Tuesday, February 24, 2009

இசையே உயிர்மூச்சு




இரு ஆஸ்கர்விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்,தமிழர்களான நம் அனைவருக்கும் மிகப்பெரிய கவுரவத்தை தேடித்தந்திருக்கிறார்.இதற்கு முன் எந்தவொரு இந்திய இசை அமைப்பாளரும் சாதிக்காததை சாதித்து மிக உயர்ந்த இடத்தை ரஹ்மான் எட்டிவிட்டார். அமெரிக்க மண்ணில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி, இந்தியர்களாலும் சர்வதேசத் தரத்துக்கு இணையானதிறமையை வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்துவிட்டார். இந்திய சாதனையாளர்களைக் கொண்ட வெளிநாட்டுப் படங்களும், இந்தியப்படங்களும் இனி ஆஸ்கரில் போட்டி போட்டு முந்தி செல்வதற்கான பாதையை ரஹ்மான் வகுத்துவிட்டார். இடைவிடாத முயற்சி, இரவு பகல் பாராத கடின உழைப்பின் மூலம் இச்சாதனையை அவர் புரிந்திருக்கிறார்.
1967 ஜன. 6ல் சென்னையில் பிறந்தவர் ரஹ்மான். இவரது தந்தை சேகர், கேரள சினிமாவின் இசையமைப்பாளர். ரஹ்மானின் 9 வயதில் அவரது தந்தையை இழந்தார். குடும்ப சுமை காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விடும் நிலை ஏற்பட்டது.இந்துவான இவர் தனது குடும்பத்தினருடன் இஸ்லாம் மதத்துக்கு மாறினர். திலீப்குமார் என்ற பெயரை ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.இளம்வயதில் தன்ராஜ் என்பவரிடம் இசை கற்றார். 11வது வயதில் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற பிரபலங்களின் மேடை நிகழ்ச்சிகளில் இசைக்கலைஞராக பங்கெடுத்துக்கொண்டார். லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் "வெஸ்டர்ன் கிளாசிக்கல்' இசையில் பட்டம் பெற்றார். சென்னையில் சொந்தமாக இசைபதிவுக்கு "பஞ்சதன் ரெக்கார்ட் இன்'ஒரு ஸ்டுடியோ அமைத்து விளம்பரங்கள், டாக்குமென்ட்ரி படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.

1992ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தனது "ரோஜா' படத்தில் இசையமைக்க ரஹ்மானுக்கு வாய்ப்பளித்தார். இப்படத்தின் சின்ன சின்ன ஆசை... உள்ளிட்ட பாடல்கள் தமிழ் இசை உலகில் புரட்சிஏற்படுத்தின. பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதிலிருந்து இப்பாடல் மறையவில்லை.ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருதை கைப் பற்றினார். "டைம்'பத்திரிகை உலகின் சிறந்த பத்து பாடல் தொகுப்புகளில் ஒன்றாக "ரோஜா' திரைப்படத்தின் பாடல்களை குறிப்பிட்டுள் ளது. இந்தியாவில் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத பெருமைகள் இவை. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ரஹ்மான் உயர்ந்தார். இவரால் மேற்கத்திய இசையில் மட்டுமே சாதிக்க முடியும் எனபரவலாக விமர்சனம் எழுந்தது. "கிழக்கு சீமையிலே', "கருத்தம்மா' ஆகிய படங்கள் மூலமாக இந்த விமர்சனங்களையும் பொய்யாக்கினார். "ரோஜா', "பம்பாய்', "ஜென்டில்மேன்',

"காதலன்' ஆகிய படங்கள் மூலமாக பாலிவுட்டில் நுழையும் முன்பே ரஹ்மான் இந்தி திரையுலகிலும் பிரபலமடைந்தார்.பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் "ரங்கீலா' படத்தின் மூலமாக இந்தி சினிமாவில் ரஹ்மான் கால்பதித்தார். இந்தப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்துபாலிவுட் படங்களில் பணியாற்ற தொடங்கினார். "தில்சே', "லகான்', "தால்' என ரஹ்மானின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது. பாலிவுட்டில் தயாரிக்கப்படும் முக்கியமான படங்களுக்கு ரஹ்மான் இசையமைக்க தொடங்கினார்.இந்திய சுதந்திர பொன்விழாவின் போது ரஹ்மானின் "வந்தே மாதரம்' வெளியானது. ஜெர்மனியில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி, பிரிட்டனில் "பாம்பே டிரீம்ஸ்' இசை நாடகம் என சர்வதேச வாய்ப்புகள் ரஹ்மானுக்கு கிடைத்தன. "எலிசபத், த கோல்டன் ஏஜ்', "லார்ட் ஆப் த ரிங்ஸ்', "வாரியர்ஸ் ஆப் ஹெவன் அண்டு எர்த்', "இன்சைட் மேன்', "ஆக்சிடென்டல் ஹஸ்பண்ட்' போன்ற ஹாலிவுட் படங்களில் இவரது இசை பயன்படுத்தப்பட்டது. "வந்தே மாதரத்தின்' வெற்றியை தொடர்ந்து "ஜன கண மன' வெளிவந்து பாராட்டை பெற்றது. இது இந்திய தேச உணர்வை இளைஞர்களிடையே தட்டி எழுப்பியது. ஐ.நா.,வின் வறுமை ஒழிப்பு குறித்து திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்வெளியான "பிரே பார் மி பிரதர்' என்ற இவரது ஆல்பமும் புகழ்பெற்றது.2005ம் ஆண்டு ஏ.எம்., ஸ்டுடியோ தொடங்கி அதை பஞ்சதன் ஸ்டுடியோவுடன் இணைத்தார்.

கே.எம்., மியூசிக் என்ற பாடல் கேசட்கள் வெளியிடும் நிறுவனத்தை தொடங்கினார். முதன்முதலில் தனது "சில்லுனு ஒரு காதல்' பாடலை இந்தநிறுவனம் மூலமாக வெளியிட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லியனர்' படம் இவரது இசைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. உலகம் முழுவதும் திரைப்பட விழாக்களில் இந்தப்படம் விருதுகளை வாரிக்குவித்தது. இந்த படத்தின் இசைக்காக ரஹ்மானுக்கு கோல்டன் குளோப், பாப்டா, பிளாக் ரீல் அவார்ட், புராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அவார்ட், சேட்டிலைட் அவார்ட்ஸ் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன. இந்தியாவிலேயே நான்கு முறை தேசியவிருது பெற்ற இசையமைப்பாளர் ரஹ்மான் மட்டுமே.கோல்டன் குளோப், பாப்டா விருதுகளை பெறும் முதல் இந்தியரும் அவரே. உலகிலேயே மிக வேகமாக விற்பனையாகும் இசைத்தொகுப்புகளில் ரஹ்மானின் இசைத் தொகுப்புகுள் ஆறாவது இடத்தில் உள்ளன. இதன் மூலம் மடோனா, எல்டன் ஜான் போன்ற ஜாம்பவான்களையே ரஹ்மான் முந்தியுள்ளார். 42 வயதாகும் ரஹ்மானுக்கு மனைவி சாய்ரா பானுவும் குழந்தைகள் கதீஜா, ரகீமா, அமான் ஆகியோர் உள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இவரது மூத்த சகோதரியின் மகன்.இந்திய இசை வரலாற்றில் தனக்கென ஒரு புதியஅத்தியாயத்தை பெற்றுவிட்ட ரஹ்மான் வாழ்த்துஇசையாலும் மகிழ்ச்சியாலும் மனம் நிறைந்திருக்கிறார்.


ஆஸ்கர் விருதை கைப்பற்ற வேண்டும் என பல இந்திய திரைப்படகலைஞர்கள் ஆசைப்பட்டாலும். இதற்குமுன் இரு இந்தியர்களுக்கு மட்டுமே கனவுபலித்திருக்கிறது.பானு அத்தையா : (காந்தி திரைப்படம்) - 1982இந்தியாவின் முன்னணி உடை வடிவமைப்பாளர் பானு அத்தையா மும்பையை சேர்ந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் உடைவடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 1982ல்பிரிட்டனின் இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் "காந்தி' படத்தில் பணியாற்றியதற்காகஇவருக்கு சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. ஜான் மோலோ என்ற பிரிட்டன் உடை வடிவமைப்பாளருடன் ஆஸ்கர் விருதை இவர் பகிர்ந்துகொண்டார். அத்தையா உடை வடிவமைப்பாளராக பணியாற்றிய"லகான்' படம் ஆஸ்கரின் இறுதிச்சுற்று வரை சென்றது. இந்த படத்துக்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இது வரை இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார் பானு. ஆஸ்கர் விருதுக்குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

சத்யஜித்ரே - 1992: மேற்கு வங்கத்தை சேர்ந்த இயக்குனர் சத்யஜித்ரே. "பதேர் பாஞ்சாலி', "அபராஜிதோ' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களை இயக்கியவர். இவரது "செஸ் பிளேயர்' படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. எனினும் விருது பெறவில்லை."கான்' விருது உள்ளிட்ட பல புகழ் பெற்ற சர்வதேச விருதுகள், 32 தேசிய விருதுகள், தாதா சாஹேப் பால்கே விருது என இந்திய சினிமாவின் மிகப்பெரிய சாதனையாளராக சத்யஜித் ரே திகழ்ந்தார். 1992ம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்த ஆண்டே இவருக்கு "பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. 1992ல் சத்யஜித்ரே மறைந்தார். இயக்குனராக மட்டுமின்றி எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளராகவும் இவர் சாதித்தார்.

பூக்குட்டி 3வது சாதனையாளர்: ரஹ்மானின் பெயரை அறிவிப்பதற்கு சற்று முன் விருதை பெற்று இந்திய ஆஸ்கர் விருது பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றுவிட்டார் ரெசுல் பூக்குட்டி.37 வயதாகும் பூக்குட்டி, கேரளாவின் கொல்லத்தில் பிறந்தவர். புனேயில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பயின்றார். இவரது முதல் படம் "பிரைவேட் டிடெக்ட்டிவ்'. 2005 வெளிவந்த "பிளாக்' திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை. "டிராபிக் சிக்னல்', "காந்தி மை பாதர்', "கஜினி'(இந்தி) ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார். காந்திஜியின் மகன் ஹரிலால் காந்தியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட "காந்தி மை பாதர்' படத்தில் பணிபுரிந்ததை மறக்க முடியாத அனுபவமாக இவர் குறிப்பிடுகிறார். பூக்குட்டி பாலிவுட்டின் மிக முக்கியமான சவுண்ட் மிக்சிங் கலைஞராக உயர்ந்தார். இதனால் "ஸ்லம்டாக் மில்லினர்' வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. சவுண்ட் மிக்சிங் பிரிவில்"பாப்டா' விருது கிடைத்த போது, "13 ஆண்டுகளாக திரைக்கு பின்னால் பணிபுரிந்து வருகிறேன். அதற்கான அங்கீகாரம் தற்போது கிடைக்க தொடங்கியுள்ளது' என பூக்குட்டி குறிப்பிட்டார். வெற்றியை மலையாள திரையுலகுக்கு சமர்ப்பிப்பதாக பூக்குட்டி கூறியுள்ளார். "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் பணிபுரிந்த ரிச்சர்ட் பிரைக், இயான் டாப்ஆகியோர் சவுண்ட் மிக்சிங்குக்காக ஆஸ்கர் விருதை பூக்குட்டியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

குல்சார்: இந்தி பாடலுக்கு ஆஸ்கர் : "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் இடம்பெற்ற "ஜெய் ஹோ' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த பாடலுக்கான விருதை ஏ.ஆர். ரஹ்மானோடு பகிர்ந்து கொண்டிருப்பவர் இந்தி பாடலாசிரியர் குல்சார்.72 வயதாகும் குல்சாரின் இயற்பெயர் சம்பூரன் சிங் கல்ரா. பஞ்சாபில் பிறந்த குல்சார் 1961ம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். இந்தி நடிகை ராக்கியை இவர் திருமணம் செய்து கொண்டார்.பாடல்கள் எழுதுவதோடு, படங்களில் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1999ம் ஆண்டு"இஜாசத்' படத்துக்காக தேசிய விருதை வென்றார். 2004ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது கிடைத்தது.

ரூ.50 சம்பளத்திலிருந்து ஆஸ்கர் விருது வரை:வெற்றி வாழ்க்கையை சொல்கிறார் ரஹ்மான்!: இசையமைப்பாளர் ரஹ்மான் இசைக்காகவே ஓடிய படங்கள் ஏராளம். 1990களில் இந்திய இசைத்துறையில் தனக்கென தனிப்பாணியை வகுத்த இவர், மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றார். இவரது முதல் படமான ரோஜா தேசிய விருது பெற்றது. இவரது முதல் ஆங்கில படமான "ஸ்லம்டாக்மில்லினர்' ஆஸ்கர் விருதுகளை குவித்துவிட்டது.


அமெரிக்காவில் ரஹ்மான் அளித்த பேட்டி:

"ஸ்லம்டாக் மில்லினர்' இயக்குனர் இந்தியாவை இதற்கு முன் பார்த்ததில்லை. மும்பை சேரிப்பகுதி குறித்த அவரது படத்தில் பங்கேற்க நீங்கள் தயங்கினீர்களா?
முதலில் டேனி பாய்ல் திரைக்கதையை அனுப்பி வைத்தார். ஆனால் அதை படிக்க எனக்கு நேரமில்லை. இயக்குனர் சேகர் கபூர் டேனி அவரது நண்பர் என்றும் அவரை காத்திருக்க வைக்க வேண்டாம் என்றார். அதன் பின் சில மாதங்களில் இயக்குனர் அனுப்பிய "டிவிடி'யை பார்த்தேன். படம் பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். மூன்று வாரங்களில் இசையமைத்தேன்.

உங்கள் வாழ்க்கையையும் படம் பிரதிபலித்ததா?
ஆம், ஆனால் அந்த அளவுக்கு நான் போராடவில்லை. நானும் நடுத்தர குடும்பத்தில் தான் பிறந்தேன். அப்போது பல விஷயங்களை எட்டவில்லை. இப்போது ஹாலிவுட்டில் உங்கள் முன் அமர்ந்து பேசுகிறேன் என்பதில் மகிழ்ச்சி.

பாய்ல் உங்களிடம் எவ்வாறான இசையை எதிர்பார்த்தார்?
சென்டிமென்ட், சோகமான இசை வேண்டாம் என கூறினார். சிலகாட்சிகள் படத்தில் சோகமாக இருக்கும். அதை மாற்றும் வகையில் இசை அமைந்திருக்கும். படம் பார்க்கும் போது மலை உச்சியில் இருந்து விழுவது போலவும், பின்னர் சிறகை விரித்து பறப்பது போலவும் இருக்கும்.

இந்திய படங்களுக்கும், ஆங்கிலப்படங்களுக்கும் இசையமைப்பதில் என்ன வித்தியாசம்?

"ரோஜா' படம் பல விருதுகளை பெற்ற போது மிகப்பெரியஆச்சர்யமாக இருந்தது. தற்போது தான் முழுவதுமாக ஓர் ஆங்கில படத்தில் பங்கேற் றுள்ளேன். இது புதிய அனுபவம்.

முதலில் பெற்ற சம்பளம்?
முதலில் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் பிளேயரை இயக்குவதற்காக சம்பளம் பெற்றேன். தினம் ரூ.50 கொடுத்தார்கள் என நினைக்கிறேன். பின்னர் ஒரு போட்டோ லேப் விளம்பரத்துக்கு இசையமைத்தேன். விளம்பரங்களில் பணம் கிடைத்தது. அதன் மூலமாக சினிமாவில் நுழைந்தேன்.

ஒரு ஆண்டில் எத்தனை படத்துக்கு இசையமைப்பீர்கள்?
சில சமயம் எட்டு படங்களை முடிப்பேன். ஒரு சில ஆண்டுகளில் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன்.பாலிவுட்டில் ஒரு சிலர் ஒரே ஆண்டில் 30 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

எந்த ஹாலிவுட் படத்தில் பணியாற்றியது சுவாரஸ்யமாக இருந்தது?
"லார்ட் ஆப் த ரிங்ஸ்' படத்தில் வேலை அதிகமாகவும் இருந்தது. சுவாரஸ்யமாகவும் இருந்தது."எலிசபத்' படத்திற்காக இது வரை செய்யாத புதிய பாணியில் இசையமைத்தேன்.


இந்திய கதை - வெளிநாட்டு தயாரிப்பு: இந்திய படங்கள் எதுவுமே இதுவரை ஆஸ்கர் வென்றது இல்லை. இந்திய மொழி படமாக இருந்தாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப்படமாக இருந்தாலும் ஆஸ்கர் எட்டாக்கனியாக இருந்தது. முதல் ஆஸ்கரை வென்ற காந்தி, "ஸ்லம்டாக் மில்லினர்' மற்றும் தற்போது குறும்படப்பிரிவில் ஆஸ்கர் வென்றுள்ள "ஸ்மைல் பிங்கி' ஆகிய படங்கள் அனைத்தும் வெளிநாட்டு தயாரிப்புகளே.

காந்தி: முதன்முதலில் இந்தியர் ஆஸ்கர் விருதை கைப்பற்ற காரணமாக அமைந்தது காந்தி திரைப்படம். தேசத்தந்தை காந்தியடிகளின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்தப்படம் 1982ம் ஆண்டு வெளிவந்தது. இதன் பெரும்பாலான காட்சிகள் இந்தியாவிலேயே படம் பிடிக்கப்பட்டன. ரிச்சர்ட் அட்டன்பரோ இந்தப்படத்தை இயக்கினார். பென் கிங்ஸ்லி காந்தியாக நடித்தார். சிறந்த படத்துக்கான விருது உட்பட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளை இந்தப்படம் கைப்பற்றியது. பானு அத்தையாவுக்கு சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. காந்திஜியின் இறுதிச்சடங்கு காட்சிக்காக ஏறத்தாழ 3 லட்சம் துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதன் மூலமாக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இந்தப்படம் இடம் பிடித்தது.

"ஸ்மைல் பிங்கி': இந்தியாவில் எடுக்கப்பட்ட "ஸ்மைல் பிங்கி' என்ற குறும்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. 39 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம் ஆறு வயது சிறுமியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. "சிறிய குறும்படம்' என்ற பிரிவில் இந்த படத்துக்கு ஆஸ்கர் கிடைத்துள்ளது. இதன் கதை உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூரில் நடந்தது. இந்தி மற்றும் போஜ்புரி மொழியில் இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிளவு அண்ணத்தால் பாதிக்கப்பட்டதால் ஒரு சிறுமிசமூகத்தில் புறக்கணிக்கப்படுகிறாள். ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலமாக அவளது குறைபாடு நீங்குகிறது. இது எவ்வாறு அவளது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றுகிறது என்பதை இந்த திரைப்படம்விவரிக்கிறது.இந்தப்படத்துக்காக அண்ணபிளவு குறைபாடு கொண்ட ஒரு சிறுமியை கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளனர். படத்தில் வருவது போல உண்மையிலேயே அவளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் மேகன் மைலன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்
ஸ்லம்டாக் மில்லினர்: மும்பை நகரில் படம்பிடிக்கப்பட்ட "ஸ்லம்டாக் மில்லினர்' திரைப்படம் மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றயுள்ளது. இந்த ஆண்டில் அதிக ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றிய படம் இது தான்.பாலிவுட் சூப்பர்ஸ்டார்அமிதாப் பச்சன் நடத்திய "கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குரோபதி நிகழ்ச்சியை நடத்துபவராக இந்தி நடிகர் அனில் கபூர் நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜமால் மாலிக் என்ற இளைஞன் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறி ரூ. 1 கோடி வென்றுவிடுகிறான். அடுத்த நாள் கடைசி கேள்விக்கு பதில் கூறினால் ரூ.2 கோடி கிடைக்கும் என்ற நிலையில் அவன் மீது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு சந்தேகம் எழுகிறது. போலீசார் அவனை கூட்டிச் சென்று கடுமையான முறையில் விசாரிக்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் ஜமால் தனது கதையை கூறும் போது மும்பையின் சேரிப்பகுதியான தாராவியில் பிறந்த அவன் குரோர்பதி கேள்விகளுக்கு எவ்வாறு சரியாகவிடையளித்தான் என்ற மர்மம் விடுபடுகிறது. ரூ. 75 கோடியில் இந்தப்படம் தயாரிக்கப்பட்டது. பிற ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடும் போது இது மிகச்சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் திரையிட்ட பின்னர், நேரடியாக "டிவிடி'யில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் முதலில் அமெரிக்காவில் திரையிடப்பட்டவுடன் விமர்சகர்களின் பாராட்டுக்கள் குவிந்தன. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் இந்த படம் வெளியிடப்பட்டது. "பாப்டா', "கோல்டன் குளோப்', "ஸ்ரீட் ஆக்டர்ஸ் கில்ட்' உள்ளிட்ட முக்கிய திரைப்பட விருதுகளை "ஸ்லம்டாக் மில்லினர்' கைப்பற்றியது.விரைவில் தமிழிலும் மொழிமாற்றம் பெற்று வெளியாகவிருக்கிறது.

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...