Latest News

அறியாமையின் அவஸ்தை

Wednesday, January 09, 2002 , Posted by பிறவி at 8:17 AM

அறியாமையின் அவஸ்தை
மிகயீல் சோசெங்கோ
corner Pictures, Images and Photos
பெலகியா என்ற எழுதப்படிக்கத் தெரியாத பெண் வாழ்ந்து வந்தாள். அவளுடைய கணவரோ ஒரு சோவியத் அதிகாரி. முன்பு அவர் எளிய விவசாயியாக இருந்திருந்தாலும் அவருடைய ஐந்தாண்டு கால நகரத்து வாழ்க்கை அவருக்குக் கல்விக்கு அப்பால் பலவற்றைக் கற்றுத் தந்தது.

ஆனால், தன் மனைவி கல்வியறிவு அற்றவள் என்பது அவருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. “ஏய் பெலகியா, நீ உன் பெயரையாவது எழுதக்கற்றுக் கொள்ளடி” என்று அடிக்கடி சொல்வார் இவான் நிகொலோவிச். பெலகியா அதை காற்றோடு விட்டுவிடுவாள்.

“நான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறேன். சிறு பிள்ளைகள் கற்றுக் கொள்வதில் அர்த்தம் உள்ளது, நான் கற்று என்ன பயன்? இப்படியே என் காலத்தைக் கழித்து விடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள்” என்று கூறினாள்.

பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருந்த இவான் நிகொலோவிச் தன் மனைவியின் பேச்சுக்கு தலை அசைத்துவிட்டு சென்று விடுவார். ஒரு நாள் இவான் தன் கைகளில் ஒரு புத்தகத்துடன் வீடு திரும்பினார். “இந்தா பெலகியா, இதுபுதிதாக எழுதப் பட்ட கல்வி அறிவு பெறுவதற்குரிய தொடக்கப் புத்தகம். இதில் பல்வேறு எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்” என்று கூறினார். பெலகியா சிரித்தபடி அந்தப் புத்தகத்தை எடுத்து அலமாரியில் வைத்துப் பூட்டினாள். அது அங்கு உறங்கட்டும் என்று சொல்லாமல் சொன்னாள். “நமது பேரக் குழந்தைகளுக்குப் பயன்படட்டும்” என்று நகைத்தாள். இப்படியே சில நாட்கள் கழிந்தன.

பின்பு ஒருநாள் பெலகியா தன் கணவரின் கிழிந்த சட்டைப் பையைத் தைப்பதற்காக அமர்ந்தாள். ஊசியை எடுத்தபடியே சட்டையைப் புரட்டினாள். மெல்லிய சலசலப்பொலி கேட்டது. என்னவென்று பார்க்கையில் சட்டைப்பையில் ஒரு கடிதம் தென்பட்டது. கடிதம் சுருக்கமானதாக இருந்தது. அதன் நறுமணம் அவள் மனதில் சந்தேகத்தைத் தூண்டியது. இவான் தன்னை ஏமாற்றுவதாக அவள் கருதினாள். அது காதல் கடிதமாக இருக்குமோ என்று அவள் நெஞ்சம் குருகுருத்தது. தான் படிக்காததால் படித்த பெண்ணை இவான் நேசிக்கிறாரோ என்றெல்லாம் அவள் குரங்கு மனம் தாவியது.

ஆனால், பெலகியாவால் ஒரு வார்த்தையைக் கூட வாசிக்க முடியவில்லை. அவளுடைய அறியாமையை அன்று அவள் உணர்ந்தாள். வேறு ஒருவரிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்து வாசிக்கச் சொல்வதற்கு அவள் மனம் கூசியது. அந்தக் கடிதத்தின் பொருளைத் தெரிந்து கொள்ள அவள் உள்ளம் துடித்தது. ஆனால், அவள் அறிவின்மை அதைத் தடுத்தது. அந்தக் கடிதத்தை அலமாரியில் ஒளித்து வைத்தாள். வாசலில் அமர்ந்து துணியைத் தைத்தபடியே கணவனை எதிர்பார்த்திருந்தாள். சிறிது நேரத்தில் இவானும் வீடு திரும்பினான். பெலகியா எதுவும் நடக்காதது போல் தன்னை இயல்பாகக் காட்டிக் கொண்டாள்.

பின்பு மெதுவாக தன் கணவனிடம் தான் எழுத்தறிவற்றவளாக இருப்பதற்கு மிகவும் வருந்துவதாகக் கூறி அழுதாள். அதைக் கேட்ட இவானின் உள்ளம் மகிழ்ந்தது. இந்த நாளை எண்ணி தான் காத்திருந்ததாகக் கூறினான். இரண்டு மாதங்கள் பெலகியா தன் கணவனின் உதவியோடு வாசிக்கக் கற்றுக் கொண்டாள். ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவள் அந்தக் கடிதத்தை எடுத்து எடுத்துக் கூட்டி வாசிக்க முயற்சி செய்வாள். ஆனால், அது அவ்வளவு சுலபமாகத் தோன்றவில்லை. மூன்றாம் மாதத்தின் முடிவில் பெலகியா நன்றாக வாசிக்கக் கற்றுக் கொண்டாள்.

ஒருநாள் காலையில் இவான் வேலைக்குச் சென்றபின்பு, பெலகியா கடிதத்தை அலமாரியில் இருந்து எடுத்தாள்.

மெதுவாக “அன்புள்ள இவான் நிகொலோவிச்” என்று வாசிக்கத் துவங்கினாள்.

“நான் உங்களிடம் சொன்னவாறே கல்வியறிவு பெறுவதற்குரிய தொடக்கப் புத்தகத்தை அனுப்பியுள்ளேன். உங்கள் மனைவி அதைக் கற்றுத் தேர்வதற்கு சுமார் 3 மாதங்கள் பிடிக்கும். இவான், உங்கள் மனைவியின் அறியாமையைப் போக்குவதற்கு நீங்கள் உதவுவீர்கள் என்று நம்புகிறேன். கல்வியறிவின்மை ஒரு ஒழுக்கக்கேடு என்பதை பெலகியாவுக்கு எடுத்துக் கூறுங்கள். உலகத்தின் அறியாமையை விலக்கப் பாடுபடும் நாம் சில நேரங்களில் அருகில் இருப்பவர்களுக்கு ஒளியூட்டத் தவறுகிறோம்.

இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இவான் நான் சொல்வது சரிதானே?

தோழமையுள்ள,

மரியா புலோகினா

பெலகியா கடிதத்தை இருமுறை வாசித்தாள். தான் ரகசியமாக அவமதிக்கப்பட்டிருப்பதை எண்ணி கண்ணீர் வடித்தாள்.

Currently have 0 comments: