Monday, March 09, 2009

லியனார்ட் கோஹன் கவிதைகள்


இரங்கற்பா

சிதறிவிழும் மலை நதிகளினூடே
அவன் எங்கு உள்ளான் என்று காணச்
செல்லாதீர்கள்;
அவை கடவுள் உருவாக்கியபோது இருந்ததைவிட
இப்போது மிகவும் குளிரால் உறைந்து கிடக்கின்றன.
துண்டு துண்டாய்க் கிடக்கும் அவனுடலைத் தேடி
வலிமையுடன் நகரும் நதிகளையும் துழாவாதீர்கள்
அல்லது பாறைகளையும் ரத்தக் கசிவுகள் தேடிப்
புரட்டிப் போடாதீர்கள்;
ஆனால் வெம்மை கொண்ட உப்புக் கடல்களின்
மெல்லிய அலை கொண்ட பசும் நீர்ப்பரப்பினூடே
அவன் முகடுகள் நோக்கிப் பயணம் செய்திருக்கக்கூடும்
நீரில் அலைந்து திரியும் வண்ணமயமான மீன்கள்
பனி பொதிந்த அவன் உடலைச் சீண்டி
அலைகளின் ரகசியக் கூடுகளை அவனது
காற்றில் சிறகடிக்கும் கப்பற் பாயின் கீழ் அமைக்கும்.


வடு எதனையும் பனி விட்டுச் செல்லாதபோது


இருண்ட பசுமையான மலையின்மீது
வடு எதனையும் பனி விட்டுச் செல்லாதபோது
உன் உடலின் மீது என்னுடல் எந்த
வடுவையும் விட்டுச் செல்வதில்லை
எப்போதும் செல்லாது.

காற்றும் கழுகும் மோதிக் கொள்ளும்போது
எதுதான் இறுதியாகக் கிட்டும்?
இவ்வாறே நானும் நீயும் நம்மை எதிர்
கொண்டு, புரண்டு பின் உறங்கிப் போவோம்.

பல இரவுகள் நிலவும் நட்சத்திரங்களுமின்றித்
தோன்றும்போது நாமும்
ஒருவர் மற்றவரிடமிருந்து நீண்ட தொலைவு
விலகிச் செல்லும்போது
பிரிந்து கிடக்கத் தோன்றுமோ.

(மான்ட்ரியல் நகரில் பிறந்த நவீன ஆங்கிலக் கவிஞரான லியனார்ட் கோஹன் 'பீட்' பாடகர்களை அடியற்றித் தமது கவிதைகளை எழுது பவர். அமைப்புகளுக்கெதிரான குரலை வெளியிடும் தம் கவிதைகள் மூலம் புதிய மதிப்பீடுகளுக்கான முயற்சிகளை உருவாக்கவும் பாடுபடக்கூடியவை அவை. இனக் கலவரங்களுக்கெதிரான மிகவும் அரசியல் நிலைப்பாடுடைய குரல் இவரது. பத்து கவிதைத் தொகுதிகளுக்குமேல் பதிப்பித்துள்ளார்.)
Thanks:www.keetru.com

No comments:

ஐங்கோலத்தைலம் - நூல்விமர்சனம்

ஐங்கோலத்தைலம் என்ற நூலில்158 கவிதைகள் உள்ளன.பெரும்பான்மையான கவிதைகள் வாழ்வின் அனுபவங்களை பேசும் கவிதைகள்.இந்த நூலின் தலைப்பே பெரும் கதை சொல்...