவர்களின் வெறுப்புகள் யாவும் எதிர்கால முன்னெடுப்புகளுக்குரிய செயல்தந்திரங்களைப் புலப்படுத்துகின்றன. இமயத்தின் சாரலிலும், மெக்கோங் ஆற்றுப் படுகையிலும், ஏழாம் நூற்றாண்டின் பல்லவர் கால கல்வெட்டு மற்றும் புத்த அறிவுப்பள்ளியின் மெய்மங்களைக் கொண்டு திகழ்ந்திருந்த மக்களினங்களையும் அவர்களின் வாழ்வியல் நெறிகளையும் வரலாறாய்க் கொண்டிலங்கும் இந்தோனிசிய தீவுக்கூட்டங்களிலும் தென்கிழக்காசியாவின் வேறு பல குக்கிராமங்களிலும் சுற்றியலைந்து கற்பித்தும் கற்றறிந்தும் வந்தவைகளை இவர்களிடத்தில் விவரித்து என்ன பயன் கண்டேன்? அப்போதெல்லாம் எம்மைத் தாங்கியவை: “தம்பி, உள்ளம் விழுந்ததா? தூக்கி நிறுத்தடா. உடலம் சோர்ந்ததா? மேலும் வருந்தடா. கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே உண்மை உழைப்படா மகிழ்ச்சி முடிவிலே” என்பன போன்ற வரிகள்தாம். இவற்றை இங்கு குறிப்பது “நன்றி எனும் பண்பாட்டின் நல்ல வித்து நந்தமிழன் உள்ளத்தில் முளைக்கவில்லை” என்ற கவிஞனின் வருத்தத்தைப் பொய்யாக்கிவிட வேண்டும் என்னும் வேட்கையில்தான்.

இப்பகுதிகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் தமிழரின் பங்களிப்பு குறித்து இன்னபிற இனக்குழுக்கள் தரும் குறிப்புகளின் வழியேதான் ஓரளவு அறியக்கிடைக்கின்றது. அடித்துப் பேசுமளவிற்குப் போதிய வலுவான சான்றுகள் இல்லையென்பதால்தான் "கருப்புப் பேய்” என்னும் பொருளில் “கில்லிங் குவாய்”யாக, "கருப்பு குட்டி” என்னும் பொருளில் “கில்லிங் கியான்” என்றும்- ("கில்லிங்” என்பதில் ஒட்டுமொத்த இழிவுகளையும் வெளிப்படுத்தி) அழைக்கிறார்கள். ரூபாய் நோட்டில் தமிழ் எழுத்து இடம் மாற்றப்பட்டதற்கு மொரிசியசு நாட்டுத் தமிழர்கள் கொண்ட எழுச்சியில் கிஞ்சிற்றும் நம்மை இழிவுபடுத்துவோர் மீது எதிர்ப்பைப் பதிவு செய்ய ஒன்றிணை வதில் நம்முள் ஏற்படவில்லையே முதலியாராக, முரசொலியாராக, பிள்ளையாக, அம்பலக்காரராக, நாடாராக, அகம்படியராக மற்றும் வெள்ளாளராக அல்லவா வலம் வருகின்றோம்.

செங்கொடியின் கீழ் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு, உறிஞ்சுவோர்க்கு எதிராகக் களம் பல கண்டு, சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் வடஅமெரிக்கப் பிரதிநிதியாக சிங்கப்பூரில் வினையாற்றியவர், தமது அரசாங்கத்திற்கு “தென்கிழக்காசியாவில் கம்யூனிச இயக்க வளர்ச்சி” குறித்து 5-5-1930இல் சமர்ப்பித்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளாராம்: “இந்தியர்கள் பெருமளவில், தங்களது தாயக அரசியல் விவகாரங்களில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர். தவிரவும் மலாயாவில் இவர்களின் வாழ்க்கைத் தரம் நன்கு வளமுடையதாக உள்ளதாலும் கம்யூனிசப் பண்பு கொண்ட எண்ணங்கள் இவர்களிடத்தில் பரவலாக வேர்பிடிக்க வாய்ப்புகள் இல்லை.” இச்செய்தியை ‘பிகேஐ யிலிருந்து அகிலம் வரை’ என்னும் புத்தகம் தெரிவிக்கிறது. “வெள்ளக்கார மகாராசாங்க நம்ம தாய்தவுப்பன, அவங்களோட தாய்தவுப்பன, யாழ்ப்பானத்தானையும், மலையாளத்தானையும் கிராணிங் களாக்கி அடிமைகள் போல நடத்துனதுக்கு அவனோட அளவுகோல் எதுவா இருந்திருக்குன்னு இப்ப தெரியுதா? "பனங்கொட்ட’ மேல இருந்த வெறுப்பெல்லாம் புலி தலையெடுத்த பிறகுதான கொறஞ்சிறுக்கு. விடுதலைப் போருக்கு (ஈழம்) ஆதரவா பரப்புரை செய்து தொகை தண்டியபோது, அந்தக் காலத்துல சிலோனிஸ் கிராணிமாருங்க செய்த அட்டூழியங்களைக் கதை கதையா சொன்னீங்களே!”

கிள்ளான் மாவட்ட ஆயர்கூனிங் தோட்டத்தில் 1941இல் நடந்தவைகளை “கண்ணீர் சொல்லும் கதை” என்ற தலைப்பில் மலேசிய தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் தோழர் இரா.தியாகராசன் சிறுகதையாக்கி 1991இல் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். அதில் காணப்படும் செய்தி இது. பல நூறு தொழிலாளர் போராட்டங்களுக்கு சொந்தக்காரர்- எழுபதை நெருங்கும் தியாகராசன். பெயருக்கேற்றவாறே தொலைத்ததும் தொலைந்ததுமான இவரது தொட்டுனர் சுகங்கள் நிரம்பவே. சில பத்தாண்டுகளுக்கு முன்னர் அரசியல் கட்சியாக விளங்கியது தான் இவர் தலைமை வசிக்கும் இயக்கம். தோழர்க்கு உறுதுணையாக, இயக்கப் பொதுச்செயலாளராக வினையாற்றுபவர் நண்பர் கோபால். இன்றைக்கு, வழக்குரைஞர் தோழர் அசான் கரீம் அவர்களின் தலைமையில் அணிவகுத்த தோழர்களால் கலைக்கப்படுவதினின்று தப்பிய மலேசிய மக்கள் கட்சியோடு ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றனர் தொழிலாளர் இயக்கத்தினர்.

தமிழர்கள், தோழர் நேதாசி சுபாசு சந்திரபோஸ் தலைமை தந்த ஐ.என்.ஏ. எனப்படும் இந்திய தேசிய இராணுவத்தில் ஈடுபாட்டோடு உழைத்த அளவிற்கு, வாழும் நாட்டு விடுதலைக்குப் பங்களிக்கவில்லை என்ற உண்மையை ஏற்கவே வேண்டும். விலங்குகளைப்போல் “லயங்கள்” “குவாட்டர்ஸ்” என்னும் கொட்டடிகளில் நம் முன்னோர்கள் வாழ்ந்ததை “வளமையான வாழ்வு” என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள் என்றால், தமிழ்நாட்டுத் துறைமுகங்களிலிருந்து கப்பலேறியவர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமானதாக இருந்திருக்கும்! படித்தவற்றை கோர்வையாக்குங்கள், சைனா டவுனின் லயன் சித்தி விநாயகர் கோயிலின் முன்பு இருக்கும் திரையரங்கில் - எம்மைச் சில ஆண்டுகளுக்கு சகித்துக் கொண்டு காதலனாகவும் ஏற்றுக்கொண்டு கரம் பற்றித் திரிய அனுமதித்த சரிபா என்ற நிசாவோடு- பார்த்த “டே பொந்திச்சேரி” என்ற பிரெஞ்சு மொழிப்படத்தில் கண்ட காட்சிகள்தாம் நினைவிலாடும்.

சிங்கப்பூர் சுவரோவியங்களில் வரையப்பட்டிருக்கும் கோவணான்டிகளை நினைவு கூர்வாள் அவள். அன்றைய நாள் பிரிவு ஏற்படும் வரை அந்த மலாய்ப் பெண் தமிழுணர்வில் திளைப்பாள். தோழர்களாக, காதலர்களாக சிறகு விரித்தவர்கள் பிரிய நேரிட்ட நெடுங்கதையைச் சுருங்கக் கூறுவது தேவையாகிறது. தமக்கையோடு வாழ்ந்தபோதும், மார்ச்சிலிங் என்ற பகுதியில் வாழ்ந்த பெற்றோர்களை சந்திக்கும் முகத்தான் ஒவ்வொரு கிழமையிலும் என்னையும் அவள் உடன் அழைத்துச் செல்வாள். நானும் அவர்களது குடும்ப அங்கத்தினனாகவே ஆகியிருந்தேன். எமது பழுப்பு நிறம் அவர்களோடு ஒன்றிணைவதில் ஒருபோதும் தடையாயிருந்ததில்லை. திரு இபுராகிம் என்ற பெயர் கொண்ட நிசாவின் தந்தை என் மீது கொண்டிருந்த மதிப்பைக் கண்டு ஒவ்வொரு பொழுதும் சிலிர்த்துப்போவேன். இத்தகைய உள்ளன்பு கொண்ட உறவுகளுடனான தொடர்பில் முரண்பாடுகள் தோன்றுவதற்கு எது காரணமாய் இருந்திருக்கும் அல்லது எவர் காரணமாய் இருந்திருப்பர் என்று அறிந்து கொள்ள விருப்பம்தானே!

உலகப் புகழ்பெற்ற அகதிதான், அவரின் படைப்புகள் ஊட்டிய போர்க்குணம்தான் காரணம். மார்க்சா அல்லது முகமதுவா? என்ற தேர்வில் பொருள் முதல்வாத இயங்கியலாளனாகவே பயணத்தைத் தொடர முடிவு கொண்டேன். நிசா முதலும் அல்ல முடிவும் அல்ல! ஆனால் நுகர்வுப் பண்பாட்டு ஊழியில் அன்பைச் சொரிபவர்களை அடையாளம் காண்பது அத்துணை எளிய செயலல்ல என்பதை அறிந்தே இருக்கிறேன். ஒற்றை மரமாகவே உயிர்க்கவும், இன்றைக்கும் தனியனாகவே நீள்பயணத்தைத் தொடரவும் தகவமைத்த மார்க்கியத்திற்கு பல்லாயிரத்தவரைப்போல் நானும் கடப்பாடுடையவனாவேன்.

வரலாறு என்பது மக்கள், அதாவது முன்னோர் வாழ்ந்த கதைதானே. அவற்றிலிருந்து நாம் படித்தறிந்தவை யாவை? இன்றைக்கும் ஆரியவர்க்கத்தின் தாக்கங்கள்தாமே நம்மை அலைக்கழிக்கின்றன! அவற்றின் பிரதிபலிப்புகள்தாமே நம்மை ஆளுமை செய்கின்றன! எங்கடை மக்களை விடச் சிறிய தொகையிலானவர்கள் இங்கு வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொன்றிலும். “பஞ்சாபியர்” அல்லது சீக்கியர்” என்றுதான் அவ்வின மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள். தமிழர்களின் அடையாள அட்டைகளை வாங்கிப் பாருங்கள் வாய்ப்பிருக்குமாயின். இனக்குழு அடையாளத்தில் “இந்தியர்” என்று எழுதப்பட்டிருக்கும். தமிழர் என்று எழுதியிருப்போர், எழுதுவோர் உண்டு என்றாலும் விழுக்காட்டு அளவில் எவ்வளவு தேறுவர்? துணைக் கண்டத்திலிருந்து வந்த ஒவ்வொரு இனக்குழுவினரும் தத்தமது இனநலனை முதன்மைப்படுத்தும்போது பழம்பெருமை பேசும் தமிழர்கள் மட்டும் ஏன் இந்தியர்களாகவே ஒருமைப்பாட்டைப் பேசி, மொழி, பண்பாட்டுக் கூறுகள், நடைஉடை, பழக்க வழக்கங்கள் என்று எல்லாத் தளத்திலும் தொய்வினை எதிர்நோக்கி வருகின்றனர்? எமக்கென்று தனித்த அடையாளத்தைக்கூட தக்கவைத்துக் கொள்ள முடியவில்லையே? ஒன்றுபட இயலவில்லையே?

ஜப்பான்காரன், உதை கொடுத்து ஊட்டி விட்டுப்போன விடுதலையுணர்வை மறந்து போனோமே! சீனர்களுள் கொழுந்துவிட்டெரிந்த அவ்விடுதலையுணர்வு தமிழரிடத்தில் எவ்வகை மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதற்காக, முகத்தில் தோன்றியதாக கதை விட்டவர்களின் பிறங்கடைகளான இன்றைய பார்ப்பனர்கள் ஆனந்தக் கூத்திடலாம்தான்.

ஏனைய இனக்குழுவினர்க்கு ஈடாய் இதழ் நடத்தியவர்கள் எழுதிக் குவித்திருக்கின்றார்கள்; மறுக்கவில்லை. ஆனால் படைத்தளித்தவைகளிலிருந்து தமிழரின் வரலாற்றுத் தரவுகள் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்பதே விடையாகின்றது. அவ்வாறெனில் படைப்பாளிகள் எழுதியது என்ன, படைத்தவை யாவை எனத் துருவினால் கடவுளர் கதைகளும், ஆளுங்கட்சி அரசியலர் போற்றிப் பாமாலைகளும், கவிதைகளும், கட்டுரைகளும்தான் என்பது வெட்கப்பட வைக்கும் நடைமுறை உண்மை.

பாராண்டவனின் பரம்பரையினர் அஞ்சடியில்...

சீனப் பெருநிலத்தின் தென்பகுதியிலும், ஓங்கோங் தீவிலும் செயற்பட்ட தரகர்கள் அங்கிருந்து ஆட்களை பினாங்கிற்கும், சிங்கப்பூருக்கும் கப்பலில் ஏற்றிக்கொண்டு வந்து அவர்களுக்கு வேலைகளை ஒழுங்கு செய்வார்களாம். பொதுவாகவே இத்தரகர்கள் மூர்க்க குணம் கொண்டவர்களாம். முதலாளிகளிடமிருந்து சந்தை நிலவரத்திற்கேற்ற விலையை, அதாவது ஒவ்வொரு தலைக்கு இவ்வளவு தொகை என்று பெற்றுக் கொண்டு அத்தொழிலாளர்களை முதலாளிமார்களிடம் ஒப்படைத்து விடுவார்களாம். தெற்காசியாவின் தென்னகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட உழைக்கும் திராவிடர்களை, சஞ்சிக் கப்பலில் வந்த கூலிகள் என்பதனைச் சொல்ல சுருக்கமாய் “சஞ்சிக் கூலிகள்” என்பதைப் போல, சீனத்திலிருந்து ஈயச்சுரங்கங்களுக்கும் இன்னபிற உடலுழைப்புத் தொழில்களுக்கும் கொண்டு வரப்பட்டவர்களை, “பன்றிக்குட்டி” முறையில் வந்தவர்கள் என்று பெயரிட்டழைத்திருக்கின்றனர். இதனை ஆவணங்கள் சொல்கின்றன. இவ்வாறு கொண்டு வரப்பட்டவர்கள் தங் கவைக்கப்பட்ட வீடுகளின்மேல் ஆதிக்கம் புரிந்தவர்கள் பன்றிக்குட்டிகளை வழிநடத்துபவர்கள் என்ற பொருளில் சூ சை தாவ் என்றழைக்கப்பட்டனர்.

ஆசைமொழிகளை அவிழ்த்துக் கொட்டி தென்சீனத்தின் கிராமப்புறங்களில் சுபிட்ச வாழ்வு பற்றிய பரப்புரைகளின் வழியும், மழித்த முன்மண்டையும் நீண்ட சடையும் கொண்ட கிராமத்தார்களை பெருநகரங்களுக்கு அழைத்து வந்து அவர்களை சூதாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடுத்தி, அக்கிராமத்தார்கள் கைக்காசு அனைத்தையும் இழந்த பின்னர் அவர்களுக்கு கடனுதவி செய்து, பின்னர் அவற்றையும் இழக்கச் செய்து, அதனால் ஏற்பட்ட கடன் தொகையைச் செலுத்துவதற்காக அவர்களை வெளிநாட்டிற்குச் சென்று பொருளீட்டி வருமாறு கட்டாயப்படுத்தியதன் வழியும் ஆட்களைத் திரட்டியிருக்கின்றனர். கொண்டு வரப்பட்டவர்களுக்கு வாக்குறுதிப்படி சம்பளம் தராதது மட்டுமின்றி, அவர்கள் மனிதநேயமற்ற முறையிலும் நடத்தப்பட்டனர் என்கிறது பத்தொன்பதாம் நூற்றாண்டு குறிப்பொன்று.

இன்றைக்கும் மார்வாடிகளின் கொள்ளைக் காடாய்த் திகழும் தமிழ்த் தேசத்திலிருந்து பாரியத் தொகைகளை கடன் வாங்கிச் செலவழித்து முகவர்கள் வழி இங்கு வந்து சேரும் தொழிலாளர்கள் படும் பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. "லிட்டில் இந்தியா” எனப்பெறும் சிராங்கூன் சாலையின் சந்துபொந்துகளிலிருந்து வெளிப்படும் அவலக் குரல்கள் எவரையும் துயரம் கொள்ள வைப்பவை. காலஞ்சென்ற பாவலர் பெரி நில பழனிவேலரின், “அருள் மலர் கலையகக்” கடையானது, பாதிப்புற்றவர்களின் முறையீட்டு மன்றமாகவே விளங்கியதெனலாம். குழாய் நீரே வயிற்றுக்குணவாக, பழைய நாளேடுகளே படுக்கை விரிப்பாக, பிளாட்பாரம் எனப்படும் அஞ்சடிகளே படுக்கையாக இருபத்தோராம் நூற்றாண்டிலும் உலகாண்ட தமிழனின் சோகம் தொடரவே செய்கின்றது.

ஏசு கிறித்து திருச்சபையினரின் உதவிகள் அவ்வப்போது கிடைக்கும் என்பது, அந்த அழகு வதனத்து ஆரணங்கு நிசாவின் வலியுறுத்தலின் பேரில் ஜாலான் பெசாரின் ஒதுக்குப்புறத்தில் அழுக்கு சட்டைகளோடு கன்னங்கள் ஒட்டியுலர்ந்து காணப்பட்ட சில நண்பர்களிடம் உசாவி அறிந்துகொண்டது. வேலை கிடைக்காததால் வயிற்றை நிரப்பிக்கொள்ள முடியாத நிலை, குடியிருக்க இருப்பிடமின்மை என்பது ஒருபுறமிருக்க, சண்டை, ஓவர் ஸ்டே எனப்படும் விசா முடிந்தும் தொடர்ந்து தங்குதல் ஆகிய காரணங்களுக்காக போலீஸ் வேட்டையிலிருந்து தப்பிக்க எந்நேரமும் எச்சரிக்கை நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்களோடு வங்க தேசம், பர்மா போன்ற நாடுகளின் உற்பத்தி சக்திகளும் இருக்க நேர்கிறது.

அடிப்படையில் முன்புசொன்ன கூலிப்பணியாளர்கள் விலங்குகள்போல் நடத்தப்பட்ட பல்வேறு கொடுமையான நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடல்வழிச் செலவின்போது பரவிய நோய்கள், வயிற்றுப்போக்கு மற்றும் பயணித்த கலங்கள் நீரினுள் மூழ்கியபோது காப்பாரின்றி எலிகளைப்போல் பன்னூற்றுவர் கடலில் அமிழ்ந்து செத்த நிகழ்ச்சிகள் யாவும் விடுபடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்பதிவுகள் எளிதாயும் கிடைக்கின்றன. மாந்தத் தன்மையற்ற பற்பல நிகழ்வுகள் நடந்தேறிய போதும் நாளாந்தம் கூடுதலான சீனமக்கள் தரகர்களின் வலையில் சிக்கிக்கொள்ளவே செய்திருக்கின்றனர். இங்கே ஓர் அனுபவத் தைக் குறிப்பிடுவது பொருத்தமாய் இருக்கும். அதாவது, 1996ஆம் ஆண்டு தமிழ் உலகை எனக்குக் காட்டிய பாவலரேறு பெருஞ் சித்திரனார் ஐயாவின் முதலாமாண்டு நினைவு மலர் வெளியீட்டிற்காக தமிழ்நாடு சென்றிருந்த போது புதுவையையும் சுற்றி வரும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டேன்.

என் திட்டத்தைச் செயற்படுத்த புதுச்சேரியில் பேருதவி புரிந்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கப் புதுவை கிளை அமைப்பாளர் தோழர் மதுரகவியும், தென்மொழி அன்பர் அரிமா மகிழ்கோவுமாவர். இவர்களோடு மகிழுந்திலும் மிதிவண்டியிலும் சுற்றிப் பலவிடங்களையும் கண்டு வந்து கொண்டிருந்தபோது எதிர் கொண்டவர்களில் சிலரும், தங்கியிருந்த உண்டுறை விடுதியில் சிலரும் சிங்கப்பூரில் வேலை செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும்படி வேண்டிக் கொண்டனர். (புதுவை சென்ற நோக்கை வெற்றியடையச் செய்தவர்களில் தலையாயவர்கள் புதுவை மதுரகவி, அவரது துணைவியார் திருவாட்டி பவானி, அவர்களது மக்கள், பெயரக் குழந்தைகள் ஆகியோராவர். இவர்களுக்கெல்லாம் என்ன கைமாறு செய்வது?) தமிழ் நாட்டில் இப்படி வேண்டிக் கொண்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு கூடுதலாகும்.

சிங்கையின் மார்கிரெட் டிரைவில் பழக்கமான பெரியவர் மீனாட்சி சுந்தரம். தீவின் அமைதியான பகுதிகளில் மார்கிரெட் குலோசும் ஒன்று. அருகிருந்த குவின்ஸ் டவுன் நூலகமானது மும்மொழிகளிலும் முற்போக்கு இலக்கியங்களைத் தேடிப் படித்த பயிற்றகம். அடுக்கு மாடி கீழ்த்தளத்தில் அலாவுதீனின் பலசரக்குக் கடை. அதை ஒட்டினாற் போன்ற சாலைக்கு அப்பால் அமைந்திருந்த உணவு அங்காடியில் முஸ்தபாவின் உணவுக்கடை. புன்னகை தவழும் முகமும் வெளியே எட்டிப் பார்க்கும் தங்கப் பல்லும் குறைந்த உயரமும் கொண்டவர் முஸ்தபா.

இசுலாமிய ஞானச் செல்வர்களான சூபிக்களின் பாக்களை மட்டுமின்றி ஒளவைக் கிழவியின் செய்யுள்களையும் தடுமாற்றமின்றி ஒப்பிப்பவர். அவர் மவுத்தானபோது அவரின் உறவினர்களுக்கு தஸிய்ய கூறவும் வாய்ப்பில்லாமல் போனது. அப்பெரியவரின் மறைவின்போது, மூன்று நாடுகளின் நதிகள் சங்கமிக்கும், கஞ்சா பயிராகும் தங்க முக்கோணத்திற்குப் பக்கமான மலை வீட்டு புத்தகோட்டத்திற்குச் சென்று விட்டிருந்தேன். பௌத்தம் சிங்கள மக்கள் போற்றும் நெறியென்பதற்காக அவ்வியக்கத்தை வெறுத்தொதுக்கும் தமிழர்களின் பட்டியலில் என் பெயர் இல்லையென்பது பதிவு செய்யத்தக்க ஒன்றேயாகும். (தொண்ணூறுகளைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கின்றேன்.) திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த "வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு” எனது பொறுப்பில் இருந்தது. பழகுவதற்கு இனிமையானவர்.

பிறந்த நாடு சென்றிருந்தபோது நோய் கடுமையாகி கிராமத்திலேயே தங்கிவிட, அவரை சந்திக்கும் முகத்தான் காரைக்குடியிலிருந்து சில கல் தொலைவிலுள்ள கல்லலுக்கு அடுத்தமைந்துள்ள அவரின் சொந்த ஊரான செம்பனூருக்குச் சென்றிருந்தபோதும் இதே நிலைதான். இன்னும் மதுரை, திருச்சி என்று மனு போட்டவர்களின் வேண்டுகோள் நச்சரிப்பாய் மாறியது. பன்முறை நடப்பியல் நிலையினை நன்கு தெளிவுபடுத்தியபோதும் தரகர்கள் வழி சிங்கைக்கு வேலைக்கு வருவது என்ற மோகம் பெருகிவருவதைக் கண்கூடாகக் காணக் கிடைத்தது. ஆனால் சீனத்தின் அன்றைய நிலையினை மேற்சொன்ன தமிழக நிலையோடு ஒப்பிடுவது காழ்ப்பாகும். அன்றைய நிலையினை மையல் என்பதை விட அன்று சீனத்தில் நிலவிய நிலக் கிழாரிய ஆட்சியோடு அரை காலனித்துவ ஆளுமையும் தரகு முதலாளியமும் ஏற்படுத்திய பாதிப்புகளும் அம்மக்கள் பிறந்தகத்தை விட்டு வெளியேற வழிகோலியிருக்கும் என்று கருத இடமுண்டு.

கொத்தடிமைகள் ஆதிக்கவாதிகளான கதை...

19ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட சீனர்கள் கொத்தடிமைகளாக உழைத்திருக்கின்றனர் என்பதனை கலாநிதி சையதுஉசேன்அல்அத்தாசு அவர்களின் மேற்கோள் ஒன்றின் வழி உய்த்துணரலாம்: “தென் இத்தாலியின் மண்ணின் மைந்தர்கள் பத்துப் பேரை வேலை வாங்குவதை விட எளிதானது ஆயிரக்கணக்கான சீனக் கூலிகளை கவனித்துக் கொள்வது” என்று அமைகின்ற வரிகள் அவை. ("தங்கத்திற்கும் ஈயத்திற்கும் வேண்டி மலாயாவில் சுரங்க வேலை” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் அது). விபச்சாரம், சூதாட்டம், சாராயம் மற்றும் போதைப் பயன்பாடு (சன்டு) ஆகிய தீய பழக்கங்களில் நிலைகொண்டிருந்த சீனச் சமூகம் இன்றைக்கு தென்கிழக்காசிய பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக வலுப்பெற்றுள்ளது.

சீனப் பெருநிலத்திலிருந்து கொண்டு வரப்படுகின்றவர்கள் குடிசைகள் போன்ற வீடுகளில் தங்க வைக்கப்படுவார்களாம். கடும் காவலின் கீழ் தோட்டங்களில் வேலை செய்யும் போது தவிர பிற வேளைகளில் அவ்வீடுகளை விட்டு வெளியேறாதவாறு கண்காணிக்கப் படுவார்களாம். தப்பியோடுவதையிட்டு இரவு நேரங்களிலும் கடுங்காவலாம். மோசமான உணவு, நவீன வகை மருந்துகளின்மையால் பெரும்பாலோர் கடும் நோய்களினால் பீடிப்பு என்று வாழ்ந்த சீனரினம் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட நிலத்தின் ஆதிக்க சக்திகளாக உருப்பெற்றது எங்ஙனம்?

“பணத்திற்காக எதையும் செய்பவர்கள் சீனர்கள்” என்று ஒற்றை வரியில் சுருக்கி விடுவது நேர்மையான மதிப்பீடாகத் தோன்றவில்லை. இது குறித்தெல்லாம் தமிழ்ச் சமூகத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் எவரும் எண்ணிப் பார்த்திருப்பதாகத் தோன்றவில்லை. பிறரின் வளர்ச்சியிலிருந்து கற்றறிவதைத் தாங்கள் தலைமை வசிக்கும் சமூகம் முன்னேற்ற பாதையில் செல்வதற்குப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம், தொலைநோக்கு, தன்னலமின்மை ஆகியவை கொண்ட முன்னோடித் தலைமைகள் நமக்கு அமையாமல் போவது நற்பேறின்மைதான் என்று கூறவேண்டியிருக்கிறது. உணவுண்ணும் மற்றும் பல்குத்தும் குச்சிகள் தொடங்கி பெரிய பெரிய வாணிகங்கள் வரை அனைத்திற்கும் சங்கங்கள் வைத்திருந்திருக்கிறார்கள் அவர்கள். எங்கடை மக்களோ பதிவு பெற்றதும் பெறாததுமான சாதிச்சங்கங்களையே பெருக்கிக் கொண்டிருக்கின்றார்கள் இன்றும். அவற்றை மையப்படுத்தியே இயங்குகின்றார்கள் என்பதனை இயக்க நிகழ்வுகளுக்குக் கூடும் கூட்ட எண்ணிக் கையை வைத்தே கண்டறியலாம். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அஃது யாதெனில் பொருளீட்டுவதில் ஒழுக்க முறைமைகளைக்கூட புறந்தள்ளி விடுகிறவர்கள் சீன வமிசாவளியினர் என்றபோதும், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மொழிப்பற்றும், இனவுணர்வும் பெரும்பங்காற்றியுள்ளன என்பதனை ஒதுக்கி விடுவதற்கில்லை. இது குறித்த புரிதல் தமிழர்களில் பலருக்கும் உண்டு என்றபோதும் அவற்றை மறந்துவிட்டுப் பேசுவதே பெரும்பாலோரின் உளப்பாங்கு.

“தகுதியடிப்படையில் வந்தவர்கள் நாங்கள்! உங்கள் முன்னோர்களைப் போல் கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் அல்ல,” என்று வாய்ச்சவடால் அடிக்கும் தமிழ் வாய்மொழியாளர்களின் "டிப்ளமோக்களும்” "டிகிரிகளும்” சீன வமிசாவளியினரின் குண்டி துடைக்கத்தான் பயன்படுகின்றன என இங்கு குறிப்பிடுவது சம்பந்தப்பட்டவர்களை இழிவுபடுத்தவல்ல. பிறந்த மண்ணிற்குப் பயன்தராத இத்தகையோரின் ஏட்டுக் கல்வித்திறன் மாற்றாரின் வளர்ச்சிக்கு எருவாகின்றது என்பதைச் சுட்டவே.

பண்டிகைக் கொண்டாட்டங்களும் பண்பாட்டுச் சீரழிவும்...

“பாட்டன் பரணிருந்தான் பாராண்ட வேந்தனவன்,” என்று நீட்டி முழக்குகின்றோம். ஆனால் வாழும் நிலையை எண்ணிப் பார்த்தோமா! நம்மைப்போல் அயற்புலத்திலிருந்து வந்தவர்கள் தாம் மலாய்க்காரர்களும் என்கின்றன வரலாற்றேடுகள். நாளும் மொழிப் புத்தாக்கம், வடிவான வாழ்வியல் கட்டமைப்பு என நன்கு திட்டமிட்டு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்ட அவர்களின் நிலையினைக் கருத்தில் கொண்டோமா! பண்பாட்டுப் பழமை, இலக்கண இலக்கியச் செழுமை என்று எங்கடை மக்களோடு ஒப்பீட்டளவில் கால்பங்குகூடத் தேராதவர்களின் இன்றைய நிலை வியக்க வைக்கின்றதே! இவற்றுக்கெல்லாம் நம்மிடம் அடிப்படைக் கல்வியோ, வாசிப்புத் தன்மையோ இல்லை. அனைத்துக்கும் ஆதாரமாய் விளங்கும் கல்வியை நமக்கு மறுத்தவர்களின் கதைகளை, பரமபதக் கூத்துகளை, அவர்களின் சூழ்ச்சிகளைத்தானே நாம் கடவுளர்களாக நம்பி, ஏற்று, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி இழிந்து போகின்றோம்.

தங்களது தாய்மொழி எழுத்தை பலகையில் எழுதி, அப்பலகையை வண்ணக் கலவையிட்டு, புனித எழுத்துகளாக வணங்கி, அதற்கு முன் ஊதுவத்திகளையும் மெழுகுவர்த்திகளையும் கொளுத்தி நட்டு வைக்கும் சீனரின் உணர்வழுத்தத்தை எதனோடு ஒப்பிடுவது? ஓம் என்பதைக்கூட ஹிந்தி எழுத்தில் எழுதி கொண்டிருக்கிறோம் நாம். உஞ்சலிருத்திக் கூட்டம் வகுத்தளித்த படிக்கட்டு சாதியத்தால் நமக்குள்ளேயே குத்து வெட்டு சச்சரவிட்டுக் கொண்டு பலம் குன்றிப்போகின்றோம். குழந்தைக்குப் பெயரிடுதல், கல்யாணம், இழவு என்று எதில் இல்லை சாதியும் மூடச்சடங்கு சம்பிரதாயங்களும்! “சாணிப்புழுக்கள் நெளியும் சாதித் திரள்கள் நாம்” என்றதில் தவறென்ன? “என்மொழியை இழந்து, சாமியை இழந்து, நான் ஹிந்துவாய் இருப்பது பாலைச் சொரிந்து உன் காலைக் கழுவி நக்கவா?” என்பன போன்ற அறிவார்ந்த கருத்துகள் நம் புத்திக்கு எட்டவில்லையே? நம் சுரணையைத் தொடவில்லையே? பாறாங்கல்லைப் போலல்லவா கெட்டியாகிக் கிடக்கின்றோம்! “வெட்கங்களைத் தின்று விம்மிதமுறும் சுரணையற்ற கூட்டம்” என்ற கவிதாசரணின் வரிகளுக்கு இலக்கணமாய் அல்லவா திகழ்கின்றோம்!

“கோகுலாஷ்டமி, மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, வினாயகர் சதுர்த்தி, விஜயதசமி, நவராத்திரி, கந்தர்சஷ்டி கவசம், பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆனித்திருமஞ்சனம், ஆவணிஅவிட்டம், புரட்டாசி சனி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி பஜனை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம்” என்று எத்தனையெத்தனை விழாக்கள்- பண்டிகைகள் தமிழர் வாழ்வில்! ஆனால் என்ன காரணத்திற்காக இவற்றைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதற்கு எவை உள்ளன பொங்கலைத் தவிர? பொங்கலும்கூட நம்மின் தெளிவின்மையால் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக ஆரியச் சார்புப் பண்டிகையாக மாறிக்கொண்டு வருவதை எத்தனை பேர் அறிந்துள்ளோம்? தடுக்கும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம்? எதிரிகள் எங்களை அழிக்க வேண்டாம். எங்கள் வினைப்பாடுகளே அவற்றை நிறைவேற்றிவைக்கும் என்று கட்டியங்கூறும் முகத்தான் உள்ளது தமிழரிடத்தில் தலைதூக்கி வரும் பண்பாட்டுச் சீரழிவுகள்.

எங்களுக்கு உண்மை வேண்டாம் அமைதியே போதும்...

அரைஞாண் கயிறு அரணாக் கொடியாகி இடுப்பில் கட்டியது அந்தக் காலம். கழுத்து, கை, கால் என்று முடிச்சுப் போட்டு கட்டிக்கொண்டு அவற்றில் நம்பிக்கை குவித்து கூண்டில் அடைபட்ட கிளியிடமும் சாலையோரத்து மரங்களிடத்திலும் காவியுடை ஏமாற்றுப் பேர்வழிகளிடமும் நம்பிக்கைகொண்டு தன்னம்பிக்கை இழந்து வருவது இந்தக் காலம். தீபகற்ப மலேசிய கோயில்களுக்குப் பக்திப் பயணங்கள் ஏற்பாடு செய்து தரும் முகவாண்மைகள் நாளும் பெருகி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் எது காரணம்? “ஹிந்து மதம் என்ற தொகுப்பில் இருந்து வெளியேறிவிட்டதாகக் கூறிக்கொள்ளும் மக்களும் உண்மையில் அதிலிருந்து வெளியேறாமலே இருக்கிறார்கள்,” என்ற தேவிபிரசாத் சட்டேபாத்தியாவின் கருதுகோள் முற்றும் பொருந்தி உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் திகழ்கிறது.

எந்த ஆரிய மதத்தை ‘நாணயமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை குறித்து எப்போதும் கவலைப்பட்டதே கிடையாது’ என்று அண்ணல் அம்பேத்கர் அடையாளம் காட்டினாரோ, அந்தப் பார்ப்பனிய மதத்தோடு, சம்பிரதாயச் சடங்கு, ஆட்டபாட்டங்கள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களோடு முடங்கி விடவே இவர்கள் முன்வருகிறார்கள். இதனாற்றான் தம்மொழியை இழித்துப் பழித்தவர்களின் வழித்தோன்றல் களையே குருக்களாகவும், வழிகாட்டிகளாகவும் ஏற்றிப் போற்றிக்கொண்டுள்ளனர். படித்தவர் படியாதவர் என்று இது மட்டில் அனைவரும் ஒருபடித்தானவர்கள்தாம்.

இவ்வாறானவர்கள் தெளிவு பெறுவதற்காகவும் இவர்களைக் கரையேற்றி விடுவதற்காகவும் பாடாற்றிக் கொண்டிருப்பவர்களை இம்மக்கள் மறந்தும் திரும்பிப் பார்ப்பதில்லை என்பதோடு, தங்களது கடன் பணி செய்து கிடப்பதே என்று செயலாற்றுபவர்களின் எண்ணிக்கை தேய்ந்துவருவதையும் அவதானிக்க வேண்டியுள்ளது. “அடிமையாய்ப் பிறந்ததற்காக யாரையும் குறை சொல்ல முடியாதுதான். ஆனால் சுதந்திரத்துக்காகப் பாடுபடுவதை விட்டொழிப்பதோடுகூட தனது அடிமைத்தனத்துக்கு நியாயம் கூறி அதைப் புகழ்ந்து கொள்கிறவன் வெட்கங்கெட்ட இழிபிறவியே ஆவான். நியாயமாகவே இவன் மீது ஆத்திரமும் அருவருப்பும் வெறுப்புமே உண்டாகிறது,” என்று தோழர் இலெனின் சொன்ன நிலைபோன்றதுதான் மேற்சொன்னவர்களின் நிலைப்பாடுமாகும். நடைமுறையில் மலேசியா, இந்தோனிசியா மற்றும் ஏனைய நாடுகளின் சீன வமிசாவளி இளைய தலைமுறையினர்க்குப் பயிற்சியளித்து அவர்கள் மேற்கு நாடுகளுக்கோ அல்லது வடஅமெரிக்காவுக்கோ செல்லத் தங்களைத் தயார் செய்துகொள்ளும் பயிலகமாகவும், சீனர் குடியேற்ற நாடாகவும் விளங்குகின்றது சிங்கப்பூர்.

தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்களின் நிலை? தந்நலத்தை மட்டுமே முதன்மைப்படுத்துவதால் ஏற்படும் அச்ச உணர்வு இவர்களை ஆட்டிப்படைக்கிறது. எதிர்கால வழித்தோன்றல்களுக்குப் பதிவு செய்து வைக்கப்பட வேண்டிய பலவற்றை மூத்த எழுத்தாளர்கள் என்று பட்டயம் மாட்டிக்கொள்வோர் பலரும் எண்ணிப் பார்ப்பதில்லை. “எங்களுக்கு உண்மை வேண்டாம் அமைதியே போதும்” என்ற கருத்துக் கொண்டவர்களாகத்தான் அடங்கிக் கிடக்கின்றனர். “இலத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்களின் கடந்த காலம் மற்றும் தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்” என்று பெருமிதங் கொண்ட சிலியின் செங்குயில் பாப்லோ நெருதா, "மக்கள்தான் எனக்கு வாழ்க்கை” என்று எழுதி வரலாறானவர். அதற்கொப்பாக இங்கே சுட்டிக்காட்டி பெருமைகொள்ள என்ன இருக்கிறது? எவர் இருக்கின்றார்? 'புலக்கவினால், கலைத்திறனால் தமிழினத்தைக் கட்டழிக்கும் புல்லர் எல்லாம் கலக்கமுற்றுப் போகும்படி எழுத்தினிலே சூடேற்றிக் கனலச் செய்க’ என்ற பெருஞ்சித்திரனாரின் முன்மொழிவை ஏற்று நடைமுறையாக்கினால் என்ன இழப்பு ஏற்பட்டுவிடும்?

மக்கள் வாழ்வதற்கல்ல பிழைப்பதற்கே பாடுபடுகின்றார்கள்...

மனிதம் உயர்ந்தது, எவராலும் அடிமைப்படுத்தப் படாமலும் எதற்கும் அடிமையுறாமலும் வாழ்வது சிறந்தது. இவற்றை உணர்ந்ததினால் தான் வரலாற்றுக் காலந்தொட்டு இன மதம் கடந்து பல்லாயிரக்கணக்கான போராளிகள் அவரவர் வாழ்ந்த காலகட்டங்களில் நிலவிய அடக்கு ஒடுக்குமுறைகளை எதிர்த்துச் செங்கள மாடி மாந்தக் குல வரலாற்றில் பேசப்படும் கருப்பொருளானார்கள். தன்மானத்தின் அடிப்படையிலமைந்த “லிபரேட்” என்ற இலத்தீன் மொழிச் சொல்லுக்கு விடுவித்துக் கொள்ளல் என்னும் பொருளில் "விடுதலை” என்று தமிழில் வழங்கி வருகின்றோம். உடுத்தும் உடையும் வாழுஞ் சூழலும் தூய்மையானதாக அமைந்து விட்டால் அங்கு வாழும் மக்கள் பொருளியல் தந்நிறைவு பெற்று மகிழ்வாக வாழ்வதாகப் பொருளில்லை.

“சிறந்த உணவு, சிறப்பான நிர்வாகம், வடிவான உடை என்று ஆசியாவிலேயே சிறந்த தேசியம் என்றிருப்பதில் என்ன பயனிருக்க முடியும், அப்படி அத்தேசியம் மிகமிகக் குறைந்த உரிமைகளைப் பெற்றிருக்கும்போது” என்ற கூற்று எத்துணைப் பொருள் பொதிந்தவை! சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மேற்குறிப்பிட்ட நிலை இருப்பதால் இங்கு வாழும் மக்களனைவரும் எவ்வகை சிக்கல்களும் இன்றி உயிர்ப்பதாகப் பிற ஆசிய நாட்டினரால், குறிப்பாக இந்திய நாட்டவரால் கருதவும் கருத்துரைக்கவும் படுகின்றது. இவற்றுக்குச் செய்தியூடகங்களின் பங்கும் அளப்பரியது. ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

காலை ஏழரை மணி தொடங்கி மாலை ஐந்து மணி வரையிலான வேலை நேரத்திற்குப் பின்னர் மருந்தகத்திற்குச் செல்ல அனுமதி கோரும் தொழிலாளர்கள் நடத்தப்படும் முறை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல என்பதோடு பெரும்பாலான வேலைகளில் டொக்டர்களைச் சென்று காணவும் அத்தொழிலாளர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. வேலைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக முதலீட்டாளர்களாலும் அவர்களின் ஏவலர்களாலும் திணிக்கப்படும் மிகைநேரப்பணியென்பது எழுதப்படாத சட்டமாய் அமுல்படுத்தப்படுகின்றது. தொழிலாளரின் உடல் நலம் ஒத்துழைக்கும் போதும், அவர்களாகவே முன்வரும்போதும் மட்டுமே மிகை நேரப்பணி என்பது மாறி, அதுவே கட்டாயம் என்ற நிலையாகி விட்டது. ஒரு தொழிலாளி பணி விலகும் போது சேமநிதி (ஈ.பி.எப்.), மருத்துவச் செலவு என்று புதியவர்களுக்கு ஆகும் செலவினங்களைக் கருத்தில் கொண்டு முந்தையவரிடத்திற்கு மாற்றாள் அமர்த்தப் படுவதில்லை. மாறாக, பணியிலிருக்கும் பிறரைக் கட்டாயத்திற்குள்ளாக்கி மிகைநேர வேலை வாங்கிக் கொள்வதே நடப்பில் உள்ள வழமை.

அந்நியத் தொழிலாளர்களை பாரிய எண்ணிக்கையில் கொண்ட துவாஸ் போன்ற தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்ற அன்றாட நிகழ்வுகள் சகித்துக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. பாசிசத்தின் படுகொலைக்குள்ளான போராளி தோழர் ரோசா லக்சம்பர்க், இந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயல்பாடுகளைக் காணக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருந்தால் எப்படி பொங்கியெழுந்திருப்பார்! இன்றைக்கும் அரசாங்கத்தைப் போற்றிக் கொண்டிருப்பவர்களில் சோசலிஸ்டுகளும், சமூக சனநாயகவாதிகளும் நிறையவே இருக்கின்றனர். மக்கள் செயல்கட்சியானது சோசலிசக் கட்சி என்றே சொல்லவும் நம்பவும் படுகின்றது. என்.டி.யு.சி. எனப்படும் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் மக்கள்செயல்கட்சி அரசின் துறையில்லாத அமைச்சராவார். மாற்றார் பிடியிலிருந்து விடுபட்ட நாடுகளில் தொழிற்கழகங்களின் பங்களிப்பு குறித்து ரோசாவின் கருதுகோளும் தொலைநோக்கும் கீர்த்தி வாய்ந்தவை. இப்படி உறிஞ்சப்படும் நிலையில் கிடந்து உழலும் உழைக்கும் மக்களுக்கு (அடித்தட்டு) விடுதலை என்ற சொல் பொருளற்ற ஒன்றாகவே இன்றைக்கும் உள்ளது.

இதனாற்றான் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகத்தான் அடுக்குமாடி வீடுகளிலும் கடைகளிலும் நாட்டுத் தேசியக்கொடியை ஏற்றிவைக்க பன்முறை அறிவுறுத்தப்பட்டும் செவி சாய்க் காதவர்கள் தண்டனைக்கு அஞ்சி இறுதி நேரத்தில் வேண்டா வெறுப்பாய்க் கீழ்ப்படிகின்றனர். இத்தகையவர்களின் எண்ணிக்கை சிறிதல்ல: ஏழைகள் பரம ஏழைகளாகப் படிநிலை வளர்ச்சியடைவதும், பணக்காரர்கள் கோடீசுவரர்களாகப் பரிணாமம் பெறுவதும் முதலாளித்துவக் கூறுகள். அம்முதலாளியத்தின் கோர முகத்தை அறிந்து கொள்ள இயலாதவாறு பல்வேறு சுமைகளையும் வழிவகைகளையும் கையாண்டு நெருக்குதல்களைத் தோற்றுவித்து உழைக்கும் மக்களைச் சிந்திக்க இயலாதவர்களாக்கி விடுகின்றது அரசியல் நிறுவனம். "மக்கள் வாழவில்லை, பிழைக்க வேண்டியே பாடுபடுகிறார்கள்” என்ற தோழர் மாக்சிம் கார்க்சியின் பாடம் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

புதிது புதிதாக அமுல்படுத்தப்படும் சட்டங்களையும், வரிவிதிப்பு போன்றவைகளையும் எதிர்கொள்ளும்போது, சுமக்க வழியில்லாத அடித்தட்டு மக்கள் தங்களது மனநிறைவின்மையை வெளிப்படுத்த எந்தவொரு வழியும் இல்லை. கான்ப்யூசியசு கோட்பாட்டாளர்களின் ஆட்சியில்தான் இப்படி. அச்சிந்தனையாளரே நிலப்பிரபுத்துவச் சார்பாளர்தான் என்பர். எண்பதுகளின் இறுதியிலும் தொன்னூறுகளின் தொடக்கத்திலும் என்னை அரவணைத்து அன்பு காட்டியவள் சீன வமிசாவளித் தோழி கெத்லின் தான் சோர் கிம். “பெண்கள் கூட்டம் பேய்கள்” என்ற பாடத்தை ஏற்றவனின் வேலைத் திட்டத்தில் பெண்ணுரிமையையும் போராட்டக் கருத்தியலாய் இணைத்தவள் கெத்லின். இந்தியர்கள் என்றாலே குடித்துவிட்டு ரகளை செய்பவர்கள் என்று அவளுள் மண்டிக்கிடந்த எண்ணத்திரை பிற்காலத்தில் அறுந்துபோவதற்கு எனது நடத்தைகள்தான் காரணம் என்று உறவினர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் மீண்டும் மீண்டும் பதிவு செய்தவள்.

அவள் அத்தையின் கணவர் திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர். இப்பொழுது புரிந்திருக்கும் அவளின் நம்பிக்கையை எது வலுப்படுத்தியிருக்குமென்று! தவிரவும் அப்பெண் பிறந்து வளர்ந்த புக்கிட் மேரா பகுதி பழைய வீட்டமைப்பு பேட்டைகளை உள்ளடக்கியதாகும். தமிழர்களை மிகுதியாகக் கொண்ட பகுதியிது. எனது பொழுதுகள் மகிழ்வாய்ப் புறப்பட அல்லது புரட்டப்பட அவள் ஆற்றிய வினைகள், எனது வளர்ச்சியில் அவள் காட்டிய அக்கறை, மாண்டு மீண்டதின் பின்னர் (அறிவற்றுக் கிடந்த கோமா நிலையை டொக்டர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்) அடிக்கொருதரம் தொலைபேசி மூலம் குறிப்பிட்ட நேரத்தில் முறையாக மருந்துகளை உட்கொண்டேனா என்பதனை உறுதி செய்து கொண்ட அந்த நிமையங்கள், பற்களின் கட்டமைப்பில் ஏற்பட்ட முறிதலுக்குச் செய்யப்பெற்ற அறுவையின் விளைவால் பல் வரிசையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம், கிழிந்த உதடுகளுக்குப் போட்ட தையல்கள் இவற்றினாலெல்லாம் ஏற்பட்ட பாதிப்புகளால் வெளிப்பட்ட சொற்களின் பலுக்கள் முழுமையற்றும் வலிமையற்றுமிருந்ததைக் கண்டும் கேட்டும் அந்த எழிலோவியம் அடைந்த துயரம் போன்றவை எல்லாம் நினைவுகள் அறுபடும் வரை மறையாமல் நிற்கக்கூடியவை. என்னைப் பேணிய கட்டடக் கலை முதுஞர் இரு குழந்தைகளுக்குத் தாயாக அன்பான துணைவரோடு அமைதியாக வாழ்ந்து வருகின்றார்.

“செய்தியூடகங்கள் அனைத்தும் அரசினரின் அல்லது ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கும் போது, எது பற்றியும் நேர்மையான தகவல் பெறுவது கடினம்” என்ற பேராசானின் குறிப்பு இங்கு நடைமுறை சத்தியமாய் உள்ளது.

பேச்சாளர் முனையம் தத்தமது கருத்தைப் பொதுமக்களிடத்தில் பகிர்ந்துகொள்ள அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் இடமாகும் என்றும், இலண்டன் மாநகரத்தின் பிரசித்தி பெற்ற ஹைட் பார்க் போன்ற அமைப்பில் இது திகழும் என்றும், பேச்சாளர்கள் குடிமக்களாக இருக்க வேண்டுமென்பது விதியென்றும் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட “ஸ்பீக்கர் கார்னரின்” இன்றைய நிலையென்ன? “அரசாங்கம் மாற்றுக் கருத்து கொண்டவர்களை இலகுவில் அடையாளம் காண்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டியே இத்திட்டம்,” என்று பேச்சாளர் முனைய அறிவிப்பு வெளிவந்ததும் அதுபற்றிக் கருத்துரைத்த ஜோசுவா பெஞ்சமின் ஜெயரெத்தினத்தின் கூற்றே நிரூபணமாகியுள்ளது. உரை தொடங்குவதற்கு முன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பேசவிருப்பவரின் விவரங்களைத் தெரிவித்து அனுமதி பெற்ற பிறகே பேச இயலும் என்பதோடு, நடப்பியல் சிக்கல்களை முதன்மைப்படுத்திப் பேசுவதோ, நிலவும் சிக்கல்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் உணர்ச்சி வயப்பட்டு உரத்த தொனியில் பேசுவதோகூட உளவுத்துறையின் கண்காணிப்பிற்கு ஆட்படுத்தக் கூடும்.

அனுமதி பெறாமல் இவ்விடத்தில் மத விவகாரத்தைப் பேசியதற்காக எதிர்க்கட்சிகளில் ஒன்றான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் பண்டாரகர் சீ சூன் ஜுவான் அவர்களுக்கு சிலவாண்டுகளுக்கு முன்னர் 3,000/- டாலர் தண்டம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கே நாடாளுமன்ற வடிவங்களில் உறிஞ்சும் வர்க்கத்தின் கைத்தடிகளே ஆட்சி செய்கின்றவர்கள்.

வரலாற்றுத் திருப்புமுனையாகிய வெற்றி...

இங்கு, ஜேபி என்றும் ஜேபிஜே என்றும் சுருக்கமாக அழைக்கப்படுபவர் குறித்து சிலவற்றையாவது சொல்வது தேவையாகின்றது. (படித்து முடித்ததும் அத்தேவையின் முகாமையை நீங்கள் உணரவே செய்வீர்கள்.) 1963இல் பரிசான் சோசியலிஸ் எனப்பட்ட சோசலிச முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்த பின்னர் 1966 தொடங்கி 1981 வரை வேறு கட்சி எதுவும் நாடாளுமன்றத்தில் அங்கத்தினர்களைக் கொண்டிருக்கவில்லை. அதற்கு சட்டத்திற்கு உட்பட்டதும் படாததுமான காரணங்கள் பற்பல. திரு. சி.வி தேவன் நாயர் அவர்கள் சிங்கப்பூரின் அதிபராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவர் பிரதிநிதித்த ஆன்சன் தொகுதியில் 1981 அக்தோபரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதன் வெற்றி வீரராகப் பாட்டாளிகள் கட்சியின் பொதுச்செயலாளரான தோழர் ஜேபிஜே அவர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்தது வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. பின் வந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் சிலரும் வெற்றிவாய்ப்பினைப் பெறுவதற்கு முன்னோட்டமாய் விளங்கியது இவரின் வெற்றி.

“சங்கன் முழுவதும் மாவோ பாதம்” என்று இலங்கை பாராளுமன்றத்தில் “திரு” போராட்டக்காரரும், நாடு கடந்து அரசமைக்க மொரிசியசு நாடு வாய்ப்பு தந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாததால் பலரின் ஏச்சுகளுக்கும் ஆளான காலஞ்சென்ற அப்பாபிள்ள அமிர்தலிங்கம் உரையாற்றினாரே! அவற்றுக்கான கரணியம் அறிந்த ஒன்றுதான் என்ற போதும் மறந்திருக்கக்கூடும் என்பதால் இடதுசாரி இயக்கத்தில் ஈடுபட்ட தோழர் சி.கா. செந்திவேல் எழுதிய புத்தகத்திலிருந்து சுருக்கமாய் சிலவற்றைப் பார்ப்போம்:

“....1966ஆம் ஆண்டு ஒக்றோபர் 21 திகதி, சாதி அமைப்பு தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும் என்று செம்பதாகையின் கீழ்- பொலிசு விதித்த தடையையும் மீறி- சந்தை மைதானத்தில் துவங்கி யாழ்நகர் நோக்கி வீறுநடை போட்ட ஊர்வலத்தினை சுன்னாகம் பொலீசு முன்றலையில் வைத்துக் குண்டாந்தடியால் மூர்க்கத்தனமாகத் தாக்கியது. கடுந்தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையிலும் கட்சி ஊழியர்களின் விடாப்பிடித்தனத்தால் ஊர்வலத்தினர் முன்நோக்கிச் செல்ல அனுமதிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. யாழ் நகர் முற்றவெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது....

“ஒக்றோபர் எழுச்சியுடன் முன்வைக்கப்பட்ட புரட்சிகரக் கொள்கையானது சங்கானையில் வெடித்த போராட்டத்தின் மூலம் புரட்சிகர வெகுமக்கள் போராட்டம் என்னும் நடைமுறைக்குள் பிரவேசித்தது. சங்கானைப் போராட்டத்தின் உறுதியான நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அடக்கப்பட்ட அனைத்துத் தாழ்த்தப்பட்ட மக்களையும் விழித்தெழுந்து போராட்டப் பாதையில் முன்செல்ல வழிவகுத்தது. மட்டுவில்-சாவகச்சேரி, மந்துவில்-கொடிகாமம், மவிட்டபுரம்-காங்கேசன் துறை, நெல்லியடி-கன்பொல்லை, கரவெட்டி-உரும்பிராய் போன்ற குறிப்பான பகுதிகளில் இடம்பெற்ற தேனீர்க்கடை, ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் தொடர்ந்து பல மாதங்கள் நீடித்தன. அவை புரட்சிகர வெகுசனப் போராட்ட மையங்களாக விளங்கின. இப்போராட்டங்களின்போது சாதிவெறியர்களின் தாக்குதலுக்கு இலக்காகி பத்துக்கும் மேற்பட்டோர் தமது இன்னுயிர்களைத் தியாகித்தனர். யூஎன்பி-தமிழரசுக் கட்சி இணைத்திருந்த “தேசிய” அரசாங்கத்தின் பொலிசு சாதி வெளியர்களுடனும் பிற்போக்குச் சக்திகளுடனும் இணைந்து நின்றமை குறிப்பிடக் கூடியதொன்றாகும். அதேவேளை ஏழு சாதி வெறியர்கள் புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் உயிரிழக்கவும் நேரிட்டது.

“ஆண்டாண்டுகாலமாக சாதி அடக்குமுறையாலும் தீண்டாமைக் கொடுமையாலும அல்லலுற்று அடிமைத்தன வாழ்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தமது சொந்தக் கால்களில் எழுந்து நின்று புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் அடிமை விலங்கை உடைத்தெறிய முன்வந்த வரலாற்றுத் திருப்புமுனை அது. இப்போராட்டம், அன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறக்கப்படாத ஆலயக் கதவுகளைத் திறக்கச் செய்தது. சமத்துவமாக அனுமதிக்கப்படாத தேனீர்க் கடைகளில் சமத்துவத்தைப் பெற்றுக் கொடுத்தது. மற்றும் பொது இடங்களில் இரண்டாந்தர நிலையில் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையினை மாற்றியமைத்தது. மொத்தத்தில் தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த உயர்ந்த தமிழரும் தாழ்ந்த தமிழரும் என்ற இரட்டைத்தர நிலையினைத் தகர்த்து தமிழர் சமுதாயம் என்ற நிலை உருவாவதற்கு இப்புரட்சிகரப் போராட்டம் வழிவகுத்துத் தனது வரலாற்றுப் பங்களிப்பை வழங்கியது. பிற்காலத்தில் தமிழர்களிடையே பெரும் போராட்ட அலையாக எழுந்த தமிழ்த்தேசிய இன விடுதலைக்கான போராட்டம் தோன்றி வளர்வதற்கேற்ற முன்னுதாரணமாக இக்காலப் போராட்டம் அமைந்தது. அதன் மூலம் பல முன் அனுபவங்களைத் தமிழ் இளைஞர்கள் பெறக்கூடிய வாய்ப்பினையும் வழங்கி நின்றது.”

1966 தொடங்கி 1970 ஊடான காலகட்டங்களில் நடைபெற்ற இத்தகு போராட்டங்களை முன்னெடுத்த இலங்கை கம்யூனிஸ்டு (மாவோ) கட்சியின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பாடாற்றியவர் தோழர் நாகலிங்கம் சண்முகதாசன் அவர்களாவார். வேறொரு சந்தர்ப்பத்தில் தோழர் குறித்து விரிவாய் கதைக்கலாம்.
இப்படி சமான்ய மக்களின் போராட்டக் களமாய் பிற்காலத்தில் விளங்கிய சங்கானையில்தான் இருபதாம் நூற்றாண்டின் முற்கூறில்- எழுபது தொடங்கி முப்பதாண்டு கால சிங்கப்பூர் வரலாற்றில் அடித்தட்டு மக்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பவராகவும் முனை மழுங்கா போர்க்குணத்தினாலும், நாடாளுமன்ற கர்ஜனை உரைகளினாலும் குடிமக்களின் செல்வாக்கினைப் பெற்ற அரசியல்வாதியாகத் திகழ்ந்து வரும் புகழ்பெற்ற சட்டத்தரனி ஜோசுவா பெஞ்சமின் ஜெயரெத்தினம் அவர்கள் 5-1-1926இல் தோன்றினார். ஈழநாட்டில் பிறந்தவர் தென்கிழக்காசிய ஓட்டுப்பெட்டி அரசியலில் முத்திரை பதித்ததும், தென்னாசிய (தெற்கு) பாராளுமன்ற அரசியலில் வரலாறு படைத்த ஈழத் தந்தை செல்வநாயகம் மலாயாவின் ஈப்போ நகரில் பிறந்ததும் எதிர்பாராத நிகழ்வுகள்தாம்!

உடன்பிறந்தோரான இரண்டு தங்கைகள், ஒரு தம்பி ஆகிய மூவரும் மலாயாவில் பிறந்திருக்க, இவர் மட்டுமே சங்கானையில் பிறந்தவர் என அறிய முடிகின்றது. வாய்ப்பு தேடி இளம்வயதிலேயே மலாயாவிற்குக் குடி பெயர்ந்துள்ளார் இவரின் தந்தை. குடும்பத்தோடு, ஈய வளத்தில் கொழித்த வடமாநிலமாம் பேராவில் அவர் வேலை செய்து பின்னர் தென்கரை ஜோகூரின் பொதுப்பணித்துறையில் சேர்ந்தவர் இரண்டாம் உலகப் பெரும் போரின் பின்னர் பொறுப்பு ஓய்வு பெறும் வரை அத்துறையிலேயே வினையாற்றியுள்ளார். பிரிட்டிசுப் பேராட்சியில் போராளிகள் பலர் தோன்றிய மாநிலம் பேரா. வெள்ளைப் பரங்கியரை விரட்டியடித்திட்ட வீரப்பரம்பரையைத் தோற்றுவித்த நல்நிலம் அது.

வெள்ளி என்றிதற்குப் பெயரிட்டார் மலாய் மொழியில்
விளைகின்ற ஈயமோ தங்கத்திற்கீடாகும்
அள்ளிப் பருகுதற்கு எழிலான பங்கோரும்
அதற்கு எதிரேயே நாட்டின் கடற்படையும்
வெள்ளை பனிமலையாம் தித்திவங்சா தொடங்குவதால்
வியந்து போற்றிடலாம் போராவோர் வெண்முத்து

என்று இம்மாநிலம் குறித்து பா புனைந்தவர் கவிஞர் மை தீ சுல்தான். ஜெயரெத்தினத்தின் இரண்டு தங்கைகளும் தம்பியும் ஜோகூர் பாரூவில் பிறந்தவர்கள். மூவார் எனும் நகரில் இருந்த பிரெஞ்சு கான்வென்டில் பள்ளி வாழ்வைத் தொடங்கிய அவர் இரண்டாண்டுகளுக்குப் பின் அரசு ஆங்கிலப்பள்ளியில் பயின்றார். இரண்டு ஆண்டு ஆங்கிலக் கல்லூரிக் கல்வியோடு நிப்பொனியர் ஆட்சியின்போது போக்குவரத்துத் துறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் சிங்கையின் தூய ஆந்திரேயரில் கல்வியைத் தொடர்ந்து 1946இல் சீனியர் கேம்பிரிட்ஜ் படித்துள்ளார்.

1948ஆம் ஆண்டில் பிரிட்டிசு சாம்ராச்சியத்தின் இதயமான இலண்டன் நோக்கிப் பயணித்தார். ஜெரெமி பெந்தம் தொடங்கிய பல்கலைக் கல்லூரியில் சேர்ந்த மூன்றாண்டுகளில் 1951இல் சட்டத்துறையில் இளங்கலைப் பட்டதாரியானார். அதே ஆண்டில் இறுதித் தேர்வுக்கு அமர்ந்தார். கல்லூரி வாழ்க்கை குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்: “எனது மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கை பல விடயங்களிலும் எமது வளர்ச்சிக்கானதாக அமைந்தது. சட்டத்துறையில் ஓராண்டு இளைய வகுப்பில் பயின்றுகொண்டிருந்த மனைவியை சந்தித்ததும் அங்குதான். வளாகத்தில் நிலவிய தாராள சிந்தனைப்போக்குகள் எம்முள் தாக்கங்களை ஏற்படுத்தின. மூன்றில் இரண்டு பங்கினர் பிரித்தானியாவை சேர்ந்தவர்களாகவும் ஏனைய ஒரு பங்கினர் ஞாலத்தின் மற்றப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் தங்கியிருந்த பல்கலை விடுதியில் தங்கியிருந்தேன். அவர்களில் நான் ஒருவன் மட்டுமே சிங்கப்பூரைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

“தொழிலாளர் கட்சியின் ஆதரவாளனாகவும் அக்கட்சி வேட்பாளர்க்கு ஓட்டு வேட்டையாடுபவனாகவும்கூட விளங்கினேன். தொழிற்கட்சி அரசாங்கத்தில் நலத்துறை அமைச்சராக (1945-51) இருந்த தோழர் அனீயூரின் பெவன் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தேன். முந்தைய கனிவளத் தொழிலாளர் இவர். எமது மரியாதைக்குரியவராயிருந்த பிறி தொருவர் அமைச்சர் தோழர் எர்னஸ்ட் பெவின். முந்தைய வரைப் போலவே இவரும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவரே. பல்கலை செல்லாதவர் மட்டுமல்ல, துறைமுகத்தில் வேலை செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிளெமண்ட் அட்லியின் அரசில் வெளியுறவுத் துறை பொறுப்பு இவருடையதாயிருந்தது.”

ஐரோப்பிய இனக்குழுவைச் சேர்ந்த துணைவி திருவாட்டி மார்கெரட் 1980ஆம் ஆண்டில் புற்றுநோயால் காலமானார். பொருளியல் வல்லுனரான தலைமகன் கென்னத், இலண்டனில் வாழுகின்றார். இளைய மகன் பிலிப் சட்டத் தரனியாக சிங்கையில் இருக்கின்றார். இவர் எழுத்தாளருமாவார்.

எழுதப்பட்ட தீர்ப்புக்கு நடத்தப்பட்ட நாடகமே "தமிழ் மொழி வாரம்”

தமிழ்மொழி வாரக் குழுவில் இடம்பெற்றிருந்த எட்டுப்பேர், “எழுதப்பட்ட தீர்ப்புக்கு நடத்தப்பட்ட நாடகமே தமிழ்மொழி வாரம்” என்ற செய்திக்காக இவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். பாட்டாளிகள் கட்சியின் வெளியீடான “சுத்தியல்” என்ற நான்கு மொழி சஞ்சிகையில் (சுத்தியல் பாட்டாளிகள் கட்சியின் சின்னம்) வெளிவந்த செய்திக்காக கட்சியின் தலைமைச் செயலாளரான ஜெயரெத்தினத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டு, முடிவாக 2,65,000 சிங்கப்பூர் டாலர்களை வழக்கு தொடர்ந்தவர்களுக்குச் செலுத்தும்படி தீர்ப்பளிக்கப்பட்டது. வேண்டிக்கொண்டதின் பின் தவணை முறையில் தண்டம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஓரிரு தவணைகளுக்குப் பின் தொகை செலுத்த இயலாமல் போனதால், சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் வழக்கு மன்றப் படிக்கட்டு ஏற, ஜே.பி.ஜே. திவாலானவராக அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அவருக்கிருந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியும் இருக்கையும் பறிபோயின.

முன் சொன்னவை தவிர வேறு சில வழக்குகளிலும் தண்டம் கட்டியவர் இவர். இவரின் நாடாளுமன்ற உரைகள் உட்பட வேறு சில புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவையாவும் தமிழில் இல்லாதது பெருங்குறை தான். தமிழ் நீச பாசை என்பதாலா! அல்லது தமிழர்கள் சுயமரியாதை அற்றவர்கள் என்ற காரணத்தாலா? காலம் வாய்ப்பளிக்குமாயின் அப்பணியை நாம் நிறைவேற்றித் தருவோம். இவரைப் பாராளுமன்றத்திலிருந்து முற்றாக அகற்றுவதற்காக நடத்தப்பட்ட நாடகம் வெற்றியடைந்ததாகத் தோன்றினாலும், நெருக்குதல்களைத் தவிர்ப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் பட்டியலில் இவர் இடம் பெறவில்லை என்பதோடு, இவரின் எழுத்தையோ, முழக்கத்தையோ முற்றாக இரட்டடிப்புச் செய்துவிட முடியவில்லை என்பதை ஜே.பி.யின் போர்க் குணத்திற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

திரு. ஜெயரெத்தினம் பற்றி எடுக்கப்பட்ட பதினைந்து நிமிட செய்தி விளக்கப் படம் (டாக்யூமென்றி) 2001இல் நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலகப் பட விழாவில் திரையிடப்படுவதினின்று விலக்கிக் கொள்ளப்பட்டது, அரசியல் சம்பந்தப்பட்ட படங்கள் மீதான தடையை மீறுவதாகும் என அதற்குக் காரணம் சொல்லப்பட்டது. முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளிகள் கட்சியின் முந்தைய பொதுச் செயலாளருமானவர் பொது இடங்களில் புத்தகம் விற்பது, ஆதரவாளர்களைச் சந்திப்பது ஆகியவைகள் அக்குறும்படத்தில் இடம் பெற்றிருந்தது என்று விவரிக்கின்றது ‘ஸ்ரெய்ட் ரைம்ஸ்’ நாளேடு. ஙி ஆன் பாலிடெக்னிக்கின் திரை மற்றும் செய்தியூடகத் துறையின் மூன்று விரிவுரையாளர்களால் தயாரிக்கப்பட்ட அக்குறும்படத்தின் தலைப்பு: "எ விசன் ஆப் பெர்சிஸ்தன்”. “அப்படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும். மக்கள் முடிவு செய்யட்டும்” என படவிழாவில் இயக்குநர் நாயகம் பிலிப் சியா குறிப்பிட்டது ஜே.பி.ஜே பற்றி நாளேடு தரும் கூடுதல் செய்தி.

இவ்வளவுக்குப் பின்னும் அவர் அரசியலுக்கு முழுக்குப் போடவில்லை. அவருடைய அரசியல் ஆர்வம் அப்படி. “அப்பாவிப் பொதுமக்களின் மீது குண்டு வீசியது, என்ன நியாயம்? மேற்கத்தியர்கள் ஜப்பான் மீது மட்டும் குண்டு வீசித் தாக்கியது அது ஆசிய நாடு என்பதாலா?” என்னும் பொருளில் வகுப்பு ஆசிரியரால் பாராட்டப்பட்ட கவிதை எழுதியதே அரசியலின்பால் ஈர்க்கப்பட்ட முதல் சம்பவம் என்றவர், “அன்றைய மலாயாவில் இந்தியப் போர்வீரர்களைத் துன்பத்திற்கு உள்ளாக்கிய பிரிட்டிசு - அஸ்திரேலிய படைஞர்களின் செயல் சினமேற்படுத்தியது,” என்றும் பதிவு செய்துள்ளார்.

தமது அரசியல் வாழ்க்கை குறித்தும் அவற்றில் அடைந்த வெற்றி தோல்விகள் பற்றியும் ஒரு நேருரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார் ஒருபோது: “மேற்கொண்டவற்றில் வெற்றி பெற்றேனா இல்லையா என்பது குறித்து வரலாறு தீர்ப்பளிக்கும். ஆனால் உதட்டு சேவை என்ற அளவில் இல்லாமல், தங்கள் நலனுக்கான எண்ணங்களைச் செயலாக்க உண்மையாகவே முனைந்தவன் இங்கிருந்தான் என்று மக்கள் எண்ணிப் பார்ப்பார்கள்.”

“மலாய் அரசரிடமிருந்து சிங்கப்பூராவை ஸ்டம்போர்ட் ராபில்ஸ் வாடகைக்குப் பெற்றது தொடங்கி, தீவின் வரலாறு உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்படுமாயின் உங்களின் பங்களிப்பு நன்றியோடு நினைவு கூரப்படும்,” என்று ஒருகால் அவரிடம் சொல்லியது நினைவு அடுக்குகளிலிருந்து வெளிப்படுகின்றது. அப்போது, “வரலாறு உங்களை விடுதலை செய்யும்” என்று முடித்தவுடன், “கோ எ வே!” (விலகிப் போங்கள்) என்று என்னை விரட்டினார். அது என் நலன் கருதித்தான்! இவரோடு காணப்படுவது பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதனை அனைவரும் நன்குணர்வர். ஆனாலும் பிறிதொரு நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் வழக்குரைஞர் தோழர் சியாம் சீ தோங் உடனான அளவிற்கு ஜே.பி.யோடு நமக்குப் பழக்கமில்லை என்பதைச் சொல்லித்தானாக வேண்டும்.

ஏடறிந்த வரலாறு தொடங்கி...

தீவின் அரசியல் வரலாறு குறித்துச் சொல்வதெனில், போர்க்கப்பல்கள் புடைசூழ “இன்டியானா” என்ற பெயர் தாங்கிய கப்பலில், மலாய்த் தீவக்குறையின் தென்முனை நீரிணையில் அமைந்திருந்த இத்தீவை 1891 திசம்பர் இருபத்தோராம் திகதியன்று அரசவயவர் தோமஸ் ஸ்டம்போர்ட் ராபில்ஸ் வந்தடைந்தார். ஜோகூர் அரசாட்சிக்கு உட்பட்டிருந்த, “துமாசிக்” என்ற பழைய பெயர்கொண்ட சிங்கப்பூரா தீவை மன்னருடனான பேச்சுவார்த்தையின் வழி வாடகைக்கு முயன்று பெற்று கிழக்கிந்திய வணிகக் குழுமத்தின் புறக்காவல் இடமாக மாற்றியமைத்தார். காலப்போக்கில் உலகின் பிற பகுதிகளில் நிகழ்ந்ததைப் போலவே இத்தீவும் பிரிட்டிசு சாம்ராச்சியத்திற்குக் கையளிக்கப்பட்டது. அது முதல் இத்தீவு பிரிட்டிசு காலனியின் மணிமுடியாக விளங்கி வந்தது.

இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் 1947இல் முனிசிபல் தேர்தல் நடைபெற்றது. அதன் பின் 1948இல் சட்டப்பேரவை தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டு நடந்தேறியது. புதிய சட்டவரைவின்படி ஆளுநரை முதன்மையாகக் கொண்ட சட்டப்பேரவையில் 9 அதிகாரபூர்வ மற்றும் 13 அதிகாரம் சாராத அங்கத்தினர்கள் இடம் பெற்றனர். இப்பதின்மூன்று உறுப்பினர்களில் மூவரை வர்த்தக சம்மேளத்தினர் தேர்வு செய்ய, நால்வர் ஆளுநர் நியமனமாகவும், ஏனைய அறுவர் தெரிவு செய்யப்பட்டவர்களாகவும் இருந்துள்ளனர். 250,000 பேர்களில் 22,000 பேர் மட்டுமே வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டிருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். ஆனால், வாக்களித்தவர்கள் 13,458 பேர் மட்டுமே. இற்றை நாள் போல அன்றும் பாரிய தொகையினராய் இருந்த சீனர்கள், முதலாவது தேர்தலில் பெரிதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. 25-8-1947இல் மூன்று சட்டத்தரனிகளால் ஆரம்பிக்கப்பட்ட பல்லினக் கட்சியான சிங்கப்பூர் முற்போக்குக் கட்சி தான் போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மூன்றினை வென்று நிற்க, ஏனைய மூன்று தொகுதிகளை சுயேட்சைகள் கையகப்படுத்தினர்.

பதிவு செய்துகொண்டிருந்த 48,000 வாக்காளர்களில் 25,065 பேர் மட்டுமே வாக்களித்திருந்த 1951 தேர்தலில் ஒன்பது இடங் களுக்குப் போட்டியிட்ட இருபத்திரண்டு வேட்பாளர்களில் பதினைந்து பேர் இந்தியர்களாகவும் ஒருவர் சிலோனிக் குமாவார். முற்போக்குக் கட்சி சார்பில் எட்டு வேட்பாளர்களும் தொழிலாளர் முன்னணியை பிரதிநிதித்து எழுவரும் இவர் களோடு கூடவே சுயேட்சைகளும் போட்டியிட்டனர். முற்போக்குக் கட்சி ஆறு இடங்களையும் தொழிலாளர் முன்னணி இரண்டையும் சுயேட்சை ஓரிடத்தையும் கைப்பற்றியிருந்தனர். அந்த சுயேட்சையே பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணாக வரலாற்றில் பெயர் பதித்துள்ளார்.

1955இல் பிரித்தானியா, மாற்றங்கள் சிலவற்றைச் செய்து, அதிகாரம் கொண்ட தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபை முறையை அறிமுகப்படுத்தியது. அதுவும்கூட பெயரளவிலானதாகவே இருந்துள்ளது. முழு உரிமையும் ஆளுநரிடமே இருந்ததென்பது கவனங்கொள்ளத்தக்கதாகும். ஏறத்தாழ 300,299 மொத்த வாக்காளர்களில் சரிபாதியினர் பெண்கள் என்று சொல்லப்பட்ட தேர்தலில் இருபத்தைந்து இடங்களுக்கு எழுபத்தொன்பது பேர் களமிறங்கினராம், இரு பெண்கள் உட்பட. இதில் தொழிலாளர் முன்னணி பத்து இடங்களை வெற்றி கொண்டுள்ளது. முற்போக்குக் கட்சி நான்கு இடங்களையும் மக்கள்நாயகக்கட்சி இரண்டு இடங்களையும் வென்றெடுத்துள்ளன.

முடிவில், தொழிலாளர் முன்னணிக்குத் தலைமை தந்த ஈராக்கிய வழித்தோன்றலான- அணிநலம் வாய்ந்தவரும் குற்றவியல் வழக்குரைஞராக பெயர் பெற்றிருந்தவருமான தோழர் டேவிட் சவுல் மார்சல், மூன்று கூட்டணி உறுப்பினர்களோடு அரசாங்கம் அமைத்ததாக வரலாறு. சிங்கப்பூர் கடலோடிகள் கழகத்தின் தலைவர் எம் ஏ மஜிட், பிரிட்டிசு ராணுவத்தின் குடிமக்கள் சேவைப் பிரிவின் அலுவலர் எம் பி டி நாயர் மற்றும் இராணுவ குடிமக்கள் சேவை கழகத்தின் தலைவர் பீட்டர் வில்லியம்ஸ் ஆகியோரால் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு 1948 செப்தம்பர் முதல் நாளன்று தொடங்கப்பட்ட கட்சியே தொழிலாளர் முன்னணியாகும். கேம்பிரிட்ஜ் ஆசிரியர் பயிற்சி பெற்ற பிரான்சிஸ் தோமஸ் இதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பரப்புரையின்போது வாக்காளர்களுக்குத் தந்த உறுதிமொழிப்படி சிங்கப்பூருக்கு சுதந்திரம் வேண்டி பேச்சு வார்த்தைக்கு அனைத்துக் கட்சி குழு நாட்டின் முதலாவது முதலமைச்சர் டேவிட் மார்சல் தலைமையில் ஏப்ரல் 1956இல் இலண்டனுக்குச் செலவு மேற்கொண்டது. இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வியுற்றதின் விளைவாக சூன் திங்களில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் டேவிட் மார்சல். அவ்வாறு செய்ததை தவிர்த்திருப்பாராயின் தீவின் வரலாறு வேறு வகையில் எழுதப்பட்டிருக்கும். இரண்டு நாட்களுக்குப் பின் கூட்டணியைச் சேர்ந்த லிம் இயூம் வோக் என்பார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பின்னரும் சுதந்திரப் பேச்சுரைக்கு இலண்டன் சென்றனர். வேறு சில புதிய திருத்தங்களை உள்ளடக்கிய வரைவின் மீது தாக்குதல் தொடுத்த டேவிட் மார்சல் இவ்வரைவிற்கான மக்கள் ஆதரவைக் கண்டறிய தம் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார் என்று அறிவித்து அங்ஙனமே செய்தார்.

ஆனால் கடைசியில் போட்டியிடுவதி னின்று ஒதுங்கிக்கொண்டு தாம் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்தாராம். எட்டு திங்களுக்குப்பின் மீண்டும் களமிறங்கியவர் பாட்டாளிகள் கட்சியை அமைத்துள்ளார். கட்சிக் கூட்டங்கள் தவிர தொகுதிகளுக்குச் செல்லும்போதும் தம் இடைவாரினூடே “சுத்தியலை” சொருகியிருப்பாராம் மார்சல். பாட்டாளிகள் கட்சி உறுப்பினர் திரு. மீனாட்சி சுந்தரத்தின் வழி இத்தகவலைப் பின்னர் உறுதி செய்து கொண்டோம்.

கட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சியுடன் கூடிய அரசாங்கம் அமைக்கும் அதிகாரம் 1959இல் சிங்கப்பூருக்கு கையளிக்கப்பட்டது என்றபோதும், தற்காப்பு, வெளியுறவு பாற்பட்ட வேறு பல முகாமையான அதிகாரங்கள் ஆளுநர் வழி பிரித்தானியாவிடமே இருந்தது. அப்போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் பங்கு பற்றிய கட்சிகளின் மொத்த எண்ணிக்கை பதின்மூன்று. 25-4-1959ஆம் நாள் ஐம்பத்தோரு இடங்களுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 194 ஆகும். கட்சி சார்ந்த 160 போக எஞ்சிய 34 பேர் சுயேட்சை களாவார். வாக்களிப்பு கட்டாயமாக்கப்பட்டு மே முப்பது 1959 அன்று நடைபெற்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்குச் சென்றவர்கள் அரை மில்லியனுக்கு மேற்பட்டவர்களாம். இதில் நாற்பத்து மூன்று கதிரைகளை வென்று மக்கள் செயல் கட்சி ஆட்சியமைத்தது. ஆட்சி பீடமேறிய கட்சி 16-9-1963 நாளன்று சிங்கப்பூரை அண்மையில் அமைக்கப்பட்ட மலேசியக் கூட்டரசில் இணைத்தது, அதன் பின்னர் ஏற்பட்ட முறுகல் நிலைகளால் இணைந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே 9-8-1965இல் கூட்டரசிலிருந்து சிங்கை வெளியேற்றப்பட்டது.

அன்று தொடங்கி இன்றைக்கும் அரசாண்டுகொண்டிருப்பவர்கள் ம.செ.ம.வினர்தாம். அக்கட்சியில் நிகழ்ந்த வெளியேற்றங்கள், உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழான கைதுகள், மலேசிய கூட்டரசில் இணைவதை எதிர்த்து வெளியேறிய / வெளியேற்றப்பட்டவர்கள் இணைந்து அமைத்த சோசலிச முன்னணியின் செயற்பாடுகள், அக்கட்சியின் முன்னோடிகள் சிறைபிடிப்பு (அவர்களில் சியா தைப் போ என்பார் தென் ஆப்பிரிக்காவின் இளைப்பாறிய அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலாவினும் கூடுதலான தனிமை மற்றும் தீவுச் சிறை வாழ்க்கை அனுபவித்த நாடாளுமன்ற உறுப்பினராவார்), வேறு சில புதிய கட்சிகள் அமைப்பு, தேர்தல்களில் எதிர்க் கட்சிகள் பங்கு பற்றித் தோல்வியடைதல், இடையிடையே கம்யூனிசப் பூச்சாண்டி என காலம் சுழன்றது, சிங்கக்குரலோனின் வரலாற்றுத் திருப்புமுனை வெற்றி சாத்தியமானது வரை.

சொந்த வாழ்க்கை சுகங்களை இழந்த பல்லாயிரவர்

கூட்டரசிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டபோது முதலமைச்சர் லீ குவான் யூ தேம்பியழுததைக் கண்டு தாங்களும் அழுததாக சொல்லி பெருமிதங்கொள்வர் மூத்த தமிழர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அது நீலிக்கண்ணீர் என்று விமர்சித்த தமிழர்களும் இருக்கவே செய்துள்ளனர். இங்கு வேறொன்றும் நினைவுக்கு வருகிறது. செயலிழந்த சிங்கப்பூர் மக்கள் கட்சியின் அந்நாள் தலைவர் தோழர் சைட் சஹாரி அவர்கள் தமது நூலில் இப்படி விவரிக்கிறார்: “லி குவான்யூ ஆனந்தமாகத் தேம்பினார். கூட்டரசிலிருந்து வெளியேறினால்தான் சுதந்திரம் பெற்ற இறையாண்மை கொண்ட நாட்டின் பிரதமராக ஆக முடியும். இதற்கு முன்பு இவர் தன்னாட்சிக் கொண்ட பிரித்தானிய காலனியின் ஆட்சியாளர் என்ற தகுதி மட்டுமே உடையவராயிருந்தார். தவிரவும் ஆங்கிலேயரின் உத்தரவுகளை ஏற்க வேண்டியும் அவர்களின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டியதுமான சூழலில் இருந்தார். பெரிய அளவிலான போராட்டங்கள் ஏதுமின்றி சுதந்திரம் தட்டில் வைத்து தரப்பட்டது என்று அவர்கள் சொன்னார்கள்”. அவ்வேளையில் தோழர் சைட் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். தனிமைச்சிறை, தீவு வாசம் என்று இவரின் சிறைவாசத்தின் அகவை பதினேழு ஆண்டுகளாகும். 2-2-1963 இல் சிறைபிடிக்கப்பட்டவர் 22-8-1979இல்தான் விடுதலை செய்யப்பட்டார்.

1961ஆம் ஆண்டில் “உத்துசான் மிலாயூ” நாளிதழ் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட 91 நாள் வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கியவர் அக்கால் அவ்வேட்டின் தலைமை ஆசிரியராகப் பணி செய்த சைட் சஹாரிஆவார். இவர் சாவானிய இனக்குழுவைச் சேர்ந்தவர். அன்றைய மலாயாவினுள் நுழைய முடியாதபடிக்கு அப்போதைய பிரதமர் அப்துல் ரஹ்மானின் தடைக்குள்ளானவர் இவர். அக்கால பிற விடுதலை விரும்பிகளைப் போல் தென்கிழக்காசியாவின் அன்றைய புரட்சித் தலைவன் இந்தோனிசிய அதிபர் மறைந்த தோழர் சுகார்னோவின் தாக்கத்திற்குள்ளான ஆயிரமாயிரம் போராளிகளில் இவரும் ஒருவராயிருந்த காரணத்திற்காக சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வழங்கிய பரிசுகள்தாம் கம்யூனிஸ்டு என்ற அடைமொழியும் அதனுடனான கூண்டு வாழ்க்கையும். இப்படித்தான் தங்களின் சொந்த வாழ்க்கை சுகங்களை இழந்த பல்லாயிரவர் தென்கிழக்காசிய நாடுகளில்!

அவர்களில் தமிழர்கள் எத்தனை பேர்? இனி முயன்று ஆவணமாக்கினால் தான் உண்டு. ஏனெனில் கிடைப்பவை மிகச் சிலவே. காங்கிரசு பக்தர்களாக, நேரு குடும்ப விசுவாசிகளாக, பாரத நாட்டு ஒரு பக்க சமாச்சாரங்களை மட்டும் அறிந்திருந்தவர்களாகத்தான் உயிர்த்திருக்கிறார்கள். இன்றும் நிலைமை முற்றாக மாறிவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுதான் மு. கருணாநிதி சம்பவம். “ஐயோ, கொலை பண்ணப் பாக்குறாங்க” என்று மஞ்சள் துண்டு கோமான் கூக்குரலிட்டபோது இங்குள்ள பாதி கிழவர்கள் பக்கவாதம் தாக்கியவர்கள் போலானார்கள்! ஆனால், மனிதநேயம் உள்ளவர்களை உலுக்கியெடுத்த அந்தத் தாமிரபரணி படுகொலைகள் இவர்களில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தி விடவில்லையே! சரி, கிழங்கள் கிடக்கட்டும். இளைய தலைமுறை? தனிச்சொத்துடமை மட்டும்தான் வாழ்க்கை என்று அடையாளத்தை இழந்து கொண்டிருக்கின்றவர்களுக்கு வரலாறு பற்றிய அக்கறை எல்லாம் எதற்கு? அப்புறம் மைக், லைப்ஸ் எப்படிலா! நான் பெரும்பான்மையினர் நிலைபற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதனை அருள்கூர்ந்து கவனத்தில் கொள்ளுங்கள்.

சரி, தோழர் சைட் சஹாரி கம்யூனிஸ்ட் என்பது உண்மைதானா? பொய். எல்லா வகையான வந்தேறி ஆளுமைகளையும் எதிர்த்த மலாய் தேசியத்திலிருந்து எங்களை கலைத்துப்போட்டு விலகச்செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் அது. தேசியம் என்பது என்ன என்பதனை நான் அறிவேன். அதேபோல் கம்யூனிசம் குறித்த புரிதலும் எனக்குண்டு. மார்க்சு, மாவோ மற்றும் பிறரின் பொருளியல், அரசியல் ஆக்கங்களை மட்டுமின்றி, திருமறை குர்ரானோடு ஹதீசு எனப்படும் நபி மொழிகளையும் பயின்றவன் என்பது மட்டுமல்ல, இசுலாமிய மார்க்கத்தின் ஆழமான நம்பிக்கையுடையவன் நான். “கர்வம் கொண்ட, இரக்கவுணர்வற்ற, மோசமான மனிதன் லீ குவான் யூ” என்று தோழர் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சீன வரலாறு அறிந்தவர்கள் தோழரின் உருவகம் குறித்து வியப்படைய மாட்டார்கள் என்பது உறுதி. மலாயாவில் நுழைய விதிக்கப்பட்ட தடையை 1989ஆம் ஆண்டு டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய அரசு நீக்கியது. 1994 முதல் மலேசிய தீபகற்பத்தில் வாழ்ந்து வருகிறவரின் அருமைத் துணைவி திருவாட்டி சால்மா இரண்டாண்டுகளுக்கு முன்னர் மறைந்தார்.

"உயிருள்ளவை அனைத்தும் இறக்க வேண்டி யவையே. புதியவை அனைத்தும் பழையதாகக் கூடியவையே” என்பதற்கொப்ப அனைவரும் சாவூர் செல்ல வேண்டியவர்களே. இருப்பினும் சிலரின் மறைவு துயரமேற் படுத்துகின்றதே! ஓம், சைட்டின் சிறை வாழ்க்கையின்போது குழந்தைகளைப் பொறுப்புடையவர்களாக வளர்த்தெடுத்த பெரும்பணி அவருடையது.... “டாக் கிளாவுட்ஸ் எட் டவுன்” என்ற நுலையும் (ஆங்கிலம், மலாய் மற்றும் மாண்டரின் ஆகிய மும்மொழிகளிலும் உள்ளது) அதன் இரண்டாம் பகுதியையும் ஒரு முறையாகிலும் படிக்க வேண்டும்- குறிப்பாக சிங்கை மற்றும் மலையகத் தமிழர்கள். உடல் நலிவுற்ற எழுபத்தெட்டாம் அகவையில் காலஞ்சென்ற வாழ்க்கைத் துணையைப் பற்றி நூல் எழுதிக் கொண்டுள்ளார்! தொடர்ந்து அரசியல் நூல் எழுதவும் திட்டமிட்டுள்ளார். சண்டே டைம்சு செய்தியாளருடன் விரிவாய்ப் பேசியிருந்தவர், பத்திரிக்கையாளர்களுக்குக் கீழ்க்கண்டவற்றை ஆலோசனையாக்கியிருந்தார். “முடிந்த சிலவற்றையாவது செய்யுங்கள். ஒன்றுமே செய்யாமலிருப்பதை விட அது எவ்வளவோ மேல்”.

Sunday, July 07, 2002

கேளன்

கேளன்
மலையாள மூலம்: இ.ஹரிகுமார்
Sci Fi BioHazard Wallpaper Pictures, Images and Photos

இரவு ஒன்பது மணி. தினசரி வழக்கப்படி நிறைந்த போதையில் கேளன் கள்ளுக்கடையிலிருந்து இறங்கினான். பேருந்து நிறுத்தத்தை நெருங்கியபோது இரண்டு பெண்கள் நிற்பதைப் பார்த்தான். இரவு எட்டு மணிக்குப் பிறகு பேருந்து நிறுத்தத்தில் ஒற்றையாகவும், இரட்டையாகவும் நிற்கும் பெண்களைப் பார்த்து அனுபவப்பட்ட கேளன் அவர்களை நன்றாகக் கூர்ந்து கவனித்தான். பேருந்து நிறுத்தத்தின் எதிரில் தெரு விளக்கு எப்போதும் எரியாது என்பது நிச்சயம். அது என்ன காரணத்தினால் என்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. நினைப்பதில்லை. மற்ற விளக்குகள் சுடர்ந்து எரிகின்ற போது பேருந்து நிறுத்த விளக்கு மட்டும் ஏனிப்படி? என்றேனும் ஒருநாள் அது எரியும். அடுத்த நாள் முதல் ப்யூசாகிக் கிடக்கும்.

இருவரும் இளவயதுக்காரர்கள். அவன் யோசித்தான். காரிய சாத்தியம் குறித்த சிந்தனையுடன் அவன் இருளில் நிற்கும் உருவங்களின் வடிவ நேர்த்தியைக் கூர்ந்து ஆராய்ந்தான். ஒருத்தி கொஞ்சம் கனத்த சரீரமாகத் தெரிந்தாள். மற்றவள் மெலிந்திருந்தாள். மிகவும் சிறுவயதுக்காரி. ‘எப்படியிருந்தாலும் ரெண்டாவது வேண்டாம். மூத்தது போதும்.’ அவன் அவர்களின் பக்கம் நெருங்கினான். எப்படித் தொடங்குவது? காரியமெல்லாம் சரிதான். அவன் இப்படிப்பட்ட காட்சிகளைக் காணத்தொடங்கி கொஞ்ச காலம் ஆகிவிட்டது. நந்தினி அவனைப் புறக்கணித்துச் சென்று ஓராண்டு முழுதாக முடிந்துவிட்டது. அன்று சொன்னான்: “இந்தக் கேளனுக்கு ஒரு பெண் போனா ஆயிரம் பெண்ணுங்க கிடைப்பாங்கடி.”

“எனக்கு மட்டும் ஆம்பளை யாரும் அகப்பட மாட்டங்களா...? நா போறேன்.” நந்தினி ஐந்து வயது மஞ்சுவை இழுத்துக் கொண்டு நடந்தாள்.
வீட்டு வாசலில் நடப்பதை வேடிக்கை பார்த்து நின்ற இளம் வாலிபன் கூட அவள் வெளியேறி நடக்கும் அதிசயத்தில் திறந்த வாயை கள்ளுக்கடையில்தான் போய் மூடினான். அது வாயோட விஷயம். மனித உடம்பில் வேறு அவயங்களும் இருக்கின்றன. அவைகளைக் குறித்தும் பார்க்க வேண்டுமல்லவா? அதனால் தான் கேளன் பேருந்து நிறுத்தத்தை அடுத்த இருளில் உருவங்களை ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தான். ஆயிரக்கணக்கிலில்லை. நான்கு, ஐந்து எண்ணிக்கையில் மட்டும் இன்னமும் வாழ்க்கை இருக்கிறதல்லவா?

கேளன் அவர்களை நெருங்கிச் சென்றான். நெருங்கியபோது அவன் மிகவும் குழப்பமடைந்தான். மூத்தவள் நல்ல பெண்தான், சரி. ஆனால் மற்றவள்? சிறு வயது. அழகியும். ‘யாரைத் தேர்ந்தெடுப்பது’ அவன் தனக்குள்ளாக ஒரு தேர்வு நடத்தினான். மூத்தவள்தான் ஜெயித்தாள்.
அவன் அவளிடம் சொன்னான்: “வா போகலாம்.”

அந்தப் பெண் அதிசயமாக அவனைப் பார்த்தாள். அவன் பக்கம் வருவதைப் பார்த்ததும் ‘ராத்திரி தங்குறதுக்கு ஒரு இடம் தேவைப்பட்ற அவசியத்தப் புரிஞ்சிதா வரச்சொல்றான்’ என்னும் நினைவில் அவள் நடக்க ஆரம்பித்தாள். நகரத்தில் நிறைந்து கிடக்கும் சேறு சகதிகளும், ஏமாற்றும் பள்ளம் படுகுழிகளும் அவளுக்குத் தெரியாது. பேருந்து நிறுத்தத்தில் எப்படி இரவைக் கழிப்பது என்றுதான் அவள் கேட்க நினைத்தாள். அப்போது தான், அவன் இவளிடம் சொன்னான்: “வா போகலாம்.”

அவன் அந்த இளம்பெண்ணைப் பார்த்தான். அவள் கண்களில் பயம் தெரிந்தது. அந்த மனிதனின் சுவாசத்தில் கள் நாற்றம் வீசுவதை அவள் உணர்ந்து கொண்டாள். பள்ளியிலிருந்து திரும்பும் பேருந்து பயணங்களில் அவளுக்கு அந்த மணம் அனுபவமாகியிருந்தது. எதுவும் பேசாமல் அவள் அம்மாவுடன் சமமாக நடக்க ஆரம்பித்தாள்.

பேருந்து நிறுத்தத்தின் இருளைப் பின்னுக்குத் தள்ளிய அடுத்த தெருவிளக்கின் கீழ் சென்ற போது, கூட அழைத்துப் போகும் பெண்களை நன்றாகப் பார்க்கும் எண்ணத்தில் கேளன் திரும்பிப் பார்த்தான் ஒன்றுக்குப் பதிலாக இரண்டு. இரண்டு பெண்கள். அவன் கண்களை விழித்துக் கூர்ந்துப் பார்த்தான். ‘ஏ, இது குடிச்சதனால் ஏற்பட்ட கேடு இல்ல. ரெண்டுதான். நான் கூப்பிட்டது பெரியவளை மட்டும். சிறியவளைக் கவனிக்கல.’

‘அடக்கடவுளே! நான் ரெட்டிப்பா பணம் கொடுக்க வேண்டி வருமே. ஆனா ரெண்டு பேரோட ஒண்ணா இருக்கறது நல்லாதா இருக்கும். அவங்களுக்கு இருக்கும் தாக்கத்துக்குச் சரியா சமாளிக்கும் சக்தி கேளனுக்கு உண்டு.’ ‘தாக்கம்’ என்ற வார்த்தை ஏதோ ஹிந்தி சினிமாவிலிருந்து கிடைத்தது. அது அவன் எப்போதும் தனது பாலியல் திறத்தோடு சம்பந்தப்படுத்தி சொல்லிக் கொள்வது.

“உங்க தாக்கத்துக்குச் சரியான சமாளிப்புச் சக்தி எனக்கு உண்டு” அவன் அவர்களை நோக்கிச் சொன்னான்.

“என்ன?”

“இப்போ இது புரிஞ்சா போதும். வேள வரும் போது எல்லாம் புரியும். புறப்படலாம்.”

தாய் தலையை ஆட்டினாள். புலி வாலைப் பிடிச்சிட்டோமா? தனக்கு முன்னால் வேறு வழிகளும் தெரியவில்லை. சாயங்காலத்திலிருந்து நிற்க வேண்டியதாயிடுச்சி. மகளின் இண்டர்வியூ முடியறப்ப நான்கு மணியாயிடுச்சி. எவ்வளவு சிரமமாயிடுச்சி அங்க? இண்டர்வியூ முடிஞ்சி ஒரு ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுத் திரும்பினதும் கிராமத்துக்கான பஸ் ஸ்டாப் விசாரிச்சதுல தெரிஞ்சது, கடைசி பஸ் அஞ்சி மணிக்கு, அந்த பஸ்ஸூல போனா எப்படின்னாலும் ரெண்டு பஸ் ஏறி இறங்கி மாறி கிராமத்த போய் சேர்றதுக்குள்ள ராத்திரி பதினொன்னு ஆயிடும். அந்த இடத்துக்கு ராத்திரில போறது சரியா இருக்காது. அதனாலதா குடும்பஸ்தங்க யாராவது தெரிஞ்சா அவங்களோட இங்கயே தங்கிடலாம்னு நினைச்சது. கடைசி பஸ் உள்ள தலைகாட்ட முடியாத அளவுக்கு கூட்டமா இருந்தது.

இருட்டத் தொடங்கிய பிறகுதான் தான், செய்த தவறு அவளுக்குத் தெளிவாயிற்று. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். அந்தப் பேருந்தில் தான் எப்படியாவது ஏறியாக வேண்டும். குடும்பஸ்தர் ஒருவரும் பேருந்து நிறுத்தத்ததில் இல்லை. பேருந்திலிருந்து யாரும் இறங்கவுமில்லை. அது மட்டுமல்ல. பிரச்சனை பண்ணுபவர்கள் பக்கத்தில் நெருங்குவதும், விலகுவதுமாக இருந்தார்கள். ஐயோ நகரத்தில்தான் எத்தனை தொல்லைகள்? அவ்வாறு இருக்கும் போதுதான் அந்த மனிதன் வந்து சொன்னான். “வா போகலாம்”. இனி மேலும் அங்கே நிற்பது குழப்பமுண்டாக்கும் என்று தோன்றியது. இருவரும் ஒருமித்த முடிவுடன் கேளனுடன் ஒன்றாக இறங்கி நடந்தனர். ‘இந்த ஆள் வீட்டுல மனைவியும், குழந்தைகளும் இருப்பாங்களா?’ வீட்டில் யாரும் காத்திருக்கவில்லை.

‘எனக்கு மகளும், மகளுக்கு நானும் மட்டும். ரெண்டு வருஷங்களுக்கு முன்ன கணவன் இறந்தப்பறம் இப்படித்தா இருக்கு. இவ்வளவு கஷ்டப்பட்டு அர்த்த ராத்திரியில் கிராமத்துக்குப் போக அவசர காரியம் எதுவுமில்ல. மகளுக்கு இந்த வேலை கிடைச்சிட்டா கிராமத்திலிருக்கற நான்கு சென்ட் மனையை குறைஞ்ச விலைக்காவது வித்துட்டு இங்க ஒரு சின்ன வீடு வாங்கணும். அத்தோட கிராமத்தோட உறவு முடிவுக்கு வந்துடும். எல்லாத்தையும் கெட்ட கனவுன்னு மறந்துடலாம்.”

இரண்டு பெண்கள் என்பது கேளன் மனதைக் குழப்பத் தொடங்கியிருந்தது. இதுவரை இவ்வாறு ஏற்பட்டதில்லை. அதனால்தான் என்ன செய்வது என்பதும் புரியவில்லை. வயதும் நாற்பத்தைந்தாகி விட்டது. முன்பு போல என்றால் தைரியமாகச் சொல்லலாம். வீட்டுக்கு நடக்கும் போது அவன் அவர்களுக்கு இணையாக நடந்தான். ‘இவங்க இப்படிப்பட்ட தொழில் செய்றவங்களா? ஆனா இவங்களும் மனுஷங்க தானே? சாதாரண மனுஷங்களுக்கு கொடுக்கற மரியாதையை இவங்களுக்கும் கொடுக்க வேண்டாமா? சில நேரங்கள்ல அதுக்கு பதிலடி கிடைக்கவும் கிடைக்கும். ‘நான் இவங்கள அழைச்சி வந்தது எதுக்காக? உண்மையைச் சொல்லியிருக்கலாமோ? பட்டு சிட்டுனு காரியத்த முடிச்சி பணத்தக் கொடுத்து அப்புறப் படுத்தணும் இவங்கள...’ அதில் பெரும்பாலும் பதிலடி கிடைக்குமென்றாலும் அவன் அந்தக் காரியத்தை நிறுத்தியதில்லை.

பல பெண்களுக்கு அதிர்ஷ்டமேற்பட்டது. அவர்கள் பதில் சொல்வார்கள். சிலர் தொலைபேசி எண்களையும் தருவார்கள். “அண்ணன் பெரிய நண்பர்களுக்கு இந்த நம்பரைக் கொடுக்கலாம். நல்லவங்களா பார்த்துக் கொடுக்கணும். மோசமானவங்க கிடைச்சா அந்த நாள் அவ்வளவு தான்.”
அப்படிப்பட்ட பெண்கள் கிடைத்தால் நல்லது. நாம் கொடுக்கும் முதன்மையாகத் தோன்றும். அவர்களெல்லாம் நேர்மையாகத் தொழில் செய்பவர்கள். மூன்றாவதாக ஒரு ஆள் குறுக்கிட்டு கமிஷன் வாங்க மாட்டான். அப்படிப்பட்ட நபர்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும்.
கேளன் நடையை மெதுவாக்கி பின்னால் நடந்து வரும் பெண்களின் பக்கம் சென்றான். ஒரு உரையாடலைத் தொடங்குவதற்காக பக்கம் நெருங்கியவன் மூத்தவளிடம் கேட்டான்:

“உங்க பேர் என்ன?”

“என் பேர் சுமதி. இவ பேர் சுஸ்மிதா. நீங்க...”

“என் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்” இந்தப் பெண்களிடத்தில் விபரங்கள் சொல்ல வேண்டியதில்லை. தலையில் ஏறுவார்கள்.

“சரி”

“என் வீடு அதோ தெரியுது பாருங்க.” தனித்திருந்த வீட்டைச் சுட்டிக்காட்டி கேளன் சொன்னான்.

பதில் இல்லாத மற்ற கேள்விகள் சுமதியின் உதடுகளுக்குள் அடங்கிவிட்டன. “வீட்டுல யார் யார் இருக்கிறாங்க? என்ன வேலை செய்யறாங்க....?
அவர்களுக்கிடையே இடைவெளி அதிகமாயிற்று. வாசற்கதவைத் திறந்த கேளன் வீட்டினுள் நடந்தான். கேளனைத் தொடர்ந்தவர்களாக பெண்களும் வீட்டினுள் நடந்தார்கள். வாசல் விளக்கின் பட்டனை அழுத்திய அவன் சட்டைப் பையிலிருந்து சாவியை வெளியிலெடுத்தான். கதவின் வெளிதுவாரத்தில் சாவியை நுழைக்கும் போது சுமதி கேட்டாள்:

“வீட்டுல மனைவியும், குழந்தைகளும் இல்லியா?”

திறக்காமல் சாவி அப்படியே திரும்பி நின்றது. அவன் குனிந்த நிலையில் உறைந்து போனான். அந்தக் கேள்வி அவனைச் சிதறடிப்பதாக இருந்தது. அது புதைத்து மூடிவைத்த நினைவுகளைத் தேவையில்லாத நேரத்தில் வெளியே கொண்டு வந்தது. அவன் யோசனையிலாழ்ந்தான். ‘இவ எதுக்காக என் மனைவியைக் குறிச்சி விசாரிக்கிறா?’ அதைக் குறித்து யோசித்த போதுதான் புரிந்தது. ‘காரியமெதுவும் நினைக்கற மாதிரி இல்ல’ என்று கவலைப்பட்டான். ‘நான் ஏமாந்துட்டேன்’ என்றும் நினைத்தான். கதவைத் திறந்து சுவர்ப் பொத்தானை அழுத்தி விளக்கை எரிய வைத்த அவன் சொன்னான்:

“உள்ளே வா”

அம்மாவும், மகளும் உள்ளே வந்தார்கள். சாதாரணமான நல்ல அறை. அவர்களின் வீடு போலத்தான் இருந்தது. அந்த அறைக்கு இரண்டு கதவுகள். ஒன்று சமையலறைக்கு என்பது புரிந்தது. மற்றது படுக்கை அறைக்கு கதவாக இருக்க வேண்டும். அவன் தெளிந்த வெளிச்சத்தில் ஆராய்ந்தான். சுமார் இரண்டு நிமிட ஆராய்ச்சிக்குப் பிறகு அவன் கேட்டான்:

“நீங்க அம்மாவும், மகளுந்தானே?”

சுமதி தலையாட்டினாள். அவளும் அவனை ஆராய்ந்தாள். கனத்த உடம்பு இல்லை. தலைமுடி நரைக்கத் தொடங்கியிருந்தது. சிறிய மீசை. கன்னங்கள் உலர்ந்து ஒடுங்கியிருக்கின்றன. வேறு எதையும் முடிவு செய்ய இயலவில்லை. ‘மனைவி பிரிஞ்சி போய் எவ்வளவு நாளாச்சோ? கிராமத்துக்குப் போயிருக்கணும்’

“அப்போ எதுக்காக நீங்க பஸ் ஸ்டாப்புல நின்னுட்டிருந்தீங்க?”

“மனைவி எப்போ வருவாங்க?”

அந்த மனிதனுக்கு மனைவி இருப்பாள் என்னும் யூகத்தில்தான் அவள் இதைக் கேட்டாள். வீடு இருந்த நிலையிலும், அந்த மனிதனின் நடவடிக்கையிலும் ஒரு பெண்ணுக்கு மட்டும் ஏற்படும் ஏதோ ஒரு வித்தியாச உணர்வு அவளுக்குள் ஏற்பட்டிருந்தது.

“அவ இனிமே வர மாட்டாள்.”

“ஏன்?”

“அவ சண்டை போட்டுட்டுப் போயிட்டா. என் வேலை அவளுக்குப் போதல. என்னால முடிஞ்சதத்தானே செய்ய முடியும்? அவளுக்கு அது போதல. அதனாலதினம் சண்டைதா.”

“நீங்க குடிக்கறதாலயா?”

“நான் தொட்டதே கிடையாது. அவள் போன துக்கப்பறந்தா பழக்கம் அவ என் மகளையும் சேர்த்து இழுத்துட்டுப் போயிட்டா. அதிருக்கட்டும் நீங்க எதுக்காக அந்த பஸ் ஸ்டாப்பில நின்னுட்டிருந்தீங்க?”

“மகளின் இண்டர்வியூ முடிஞ்சப்போ நேரம் சாயங்காலம். பஸ் பிடிச்சி கிராமத்த சேர்றதுக்கு மணி பன்னெண்டு ஆயிடும். அப்ப என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டிருந்தபோது நீங்க போலாமான்னு கூப்பிட்டீங்க. பக்கத்துல ஆளுங்க வேற தொல்லை கொடுக்க ஆரம்பிச்சிருந்தாங்க. அந்த நேரம் நேர்மையா தெரிஞ்ச ஒருத்தர் வந்து கூப்பிட்டப்போ ராத்திரி தங்க பிரச்சனையில்லன்னு தீர்மானிச்சேன். நாங்க காலையில சீக்கிரமே கிளம்பிடுவோம்.”

“யார் உங்கள போகச் சொன்னது?”

சுமதியின் பேச்சு எங்கேயோ உதைத்தது. ‘நானும் ஒரு காலத்துல யோக்கியனாயிருந்தான். அப்படின்னா இப்ப இல்ல. எப்படிப்பட்ட யோக்யன்? ராத்திரில வெளிச்சமில்லாத பஸ் ஸ்டாப்புல காத்திருந்த பொம்பளைங்களை அழைச்சிக்கிட்டு வீட்டுக்குப் போற யோக்யன்? யாரும் காத்திருக்காத காலியான வீட்டுக்கு ஒத்தையில தான் மட்டும் தனிமையில் இருக்கற வீட்டுக்கு?’

எத்தனையோ பேர் அவனோடு வந்திருக்கிறார்கள். ஆனால், ஒருத்திகூட தங்கினதில்ல. அவர்கள் பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு, கனவுகள் எதையும் வழங்காமல் இடத்தைக் காலி செய்வார்கள். இப்போது ‘ஒரு ராத்திரி தங்கிப் போக வந்ததா’ இதோ ஒரு பெண் சொல்கிறாள். அவர்கள் தாயும் மகளும், நான் இப்பவும் நேர்மையானவன்தான். நேர்மையானவன் இல்லன்னா எதுக்கிந்த அவஸ்தை? யார்கிட்ட எப்படி நடந்துக்கனுன்றது எனக்கு நல்லா தெரியும்.’

“நீங்க சாப்பிட்டாச்சா?” தாய் கேட்டாள்.

‘சாப்பாடு?’ அவன் யோசிக்க ஆரம்பித்தான். அவனுடைய இரவு உணவு என்ன? அப்படியொன்றுண்டா?

“நா இப்போ சமைச்சிட்றேன். அதுக்குள்ள தூங்க ஆரம்பிச்சிட்டீங்களே!”

“தூக்கம்! அதுவும் சாப்பாடு மாதிரிதா. சில நாட்கள்ல மட்டும். இன்னிக்கு மட்டும் எதுக்காக அதை ஒரு திருவிழாவாக்கணும்? அவன் சொன்னான். “எனக்கெதுவும் வேண்டாம்.”

சமையலறைக்குப் போகத் திரும்பிய அம்மாவும், பின் தொடர்ந்த மகளும் திரும்பி நின்றார்கள். அவன் புரிந்து கொண்டான். ‘இந்தப் பாவப்பட்ட சாதுவான பெண்களும் சாப்பிடல. பாவப்பட்டவங்க. இவங்க எதுக்காகப் பட்டினி கிடக்கணும்?’

“சமைச்சிக்கோ, மூணு பேருக்கும். காய்கறி எதுவும் இல்லை.”

“அது பரவால்ல.”

அவன் கைவைத்த நாற்காலியில் உட்கார்ந்தபடி மயங்கிய நிலையிலிருந்தான். கனவுகளில்லாத சிறு வயதுக்கால உறக்கங்களில் எப்போதும் கண்டறிந்த பூக்களும், வானவில்லும் இல்லாத வெறும் இருள் மட்டுமே நிறைந்த உறக்கம்....

“மாமா!”

அந்த இளம் பெண்ணின் அழைப்புக்கேட்டு கேளன் விழித்துக் கொண்டான். அவள் நெருங்கி நின்று அவனை உலுக்கிக் கூப்பிட்டாள். “அப்பா! என்ன தூக்கம் இது!” சோற்றையும், குழம்பையும் மேஜையின் மேல் எடுத்து வைத்தாள். நீண்ட காலத்திற்குப் பிறகு வீட்டில் சமைத்த உணவின் வாசனை அவனைத்தேடி வந்தது. மூக்கு விடைக்க அந்த மணத்தை நிறைத்துக் கொண்டு அவன் எழுந்தான்.

எதையெதையோ யோசித்தபடி இரவு நீண்ட நேரத்திற்குப் பிறகு கேளன் படுத்தான். சாப்பிடுவதற்கு முந்தைய சிறிய உறக்கத்தின் காரணத் தினால் பிறகு அதிகநேரம் அவனுக்கு உறக்கம் வரவில்லை. ‘மகள் ஒரு பத்து வருஷங்க போனா இந்த இளம் பெண்ணைப் போல பெரியவளா இருப்பா என்று அவன் நினைத்தான்.

படுக்கையறையில் தாயும், மகளும் நல்ல உறக்கத்திலிருந்தார்கள். அவர்களின் கதவு கொஞ்சம் சாத்திய நிலையில் திறந்தே கிடந்தது. அது அவனை மகிழ்ச்சிப்படுத்திற்று. தன் மீதான நம்பிக்கையை அது காண்பிக்கிறது. வெளி அறையின் அருகில் போட்டிருந்த பெஞ்ச்சில் படுத்து அவன் எப்போதோ உறங்கிப்போனான்.

“அம்மா எங்க மகளே?”

காலையில் மகள் தேநீர் கொண்டு வந்த போதுதான் கேளன் எழுந்தான். அவள் குளித்து நெற்றியில் குறியிட்டிருந்த காரணத்தில் கூடுதல் அழகுடன் தெரிந்தாள். நேற்று அணிந்திருந்த சுடிதாரை மாற்றி நீண்ட பாவாடை, இரவிக்கையில் இருந்தாள் இளம் பெண்.

“அம்மா கஞ்சியும், துவையலும் செஞ்சிட்டிருக்காங்க. என்ன சமைக்கலாம்னு கேட்க கொஞ்ச நேரம் காத்திருந்தாங்க. மாமா நல்ல தூக்கத்திலிருந்தீங்க.”

அவன் சிரித்தான். மூன்று பேரும் மேசையை நெருங்கியமர்ந்து தேங்காய்த் துவையலுடன் கஞ்சியை குடிக்கும் நேரத்தில் கேளன் தனது நல்ல காலங்களை நினைத்துக் கொண்டான். ‘ஆனா அப்படியொன்னும் எனக்கு வாய்க்கல. வாய்ச்ச வங்க கூடுதல் புண்ணியம் செய்தவங்க.’

“எப்படி அண்ணனுக்கு நன்றி சொல்றதுன்னு தெரியல.”

‘நன்றி சொல்ற அளவுக்கு நா ஒண்ணும் உங்களுக்கு அப்படி எதுவும் செய்துடலியே’ அவன் தனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டான். நன்றி என்னும் வார்த்தையைச் சொல்ல வேண்டியவள் வேறு ஒருத்தியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவள் சொல்லவில்லை.
பேருந்து எட்டரை மணிக்கு. அதில் ஏறி அமரும் முன்பு அம்மா சொன்னாள்:

“அண்ணா, மகளுக்கு இங்கே வேல கிடைச்சிட்டா நாங்க இனிமேலும் வருவோம். இப்போ புறப்பட்றம்.”

பேருந்து புறப்பட்டுப் போன பிறகும் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான் கேளன். பிறகு முகத்தில் இரண்டு நாள் வளர்ச்சியைக் கண்டிருந்த ரோமங்களைத் தடவியபடி திரும்பி நடந்தான். போனவர்கள் நிறைய கனவுகளை அவனது வாழ்க்கையில் தூவியிருக்கிறார்கள். ‘அவை கனவுகள்தானா? அல்லது ஏமாற்றப்பட்ட ஆத்மாவின் தேம்பல்களா?’ என்னவென்று அறிய இயலவில்லை.

நன்றி : ஜனசக்தி மலையாள வார இதழ்

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள்

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள் தத்துவத்தின் முடிவிலாப் பெருவெளியில் தடம் பதிக்கும் ஒரு சிந்தனையாளனின் பயணம் எப்ப...