Monday, February 03, 2003

விடுதலைப் போராட்டங்களில் தமிழரின் பங்களிப்பு

War of the worlds Pictures, Images and Photos

மலாய்த் தீவுக்கூட்டத்தைப் பொறுத்தமட்டில் ஒட்டு மொத்தமாக அரசாள்வோர் மற்றும் அதிகாரம் கொண்ட அனைவரும் பல்வேறு காலகட்டங்களில் வந்து குடியேறியவர்கள்தாம் என்பதே வரலாறு. துவக்க காலத்தில் குடியேறியவர்கள் பழங்குடிகளாகவும், பின்னர் குடிவந்தவர்கள் மண்ணின் மைந்தர்கள் எனும் பொருளில் பூமிபுத்திரர்களாகவும், மிகப்பிற்காலத்தில் கொண்டுவரப்பட்டவர்கள் நிர்வாகம், வாணிபம் எனப்பல்துறைகளிலும் காலூன்றிய விந்தை இங்கே நிகழ்ந்தது.

தங்களுக்கு மிகவும் வேண்டியிருந்த கச்சாப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், ஈயம் போன்ற நிலவளங்களைத் தோண்டியெடுப்பதற்கும் தேவையாயிருந்த உடலுழைப்பாளர்கள் கிழக்கு மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளிலிருந்து ஏகாதிபத்தியர்களால் கொண்டு வரப்பட்டனர். இவ்வாறு கொணரப்பட்டவர்களுக்கும், முன்னரே வந்து குடியேறியவர் களுக்கும் தொடர்ச்சியான வரலாறு உண்டு. அடிமைகளாய், பஞ்சைப் பராரிகளாய் உழன்றது தொடங்கி, வெகுண்டெழுந்து கருவி ஏந்தி அரசியல் அதிகாரம் பெற்றது வரையிலான வரலாறுகள் பதிப்பிக்கப்பட்டுப் பரவலாகக் கிடைக்கின்றன.

இந்நிலையில், பல்வேறு கால நிலைகளில் மூன்று கட்டங்களாக வந்தும் வருவித்தும் சேர்ந்த: அதாவது படையெடுத்தும், திரவியம் தேடியும், சஞ்சிக் கூலிகளாயும் தமிழ் மற்றும் ஈழ நாடுகளிலிருந்து வந்து சேர்ந்த தமிழினத்தின் முறைப்படுத்தப்பட்ட வரலாறு ஆவணமயமாக்கப்பட்டுள்ளதா? தொகுக்கப்பட்டுப் பதிப்பிக் கப்பட்டுள்ளதா? என்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே எனத்தான் அறுதியிட வேண்டும். பிறரோடு ஒப்பிடுகையில் இது வெகு அற்பம். உலகின் அதிகத் தீவுகளைக் கொண்ட இரண்டாவது நாடான பிலிப்பைன்சின் விடுதலைப் போரில், சீன வமிசாவளியினரின் பங்கெடுப்புகள் குறித்த நூல்கள் பரவலாகக் கிடைக்கின்றன என்பதே பல தமிழர்க்கு வியப்பளிக்கும் தேவலோக கதைகள் போன்று இருக்கிறது. உணர்வூட்ட வேண்டி செலவழித்துக் கற்று, இவர்களுக்குக் கற்பித்த மணித்தியாலங்கள், ஈட்டிய வேதனைகள், வாங்கிக் கட்டிக்கொண்ட பேச்சுகள், சம்பாதித்த இவர்களின் வெறுப்புகள் யாவும் எதிர்கால முன்னெடுப்புகளுக்குரிய செயல்தந்திரங்களைப் புலப்படுத்துகின்றன. இமயத்தின் சாரலிலும், மெக்கோங் ஆற்றுப் படுகையிலும், ஏழாம் நூற்றாண்டின் பல்லவர் கால கல்வெட்டு மற்றும் புத்த அறிவுப்பள்ளியின் மெய்மங்களைக் கொண்டு திகழ்ந்திருந்த மக்களினங்களையும் அவர்களின் வாழ்வியல் நெறிகளையும் வரலாறாய்க் கொண்டிலங்கும் இந்தோனிசிய தீவுக்கூட்டங்களிலும் தென்கிழக்காசியாவின் வேறு பல குக்கிராமங்களிலும் சுற்றியலைந்து கற்பித்தும் கற்றறிந்தும் வந்தவைகளை இவர்களிடத்தில் விவரித்து என்ன பயன் கண்டேன்? அப்போதெல்லாம் எம்மைத் தாங்கியவை: “தம்பி, உள்ளம் விழுந்ததா? தூக்கி நிறுத்தடா. உடலம் சோர்ந்ததா? மேலும் வருந்தடா. கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே உண்மை உழைப்படா மகிழ்ச்சி முடிவிலே” என்பன போன்ற வரிகள்தாம். இவற்றை இங்கு குறிப்பது “நன்றி எனும் பண்பாட்டின் நல்ல வித்து நந்தமிழன் உள்ளத்தில் முளைக்கவில்லை” என்ற கவிஞனின் வருத்தத்தைப் பொய்யாக்கிவிட வேண்டும் என்னும் வேட்கையில்தான்.

இப்பகுதிகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் தமிழரின் பங்களிப்பு குறித்து இன்னபிற இனக்குழுக்கள் தரும் குறிப்புகளின் வழியேதான் ஓரளவு அறியக்கிடைக்கின்றது. அடித்துப் பேசுமளவிற்குப் போதிய வலுவான சான்றுகள் இல்லையென்பதால்தான் "கருப்புப் பேய்” என்னும் பொருளில் “கில்லிங் குவாய்”யாக, "கருப்பு குட்டி” என்னும் பொருளில் “கில்லிங் கியான்” என்றும்- ("கில்லிங்” என்பதில் ஒட்டுமொத்த இழிவுகளையும் வெளிப்படுத்தி) அழைக்கிறார்கள். ரூபாய் நோட்டில் தமிழ் எழுத்து இடம் மாற்றப்பட்டதற்கு மொரிசியசு நாட்டுத் தமிழர்கள் கொண்ட எழுச்சியில் கிஞ்சிற்றும் நம்மை இழிவுபடுத்துவோர் மீது எதிர்ப்பைப் பதிவு செய்ய ஒன்றிணை வதில் நம்முள் ஏற்படவில்லையே முதலியாராக, முரசொலியாராக, பிள்ளையாக, அம்பலக்காரராக, நாடாராக, அகம்படியராக மற்றும் வெள்ளாளராக அல்லவா வலம் வருகின்றோம்.

செங்கொடியின் கீழ் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு, உறிஞ்சுவோர்க்கு எதிராகக் களம் பல கண்டு, சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் வடஅமெரிக்கப் பிரதிநிதியாக சிங்கப்பூரில் வினையாற்றியவர், தமது அரசாங்கத்திற்கு “தென்கிழக்காசியாவில் கம்யூனிச இயக்க வளர்ச்சி” குறித்து 5-5-1930இல் சமர்ப்பித்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளாராம்: “இந்தியர்கள் பெருமளவில், தங்களது தாயக அரசியல் விவகாரங்களில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர். தவிரவும் மலாயாவில் இவர்களின் வாழ்க்கைத் தரம் நன்கு வளமுடையதாக உள்ளதாலும் கம்யூனிசப் பண்பு கொண்ட எண்ணங்கள் இவர்களிடத்தில் பரவலாக வேர்பிடிக்க வாய்ப்புகள் இல்லை.” இச்செய்தியை ‘பிகேஐ யிலிருந்து அகிலம் வரை’ என்னும் புத்தகம் தெரிவிக்கிறது. “வெள்ளக்கார மகாராசாங்க நம்ம தாய்தவுப்பன, அவங்களோட தாய்தவுப்பன, யாழ்ப்பானத்தானையும், மலையாளத்தானையும் கிராணிங் களாக்கி அடிமைகள் போல நடத்துனதுக்கு அவனோட அளவுகோல் எதுவா இருந்திருக்குன்னு இப்ப தெரியுதா? "பனங்கொட்ட’ மேல இருந்த வெறுப்பெல்லாம் புலி தலையெடுத்த பிறகுதான கொறஞ்சிறுக்கு. விடுதலைப் போருக்கு (ஈழம்) ஆதரவா பரப்புரை செய்து தொகை தண்டியபோது, அந்தக் காலத்துல சிலோனிஸ் கிராணிமாருங்க செய்த அட்டூழியங்களைக் கதை கதையா சொன்னீங்களே!”

கிள்ளான் மாவட்ட ஆயர்கூனிங் தோட்டத்தில் 1941இல் நடந்தவைகளை “கண்ணீர் சொல்லும் கதை” என்ற தலைப்பில் மலேசிய தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் தோழர் இரா.தியாகராசன் சிறுகதையாக்கி 1991இல் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். அதில் காணப்படும் செய்தி இது. பல நூறு தொழிலாளர் போராட்டங்களுக்கு சொந்தக்காரர்- எழுபதை நெருங்கும் தியாகராசன். பெயருக்கேற்றவாறே தொலைத்ததும் தொலைந்ததுமான இவரது தொட்டுனர் சுகங்கள் நிரம்பவே. சில பத்தாண்டுகளுக்கு முன்னர் அரசியல் கட்சியாக விளங்கியது தான் இவர் தலைமை வசிக்கும் இயக்கம். தோழர்க்கு உறுதுணையாக, இயக்கப் பொதுச்செயலாளராக வினையாற்றுபவர் நண்பர் கோபால். இன்றைக்கு, வழக்குரைஞர் தோழர் அசான் கரீம் அவர்களின் தலைமையில் அணிவகுத்த தோழர்களால் கலைக்கப்படுவதினின்று தப்பிய மலேசிய மக்கள் கட்சியோடு ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றனர் தொழிலாளர் இயக்கத்தினர்.

தமிழர்கள், தோழர் நேதாசி சுபாசு சந்திரபோஸ் தலைமை தந்த ஐ.என்.ஏ. எனப்படும் இந்திய தேசிய இராணுவத்தில் ஈடுபாட்டோடு உழைத்த அளவிற்கு, வாழும் நாட்டு விடுதலைக்குப் பங்களிக்கவில்லை என்ற உண்மையை ஏற்கவே வேண்டும். விலங்குகளைப்போல் “லயங்கள்” “குவாட்டர்ஸ்” என்னும் கொட்டடிகளில் நம் முன்னோர்கள் வாழ்ந்ததை “வளமையான வாழ்வு” என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள் என்றால், தமிழ்நாட்டுத் துறைமுகங்களிலிருந்து கப்பலேறியவர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமானதாக இருந்திருக்கும்! படித்தவற்றை கோர்வையாக்குங்கள், சைனா டவுனின் லயன் சித்தி விநாயகர் கோயிலின் முன்பு இருக்கும் திரையரங்கில் - எம்மைச் சில ஆண்டுகளுக்கு சகித்துக் கொண்டு காதலனாகவும் ஏற்றுக்கொண்டு கரம் பற்றித் திரிய அனுமதித்த சரிபா என்ற நிசாவோடு- பார்த்த “டே பொந்திச்சேரி” என்ற பிரெஞ்சு மொழிப்படத்தில் கண்ட காட்சிகள்தாம் நினைவிலாடும்.

சிங்கப்பூர் சுவரோவியங்களில் வரையப்பட்டிருக்கும் கோவணான்டிகளை நினைவு கூர்வாள் அவள். அன்றைய நாள் பிரிவு ஏற்படும் வரை அந்த மலாய்ப் பெண் தமிழுணர்வில் திளைப்பாள். தோழர்களாக, காதலர்களாக சிறகு விரித்தவர்கள் பிரிய நேரிட்ட நெடுங்கதையைச் சுருங்கக் கூறுவது தேவையாகிறது. தமக்கையோடு வாழ்ந்தபோதும், மார்ச்சிலிங் என்ற பகுதியில் வாழ்ந்த பெற்றோர்களை சந்திக்கும் முகத்தான் ஒவ்வொரு கிழமையிலும் என்னையும் அவள் உடன் அழைத்துச் செல்வாள். நானும் அவர்களது குடும்ப அங்கத்தினனாகவே ஆகியிருந்தேன். எமது பழுப்பு நிறம் அவர்களோடு ஒன்றிணைவதில் ஒருபோதும் தடையாயிருந்ததில்லை. திரு இபுராகிம் என்ற பெயர் கொண்ட நிசாவின் தந்தை என் மீது கொண்டிருந்த மதிப்பைக் கண்டு ஒவ்வொரு பொழுதும் சிலிர்த்துப்போவேன். இத்தகைய உள்ளன்பு கொண்ட உறவுகளுடனான தொடர்பில் முரண்பாடுகள் தோன்றுவதற்கு எது காரணமாய் இருந்திருக்கும் அல்லது எவர் காரணமாய் இருந்திருப்பர் என்று அறிந்து கொள்ள விருப்பம்தானே!

உலகப் புகழ்பெற்ற அகதிதான், அவரின் படைப்புகள் ஊட்டிய போர்க்குணம்தான் காரணம். மார்க்சா அல்லது முகமதுவா? என்ற தேர்வில் பொருள் முதல்வாத இயங்கியலாளனாகவே பயணத்தைத் தொடர முடிவு கொண்டேன். நிசா முதலும் அல்ல முடிவும் அல்ல! ஆனால் நுகர்வுப் பண்பாட்டு ஊழியில் அன்பைச் சொரிபவர்களை அடையாளம் காண்பது அத்துணை எளிய செயலல்ல என்பதை அறிந்தே இருக்கிறேன். ஒற்றை மரமாகவே உயிர்க்கவும், இன்றைக்கும் தனியனாகவே நீள்பயணத்தைத் தொடரவும் தகவமைத்த மார்க்கியத்திற்கு பல்லாயிரத்தவரைப்போல் நானும் கடப்பாடுடையவனாவேன்.

வரலாறு என்பது மக்கள், அதாவது முன்னோர் வாழ்ந்த கதைதானே. அவற்றிலிருந்து நாம் படித்தறிந்தவை யாவை? இன்றைக்கும் ஆரியவர்க்கத்தின் தாக்கங்கள்தாமே நம்மை அலைக்கழிக்கின்றன! அவற்றின் பிரதிபலிப்புகள்தாமே நம்மை ஆளுமை செய்கின்றன! எங்கடை மக்களை விடச் சிறிய தொகையிலானவர்கள் இங்கு வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொன்றிலும். “பஞ்சாபியர்” அல்லது சீக்கியர்” என்றுதான் அவ்வின மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள். தமிழர்களின் அடையாள அட்டைகளை வாங்கிப் பாருங்கள் வாய்ப்பிருக்குமாயின். இனக்குழு அடையாளத்தில் “இந்தியர்” என்று எழுதப்பட்டிருக்கும். தமிழர் என்று எழுதியிருப்போர், எழுதுவோர் உண்டு என்றாலும் விழுக்காட்டு அளவில் எவ்வளவு தேறுவர்? துணைக் கண்டத்திலிருந்து வந்த ஒவ்வொரு இனக்குழுவினரும் தத்தமது இனநலனை முதன்மைப்படுத்தும்போது பழம்பெருமை பேசும் தமிழர்கள் மட்டும் ஏன் இந்தியர்களாகவே ஒருமைப்பாட்டைப் பேசி, மொழி, பண்பாட்டுக் கூறுகள், நடைஉடை, பழக்க வழக்கங்கள் என்று எல்லாத் தளத்திலும் தொய்வினை எதிர்நோக்கி வருகின்றனர்? எமக்கென்று தனித்த அடையாளத்தைக்கூட தக்கவைத்துக் கொள்ள முடியவில்லையே? ஒன்றுபட இயலவில்லையே?

ஜப்பான்காரன், உதை கொடுத்து ஊட்டி விட்டுப்போன விடுதலையுணர்வை மறந்து போனோமே! சீனர்களுள் கொழுந்துவிட்டெரிந்த அவ்விடுதலையுணர்வு தமிழரிடத்தில் எவ்வகை மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதற்காக, முகத்தில் தோன்றியதாக கதை விட்டவர்களின் பிறங்கடைகளான இன்றைய பார்ப்பனர்கள் ஆனந்தக் கூத்திடலாம்தான்.

ஏனைய இனக்குழுவினர்க்கு ஈடாய் இதழ் நடத்தியவர்கள் எழுதிக் குவித்திருக்கின்றார்கள்; மறுக்கவில்லை. ஆனால் படைத்தளித்தவைகளிலிருந்து தமிழரின் வரலாற்றுத் தரவுகள் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்பதே விடையாகின்றது. அவ்வாறெனில் படைப்பாளிகள் எழுதியது என்ன, படைத்தவை யாவை எனத் துருவினால் கடவுளர் கதைகளும், ஆளுங்கட்சி அரசியலர் போற்றிப் பாமாலைகளும், கவிதைகளும், கட்டுரைகளும்தான் என்பது வெட்கப்பட வைக்கும் நடைமுறை உண்மை.

பாராண்டவனின் பரம்பரையினர் அஞ்சடியில்...

சீனப் பெருநிலத்தின் தென்பகுதியிலும், ஓங்கோங் தீவிலும் செயற்பட்ட தரகர்கள் அங்கிருந்து ஆட்களை பினாங்கிற்கும், சிங்கப்பூருக்கும் கப்பலில் ஏற்றிக்கொண்டு வந்து அவர்களுக்கு வேலைகளை ஒழுங்கு செய்வார்களாம். பொதுவாகவே இத்தரகர்கள் மூர்க்க குணம் கொண்டவர்களாம். முதலாளிகளிடமிருந்து சந்தை நிலவரத்திற்கேற்ற விலையை, அதாவது ஒவ்வொரு தலைக்கு இவ்வளவு தொகை என்று பெற்றுக் கொண்டு அத்தொழிலாளர்களை முதலாளிமார்களிடம் ஒப்படைத்து விடுவார்களாம். தெற்காசியாவின் தென்னகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட உழைக்கும் திராவிடர்களை, சஞ்சிக் கப்பலில் வந்த கூலிகள் என்பதனைச் சொல்ல சுருக்கமாய் “சஞ்சிக் கூலிகள்” என்பதைப் போல, சீனத்திலிருந்து ஈயச்சுரங்கங்களுக்கும் இன்னபிற உடலுழைப்புத் தொழில்களுக்கும் கொண்டு வரப்பட்டவர்களை, “பன்றிக்குட்டி” முறையில் வந்தவர்கள் என்று பெயரிட்டழைத்திருக்கின்றனர். இதனை ஆவணங்கள் சொல்கின்றன. இவ்வாறு கொண்டு வரப்பட்டவர்கள் தங் கவைக்கப்பட்ட வீடுகளின்மேல் ஆதிக்கம் புரிந்தவர்கள் பன்றிக்குட்டிகளை வழிநடத்துபவர்கள் என்ற பொருளில் சூ சை தாவ் என்றழைக்கப்பட்டனர்.

ஆசைமொழிகளை அவிழ்த்துக் கொட்டி தென்சீனத்தின் கிராமப்புறங்களில் சுபிட்ச வாழ்வு பற்றிய பரப்புரைகளின் வழியும், மழித்த முன்மண்டையும் நீண்ட சடையும் கொண்ட கிராமத்தார்களை பெருநகரங்களுக்கு அழைத்து வந்து அவர்களை சூதாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடுத்தி, அக்கிராமத்தார்கள் கைக்காசு அனைத்தையும் இழந்த பின்னர் அவர்களுக்கு கடனுதவி செய்து, பின்னர் அவற்றையும் இழக்கச் செய்து, அதனால் ஏற்பட்ட கடன் தொகையைச் செலுத்துவதற்காக அவர்களை வெளிநாட்டிற்குச் சென்று பொருளீட்டி வருமாறு கட்டாயப்படுத்தியதன் வழியும் ஆட்களைத் திரட்டியிருக்கின்றனர். கொண்டு வரப்பட்டவர்களுக்கு வாக்குறுதிப்படி சம்பளம் தராதது மட்டுமின்றி, அவர்கள் மனிதநேயமற்ற முறையிலும் நடத்தப்பட்டனர் என்கிறது பத்தொன்பதாம் நூற்றாண்டு குறிப்பொன்று.

இன்றைக்கும் மார்வாடிகளின் கொள்ளைக் காடாய்த் திகழும் தமிழ்த் தேசத்திலிருந்து பாரியத் தொகைகளை கடன் வாங்கிச் செலவழித்து முகவர்கள் வழி இங்கு வந்து சேரும் தொழிலாளர்கள் படும் பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. "லிட்டில் இந்தியா” எனப்பெறும் சிராங்கூன் சாலையின் சந்துபொந்துகளிலிருந்து வெளிப்படும் அவலக் குரல்கள் எவரையும் துயரம் கொள்ள வைப்பவை. காலஞ்சென்ற பாவலர் பெரி நில பழனிவேலரின், “அருள் மலர் கலையகக்” கடையானது, பாதிப்புற்றவர்களின் முறையீட்டு மன்றமாகவே விளங்கியதெனலாம். குழாய் நீரே வயிற்றுக்குணவாக, பழைய நாளேடுகளே படுக்கை விரிப்பாக, பிளாட்பாரம் எனப்படும் அஞ்சடிகளே படுக்கையாக இருபத்தோராம் நூற்றாண்டிலும் உலகாண்ட தமிழனின் சோகம் தொடரவே செய்கின்றது.

ஏசு கிறித்து திருச்சபையினரின் உதவிகள் அவ்வப்போது கிடைக்கும் என்பது, அந்த அழகு வதனத்து ஆரணங்கு நிசாவின் வலியுறுத்தலின் பேரில் ஜாலான் பெசாரின் ஒதுக்குப்புறத்தில் அழுக்கு சட்டைகளோடு கன்னங்கள் ஒட்டியுலர்ந்து காணப்பட்ட சில நண்பர்களிடம் உசாவி அறிந்துகொண்டது. வேலை கிடைக்காததால் வயிற்றை நிரப்பிக்கொள்ள முடியாத நிலை, குடியிருக்க இருப்பிடமின்மை என்பது ஒருபுறமிருக்க, சண்டை, ஓவர் ஸ்டே எனப்படும் விசா முடிந்தும் தொடர்ந்து தங்குதல் ஆகிய காரணங்களுக்காக போலீஸ் வேட்டையிலிருந்து தப்பிக்க எந்நேரமும் எச்சரிக்கை நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்களோடு வங்க தேசம், பர்மா போன்ற நாடுகளின் உற்பத்தி சக்திகளும் இருக்க நேர்கிறது.

அடிப்படையில் முன்புசொன்ன கூலிப்பணியாளர்கள் விலங்குகள்போல் நடத்தப்பட்ட பல்வேறு கொடுமையான நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடல்வழிச் செலவின்போது பரவிய நோய்கள், வயிற்றுப்போக்கு மற்றும் பயணித்த கலங்கள் நீரினுள் மூழ்கியபோது காப்பாரின்றி எலிகளைப்போல் பன்னூற்றுவர் கடலில் அமிழ்ந்து செத்த நிகழ்ச்சிகள் யாவும் விடுபடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்பதிவுகள் எளிதாயும் கிடைக்கின்றன. மாந்தத் தன்மையற்ற பற்பல நிகழ்வுகள் நடந்தேறிய போதும் நாளாந்தம் கூடுதலான சீனமக்கள் தரகர்களின் வலையில் சிக்கிக்கொள்ளவே செய்திருக்கின்றனர். இங்கே ஓர் அனுபவத் தைக் குறிப்பிடுவது பொருத்தமாய் இருக்கும். அதாவது, 1996ஆம் ஆண்டு தமிழ் உலகை எனக்குக் காட்டிய பாவலரேறு பெருஞ் சித்திரனார் ஐயாவின் முதலாமாண்டு நினைவு மலர் வெளியீட்டிற்காக தமிழ்நாடு சென்றிருந்த போது புதுவையையும் சுற்றி வரும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டேன்.

என் திட்டத்தைச் செயற்படுத்த புதுச்சேரியில் பேருதவி புரிந்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கப் புதுவை கிளை அமைப்பாளர் தோழர் மதுரகவியும், தென்மொழி அன்பர் அரிமா மகிழ்கோவுமாவர். இவர்களோடு மகிழுந்திலும் மிதிவண்டியிலும் சுற்றிப் பலவிடங்களையும் கண்டு வந்து கொண்டிருந்தபோது எதிர் கொண்டவர்களில் சிலரும், தங்கியிருந்த உண்டுறை விடுதியில் சிலரும் சிங்கப்பூரில் வேலை செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும்படி வேண்டிக் கொண்டனர். (புதுவை சென்ற நோக்கை வெற்றியடையச் செய்தவர்களில் தலையாயவர்கள் புதுவை மதுரகவி, அவரது துணைவியார் திருவாட்டி பவானி, அவர்களது மக்கள், பெயரக் குழந்தைகள் ஆகியோராவர். இவர்களுக்கெல்லாம் என்ன கைமாறு செய்வது?) தமிழ் நாட்டில் இப்படி வேண்டிக் கொண்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு கூடுதலாகும்.

சிங்கையின் மார்கிரெட் டிரைவில் பழக்கமான பெரியவர் மீனாட்சி சுந்தரம். தீவின் அமைதியான பகுதிகளில் மார்கிரெட் குலோசும் ஒன்று. அருகிருந்த குவின்ஸ் டவுன் நூலகமானது மும்மொழிகளிலும் முற்போக்கு இலக்கியங்களைத் தேடிப் படித்த பயிற்றகம். அடுக்கு மாடி கீழ்த்தளத்தில் அலாவுதீனின் பலசரக்குக் கடை. அதை ஒட்டினாற் போன்ற சாலைக்கு அப்பால் அமைந்திருந்த உணவு அங்காடியில் முஸ்தபாவின் உணவுக்கடை. புன்னகை தவழும் முகமும் வெளியே எட்டிப் பார்க்கும் தங்கப் பல்லும் குறைந்த உயரமும் கொண்டவர் முஸ்தபா.

இசுலாமிய ஞானச் செல்வர்களான சூபிக்களின் பாக்களை மட்டுமின்றி ஒளவைக் கிழவியின் செய்யுள்களையும் தடுமாற்றமின்றி ஒப்பிப்பவர். அவர் மவுத்தானபோது அவரின் உறவினர்களுக்கு தஸிய்ய கூறவும் வாய்ப்பில்லாமல் போனது. அப்பெரியவரின் மறைவின்போது, மூன்று நாடுகளின் நதிகள் சங்கமிக்கும், கஞ்சா பயிராகும் தங்க முக்கோணத்திற்குப் பக்கமான மலை வீட்டு புத்தகோட்டத்திற்குச் சென்று விட்டிருந்தேன். பௌத்தம் சிங்கள மக்கள் போற்றும் நெறியென்பதற்காக அவ்வியக்கத்தை வெறுத்தொதுக்கும் தமிழர்களின் பட்டியலில் என் பெயர் இல்லையென்பது பதிவு செய்யத்தக்க ஒன்றேயாகும். (தொண்ணூறுகளைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கின்றேன்.) திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த "வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு” எனது பொறுப்பில் இருந்தது. பழகுவதற்கு இனிமையானவர்.

பிறந்த நாடு சென்றிருந்தபோது நோய் கடுமையாகி கிராமத்திலேயே தங்கிவிட, அவரை சந்திக்கும் முகத்தான் காரைக்குடியிலிருந்து சில கல் தொலைவிலுள்ள கல்லலுக்கு அடுத்தமைந்துள்ள அவரின் சொந்த ஊரான செம்பனூருக்குச் சென்றிருந்தபோதும் இதே நிலைதான். இன்னும் மதுரை, திருச்சி என்று மனு போட்டவர்களின் வேண்டுகோள் நச்சரிப்பாய் மாறியது. பன்முறை நடப்பியல் நிலையினை நன்கு தெளிவுபடுத்தியபோதும் தரகர்கள் வழி சிங்கைக்கு வேலைக்கு வருவது என்ற மோகம் பெருகிவருவதைக் கண்கூடாகக் காணக் கிடைத்தது. ஆனால் சீனத்தின் அன்றைய நிலையினை மேற்சொன்ன தமிழக நிலையோடு ஒப்பிடுவது காழ்ப்பாகும். அன்றைய நிலையினை மையல் என்பதை விட அன்று சீனத்தில் நிலவிய நிலக் கிழாரிய ஆட்சியோடு அரை காலனித்துவ ஆளுமையும் தரகு முதலாளியமும் ஏற்படுத்திய பாதிப்புகளும் அம்மக்கள் பிறந்தகத்தை விட்டு வெளியேற வழிகோலியிருக்கும் என்று கருத இடமுண்டு.

கொத்தடிமைகள் ஆதிக்கவாதிகளான கதை...

19ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட சீனர்கள் கொத்தடிமைகளாக உழைத்திருக்கின்றனர் என்பதனை கலாநிதி சையதுஉசேன்அல்அத்தாசு அவர்களின் மேற்கோள் ஒன்றின் வழி உய்த்துணரலாம்: “தென் இத்தாலியின் மண்ணின் மைந்தர்கள் பத்துப் பேரை வேலை வாங்குவதை விட எளிதானது ஆயிரக்கணக்கான சீனக் கூலிகளை கவனித்துக் கொள்வது” என்று அமைகின்ற வரிகள் அவை. ("தங்கத்திற்கும் ஈயத்திற்கும் வேண்டி மலாயாவில் சுரங்க வேலை” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் அது). விபச்சாரம், சூதாட்டம், சாராயம் மற்றும் போதைப் பயன்பாடு (சன்டு) ஆகிய தீய பழக்கங்களில் நிலைகொண்டிருந்த சீனச் சமூகம் இன்றைக்கு தென்கிழக்காசிய பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக வலுப்பெற்றுள்ளது.

சீனப் பெருநிலத்திலிருந்து கொண்டு வரப்படுகின்றவர்கள் குடிசைகள் போன்ற வீடுகளில் தங்க வைக்கப்படுவார்களாம். கடும் காவலின் கீழ் தோட்டங்களில் வேலை செய்யும் போது தவிர பிற வேளைகளில் அவ்வீடுகளை விட்டு வெளியேறாதவாறு கண்காணிக்கப் படுவார்களாம். தப்பியோடுவதையிட்டு இரவு நேரங்களிலும் கடுங்காவலாம். மோசமான உணவு, நவீன வகை மருந்துகளின்மையால் பெரும்பாலோர் கடும் நோய்களினால் பீடிப்பு என்று வாழ்ந்த சீனரினம் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட நிலத்தின் ஆதிக்க சக்திகளாக உருப்பெற்றது எங்ஙனம்?

“பணத்திற்காக எதையும் செய்பவர்கள் சீனர்கள்” என்று ஒற்றை வரியில் சுருக்கி விடுவது நேர்மையான மதிப்பீடாகத் தோன்றவில்லை. இது குறித்தெல்லாம் தமிழ்ச் சமூகத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் எவரும் எண்ணிப் பார்த்திருப்பதாகத் தோன்றவில்லை. பிறரின் வளர்ச்சியிலிருந்து கற்றறிவதைத் தாங்கள் தலைமை வசிக்கும் சமூகம் முன்னேற்ற பாதையில் செல்வதற்குப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம், தொலைநோக்கு, தன்னலமின்மை ஆகியவை கொண்ட முன்னோடித் தலைமைகள் நமக்கு அமையாமல் போவது நற்பேறின்மைதான் என்று கூறவேண்டியிருக்கிறது. உணவுண்ணும் மற்றும் பல்குத்தும் குச்சிகள் தொடங்கி பெரிய பெரிய வாணிகங்கள் வரை அனைத்திற்கும் சங்கங்கள் வைத்திருந்திருக்கிறார்கள் அவர்கள். எங்கடை மக்களோ பதிவு பெற்றதும் பெறாததுமான சாதிச்சங்கங்களையே பெருக்கிக் கொண்டிருக்கின்றார்கள் இன்றும். அவற்றை மையப்படுத்தியே இயங்குகின்றார்கள் என்பதனை இயக்க நிகழ்வுகளுக்குக் கூடும் கூட்ட எண்ணிக் கையை வைத்தே கண்டறியலாம். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அஃது யாதெனில் பொருளீட்டுவதில் ஒழுக்க முறைமைகளைக்கூட புறந்தள்ளி விடுகிறவர்கள் சீன வமிசாவளியினர் என்றபோதும், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மொழிப்பற்றும், இனவுணர்வும் பெரும்பங்காற்றியுள்ளன என்பதனை ஒதுக்கி விடுவதற்கில்லை. இது குறித்த புரிதல் தமிழர்களில் பலருக்கும் உண்டு என்றபோதும் அவற்றை மறந்துவிட்டுப் பேசுவதே பெரும்பாலோரின் உளப்பாங்கு.

“தகுதியடிப்படையில் வந்தவர்கள் நாங்கள்! உங்கள் முன்னோர்களைப் போல் கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் அல்ல,” என்று வாய்ச்சவடால் அடிக்கும் தமிழ் வாய்மொழியாளர்களின் "டிப்ளமோக்களும்” "டிகிரிகளும்” சீன வமிசாவளியினரின் குண்டி துடைக்கத்தான் பயன்படுகின்றன என இங்கு குறிப்பிடுவது சம்பந்தப்பட்டவர்களை இழிவுபடுத்தவல்ல. பிறந்த மண்ணிற்குப் பயன்தராத இத்தகையோரின் ஏட்டுக் கல்வித்திறன் மாற்றாரின் வளர்ச்சிக்கு எருவாகின்றது என்பதைச் சுட்டவே.

பண்டிகைக் கொண்டாட்டங்களும் பண்பாட்டுச் சீரழிவும்...

“பாட்டன் பரணிருந்தான் பாராண்ட வேந்தனவன்,” என்று நீட்டி முழக்குகின்றோம். ஆனால் வாழும் நிலையை எண்ணிப் பார்த்தோமா! நம்மைப்போல் அயற்புலத்திலிருந்து வந்தவர்கள் தாம் மலாய்க்காரர்களும் என்கின்றன வரலாற்றேடுகள். நாளும் மொழிப் புத்தாக்கம், வடிவான வாழ்வியல் கட்டமைப்பு என நன்கு திட்டமிட்டு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்ட அவர்களின் நிலையினைக் கருத்தில் கொண்டோமா! பண்பாட்டுப் பழமை, இலக்கண இலக்கியச் செழுமை என்று எங்கடை மக்களோடு ஒப்பீட்டளவில் கால்பங்குகூடத் தேராதவர்களின் இன்றைய நிலை வியக்க வைக்கின்றதே! இவற்றுக்கெல்லாம் நம்மிடம் அடிப்படைக் கல்வியோ, வாசிப்புத் தன்மையோ இல்லை. அனைத்துக்கும் ஆதாரமாய் விளங்கும் கல்வியை நமக்கு மறுத்தவர்களின் கதைகளை, பரமபதக் கூத்துகளை, அவர்களின் சூழ்ச்சிகளைத்தானே நாம் கடவுளர்களாக நம்பி, ஏற்று, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி இழிந்து போகின்றோம்.

தங்களது தாய்மொழி எழுத்தை பலகையில் எழுதி, அப்பலகையை வண்ணக் கலவையிட்டு, புனித எழுத்துகளாக வணங்கி, அதற்கு முன் ஊதுவத்திகளையும் மெழுகுவர்த்திகளையும் கொளுத்தி நட்டு வைக்கும் சீனரின் உணர்வழுத்தத்தை எதனோடு ஒப்பிடுவது? ஓம் என்பதைக்கூட ஹிந்தி எழுத்தில் எழுதி கொண்டிருக்கிறோம் நாம். உஞ்சலிருத்திக் கூட்டம் வகுத்தளித்த படிக்கட்டு சாதியத்தால் நமக்குள்ளேயே குத்து வெட்டு சச்சரவிட்டுக் கொண்டு பலம் குன்றிப்போகின்றோம். குழந்தைக்குப் பெயரிடுதல், கல்யாணம், இழவு என்று எதில் இல்லை சாதியும் மூடச்சடங்கு சம்பிரதாயங்களும்! “சாணிப்புழுக்கள் நெளியும் சாதித் திரள்கள் நாம்” என்றதில் தவறென்ன? “என்மொழியை இழந்து, சாமியை இழந்து, நான் ஹிந்துவாய் இருப்பது பாலைச் சொரிந்து உன் காலைக் கழுவி நக்கவா?” என்பன போன்ற அறிவார்ந்த கருத்துகள் நம் புத்திக்கு எட்டவில்லையே? நம் சுரணையைத் தொடவில்லையே? பாறாங்கல்லைப் போலல்லவா கெட்டியாகிக் கிடக்கின்றோம்! “வெட்கங்களைத் தின்று விம்மிதமுறும் சுரணையற்ற கூட்டம்” என்ற கவிதாசரணின் வரிகளுக்கு இலக்கணமாய் அல்லவா திகழ்கின்றோம்!

“கோகுலாஷ்டமி, மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, வினாயகர் சதுர்த்தி, விஜயதசமி, நவராத்திரி, கந்தர்சஷ்டி கவசம், பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆனித்திருமஞ்சனம், ஆவணிஅவிட்டம், புரட்டாசி சனி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி பஜனை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம்” என்று எத்தனையெத்தனை விழாக்கள்- பண்டிகைகள் தமிழர் வாழ்வில்! ஆனால் என்ன காரணத்திற்காக இவற்றைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதற்கு எவை உள்ளன பொங்கலைத் தவிர? பொங்கலும்கூட நம்மின் தெளிவின்மையால் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக ஆரியச் சார்புப் பண்டிகையாக மாறிக்கொண்டு வருவதை எத்தனை பேர் அறிந்துள்ளோம்? தடுக்கும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம்? எதிரிகள் எங்களை அழிக்க வேண்டாம். எங்கள் வினைப்பாடுகளே அவற்றை நிறைவேற்றிவைக்கும் என்று கட்டியங்கூறும் முகத்தான் உள்ளது தமிழரிடத்தில் தலைதூக்கி வரும் பண்பாட்டுச் சீரழிவுகள்.

எங்களுக்கு உண்மை வேண்டாம் அமைதியே போதும்...

அரைஞாண் கயிறு அரணாக் கொடியாகி இடுப்பில் கட்டியது அந்தக் காலம். கழுத்து, கை, கால் என்று முடிச்சுப் போட்டு கட்டிக்கொண்டு அவற்றில் நம்பிக்கை குவித்து கூண்டில் அடைபட்ட கிளியிடமும் சாலையோரத்து மரங்களிடத்திலும் காவியுடை ஏமாற்றுப் பேர்வழிகளிடமும் நம்பிக்கைகொண்டு தன்னம்பிக்கை இழந்து வருவது இந்தக் காலம். தீபகற்ப மலேசிய கோயில்களுக்குப் பக்திப் பயணங்கள் ஏற்பாடு செய்து தரும் முகவாண்மைகள் நாளும் பெருகி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் எது காரணம்? “ஹிந்து மதம் என்ற தொகுப்பில் இருந்து வெளியேறிவிட்டதாகக் கூறிக்கொள்ளும் மக்களும் உண்மையில் அதிலிருந்து வெளியேறாமலே இருக்கிறார்கள்,” என்ற தேவிபிரசாத் சட்டேபாத்தியாவின் கருதுகோள் முற்றும் பொருந்தி உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் திகழ்கிறது.

எந்த ஆரிய மதத்தை ‘நாணயமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை குறித்து எப்போதும் கவலைப்பட்டதே கிடையாது’ என்று அண்ணல் அம்பேத்கர் அடையாளம் காட்டினாரோ, அந்தப் பார்ப்பனிய மதத்தோடு, சம்பிரதாயச் சடங்கு, ஆட்டபாட்டங்கள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களோடு முடங்கி விடவே இவர்கள் முன்வருகிறார்கள். இதனாற்றான் தம்மொழியை இழித்துப் பழித்தவர்களின் வழித்தோன்றல் களையே குருக்களாகவும், வழிகாட்டிகளாகவும் ஏற்றிப் போற்றிக்கொண்டுள்ளனர். படித்தவர் படியாதவர் என்று இது மட்டில் அனைவரும் ஒருபடித்தானவர்கள்தாம்.

இவ்வாறானவர்கள் தெளிவு பெறுவதற்காகவும் இவர்களைக் கரையேற்றி விடுவதற்காகவும் பாடாற்றிக் கொண்டிருப்பவர்களை இம்மக்கள் மறந்தும் திரும்பிப் பார்ப்பதில்லை என்பதோடு, தங்களது கடன் பணி செய்து கிடப்பதே என்று செயலாற்றுபவர்களின் எண்ணிக்கை தேய்ந்துவருவதையும் அவதானிக்க வேண்டியுள்ளது. “அடிமையாய்ப் பிறந்ததற்காக யாரையும் குறை சொல்ல முடியாதுதான். ஆனால் சுதந்திரத்துக்காகப் பாடுபடுவதை விட்டொழிப்பதோடுகூட தனது அடிமைத்தனத்துக்கு நியாயம் கூறி அதைப் புகழ்ந்து கொள்கிறவன் வெட்கங்கெட்ட இழிபிறவியே ஆவான். நியாயமாகவே இவன் மீது ஆத்திரமும் அருவருப்பும் வெறுப்புமே உண்டாகிறது,” என்று தோழர் இலெனின் சொன்ன நிலைபோன்றதுதான் மேற்சொன்னவர்களின் நிலைப்பாடுமாகும். நடைமுறையில் மலேசியா, இந்தோனிசியா மற்றும் ஏனைய நாடுகளின் சீன வமிசாவளி இளைய தலைமுறையினர்க்குப் பயிற்சியளித்து அவர்கள் மேற்கு நாடுகளுக்கோ அல்லது வடஅமெரிக்காவுக்கோ செல்லத் தங்களைத் தயார் செய்துகொள்ளும் பயிலகமாகவும், சீனர் குடியேற்ற நாடாகவும் விளங்குகின்றது சிங்கப்பூர்.

தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்களின் நிலை? தந்நலத்தை மட்டுமே முதன்மைப்படுத்துவதால் ஏற்படும் அச்ச உணர்வு இவர்களை ஆட்டிப்படைக்கிறது. எதிர்கால வழித்தோன்றல்களுக்குப் பதிவு செய்து வைக்கப்பட வேண்டிய பலவற்றை மூத்த எழுத்தாளர்கள் என்று பட்டயம் மாட்டிக்கொள்வோர் பலரும் எண்ணிப் பார்ப்பதில்லை. “எங்களுக்கு உண்மை வேண்டாம் அமைதியே போதும்” என்ற கருத்துக் கொண்டவர்களாகத்தான் அடங்கிக் கிடக்கின்றனர். “இலத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்களின் கடந்த காலம் மற்றும் தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்” என்று பெருமிதங் கொண்ட சிலியின் செங்குயில் பாப்லோ நெருதா, "மக்கள்தான் எனக்கு வாழ்க்கை” என்று எழுதி வரலாறானவர். அதற்கொப்பாக இங்கே சுட்டிக்காட்டி பெருமைகொள்ள என்ன இருக்கிறது? எவர் இருக்கின்றார்? 'புலக்கவினால், கலைத்திறனால் தமிழினத்தைக் கட்டழிக்கும் புல்லர் எல்லாம் கலக்கமுற்றுப் போகும்படி எழுத்தினிலே சூடேற்றிக் கனலச் செய்க’ என்ற பெருஞ்சித்திரனாரின் முன்மொழிவை ஏற்று நடைமுறையாக்கினால் என்ன இழப்பு ஏற்பட்டுவிடும்?

மக்கள் வாழ்வதற்கல்ல பிழைப்பதற்கே பாடுபடுகின்றார்கள்...

மனிதம் உயர்ந்தது, எவராலும் அடிமைப்படுத்தப் படாமலும் எதற்கும் அடிமையுறாமலும் வாழ்வது சிறந்தது. இவற்றை உணர்ந்ததினால் தான் வரலாற்றுக் காலந்தொட்டு இன மதம் கடந்து பல்லாயிரக்கணக்கான போராளிகள் அவரவர் வாழ்ந்த காலகட்டங்களில் நிலவிய அடக்கு ஒடுக்குமுறைகளை எதிர்த்துச் செங்கள மாடி மாந்தக் குல வரலாற்றில் பேசப்படும் கருப்பொருளானார்கள். தன்மானத்தின் அடிப்படையிலமைந்த “லிபரேட்” என்ற இலத்தீன் மொழிச் சொல்லுக்கு விடுவித்துக் கொள்ளல் என்னும் பொருளில் "விடுதலை” என்று தமிழில் வழங்கி வருகின்றோம். உடுத்தும் உடையும் வாழுஞ் சூழலும் தூய்மையானதாக அமைந்து விட்டால் அங்கு வாழும் மக்கள் பொருளியல் தந்நிறைவு பெற்று மகிழ்வாக வாழ்வதாகப் பொருளில்லை.

“சிறந்த உணவு, சிறப்பான நிர்வாகம், வடிவான உடை என்று ஆசியாவிலேயே சிறந்த தேசியம் என்றிருப்பதில் என்ன பயனிருக்க முடியும், அப்படி அத்தேசியம் மிகமிகக் குறைந்த உரிமைகளைப் பெற்றிருக்கும்போது” என்ற கூற்று எத்துணைப் பொருள் பொதிந்தவை! சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மேற்குறிப்பிட்ட நிலை இருப்பதால் இங்கு வாழும் மக்களனைவரும் எவ்வகை சிக்கல்களும் இன்றி உயிர்ப்பதாகப் பிற ஆசிய நாட்டினரால், குறிப்பாக இந்திய நாட்டவரால் கருதவும் கருத்துரைக்கவும் படுகின்றது. இவற்றுக்குச் செய்தியூடகங்களின் பங்கும் அளப்பரியது. ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

காலை ஏழரை மணி தொடங்கி மாலை ஐந்து மணி வரையிலான வேலை நேரத்திற்குப் பின்னர் மருந்தகத்திற்குச் செல்ல அனுமதி கோரும் தொழிலாளர்கள் நடத்தப்படும் முறை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல என்பதோடு பெரும்பாலான வேலைகளில் டொக்டர்களைச் சென்று காணவும் அத்தொழிலாளர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. வேலைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக முதலீட்டாளர்களாலும் அவர்களின் ஏவலர்களாலும் திணிக்கப்படும் மிகைநேரப்பணியென்பது எழுதப்படாத சட்டமாய் அமுல்படுத்தப்படுகின்றது. தொழிலாளரின் உடல் நலம் ஒத்துழைக்கும் போதும், அவர்களாகவே முன்வரும்போதும் மட்டுமே மிகை நேரப்பணி என்பது மாறி, அதுவே கட்டாயம் என்ற நிலையாகி விட்டது. ஒரு தொழிலாளி பணி விலகும் போது சேமநிதி (ஈ.பி.எப்.), மருத்துவச் செலவு என்று புதியவர்களுக்கு ஆகும் செலவினங்களைக் கருத்தில் கொண்டு முந்தையவரிடத்திற்கு மாற்றாள் அமர்த்தப் படுவதில்லை. மாறாக, பணியிலிருக்கும் பிறரைக் கட்டாயத்திற்குள்ளாக்கி மிகைநேர வேலை வாங்கிக் கொள்வதே நடப்பில் உள்ள வழமை.

அந்நியத் தொழிலாளர்களை பாரிய எண்ணிக்கையில் கொண்ட துவாஸ் போன்ற தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்ற அன்றாட நிகழ்வுகள் சகித்துக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. பாசிசத்தின் படுகொலைக்குள்ளான போராளி தோழர் ரோசா லக்சம்பர்க், இந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயல்பாடுகளைக் காணக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருந்தால் எப்படி பொங்கியெழுந்திருப்பார்! இன்றைக்கும் அரசாங்கத்தைப் போற்றிக் கொண்டிருப்பவர்களில் சோசலிஸ்டுகளும், சமூக சனநாயகவாதிகளும் நிறையவே இருக்கின்றனர். மக்கள் செயல்கட்சியானது சோசலிசக் கட்சி என்றே சொல்லவும் நம்பவும் படுகின்றது. என்.டி.யு.சி. எனப்படும் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் மக்கள்செயல்கட்சி அரசின் துறையில்லாத அமைச்சராவார். மாற்றார் பிடியிலிருந்து விடுபட்ட நாடுகளில் தொழிற்கழகங்களின் பங்களிப்பு குறித்து ரோசாவின் கருதுகோளும் தொலைநோக்கும் கீர்த்தி வாய்ந்தவை. இப்படி உறிஞ்சப்படும் நிலையில் கிடந்து உழலும் உழைக்கும் மக்களுக்கு (அடித்தட்டு) விடுதலை என்ற சொல் பொருளற்ற ஒன்றாகவே இன்றைக்கும் உள்ளது.

இதனாற்றான் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகத்தான் அடுக்குமாடி வீடுகளிலும் கடைகளிலும் நாட்டுத் தேசியக்கொடியை ஏற்றிவைக்க பன்முறை அறிவுறுத்தப்பட்டும் செவி சாய்க் காதவர்கள் தண்டனைக்கு அஞ்சி இறுதி நேரத்தில் வேண்டா வெறுப்பாய்க் கீழ்ப்படிகின்றனர். இத்தகையவர்களின் எண்ணிக்கை சிறிதல்ல: ஏழைகள் பரம ஏழைகளாகப் படிநிலை வளர்ச்சியடைவதும், பணக்காரர்கள் கோடீசுவரர்களாகப் பரிணாமம் பெறுவதும் முதலாளித்துவக் கூறுகள். அம்முதலாளியத்தின் கோர முகத்தை அறிந்து கொள்ள இயலாதவாறு பல்வேறு சுமைகளையும் வழிவகைகளையும் கையாண்டு நெருக்குதல்களைத் தோற்றுவித்து உழைக்கும் மக்களைச் சிந்திக்க இயலாதவர்களாக்கி விடுகின்றது அரசியல் நிறுவனம். "மக்கள் வாழவில்லை, பிழைக்க வேண்டியே பாடுபடுகிறார்கள்” என்ற தோழர் மாக்சிம் கார்க்சியின் பாடம் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

புதிது புதிதாக அமுல்படுத்தப்படும் சட்டங்களையும், வரிவிதிப்பு போன்றவைகளையும் எதிர்கொள்ளும்போது, சுமக்க வழியில்லாத அடித்தட்டு மக்கள் தங்களது மனநிறைவின்மையை வெளிப்படுத்த எந்தவொரு வழியும் இல்லை. கான்ப்யூசியசு கோட்பாட்டாளர்களின் ஆட்சியில்தான் இப்படி. அச்சிந்தனையாளரே நிலப்பிரபுத்துவச் சார்பாளர்தான் என்பர். எண்பதுகளின் இறுதியிலும் தொன்னூறுகளின் தொடக்கத்திலும் என்னை அரவணைத்து அன்பு காட்டியவள் சீன வமிசாவளித் தோழி கெத்லின் தான் சோர் கிம். “பெண்கள் கூட்டம் பேய்கள்” என்ற பாடத்தை ஏற்றவனின் வேலைத் திட்டத்தில் பெண்ணுரிமையையும் போராட்டக் கருத்தியலாய் இணைத்தவள் கெத்லின். இந்தியர்கள் என்றாலே குடித்துவிட்டு ரகளை செய்பவர்கள் என்று அவளுள் மண்டிக்கிடந்த எண்ணத்திரை பிற்காலத்தில் அறுந்துபோவதற்கு எனது நடத்தைகள்தான் காரணம் என்று உறவினர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் மீண்டும் மீண்டும் பதிவு செய்தவள்.

அவள் அத்தையின் கணவர் திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர். இப்பொழுது புரிந்திருக்கும் அவளின் நம்பிக்கையை எது வலுப்படுத்தியிருக்குமென்று! தவிரவும் அப்பெண் பிறந்து வளர்ந்த புக்கிட் மேரா பகுதி பழைய வீட்டமைப்பு பேட்டைகளை உள்ளடக்கியதாகும். தமிழர்களை மிகுதியாகக் கொண்ட பகுதியிது. எனது பொழுதுகள் மகிழ்வாய்ப் புறப்பட அல்லது புரட்டப்பட அவள் ஆற்றிய வினைகள், எனது வளர்ச்சியில் அவள் காட்டிய அக்கறை, மாண்டு மீண்டதின் பின்னர் (அறிவற்றுக் கிடந்த கோமா நிலையை டொக்டர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்) அடிக்கொருதரம் தொலைபேசி மூலம் குறிப்பிட்ட நேரத்தில் முறையாக மருந்துகளை உட்கொண்டேனா என்பதனை உறுதி செய்து கொண்ட அந்த நிமையங்கள், பற்களின் கட்டமைப்பில் ஏற்பட்ட முறிதலுக்குச் செய்யப்பெற்ற அறுவையின் விளைவால் பல் வரிசையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம், கிழிந்த உதடுகளுக்குப் போட்ட தையல்கள் இவற்றினாலெல்லாம் ஏற்பட்ட பாதிப்புகளால் வெளிப்பட்ட சொற்களின் பலுக்கள் முழுமையற்றும் வலிமையற்றுமிருந்ததைக் கண்டும் கேட்டும் அந்த எழிலோவியம் அடைந்த துயரம் போன்றவை எல்லாம் நினைவுகள் அறுபடும் வரை மறையாமல் நிற்கக்கூடியவை. என்னைப் பேணிய கட்டடக் கலை முதுஞர் இரு குழந்தைகளுக்குத் தாயாக அன்பான துணைவரோடு அமைதியாக வாழ்ந்து வருகின்றார்.

“செய்தியூடகங்கள் அனைத்தும் அரசினரின் அல்லது ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கும் போது, எது பற்றியும் நேர்மையான தகவல் பெறுவது கடினம்” என்ற பேராசானின் குறிப்பு இங்கு நடைமுறை சத்தியமாய் உள்ளது.

பேச்சாளர் முனையம் தத்தமது கருத்தைப் பொதுமக்களிடத்தில் பகிர்ந்துகொள்ள அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் இடமாகும் என்றும், இலண்டன் மாநகரத்தின் பிரசித்தி பெற்ற ஹைட் பார்க் போன்ற அமைப்பில் இது திகழும் என்றும், பேச்சாளர்கள் குடிமக்களாக இருக்க வேண்டுமென்பது விதியென்றும் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட “ஸ்பீக்கர் கார்னரின்” இன்றைய நிலையென்ன? “அரசாங்கம் மாற்றுக் கருத்து கொண்டவர்களை இலகுவில் அடையாளம் காண்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டியே இத்திட்டம்,” என்று பேச்சாளர் முனைய அறிவிப்பு வெளிவந்ததும் அதுபற்றிக் கருத்துரைத்த ஜோசுவா பெஞ்சமின் ஜெயரெத்தினத்தின் கூற்றே நிரூபணமாகியுள்ளது. உரை தொடங்குவதற்கு முன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பேசவிருப்பவரின் விவரங்களைத் தெரிவித்து அனுமதி பெற்ற பிறகே பேச இயலும் என்பதோடு, நடப்பியல் சிக்கல்களை முதன்மைப்படுத்திப் பேசுவதோ, நிலவும் சிக்கல்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் உணர்ச்சி வயப்பட்டு உரத்த தொனியில் பேசுவதோகூட உளவுத்துறையின் கண்காணிப்பிற்கு ஆட்படுத்தக் கூடும்.

அனுமதி பெறாமல் இவ்விடத்தில் மத விவகாரத்தைப் பேசியதற்காக எதிர்க்கட்சிகளில் ஒன்றான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் பண்டாரகர் சீ சூன் ஜுவான் அவர்களுக்கு சிலவாண்டுகளுக்கு முன்னர் 3,000/- டாலர் தண்டம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கே நாடாளுமன்ற வடிவங்களில் உறிஞ்சும் வர்க்கத்தின் கைத்தடிகளே ஆட்சி செய்கின்றவர்கள்.

வரலாற்றுத் திருப்புமுனையாகிய வெற்றி...

இங்கு, ஜேபி என்றும் ஜேபிஜே என்றும் சுருக்கமாக அழைக்கப்படுபவர் குறித்து சிலவற்றையாவது சொல்வது தேவையாகின்றது. (படித்து முடித்ததும் அத்தேவையின் முகாமையை நீங்கள் உணரவே செய்வீர்கள்.) 1963இல் பரிசான் சோசியலிஸ் எனப்பட்ட சோசலிச முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்த பின்னர் 1966 தொடங்கி 1981 வரை வேறு கட்சி எதுவும் நாடாளுமன்றத்தில் அங்கத்தினர்களைக் கொண்டிருக்கவில்லை. அதற்கு சட்டத்திற்கு உட்பட்டதும் படாததுமான காரணங்கள் பற்பல. திரு. சி.வி தேவன் நாயர் அவர்கள் சிங்கப்பூரின் அதிபராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவர் பிரதிநிதித்த ஆன்சன் தொகுதியில் 1981 அக்தோபரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதன் வெற்றி வீரராகப் பாட்டாளிகள் கட்சியின் பொதுச்செயலாளரான தோழர் ஜேபிஜே அவர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்தது வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. பின் வந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் சிலரும் வெற்றிவாய்ப்பினைப் பெறுவதற்கு முன்னோட்டமாய் விளங்கியது இவரின் வெற்றி.

“சங்கன் முழுவதும் மாவோ பாதம்” என்று இலங்கை பாராளுமன்றத்தில் “திரு” போராட்டக்காரரும், நாடு கடந்து அரசமைக்க மொரிசியசு நாடு வாய்ப்பு தந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாததால் பலரின் ஏச்சுகளுக்கும் ஆளான காலஞ்சென்ற அப்பாபிள்ள அமிர்தலிங்கம் உரையாற்றினாரே! அவற்றுக்கான கரணியம் அறிந்த ஒன்றுதான் என்ற போதும் மறந்திருக்கக்கூடும் என்பதால் இடதுசாரி இயக்கத்தில் ஈடுபட்ட தோழர் சி.கா. செந்திவேல் எழுதிய புத்தகத்திலிருந்து சுருக்கமாய் சிலவற்றைப் பார்ப்போம்:

“....1966ஆம் ஆண்டு ஒக்றோபர் 21 திகதி, சாதி அமைப்பு தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும் என்று செம்பதாகையின் கீழ்- பொலிசு விதித்த தடையையும் மீறி- சந்தை மைதானத்தில் துவங்கி யாழ்நகர் நோக்கி வீறுநடை போட்ட ஊர்வலத்தினை சுன்னாகம் பொலீசு முன்றலையில் வைத்துக் குண்டாந்தடியால் மூர்க்கத்தனமாகத் தாக்கியது. கடுந்தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையிலும் கட்சி ஊழியர்களின் விடாப்பிடித்தனத்தால் ஊர்வலத்தினர் முன்நோக்கிச் செல்ல அனுமதிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. யாழ் நகர் முற்றவெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது....

“ஒக்றோபர் எழுச்சியுடன் முன்வைக்கப்பட்ட புரட்சிகரக் கொள்கையானது சங்கானையில் வெடித்த போராட்டத்தின் மூலம் புரட்சிகர வெகுமக்கள் போராட்டம் என்னும் நடைமுறைக்குள் பிரவேசித்தது. சங்கானைப் போராட்டத்தின் உறுதியான நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அடக்கப்பட்ட அனைத்துத் தாழ்த்தப்பட்ட மக்களையும் விழித்தெழுந்து போராட்டப் பாதையில் முன்செல்ல வழிவகுத்தது. மட்டுவில்-சாவகச்சேரி, மந்துவில்-கொடிகாமம், மவிட்டபுரம்-காங்கேசன் துறை, நெல்லியடி-கன்பொல்லை, கரவெட்டி-உரும்பிராய் போன்ற குறிப்பான பகுதிகளில் இடம்பெற்ற தேனீர்க்கடை, ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் தொடர்ந்து பல மாதங்கள் நீடித்தன. அவை புரட்சிகர வெகுசனப் போராட்ட மையங்களாக விளங்கின. இப்போராட்டங்களின்போது சாதிவெறியர்களின் தாக்குதலுக்கு இலக்காகி பத்துக்கும் மேற்பட்டோர் தமது இன்னுயிர்களைத் தியாகித்தனர். யூஎன்பி-தமிழரசுக் கட்சி இணைத்திருந்த “தேசிய” அரசாங்கத்தின் பொலிசு சாதி வெளியர்களுடனும் பிற்போக்குச் சக்திகளுடனும் இணைந்து நின்றமை குறிப்பிடக் கூடியதொன்றாகும். அதேவேளை ஏழு சாதி வெறியர்கள் புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் உயிரிழக்கவும் நேரிட்டது.

“ஆண்டாண்டுகாலமாக சாதி அடக்குமுறையாலும் தீண்டாமைக் கொடுமையாலும அல்லலுற்று அடிமைத்தன வாழ்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தமது சொந்தக் கால்களில் எழுந்து நின்று புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் அடிமை விலங்கை உடைத்தெறிய முன்வந்த வரலாற்றுத் திருப்புமுனை அது. இப்போராட்டம், அன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறக்கப்படாத ஆலயக் கதவுகளைத் திறக்கச் செய்தது. சமத்துவமாக அனுமதிக்கப்படாத தேனீர்க் கடைகளில் சமத்துவத்தைப் பெற்றுக் கொடுத்தது. மற்றும் பொது இடங்களில் இரண்டாந்தர நிலையில் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையினை மாற்றியமைத்தது. மொத்தத்தில் தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த உயர்ந்த தமிழரும் தாழ்ந்த தமிழரும் என்ற இரட்டைத்தர நிலையினைத் தகர்த்து தமிழர் சமுதாயம் என்ற நிலை உருவாவதற்கு இப்புரட்சிகரப் போராட்டம் வழிவகுத்துத் தனது வரலாற்றுப் பங்களிப்பை வழங்கியது. பிற்காலத்தில் தமிழர்களிடையே பெரும் போராட்ட அலையாக எழுந்த தமிழ்த்தேசிய இன விடுதலைக்கான போராட்டம் தோன்றி வளர்வதற்கேற்ற முன்னுதாரணமாக இக்காலப் போராட்டம் அமைந்தது. அதன் மூலம் பல முன் அனுபவங்களைத் தமிழ் இளைஞர்கள் பெறக்கூடிய வாய்ப்பினையும் வழங்கி நின்றது.”

1966 தொடங்கி 1970 ஊடான காலகட்டங்களில் நடைபெற்ற இத்தகு போராட்டங்களை முன்னெடுத்த இலங்கை கம்யூனிஸ்டு (மாவோ) கட்சியின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பாடாற்றியவர் தோழர் நாகலிங்கம் சண்முகதாசன் அவர்களாவார். வேறொரு சந்தர்ப்பத்தில் தோழர் குறித்து விரிவாய் கதைக்கலாம்.
இப்படி சமான்ய மக்களின் போராட்டக் களமாய் பிற்காலத்தில் விளங்கிய சங்கானையில்தான் இருபதாம் நூற்றாண்டின் முற்கூறில்- எழுபது தொடங்கி முப்பதாண்டு கால சிங்கப்பூர் வரலாற்றில் அடித்தட்டு மக்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பவராகவும் முனை மழுங்கா போர்க்குணத்தினாலும், நாடாளுமன்ற கர்ஜனை உரைகளினாலும் குடிமக்களின் செல்வாக்கினைப் பெற்ற அரசியல்வாதியாகத் திகழ்ந்து வரும் புகழ்பெற்ற சட்டத்தரனி ஜோசுவா பெஞ்சமின் ஜெயரெத்தினம் அவர்கள் 5-1-1926இல் தோன்றினார். ஈழநாட்டில் பிறந்தவர் தென்கிழக்காசிய ஓட்டுப்பெட்டி அரசியலில் முத்திரை பதித்ததும், தென்னாசிய (தெற்கு) பாராளுமன்ற அரசியலில் வரலாறு படைத்த ஈழத் தந்தை செல்வநாயகம் மலாயாவின் ஈப்போ நகரில் பிறந்ததும் எதிர்பாராத நிகழ்வுகள்தாம்!

உடன்பிறந்தோரான இரண்டு தங்கைகள், ஒரு தம்பி ஆகிய மூவரும் மலாயாவில் பிறந்திருக்க, இவர் மட்டுமே சங்கானையில் பிறந்தவர் என அறிய முடிகின்றது. வாய்ப்பு தேடி இளம்வயதிலேயே மலாயாவிற்குக் குடி பெயர்ந்துள்ளார் இவரின் தந்தை. குடும்பத்தோடு, ஈய வளத்தில் கொழித்த வடமாநிலமாம் பேராவில் அவர் வேலை செய்து பின்னர் தென்கரை ஜோகூரின் பொதுப்பணித்துறையில் சேர்ந்தவர் இரண்டாம் உலகப் பெரும் போரின் பின்னர் பொறுப்பு ஓய்வு பெறும் வரை அத்துறையிலேயே வினையாற்றியுள்ளார். பிரிட்டிசுப் பேராட்சியில் போராளிகள் பலர் தோன்றிய மாநிலம் பேரா. வெள்ளைப் பரங்கியரை விரட்டியடித்திட்ட வீரப்பரம்பரையைத் தோற்றுவித்த நல்நிலம் அது.

வெள்ளி என்றிதற்குப் பெயரிட்டார் மலாய் மொழியில்
விளைகின்ற ஈயமோ தங்கத்திற்கீடாகும்
அள்ளிப் பருகுதற்கு எழிலான பங்கோரும்
அதற்கு எதிரேயே நாட்டின் கடற்படையும்
வெள்ளை பனிமலையாம் தித்திவங்சா தொடங்குவதால்
வியந்து போற்றிடலாம் போராவோர் வெண்முத்து

என்று இம்மாநிலம் குறித்து பா புனைந்தவர் கவிஞர் மை தீ சுல்தான். ஜெயரெத்தினத்தின் இரண்டு தங்கைகளும் தம்பியும் ஜோகூர் பாரூவில் பிறந்தவர்கள். மூவார் எனும் நகரில் இருந்த பிரெஞ்சு கான்வென்டில் பள்ளி வாழ்வைத் தொடங்கிய அவர் இரண்டாண்டுகளுக்குப் பின் அரசு ஆங்கிலப்பள்ளியில் பயின்றார். இரண்டு ஆண்டு ஆங்கிலக் கல்லூரிக் கல்வியோடு நிப்பொனியர் ஆட்சியின்போது போக்குவரத்துத் துறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் சிங்கையின் தூய ஆந்திரேயரில் கல்வியைத் தொடர்ந்து 1946இல் சீனியர் கேம்பிரிட்ஜ் படித்துள்ளார்.

1948ஆம் ஆண்டில் பிரிட்டிசு சாம்ராச்சியத்தின் இதயமான இலண்டன் நோக்கிப் பயணித்தார். ஜெரெமி பெந்தம் தொடங்கிய பல்கலைக் கல்லூரியில் சேர்ந்த மூன்றாண்டுகளில் 1951இல் சட்டத்துறையில் இளங்கலைப் பட்டதாரியானார். அதே ஆண்டில் இறுதித் தேர்வுக்கு அமர்ந்தார். கல்லூரி வாழ்க்கை குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்: “எனது மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கை பல விடயங்களிலும் எமது வளர்ச்சிக்கானதாக அமைந்தது. சட்டத்துறையில் ஓராண்டு இளைய வகுப்பில் பயின்றுகொண்டிருந்த மனைவியை சந்தித்ததும் அங்குதான். வளாகத்தில் நிலவிய தாராள சிந்தனைப்போக்குகள் எம்முள் தாக்கங்களை ஏற்படுத்தின. மூன்றில் இரண்டு பங்கினர் பிரித்தானியாவை சேர்ந்தவர்களாகவும் ஏனைய ஒரு பங்கினர் ஞாலத்தின் மற்றப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் தங்கியிருந்த பல்கலை விடுதியில் தங்கியிருந்தேன். அவர்களில் நான் ஒருவன் மட்டுமே சிங்கப்பூரைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

“தொழிலாளர் கட்சியின் ஆதரவாளனாகவும் அக்கட்சி வேட்பாளர்க்கு ஓட்டு வேட்டையாடுபவனாகவும்கூட விளங்கினேன். தொழிற்கட்சி அரசாங்கத்தில் நலத்துறை அமைச்சராக (1945-51) இருந்த தோழர் அனீயூரின் பெவன் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தேன். முந்தைய கனிவளத் தொழிலாளர் இவர். எமது மரியாதைக்குரியவராயிருந்த பிறி தொருவர் அமைச்சர் தோழர் எர்னஸ்ட் பெவின். முந்தைய வரைப் போலவே இவரும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவரே. பல்கலை செல்லாதவர் மட்டுமல்ல, துறைமுகத்தில் வேலை செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிளெமண்ட் அட்லியின் அரசில் வெளியுறவுத் துறை பொறுப்பு இவருடையதாயிருந்தது.”

ஐரோப்பிய இனக்குழுவைச் சேர்ந்த துணைவி திருவாட்டி மார்கெரட் 1980ஆம் ஆண்டில் புற்றுநோயால் காலமானார். பொருளியல் வல்லுனரான தலைமகன் கென்னத், இலண்டனில் வாழுகின்றார். இளைய மகன் பிலிப் சட்டத் தரனியாக சிங்கையில் இருக்கின்றார். இவர் எழுத்தாளருமாவார்.

எழுதப்பட்ட தீர்ப்புக்கு நடத்தப்பட்ட நாடகமே "தமிழ் மொழி வாரம்”

தமிழ்மொழி வாரக் குழுவில் இடம்பெற்றிருந்த எட்டுப்பேர், “எழுதப்பட்ட தீர்ப்புக்கு நடத்தப்பட்ட நாடகமே தமிழ்மொழி வாரம்” என்ற செய்திக்காக இவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். பாட்டாளிகள் கட்சியின் வெளியீடான “சுத்தியல்” என்ற நான்கு மொழி சஞ்சிகையில் (சுத்தியல் பாட்டாளிகள் கட்சியின் சின்னம்) வெளிவந்த செய்திக்காக கட்சியின் தலைமைச் செயலாளரான ஜெயரெத்தினத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டு, முடிவாக 2,65,000 சிங்கப்பூர் டாலர்களை வழக்கு தொடர்ந்தவர்களுக்குச் செலுத்தும்படி தீர்ப்பளிக்கப்பட்டது. வேண்டிக்கொண்டதின் பின் தவணை முறையில் தண்டம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஓரிரு தவணைகளுக்குப் பின் தொகை செலுத்த இயலாமல் போனதால், சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் வழக்கு மன்றப் படிக்கட்டு ஏற, ஜே.பி.ஜே. திவாலானவராக அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அவருக்கிருந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியும் இருக்கையும் பறிபோயின.

முன் சொன்னவை தவிர வேறு சில வழக்குகளிலும் தண்டம் கட்டியவர் இவர். இவரின் நாடாளுமன்ற உரைகள் உட்பட வேறு சில புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவையாவும் தமிழில் இல்லாதது பெருங்குறை தான். தமிழ் நீச பாசை என்பதாலா! அல்லது தமிழர்கள் சுயமரியாதை அற்றவர்கள் என்ற காரணத்தாலா? காலம் வாய்ப்பளிக்குமாயின் அப்பணியை நாம் நிறைவேற்றித் தருவோம். இவரைப் பாராளுமன்றத்திலிருந்து முற்றாக அகற்றுவதற்காக நடத்தப்பட்ட நாடகம் வெற்றியடைந்ததாகத் தோன்றினாலும், நெருக்குதல்களைத் தவிர்ப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் பட்டியலில் இவர் இடம் பெறவில்லை என்பதோடு, இவரின் எழுத்தையோ, முழக்கத்தையோ முற்றாக இரட்டடிப்புச் செய்துவிட முடியவில்லை என்பதை ஜே.பி.யின் போர்க் குணத்திற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

திரு. ஜெயரெத்தினம் பற்றி எடுக்கப்பட்ட பதினைந்து நிமிட செய்தி விளக்கப் படம் (டாக்யூமென்றி) 2001இல் நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலகப் பட விழாவில் திரையிடப்படுவதினின்று விலக்கிக் கொள்ளப்பட்டது, அரசியல் சம்பந்தப்பட்ட படங்கள் மீதான தடையை மீறுவதாகும் என அதற்குக் காரணம் சொல்லப்பட்டது. முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளிகள் கட்சியின் முந்தைய பொதுச் செயலாளருமானவர் பொது இடங்களில் புத்தகம் விற்பது, ஆதரவாளர்களைச் சந்திப்பது ஆகியவைகள் அக்குறும்படத்தில் இடம் பெற்றிருந்தது என்று விவரிக்கின்றது ‘ஸ்ரெய்ட் ரைம்ஸ்’ நாளேடு. ஙி ஆன் பாலிடெக்னிக்கின் திரை மற்றும் செய்தியூடகத் துறையின் மூன்று விரிவுரையாளர்களால் தயாரிக்கப்பட்ட அக்குறும்படத்தின் தலைப்பு: "எ விசன் ஆப் பெர்சிஸ்தன்”. “அப்படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும். மக்கள் முடிவு செய்யட்டும்” என படவிழாவில் இயக்குநர் நாயகம் பிலிப் சியா குறிப்பிட்டது ஜே.பி.ஜே பற்றி நாளேடு தரும் கூடுதல் செய்தி.

இவ்வளவுக்குப் பின்னும் அவர் அரசியலுக்கு முழுக்குப் போடவில்லை. அவருடைய அரசியல் ஆர்வம் அப்படி. “அப்பாவிப் பொதுமக்களின் மீது குண்டு வீசியது, என்ன நியாயம்? மேற்கத்தியர்கள் ஜப்பான் மீது மட்டும் குண்டு வீசித் தாக்கியது அது ஆசிய நாடு என்பதாலா?” என்னும் பொருளில் வகுப்பு ஆசிரியரால் பாராட்டப்பட்ட கவிதை எழுதியதே அரசியலின்பால் ஈர்க்கப்பட்ட முதல் சம்பவம் என்றவர், “அன்றைய மலாயாவில் இந்தியப் போர்வீரர்களைத் துன்பத்திற்கு உள்ளாக்கிய பிரிட்டிசு - அஸ்திரேலிய படைஞர்களின் செயல் சினமேற்படுத்தியது,” என்றும் பதிவு செய்துள்ளார்.

தமது அரசியல் வாழ்க்கை குறித்தும் அவற்றில் அடைந்த வெற்றி தோல்விகள் பற்றியும் ஒரு நேருரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார் ஒருபோது: “மேற்கொண்டவற்றில் வெற்றி பெற்றேனா இல்லையா என்பது குறித்து வரலாறு தீர்ப்பளிக்கும். ஆனால் உதட்டு சேவை என்ற அளவில் இல்லாமல், தங்கள் நலனுக்கான எண்ணங்களைச் செயலாக்க உண்மையாகவே முனைந்தவன் இங்கிருந்தான் என்று மக்கள் எண்ணிப் பார்ப்பார்கள்.”

“மலாய் அரசரிடமிருந்து சிங்கப்பூராவை ஸ்டம்போர்ட் ராபில்ஸ் வாடகைக்குப் பெற்றது தொடங்கி, தீவின் வரலாறு உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்படுமாயின் உங்களின் பங்களிப்பு நன்றியோடு நினைவு கூரப்படும்,” என்று ஒருகால் அவரிடம் சொல்லியது நினைவு அடுக்குகளிலிருந்து வெளிப்படுகின்றது. அப்போது, “வரலாறு உங்களை விடுதலை செய்யும்” என்று முடித்தவுடன், “கோ எ வே!” (விலகிப் போங்கள்) என்று என்னை விரட்டினார். அது என் நலன் கருதித்தான்! இவரோடு காணப்படுவது பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதனை அனைவரும் நன்குணர்வர். ஆனாலும் பிறிதொரு நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் வழக்குரைஞர் தோழர் சியாம் சீ தோங் உடனான அளவிற்கு ஜே.பி.யோடு நமக்குப் பழக்கமில்லை என்பதைச் சொல்லித்தானாக வேண்டும்.

ஏடறிந்த வரலாறு தொடங்கி...

தீவின் அரசியல் வரலாறு குறித்துச் சொல்வதெனில், போர்க்கப்பல்கள் புடைசூழ “இன்டியானா” என்ற பெயர் தாங்கிய கப்பலில், மலாய்த் தீவக்குறையின் தென்முனை நீரிணையில் அமைந்திருந்த இத்தீவை 1891 திசம்பர் இருபத்தோராம் திகதியன்று அரசவயவர் தோமஸ் ஸ்டம்போர்ட் ராபில்ஸ் வந்தடைந்தார். ஜோகூர் அரசாட்சிக்கு உட்பட்டிருந்த, “துமாசிக்” என்ற பழைய பெயர்கொண்ட சிங்கப்பூரா தீவை மன்னருடனான பேச்சுவார்த்தையின் வழி வாடகைக்கு முயன்று பெற்று கிழக்கிந்திய வணிகக் குழுமத்தின் புறக்காவல் இடமாக மாற்றியமைத்தார். காலப்போக்கில் உலகின் பிற பகுதிகளில் நிகழ்ந்ததைப் போலவே இத்தீவும் பிரிட்டிசு சாம்ராச்சியத்திற்குக் கையளிக்கப்பட்டது. அது முதல் இத்தீவு பிரிட்டிசு காலனியின் மணிமுடியாக விளங்கி வந்தது.

இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் 1947இல் முனிசிபல் தேர்தல் நடைபெற்றது. அதன் பின் 1948இல் சட்டப்பேரவை தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டு நடந்தேறியது. புதிய சட்டவரைவின்படி ஆளுநரை முதன்மையாகக் கொண்ட சட்டப்பேரவையில் 9 அதிகாரபூர்வ மற்றும் 13 அதிகாரம் சாராத அங்கத்தினர்கள் இடம் பெற்றனர். இப்பதின்மூன்று உறுப்பினர்களில் மூவரை வர்த்தக சம்மேளத்தினர் தேர்வு செய்ய, நால்வர் ஆளுநர் நியமனமாகவும், ஏனைய அறுவர் தெரிவு செய்யப்பட்டவர்களாகவும் இருந்துள்ளனர். 250,000 பேர்களில் 22,000 பேர் மட்டுமே வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டிருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். ஆனால், வாக்களித்தவர்கள் 13,458 பேர் மட்டுமே. இற்றை நாள் போல அன்றும் பாரிய தொகையினராய் இருந்த சீனர்கள், முதலாவது தேர்தலில் பெரிதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. 25-8-1947இல் மூன்று சட்டத்தரனிகளால் ஆரம்பிக்கப்பட்ட பல்லினக் கட்சியான சிங்கப்பூர் முற்போக்குக் கட்சி தான் போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மூன்றினை வென்று நிற்க, ஏனைய மூன்று தொகுதிகளை சுயேட்சைகள் கையகப்படுத்தினர்.

பதிவு செய்துகொண்டிருந்த 48,000 வாக்காளர்களில் 25,065 பேர் மட்டுமே வாக்களித்திருந்த 1951 தேர்தலில் ஒன்பது இடங் களுக்குப் போட்டியிட்ட இருபத்திரண்டு வேட்பாளர்களில் பதினைந்து பேர் இந்தியர்களாகவும் ஒருவர் சிலோனிக் குமாவார். முற்போக்குக் கட்சி சார்பில் எட்டு வேட்பாளர்களும் தொழிலாளர் முன்னணியை பிரதிநிதித்து எழுவரும் இவர் களோடு கூடவே சுயேட்சைகளும் போட்டியிட்டனர். முற்போக்குக் கட்சி ஆறு இடங்களையும் தொழிலாளர் முன்னணி இரண்டையும் சுயேட்சை ஓரிடத்தையும் கைப்பற்றியிருந்தனர். அந்த சுயேட்சையே பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணாக வரலாற்றில் பெயர் பதித்துள்ளார்.

1955இல் பிரித்தானியா, மாற்றங்கள் சிலவற்றைச் செய்து, அதிகாரம் கொண்ட தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபை முறையை அறிமுகப்படுத்தியது. அதுவும்கூட பெயரளவிலானதாகவே இருந்துள்ளது. முழு உரிமையும் ஆளுநரிடமே இருந்ததென்பது கவனங்கொள்ளத்தக்கதாகும். ஏறத்தாழ 300,299 மொத்த வாக்காளர்களில் சரிபாதியினர் பெண்கள் என்று சொல்லப்பட்ட தேர்தலில் இருபத்தைந்து இடங்களுக்கு எழுபத்தொன்பது பேர் களமிறங்கினராம், இரு பெண்கள் உட்பட. இதில் தொழிலாளர் முன்னணி பத்து இடங்களை வெற்றி கொண்டுள்ளது. முற்போக்குக் கட்சி நான்கு இடங்களையும் மக்கள்நாயகக்கட்சி இரண்டு இடங்களையும் வென்றெடுத்துள்ளன.

முடிவில், தொழிலாளர் முன்னணிக்குத் தலைமை தந்த ஈராக்கிய வழித்தோன்றலான- அணிநலம் வாய்ந்தவரும் குற்றவியல் வழக்குரைஞராக பெயர் பெற்றிருந்தவருமான தோழர் டேவிட் சவுல் மார்சல், மூன்று கூட்டணி உறுப்பினர்களோடு அரசாங்கம் அமைத்ததாக வரலாறு. சிங்கப்பூர் கடலோடிகள் கழகத்தின் தலைவர் எம் ஏ மஜிட், பிரிட்டிசு ராணுவத்தின் குடிமக்கள் சேவைப் பிரிவின் அலுவலர் எம் பி டி நாயர் மற்றும் இராணுவ குடிமக்கள் சேவை கழகத்தின் தலைவர் பீட்டர் வில்லியம்ஸ் ஆகியோரால் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு 1948 செப்தம்பர் முதல் நாளன்று தொடங்கப்பட்ட கட்சியே தொழிலாளர் முன்னணியாகும். கேம்பிரிட்ஜ் ஆசிரியர் பயிற்சி பெற்ற பிரான்சிஸ் தோமஸ் இதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பரப்புரையின்போது வாக்காளர்களுக்குத் தந்த உறுதிமொழிப்படி சிங்கப்பூருக்கு சுதந்திரம் வேண்டி பேச்சு வார்த்தைக்கு அனைத்துக் கட்சி குழு நாட்டின் முதலாவது முதலமைச்சர் டேவிட் மார்சல் தலைமையில் ஏப்ரல் 1956இல் இலண்டனுக்குச் செலவு மேற்கொண்டது. இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வியுற்றதின் விளைவாக சூன் திங்களில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் டேவிட் மார்சல். அவ்வாறு செய்ததை தவிர்த்திருப்பாராயின் தீவின் வரலாறு வேறு வகையில் எழுதப்பட்டிருக்கும். இரண்டு நாட்களுக்குப் பின் கூட்டணியைச் சேர்ந்த லிம் இயூம் வோக் என்பார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பின்னரும் சுதந்திரப் பேச்சுரைக்கு இலண்டன் சென்றனர். வேறு சில புதிய திருத்தங்களை உள்ளடக்கிய வரைவின் மீது தாக்குதல் தொடுத்த டேவிட் மார்சல் இவ்வரைவிற்கான மக்கள் ஆதரவைக் கண்டறிய தம் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார் என்று அறிவித்து அங்ஙனமே செய்தார்.

ஆனால் கடைசியில் போட்டியிடுவதி னின்று ஒதுங்கிக்கொண்டு தாம் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்தாராம். எட்டு திங்களுக்குப்பின் மீண்டும் களமிறங்கியவர் பாட்டாளிகள் கட்சியை அமைத்துள்ளார். கட்சிக் கூட்டங்கள் தவிர தொகுதிகளுக்குச் செல்லும்போதும் தம் இடைவாரினூடே “சுத்தியலை” சொருகியிருப்பாராம் மார்சல். பாட்டாளிகள் கட்சி உறுப்பினர் திரு. மீனாட்சி சுந்தரத்தின் வழி இத்தகவலைப் பின்னர் உறுதி செய்து கொண்டோம்.

கட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சியுடன் கூடிய அரசாங்கம் அமைக்கும் அதிகாரம் 1959இல் சிங்கப்பூருக்கு கையளிக்கப்பட்டது என்றபோதும், தற்காப்பு, வெளியுறவு பாற்பட்ட வேறு பல முகாமையான அதிகாரங்கள் ஆளுநர் வழி பிரித்தானியாவிடமே இருந்தது. அப்போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் பங்கு பற்றிய கட்சிகளின் மொத்த எண்ணிக்கை பதின்மூன்று. 25-4-1959ஆம் நாள் ஐம்பத்தோரு இடங்களுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 194 ஆகும். கட்சி சார்ந்த 160 போக எஞ்சிய 34 பேர் சுயேட்சை களாவார். வாக்களிப்பு கட்டாயமாக்கப்பட்டு மே முப்பது 1959 அன்று நடைபெற்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்குச் சென்றவர்கள் அரை மில்லியனுக்கு மேற்பட்டவர்களாம். இதில் நாற்பத்து மூன்று கதிரைகளை வென்று மக்கள் செயல் கட்சி ஆட்சியமைத்தது. ஆட்சி பீடமேறிய கட்சி 16-9-1963 நாளன்று சிங்கப்பூரை அண்மையில் அமைக்கப்பட்ட மலேசியக் கூட்டரசில் இணைத்தது, அதன் பின்னர் ஏற்பட்ட முறுகல் நிலைகளால் இணைந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே 9-8-1965இல் கூட்டரசிலிருந்து சிங்கை வெளியேற்றப்பட்டது.

அன்று தொடங்கி இன்றைக்கும் அரசாண்டுகொண்டிருப்பவர்கள் ம.செ.ம.வினர்தாம். அக்கட்சியில் நிகழ்ந்த வெளியேற்றங்கள், உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழான கைதுகள், மலேசிய கூட்டரசில் இணைவதை எதிர்த்து வெளியேறிய / வெளியேற்றப்பட்டவர்கள் இணைந்து அமைத்த சோசலிச முன்னணியின் செயற்பாடுகள், அக்கட்சியின் முன்னோடிகள் சிறைபிடிப்பு (அவர்களில் சியா தைப் போ என்பார் தென் ஆப்பிரிக்காவின் இளைப்பாறிய அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலாவினும் கூடுதலான தனிமை மற்றும் தீவுச் சிறை வாழ்க்கை அனுபவித்த நாடாளுமன்ற உறுப்பினராவார்), வேறு சில புதிய கட்சிகள் அமைப்பு, தேர்தல்களில் எதிர்க் கட்சிகள் பங்கு பற்றித் தோல்வியடைதல், இடையிடையே கம்யூனிசப் பூச்சாண்டி என காலம் சுழன்றது, சிங்கக்குரலோனின் வரலாற்றுத் திருப்புமுனை வெற்றி சாத்தியமானது வரை.

சொந்த வாழ்க்கை சுகங்களை இழந்த பல்லாயிரவர்

கூட்டரசிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டபோது முதலமைச்சர் லீ குவான் யூ தேம்பியழுததைக் கண்டு தாங்களும் அழுததாக சொல்லி பெருமிதங்கொள்வர் மூத்த தமிழர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அது நீலிக்கண்ணீர் என்று விமர்சித்த தமிழர்களும் இருக்கவே செய்துள்ளனர். இங்கு வேறொன்றும் நினைவுக்கு வருகிறது. செயலிழந்த சிங்கப்பூர் மக்கள் கட்சியின் அந்நாள் தலைவர் தோழர் சைட் சஹாரி அவர்கள் தமது நூலில் இப்படி விவரிக்கிறார்: “லி குவான்யூ ஆனந்தமாகத் தேம்பினார். கூட்டரசிலிருந்து வெளியேறினால்தான் சுதந்திரம் பெற்ற இறையாண்மை கொண்ட நாட்டின் பிரதமராக ஆக முடியும். இதற்கு முன்பு இவர் தன்னாட்சிக் கொண்ட பிரித்தானிய காலனியின் ஆட்சியாளர் என்ற தகுதி மட்டுமே உடையவராயிருந்தார். தவிரவும் ஆங்கிலேயரின் உத்தரவுகளை ஏற்க வேண்டியும் அவர்களின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டியதுமான சூழலில் இருந்தார். பெரிய அளவிலான போராட்டங்கள் ஏதுமின்றி சுதந்திரம் தட்டில் வைத்து தரப்பட்டது என்று அவர்கள் சொன்னார்கள்”. அவ்வேளையில் தோழர் சைட் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். தனிமைச்சிறை, தீவு வாசம் என்று இவரின் சிறைவாசத்தின் அகவை பதினேழு ஆண்டுகளாகும். 2-2-1963 இல் சிறைபிடிக்கப்பட்டவர் 22-8-1979இல்தான் விடுதலை செய்யப்பட்டார்.

1961ஆம் ஆண்டில் “உத்துசான் மிலாயூ” நாளிதழ் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட 91 நாள் வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கியவர் அக்கால் அவ்வேட்டின் தலைமை ஆசிரியராகப் பணி செய்த சைட் சஹாரிஆவார். இவர் சாவானிய இனக்குழுவைச் சேர்ந்தவர். அன்றைய மலாயாவினுள் நுழைய முடியாதபடிக்கு அப்போதைய பிரதமர் அப்துல் ரஹ்மானின் தடைக்குள்ளானவர் இவர். அக்கால பிற விடுதலை விரும்பிகளைப் போல் தென்கிழக்காசியாவின் அன்றைய புரட்சித் தலைவன் இந்தோனிசிய அதிபர் மறைந்த தோழர் சுகார்னோவின் தாக்கத்திற்குள்ளான ஆயிரமாயிரம் போராளிகளில் இவரும் ஒருவராயிருந்த காரணத்திற்காக சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வழங்கிய பரிசுகள்தாம் கம்யூனிஸ்டு என்ற அடைமொழியும் அதனுடனான கூண்டு வாழ்க்கையும். இப்படித்தான் தங்களின் சொந்த வாழ்க்கை சுகங்களை இழந்த பல்லாயிரவர் தென்கிழக்காசிய நாடுகளில்!

அவர்களில் தமிழர்கள் எத்தனை பேர்? இனி முயன்று ஆவணமாக்கினால் தான் உண்டு. ஏனெனில் கிடைப்பவை மிகச் சிலவே. காங்கிரசு பக்தர்களாக, நேரு குடும்ப விசுவாசிகளாக, பாரத நாட்டு ஒரு பக்க சமாச்சாரங்களை மட்டும் அறிந்திருந்தவர்களாகத்தான் உயிர்த்திருக்கிறார்கள். இன்றும் நிலைமை முற்றாக மாறிவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுதான் மு. கருணாநிதி சம்பவம். “ஐயோ, கொலை பண்ணப் பாக்குறாங்க” என்று மஞ்சள் துண்டு கோமான் கூக்குரலிட்டபோது இங்குள்ள பாதி கிழவர்கள் பக்கவாதம் தாக்கியவர்கள் போலானார்கள்! ஆனால், மனிதநேயம் உள்ளவர்களை உலுக்கியெடுத்த அந்தத் தாமிரபரணி படுகொலைகள் இவர்களில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தி விடவில்லையே! சரி, கிழங்கள் கிடக்கட்டும். இளைய தலைமுறை? தனிச்சொத்துடமை மட்டும்தான் வாழ்க்கை என்று அடையாளத்தை இழந்து கொண்டிருக்கின்றவர்களுக்கு வரலாறு பற்றிய அக்கறை எல்லாம் எதற்கு? அப்புறம் மைக், லைப்ஸ் எப்படிலா! நான் பெரும்பான்மையினர் நிலைபற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதனை அருள்கூர்ந்து கவனத்தில் கொள்ளுங்கள்.

சரி, தோழர் சைட் சஹாரி கம்யூனிஸ்ட் என்பது உண்மைதானா? பொய். எல்லா வகையான வந்தேறி ஆளுமைகளையும் எதிர்த்த மலாய் தேசியத்திலிருந்து எங்களை கலைத்துப்போட்டு விலகச்செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் அது. தேசியம் என்பது என்ன என்பதனை நான் அறிவேன். அதேபோல் கம்யூனிசம் குறித்த புரிதலும் எனக்குண்டு. மார்க்சு, மாவோ மற்றும் பிறரின் பொருளியல், அரசியல் ஆக்கங்களை மட்டுமின்றி, திருமறை குர்ரானோடு ஹதீசு எனப்படும் நபி மொழிகளையும் பயின்றவன் என்பது மட்டுமல்ல, இசுலாமிய மார்க்கத்தின் ஆழமான நம்பிக்கையுடையவன் நான். “கர்வம் கொண்ட, இரக்கவுணர்வற்ற, மோசமான மனிதன் லீ குவான் யூ” என்று தோழர் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சீன வரலாறு அறிந்தவர்கள் தோழரின் உருவகம் குறித்து வியப்படைய மாட்டார்கள் என்பது உறுதி. மலாயாவில் நுழைய விதிக்கப்பட்ட தடையை 1989ஆம் ஆண்டு டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய அரசு நீக்கியது. 1994 முதல் மலேசிய தீபகற்பத்தில் வாழ்ந்து வருகிறவரின் அருமைத் துணைவி திருவாட்டி சால்மா இரண்டாண்டுகளுக்கு முன்னர் மறைந்தார்.

"உயிருள்ளவை அனைத்தும் இறக்க வேண்டி யவையே. புதியவை அனைத்தும் பழையதாகக் கூடியவையே” என்பதற்கொப்ப அனைவரும் சாவூர் செல்ல வேண்டியவர்களே. இருப்பினும் சிலரின் மறைவு துயரமேற் படுத்துகின்றதே! ஓம், சைட்டின் சிறை வாழ்க்கையின்போது குழந்தைகளைப் பொறுப்புடையவர்களாக வளர்த்தெடுத்த பெரும்பணி அவருடையது.... “டாக் கிளாவுட்ஸ் எட் டவுன்” என்ற நுலையும் (ஆங்கிலம், மலாய் மற்றும் மாண்டரின் ஆகிய மும்மொழிகளிலும் உள்ளது) அதன் இரண்டாம் பகுதியையும் ஒரு முறையாகிலும் படிக்க வேண்டும்- குறிப்பாக சிங்கை மற்றும் மலையகத் தமிழர்கள். உடல் நலிவுற்ற எழுபத்தெட்டாம் அகவையில் காலஞ்சென்ற வாழ்க்கைத் துணையைப் பற்றி நூல் எழுதிக் கொண்டுள்ளார்! தொடர்ந்து அரசியல் நூல் எழுதவும் திட்டமிட்டுள்ளார். சண்டே டைம்சு செய்தியாளருடன் விரிவாய்ப் பேசியிருந்தவர், பத்திரிக்கையாளர்களுக்குக் கீழ்க்கண்டவற்றை ஆலோசனையாக்கியிருந்தார். “முடிந்த சிலவற்றையாவது செய்யுங்கள். ஒன்றுமே செய்யாமலிருப்பதை விட அது எவ்வளவோ மேல்”.

சாமான்யரின் வெறி - பணி மலையாளபடம்

ஜோஜு ஜார்ஜ், பணி(வேலை) திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமாகிறார், சரியான வேகத்தில் நிகழ்வுகள் வெளிப்படும் ...