Latest News

பேசுதல் அதற்கின்பம்

Monday, January 18, 2010 , Posted by பிறவி at 11:39 PM


தமிழேறு பதிப்பகம் மிகச்சிறப்பாக வெளியிட்டு வரும் இலக்கிய முன்னோடிகள் நூல் வரிசையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் நூல், மு. முத்தையன் எழுதிய “பேசுதல் அதற்கின்பம்”. இந்நூல், தமிழிலக்கிய வரலாற்று நோக்கில் மிக முக்கியமான நூலாகும். அரை நூற்றாண்டு காலம் உலக இலக்கிய சூழலில் மிக முக்கியமான வடிவமாக இருந்த கலவை இலக்கியம் என்ற இலக்கிய வடிவத்தின் விதையாக திகழ்ந்த நூல் இது.

இந்நூலின் இலக்கிய மதிப்பீடுகள் குறித்து நிறையவே எழுதப்பட்டுவிட்டன. இந்த நூல் தமிழக இலக்கிய பரப்பில் செலுத்திய தாக்கத்தினை குறித்து இந்த சிறு கட்டுரையில் ஆராய விரும்புகிறேன். முதலில் சுருக்கமாக இந்நூலினை குறித்து பேசுவோம். 2035ஆம் ஆண்டு பேசுதல் அதற்கின்பம் வெளியானது. சங்க இலக்கிய பாடல்களில் இருந்து துணுக்குகளை அடுக்கி அடுக்கி செய்யப்பட்ட ஆக்கம் இந்த நூல். குறுந்தொகை தலைவி ஒருத்தியின் கேள்விக்கு நெடுநல்வாடையின் தலைவன் பதிலளிப்பான். அவனது பதிலை புறநானூற்று ஔவை மறுப்பாள். இந்த வடிவத்தில் 40 அத்தியாயங்களில் (ஒவ்வொரு அத்தியாயமும் ஓர் உணர்வை முன்வைக்கிறது) எழுதப்பட்ட நூல் இது. நூலின் முன்னுரையில் முத்தையன் கூறுகிறார் -

“என் இளமை பிராயம் முதல், சங்க இலக்கிய பாடல்கள் என்னுடன் உரையாடுவதாகவே எனக்கு தோன்றும். ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் பாணனும் பாணினியும் தோழனும் தோழியும் செவிலித்தாயும் தலைவனும் தலைவியும் என்னை நோக்கி ஏதோ சொல்வதாய்ப் படும். மனதினுள் நானும் அவர்களுடன் உரையாடுவேன். திடீரென ஒரு நாள் தோன்றியது, இந்த பாடல்கள், அதன் மாந்தர்கள், அதன் பருவநிலைகள், விலங்குகள், விழாக்கள் என யாவும் தத்தமக்குள் உரையாடினால் என்ன ஆகும்? இந்த எண்ணம் உதித்ததும், பாடலின் வரிக்கட்டுக்களை மீறி வெளியேற துடிக்கும் சிறைகைதிகளாக மாறிவிட்டனர் பாடலில் குடிகொண்ட அனைவரும். அவர்களை விடுவிக்கும் முயற்சியே இது.”

இன்று, வடிவ ரீதியிலும் வாசகப்பங்கேற்பு விகிதத்திலும் (reader participation ratio) பின் தங்கிய படைப்பாக இந்நூல் பார்க்கப்படுகிறது. எனினும், இரண்டு விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒன்று, கலவை இலக்கியம் அதன் வடிவ நேர்த்தியை கண்டடையும் முன்பே வெளிவந்த படைப்பு இது. உதாரணமாக பிற்கால கலவைக்கட்டுரைகளின் உரைகல்லாய் திகழ்ந்த வாசக பங்கேற்பு விகிதம் போன்ற கருத்தாக்கங்கள் இந்நூல் உருவான காலத்தில் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இரண்டாவதாக, இன்று மரபணு வரலாற்றியல் என்னும் அறிவியல் துறையின் வளர்ச்சியினால், நாம் ஆயிரக்கணக்கான சங்ககால பாடல்களை மீட்டெடுத்துள்ளோம். ஆனால், இந்த நூல் எழுதப்பட்ட பொழுது சங்க இலக்கிய பாடல்கள் என்று வெறும் 2700 பாடல்களையே கூறிவந்தார்கள். இந்த 2700 பாடல்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படைப்பு இன்றைய எந்த கலவை இலக்கிய படைப்பினோடும் ஒப்பிடக்கூடியதே என்பது எனது துணிபு.

முதன்முதலில் வெளியிடப்பட்ட போது இதை எந்த வகைமைக்குள் அடைப்பது என்பது தான் பெரிய பிரச்சனையாக இருந்திருக்க வேண்டும். தமிழ் இலக்கிய சமூகம் இந்நூலினை மிக மௌனமாகவே முதலில் எதிர்கொண்டது என கணிக்க ஆதாரங்கள் இருக்கின்றன. 2035ல் வெளிவந்த நூலினை பற்றிய குறிப்பிடும்படியாக எழுதப்பட்ட முதல் கட்டுரை, மரவன்புலவு எழுதிய “பேசுதல் அதற்கின்பம் – வெட்டி ஒட்டுதல் கலை ஆகுமா?”. இது 2040ல் வெளியானது. ஐந்தாண்டு கால மௌனம். கட்டுரையில் நூலினை, அதன் அடிப்படையை மிக உக்கிரமாக நிராகரிக்கிறார் மரவன்புலவு. ஆனால் இந்நூலின் கலைமதிப்பு, அழகியல் ஆகியவை பெருவாரியான வாசகர்களை ஈர்த்தன என்பதை இக்கட்டுரைக்கு வந்த மறுப்புரைகள் காட்டுகின்றன. நோபல் பரிசு பெற்ற புனைவாளரான மிலோராட் பாவிச்சின் நாவல்களில் இருந்து உருவாக்கப்பட்ட “Tea with the Khazars” என்ற ஆங்கில கலவை நாவலை அமெரிக்க தமிழர் செந்தூரன் 2041ல் வெளியிட்டார். கலவை இலக்கியம் (Collage Literature) என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியது இவரே. இந்நூல் ஐரோப்பாவில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் கிட்டத்தட்ட 20 குறிப்பிடத்தக்க கலவை இலக்கிய நூல்கள் வெளியாயின. 2042ஆம் ஆண்டு பேசுதல் அதற்கின்பம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை Conversations across bariers (பெரும்பாலும், ஏ.கே. ராமானுஜனின் சங்கபாடல்களின் ஆங்கில மொழிப்பெயர்புகள் பயன்படுத்தப்பட்டன) என்ற பெயரில் வெளியிட்டார். இன்று உலக இலக்கிய சூழலில் தமிழ் மிக முக்கியமான இடத்தினை பெற்றிருப்பதற்கு இந்த மொழிபெயர்ப்பு ஒரு பெரும் காரணமாகும். இம்மொழிபெயர்ப்பை தொடர்ந்து பல தமிழ் நாவல்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. 2060ல் செந்தூரனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது நிகழ்த்திய உரையில் முத்தையனை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழ் சமூக வரலாற்றில் இந்நூலின் தாக்கத்தை குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். தமிழகம் தனி நாடாக உருவானது தமிழர் வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வு. கடந்த நூறு ஆண்டுகளில் இந்நிகழ்வின் சமூக தாக்கங்கள் குறித்த பல்வேறு முக்கியமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இந்நோக்கில், தனி நாடு பிரகடனத்திற்கும், பேசுதல் அதற்கின்பம் நூல் வெளியீட்டிற்கும் உள்ள தொடர்பும் ஆய்வுக்குரியதே.

இத்தனை வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நூல் கடந்த 40 ஆண்டு காலமாக புழக்கத்தில் இல்லை. நாம் எந்த அளவிற்கு வரலாற்றுப்பிரக்ஞையற்று இருக்கின்றோம் என்பதற்கான சான்று இது. இதை வெளியிட்டதன் மூலம் தமிழேறு பதிப்பகம் தமிழ் சமூகத்திற்கு ஓர் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

Currently have 0 comments: