Sunday, January 17, 2016

மற்றமைகளுடன் பேசுவது

மற்றமைகளுடன் பேசுவது
எச்.முஜீப் ரஹ்மான்
பேசுவது என்பது எல்லாவற்றுக்கும் மேலாக மற்றவர்களுடன் பேசுவது என்பார் லக்கான்.இன்றைய சூழலில் காட்டாக எயிட்ஸ் நோயாளிகளை எடுத்துக்கொள்வோம்.எயிட்ஸ் பாதித்த அந்த நோயளிகளிடம் நாம் பேசாமல் அவர்களை தனிமைபடுத்தி விடவேண்டும் என்ற எண்ணம் நமக்கு எப்படி வருகிறது.நமக்கு தெரிந்தவரோ அல்லது நண்பரோ அல்லது உறவினராக இருக்கும் அந்த நோயாளியை நாம் பேசமறுப்பதன் மூலம் என்ன சொல்லவிழைகிறோம்?நீ புரிந்து வைத்த அந்த நபர் உனது சமூக அறத்துக்கு எதிராக செயல்பட்டார் என்பதால் தானே நீ பேச மறுக்கிறாய்?அப்போது உன்னிடம் அதிகாரம் தானே செயல் படுகிறது.அப்படியானால் நீ பேச்சை எப்படி புரிந்து வைத்திருக்கிறது.நமது மனம் யாரிடம் பேசவேண்டும் யாரிடம் பேசக்கூடாது என்று பட்டியல் இட்டுவைத்திருக்கிறதல்லவா?நீ பேசும் நபர் எப்படிப்பட்ட ஒழுக்கங்களை கொண்டிருக்கவேண்டும் என்று தீர்மானித்து வைத்துள்ளாய் என்று தானே அர்த்தம்.சமூக விதிகளை நீ பின்பற்றுவதாக கூறிக்கொண்டு ஒரு அதிகாரத்தை கையில் எடுத்ததை நீ கவனித்தாயா?நம்மிடம் அடிக்கடி இப்படி சொல்லப்படுவதுண்டு.அதிகாரத்தை கையில் எடுக்காதே.அதாவது நீ எதிர்வினை செய்து சட்டத்துக்கு புறம்பாக நின்றுகொள்ளாதே என்பதாகும்.ஆனால் நீ ஏன் இப்படி எதிர்வினையாற்றுகிறாய் என்பதை யாரும் சிந்திப்பதில்லை.சிலர் நமக்கேன் வம்பு என்று இருந்துவிடுவார்கள்.இவர்கள் சட்டத்தை மதிப்பதற்க்காக அப்படி இருக்கவில்லை என்பது தெரியும்.நீ எதிர்வினையாற்றிய போது சட்டத்தைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லைதான்.ஆக எதிர்வினையாற்றினாலும் ஆற்றாமல் இருந்தாலும் சட்டத்தை பற்றி நினைப்பது இல்லை.ஆனால் ஆற்றுபவர் அதிகாரத்தை பயன்படுத்துபவராகவும் ஆற்றாதவர் அதிகாரத்துக்கு அடிபணிந்தவராகவும் இருக்கிறார்.இதை லக்கான் ஆண்டான் அடிமை உளவியல் என்கிறார்.நீ சமூக விதிகளை பின்பற்றுவதால் தான் பேச்சு நடவடிக்கையில் விலகி இருக்க அல்லது பேசமறுக்க துணிந்துவிட்டாய்.அதிகாரம் இன்னொருபுறம் அரசு இயந்திரங்களான காவல்,சட்டம்,நீதிமன்றம்,தண்டனைகள்,ஜெயில் போன்றவற்றைக்கொண்டு எல்லோரையும் அடிபணியவைக்கிறது.நீ பேசமறுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக பொது அல்லது சமூக அதிகாரம் நினைக்கவில்லை என்றாலும் நீ அதிகாரத்தை கையில் எடுக்க சமூக அதிகாரம் காரணமாக இருக்கிறது என்பதையும் சமூக அதிகாரம் அறிந்திருக்கவில்லை.சட்ட,ஒழுங்கு பிரச்சனையை தான் அது மையப்படுத்துகிறது.இதை ஒரு முறை கூட படி சட்ட,ஒழுங்கு பிரச்சனை.நீ பேசமறுப்பதற்க்கும் உன்னிடம் செயலாற்றும் சட்ட அல்லது விதியொழுக்க மனநிலையே காரணம்.ஆக சமூக அதிகாரமும் நீயும் ஒரே திசையில் இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் சமூக அதிகாரத்தின் தனிநபர் அதிகாரம் ஆவீர்கள்.அதிகாரம் என்பது எப்போதும் உள்ளேயும் வெளியேயும் செயல்படுகிறது.அகம்/புறம் என்றும் சொல்லலாம்.இன்னும் சொல்லபோனால் நாம் சமூகத்தின் அதிகாரத்தின் ஒரு பாகமாக இருக்கிறோம்.இனி நாம் யார் யாரிடமெல்லாம் பேசுகிறோம் யாரிடமெல்லாம் பேச தயங்குகிறொம் அல்லது யாரிடமெல்லாம் பேசமறுக்கிறோம் என்று பார்த்தால் அதிகாரத்துக்கு முன்பாக நாம் பேச தயங்குகிறோம்.நம் அதிகாரத்துக்கு கீழ் உள்ளவர்களிடம் பேச மறுக்கிறோம்.நம் அதிகாரத்திற்கு கீழ் வருவது என்பது நேரடியாக அல்ல.கீழ்பணிய அதிகாரத்தை பயன்படுத்துகிறோம்.அங்கு மற்றவர்களின் பேச்சு மறுக்கப்படுகிறது.அதிகாரத்தை அதிகம் கேள்விக்குள்ளாக்கியவர் பூக்கோ.அதிகாரம் இல்லாமலே நாம் சமூகத்தின் அதிகாரிகளாக உள்ளோம் என்பது கவனிக்கப்படவேண்டிய விசயமாகும்.மற்றவர்களுடன் பேசுவது என்றால் என்ன? அரசு தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவதில்லை.ஜெயில் அதிகாரி ஒரு கைதியிடம் பேச்சு நடத்துவதில்லை.ஒரு குடும்பஸ்தன் விபச்சாரிகளிடம் பேச்சு நடத்துவதில்லை.ஒரு எஜமானன் தனது வேலையாளுடன் பேச்சு நடத்துவதில்லை.ஒரு டாக்டர் பையித்தியத்துடன் பேச்சு நடத்துவதில்லை.ஆக சமூகத்தில் ஒருசிலர் ஒருசிலருடன் பேசுவது இல்லை.ஆர்பாட்டக்காரர்கள் ஆர்பாட்டம் நடத்தினாலும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறார்கள்.பேச்சு ஒரு அதிகாரமாக அல்லது புனிதமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.பேச்சு மொழியின் ஒரு செயல்பாடாக இருந்தாலும் அது ஒரு ஆயுதமாக,கருவியாக செயல்படுகிறது.அதனால் பேச்சு விதிகளாலும்,ஒழுக்கங்களாலும் ஆனது எனப்படும்.இது மொழியின் இலக்கணவிதியையோ,ஒழுங்கையோ சார்ந்ததல்ல.அவை வேறு.பேச்சு இன்னும் ஜனநாயகப்படுத்தப்படவில்லை என்பதே இங்கு முக்கியமானது.பாலியல் என்பதே ஒரு சமூக கட்டமைப்பாக இருந்தாலும் பாலியல் பேச்சின் பொருளாகாது.பொதுவில் பாலியல் பேசுவது தவறானது.ஒரு பெண் அதுவும் பாலியலை பேசுவது பெருந்தவறு.சிறுவர்கள் பாலியல் பேசக்கூடாது.ஆசிரியர்கள் பாலியல் பேசக்கூடாது.அரசியல்வாதிகள் பாலியல் பேசக்கூடாது.மதவாதிகள் பாலியல் பேசக்கூடாது.ஆக பாலியல் பேச்சு மறுக்கப்படுகிறது அல்லது தடுக்கப்படுகிறது.அதனால் தான் எம் டிவியையும் மிட்நைட் மசாலாவையும் பார்க்க நமக்கு ஆசை.பேச்சு விதிகளாலும்,ஒழுங்குகளாலும் ஆனது என்று சொல்ல இதுவே காரணம்.பாலியல் மட்டுமல்ல இன்னும் விதிகளாலும் ஒழுங்குகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த ஒரு விசயத்தையும் பேச பேச்சு அனுமதிப்பதில்லை.நமது சமூகத்தில் வளவள என்று பேசுபவரை யாரும் விரும்புவது இல்லை.ஏனெனில் அடிப்படையில் நாம் பேச்சுக்கு எதிரானவர்களாக கட்டமைக்கப்படுகிறோம்.பெண்கள்,விதி மீறியவர்கள்,விளிம்புநிலை மக்கள் போன்ற எண்ணற்ற மக்கள் திரளினரிடம் நாம் பேச தயங்குகிறோம்.அவர்களது பிரச்சனையை பேச நாம் மறுக்கிறோம்.
பேச்சு என்ற இந்த நடவடிக்கைக்கு காரணமான மொழியை கொஞ்சம் அலசவேண்டியிருக்கிறது.மொழி நம்மை அந்நியமாக்குகிறது.நம் அனைவரிடமும் மொழியால் ஆன அகம் இருக்கிறது.இந்த அகம் குறிப்பானால் உணர்த்தப்படுகிறது.மொழியால் இணைப்பு நடந்தாலும் மொழியால் நாம் அன்னியப்பட்ட அகநிலையாக ஆகிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் லக்கான்.மொழி நம்மை அன்னியபடுத்த வேண்டியது ஏன் என்றால் நாம் பேசும் மொழியானது மற்றவர்களின் மொழியை போல இல்லை.உயர் மொழியும்,இழிமொழியும் இருக்கிற போது நாம் அன்னிய படுவது இயல்பாகிவிடும்.அகநிலை என்பது வரலாறு,பண்பாடு,அரசியல் என்று எண்ணற்ற விஷயங்களால் உருவாவது.நாம் சொல்லும் குறிப்பான்கள் அகநிலையை சரியாக விளக்க முடியாததாக இருக்கிறது.இதனால் அகநிலை நம்மை அன்னியபடுத்துகிறது.நமது அகத்தை மற்றவர்களால் புரிய முடியாமல் போனால் அல்லது நிராகரிக்க கூடுவதாய் அமைந்தால் நம்மை அந்நியமயமாக்கிவிடும்.நாம் பாலியலை அகமாக வைத்திருந்தாலும் மற்றவர்களிடம் நேரடியாக பேசமுடியாமல் குறிப்பான்கள் வழியாக பேசுகிறோம்.ஆனால் மற்றவர்கள் குறிப்பான்களை புரிந்து கொள்ளமுடியாதாகையால் மொழியால் அந்நியபடுத்தப்படும் நிலைக்கு ஆளாகிறோம்.உனக்கு அவளை பிடிக்கிறது அவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறாய்.உனது மொழியால் அதை அவளிடம் சொல்லிவிட முடியுமா என்று யோசித்துப்பார்.எனவே நீ அவளை விரும்புவதாக கூறுகிறாய்.அவளோ உன்னை விரும்பலாம் அல்லது நிராகரிக்கலாம்.ஆனால் நீ உத்தேசித்த உடலுறவுக்கு அழைப்பதை அவளால் புரியவே முடியாது.இது மொழி உன்னை அன்னியப்படுத்திய இடமாகும்.அதே சமயம் உன்னால் ஒரு விபச்சாரியிடம் நேரடியாக கேட்க முடியும்.ஆனால் சமூகம் அதை அனுமதிக்காது.நீ இங்கு விதிகளாலும்,ஒழுங்குகளாலும் ஆன அமைப்பை மீற முடியாமல் தவிப்பதை காணலாம்.நமது மொழியும்,சமூக அமைப்பும் திருமணத்துக்கு பிறகு தான் உடலுறவு என்ற கருத்தியலை கொண்டிருப்பதால் உன்னால் காதல் நாடகம் தான் முடிகிறது.இங்கு இன்னொரு விசயத்தை கவனிக்கவேண்டும்.உனக்கு அடிமையானவர்களிடம் காட்டாக உனது வீட்டு வேலைக்காரியை பேச்சு மறுக்கப்பட்ட அடிமையை உனது மொழியின் துணையில்லாமலே பாலியல் அத்துமீறல் செய்து கொள்ளமுடியும்.இங்கே மொழி அந்த பெண்ணுக்கு தீங்கீழைக்கப்பட்டதை சொல்ல முடியாதவகையில் அந்நியப்படுவதை காணலாம்.நீ உடலுறவுக்கு அழைக்க முடியாத அந்த ஏமாற்றம் உன்னை வக்கிரத்துக்கு கொண்டு செல்கிறது.உன்னை பாலியல் அத்துமீறலை செய்யும் படியாக உனது மொழி அகநிலை அப்படி செய்கிறது.மொழி இங்கே அதிகாரமாக உன்னை செயல்படவைக்கிறது.பல சமயங்களிலும் சமூக அதிகாரம் தன்னிலைகளை இணைத்துக்கொண்டு ஒரு பெண்ணை பலர் பாலியல் வல்லுறவுக்கு கொண்டு செல்லுவதை ஊக்கப்படுத்துகிறது.இங்கே பேச்சு முற்றிலுமாக மறுக்கப்படுகிறது.மொழி அந்நியமாக்குகிறது.ஆக பாலியல் இச்சை மொழியால் பேசமுடியாத அல்லது மொழியை பேச மறுக்குகிற அகநிலைகளை உருவாக்குகிறது.இதனால் தான் அதிகாரம் மொழியை விட சக்திமிக்கதாக உடலை ஆட்படுத்தவும்,ஆட்கொள்ளவும் மிக்கதாக இருக்கிறது.நாம் மற்றவர்களிடம் சுதந்திரமாக பாலியல் அல்லது உந்துதலைகளை பேசமுடியுமென்றால் அங்கே அதிகாரமோ,அத்துமீறல்களோ நிகழவாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.மற்றவர்களிடம் பேச மொழி ஒரு தடையாக இருப்பது போல அதிகாரமும் ஒரு தடையாக இருக்கிறது.அதிகாரம் மிக்கவர்கள் மொழியால் பேச மறுக்கப்படுபவர்களை ஆட்கொள்ள மொழியோ,பேச்சோ தேவையில்லாமலே அதிகாரத்தால் ஆட்கொள்ளமுடியும்.காவல்துறையினர் பல இடங்களிலும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்த அதிகாரம் ஒரு முக்கிய காரணமாகிறது.ஒரே மொழியால் ஆட்கொள்ளவும் அனுமதிக்கவும் ஆவதால் மொழி ஏக காலத்தில் அதிகாரமிக்கதாகவும்,ஒடுங்கிபோகவும் தயாராக இருக்கிறது.மொழி அதிகாரமாக மாறும் போது உடல் அங்கே அதிகாரம் செலுத்துமிடமாக மாறுகிறது.உடல் அதிகாரத்தை அனுமதிக்கிறபோது மொழி மறுக்கப்படுகிறது.இன்னும் சொல்லப்போனால் பெண்ணில் உடல் மொழியை மொழி இல்லாமலே வாசிக்கவும்,ஆட்கொள்ளவும் மொழியால் ஆன சமூகமும் மொழியால் ஆன அதிகாரமும் அனுமதிக்கிறது.பெண்ணின் உடல் மொழியால் தீர்மானிக்கப்படுவது போல பாலியல் அத்துமீறலை மொழி அகமாக இருந்து செய்கிறது.மொழியும்,பேச்சும் இல்லாதபோதும் மொழி செயல் படும் தருணம் இதுவாகும்.ஏனெனில் பெண்ணைகுறித்த அத்துணை விசயங்களையும் மொழி நமக்கு ஏற்கனவே சொல்லித் தந்திருக்கிறது.மொழியால் நேரடியாக மற்றவர்களிடம் பேச முடியவில்லை என்றாலும் அதிகாரம் மூலமாக செயல்படமுடியும்.பேச்சு அங்கே முக்கியமில்லை.ஆக மொழியால் பேசமுடியாது என்பதே உண்மையாகும்.

உரூஸ்கள்,கந்தூரிகள்,ஈத்கள்,மிலாத்கள் முதலானவை குறித்து

உரூஸ்கள்,கந்தூரிகள்,ஈத்கள்,மிலாத்கள் முதலானவை குறித்து

எச்.முஜீப் ரஹ்மான்

இஸ்லாம் என்பது ஒரு வாழ்வியல் மட்டுமல்ல எளிமையான மார்க்கம்.உயிருக்கு ஆபத்தான சூழலில் ஹராமான எந்த காரியத்தையும் கூட செய்யலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இஸ்லாம் மிகவும் இலகுவான மார்க்கம்.தர்ஹா என்ற அரபி வார்த்தைக்கு புனித இடம் என்று ஒரு அர்த்தம் இருக்கிறது.அது போல இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.தர் என்றால் உடல்.ஹாக் என்றால் இடம் ஈத்ஹாக் என்றால் பண்டிகைஇடம் என்பது போல உடல் வைக்கப்பட்டிருக்கும் இடம்.கபுர் என்றால் சவகுழி என்று அர்த்தமாகும்.ஆக கபுர் என்பதற்கும் தர்ஹா என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.பள்ளிவாசல் என்றால் மஸ்ஜித் எனப்படும்.ஆக பள்ளிவாசல் என்பது வணங்குமிடமாகும்.நபிகள் நாயகத்தின் காலகட்டத்தின் போது யூதர்களும்,கிறிஸ்தவர்களும் இறைதூதர்களின் அடக்கதலங்களை பள்ளிவாசல் போன்று பயன்படுத்தினார்கள்.தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளை அவர்கள் செய்தனர்.அதனால் நாயகம் முஸ்லிம்களை பார்த்து மஸ்ஜித் போன்று ஆக்காதீர்கள் என்று எச்சரித்தார்கள்.அது போல கபுறின் மீது எந்த கட்டடத்தை கட்டுவதை தடை செய்துள்ளார்கள்.ஆனால் இவற்றை விளக்கும் வகாபிகள் தர்ஹாவையும் மஸ்ஜித்தையும் ஒன்று போல ஒப்பீடு செய்தார்கள்.ஆனால் அது தவறாகும்.ஏனென்றால் ஒவ்வொரு தர்ஹா வளாகத்திலும் பள்ளிவாசல் இருக்கிறது.அங்கு மட்டுமே முஸ்லிம்கள் தொழுதுவருகிறார்கள்.மேலும் நாயகம் சொல்வது போல கபுறுவுக்கு மேல் கட்டிடம் கட்டுவது தவறு.அதாவது சமாதி மீது கட்டிடம் கட்டகூடாது.உண்மையை சொன்னால் எந்த ஒரு தர்ஹாவை எடுத்து பார்த்தாலும் சமாதியின் மீது யாரும் கட்டிடம் கட்டியிருக்கமாட்டார்கள்.மாறாக சமாதியை சுற்றிதான் கட்டிடம் எழுப்பி உள்ளார்கள்.ஆக வகாபிகள் சொல்வது தவறாகும்.மேலும் கலிமா சொல்லிய எவ்வொரு முஸ்லிமும் இறைவனை புகழ்வதும்,இறைத்தூதரை புகழ்வதும்,அம்பியாக்கள்,அவுலியாக்களை புகழ்வதும் ஆகுமானதாகும்.இறைவன் தன்னையே வணங்குமாறு சொல்லுவதும் இறைவனை வணங்குகள் என்று நல்லடியார்கள் சொல்லுவதும் மார்க்கமுறையே ஆகிறது.இறைவனுக்காக தம்மை அர்பணித்துக்கொண்டவர்களை புகழ்வதும் அவர்களுக்காக விழாக்கள் எடுப்பதும் ஆகுமானதே.

மௌலிது என்னும் வார்த்தைக்கு அரபி மொழியில் பிறப்பு என்று பொருளாகும்இஸ்லாமியர்களின்வழக்கத்தில் நபிகள் நாயகம் முஹம்மத் மற்றும் இறைநேசர்கள் ஆகியோர்களின் பிறப்புவாழ்க்கை,வரலாறுஅற்புதங்கள்மாண்புகள் ஆகியவற்றைக் குறித்து பாடப்பட்ட கவிதைகளுக்கு மௌலிது என்றுபெயர்.இதை இஸ்லாமியர்கள் மிகவும் கண்ணியத்துடனும்மரியாதையுடனும்புண்ணியம் கருதியும்ஓதி வருகின்றனர்.மேலும் நல்லடியார்களின் நினைவை கொண்டாடும் விதமாக இஸ்லாத்தை நினைவூட்டும் விதமாக கந்தூரிகளும்,உரூஸ்களும்,சந்தனகூடுகளும்,தேர்பவனிகளும்,இஸ்லாமிய இன்னிசை கச்சேரிகளும்,இஸ்லாமிய கலை,கலாச்சார போட்டிகளும் அனைத்தும் அமைந்துள்ளது.இவை சமூகவியலில் முக்கிய இடம் பிடிக்கும் கலாச்சார நிகழ்வாகும்.மாற்று மதத்தவற்கு ஒப்பாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் இவை இஸ்லாமிய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூக நிகழ்வாக இருக்கிறது.இஸ்லாமிய மார்க்கத்தை வெறும் சடங்கு,சம்பிரதாயமாக பார்க்கும் இறுக்கமான தளத்திலிருந்து குழந்தைகள்,பெண்கள்,அடித்தளமக்கள் சார்ந்த திருவிழாவாக மாறுவதற்கு சுதந்தர தன்மை நிச்சயப்படுத்தும் ஜனநாயக பூர்வமான ஆனால் எளிமையான கொண்டாடும் மனோநிலையாக மார்க்கத்தை தாரளவாதம் செய்யும் முறை கவனிப்புக்குரியது.இம்மாதிரியான நிகழ்வுகளை ஆய்வு செய்த மார்க்க அறிஞர்களும்,பண்பாட்டு அறிஞர்களும் மதத்தை நிறுவனமயமாக்கலிருந்து வெகுஜனமாக்கலுக்கு உருவாக்கும் நிகழ்வே விழாக்களின் தன்மையாக கணக்கிடுகின்றனர்.

உத்தம நபி அவர்களின் உன்னத நினைவை உயிர்பிப்பது என்பதுமவ்லிது ஓதுவதால் ஏற்படும்பயன்களில் ஒன்றாகும்அதேபோல் இறைநேசர்களின் மௌலிதும் பயனள்ளதாகும்இறைநேசர்களைப்பற்றி நினைவு கூறுமிடங்களில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது என்று ஜுனைதுல் பகுதாதிநாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.மவ்லிதின் இறுதியான இலக்கு உரூஸ்களே.
நாயகம் கண்மணி அவர்களை குர்ஆனில் இறைவன் பல்வேறு இடங்களில் புகழ்ந்து பேசுகிறான்.
 நபியே) நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள். (68:4)
(நபியே) உங்கள் கீர்த்தியை நாம் உயர்த்தியுள்ளோம். (94:4)
 (நபியே) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம். (21:107)
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலி அவர்கள்
1.    எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள்வைகறைப் பொழுது புலரும் நேரத்தில்அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்.
2.    குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள்அவர்கள் கூறியது நிச்சயம்நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.
3.    இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும்போது நபியவர்கள்படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலி
நூல்: புகாரி 1087.
ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலி அவர்கள்,
1.    (இறை மறுப்பாளர்களே) முஹம்மது நபி அவர்களைக் குறைவுபடுத்தி நீங்கள் கவி பாடுகிறீர்கள். அதற்குப் பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு.
2.
    நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற நபி முஹம்மது அவர்களை குறைவுபடுத்திப் பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.
3.    அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான், சத்தியத்தைக் கூறுகிற ஓர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன். அதில் ஒளிவு மறைவு இல்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா ரலி
நூல்: முஸ்லிம் 4545
கஃப் இப்னு ஜுஹைர் ரலி அவர்கள்,
1.    நபிகள் நாதர் ஸல் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத் தூதர் அவர்களிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
2.    மன்னிப்புத் தேடியவனாக நபி ஸல் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது.
3.    நிச்சயமாக முஹம்மத் நபி அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் இருக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: ஆஸிம் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6558
நிச்சயமாக இறைவனும் அவனுடைய மலக்குகளும் நபி மீது ஸலவாத் சொல்கிறார்கள். ஈமான் கொண்டவர்களே! அந்த நபி மீது நீங்களும் ஸலவாத் சொல்லுங்கள் சலாமும் கூறுங்கள். (அல்குர்ஆன் 33:56)
   இதற்கு விரிவுரை சொல்லும் போது இமாம் அபுல் முஆலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 'அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் திருநபியை அமரர்களிடம் போற்றிப் புகழ்கிறான் என்பதே பொருள் என்று கூறுகிறார்கள். -ஸஹீஹுல் புகாரி 2:77
இமாம் இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அல்லாஹ் இப்பூவுலகவாசிகளோடு திருநபி மீது ஸலவாத் உரைக்க கட்டளையிட்டதன் நோக்கம், அவ்விண்ணிலும் இம்மண்ணிலும் திருநபியின் புகழ் முழங்கப்பட வேண்டும் என்பதற்கே என்கிறார்கள். -இப்னு கதீர் 3:533
மவ்லிதுகளில் கூறப்படும் ஸலவாத்துகள் இந்த இறைக் கட்டளையை நிறைவேற்றிய பலனைத் தருகிறது.ஸலவாத்துகளின் ஜனரஞ்சகாமான நிகழ்வுகளாக உரூஸ்கள் திகழ்கின்றன.
அதேபோல் இங்கு கூறப்படும் சலாமும், புகழ்ச்சிகளும் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உடனே எத்திவைக்கப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்விற்கு மண்ணுலகில் சுற்றிவரும் மலக்குகள் இருக்கிறார்கள். என் உம்மத்தினர் கூறும் சலாமை அவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்
நூல்: நசாயீ 1265
ஹஸ்ஸான் இப்னு தாபித் அவர்களின் அறிவிப்புப்படி நபிகள் நாயகம் அவர்களைப் புகழ்ந்து பாடினால் அதற்கு அல்லாஹ்விடம் கூலியும் கிடைக்கிறது.
அருள்மறையாம் திருக்குர்ஆனும் அண்ணல் நபி அவர்களின் பொன்மொழிகளும் இறைநேசர்கள் பெயரில் மௌலிது ஓதுவதற்கு சான்றாக அமைந்துள்ளன.
அல்குர்ஆன்:
இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறு, மாண்புகள் மற்றும் அற்புதங்களைக் கூறுபவைகளாகவே மௌலிதுகள் அமைந்துள்ளன. இதற்கு குர்ஆனில் காணப்படும் ஆதாரங்கள்:
1.    மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 3:35-47, 1:16-29)
2.     இஸ்கந்தர் துல்கர்ணைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல் குர்ஆன் 18:83-98)
3.    ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 18:65-82)
4.    அஸ்ஹாபுல் கஃப் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 1:9-25)
கவனமாகக் கேளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எப்பயமும் இல்லை. அவர்கள் கவலை சொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:62)
திண்ணமாக, எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பிறகு (அதிலே) நிலைத்திருந்தவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள்.
அத்தகையவர்களே சுவர்க்கவாதிகள். அவர்கள் செய்தவற்றிற்கு நற்கூலியாக அதிலே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 46:13,14)
பருவமில்லாத காலத்திலும் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கிடைத்த கனிவர்க்கங்கள் பற்றியும், (அல்குர்ஆன் 3:37)
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அவையிலிருந்த ஞானம் பெற்ற ஓர் இறைநேசர் பன்னூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த பல்கீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 27:38-40)
முன்னூறு வருடங்களுக்கு மேலாக உறங்கிய குகைத் தோழர்களுக்கு நிகழ்ந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 18:9-25)
அல்குர்ஆன் இனிதாக எடுத்தியம்புகிறது. இதேபோல்தான் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறுகள், அற்புதங்கள் மௌலிதுகளில் கூறப்பட்டுள்ளன.
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள், உங்களில் முன் சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக் கூறுங்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர், நூல்கள்: திர்மிதி 940, அபூதாவூத் எண் 4254.
ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள்) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் அவர்கள், கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் அவர்கள் வினவியபோது இறைத்தூதர் அவர்கள் பதிலுரைத்தார்கள், இறந்து போன இம்மனிதரை நீங்கள் புகழ்ந்துரைத்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது.
அறிவிப்பாளர்: அனஸ் நூல்கள்: புகாரி 1278, முஸ்லிம் 1578.
எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் யுத்தத்தில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தஃப் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பாளர்: ருபய்யிஃ பின்த் முஅவ்வித்
நூல்: புகாரி 3700, திர்மிதி 1010, 4276.

இறைத் தூதர் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிரார்த்தனை செய்து கவி படித்தார்கள்.
திண்ணமாக வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக!
நிச்சயமாக மறுமை நலனைத் தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக!
உறுதியாக மறுமை வாழ்வைத் தவிர வேறு எந்த வாழ்வும் இல்லை. இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களை கண்ணியப்படுத்துவாயாக!
திண்ணமாக நற்கூலி என்றாலே மறுமையின் நற்கூலிதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2622, 2623, 2741, 3616.
நாங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது ஹஸ்ஸான் இப்னு தாபித் ரளியல்லாஹு அன்ஹு தனது கவிகளின் மூலம் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். (அவற்றில் ஒன்று)
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நல்லொழுக்கமும், நுண்ணறிவும் மிக்கவர்கள், ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எந்தவொரு பெண்ணைப் பற்றியும் தவறாகப் பேச மாட்டார்கள்.
அறிவிப்பாளர்: மஸ்ரூக் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 3831, முஸ்லிம் 4543
மவ்லிது ஓதக் கூடியவர்களுக்கு மலக்குமார்களைக் கொண்டு பாதுகாப்பு அரண் இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்.
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்,
நீங்கள் இறைவனுக்காகவும் இறைத்தூதருக்காவும் கவிபாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மா(வான ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம்) உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: முஸ்லிம் 4545.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் ஒரு பகுதிக்குச் சென்றார்கள். அங்கே சில சிறுமிகள் தஃப் அடித்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். (அவற்றில் ஒன்று) நாங்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த சிறுமிகள். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த அண்டை வீட்டுக்காரர் ஆவார்கள்.இந்த ஹதீது மிலாதுகள்,கந்தூரிகள் போன்ற விழாக்களுக்கு அனுமதியளிப்பதாக இருக்கிறது.
(இதைக் கேட்ட) நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், திண்ணமாக நான் உங்களை நேசிக்கிறேன்.(இதை) அல்லாஹ் அறிகிறான்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு மாஜா 1889.
கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து படித்தார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6555.
பள்ளிவாசலில் ஹஸ்ஸான் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கவி பாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைக்கண் பார்வையால் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்,
உங்களை விட சிறந்தவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தபோதே இப்பள்ளிவாசலில் கவி பாடியுள்ளேன்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2973, முஸ்லிம் 4539.
இதை நல்லடியார்களின் தர்ஹாக்களில் பாராயணங்களாக பாடிவரும் முறைக்கும் அவை உரூஸ்சின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது என்பதற்க்கும் ஆதாரமாக எடுத்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பள்ளிவாசலில் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள்.
அதிலே அவர்கள் ஏறி நின்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையேப் புகழ்வார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: திர்மிதி 2773.

மௌலிது ஓதும் அமலை பெரும் விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்தியவர், தலைசிறந்த வள்ளல் தன்மை மிக்க அரசர்களில் ஒருவரான 'அல்மலிக்குல் முழஃப்பர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலியிப்னு புக்தகீன்' என்பவர் ஆவார்.
இந்த மன்னர் இனிய பல பொது சேவைகள் செய்தவர் என்று இமாம் சுயூத்தி அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த மன்னர் ரபியுல் அவ்வலில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிதிற்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க, மாபெரும் கூட்டத்தை திரட்டி வந்தார் என்றும், இந்த மன்னர் வீரமும், வியத்தகு ஞானமும், கொடைத்தன்மையும் கொண்டவர் என்றும் இப்னு கதீர் அவர்கள் எழுதிய வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஏற்பாடு செய்த மௌலிதின் விருந்தில் ஞானிகள் மற்றும் ஸூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அன்பளிப்புகளும் வழங்கினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்பர் இந்த மௌலிதிற்காக செலவிட்டார்.
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களில் அல்ஹாபிழ் இப்னு ஜவ்ஸி, இப்னுல் இமாதுல் ஹன்பலிய்யீ, இமாம் ஸர்கானீ, இப்னு கல்கான், அல்ஹாபிழ் இப்னு கதீர் போன்றோர் இந்த மன்னரின் வரலாற்றையும், அவர் மவ்லிது மஜ்லிஸ் நடத்திய தனிச்சிறப்பையும் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
வஹ்ஹாபிகளின் கருத்துக்களுக்கு முன்வடிவம் கொடுத்த இப்னு தைமிய்யா கூட தமது 'இக்திளா' நூல் 2:136 ல் கூறுகிறார், 'திருநபியின் மௌலிது நடத்துவதால் மகத்தான நற்கூலி கிடைக்கும்' என்று.
எனக்கு உஹது மலை அளவு தங்கம் இருந்தால் அவையனைத்தையும் அருமை நபிகள் நாயகம் அவர்களது மவுலிது ஷரீபை நடத்துவதற்காக செலவு செய்வதையே நான் பெரிதும் விரும்புவேன் என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஸெய்யிதுத் தாயிபா -ஸூபியாக்களின் சக்கரவர்த்தி ஹஜ்ரத் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'எவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மவ்லிது ஷரீபுக்கு ஆஜராகி அதை மகிமைப் படுத்தி சிறப்புறச் செய்தாரோ நிச்சயமாக அவர் காமிலியத்தான –சம்பூரணமான-ஈமானைப் பெற்றுக் கொண்டவராவார்' என்று.
ஆதார நூற்கள்: தர்ஜுமத்து இக்தில் ஜவ்ஹர் பீ மவுலிதிந் நபிய்யில் அஸ்ஹர், பர்ஸன்ஜீயின் ஷரஹு.
பர்ஸன்ஜீ மவுலிதை அரபுத் தமிழில் மொழி பெயர்த்துள்ள மர்ஹும் அல்ஹாஜ் அபூபக்கர் மிஸ்கீன் சாகிபு ஆலிம் பாஸி (காயல்பட்டணம் ஜாவியா கலீபா வ முதர்ரிஸ்) அவர்களும் அந்நூலில் மேற் சொன்ன ஆதாரங்களை எடுத்துக் கூறியுள்ளார்கள்.
எந்த இடத்தில் பெருமானார் அவர்களின் மௌலிது ஓதப்படுகிறதோ, அந்த இடத்தை ஒருவர் நாடினால், நிச்சயமாக அவர், சுவனப் பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். ஏனெனில், ஏந்தல் நபி நாயகம் அவர்கள் மீது கொண்ட அன்பினாலேயே தவிர அவ்விடத்தை அவர் நாடியிருக்கவில்லை. என்னையொருவர் நேசித்தால் அவர், என்னுடனேயே சுவர்க்கத்தில் இருப்பார் என்பது நபி மொழியாகும் என்று மாமேதை அஷ்ஷெய்கு ஸரியுஸ் ஸிக்திய்யி அவர்கள் கூறியுள்ளார்கள்.
மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும், நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியாக நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மௌலிதின் தனித்தன்மையைச் சார்ந்தது என்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருப்பதாக இமாம் கஸ்தலானி அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாயகம் அவர்கள் பிறந்த புனித இடத்தை மக்காவாசிகள் அன்றும் இன்றும் தரிசிக்கும் அமல், ரபியுல் அவ்வல் 12 ம் நாள் நடைபெற்று வந்ததாக மவாஹிபுல் லதுன்னியா என்ற நூல் கூறுகிறது.இந்த அடிப்படையிலேயே உரூஸ்கள் எடுக்க மார்க்கம் அனுமதிக்கிறது என்கிறோம்.
முந்தைய பிந்தைய மார்;க்க மேதைகள் நபி அவர்களின் பிறந்த நாள் இரவிலும் பகலிலும் மவ்லிது எனும் அமலில் ஈடுபடுவதில் ஒத்திருந்தார்கள் என்று அஷ்ஷெய்க் யூசுபுன்னபஹானி அவர்கள் கூறியுள்ளார்கள்.இந்த அடிப்படையிலேயே மிலாது விழா எடுக்க மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது என்கிறோம்.
எந்த ஒரு வீட்டிலோ, பள்ளிவாசலிலோ மஹல்லாவிலோ மாநபி அவர்களின் மௌலிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களை கருணையினால் அல்லாஹ் சூழ வைத்து விடுகிறான் என்று இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி அவர்கள் தமது அல்வஸாயில் ஃபீ ஷறஹிஷ் ஷமாயில் என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்.
இஸ்லாமிய கலாச்சார நிகழ்வுகளாக போன உரூஸ்கள்,கந்தூரிகள்,சந்தன கூடுகள்,தேர்பவனிகள் சர்வநிச்சயமாக இஸ்லாமிய மார்க்கத்தை விளம்பர படுத்தவும்.இஸ்லாமிய மார்க்கம் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கிறது என்பதையும் இஸ்லாமிய அழைப்பை மாற்று மதத்தவரிடம் கொண்டாட்டமனநிலையை அமைந்து ஒரு உறவு மேற்கொண்டு அதன் மூலம் அழைப்பை எளிதாக்கும் முறையும் இவற்றில் பொதுவாக அமைந்திருக்கிறது.ஜனநாயக பூர்வமான சமூக நல்லிணக்க அம்சங்களை பேணுவது இஸ்லாத்தை காயப்படுத்துவது ஆகாது.அதே சமயம் இறுக்கமான மனநிலையை உருவாக்கும் தூய இஸ்லாமிய கருத்தியல் ஜிஹாத்தை முக்கியத்துவம் கொடுத்து நல்லிணக்கத்துக்கு மாறான ஒரு வன்முறை அல்லது தீவிரவாதத்தை வளர்க்கிறது.இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை மையப்படுத்தும் நோக்கமானது தீவிரவாதத்தை ஊக்கு விப்பது போல இருக்கிறது.ஆனால் இஸ்லாம் வணக்க வழிபாடுகளை விட ஒரு மனிதனின் வாழ்வியல் முறையாக இருப்பதால் சமூகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பண்பட்டவனாக நல்லிணக்கம் உடையவனாக இருக்கவேண்டும் என்ற பொதுநலனை அடிப்படையாக கொண்டே இவ்வித உரூஸ்கள்,விழாக்கள் தகவமைக்கப்பட்டிருக்கின்றன.நாயகம் பெருமானாரின் நினைவு தினத்தை நினைவுகூரும் மிலாதுநபி பண்டிகைகளும்,சூபிகள்,நல்லடியார்களை நினைவுகூரும் விழாக்களும்,ஆசுரா பண்டிகைகளும்,பெருநாட்களும் மனிதசமூகத்தின் இருப்புக்கான மகிழ்வுக்கான தருணங்கள் ஆகும்.இவைகளை மறுதலித்து கொண்டு மனிதனால் இருக்கமுடியாது.பிறந்த நாள்களும்,தினம் தினம் புதிய விழாக்களும்,மகிழ்வு தினங்களும் கடைபிடிக்கப்படுவதற்கான காரணம் அவை மனிதனை மையப்படுத்துகின்றன.மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை அதிகப்படுத்துகின்றன.இவைகளை அனாச்சாரம் என்பது வன்முறை மனம் படைத்தவரின் காட்டுமிராண்டி மொழியாகும்.மூடநம்பிக்கைகள்,அனாச்சாரங்கள் என்று தீண்டாமை கற்பிப்பது நாகரீகமற்ற மனதின் மொழியாகும்.இஸ்லாம் என்ற மார்க்கம் வணக்கத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதில்லை.அது பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒவ்வொரு விசயங்களுக்கும் மார்க்கத்தை சொல்வதால் விழாக்கள்,பண்டிகைகள்,கொண்டாட்டங்கள் ஆகியவை ஈமானுக்கு களங்கம் வராத வகையில் அமைந்து இருப்பதை வரவேற்கிறது.இஸ்லாத்தில் இவையனைத்துக்கும் வேர்கள் குரான்,ஹதீதுகளில் இருக்கிறது.இவையாவும் சுன்னாவாக இருக்கிறது என்பதை ஆழ்ந்து வாசிக்கும் போதே கண்டுகொள்ளமுடியும்.

Monday, January 11, 2016

மஹாகிரந்தம் : நிறைவேறா ஆசைகளின் கதம்பம்

மஹாகிரந்தம் : நிறைவேறா
ஆசைகளின் கதம்பம்
பி.எஸ்.அஜீத் குமார்
1
மானுட சமூகத்தின்
பரிணாமத்திலும்
வரலாற்றிலும் பொதுமையான
பல கூறுகளை நாம் இனம்
காணமுடியும்.அதிகாரத்துக்கான
விழைவே வரலாறாக இருக்கிறது
என்று
சொல்லப்படுகிறது.அதிகாரத்துக்கு
எதிரான போராட்டமாகவும்
வரலாறு இருக்கிறது.நாம்
வரலாற்றை பார்க்கும் போது
மானுட விழுமியங்கள்
சிதைக்கப்பட்டு மனிதர்களே
மனிதர்களை நசுக்கும் ஒரு
வினோத மிருகத்தனத்தை மானுட
சமூகம் இன்னமும் இழந்து
விடவில்லை.
பொய்,குரோதம்,காமம்,ஆசை,வஞ்சித்தல்,ஏமாற்றுதல்
போன்ற எதிர்மறையான அத்தனை
மனித குணங்களுக்கும்
செயல்வடிவம் கொடுக்கும்
போது எழும் பிரச்சனைகளை
இந்த சமூகங்கள் காலந்தோறும்
கண்டுவருகிறது.மனித
சுபாவத்தில் எந்த மாற்றமும்
இல்லாத நிலையே இன்றும்
காணப்படுகிறது.வரலாற்றை
பற்றி நாம் விவாதிக்கும்
போது கொஞ்சம் அதிகமாகவோ
கொஞ்சம் அபிலாஷையோ
இல்லாமல் யாருக்கும் சொல்ல
இயலுவதில்லை.தப்பெண்ணங்களும்,பெருமைகளும்
தன்னகத்தே சுமக்கும் சமூகம்
வேறுபாடுகளை கொண்டே தன்
இருப்பை நிரூபித்து
வருகிறது.
திருவிதாங்கூர்
சமஸ்தானத்தின் வரலாறும்
ஆதிக்க சக்திகளால்
பெருமைபட்டும் ஒடுக்கப்பட்ட
சமூகங்களால்
வெறுக்கப்பட்டும் உள்ள
சூழ்நிலைகளை நாம்
மறப்பதற்கில்லை.இந்த நாவலை
வாசித்து முடிக்கையில்
என்னால் இப்படி தான் ஒரு
முடிவுக்கு வரமுடிகிறது.
1. அரவிந்தன் பிள்ளையின்
அரியணை ஏறும் எண்ணம்
நிராசையாகிறது.
2. சுவர்ண மினியின் திட்டமாக
தன் கணவனை அரியணை ஏற்ற
முயலும் ஆசையும்
நிராசையாகிறது.
3. ரகுமான் சாகிபின் காதலியை
கரம் பிடிக்கும் ஆசையும்
நிராசையாகவே தொடர்கிறது.
4. மன்னனின் ஆசைப்படி
அரவிந்தன்பிள்ளை எப்படியும்
தன் நாட்டை காப்பாற்றி
விடுவான் என்ற ஆசை
நிராசையாகிறது
5. அரவிந்தன்பிள்ளை தன்
மனைவியின் வஞ்சகத்தை
முறியடிக்க வேண்டும் என்ற
எண்ணம் நிராசையாகிறது
6. சிவசித்தனின் கிழவனை
குமரனாக்கும் எண்ணம்
நிராசையாகிறது
7. பென்னிக்கிழவனின்
குமரனாகும் ஆசை
நிராசையாகிறது
ஆனால் மஹாகிரந்தத்தின்
வாக்குகள் மெய்யானதா?
அல்லது சிவசித்தனின் சாபம்
பலித்ததா? என்று
பார்க்குமிடத்தும் இந்த
இரண்டையும் தாண்டி
நீலலோகிதையின்
பழிவாங்குதல் அந்த நாட்டின்
அழிவுக்கே வழிகோலுவதாக
அமைகிறது.நீலலோகிதைக்கும்
மஹாகிரந்தத்துக்கும் எதாவது
சம்பந்தம் இருக்கிறதா?
மஹாகிரந்தம் என்பது எதை
குறிக்கிறது?என்பன போன்ற
கேள்விகளே இறுதியில்
மிஞ்சுகின்றன.
2
திருவிதாங்கூர்
சமஸ்தானத்தின் கீழிருந்த
குமரி மாவட்டத்தில் அன்று
நிலவிய சாதிக்
கொடுமைகளையும், சாணார்
சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு
ஒடுக்கப்பட்டனர் என்பதையும்,
இன்று தங்களுடைய
ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து
ஆதிக்கச் சாதியினராக சாதியக்
கொடுமைகளை நிகழ்ந்தும்
பிற்படுத்தப்பட்ட சாதியினர்
குறித்தும் வழக்குரைஞர்
இலஜபதிராய் எடுத்துரைத்தார்:
“இராமன் சீதையைக் கரம் பிடித்த
கதையையும், மகாபாரதக்
கட்டுக்கதைகளையும்,
பகவத்கீதையின்
பிதற்றல்களையும்
அறிந்திருக்கும் நம் மக்கள்,
முத்துக்குட்டி
என்றழைக்கப்பட்ட சமூகப்
போராளியின் போராட்டங்கள்
குறித்தோ அல்லது நமது
சகோதரிகள் மேலாடை
(மாராப்பு) அணியக் கூடாத
அனுமதிக்கப்படாத அவலங்கள்
குறித்தோ அறியாமலிருப்பது
வருந்தத்தக்க ஒன்றாகும்.
1754-ல் திருதாங்கூர்
சமஸ்தானத்தின் இராணுவச்
செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி
விதிக்கப்பட்டது.
இத்தலைஇறையைக் கட்ட
முடியாமல் பலரும் வாழ வழி
தேடி திருநெல்வேலிக்குத்
தப்பியோடினர். 1807-ல் மட்டும்
ஈழவர், நாடார், சாம்பவர் சாதி
மக்களிடம் ‘தலைஇறை’யாக
வசூலிக்கப்பட்ட தொலை 88,000
ரூபாய். இவ்வரி வசூலிப்பு,
ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த
கைப்பிடியுள்ள குடைக்கு வரி,
பெண்களின் மார்புக்கு வரி
எனப் பல்வேறு வகைகளில்
நடைமுறைப்படுத்தப்பட்டு
வந்தது.
இப்பார்ப்பனியக்
கொடுங்கோன்மையை எதிர்த்த
முத்துக் குட்டி என்பவர், தமது
‘அகிலத் திரட்டு’ எனும் நூலில்
அன்று நடைமுறையிலிருந்த
பல்வேறு வரிகளைப் பதிவு
செய்கிறார். “தாலிக்கு ஆயம்;
சருகு முதல் ஆயம்; கம்புத்
தடிக்கு ஆயம்; தாளமேறும்
சான்றோருக்கு ஆயம்; அரிவாள்
தூர்வெட்டிக்கு ஆயம்;
வட்டிக்கு ஆயம்; வலங்கை
சென்றோர் கருப்புக்
கட்டிக்கும் ஆயம் வைத்தானே
கருநீசன்” என்று
குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட சாதிக்கொடுமைகள்
நடைபெற்ற பொழுது, இந்துமத
மடாதிபதிகளோ சைவ
மடாதிபதிகளோ,
சங்கராச்சாரிகளோ அச்சாதிக்
கொடுமைகளை எதிர்த்துக்
குரல் கொடுக்கவில்லை.
1937 வரையிலும் கூட
ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது
வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட
உயரத்துக்கு மேல்
வைக்கக்கூடாது; அவர்கள்
வீட்டில் செம்புப்
பாத்திரங்களை உபயோகிக்கக்
கூடாது; வீடுகளில்
பசுமாடுகள் வளர்க்கக் கூடாது;
நிலம் வைத்திருக்கக் கூடாது”
போன்ற கடுமையான விதிகள்
அமுலாக்கப்பட்டன. இன்றும்
நமது சட்டங்கள் மூலமாகவும்,
நீதிமன்றங்கள் மூலமாகவும்
மறைமுகமாகவோ அல்லது
நேரடியாகவோ
நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான்
வருகின்றன.
ஒடுக்கப்பட்ட சாதியினர்
செல்லப் பெயர்களைச் சூட்டிக்
கொள்ள அனுமதி
மறுக்கப்பட்டனர்; ‘சோறு’
என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’
என்றே சொல்ல
வேண்டுமென்றும், தமது
வீடுகளை ‘குடிசை’ என்றே
அழைக்க வேண்டுமென்றும்
இழிவுபடுத்தப்பட்டனர். குமரி
மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட
சாதிகளைச் சேர்ந்த பெண்கள்
மேலாடை அணிய அனுமதி
மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை
நீடித்திருந்தால் நல்லதுதான்.
இன்று குமரி சுற்றுலா
மையமாக மாறியிருக்கும்”
என்று உயர்சாதி
இளைஞனொருவன் வக்கிரமாகக்
குறிப்பிடுகின்றான்.
1993-ல் அப்பாபாலு – இங்க்ளே
எனும் வழக்கின் தீர்ப்பில்
நீதிபதி கே.ராமசாமி என்பவர்
வேதனையோடு
குறிப்பிட்டதைப் போல,
‘இன்னும் இந்த நாட்டில்
தாழ்த்தப்பட்ட மக்களைப்
பாதுகாப்பதற்காக
வன்கொடுமைச் சட்டம்
உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த அரசியலமைப்புச்
சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’
“பசு புனிதமானதென்றும்,
இந்துக்கள் பசு மாமிசம் உண்ண
மாட்டார்கள்” என்றும் நாடு
முழுவதும் பிரச்சாரம்
செய்கிறார்கள். ஆனால், குமரி
மாவட்டத்திலுள்ள 60,000
பார்ப்பனர்களைத் தவிர்த்து
மற்ற அனைவரும் பசுமாமிசம்
உண்பவர்கள்தான். அம்மக்களை
இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள்
தந்திரமாகத் தங்கள் பின்னால்
அணிதிரட்டி வருகிறார்கள்.
ஆணாதிக்கக் கொடுங்கோலன்
ராமனுக்கு, தன் மனைவி
சீதையைச் சந்தேகப்பட்டுத்
தற்கொலை செய்யத் தூண்டிய
ராமனுக்குக் கோவில் கட்ட
முற்படுகிறார்கள்.
1746-ல் மார்த்தாண்ட வர்மா
எனும் திருவனந்தபுரத்து
மன்னன் தனது அரண்மனையைக்
கட்டும் பொழுது,
அரண்மனையின் பலத்துக்காக
வேணி ஈழவர், நாடார், முக்குலர்
சாதிகளைச் சேர்ந்த 15
குழந்தைகளைப் பலி
கொடுத்தான்.
அத்திருவனந்தபுரம் அரண்மனை
மட்டுமன்றி, நம்முடைய
ஒட்டுமொத்த அரசியலமைப்புச்
சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட
சாதிகளின் பலிபீடங்களின்
மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”
3
திருவிதாங்கூர்
சங்ககாலத்தில் ஐந்திணைகளாக
பிரிக்கப்பட்டு சமஉரிமை படைத்த
திராவிடர்களின் பூமியாக
இருந்துள்ளது. கி.மு மூன்றாம்
நூற்றாண்டு முதல்
திருவிதாங்கூரில் துவங்கிய
ஆரிய பண்பாட்டு படையெடுப்பு
கி.பி 8ம் நூற்றாண்டில் தனது
ஆதிக்கத்தை
நிலைநிறுத்தியது (தமிழக
வரலாறும் பண்பாடும்: டாக்டர்
A.சாமிநாதன்). இந்த
காலகட்டத்தில் சாதி அமைப்பை
உருவாக்க துவங்கியது. "சாதி
அமைப்பில்லாத சமத்துவ
சமுதாயத்தில் குடியேறிய
ஆரியர்கள் சதுர்வர்ண
அடிப்படையில் ஆரிய சித்தாந்த
சாதி அமைப்பை
உருவாகினர்" (மேற்கோள்:
வரலாற்றாசிரியர் திரு.
ஸ்ரீதரமேனன்). 19ம்
நூற்றாண்டில்
திருவிதாங்கூர் பார்ப்பனீய
கொடுங்கோன்மையின்
உச்சநிலையில் இருந்தது.
பார்ப்பனீயவாதிகளால்
விதிக்கப்பட்ட இந்துமத விதிகள்
ஒடுக்கப்பட்ட மக்களை
தீண்டாமை தீயில் வேக
வைத்தது.
கன்னியாகுமரியில்
அடக்குமுறையாளர்கள்
பெரும்பாலும் நாயர்
சாதியினர். திருவிதாங்கூர்
அரசகுடும்பத்திற்கு
விசுவாசமாக இருந்ததற்காக,
போரில் அபரிதமாக
செயலாற்றியதற்காக
நாயர்களுக்கு பிள்ளை,
பணிக்கர், நம்பியார், மேனன்,
கர்தா, கைமால்... என பட்டங்களை
மன்னன் வழங்கியிருந்தான்.
இந்த பட்டங்களை நாயர்
குடும்பங்கள் நிரந்தரமாக
பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
காலப்போக்கில் இந்த பட்டங்கள்
துணைசாதிகளாக அடையாளம்
காணப்பட்டன. நம்பூதிரிகளின்
நிழல் அதிகார மையங்களாக
நாயர் குடும்பங்கள்
விழங்கியது.
திருவிதாங்கூரில் சாதி
அடுக்கில் நம்பூதிரிகளுக்கு
அடுத்த இடம் நாயர்களுக்கு
இருந்தது. நம்பூதிரிகளின்
ஆதரவு நாயர்களுக்கு
தடையில்லாமல் கிடைக்க
முக்கிய காரணம்
அவர்களுக்கிடயிலான morganatic
மணஉறவுகள். சிலநேரங்களில்
பெண்ணின் விருப்பத்திற்கு
எதிராக, நிலவுடமையாளர்களாக
இருந்த நம்பூதிரிகளின்
செல்வத்தை பெற இந்த மண
உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
நாயர் பெண்ணின் வீட்டிற்கு
நம்பூதிரி "வரலாம்"; அந்த
வேளை அவளது கணவனை விட
நம்பூதிரிக்கே முதலிடம் என்ற
வழக்கம் இருந்தது. இவ்வகை
உறவுகளினால் நம்பூதிரிகளின்
நிழலில் நாயர்கள் பதவி,
அதிகாரம், சொத்து, படைபலம் என
அனைத்தையும் அனுபவித்தனர்.
மன்னனின் படைகளில் முக்கிய
பதவிகளில் நாயர்கள்
இடம்பெற்றனர்.
விளைநிலங்களான வயல்,
தென்னந்தோப்புகள்
நாயர்களிடமிருந்தது.
வழிபாட்டு முறைகளிலும்
நாயர்கள் சூரியவணக்கம் முதல்
பெரும்பாலும் நம்பூதிரிகளின்
வழிபாட்டுமுறைகளை தழுவியே
இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில்
இன்றும் நாயர்களை நேரில்
காணும் போதும், பேசும்
போதும் அழைக்க "ஏமானே
(எஜமானே)" என குறிப்பிடுவது
வழக்கமாக இருக்கிறது. 'எஜமான்'
நிலையில் இருந்த இவர்களை
அப்படி அழைத்த சொல் யாமான்,
ஏமான் என்று மருவி சொல்
வழக்காக இருக்கிறது. அதே
நாயர் நேரில் கண்ணில் படாத
வேளை சூத்திரன் என
திட்டுவதும் உண்டு.
அடக்குமுறையை அனுபவித்த
வலியின் வெளிப்பாடு
சூத்திரன் என நாயரை
ஒடுக்கப்பட்ட மக்கள்
தங்களுக்குள் சொல்ல
வைத்தது. பண்ணையார்களாக
இருந்த நம்பூதிரிகளும்,
நாயர்களும் ஒடுக்கப்பட்ட
மக்களை அடிமைகளாக
வைத்திருந்தனர்.
கொல்லம் திவான் எழுதிய
மடலில் திருவிதாங்கூரில்
1,64,864 பேர் அடிமைகளாக
இருந்துள்ளனர் என்பதை
குறிப்பிடுகிறார். அடிமைகளாக
இருந்த மக்கள் ஆங்கிலேய
காலனியாத்திக்க
பிரதிநிதிக்கு எழுதிய
கடிதத்தில் "பரம்பரை
பரம்பரையாக நாங்கள் விவசாய
கூலிகள், வேலையும் சமூக
அடக்குமுறையும் சேர்ந்து
எங்களை விவசாய கூலி
அடிமையாக பண்ணையார்களிடம்
வைத்திருக்கிறது. நாங்கள மன,
வாழ்வு அடிப்படையில் சுதந்திர
மனிதர்களாக பண்ணையார்கள்
எதிராக உள்ளனர். ஆதிக்க
சாதியினர் அனுபவித்து வருகிற
உரிமைகள் எங்களுக்கு
மறுக்கப்படுகிறது. நில
உரிமையாளர்களின் பிடியில்
சிக்குண்டு மழையிலும்,
வெயிலிலும் மிருகமாக
உழைத்து எஜமானர்கள் சொத்தை
பெருக்க நாங்கள் அரை
வயிற்றில், அழுக்கு சாக்கில்
அவதிப்பட
வைக்கப்பட்டுள்ளோம்" என
எழுதினர். அடிமைகளை
வாங்குவதும், விற்பதும்
ஆதிக்கசாதி நில
உடமையாளர்களுக்கு
உரிமையாக இருந்தது. இரணியல்,
தொடுவெட்டி, படந்தாலுமூடு
போன்ற பகுதிகளில்
அடிமைகளை விற்க சந்தைகள்
இருந்துள்ளன. அடிமைகளை
சக்கையாக பிளிந்து வேலை
வாங்கிய பின்னர் வதைப்பதும்,
கொலைசெய்வதும், மீண்டும்
விற்பது என
கொடுங்கோன்மையின்
உச்சகட்டம் நிலவியது.
திருவிதாங்கூர் பார்ப்பனீய
அரண்மனை, கோட்டைகளின்
அழகிலும், கோயில்களின்
சுவர்களிலும் இந்த
அடிமைகளின் இரத்தமும்
சதையும் கலந்த வரலாறு செல்வ
செழிப்பாக கலந்திருக்கிறது.
பார்ப்பனீயம் உச்சநிலையில்
ஈடுபட்ட அரசுகளில்
நம்பூதிரிகளும், நாயர்களும்
இணைந்து ஆதிக்கம்
செலுத்திய திருவிதாங்கூர்
மன்னராட்சி குறிப்பிடத்தக்கது.
நம்பூதிரிகளும், நாயர்களும்
சேர்ந்து கோவில்கள், வீதிகள்
எங்கும் கட்டுப்பாடுகள்
அமைத்து தங்களுக்கு சாதகமான
அமைப்பை உருவாகி
வைத்திருந்தனர். அதிகார
மையங்களில் தங்களுக்கு
சாதகமான சட்டங்களை
உருவாக்கி வைத்திருந்தனர்.
ஈழவ சாதியில் பிறந்தவர்கள்
நம்பூதிரிகளிடமிருந்து 32 அடி
தூரம் விட்டும்,
நாயர்களிடமிருந்து 16 அடி தூரம்
தள்ளியும் நடக்கவேண்டும்
என்ற சட்டங்கள் நடைமுறையில்
இருந்தது. கண்ணால்
பார்த்தாலே தீட்டு என சில
சாதிகளை ஒதுக்கி
வைத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட
மக்கள் இடுப்புக்கு மேல்
உடையணிய தடையும், அபராதமும்
விதித்திருந்தனர். நாயர்
வீடுகளின் அருகில் பிற
சாதியினர் செல்லக்கூடாது.
நாயர்கள் குளிக்கும் பொது
இடங்களில் பிற சாதியினர்
குளிக்கக்கூடாது. நாயர்கள்
போல மேலாடை
அணியக்கூடாது. கிணற்றில்
தண்ணீர் எடுக்கக்கூடாது.
கோவிலில் நுழையக்கூடாது.
இருபதாம் நூற்றாண்டு
வரையிலும் இப்படியான
கொடுமைகள் தொடர்ந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில்
இந்த கொடுமைகளை அதிகம்
அனுபவித்தவர்கள் பள்ளர்,
பறையர், சாணார், முக்குவர்
சாதி மக்கள்.
இந்த கொடுமைகளை எதிர்த்து
ஒவ்வொரு காலகட்டத்திலும் பல
இடங்களில் கிளர்ச்சிகள்
எழுந்து கலவரங்களாக
வெடித்தது. அந்த
போராட்டங்களில் மூழ்கி எழுந்த
முத்தாக
சமூகப்புரட்சியாளர்கள் பலர்
உருவாகினர்.
திருவிதாங்கூரில் உருவான
வீரம் செறிந்த மாமனிதர்களில்
அய்யங்காளி, நாராயணகுரு,
அய்யா வைகுண்டர்
(முத்துக்குட்டி சாமிகள்) என
பலர். அன்றைய வர்ணாஸ்ரம
சாக்கடையான
திருவிதாங்கூரை சீர்படுத்திய
இந்த மாமணிகளின் வரலாறு
இன்றைய தலைமுறை
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
தெரியவில்லை.
பள்ளிப்பாடங்களிலும்,
வரலாற்று புத்தகங்களிலும்
இவற்றை அறியாமல்
வளர்ந்துவிட்டோம்.
மன்னர் ஆட்சியில்
நம்பூதிரிகளும்,
நாயர்களும்அனுபவித்து வந்த
பதவி சுகங்கள், அதிகாரம்
அனைத்தும்
காலனியாதிக்கத்தில் இடம் மாற
துவங்கியது. கிறிஸ்தவ மற்றும்
இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய
மக்கள் தங்களது உரிமையை
அனுபவிக்க ஆரம்பித்தனர்.
மேலாதிக்கத்தின் பிடி மெல்ல
நழுவ துவங்கியது. பார்ப்பனீய
மதத்தில் மறுக்கப்பட்ட
உரிமைகள் மதம் மாறினால்
கிடைக்குமென நம்பி அதிக
எண்ணிக்கையில் மக்கள் மதம்
மாற துவங்கினர்.
வாழ்வுரிமையையும்,
கலாச்சாரத்தையும், வழிபாட்டு
உரிமையையும் மீட்டெடுக்க
தெற்கு திருவாங்கூரில்
சமூகநீதி போராட்டங்கள்
மதத்தை மையமாக வைத்து
உருவானது.
ஈழவ மக்களுக்கு கோவிலில்
வழிபட, சாலைகளில் நடமாட தீட்டு
என தள்ளி வைத்தனர் ஆதிக்க
சாதியினர். வைணவ
இந்துகோயில்களில்
ஒடுக்கப்பட்ட மக்களை தீட்டாக
வைத்து வழிபாட்டு உரிமையை
மறுத்ததை எதிர்த்த
நாராயணகுரு ஈழவ மக்களுக்காக
தனியாக கோயில்களை
உருவாக்கினார்.
நம்பூதிரிகளும், நாயர்களும்
அதை எதிர்த்தனர். எதிர்த்த
நம்பூதிரி ஒருவனிடம் "இது
நம்பூதிரி சிவனுக்கான
கோயிலல்ல, இது ஈழவ சிவன்
கோவில்" என்றாராம்
நாராயணகுரு. எங்களை எங்கள்
வழியில் வாழவிடு என்பதாக
அமைந்த நாராயணகுருவின்
பாதை அணுகுமுறை
பார்ப்பனீயத்தை உலுக்கியது.
பார்ப்பனீய
கொடுங்கோன்மையில்
சாலையில் நடக்க கூட
உரிமையில்லாதவர்களாக
புலையர் சாதி மக்கள்
நடத்தப்பட்டனர். கிறிஸ்தவ
மதத்திற்கு மாறிய பின்னரும்
தங்களது பொருளாதாரமும்,
வாழ்க்கையும் முன்னேறாமல்
இருந்த புலையர் சாதி மக்கள்
சாலைகள், பள்ளிக்கூடங்கள்
உள்ளிட்ட பொது வசதிகளுக்காக
இயக்கமாக போராட்ட துவங்கினர்.
1893ல் புலையர் சாதியினர்
வெங்கனூர் என்னும் இடத்தில்
பள்ளிக்கூடம் ஒன்றை
துவங்கினர். இந்த பள்ளிக்கூடம்
ஆதிக்கசாதியினரால்
தகர்க்கப்பட்டது. புலையர் சாதி
மக்களிடமிருந்து பிறந்த ஒருவர்
அதை எதிர்த்து கடுமையாக
போராடினார். ஆதிக்க
சாதியினர் நிலங்களில் விவசாய
வேலைகள் செய்வதை
புறக்கணிக்க அழைப்பு
விடுத்தார் அந்த மனிதர். மாட்டு
வண்டியில் பொது சாலையில்
சென்று போராட்டம்
துவங்கினார். 1898ல் அவர்
தலைமையில் பொது சாலையில்
புலையர்கள் நுழையும்
போராட்டத்தை நடத்தினார்.
புலையர் சாதி மக்களுக்கும்
ஆதிக்க சாதியினருக்கும்
மோதல்கள் வெடித்தன.
கன்னியாகுமரி,
நெய்யாற்றின்கரை, வைக்கம்
முதலான இடங்களில் வெடித்த
போராட்டங்களை அரசு
அடக்கியது. இந்த போராட்டத்தை
முன்னின்று நடத்திய மாபெரும்
மனிதர் தான் அய்யன்காளி.
அய்யன்காளி, வலிக்கர சோதி
முதலிய தலைவர்களின்
போராட்டங்களின் பலனாக
புலையர் சாதி மக்களுக்கு
கல்வி உரிமைக்கான சட்டத்தை
1914ல் திருவிதாங்கூர் அரசு
உருவாக்கியது. இந்த சட்ட
உரிமையை ஆதிக்க சாதியினர்
கடுமையாக எதிர்த்தனர்.
புல்லத்து என்ற இடத்தில்
புலையர் சாதி குழந்தைகள்
படித்த பள்ளிக்கூடத்தை
நாயர்கள் தீவைத்து
கொழுத்தினர். இந்த
பிரச்சனையில் காலனியாதிக்க
அரசு தலையிட்டது.
நாடு முழுவதும்
கலனியாதிக்கத்தின் பிடி
அழுத்தமாக இருந்த
வேலையிலும் பார்ப்பனீய
கொடுங்கோன்மை ஆதிக்க
சாதிகளால் நடத்தப்பட்டே வந்தன.
குறுநில மன்னர்கள் போல
திருவிதாங்கூரின் பல
பகுதிகளின் பல கிராமங்களை
நம்பூதிரிகள், நாயர்கள்
கூட்டணி ஆட்சி செய்து வந்த
அதிகார மையங்களே இதற்கு
அடிப்படை காரணம். இந்த அதிகார
மையங்கள் மன்னனுடன்
தொடர்பை வைத்திருந்தது.
கோவிலை சுற்றி அமைந்த பல
கிராமங்களை உள்ளடக்கி
ஆளப்பட்ட இந்த பகுதிகள்
சங்கேதம் என்று
அழைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கை
கவனிக்க தனியாக படைகள்
எதுவும் இல்லாமல்
இருந்தாலும் இவை அதிகார
மையங்களாக விளங்கியது
(தகவல்: கொச்சி இராச்சியம்,
K.P.மேனன், 1911)
நாடார் பெண்கள் தங்கள் உடலின்
மேல்பகுதியில் (இடுப்புக்கு
மேலே) மார்பை மறைக்க
இடுப்புக்கு மேல் துணி அணிய
உரிமை மறுக்கப்பட்டது. மீறி
ஜாக்கட் அணிந்த பெண்கள்
கொடும் துயரத்துக்கு
ஆளாயினர். நாடார் சாதி
மக்களின் போராட்டங்களும்,
ஐரோப்பிய மிஷனரிகள்
ஆங்கிலேய அரசாங்கத்திற்கு
கொடுத்த அழுத்தத்தின்
விளைவாகவும் 1829-ம் ஆண்டு
திருவிதாங்கூர் அரசு நாடார்
பெண்கள் குப்பாயம் எனப்படும்
ஒருவித ரவிக்கையை மட்டும்
அணியலாம் என்று
அனுமதித்தது. ஆனால் அவர்கள்
மேல்சாதி பெண்களைப் போல
நல்ல உடை அணியக்கூடாது என
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாயர்களின் எதிர்ப்பு
காரணமாக அந்த உத்தரவை
நடைமுறைபடுத்த
முடியவில்லை. 1859ல் தெற்கு
திருவிதாங்கூரில்
(குமரிமாவட்டம்) இரணியல்,
கோட்டார், திட்டுவிளை,
தொடுவெட்டி மற்றும் பல
ஊர்களில் நாடார் சாதி மக்களை
நாயர்கள் கடுமையாக தாக்கி
வீடுகளை எரித்தனர். அவர்களது
ஜாக்கெட்களை நாயர்கள்
கிழித்தெறிந்த கொடுமை
தொடுவெட்டி (மார்தாண்டம்),
அருமனை என கன்னியாகுமரி
மாவட்டத்தின் பல பகுதிகளில்
நடந்தது.
1870ல் குமாரகோவில்
திரு.வெள்ளையன் நாடார்
தலைமையில் 12000 சாணார் சாதி
மக்கள் கோவிலில் நுழைந்தனர்.
ஒடுக்கப்பட்ட மக்களை
கோவிலில் அனுமதிக்காது
நாயர்கள் தாக்கியதில் 150
சாணார் சாதியினர்
கொல்லப்பட்டனர். இதுபோல
பார்ப்பனீய இந்து
கோவில்களில் ஒடுக்கப்பட்ட
மக்கள் நுழையவிடாத நிலை
திருவிதாங்கூர் முழுவதும்
இருந்தது.
அய்யாவழி இப்படியான
காலச்சூழலில் ஒடுக்கப்பட்ட
மக்களிடமிருந்து
தாழக்கிடப்பாரை
தற்காப்பதுவே தர்மம் என அந்த
மக்களின் உரிமைக்காக
அய்யாவழி தனி மதமாக பிறந்தது.
இல்லறமே உயர்ந்த அறமாக
போதித்த அய்யா வைகுண்டர்
இல்லறத்தையே கடைபிடித்தார்.
இயற்கையான வழியும்,
வாழ்வுமே அய்யாவழியின்
அடிப்படை என்பதற்கு
துறவறமின்மை, கண்ணாடியில்
தன்னையே கண்டு வணங்குதல்,
சுயமரியாதைக்கு அடையாளமான
தலைப்பாகை, ஒரே கிணற்றில்
எல்லோரும் சமமாக தண்ணி
அருந்துவது, சாதி
பாகுபாடின்மை என பல
அடையாளமாக உள்ளன 
ஒடுக்கப்பட்ட மக்களின்
மாமனிதர்களில் அய்யாவும்
ஒருவர்.
பார்ப்பனீய கொடுங்கோன்மை
திட்டங்களையும்,
கொள்கைகளையும் அறவே
எதிர்த்து பல தளங்களில்
போராடியவர்கள் தான் அய்யா,
நாராயணகுரு, அய்யன்காளி
போன்ற எண்ணற்ற மாவீரர்கள்.
இன்று அவர்களை பார்ப்பனீய
இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்
சொந்தமாக்க முனைவது ஓநாய்
அழுவதை தான்
நினைவுபடுத்துகிறது.
நம்பூதிரிகளும், நாயர்களும்
நடத்திய கொடுங்கோன்மை
கோரத்தாண்டவத்தை திருத்தி
எழுத பார்ப்பனீயவாதிகள்
முயல்கிறார்கள்.ஆனால்
மகாகிரந்தம் நாவல் உண்மையை
மறைக்காமல் அக்கொடுமைகளை
சொல்கின்றன.ஆதிக்கசாதியினர்
கொடுமைகள் தெளிவாக
பேசப்படுகின்றன.பெண்கள்
மீதான கொடுமைகள்
பேசப்படுகின்றன.இந்த
அளவுக்கு இன்னொரு நாவல்
பேசி இருக்குமா என்பது
சந்தேகமே.
4
மகாகிரந்தம் நாவல்
பிரம்மாண்டாமாக நம்முள்
காட்சிகளை விரித்து
போடுகிறது.கொடூரங்களை
வெளிப்படையாகச்சொல்கிறது.ஆனாலும்
இந்த நாவலை வரலாற்று நாவல்
என்று சொல்ல முடியுமா என்ற
கேள்வியும் வரலாற்ற வரலாறை
இந்த நாவல் சொல்லுகிறதா
என்றும் யோசிக்க
வேண்டியிருக்கிறது.ஆனால்
திருவாங்கூர் சமஸ்தானத்தின்
வரலாறும்,நிகழ்வுகளும் இந்த
நாவலில் இல்லை என்று சொல்ல
முடியாது.
1. ஆதிக்க சக்திகளுக்கும்
நாடார் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட
சாதிகளுக்கு இடையிலான
முரண்கள் இந்நாவலில்
பதிவாகியுள்ளன.
2. திருவிதாங்கோடு என்ற
பெயர்மாற்ற வரலாறு
பதிவாகியுள்ளது.
3. முஸ்லிம்களின் இருப்பு
திருவிதாங்கூர் வரலாற்றில்
மறைக்கப்பட்டிருந்ததும் இந்த
நாவலில் முஸ்லிம்கள்
வரலாற்றில் முக்கிய இடம்
பெற்றிருந்ததையும்
தெளிவுபடுத்துகிறது.
4. தலித் சமூகத்துக்கும் அரசில்
வேலை
கொடுக்கப்பட்டிருக்கிறது
தெளிவாயிருக்கிறது.
5. முழுவதும் மறைக்கப்பட்ட
சமூகமான குறுப்பு
சமூகத்தின் நிலை
காட்டப்பட்டுள்ளது
6. குருகுல கல்விமுறையும்
அதில் மாற்று மதத்தவருக்கும்
பயில உரிமை இருந்ததை
காட்டுகிறது இந்நாவல்.
7. உயர்குல பெண்ணான நாயர்
பெண்ணை ஒரு முஸ்லிம்
காதலிப்பது குறித்த முரண்
பதிவாகியுள்ளது.
8. உயர்குல பெண்கள் தமது சமூக
உயர்வுக்காக ஆளும்
வர்க்கத்தை கையில் வைத்து
சாதகமாக்கியது குறித்து
பதிவு செய்யப்பட்டுள்ளது.
9. சிவசித்தன் போன்ற தலித்
மக்களின் எதிர் அரசியல்
பதிவாகியுள்ளது
10. நாடார்கள் நிலத்தை
கொண்டிருந்தனர் என்ற உண்மை
அம்பலபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நாவலில் மறைமுகமாக சில
உண்மைகள்
சொல்லப்பட்டுள்ளன.அய்யா
வைகுண்டர் குறித்த
குறிப்பும்,ஒடுக்கப்பட்ட மக்கள்
மீது முலைவரி போன்ற கொடும்
வரிகள் வசூலிக்கப்பட்டன
என்பதும் சாணார்களே
முஸ்லிமாக மதம் மாறினார்கள்
என்பதும் இஸ்லாம் பரவிய
வரலாறும் என்று சிறுசிறு
குறிப்புகளாக
வரலாற்றுண்மைகள்
பதிவாகியுள்ளது.சமஸ்தானங்களில்
பெண்கள் மீதான வன்முறை
குறித்தே இந்நாவல்
குவிமையமாக
செயல்பட்டிருக்கிறது.நீலலோகிதையானலும்,சுவர்ணமினியானாலும்,ஷாஜிதாவாக
இருந்தாலும்,ஏழு பெண்களை
பலாத்காரம் செய்தலும்,ஒரு
புலைச்சி கிழவியின் மீது
செய்யும்
வன்மமும்,ஒடுக்கப்பட்ட சமூக
பெண்களின் மீது நிகழும்
வன்கொடுமையும் இந்நாவல்
சுட்டிக்காட்டுகிறது.
வரலாற்று நிகழ்வுகளுக்கு
கொடுக்கப்படும் நாட்டார்
கதையாடல்கள் அதிக
முக்கியத்துவம் உடையது தான்
இந்நாவலில் ஒரு சூபி அவ்லியா
என்பவரது மாயஎதார்த்தம்
வினைப்பட்டுள்ளது.வண்ணார
சித்தன் குறித்த நாட்டார்
தொன்மமும்,திருவாங்கோடு
குறித்த பெயர்காரண கதையும்
அந்தவகையில் முக்கியத்துவம்
உடையவைகளே.திருவிதாங்கூர்
சமஸ்தானத்தின் முதல்
அமைச்சராக இருந்த பட்டம்
தாணுபிள்ளையின் கதைக்கும்
அரவிந்தன்பிள்ளையின்
கதைக்கும் ஏதாவது தொடர்பு
உள்ளதா என்று வாசகர்கள்
துலக்க வேண்டும்.ஒருவேளை
பட்டம் தாணுபிள்ளையின்
கதையாக இந்நாவல் இருந்தால்
இது ஒரு வரலாற்று ஆவணம்
என்பதில் யாருக்கும் சந்தேகம்
வராது.

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள்

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள் தத்துவத்தின் முடிவிலாப் பெருவெளியில் தடம் பதிக்கும் ஒரு சிந்தனையாளனின் பயணம் எப்ப...