
“எந்தவொரு தத்துவ அறிஞரையும் அவருக்கு இணையாகக் கூறமுடியாது. மற்றவர்கள் இயற்கையானவை எனப்பார்த்தவற்றில் அவர் வரலாற்றைக் கண்டார். மற்றவர்கள் அத்தியாவசியமானவை என நினைத்தவற்றில் அவர் தற்செயல் நிகழ்வுகளைப் பார்த்தார்.’’
மிஷல் பூக்கோ 1924 பிரான்ஸிலுள்ள போய்ஷியர்ஸ் என்ற சிறு நகரில் பிறந்தவர். பிரஞ்சுப் பல்கலைக்கழகத்தின் போராசிரியர். சமூகவிஞ்ஞானி. கருத்துக்களின் வரலாற்றாசிரியர். பூக்கோ ஒழுங்கமைப்பு, அதிகாரம், பாலியல் முதலியன குறித்து நுண்அரசியல் ஆய்வுகளின் வாயிலாக அறியப்பட்ட ஒரு தத்துவஞானி. அதிகாரம் பற்றிய இவரது ஆய்வுகள் நீட்ஷெயின் அணுகுமுறையை அதன் எல்லைநோக்கி விரித்துச் சென்றன. இவரது கருத்துக்களில் அமைப்பியல், பின்னமைப்பியல் சிந்தனைக் கட்டங்களைக் காணமுடியும்.
Discipline and Punish. Madness and the civilization. Archeology of knowledge என்பன அவரது நூல்களில் சில. பூக்கோவின் சிந்தனைகளை மையமாகவைத்து முந்திய பூக்கோ, பிந்திய பூக்கோ எனப் பிரிப்பர். முந்திய பூக்கோ அல்தூஸரின் கருத்துக்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட மார்க்ஸிய வாதியாக இருந்தார். பிந்திய பூக்கோ நீட்ஷெயின் கருத்துக்களுக்குட்பட்டு மார்க்ஸிய விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தார்.
“நம்முடையதைப் போன்றதொரு சமூகத்தில் உண்மையான அரசியல் செயற்பாடென்பது சுயேச்சையானதாக, நடுநிலையானதாக காட்டிக்கொள்ளும் நிறுவனங்களை விமர்சித்து அந்நிறுவனங்களின் ஊடாக செயற்பட்டு அரசியல் வன்முறையை வெளிப்படுத்துவதாக இருக்கும். இப்படி வெளிப்படுத்திக் காட்டுவதன் மூலமே அந்நிறுவனங்களையும் அந்த அரசியல் வன்முறையையும் எதிர்த்துப் போராடும் படி பிறருக்குதவ முடியும்.’’ என்ற பூக்கோ “அதிகாரம் ஒரு தருணத்தில் தோன்றி மற்றதற்குச் செல்கிறது. எல்லாவித உறவுகளிலும் அதன் உற்பத்தி நடக்கிறது. அதிகாரம் எங்கும் நிறைந்திருக்கிறது. இப்படிக் கூறுவது அது எல்லாவற்றையும் தழுவியுள்ளது என்பதனால் அல்ல. அது எல்லா இடங்களிலிருந்தும் வருகிறது என்ற காரணத்தினால்தான்.’’ என்று விளக்குகிறார்.
முந்திய காலப் பூக்கோ அறிவினை முதன்மைப்படுத்தினார். பிந்தியகாலப் பூக்கோ அறிவைக் காட்டிலும் அதிகாரம் (Power) என்பதனை முதன்மைப்படுத்தினார். என்று பேராசிரியர் மௌனகுரு குறிப்பிடுகின்றார்.

மேலாதிக்கத் தொடர்புகளால் மனிதர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சமூக யதார்த்தத்தின் அடிப்படைத்தத்துவமே மேலாதிக்கம் என்றும் பூக்கோ கூறினார். மேலாதிக்கம் அறிவினால் தோற்றுவிக்கப்படுவதில்லை. எனினும் அறிவின்றி மேலாதிக்கத்தைச் செயற்படுத்துவது சாத்தியமில்லை என்பார் பூக்கோ. அறிவே ஆதிக்கமாகச் செயற்படுவதாகக் கூறி அறிவின் ஆதிக்கத்தை விமர்சனம் செய்வர் பின்னவீனத்துவ வாதிகள். அறிவு நிறுவனக் கட்டுப்பாடுகள் இருப்பதை விதிக்குட்படுத்தல் என்பவற்றோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது என்பது பூக்கோவின் வாதம். முடியாது என்ற சொல்லும் அதிகாரமும் தடையாணையிடும் வல்லமையும் ஆதிக்க மேலாண்மையின் உரிமைகளாகும். ஆனால் இந்த ஆதிக்கத்துக்குச் சவாலாக இருத்தல் ஒரு மீறலாகவும் பூக்கோவினால் கருதப்பட்டது.
ஆதிக்கம் என்ற கருத்துருவைச் சமூகத்திற்கு மாத்திரமின்றி உடலுக்கும் பொருத்திப் பார்க்கிறார் பூக்கோ. இக்கருத்துக்களை இவர் சிக்மண்ட் பிரய்ட்டிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார். பிரய்ட்டுக்குப் பிறகு உளப்பகுப்பாய்வு பற்றி நிறையக் கருத்துக்கள் வந்துவிட்டன. இவை எல்லாம் பூக்கோவைப் பொறுத்தளவில் சமூக ஆதிக்கத்தின் கையில் மனிதர்கள் எவ்வாறு அகப்படுகிறார்கள் என்பதற்கான சான்றுகள்தான்.
உளப்பகுப்பாய்வில் மனிதர்கள் சமூக ஆதிக்க சக்திகளோடு ஒத்துழைக்கின்ற, தானாக ஒப்புக்கொள்கின்ற, ஒருங்கு சேர்ந்து விடுகின்ற தன்மைகள் வெளிப்பட்டன.
இந்தப் பின்னணியில்தான் உடலின் ஆதிக்க சக்தி உடல்மீதான எல்லா ஆதிக்கங்களையும் எதிர்க்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார் பூக்கோ. உடலின் ஆதிக்கம், உடல் மீதான ஆதிக்கம் இரண்டுமே அரசியல்தான். தனிமனித உறவுகளையும் தந்தை பிள்ளை உறவுகளையும் அரசியல் பாதிக்கிறது. அதுபோல உடலாதிக்கமும் அரசியலைப் பாதிக்கிறது. உடலின் ஆதிக்கத்தை ஆதிக்க-அதிகாரத்தினையும், அதிகாரம் சார்ந்த அறிவினையும் எதிர்க்கப்பயன்படுத்த இயலும் என்பது பூக்கோவின் கருத்து.
பூக்கோ தனது நூலின் வாயிலாக, மிக அழுத்தமான வன்முறைப் பண்பு கொண்ட மேற்கத்திய கலாசாரத்தின் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளார். பூக்கோவின் முக்கிய கருத்துக்களில் ஒன்று, “எல்லா மானிடச் செயற்பாடுகளையும் நிர்ணயிப்பது ஆதிக்கத்திற்கான போட்டியே’’ என்பதாகும்.

நம் சமூகத்தில் நிலவும் அரசியல் வன்முறையை நீதியின் பெயரால் நாம் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதுதான் நாம் வழக்கமாகக் கொண்டிருக்கும் கருத்து. ஆனால், “அரசியல் வன்முறையை எதிர்ப்பதென்பதும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடுவதும் அதிகார உறவுகளை மாற்றியமைப்பதற்குத்தான்’’ என்கிறார் பூக்கோ.உற்பத்தி உறவுகளை ஆராய்வதற்கான கருவிகளை பொருளாதாரக்கோட்பாடும் பொருளாதார வரலாறும் நமக்கு வழங்கியிருப்பது போல அதிகார உறவுகளை ஆய்வு செய்ய நமக்கு எவ்வித உபகரணமும் இல்லை என்று மிஷல் பூக்கோ குறிப்பிடுவது மறுக்கமுடியாத உண்மையாகும்.
பதினாறாம் நூற்றாண்டுக்குப்பிறகு தொடர்ந்து வளர்ந்து வருகிற ஒரு புதிய வகை அரசியல் அதிகார வடிவமாக அரசு இருப்பதைக் கண்ட பூக்கோ குடிமக்களிடையே ஒரு வர்க்கத்தின் அல்லது ஒரு குழுவின் நலன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிற ஒரு விதமான அரசியல் அதிகாரம் என்பதாக மட்டுமே அரசைப் பலரும் புரிந்து கொண்டுள்ளனர்.
ஆனால் அது அரசின் தன்மையைப் பற்றிய முழுமையான விளக்கமல்ல என்றார்.
அரசின் அதிகாரம் என்பது ஒட்டு மொத்தமாக்குவதும் தனிமைப்படுத்துவதும் தான் என்ற உண்மையை அவர் வலியுறுத்திக் கூறினார். அதிகாரத்தின் இந்த இரட்டைத் தன்மை துலக்கமாக வெளிப்படையாக நமக்குப் புலப்படுவதில்லை. அதனை புலப்படச் செய்வதன் மூலமே அதைக்கடந்து செல்ல முடியும். ‘நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைக் கண்டறிவதல்ல நமது குறிக்கோள். மாறாக நாம் என்னவாக இருக்கிறோமோ அதை மறுப்பதுதான்’ என்று கூறும் பூக்கோ புதிய தன்னிலைத்துவத்தை (subjectivity) உருவாக்கியாக வேண்டும். என்று முன்மொழிந்துள்ளார்.
ஒவ்வொரு முக்கிய போராட்டத்தின்போதும் அதை அடக்குவதற்கான புதிய உத்திகளை அரச இயந்திரங்கள் கண்டறிந்து வளர்த்துக்கொண்டன. 1940 களுக்கு முன்புவரை ராணுவத்தைப் பலப்படுத்துவது காலனி ஆதிக்கத்தை நிலை நாட்டுவது என்பதாக இருந்த அரச இயந்திரத்தின் யுக்திகள் அதற்குப் பின்பு பொலிஸ் அமைப்பை பலப்படுத்துவது உளவுத்துறையை வலுவாக்குவது எதிப்பாளர்களைச் சிறையில் அடைப்பது என்பதாக மாறிவந்துள்ளதை பூக்கோ எடுத்துக்காட்டுகிறார். இது பாசிசத்துக்கு நெருக்கமானதொரு அமைப்பின் யுக்தியாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
Madness and Civilization என்ற அவரது நூல் பைத்தியம் என்று கருதப்பட்டவர்களை மேற்கத்திய சமுதாயம் எப்படி நடத்தியது என்ற கணக்கெடுப்பு வரலாறுதான். உளப்பிறழ்வு உடையவர்களை சிறைப்படுத்தல், நிறுவனக் கட்டுப்பாட்டிற்குட்படுத்தல் ஆகியவற்றிற்கான உத்திமுறைகள், மத்திய காலம் முதல் வளர்ந்துவந்துள்ள வரலாற்றைக் கூறும் நூல் இது. இதன் உட்பொருள் ஆதிக்க தர்க்க அறிவை அதன் விலங்கியல்பை, மற்றையதிலிருந்து வேறுபடுத்திப் பிரிக்கின்ற ஒடுக்குமுறைத் திட்டத்தினை எதிர்ப்பதுதான். இதனை ஓர் அறிவார்ந்த சவால் நூல் என்பர்.
மத்திய காலத்தின் முடிவில் பைத்தியம் எனும் நோய் பெரும் இடத்தைப் பிடிக்கிறது. இவர்கள் மனநோயாளர்கள் எனக்கருதி கடுமையாகக் கண்காணிக்கப்படுகின்றனர். ஒழுக்கத்தின் பெயரால் பித்தர்கள் வதைக்கப்பட்டனர். சிறைப்படுத்தப்பட்டனர். பித்து நிலையிலேயே ஞானங்கள் பிறக்கும். பகுத்தறிவு வாதம் பித்தர்களை ஒதுக்கியமையினால் பித்துநிலையாளர்களின் ஞானத்தை இழந்துவிட்டோம் என்று வாதிடுகிறார் பூக்கோ. அர்த்தோ (நாடகம்) வான்கோ (ஓவியம்) சல்வடோர் டார்லி (ஓவியம்) நீட்ஷே (தத்துவம்) ஆகியோர் பைத்திய நிலைபெற்றுத் தம் ஞானத்தை வழங்கியவர்களாவர் என்பது பூக்கோவின் வாதம்.
பூக்கோ ஆதிக்கத்தினால் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட குழுக்கள் சார்பில் வாதிட்டார். இதிலிருந்துதான் Sublatten Studies – விழிம்பு நிலை மக்கள் பற்றிய ஆய்வு கிளைவிட்டது.
இவ்வகையில் அதிகார மேலாண்மை, அறிவு அதற்குத் துணைபோதல், அதனை எதிர்க்கும் விளிம்பு நிலை மக்கள் என்ற கருத்துக்களை பூக்கோ முன்வைத்தார்.

இதுவரை மிஷல் பூக்கோ, அப்துல் ரஹ்மான் அல் கவாகிபி ஆகிய இருவரின் சிந்தனைகளை மிகச்சுருக்கமாக நோக்கினோம். கவாகிபியும் பூக்கோவும் அதிகாரங்களை எதிர்ப்பதில் ஒன்றுபடுகின்றனர். ஆனால் அதிகாரத்தைப் பொறுத்தளவில் பூக்கோவின் நிலைப்பாடு நம்பிக்கை வரட்சி கொண்டதாக உள்ளது. தனது கடைசிகாலத்தில் பூக்கோ எந்தவிதமான நேரடியான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாடில்லாதவராக இருந்ததாக எட்வர்ட் செய்த் கூறுகிறார்.
ன்நவீனத்துவவாதிகளும்; கலாச்சாரச் சார்புவாதிகளும் அரசியல் இஸ்லாம் குறித்த அணுகுமுறைகளைத் தொடர்ந்து குழப்பியே வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஆதர்சமாக இருப்பவர் பிரெஞ்சுத் தத்துவவாதியான மிசேல் பூக்கோ ஆவார்.
ஈரான் புரட்சியை அன்றைய சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்துமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆக்கபூர்வமான புரட்சி என வரையறை செய்தன. வெகுமக்கள் எழுச்சியுடன் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையுடன் நடந்த இந்தப் புரட்சி ‘முதலாளித்துவமற்ற பாதை நோக்கிச் செல்லும்’ எனவும் அவர்கள் வரையறை செய்தார்கள். வளர்ந்துவரும் அரசியல் இஸ்லாம்; தமக்கு எதிராகத் திரும்பும் என்ற அவதானத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை.
தமக்கிடையிலான கட்சிக் கருத்தியலை தாண்டி(party ideology)எதிரிக்கு மாற்றான பொதுத் திட்டத்தினை உருவாக்கக் கூடிய தகைமையினை, அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஸ்டாலினிய, டிராட்ஸ்க்கிய, மாவோயிச வித்தியாசங்களைத் தாண்டி அவர்களால் செல்ல முடியவில்லை. பெண்ணிலைவாதிகளும் தமது குழுசார்ந்த தாராளவாத, மாரக்சிய,தீவிர பெண்ணிலைவாத்திற்கு அப்பால் பொதுவான போராட்டத்துக்கான திட்டங்களை அவாவியிருக்கவில்லை.
மத அடிப்படைவாதிகள் தமது அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்ட அதே போதில், மார்க்சியர்களும் தாராளவாதிகளும் பெண்ணிலைவாதிகளும் தமக்கிடையிலான கருத்தியல்களால் பிளவுண்டு போயிருந்தார்கள். தம்மில் ஒரு சிலர்; தனிமைப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டபோது, இவர்கள் கருத்தியலின் பெயரில் மௌனம் காத்தனர்.
முதலில் பெண்ணிலைவாதிகளையும் பிற்பாடு தாராளவாதிகளையும் இறுதியில் மார்க்சியர்களையும் இதனால் மிகச்சுலபமாக அரசியல் இஸ்லாமியர்கள் அழித்தொழிக்க முடிந்தது. தாராளவாதிகள் மீதும் பெண்ணிலைவாதிகள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்ட அதே காலத்தில் எகாதிபத்திய எதிர்ப்பு எனும் ஒரே காரணத்துக்காக சோவியத் யூனியனால் வழிநடத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியான டூடே கட்சி அரசியல் இஸ்லாம் ஆட்சியாளர்களை ஆதரித்து நின்றது. பிற்பாடு அவர்களும் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம், மனித உரிமைகள், பொதுவான விடுதலை தொடர்பான ஒற்றுமை போன்ற அனைத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கோசத்தின் கீழ் சமரசப்படுத்திக் கொண்டார்கள்.
புரட்சியின் பின் பெண்கள் கட்டாயம் முழு உடலையும் மூடும் முக்காடு அணிய வேண்டும் என கொமேனியின் அரசு சட்டம் கொண்டு வந்தபோது 50000 பெண்கள் டெஹ்ரான் நகரில் அதனை எதிர்த்து ஆரப்பாட்டம் நடத்திய வேளையில் இஸ்லாமியக் குடியரசுக்காக ஆதரவாக நின்றார்கள் டூடே கட்சியினர்.

அதற்கான விலையையும் அவர்கள் வெகு விரைவிலேயே கொடுத்தார்கள்.
தாராளவாதிகளும் அரசியல் குழப்பத்திலேயே இருந்தார்கள். அரசியல் தலையீட்டாளர்களுக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நிலைபாடு எடுப்பதற்கு அவர்களுக்குச் சிரமமாகவே இருந்தது. மறுமலர்ச்சியுக கோட்பாடுகள் சார்ந்த நவீனத்துவம் தொடர்பான பிரெஞ்சுத் தத்துவவாதிகளின் விமர்சனம், சோசலிச எதேச்சாதிகாரம், முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம் தொடர்பான பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களின் விமர்சனம் போன்றன ஈரானியப் புரட்சி தொடர்பாக கல்வியாளர்களிடமும் அறிவாளிகளிடமும் நிலைபாடு எடுப்பதில் தடுமாற்றத்தையே உண்டு பண்ணியிருந்தன.
அதுவரை நடந்த புரட்சிகள் அனைத்தும் அக்டோபர் புரட்சியை அடியொற்றியவையாக, மார்க்சியத்தை அடியொற்றியவையாக இருந்தன. கலாச்சாரப் புரட்சியின் அத்துமீறல்கள் அப்போதுதன் உலக அளவில் அறித் துவங்கியருந்தன.. நவீனத்துவத் திட்டம் பற்றி மிகப் பெரிய நடைமுறை சந்தேகங்கள் சோவியத், சீனப் புரட்சிகளை முன்வைத்தும், பாசிசம், தேசியம் போன்றவற்றை முன்வைத்தும் ஏற்பட்டிருந்தன. மறுமலர்ச்சிக்காலம் தோற்றுவித்த சமூக அமைப்பு சிந்தனையையும் உடலையும(a system which controls thought and body)கட்டுப்படுத்தும் அமைப்பு என்பதனை பூக்கோ முன்வைத்தார்.
எல்லையற்று விரிந்திருக்கும் அதிகாரம், அதிகாரமாக ஆகியிருக்கும் அறிவு போன்றவற்றுக்கும் அப்பால், காரண காரியப் பார்வைக்கும் அப்பால் தேடிச்செல்லும் அறிவுத்துறைப் போக்காக பூக்கோவின் பாலியல் மற்றும் சிறை அமைப்பு குறித்த ஆய்வுகள் வெளிப்பட்டன.
நவீனத்துவத்திற்கு முந்திய ரோம-கிரேக்கப் பண்பாட்டிலும், வட ஆப்ரிக்கப் பண்பாட்டிலும் ஆண்சமப்பாலுறவுக் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமையை பூக்கோ கோட்பாட்டளவிலும் நடைமுறையிலும் முன்வைத்தார். மனித விடுதலை ஆன்மீகத் தன்மையற்ற ஸ்டாலினிய, பாசிச அரசியல் முறைமைகளுக்கு மாற்றாக ஒரு கோட்பாட்டையும் அரசியல் அமைப்பையும் அவாவிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் ஈரானியப் புரட்சி தொடங்கியது.
‘அசல்;தன்மை’ என்பதனை பூக்கோ எப்போதுமே காரண காரியத்தைச் தாண்டிச்செல்லும் தருணம், மரணத்தின் விளிம்பில் ஆபத்தான தருணத்தில் நிகழும் போக்குகள் போன்றவற்றிலேயே கண்டார். இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் ஒரு நாகரீகத்தையும் ஒரு வாழ்முறையையும(islam as a civilisation and a way of life)கண்ட பூக்கோ நவீனத்துவத்தின்; காரண காரிய அறிவை மீறிச் செல்லும் மாயப்பண்பும் ஆன்மிகத்தன்மையும் கொண்ட (mythical and spirtual) ஒரு தனித்த புரட்சியாக, ( singular revolution), தமது உயிரையும் தமது கற்பனாவுலகுக்குக் கொடுக்கத் துணிந்த இஸ்லாமிய அடிப்படையவாதிகளின் தீரம் (martyrdom) அவரது தத்துவப்பார்வைக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது.
அசல்தன்மை (authenticity) தொடர்பான பூக்கோவின் எண்ணங்கள் எப்போதுமே மரணத்தோடும், காரணகாரியத்தை மீறும் பண்போடும் -near death and exploring rationality- பிணைக்கப்பட்டிருந்தன என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மில்லர். இந்தத் தன்மை சிருஸ்டிகரமான புதியதொரு கோட்பாட்டு நிலைக்கும் வாழ்நிலைக்கும் அரசியலுக்கும் அறத்தின் அடிப்படையிலான ஒரு சமூகத்துக்கும் மனிதர்களை இட்டுச்செல்லும் என பூக்கோ நம்பினார்.
இதன் பொருட்டு ஈரானியப் புரட்சிக்கும், அரசியல் இஸ்லாம் இயக்கத்துக்கும், அயதுல்லா கோமெனிக்கும் தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி;னார் பூக்கோ. ஈரானியப் புரட்சியின் தன்மைகள் குறித்த அனைத்து விதமான விமர்சனங்களையும் மறுத்தார் பூக்கோ. அத்தோடு ‘தான் எப்போதுமே விவாதங்களில் நம்பிக்யைற்றவன். இப்போதும் தான் விவாதிக்க விரும்பவில்லை’ என்றே தனது ஈரான் ஆதரவு நிலைபாட்டுக்கு விளக்கமும் சொன்னார் பூக்கோ.
ஈரானியப் புரட்சி குறித்த தனது கட்டுரைகளில், ஈரானியப் புரட்சியானது பெண்களின் உரிமைகளை உத்தவரவாதப்படுத்தும், சிறுபான்மையினர் உரிமைகளை அது பாதுகாக்கும், ஆண் சமப்பாலுறவை அச்சமூகம் அனுமதிக்கும், ஜனநாயகத்தையும் தனிநபர் உரிமையையும், மனித உரிமைகளையும் அங்கீகரிக்கும் என்றெல்லாம் திட்டவட்டமாக பூக்கோ எழுதியிருக்கிறார்.

பூக்கோவின் நம்பிக்கைகள்; அனைத்தும் அவரது வாழ்காலத்திலேயே பொய்த்துப் போனது. ‘மதகுருக்கள் அரசில் அங்கம் பெறமாட்டார்கள்’ என அவர் குறிப்பிட்டார். அது முற்ற முழுதாகப் பொய்யாகிப் போனது. இன்றளவிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தையே ஈரானியப் புரட்சியானது தோற்றுவித்திருக்கிறது. அரசியல் இஸ்லாம் ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு நாடுகளாக ஆப்கானிஸ்தானும் ஈரானும் இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளுமே பெண்களின் மீதான மட்டுமீறிய அடக்குமுறையை ஏவிய நாடுகளாகவே இருக்கிறது.
ஈரானியப் புரட்சியை ஒரு ‘தனித்த புரட்சி’ என்று பாரப்பதற்கான பூக்கோவின் ஆதாரமான காரணம்தான என்ன?
ஈரானியப் புரட்சி நடந்த தருணத்தின்போது ஐரோப்பாவில் பூக்கோவுக்கு எற்பட்டிருந்த கருத்தியல் ரீதியான அங்கீகரிப்பையும் நாம் முன்பாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அன்றைய நிலையில் பூக்கோ மேற்கத்திய சமூகச் சூழலில் சிறையைமைப்பு, பைத்தியநிலை, பாலியல்பு(prision madness and sexuality) தொடர்பாக நூல்களை வெளியிட்டிருந்தார். அவரது மிகப் புகழ் பெற்ற நூலான ஓழுங்கும் தண்டனையும் (discipline and punishment ) எனும் நூலின் வழி ஐரோப்பிய அரசியல் ஒழுங்கான தாராளவாத சமூகத்தை அவர் ஒழுங்குபடுத்தும் சமூகம் எனக் குறிப்பிட்டார். தாராளவாத சமூகமானது ‘உடல் அளவில் குறைந்தபட்சமாகத் தோன்றுகிற தண்டனைகளை வழங்கினாலும் கூட, பாரிய அளவில் மிக அதீதமான பாதிப்புகளை மனிதனுக்கு ஏற்படுத்துகிற தண்டனைகளையே அதுகொண்டிருக்கிறது’ என அவர் குறிப்பிட்டார்.
நவீனத்துவத்திற்கு எதிரான அவரது எதிர்-சொல்முறையில் நவீனத்துவ நிறுவனங்களானது நம்மை விடுவிப்பதாகத் தோன்றினாலும் அவைகள் நம்மை உள்ளார்ந்த வகையில் அடிமைப்படுத்தவே செய்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். அதிகாரத்தின் பாய்ச்சல்களையும்,சரடுகளையும் முறுக்கி பிடித்த அந்த அராஜகவாதி சிந்தனைகள் அரசியல் பாடத்தில் திருப்புமுனை என்பதில் சந்தேகம் இல்லை