Thursday, February 12, 2009

மவ்லிதுகளின் அர்த்த பரப்புகள்


மவ்லிதுகளின் அர்த்த பரப்புகள்

“யாகுத்பா” என்கிற மவ்லிது தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் அனைவராலும் பாராயணம் செய்யப்படும் புகழ்மாலைப் பாடல்களாகும்.மவ்லிதுகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலகட்டத்திலேயே இறைவனை புகழ்ந்தும்,நாயகத்தைப் புகழ்ந்தும்,அரபு விழுமியங்களை புகழ்ந்தும் பாடப்பட்டிருப்பதற்கு புனித நூல்களான திருகுர் ஆன்,ஹதீதுகள், குர் ஆன் விரிவுரைகள்,ஹதீது விரிவுரைகள் மற்றும் வரலாற்று நூல்களில் பதிவுகள் நிறைய இருக்கிறது.தமிழ்.அரபு சூழல்களில் நாட்டுப்புற இலக்கியமாக,கதைபாடல் , தெம்மாங்கு பாடல்,நிகழ்த்து கலைகள் அனைத்திலும் மவ்லிது எனப்படும் துதிபாடல் பங்கு பெறுவதை இலக்கியம் அறிந்த யாரும் மறுப்பது இல்லை.

மவ்லிதுகளின் இலக்கியச் சொல்லாடல்களை, அர்த்தங்களை, கதையாடல்களை விமர்சிக்கும் போக்கு வகாபிகளிடம் காணப்படுகிறது.சூபி நல்லடியார்களின் புனித பணியை புகழும் மவ்லிதுகள் அதிகம் பாடப்பெறுகின்றன.அரபு மொழியிலமைந்த மவ்லிதுகளை நேரடி மொழிப்பெயர்ப்பை அளித்து அதற்கு மாசு கற்பிக்கும் உள்நோக்க வியாக்கியானம் செய்யும் அரசியல் வகாபிகளிடம் காணப்படுகிறது.யாகுத்பா எனும் துதிபாடல்கள் நல்லடியார் முகையதீனை புகழும் பாடல்களாகும் என்று வகாபிகள் கண்டுபிடித்தனர்.யாகுத்பா என்ற பிரதியின் அர்த்தத்தை மிக சாமான்யமாக அறிந்து கொண்டோம் என்ற பேதமையின் விளைவால் அரபிதெரியாத அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர் என்று சொல்லிவிட்டு மொழிபெயர்ப்பை வைத்து இவர்கள் ஏமாற்றிவருகின்றனர்.உதாரணமாக இறைவன் ஆணுமில்லை,பெண்ணுமில்லை,அலியுமில்லை என்று சொல்லிவிட்டு இறைவனை ஆணாகவே நினைத்து பேசி வருகின்றனர்.திரு குர் ஆன் மொழிபெயர்பில் “அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?”(6:101)என்பது நேரிடையாகவே இறைவனை ஆணாக மாற்றி இருக்கிறது.



தாய் மொழியில் அமைந்திருக்கும் பல்வேறு நூல்களின் அர்த்தமோ.அர்த்த அரசியலோ சரியாக தெரியாத நிலையில் தான் பெருவாரியான மக்கள் இருக்கிறார்கள் என்பது முக்கிய விஷயமாகும்.அப்படியிருக்கும் பட்சத்தில் வெறுமனே மொழிபெயர்க்கும் சொல்லாடல் திறமையை வைத்துக் கொண்டு பிரதிமொழி,பன்முகஅர்த்தங்கள்,சூழலியல் போன்ற பல்வேறு விஷயங்களை கவனத்திலெடுக்காமல் விமர்சிக்கும் வகாபிகளின் அறிவுடமை கேலியான ஒன்றே,வகாபிச பண்டிதர்கள் பகுத்தறிவு,ஆராய்சி,ஆதாரம்,சாட்சி, சட்டதிட்ட விதிமுறைகள் என்றவிதத்தில் ஆய்வு நிகழ்த்தும் போக்கை பார்க்கும் போது சாதாரண பாமரனின் மொழியையை கூட இவர்களால் புரிந்து கொள்ளமுடியுமா என்று நினைக்கத்தோன்றுகிறது.உண்மை,புனிதம்,ஒழுக்கம் போன்ற சொல்லாடல்களின் மறைமுக அரசியல் இன்று வெளிக்காட்டபடுகிறது.மூடநம்பிக்கை,மடத்தனம்,பிற்போக்கு போன்ற சொல்லாடல்கள் உருவாக்கும் அதிகார அரசியலும்,புனைவுகளும் இன்று கேள்விக்கு உட்படுத்தபடுகின்றன.தமிழில் மட்டுமல்லாது திசைச்சொல்,வழக்குச்சொல், கலப்புசொல், போலிச்சொல் போன்ற எண்ணற்ற மொழிசார்ந்த விஷயங்களை புரிந்து கொள்ளாமல் போனால் மொழிபெயர்ப்பு உட்பட அனைத்தும் தவறாக மாறிவிடக்கூடும். பழமொழி,நகைப்பு , நையாண்டி,விடுகதை போன்ற எண்ணற்ற மொழிசெயல்பாடுகளை தாய்மொழியல்லாதவர் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல.உதாரணமாக பாம்பின் கால் பாம்பறியும் என்ற சொல்வழக்கு மொழிபெயர்க்கப்பட்டு அர்த்தம் சொல்கிற போது பாம்பு சம்பந்தமானது என்று பொருள்படுத்துவது எவ்வளவு பெரியதவறாக மாறிவிடும்.இதே போல அரபு மொழியில் ஒரு வழக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.நிச்சயமாக தாய்மொழியை அரபியாக கொண்டிருக்காத ஒருவர் பாம்பாகவே எடுத்துகொள்வார்.மொழிவழக்குகள் என்பவை பண்பாடு சார்ந்து,இடம் சார்ந்து,காலம் சார்ந்து,சூழல் சார்ந்து நிறைய வேறுபாடுகளைக் கொண்டது.சென்னை மொழிவழக்கு தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் மற்ற பகுதியிலுள்ளவர்களுக்கு புரியாமலே இருக்கிறது.அது போல கடந்த ஜம்பது வருடங்களுக்கு முன் புழங்கிய பிராது,தஸ்தெவெஸ்து,சீரிமான், சமூகத்தின் கவனத்திற்கு,சர்கார், பத்திரம்,ஜோலி போன்ற எண்ணற்ற வார்த்தைகள் இன்று மாறிவிட்டன.அப்போதுள்ள ஒரு செய்திதாளை நாம் படித்து புரிந்துகொள்ள முடியாது.இப்படி இருக்கும் போது ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முந்தைய பழமையான அரபியை புரிந்து கொள்ளலாம் எனும் போது அபத்தமாகவும் இருக்கிறது.

உதாரணமாக குர் ஆன் அத்தியாயம் 108ல் வரும் நிச்சயமாக உம்முடைய பகைவன்(எவனோ) அவன் தான் சந்ததியற்றவன் என்ற மொழிபெயர்ப்பை ஜான் டிரஸ்டு,பி.ஜே,,காதியானிகள்,அப்துல் ஹமீது பாக்கவி,நிஜாமுதீன்,ஜ,எப்,டி,சவுதி,பிக்தால் போன்றோர்கள் வைத்திருக்க அரபியை தாய்மொழியாக கொண்ட ரஸாத் கலிபா,அராபத்,பத்மி போன்றோர்கள் நஷ்டமடைய போகிறவன் என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.உருது,தமிழ்,ஆங்கிலம் போன்றவற்றை தாய் மொழிகளாக கொண்டவர் செய்த மொழிபெயர்ப்புக்கும்,அரபியை தாய்மொழியாக கொண்டவர் செய்த மொழிபெயர்ப்புக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது.அரபியில் ஹ¤வல் அப்தர் என்பது ஒரு வழக்கு சொல்லாகும்.தமிழில் அதை சந்ததியற்றவன் என்று மொழிபெயர்த்தி ருக்கிறார்கள்.இந்த மொழிபெயர்ப்பு மொழிபெயர்பின் அடிப்படையில் சரியானதே.ஆனால் தவறு எங்கே நிகழ்ந்தது என்றால் சந்ததியற்றவன் என்ற சொல் ஒரு வழக்காக இருப்பதால் அது நஷ்டமடைய போகிறவனைக் குறிக்கிறது.நான் ஏற்கனவே சுட்டி காட்டிய படி பாம்பாக பொருள்விளங்கினால் எப்படி தவறாகுமோ அது போல் தான் இதுவும்.இப்படி எண்ணற்ற தவறுகள் அரபி மொழிப்பெயர்ப்பில் மலிந்து கிடக்கிறது.நான் ஏற்கனவே சொன்ன பழமொழியை எடுத்துக்கொண்டால் பேசுபவனுக்கும் கேட்பவனுக்கும் இடையில் சூழல் சார்ந்த அர்த்தம் தருவதை பார்க்கலாம்.மறைமுகமாக ஒரு அர்த்தத்தையும்,நேரடியாக ஒரு அர்த்தத்தையும் அது தாங்கி நிற்கிறது. வாய்மொழி வழக்காறுகள்,நாப்புரட்டுகள்,வழக்கு சொற்கள்,திரிபுகள் போன்ற பல்வேறு விஷயங்களை வைத்து சாதாரணமாக ஒரு பழமொழியைப் புரிந்து கொள்ள முடியும் என்று ஆய்வுகள் கூறிக்கொண்டிருக்க மவ்லிதுகளை அவ்வளவு எளிமையாக புரியமுடியுமா?என்ற சந்தேகமே எழுகிறது.பழங்கால பண்பாட்டு எச்சங்களாக இருக்கும் மவ்லிது எனும் துதிபாடல்களில் மனிதனின் பழக்க வழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள்,நாட்டார் நம்பிக்கைகள்,வழக்காறுகள் ஆகியவை உட்கிடங்கையாக இருக்கிறது.துதிப்பாடல்கள் பாமரர் பாடல்களாக,நாடோடி,வாய்மொழி,நாட்டார் பாடல்களாகவும் நாட்டுப்புற கலைஇலக்கிய சேமபாதுகாப்பாகவும் இருக்கிறது.இவை மறுபகர்ப்பு செய்யப்பட்டும்,திரும்ப திரும்ப பாடப்பட்டும் வருகிறது.

மவ்லிதுகளின் மொழியமைப்பு நாட்டார் வழக்காறுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.கதைகள்,நகைப்புகள்,பழமொழிகள்,விடுகதைகள்,இன்னிசை உச்சாடனங்கள், மந்திரங்கள்,வசவுகள்,வாழ்த்துகள்,சாபங்கள்,எதிருரைகள்,இடித்துரைகள்,நையாண்டிகள்,பாராட்டுகள்,நாப்புரட்டுகள்,வரவேற்புரைகள்,விடைபெறும் வாய்ப்பாட்டுகள்,நிகழ்த்துகலை மொழிகள்,பேச்சுகள்,உவமைகள்,உருவகங்கள் போன்ற பல்வேறு ஆய்வு விஷயங்களுடன் மவ்லிதின் மொழியமைப்பு தொடர்புடையதாக இருக்கிறது.பாடல் வகைகளில் வேடிக்கையும், பந்தடி ஒலியும்,விளையாட்டு ஒலியும்,எண்ணிக்கை ஒலியும்,சைகை,குறியீடு,பிரார்த்தனை, நகைப்பு,உருவுரை,பின்னலுரை,மரபொலி போன்றவை காணப்படுகிறது.மேலும் மவ்லிதுகளின் அர்த்தபரவலை கண்டுணர் வாசிப்பிலும்,பொருள்கோள் வாசிப்பிலும்,சிதைவாக்க வாசிப்பிலும் சூழல்சார் பொருண்மை வாசிப்பிலும் என்ற பல்வேறு வாசிப்புகளை நிகழ்த்தும் போது ஓரளவுக்கு புரியமுடியும்.மவ்லிதுகளை அதன் வகைகளை,உள்ளமைப்புகளை பல படிமுறைகளில் பிரித்துணரலாம்.பிரதி,பிரதி இழைவமைப்பு,நிகழும் சூழல்,ஒலியன்,உருபன் , வடிவம் போன்ற சொற்சார்பு பிரதியியல் செயல்பாடுகளை கொண்டு மவ்லிதுகளை புரிய முயற்சிக்கலாம்.பொருண்மையியல்,மானுடவியல்,இனவியல்,சமூகவியல்,மொழியியல்,வரலாறியல்,பண்பாட்டு மானுடவியல் போன்ற பன்முக புலங்களோடான ஒப்பீட்டு ஆய்வியல் வழியாகவும் புரியலாம்.

--------------------------

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...