Tuesday, August 25, 2009

உறுபசி- நாவல் (குறுநாவல்)


தனிமையின் கசப்பும் நிராகரிப்பும் நிறைந்த என் வாழ்வில் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. பெருத்த அச்சம் ஏற்படுத்தக் கூடிய தனிமை எனக்கு பலநாட்கள் வாய்த்திருந்த போதிலும் வாசிப்பைக் காட்டிலும் எழுதுவதில் அக்கறை எடுத்துக் கொண்டேன். திரு.எஸ்.ராமகிருஷ்ணனோடு உண்டான வாசிப்புத் தொடர்பிலிருந்து வாசிப்பின் அடர்த்தி பெருகிக் கொண்டு வருவதை இப்பொழுது என்னால் உணரமுடிகிறது. அது உறுபசி நாவலின் வழியே நீண்டு கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வனைத் தவிர நாவல் வாசிப்பு குறித்தான எந்த ஞாபகங்களும் என்னிடம் இருந்ததில்லை. நாவல் வாசிப்பு ஒரு வெறுப்பின் சின்னமெனவும், எனது கால அளவுகளை வெட்ட வந்த கருவிகளெனவும் ஒதுக்கியே வந்தேன். நண்பர்கள் சிலர் அது தவறு என்று குறுக்கிட்டாலும் நாவல் புத்தகங்களின் மீதுண்டான என் பார்வை கசப்பும் வெறுப்பும் மிக்கதாகவே தொடர்ந்தது.. பிந்தி ஒருநாள் இணையத்தில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி படித்துப் பாருங்கள் என்று யாரோ ஒருவர் குறித்திருந்தார். அவரது நோக்கம் நாவல் படிக்க வைப்பதற்காக மட்டுமல்ல. அது ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உறுபசி. நாவலை வாங்கிய பிறகு உறுபசி என்றால் என்ன என்று தேடத்துவங்கினேன். நண்பர்கள் கூட உறுபசி என்றால் என்ன என்று கேட்கத் துவங்கினார்கள். பசி உறுதல் என்று சொல்லி சமாளித்து வைத்தேன்.

உலர்ந்த சொற்களால் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்ற வரியே நாவலை வாங்கத் தூண்டியது என்றும் சொல்லலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் உலர்ந்த எழுத்துக்கள் நன்கு காய்ந்த பாறைகளில் படர்ந்திருப்பதாகவும் அதை என் எச்சிலற்ற நாவில் துடைத்து இழுப்பதாகவும் நாவல் படிக்கையில் உணர்ந்தேன். சம்பத் இன் இறப்பை ஒட்டிய நண்பர்களின் நினைவுகளும் சம்பத்தின் காய்ந்த வாழ்வுமே நாவலின் நரம்பாக இருக்கிறது. ஒவ்வொரு பக்கங்களைத் திருப்புகையிலும் ஒரு வெறுப்பின் அடையாளம் இருப்பதாகத் தோன்றி அது எழுத்துக்களின் வளைவுகளில் நின்று என்னையே உமிழ்வதைப் போன்றும் இருக்கிறது. . நாவல் குறித்தான கசப்பை மெல்ல மெல்ல மேகங்கள் விலகுவதைப் போல உறுபசி விலக்கி வந்ததை சில மணிநேரங்களில் உணரமுடிந்தது.

சம்பத்தின் கல்லூரி நண்பர்களான ராமதுரை, அழகர், மாரியப்பன் மற்றும் யாழினி ஆகியோரின் சம்பத் குறித்தான நினைவுகளில் நாவல் பயணிக்கிறது. கல்லூரியில் தமிழ் இலக்கியம் விரும்பிப் படிக்கும் சம்பத்தோடு ராமதுரை, மாரியப்பன், அழகர் மூவரும் நிர்பந்திக்கப்பட்டு படிக்கிறார்கள். சம்பத்தின் வித்தியாசமான வாழ்க்கையும் விசித்திர எண்ணங்களும் மூவரையும் நன்கு கவர்கிறது. சம்பத் யாழினியின் காதலனாக, கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஈடுபடுகிறான். கம்பராமாயணத்தைக் கிழித்து எரிக்கிறான். அரசியல் கூட்டங்களில் பேசுகிறான். நன்கு மது அருந்தி தன்னைத் தானே ஒதுக்கிக் கொள்ளும் நிலைக்கும் வந்துவிடுகிறான். அவனது கல்லூரி வாழ்க்கை நிராசைகளோடும் மிகுந்த களிப்புகளோடும் செல்லுவதாக இருக்கிறது.

பின்னர் அழகரோடு சொந்த வீட்டுக்குச் செல்லும் போது தன் தந்தையையே வெறிமிகுதியால் விறகுக்கட்டையில் சாத்துகிறான். லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமுள்ளவனாக இருக்கிறான். அவன் தங்கியிருக்கும் லாட்ஜுக்குக் கீழே உள்ள ஒரு டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஜெயந்தியுடன் உண்டான பழக்கம் சட்டென்று திருமணத்தில் முடிகிறது. அவர்களது திருமணம் தனித்து விடப்பட்ட இருவரின் மனநிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. திருமணத்துக்குப் பிந்திய சம்பத்தின் காமம் கடந்தகால நினைவுகளின் மோதலாக இருக்கிறது. யாழினியின் நிராகரிப்பு அவனது வெறிமிகுந்த காமத்தின் தீனியாக மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சம்பத் ஒரு கிரைம் பத்திரிக்கையில் பிழை திருத்துபவனாக செல்கிறான். அங்கே குரூரமான உலகத்தில் தான் இயங்குவதாக எண்ணிக் கொள்கிறான். அவனது நிலைகொள்ளாத எண்ணங்கள் அக்கூர்மையான குரூரத்தின்பால் அலைகழிக்கப்பட்டு வேலையை உதறுகிறான். அதன் விளைவுகள் அவனை ஒரு மனச்சிதைவுக்கு உள்ளாக்கியிருந்தது. சம்பத் தன் வாழ்வு நெடுகவும் எந்த ஒரு தொழிலையும் விரும்பிச் செய்ததாக இல்லை. அது பூச்செடிகள் வளர்ப்பதாகிலும், ஏன், லாட்டரி வாங்குவதாகிலும் கூட.

சம்பத்தின் மனைவி ஜெயந்தியின் தாம்பத்திய வாழ்வு மிகக்குறுகியதாகவும், சந்தோஷங்களும் வருத்தங்களும் மிகுந்ததாகவும் இருக்கிறது. சம்பத் மருத்துவமனையில் சுருண்டு படுத்திருந்த பொழுது அவளது அலைக்கழிப்பும், தனிமையும் சம்பத்தின் வாழ்வுக்குப் பின்னர் ஏற்படும் மாற்றங்களும் மனதில் தாக்கம் ஏற்படுத்தாமல் இல்லை. ஒருவகையில் சம்பத்திற்கு ஏற்றவள் அவளாக மட்டுமே இருக்கமுடியுமென்று நினைக்கிறேன். யாழினி மிகக் கச்சிதமாக அவனைப் பற்றி தெரிந்து கொண்டு கழற்றிவிடுகிறாள். சம்பத், ஜெயந்தி தனக்குச் சரியானவளாக இருப்பாள் என்று கச்சிதமாக மணமுடிக்கிறான்.

இறப்புக்குப் பின்னர் ஏற்படும் சலனங்கள் குறித்து வெகுநாட்களாக சிந்தித்திருக்கிறேன். இந்த உலகம் ஒவ்வொருவருக்கும் தகுந்த வேலை கொடுத்திருப்பதாகவும் அந்த வேலையின் விளைவுகள் இறப்பிற்குப் பின்னர் ஒளிக்கவேண்டும் என்பதாகவுமே நினைத்துக் கொள்கிறேன். சம்பத்தின் நண்பர்கள் அப்படியானதொரு கலக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.

ஒருவகையில் சம்பத் ஐப் போன்றுதான் நாமெல்லாமே. மனச்சிதைவை நமக்குள்ளாகவோ, அல்லது நம் எழுத்துக்கள், கோபங்கள், ஏன் சந்தோஷங்களின் வழியேவோ கரைத்துவிடுகிறோம். நமக்குள் நாமே உருகி புதியவனாய் மாறிக் கொள்கிறோம். சம்பத்தின் இச்சைகளைப் போன்றே நமக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் சம்பத் எந்த தவறும் செய்யவில்லை என்றேதான் நினைக்கிறேன்.

நாவலின் வழிநெடுகவும் வன்மத்தின் வண்ணம் ஊறிக் கொண்டே செல்கிறது. அது அடர்த்தி மிகுந்து கழுத்தை இறுக்குவதாகவும்கூட தெரிந்தது ( சட்டென்று நாவலை மூடி வைத்துவிட்டேன். ) திண்ணையெங்கும் தழுவிக் கிடக்கும் வெப்பத்தின் ஊடாக நாவலின் இளஞ்சூடு வாசிக்க இயலாத வெறுப்பைத் தோற்றுவித்ததை உணரமுடிகிறது. எழுத்துக்களை இவ்வளவு சூடாக எழுதமுடியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். நாவல் படிக்கப் படிக்க என்னோடு ராமதுரையும், மாரியப்பனும், அழகரும் அவர்கள் சென்ற மலையிடுக்குகளில் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். சம்பத்தோடு உண்டான நினைவுகளும் நிகழ்வுகளுமாக எழுத்துக்கள் சுற்றிக்கொண்டே இருந்தன.

சம்பத் எனும் தனிமனித வாழ்வின் கசப்புகளும், வன்மங்களும், மனச்சிதைவும் நாவலின் பிளந்த பாதையில் காணக்கிடைக்கிறது. புத்தகத்தைப் படித்து முடித்தபிறகும் சம்பத்தின் மனைவி ஜெயந்தியைப் போன்று நாமிருந்தால் எப்படி இருந்திருக்கமுடியும் என்று கேட்டுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவளது ஒருபக்க வாழ்வு ஏன் முடிந்துவிட்டது என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நிகழ்காலத்தின் மீதுண்டான தாபமும் குரூரமும் அலைகளைப் போன்று முட்டி முட்டிச் செல்கிறது.

இன்னொரு வகையில் சம்பத் ஏன் இப்படித் திரிகிறான் என்றும் கேள்வி எழுகிறது. அவனது எண்ணங்கள், நடத்தைகள், எல்லாமே விசித்திரமாகவோ அல்லது கசப்பான மனிதர்களைக் கண்டிராத புதிய அனுபவத்தையோ தோற்றுவிக்கிறது. அவனது காமம் ஏன் அவ்வளவு உமிழ்கிறது? அல்லது எல்லோருடைய காமமும் அப்படியான ஒன்றா?

நாவலின் ஓரிரு இடங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் தடுமாறியிருக்கிறார். அழகர் கதை சொல்லுவதாக நாவல் செல்கிறது. ஓரிடத்தில் மாரியப்பன் என்று குறிப்பிட்டு, அழகர் மீண்டும் தொடர்வதாக செல்கிறது... நம்பமுடியவில்லை. ஒருவேளை அச்சகப்பிழையாக இருக்கலாம் என்று கருதுகிறேன். அல்லது எனது வாசிப்பனுபவத்தின் குறைபாடாகவும் இருக்கலாம். சொல்லுவதற்கில்லை. அதைப் போன்றே நாவலும் சிறியதாக இருக்கிறதோ என்ற உணர்வும் இருக்கிறது. ஆனாலும் உறுபசியை இன்னும் நீட்டிக் கொண்டிருக்க முடியாதுதான்..

உறுபசி, கடும் பசிக்கு முன்னர் வயிறு ஒலிக்கும் ஓசையைப் போன்று மனதிற்குள்ளிருந்து சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அது நிரப்பமுடியாத பசியை சுமந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. புத்தகத்தை மூடி நிதானிக்கையில் மனமூலையெங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் இறைந்து கிடப்பதை மட்டும் உணரமுடிகிறது.

சாருவின் 'தப்புத்தாளங்கள்'


“உலகிலேயே அதிக உழைப்பை எடுத்துக் கொண்டு அதிக இழப்பை ஏற்ப்படுத்தக் கூடிய தொழிலான இந்த எழுத்துத்துறைக்கு வந்திருக்காவிட்டால் நான் ஒரு பயணியாகியிருப்பேன்.” - எழுத்து தொழில் மூலம் எத்தனை அவமான சந்திருந்தால் இப்படி ஒரு வார்த்தை வரும்.

நான் சாருவின் எழுதுக்களை படித்திருந்தாலும் அவர் மேல் எனக்கு பெரிய ஈடுபாடு ஒன்றுமில்லை. ஆனால், அவரின் 'தப்புத்தாளங்கள்' புத்தகம் படித்த பிறகு அவர் மேல் தனி மரியாதை வந்திருக்கிறது. சாருவை திட்டி எழுதுபவர்கள் தயவு செய்து சாரு எழுதிய இந்த புத்தகத்தை படித்து விட்டு எழுதுங்கள்.

எஸ்.ராமகிருஷ்ணனின் "தேசாந்திரி" புத்தகத்தில் இந்தியாவில் நாம் மறந்து போன இடங்களை பற்றி விளக்குகிறார். சாருவின் 'தப்புத்தாளங்கள்' புத்தகம் மூலம் உலகத்தின் இருக்கும் ஒரு சில கருப்பு சம்பவங்களை தெரிய வைத்திருக்கிறார்.



'ஐரோப்பிய அக்ரஹாரம்' கட்டுரையில் ஜெர்மனியர்களின் இயந்திர வாழ்க்கை, பாரிஸ்யில் இருக்கும் கத்தாகோம்ப் (மனித எழும்புகளால் கட்டப்பட்ட சாம்ராஜியம்), பாலைவன சிறைச்சாலை என்று ஒவ்வொன்றாக அழகான வர்ணித்திருக்கிறார்.

குறிப்பாக 'தொழுகை-தவம்-துறவு' கட்டுரையில் ஒரு மனிதனை எவ்வளவு அருவருப்பாக கொல்ல முடியுமோ அவ்வளவு அருவருப்பான முறையில் கொலை செய்த்திருப்பதை காட்சியாக கண் முன் கொண்டு வந்திருக்கிறார். அரபிய எழுத்தாளர்கள் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு இருப்பதை இந்த புத்தகத்தில் மூலம் பதிவு செய்திருக்கிறார். இதில் குறிப்பிடும் ஒவ்வொரு சம்பவங்களும், கொடூர மரணங்களும் விவரிக்க இயலாது. வாசகர்கள் படித்து உணர வேண்டியது.

ஒரு இடத்தில் " தற்கொலைக்கு தப்பித்துக் கொள்வது மரணத்தை விட மோசமானது" என்று குறிப்பிடும் போது ‘சாருவின் பச்’ தெரிகிறது. அந்த வலி தற்கொலையில் தோற்று வாழ்பவர்களுக்கே தெரியும்.

இவை எல்லாவற்றிருக்கும் மேலாக அவர் இந்த புத்தகத்தில் குறிப்பிடும் நாவல்கள் பெரிய பட்டியலிடலாம். என்னால் முடிந்தவரை குறிப்பிட விரும்புகிறேன்.

Cities of Salt- அப்துல் ரஹ்மான் முனிஃப்
The Wounded Civilzation – வி.எஸ்.நைப்பால்

Louis Ferdinand Celine (1894-1961) எழுதிய
Journey to the End of the Night (1932)
Deathg in the Instalment plan (1936)
North (1960)

லான்ஹீன்ஸ் எடுத்த முக்கியமான படங்கள்
The Blood of the Condor (1968)
The Corage of the People (1971)
The Principal Enemy(1973)
Getout (1977
The flags of Down (1983)
The Clandestine Nation (1989)

லத்தீன் அமெரிக்கவின் புகழ்பெற்ற ஆவணப்படம் :-
The Battle of Chile(Paticio Guzman,1976)
The Hour of the Furnaces (ஃபெர்னாந்தோ ஸொலானால், அர்ஜென்டீனா,1967)

Bukowsky – Post office
Zayanab at Ghanzali – Day from my life (1977) - இவரது சிறை குறிப்புகள்
Nawal El Saadaw – Memoirs from the Women’s Prison, 1986

மாலிகா ஔஃபிகர் - Stolen lives : 20 years in a Desert jail.
Tahar Ben Jellown – This Building absence of Light.
My Dear Jamal – Joyce Edling அவர்கள் Jamal Benomar எட்டு வருட சிறை அனுபவங்களை எழுதியிருக்கிறார்.

அப்தல்லத்தீப் லாபி - Rue du Retour (French) (ஆங்கிலத்தில் - Street of Return ).
இவரின் மற்ற நாவல்கள்…
1. The Eye & The Night (1969)
2. Wrinkles of the Lion (1989)
3. The Bottom of the Jar (2003)

Jill Gay – The Patriotic Prostitutes

இந்த நூலில் "அடிமையின் கனவு" மொழிபெயர்ப்பு சிறுகதை நன்றாக இருந்தது. இத்தனை நாவலை பற்றி குறிப்பிடும் சாரு அவர்கள், வம்பு சண்டை தவிர்த்து இந்த புத்தகங்களில் இரண்டையாவது மொழிபெயர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள்


“வயதும் ஆசையும் வளர, வளர கால்கள் வீட்டில் இருப்புக்கொள்ள மறுக்கின்றன.”- இது ஒரு உண்மையான ‘தேசாந்திரி’யின் வார்த்தை.

‘அறை எண்.305ல் கடவுள்’ படத்தில் ஒரு வசனம் வரும். பிரகாஷ் ராஜ் 'டெல்லி' கணேஷ்யிடம் " பரிசல்காரனுக்கு பணம் கொடுத்து நடு கடல் வரைக்கும் போய் இருக்கீங்களா..! என்னைக்காவது நாலும் பிச்சக்காரங்களுக்கு சாப்பாடு போட்டிருக்கிங்களா..!!" என்று கேட்பார். இத்தனை நாள் வாழ்க்கை ரசிக்கிறோம் என்ற பெயரில் எதுவும் செய்யாமல் இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு குத்தும். அந்த குற்றவுணர்வு எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் எனக்குள் நிகழும் சம்பவம் இது.

இவர் இதில் குறிப்பிட்ட இடங்களை எல்லாம் லீவ் போட்டு பார்த்துவிட வேண்டும் ஆசை. தொடர்ந்து இரண்டு நாள் லீவ் கேட்டாலே பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். லீவ் போட்டாலும் குடும்பத்தை விட்டு எஸ்.ராமகிருஷ்ணன் போல் தனியாக சுற்றிப்பார்க்கவும் முடியாது. இப்படி பல வேலை நிமத்தங்களில் முடிக்கிடக்கும் என் கண்களை அவ்வபோது எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் தான் திறக்கிறது.



சீங்கப்பூர் பற்றிய பயணக்கட்டுரை, அமெரிக்கா போகலாமா என்ற தலைப்பில் புத்தகங்களில் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள், குறிப்புகள் இருக்கும். அந்த புத்தங்களும் விற்றுப்போகும். ஆனால், 'இந்தியாவை' பற்றிய பயணக்கட்டுரை நாம் பெரும்பாலும் படிக்க நினைப்பதில்லை. படிப்பதை விட பார்ப்பதே சிறந்தது என்று முக்கியமான இடங்களை நேரில் பார்க்க செல்கிறோம். நாம் பார்க்க நினைக்காத இடங்களையும், சரித்திரம் மறந்து போன இடங்கள் பற்றியும் எஸ்.ராமாகிருஷ்ணன் எழுதிய 'தேசாந்திரி' நூலில் படித்தேன். ஒரு எழுத்தாளர் பார்க்க நினைக்கும் இடத்திற்கும், சராரி மனிதன் ஒரு இடத்தை பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று அந்த புத்தகம் படித்து முடித்த பிறகு உணர முடிந்தது.

நம் பாடப்புத்தங்களில் ஒரு வரி செய்தியாக, தகவலாக வந்த இடங்களை பற்றி குறிப்பிட்டு அந்த இடத்தில் மகத்துவத்தை சொல்கிறார். வரலாறு இடங்களை மறப்பதாலும், அழிப்பதாலும் வருங்கால சங்கதியர்களுக்கு நாம் எப்பேர்ப்பட்ட தீங்கு செய்கிறோம் என்று இதில் உணர முடிகிறது.

1.சாராநாத்தின் புத்தசிலை
2.நல்லதங்காள் விழுந்த கிணறு
3.மணியாச்சி ரயில் நிலையம் ( கலெக்டர் ஆஷ் வாஞ்சிநாதனால் சுடப்பட்ட இடம்)
4.புனித தாமஸ் மலை
5.அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம்
6.கூவாகத்தில் நடக்கும் அரவாணிகள் விழா
7.கன்னியாகுமரி மாவட்டத்தின் கிரிப்பாறை மலைப்பகுதியில், வெள்ளாம்பி என்ற இடத்தில் இருக்கும் ஆதிவாசிகள்.
8.கடலில் முழ்கிய தணுஷ்கோடி
9.கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட புளிய மரம்
10.பழநி இருக்கும் குதிரை வண்டி
11.கொச்சியில் உள்ள ஒடேசா என்ற மக்கள் சினிமா இயக்கம்
12.கடற்கரை மணல்
13.கணித மேதை ராமானுஜன் வாழ்ந்த வீடு
14.அடையாறு ஆலமரம்.

மேல் குறிப்பிட்ட ஒரு சில இடங்கள் நாம் அன்றாடம் சென்னையில் பார்த்து வரும் இடங்கள் தான். அந்த இடத்தை பற்றி தெரிந்திருந்தாலும், எஸ்.ராமகிருஷ்ணன் போல் ரசிக்க முடியுமா என்று தோன்றவில்லை.

“சாராநாத்தில் ஒரு நாள்” கட்டுரையில் " இதுவும் புத்தர் சிலை தான். ஆனால், இன்னமும் இது சிற்பமாகவில்லை” என்ற வரி வரும். இந்த வரியை உள்வாங்கி நான் எழுதியது.

“மனிதன் - இயங்கிக் கொண்டு இருக்கும் இயந்திரம்
இயந்திரம் - இயங்காமல் இருக்கும் மனிதன்”

இயந்திரம் செய்யும் சில வேலைகளை கூட நாம் செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்ட இந்த வரிகள்.

வண்ணநிலவன் நாவல்கள்


பல எழுத்தாளர்கள் வருடத்திற்கு நான்கு புத்தகங்கள் எழுதுவார்கள். அந்த புத்தகங்கள் வந்த சுவடே தெரியாமல் இருக்கும். ஆனால், ஒரு சில எழுத்தாளர்கள் நான்கு வருடத்திற்கு ஒரு புத்தகம் தான் எழுதுவார். அவர் எழுத்துக்கள் நம்மை பெரிதும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர்களின் ஒருவர் தான் வண்ணநிலவன் அவர்கள். இவருடைய 'கடல்புறத்தில்' நாவலை படித்த பிறகு இவர் எழுதிய மற்ற புத்தகங்களை தேடிய போது மிக குறைவான புத்தங்கள் தான் கிடைத்தது. நாற்பது வருட எழுத்துறை வாழ்க்கையில் இதுவரை ஐந்து நாவல்கள் தான் எழுதியுள்ளார்.

கம்பாநதி

இது ஒரு நதியை பற்றிய கதையல்ல. நதியை சுற்றி வாழும் மனிதர்கள் பற்றியது. 'கம்பாநதி' அருகில் வாழும் மனிதர்களின் ஆசை, கனவு, வாழ்க்கை பற்றியது. நாவலில் நாயகன், நாயகி என்று யாருமில்லை. எல்லோரும் சம்பவத்தால் பின்னப்பட்டவர்கள். முக்க்கிய கதாபாத்திரங்களான பாப்பையா, சுந்திர பிள்ளை, சௌந்திரம், சிவகாமி, கோமதி போன்ற பாத்திரங்களை சொல்லலாம்.

வேலை தேடி அளையும் பாப்பையா, அவனை காதலித்து வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொள்ளும் கோமதி,குடும்பத்தை பற்றி கவலை மனதில் இருந்து இளசுகளுடன் சீட்டு விளையாடு சுந்திரபிள்ளை, சிவகாமி, சௌந்திரம் என்று பாத்திரங்களை நன்றாக பதிய வைத்திருக்கிறார்.

இந்த நாவல் எழுதப்பட்ட காலம் 1979. அன்றைய காலக்கட்டத்தில் ஒரு இளைஞனின் முக்கிய தேவையான 'வேலை' எப்படி அவன் வாழ்க்கையை திருப்பி போடுகிறது என்று பாப்பையா கதாப்பாத்திரம் மூலம் வண்ணநிலவன் காட்டியிருக்கிறார். இறுதியில் அவன் இராணுவத்தில் சேர்வதை சொல்லும் போது அவனின் தேசபக்தி பற்றி எதுவும் சொல்லவில்லை. பாப்பையா கண்ணுக்கு முன் இருப்பது கோமதியை கைப்பிடிக்கும் கனவு தான். ஆனால், அவன் இராணுவத்தில் சேர்ந்ததும் அவள் வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.

அடிப்படை தேவை கிடைத்துவிட்டால், ஆசைப்பட்டது எல்லாம் கிடைத்து விடாது என்பதை இந்த நாவல் அழகாக உணர்த்துகிறது.

ரெயினீஸ் ஐயர் தெரு

வசனமில்லாத நாவல்.வேகமில்லாமல் மெதுவாக நகர்கிறது. சில இடங்கள் நகர்வதாக தெரியவில்லை. சிலருக்கு இது பிடிக்காமல் போகவும் வாய்ப்புல்லது. 'ரெயினீஸ் ஐயர் தெரு' வாழும் கதாப்பாத்திரங்களை ஒவ்வொரு வீடாக விவரிக்கிறார். தன் வர்ணனை மூலம் கதாப்பாத்திரங்களின் இயல்பை சொல்ல முயற்சித்திருக்கிறார். சில சமயம் கட்டுரை நூல் படிப்பது பிம்பம் தோன்றியது. சில கதாப்பாத்திரங்கள் மனதில் பதியவில்லை.

இதனாலே கதை எந்த இடத்திற்கு நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போல் இருக்கிறது. அதனால் தான் இந்த நாவலுக்கு 'ரெயினீஸ் ஐயர் தெரு' என்று பெயர் வைத்தாரோ என்னவோ !!

இரண்டு நாவலும் வண்ணநிலவனின் 'கடல்புறத்தில்' இணையாக சொல்லமுடியவில்லை. இருந்தாலும், இரண்டு நாவலும் படிக்க வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

'சூன்யப்புள்ளியில் பெண்’ நாவலில்


“எந்தவொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்க இயலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது அவசியம்!”

- ‘சூன்யப்புள்ளியில் பெண்’ நாவலில் இருந்து…

பெண்ணிய சொல்லாடல்களும் பெண்ணிய புரட்சியும் காலந்தோறும் நடந்தபடியே உள்ளன. அவை அந்தந்த காலகட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவே தவிர, தொடர்ந்து பேரியக்கமாக வளர்ந்து மாபெரும் சமூக மாற்றத்​தை ஏற்படுத்த தவறிவிடுகின்றன. சாதி ஒழிப்பு, பிராமணீய எதிர்ப்பு, பெண் விடுதலை உள்ளிட்ட புரட்சிக்கருத்தாக்கங்களை ஏற்படுத்தியவர் பெரியார். அவர் வழிவந்த திராவிட இயக்கம் அமைப்பு ரீதியாக வலுவாக வளர்ந்தும், திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால் பேரியக்கமாக வளரவேண்டிய பெரியாரின் கருத்துக்கள் நீர்த்துப்போய் வெறுமனே பிராமணீய எதிர்ப்பு என்பது மட்டுமாக எஞ்சி நிற்கிறது. சாதி ரீதியிலான ஒடுக்குதல்களும் பெண்கள் மீதான சமூக வன்முறைகளும் இன்று வடிவம் மாறி முன்பைவிட கொடூர முகத்துடன் வளைய வருகின்றன.

பெண்கள் கடல் தாண்டிப்போய் பணம் சம்பாதிக்கும் இக்காலக்கட்டத்திலும்கூட, ஒரு பெண்ணின் மறுமணம் என்பது கனவிலும் நினைத்துப்பார்க்கக்கூடாத விஷயம்தான்! எட்டு மாத கைக்குழந்தையானாலும் சரி, எண்பது வயது மூதாட்டியானாலும்சரி பெண்ணுடல் எப்போதும் இச்சைக்குரியதாகவே உள்ளது ஆண்களுக்கு. வீடு, பள்ளி,கல்லூரி, பணியிடம் என சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண் சுரண்டலுக்கு உள்ளாகிறாள். பெண் ஒடுக்குமுறை குறித்து நாம் நிறைய பேச வேண்டியுள்ளது. பெரியார் கருத்துக்களை கொண்டு செல்ல அவருடைய நிறுவன வழிதோன்றல்களால் இனி முடியாது என்னும் உண்மையோடு சூன்யப்புள்ளியல் பெண் நாவல் குறித்து எனது பகிர்தல்களை உங்கள் முன் வைக்கிறேன். சூன்யப்புள்ளியில் பெண் நாவலில் வரும் ஃபிர்தவுஸின் வாழ்க்கைச் சூழல், அவள் எதிர்க்கொள்ளும் வன்முறைகள் நம் சூழலுக்கும் பொருந்திப்போவதாலேயே நாவல் குறித்து பேச விரும்புகிறேன் .

எகிப்தின் நைல் நதியோரம் வாழும் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மூத்தவள் ஃபிர்தவுஸ். வறுமை சூழ்ந்த அந்த குடும்படும் அவளைச்சுற்றியுள்ள சமூகமும் சிறந்த அடிமையாக வாழ்வதற்கான அடிப்படையை குழந்தைப்பருவம் முதலே கற்றுக்கொடுக்கத் தொடங்குகின்றன. வீட்டு வேலைகளை செய்வதற்கும் உடன் பிறந்தவர்களை கவனிப்பதற்கும் தன் வீட்டிலேயே அடிமையாக பணிக்கப்படுகிறாள். எதிர்பாராத சூழ்நிலையில் அப்பாவும் தொடர்ந்து அம்மாவும் இறந்துவிட, உடன் பிறந்தவர்களும் வறுமை காரணமாக குழந்தைகளாகவே பலியாகிடும் போது மாமாவின் பராமரிப்பில் விடப்படுகிறாள் ஃபிர்தவுஸ். அவளின் குழந்தைமையை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட அதே மாமாவுடன் எகிப்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். மாமா தன்னை வேலைக்காரியாக, பாலியல் அடிமையாக நடத்தினாலும் பள்ளிக்கு அனுப்பி வைப்பவனாகவும் இருக்கிறான். நடுநிலைப்பள்ளி வகுப்புகளை முடிக்கும் ஃபிர்தவுஸை, அவசரஅவரசமாக 60 வயது கிழவனுக்கு கணிசாமான வரதட்சணைத் தொகைக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் மாமாவும் அவரது மனைவியும். குணத்திலும் உருவத்திலும் அருவருப்பை ஏற்படுத்தும் அந்தக்கிழவனின் அடிஉதைகளை தாங்கப்பொறுக்காமல் வீட்டை விட்டு ஓடிப்போகிறாள் ஃபிர்தவுஸ்.

மற்றவர்களை பசியில் விட்டு, தான் மட்டும் உண்டு ஏப்பம் விடும் அப்பா, அப்பாவுக்குரிய இடத்தில் இருந்துகொண்டு தன் உடலைச் சுரண்டிய மாமா, பேராசைப் பிடித்த கருமி கணவன் என அதுவரை எதிர்கொண்ட ஆண்களைவிட, வீட்டை விட்டு வெளிவந்த பிறகு ஃபிர்தவுஸ் எதிர்கொள்ளும் ஆண்கள் எந்த வகையிலும் வேறுபட்டவர்கள் அல்ல. வேலை வாங்கித்தருகிறேன் என்ற பெயரில் தானும் சுரண்டி, அவளை விற்பனை பொருளாக்குகிறான் ஒருவன். அவனிடமிருந்து தப்பித்துப்போனவள் முற்போக்கு பேசுபவனின் காதலில் விழுகிறாள். அவனுடைய முற்போக்குத்தனம் படுக்கை அறையை பகிர்ந்துகொண்டு, பணம் நிரம்பப் படைத்த இன்னொருத்தியுடன் செல்கிறது. சோர்ந்துபோகும் ஃபிர்தவுஸ், மேல்தட்டு வர்க்க பாலியல் தொழிலாளி ஒருத்தியின் மூலம் தன்னுடலுக்குரிய விலையை தானே நிர்ணயிப்பவளாக மாறுகிறாள். அன்பு, காதல் என்ற பெயரில் இலவசமாக தன்னைப் பயன்படுத்திக்கொள்ள இனி ஒருபோதும் எந்த ஆணையும் அனுமதிப்பதில்லை என முடிவெடுக்கிறாள். அரபு மன்னர்களையும் அரசு உயர்பதவியில் இருப்பவர்களையும் மகிழ்விக்கும் தேர்ந்த மேல்தட்டு பாலியல் ​தொழிலாளி ஆகிறாள் அவள். தனக்குரிய தானே நிர்ணயித்து வாழ்ந்து கொண்டிருப்பவளின் வாழ்க்கையில் அரசியல் செல்வாக்குமிக்க தரகனின் தலையீடு ஏற்படுகிறது. தனக்குரிய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க முடியாதவளாய் சந்தர்ப்ப வசத்தில் தரகனை கத்தியில் குத்திக் கொல்கிறாள். ஃபிர்தவுஸை கைது செய்து குற்றவாளியாக்கி தூக்கு தண்டனை விதிக்கிறது அரசு. நீதி வலுபடைத்தவர்களுக்கானது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.

எகிப்து உளவியல் மருத்துவரும் பெண்ணிய எழுத்தாளருமான நவ்வல் எல் ஸதாவி சிறையில் இருந்தபோது சந்தித்த தூக்கு தண்டனைக் கைதி ஃபிர்தவுஸ். ஓர் எளிய விவசாயப் பின்னணியில் ஆரம்பிக்கும் ஃபிர்தவுஸின் வாழ்க்கை திசை மாறி இறுதியில் அசாதாரணமாக முடிகிறது என்பதை அழுத்தமாக கூறுகிறது இந்நாவல். ஆரம்பத்திலும் நாவல் முடியும்போது மட்டும் ஆசிரியர் வந்துபோகிறார். மற்றபடி நாவல் முழுக்க ஃபிர்தவுஸின் பார்வையிலேயே செல்கிறது, சுயசரிதைக்குரிய நடையுடன். ஃபிர்தவுஸின் மனஉணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது நவ்வலின் எழுத்து.

ஃபிர்தவுஸின் வாழ்க்கையில் சற்றுநேர பூன்னகையைப் பூக்க வைத்தவர்கள் பால்ய வயது தோழனும் நடுநிலைப் பள்ளியில் வகுப்பு ஆசிரியை இக்பாலும்தான். தன் வாழ்க்கையை ஒவ்வொரு கட்டத்திலும் சூன்யமாக்கியது ஆண்களே என்பது ஃபிர்தவுஸின் நிலைப்பாட இறுதியில் நிற்கிறது. பெண்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆண்தான் பின்னணி என்பது அவள் முன்வைக்கும் முடிவு. “நீங்கள்(ஆண்கள்) எல்லோரும் பயங்கர குற்றவாளிகள். நீங்களெல்லோருமே அப்பாக்கள், மாமாக்கள், கணவர்கள், தரகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், எல்லாவகையான தொழில்களை செய்யும் எல்லா ஆண்களும்…”

ஆண்வயப்பட்ட சமூகத்தில் பெண்ணுடல் மீது திணிக்கப்படும் வன்முறைக்கு ஆவணமாக இருக்கிறது இந்நாவல். இதுபோன்ற ஆயிரம் ஆவணங்களை நம் சமூகத்திலிருந்தும் எடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டுவதே இந்நாவல் குறித்த எனது இந்தப்பதிவின் நோக்கம். மறுக்கிறவர்கள் தினத்தந்தி கட்டம்கட்டி எழுதும் “அழகி பிடிபட்டார்” கதைகளைப் படிக்காமல் அழகிகளின் மறுபக்கத்தைப் படித்துப் பாருங்கள்!

சூன்யப் புள்ளியில் பெண்

நவ்வல் எல் சதாவி

தமிழில் : லதா ராமகிருஷ்ணன்
வெளியீடு
உன்னதம்-638455
ஆலந்தூர் அஞ்சல்

கவுந்தப்பாடி

ஈரோடு மாவட்டம்

பேசி-9940786278

சாமான்யரின் வெறி - பணி மலையாளபடம்

ஜோஜு ஜார்ஜ், பணி(வேலை) திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமாகிறார், சரியான வேகத்தில் நிகழ்வுகள் வெளிப்படும் ...